Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unarvin Vizhippu
Unarvin Vizhippu
Unarvin Vizhippu
Ebook375 pages2 hours

Unarvin Vizhippu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் தந்தை அப்போது அரசினர் பணியில் இருந்தார். இரண்டாவது உலக யுத்தம் தொடங்காத காலம். பக்கத்துவீட்டில் அழகான வடிவமும், குறுகுறு வென்ற முகக்களையுமாக ஒரு பெண். சிறு குழந்தையான எனக்குங்கூட, அதிகப்படிப்பு இல்லாத, ஆனால் பண்பும் நயமும் நிறைந்த, அந்தப் பெண்ணிடம் ஒரு பிரமை. “கௌரி, கௌரி” என்று அவளோடு விளையாடப் போவேன். என்னோடு அவள் கண்ணாமூச்சி விளையாடு வாள். அவள் தாவாணியை எனக்குப்போட்டு நாடக மாடுவாள். அவள் கதை சொல்லத் தொடங்கினால் எனக்குப் பொழுது போவதே தெரியாது.

அந்த வீட்டுக்கு ஒரு பையன் படிப்புக்காக வந்து சேர்ந்தான். அப்புறம் அவள் என்னோடு பழகுவது குறைந்து விட்டது. அவள் பேச்சில், உடையில், பாவனைகளில் ஏதோ ஒரு வித்தியாசம். அந்தச் சிறுவயதில் எனக்கு விளங்காத ஒரு மாறுதல், இனம் புரியாத ஒரு வேதனையை அவள் விழுங்கிக் கொள்வது போல எனக்குத் தோன்றும். என்னைப் போலவே அந்தப் பையனுக்கும் அந்த உணர்ச்சிக்கோலங்கள் புரிபடவில்லை என்று தான் நினைக்கிறேன். நான் சிறு குழந்தையாக விளையாடினேன். அப்புறம் அவன் சம வயதுக் குழந்தையாக விளையாட வந்து சேர்ந்தான். அப்படித் தான் எனக்குத் தோன்றிற்று.

கௌரி மணமாகிப் போய்விட்டாள். வயதான அவள் அத்தை குடிபெயர்ந்து போய்விட்டாள். அந்தப் பையனும் வேறு எங்கேயோ போய்விட்டான். தந்தைக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஊர் மாறுகிற உத்தியோகம். இருபது ஆண்டுகளின் நினைவோட்டத்தில், கௌரியின் நினைவு, அவ்வப்போது ஏதாவது ஒரு பின்னணியில் கண் விழித்துக் கொண்டே இருக்கும். சமீபத்தில் மதுரையின் மாடவீதிகள் ஒன்றில் தற்செயலாக அந்தப் பையனை, நடுத்தர வயது மனிதராகச் சந்தித்தேன்.

“கௌரி எங்கே இருக்கிறாள் இப்போது?” என்று கேட்டேன். அவருக்கும். கௌரிக்கும் என்ன தொடர்பு? அவளைப்பற்றித் தெரிந்திருக்க என்ன நியாயம்? என் நெஞ்சில் வெளிப்படத் தவித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வியை எப்படியோ கேட்டுவிட்டேன். அவ்வளவு தான். சட்டென்று அவர் முகம் மாறிப் போயிற்று. “அவள் கணவன் அவளைத் தவிக்கவிட்டுவிட்டுப் பர்மாவுக்குப் போய்விட்டான். அவளை நன்றாக வைத்துக் கொண்டிருக்கக்கூடிய, அவளுடைய குண அழகுகளைத் தெரிந்துகொண்ட யாருக்காவது அவளைக் கலியாணம் செய்து கொடுத்திருக்கலாம். அத்தைப் பாட்டி அவசரப் பட்டு விட்டாள். இப்போது அவள் எங்கே இருக்கிறாளோ?” என்று இழுத்தாற்போலக் கண்டம் கலங்கப் பேசுவதை நிறுத்திக்கொண்டு விட்டார்.

நான் விடை பெற்றுக்கொண்டு வந்து விட்டேன். அவர் முகமும் பேச்சும் நினைவில் எழுப்பிய எதிரொலி அப்புறம் வெகுநேரத்துக்கு அடங்கவே இல்லை. “அவளைத் தெரிந்து கொண்ட யாருக்காவது...” என்று சொல்லி அவர் நிறுத்தியது, தன்னைப் பற்றியே இருக்குமோ? என்றோ நடந்து பூர்த்தியாகாமல் நின்று விட்ட ஒரு மௌன நாடகமா இன்றும் அவர் நினைவில் படலமாடுகிறது? என்னோடு அவள் விளையாடிய கண்ணாமூச்சி, நடித்த நாடகங்கள், கதைகளாகச் சொல்லி விட்டு விட்ட நிகழ்ச்சிகள் இவைதாம் அவள் வாழ்க்கையிலும் அங்கங்களாக இருக்குமோ?

கற்பனை மண்ணில் ஒரு வித்து விழுந்தது. காலம் கடந்து விழித்த அவர்களுடைய உணர்வு என் கண்ணுக்கு அன்று தெரிந்து இனம் விளங்காத உணர்ச்சிகள் உருவம் பெறாத உணர்ச்சிகளைப் போலவே குறையாக நின்றுவிட்ட கௌரியின் வாழ்க்கை இவை கற்பனை வடிவம் பெற்று நிழலாடத் தொடங்கின.

