Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malaichamy IAS (Retd)
Malaichamy IAS (Retd)
Malaichamy IAS (Retd)
Ebook341 pages2 hours

Malaichamy IAS (Retd)

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘நதி போல ஓடிக் கொண்டிரு...’ என்ற பாடல் வரி எனக்கு மிகவும் பிடிக்கும். என் வாழ்க்கையிலும் நான் அப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து, சென்னைக்கு வந்து என்னென்னவோ ஆசைப்பட்டு... ஆசைப்பட்டது கிடைக்காத போது மனம் உடைந்து போகாமல், கிடைத்ததன் மீது ஆசையை வளர்த்துக் கொண்டு, ஆட்சிப் பணியில் ஈடுபட்டு, பாரம்பரியம் மிக்கதொரு குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக அடைந்து, பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக புரட்சித் தலைவி அம்மா அவர்களால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் உறுப்பினராகப் பணியாற்றி - நதி போலத்தான் நான் ஓடியிருக்கிறேன். என் வாழ்க்கை அனுபவங்கள் ஒரு புத்தகமாக வாருங்கள் வாசிக்கலாம்

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580143106904
Malaichamy IAS (Retd)

Read more from Ranimaindhan

Related to Malaichamy IAS (Retd)

Related ebooks

Reviews for Malaichamy IAS (Retd)

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malaichamy IAS (Retd) - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    மலைச்சாமி ஐ.ஏ.எஸ் (ஒய்வு)

    (அரசுப்பணி - அரசியல் பணி)

    Malaichamy IAS (Retd)

    (Arasu Pani - Arasiyal Pani)

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை
    ஏன் இந்த நூல்?

    ‘நதி போல ஓடிக் கொண்டிரு...’ என்ற பாடல் வரி எனக்கு மிகவும் பிடிக்கும். என் வாழ்க்கையிலும் நான் அப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன்.

    கிராமத்தில் பிறந்து வளர்ந்து, சென்னைக்கு வந்து என்னென்னவோ ஆசைப்பட்டு... ஆசைப்பட்டது கிடைக்காத போது மனம் உடைந்து போகாமல், கிடைத்ததன் மீது ஆசையை வளர்த்துக் கொண்டு, ஆட்சிப் பணியில் ஈடுபட்டு, பாரம்பரியம் மிக்கதொரு குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக அடைந்து, பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக புரட்சித் தலைவி அம்மா அவர்களால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் உறுப்பினராகப் பணியாற்றி - நதி போலத்தான் நான் ஓடியிருக்கிறேன்.

    இவை யாவும் மலைச்சாமி என்கிற தனிமனிதனுக்குக் கிடைத்த வாழ்க்கை அனுபவங்கள். எந்தவொரு மனிதனுக்கும் அனுபவங்கள் நிச்சயமாக இருக்கும். அதைப் போலத்தான் எனக்கும்.

    என் உள்வட்ட நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர் சிங்கப்பூர் முஸ்தபா அவர்கள்.

    அவர் சென்னையில் இருக்கும் நாட்களில் ஒரு தடவையாவது நாங்கள் நிச்சயமாக சந்திப்போம்.

    அப்படிப்பட்ட ஒரு சந்திப்பின்போது, ‘உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் புத்தகமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் சரி என்று ஒப்புக் கொள்ள வேண்டும். நான் ராணிமைந்தனிடம் சொல்லப் போகிறேன். அவர் உங்களுடன் தொடர்பு கொள்வார்’ என்று முஸ்தபா சொன்னதும் எனக்கு உடனே என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

    சில நாட்களில் ராணிமைந்தன் என்னுடன் தொலைபேசியில் பேசினார்.

    ‘புத்தகமாக வரும் அளவுக்கு என் வாழ்க்கை அனுபவங்கள் சுவாரஸ்யமானவைதானா என்றுதான் நான் யோசிக்கிறேன்’ என்றேன்.

    ‘நான் யோசித்தாயிற்று. அந்த அனுபவங்கள் சுவாரஸ்யமற்று இருக்க வாய்ப்பில்லை’ என்று எங்கள் முதல் சந்திப்பிற்குத் தேதியையும் முடிவு செய்துவிட்டார் ராணிமைந்தன்.

