Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chennapatina Varalaaru
Chennapatina Varalaaru
Chennapatina Varalaaru
Ebook377 pages2 hours

Chennapatina Varalaaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த பெருநகரம் சென்னை. பல கிராமங்களாகச் சிதறிக்கிடந்த சென்னை நகரை ஒருங்கிணைத்து நாட்டிலேயே நான்காவது பெரு நகரமாக மாற்றிய பெருமை ஆங்கிலேயர்களையே சாரும். ‘திருப்பதியைத் தள்ளிவிட்டு சென்னையை எடுத்துக் கொண்டீர்களே!’ என்று ஆந்திர மாநிலத்தவர் இன்றைக்கும் முணுமுணுக்கும் அளவிற்கு மகத்தான வளர்ச்சியைத் தொட்டு நிற்கும் மாநகரம் இது.

பழமையோடு புதுமைகளையும் இன்முகம் காட்டி வரவேற்கும் அற்புத குணாதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள பரந்து விரிந்த மனத்தைக் கொண்ட மாமனிதர்கள் இங்கு ஏராளம். இந்நகரின் தொடக்கம் முதல் இன்று வரையிலான வளர்ச்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை எதிர்த்தாலும், அவர்கள் செய்த நன்மைகளை மறக்காமல் இன்றும் நினைவில் கொண்டிருக்கும் நகரம் இது. இதன் பழம் பெருமைகளையும், புது அருமைகளையும் முடிந்த அளவிற்கு இப்புத்தகத்தில் திரட்டித் தந்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580156708667
Chennapatina Varalaaru

Read more from Kundril Kumar

Related to Chennapatina Varalaaru

Related ebooks

Related categories

Reviews for Chennapatina Varalaaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chennapatina Varalaaru - Kundril Kumar

    http://www.pustaka.co.in

    சென்னப்பட்டின வரலாறு

    Chennapatina Varalaaru

    Author :

    குன்றில் குமார்

    Kundril Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kundril-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1 ஆங்கிலேயர் வருகைக்கு முன் சென்னப்பட்டணம்!

    2 ஆங்கிலேயர் வருகைக்குப் பின்

    3 ஜார்ஜ் கோட்டை

    4 சென்னையில் பஞ்சம்

    5 சென்னையில் ஆங்கிலேயர்கள்

    6 சென்னை பெயர்க் காரணங்கள்

    7 சென்னை ஆட்சியாளர்கள்

    8 அன்றும் இன்றும்

    9 முக்கிய இடங்களும் நிகழ்வுகளும்

    10 சென்னை திருக்கோயில்கள்

    11 சென்னையின் மாமனிதர்கள்

    என்னுரை

    முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த பெரு நகரம் சென்னை.

    பல கிராமங்களாகச் சிதறிக்கிடந்த சென்னை நகரை ஒருங்கிணைத்து நாட்டிலேயே நான்காவது பெரு நகரமாக மாற்றிய பெருமை ஆங்கிலேயர்களையே சாரும்.

    ‘திருப்பதியைத் தள்ளிவிட்டு சென்னையை எடுத்துக் கொண்டீர்களே!’ என்று ஆந்திர மாநிலத்தவர் இன்றைக்கும் முணுமுணுக்கும் அளவிற்கு மகத்தான வளர்ச்சியைத் தொட்டு நிற்கும் மாநகரம் இது.

    பழமையோடு புதுமைகளையும் இன்முகம் காட்டி வரவேற்கும் அற்புத குணாதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள பரந்து விரிந்த மனத்தைக் கொண்ட மாமனிதர்கள் இங்கு ஏராளம்.

    இந்நகரின் தொடக்கம் முதல் இன்று வரையிலான வளர்ச்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை எதிர்த்தாலும், அவர்கள் செய்த நன்மைகளை மறக்காமல் இன்றும் நினைவில் கொண்டிருக்கும் நகரம் இது.

