Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumbi Varum Varai….
Thirumbi Varum Varai….
Thirumbi Varum Varai….
Ebook420 pages2 hours

Thirumbi Varum Varai….

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.

படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127504494
Thirumbi Varum Varai….

Read more from Lakshmi Subramaniam

Related to Thirumbi Varum Varai….

Related ebooks

Reviews for Thirumbi Varum Varai….

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumbi Varum Varai…. - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    திரும்பி வரும் வரை....

    Thirumbi Varum Varai….

    Author:

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    S. Lakshmi Subramaniam

    For more books

    http://pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளக்கம்

    1. திரும்பிவரும்வரை...

    2. உணர்ச்சிகள் மாறும்

    3. ஒற்றை

    4. மன அலைகள்

    5. ஒரு 'கமா' ஒரு முற்றுப்புள்ளி

    6. பரிசு

    7. தாய்

    8. கணவன் இல்லாத நேரத்தில்...

    9. ரோஸி

    10. காக்கும் கரங்கள்

    11. இருவருக்கிடையே...

    12. நாளைக்கு நிழல் வரும்

    13. மனத்திரை

    14. மின்னி

    15. பொய் சொல்லலாமா?

    16. நாளையும் ஒரு நாள்

    17. இருவர்

    18. மாறுதல்

    19. கள்ளம்

    20. பொறுப்பு

    21. மீட்சி இல்லை

    22. முடிவு

    23. இரட்டை நட்சத்திரம்

    24. நினைவிருக்கும் வரை

    1. திரும்பிவரும்வரை...

    கையில் படிக்க ஒரு புத்தகத்துடன் நீலா கட்டிலில் சாய்ந்து கொண்டாள். உயரப் பிடித்த வெண்ணிறப் பக்கத்தின் மேல் மேஜை விளக்கின் ஒளி துல்லியமாக விழுந்தது.

    அது ஒரு டாக்டரைப் பற்றிய நாவல். தொழிலில் நாணயமாக முன்னேறுவதற்கு ஏற்படும் எத்தனையோ இடைஞ்சல்கள் நாவலில் சுவையாகப் பின்னப்பட்டிருந்தன.

    மார்பின் மேல் விழுந்த பின்னலை விரலால் நெருடியபடி, படித்துக் கொண்டே வந்தவளின் பார்வை சற்றுத் தேங்கி நின்றது. வலப்புறம் ஓரமாகப் பென்சிலால் கோடு கிழித்திருந்தது. அந்தப் புத்தகத்தை டாக்டர் சந்திரன் படிக்க வாங்கிக் கொண்டு போனது அவள் நினைவுக்கு வந்தது. அவளைப் போலவே அவனையும் அந்தப் பகுதி கவர்ந்திருக்கிறது. மார்பில் உயர்ந்து படியும் துகில் அலைகளைப் போல, மனத்தில் எழுந்தன நினைவு அலைகள். மறுபடியும் அந்தப் பகுதியைப் படிக்க முயன்றாள். ஆனால் மனம் அதில் செல்லவில்லை. சந்திரனின் ஞாபகம்.....

    சந்திரன் இப்போது எங்கே இருப்பான்? இங்கிலாந்தில் லண்டனில், அடக்கமான கம்பளிக்குள் புகுந்து கொண்டு, டெலிவிஷனைப் பார்த்தபடியே உட்கார்ந்திருப்பான். அல்லது அவளைப் போலவே அவனும் ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டியபடி படுத்துக் கொண்டிருப்பான். இரவு நேரத்தில் வெளியே போகவோ, கேளிக்கைகள் நடக்கும் 'கிளப்பு’களில் உட்கார்ந்திருக்கவோ-ஊஹூம் - அவனுக்குப் பிடிக்காதவை அவை!

    கண்ணை மூடிக்கொண்டாள். வெளிச்சத்தில் இமைகளின் இளஞ்சிவப்புத் தெரிந்தது. மனத்தில் மலையாகக் குவிந்தது போன்ற நினைவுகளின் மூட்டம். காதருகே சுற்றி அலையும் வண்டென எழுந்து மறையும் அந்தக் குரல். நெஞ்சு நிலையில்லாமல் மிதந்தது. புத்தகத்தை மடித்து மார்பின் மீது கைகளைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள். மனத்தில் வளைய வரும் வண்ணங்களை இதமாக அணைத்துக் கொள்வதைப் போல.

    அவள் சந்திரனை மறக்கவில்லை. ஆனால் அவளால் ஒரு தீர்மானத்துக்கு வரவும் முடியவில்லை. அன்றுங்கூட அவள் தந்தை கேட்டார். அவளால் தான் சரியாகப் பதில் சொல்ல இயலவில்லை. படிப்பு முடிந்துவிட்டது. மேலே செய்யப் போவது என்ன? அமைதியாக இல்வாழ்க்கையில் புகுந்துவிட அவள் விரும்பினால் அவர் அதற்கு ஏற்பாடுகள் செய்யத் தயார். வசதிகளுக்குக் குறைவு இல்லை. உறவினர்களுக்கிடையே, நண்பர்கள் வீட்டில், பொருத்தமாக அமைந்துவிடக்கூடிய, படித்த நல்ல வேலையில் அமர்ந்துள்ள வாலிபர்கள் பலர் இருக்கிறார்கள். கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசினால், அவள் தந்தை அவளிடம் ஒரு 'லிஸ்டை'யே ஒப்பித்து விடுவார்.