“உணர்வின் விழிப்பு” நாவல் பிறந்தது.

- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்.

Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580127504866
Unarvin Vizhippu

Read more from Lakshmi Subramaniam

Related to Unarvin Vizhippu

Related ebooks

Reviews for Unarvin Vizhippu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unarvin Vizhippu - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    உணர்வின் விழிப்பு

    Unarvin Vizhippu

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பையன் வருகிறான்!

    2. அறிமுகம்

    3. அப்படியே ஆகட்டும்

    4. அழகுக் கோலம்

    5. நெஞ்சு நெகிழ்ந்தது!

    6. தெரியும், மீனாட்சி சொன்னுள்!

    7. எனக்கு நம்பிக்கை இல்லை!

    8. மீனட்சியின் சிரிப்பு

    9. பார்வதி வந்தாள்!

    10. அழகுக்கு அழகு

    11. மாப்பிள்ளை வந்திருக்கிறார்!

    12. தனிக் குடித்தனம்

    13. பத்மா வந்தாள்!

    14. நீயும் வருகிறாயா?

    15. நெஞ்சின் அலைகள்

    16. அம்மா வரச்சொன்னாள்!

    17. மீனாட்சி! நீ விருந்தாளி!

    18. மீனாட்சி, இந்தா கதம்பச் சரம்!

    19. மீனட்சியைத் தனியே சந்தித்ததில்...!

    20. மீனுட்சியைக் காப்பாற்றுகிறேன்!

    21. யுத்தம் முடிந்து விட்டது

    22. மீனாட்சி பிறந்தாள்!

    23. நெஞ்சில் வாழும் சுடர்!

    முகவுரை

    என் தந்தை அப்போது அரசினர் பணியில் இருந்தார். இரண்டாவது உலக யுத்தம் தொடங்காத காலம். பக்கத்துவீட்டில் அழகான வடிவமும், குறுகுறு வென்ற முகக்களையுமாக ஒரு பெண். சிறு குழந்தையான எனக்குங்கூட, அதிகப்படிப்பு இல்லாத, ஆனால் பண்பும் நயமும் நிறைந்த, அந்தப் பெண்ணிடம் ஒரு பிரமை. கௌரி, கௌரி என்று அவளோடு விளையாடப் போவேன். என்னோடு அவள் கண்ணாமூச்சி விளையாடு வாள். அவள் தாவாணியை எனக்குப்போட்டு நாடக மாடுவாள். அவள் கதை சொல்லத் தொடங்கினால் எனக்குப் பொழுது போவதே தெரியாது.

    அந்த வீட்டுக்கு ஒரு பையன் படிப்புக்காக வந்து சேர்ந்தான். அப்புறம் அவள் என்னோடு பழகுவது குறைந்து விட்டது. அவள் பேச்சில், உடையில், பாவனைகளில் ஏதோ ஒரு வித்தியாசம். அந்தச் சிறுவயதில் எனக்கு விளங்காத ஒரு மாறுதல், இனம் புரியாத ஒரு வேதனையை அவள் விழுங்கிக் கொள்வது போல எனக்குத் தோன்றும். என்னைப் போலவே அந்தப் பையனுக்கும் அந்த உணர்ச்சிக்கோலங்கள் புரிபடவில்லை என்று தான் நினைக்கிறேன். நான் சிறு குழந்தையாக விளையாடினேன். அப்புறம் அவன் சம வயதுக் குழந்தையாக விளையாட வந்து சேர்ந்தான். அப்படித் தான் எனக்குத் தோன்றிற்று.

    கௌரி மணமாகிப் போய்விட்டாள். வயதான அவள் அத்தை குடிபெயர்ந்து போய்விட்டாள். அந்தப் பையனும் வேறு எங்கேயோ போய்விட்டான். தந்தைக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஊர் மாறுகிற உத்தியோகம். இருபது ஆண்டுகளின் நினைவோட்டத்தில், கௌரியின் நினைவு, அவ்வப்போது ஏதாவது ஒரு பின்னணியில் கண் விழித்துக் கொண்டே இருக்கும். சமீபத்தில் மதுரையின் மாடவீதிகள் ஒன்றில் தற்செயலாக அந்தப் பையனை, நடுத்தர வயது மனிதராகச் சந்தித்தேன்.

    கௌரி எங்கே இருக்கிறாள் இப்போது? என்று கேட்டேன். அவருக்கும். கௌரிக்கும் என்ன தொடர்பு? அவளைப்பற்றித் தெரிந்திருக்க என்ன நியாயம்? என் நெஞ்சில் வெளிப்படத் தவித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வியை எப்படியோ கேட்டுவிட்டேன். அவ்வளவு தான். சட்டென்று அவர் முகம் மாறிப் போயிற்று. அவள் கணவன் அவளைத் தவிக்கவிட்டுவிட்டுப் பர்மாவுக்குப் போய்விட்டான். அவளை நன்றாக வைத்துக் கொண்டிருக்கக்கூடிய, அவளுடைய குண அழகுகளைத் தெரிந்துகொண்ட யாருக்காவது அவளைக் கலியாணம் செய்து கொடுத்திருக்கலாம். அத்தைப் பாட்டி அவசரப் பட்டு விட்டாள். இப்போது அவள் எங்கே இருக்கிறாளோ? என்று இழுத்தாற்போலக் கண்டம் கலங்கப் பேசுவதை நிறுத்திக்கொண்டு விட்டார்.