    முஸ்தபா - ராணிமைந்தன் சேர்ந்து பின்னிய அன்பு வலையில் நான் வசமாக அகப்பட்டுக் கொண்டேன்.

    ராணிமைந்தன் திரு. சாவி அவர்களின் சீடர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதால் எப்படி ஒருவரிடமிருந்து கேள்வி கேட்டு பதில் வாங்குவது என்ற சூத்திரம் ராணிமைந்தனுக்குக் கைவரப் பெற்றிருக்கிறது.

    நேரத்திற்கு வருவார்; ஒவ்வொரு சந்திப்பின்போதும் ஓரிரண்டு மணிநேரம் நான் என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்துச் சொல்லச் சொல்ல ஒலிப்பதிவு செய்து கொள்வார். வீண் பேச்சோ, நேர விரயமோ இருக்காது. ராணிமைந்தனின் அணுகுமுறையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

    எழுதி முடித்ததும் கொண்டு வந்து காட்டினார். படித்துப் பார்த்தபோது என் மீதே எனக்கு வியப்பு ஏற்பட்டது உண்மை.

    மிகச் சரளமான நடையில் நதியின் ஓட்டத்தைப் போல என் வாழ்க்கை ராணிமைந்தனின் பேனாவால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு என் நன்றி.

    நான் எப்போதுமே துடிப்பானவன்; வேகமானவன்; அவ்வப்போது கோபக்காரனும்கூட.

    எந்தப் பொறுப்பில் இருந்தாலும் நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து அப்படியே செயல்பட்டவன் நான்.

    என் வேகம், கோபம் காரணமாக சில சமயங்களில் நான் சற்று நிதானம் தவறி, சில செயல்களைச் செய்தது எவ்வளவு உண்மையோ, அதற்காக மனதார வருந்தியதும் உண்மை. ஓரிரண்டு சம்பவங்கள்தாம் அவை என்றாலும் வாழ்க்கை வரலாறு என்று வரும்போது அவையும் பதிவாக வேண்டும் என்று நான் விரும்பினேன். ராணிமைந்தனும் அதே கருத்தைக் கொண்டிருந்தார்.

    நூல் இப்போது உங்கள் கையில்.

    இதில் பொய்யான தகவல்கள் ஒன்றுகூட இல்லை என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்.

    என் வாழ்க்கை அனுபவங்கள் ஒரு புத்தகம் ஆகும் என்று நான் நிச்சயமாக எண்ணிக்கூடப் பார்த்ததில்லை. ஆனால் அது நடந்திருக்கிறது.

    முஸ்தபா - ராணிமைந்தன் ஆகிய இரண்டு நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    இந்த நூலைப் படித்தபின் உங்கள் கருத்துகளை எனக்குக் கடிதம் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ தெரிவித்தால் நன்றி சொல்லி மகிழ்வேன்.

    - கே. மலைச்சாமி

    89, இரண்டாவது தெரு,

    AC பிளாக், அண்ணா நகர்,

    சென்னை - 600 040.

    போன்: 26263736, 26269595

    வணக்கம்

    வருடம், மாதம், தேதி நினைவில்லை. ஆனால் அன்று மாலை சென்னை பாரதியார் நினைவு இல்ல அரங்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பார்வையாளனாக அமர்ந்திருந்தது நினைவிருக்கிறது.

    அந்தக் கூட்டத்தில் அன்றைய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் டாக்டர் மலைச்சாமி, ஐ.ஏ.எஸ்., அவர்கள் சிறப்புரையாற்றினார். நான் வியந்து போனேன்.

    ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறாரே என்ற வியப்பு. வீடு திரும்பிய பிறகும் அந்த வியப்பு மாறாமல் இருந்தது. மலைச்சாமி அவர்கள் மீது எனக்கொரு மதிப்பு ஏற்பட்டது.

    சிங்கப்பூரில் ஒரு வெற்றித் தமிழராக வாழ்ந்து கொண்டிருக்கும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த அருமை நண்பர் எம்.ஏ. முஸ்தபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நூலாக நான் எழுதியபோது, ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு மலைச்சாமி அவர்கள் எப்படி உதவினார், அதுவும் விதிமுறைகளை மீறாமல் உதவினார் என்பது பற்றி முஸ்தபாவே சொல்ல, அதை அந்த நூலில் பதிவு செய்தேன்.

