Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nayakkar Makkal
Nayakkar Makkal
Nayakkar Makkal
Ebook673 pages4 hours

Nayakkar Makkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்லூரி மாணவியும் அழகியுமான ரேவதி தன் வருங்காலக் கணவனைத் தேர்ந்தெடுக்க அவசரப்பட்டுத் தோற்றுவித்த சில அசம்பாவித நிகழ்ச்சிகள் அவளின் வாழ்வை வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறது. தொடர்ந்து தோல்வியையே சந்தித்த ரேவதி கொடியவளாக மாறுகிறாள். படமெடுத்தாடும் நாகமெனச் சீறுகிறாள். அந்த சீற்றத்தின் காரணமாக பலர் வாழ்வு குலைகிறது. இதனால் ரேவதி தனது தவறுகளை உணர்ந்து கொண்டாளா? இல்லையா? இறுதியில் அவள் எடுத்த முடிவு என்ன? என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580155608819
Nayakkar Makkal

Read more from Lakshmi

Related to Nayakkar Makkal

Related ebooks

Reviews for Nayakkar Makkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nayakkar Makkal - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நாயக்கர் மக்கள்

    Nayakkar Makkal

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    1

    காவிரி நதிக்கரைமீது வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த நாயக்கர் அலுப்பினால் தம்மையும் மீறிப் பெருமூச்செறிந்தார். நினைவு தெரிந்த சுமார் நாற்பது வருஷங்களாக ஏற்பட்டிருந்த விவரிக்க இயலாத ஒரு அலுப்பு அவரைத் திடீரென்று வயோதிகராக்கி விட்டிருந்தது. பலத்ததொரு கல்கோட்டையைப் போன்று, உழைப்பால் வலுவும், மனோதிடத்தால் உரமும் பெற்றிருந்த அவரது வாட்ட சாட்டமான ஆறடி உயர சரீரம் திடீரென்று கூனிக் குறுகிவிட்டதைப் போன்று அவருக்கு மனத்திலே தளர்ச்சி ஏற்பட்டிருந்தது. சிந்தனையிலும் கவலையிலும் ஆழ்ந்து போயிருந்தாலும், பல வருஷங்களில் ஏற்பட்டதொரு பழக்கத்தினால், காவிரி நதியின் இறங்குதுறையருகில் வந்ததும் அவரது கால்கள் மேலே நடக்காது நின்றன.

    நதிக்கு அக்கரையிலே தெரிந்த நீலமலைக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்த அஸ்தமிக்கும் சூரியனின் ஒளியினால் தனது மேனியைப் பொன்னால் போர்வையிட்டுக்கொண்டு கர்வத்துடன் சற்றுமுன் நெளிந்து கொண்டிருந்த மங்கநல்லூர்க் காவிரியின் நீர்ப்பரப்பு திடீரென்று கறுத்துவிட்டதைப் போன்ற பிரமை ஏற்படவே, சிந்தனை கலைந்து தம்மைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்தார். சூரியன் அஸ்தமித்துச் சிறிது நேரந்தான் ஆயிற்று. எனினும், மார்கழி மாதமாகையினால், எங்கும் படிந்து நின்ற பனிப்படலத்தினால் வேகமாக இருள் கவிந்துகொண்டு வந்தது போலிருந்தது.

    நதியின் துறையில் கால் வைத்த நாயக்கர், சில்லென்று கையில் வீசும் ஊதற்காற்றைப் பொருட்படுத்தாது ஜாக்கிரதையாகச் சுமந்து வந்த கண்ணாடிக் குப்பியை மணல் மீது வைத்துவிட்டுத் தண்ணீர் அருகில் சென்றார். கரும்புச்சாற்றையும் வெல்லப்பாகையும் தொட்டுப் பிசுபிசுப்பு ஏறிப்போயிருந்த தமது கரங்களைக் காவிரியின் குளிர்ந்த நீரில் கழுவிக்கொண்டு, யோசனையினால் கொதிப்பேறியிருந்த மூளையைக் குளிர்ச்சிப் படுத்துகிறவர்போல், முகத்தையும் கழுவிக்கொண்டு ஊரை நோக்கிப் புறப்பட்டார்.

    காவிரி நதிக்கரையோடு சிறிது தூரம் நடந்து சென்ற பின் வயல்களுக்கு அப்பால் தெரிந்த ஆலமரங்களைக் கண்டதும், கொல்லை நினைத்துக்கொண்டு பாய்ந்தோடி வரும் ஜட்கா வண்டிக் குதிரைபோல் அவரது கால்கள் துரித நடைபோட்டன.

    ***

    நாயக்கர் மங்க நல்லூரின் எல்லையைச் சமீபித்துக் கொண்டிருந்தபொழுதுதான், பளிச்சென்று முத்துச்சரங்கள் போல் சாலையோரமிருந்த மின்சார விளக்குகள் பற்றிக்கொண்டு பிரகாசமாக எரிய ஆரம்பித்தன. ‘நேரமாயிற்று இன்றைக்கு, ஏன் இப்படி?’ என்று தமக்குள்ளே முணுமுணுத்த அவர் சிறிது தூரம் சென்றதும் ஊரின் எல்லையில் முதலாவதாக அமைந்திருந்த ஓட்டுக் கட்டடத்தின் பக்கம் திரும்பினார். வாசல் வராந்தாவைத் தாண்டி சகஜமாக ரேழிக்குள் வந்து நின்ற அவர், டாக்டர் சுவாமி! என்று ஒரு குரல் கொடுத்தார்.

    யாரது, நாயக்கரா? இப்படி உட்காருங்கள்! ஐயர் தோட்டத்தில் இருக்கிறார், கூப்பிடுகிறேன். என்று சமையல் அறையிலிருந்து பதிலளித்தது ஒரு பெண்மணியின் குரல்.

    டாக்டர் சுவாமிநாத அய்யர் அது சமயம், கொட்டிலில் கட்டியிருந்த பசுங்கன்றுக் குட்டிக்குத் தீனி போடுவதில் முனைந்திருந்தார்.

    இதோ பாருங்கள்! ராமசாமி நாயுடு வந்திருக்கிறார். முற்றத்துப் பெஞ்சியில் உட்காரச் சொல்லிவிட்டு வந்தேன் என்று டாக்டரின் சகதர்மிணி பழக்கடைப் பக்கம் நின்று கீச்சுக் குரலில் கூப்பிட்டாள்.

    யாரது? சிங்கப்பூர் நாயக்கரா? இதோ வந்துவிட்டேன் என்று கூறிய டாக்டர் சுவாமிநாதய்யர் தமது கரத்திலே பிடித்திருந்த அகத்திக் கீரைக் கட்டை, கொட்டிலில் சீறிக்கொண்டு நின்ற பசுவின் பக்கம் வீசியெறிந்துவிட்டு அவசரமாகக் கிணற்றடியில் கரங்களைக் கழுவிக்கொண்டு முற்றத்திற்கு வந்தார்.

    வாருங்கள், நாயக்கரே! பார்த்து நாலைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. எங்கே காணோமே என்று சிறிது முன்புகூட உங்களை நினைத்தேன் என்று மகிழ்ச்சி பொங்க வரவேற்ற அவர் முற்றத்து ஓரத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

    உங்களுக்குத் தேன்பாகு என்றால் ரொம்பப் பிடிக்குமே என்று இன்று வெல்லம் காய்ச்சுகையில் கரும்புத் தேன்பாகு தனியே கொஞ்சம் எடுத்துச் சீசாவில் போட்டுக்கொண்டு வந்தேன். இந்தாருங்கள்! என்று அதுவரை பத்திரமாக முற்றத்துக் குறட்டில் வைத்திருந்த கண்ணாடிக் குப்பியை எடுத்து நாயக்கர் கொடுத்தார்.

    வந்தனம். இன்று இரவு எனக்குப் பலகாரம் சுடச்சுடத் தோசைக்குத் தேன்பாகு விட்டுக்கொண்டு உம்மை நினைத்துக் கொண்டே சாப்பிடுகிறேன். சரிதானே! என்று உற்சாகமாகச் சிரித்தார் டாக்டர்.