    இதன் பழம் பெருமைகளையும், புது அருமைகளையும் முடிந்த அளவிற்கு இப்புத்தகத்தில் திரட்டித் தந்துள்ளேன்.

    பதிப்பாளர் திரு. கோமதிநாயகம் அவர்களின் தூண்டுகோல் அதிகமாக இருந்த ஒரே காரணத்தால் இதனை சிறப்பாகச் செய்ய முடிந்தது என்பதைத் தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.

    என்றும் அன்புடன்,

    குன்றில்குமார்

    1 ஆங்கிலேயர் வருகைக்கு முன் சென்னப்பட்டணம்!

    இதுதான் நம் சென்னைக்கு முதன்முதலாக இட்ட பெயர்.

    அதுவரை சென்னை சிதறிக்கிடந்த கிராமங்களாகவே காட்சியளித்ததுதான் உண்மை வரலாறு.

    சென்னப்பட்டணம், பின்னர் பல்வேறு பெயர் வளம் பெற்று காலந்தோறும் மாறுதல் அடைந்தது.

    மட்ராஸ்...

    அப்புறம் மதராஸ்....

    அதற்கப்புறம் மதராஸ பட்டணம்...

    ஆங்கிலேயர்களின் உச்சரிப்புக்கு இலகுவாக இருப்பதற்காகப் பின்னர் மெட்ராஸ்...

    நம் முன்னோர்களுக்குச் சுருக்கமாக ‘பட்டணம்’ என்பதாகவே இருந்தது.

    ரொம்ப காலத்திற்குப் பிறகு பழமையைப் போற்றும் விதமாக சென்னை...

    ஆம், இப்போது இது சென்னை!

    அ ழகான பெயர்.

    உலகம் முழுமையும் இன்று அழைத்துவரும் ஒரு இனிமையான பெயர்...

    சென்னை!

    ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை பெற்ற, வரலாறு கொண்ட ஊர் அல்ல, என்றாலும் நெஞ்சை நிமிர்த்தி, தமிழர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சரித்திரப் புகழைக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் சென்னை.

    2012ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி, தனது 372வது வயதைச் சிறப்பாகக் கொண்டாடியது.

    372 ஆண்டுகளில் இதன் வளர்ச்சியை வார்த்தைகளால் அடுக்கிவிட முடியாது.. அதையும் தாண்டி நிற்கிறது.

    குறுகிய கிராமிய மணம் வீசிய நகரின் சந்துக்களில் இன்று அதனை எங்குமே காணமுடியாத ஏக்கம் அந்தக் காலத்து ஜீவன்களிடம் பரவி நிற்கிறது.

    ஒரு விசாலமான, நாகரீக வடிவைப் பெற்று முற்றிலும் வேறொரு புதிய வடிவினை எடுத்துக் காட்சி தருகிறது அருமை சென்னை.

    மளிகைக் கடைகளில் அன்றும் அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலாப் பொருட்கள்தான் விற்றனர். இன்றும் அதே ரகத்தைத்தான் விற்பனை செய்து வருகின்றனர்.

    ஆனால் அன்றைய மளிகைக் கடைகளுக்கும், இன்றைய அங்காடிகளுக்கும் இடையே எத்தனை விசித்திர மாற்றங்கள்!

    பொருட்களைத் தராசுகளில் நிறுவை செய்து வழங்கப்பட்ட காலங்கள் மாறிப்போய், பிளாஸ்டிக் கவர்களில் பொதிந்து தரும் அற்புத மாற்றங்கள்!

    முற்றம், பின் வாசல், புழக்கடை என்று விஸ்தாரமாக, இயற்கை சூழலுடன் இருந்த சென்னை நகரம், இன்று புறாக் கூண்டு போன்ற அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குள் அடங்கிப் போன நிலைமை!

    சென்னை நகரம் மட்டுமல்லாமல் உலகின் அத்தனை நகரங்களும் இதுபோன்ற நிலைமையைத்தான் இன்று சந்தித்து வருகின்றன. என்றாலும் பிற நகரங்களுக்கும், சென்னை மாநகரத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதாவது மற்ற நகரங்கள் தானாக உருவானது.

