Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oozhal Nam Pirappurimai
Oozhal Nam Pirappurimai
Oozhal Nam Pirappurimai
Ebook191 pages1 hour

Oozhal Nam Pirappurimai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஊழல் ஒரு வகையில் நம் உடன்பிறப்புபோல் ஆகிவிட்டது. பிரசவ ஆஸ்பத்திரி ஆயாவுக்கு லஞ்சம் கொடுப்பதிலிருந்து சுடுகாட்டு வெட்டியானுக்கு வெட்டுவது வரை, ஊழல் நம்மைவிட்டுப் பிரிவதில்லை. இதனால்தான் எந்த அரசியல் கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் ‘ஊழலை ஒழிப்போம்’ என்று ஒப்புக்குக்கூடச் சொல்வதில்லை. மக்கள் நம்பமாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரிகிறது. ‘ஊழல் நம் பிறப்புரிமை’ என்ற இந்த நூலில் சத்யாவின் 25 கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் நம் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateNov 4, 2023
ISBN6580160109373
Oozhal Nam Pirappurimai

Read more from Thuglak Sathya

Related to Oozhal Nam Pirappurimai

Related ebooks

Related categories

Reviews for Oozhal Nam Pirappurimai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oozhal Nam Pirappurimai - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஊழல் நம் பிறப்புரிமை

    Oozhal Nam Pirappurimai

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    பொருளடக்கம்

    முன்னுரை

    சத்யா எழுத்தின் சத்யம்

    1. சென்ஸஸ் கேள்விகளும், குடிமகன் பதில்களும்!

    2. சர்வம் போலிகள் மயம்

    3. பாரு, பாரு, நடவடிக்கை பாரு!

    4. போலி ஆசிரியர்கள் போட்ட வேஷம்

    5. முகம் மூடாத கொள்ளைக்காரர்கள்

    6. ஒரு தீவிரவாதி விசாரிக்கப்படுகிறார்!

    7. வசூல் ராஜா எம்.பி.க்கள்!

    8. போலீஸாரிடம் ஒரு விசாரணை

    9. இது பெண்கள் பக்கம்

    10. ஆட்டுவித்தபடி ஆடும் ஆட்டக்காரர்கள்

    11. உளவியல் நிபுணரும், சிறைக்கஞ்சா சிங்கங்களும்!

    12. சுதந்திரத்தால் கிடைத்த பயன்கள்!

    13. புத்தாண்டு எப்படி இருக்கும்?

    14. கொள்ளைக்கார உரிமை மீறல்!

    15. மாவோயிஸ்டுகளின் உரிமைக் குரல்!

    16. பஸ் விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி?

    17. ஊழல் நம் பிறப்புரிமை!

    18. சுய வேலைவாய்ப்புத் திட்டம்

    19. சட்டம் நம் கையில்!

    20. இப்படியும் சில மனசாட்சிகள்!

    21. எச்சரிக்கையாக ஏமாறுவது எப்படி?

    22. ‘இன்னா நாற்பது’ம் இங்கே உண்டு

    23. நீதிபதிகளின் நியாய வாதம்!

    24. தமிழ் வாழ்கிறதா? வீழ்கிறதா?

    25. மத்திய அரசும் கறுப்புப் பணமும்

    முன்னுரை

    அன்பார்ந்த வாசகரே, வணக்கம்.

    இந்தக் கட்டுரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ‘துக்ளக்’கில் பிரசுரமானவை. பொதுவாக, வாரம்தோறும் அரசியல்பற்றி எழுதிவந்தாலும், அவ்வப்போது பொதுப் பிரச்னைகள் பற்றி எழுதியவற்றைத் தொகுத்துத் தனிப் புத்தகமாக வெளியிடலாம் என்று தோன்றியது. இதற்கு ‘ஊழல் நம் பிறப்புரிமை’ என்ற தலைப்பைத் தரலாம் என்று கூறியவர் என் இனிய நண்பரும் அரசியல் விமர்சகருமான டாக்டர் ஆர். நடராஜன் அவர்கள்.

    ஊழல் ஒரு வகையில் நம் உடன்பிறப்புபோல் ஆகிவிட்டது. பிரசவ ஆஸ்பத்திரி ஆயாவுக்கு லஞ்சம் கொடுப்பதிலிருந்து சுடுகாட்டு வெட்டியானுக்கு வெட்டுவது வரை, ஊழல் நம்மைவிட்டுப் பிரிவதில்லை. இதனால்தான் எந்த அரசியல் கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் ‘ஊழலை ஒழிப்போம்’ என்று ஒப்புக்குக்கூடச் சொல்வதில்லை. மக்கள் நம்பமாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரிகிறது.