    பிறகு இருவரும் இதர விஷயங்களைப் பற்றிச் சம்பாஷித்துக் கொண்டிருந்தனர். முடிவில், நேரமாயிற்று, சுவாமி! வீட்டிற்குப் போகவேண்டும். குழந்தை என் வரவிற்காகக் காத்திருப்பாள். இன்று உங்களைப் பார்க்கவந்த விஷயத்தில் முக்கியமானதை மறந்துவிட்டேன் பேச்சு ஸ்வாரஸ்யத்தில். ஆமாம் சுவாமி! அந்த முத்தம்மாள் எதனால் இறந்து போனாள்? இரண்டு நாள்கூடக் காய்ச்சல் அடிக்கவில்லை. ஆச்சர்யமாக இருக்கிறது, எனக்கு அவளது மரணம். என்று கவலையுடன் ஆரம்பித்தார் நாயக்கர்.

    அவளது மரணத்தைக் குறித்து எனக்கு ஆச்சர்யம் சிறிதுமே இல்லை. கடந்த இரண்டு வருடங்களாக அவளுக்கு இருதயக் கோளாறு இருந்தது. போன தடவை அவளை நீங்கள் இங்கே அழைத்து வந்தபோது நான் சொல்லவில்லையா, அவளது இருதயம் மிகவும் பழுதுபட்டிருக்கிறது, என்று? மிகவும் பலஹீனமாக இருந்த இருதயம் இரண்டு நாள் ஜுரத்தின் அதிர்ச்சியைத் தாளாது நின்றுவிட்டது. அவ்வளவுதான்! என்று சூள்கொட்டினார் டாக்டர்.

    அந்தப் பயல் தங்கவேலன் உருப்படியாக ஒரு வழிக்கு வரும்வரை அவள் இன்னும் சில காலம் ஜீவித்திருக்கலாம், சுவாமி! என்றார் ஆயாசத்துடன் ராமசாமி நாயுடு.

    எனது முப்பது வருட அனுபவத்தில் நான் கண்டது ஒரே ஒரு உண்மைதான், மரணம் என்பது யாருக்காகவும் தாக்ஷண்யப் பட்டுக்கொண்டு தயங்கி நிற்பதில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆகவில்லை, பிள்ளை படித்து முடிக்கவில்லை, அயலூரிலிருந்து பெரிய வைத்தியர் வரப்போகிறார் என்றெல்லாம் ஒருவருக்காக மரணம் காத்து நிற்பதில்லை. அதனால் முத்தம்மாள் விஷயத்தில், நீங்கள் வருத்தமோ, அனுதாபமோபட ஏதுமில்லை என்று வேதாந்தமாகக் கூறிய டாக்டர் தமது வழுக்கைத் தலையைச் செல்லமாகத் தடவிவிட்டுக்கொண்டார்.

    அந்தப் பெண் முத்தம்மாளை நினைக்கையில் என் மனம் அனுதாபப்படுகிறது சுவாமி. அவளுக்கு வாழ்க்கையிலே சிறிதுகூடச் சுகம் இல்லை. இந்தப் பிள்ளை தங்கவேலன் அவளது கடைசிப் பொழுதில்கூடத் தனது குரங்குச் சேஷ்டைகளைக் காட்டி அவளைத் துயரத்துடன் இறக்கும்படி செய்துவிட்டான் என்று கூறிவிட்டு நாயக்கர், ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தார். வானவீதியில் சிதறிக்கிடந்த எண்ணிக்கையற்ற தாரகைகள் போல் வாழ்க்கையும் எண்ணிக்கையற்ற பிரச்சினைகள் கொண்ட ஆழம் நிறைந்த ஒரு கடல் என்று தமக்குள்ளே எண்ணி மெல்லப் பெருமூச்செறிந்தார்.

    தங்கவேலன் இப்போது என்ன செய்கிறான் என்று வினவினார் சுவாமிநாதய்யர்.

    நாயக்கர் அதற்கு நேரிடையாக பதிலளிக்கவில்லை. முத்தம்மாள் பிழைக்க மாட்டாள் என்று நீங்கள் கூறியதும் உடனே சென்று பார்த்தேன் சுவாமி. மேல் சுவாசம் கண்டு திணறிக் கொண்டிருந்த அவள், மகனைக் கடைசியாகப் பார்க்க வேண்டுமென்று விரும்பினாள். தாயாருக்கு உடம்பு சுகமில்லை என்று அறிந்தும் அன்று வேண்டுமென்றே தங்கவேலன் கடைக்குப் போயிருந்தான். ஆளை அனுப்பிக் கூட்டி வரச்சொன்னேன். மரணத்தறுவாயிலிருக்கும் தாயைப் பார்க்க வர மறுத்துவிட்டான், சுவாமி. அவனது கருணையற்ற உள்ளத்தை நினைக்கும்போது என் ரத்தம் கொதிக்கிறது. முத்தம்மாளைப் போன்று மரணத்தறுவாயிலும் பெற்ற பிள்ளையினால் வெறுக்கப்படும் பயங்கர நிலைமை என் விரோதிக்குக்கூட ஏற்படக்கூடாது என்று அன்று நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்.

    இந்தத் தங்கவேலன் இப்படி மாறியதற்குக் காரணம் என்ன, சுவாமி? உங்களுக்குத்தான் அவனது பூர்வோத்தரம் முழுவதும் தெரியுமே! சிறுபிள்ளையாக இருக்கையில் அதட்டினால்கூட நடுங்கிப் போய்விடும் பயந்தாங்கொள்ளியாக இருந்த அவன், திடீரென்று நாலைந்து வருடங்களாக இப்படி ஒரே கல்நெஞ்சனாகவும் நம்பத்தகாத அயோக்யனாகவும் மாற என்ன காரணம் இருக்கும்? என்றார் பெருமூச்சுடன்.

    மனிதர்களின் நடத்தையிலே காணப்படும் விசித்திர மாறுதல்களுக்கு இரண்டு காரணங்கள்தான் வைத்திய சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கின்றன. ஒன்று, சூழ்நிலை; இன்னொன்று பாரம்பரிய குணம். நல்லதொரு சூழ்நிலையில்தான் தங்கவேலன் வளர்க்கப்பட்டான். அவனது வாழ்க்கையில் அதைப்பற்றிக் குறைகூற இடமே இல்லை. அனாதையான அவனுக்கு நீங்கள் தந்தைக்கு மேலாகப் பல வசதிகள் செய்து கொடுத்தீர்கள். ஆகவே, அவனது தற்போதைய நடத்தைக்குக் காரணம் அவனது ரத்தத்தில் ஊறிக்கிடக்கும் பாரம்பரிய குணம். அவனை விட்டுத் தள்ளுங்கள், நாயக்கர்! உமக்கு இருக்கும் இரண்டு குழந்தைகளைப் பற்றிக் கவலைகள் தலைக்குமேல் இருக்கும்பொழுது தங்கவேலனைப் பற்றிய வீண் தொந்தரவு உமக்கு ஏன்?. ஆமாம். மோகனரங்கத்திடமிருந்து கடிதங்கள் வருகின்றனவா? சௌக்கியமாக இருக்கிறானா? என்று டாக்டர் வினவினார்.

    நாலு நாட்களுக்கு முன் கடிதம் வந்தது. சௌக்கியந்தான். அவனைப்பற்றி நினைத்தாலும் என் மனத்தில் கவலைதான், சுவாமி. உங்களை நான் சில சமயம் அதிர்ஷ்டசாலி என்றேதான் கருதுகிறேன். மக்கள் செல்வம் என்று வாய் தித்திக்கக் கூறினால் மட்டும் போதுமா? இந்த மக்களால் தினசரி நாம் அனுபவிக்க நேரும் எல்லையற்ற பிரச்சினைகளை நினைக்கையிலே மக்கள் அற்றவர்களே பெரும் அதிர்ஷ்டசாலிகள் என்று எண்ணத் தோன்றுகிறது என்றார் நாயக்கர் அலுப்புடன்.

    உமக்கு இன்று கருப்புச் சாலையிலே அதிக வேலை போலிருக்கிறது. உடல் களைத்துப் போனதிலே உற்சாகமின்றிச் சோர்வாகப் பேசுகிறீர்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நினைப்பு நமக்கு ஏற்படுவது சகஜந்தானே? கல்யாணமானவனும், பிரம்மச்சாரியும் கடைசி காலத்தில் தம்மை குறித்துப் பச்சாதாபப்படுவார்கள் என்ற ஆங்கிலக் கவியொருவரின் கூற்று எனக்கு ஞாபகம் வருகிறது. நாயக்கருக்கென்ன. அதிர்ஷ்டசாலி! ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும் அருமைக்கு ஒரு பெண்ணும் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சாமிநாதய்யர் வாழ்க்கையில்தான் நிம்மதி, பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய வேண்டுமே பிள்ளையைப் படிக்கவைக்க வேண்டுமே என்று பிரச்சினையற்ற அமைதியான வாழ்வு என்று என்னைப்பற்றி நீங்கள் நினைக்கிறீர்கள். இதுதான் உலகம், நாயக்கரே, நீர் அறியாத புதிய விஷயமுமில்லையே! என்று கூறிவிட்டு உரக்கச் சிரித்தார் டாக்டர்.