    ஆனால் சென்னை நகரம் உருவாக்கப்பட்டது. பல கிராமங்களை இணைத்து பெரு நகரமாக மாற்றமடைந்தது சென்னை.

    மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு என்று பல்வேறு கிராமங்களாகச் சிதறிக் கிடந்த காலக்கட்டம்.

    கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு முதல் பல்லவ மன்னர்கள், சோழ மன்னர்கள், விஜய நகரப் பேரரசர்கள் ஆகியோரின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டு வந்தன இந்தக் கிராமங்கள். அல்லது சென்னப்பட்டணம்.

    பல்லவ மன்னர்களின் முக்கியத் துறைமுகமாக விளங்கியது மயிலாப்பூர் என்பதை சரித்திரம் சுட்டிக் காட்டுகிறது.

    வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வர்த்தகர்கள் இங்கு வந்து சென்றதும் அறியப்படுகிறது.

    மதப் போதகர்கள் இங்கு வந்து சென்ற விவரங்களும் உள்ளன.

    குறிப்பாக இயேசுகிறிஸ்துவின் சீடர் தோமையர் மயிலாப்பூரில் இருந்து கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பியது முக்கியத்துவம் வாய்ந்தது. சாந்தோம் பேராலயம், தோமையர் கல்லறை போன்றவை இதற்குச் சாட்சியாக விளங்குகிறது. இது கி.பி. 52 முதல் 70ஆம் ஆண்டுவாக்கில் நிகழ்ந்தது இதுவென கிறிஸ்தவ வரலாற்று நூல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

    இவ்வாறான சிறப்புகள் பல கொண்ட சென்னப்பட்டணம், ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகே ஒருங்கிணைந்த மாநகராக வளர்ச்சி அடையத் தொடங்கியது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே கிடையாது.

    சென்னை மாநகரின் அற்புதமான வளர்ச்சியில் ஆங்கிலேயர்களின் பங்களிப்பு முக்கியமாக இருப்பதை தமிழர்களாகிய நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

    எனினும் ஆங்கிலேயர்கள் இங்கு வருவதற்கு முன்பே, அதாவது அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ‘சென்னப்பட்டணம்’ என்பது ‘மதராசப் பட்டணம்’ என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    அதாவது தமிழகத்தின் வடநாடாக இந்த மதராசப் பட்டணம் அப்போது அறிமுகமாகி இருந்ததாகத் தெரிகிறது. இங்குள்ள கோயில்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.

    மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோயில் போன்றவை பழமையும் சிறப்பும் பெற்றவை ஆகும்.

    சாந்தோமில் புனித தாமஸின் கல்லறையைப் பாதுகாத்து வந்தவர் ஒரு இஸ்லாமியர் என்பது சிறப்புக்குரிய ஒன்று. அதேபோல சென்னப்பட்டணத்தின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து என்பது இன்னும் வியப்புக்குரியது.

    13வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சென்னையில் இஸ்லாமியர்கள் குடியேறிவிட்டதாகக் குறிப்புகள் உள்ளன.

    அப்போது மயிலாப்பூரில் இஸ்லாமியப் பெருமக்கள் அதிகளவில் வசித்து வந்ததாக வெனிஸ் நகர வியாபாரி மார்க்கோபோலா, தனது சுற்றுலாக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை உருவாகக் காரணமாக இருந்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்தபோதிலும், அவர்கள் காலத்திற்கும் முன்னரே இந்நகரம் கட்டடக் கலையில் சிறப்புற்று விளங்கி வந்தது என்பதும் நிச்சயமான உண்மையாக உணரப்படுகிறது.