    அது தொடர்பாக நான் மலைச்சாமி அவர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் தன் பணிக்கால நினைவுகளை அசை போட்டார். அவர்மீது எனக்கு ஏற்கெனவே ஏற்பட்டிருந்த மதிப்பு அதிகமானது.

    முஸ்தபா அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு மலைச்சாமி அவர்களும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தார்.

    அவரும், நானும் ஒரே விமானத்தில் சிங்கப்பூருக்குப் பயணம் செய்தோம். அங்கே விழாவில் அவர் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

    அவருடைய வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் பிறந்து வளர்ந்து கொண்டு வந்தது.

    சென்னையில் ஒருமுறை முஸ்தபா அவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, ‘ராணிமைந்தன், மலைச்சாமி அவர்களிடம் பேசிவிட்டேன். அவருடைய பயோகிராஃபியை நீங்கள் எழுத வேண்டும் என்பது என் விருப்பம். எனவேதான் உங்களைக்கூட கலக்காமல் நானே உரிமை எடுத்துக் கொண்டு அவரிடம் பேசிவிட்டேன். எழுதுங்கள், நானே வெளியிடுகிறேன்’ என்றார்.

    பழம் நழுவிப் பாலில் விழுந்தது.

    மலைச்சாமி அவர்களைப் பலமுறை சந்தித்தேன். அவருடைய நினைவலைகளைப் பதிவு செய்து கொண்டேன்.

    அவற்றை எழுதி அவரிடம் காட்டினேன். முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு அவர் என்னிடம் சொன்னார்: ‘அட, நானும் என் ஆட்சிப் பணி, அரசியல் பணியில் ஏதோ செய்திருக்கிறேன் என்ற திருப்தி நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தபோது எனக்குக் கிடைத்தது.’

    தன் அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது எதையும் மறைக்காமல் அவர் வெளிப்படையாகப் பேசியது எனக்கு மிகவும் பிடித்தது. வேறு எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாவது இப்படிப் பேசுவார்களா என்பது சந்தேகம்.

    ஆட்சிப் பணியில், அரசியல் பணியில் மலைச்சாமி அவர்கள் நேர்மையாக இருந்திருக்கிறார், துணிவுடன் செயல்பட்டிருக்கிறார் என்பது இந்நூலைப் படிப்பவர்களால் நிச்சயம் உணர முடியும்.

    ‘நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது, அப்படி நடந்திருக்கக் கூடாது’ என்று சில தருணங்கள் பற்றி நினைவு கூர்ந்தபோது, ‘இதை அப்படியே பதிவு செய்யுங்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை’ என்றும் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

    அந்த அபாரமான துணிச்சல் எனக்குப் பிடித்திருந்தது. இந்த நூல் உருவானதில் நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள்:

    - விதை போட்ட என் இனிய நண்பர் எம்.ஏ. முஸ்தபா

    - எனக்காக தன் வாழ்க்கையை மிகத் தெளிவாகத் திரும்பிப் பார்த்து அற்புதமான ஒத்துழைப்பை நல்கிய மலைச்சாமி.

    - புகைப்படங்களைச் சேகரித்துத் தந்து உதவிய திருமதி ராஜேஸ்வரி மலைச்சாமி

    - ஒளியச்சு செய்து தந்த நண்பர் செல்வின்.

    ஒரு பியூரோகிராட் - பாலிடீஷியன் வாழ்க்கையை நீங்கள் அடுத்து வரும் பக்கங்களில் படிக்கப் போகிறீர்கள்.

    படித்த பிறகு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள எனக்கு ஆசையில்லாமல் இருக்குமா?

    இரண்டு வரி எழுதுங்கள்.

    7, மணவாளன் தெரு,

    வெற்றிநகர் எக்ஸ்டன்ஷன்,

    சென்னை - 600 082

    தொலைபேசி: 26713643

    கைபேசி: 9381025834

    மலைச்சாமியுடன் நூலாசிரியர் ராணிமைந்தன்

    உள்ளே...