    இந்தக் கட்டுரைகள் நம் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நூலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ள பெருமதிப்பிற்குரிய பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எவ்வளவு கஷ்டங்களுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஆதாரபூர்வமாகத் தெரிந்துகொண்டால், நிச்சயமாக மகிழ்ச்சி அடையலாம். ஊழலை ஒழிக்கத்தான் முடியவில்லை, இப்படி ரசிக்கவாவது செய்யலாமே!

    அன்புடன்

    ‘துக்ளக்’ சத்யா

    சத்யா எழுத்தின் சத்யம்

    நல்லி குப்புசாமி செட்டியார்

    சமகால நடப்புகளை உள்ளது உள்ளபடி எழுதுவது வரலாறு. கொஞ்சம் நகைச்சுவை சேர்த்துச் சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும். வரலாற்றுக்கும் நையாண்டிக்கும் வித்தியாசம் இதுவே. இந்த வித்தியாசத்தை வாசகர்களுக்கு நன்றாக உணர்த்துகிறார் துக்ளக் சத்யா அவர்கள்.

    இவர் எழுதிவரும் உரையாடல் பாணிக் கட்டுரைகளை வாராவாரம் படித்து வருகிறேன். இந்த நூலில் உள்ள கட்டுரைகளை முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படிப்பது தனி சுகம்தான். ஒருமுறை படித்துவிட்டோமே என்று ஒதுக்கி வைக்க வேண்டியதில்லை. மறுபடியும் படிக்கலாம். ஒவ்வொரு முறையும் வாய்விட்டுச் சிரிக்கலாம். சிரிப்பது ஒரு உற்சாக டானிக். இதைக் கொடுத்துள்ள துக்ளக் சத்யா அவர்கள் நம் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்.

    அரசியலைத் தவிர்த்துப் பொதுவாழ்க்கை பற்றிய கட்டுரைகளில் இவர் விமரிசனம் செய்வது யதார்த்தமா கிண்டலா என்பது புரியாமல் திகைத்துப் போகிறோம். ஆனால் ரசிக்கிறோம், சிரிக்கிறோம். புது வருஷம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளப் போன அன்பரிடம் ஜோசியர் சொல்கிறார்: உங்க அதிர்ஷ்டம் பாருங்க; 2013ஐப் பார்க்கும்போது 2012 ரொம்ப நல்லா இருக்குது. 2012ஐவிட 2011 இன்னும் பிரமாதம். அவ்வளவு ஏன், பல வருஷங்களுக்கு முன்னாலே உங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருந்திருக்கணுமே, கரெக்டா?

    இது ‘கரெக்ட்’ இல்லை என்று சொல்ல முடியுமா? இதுதான் சத்யா எழுத்தின் சத்யம். இந்த சத்யம் என்றும் நிற்கும் என்பது உறுதி.

    சத்யாவை மனமாரப் பாராட்டுகிறேன்.

    1. சென்ஸஸ் கேள்விகளும், குடிமகன் பதில்களும்!

    சென்ஸஸ் கேள்விகளுக்கு, ஏராளமான பிரச்னைகளுடன் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பஸ்தன் எப்படி பதிலளிப்பார் என்று சிந்தித்துப் பார்க்கிறோம்.

    அதிகாரி: பெயர்?

    குடிமகன்: பிச்சாண்டிங்க, அப்பா பேர் பக்கிரி, எதிர்காலத்தில் என் நிலைமை இப்படியிருக்கும்னு தெரிஞ்சு எங்கப்பா எனக்கு இந்தப் பேர் வெக்கலைங்க, தற்செயலா பொருத்தமா அமைஞ்சிடுச்சு, அவ்வளவுதான்.

    அதிகாரி: தொழில்?

    குடிமகன்: பெரும்பாலும் கடன் வாங்கறதுதாங்க. ரேஷன் க்யூவிலே நிக்கறது, ஸ்கூல், காலேஜ் அட்மிஷனுக்கு அலையறது, தண்ணிக்குத் திண்டாடறது, ஈ.பி. ஆஃபீஸ், ஆர்.டி.ஓ. ஆஃபீஸ்னு ஓடறது இதுக்கெல்லாம் போக நேரம் இருந்தா அப்பப்ப வேலைக்குப் போறதும் உண்டுங்க.

    அதிகாரி: குடும்பத் தலைவர்?