    இல்லையானால் ஆசைக்குக் கொஞ்ச நாட்கள் வேலை பார்த்தாலும் பார்க்கலாம். தந்தை தடை சொல்ல மாட்டார். அவளுடன் படித்து முடித்தவர்கள் சிலர் மேற்படிப்புக்குப் போய்விட்டார்கள். சிலர் வேலையில் அமர்ந்து விட்டார்கள். அது ஒரு தனியான கவர்ச்சியோடுள்ள சுதந்திரமான வாழ்க்கை.

    சந்திரனுக்கு அவள் எப்படிச் செய்தால் பிடிக்கும்? மனம் அதை நினைப்பானேன்? அது வரையில் அவள் வாழ்க்கையில் அந்த அளவுக்கு அவன் இடம் பிடித்துக் கொண்டு விடவில்லை. தன்னுடைய எதிர்காலத்தையும் அவள் இன்னும் நிச்சயம் செய்து கொண்டு விடவில்லை. இப்போது அவன் எங்கேயோ இருக்கிறான். அவன் தன்னைப் பற்றி எதுவும் சொல்லக்கூட முடியாது. இருவருக்கும் நடுவில் ஆயிரக்கணக்கான மைல்களின் இடைவெளி இருக்கிறது.

    அவள் தந்தைக்குச் சந்திரனை மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அவருடைய ஆசிரியராக இருந்த ஒருவரின் மகன் அவன். எளிய குடும்பம்; வறுமையான நிலை; மருத்துவக் கல்வி போன்ற பெரிய படிப்புகளுக்குச் செலவழிக்கப் பணம் இல்லை. அவள் தந்தை தாம் அவ்வப்போது உதவி செய்வார். அவனும் கண்ணும் கருத்துமாகப் படித்துக் கொண்டு வந்தான்.

    படிப்பை முடித்த பின்பும் நேரே வேலைக்குப் போய் விடவில்லை. அவருடைய 'நர்ஸிங் ஹோமில்'தான் அவருக்கு உதவியாக இருந்து வந்தான். அவனுடைய கொள்கைகளே தனி. அவனுடைய வழிப்படி விட்டிருந்தால் எங்கேனும் ஒரு கிராமத்தில் போய் உட்கார்ந்து கொண்டிருந்திருப்பான்; அல்லது 'ஆல்பர்ட் சுவிட்ஸரை'ப் போல வசதி இல்லாத மக்களைக் கவனிப்பதற்காக அவனே ஓர் ஆசிரமங்கூட அமைத்துக் கொண்டிருப்பான். அந்த இயல்பு அவன் இரத்தத்தில் கலந்த ஒன்று. பொதுவாகக் குரலில் கண்டிப்பு இருக்கும். அவன் குரல் எளியவர்களைக் காணும் போது இளகிவிடும். அவர்களிடம் அவன் பழகும் விதமே வேறு. 'வாழ்க்கையில் சிறு வயதிலிருந்து கண்டு உணர்ந்து அநுபவித்தவைகளையே அவர்களிடம் நிழலாக அவன் காண்கிறானோ? அவர்கள் வேதனையில் தான் உணர்ந்து சொல்ல முடியாமல் அடக்கிக் கொண்டவைகளையே வெளியிடப் பார்க்கிறானோ?' என்று அவள் நினைப்பதுண்டு.

    அங்கேதான் சிறு முரண். அவளுக்கு அத்தகைய வாழ்க்கையில் பற்று விழவில்லை. அவளால் அப்படி இருக்க முடியாது. வாழ்க்கையில் எல்லா விதமான செளகரியங்களும் கிடைக்கும் வாய்ப்பு அமைந்துவிட்ட பிறகு இன்னல்களை அநுபவிக்க, தேடிக்கொண்டு போவானேன்? சிரமம் தெரியாத, இனிய பொழுதுகள் நிறைந்த, வசதியான நாகரிக வாழ்க்கை அவளுக்குக் கிடைத்திருக்கிறது. அதன் ஒவ்வொரு கணத்தையும், அடிநாக்கின் தித்திப்பை அநுபவிப்பது போல, சுவைத்து உணர்ந்து ஈடுபடும் ரசனை அவளுக்கு உண்டு. அது தான் அவளுக்குப் பிடித்தது. அதை அவள் விடுவானேன்? அதற்கு அவசியம் என்ன?

    தந்தையின் அறையில் உட்கார்ந்து சில சமயம் இருவரும் இந்த விவாதத்தில் ஈடுபடுவார்கள். அவன் நிதானம் இழக்காமல், விட்டுக் கொடுக்காமல் பேசிக் கொண்டே வருவான். அவன் ‘விருட்’டென எழுந்து, பின்னால் கையைக் கட்டிக் கொண்டு நாற்காலியைச் சுற்றி வருவாள். ஆனால் அவனைப் பேச்சில் மடக்க முடியாது கடைசியில் அவனே விட்டுக் கொடுத்துவிடுவான். அவளிடம் பாதுகாப்பாய் அணைக்கும் ஓர் அன்பு அவனுக்கு. அவள் கண்கலங்க யாரும் பேசிவிடக்கூடாது. அவன் மட்டும் பேசலாமா? அதை உணர்ந்தவனைப் போலத் தன்னைத் தானே எல்லைக்குள் மடக்கிக்கொள்வான்.

