Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suriyakantham
Suriyakantham
Suriyakantham
Ebook651 pages4 hours

Suriyakantham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாயை இழந்து தந்தையை பிரிந்து, மாமா வீட்டிற்கு செல்லும் தமயந்திக்கு நேர்ந்தது என்ன? பழைய வாழ்க்கையை மறந்து ஆடம்பர மோகத்தில் திளைக்கும் தியாகராஜன் தன் நிலைக்கு திரும்பினானா? படிப்பறிவில்லாத காந்திமதி அனைத்து பெண்களுக்காக சூரிய காந்தத்தில் நடத்திய அற்புதத்தை வாசிக்கலாம்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580155608537
Suriyakantham

Read more from Lakshmi

Related to Suriyakantham

Related ebooks

Reviews for Suriyakantham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suriyakantham - Lakshmi

    http://www.pustaka.co.in

    சூரியகாந்தம்

    Suriyakantham

    Author:

    லட்சுமி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    1

    இருபது வருஷங்களுக்கு அப்பால் தனக்கு வரப்போகும் பெரும் கீர்த்தியை முன்கூட்டியே அறிந்து கொண்டிருந்தால் ஒரு சமயம் அன்று சூரியகாந்தம் மிகவும் உற்சாகத்துடன் விளங்கி இருக்குமோ என்னவோ? ஆனால், வழக்கம் போல் இரவு எட்டு மணி ஆவதற்குள் கிராமத்தின் நடுநாயகமாக இருந்த மேலத்தெருவில் ஜன சந்தடி அடங்கிக் காணப்பட்டது மார்கழி மாத ஊதக் காற்றிற்கும் பனிக்கும் பயந்தவர்கள் போல் தெரு மக்கள், அஸ்தமிக்கு முன்பே தங்கள் இரவு போஜனத்தை முடித்துக்கொண்டு கதவை உள்புறம் அடைத்துக்கொண்டு உறங்கப் போய்விட்டனர். அவர்களுடன் கிராமமும் கூட உறங்கச் சென்று விட்டதனால், மெல்ல ஆடி அசைந்து கொண்டு ஒரு வழியாக ஊரை அடைந்த அந்த மாட்டு வண்டி தெரு முனையை அடையும் பொழுது, அதனை வரவேற்க மினுக்கென்று மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்குக் கம்பமும், அதனடியே சுருண்டு படுத்துக்கிடந்த தெரு நாய்களில் ஒன்றுமேதான் இருந்தன.

    கிராமப் பஞ்சாயத்தாரின் கைங்கரியத்தின் அத்தாக்ஷியாகப் பல வருஷங்களாக நின்று கொண்டிருந்த கல்தூணின் உச்சியில் மங்கலாக எரிந்து கொண்டிந்த மண்ணெண்ணெய் விளக்கு எந்த நிமிஷமும் அணைந்து விடத் தயார் என பயமுறுத்திக் கொண்டிருந்தது. கிராமமே வறுமையிலும் பஞ்சத்திலும் வாடிக்கிடக்கையில் தெருவில் திரியும் நாய்க்கு உணவுக்கு வழி ஏது? ஆகவே, சோர்வும் பட்டினியும் குளிரும் தாளாது உடலைச் சுருட்டிக்கொண்டு விளக்குக் கம்பத்தை அணைத்தவாறு படுத்துக் கிடந்தது அந்த நாய். என்னதான் பட்டினி என்றாலும் பல நாளையப் பழக்கம் என்பது பகுத்தறிவற்ற மிருகத்தைக்கூட விட்டபாடில்லை போலும். எதற்காக, என்னத்திற்காக யாருக்காகச் செய்கிறோம் என்ற எவ்வித முகாந்திரமுமின்றி சுருட்டிப் படுத்துக் கிடந்த நாய் ஒரே துள்ளலில் எழுந்து நிமிர்ந்து நின்றது. உடலை ஒருமுறை சிலிர்த்துக் கொண்டு மிகவும் ஆக்ரோஷத்துடன் தெருவிற்குள்ளே மெள்ளப் பிரவேசித்துக் கொண்டிருந்த அந்த மாட்டு வண்டியைப் பார்த்து ‘லொள்’ ‘லொள்’ எனக் குரைத்து இரவின் நிசப்தத்தைப் பயங்கரப்படுத்திய வண்ணம் வரவேற்றது.

    ***

    வண்டிக்குள் சாக்கு விரிப்பின் மீது குளிருக்கு ஒண்டியபடி படுத்துக் கிடந்த தமயந்தி தூக்கத்தினின்று திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். திக்குத் தெரியாத காட்டில் திரிந்து கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு சிங்கம் எதிர்பட்டு கோரமாக கர்ஜிப்பது போன்று அவளுக்கு அது சமயம் அந்த மெலிந்த நாயின் குரைப்பு மிகமிகப் பயங்கரமாகத் தோன்றவே, நடுங்கிக்கொண்டு தனது கரங்களால் சிவானந்தத்தின் சட்டையைப் பற்றிக் கொண்டாள்.

    தெரு நாய் குலைக்குது. அதுக்கு இத்தனை பயமா? படுத்துக்கோ! என்று நாயின் குரைப்பிற்கு எதிரொலி போல் சிவானந்தம் அந்தச் சிறுமியிடம் எரிந்து விழுந்தார்.

    முகத்தின் பெரும் பகுதியை வியாபித்து நின்ற நரைத்துப்போன அவரது கோர மீசையையும், கோபத்தில் சிவந்து விளங்கிய அவரது கருணையற்ற இருகொடுங் கண்களையும் இருட்டிலே பார்க்க முடியாவிடினும் அவைகளை நினைத்த மாத்திரம் அந்தச் சிறுமியின் உடல் பயத்தினால் சில்லிட்டுப் போயிற்று. அவர் சட்டை மீது வைத்த கரத்தை சட்டென மடக்கிக் கொண்டு, சிறிது நகர்ந்து சாய்ந்தவாறு உட்கார்ந்து கொண்டாள்.

    தெரு நாய் குரைப்பதை நிறுத்தவில்லை. வண்டியைப் பின் தொடர்ந்து வேகமாக ஓடி வந்த அது. வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் பாய்ந்து பாய்ந்து ஓடி உக்கிரமாகக் குரைத்த வண்ணம் இருந்தது. தெருவின் முன்னே பரவிக் கிடந்த இருட்டும், தனிமையும், நாயின் குரைப்பும் தமயந்தியின் கிலியை இன்னும் அதிகப்படுத்தவே அவளது இருதயம் நின்றுவிடும் போல் மிகவும் துரிதமாக அடித்துக்கொண்டது. விவரிக்க முடியாத ஒரு துக்கம் அவளது நெஞ்சைப் பிடித்துக் கொண்டது. நித்திரை செய்து கொண்டிருக்கையில் எத்தனையோ முறைகள் அவள் திடீரென்று பயங்கரக் கனவினின்று விழித்துக்கொண்டு, ‘அம்மா’ என அலறிய படி அருகில் படுத்திருக்கும் தாயின் அருகில் ஓடிக் கட்டிக் கொண்டிருக்கிறாள். அப்பொழுதெல்லாம் அவளது தாய் மிருதுவாக அவளை அணைத்துக்கொண்டு, பயப்படாதே, கண்ணு! ஒண்ணுமில்லேம்மா! நான் கிட்டதானே இருக்கிறேன்! என்று தேறுதல் கூறுவது வழக்கம். அதே போல் இன்றும் அவளுக்கு பயத்தில், ‘அம்மா!’ என்று அலறி, சத்தம் போட வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அருகில் அம்மாதான் இல்லையே! ஆமாம், அம்மா அவள் எங்கே போய் விட்டாள். அவளது இளம் உள்ளத்தில் ஒரே கணத்தில் பலவித நினைவுகள் தோன்றி அவளது துயரத்தையும் குழப்பத்தையும் அதிகப்படுத்தின.

