Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aarnikaavum 1001 Aavigalum
Aarnikaavum 1001 Aavigalum
Aarnikaavum 1001 Aavigalum
Ebook280 pages1 hour

Aarnikaavum 1001 Aavigalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Super Natural Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466756
Aarnikaavum 1001 Aavigalum

Read more from Arnika Nasser

Related to Aarnikaavum 1001 Aavigalum

Related ebooks

Related categories

Reviews for Aarnikaavum 1001 Aavigalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aarnikaavum 1001 Aavigalum - Arnika Nasser

    1

    மனிதகுலம் தோன்றியதிலிருந்து இதுநாள் வரை சில பிரமாண்டமான கேள்விகள் சமூகத்தின் முன் விஸ்வரூபித்து நிற்கின்றன.

    பிறப்புக்கு முன் நாம் யார்? / இறப்புக்குப்பின் நாம் யார்? / கடவுள் உண்டா? இல்லையா? - இருந்தால் ஒரு கடவுளா பல கடவுளர்களா? / பாவம் செய்தால் நரகமும் - புண்ணியம் செய்தால் சொர்க்கமும் நமக்கு மறுமை நாளில் கடவுளால் பரிசளிக்கப்படும் - என்பது உண்மையா? பொய்யா? / மறுபிறவி உண்டா, இல்லையா? / நம்மைத் தீமை செய்யத் தூண்டுவது சாத்தானா? / ஆவிகள் உண்டா இல்லையா? - இருந்தால் அவற்றில் நல்ல ஆவி கெட்ட ஆவி எனப் பிரிவுகள் உண்டா? - ஆவிகளுடன் நாம் பேச முடியுமா? - ஆவிகள் மனித உடலில் புகுந்து கொள்வது சாத்தியமா?

    இன்னும் பல தெளிவான விடை கிடைக்காத மில்லியன் டாலர் கேள்விகள் புதிர்களாய் விடுகதைகளாய் மர்ம முடிச்சுகளாய் நம்மிடையே உலா வருகின்றன. ஒவ்வொருவரும் தனது வளர்ப்பு விதம், படிப்பு, உள்வாங்கும் திறன், பாரம்பரிய நம்பிக்கை, சார்ந்துள்ள மதம், யூகத்திறன் மற்றும் அனுபவங்களை வைத்து மேற்சொன்ன கேள்விகளுக்கு விடை காண முயற்சிக்கின்றனர். ஆம்/இல்லை என பதில் சொல்வோர் இரு கட்சிகளாகப் பிரிந்து கொண்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஒருவரையொருவர் ‘மூட நம்பிக்கையாளன்’ - என இழித்துப் பேசிக் கொள்கின்றனர்.

    என்னைப் பொறுத்தவரைக்கும் நான் மதம் சாராத ஓர் ஆத்திகன். அதே நேரத்தில் முஸ்லீமாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக என்னைக் குரோதமாய் பார்ப்பவர்களைக் கண்டு பரிதாபப்படுகிறேன். இஸ்லாமின் பெயரைச் சொல்லிப் பயங்கரவாதம் செய்யும் தீவிரவாதிகளாலும் ‘இந்துத்வா’ பேசி வகுப்புவாதம் செய்யும் மதவாதிகளாலும் அப்பாவி முஸ்லீம்களுக்கு அப்பாவி இந்தியருக்கு ஏற்படும் துயரங்களைக் களையவே விழைகிறேன்.

    பல பிறவிகளைக் கடந்து இப்பிறவியில் காலடி எடுத்து வைத்திருப்பதாக நம்புகிறேன்.

    மரணத்துக்குப்பின் இன்னொரு பிறவி எடுத்தாலும் எடுப்பேன் என எண்ணுகிறேன்.

    ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்தான் என நினைக்கிறேன்.

    கடவுள் உண்டு. அவன் ஆணும் அல்லன் பெண்ணும் அல்லன்; யாராலும் பெறப்பட்டவன் அல்லன்; யாரையும் பெறுபவனும் அல்லன். அவன் இப்பிரபஞ்சத்தை ஓர் எண் கணித ஃபார்முலாவில் படைத்துள்ளான்’ என்கிறேன்.