    அவனுக்கு 'ஸ்காலர்ஷிப்' கிடைத்தபோது அவனைவிட அவள் தந்தைக்குத் தான் அதிக மகிழ்ச்சி. தனியான பெருமை குரலில் தாளமிட்டது. அவன் முதுகில் தட்டிக் கொடுத்தது, அவளிடம் உரத்த குரலில் பேசிய பாராட்டு. கண்ணில் கர்வமும் வியப்பும் தெரியும் பார்வை, எல்லாவற்றிலும் அவளுக்குக் அந்த கரைகாணாத உற்சாகம் தெரிந்தது. அது வெறும் உற்சாகம் மட்டுந்தானா? தந்தை வேறு எதுவும் நினைத்திருப்பாரா? மனத்தில் வேறு திட்டம் எதுவும் இருக்குமா?

    அவள் அறிந்துகொள்ள முயலவில்லை. அன்றுவரை அவள் கேட்கவும் இல்லை. ஆனாலும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் அதை நிச்சயம் விரும்புவார். அவளே கேட்க வேண்டுமென்று நினைக்கிறார். அவள் வெளியிடாவிட்டால், தம் ஆசைக்கு உருவம் கொடுக்க அவர் முனையமாட்டார். தம் விருப்பு வெறுப்புக்களைப் பிறர் மீது சுமத்தும் வழக்கம் அவருக்கு இல்லை.

    மூன்று ஆண்டுகள்!

    படிப்பு மட்டும் அல்ல. அந்த நீண்ட கால இடைவெளி? அவள் மனத்தில் விழுந்த அந்தக் கேள்வி சந்திரனின் பார்வையிலும் தெரிந்தது. அது வரையில் அவள் காத்திருப்பாளா? அவன் கேட்கவில்லை; அவளும் சொல்லவில்லை. எந்த வாக்கிலும் தன்னை வேலியிட்டுக் கொண்டுவிட அவள் விரும்பவில்லை. ஆனால் கண்ணிலிருந்து விழாத நீர்த்துளியாக, மனத்திலிருந்து சொல்லாகச் சிந்திவிடாமல், அப்படி ஓர் எண்ணம் அவளிடம் எழுந்து அமர்ந்த விதத்தை அவன் புரிந்து கொண்டிருப்பானோ?

    அவன் வற்புறுத்திக் கேட்கவில்லை. கடைசியில் விமான நிலையத்தில் விடை பெறும்போதுகூட, சாதாரணமாய் நண்பராகப் பழகிய ஒருவரிடம் விடை பெறும் பாவனை தான் இருந்தது. ஆனால் அவளுக்குத் தெரியும்; அது சாம்பல் பூத்த கனல். கொஞ்சம் ஊதினால் போதும்; 'தகதக' வென்று ஒளியும் வெப்பமுமாக மலர்ந்துவிடும். அவளும் அதை உணர்ந்தே விலகி இருந்ததைப் போன்ற, விரல் கூசித் தள்ளி நின்றதைப் போன்ற அந்தத் தயக்கம். அவர்களிடையே அந்த ஆழ்ந்த, கடக்கக் கூசுகிற பள்ளம்; தாண்டக்கூடிய ஆனால் தாண்டுவதற்குத் துணிவைத் தேட மனம் இல்லாத சிறு கலக்கம்.....

    விளக்கை அணைத்து விட்டுக் கண்ணை மூடிக்கொண் டாள். அரை மயக்கம். முழு நினைவு கூடவில்லை. தன்னுள் மூழ்கும் ஒரு பால் வெளிறு; அதன் விளிம்பாய் மலரும் செந்தளிர். உணர்வில் தோய்ந்த அந்த முகத்தின் ஞாபகம். மன மயக்கத்தின் படலத்தில் எழுந்து அடங்கும் நினைவுகள். இலைகளிலிருந்து சிதறும் மழைத்துளிகளென, மார்பில் கொட்டும் சிரிப்பு.

    ரிஸல்ட் வந்துவிட்டது. நீலா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள். அவள் கை நிறையச் சாக்லேட்டுடன் தந்தையுடன் முன்னால் போய் நின்றபோது 'கன்கிராசுலேஷன்ஸ்' என்று சொல்லிவிட்டு ஒன்றைப் பிரித்து அவள் வாயிலே போட்டார் அவர்.

    அவளைப் பார்த்தபடி அவர் ஏதோ கேட்கத் தயார் செய்து கொள்வது புரிந்தது. கையில் வர்ணத் துண்டுகளாக நிறைந்து கிடக்கும் சாக்லேட்டைப் பார்த்தபடி, தன்னுள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவர் கேட்கப் போகும் கேள்வி அவளுக்குத் தெரியும்.