    அண்டக்குடியில் ஆரம்பம்

    ‘தே பிரித்தோ’ அனுபவங்கள்!

    கல்லூரிக் காலம்

    மதுரையில் வழக்கறிஞராக...

    ராஜேஸ்வரியைக் கரம் பிடித்தார்

    மாவட்ட துணை ஆட்சியர் மலைச்சாமி

    விரிந்து பரந்த பயிற்சி

    மலைச்சாமியின் முத்திரை தொடக்கம்

    கூட்டுறவு நூற்பாலையில்...

    இழையிலிருந்து இரும்புக்கு...

    அதிரடி நடவடிக்கைகள்

    மாவட்ட வருவாய் அதிகாரி, கோவை

    உலகத் தமிழ் மாநாடு

    பழகிய இடம்... புதிய அனுபவங்கள்

    மக்வானாவுடன் ஒரு மோதல்

    கொஞ்சம் முரட்டுத்தனமாய்...

    ‘ஐ வாண்ட் மலைச்சாமி’

    கார்ப்பரேஷன் கமிஷனர் மலைச்சாமி

    லேபர் கமிஷனர்

    ‘ஹோம் செகரட்டரி’ மலைச்சாமி

    மாநிலத் தேர்தல் ஆணையராக...

    அனைத்து மக்கள் தேவர் பேரவை

    டெல்லிக்கு எம்.பி.யாக...

    அக்கரைச் சீமையில்...

    இன்னும் சில...

    குடும்பம்

    அண்டக்குடியில் ஆரம்பம்

    கல்வியின் எல்லைகள் விரிந்து பரந்து கொண்டே வருகின்றன. எத்தனையோ துறைகளில் புதிது புதிதாய்ப் படிப்புகள். பட்டப் படிப்பு வலைப் பின்னலுக்குள் வராத துறையே கிட்டத்தட்ட இல்லை என்பது இன்றைய நிலை. எத்தனை படிப்புகள் வந்தாலும், அரசு நிர்வாகம் என்று வரும்போது ஐ.ஏ.எஸ். என்ற மூன்றெழுத்திற்கு இருக்கும் மகத்துவம் இன்றுவரை மங்கியதில்லை. மங்கப் போவதும் இல்லை.

    அறிவியல் துறையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் மீதி எந்தத் துறையைச் சேர்ந்த புத்திசாலி மாணவ, மாணவிக்கும் ‘ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும்’ என்ற விருப்பம் இருக்கவே செய்யும். இனி அறிவியல் மேதைகளும் ஐ.ஏ.எஸ். கனவு காணக்கூடும். இந்திய ஆட்சிப் பணி என்பது மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய மகத்தான வாய்ப்பினை அளிப்பது. மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட பணி.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் முத்திரை பதித்தவர்கள், பதித்து வருபவர்கள் பலர். அப்படிப்பட்ட திறமையான அதிகாரிகளுக்கு தமிழ் நாட்டிலும் பஞ்சமில்லை. அப்படி தமிழகத்தில் முத்திரை பதித்த வித்தக ஆட்சிப் பணியாளர்களில் கே. மலைச்சாமி அவர்கள் குறிப்பிடத்தக்க ஒருவர்.

    இந்த நூல் அவரது வாழ்க்கையின் சுருக்கமான வரலாறு. இந்த வரலாறு அண்டக்குடி கிராமத்திலிருந்து தொடங்குகிறது.

    ***

    சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி வட்டத்தில் இருக்கிறது அண்டக்குடி.

    குக்கிராமம் அல்ல. நகரமும் அல்ல. பெரிய ஊர் என்று சொல்லலாம். ஆனால் மிகவும் பிற்பட்ட பகுதி. விவசாய பூமி. தொண்ணூறு சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தேவர் குல மறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

    அந்தக் காலத்தில் கிராமப் புறங்களில் ஊர் பெரிய மனிதர் என்று ஒருவர் நிச்சயம் இருப்பார்.

    அண்டக்குடியில் யாரைக் கேட்டாலும் அவர்கள் கைகாட்டும் ஊர் பெரிய மனிதராக இருந்தவர் கருப்பையாத் தேவர். வசதியானவர். அண்டக்குடியில் அதிகமான விவசாய நிலங்களைக் கொண்டிருந்தவர் அவர்தான்.