    நான் விடை பெற்றுக்கொண்டு வந்து விட்டேன். அவர் முகமும் பேச்சும் நினைவில் எழுப்பிய எதிரொலி அப்புறம் வெகுநேரத்துக்கு அடங்கவே இல்லை. அவளைத் தெரிந்து கொண்ட யாருக்காவது... என்று சொல்லி அவர் நிறுத்தியது, தன்னைப் பற்றியே இருக்குமோ? என்றோ நடந்து பூர்த்தியாகாமல் நின்று விட்ட ஒரு மௌன நாடகமா இன்றும் அவர் நினைவில் படலமாடுகிறது? என்னோடு அவள் விளையாடிய கண்ணாமூச்சி, நடித்த நாடகங்கள், கதைகளாகச் சொல்லி விட்டு விட்ட நிகழ்ச்சிகள் இவைதாம் அவள் வாழ்க்கையிலும் அங்கங்களாக இருக்குமோ?

    கற்பனை மண்ணில் ஒரு வித்து விழுந்தது. காலம் கடந்து விழித்த அவர்களுடைய உணர்வு என் கண்ணுக்கு அன்று தெரிந்து இனம் விளங்காத உணர்ச்சிகள் உருவம் பெறாத உணர்ச்சிகளைப் போலவே குறையாக நின்றுவிட்ட கௌரியின் வாழ்க்கை இவை கற்பனை வடிவம் பெற்று நிழலாடத் தொடங்கின.

    உணர்வின் விழிப்பு நாவல் பிறந்தது.

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்.

    1. பையன் வருகிறான்!

    குளத்து நீரில் மீனாட்சி ஒரு முறை மூழ்கி எழுந்தாள். சுற்றிலும் வில் வளையங்களாக அலைகள் விரிந்து ஓடின. இன்னும் சரியாக விடியவில்லை. ஆனாலும் இளவேனிலின் வெம்மை அப்பொழுதே லேசாகத் தெரிந்தது.

    மீனாட்சி மார்பு வரை நீரில் அமிழ்ந்து, கூந்தலை அலசினாள். கைக்குப் பிடிபடாத நீளம். பின்னாது வெறுமனே முடிந்தால், ஓர் இளநீர் கனத்துக்கு அழுத்திக் கொண்டிருக்கும் அது.

    கூந்தலை இறுக்கிப் பிழிந்து விசிறி, முதுகில் தவழ விட்டுக்கொண்டு எழுந்தாள். ஈரத்துகிலைச் சுற்றிக் கொண்டு, குடத்தில் நீரை நிறைத்துக்கொண்டு, படிக்கட்டில் ஏறத் தொடங்கினாள்.

    கோயில் கோபுரம் வைகறைப் பின்னொளியில் நிழல் வடிவமாகத் தெரிந்தது. இடது கையில் குடத்தை அணைத்துக் கொண்டு, வலது கை விரல்களினால் கன்னங்களை மாறி மாறித் தட்டிக்கொண்டாள். உதடுகள் முணு முணுப்பில் பொரிந்தன.

    வீட்டு வாசலில் சாணம் தெளித்திருந்தது. அவள் உள்ளே போய்ப் புடைவை மாற்றிக்கொண்டு வந்து தான் கோலம் போட வேண்டும். கோடி வீட்டு வாசலில் எருமையும் பசுவும் கட்டிப் பால் கறப்பார்கள். அவள் தான் அங்கே போய் வாங்கிக்கொண்டு வருவாள். அம்மா காபி சாப்பிடுவதில்லை; காலையில் நீராகாரம்தான். அவளுக்குக் கூட இரண்டு வருடங்களாகத்தான் அந்தப் பழக்கம்.

    நன்றாக விடிந்துவிட்டது. மீனாட்சி குனிந்து வீட்டைப் பெருக்க ஆரம்பித்தாள். உலராத கூந்தலை நீள வாரி, நுனியில் மட்டும் முடிந்திருந்தாள். அவள் குனியும் போதெல்லாம் அதுவும் ஆடி ஆடித் தரையில் பெருக்குவது போலப் புரண்டது.

    ஏய், நீ பேசாமல் இருக்கமாட்டே? என்று அதைக் கடிந்து கொண்டாள் மீனாட்சி. தன் கூந்தலைப் பார்த்துத் தானே அப்படிக் கடிந்து கொண்டது அவளுக்கே வேடிக்கையாக இருந்தது. ஆனாலும், அது அவள் வழக்கம். பீரோவைத் திறக்கும்போது கை தவறிக் கீழே விழுந்துவிடும் சாவியுடன் அவள் பேசுவாள்; தீக்குச்சியின் ஒரே கிழிப்பில் திரி பற்றிவிட்ட குத்துவிளக்குடன் அவள் பேசுவாள். அவள் சுபாவந்தானா அது? இல்லை. அந்தப் பருவத்தின் இயல்பே அதுதானோ?

