Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thudippin Ellai
Thudippin Ellai
Thudippin Ellai
Ebook328 pages2 hours

Thudippin Ellai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் அழைப்பின் மேல் விருந்துக்குப் போயிருந்த சமயம். சாப்பாடு முடிந்து பேசிக் கொண்டிருந்தபோது அந்த நண்பர் தம்பதிகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுகத்தில் ஒரு புதுமை இருந்தது. எளிதில் விவரிக்க இயலாத எத்தனையோ உணர்ச்சிகள் அந்தப் பெண்ணின் முகபாவத்தில் நிழலாடுவதை என்னால் காண முடிந்தது. அந்தத் தம்பதிகளின் வாழ்க்கையில் அந்தத் திருமணம் ஒரு சாதனை என்றே எனக்குத் தோன்றியது. நண்பரை விசாரித்தேன்.

அவள் சிறு பெண்ணாக இருந்தபோதே கணவனை இழந்தவள். அதுமட்டுமல்ல; அவளை இப்போது மணந்து கொண்டிருப்பவர் அவள் கணவனின் நண்பர். அவருடைய இறுதி வேண்டுகோளின் படிதான் அவளுடைய வாழ்க்கையில் இந்த மறுமலர்ச்சி தோன்றியது. இதை அறிந்தபோது, அந்த மூன்று உள்ளங்களிலும் ஒவ்வொரு விதத்தில் போற்றத்தக்க, உணர்ந்து பச்சாத்தாபப்படுவதற்குரிய, உணர்ச்சிக் கோணங்கள் எனக்குப் புலனாயின. எப்போதும் ஒரு வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும். அதற்குப்பண்பட்ட உள்ளங்கள் தேவை. ஒருவரை மற்றவர் உணர்ந்து, உடன் அநுபவித்து, புரிந்து, விட்டுக்கொடுத்து, அனுசரித்துப் போகவேண்டிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ! அப்போது அவர்களிடையே தோன்றும் மன நெகிழ்ச்சிக்கு அளவு கோல் இல்லை. அன்பின் ஆழத்தில் மறைவாய் மின்னி ஒளிர்வதே அதன் சிறப்பு.

இங்கே மூன்று உள்ளங்கள் ஒரு வாழ்க்கையை வளப்படுத்தியதைக் கண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அதற்குரிய பாத்திரமாகக் கலந்து கொணடிருந்தார்கள். அந்தப் பெண்ணின் உலகம் தெரியாத பிராயம், கணவனின் இளமைத் துடிப்பு, திருமணம் பயனின்றி முடிந்தபோது விளைந்த தவிப்பு, அதை வீணாக்காமல் மீட்க இரு நண்பர்களிடையே இருந்த துணிவு, ஒவ்வொன்றும் கண்ணாடியில் விழுந்த ஒளிக் கதிர்களாக என்னுள் வண்ண அலைகளை விசிறின. என் எண்ணங்களுக்கு எழுத்தில் ஓர் உருவம் காண முயன்றேன்.

அந்த வித்தின் மலர்ச்செடிதான், 'துடிப்பின் எல்லை'

Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580127504875
Thudippin Ellai

Read more from Lakshmi Subramaniam

Related to Thudippin Ellai

Related ebooks

Related categories

Reviews for Thudippin Ellai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thudippin Ellai - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    துடிப்பின் எல்லை

    Thudippin Ellai

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முதல் பகுதி

    1. அத்தை வந்தாள்

    2. புது வாழ்வு

    3. படக்காட்சி

    4. உருவக் காட்சி

    5. புரிந்துவிட்டது

    6. எட்டாத ஏக்கம்

    இரண்டாம் பகுதி

    1. பயங்கரச் செய்தி

    2. இழந்தது என்ன?