    பல தினங்களுக்கு முன்பு ஒரு நாள் தமயந்திக்குத் திடீரென்று காய்ச்சல் அடிக்கத் துவங்கியது. நோயின் உபாதையினால் அவள் தாயை விட்டு ஒருகணமும் பிரிய மறுத்து அழுது பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள். அவளது தாயும் அன்று ஒரு நாள் இரவு முழுவதும் சிறிது கூடத் தூங்காது குழந்தையை மடி மீது படுக்க வைத்துக்கொண்டு குழந்தை உபாதையினால் அழுத போதெல்லாம் தேறுதல் கூறிக் கொண்டிருந்தாள். ஆனால், அடுத்த நாள் முழுவதும் தாயார் குழந்தையின் அருகில் வரவேயில்லை. ரேழிக்கு அப்பாலிருந்த சாமான்கள் வைக்கும் அறையில் கிழிந்த பாய் ஒன்றின் மீது முனகிக்கொண்டு அவளது தாயார் படுத்துக் கிடந்தாள். அடிக்கொரு தடவை அறைக்குள்ளே போவதும், வெளியே வருவதும், பிறகு ஒன்றாகக் கூடி ரகஸ்யமாக ஏதோ பேசுவதுமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பெண்கள், ரேழித் திண்ணை மீது ஓரமாகப் படுத்துக் கிடந்த தமயந்தி, அம்மா! அம்மா! என்று அழைத்து அழுவதைச் சிறிதும் பொருட்படுத்தவேயில்லை.

    காலையிலிருந்து தாய் தன் அருகே ஒருமுறைகூட வரவில்லை என்ற தாபத்தை அந்தச் சிறு குழந்தையினால் தாளக்கூடவில்லை. ஆகவே, அவள் யாரும் காணாத சமயம் தொப்பென திண்ணையிலிருந்து குதித்து, அறைக்குள்ளே ஓடிச் சென்று அம்மா என்று அலறியபடி படுத்துக் கிடந்த தாயைக் கட்டிக் கொண்டு விட்டாள்.

    அழாதே, கண்ணு! என்று ஹீனஸ்வரத்தில் முனகிய தாய் அவளைத் தனது கரங்களை நீட்டி தழுவிக் கொள்ளுமுன் அதிலிருந்த வயோதிக ஸ்திரீ ஒருத்தி பலவந்தமாக தயந்தியை இழுத்துத் தூக்கி எடுத்துக் கொண்டு, அவ உசிருக்கு மன்றாடறச்சே நீ ஒண்ணு வந்து கலாட்டா பண்ணறியே! அழுது கிழுது ரகளை செய்தியோ, தெரியுமா? சும்மா இங்கே படுத்துக் கிடக்க என்ன கொள்ளை என்று உறுமி விட்டு, அவளை மீண்டும் திண்ணை மீது கொண்டுவந்து கிடத்தினாள். ‘அம்மா!’ என்று வீரிட்டு அலற வாய் திறந்த தமயந்தி, அந்த ஸ்திரியின் முகத்திலே பரந்து நின்ற கடுமையைச் கண்டு நடுங்கிப் போய் தலையை அப்பால் திருப்பிக் கொண்டு விக்கி விக்கி அழுதபடியே தூங்கி விட்டாள்.

    அன்றிரவு திடீரென்று தூக்கத்தினின்று விழித்துக் கொண்டு அவள் எழுந்து உட்கார்ந்த பொழுது, தனது தாய் தன் தலையை மிருதுவாகத் தடவுவதை உணர்ந்தாள். சரி! இப்ப என்ன வந்திடுச்சு. அழுவ ஆரம்பிச்சுட்டே? தூங்கின குழந்தையை ஏன் எழுப்பினாய்? அது வேறே இப்ப கத்தி ஊளையிடணுமா? நேரமாகுது, இப்ப வண்டியில் ஏறினாத்தானே விடியறதுக்குள்ளவாவது ஆஸ்பத்திரி போய்ச் சேரலாம் என்று தமயந்தியை மிரட்டிய அந்த வயோதிக ஸ்திரீ அதட்டிப் பேசினாள்.

    ஐயோ, அத்தை! நீங்கதான் என் கண்ணுமணியைக் கவனிச்சுக்கணும் என்று திணறிய அவள் தாய், குழந்தையின் கரங்களை எடுத்து அன்புடன் தனது கன்னங்களின் மீது அணைத்துக் கொண்டாள்.

    அவளது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் தாரை தமயந்தியின் கரங்களின் மீது சூடாகப் பாய்ந்து ஓடியது. என்னத்திற்காக அவளது தாய் அப்படி விம்மி அழுகிறாள்? அவள் எங்கே செல்கிறாள்? தமயந்திக்கு ஒன்றுமே விளங்கவில்லை. தாயின் துயரம் அவளது இளம் உள்ளத்தை மிக்க வேதனை செய்யவே. அவளும் கூடவே ‘ஹோ’வென்று ஓலமிடத் துவங்கிவிட்டாள்.

    இதுக்குத்தானே சொன்னேன்? நீ கேட்கலை. இப்ப இந்தப் பொண்ணை சமாதானப்படுத்தித் தொலைக்கணும். இந்தாப்பா வடிவேலு! நீ என்ன சிலையாட்டமா ஒரேயடியா சமஞ்சு போய் நிக்கறே! இந்தக் குட்டியைக் கொஞ்சம் சமாதானம் செய் என்று கத்தி உத்தரவிட்ட அந்த வயோதிக ஸ்திரீ, தமயந்தியின் தாயின் பக்கம் திரும்பி, ஏ தில்லைநாயகி, இது என்ன இது? இப்படி அழுவறது நல்லாவேயில்லை. கிளம்பு! என அவளது தோள்களைப்பற்றி வாயிற்புறம் அழைத்துச் சென்றாள். விம்மியழுது கொண்டு தள்ளாடியபடி வாயிலைக் கடந்து வெளியே இருட்டில் மறைந்த தாயின் பின்னால் ஓட வேண்டும் போல் ஆத்திரமும் துக்கமுமாக இருந்தது தமயந்திக்கு. அவள் தந்தையின் ஆதரவான அணைப்பு அவள் உள்ளத்திற்கு இதமாக இருந்தாலும், தாயின் பிரிவை அவளால் தாள முடியவில்லை. அப்பா! அம்மா என்னை விட்டுட்டு எங்கே போறா? என துக்கத்துடன் திணறியபடி கேட்டாள்.

    துண்டினால் கண்களைத் துடைத்துக்கொண்டே வடிவேலு கம்மிய குரலில், ஊருக்குப் போறா. நாளைக்கு வந்து விடுவா என்றான்.

    ஊருக்கு என்னத்துக்குப் போறா! என்று விடாப்பிடியாகக் கேட்டாள் தமயந்தி. அதற்குள் அந்த வயோதிக மாது உள்ளே திரும்பி வந்து விட்டாள். என்ன இது! பெரும் தொல்லையாக இருக்கிறது! கைக்குழந்தை போல ரொம்பக் கொஞ்சுதே இந்தப் பொண்ணு. வடிவேலு, அதை எங்கிட்ட விட்டுட்டு நீ வண்டியோட போய்ட்டு வா... உம் சீக்கிரம்! என அதட்டினாள்.