    எதிலும் உயிர்ப்பைக் காணும் மனத்துடிப்பு; சிறு சீண்டலும் பொய்க் கோபமும் பரிவுமாகக் கொஞ்சும் பாவனை; கண்ணாடிக்கு எதிரே நின்று தன் உருவத்தைத் தானே ஆராய்ந்த வண்ணம், பளபளக்க வாரி முடித்த கூந்தலும், நெற்றியில் நடு வகிடு எழுமிடத்தில், இரு புருவங்களுக்கு மத்தியில் இட்ட சாந்துப் பொட்டும், மேலாக்குக்கு வெளியே வந்த பவழ மாலையுமாக அவள் ஏதோ ஒரு வியப்பில் ஆழ்ந்து போய் விடுவாள்.

    பூஜை அறையிலிருந்து சாம்பிராணியின் மணம் 'கம்'மென்று எழுந்தது. அம்மா ஜபமாலையை நெருடிக் கொண்டு இன்னும் அரைமணி நேரம் அப்படியே உட்கார்ந்து விடுவாள். அவள் வந்துதான் அடுப்புக் காரியங்களைக் கவனிக்க வேண்டும்.

    ஒரு பிடி கட்டையை அடுப்பில் செருகிப் பற்றவைத்தாள். கொஞ்சம் அமர்ந்து, திமிறி, அப்புறம் நெருப்புப் பிடித்துக்கொண்டது. தீயின் நாக்குகள் செந்தாழையின் கூரிய இதழ்கள் போல் நிமிர்ந்து நெளிந்தன. பட்டணத்துக்கு 'ஸ்டவ்' வந்திருக்கிறது. அவளே தான் தோழி ஒருத்தி வீட்டில் அதைப் பார்த்தாள். அதில் ஏற்றிய பாத்திரம் ஒரே நிமிடத்தில் காய்ந்து விடுகிறது.

    'அம்மாவுக்கு 'ஸ்டவ்' அடுப்பு பிடிக்குமோ? தெரியவில்லை; எதையும் உடனே ஏற்றுக்கொள்ள மாட்டாள் அவள்!'

    பிற்பகல் நேரம்; மீனாட்சி வாசற்படியில் தலை வைத்து வராந்தாவில் படுத்துக்கொண்டிருந்தாள். சற்று உலர்ந்த தலையிலிருந்து ஐந்து தலை நாகம் படம் விரித்தாற்போல, கூந்தல் ஐந்து பிரிவுகளாய் அவிழ்ந்து அலைமோதிற்று. மல்லாந்து படுத்தபடி, கால் கட்டை விரலிலிருந்து கழுத்து வரை, தன் உடலைக் கண்ணோட்டம் விட முயன்றாள்.

    இரண்டொரு வருடங்களாக அவளிடம் தோன்றத் தொடங்கியிருந்த மலர்ச்சிதான் அது. குழந்தைப் பருவம் முதிர்ந்து, இளமையின் முதல் அரும்புகள் தோன்றத் தொடங்கும் பருவம். தனக்குள்ளே ரகசியமாக உணரும் விழிப்பு. உடை அணியும் போது, அலங்கரித்துக் கொள்ளும்போது, தன்னைத் தானே வியந்து கொள்ளும் ஒரு மலர்ச்சி தன்னிடம் இதழ் விரியத் தொடங்கியிருந்தது அவளுக்குத் தெரியும்.

    படிக்க விரித்து உயர்த்திய மாதப் பத்திரிகை ஒன்றை மறுபடி மார்பின் மேல் சாய்த்துக் கொண்டாள். விரல் கனம் இருந்த அந்தப் பத்திரிகையில் வெளிவருபவை அநேகமாகக் கட்டுரைகள் தாம். இரண்டொரு கதைகளும், தொடர்கதை ஒன்றும் இருக்கும். அது தான் அவளுக்குப் பிரியமான பகுதி.

    பங்கிம் சந்திரரின் வங்காள நாவல் மொழிபெயர்ப்பு அது. 'விஷ விருட்சம்' என்ற அந்த நாவலில் பாதிக்கு மேல் வந்தாகிவிட்டது. குந்த நந்தினி, நரேந்திரனின் மாளிகையை விட்டுப் போய்விடுகிறாள். அவளுக்காக நரேந்திரனின் மனம் ஏங்குகிறது. கணவன் மனத்தைப் புரிந்துகொள்கிறாள் சூரியமுகி. அவளே குந்தநந்தினியைத் தேடி அழைத்துக்கொண்டு வருவதாகச் சொல்கிறாள்.

    உங்கள் மனத்தில் இருப்பது அப்படியே இருக்கட்டும்; என்னிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம். உங்களுடைய ஒவ்வொரு சொல்லும் என் உள்ளத்தை அம்பு போலத் தைக்கிறது. என் உடல் பொருள் ஆவி எல்லாம் நீங்கள் தாம். உங்கள் காலில் உள்ள மூள்ளை எடுக்க நான் உயிரையே கொடுக்கக் காத்திருக்கிறேன்...