    குடிமகன்: ரேஷன் கார்டுப்படி நான்தாங்க. மெதுவாகப் பேசுங்க, சம்சாரம் காதுலே விழுந்தா ‘உடனே போய் மாத்திக்கிட்டு வா’ன்னு தகராறு பண்ணும்.

    அதிகாரி: சொந்த வீடு இருக்குதா?

    குடிமகன்: ஐயோ, அந்தக் கஷ்டத்தை ஏன் கேக்கறீங்க? இப்படித்தான் என் ஃப்ரெண்ட் ஒருத்தர் பேங்க்லே லோன் வாங்கி சொந்த வீடு கட்டினார். மாசம் பன்னிரண்டாயிரம்னு ஏழு வருஷம் கட்டின பிறகும், அசல்லே 32 ரூபாய்தான் குறைஞ்சிருக்குது. என் அதிர்ஷ்டம், நான் இப்படியெல்லாம் மாட்டிக்கலை.

    அதிகாரி: நிரந்தர முகவரி?

    குடிமகன்: பிள்ளையார் கோவில் அரச மரத்தடி ப்ளாட்ஃபாரம்தாங்க. கரென்ட் இல்லாதப்ப எல்லாம் நாங்க அங்கேதான் போயிடறது. நீங்க எப்ப வந்தாலும் என்னை அங்கே பாக்கலாம். அங்கேதான் போயிட்டே இருக்கேன். வரீங்களா?

    அதிகாரி: கடைசியா வசிச்ச இடம் எது? அங்கேயிருந்து இங்கே வர என்ன காரணம்?

    குடிமகன்: மொதல்லே மேட்டுத் தெரு வீட்டுலேதான் இருந்தோம். அங்கே வாரத்துக்கு ஒரு தடவைதான் தண்ணி வரும். அதனால குறுக்குத் தெரு வீட்டுக்கு மாறினோம். ஆனா அங்கே பாருங்க, ஒரு சின்ன மழை பெஞ்சாக்கூட ஊர் தண்ணி மொத்தம் அங்கே வந்து சேர்ந்துடும். தண்ணீர் வடிய மூணு மாசம் ஆகும். போட் பிடிச்சுத்தான் வேலைக்குப் போகணும். அதனாலே இங்கே வந்துட்டோம்.

    அதிகாரி: இங்கே எப்படி இருக்குது?

    குடிமகன்: இங்கே ரெண்டு நாளைக்கு ஒரு தடவை தண்ணி கிடைக்கும். ராத்திரியிலே மட்டும்தான் கொசுத் தொல்லை தாங்க முடியாது. பகல்லே தாங்கற அளவுதான் இருக்கும். இந்த ஊர்லயே இதாங்க நல்ல ஏரியா.

    அதிகாரி: சொத்து விவரம்?

    குடிமகன்: ரெண்டு பையன், ஒரு பொண்ணு.

    அதிகாரி: அதில்லைங்க. வீட்டுலே என்னென்ன பொருட்கள் இருக்குதுன்னு கேக்கறேன்?

    குடிமகன்: ஓ... அதைக் கேக்கறீங்களா? கலர் டி.வி. கேஸ் சிலிண்டர், வேஷ்டி, சேலை. அடுத்த தேர்தல்லே இன்னும் நிறைய பொருட்கள் கிடைக்கும்னு நம்பறேன்.

    அதிகாரி: வருமானம்?

    குடிமகன்: வாங்கின கடன், வட்டி, அபராத வட்டி எல்லாம் பிடிச்சது போக, மீதி கையிலே என்ன கிடைக்குதோ அதுதாங்க வருமானம்.

    அதிகாரி: வேறு வகை வருமானம்?

    குடிமகன்: இடைத்தேர்தல் வந்தா கவர்லே ஆயிரம், ரெண்டாயிரம் கிடைக்கும். கட்சி ஊர்வலத்திலே கலந்துகிட்டு கோஷம் போட்டா, சாப்பாடுபோட்டு பேட்டாவும் குடுப்பாங்க.

    அதிகாரி: குடும்பத்திலே வேறே யாருக்காவது வருமானம் இருக்குதா?

    குடிமகன்: ஒரு பையனுக்கு, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு கிடைக்கிற உதவிப் பணம் கிடைக்குது. இன்னொரு பையன் ரேஷன் அரிசியை வாங்கிக் கடைக்கு வித்து, ப்ளாக்லே கொஞ்சம் சம்பாதிக்கிறான். பொண்ணு சத்துணவுக் கூடத்திலே வேலை செய்யறதாலே அரிசி, பருப்பு, முட்டை கொஞ்சம் கிடைக்கும். அதுவும் அங்கேயே சாப்பிட்டுக்கும்.