    மூன்றாம் பகுதி

    1. பொழுது போக

    2. இளமையின் அழைப்பு

    3. புத்தகம் கிடைத்தது

    4. இதய ஒலி

    5. அத்தையின் அநுமதி

    6. பிறந்த நாள்

    7. தத்தளிக்கும் படகு

    8. இருட்டுக்குள் இருட்டு

    9. உறுதிமொழி

    10. புறப்பாடு

    11. ஆலமரம் விழுந்தது

    12. திசை தப்பிய புறா

    13. வீணையின் நாதம்

    நான்காம் பகுதி

    1. மாறிய முகம்

    2. அபூர்வ அமைதி

    முன்னுரை

    எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் அழைப்பின் மேல் விருந்துக்குப் போயிருந்த சமயம். சாப்பாடு முடிந்து பேசிக் கொண்டிருந்தபோது அந்த நண்பர் தம்பதிகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுகத்தில் ஒரு புதுமை இருந்தது. எளிதில் விவரிக்க இயலாத எத்தனையோ உணர்ச்சிகள் அந்தப் பெண்ணின் முகபாவத்தில் நிழலாடுவதை என்னால் காண முடிந்தது. அந்தத் தம்பதிகளின் வாழ்க்கையில் அந்தத் திருமணம் ஒரு சாதனை என்றே எனக்குத் தோன்றியது. நண்பரை விசாரித்தேன்.

    அவள் சிறு பெண்ணாக இருந்தபோதே கணவனை இழந்தவள். அதுமட்டுமல்ல; அவளை இப்போது மணந்து கொண்டிருப்பவர் அவள் கணவனின் நண்பர். அவருடைய இறுதி வேண்டுகோளின் படிதான் அவளுடைய வாழ்க்கையில் இந்த மறுமலர்ச்சி தோன்றியது. இதை அறிந்தபோது, அந்த மூன்று உள்ளங்களிலும் ஒவ்வொரு விதத்தில் போற்றத்தக்க, உணர்ந்து பச்சாத்தாபப்படுவதற்குரிய, உணர்ச்சிக் கோணங்கள் எனக்குப் புலனாயின. எப்போதும் ஒரு வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும். அதற்குப்பண்பட்ட உள்ளங்கள் தேவை. ஒருவரை மற்றவர் உணர்ந்து, உடன் அநுபவித்து, புரிந்து, விட்டுக்கொடுத்து, அனுசரித்துப் போகவேண்டிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ! அப்போது அவர்களிடையே தோன்றும் மன நெகிழ்ச்சிக்கு அளவு கோல் இல்லை. அன்பின் ஆழத்தில் மறைவாய் மின்னி ஒளிர்வதே அதன் சிறப்பு.

    இங்கே மூன்று உள்ளங்கள் ஒரு வாழ்க்கையை வளப்படுத்தியதைக் கண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அதற்குரிய பாத்திரமாகக் கலந்து கொணடிருந்தார்கள். அந்தப் பெண்ணின் உலகம் தெரியாத பிராயம், கணவனின் இளமைத் துடிப்பு, திருமணம் பயனின்றி முடிந்தபோது விளைந்த தவிப்பு, அதை வீணாக்காமல் மீட்க இரு நண்பர்களிடையே இருந்த துணிவு, ஒவ்வொன்றும் கண்ணாடியில் விழுந்த ஒளிக் கதிர்களாக என்னுள் வண்ண அலைகளை விசிறின. என் எண்ணங்களுக்கு எழுத்தில் ஓர் உருவம் காண முயன்றேன்.

    அந்த வித்தின் மலர்ச்செடிதான், 'துடிப்பின் எல்லை'

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்.

    *****

    முதல் பகுதி

    மௌனம்

    1. அத்தை வந்தாள்

    தண்ணீரில் குடத்தைச் சாய்த்தபடி அதை நிறைக்கத் தொடங்கினாள் உமா. நீரில் மூழ்கி எழுந்து முறுக்கி விட்ட கூந்தல் தோளின் மேல் புரண்டது. நெற்றியோடு ஒட்டிக் கொண்ட மயிர்ச் சுருளிலிருந்து நீர்த்துளி காதோரம் வழிந்தபோது மேனி குறுகுறுத்தது.