    முரட்டுத்தனமாகத் தன்னை வாரி எடுத்துக் கொண்ட அந்த மாதின் முகத்தைப் பார்க்கவும் அஞ்சிய தமயந்தி, அழுகையை அடக்கிக் கொண்டாள். எனினும், வெகுநேரம் அவளது துக்கம் சிறு விம்மல்களாக வந்து கொண்டுதானிருந்தது. இதோ பார், நீ நல்ல பெண் அல்லவா! தூங்கு. காலையிலே அம்மா உன்னோட விளையாட ஒரு தம்பிப் பாப்பா எடுத்துக் கொண்டு வருவா என அந்த மூதாட்டி முடிவில் கொஞ்சம் தணிவாகவே பேசினாள். அவளது கட்டளைப்படியே கண்களை மூடிக்கொண்ட தமயந்தி அதற்குப் பிறகு நன்றாகத் தூங்கிவிட்டாள்.

    அடுத்த இரண்டு நாட்கள் அவளது தாயோ தந்தையோ ஒருவரும் திரும்பி வரவில்லை. அவளுக்கு வேளைக்குக்கஞ்சி, மருந்து இவைகளை அந்த வயோதிக ஸ்திரீயேதான் அளித்து வந்தாள்.

    மூன்றாவது நாள் அந்திப்பொழுது தன் வீட்டிற்குள் அக்கம் பக்கத்துப் பெண்களும், புருஷர்களும் வந்து கூடியிருப்பதைக் கண்ட தமயந்திக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. ஊருக்குப் போயிருந்த வடிவேலு வீடு திரும்பி உள்ளே பிரவேசிக்குமுன், கூடத்திலிருந்த பெண்கள் அனைவரும் முகத்தில் அறைந்து கொண்டு ‘ஹோ’வென்று அலறத் தொடங்கிவிட்டனர். மேல் துண்டினால் வாயைப் பொத்திக் கொண்ட வடிவேலு, ஓடிவந்து தமயந்தியைக் கட்டி அணைத்துக் கொண்டான். தன்னைச் சுற்றிலும் பலர் போட்ட கூக்குரலில் திகைப்படைந்து போன அவள், கிலி பிடித்தவளாகத் தகப்பனை இறுக்கக் கட்டிக் கொண்டாள். என் கண்ணே! என்று அரற்றிய வடிவேலு குலுங்கக் குலுங்க அழுது கொண்டிருந்தான். ஒரு வழியாக அன்றைய ஆர்ப்பாட்டங்கள் முடிந்ததும் தமயந்தி தனது சந்தேகத்தை மெல்லத் தந்தையிடம் கேட்டு தெளியும் நிமித்தம், அப்பா! அம்மா ஏன் இன்னும் வரலை? என வினவினாள்.

    அதற்குள் அவள் தந்தை சில நிமிஷங்கள் மௌனமாக இருந்துவிட்டு, பரட்டையாகக் கிடந்த அவளது கூந்தலை கரங்களால் மெல்ல வருடிக் கொண்டு, ஊருக்குப் போயிருக்கிறாள், வருவாள் என்றான்.

    நீ ஏன் அழுகிறாய்? என்று விடாப்பிடியாகக் கேட்டாள் அச்சிறுமி.

    உனக்கு உடம்புக்குக் காய்ச்சல் வந்துடுச்சேன்னு வருத்தப்பட்டேன் என்றான் அவன்.

    எனக்குக் காய்ச்சல் நேத்தே விட்டுப் போச்சுப்பா. தொட்டுப் பாரு என்னை. எனக்கு உடம்பு நல்லாப் போச்சு என குதூகலமாகப் பேசிய குழந்தை, வடிவேலுவின் கரத்தை எடுத்துத் தன் நெற்றி மீது வைத்துக் கொண்டாள். பதிலுக்கு அவன் வறட்சியானதொரு புன்னகை செய்தான்.

    நாலைந்து நாள் ஜுரத்திற்குப் பிறகு தமயந்தி ஒரு திடுக்கிடும் உண்மையை அறிந்து கொண்டாள். முன் போல் அவளால் எழுந்து ஓடியாடி விளையாட முடியாது. வலது கால் இழுத்துக் கொண்டிருந்தது. அதைச் சரிப்படுத்த வடிவேலு பல வைத்தியர்களை அழைத்து வந்து குழந்தையைக் காட்டினான். அவர்கள் கொடுத்த ஏதேதோ மருந்துகளைக் காலில் பூசி வெந்நீர் ஊற்றிச் சிகிச்சை செய்து பார்த்தான். மந்திரங்கள் பூசைகள் எல்லாம் நடந்தன. ஆனால், மாதம் இரண்டு ஆகியும் தமயந்தியினால் முன்போல் நடக்க முடியவில்லை. அவ்வளவுதான்னு விட்டுடு. ஏன் காசைக் கண்டபடி செலவழிக்கறே? இளம் பிள்ளைவாதம் வந்தா காலு இப்படித்தான் உதவாமப் போயிடும்! என்று சலிப்பாகப் பேசினாள் அந்த வயோதிக மாது.

    பெண் குழந்தை நொண்டியாகப் போய்விட்டால்? என்று வடிவேலு பேசி முடிக்குமுன், நொண்டியாகப் போயிட்டாக்க... ன்னு சந்தேகம் வேறேயா? அவ இனி மேல் நொண்டிப் பொண்ணுதான்! அவ வாங்கி வந்த வரம்... எனக் கடுத்துக்கொண்டு பேசினாள் அந்தப் பெண்மணி.

    ‘நொண்டிப் பெண்’ என்ற வார்த்தையைக் கேட்ட தமயந்திக்குத் துக்கம் தாளவில்லை. இனிமேல் அவளால் முன்போல் தட்டாரப் பூச்சிகளைப் பிடிக்க ஓடமுடியாது. வலது காலைத் தாங்கி இழுத்துக்கொண்டு நொண்டித்தான் நடக்க வேண்டும். தெருப்பிள்ளைகள் எல்லோரும் அவளை ‘நொண்டி, நொண்டி’ என்று கேலி செய்வார்கள். சில தினங்களுக்குமுன் தெருவில் பிச்சையெடுத்துச் சென்ற ஒரு நொண்டிப் பிச்சைக்காரன் ஒரு வீட்டிலே பிச்சை இட அழைத்ததைக் கேட்டு வேகமாக அங்கே போகத் திரும்பினான். ஊன்றிக் கொண்டிருந்த தடி நழுவி விழுந்துவிடவே, நொண்டி கால் இடறி கையிலிருந்த சட்டியைப் போட்டுக் கொண்டு தெருவில் விழுந்து விட்டான். அவன் அன்று முழுவதும் எடுத்த பிச்சைச் சோறு மண் மீது சிதறி விழுந்து விட்டது. தெருப் பிள்ளைகள் அதைக் கண்டு, நொண்டி நொண்டி நொடிச்சுக்கோ, வெல்லம் தரேன் கடிச்சிக்கோ! என்று பாடி, கைகொட்டிச் சிரித்து ஆர்ப்பரித்தனர். மண்ணுடன் கலந்து கிடந்த சோற்றை வாரித் திரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் முகத்தை தமயந்தி பார்த்தாள். அவளுக்கு ஏனோ மிகவும் துக்கமாக இருந்தது. ஐயோ பாவம்! என்றாள் தனக்குள்ளே.

    அந்த நொண்டிப் பிச்சைக்காரனைப் போல் தானும் நடக்க முடியாமல் சறுக்கி விழுந்து விட்டால், தெருப் பிள்ளைகள் எவ்வளவு கேலி செய்வார்கள் என எண்ணும் பொழுதே துக்கம் அவள் நெஞ்சைப் பிளந்தது.