    ஆனால் -

    பிரபஞ்சத்தைப் படைத்தவன் இறைவன் என்றால் இறைவனைப் படைத்தது யார்? - இறைவனுக்கு முன் என்ன இருந்தது? - இறைவன் தனது படைப்புகளுக்கு முன் மாதிரியாக எதனை எடுத்துக் கொண்டான்? - மனிதனைப் படைப்பதற்கு முன் நன்மை தீமை என இரண்டு எதிர் எதிர் பக்கங்கள் இருந்தனவா? - தீமைகள், கெட்டவைகள், நோய்கள், அகால மரணம் இல்லாத மனித வாழ்க்கையைக் கடவுள் ஏன் திட்டமிடவில்லை? - இக்கேள்விகளுக்குப் பதில் இல்லை.

    கடைசியாக நமக்குத் தேவையான கேள்விக்கு வருவோம். ஆவிகள் உண்டா? இல்லையா? - உண்டுண்டு.

    பி.டி.சாமி கதைகளிலும் ஸ்டீபன் கிங் படங்களிலும் வருவது போன்று ஆவிகள் இருக்குமா? - ஆவிகள் இரத்தம் குடிக்குமா?

    ஆவிகளில் நல்லவை கெட்டவை பிரிவுகள் உண்டு எனத் திடமாய் நம்புகிறேன். விதிவிலக்காகச் சில ஆவிகள் அபூர்வ சக்திகள் பெற்றிருப்பதாகவும் எண்ணுகிறேன் இஸ்லாமில் கூட அதீதமாய் மதக்கல்வி பெற்ற ஆவிகள் ‘ஜின்கள்’ என அழைக்கப்படுகின்றன. இவை வெள்ளைப்பாம்புகளாய் நடமாடுவதாய் இஸ்லாமில் நம்பப்படுகிறது. ஜின்கள் நீண்ட தாடி வைத்திருக்கும். வெள்ளைக் குதிரையில் வரும் எனவும் சொல்லப்படுகிறது.

    எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இதுநாள்வரை ஏற்பட்ட ஆவி அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

    நம்பினால் நம்புங்கள் நம்பாவிட்டால் வாசிப்புச் சுகத்தோடு விட்டு விடுங்கள்... ரைட்டா?

    ஓகே... ஜூட்.....

    நான் பிறந்தது உலக அதிசயங்களில் ஒன்றான மீனாட்சியம்மன் கோயில் இருக்கும் கூடல் நகர் மதுரையில்.

    பத்திரிகை அலுவலகங்களின் உ.ஆ.க்களும் வாசகர்களும் என்னைச் சந்தித்தால் கேட்கும் முதல் கேள்வி - உங்களுக்கு எந்த ஊர் சொந்த ஊர் சார்?

    மதுர!

    மதுரயேவா, மதுரக்கு பக்கத்துல எதாவது கிராமமா?

    என்னுடைய கிராமீயத் தோற்றத்தை வைத்து இப்படிக் கேட்கிறார்கள் போலும் எனச் சமாதானித்துக் கொள்வேன். தென் அமெரிக்கன் காலேஜுக்கு எதிரில் கோரிப் பாளையத்தின் பட்டரைக்காரத் தெருவில் நாங்கள் குடியிருந்தோம். நாங்கள் குடியிருந்தது வாடகை வீடு. என் அம்மா வழிப் பாட்டியின் சொந்த வீடு நாலு வீடுகள் தள்ளி அமைந்திருந்தது. எங்கப்பா ஆடிட்டர். எங்கம்மா ஹவுஸ் ஒய்ஃப். என் தந்தையாரை விட எனது தாயார் பதினாறு வயது இளையவர். அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் நடக்கும்.

    நாங்கள் அம்மாவழிப் பாட்டியை ‘பெத்தம்மா’ என்றும் தாத்தாவை ‘அப்பா’ என்றும் தந்தையை ‘அத்தா’ என்றும் பாட்டியின் அம்மாவை பெரிய பெத்தம்மா அல்லது மேலூர் பெத்தா என்றும் அம்மாவின் தங்கைகளை ‘சாச்சி’ என்றும் விளிப்போம். நாங்கள் தமிழ் பேசும் ராவுத்தர். உருது தெரியாது.

    ஆயிஷா சாச்சி மூக்குக்கண்ணாடி அணிந்து சதா தலைவலியால் துடிப்பார்.

    மெஹர் சாச்சி பிரமாதமாகச் சமையல் பண்ணுவார்.