    கைகள் நீரை அலைத்தபோது எழுந்த சிற்றலைகள் காலை நேரத்து இளவெயிலில் கொரனாப்பட்டை போட்டன. எதிரே குளத்தின் மேல் வட்டமிடும் கொக்குக் கூட்டம். படிக்கட்டில் 'டொப்பு டொப்’பென்று துணி துவைக்கும் சத்தம். கரையில் சித்தி விநாயகர்; நடுவில் பாதிரி மரத்தை வைத்து எப்போதோ போட்ட கூரைக் கொட்டகையில் குடியிருப்பு. விநாயகரை எட்டிப் பார்த்து விட்டு நாகுப்பாட்டி கரை ஏறிப் போய் விட்டாள். உமா படி ஏறிவரத் தொடங்கினாள். பங்கஜம் இன்னும் குளித்து முடியவில்லை. மேல் படியில் வைத்திருந்த செப்புக் குடத்தில் கழுத்தருகில் புளி ஒட்ட வைத்திருந்தது.

    தொபுகடீர்!

    எட்டி நீண்டிருந்த கிளையிலிருந்து நாணுத் தாத்தாவின் பேரன் தான் குதித்திருக்க வேண்டும். தலை மறைந்து விட்டது. பங்கஜத்தின் கோபம் கண்களிலே, வட்ட விழிகளிலே தெறித்தது. குதித்த வேகத்திலேயே, காலடியில், தூக்கிவாரிப் போடுவது போலத் தலையைச் சிலுப்பிக் கொண்டு மூழ்கிய முகம் புறப்பட்டது. பங்கஜத்தின் முணுமுணுப்பு. அவள் ஈர அடி எடுத்து வைக்கும் சத்தத்துக்கு எதிரொலியாகக் கேட்டது.

    குடத்தில் நீர் ததும்ப, உமா தெருவோடு நடக்கத் தொடங்கினாள். முதுகுப்புறம் அடித்த வெயிலில் தோள் மட்டும் காய்ந்து விட்டது. ஈரப்புடைவை முதுகில் ஒட்டிச் சுருண்டு இழுத்தது. சரிந்து நின்ற ஈரப் புடைவைக்கரை கணுக்காலில் உறுத்திக் கொண்டு நடக்க வொட்டாமல் வெட்டி இழுத்தது.

    குளக்கரை வழிக்கு விதானம் போல இரு புறமும் மூங்கிற் கொத்துகள், மட்கி மடிந்து போன படலைத் தழுவி ஒட்டி நின்ற காட்டாமணக்குச் செடி. ரெயிலடியிலிருந்து வாடிக்கை இல்லாமல் திரும்பிய வண்டியின் சத்தம் தெருக்கோடி வரைக்கும் கேட்டது.

    உமா தெருவின் கோடிக்கு வந்துவிட்டாள். விசாலியின் அத்தை இன்னும் கோயிலிலிருந்து திரும்பவில்லை என்பது அவள் சோழியைப் பிடித்து விளையாடியபடி திண்ணையில் உட்கார்ந்திருந்ததிலிருந்து தெரிந்தது.

    விசாலியின் கையில் இருந்த சோழிகள் துள்ளித் துள்ளி எழுந்தன. திருப்பிய புறங்கையில் ஜோடியாக விழுந்த சோழிகள் துள்ளித் தரையில் குதித்தன. மேலும் கீழுமாக விழிகள் சோழியோடு பாய்ந்தன. அள்ளிப் பிடித்து ஏந்தியபோது, கண்ணாடி வளைகள் மணிக்கட்டு வரை 'சரக் சரக்'கென்று மடங்கின.

    பாவாடையில் சோழிகளை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள் விசாலி. ஆட்டம் முடிந்து விட்டது. பாவாடையை மடித்து எழுந்தபோது, ஒரு சோழி வழுக்கித் திண்ணையிலிருந்து தெருவில் விழுந்தது.

    பொறுக்க வந்தவள், சோழியை உள்ளங்கையில் மடக்கிக் கொண்டு தலையை நிமிர்த்தினாள்.

    உமா! உமா! யாரோ வந்திருக்கா உங்க வீட்டுக்கு!

    யாருடீ?

    தெரியலை. காரிலே வந்திருக்கா. ஒரு மாமாவும் மாமியும்!

    விசாலி படி ஏறிவிட்டாள். அவளுக்கு உள்ளே போகும் அவசரம். நாலைந்து வீடுகளுக்கப்பால் அவள் அத்தை திரும்பி வந்து கொண்டிருந்தாள் கோயிலிலிருந்து.