    நம்ப பையனுக்கு நான் எவ்வளவோ எடுத்துக் கூறினேன் சுவாமி! ஆசைப்பட்ட எம்.எஸ்ஸி. பட்டம் வாங்கியாச்சு. பட்டணத்து ஹாஸ்டலில் சாப்பிட்டு உடல் இளைத்துப் போச்சு. இரண்டு வருஷம் ஊரோடு எனக்கு ஒத்தாசையாக இரு. உத்தியோகம் ஒண்ணும் வேண்டாம். நீ சம்பாதித்து சாப்பிடும் நிலையில் நான் தற்சமயம் இல்லை. கடவுள் கிருபையால் கடந்த சில வருஷமாகக் கரும்புப் பயிரில் லாபம் ஏற்பட்டு நாம் சுபிக்ஷமாகத்தான் இருக்கிறோம் என்று கரடியாகக் கத்தினேன். சுவாமி! கேட்கவில்லை பையன். நாகேந்திரம் டவுனுக்குக் கிளம்பிவிட்டான். அந்த ஊர் அப்படிப் பெரிய நகரம் என்று சொல்வதற்கில்லை. உபாத்தியாயர் வேலை ஏற்றுக்கொள்ளப் போயிருக்கிறானே. என்ன சம்பளம் என்கிறீர்கள்? நூற்று முப்பது ரூபாய். இவனது சட்டைக்கும் துணிக்குமே அந்த டவுனிலே அது போதாது. நாகேந்திரத்திலேயும் வீடு கிடைக்கிற கஷ்டம் பட்டணத்திற்கு மேலே இருக்கிறது. காலேஜுக்கு அரை மைல் தூரத்திலே சுமாராக இருக்கிற ஒரு வீட்டைப் பிடித்து முன்பணம் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, எழுபது ரூபாய் வாடகை பேசி அமர்த்திவிட்டு வந்தேன். இங்கிருந்து அரிசியும் அனுப்ப ‘பர்மிட்’ வாங்கினேன். மற்ற சாமான்களையும் அப்போதைக்கப்போது அனுப்பினால்தான் சௌகர்யமாக இருக்கும். என் தாயாருக்கு வயதாகிவிட்டது. கிழப்பிராணன். நகரத்திலே போய் ஏதாவது நேர்ந்துவிட்டால் சமயத்திற்கு நான் அருகில் இல்லாமல், இருக்க நேர்ந்து விடும். இல்லாவிட்டாலும் என் தாயார், குழந்தை சித்ராவைத் தனியே விட்டு அப்பால் போவது நியாயமில்லை. ஆகவே பிள்ளைக்குச் சமைத்துப் போட என் ஒன்றுவிட்ட சகோதரியை மிகவும் வேண்டிக்கொண்டு இந்த வருஷத்திற்கு மட்டும் என்று அனுப்பியிருக்கிறேன். அத்தையும் மருமகனுமாக நகரத்தில் குடித்தனம் செய்கிறார்கள் என்று நிறுத்தினார் நாயக்கர்.

    மோகனரங்கன் விஷயத்தில் நீர்பட்ட சிரமமெல்லாம் தகும். நாயக்கரே, நான் முகஸ்துதிக்காகச் சொல்லவில்லை. உங்கள் பிள்ளை ரொம்பவும் புத்திசாலி என்றார் சுவாமிநாதய்யர்.

    கவலையினால் சாம்பிய ராமசாமி நாயுடுவின் வதனத்தில் இலேசானதொரு மகிழ்ச்சிப் புன்னகை அரும்பி மின்னலைப் போல் மறைந்தது. இரண்டு வருஷம் உபாத்தியாயர் வேலை பார்த்துவிட்டுப் பையன் பௌதிக சாஸ்திரத்திலே ஆராய்ச்சியடைய மேல் படிப்புக்கு சீமைக்குப் போக வேண்டுமாம். ரொம்ப ஆசைப்படுகிறான், அதற்குப் பணத்திற்குத்தான் இங்கே வழியில்லை என்றார் ஏக்கத்துடன்.

    உமது சகோதரன் பாலசுந்தரம்தான் மலையாகப் பணத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறாரே, கடனாகக் கொடுத்து உதவமாட்டாரா? என்று வினவினார் டாக்டர்

    அவனை நான் இந்த ஜென்மத்தில் இனி எதற்கும் பணம் கேட்பதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று திடீரென்று ஆவேசத்துடன் நாயக்கர் கூறியதைக்கேட்ட டாக்டர் மேலே பேசாது மௌனமானார்.

    ***

    பதினேழு வருடங்களுக்கு முன்பு நாயக்கர் மனைவி ஆண்டாளம்மாள் பிரசவ ஜன்னி கண்டு இறந்ததும், அவள் நோயாக இருக்கையிலே நாயக்கர் மருந்துக்குப் பணமின்றி தம்பிக்கு எழுதிக் கேட்டதும் அவர் இல்லையென்று நிர்த்தாக்ஷண்யமாக மறுத்தபொழுது நாயக்கர் அடைந்த துயரமும் எல்லாம் மின்னலைப் போன்று மறுவினாடியே அவரது ஞாபகத்திற்கு வரவே, பழைய அந்தத் துன்ப நினைவில் மனம் கசிந்துபோன தமது நண்பரின் மனத்தை வேறு நிலையில் ஆழ்த்தும் எண்ணத்துடன், ஆமாம், சித்ராவுக்குக் கல்யாணம் பற்றி ஏதாவது முயற்சி செய்து வருகிறீர்களா? என்று வினவினார் சுவாமிநாதய்யர்.

    மகளின் பெயரைக் கேட்டதும் மகிழ்ச்சியால் நாயக்கர் வதனம் மறுபடி பிரகாசமடைந்தது. செய்திருக்கிறேன் சுவாமி. கைவசம் ஒரு வரன் இருக்கிறது. அநேகமாக முடித்துவிடும் தறுவாயில் இருக்கிறேன். பையன் எங்களுக்குத் தூர உறவினன்தான். சீமைக்குச் சென்று பட்டம் பெற்றவன். நாகேந்திரத்திலே பெட்ரோல் கம்பெனி ஒன்றில் உத்தியோகம் பார்க்கிறான். ஆஸ்தி ஒன்றும் அதிகமில்லை. இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று நான் தீர்மானித்திருக்கிறேன் என்றார் சிறிது உற்சாகத்துடன்.

    சித்ராவின் கல்யாணம் சமீபத்தில் நிகழப் போகிறது என்று சொல்கிறீர்கள்...? என்றார் டாக்டர் சிரித்தபடி.

    டாக்டர் சுவாமி! இன்னொரு விஷயம். இந்தக் குழந்தை சித்ரா பதினேழு வயசு ஆகியும் பச்சைக் குழந்தை ஸ்பாவம் மாறாமலே இருக்கிறாள். பெண் குழந்தை என்ற நினைப்பே அவளுக்கு ஒரு பொழுதும் இருப்பதில்லை. ஆண் பிள்ளைபோல் மரத்தில் சரசரவென்று ஏறிவிடுகிறாள். முந்தாநாள் பாருங்கள், நம்ப வீட்டுக் கறுப்புநிறக் காளை எத்தனை முரட்டு மாடு! அது அவிழ்த்துக்கொண்டு தோட்டத்தைத் துவம்ஸம் செய்து கொண்டிருந்தது. கட்டையனைக் கூப்பிட்டு அதைப்பிடித்துக் கட்டச் சொல்வதற்குள், சித்ரா ஓடிப்போய் துணிச்சலுடன் விறகுக் கட்டையால் அடித்து அதை இழுத்துக் கொட்டகையில் பிடித்துக் கட்டிவிட்டாள்! அது குழந்தையைப் பார்த்துச் சீறினபோது என் வயிற்றைக் கலக்கிவிட்டது. சொன்னாலும் கேட்பதில்லை, ஆண்பிள்ளை போல் துடுக்கும் துஷ்டத்தனமும் இந்தப் பெண்ணுக்கு ஏன் சுவாமி? என்றார் நாயக்கர்.