    அண்டக்குடியில் மட்டுமல்ல, கோட்டையூர், தரிகொம்பன், காவனூர், மேமங்கலம், புதூர் போன்ற சுற்றுப்புறக் கிராமங்களிலும் நிலம் வாங்கி பங்கிற்கு விட்டு விவசாயம் செய்து கொண்டிருந்தார். எனவே அந்தப் பகுதியில் கருப்பையா தேவர் குடும்பம் மிகவும் பிரபலமாக இருந்தது.

    எந்த வழக்காக இருந்தாலும் - குடும்ப விவகாரம் என்றாலும் சரி - பொது விவகாரம் என்றாலும் சரி - கருப்பையா தேவர்தான் கருப்பு அங்கி அணியாத நீதிபதி.

    அவர் தீர்ப்புக்கு அப்பீல் இருந்ததில்லை. படிப்பறிவு அதிகம் கொண்டவர் அல்ல அவர் என்றாலும் வாய்ப்பாடு, மனக்கணக்கு, வாய்க்கணக்கு, வாய்மூல வரைவுகள், புரோநோட்டு, பத்திரம் போன்றவற்றுக்கான ஷரத்துகள் அவருக்கு அத்துபடி. அவருடைய பட்டறிவு முழு மதிப்பெண்கள் பெறக் கூடியது.

    கருப்பையா தேவருக்கும் அவர் மனைவி அம்மாளு என்ற மீனாட்சி மறத்திக்கும் எட்டு குழந்தைகள். ஆறு மகன்கள், இரண்டு மகள்கள். அய்யாவு, பொக்காரு, மலைராசு, பொன்னம்பலம், முனியாண்டி, காளிமுத்து, முத்துராக்கு ஆகியோருக்குப் பின்னால் பிறந்த கடைக்குட்டிதான் மலைச்சாமி. இந்த வாழ்க்கை வரலாற்று நூலின் கதாநாயகர்.

    தாயார் மீனாட்சி அம்மாள்

    மலைச்சாமி என்ற பெயருக்குப் பின்னே ஒரு குட்டிக் கதை இருக்கிறது. பொதுவாகவே சிவகங்கைப் பகுதி வறண்ட பூமிப் பகுதி என்பது தெரிந்த உண்மை.

    அதிலும் கருப்பையாத் தேவர் - மீனாட்சிக்குக் கடைசிக் குழந்தை பிறந்த ஆண்டு கடும் பஞ்சம் நிலவியது. ஆனாலும் குழந்தை பிறந்த அன்று (14-9-1936) அதிகாலையில் மழை கொட்டியது. அந்த மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை.

    ‘வறண்ட பூமிக்கு மழையைக் கொண்டு வந்திருக்கும் சாமி இவன். எனவே இந்தக் குழந்தைக்கு ‘மழைச்சாமி’ என்று பெயர் வைக்க வேண்டும்’ என்று ஊரார் விரும்பி அப்படியே வைத்தார்கள்.

    பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டிய வயது வந்தது. மழைச்சாமியை அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் போனார்கள்.

    பதிவேட்டில் பெயரை எழுதுவதற்காக ‘பையனின் பெயர் என்ன?’ என்று கேட்டார் ஆசிரியர்.

    ‘மழைச்சாமி.’

    பெயரை எழுதிக் கொண்டு, ‘சரி... பதிவு செய்து விட்டேன்’ என்றார் அந்தப் பள்ளி ஆசிரியர்.

    மழைச்சாமி என்ற பெயரை மலைச்சாமி என்று அவர் பதிவு செய்து விட்டது சில காலம் கழித்துதான் தெரிய வந்தது. அதற்காக யாரும் பெரிய சண்டை ஏதும் போடவில்லை.

    ‘ஏதோ ஒரு சாமி... மலைச்சாமின்னே இருக்கட்டும்’ என்று பெற்றோர் விட்டுவிட்டார்கள்.

    மழைச்சாமி இப்படித்தான் மலைச்சாமி ஆனார்.

    அண்டக்குடி பெரிய ஊராக இருந்தபோதும் அங்கே அப்போது பள்ளிக்கூடம் எதுவும் இல்லை.