    குடத்தின் விளிம்புவரை எழும்பித் ததும்பிய நீரைப் போல அவள் மனமும் அலைபாய்ந்தது. பாட்டியும் அவளும் இத்தனை வருஷங்களாக நடத்திய தனி வாழ்க்கையில் ஒருவருக்கு மற்றொருவர்தாம் துணை. யாரும் அவர்களைத் தேடி வந்ததில்லை. டவுனிலிருந்து எப்போதாவது சாமண்ணா வருவார். கோரைப்பாயில் உட்கார்ந்தபடி, நீர் மோரைக் குடித்துவிட்டு, அவர் ஒரு மணி நேரம் பேசும் வம்புப் பேச்சில் சேதி நிறைய இருந்தாலும் சத்து இராது.

    வீட்டு வாசற்படியில் கார் நின்று கொண்டிருந்தது. தாழ்ந்து நின்ற குச்சு வீட்டுக்கு எதிரே கப்பல் போல அந்தப் பெரிய கார் நிற்பது பொருத்தம் இல்லாமல் தோன்றியது. கூடத்தில் அங்கவஸ்திரத்தை நாற்காலியின் ஒற்றைக் கையில் மடித்துப் போட்டுவிட்டு யாரோ உட்கார்ந்திருந்தார்கள். உள்ளே பாட்டியுடன் யாரோ பேசுவது காதில் விழுந்தது. நடையில் தனியாக விட்டிருந்த ஜோடிச் செருப்பு.

    தலையைக் குனிந்தபடி உள்ளே நடந்தாள் உமா. பாராததுபோல் பார்க்கும் பார்வை பக்கவாட்டில் ஓரக் கண்ணில் தெரிந்தது. அந்த முகத்தை அவள் அதுவரை பார்த்ததில்லை. ஈரத் தரையில் பிடி நழுவாமல் காலைப் பதிய வைத்து நடந்தபோது குத்துத்தாளம் இட்டது குடத் தண்ணீர்.

    இன்னும் இந்தப் பொண்ணைக் காணோமே! குளிக்கப் போய் நாலு நாழிகை...

    பாட்டிதான் பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரே பாட்டியின் முதுகுப்புறம். அவள் வந்தது தெரிந்திராது. காலடிச் சத்தம் விழுந்து புரிந்து கொள்ளுகிற அளவுக்குச் செவியில் கூர்மை இல்லை.

    எதிர்ப்புறம் உட்கார்ந்திருந்த அம்மாளின் மேல் உமாவின் பார்வை விழுந்தது. நடு வயசுக்கு மேலிருக்கும். கீற்று விழுந்த நரைமயிர். லட்சுமிகரமான முகம். பட்டை பட்டையாக ஒளிவீசிய வைர பேசரியும் காதுத்தோடும் தலை நிமிர்ந்தபோது கண்ணைப் பறித்தன. மஞ்சள் பசுமை ஏறிய முகத்தில் பெரிய அளவில் குங்குமப் பொட்டு. சற்றுத் தாட்டியான உடம்புக்குப் பொருத்தமாகத் பதினெட்டு முழப் பட்டுப்புடைவை. அகலமான ஜரிகைக் கரையின் விளிம்பில். கழுத்தில் பதினெட்டு வடப் பவுன் சங்கிலி.

    இதோ வந்துட்டாளே!

    அந்தக் குரலின் அருமை அவளுக்கு இதமாக இருந்தது. முன்பின் பரிசயம் இல்லாமல் போனாலும், குரலில் நிறைந்து நின்ற பரிவு, அவளை நெடு நாள் பழகிவிட்டவர்களுடன் சேர்த்து வைப்பதைப் போன்ற உணர்ச்சியை எழுப்பியது.

    வாடி உமா! உனக்கு ஒன்றுவிட்ட அத்தை. நமஸ்காரம் பண்ணு.

    குடத்தைக் கீழே வைத்துவிட்டு, வளைய வந்து நமஸ்காரம் செய்தாள் உமா. உடலோடு படியப் படிய நின்ற ஈரச் சேலை ஒட்டிப் பிடித்துக் கொண்டது. நிமிர்ந்து பார்க்காவிட்டாலும் அவளுடைய அத்தை அவளையே கண் கொட்டாமல் பார்ப்பதைப் போன்ற ஓர் உணர்வு நெஞ்சைத் தொட்டது.

