Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enathu South Africa Payana Anubavangal
Enathu South Africa Payana Anubavangal
Enathu South Africa Payana Anubavangal
Ebook282 pages1 hour

Enathu South Africa Payana Anubavangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தொழில்முறையிலும், சுற்றுலா நோக்கிலும் நான் பல நாடுகளுக்குப் பயணம் போய் வருகிற வாய்ப்புக்கள் கிடைத்தன. ஆயினும் தென் ஆப்பிரிக்காவில், சகோதரர் ஷான் பிள்ளையின் விருந்தினராக இருபத்து மூன்று நாட்கள் இருக்கும் பேறு கிடைத்தது எனக்கு முதல் அனுபவம். அத்தனை நாட்கள் நான் வேறு எந்த நாட்டிலும் தங்கியதே கிடையாது. 1970ஆம் வருடம் முதற்கொண்டே எனக்கு நிறைய நண்பர்கள் அங்கே உள்ளார்கள். அவர்களை மீண்டும் சந்தித்து மகிழும் அனுபவமும் கிடைத்தது. இவற்றையெல்லாம் அப்படியே ஆவணப்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணம் உண்டானது. நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தி, ‘மகாத்மா’வாகப் பரிணாமம் பெற்ற நிலம் அது. புகழ்பெற்ற சமாதான வீரரான நெல்சன் மண்டேலா பிறந்த நிலமும்கூட. இரு பெருமக்களைப் பற்றிய பல தகவல்களைக் கருத்தூன்றிப் படித்தேன். இருவரும் போராட்டங்களில் பங்குகொண்ட இடங்களைத் தரிசித்தேன். அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு இந்தச் சிறு நூலை என்பால் அன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்குப் பயன்படும் என்ற நம்பிக்கையோடு உருவாக்கியிருக்கிறேன். இது ஓர் ஆவணப் பதிவுதான்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580149408014
Enathu South Africa Payana Anubavangal

Read more from Kalaimamani ‘Yoga’

Related to Enathu South Africa Payana Anubavangal

Related ebooks

Related categories

Reviews for Enathu South Africa Payana Anubavangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enathu South Africa Payana Anubavangal - Kalaimamani ‘YOGA’

    https://www.pustaka.co.in

    எனது தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்

    Enathu South Africa Payana Anubavangal

    Author:

    கலைமாமணி ‘யோகா’

    Kalaimamani ‘YOGA’

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-yoga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வாழ்த்துரை

    அறிஞர். ஒளவை நடராசன்

    முன்னாள் துணைவேந்தர்

    நட்புறவின் படப்பிடிப்பும் வரலாற்று வளமும்!

    கேப் மாநகரக் கடற்கரையோரத்து நெடுங்கல் மீது நின்று பார்த்தால் உலகத்தின் பாதி உருளையைக் காணலாம். ஏழு பனைமர உயரத்தில் இரைச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் கடலலைகளும்! இந்த அலைகளின் மீதே வாஸ்கோடகாமா முதலிய வழிநடையாளர்கள் பயணம் செய்திருப்பார்கள் என்று நினைத்தால் திகைப்பும் திடுக்கீடும் நம் தலையைச் சுழற்றும். இந்தக் காட்சி ஒன்றே தென்னாப்பிரிக்காவின் மாட்சி. தர்பன் மாநகரம், ஜோகனஸ்பர்க் மாநகரம், பிரிட்டோரியா என்ற மணி நகரங்களை எல்லாம் அணி நகரங்களாகக் கொண்டு பொலிவும் பொங்கித் ததும்பும் நாடுதான் தென்னாப்பிரிக்கா. அண்ணல் காந்தியடிகளுக்கு அடிமைக் கொடுமையைப் போக்க வேண்டும் என்ற அற உணர்வை, நிகரில்லா உலகத் தலைவராக நெல்சன் மண்டேலா தனிமைச்சிறையில் கிடந்து தவித்த நினைவை, தில்லையாடி வள்ளியம்மையின் தியாகப் பாங்கை என்றெல்லாம் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளால் தென்னாப்பிரிக்க வரலாறு இன்றும் சுடர்விட்டுக்கொண்டு இருக்கிறது.