    ஃபாத்திமா சாச்சி அழகிய தேவதையாய் வீட்டுக்குள் வலம் வருவார்.

    நான் ஒ.ஸி.பி.எம்., அருகில் இருந்த நேருஜி ஆங்கிலப் பள்ளியில் தான் ஆரம்பக்கல்வி பயின்றேன். வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து செல்லும் சாலையில் சில பல மரங்கள் தலை விரித்து நிற்கும். அந்த மரங்களின் கிளைகளில் அமானுஷ்யங்களும் பறவைகளும் அமர்ந்திருக்கும்.

    பெத்தம்மாவின் வீடு பெரிய பங்களா போலக் காட்சியளிக்கும். உயரமான படிக்கட்டுகள் கொண்ட வாசல். இருபுறமும் அகன்ற திண்ணைகள். அப்படியே உள்ளே நடந்தால் இணைந்த இரு திண்ணைகள் செவ்வகத்துக்கு முன்னறை. உயரத்தில் ஸாண்ட்லியர் விளக்கு. இடப்பக்க மேஜையில் பழைய ஹாலன்ட் பிலிப்ஸ் ரேடியோ. சற்றுத் தள்ளி தாத்தாவின் படுக்கை. படுக்கைக்கு அடியில் மூத்திரக் குவளை.

    முன்னறையின் மேற்கில் ராட்சதப் பரண் கொண்ட அறையும் கிழக்கில் பொம்மைகள் சேகரிப்பு அறையும் இருந்தன. அதனைத் தாண்டி நடந்தால் இன்னும் இரு அறைகள்.

    அதனை அடுத்து சமையலறை, ஸ்டோர் ரூம், அடுப்பெரிக்க விறகுகள் சேகரித்து வைத்திருக்கும் அறை, குளியலறை, அடி பம்ப், வாட்டர் டேப், கழிவறை, சுழல் படிக்கட்டுகள் கொண்ட மாடி. மாடியில் நான் கறைகள், தரைத்தளத்தின் தரை முழுக்க வித்தியாசமான மார்பிள் சாகசங்கள். அந்த மார்பிள் தரையில் உருண்டு புரளும் சுகமே தனி. உருளும் போது ஒரு ஜில்லிப்பு ஏற்படும்.

    பெரிய மாமாவுக்குக் கலெக்டர் ஆபீஸில் வேலை. சின்ன மாமா ஒரு வெட்டி ஆபீஸர். ராஜ்கிரணையும் வடிவேலையும் விவேக்கையும் பிசைந்து செய்த கலவைதான் சுல்தான், மாமா. தலைகேசத்தை முன் நெற்றியில் சுருள விட்டிருப்பார். கம்பி மீசை. முழுக்கை சட்டையை ஒரு மாதிரி ஒழுங்கீனமாய் மடித்து விட்டிருப்பார். வாழ்க்கையில் அவருக்குத் தெரிந்த இரண்டே விஷயங்கள் - சீட்டாடுதலும் தண்ணியடித்தலும்தான். அவரது சட்டைப் பாக்கெட்டிலிருந்து பல தடவை காசு திருடியிருக்கிறேன். அவர் கண்டுபிடித்ததே இல்லை.

    பெத்தம்மாவுக்கு அப்போது வயது அம்பதிருக்கும். வெள்ளிநிற நரைகேசம். மேல்வரிசை முன் பற்கள் சற்றே தெற்றியிருக்கும். கழுத்தில் கனமான தங்கச் சங்கிலிகள். கைகளில் வளையல்கள். இடுப்பில் சுருக்குப் பை. மாறுகண்களில் பவர் கிளாஸ். மிகவும் புத்திசாலித்தனமான பெண்மணி. தினமும் ஐந்து வேளை தொழுவார். ஓய்வு நேரங்களில் பச்சை நிற தஸ்பி மணிமாலை உருட்டுவார். சில நேரங்களில் குர்ஆன் ஓதுவார். சிறு சிறு பொம்மைகள் சேகரிப்பது கதைப் புத்தகங்கள் வாசிப்பது அவரது பொழுது போக்கு.

    இடது பக்க அறை எப்போதுமே இருட்டிலே ஊறியே கிடக்கும். அதன் சாவி பெத்தம்மாவிடம் தான் இருக்கும். அந்த அறையைப் பிறர் திறக்கவோ உள்ளே போகவோ தடை விதித்திருந்தார் பெத்தம்மா.