    எழுந்து சுவர் மூலையில் இருந்த கழியை ஏந்திக் கொடிப் புடைவையை இழுத்து, எடுத்துக் கொண்டாள். வறவறவென்று காய்ந்திருந்த புடைவையை அள்ளி அணைத்துக் கொண்டபோது ஈரத்தில் கூதலெடுத்த உடம்புக்கு இதமாக இருந்தது.

    சாத்திவிட்ட கதவுக்கு அப்பாலிருந்து அத்தையின் குரல் சன்னமாகக் காதில் விழுந்தது. பேச்சில் இருந்த நயம் அவளுக்குப் புதுமையாக இருந்தது. அதட்டலும் கண்டிப்பும், கொஞ்சலும் அரவணைப்புமாக அவள் அந்தப் பதினான்கு வயசு வரை அறிந்திருந்தது பாட்டியின் சுபாவம் மட்டுந்தான். அந்தக் குறுகிய வீட்டின் நான்கு சுவர்களைத் தாண்டிப் பாட்டி வெளியே போனதில்லை. அறுபது வயசைத் தாண்டிவிட்ட வாழ்க்கையில் அநுபவம் ஊறிப் போயிருந்தாலும் அவள் பேச்சில் மெருகு இல்லை. பேசிப் பேசிப் புளித்துப் போன சில விஷயங்களைத் தவிர அவளிடம் புதுமையாக எதுவும் கேட்டுவிட முடியாது.

    பட்டணத்து நாகரிகத்தின் பக்குவம் அத்தையின் பேச்சில் மிதமாக, அளவாக விழுந்தது. பாட்டியின் மனத்தை நெடுநாள் பழகி அறிந்து கொண்டவளைப் போல, அவள் நிதானமாக, ஒவ்வொரு பேச்சுக்கும் அர்த்தம் புரிகிற மாதிரி, ஆனால் அழுத்தமாகப் பேசிய முறை கொஞ்சம் வேடிக்கையாகவும் இருந்தது.

    கொசுவம் வைத்து முடிந்து கொண்டு, ஈரத் தலையை உலர விட்டபடி கதவைத் திறந்தாள் உமா. 'கீச்'சென்று கத்திய கதவின் ஒலி கேட்டுத் திரும்பிய அத்தையின் பார்வையில் அவள் உருவம் விழுந்தபோது, அதில் கனிவு நிறைந்தது. ஓரக் கண்ணால் அதைக் கவனிக்காதவள் போலப் பார்த்தபடி உமா சுவாமி படத்துக்கு முன்னால் தரையை மெழுகிக் கோலமிடலானாள்.

    சாப்பிட்டதும் பாட்டி தலைக்கு உயரமாகக் கட்டையை வைத்துக் கொண்டு, படுத்துக் கொண்டு விட்டாள். பாயில் கையை மடித்துத் தலையைத் தாங்கிய படி படுத்திருந்தாள் அத்தை. வாயில் தாம்பூலச் சிவப்பு. ஒடித்த ஈர்க்குச்சியின் நுனியினால் பல்லிடுக்கில் இருந்த பாக்குத் துண்டை அகற்ற முயன்ற மாதிரி தெரிந்தது உமாவுக்கு, உள்ளே வேலை செய்து கொண்டே பார்த்த போது.

    அறைக் காரியம் முடிந்து தண்ணீர் விட்டுக் கழுவியானதும் கையில் ஒரு தம்ளரில் பதமான வெந்நீர் எடுத்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள்.

    வாய் கொப்புளிக்க வெந்நீர் வேண்டுமா அத்தை?

    அத்தை புன்சிரிப்போடு தம்ளரை வாங்கிக் கொண்டாள். அவள் கொண்டு வந்ததற்காகவே வாங்கிக் கொண்டது போல இருந்தது அது. வாய் கொப்புளிக்காமலே அதைப் பக்கத்தில் வைத்துவிட்டு, பாயில் சற்று நகர்ந்தபடி இப்படி உட்கார்! என்று கையைத் தட்டினாள்.