    நண்பர் நிழற்படக் கலைஞர் திரு. யோகா அவர்கள் நிழற்படக் கலையில் சிகரமாக விளங்குகிறார். நிழற்படக் கலையில் கலைஞர் யோகா வந்தால்தான் எந்தக் கூட்டமும் மாநாடும் மெருகேறும். நாடு புகழும் நல்லியாருடைய பரந்த கலைக்குடும்பத்தில் யோகாவுக்கு தனிச்சிறப்புண்டு. நண்பர் யோகா நல்லியோடு பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். மற்றவர்கள் பார்த்துவிட்டு வருவார்கள். திரு. யோகாவோ படமாகவே எடுத்து வருவார். பாதி வரலாற்று நிகழ்வாகவும், காந்தியடிகள், நெல்சன் மண்டேலா வாழ்வியல் உண்மைகளை ஓவியமாகவும் இந்த நூல் ‘தென்னாப்பிரிக்காப் பயண அனுபவங்கள்’ என்ற பெயரில் வனப்புற இப்போது வெளியிடப் பெறுகிறது.

    தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு சாதி வேறுபாடு கடுகளவும் இல்லை. சமரச சன்மார்க்க நெறியில் ஆர்வம் கொண்டவர்கள். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் புழுக்களாய்த் துடித்து, அழுத கண்ணீரோடும் தொழுத கையோடும், கரும்புத் தோட்டங்களில் கலங்கி வாழ்ந்த கதை இப்போது மறைந்துவிட்டது. நமது இந்தியத் தமிழர்கள் கரும்புத் தோட்ட அதிபர்களாகவும், வணிக வேந்தர்களாகவும், கல்வி மேதைகளாகவும் தலை நிமிர்ந்து புகழோடு வாழ்கிறார்கள். தென்னாப்பிரிக்க மக்களோடு தோளோடு தோள் இணைந்து தோழமையும் நன்றியுணர்ச்சியும் பெருகச் செழிக்க வாழ்கிறார்கள். தென்னாப்பிரிக்க மக்கள் நமது உடன்பிறப்புக்கள்தான். ஆஸ்திரேலியாவிலிருந்து அப்பிரிக்க நாடு வரை தென்குமரி நாடு விரிந்து பரந்ததைப்பற்றி வரலாறு எழுதிக்காட்டுகிறது. மனத்தால் மட்டுமல்ல நிறத்தாலும் நமக்குத் தென்னாப்பிரிக்கர்கள் உறவினர்கள் தான். நிழற்பட நிபுணர் திரு. யோகா தென்னாப்பிரிக்க நண்பர்களோடு எவ்வளவு பரிவும் உறவும் பண்பும் நேயமும் காட்டினார் என்ற தகவல்கள் நம்மை நெகிழ்விக்கின்றன. திரு. ஷான் பிள்ளை, திரு. எஸ்.பி. ரெட்டி, திருமதி. புஷ்பா எம்.எஸ். பிள்ளை, திரு. சிவா நாயுடு ஆகியோர் திரு. யோகாவின் வாழ்வில் ஒன்றி உறைந்திருக்கிறார்கள். நட்புக்காகத் தம் நல்லுயிரையும் வழங்கும் உயரிய மனம் கொண்டவர்கள் தென்னாப்பிரிக்க இந்தியர்கள்.

    தென்னாப்பிரிக்கத் தமிழ் நண்பர்களின் நட்பும் உணர்வும் தனித்தன்மை உடையவை. அடுத்த பிறவி என்று ஒன்றிருந்தாலும், அதில் இவர்களை எப்படிச் சந்திப்போம் என்று நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகவும் இருக்கிறது. இந்தப் பிறவியில் எனக்கு ஏற்பட்ட எல்லாவித அனுபவங்களுக்காகவும் இறைவனுக்கு என்னுடைய நன்றியை சொல்லத் தவறுவதே கிடையாது என்று நெகிழ்ந்து எழுதும் திரு. யோகாவின், திருமணத்துக்கு முன்னாலேயே தன் காதல் மனைவிக்கு பட்டுச்சேலையைப் பரிசாகத் தந்த திருமதி. எம்.எஸ். பிள்ளையின் கனிவும் குறிப்பிடத்தக்கது.