    அடுத்தபடி என்ன செய்யப் போகிறாய்?

    அவள் பதில் சொல்லவில்லை. தன் நகங்களைக் குவித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். விரல்களுக்குக் கோப்பை வைத்தாற்போல இருந்தது பாலீஷ். ஐந்து வண்டுகளின் முதுகுகள் ஒன்று சேர்ந்தது போன்றிருந்தன நகக்கண்கள். எண்ணெய்க் குழியில் பிரிந்த கருஞ் ஜ்வாலைகளென முகத்தைச் சூழ்ந்து காற்றில் அலைந்தது கூந்தல்.

    சொல்லேன்.

    நீங்கள் சம்மதித்தால் ஒரு வேலைக்குப் போகலாம் என்று இருக்கிறேன்.

    அவருக்கு கொஞ்சம் ஆச்சரியந்தான். மேலே படிப்பதாகச் சொல்லி இருந்தால் அதை ஆர்வம் என்று கருதியிருப்பார். மண வாழ்க்கைக்கு இசைந்திருந்தால் இயற்கை என்று எடுத்துக் கொண்டிருப்பார். இது இரண்டும் அல்ல. ஏதோ ஒரு முடிவைத் தள்ளிப் போடும் முயற்சி. இடையே ஒரு மனப்பரீட்சையில் ஈடுபடும் நிலை.

    உன் இஷ்டம்.

    அவள் வேலையில் அமர்ந்தாகிவிட்டது. அதிகப் பொறுப்புக்கள் இல்லாத வசதியான கட்டிடத்தில் அமைந்த உத்தியோகம்.

    கடற்கரையோடு செல்லும் சாலை. அலை அலையாகப் பிதுங்கும் பஸ் கூட்டம், தொங்கும் கைகள்; தயங்கும் பார்வை. கடைசி வரிசை நிறைய நிறைந்து வழியும் பெண்கள் அணி; பந்துப்பூ; திராட்சைக் கூடைப் பின் கட்டு. மேல் முதுகு வெண்மை தெரியும் மொழு மொழுவென்ற கவர்ச்சி. பின்புறம் துகிலை இழுத்து வளைத்துக் கொண்டு நடக்கும் பாணி. கால் பூமியில் பதியாத ஒரு மிதப்பு.

    அலுவலகத்திலும் பேச்சும் சிரிப்புமாக, லேசான பொழுதுகள் தாம். இடத்துக்கு இடம் போகும், வாய்க்கு வாய் பரிமாறிக் கொள்ளும் சந்தேகங்கள்; சிரிப்பும் நறுக்குமாய்த் தெறிக்கும் பதில்கள்: மெளனமாக இருந்து படீரென்று சிரிப்பாக வெடிக்கும் குறும்புகள்; பிற்பகல் சிற்றுண்டி அதைப் பகிர்ந்து கொள்வதில் போட்டி. சுற்றிலும் வண்டு வட்டமாய் அலையும் பார்வை. தங்களுக்குள்ளே, 'களுக்' குச் சிரிப்பில் அதைக் கடிந்துகொண்டு முணுமுணுக்கும் குற்றச்சாட்டு.

    அந்தச் சூழ்நிலை அவளுக்கு ஒரு வேடிக்கையாகத்தான் இருந்தது. பூவிலிருந்து பூவுக்குத் தாவும், கல்லும் கண்ணும் குத்தும் கரடு தெரியாத, பொன் வண்டின் வாழ்க்கை அது. இனிமையான தேனைத் தவிர வேறு ருசிகள் தெரியாத நிலை அது. அவள் மனதுக்குப் பிடித்தது அதுதான்.

    மேஜைமேல் பேனாவை நிற்க வைத்தபடி சில சமயம் யோசனையில் ஆழ்ந்துவிடுவாள் அதைப்போல ஒரு வாழ்க்கையில் தான், என்றும் ஒரு பகுதியாக இருக்க அவள் விரும்புகிறாளா, விளக்கொளியில், மேல் பகட்டில், கண்ணாடி அலமாரியில் நிற்கும் மேனிகலையாத விளம்பரப் பொம்மையைப் போல? அலுப்போ சலிப்போ இன்றி, வாழ்க்கையின் இனிய பகுதிகளை மட்டும் பகிர்ந்து கொண்டு, அந்தக் கற்பனை ஸ்வரங்களின் லயத்திலேயே தன்னை மறந்து இருந்துவிடலாம் என்ற நினைப்பா? அல்லது அவைகளில் ஈடுபடும் போதே அவற்றின் பொய்மையும் அவளை அறியாமல் உள் மனத்தில் அடிவண்டலாக உறுத்திக்கொண்டு நிற்கிறதா?

    பஸ்ஸிலிருந்து முன் நிறுத்தத்திலேயே இறங்கிக் கடற்காற்றில் அலையும் துகிலைப்போல மனத்தில் புரளும் எண்ணங்களில் ஆழ்ந்தபடி நடந்து போவாள்.