    கொஞ்சம் கூச்சத்தோடு தயங்கியபடி உட்கார்ந்தாள் உமா. இந்தப் பரிவு அவளுக்குப் புது அனுபவமாக இருந்தது. அத்தை அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    இளமை அரும்பும் முகம். அருவிபோல எடுத்து முடியாமல் தோளோடு வழிந்து நின்ற கூந்தல். செல்வத்தின் செழிப்பு இல்லாவிட்டாலும் பசுமையோடு மினுமினுத்த மேனி. மாம்பழச் சிவப்பு இல்லை என்றாலும் மா நிறத்துக்கும் மேலான வர்ணந்தான்.

    கையைத் தொட்டுப் பார்த்தாள் அத்தை. அதில் ஒரே ஜோடி வளை. அதுவும் கில்ட்டுத்தான். உமா கொஞ்சம் வெட்கத்தோடு தலையைக் குனிந்து கொண்டாள். கை சுருங்கி இழுத்துக் கொண்டது.

    உங்கம்மா மாதிரியே இருக்கிறாய் நீ?

    அவள் மனம் சட்டென்று குழைந்தது.

    உங்கம்மாவை நான் உன் மாதிரி இருக்கும்போது பார்த்தது. அப்புறம் நான் அவரோடு மலாயாவுக்குப் போய்விட்டேன். உன் மாதிரியேதான் இருப்பாள். ஒட்டி ஒட்டிப் பழகிக் கொண்டு...

    உமா உதட்டைக் கடித்து உணர்ச்சியை விழுங்கிக் கொண்டாள். அம்மாவின் முகமே ஞாபகம் இல்லை. அவளுக்கு இரண்டு வயசாம் அவள் போனபோது. அறையில் மாட்டியிருந்த போட்டோவிலிருந்த உருவம் கச்சிதமாய் மனதில் ஒன்றும் படியவில்லை. அத்தையின் பேச்சிலிருந்த கனிவு அவள் இருதயத்தைத் தொட்டது. அவள் கைவிரல்களை மூடிப் பிடித்திருந்த அத்தையின் கை ஆறுதலாக இருந்தது போலத் தோன்றியது.

    யோசனையில் ஆழ்ந்தபடி உட்கார்ந்திருந்த அவள் களையான குழந்தை முகத்தையே பார்த்தபடி படுத்திருந்தாள் அத்தை. வட்டக் கண்களின் அருகில் இமையில் பசுமை படிந்தது போலத் தோன்றியது. இமை கொட்டியது.

    குழந்தை!

    பெயர் சொல்லிக் கூப்பிட்டிருக்கலாம். ஆனால் அத்தை அப்படிக் கூப்பிட்டது, அவள் அன்பையெல்லாம் ஒரு வார்த்தையில் கொட்டியது போல இருந்தது.

    நீ எதுவரைக்கும் படித்திருக்கே?

    பத்தாவது.

    கிளாஸிலே முதல். அப்படித்தானே?

    புன்னகையில் கன்னங்கள் குழிந்தன. தலையை மட்டும் அசைத்தாள். அடுக்கித் தொடுத்த பல் வரிசையின் அழகில் அத்தையின் பார்வை நிலைத்தது. அவள் இடையில் கையைச் சுற்றி இழுத்து அருமையாக அணைத்துக் கொண்டாள்.

    ஏன் அப்புறம் படிக்கலே?

    இந்த ஊரில் அவ்வளவு தான் இருந்தது. மேலே படிக்க டவுனுக்குப் போகவேணும். பாட்டி வேண்டாமென்று சொல்லி விட்டாள்.

    உனக்குப் படிக்க வேணுமென்று ஆசைதானே?

    செல்லமாக அழைத்த குரலில் உமாவின் நெஞ்சுத் துடிப்புப் பிடிபடாமல் ஓடியது. வெட்கமும் கூச்சமும் கலந்த பார்வை மனத்தில் இருந்ததைப் பேசாமலே எடுத்துக் காட்டியது. மேலே அவள் என்ன பேசப் போகிறாளோ என்ற ஆவல் கைவிரல்களின் துடிப்பில் தெரிந்தது.