    பல்லவ மன்னர்கள், சோழ மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் என்று பல்வேறு மன்னர்கள் ஆண்ட இந்நகரம் - அப்போது சிதறிக் கிடந்த கிராமங்கள் - இங்கு பல்வேறு ஒப்பற்ற கலைநுணுக்கத்துடனான கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

    பல்லாவரம் மலையில் காணப்படும் குகைகள், முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக் காலமான கி.பி. 600 முதல் 630ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

    பல்லவர்கள் கி.பி. 600 முதல் 850 ஆம் ஆண்டு வரையிலும், சோழர்கள் கி.பி. 1000 முதல் 1350ஆம் ஆண்டுகள் வரையிலும், விஜய நகரப் பேரரசு கி.பி. 1350 முதல் 1600 ஆம் ஆண்டு வரையிலும் இருந்ததற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன.

    இவர்களது ஆட்சிக் காலங்களில் பல்லாவரம் மலைக் குடவரைகள் மட்டுமல்லாமல் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில், பாடி திருவல்லீஸ்வரர் கோயில், திரிசூலம் தர்மபுரீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருநீர்மலை ரங்கநாதர் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பூக்கடை சென்னகேசவர் கோயில் போன்ற கோயில்களின் அழகுமிகு சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கட்டிடங்களே கட்டிடக் கலைக்குச் சான்றாகக் கருதப்படுகிறது.

    தற்போதைய சென்னை நகரின் ஒரு பகுதியாகக் காட்சி அளிக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கந்தபுராணத் தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் கூர்மபுராணம், வராகபுராணம் ஆகியவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் திருஞானசம்பந்தர், திருமழிசை ஆழ்வாரால் பாடப்பெற்ற ஒரு திருத்தலமாகவும் உள்ளது.

    இந்த அளவிற்குப் பழமைவாய்ந்த ஊராக மயிலாப்பூர் உள்ளது.

    அதேபோல திருவல்லிக்கேணியும் பழமைபெற்ற ஊர். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இங்குள்ள பார்த்தசாரதி கோயில் கட்டப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.

    அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோர்களால் பாடப்பட்ட திருத்தலம் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில். தொண்டை மண்டலத்தில் உள்ள 32 சிவத் தலங்களில் முக்கியமான ஒன்றாக விளங்கும் இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது.

    திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில் பாண் டிய மன்னன் சுந்தரபாண்டித் தேவனால் கட்டப்பட்டது.

    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலும் புராதனப் பழமை வாய்ந்தது. ராமாயணம் படைத்த வால்மீகி இங்கு வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது இக்கோயில்.

    தற்போது சென்னை மாநகரின் ஒரு பகுதியாக விளங்கும் திருமுல்லைவாயில், பாலாற்றங்கரையில் இருந்ததாக சுந்தர மூர்த்தி நாயனார் பாடியுள்ளார். இவர் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

    இந்த ஆறு, பிற்காலத்தில் பல காட்டாறுகளாகவும், கல்லாறுகளாகவும் மாறியது. கூவம், அடையாறு ஆகிய சிற்றாறுகள் இதிலிருந்து தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பழங்காலத்தில் உயிரிழந்தோரை தாழியில் வைத்துப் புதைக்கும் பழக்கம் நம் மக்களிடையே இருந்திருக்கிறது. இது சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழக்கவழக்கம். இதனை ‘முதுமக்கள் தாழி’ என்பர். இந்தத் தாழி தற்போது

    சென்னை நகரைச் சுற்றியுள்ள கூடுவாஞ்சேரி, பெரும்பெயர், சத்தியவேடு, பெரிய நத்தம் ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் அழகிய கலை வேலைப்பாடுகளைக் கொண்ட மட்பாண்டங்கள், மரச்சீப்பு, எலும்பு ஊசி போன்றவையும் கிடைக்கப்பட்டுள்ளது..

    சென்னை நகரானது முன்னொரு காலத்தில் ‘தொண்டை நாடு’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இத்தொண்டை நாடானது, தென்பெண்ணை மற்றும் வடபெண்ணைக்கு இடைப்பட்ட பகுதியாக விளங்கி இருந்தது.