    நீ ஒரு 'ரியலிஸ்ட்' அல்ல என்பான் சந்திரன். உனக்கு வாழ்க்கையில் அநுபவம் போதவில்லை என்பார், தந்தை. இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான். அவளுக்கே அது தெரியும், மனக்கஷ்டத்தில் முடியும் கதை என்றால் அந்தத் திரைப்படத்துக்குக்கூடப் போகமாட்டாள். கதா நாயகிக்கு ஏமாற்றம் என்றால் அந்த நாவலை எடுக்க மாட்டாள். துயரம் சூழ்ந்துவிட்ட நிலை என்றால் அந்த வீட்டுக்கு விசாரிக்கக்கூடத் தந்தைதான் போக வேண்டும். துணைக்குக்கூட போக அவளுக்குத் தயக்கம், நாகரிகத்திலிருந்தும் வசதிகளிலிருந்தும் ஒதுங்கி, அந்த மென்மையான உணர்ச்சிகளின் ஆசையைத் துறந்து, அவர்கள் சொல்லுகிற உண்மையைத் தேடிப்போகிற தைரியம் அவளுக்கு வருமா?

    அந்த வாழ்க்கையில் அவளால் பொருந்த முடியுமா?

    மெல்லிசைப் பாடும் வானொலியின் முன், நாற்காலியில் சாய்ந்தபடி அண்ணாந்து பார்த்த முகத்தில் கண்களைக் கைக்குட்டையால் மறைத்தப்படி தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருப்பாள்.

    அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளை. வழக்கமாக இரண்டு மணிநேரம் தன்னை மறந்து குழந்தையைப் போலத் தூங்கி விடுவது வழக்கம். அன்று அப்படிப் படுத்திருந்த போது ஒலிகளின் கடலலைகளாய் ஏதோ காதை நிறைத்தது. குபுகுபுவென்று ஒரு மணம் மூக்கில் நெடி தட்டின உணர்ச்சி உண்டாயிற்று. கண்விழித்தபோது காலடிச் சத்தம் நான்கு புறமும் எட்ட விலகி ஓடிக் கொண்டிருந்தது. எழுந்து உட் கார்ந்தாள். வாசலில் ஒரே சப்தமாக இருந்தது. அவள் தந்தையின் கூச்சல் போடும் குரல் கேட்டது. வீட்டிலிருந்த ஆட்களும் அவர் குரலைத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். அவள் மாடி வெளிவராந்தாவில் வந்து நின்று கொண்டு கண்ணை மறைத்த முன் மயிரை விலக்கியபடி பார்த்தாள்.

    அவர்கள் வீட்டுக்கு எதிரே இருந்த குப்பம் எரிந்து கொண்டிருந்தது. கரும் பொட்டலங்களாக ஒன்றின் பக்கத்தில் ஒன்றாய்க் குவிந்து கிடந்தன குடிசைகள். அவற்றின் மேல் எண்ணற்று விதம் விதமாய் அலைந்தன தீக்கொழுந்துகள். ஒளிப் பிழம்பின் தகதகப்பில் அந்த இடத்தில் வானத்திலேயே ஒரு மங்கிய ஒளி பரவிய தோற்றம் உண்டாயிற்று. கருத்துச் சுருண்டு எழுந்த புகை தோகைப் படலமாக எழுந்து வாயுள்ளும் மூக்கிலும் புகுந்தது.

    அவளும் இறங்கி வெளியே ஓடினாள்.

    ‘மடமட' வென்று முறிந்து விழும் கூரைகளின் நடுவே ஆட்களோடு அவள் தந்தையும் நின்று கொண்டிருந்தார். அவர் இடக்கையில் தீப்புண்ணின் சிவப்பு. பரட்டைத் தலைக்குக் கீழே புகை அடித்துக் கருகியிருந்தது நெற்றி. உடலைத் தெப்பமாக நனைத்தது வேர்வை. குடம் குடமாகத் தண்ணீரை அள்ளி கொட்டிக் கொண்டிருந்தார்.

    ஒரு குழந்தை புகையிலிருந்து தட்டுத் தடுமாறி வெளியேறிக் கொண்டிருந்தது. அவர் அதன் கையைச் சடாரென்று பிடித்துக் கொண்டார். அவர் பார்வை ஒரு கணம் சுழன்றது. சற்றுத் தள்ளியிருந்த அவள் முகம் அதில் தடுக்கி இருக்க வேண்டும். குழந்தையை அவள் புறமாக விசிறினார்.

    இந்தா நீலு, பிடி. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்...

    அவள் கை ஒரு கணம் நீட்டத் தயங்கிற்று. அவர் கண்கள் தணலின் உருக்கொண்டு ஜ்வலித்தன, அவள் தயக்கத்தின் பொருளைக் கண்டு கொண்டது போல. இன்னும் ஒரு கணம் தாண்டியிருந்தால் அவளைக் குத்தி வருத்துவது போல ஒரு சொல் தெறித்து விழுந்திருக்கும். அதற்கு முன் கையை நீட்டி அந்தக் குழந்தையை வாங்கிக் கொண்டு விட்டாள்.