    மீனாட்சி கண்ணை மூடிக்கொண்டாள். இமைத் திரையில் சூர்யமூகியின் உருவம் தெரிந்தது. இப்படியும் ஒரு பெண் ஜன்மம் இருக்குமா? இருக்க முடியுமா? கணவன் மனமும், அதன் ஈடுபாடும் தனக்கு இல்லை என்று தெரிகிறது. அவன் யாரை நாடுகிறான் என்பதும் புரிகிறது. இருந்தும் அவள் அவனை விட்டுக் கொடுக்கவில்லை; அவன் மனம் வருந்த எதையும் பேசவில்லை. தன்னையே ஈந்துவிடும் நினைப்பா? அல்லது, அந்த உணர்ச்சி வெள்ளத்தில் கணவனின் அன்பை இழுத்து மீட்டுக்கொண்டு விடலாம் என்ற நம்பிக்கையா? பாரத நாட்டுப் பெண்களின் தனிச் சிறப்பான இந்தப் பண்பை எழுதுகிறாரா பங்கிம் சந்திரர்? அல்லது, இதுபோன்ற நிலையில் விழுந்து மீளுவது தான் எப்போதும் பாரதப் பெண்களின் தலைவிதியா?...

    ஒரு கணம் அவள் மனம் அலையாடிற்று. சூர்யமுகியின் நிலையில் அவள் என்ன செய்திருப்பாள்? நிச்சயம் கணவனை எப்படியாவது போகட்டும் என்று அனுப்பியிருப்பாள்! அவனே அலைந்து, மீண்டும் புத்தி திரும்பி வரட்டுமென்று விட்டிருப்பாள்! குந்தநந்தினியின் நிலையில் தான் இருந்திருந்தால்?... சீசீ! என்ன நினைப்பு இது?...

    அவளையறியாத ஒரு வெட்கமும் கூச்சமும் அவளைப் பிடுங்கின. இன்னொரு பெண்ணை மனைவியாக அடைந்த வாலிபனிடம் அவன் எப்படிப்பட்டவனாயிருந்தால் தான் என்ன? மனம் நழுவ விடுவதா? அப்புறம் மனம் ஒடிந்து, இற்று விழாத கிளையைப் போல், ஒட்டவும் முடியாமல் பிரியவும் முடியாமல் தவிப்பதா?

    இந்தச் சிந்தனையில் அவள் மனம் ஒரு கணம் நிலை கொள்ளாமல் மருண்டது. மறுகணம் இடுப்பு வரை சரிந்த மேல் துகிலை இழுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு, ஒரு புறமாகத் திரும்பிப் படுத்தாள் அவள். தரையைப் பொத்திய இடது செவியில், பூமிமேல் அதிரும் அத்தனை சத்தங்களும் நாடித் துடிப்பாகக் கேட்பது போன்ற ஒரு பிரமை...

    போஸ்ட்!

    எழுந்திருக்க மனம் இல்லை. மாலையைக் கழற்றிப் போட்டது போல் படுத்துக் கிடக்கும்போது, அங்கங்கள் தளர்ந்து வீழ்ந்து கிடக்கும் இதத்தில் ஒரு விரலை அசைக்கக் கூட மனம் இல்லை.

    லொட்!

    பறந்து வந்த கடித உறை, கதவில் மோதிக் கீழே விழுந்தது. 'போஸ்ட்மேன்' போய் விட்டான். அவன் குரலோ, கடிதம் விழுந்த ஒலியோ அம்மாவின் காதில் பட்டிருக்க வேண்டும். அவள் கூப்பிட்டாள்!

    மீனாட்சி, அது யாரு கடிதம் பாரு? இங்கே கொண்டு வா!

    தாயின் குரலைக் கேட்டதும் அவள் கையை ஊன்றி நிமிர்ந்தாள். ஆடையைச் சரிப்படுத்திக் கொண்டு எழுந்தாள். தலை மயிரைக் கையடங்க எடுத்து முடிந்து கொண்டாள். மேலாக்கின் நுனியை இடையில் செருகிக் கொண்டாள். கடிதமும் கையுமாகப் பின் நடையில் படுத்திருந்த தாயிடம் போனாள். முகத்தைச் சிணுங்கிக் கொண்டு, தாயின் தலைமாட்டில், ம் என்று சற்றுக் கடு கடுப்பாகச் சொல்லியபடி உட்கார்ந்தாள்.

    படி; எனக்கு மூக்குக் கண்ணாடி இல்லை!

    கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். அது ஒரு பையனின் கையெழுத்து. பள்ளிக்கூடப் பாடம் எழுதிப் பழகிய, பிசிறு விழாத மணி மணியான எழுத்துக்கள். பள்ளிக்கூட நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைக் கிழித்து, அதை அவன் எழுதியிருந்தான்.

    அது கோட்டையூரிலிருந்து வந்த கடிதம். பத்து வருடப் பழக்கத்தை நினைவு படுத்தும் வாசகங்கள். தகப்பனார் மலேயாவுக்குப் போய் விட்டார். அங்கிருந்து வரும் பணத்தில் பள்ளிக்கூடப் படிப்பு நடந்து கொண்டிருந்திருக்கிறது. இப்போது பள்ளிக்கூடப் படிப்பு முடிந்தாயிற்று. அடுத்தது கல்லூரிப் படிப்பு. அதற்கு ஒரு மாதத்தில் சென்னைக்கு வரவேண்டும். இரண்டொரு நாளில் முன்னோடியாக வந்து, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு போக இருக்கிறான். அவ்வளவுதானா?