    பழகினால் யோகாவைப் போல் பழக வேண்டும். கையில் கேமராவால் படம் எடுப்பதோடு மட்டுமில்லாமல், அன்போடு உறவு கொண்டவர்கள், சென்று கண்ட இடங்கள், காதாரக் கேட்ட செய்திகள், தன் உள்ளத்தை மெழுகாக்கிய உணர்வுகள், தென்னாப்பிரிக்கத் திருக்கோயில்கள், கோயில்களில் காணப்படும் அலங்காரப் பொருள்களின் குறிப்புக்கள், தென்னாப்பிரிக்க நாட்டில் அருளுணர்வு ததும்ப வாழ்ந்த ஞானியர்கள், காந்தியடிகளின் வாழ்வியல், மாமனிதர் மண்டேலாவின் மறக்க முடியாத சிறைக்கோட்டம் என்றெல்லாம் தென்னாப்பிரிக்கக் காட்சிகளைக் கலை ஓவியமாகத் தீட்டி இருக்கிறார். இந்த அனுபவ ஏடு அரிய கலைக்களஞ்சியமாகும் நட்புக் காவியமாகும். பலமுறை தென்னாப்பிரிக்க நாடு சென்று திரும்பியவன் என்ற வகையில் அவர் எழுதும் எழுத்துக்கள் நம் மனத்தில் உருக்கத்தை ஊற்றெடுக்கச் செய்கின்றன. திரு. யோகா அவர்களின் கலைத் திறமையோடு எழுத்துப் பெருமையும் தோழமை உரிமையும் பக்கந்தோறும் விளங்குவதைக் காணும் போது பெருமையோடு நான் வாழ்த்தி மகிழ்கிறேன்.

    இந்நூல் தமிழர்களுக்கு விருந்து, தென்னாப்பிரிக்க மக்களுக்கு தெவிட்டாத அமுதம். பயண நூல்களுக்கு நடுவில் வரலாறு கலந்த பயனுள்ள பனுவலாகவும் இந்நூலுக்கு ஆசிரியர் மெருகேற்றியிருக்கிறார். திரு. யோகா அவர்களைத் தமிழுலகத்தைப் போல தமிழர்கள் வாழும் உலக நாடுகள் எல்லாம் உவந்து வரவேற்கும் கடமை வாய்ந்ததாகும். தமிழ் நாட்டுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இணைப்புப் பாலமாக இந்த ஏடு திகழ்வதை வாழ்த்தி மகிழ்கிறேன்.

    அறிஞர். ஔவை நடராசன்

    முன்னாள் துணைவேந்தர்

    அணிந்துரை

    கௌதம நீலாம்பரன்

    தினத்தந்தி ஆதித்தனார் விருது பெற்ற

    சரித்திர நாவலாசிரியர்

    ‘கலைமாமணி யோகா, என் இனிய நண்பர் என்று கூறிக்கொள்வதில் நான் என்றுமே மகிழ்வும் பெருமிதமும் கொள்பவன். யோகா, தமிழ்கூறு நல்லுலகம் நன்கறிந்த புகைப்படக் கலைஞர் என்பது யாவரும் அறிந்த ஒன்று. அவருடைய புகைப்படக் கருவியில் சிக்காத பிரபலங்கள் எவருமில்லை எனலாம். அதிலும் குறிப்பாக, எழுத்துலகப் பிரபலங்கள் அனைவரையுமே யோகா ஆர்வமுடன் படம் பிடித்துத் தருவார். அந்த வகையில், எழுத்தாளர்கள் பலருக்கும் அவர் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்கிறார்.