    சில தினங்கள் சென்றதும், ஒரு நாள் காலை அவள் வீட்டிற்கு ஒரு புது மனிதர் வந்திருந்தார். அவரது நரைத்த மீசையும், அவரது கடும் முகத்தையும் பார்த்த மாத்திரத்தில் தமயந்திக்கும் கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. ஊரிலிருந்து மாமா வந்திருக்கிறார் உன்னைப் பார்க்க என்று வடிவேலு அவளுக்கு அந்த புது மனிதரை அறிமுகப்படுத்தி வைத்தான்.

    அன்று மாலை அவளைத் தோளில் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த வடிவேலு தயாராக வாயிலில் நின்ற மாட்டு வண்டியில் அவளை ஏற்றி உட்கார வைத்தான். வண்டிக்குள் மாமா மட்டுமே ஏறிக் கொள்வதைக் கவனித்த அவள், அச்சத்துடன் தந்தையின் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

    மாமா உன்னை ஊருக்குக் கூட்டிப் போகிறார் என்று தந்தை கூறியதைக் கேட்ட தமயந்தி, ஐயோ! நான் மாட்டேன். என் போவலை! என்று கிரீச்சிட்டு அலறினாள்.

    தே! சும்மா இரு என அதட்டல் போட்ட மாமாவுக்குக்கூட அவள் அது சமயம் பயப்படவில்லை. வண்டியைப் பின் தொடர்ந்து வந்து வடிவேலு அவளுக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டே வந்தான். ஊரிலே அம்மா இருக்கா. அவளிடம் உன்னை அழைச்சிட்டுப் போகிறார் மாமா. உனக்கு அம்மாவைப் பார்க்கவாணாமா? என்றார்.

    நீயும் வா! என சிறு கைகளை வெளியே நீட்டித் தந்தையை அழைத்த தமயந்தி பிடிவாதம் செய்தாள். வடிவேலு, நீங்க போங்க. குழந்தைகளே அப்படித்தான் என்று அதட்டிய சிவானந்தம், தமயந்தியைத் தன் அருகே முரட்டுத்தனமாக இழுத்துக் கொண்டார்.

    ஊருக்குப் போய் மாமா வீட்டிலே நல்ல பிள்ளையாயிரு. உனக்கு நான் மிட்டாய் நிறைய வாங்கிட்டு வருகிறேன். இந்தா, இதை வச்சுக்கோ எனத் திணறிய தந்தை, சட்டைப் பையிலிருந்த ஒரு வெள்ளி நாணயத்தை எடுத்து அவளது வலது உள்ளங்கையில் வைத்து, அந்தச் சிறு விரல்களைப் பத்திரமாக அதன் மீது மூடினான். முகத்தில் வழிந்திருந்த கண்ணீரை ஆதரவுடன் துண்டினால் துடைத்துக்கொண்டு வடிவேலு நின்றான் உடனேயே தமயந்தி அலறியதையும் பொருட்படுத்தாமல் வண்டி வேகமாகச் சென்றது.

    தந்தை தன்னை விட்டுப் போவதை உணர்ந்த தமயந்தி இன்னும் பலமாகக் கூக்குரலிட்டுக் கத்தினாள். ஆனால் மேலே அழுது புரட்சி செய்வதற்கு முன் என்ன இது ரகளை! அழுதியா தெரியுமா? மென்னியைத் திருகி விடுவேன் என்று பயங்கரமாகக கர்ஜித்த மீசைக்கார மாமா கையை ஓங்கினார். அவர் போட்ட அதட்டலில் திக்பிரமை அடைந்து போன தமயந்தி தனது ஓலத்தை உடனே நிறுத்திக் கொண்டு அந்த அதிர்ச்சியில் தூங்கியும் போனாள்.

    ***

    நாய் குரைக்கும் சப்தத்தில் பயந்துகொண்டு எழுந்ததும் மீண்டும் மாமா போட்ட அதட்டலைக் கேட்டு நடுங்கிவிட்ட தமயந்தி குழப்பத்துடன் வாளாவிருந்தாள். ஊரு வந்திடுச்சா? என்று கேட்டறிந்து கொள்ள வேணும் போல் அவளுக்கு ஆவலாகத்தான் இருந்தது. ஆனாலும் மாமாவின் கடும் முகத்தை எண்ணிப் பயந்தவளாக ஆவலை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளது ஆவலுக்குப் பதில் அளிப்பது போல் வண்டி சட்டென ஒரு வீட்டு வாயிலில் நின்றது.

    வண்டியை விட்டு இறங்கிய சிவானந்தம் தமயந்தியை உள்ளிருந்து வெடுக்கென இழுத்துத் தோள் மீது தூக்கி உட்கார வைத்துக் கொண்டார். வண்டிக்காரனுக்குக் கூலியைக் கொடுத்த பின்பு அவளைச் சுமந்த வண்ணம் ஒரு சிறு ஓட்டு வீட்டின் வாயிற்கதவை வேகமாகத் தட்டினார்.

    மாமா தன்னைக் கீழே இறக்கி விடுமுன் அவசரமாகக் குதித்து அருகே இருக்கும் தன் தாயை ஓடித் தழுவிக் கொள்ள வேண்டுமென்று தமயந்திக்கு ஒரே துடிப்பாக இருந்தது. கூடத்திலே வீற்றிருந்த அம்மாள் சிவானந்தத்தைக் கண்டதும் முகவாயில் கையை வைத்து, இது என்னா இது! என அதிசயத்துடன் வரவேற்றாள். தோளின் மீது சுமந்து கொண்டிருந்த பாரத்தைத் தரை மீது இறக்கி விட்ட சிவானந்தம் அப்பாடா எனப் பெருமூச்சு விட்ட வண்ணம் அருகிலிருந்த பெஞ்சி மீது உட்கார்ந்து கொண்டார்.

    தமயந்திக்கு அந்த அம்மாளின் வெறுப்பு நிறைந்த முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை. தாயை ஓடிப்போய் கட்டிக்கொண்டு அழ வேண்டும் போல் அவளுக்குத் துக்கம் நெஞ்சைப் பிளந்தது. கூடத்திலிருந்து அவர்களை விட்டு அப்பால் ஓட எண்ணிய அவள் எழுந்து ஓர் அடி வைத்து விட்டு, மேலே நடக்க மாட்டாது தொப்பென உட்கார்ந்து விட்டாள். மாமாவுக்குப் பின்னால் ஆவலுடன் ஓடி வந்து நின்று கொண்ட இரண்டு சிறு பெண் குழந்தைகள் அதைக் கண்டதும் ஒருவரையொருவர் கிள்ளி விட்டுக் கொண்டு ‘களுக்’கெனச் சிரித்தார்கள்.

    காலு நொண்டி! அடாடா! வேடிக்கையா இருக்குது பார்! என அவர்கள் மெல்லிய குரலில் பேசிச் சிரித்ததைக் கேட்ட தமயந்திக்கு வெட்கம் தாள முடியவில்லை. அவமானமும் கோபமும் துக்கமும் ஒருங்கே எய்திய அவள், அம்மா என அழைத்து விட்டு அலறி அழத் துவங்கினாள். இவர்கள் எல்லோரும் அவளைப் பரிகசிக்கும்படி விட்டுவிட்டு அவளுடைய அம்மா எங்கே போய் விட்டாள்? தமயந்திக்குத் துயரத்தில் ஒன்றும் புரியவில்லை.