    கடிதம் தொடர்ந்தது. ஹாஸ்டலில் இருந்து படிக்கக் கொஞ்சம் சிரமம். கைச்செலவு தவிர, ஹாஸ்டலுக்கே மாதம் பதினெட்டு, இருபது என்று ஆகிவிடலாம். அதை விட வெளியே இருந்து சாப்பிட்டு, டிராம் வண்டியில் போய் வரலாம். அவனுக்கு அது சௌகரியம். அவர்களுக்குச் சௌகரியப்படுமா? இருக்க இடம் கிடைக்குமா?...

    .... அம்மா எழுதச் சொன்னார்கள், தங்களை ரொம்பவும் கேட்டுக்கொண்டதாக. நான் இருப்பது தங்களுக்குத் துணையாகவும் இருக்க முடியும். எனக்கு இருக்க ஓர் அறை மட்டும்தான் தேவை. தங்களுக்கு வசதிப்படும் என்று நினைக்கிறேன். சென்னை வரும்போது நேரில் சந்திக்கிறேன். தங்கள் அபிப்பிராயம் தெரிந்தால் நல்லது...

    அம்மா எழுந்து உட்கார்ந்தாள். மனத்தில் இரு பாங்காக என்னென்னவோ யோசனைகள்...

    சென்னைக்கு வந்து இருபது வருடங்களை ஓட்டியாயிற்று. கடை வைக்கக் கணவன் வந்து குடியேறியபோது அவளும் நான்கு பாத்திரங்களும், இரண்டு பெட்டியுமாக வந்தவள் தான். சுருட்டுப் பாயும் கையகல இடமும் இருந்தால் போதும் என்ற நினைவுதான் அப்போது. நாலைந்து வருடங்கள் ஆயிற்று தொழிலில் கால் ஊன்றுவதற்கு. அப்போது முதல் சண்டை முடிந்து. கொஞ்சம் கொஞ்சமாகச் செழிப்பு மீண்டும் களைக்க ஆரம்பித்திருந்த சமயம். வியாபாரத்தில் நாலு விதத்திலும் வேர்கள் விட வழி இருந்தது. அவள் கணவர் கெட்டிக்காரர். சாதுரியமாக வழிகளைப் பிடித்துக் கொண்டு விட்டார்.

    மீனாட்சி பிறந்து எட்டு வருடங்களுக்குப் பிறகுதான் அவர் திடீரென்று மறைந்து போனது. இப்போது நினைத்தாலும் கண்ணில் வந்து நிற்கிறது. படுக்கையில் இருந்தபடி சீவன் மங்கிய குரலும், நீர் வடியும் கண்ணுமாக, மீனாட்சியின் கையையும் தன் கையையும் மார்பின் மேல் சேர்த்து வைத்துக் கொண்ட விதம், ஓரளவு சேர்ந்து விட்ட சொத்து, வளர்ந்து விட்ட வியாபாரம் எல்லாம் பின்னால் தாங்குவதற்கு நின்றது உண்மைதான். ஆனால், காமு உலகம் தெரியாதவள். எதையும் கணவனே செய்து கொடுத்து வழக்கமானவள். சட்டென்று கண் கட்டை அவிழ்த்து வெய்யிலில் நிறுத்தியது போல இருந்தது, அந்த வீட்டில் கணவனின் மறைவுக்குப் பிறகு அவள் நின்ற நிலை!

    குழந்தையின் பாதிப் படிப்பு, சொத்து விவரங்கள் எதுவும் தெரியாது அவளுக்கு. கணவனுடன் கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்தவர் கண்ணியமானவர். அவள் பங்குக்கு அதிகமாகவே ஒதுக்கிக் கொடுத்து, வசதிகளும் செய்து வைத்தார். கற்பகாம்பாள் அருள் இருந்தது; கால் ஊன்றி நிற்க முடிந்தது. ஒவ்வொரு கல்லாக வைத்து எழுப்பும் கட்டடம் போல, ஒவ்வொரு நாளையும் ஏதோ ஒரு மனோபாவத்தில் பிடித்துத் தள்ளிக் கொண்டு வந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டாகி விட்டது. தண்ணீர்த்துறை மார்க்கெட்டுக்குப் போய்வர வழி தெரியாமல் இருந்ததுண்டு. இப்போது பஸ் ஏறி, மந்தைவெளியைத் தாண்டி, மாம்பலம் வரை போய் வரக்கூடத் தெம்பும் துணிச்சலும் இருக்கின்றன.

    மீனாட்சி வளர்ந்து விட்டாள். இன்னும் உலகம் தெரியாத குழந்தை அல்ல அவள். தாயின் கையைப் பிடித்துக் கொண்டு, வாசல் திண்ணையை விட்டு இறங்காமல், கண்ணகல அறுபத்து மூவர் வரிசையைக் காணப்புரளும் மனிதக் கடல் அலைகளைக் கண்டு வியந்து கொண்டிருந்த பருவம் மறைந்து விட்டது. கோயில் முன், குளத்துத் தெப்பத்தைப் பார்த்தபடி, படிக்கட்டில் உட்கார்ந்து தாயைக் கதை சொல்லச் சொன்ன பெண் அல்ல அவள் இப்போது. ஆனால், வளர்ந்த பெண்ணின் மன முதிர்ச்சியும் இல்லை அங்கே.