    சென்னை ஆங்கிலேயர்கள் காலத்திற்கு முன்பாகவே சிறப்புற்று விளங்கி இருந்தது என்பதற்கான பெருமை உடைய ஊர்களைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்த்தால் உண்மையை உணர முடியும்.

    மயிலாப்பூர்

    இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான தாமஸ் என்னும் தோமையார் மயிலாப்பூரில் கி.பி. 52ஆம் ஆண்டு வந்தது முதல் இவ்வூரின் பெருமை உலகத்தாரால் அறியப் பட்டது.

    மயிலாப்பூரில் தற்போதைய சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் தங்கி இருந்தே தனது இறைப்பணிகளை இவர் நடத்தி வந்தார்.

    பின்னர் இவரது மதபோதனைகளுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதை அடுத்து சைதாப்பேட்டையை அடுத்துள்ள பெரிய மலை மற்றும் சிறு மலையில் உள்ள

    குகைகளில் மறைவாகத் தங்கியிருந்து தனது இறைப்பணி களைச் செய்து வந்தார் தோமையர். பின்னர் இவர் சில எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்பது சரித்திர உண்மை.

    ஆக, தோமையர் இங்கு வந்தது முதலே உலகளவில் சென்னையின் புகழ் தெரியத் தொடங்கியது.

    கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாலமி என்னும் பூகோள ஆசிரியர் வரைந்த உலக வரைபடத்தில் தற்போதைய சென்னை இருக்கும் இடத்தில் ‘மல்லியர்பா’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

    அதாவது மயிலாப்பூர் என்ற பெயர்தான் இந்த லட்சணத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் இன்னொரு சிறப்புமிக்க தகவலையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். அது, உலகே வியந்து போற்றும் ஈரடிச் செய்யுள்களைக் கொண்ட திருக்குறள் படைத்த திருவள்ளுவரைப் பற்றியது.

    இந்த மாபெரும் புலவர் பிறந்து, வசித்தது மயிலாப்பூர் என்றும் கூறப்படுகிறது.

    கபாலீஸ்வரர் கோயில் முதன்முதலில் கடலுக்கு அருகே இருந்ததாகவும், பின்னர் கடல் நீர் உட்புகத் தொடங்கிய காரணத்தால், தற்போதைய இடத்தில் கட்டப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.

    ‘ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலை’ என்று திருஞானசம்பந்தர் கூறுகிறார்.

    தீர்த்தங்கரநேமிநாதர் கோயில் என்பது ஒரு சமணக் கோயில். இதுவும் கடல்நீரால் அரிக்கப்பட்டு, முழுவதும் கரைந்து அழிந்துபோனதாகவும் கூறப்படுகிறது.

    இவ்வாறு தோமையர் வருகைக்கு முன்பாகவே மயிலாப்பூர் பெருமை உடைய ஊராக விளங்கியது என்பதை இதுபோன்ற சான்றுகளின் மூலமாக அறியமுடிகிறது.

    திருவல்லிக்கேணி

    இது ஒரு வைணவத் திருத்தலம். பேயாழ்வார், திரு மங்கை ஆழ்வார் ஆகியோர்களால் பாடப்பெற்ற தலம் இது.

    கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இத்தலம் சிறப்புற்றிருந்தது என்பதை நந்திவர்ம பல்லவ மன்னன் காலத்தைய கல்வெட்டு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

    அந்தக் காலத்தில் இங்கு குளம் ஒன்று இருந்திருக்கிறது. அங்கு அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கியதால் அல்லிக்குளம் என்று அதனை அழைத்து வந்தனர்.

    குளம் என்பதை ‘அருவா நாட்டார்’ என்போர் கேணி என்று அழைப்பர். கிணறு என்பதை கேணி என்று அழைப்பது தென் தமிழகத்தினர் மரபு.