    அதிகாரி: கடன் இருக்குதா?

    குடிமகன்: ஏராளமா இருக்குதுங்க. அரசாங்கம் ரத்து பண்ணும்ன்ற நம்பிக்கையிலே விடாம வாங்கிட்டிருக்கேன்.

    அதிகாரி: பிள்ளைகள் படிப்பு?

    குடிமகன்: தனியார் பள்ளிக்கூடத்திலே ஃபீஸ், டொனேஷன், புஸ்தகம், நோட்டு வாங்கிக் கட்டுப்படியாகலைன்னு கார்ப்பரேஷன் ஸ்கூல்ல சேர்த்தேன். அங்கே வாத்தியாருங்களே வரதில்லை. ட்யூஷன் படிச்சாத்தான் சொல்லிக் கொடுக்கறாங்க. அதனாலே பசங்க படிப்பை நிறுத்திட்டேன். ஒரு நாற்பது அம்பது பசங்களைப் பிடிச்சு, நானே ஒரு நர்ஸரி ஸ்கூல் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அப்புறம் பாருங்க, என் நிலைமை எப்படி மாறுதுன்னு!

    அதிகாரி: குடும்பத்திலே இருக்கிற வசதிகள்?

    குடிமகன்: பக்கத்திலேயே டாஸ்மாக் கடை இருக்கிறது ஒரு வசதிதாங்க. ஆனா, நான் அங்கே போறதில்லை. மீதி சில்லறையைக் கொடுக்க மாட்டேன்றாங்க, போலி மதுபானம் விக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். பக்கத்திலேயே ஒரு இடம் இருக்குதுங்க. ஒரிஜினல் கள்ளச் சாராயம் கிடைக்கும். ஒரு அவசரம்னா நான் அங்கேதான் போறது.

    அதிகாரி: மின்சார வசதி?

    குடிமகன்: ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் அரசாங்க உத்தரவுப்படியும், இன்னொரு நாலு மணிநேரம் அரசாங்க உத்தரவு இல்லாமயும் கட் பண்றாங்க. இந்த மின்வெட்டுகள் இல்லாத சமயத்திலே மின்சாரம் பழுதாயிடும். இந்த வசதிகளாலே, கரன்ட் பில் எங்களுக்குக் குறைவாத்தான் வருது.

    அதிகாரி: பஸ் வசதி?

    குடிமகன்: எக்ஸ்பிரஸ், ஸ்பெஷல், சூப்பர் டீலக்ஸ்னு காலியா நிறைய வருதுங்க. ‘நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி சாதா பஸ் எப்பவாவதுதான் வரும். ஆனா அதுலே ஏற முடியாது. நம்ம நேரம் நல்லாயிருந்தாத்தான் அது ஸ்டாப்பிங்லே நிக்கும்.

    அதிகாரி: வாகன வசதி?

    குடிமகன்: ஒரு சைக்கிள் இருக்குதுங்க. ஆனா டெலிஃபோன் டிபார்ட்மென்ட்காரங்க, ஈ.பி. ஆளுங்க, ரோடு போடறவங்க எல்லாரும் ஒரே சமயத்திலே பள்ளம் தோண்டிட்டு, ‘வேலை நடக்கிறது’ன்னு போர்டு போட்டுட்டு ஒரே சமயத்திலே லீவுலே போயிடுவாங்க. அதனாலே, சைக்கிளைத் தூக்கிட்டுத்தான் நான் வேலைக்குப் போறேன்.

    அதிகாரி: கழிப்பிட வசதி?

    குடிமகன்: வீட்டுக்குள்ளே படுக்கவே இடம் போதாது. கழிப்பிட வசதியெல்லாம் ஏது? வர்ற வருமானத்திலே ஒரு பகுதி கட்டணக் கழிப்பறைக்கே போயிடுது. நீங்கதான் கவர்ன்மென்ட்கிட்டே சொல்லி, அதையும் இலவசம்னு அறிவிக்கச் சொல்லணும்.

    அதிகாரி: குடிநீர் வசதி?

    குடிமகன்: மழைக் காலமாயிருந்தா ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணி வரும்ங்க. வெயில் காலத்திலே எப்ப தண்ணி வருதோ, அப்ப பிடிச்சு வெச்சுக்கணும். அப்பப்ப லாரியிலேயும் வரும்.

    Enjoying the preview?
    Page 1 of 1