    2

    பெயர் வைப்பதில் பெற்றோர்களில் சிலர் எத்தனை பெரிய பிசகு செய்து விடுகிறார்கள் என்று தமது மனைவியின் பெயரைப் பற்றி எண்ணும் பொழுதெல்லாம் சிவானந்தம் வியப்பது வழக்கம். ஆலகால விஷம் எனப் பெயர் இடப்பட வேண்டிய அந்த மாதுசிரோன் மணிக்கு அமிர்தம் என்று தவறாக அல்லவா அவளது பெற்றோர்கள் பெயரிட்டிருந்தார்கள்? இவ்வாறு சிவானந்தம் பெயர் ஆராய்ச்சியில் அடிக்கடி ஈடுபடக் காரணமாக இருந்தது அவர் அவளுடன் நடத்திய இல்லறத்தின் பலன் என்று துணிவாகக் கூறலாம்.

    பத்து வருஷ காலத்திற்கு முன் சிவானந்தம் என்ற பெயரைக் கேட்டாலே போதும். அழுத பிள்ளையும் வாயை மூடிக் கொள்ளும் என்று சூரியகாந்தத்தில் பிரசித்தம். அப்படிப்பட்ட கீர்த்தி வாய்ந்த மனிதரான அவர் அமிர்தம் அம்மாளிடம் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்ததற்குத் தகுந்த முகாந்திரம் இருக்காது போகவில்லை. தமது இருண்ட வாழ்க்கையிலே புதிய ஒளி உண்டாக்க மிகவும் பாடுபட்டுத் தேடிக்கொண்டு வந்த இரண்டாவது மனைவி அமிர்தம் என்பது அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

    தமது இளைய தாரத்துடன் ஆரம்பித்த தாம்பத்ய வாழ்க்கை எதிர்பார்த்தது போல் அமைதியையும் ஆனந்தத்தையும் சிவானந்தத்திற்குக் கொடுக்கவில்லை என்றால், அதனுடைய பிசகு முழுவதும் அமிர்தத்தையே சாரும் என்று சொல்ல முடியாது. பதினாறு வயது வரை தாங்கொணாத வறுமையில் கழித்துவிட்டிருந்த அவள், நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட சிவானந்தத்தை மணந்து கொள்ள மனம் ஒப்பியதன் ரகஸியம் பிரமாதமானதல்ல.

    சூரியகாந்தத்திலே பெரிய மிராசுதாரர் என்று கூறப்படும் அவரது வாழ்க்கைத் துணைவியாக மாறினால், அதுவரை அனுபவித்து வந்த வறுமையை உதறி எறிந்து விடலாம் என அவள் எண்ணினாள். போதாதற்கு அவளது உறவினர்கள் சிவானந்தத்தைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசிக் கொண்டார்கள், கல் அட்டிகை, காசு மாலை போன்ற விலையுயர்ந்த நகைகளைப் போட்டுக் கொள்ளலாம், தினம் ஒரு வித வர்ணப்பட்டுச் சேலையினால் சிங்காரித்துக் கொள்ளலாம். ராணி போல் உட்கார்ந்த இடத்திலிருந்து அசையாது அதிகாரம் செய்து கொண்டு கௌரவமாக வாழலாம் என்று இன்னும் என்னென்னவோ அவர்கள் சொன்னார்கள். அவளது வருங்காலக் கணவரை அவர்கள் எல்லோரும் அவ்வாறு வருணிக்கவே, மனத்தில் கொஞ்ச நஞ்சம் இருந்த அவ நம்பிக்கையும் ஒழிந்து நிம்மதியாக மிகவும் சந்தோஷத்துடன் சிவானந்தத்திற்கு மாலையிட்டாள்.

    கல்யாணம் முடிந்ததும் புருஷன் வீட்டிற்குள்ளே வந்த பிறகுதான் அமிர்தத்திற்குத் தனது உண்மை நிலை தெரிய ஆரம்பித்தது. பிறந்த வீட்டில் குடிகொண்டிருந்த வறுமையே மேலானது என எண்ணும்படி, அவள் புகுந்த வீட்டின் செல்வ நிலை இருந்தது. எட்டுக் கண் விட்டெறியும் மிராசு என்று கல்யாண தரகர்கள் கூறி வர்ணித்த அவளது கணவனின் குடும்பம் பெரும் கடன் சுமையில் ஆழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.

    கடனெல்லாம் அடைபட்டு ஒரு வழியாக ஏதாவது மிஞ்சினால் ஊருக்கு வடக்கேயிருந்த அரை ஏக்கர் நஞ்சை நிலமும், மேலத் தெருவில் அவர்கள் வசித்த மிகப் பழைய அந்தச் சிறு ஓட்டு வீடுந்தான் என அறிந்து கொண்டாள். இந்த ஏமாற்றத்தைத் தாள மாட்டாத அவளது இளம் உள்ளம் துக்கத்தினால் சுக்கல் துகளாக வெடித்துப் போயிற்று. ‘கல்லட்டிகளையும்’, காசு மாலையையும் கற்பனையில் எண்ணி மயங்கி, வயது மிஞ்சிய ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டோமே! கண்ணைத் திறந்து கொண்டு பாழுங் கிணற்றில் விழுந்து விட்டோமே; என்று தனக்குள்ளே எண்ணி எண்ணி அவள் உருகிப் போய் விட்டாள்.

    வயோதிகரின் இளைய மனைவி என்ற ஒவ்வாத நிலையுடன் வாழ்க்கை அமைந்துவிட்டிருந்தால் ஒருவாறு அவள் துக்கம் ஒரு சமயம் அடங்கிப் போயிருக்கக்கூடும். ஆனால், வீட்டிற்குள் மனைவி என்று அடி எடுத்து வைக்குமுன் மூத்தவள் விட்டுப்போன குழந்தை ஒன்றைத் தன் குழந்தை போல் எடுத்து வளர்க்க வேண்டியிருந்த பொறுப்பும், புருஷனால் திரஸ்கரிக்கப்பட்ட நாத்தியைத் தன்னுடன் கூட வீட்டில் வைத்துப் பராமரிக்க வேண்டிய கடமையும் சேர்ந்து கொள்ளவே, அமிர்தத்தின் துயரம் ஆறாத் துயரமாக அமைந்து விட்டது.

    புருஷன் வீட்டிற்கு வந்த புதிதில் அவள் தனது துக்கத்தை வெளியே காட்டாது மிகவும் அமைதியாக நடந்து கொண்டாள். ஆனால், கணவன் தன்னிடம் அதீதமான அபிமானம் காட்டுகிறார் என அறிந்ததும் அவள் நாளா வட்டத்தில் தனது உண்மை ஸ்வரூபத்தைக் காட்டத் துவங்கி விட்டாள். அவளது உள்ளத்திலே குமுறிக்கொண்டு கிடந்த ஏமாற்றம், சந்தர்ப்பம் வந்த பொழுதெல்லாம் ஆத்திரக் கனலாக வெளியே தலை நீட்ட ஆரம்பித்தது.