    எனவே மலைச்சாமியை அண்டைக் கிராமமான கோட்டையூரில் ஆர்.சி. எலிமென்ட்டரி ஸ்கூலில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த பள்ளி அது. திறமையான ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் வலியுறுத்தியது அந்தப் பள்ளிக்கூடம்.

    மலைச்சாமியை எடுத்த எடுப்பிலேயே இரண்டாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். மூன்றாம் வகுப்பு முடிந்ததும் டபுள் பிரமோஷன். ஐந்தாவது வகுப்பு மாணவனாக மலைச்சாமி ‘வகுப்பு உயர்வு’ பெற்றார்.

    இந்தச் சலுகைகள் அல்லது அங்கீகாரங்கள் ஊர் பெரியவர் கருப்பையா தேவரின் மகன் என்பதற்காக மலைச்சாமிக்குக் கிடைக்கவில்லை என்பது மிகவும் முக்கியமான உண்மை.

    அந்த மாணவனிடம் வெளிப்பட்ட திறமைக்குக் கிடைத்த வெகுமதிகளே அவை.

    ‘நன்றாகப் படிக்கிற மாணவன்’ என்ற நல்ல பெயர் ஆரம்பம் முதலே மலைச்சாமிக்குக் கிடைத்து வந்தது.

    கருப்பையா தேவர் அவர்களுக்கு உள்மனதில் ஓர் ஆசை. ‘மலைச்சாமி நல்லா இங்கிலீஷ் பேசணும். ஊர் ஜனங்க அவன் பேசற இங்கிலீஷைக் கேட்டு ‘ஆ’ன்னு பார்க்கணும்!’

    அதே பள்ளியில் சந்தனம் என்ற ஆசிரியரிடம் மாதம் ஒரு ரூபாய் டியூஷன் ஃபீஸ் கட்டி தன் மகன் மலைச்சாமியை இங்கிலீஷ் டியூஷனில் சேர்த்தார் கருப்பையா தேவர்

    தன் நிலங்களில் பயிர்கள் நன்றாக வளர வேண்டும் என்ற ஆசைக்கு அடுத்து, ‘என் மகன் மலைச்சாமி நன்றாகப் படிக்க வேண்டும். நன்றாக இங்கிலீஷ் பேச வேண்டும்’ என்பதே கருப்பையா தேவரின் ஆசையாக இருந்தது.

    தன் மகன் ஆங்கிலம் பேச வேண்டும் என்பதில் அந்தத் தந்தைக்கு அப்படியென்னமோ ஓர் அலாதி ஆசை.

    இங்கிலீஷ் டியூஷனில் சேர்ந்த பிறகு ஏ, பி, சி, டி சொல்லி ‘வாட் இஸ் திஸ்?’, ‘வாட் இஸ் தட்?’ என்று மலைச்சாமி இரண்டு மூன்று வார்த்தைகளைச் சேர்த்துச் சொல்லி இரவில் பாடம் படித்ததைக் கேட்ட தந்தை கருப்பையாத் தேவர் வெகுவாக மகிழ்ந்து போனார். ஒரு நாள் கண்மாய் கரையில் மலைச்சாமியின் தந்தை அமர்ந்திருக்க அவர் பக்கத்தில் அப்போது பேஷ்கர் என்றழைக்கப்பட்ட - கிட்டத்தட்ட கிராம முனிசீஃப் போன்றவர் - உட்கார்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். கிராம நிலங்களில் விளைச்சலைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகே ஒரு துணி மூட்டையில் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் வைத்துக் கட்டப்பட்டிருந்தன.

    அப்போது அந்த வழியாக வந்த தன் மகன் மலைச்சாமியை கருப்பையாத் தேவர் அழைத்தார்.

    ‘இங்கே வா!’

    மலைச்சாமி அருகே சென்றதும், ‘நீ இங்கிலீஷ் படிக்கிற இல்ல... இவரோட இங்கிலீஷ்ல பேசுப்பா’ என்றார்.

    கொஞ்சமும் எதிர்பாராமல் அப்பா அப்படிச் சொன்னதும் என்ன பேசுவது ஏது பேசுவது

    Enjoying the preview?
    Page 1 of 1