    மளமளவென்று குழந்தைகள் நான்கு புறங்களிலிருந்தும் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டன. அவர்களை அவள் பத்திரமாகக் காம்பவுண்டுக்குள்ளே கொண்டு போய்ச் சேர்க்கத் தொடங்கினாள். தந்தைக்காகச் செய்யத் தொடங்கினாலும், பனியில் நீரில் விரலை வைப்பது போல நெஞ்சில் இன்னும் அந்தத் தயக்கம் இருந்தது. அடி வயிற்றில் ஏதோ சுருள் சுழன்றது. அது மேலெழுந்து ஊர்ந்து வருகையில் தொண்டையில் லேசாய்க் குமட்டிற்று.

    அதுவா அவளுடைய பலவீனம்? அதையா சந்திரனும் தந்தையும் சுட்டிக் காட்டினார்கள்? பிறவியுடன் பிறந்து விடும் துன்பம், பிறகு அது வாழ்க்கையில் ஏற்படுத்தும் நசுங்கல்கள், அந்த உணர்வின் வேதனை, அவற்றை நேருக்கு நேர் சந்திக்கவா அவளுக்குத் துணிவில்லை? வலியில் துடிக்கும் கைகளை, நோயில் புலம்பும் முகத்தை, உள்முறிவில் துவளும் உடலை, ஒவ்வொரு நாளும் பார்க்கிறார்கள், அவள் தந்தையும் சந்திரனும்; வேதனையைப் போக்குவதில், ஆறுதல் தருவதில், துயர் துடைப்பதில் தான் மனிதாபிமானம் இருக்கிறது. கண்டு உணர்ந்து கூசி ஓடுவதில் இல்லை.

    அவளைச் சுற்றிலும் குழந்தைகள் கூச்சலிட்டன. அவர்கள் விழிகள் கலங்கியிருந்தன. உள்வலியில் நெளிந்தன புருவங்கள், கடல் அலை ஒதுக்கியது போல அவளைச் சுற்றிச் சூழ்ந்தன முகங்கள். காற்றில் மிளிரும் நுரை போல அவர்கள் உதடுகளில் அழுகை நடுங்கிற்று. தன்னை மறந்து அவர்களைச் சேர்த்து இழுத்துக் கொண்டாள். நெருப்பில் தானே புடமிடப்பட்டது போன்ற தெளிவு உண்டாயிற்று.

    இரவு ஒன்பது மணி வரையில் அவளுக்கு வேலை சரியாக இருந்தது. தந்தைக்குச் சரியாக உடனிருந்து காயத்துக்கு மருந்து கட்டுதல், தனியாகச் சமைத்து வைத்திருந்த உணவை வழங்குதல், குழந்தைகளுக்குத் துணி கொடுத்தல் என்று அவளுக்கு வேலை சரியாக மூச்சு வாங்கிற்று. ஆனால் அந்த உழைப்பில் அயர்வில்லை; மனச் சலிப்பு இல்லை; எதையோ கண்டு கொண்ட மகிழ்ச்சிதான் தளிர்த்து நின்றது. அவளுடைய விழிகளில் ஒரு புது ஆழம், ஏதோ ஒரு பலவீனத்தை வென்று தன்னை ஊன்றிக் கொண்ட துணிவு உண்டாயிற்று.

    விடியற்காலை.

    சரியான தூக்கம் இல்லை. ஆனாலும் சீக்கிரம் விழிப்புக் கொடுத்து விட்டது. ஜன்னல் வழியே வாணக் குடை இறங்குவது போல நட்சத்திரங்கள் குவிந்து தெரிந்தன. பாலத்துக்கு மேல் சாட்சிக் கம்பளங்களாக விளக்குகள் தோன்றின. விடியிருள் கலக்கும் வேளையில், மின் விளக்கும் வானத்து வெளிர் ஓட்டமுமாக நீரில் நிழலிட்டது ஒரு காட்சி.

    அவள் எழுந்து ஜன்னல் ஓரம் வந்து நின்றாள். செக்கர் வானத்தின் மேகத்தில் இரண்டு முகங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. நெற்றியும் மூக்கும் வாயும் தெரிவது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஒன்றையொன்று ஆவலாய் நெருங்கும் வேகம் இருந்தது. கண் இமைகளை மூடிக் கொண்டாள். அவள் மனம் எங்கேயோ எட்ட எட்ட விலகி ஓடிக்கொண்டிருந்தது.

    முகத்தைக் கழுவிக்கொண்டு காபியும் கையுமாகத் தந்தையின் முன் போய் நின்றாள். பத்திரிகையைப் பிடித்திருந்த அவர் கை தாழ்ந்தது. மூக்குத் தண்டில் கண்ணாடி வழுக்கிற்று. ஒரு கனிவோடு அவளைப் பார்த்தது போல இருந்தது அவளுக்கு. தன் கையில் காபியுடன் எதிரே உட்கார்ந்து கொண்டாள்.

    நான் என் வேலையை விட்டுவிடப் போகிறேன் அப்பா.

    அவர் முகம் ஆச்சரியத்தில் நிமிர்ந்தது. பத்திரிகையை மடித்து மடியில் போட்டுக் கொண்டார்.

    பின் என்ன செய்யப் போகிறாய்?