    அதன் விளைவாக கணவனுக்கும் மனைவிக்குமிடையே அடிக்கொருதடவை பெரும் தாம்பத்யப் பூசல் எழுந்து வீட்டை இரண்டு படுத்தத் தொடங்கியது. சண்டையின் முடிவில் ஒவ்வொரு தடவையும், என்னைக் கொண்டு வந்து பாழுங் கிணற்றில் தள்ளிவிட்டார்களே, பாவிகள்! என முகத்தில் அறைந்து கொண்டு அலறி அழுது, சிவானந்தம் செய்த தவறைச் சுட்டிக்காட்ட அமிர்தம் தவறியதே இல்லை. சில சமயங்களில் ஓவென்று இரைந்து அழுது சண்டையிட்டு ரகளை செய்வாள். சில சமயங்களில் மிதமிஞ்சிய கோபத்தில் பேசாமடந்தையாகி, நாள் கணக்கில் ஒரே மௌன விரதத்தில் மூழ்கிக் கிடப்பாள். சில சமயங்களில் கத்திக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தவள், திடீரென்று மயங்கிக் கீழே விழுந்து எந்தவிதமான வைத்யோபசாரங்களுக்கும் உணர்வு பெற மறுத்து, படுத்தபடி கட்டைபோல் நாள் முழுவதும் கிடந்து, வீட்டில் உள்ளவர்களைத் திணற அடித்து விடுகிறாள். கண்ணீர், மௌனம், மூர்ச்சை, இதில் எதுவாக இருந்தாலும் அதன் பலன் சிவானந்தத்தைப் பொறுத்தவரை ஒன்றாகத்தான் இருந்தது. வயது வந்த காலத்தில் அவர் செய்திருந்த பயங்கரமான தவறை, அவை ஒவ்வொன்றும் நினைவுறுத்தி அவரது வாழ்க்கையை வேம்பாக்கிக் கொண்டு வந்தன.

    ‘இன்றைய பொழுது எவ்விதக் குழப்பமின்றிப் போனால் போதும்’ என்று தினசரி தமது வாழ்வை எண்ணி நடுநடுங்கும் வரை அமிர்தத்துடன் ஆரம்பித்த இல்வாழ்க்கை அவரை பயங்கொள்ளியாக மாற்றிவிட்டிருந்தது என்றால், அமிர்தம்மாளுக்குக் குடும்பத்திலிருந்த செல்வாக்கைப் பற்றி அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

    சிறுமி தமயந்தியைக் கொண்டு வந்து வீட்டிற்குள் இறக்கியதும் எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைக்குமோ என்ற பெரும் சந்தேகம் அவரது உள்ளத்தை வாட்டிக் கொண்டிருந்தது வாஸ்தவம். அவரது ஐயம் வீண்போகவில்லை என்பதற்கு அடையாளமாக அமிர்தம் விருக்கென எழுந்து நின்றாள். தனது நீண்ட கூந்தலைத் தட்டி முடித்துக்கொண்டு தமயந்தியின் பக்கம் கோபத்துடன் அவள் திரும்பினாள். உடலைச் சிலிர்த்துக் கொண்டு தனது இரைமீது பாயத் தயாராக இருக்கும் பெண் புலியைப் போன்றிருந்தது அவளது அந்தச் செய்கை, உருட்டி விழித்த அவளது இருபெரும் விழிகளிலும் தேங்கி நின்ற கோபக்கனல், எழ இருந்த பெரும் யுத்தத்தின் அபாய அறிவிப்பு போல் தோன்றவே, சிவானந்தம் என்ன கூறுவதென்று விளங்காமல் ஒருமுறை இருமினார்.

    தனது குரலை அமுக்கி விடும் அளவு உச்சஸ்தாயியில் ஓலமிட்டு அழும் அந்தச் சிறுமியிடம், சே! வாயை மூடு! வந்ததும் வராததுமாய் புலம்ப ஆரம்பிச்சிட்டா அல்லவா? வீடு உருப்பட்டால் போல்தான்! உன்னை யார் இப்ப என்ன பண்ணி விட்டாங்க. இப்படி ஊளையிடுகிறே? என்று கத்தினாள் அமிர்தம் ரௌத்திரமாக.

    எதிர்பாராத இந்தத் தாக்குதலில் ஸ்தம்பித்துப் போன தமயந்தி சட்டென்று அழுகையை நிறுத்தி விட்டு அந்தப் பெண்மணியின் முகத்தைப் பயத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். அழுதியோ தெரியுமா? என்று பதிலுக்கு உறுமிய அவள், கணவன் பக்கம் அதே வேகத்துடன் திரும்பினான்.

    அவர் பின்னால் நின்று கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகளும், ஏதோ ஹாஸ்ய மொழிகளைக் கேட்டுவிட்டவர்கள் போல், ஒருவரையொருவர் அர்த்த பாவத்துடன் பார்த்துக்கொண்டு குபீரென்று சிரித்தார்கள்.

    போங்கடி பெண்களா உள்ளே! சாப்பிட்டதும் போய்த் தூங்கித் தொலைக்கிறதுதானே! இங்கே வந்து என்ன சதிர் ஆட்டம்? என்று அவர்கள் மீது எரிந்து விழுந்த அமிர்தம் உடனடியாக அதே மாதிரி எரிச்சல் மேலோங்கிய குரலில், ஆமாம்! இந்தச் சனியனை இழுத்துக்கொண்டு வருவதற்காகவா அப்படி விடியற்காலையிலே விழுந்தடிச்சு ஓடினீங்க? இப்படி ஏதாவது நடக்குமின்னு நான் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். உங்களைச் சொல்லிக் குத்தமென்ன? அந்தப் பாவிகள் என்னைக் கொண்டுவந்து என்று கத்தியவள் முடிக்காது நிறுத்திவிட்டு, உணர்ச்சி வேகத்தில் படீரென்று கையால் தலையில் அடித்துக் கொண்டாள்.

    ஏதோ கொலைக் குற்றம் செய்தவர் போல் சிவானந்தம் மிரண்டு கொண்டு எழுந்து நின்றார். அமிர்தம் ராத்திரி வேளை! கூச்சல் போடாதே! அண்டை அசலார் காதில் கேட்டுவிட்டுப் போகிறது. வடிவேலு ஏதோ முக்கிய காரியம், புறப்பட்டு வரவும் என்று எழுதியிருந்தார். கிளம்பும் பொழுது எனக்கு சத்தியமாக விஷயம் இன்னதென்று தெரியாது. அங்கே போன பிறகுதான் தெரிய வந்தது. அந்த ஊரிலே இருந்தா எத்தனை காலமானாலும் நாலு காசு சம்பாதிக்க முடியாதுன்னு வெளியூருக்குப் புறப்பட வடிவேலு தீர்மானிச்சு, இருந்த தட்டுமுட்டுச் சாமான்களையும் வீட்டையும் விற்று மலாய்க்குப் புறப்படத் திட்டம் போட்டு விட்டார்.

    நாலைந்து நாளிலே புறப்படப் போற ஒரு கோஷ்டியோட அவரும் சேர்ந்துகொள்ளப் போகிறாராம். அவர் அங்கிருந்து திரும்பற வரைக்கும் குழந்தையை நம்பகிட்ட விட்டு வைக்கவே அழைச்சதாகச் சொன்னார். அதுக்கு மேலே நான் முடியாதுன்னு எப்படிச் சொல்கிறது? சரின்னு அழைத்துக்கொண்டு வந்தேன் என்று சிவானந்தம் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்ட அமிர்தம், முன்பின் யோசனை கேட்காமே இந்த நொண்டிப் பிணத்தை நம் தலையில் கட்டிப் போக அவருக்கு எத்தனை துணிச்சல்! என்னால் முடியாதுன்னு சொல்ல உங்களுக்கு ஏன் வாய் வரவில்லையா? தங்கச்சியே போன பிறகு இனிமே நமக்கும் வடிவேலுவுக்கும் என்ன உறவு வச்சு வாழுது? இருக்கிற குழந்தைகளைக் காப்பாத்த இங்கே விதியில்லை. இது வேறே பாக்கி. முடியாதுன்னு சொல்ல தைரியமில்லாம எந்த யோசனையுடன் இதை இழுத்துக்கிட்டு வந்தீங்க? முதல்லே இப்ப அடுத்த வண்டியிலே இதைக் கொண்டு அவ அப்பனிடமே விட்டுட்டு உள்ளே வாங்க. இல்லாட்டாக்க... என்று அகங்காரத்துடன் இரைந்து கத்தினாள். அதிகமாகப் பேசியதன் பயனாக அவளுக்கு மூச்சுத் திணறியது. கணவனை எரித்து விடுகிறவள் போல் ஒருமுறை உற்றுப் பார்த்தாள்.