    யோகா, நிழற்படக் கலைஞர் என்பதோடு மட்டுமில்லாமல், சிறந்த எழுத்தாளராகவும் திகழ்வதை நானறிவேன். அவர் ஒரு நிழற்படக் கலைஞராகத் தொழில் நிமித்தம் பழக நேர்ந்த கலையுலக, அரசியல் உலக, இலக்கிய உலகப் பிரபலங்கள் பலருடனும் உள்ள நட்பை, மறக்க முடியாத இனிய நிகழ்வுகளைச் சுவைபட எழுதியிருக்கிறார். அரிய பதிவுகளான கட்டுரைகள் உள்ள அத்தொகுப்பு நூல்கள் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

    ‘இலக்கியப் பீடம்’ மாத இதழில், ‘கலைமாமணி’ யோகா பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவற்றை நான் வாசித்திருக்கிறேன். கலை, இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் யோகாவுக்கு ஓர் ஆழமான பார்வை இருப்பதை நான் அவருடைய எழுத்துக்களின் வாயிலாக அறிந்திருக்கிறேன். யோகா பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். அது வெளிநாடாயினும் சரி, உள்நாடாயினும் சரி, அவர் அங்கே கண்டுவந்த இடங்களை, ஆலயங்களை, பழக நேர்ந்த மனிதர்களைப் பற்றி அருமையான விவரங்களைச் சேகரித்து வந்து, எழுத்தில் பதிவு செய்வார். அப்பதிவுகள் அவர் எடுக்கின்ற நிழற்படங்களைப் போன்றே சிறந்த பதிவுகளாக இருக்கும்.

    இந்த நூலும் அவ்வாறே யோகாவின் தென்னாப்பிரிக்கப் பயண அனுபவங்களின் நேரிய பதிவாக அமைந்து சிறக்கிறது. படங்களும் நிறைய பயண அனுபவங்களும் நிறைய, யோகாவின் ஆழமான பார்வைச் சிறப்பும் இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் ஒளிர்கின்றன.

    ஒரு நூலைப் படித்தால், அது நம் உள்ளத்திற்கு மகிழ்வை, பரவசத்தை அளிக்க வேண்டும். அத்துடன் நம் சிந்தனைகளை ஒரு படி மேலே உயர்த்த வேண்டும். யோகாவின் தென்னாப்பிரிக்கப் பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் இந்த நூல், அந்தப் பணிகளை நிச்சயம் செய்கிறது என்பதை நான் உறுதி கூறுகிறேன்.

    தென்னாப்பிரிக்க மண்ணில் நிலவிய நிறவெறி ஆட்சி, உலகம் அறிந்த ஒன்று. 1990-ஆம் ஆண்டு அந்நிலை மாறிய பிறகு இந்தியர்கள் அங்கே செல்ல அனுமதி கிடைத்த பிறகு, முதன்முதலாகப் பயணித்தவர் யோகா என்கிற தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை தருகிற விஷயமாக அமைகிறது. இருமுறை அந்த நாட்டிற்குப் பயணம் செய்து வந்திருக்கிறார் யோகா. முதல் பயணம், நடிகர் திலகம் சிவாஜிகணேசனைப் பார்க்க அவருடைய இல்லத்திற்கு வருகை புரிந்த தென்னாப்பிரிக்கத் தமிழ் ரசிகர்களைப் படமெடுத்து அளித்ததன் மூலம் கிடைக்கப் பெற்ற வாய்ப்பு என்கிறார்.

    ஒரு சுற்றுலாப் பயணியாக அந்த நாட்டுக்குச் சென்றுவந்த யோகா, ஒரு வரலாற்று நிபுணரைப் போல, ஆப்பிரிக்க மண்ணின் சரித்திரத்தையே ஆராய்ந்து வந்து, நம்மோடு பேசுகிறார். அங்குள்ள இனங்களின் பெயர்கள், அவர்களின் பூர்வீக வரலாறு, கலாசாரப் பெருமைகள் அனைத்தும் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