    நர்ஸிங் ஹோமில் உங்களுக்குத் துணையாக வேலை செய்யப் போகிறேன்.

    அவர் பார்வை அசையவில்லை. அவளுடைய உணர்ச்சிகளின் லயத்தில் தாமும் கலந்து விட்டார். நினைவுகள் யாவும் ஒரே சுருதியில் இசைப்பது போல இருந்தன. ஒருவர் கண்ணுக்குள் ஒருவர் ஒளிந்திருப்பது போன்ற உணர்ச்சிகளின் நெகிழ்ச்சி உண்டாயிற்று.

    நல்லது!... எத்தனை நாளைக்கு? கீழுதடு புன்னகையில் பிதுங்கிற்று.

    சந்திரன் திரும்பி வரும்வரை- என்று சொல்லி விட்டுக் காபியை அருந்தும் பாவனையில் தலையைக் குனிந்து கொண்டாள் நீலா.

    2. உணர்ச்சிகள் மாறும்

    குழந்தையை அணைத்தவாறு ஜன்னல் வழியே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் விஜயா. மாலைப் பொன் விழுந்து கொண்டிருந்தது. வானத்தில் தங்க இலைகளைத் தூவினாற் போலத் தென்னையின் பின்னிருந்து வெளிப்பட்டு பறவைகளின் கூட்டம் உதிர்ந்து மறைந்தது.

    கீழிருந்து மூச்சுக் காற்று போல் மலர்களின் மணம் மலைப் பாதையைக் கடந்து வந்தது. கொல்லைப்புறம் இரகசிய ஒலியாய்ப் பேசும் அருவியின் சத்தம் எழுந்தது. கொஞ்ச நேரத்தில் பனி புகை வடிவமாய்த் தொங்கி விடும். பசுமையான இலைகளின் அடர்த்தியில் இரவின் கருநிழல் படிய ஆரம்பித்துவிடும்.

    ரவி திரும்பி வர மணி ஏழு ஆகும். கொண்டை ஊசி முனைகளில் முனகியபடி, கொஞ்சம் கொஞ்சமாய் மேலெழுந்து வரும் 'ஜீப்’ பின் சத்தம் கேட்கும். அப்புறம் வாசற் கோட்டைத் திறக்கும் ஒலி எழும். நாயின் குரைப்பைத் தொடர்ந்து, ரவி செல்லமாய் அதை அதட்டும் குரல் தொடரும். அவள் எழுந்து வாசல் விளக்கைப் போடுவாள்.

    குழந்தை மணி மடியிலிருந்து பிய்த்துக் கொண்டு நழுவினான். அவளுக்கு அசைய மனமில்லை. முழங்கால்களைக் கட்டியபடி உட்கார்ந்திருந்தாள்: பல வர்ணங்கள் தோய்ந்த படுதாப்போல், மஞ்சளும் சிவப்பும் கறுப்புமாய், அந்தி மாலை இரவின் மசியில் குழையும் ஜாலத்தைப் பார்த்தபடி. நலுங்கும் திரையின் மடிகள் போல் காற்றில் அந்தி மிளிரும் நயம்.

    அந்த இயற்கை அழகில்தான் அவளுக்கு என்ன லயிப்பு? வெள்ளி முளைக்கும் வேளையில் காலைக் கதிர் பட்டுப் பட்டாய் விரிந்த புல்வெளியில் உதிரும் நேரத்தில், மாலையில் கருமலையின் முடிகள் இருளில் பொட்டலமாய் மடியும் தருணத்தில், அவள் அப்படித்தான் தன்னை மறந்து நின்று விடுவாள்.

    கீழே வளைந்து வளைந்து இறங்கும் மலைச்சாலையைப் போல, மனத்திலும் படிப்படியாகப் பின்னோக்கித் தெரிந்த நினைவுகள்.

    அவள் முதன் முதலில் அங்கே குடித்தனம் நடத்த வந்த சமயம் அது. வண்டியிலிருந்து சாமான்கள் இன்னும் இறங்கி வந்தபாடில்லை. காலடி எடுத்து மண்ணில் பதியக் குதித்து நின்றவளின் கைவிரல்களை ரவி ஆசையாய்ப் பின்னிக் கொண்டான்.

    எப்படி இருக்கிறது நம் அரண்மனை?

    அவளால் கொஞ்ச நேரம் பதில் சொல்லவும்கூட முடிய வில்லை. படிப்படியாக, மேடேறிய குன்றில். மரப் பலகைகளும் கண்ணாடியும் சேர்த்து அமைத்த, சித்திரம் போன்ற வீடு... கூரைக்குப் பின் சாமரமாய் அலையும் ஊசி முனை மரங்கள், வாசல் தெரியாமல் படர்ந்து நின்ற கொடிகள், கொள்ளையாகச் சொரிந்து கிடந்த வெண்ணிறப் பூக்கள்.

    அவன் விரல்கள் அவள் முழங்கையைத் தொட்டன. அவள் பற்கள் பளீரென்றன. மகிழ்ச்சி குழம்பும் முகம். அவளுக்கு மிகவும் பிடித்த இடம்தான்.