    அது இன்னும் பச்சை முற்றாத பருவம். தகதகவென்ற நிறம் இன்னும் மேனி கொள்ளவில்லை. வரிசைப் பல்லில், முகத்தின் அசாதாரணக் குளிர்ச்சியில், இனி வரப்போகும் இளமையின் அரும்புதான் தெரிந்தது. இடையைச் சுற்றிய தாவணியும், உடலில் வரிந்து கட்டிய இறுக்கமும், இன்னும் உருக்கொள்ளாத இளமையை, இள இளவென்று தெரிந்த மென்மையைத்தான் எடுத்துக் காட்டின. இது யௌவனமும் நிறையாத, கள்ளமும் தோன்றாத இடைகழிப் பருவம். பின்னால் விட்டு வந்த குழந்தை உணர்ச்சிகள் மறையாத மனநிலை.

    அவர்களுடைய வாழ்க்கையில் இப்போது ஒரு புதிய கட்டமா? துணையென்று எதிர்பாராமல் இருந்தாயிற்று. தமக்குத் தாமே எப்படியோ பிடித்து நின்று நடக்கப் பழகிக் கொண்டாயிற்று. இப்போது அந்த வீட்டில் அவர்களிடையே புதுத் துணையாக ஒரு பையனா? அவர்கள் வீட்டில், அந்தக் காலத்து நண்பர்களாய், தூரத்து உறவாய் ஒரு பையன் வந்து சேர்ந்து கொள்ளப் போகிறானா?...

    காமு நெட்டுக் குத்தாய்த் தரையைப் பார்த்தவளாக அசைவின்றி உட்கார்ந்திருந்தாள்.

    என்னம்மா சொல்கிறாய்?

    ம்... ஒன்றுமில்லை!

    நிச்சயம் செய்துவிட்டாயா?

    இல்லை; இன்னும் இல்லை.

    பின்னே?

    பார்க்கலாம்; இரண்டு நாட்கள் போகட்டுமே? அந்தப் பையன் வரட்டும்; அப்புறம் யோசிக்கலாம்!

    ஒன்றும் புரியாமல் தாயை நிமிர்ந்து பார்த்தாள் மினாட்சி. அவள் வாய் விட்டுப் பேசவில்லை; மனம் விட்டுச் சிந்தனைகளை வெளியே கொட்டவும் இல்லை.

    அம்மாவின் யோசனைதான் என்ன? இரண்டு நாட்கள் கழித்து யோசனையா? அல்லது, அந்த இரண்டு நாட்களில் தன்னைத் தயார் செய்து கொள்ளும் யோசனையா?

    'தூங்கட்டும்' என்று விடிந்த பிறகும் குழந்தையை எழுப்பாமல் விட்டு விடுவதைப்போல, தாயை அந்த நினைவிலே ஒட்டியும் ஒட்டாமலும் லயித்து நிற்க விட்டு விட்டு, உள்ளே போக எழுந்தாள் மீனாட்சி.

    2. அறிமுகம்

    வாசலில் வந்து பையும் கையுமாக நின்ற பையனைப் பார்த்ததும் பாதி ஊகமும் பாதி நிச்சயமுமாக, பாவாடை கணுக்காலில் தடுக்க உள்ளே ஓடினாள் மீனாட்சி.

    அம்மா, அம்மா! யாரோ வந்திருக்காங்க!

    யாரோ என்றால்?

    ஈரக் கையைத் தலைப்பில் துடைத்துக் கொண்டபடி, அறையின் இருட்டிலிருந்து நடையின் குறை வெளிச்சத்துக்கு வந்தாள் காமு.

    அவங்க, அந்தப் பையன் தான்னு நினைக்கிறேன்!

    கேட்டியா?

    ஊஹும். மனத்துக்குள் ஏதோ ஒரு வியப்பும், எதிர்பார்ப்பும், எது மேலென்று தெரியாமல் பொங்கி எழுந்தது. வாசலைக் கடந்து திண்ணை வெளிச்சத்துக்கு வந்தாள். திண்ணையில் உட்கார்ந்திருந்த பையன் எழுந்து கொண்டான்.

    உள்ளே வாயேன்!

    அவள் பின்னாலேயே அவன் நிழலும் நடையைக் கடந்து வந்தது. ஸ்டூலின் மேல் பையை வைத்தான்.

    உட்காரு!

    பனை அகணி வேய்ந்த கட்டிலில் பவ்வியமாக உட்கார்ந்து கொண்டான் பையன்.

    நீதான்...

    சண்முகம்.

    உன் கடிதம் வந்தது. ஊரிலே அம்மாவெல்லாம் சவுக்கியந்தானா? இங்கே வந்த காரியம் என்ன ஆச்சுது? காலேஜிலே இடம் பிடிச்சுட்டியா?