    ஆனால் அவரது வார்த்தைகளில் தமது மகளின் துணிச்சலான குணத்திலேயும் குறும்பு விளையாட்டுகளிலேயும் அவர் பெருமைப்படுவது நன்கு தொனித்தது.

    கல்யாணமானதும் பாருங்கள்! நமது சித்ராதானா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மாறிவிடுவாள்! கள்ளங்கபடமற்று வளர்ந்த குழந்தையாதலால்தான் சிறு பிள்ளைத்தனம் வயதாகியும் அவளை விட்டபாடில்லை என்றார் டாக்டர்.

    டாக்டர் வீட்டிற்கு வருமுன் மனத்தை அமுக்கிய பல கவலைகளும் ஒருங்கே விலகிவிட்டதைப் போன்ற ஒரு தெம்பான உணர்ச்சியை அடைந்த நாயக்கர் நிம்மதியான மனத்துடன் விடை பெற்றுக்கொண்டு எழுந்தார்.

    ***

    தெருக்கோடியிலிருந்த அவரது வீட்டையடைந்த பொழுது தாழ்வாரத்தில் அவரது அருமை மகள் சித்ரா முருங்கைக் கீரை ஆய்ந்து கொண்டிருந்தாள்.

    அப்பா, கரும்புப் பாகில் போட்ட தேங்காயும் ஒரு சட்டி கருப்பஞ்சாறும் கண்ணய்யன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனான். அப்பவே ஆலையை விட்டுக் கிளம்பிவிட்டீர்களென்று அவன் சொன்னானே? இத்தனை நேரம் எங்கே போயிருந்தீர்கள், அப்பா? என்று கேட்டாள் ஆவலுடன்.

    இளமையின் துடிப்பும் மகிழ்ச்சியும் பொங்கி நின்ற மகளின் அழகிய வதனத்தை ஆர்வத்துடன் நிமிர்ந்து பார்த்த நாயக்கர், டாக்டர் அய்யாவிடம் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. ஆமாம்! அம்மா எங்கே? சமையலறையில் இருக்காங்களா? என்று கேட்ட வண்ணம் கயிற்றுக் கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டார்.

    மகனின் பேச்சுக்குரலைக் கேட்ட தாயார் கோதையம்மாள் சமையற்கட்டிலிருந்து வெளிப்பட்டாள். மகன் எப்பொழுது வருவான் என்று ஆவலுடன் காத்திருந்தவள் போல் படபடப்புடன், நயினா! அந்தத் தங்கவேலன் பயலை இனி கண்டால் நீ செம்மையாக நாலு பூசை கொடு. நன்றி கெட்ட நாய்ப்பயல்! என்று மூச்சுத் திணறப் பேசிக்கொண்டு ஆத்திரத்துடன் முற்றத்துத் தாழ்வாரத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

    நாயக்கருக்குத் தூக்கிவாரிப் போட்டது. தமது தாயார் அப்படிக் கோபமும் துயரமும் படும்படியாக அந்தத் தங்கவேலன் என்ன செய்தான் என்று ஊகிக்க முடியாதவராய், என்னம்மா நடந்தது! விவரமாகச் சொல்லுங்கள்! என்று வியப்புடன் கேட்டார்.

    சின்னப் பசுவின் கன்னுக்குட்டி அவிழ்த்துக்கொண்டு வாசல் பக்கம் ஓடிவிட்டது. இந்தக் கடைத் தெருவிலேதான் நிமிஷத்திற்கு ஐந்து லாரி ஓடுகிறதே. மோட்டாரில் அகப்பட்டு அது செத்துப் போயிடப் போகுதென்று நான் பின்னால் ஓடினேன். சமயத்துக்கு இங்கே ஒருத்தனும் உதவிக்கு இல்லை. கோயில் கடையண்டை தங்கவேலன் நின்று கொண்டிருந்தான். டே தம்பி, கன்னுக்குட்டியைக் கொஞ்சம் மறிச்சுப் பிடிடான்னு சொன்னேன். அடியாத்தே! அவன் என்னை முன்னைப் பின்னே பார்த்ததில்லைப் போல முறைச்சுப் பார்த்ததைப் பார்க்கணுமே! என்று நீட்டி முழக்கினாள் கிழவி.

    ம்... அப்புறம்! என்று முகத்தைச் சுளித்தபடி உறுமினார் நாயக்கர், சிறிது கோபத்துடன்.

    எனக்குக் கோபம் பத்திக்கொண்டு வந்தது. ‘ஏண்டா காளியிலே போறவனே, முழிக்கிறே? உன் வாயிலே கொழுக்கட்டையா? சொன்னது காதிலே கேட்கல்லையா? செவிடாயிட்டியா நீ!’ அப்படின்னு சத்தம் போட்டேன். அவ்வளவுதான்! அந்தப் பயல் என்னைக் கொன்னு தின்னு விடுகிறவன் போல முறைச்சுப் பார்த்துட்டு, வாயை மூடு கிழவி! அதிகம் பேசினியோ பல்லை உடைச்சிடுவேன் ஜாக்கிரதை! அப்படின்னுட்டான். சுத்தி நின்றவர்கள் என்னைப் பார்த்துக் கொல்லுன்னு சிரிச்சுவிட்டார்கள். நாக்கைப் பிடுங்கிக்கலாமான்னு எனக்கு வெட்கமாப் போய்டுத்து.

    நயினா! அந்த நன்றிகெட்ட பயலுக்கு நீ எத்தனை உதவி பண்ணியிருக்கிறாய்! விசுவாசம் இருந்தா கொஞ்சமாவது யாரைப் பார்த்துப் பேசுகிற வார்த்தை இதுன்னு யோசித்தானா? என்று மூச்சுவிடாது பொரிந்து கொட்டினாள் ஆத்திரம் தாளாமல் கோதையம்மாள்.

    அப்படியா சொன்னான்! என்று கேட்ட நாயக்கரின் முகம் கோபத்தினால் கறுத்தது. இருக்கட்டும் அவனைக் காலையில் பார்த்துக் கொள்கிறேன் என்று கறுவிவிட்டுச் சாப்பிட எழுந்திருந்தார்.

    அன்றிரவு படுக்கையிலே தலைசாய்த்த நாயக்கருக்கு வெகுநேரமாகியும் தூக்கமே வரவில்லை. சினிமாவிலே முன்னால் நடந்த சம்பவம் கதாநாயகனின் மனக்கண்முன், பின்காட்சிகளில் வந்து நிற்பது போல், இருபத்திரண்டு வருஷங்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவமும், தொடர்ந்தாப்போல் நடந்த பல விஷயங்களும் நீண்டதொரு கதைபோல் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி மறைய ஆரம்பித்தன.

    2

    சிங்கப்பூரில் டீக்கடை வைத்துத் தொழில் நடத்திக்கொண்டிருந்த ராமசாமி நாயுடுவுக்குச் சில வருஷங்களில் அத்தொழிலின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடவே, தமிழ்நாட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார். மனைவி ஆண்டாளம்மாளுடனும் இரண்டு வயது மகன் மோகனரங்கத்துடனும் அவ்வூரைவிட்டுப் புறப்பட்ட ராமசாமி நாயுடு தமது சொந்த ஊராகிய கடுவன்குடி கிராமத்திற்கு போகாது முன்பின் தெரியாத மங்கநல்லூர் கிராமத்தில் வந்து குடியேறினார். சிங்கப்பூரிலிருந்து வந்தவராதலினால் கிராமத்து ஜனங்கள் அவரைச் சிங்கப்பூர் நாயக்கர் என்று செல்லப் பெயரிட்டு அழைக்கத் தொடங்கவே, ராமசாமி நாயுடு என்ற பெயர் சிங்கப்பூர் நாயக்கராக மாறிவிட்டது. அத்துடன் மங்கநல்லூரில் நாயக்கர் என்றால் சிங்கப்பூர் ராமசாமி நாயுடுதான் என்ற அளவுக்கு அவர்பெயர் பிரபலமும் அடைந்து விட்டிருந்தது.