    நம்ப வீட்டு நிலைமை வடிவேலுக்குத் தெரியாததல்ல. நம்மை விட்டா, குழந்தையை அக்கறையாகப் பார்த்துக்கொள்ள வேறே நெருங்கிய பந்துக்கள் இல்லைன்னு தெரிஞ்சுதான் என்னை ரொம்பக் கேட்டுக் கொண்டார். குழந்தைச் செலவுக்கு என்று தனியா வைத்துக்கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்தி இதைக் கொடுத்தார் என்று முடிவில் உண்மையை மெல்ல எடுத்துவிட்ட சிவானந்தம் இடுப்பில் பெல்டுடன் பத்திரமாகக் கட்டி வைத்திருந்த சிறு துணிப்பையை எடுத்து அவள் முன் விசிறிப் போட்டார்.

    அமிர்தம் பாய்ந்து அதைக் கையில் எடுத்துப் பரபரப்புடன் திறந்தாள். அவளது வாழ்க்கையில் அன்று வரை சேர்ந்தாற் போல் அவ்வளவு ரூபாய் நோட்டுக்களை ஒரே கத்தையாக அவள் கண்டதில்லை. அதை எண்ணி முடிக்கும் முன் உணர்ச்சிவசத்தில் அவளது விரல்கள் நடுங்கின. தனக்கு ஏற்பட்ட குதூகலத்தை வெளியே காட்டிக் கொள்ளாது. இந்த முன்னூறு ரூபா காசுக்கு இந்தப் பொண்ணை வச்சுக் காப்பாத்தற பொறுப்பைத் தலையிலே கட்டி விட்டாராக்கும் அந்த மனுஷர்; ஆமாம், இந்தப் பணம் எத்தனை நாளைக்கு அவ செலவுக்குக் கட்டி வருமாம். என்று சூள் கொட்டினாள்.

    மலேயாவுக்குப் போனதும் மாதா மாதம் குழந்தைச் செலவுக்குன்னு ஏதாச்சும் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார் வடிவேலு. போகும் முன்னாடி இங்கே ஒருமுறை வந்து விட்டுத்தான் போவார். ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தால் நேரிலே வேணுமானா அவரைக் கேட்டுக் கொள்ளலாம். இந்தப் பெண்ணுக்குன்னு நம்ப காசு ஒண்ணும் செலவழியப் போறதில்லை. தங்கச்சி பெண்ணை வச்சுக் காப்பாத்தினான்னு நல்ல பேர் கிடைக்கிறதை ஏன் விடணும்னு அழைச்சிட்டு வந்தேன். உனக்கு இஷ்டமில்லையானா, இந்த நிமிஷம் வேணுமானா கொண்டு திருப்பி விட்டு வந்துடறேன் என்று கொஞ்சம் துணிவாகக் கூறினார் சிவானந்தம் முடிவில்.

    பணப்பையை பத்திரமாகத் தனது இடையில் சொருகிக்கொண்ட அமிர்தத்தின் முகத்தில் ஏற்பட்டிருந்த திருப்தியைக் கண்டு தான் அவருக்கு அவ்வாறு மிடுக்காகப் பேசத் துணிச்சல் ஏற்பட்டது. அதற்கு நேரடியாகப் பதில் கூறாத அவரது தர்ம பத்தினி, ஆமாம், நீங்கள் வழியிலே ஒண்ணும் சாப்பிடலை போலிருக்குது. அப்படின்னா நாழியாகலையா சாப்பிட? என்றாள் கொஞ்சம் தணிந்த குரலில்.

    உள்ளே அடுக்களையிலிருந்து ‘சொய்’ என்று சப்தம் எழுந்தது. அதைத் தொடர்ந்து கல்லின் மீது தோசை காயும் மணம் மெல்லக் காற்றின் ஊடே மிதந்து கூடத்திற்குள் வீசவே, பசியும் சோர்வுமாகத் திகிலுடன் உட்கார்ந்திருந்த தமயந்தி நாவினால் காய்ந்து போன தனது உதடுகளை மெல்லத் தடவிக் கொண்டாள்.

    இன்னிக்கு சனிக்கிழமை அல்லவா? மறந்துவிட்டேன். வெந்நித் தண்ணி தயாராக இருந்தாக்க ஒரு சொம்பு தலையில் கொட்டிக்கிட்டுச் சாப்பிட்டுவிட்டுப் படுக்க வேண்டியதுதான். ஒரே களைப்பாக இருக்கிறது என்று தமக்குள்ளே முணுமுணுத்தார் சிவானந்தம். ஏ மோகனா! உள்ளே போய் அத்தையைக் கேளு, ஐயா குளிக்க வரலாமான்னு! என்று அமிர்தத்தின் அருகே நின்று கொண்டிருந்த பெண்களில் சிறியவளிடம் உத்தரவிட்டார்.

    கூடத்திற்கு அப்பால் தெரிந்த வாசற்படியில் மெல்லிய காலடி ஓசை கேட்பதை உணர்ந்த சிவானந்தம் அந்தப் பக்கம் திரும்பினார். அவரது கேள்விக்குப் பதில் அளிப்பதுபோல் கதவு அருகில் வந்து நின்ற பெண்மணி மெல்லிய குரலில், புழக்கடையில் வெந்நீர்ப் பானையில் தண்ணி போட்டு வச்சிருக்கிறேன். சீக்கிரம் குளிச்சிட்டு வந்திடுங்க அண்ணா என்றாள். அந்தக் குரல் எங்கேயோ கேட்டது போன்று தமயந்திக்கு மிக பழக்கமானதாகத் தோன்றவே, ஆச்சரியத்துடன் அந்தத் திக்கில் திரும்பிப் பார்த்தாள்.

    அவளது விழிகள் வியப்பில் விரிந்தன. ஆனந்தத்தில் அம்மா என்று அழைக்கத் துடித்தது அவளது உள்ளம். ஆனால், என்ன ஏமாற்றம்? விளக்கு வெளிச்சத்தில் கொஞ்சம் முன்புறம் வந்து நின்ற அந்தப் பெண்மணி அவள் தாயைப் போலத்தான் இருந்தாள்; ஆனால் அவளது தாய் அல்ல அவள். ஆமாம், அவளுடைய அருமைத் தாயார் எங்கே? ஊரில் இருப்பதாக அப்பா சொன்னாரே! குழந்தையை வந்து பாராது உள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறாளே? ஏன் இந்தப் பாராமுகம்? தனக்குள்ளே பலவாறு எண்ணிக் குழம்பிய தமயந்திக்குத் துக்கம் நெஞ்சை அடைத்துக்கொள்ள கண்களை நீர் மறைத்துக் கொண்டது. அருகில் நின்று கொண்டிருந்த அமிர்தத்தின் அதட்டலுக்குப் பயந்து அவள் பீறிக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொள்ள முயன்று கொண்டிருந்தாள்.