    பெத்தம்மாவிடம் காசு வாங்கித் தேன் மிட்டாய், பணியாரம், பருத்திப் பால், ஜிகர்தண்டா குடிப்பேன். சாச்சிகளிடம் காசு வாங்கிச் சிந்தாமணி, மீனாட்சி தியேட்டர்களுக்கு நடந்தே போய் சினிமா பார்ப்பேன். பார்த்துவிட்டு வந்து சாச்சிகளிடையே அமர்ந்து கதை சொல்லுவேன். கதை சொல்லும்போது வாய்வழி இசையும் சொந்தச் சரக்கும் சேர்ப்பேன். ஜூனியர் டி. ராஜேந்தர்!

    பெத்தம்மா என்னை, நாஸெர்! என அழைப்பார். மேலூர் பெத்தா நாஜர் என அழைக்கும். தாத்தா ரைம்மா மவனே என அழைப்பார்.

    எனக்கு இருட்டு என்றால் பயம். இரவில் கடை கண்ணிக்குப் போய் வருவதென்றால் சைக்கிள் நபர்களுடன் கூடவே ஓடி வந்து வீட்டுக்குள் பிரவேசிப்பேன். தூங்கும் போது போர்வையை முழுக்கப் போர்த்திக் கொண்டுதான் தூங்குவேன்.

    இடது பக்க அறைமீது எனக்கு எப்போதுமே ஒரு கண். ‘பெத்தா அந்த அறைக்குள்ள போகக்கூடாதுன்னு ஏன் சொல்லுது? ஒரு நா சாவியைத் திருடி அறைக்குள் புகுந்துவிட வேண்டியதுதான்!’

    ஒரு நாள்...

    மதியப் பொழுதில் அயர்ந்து தூங்கும் பெத்தாவிடமிருந்து சாவியை எடுத்துக் கொண்டேன். சப்தம் எழாமல் கதவைத் திறந்தேன். பகலிலும் அறை கரும்கும்மென்று இருந்தது. அறைவிளக்கை ஆன் செய்தேன்.

    பானைகளில் சாப்பாட்டு அரிசி, இட்லி அரிசி மற்றும் கொட்டை எடுக்காத புளி.

    மளிகைச் சாமான்கள்.

    அண்டா குண்டாக்கள்,

    உப்புக்கண்ட சரங்கள்,

    அரிசி மாவுகள்,

    உளுந்து,

    மாசிக் கருவாடு,

    அரிசி வடகம்,

    ஜவ்வரிசி வடகம்,

    டின்களில் எண்ணெய், மிளகாய் வற்றல், மல்லி

    பார்வையைச் சற்றுத் தள்ளி ஓடவிட்டேன். மரப்படிக்கட்டு பரணுக்கு சாத்தப்பட்டிருந்தது. இருட்டான அறைக்குள் தன்னந்தனியாக நிற்கிறோமே என்கிற பயத்தைச் சாகச உணர்வு தற்காலிகமாய் ஜெயித்தது. கைகால்கள் உதற உதறப் படிக்கட்டுகளில் ஏறினேன். கடைசி படிக்கட்டிலிருந்து பரணுக்கு குப்புறத் தாவித் தவழ்ந்தேன். தூசி, ஒட்டடை கலந்த வவ்வால் வாசனை.

    பரண் முழுக்க ஆயிரக்கணக்கான கதைப் புத்தகங்கள்... -

    சிந்துபாத் கதைகள்...

    அரபிய மொழிபெயர்ப்புக் கதைகள்...

    பத்திரிகைகளில் வந்த தொடர் கதைகளின் பைண்டிங்குகள்...

    படக் கதைகள்...

    நயன்தாராவைக் கண்ட சிம்பு போல் சூரியனித்தேன். கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.

    ஒரு வாண்டு மாமா கதையை நான் சுவாரசியமாக வாசித்துக் கொண்டிருக்கும் போது அது நிகழ்ந்தது.

    என் முதுகுப் பக்கமிருந்து யாரோ எதுவோ...

    வெளிச்சம் வர வைத்திருந்த சிறு சதுர ஜன்னல் வழியே யாரோ எதுவோ...

    பறவை பார்வையிலிருந்து யாரோ எதுவோ...