    நாயக்கருக்குத் தமது சொந்த கிராமமாகிய கடுவன்குடிக்குப் போக விருப்பமில்லாததற்கும் பல காரணங்கள் இருந்தன. எந்த நினைவுகளை மறக்க அவர் கடுவன்குடியை விட்டுச் சிங்கப்பூருக்கு ஓடினாரோ அந்த பழைய நினைவுகளைத் தூண்டி உள்ளத்திற்கு வேதனையைக் கொடுக்கக்கூடிய தமது பிறந்த கிராமத்திற்குப் போக அஞ்சி, காவிரி நதி பாய்ந்தோடுவதனால் செழிப்பாக ஓங்கி வளர்ந்த கரும்புப் பயிரும் தென்றலுக்கு மெல்லத் தலையசைக்கும் வெற்றிலைக் கொடியும், பசுமை நிறைந்த வயல்களும் கொண்ட மங்கநல்லூரைத் தமது சொந்த ஊராகத் தேர்ந்தெடுத்துத் தங்கிவிட்டார்.

    ஊருக்கு வந்த புதிதில் நாயக்கர் வெறுங்கையுடன்தான் வந்தார். அப்பொழுது அவருக்குச் சொந்தமான நிலங்களோ, வசதியான வீடோ எதுவும் இருக்கவில்லை. வடக்குத் தெருகோடியிலே இருந்த சிறு கூரைவீட்டில் குடியிருந்த அவர் தமது வாழ்க்கைக்குப் பலம்பொருந்திய தமது இரு கரங்களையும் வாட்ட சாட்டமான இரும்புத் தூண் போன்ற தமது உடலையுந்தான் நம்பியிருந்தார். நாயக்கர் மங்கநல்லூர் வந்து வருஷங்கள் இரண்டு ஓடிச்சென்றுவிட்டன. காவிரிக்கு அக்கரையிலிருந்த ராமரெட்டி என்பவருடைய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து கரும்பும் நெல்லும் பயிரிட்டு வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு அப்பொழுது வாழ்க்கையில் திருப்தியும் சந்தோஷமும் நிலவியிருந்தன என்றேதான் சொல்ல வேண்டும்.

    அன்று நாயக்கர் ஊரைவிட்டுப் புறப்படும் பொழுதே மழையை எதிர்பார்த்துத் தயாராகக் கையில் குடையையும் அரிக்கேன் லாந்தர் ஒன்றையும் அக்கரைக்கு எடுத்துச் சென்றிருந்தார். குத்தகைப் பணத்தை நேரிடையாக ராமரெட்டியாரிடம் கொடுத்துவிட்டு, அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்படுவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. சில நாட்களாகப் பெய்த மழையினால் காவிரி எந்த நிமிஷமும் கரையை உடைத்துக்கொண்டு கிராமத்திற்குள் பிரவேசித்துவிடும் போல் கரைபுரள ஓடிக்கொண்டிருந்தது. கோடைக்காலமாக இருந்தால் முரட்டுத் தைரியத்தில் நாயக்கர் வேஷ்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு நதியில் இறங்கி வந்துவிடுவார்! ஆனால் அன்று அவர் பொறுமையுடன் வேறு வழியில்லாமல் மறுகரை சென்றிருந்த பரிசலுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

    மறுகரையிலிருந்து வந்த பரிசலோட்டி அதற்குமேல் அக்கரை செல்லத் தயங்கினான். அமாவாசை இருட்டு! மழையைக் கொட்ட வானம் குமுறிக் கொண்டிருக்குது. தண்ணி கரைபுரண்டு ஓடுது, விடிஞ்ச பிறகுதான் இனிமேலே! என்று மறுத்துவிட்டான் அவன்.

    காவிரியிலோ வெள்ளம்! அக்கரை சென்ற கணவர் இரவு வீடு திரும்பவில்லை என்றால் ஆண்டாளம்மாள் என்ன நினைப்பாள்? கலங்கித் துடித்துப்போய் விடுவாளே என எண்ணிய நாயக்கருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அப்பா உனக்கு நாலு பங்கு கூலி தருகிறேன். எனக்காகக் கடைசி முறையாகப் பரிசலை ஒரு தடவை தள்ளய்யா என்று கெஞ்சாது கெஞ்சி அவனை ஒப்புக்கொள்ளச் செய்தார். ஒரு மைல் தூரம் காவிரியின் நீர்ப்பரப்பைச் சிரமத்துடன் கடந்து வந்த பொழுது பரிசலோட்டியிடம் அவர் எதுவும் பேசவில்லை. நினைவெல்லாம் வீட்டின்மீதே இருந்தது.

    இறங்குதுறையை அடைந்ததும் நாயக்கர் கூலியைக் கொடுத்துவிட்டு அரிக்கேன் லாந்தரை ஏற்றிக்கொண்டார். அதுவரை காத்திருந்ததுபோல் மின்னலும் இடியுமாக உறுமிக்கொண்டிருந்த வானத்தினின்று மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன. மழை மும்முரமாகப் பிடித்துக்கொண்டு கொட்டுவதற்குள் ஊர் போய்ச்சேர வேண்டும் என்ற துடிப்புடன் நாயக்கர் குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு வேகமாக நடந்தார்.

    மழை இல்லாமலிருந்தால் குறுக்கு வழியாக வயல்களில் புகுந்து வரப்பின் ஓரமாகப் பதினைந்து நிமிஷத்தில் வீட்டை அடைந்திருப்பார். ஆனால் அன்று வேறு வழியின்றி அவர் சாலைமீது சுற்றி வளைத்துக்கொண்டு மெல்ல ஊருக்குப் போக வேண்டியிருந்தது. காவிரியின் இறங்கும் துறைக்கு அப்பால் மரங்கள் இரு மருங்கிலும் அடர்ந்து வளர்ந்திருந்த சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்த நாயக்கர் அப்புறமும் இப்புறமும் திரும்பிப் பாராது வேகமாக நடந்து கொண்டிருந்தார். மேற்குத் திருப்பத்திலே அடர்ந்து செழிப்பாக வளர்ந்திருந்த நாவல் மரங்களுக்கு அப்பால் தெரிந்த பொட்டல் பிரதேசந்தான் மங்கநல்லூரின் மயான பூமியாக உபயோகிக்கப்பட்டு வந்தது. பகலிலே சாலையில் நடக்கும் கிராமத்து மக்கள் அந்தத் திக்கைக்கூடத் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். இரவில் என்றாலோ, கேட்க வேண்டாம். மயானத்துப் பூமியினின்னு கிளம்பும் பேய்கள் சாலையோரமாக இருந்த பல ஆலமரங்களிலும், புளிய மரங்களிலும் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு இருக்கின்றனவென்றும், தனியாக இரவில் சென்றால் அடித்து இரத்தத்தைக் குடித்துவிடும் என்றும் நம்பிய அவ்வூர் மக்கள் ஒருவரும் இரவில் தனியே அவ்வழி நடக்கத் துணியமாட்டார்கள்.

    பேய் பிசாசுகளில் நாயக்கருக்கு நம்பிக்கை கிடையாது எனினும், அன்றிரவு தனியே சாலை வழியே நடந்து வந்த அவரது இருதயம் காரணமற்றதொரு பயத்தினால் துடிக்கத்தான் செய்தது! ‘விர்’ என மழையினூடே வந்து வீசிய குளிர்காற்று அவரது கையிலிருந்த லாந்தரை எந்த நிமிஷமும் அணைக்கச் சதி செய்துகொண்டிருந்தது. அதனின்று வீசிய வெளிச்சம் மிகக்குறைவாக இருந்ததனால் அவருக்குப் பாதை சரியாகக் கண்களுக்குப் புலனாகவேயில்லை.

    சுமார் அரை மைல் தூரம்கூட நடந்திருக்கமாட்டார். கொட்டும் மழை திடீரென்று ஓய்ந்து ஒரு நிதானத்திற்கு வந்திருந்தது. கையிலிருந்த விளக்கைத் தூண்டிவிட்டு நாயக்கர், குடையை மடக்கிக்கொண்டு, நடையைத் துரிதப்படுத்தினார். அதேசமயம் காற்றின் சலசலப்பு, இலை அசையும் ஓசை, நடுநடுவே ஒலிக்கும் இடிமுழக்கம், மழையைக் கண்டு குதூகலிப்பது போல் எதிர்ப்புறத்து வயலிலிருந்து கூக்குரலிடும் தவளைகள் செய்த சப்தம் இவ்வளவையும் மீறி அம்மா என்று யாரோ முனகியதைப் போன்ற சப்தம் அவரது காதுகளில் நன்றாகக் கேட்டது! நாயக்கர் ஒரு நிமிஷம் கிலியினால் அசந்து போய்விட்டார். என்ன சப்தம் என்று அவர் ஊன்றிக் கேட்பதற்குள், ஐயோ! அம்மா! என்று மீண்டும் தொடர்ந்தாற்போல் யாரோ முனகும் சப்தம் கேட்கவே, அவரால் மேலே நடந்துசெல்ல முடியவில்லை.