    நீயும் என்னோடு வந்துவிடேன், பட்டணத்துக்கு!

    சட்டென்று பதில் சொல்ல வாய் வரவில்லை. அத்தையின் கேள்வியில் இருந்த அழுத்தம், அவள் அந்தத் தீர்மானத்துக்கே வந்து விட்ட பிறகுதான் கேள்விகளைத் தொடுத்துக் கொண்டு வந்தது போன்ற பிரமையை எழுப்பியது. மனத்தைப் பிளக்கிற மாதிரி அவள் பார்த்த கூர்மையான பார்வையை நிமிர்ந்து பார்க்க முடியாமல் கண்கள் கூசின.

    ஏம்மா? என்னோடு வர என்னவோபோல இருக்கா?

    இடைஞ்சலாக இருந்தது அந்தக் கேள்வி. இக்கட்டான நிலை. ஆனாலும் பதில் சொல்லாவிட்டால் சந்தர்ப்பம் பக்குவம் தவறிக் கெட்டுவிடும் போலத்தான் இருந்தது. அவள் மறுத்துவிட்டால் அத்தையின் மனம் அந்த ஏமாற்றத்தைத் தாங்காது. ஆனால் பதில் சொல்லவும் தைரியம் இல்லை. புது வெள்ளத்தின் இழுப்பை நீந்தப் போகிறவன் கணக்குப் போடுவதைப் போல, அவள் பார்வை அவளை அறியாமல் அந்தக் கேள்வியை அளவிட்டது போல நிலைத்து நின்றது. அத்தையின் முகம் தவித்தது.

    என்னவோ உன்னைப் பார்த்ததிலிருந்து என்னோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஓர் ஆசை.

    உமா பதில் சொல்லாததனால் தானோ என்னவோ அந்தக் குரலில் ஆற்றாமையும் தோல்வியும் புதைந்தன.

    பாட்டியைக் கேளுங்கோ அத்தை

    அத்தையின் முகத்தில் சிரிப்பு வந்து விட்டது. பெரிய காரியத்தைச் சாதித்து விட்டது போல முகத்தில் திருப்தி நிறைந்தது. என்ன என்ன நினைத்துக் கொண்டாளோ அந்தக் கொஞ்ச நேரத்தில்? இருவரும் பிரமித்து உட்கார்ந்திருந்தார்கள். நினைத்து நினைத்து அத்தையின் கண்களில் பசுமை படர்ந்தது. ஆற்றில் எறிந்த இலையில் சோற்றுக் கட்டிகள் முழுகிப் போய் வெறும் இலை மட்டும் மிதப்பதைப்போலப் பேச்சு முடிந்து வெறும் பார்வை மட்டும் பரிமாறிக் கொண்டிருந்தது, இருவருக்கும் இடையே.

    சாயங்கால நேரம். மூன்று பேரும் கோயில் பிராகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். பாவிய கல் தரையில் வெயில் கொதிப்பு இன்னும் அடங்கவில்லை. உமாவின் மனத்திலும் மத்தியான்னப் பேச்சின் நினைவு அலை அலையாக ஓயாமல் எழுந்து கொண்டே இருந்தது. பாட்டி என்ன நினைத்துக் கொள்வாளோ என்ற பயம் ஒரு பக்கம். அத்தையின் ஏமாற்றத்தை ஏறிட்டுப் பார்க்கத் தைரியம் இல்லாமல் தவிப்பு மற்றொரு பக்கம். இரண்டுக்கும் இடையே வரப்போகும் புதிய திருப்பத்தில் ஆவல் மிகுந்து அடக்க முடியாமல் மனம் துடிதுடித்து விதிர்த்து நின்றது.

    அவள் அநுபவித்த பாட்டியின் பரிவில் வெளிப்படையான அன்பு இல்லை. ஓயாமல் வேதனைப்பட்டுக் காய்த்துப்போன முதிர்ந்த மனம் அது. அநுபவமே ஆதாரமாகத் தெறித்து விழும் வார்த்தைகளில் அருமையை விடக் கண்டிப்பே அதிகமாக இருக்கும். ஆனாலும் அவளுக்கு இல்லாத அக்கறையா? மனத்தை உடைத்தா காட்ட முடியும்?