    சாமான்களை இருவருமாகப் பார்த்துப் பார்த்து, இடம் தேடி அடுக்கினார்கள்; குழந்தைகள் விளையாடுவதைப் போல, படுத்துக் கொள்ளும் அறை, ஜன்னல் வழியே வெளிப்புறக் காட்சி தெரியும்படி கட்டில், கொல்லைப்புறம் குதித்து வரும் அருவி நீரிலிருந்து எட்டினாற்போல சமையலறை ஜன்னல், ஒவ்வொன்றையும் அவள் வித விதமாக அடுக்கி அழகு பார்த்தாள். ஒரு வாரத்துக்கு. நாளுக்கு ஓர் அமைப்பாகத்தான் இருந்தது. வேலையிலிருந்து திரும்பும்போது அவனுக்கு வியப்புக் காத்திருக்கும்.

    புதிதாக மணமாகி அங்கே வந்த அநுபவம் மட்டும் அல்ல அது. அந்தச் சூழலே அவளுக்குப் புதுமையாக இருந்தது. சென்னையில் அவள் மாமாவின் வீட்டில், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நடுவில் கொம்மாளம் அடித்து வளர்ந்த பழக்கம் அவளுக்கு. தினமும் யாரேனும் விருந்தாளிகள் வந்த வண்ணமாக இருப்பார்கள். வசதியான 'போர்ஷனா’க இருந்தாலும் அது கொள்ளாமல் நிரம்பி வழியும்.

    தெருவில் இரவு பத்துமணி வரை அடங்காத சத்தம் இருக்கும். பஸ் திரும்பும் முனை அது. சைக்கிள் ரிக்ஷாவின் மணி தலையில் அடிப்பதுபோலக் கேட்டுக் கொண்டே இருக்கும். இரவு இரண்டு மணிக்கும் சினிமாவின் கடைசிக் காட்சி முடிந்து திரும்புவோர் பேச்சொலி காதில் விழும். பகல் நேரம் முழுவதும் கறிகாய் வண்டியும், பழக் கூடைக்காரனும், பிச்சை கேட்டு வருபவர்களுமாக, பதில் சொல்லி வாய் அலுத்துப் போகும்.

    அங்கே இருந்துவிட்டு இங்கே உனக்கு 'வெறி’ச் சென்று இல்லை? அவன் கேள்விக்குப் பதிலாய் அவள் கண்கள் புன்னகை புரிந்தன. ஆசையாய் தழுதழுக்கும் குரல் தான்! அந்தத் தனிமை அவளாகத் தேடிக்கொண்டது. அவர்களுக்குள்ளே, பிறர் குறுக்கீடு இன்றிப் பகிர்ந்து கொள்ள நிதானமாய் விரிந்துகிடக்கும் பொழுதுகள், சந்தர்ப்பங்கள், இனிய நினைவுகள்-

    இங்கே அந்தச் சந்தடி இல்லை. நேரத்தின் நெருக்கடியும் இல்லை. அவர்களுக்குத்தெரியும்; காலை நேரத்தில் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கும், வேலைக்குப் போகும் மாமாவுக்கும். அவளுடைய கல்லூரி அவசரத்துக்கும், ஒருங்கே ஈடுகொடுக்க அம்மாவும் மாமியும் ஓடி ஓடிக் காரியங்கள் செய்யும் மும்முரம். அதற்கு நேர்மாறாய் இங்கே தெரிந்த நிதானம்? அதன் அமைதியில் தெரிந்த அழகு?

    'ஜீப்' வர அரை மணி இருக்கும் போது ரவி ஈரத் தலை மயிரைக் கோதியபடி மேஜை முன் வந்து உட்காருவான். ரொட்டி, வெண்ணெய், பழம், சூடாக ஆவி பறக்கும் சிற்றுண்டி, இவைகளோடு அவளும் வெளியே எதிரே வந்து உட்கார்ந்து கொள்வாள். ஒருவருக்கொருவர் பரிமாறியபடி பேச்சையும் பரிமாறிக் கொண்டு சாப்பிடுவார்கள். தனியாக உட்காருவது அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்காது.

    அவன் போன பிறகு சில நாட்களில் வீட்டின் பின்புறம் பாறைகளின் நடுவே பாய்ந்து வரும் ஆற்றில், அவள் குளிக்கப் போவதுண்டு. கல்லூரியில் நீச்சல் குளத்தில் பழகிய ஞாபகமாய். நேரம் போவது தெரியாமல் நீந்துவாள்; மல்லாந்து படுத்து வாயைத் திறந்து கட்டையாய் மிதந்தபடி, உடல் சில்லென்று குளிரும் வரையில் அப்படி ஆசை தீர அளைவதில் ஒரு மகிழ்ச்சி வெறி.

    இரவு வேளையில் கண்ணாடி ஜன்னலில் இருள் தேங்கும். கழுத்துவரை இழுத்த போர்வையுடன் படுத்துக் கொள்வாள். நள்ளிரவுக்கு மேல், விடிவிளக்கின் மெளன வெளிச்சமாய், நிலவொளி கண்ணாடி வழியே உள்ளே படியும், போர்வையை உதறி விட்டு முழங்காலை மடித்துக்கொண்டு உட்கார்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1