    கையிலிருந்த விளக்கைத் தூக்கி நாலா பக்கமும் பார்த்த அவர் நெஞ்சு பயத்தால் உலர்ந்து போய்விட்டது. கொட்டும் மழையிலே நனைந்து தொப்பலாகிய ஒரு முக்காடிட்ட உருவம் மரத்து வேரின்மீது சாய்ந்துகொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டார். ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட நாயக்கர், யாரது? என்று அதட்டிக் கேட்டார்.

    வழிப்போக்கங்க, சாமி! என்று பதிலளித்தது வேதனையில் தோய்ந்த ஒரு பெண் குரல்.

    கொட்டும் மழையில், அமாவாசை இருட்டில், மயான பூமிக்கருகில் ஒரு பெண்ணுக்கு என்ன வேலை என்று வியப்படைந்த நாயக்கர், அருகில் நெருங்கி, யாரம்மா நீ? மழையில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று வினவினார்.

    பதிலளிக்காத அவ்வுருவம் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றது. தலையை மறைத்துக் கொண்டிருந்த முக்காடு நழுவித் தோளில் விழவே, நாயக்கர் அவ்வுருவத்தை விளக்கு வெளிச்சத்தில் ஊன்றிக் கவனிக்க நேர்ந்தது. இருபது அல்லது இருபத்திரண்டு வயதிற்குட்பட்ட ஒரு இளம்பெண் என்பதை அறிந்த நாயக்கர் இரக்கத்துடன், அம்மா! இரவில் தனியாக ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறாய்? உனக்குப் பயமாக இல்லையா? உன்னுடன் யாரும் துணைக்கு வரவில்லையா? நீ எந்த ஊர்? என்று படபடப்போடு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

    அக்கரையிலிருந்து வந்தேன் என்று சுருக்கமாகப் பதிலளித்த அந்தப் பெண், ஐயோ! என்று முனகிக்கொண்டு மரத்தின்மீது சாய்ந்துக் கொண்டாள். அப்பொழுதுதான் நாயக்கருக்குப் பளிச்சென்று விஷயம் விளங்கியது. அந்தப் பெண் பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்தாள்!

    அம்மா, தனியாக இங்கே இருந்து என்ன செய்வாய்? ஊர் கொஞ்ச தூரத்திலேதான் இருக்கிறது. மெதுவாக நடந்து என்கூட வந்தாயானால் என்று முடிப்பதற்குள், ஊரிலே எனக்கு ஒருத்தரும் தெரிந்தவங்க கிடையாது. நான் எங்கே போவேன்? என்று துக்கத்துடன் அரற்றினாள் அவள்.

    யாரோ அனாதைப் பெண், பிரசவ வேதனையினால் இரவில் நடுவழியில் துடித்துக் கொண்டிருக்கிறாள். உதவி செய்யாது விட்டுச்செல்லுதல் மகாபாவம் என்று தமக்குள்ளே எண்ணி மனம் கசிந்துபோன நாயக்கர், உனக்கு ஒருவரும் இல்லாவிட்டால் குற்றமில்லை. இன்று இரவு என் வீட்டில் வந்து தங்கிக்கொள். பிறகு நாளைக் காலை உன் இஷ்டப்படி செய்! இங்கே தனியே நீ மழையில் உட்கார்ந்திருப்பது மிகவும் தவறு என்றார்.

    காவேரியம்மாளுக்கு என்னை ஏத்துக்கொள்ளப் பிரியமில்லை. என்னைக் காப்பாத்த உங்களை அனுப்பிச்சுட்டா என்று கூறிவிட்டு, விம்மி விம்மி அழுத அந்தப் பெண்ணின் நிலை பரிதாபகரமாக இருந்தது.

    என் வீடு அருகில் இருக்கிறது. கொஞ்சதூரம் சிரமத்தைப் பாராது நடந்தால் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று நாயக்கர் வற்புறுத்தவே, தள்ளாடிக்கொண்டு அவர் பின்னே அந்தப்பெண் நடக்கலானாள்.

    ஊருக்கு எல்லையிலே, ஒதுக்குப்புறமாக இருந்த இடிந்த காளி கோயில் பாழ்மண்டபம் அருகில் வந்ததும் அய்யா. நீங்கள் போங்கள்! நான் பின்னாடி வருகிறேன் என்று சிரமத்துடன் பெருமூச்செறிந்த அந்தப்பெண் மண்டபத்துத் திண்ணையில் உட்கார்ந்து விட்டாள். நாயக்கருக்கு அதுசமயம் ஒரு யோசனை தோன்றியது. அம்மா, சிறிது நேரம் நீ இங்கேயே இரு, வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு விழுந்தடித்துக்கொண்டு சாலையிலே மூச்சுவாங்க ஓடினார், தலையாரி நாகப்பன் வீட்டிற்கு. அவனது மனைவி சோலையம்மாள் மங்கநல்லூர் வட்டாரத்திலே பிரசித்திபெற்ற மருத்துவ ஸ்திரி. சங்கதியைக் கேட்ட சோலையம்மாள் அடுப்புக் காரியத்தை அப்படியே போட்டுவிட்டுத் தலைதெறிக்க நாயக்கருடன் பாழ் மண்டபத்திற்கு ஓடிவந்தாள்.

    ***

    நாயக்கரும் சோலையம்மாளும் வருவதற்குள், அமாவாசையின் அந்தகாரத்திலே பாழ் மண்டபத்தின் புழுதிபடிந்த தரையிலே தங்கவேலன் பிறந்தான். உலகத்திலே தான் அவதரித்த அதிசயத்தை எடுத்துக் கூறுபவன்போல், பலங்கொண்ட மட்டும் ‘குவா, குவா’ என்று ஆத்திரமாகக் கத்திக் கொண்டிருந்தான். பெரிய மகான்கள் என்று கொண்டாடப்பட்ட பல பெரியோர்கள் குடிசையிலும் மாட்டுக் கொட்டிலிலுமே அவதரித்ததாகக் கேட்கவில்லையா? யார் கண்டது! இந்தக் குழந்தை பிற்காலத்தில் ஒரு பெரிய பிரபல மனிதனாக ஏன் மாறக்கூடாது என்றுதான் அதுசமயம் நாயக்கர் தமது மனத்திற்குள்ளே தங்கவேலனின் திவ்ய அவதாரத்தைப் பற்றி எண்ணிக் கொண்டார்.

    மறுநாள் காலை செய்தி காட்டுத்தீபோல் ஊர் முழுவதும் பரவிவிடவே, பாழ் மண்டபத்தில் குழந்தைக்குத் தாயான அந்த அனாதைப் பெண்ணை வேடிக்கை பார்க்க ஜனங்கள் வந்துபோய்க் கொண்டிருந்தனர். ஒரு பெண்ணின் துர்பாக்கிய நிலையைப் பொருட்காட்சியைக் கண்டு ரசிப்பதுபோல் கிராமத்து மக்கள் கண்டு மகிழ்வதைக் காணப்பொறாத நாயக்கர், மனைவி ஆண்டாளம்மாளின் யோசனைப்படி, அந்தப் பெண்ணை அன்று அந்திப்பொழுதில் குழந்தையுடன் ஒரு வண்டியிலேற்றித் தமது வீட்டின் புழக்கடைத் தாழ்வாரத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்.