    அம்மா சவுக்கியந்தான். அப்பா கூடக் கடிதம் போட்டிருந்தாரு. 'நல்லா படிடா'ன்னு இங்கே வருகிறப்போ அதை நினைச்சுக்கிட்டேதான் வந்தேன். காலேஜிலே இடம் கிடைக்கணுமே?... கிடைச்சாலும்... அம்மா உங்ககிட்டே சொல்லச் சொல்லி எங்கிட்டே ரொம்பச் சொல்லி அனுப்பியிருக்காங்க

    காமு திடீரென்று மௌனம் ஆனாள். அந்த நிசப்தம் மூவருக்குமே இம்சையாகத்தான் இருந்தது. தூண் மறைவில் வளைக்கை அணைத்தபடி நின்ற மீனாட்சிக்குந்தான்!

    நாலு வினாடிகள் சண்முகத்தின் பார்வை சுற்று முற்றும் படர்ந்தது. சற்று வர்ணம் மங்கிய தூண்கள். மழை நீர் ஒழுக முகப்பை நீட்டி நின்ற கூடல்வாய் முனை; கிட்டே போனால் ஒழிய முழு விவரம் தெரியாத பூ நூல் வேலைப் படங்கள்; கதவுக்கு மேலிருந்து சிரித்த ரவி வர்மாவின் கிருஷ்ணன் சித்திரம்...

    யோசிச்சீங்களாம்மா?

    யோசிச்சேன்; எனக்குச் சங்கடம் எதுவும் இல்லை. ஆனாலும், உனக்கு வசதியாயிருக்குமான்னு பாரு. உன் படிப்புக்கு இந்த இடம் எப்படியோ?

    என்னைப் பத்திக் கவலைப்படாதீங்க; நான் சமாளிச்சுக்குவேன்

    நான் சொல்லணும் இல்லியா? மாடியிலே ஓர் அறை இருக்கு. மொட்டை மாடியிலே வந்து போய்க் கொள்ளலாம். குளிக்கக் கீழேதான் வரணும். சாப்பாடு வெளியிலே வச்சுக்கணும்...

    வாடகை? என்று கொஞ்சம் கூச்சத்துடன் கேட்ட சண்முகம், அம்மாதான் கேட்கச் சொன்னாங்க! என்றான்.

    வெற்றிலைக் காவி தெரிய ஒரு முறை சிரித்துக் கொண்டாள் காமு. அம்மா கேட்டால் நான் சொல்லிக்கிறேன். அதைப் பற்றி நீ கவலைப்பட வேணாம் என்றாள்.

    என்னைத் தப்பா நினைக்காதீங்க!

    உனக்கு எப்படித் தெரியும் தம்பி, எங்க சிநேகிதம்? உன் அம்மாவும் நானும் கிராமத்திலே அடுத்த அடுத்த வீட்டுப் பெண்களா வளர்ந்தோம். புதுப்பாவாடை தெச்சா, 'நான் தான் முதல்லே கட்டிக்கணும்'னு உன் அம்மா சொல்வா. எனக்கு அழகு பார்த்துத்தான் அவள் கட்டிக்குவா, சூடிக் கொடுத்த ஆண்டாள் மாதிரி!

    'களுக்'கென்று சிரிப்பு வந்தது தூணுக்குப் பின்னால் இருந்து; மீனாட்சி முகம் தெரிய எட்டிப் பார்த்தாள்.

    இவ என் பெண் மீனாட்சி! என்று அறிமுகப்படுத்தினாள் காமு. அந்த அறிமுகத்தை எப்படி ஏற்பது என்று அவனுக்குப் புரியவில்லை. கை குவித்துக் கும்பிடத் தோன்றவில்லை அவ்வளவு பெரிய மனுஷியா அவள்? சிரிக்கவும் சங்கோஜமாக இருந்தது. எதுவும் பேச வரவில்லை. என்ன பேசுவதாம்? நல்ல வேளையாக மறுபடியும் காமுவின் குரல் தொடர்ந்து கேட்டது:

    இவ வயதுகூட இருக்காது எங்களுக்கு அப்போ. பகல் நேரம் எல்லாம் பல்லாங்குழி ஆட்டந்தான். ராத்திரியிலே அவகிட்டே நான் கதை சொல்லிக் கொண்டு தூங்குவேன். எங்க அம்மா கலாட்டா பண்ணும்; 'அவ பையனா இருந்திருந்தா பேசாமெ உன்னைக் கட்டிக் கொடுத்திடுவேன்' னு. அவ்வளவு இணைபிரியாத ஒற்றுமை!

    காமு சற்று நேரம் பேசவில்லை. குழந்தைப் பருவத்து விளையாட்டுகள்; கோவில் குளத்தில் மீன் குட்டியாக நீந்தியது; திருவிழாத் தெருக்கூத்தில் விடிய விடியக் கண் விழித்தது; பெருமாள் கோவிலில் மார்கழி மாத பஜனையில் இரண்டு பேருமாக ஒருவர் கையை ஒருவர் கோத்துக்கொண்டு நடந்தது எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. ஒவ்வொன்றாக அனுபவித்து, முப்பது வருடங்களுக்கு அப்பால் நின்று, மனம் ஒட்டியும் ஒட்டாமலும் அந்த நினைப்பில் லயித்துவிட்டாள்.

    சண்முகம் பையில் விரலை மாட்டி இழுத்துக் கொண்டான்; புறப்படுகிற பாவனை...

    உட்காரு; காப்பி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்.

    உள்ளேயிருந்து வெண்ணெயைக் காய்ச்சும் புத்துருக்கு நெய்யின் மணம் வந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1