    கொடியில் கிடந்த துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு ஸ்நானம் செய்யக் கிளம்பிய சிவானந்தம், ஏதோ நினைத்துக் கொண்டவர்போல், ஆமாம் இந்தப் பயல் தியாகு எங்கே, காணவில்ல? என்று மனைவியிடம் கேட்டார்.

    என்னிடம் ஏன் கேட்கறீங்க. உங்க அருமை மகனைப் பத்தி? ஊர் சுத்திக் கழுதை! மத்தியானம் போனவன் இன்னமும் காணவில்லை என்றாள் குரோதமாக அவள்.

    வரட்டும், சொல்றேன். முதுகுத் தோலை இன்னிக்கு உரிச்சு விட்டுடறேன் என்று கோபத்துடன் பல்லைக் கடித்தார் கணவர்.

    நீங்கதான் அண்ணி அவனைப் பக்கத்து டவுனிலிருந்து சாமான்கள் வாங்கி வர அனுப்பினீங்க? ஐந்து மைல் தூரம் அவன் நடந்து போய் வர வேண்டாமா? என்றாள் பதிலுக்குக் கதவருகில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்மணி சாந்தமாக.

    இந்நேரம் பத்துவாட்டி கடையிலிருந்து திரும்பி வந்திருக்கலாம். எங்கேயெல்லாம் சுத்திக்கொண்டு திரியறானோ தெரியலை. அந்தப் பையன் மேலே ஒண்ணு சொன்னா உடனேயே பரிஞ்சு கொண்டு வந்துடறியே, காலமுச்சுடும் வச்சுக் காப்பாத்தறாப் போல பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! என்று பதிலுக்கு அமிர்தம் எரிந்து விழுந்தாள்.

    அது சமயம் வாயிற் கதவு இடிபடும் ஓசை கேட்டதும் அந்தப் பெண்மணி சிவானந்தத்திடம், அண்ணா அவனே இதோ வந்துட்டான்! ஆயுசு நூறு அவனுக்கு என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

    ஒரு சிறு மூட்டையைத் தலைமீது சுமந்து கொண்டு முழங்கால் வரை புழுதி படித்த தோற்றத்துடன் மிகவும் களைப்பாக உள்ளே வந்து நின்ற ஒரு சிறுவன் ஆச்சர்யத்துடன் தமயந்தியைப் பார்த்து விழித்துவிட்டு, மூட்டையை இறக்கிக் கீழே வைத்தான்.

    இத்தனை நேரமா உனக்கு? என்று இரைந்து கேட்டார் சிவானந்தம்.

    மத்தியானம் இரண்டு மணிக்குப் போனவன், சுத்தி விட்டு இப்போ வந்திருக்கிறதைப் பார்! இதென்ன சட்டையிலே கிழிசல்? அடபாவி, புதுச் சட்டையை எங்கேயோ மாட்டிக் கிழிச்சிட்டு வந்திருக்கிறானே! என்று அலறினாள் அமிர்தம்.

    அம்மா! அண்ணா வேஷ்டியைக் கூட கிழிச்சிட்டிருக்குது, பாருங்க இங்கே என்று மோகனா உற்சாகத்துடன் கிறீச்சென்று இடையே கத்தினாள்.

    அப்பா! நேத்துக் கூட அண்ணன் சுவர் மேலே ஏறிக் குதிச்சு வேட்டியைக் கிழிச்சிக்கிட்டு வந்தது என்று சமயத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று எண்ணியது போல் புகார் சொன்னாள் அமிர்தத்தின் பெரிய பெண் விஜயா.

    இது வந்து, சின்னம்மா... என்று அவன் ஏதோ கூறத் துவங்கு முன் அருகில் நெருங்கிய சிவானந்தம் கோபத்துடன், ஊர் சுத்திக் கழுதை! ராஜா மகன்னு மனசிலே எண்ணம். கொஞ்சமாவது உடம்பிலே பயமிருந்தா சொக்காயைக் கிழிப்பியா இப்படி? என்று ஆத்திரத்துடன் கையை ஓங்கி படீர் படீர் என்று அந்தச் சிறுவன் கன்னத்தில் இரண்டு அறைகள் வைத்தார்.

    படீர் என்ற அந்த அறைகளின் ஓசையையும் தொடர்ந்தாற் போல் எழுந்த இல்லேப்பா, இல்லேப்பா! என்று அந்தச் சிறுவன் போட்ட கூக்குரலையும் கேட்ட தமயந்தி பயத்தில் உடல் வியர்க்க, நெஞ்சம் பதற, கிலி பிடித்து மூச்சு விடக்கூட பயந்து அசையாது உட்கார்ந்திருந்தாள்.

    சரிதான், நீங்க போய்க் குளியுங்க. நேரமாகுது! என்று கணவனை அதட்டிய அமிர்தம், அங்கு நிற்கப் பிடிக்காதவள் போல், விஜயா, மோகனா, போய் உள்ளே படுங்க. இன்னமும் முழிச்சிட்டு என்ன கொட்டம்! உங்களுக்கும் ரெண்டு பூசை கேட்குதாக்கும்? என அந்த இரு பெண்களை அதட்டி அப்பால் தன்னுடன் அழைத்துச் சென்றாள்.

    கூடத்திலே தனியே விடப்பட்டிருந்த தமயந்தி, சற்றுத் தூரத்தில் விக்கி விக்கி அழுது கொண்டிருந்த அந்தச் சிறுவனை இரக்கமாக நிமிர்ந்து பார்த்தாள். அவன் அப்படி அழுவதைக் காண ஏனோ அவளுக்குத் தாள முடியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை. அவளுக்கு சிறிது துணிவு ஏற்பட்டது. பையா, அழாதே என்றாள் கனிவு நிறைந்த குரலில் மெதுவாக. அதைக் கேட்ட அந்தச் சிறுவன் திடுக்கிட்டு அழுகையை நிறுத்தி அவளைத் திரும்பிப் பார்த்தான்.

    பெண் குழந்தையாட்டமா அழுறியே? உனக்கு வெட்கமா இல்லியா? என்று கேட்ட தமயந்தி, தன் சிறுபற்கள் வெளியே தெரிய மெல்லச் சிரித்தாள். அதைக் கேட்ட அந்தச் சிறுவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கண்களைத் துடைத்துக் கொண்டு பிரமிப்புடன், ஆமாம் நீ யாரு? என்றான் அவன்.

    நான்தான் தமயந்தி என்று புன்னகை செய்தாள் அந்தச் சிறுமி.

    என் பெயர் உனக்குத் தெரியுமோ? என்று தனது துயரத்தை மறந்து ஆவலுடன் கேட்ட அவன், அவள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

    தெரியாது என்று அவள் தலையை மெல்ல அசைத்தாள். நெற்றி மீது சுருள் சுருளாக வந்து விழுந்த அவளது கூந்தல் அவனது தங்கை மோகனா வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு அழகிய பொம்மையின் முகத்தை அவனுக்கு நினைவுபடுத்தியது. ஆச்சரியத்துடன் அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவன், என் பெயர் தியாகராஜன். இங்கே வீட்டிலே சின்னம்மாவும் அப்பாவும் என்னை தியாகுன்னு கூப்பிடுவாங்க. மோகனாவும், விஜயாவும் அண்ணான்னு கூப்பிடுவாங்க. நீ என்னை என்னன்னு கூப்பிடுவே, சொல் பார்க்கலாம்! என்று சிரித்தான் அவன்.

    ராஜான்னு கூப்பிடுவேன் என்றாள் அவள், தலையை ஆட்டிக் கொண்டு.

    அது சமயம்

    Enjoying the preview?
    Page 1 of 1