    அந்த அனாதைப் பெண்ணின் பெயர் முத்தம்மாள். வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் ஒரு மனிதன் அவளை வஞ்சித்து விட்டான். தகப்பனுக்கும் அண்ணனுக்கும் விஷயம் தெரியுமுன்பே வீட்டைவிட்டு ஓடிய அவள் அனாதையாகி, தெருவிலே அலைந்துகொண்டு பசியும், சோர்வும் தாளாமல் மங்கநல்லூருக்கு வேலை தேடிப் பிழைக்க அன்றுதான் அக்கரையிலிருந்து வந்தாள் என்றும், திடீரென்று ஏற்பட்ட மனக்கசப்பால் காவிரியிலே குதித்துத் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்துச் சஞ்சலத்துடன் மரத்தடியிலே உட்கார்ந்திருந்தாள் என்றும் மெல்ல விஷயங்களை ஆண்டாள் அம்மாள் வாயிலாக அறிந்த நாயக்கருக்கு முத்தம்மாளின்மீது அருவருப்புக்குப் பதில் அனுதாபம் ஏற்பட்டது.

    பிரசவித்த நான்காவது நாள் முத்தம்மாளுக்கு ஜன்னி கண்டு விட்டது. அப்பொழுதுதான் நாயக்கருக்கு முதன்முதலாக ஊருக்குப் புதிதாக வந்து குடியேறியிருந்த டாக்டர் சுவாமிநாதய்யருடன் பரிச்சயம் ஏற்பட்டது.

    ஊரிலே வந்த புதிதில் சுவாமிநாதய்யருக்கு முரட்டுப் பேர்வழி என்ற பெயர் ஏற்பட்டிருந்தது. இஷ்டமிருந்தால் டாக்டர் நன்றாகக் கவனிப்பார். இல்லாவிடில் எத்தனை பணம் கொடுத்தாலும் அசட்டையாக முகங்கொடுத்துப் பேசமாட்டார். அவர் ஒரு தினுசான கிறுக்குப் பேர்வழி என்று கிராம ஜனங்கள் அவருக்குக் கிறுக்குப் பட்டம் அளித்திருந்தார்கள்.

    ஆனால், நாயக்கரிடம் சுவாமிநாதய்யர் தமது விசித்திர நடத்தையைக் காட்டவில்லை. அதற்குப் பதில் மிகவும் பிரியமாக நடந்துகொண்டு கேட்டதற்கு அலுக்காமல் பதிலளித்து முத்தம்மாளை சிரத்தையுடன் கவனித்துச் சிகிச்சை செய்தார்.

    நாயக்கருக்கு சுவாமிநாதய்யரை மிகவும் பிடித்துப் போகவே வைத்திய முடிவில் அவரை அணுகி, ஸ்வாமி! உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டும்? நான் ஏழை, சுமாராகப் பார்த்து ‘பில்’ போடுங்கள்! என்று விநயமாகக் கேட்டுக்கொண்டார்.

    அந்தப் பெண் யார்? உங்களுக்கு என்ன உறவு? என்று வினவினார் டாக்டர். அதற்கு நேரிடையாகப் பதிலளிக்காத நாயக்கர்,

    யாரோ அனாதைப் பெண், சுவாமி. யாரோ நம்மைப்போல் ஒரு மனிதப் பிறவி என்பதைத் தவிர எனக்கு அவள் உறவினள் அல்ல! ஏன் கேட்கிறீர்கள்? என்றார் நாயக்கர் வியப்புடன்.

    நீங்கள் எதற்காக உதவி செய்ய முன் வந்தீர்கள்? என்று விடாப்பிடியாக வினவினார் டாக்டர்.

    எதற்காகவா ஸ்வாமி! யாரோ அனாதை, பாவம் என்ற தர்மத்திற்காக உதவி செய்கிறேன். அவ்வளவுதான் என்றார் நாயக்கர்.

    அப்படியானால் என் சிகிச்சைக்கு ஒன்றும் பணம் தேவையில்லை என்று கூறிய டாக்டர் மெல்லச் சிரித்தார்.

    இல்லை, ஸ்வாமி! எனக்காக நீங்கள் சிரமப்பட்டீர்கள். உமது ஊழியத்திற்கு ஒன்றும் கொடுக்காவிட்டால் என்று நாயக்கர் இழுத்தாற்போல் கூறி முடிப்பதற்குள், நாயக்கரே, முத்தம்மாளுக்குச் செய்யும் உதவியால் ஏற்படும் புண்ணியத்தின் ஒரு பகுதியாவது என்னைச் சேரட்டுமே; முத்தம்மாளுக்கு நான் தர்ம வைத்தியம் செய்தேனென்று வைத்துக் கொள்ளும். போம் பேசாமல்! என்று கூறிவிட்டு அன்புடன் முதுகைத் தட்டிக் கொடுத்தார். விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே, அதனாலோ என்னவோ, ஊரிலே பலரால் கிறுக்கன் என்று பட்டம் சூட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட டாக்டர் சுவாமிநாதய்யர் அன்றிலிருந்து நாயக்கருக்கு அத்யந்த நண்பரானார்.

    ***

    ‘முத்தம்மாள் அனாதை’ என்று இரங்கி, தர்மத்திற்கு உதவி செய்ததாக நாயக்கர் சுவாமிநாதய்யரிடம் கூறியதில் பாதிதான் உண்மை. முத்தம்மாள் யாரோ ஏழை என்று நாயக்கர் ஆரம்பத்தில் இரங்கினார் எனினும், அவள்மேல் அவருக்குத் தொடர்ந்தாற்போல் ஏற்பட்ட அனுதாபத்திற்கு ஒரு பெரிய காரணம் இருக்கத்தானிருந்தது. முத்தம்மாளுக்கு நான்காம் நாள் ஜூரமும் ஜன்னியும் கண்டு அவள் மிகவும் பிதற்றிக் கொண்டிருந்தாளல்லவா? அப்பொழுது, அய்யா! நான் செத்துப்போனால் என் குழந்தையை அவரிடம் சேர்த்துவிடுங்க! இப்போ இல்லாவிட்டால் என்றைக்காவது ஒருநாள் அவரிடம் சேர்த்து விடுங்க! என்று ஜன்னி வேகத்தின் நடுவில் அவள் பிதற்றிக் கொண்டிருந்தாள்.

    அவளை சமாதானப்படுத்த எண்ணிய நாயக்கர், ஆகட்டும் அம்மா! குழந்தையை அவனது தந்தையிடம் சேர்ப்பித்து விடுகிறேன் என்று ஆறுதல் கூறினார்.

    யார், எந்த ஊர் என்று கேட்காமல் ஆகட்டும் என்கிறீர்களே, அய்யா எனக்கு நினைவிருக்கும்போதே கேட்டுக் கொள்ளுங்கள் என்று திணறிய முத்தம்மாள் ஆவேசம் வந்தவள்போல் கூறிய அந்த மனிதனின் பெயரைக் கேட்ட நாயக்கரின் நெஞ்சம் பதைபதைத்தது. சினத்தினால் அவரது முகம் கறுத்தது. உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் ஆத்திரத்தில் துடித்தது!

    அந்தப் பாதகனா என்று குமுறிய அவர் ஆத்திரத்துடன் இரைந்து கேட்டார்.

    அவர் என்ன செய்வார், அய்யா நான் அறிவிழந்து போனேன்! அவர்மேல் குற்றம் சொல்லிப் பயன் ஏது? என்றாள் ஜூர வேகத்தில் முத்தம்மாள்.

    வாலிபனாக உலகில் வாழக்கையை இன்பமாக எதிர்நோக்கியிருந்த அவரது கபடமற்ற வெள்ளை நெஞ்சத்தை ஆறாத துயரத்திற்கு உட்படுத்தியிருந்த அதே பாதகன் முத்தம்மாளையும் வஞ்சித்துவிட்டிருந்தான். இந்த ஒன்றே அவருக்கு அவளிடம் அதீதமானதொரு அனுதாபத்தைக் கொள்ளும்படி தூண்ட ஏதுவாக இருந்தது?

    ***

    முத்தம்மாளுக்கு உடம்பு குணமானதும் நாயக்கர் மறுபடியும் அவளை அனாதையாகத் தெருவிலே அலையவிடாது தன்னால் ஆன உதவிகளைச் செய்ய முன்வந்தார். யாரோ நெறிதவறித் தாயான ஒரு இளம்பெண், அவளது பொறுப்பை தம்மீது நாயக்கர் ஏற்றுக்கொண்டு தெருக்கோடியிலே ஒரு சிறு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து அவள் அங்கே வசிக்கத் தேவையான பொருள்களைக் கொடுத்து உதவியதைக் குறித்து ஊரில் பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். ஆண்டாளம்மாள் கணவரின் மனத்தை நன்கு அறிவாள். ஆதலினால் அவள் பலர் தன் கணவனைப் பற்றி அவதூறாகப் பேசிய கட்டுக் கதைகளை நம்பவில்லை.