    இந்நிலையில் அல்லிக்குளம் என்பது அல்லிக்கேணியாகி, அதன் அடைமொழியாக ‘திரு’ இணைந்து, ‘திருவல்லிக்கேணி’ என்று பெயர் பெற்றதாகத் தெரிகிறது.

    திருவொற்றியூர்

    இதுவும் பழமைமிக்க ஒரு ஊராகவே இருக்கிறது. திருநாவுக்கரசர் என்ற அப்பரால் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இத்தலம் பாடப்பெற்றுள்ளது.

    அதேபோல கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சுந்தரர் இங்கு சங்கிலி நாச்சியார் என்ற பெண்ணை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காக மட்டும் திரு மணம் செய்து கொண்டார்.

    ஆனால் பின்னர் இவர் இந்த வரையறையை மீறியதாகவும், இதனால் அவரது பார்வை பறிபோனதாகவும் தெரியவருகிறது. இதன்பின்னர், அவர் திருவொற்றியூர் தியாகராஜா கோயில் ஆண்டவனை மனமுருகித் தொழுது, பாடல்கள் பாடியதன் காரணமாக, இறையருள் கிடைக்கப் பெற்றது என்றும், அதனால் அவரது பார்வை மீண்டும் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது.

    இதனைப் போற்றும் விதமாக இங்கு ‘மகிழடிச் சேவை’ என்னும் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது..

    கி.பி. 8ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் இங்கு யாத்திரை செய்ததாகவும், அப்போது இங்குள்ள உக்கிர தேவிக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்ததாகவும் தெரிகிறது. இந்தத் தவறான வழக்கத்தை சங்கரர் தடுத்து நிறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

    கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தடிகள் திருவொற்றியூரில் தான் முக்தியடைந்தார். இவர் காவேரிப் பட்டினம் என்ற ஊரில் வைசிய குடும்பத்தில் பிறந்தவர். திருமணமும் ஆனது.

    எனினும் இல்வாழ்வில் ஈடுபாடு இல்லாமல், சதா இறைவனைப் பற்றிய நாட்டமே மிகுந்திருந்த காரணத்தால், காஞ்சி, சிதம்பரம், காளஹஸ்தி என்று புனித யாத்திரை நிகழ்த்தினார் பட்டினத்தார். இங்குள்ள வடிவுடையம்மன் கோயில் அருகிலேயே தனது எஞ்சிய வாழ் நாட்களைக் கழித்து முக்தியடைந்தார். இவரது சமாதி இப்போதும் இங்குள்ளது.

    இக்கோயில் கல்வெட்டு ஒன்றில் இஸ்லாமியப் படையெடுப்பைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. இது கி.பி. 1327ஆம் ஆண்டில் செதுக்கப்பட்டது.

    மற்றொரு கல்வெட்டில் முகமதியர்களின் படையெடுப்பின் போது, கோயில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு விடாமல் இருப்பதற்காக அவை ரகசியமாகப் பாதுகாக்கப் பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருமுல்லைவாயில்

    சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயிலும் பழமை மிக்க ஊராகக் கருதப்படுகிறது. இங்குள்ள மாசிலாமணீஸ் வரர் கோயில் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமைமிக்க தாக உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தையும் போற் றிப் பாடியுள்ளார்.

    தொண்டை மண்டலத்து மன்னர் ஒருவ ரால் இக்கோயில் கட்டப்பட்டதாகத் தல வரலாறு கூறுகிறது.

    திருவான்மியூர்

    இராமாயணம் பாடிய வால்மீகியால் தொழப்பட்ட கோயில் இதுவென்பதால், இதன் பழமை எத்தகையது என்பதைப்பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.

    அருணகிரிநாதர் இங்கு வந்து கோயிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானைத் தரிசித்து பாடல்கள் பாடியுள்ளார்.

    இதனை இங்குள்ள 11ஆம் நூற்றாண்டைய கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

    பல்லாவரம்

    கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்ம பல்லவ மன்னனால் பல்லாவரத்து மலையடிவாரத்தில் குகைக் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது முகமதிய தர்கா ஒன்று இங்குள்ளது. இதன் பழைய பெயர் பல்லவபுரம்.

    பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலை என்னும் இடத் தில் உள்ள மலை மீது வைணவக் கோயில் ஒன்று உள்ளது.

    இங்கு மிக அபூர்வமான வெண்கலச் சிலைகள் உள்ளன.

    இதனருகே உள்ளதுதான் குன்றத்தூர்.

    இங்குதான் இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனின் அமைச்சராக விளங்கிய சேக்கிழார் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    குன்றத்தூரை ஒட்டி இருக்கும் மாங்காடு என்ற இடமும் பழமைவாய்ந்த ஊராக விளங்குகிறது.

    இங்கு பல்லவ மன்னர்களின் காலத்தைய கல்வெட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது.

    சென்னப்பட்டணத்திற்கு வடமேற்கே இருக்கும் மாதவரம் என்னும் ஊரில் சிவன் கோயில் மட்டுமல்லாமல் சமணக் கோயிலும், புத்தமத ஆலயமும் உள்ளது.

    இவ்விடத்தில் இருந்து வடக்குப் புறமாக உள்ளது புழல் மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகள். இவை பல்லவ ஆட்சி காலம் தொட்டே புகழ்பெற்று விளங்குகிறது.

    தொண்டை மண்டலத்தின் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட 24 கோட்டங்களில் ஒன்றாக புழல் இருந்தது. இராணுவத் தளமாகவும் இவ்வூர் விளங்கியது என்பது மற்றொரு சிறப்பு.

    கிழக்கிந்தியக் கம்பெனி

    கி-.மு. 4000 ஆண்டுக்கு முன்பான சிந்துவெளியில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வில் தென்னகத்தைச் சேர்ந்த மயில், யானைத் தந்தம், பொன் போன்ற பொருட்கள் கிடைக்கப்பட்டன.

    மேலும் கி.மு. 3000 ஆண்டுகளில் பாபிலோன் மற்றும் கி.மு. 2600வது ஆண்டுகளில் எகிப்து ஆகிய நாடுகளுக்கு மிளகு, தேக்கு, புலித்தோல், முத்து, பவழம், வைரம், பருத்தி ஆடைகள் ஆகியவை கிழக்கு ஆப்ரிக்கா வழியாக இங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளன.

    இந்த வரலாற்று உண்மைகளை சங்க கால இலக்கியங்கள் மூலம் உணரப்படுவதோடு, தாலமி, ப்ளமி, பெரிப்ளூஸ் ஆகிய மேல்நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள் மூலமாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.

    சீனர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள் போன்றோர் இங்கு வந்து வாணிபம் செய்து பெருஞ்செல்வம் ஈட்டியதை ஆங்கிலேயர்கள் அதிசயத்துடன் கண்டுள்ளனர்.

    இதன்பிறகே இங்கு வந்து செல்வம் ஈட்டும் துணிச்சல் அவர்களுக்கு வந்ததாக அறியப்படுகிறது.

    அவர்கள் இந்தியாவிற்குள் நுழைய ஆயத்தமானபோது, அதிர்ஷ்டவசமாக இங்கு முகலாயர்களின் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கி இருந்தது.

    அத்துடன் தென்னகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சி முழுவதுமாக மறைந்தும், அதன்பின்னர் கொடிகட்டிப் பறந்த விஜயநகரப் பேரரசும் அழிவின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்ததும் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றிட நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது.

    குறிப்பாக சென்னையை கிழக்கிந்திய கம்பெனியினர் குறிவைத்து நகர்ந்ததும், இங்கு ஒரு கோட்டையை நிறுவியதோடு, துறைமுகத்தையும் உருவாக்கி அதன்மூலம் தங்கள் வணிகத்தைப் பெருக்கியதும் நிகழ்ந்தது.