    முறைப்பது போல் உணர்ந்தேன். அனிச்சையாகப் புத்தகத்திலிருந்து பார்வையை எடுத்து திரும்பினேன்...

    அங்கே......

    2

    இருட்டு பூசிய காற்று தடித்தது- வீங்கியது புடைத்தது - ததும்பியது. என் முகத்துக்கு நேராக மிதந்த ஓர் உருவம் தேவர் மகன் பார்வை பார்த்தது. எனது உடலின் ரோமக்கால்கள் சிலிர்த்தன. என் முதுகு தண்டுவடத்தைத் துளைத்துக்கொண்டு ஒரு பனிப்பூரான் ஓடியது. இதயம் நின்ற இடத்திலேயே ஜாகிங் செய்தது. வியவியர்த்தேன். சோனியா அகர்வால் போல் தமிழ் குதறிகுதறி திக்கினேன். என்னைச் சுற்றியிருந்த வெவ்வால் வீச்சம் காணாமல் போய் ரோஜா நறுமணம் கிளைத்தது. ரோஜா நறுமணத்துடன் சாம்பிராணி வாசனை கூட்டணி சேர்ந்து கரைந்தது. இலைதழைகள் மக்கிய மண்வாசனை எழுந்தது. எனது முகத்துக்கு நேராக தனது முகத்தை நெருக்கி வைத்திருக்கும் உருவத்தை உன்னித்தேன்.

    ஆணா, பெண்ணா? - வாலிபமா, கிழமா? - குண்டா, ஒல்லியா?

    சந்தேகமேயில்லை. பெண்தான். வயது 110 இருக்கக்கூடும். தடிமனான திரேகம். மாறுகண். உருவம் சிரிப்பது போல் தெரிந்தது. எதற்கு சிரிக்கிறது - நம்மை ஃபிரண்ட் பிடிக்கவா? இந்தக் குண்டு வயோதிகப் பெண்மணியை ஏற்கனவே பார்த்தது போலிருக்கிறதே!

    யாராக இருக்கும்?

    ஆங்! இந்த உருவம் பெத்தம்மா போலவே இருக்கிறது! பெத்தாவும் மேலூர் பெத்தாவும் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களது ஜாடையில் யார் இறந்திருக்கக் கூடும்?

    யோசித்து விளங்கினேன்.

    ஆஹா! இது மேலூர் பெத்தாவோட அம்மா போல... சூப்பர் சீனியர் பெத்தா போல...

    நீ... நீ... எ... எ... என் பெரிய்ய பெரிய்ய பெத்தாவா?

    பதில் சொல்லாமல் சிரித்தது. சப்தம் எழவில்லை.

    இ... இ... இந்த கதை புத்தகமெல்லாம் நீ சேர்த்ததா பெத்தா?

    தலையசைத்தது.

    இதெல்லாம் நான் எடுத்துப் படிக்கக்கூடாதா பெத்தா?

    படிக்கலாமே - என தலையாட்டியது.

    அதற்குள் எதிர் எதிர் திசைகளில் காற்று தடித்தது. நான்குக்கும் மேற்பட்ட உருவங்கள் பெரிய பெத்தாவை எங்கோ அழைத்துக்கொண்டு போயின.

    அவ்வளவுதான்...

    ரோஜாவாசனையும் சாம்பிராணி வாசனையும் மறைந்து வெவ்வால் வாசனை மீண்டது. எனது உடலெங்கும் வியர்த்திருந்தது. எனது சட்டை தொப்பல் தொப்பலாய் நனைந்திருந்தது. வாண்டு மாமா புத்தகத்தை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டு தடுமாற்றமாய் மர ஏணியில் இறங்கினேன். கதவை சாத்திவிட்டு திரும்பினேன்.

    தொழுகை கம்பளத்தை மடித்து வைத்துக்கொண்டு பெத்தா நின்றிருந்தார்.

    நாஜெரு! அப்டியே நில்லுடா. அந்த அறைய திறக்காத திறக்காதன்னு எத்ன தடவ சொல்லிருப்பேன். சாவிய திருடிக்கிட்டு போய் உள்ள அப்டியென்ன பாத்த?

    அசடு வழிந்தேன்.

    சு... சு... சும்மா பெத்தம்மா!

    உள்ள என்ன செஞ்ச? உண்மையச் சொல்லலன்னா நாளைலயிருந்து பணியாரம் திங்க காசு தரமாட்டேன்!