    முத்தம்மாள் ஜூரத்தின் பொழுதுதான் தன்னையுமறியாமல் தன்னைப் பற்றிய அந்தரங்கங்களில் சிலவற்றைக் கூறிவிட்டாள். அதற்குப் பிறகு அவள் ஒரு நாளும் கடந்த தனது வாழ்க்கையைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசியதே இல்லை. உடம்பு சிறிது குணமானதும் அவள் நாயக்கர் தனக்கு உதவி எப்பொழுதும் செய்வதை விரும்பவில்லை.

    கடனாகக் கொஞ்சம் பணம் அவரிடம் வாங்கிக்கொண்டு ஒரு பசு மாட்டை வாங்கிக் கொட்டிலில் கட்டிக்கொண்டு, பால் வியாபாரம் செய்து பிழைப்பை நடத்திக் கொண்டாள். முதலில் வெறுத்து ஒதுக்கிய கிராம ஜனங்களிடம் நாளா வட்டத்தில் அவள் நல்ல பெயரை எடுத்து விட்டாள். ஒருவர் வம்புக்குப் போகமாட்டாள்; தலை நிமிர்ந்து யாரிடமும் பேசமாட்டாள். ஏன் வாய்விட்டு அவள் சிரித்துக்கூட நாயக்கர் பார்த்ததில்லை. மங்கநல்லூருக்கு வந்து இருபத்திரண்டு வருஷங்கள் தன் கையாலேயே உழைத்துச் சாப்பிட்டுவிட்டு இறுதியில் தன் மனத்திலே புதைத்து வைத்திருந்த துயரத்தை நாயக்கர் ஒருவருக்கு மட்டும் கூறிவிட்டு இவ்வுலகைவிட்டு மறைந்து சென்றுவிட்டாள் முத்தம்மாள்.

    முத்தம்மாள் மகன் தாயின் துயர வாழ்க்கையை ஒருவாறு உணர்ந்து நல்லபிள்ளையாக வளர்வான் என்று எதிர்பார்த்த நாயக்கருக்கு பெரிய ஏமாற்றந்தான் ஏற்பட்டது. சிறுபிள்ளையாக இருக்கையில் நாயக்கரைக் கண்டால் கிடுகிடுவென நடுங்கும் பயந்தாங்கொள்ளியாக இருந்த தங்கவேலன், நாளாவட்டத்தில் ஒருவருக்கும் கட்டுப்படாத அடங்காப் பிடாரியாக மாறிவிட்டான். மூன்றாவது வகுப்பிற்குமேல் அவனுக்குப் படிப்பு ஏற மறுத்தது. படிப்பு ஒழிகிறது என்று நாயக்கர் அவனை ஒரு கடையில் சாமான் எடுத்துக் கொடுக்கும் வேலையில் அமர்த்தினார். இரண்டு நாள் வேலை செய்துவிட்டு அசிரத்தையுடன் மூன்றாவது நாள் தானே நின்றுவிட்டான். முத்தம்மாளின் வேண்டுகோளைத் தட்ட இயலாது நாயக்கர் அவனை வேறு பல வேலைகளில் அமர்த்திப் பார்த்தார். ஒன்றிலும் அவன் நீடித்து நிற்கவில்லை.

    வீண் சண்டையிலும், பூசலிலும் தலையிட்டுக்கொண்டு தறுதலையாக தங்கவேலன் திரிவதைக் காணச் சகிக்காது எப்படியாவது அவனைத் திருத்திச் சரிப்படுத்தவேண்டும் என்று நாயக்கர் முடிவில் வெற்றிலை பாக்குக் கடை ஒன்றை விலைக்கு வாங்கிக் கொடுத்துச் சொந்தமாக வியாபாரம் செய்யும்படி உபதேசித்தார். இஷ்டப்பட்டால் கடையைத் திறந்து வைத்திருப்பான்! இல்லாவிட்டால் மூடிவைத்து விடுவான். தாயார் பணம் எதுவும் கேட்டால் ஆத்திரத்துடன் கூச்சலிடுவான். இப்படி ஒரே முரடனாகவும் தாயின்மீது சிறிதும் அன்பற்றவனாகவும் இருந்த அந்த அனாதைச் சிறுவனின் பூர்வோத்தரத்தை நினைத்துப் பார்த்து நாயக்கருக்கு தமது சொந்த மகன் ஏனோ அன்றிரவு திடீரென்று மோகனரங்கத்தைப் பற்றிய கவலைகளும் ஊடே எழுந்தன. இந்தப் பிள்ளை நகரத்திலே என்ன செய்கிறானோ! சித்ராவின் கல்யாணத்திற்குப் பிறகு இவனுக்கும் ஒரு கல்யாணத்தை நடத்தி விடணும்" என்று தமக்குள்ளே எண்ணிய நாயக்கர் ஏக்கத்துடன் பெருமூச்செறிந்தார்.

    3

    நாகேந்திரத்திலிருந்து சுமார் பன்னிரண்டு மைல் தூரத்திலிருந்த திருக்காட்டுப்பள்ளி, சமீபத்தில் சில வருஷங்கள் ஒரு சிறு கிராமமாகவேதான் இருந்தது. திருக்காட்டுப்பள்ளியில் ஓடிக்கொண்டிருந்த மணிகொண்டான் என்ற காட்டாற்றை நம்பி அங்கே சலவைத் தொழிலாளர்கள்தான் அதிகம் வசித்து வந்தனர். நாகேந்திரத்தில் விஷம் ஏறுவதைப் போன்று அதிகமாகிக் கொண்டுவந்த வீட்டு நெருக்கடி திருக்காட்டுப்பள்ளிக்கு ஒரு திடீர் யோகத்தை உண்டாக்கியது. சில வருஷங்களில் இது ‘பழைய திருக்காட்டுப்பள்ளியா?’ என்று ஜனங்கள் பிரமிக்கும் அளவில் வேகமாக வளர்ந்து நாகரிகம் மலிந்து நிற்கும் ஒரு அழகிய நகரமாக மாறிவிட்டது.

    திருக்காட்டுப்பள்ளியில் தண்ணீர் இல்லாது வரண்டுகிடந்த மணிகொண்டான் என்ற ஏரி மேடாக்கப்பட்டு அதன்மீது கண்மூடித் திறப்பதற்குள் சிருஷ்டிக்கப்பட்டவை போல் நூற்றுக்கணக்கில் சிறுபங்களாக்கள் கட்டப்பட்டுவிட்டதனால், திருக்காட்டுப்பள்ளி ஒரே வருஷத்தில் ஒரு நகரமாக மாறிவிட்டது. அப்படிப் புதிதாகக் கட்டப்பட்ட பங்களாக்கள் கொண்ட அந்த இடத்திற்கு ‘மணிகொண்டான் நகர்’ என்று புதியதொரு பெயர் சூட்டப்பட்டுவிடவே, திருக்காட்டுப்பள்ளி என்பதை விட்டு ஜனங்கள் ‘மணிக்கொண்டான் நகர்’ என்று அந்த ஊரைப் பெயர் மாற்றி அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

    ஏரியை மேடாக்கிக் கட்டிய கட்டடங்கள், அவசரத்தில் போட்ட அஸ்திவாரம், பெருமழைக்குப் பொத்தென்று தலையில் இடிந்து விழுந்துவிடும் என்று நாகேந்திரத்தில் வசித்த பல பெரிய மனிதர்கள் மணிகொண்டான் நகரின் புதிய பங்களாக்களைப் பற்றிப் பழித்தாலும், நாகேந்திரத்தில் இடவசதியின்றித் தவித்துக் கொண்டிருந்த பல பிரமுகர்கள், அவைகளைப் பொருட்படுத்தாமல் அங்கே குடியேறினார்கள்.

    சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், சினிமா நட்சத்திரங்கள், பாடகர்கள் என்று பல்வேறு வகையினரும் குடியேறிவிடவே, மணிகொண்டான் நகர் நாகரிகம் பொங்கிப் பொழியும் அழகியதொரு சிறு நகரமாக மாறி, நாகேந்திரத்தின் கம்பீரத்தை எட்டிப்பிடித்து விட்டது போன்று இறுமாப்புடன் தலைநிமிர்ந்து நின்றது.

    Enjoying the preview?
    Page 1 of 1