    ஆனாலும் இன்னும் பக்குவம் அடையாத அவள் பிஞ்சு மனத்திற்கு அத்தையின் வெளிப்படையான ஆதரவே இதமாக இருந்தது. அவள் தாய் உயிரோடு இருந்திருந்தால் இப்படித்தான் நடுவயசில், பாட்டியின் முதிர்ச்சிக்கும் அவள் இளமைக்கும் நடுவே உணர்ச்சிகளுக்குப் பாலமாக இருந்திருப்பாள். அநுபவித்திராத அந்தப் பரிவின் நிழல், அத்தையின் மனக்குழைவில் விழுந்தது போல இருந்தது. அவள் காட்டிய அன்பு எப்படி அவ்விதம் பொங்கி வெளிப்பட்டதோ? ஆசையா அது? அல்லது அவள் மேல் கொண்ட இரக்கமா? எப்படியானாலும் அதன் மென்மையில் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் இருந்தது. அது அவள் நெஞ்சைத் துடிக்கச் செய்தது. இன்னும் இன்னும் நெருங்கத் துடிப்பு; அடக்க இயலாத ஆர்வம்.

    சனீசுவரன் சந்நிதி விளக்கில் எண்ணெயை விட்டு வரப் போனாள் உமா. பாட்டியும் அத்தையும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் பார்வை நிமிர்ந்து கோபுரத்தை எட்டியது. கட்டிடம் பெயர்ந்து உருவம் சிதைந்த கோபுரம். எத்தனை வருஷங்களைக் கண்டதோ அது? அதிலும் ஒரு கம்பீரம் இருக்கத்தான் இருந்தது. இருண்ட அதன் மேல் மாடத்திலிருந்து புறா ஒன்று வானளாவிப் பறக்கச் சிறகடித்து வெளியேறியது. அத்தையின் குரல் அவள் பார்வையைத் திருப்பியது.

    நீங்கள் சொன்னால் குழந்தை வருகிறேனென்று தான் சொல்கிறாள்.

    அவளே வருகிறேன் என்கிறாளா?

    ஆமாம்.

    என்னடி பெண்ணே, அப்படித்தானா? உமா மறு நினைப்பு இல்லாமல் தலையை ஆட்டினாள். அத்தையின் முகம் திருப்தியில் சுடர் விட்டது. உமாவின் மனத்தில் ஆர்வம் பொங்கித் தணிந்தது. பாட்டியின் முகந்தான் சட்டென்று விழுந்தது.

    அப்போ எனக்கு ஆட்சேபம் இல்லை!

    முதிர்ந்த அந்தக் குரல் வெளிவர முடியாமல் தொண்டை கரகரத்தது.

    *****

    2. புது வாழ்வு

    பெங்களூர்ப் பட்டுப் பாவாடையும் நைலான் தாவணியுமாக உமா பள்ளிக் கூடத்துக்குக் கிளம்பினாள். இரட்டைப் பின்னலில் ஒன்று முன்னால் விழ, இன்னொன்று பின்னால் சரிந்து அசையப் புத்தகங்களை இடக்கையில் அணைத்துப் பிடித்தபடி நிலைக் கண்ணாடிக்கு முன் நின்றபோது, அவளுக்குக் கனவெல்லாம் நனவாகப் பலித்தது போல இருந்தது.

    பாட்டிக்கு இரட்டைப் பின்னலே பிடிக்காது. அவளுக்குத் தெரியாமல் அறையில் உட்கார்ந்து அவளே பின்னிப் பார்த்துக் கொண்டதுண்டு. ஒரு பின்னலை முன்னால் தள்ளி விட்டுக்கொண்டு கையினால் தூக்கி உள்ளங்கையில் அடித்து விளையாடியபடி நடந்து பார்ப்பாள். அந்த ஒத்திகையில் அவளுக்கு அலாதியான ஒரு மனத் திருப்தி. மனத்துக்குப் பிடித்ததைச் சாதித்து விட்டது போல ஒரு நிறைவு.

    உனக்கு உன் அம்மா மாதிரி நிறையத் தலைமயிர்

    Enjoying the preview?
    Page 1 of 1