    கதை புக் படிக்கப் போனேன்!

    அங்க இருக்குன்னு உனக்கு யார் சொன்னா?

    போனப்பத்தான் தெரிஞ்சது. இனிம அந்த அறைக்குள்ள போகமாட்டேன். பரண்ல இருக்ற எல்லா கதை புத்தகங்களையும் எடுத்து என்கிட்ட குடுத்திருங்க பெத்தா. படிச்சிட்டு உடனே குடுத்திடுரேன்!

    தனியாளா உள்ள போக உனக்கு பயமாயில்ல? நீதான் சரியான பயந்தாங்கொள்ளியாச்சே?

    ஹி... ஹி... அப்டின்னு யார் சொன்னா?

    நடுராத்திரில நீ கொல்லைக்கு போக சாச்சி துணைல வேண்டியிருக்கு. சரி... அந்த அறைக்குள்ள எதாவது பாத்தியா?

    இ... இ... இல்லை!

    இல்ல இல்ல ஏதோ மறைக்ற... என்ன பாத்த?

    உங்களை மாதிரி ஒரு பெத்தாவை பாத்தேன். அது யாரு?

    பெத்தம்மாவின் கண்கள் கலங்கின.

    எங்க பெத்தாதான்டா அது. எங்க பெத்தா ஒரு புத்தகப் பைத்தியம். அதோட பைத்தியம்தான் எனக்கும் தொத்திக்கிச்சு. அது மவுத்தாகி பல வருஷமாகுது. அது யாரையும் ஒண்ணும் பண்ணாது. பொழுது போகலேன்னா அந்த பரணுக்கு வரும். படிச்ச புத்தகத்தையே திரும்ப படிச்சிட்டு போகும். எல்லார் கண்ணுக்கும் மாட்டாது. ஏதோ உன் கண்ணுக்கு மாட்டிருக்கு. உன்னை அடிச்சுகிடிச்சு புடிச்சா?

    இல்லயே!

    பரண்ல பாத்தத யார்கிட்டயும் சொல்லாத. நாளைக்கே உனக்கு எல்லா புத்தகத்தையும் எடுத்து தாரேன். ஸ்கூல் போன மீதி நேரம் படிச்சிட்டுக் குடு. திரும்ப எடுத்த இடத்ல வைச்சிடலாம். புத்தகங்களை கிழிச்சிடாத. கதைவரிகள் அடிக்கோடிடாத. பக்கங்கள் மடிச்சு அடையாளம் பண்ணாத. அதெல்லாம் அதுக்குப் பிடிக்காது!

    சாவியை பெத்தம்மாவிடம் கொடுத்துவிட்டு எங்களது வீட்டுக்கு ஓடினேன். கேம்ப் போய் திரும்பியிருந்த என் தந்தை வாங்கி வந்திருந்த பண்டங்களை பங்கு வைத்து எனது பங்கை எடுத்து நீட்டினார். தம்பிகள் தங்கைகள் பங்கினை ஒப்பிட்டவாறே என்னுடைய பங்கை வாங்கிக் கொண்டேன். சிறிதளவு அல்வாவை கிள்ளி வாய்க்குள் போட்டுக்கொண்டேன். வாய்க்குள் போட்டவுடன் மென்று விழுங்கி விட மாட்டேன். சிறிது சிறிதாய் உமிழ்நீர் சேர்த்து தித்திப்பு கரைசல் உருவாக்கி வாய்க்குள் சிறு சுனாமி செய்து விழுங்குவேன். எனது பங்கு அல்வாவை தின்ன எப்படியும் ஒரு மணி நேரமாகும்.

    என் தந்தை என்னை அழைக்கும் விதமே அலாதி. அழுத்தம் திருத்தமாக நாஸ்ஸர் என அழைப்பார். எகிப்து அதிபர் நாசர் பெயரை தான் எனக்கு விரும்பி வைத்திருக்கிறார் என் தந்தை. வெறும் நாசர்தான். முகமது நாசரோ நாசர் முகமதோ அல்ல. (பின்னாளில் நான் ஆர்னிகா’ எனும் பத்திரிகை நடத்தினேன். ஆர்னிகா என்றால் ஹோமியோபதியின் மருத்துவக் குணமுள்ள மலர்: பிரத்தியேக அடையாளத்துக்காக

    Enjoying the preview?
    Page 1 of 1