    ஆக, சென்னப்பட்டணம் மற்றும் மதராசப்பட்டணம் என்பது ஆங்கிலேயர்கள் காலத்திற்கும் முந்தையது என்பது இவ்வகை நிரூபணங்களோடு உறுதிப்படுத்தப்படுகிறது.

    சென்னைக்கு இன்று வயது 373 (2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் நாள்) என்று கொண்டாடப்படுகிறது.

    இதனையும் தாண்டி சென்னைக்கு வயது அதிகம் என்றாலும், சென்னப்பட்டணம், மதராசப்பட்டணம் ஆகியவற்றோடு, சுற்றிலுமுள்ள திருவொற்றியூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பெரம்பூர், புரசைவாக்கம் என்று சுற்றுப்புறங்களில் சிதறிக்கிடந்த அனைத்து கிராமங்களையும் ஒருங்கிணைத்து, இதனை ஒரே ‘சென்னப்பட்டண’மாக்கி இன்று இந்தியத் திருநாட்டின் முக்கிய நான்கு நகரங்களில் ஒன்றாக வளர்த்துவிட்ட பெருமையை அடைந்த காரணத்தால், அதற்கு வயது 373 என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தப் பெருமையின் முக்கிய காரணகர்த்தாவாக விளங்குவது ஆங்கிலேயர்கள் மட்டுமே. நமது நாட்டைச் சுரண்டியவர்களாக அவர்கள் இருந்தபோதிலும், இந்திய மக்களை அடிமைகளாக்கி ஆட்சி செய்தபோதிலும், வெள்ளையர்-கறுப்பர் என்ற பாகுபாட்டினை உருவாக்கி, வளர்த்துவிட்ட போதிலும், நம்மவர்களைக் கொத்தடிமை களாகப் பல தேசத்திற்கு அவர்கள் கடத்திவிட்டிருந்த போதிலும், சென்னை மாநகரை உருவாக்கிய மிகப்பெரிய சேவையை அவர்கள் செய்துள்ளனர்.

    அதற்காக நம் சென்னப்பட்டணம் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

    இதற்காகவே இன்னும் நகரின் பல்வேறு தெருக்களும், வீதிகளும் அவர்களின் பெயர்களைத் தாங்கியே அழைக்கப்பட்டு வருகின்றன.

    அவர்களின் சிலைகள் இன்றும் நகரின் பல்வேறு முக்கிய இடங்களிலும் வீற்றிருந்து நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் கட்டிய கோட்டைகளும், கட்டிடங்களும் இன்னமும் தங்கள் பழமையை அப்படியே நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன.

    இதையெல்லாம் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயம், இந்தியாவின் அனைத்துப் பெருநகர மக்களையும் விட, நம் சென்னை நகர மக்கள்தான் பிரிட்டீஷாரின் தாய்மொழியான ஆங்கில மொழிக்கு அதிக கௌரவம் அளித்து வருகின்றனர்.

    தற்போதும். தங்களின் தாய்மொழியான தமிழ் மொழியைக்கூட வளப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், மறக்காமல் ஆங்கிலேயர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் பேச்சில் தமிழோடு ஆங்கிலத்தையும் சரளமாகக் கலந்து பேசி வருகின்றனர்.

    (நன்றிக் கடனுக்காக இவ்வாறு மொழியையும் காவு கொடுக்க வேண்டுமா என்பதை நம்மவர்கள் இனிமேலாவது சிந்தித்தால் நல்லது)

    2 ஆங்கிலேயர் வருகைக்குப் பின்

    ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வணிகம் செய்வதற்காக வருவதற்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே போர்ச்சுக்கீசியர்கள் இங்கு தங்கள் வணிகத்தைத் தொடங்கி இருந்தனர்.

    அன்றைய காலக்கட்டத்தில் போர்ச்சுக்கீசியர்களும், டச்சு நாட்டவர்களும் பிரிட்டீஷாருடன் சமபலத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக ஐரோப்பிய நாடுகளான

    Enjoying the preview?
    Page 1 of 1