    தென்னாப்பிரிக்கா என்றவுடன் நமக்கு இரு மாமனிதர்களின் நினைவு நிச்சயம் எழும். ஒருவர் மகாத்மா காந்திஜி. இன்னொருவர் நெல்சன் மண்டேலா. இந்த இரு மாமனிதர்கள், அந்தக் கறுப்பு மண்ணில் உதித்த இரு சூரியன்கள் என்றே சொல்லலாம். நாம் ‘தேசப்பிதா’ என்றும், ‘மகாத்மா’ என்றும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைக் குறிப்பிடுவதற்கான பிள்ளையார் சுழி அந்த மண்ணில்தான் போடப்பட்டது. அந்த அற்புத வரலாற்று நிகழ்வுகளை நம் மனக்கண்ணில் மறுபதிவுக் காட்சிகளாக எடுத்துக்காட்டுகிறார் யோகா. அவ்விரு தியாக தீபங்களின் வரலாற்றுத் தொடர்புடைய இடங்களையெல்லாம் யோகா பார்வையிடும் போது, நாமும் அவரருகே நின்று காண்பது போன்று காட்சிப்படுத்துகிறது இந்த நூல்.

    தென்னாப்பிரிக்க நாட்டிற்குப் பிழைக்கச் சென்ற தமிழர்கள், பல நூறு ஆண்டுகளாக அங்கேயே தங்கி வாழ்ந்தாலும், தங்கள் மொழி, கலாசார, இனப் பண்புகளை அடியோடு மறந்துவிடவில்லை என்பதை ஏராளமான நடைமுறை நிகழ்வுகளின் சான்றுகளோடு விவரிக்கிறார் யோகா. சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆயினும், அடித்தள உணர்வு அப்படியே ஒளிமங்காமல் இருக்கிறது என்பதை அறிய மகிழ்வாக இருக்கிறது. குறிப்பாக, ‘அங்கே பல்வேறு சாதிகளைச் சேர்ந்த நம் தமிழ் மக்கள் காலங்காலமாக வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் சாதிகளை மறக்கவில்லை. ஆயினும் சாதிப் பூசல்கள் அங்கே இல்லை. ஒரு சாதியைச் சேர்ந்த பெண், மற்றொரு சாதி ஆணைத் தாராளமாக மணந்து வாழ முடிகிறது. வேற்றுமை, விரோதம் எதுவும் மூள்வதில்லை. மணந்து கொள்ளும் பெண்ணை ஆண் தன் இனத்தவளாக ஸ்வீகரித்துக் கொள்கிறான்’ என்கிறார் யோகா.

    தமிழ் இன மக்கள் நடுவே சாதி என்னும் நச்சு நீங்க வேண்டும் என எண்ணும் தலைவர்கள் பலரின் கருத்தும் இதுவாக இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். சாதிய உணர்வு மாற, மங்கி மறைய இது ஒரு நல்ல வழிமுறை எனலாம். அதனால்தான் மகாகவி பாரதிகூட, ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றவன், அப்படி இருக்கும் நிலையிலும்கூட, ‘குல உயர்ச்சி, தாழ்ச்சி சொல்லல் பாவம்’ என்று மழலைகளை அறிவுறுத்தி வைத்தான்.

    காதல் திருமணங்கள் அங்கே எதிர்க்கப்படுவதில்லை; பச்சைக்கொடி காட்டி வரவேற்கப்படுகின்றன என்கிற செய்தியை அறியும் போதே தென்னாப்பிரிக்கா ஒரு சொர்க்க பூமியாக காதலர்களின் நந்தவனமாகத் தோன்றுகிறது.

    சீனிவாசன் என்கிற தமிழர், சுவாமி சிவானந்தரின் சீடராகி, சகஜானந்தா என்னும் தீட்சாநாமம் ஏற்று, தென்னாப்பிரிக்க மண்ணில் ஆன்மிக அமைப்பு ஒன்றை நிறுவி, ஆற்றியுள்ள அருந்தொண்டுகள் நம் சிந்தையைக் கவர்கிறது. அவர் அங்கே கிட்டத்தட்ட 300 வகையான சமுதாய நலத்திட்டங்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ள செய்தி, சமூக ஆர்வலர்கள் அவசியம் படித்தறிய வேண்டிய ஒன்றாகும்; பாராட்டத்தக்கதும்கூட.

    டர்பன் நகரில் பதினாறாம் நூற்றாண்டில் பிழைப்புத் தேடிச் சென்று இறங்கிய தமிழர்கள், அங்கிருந்து பல நகரங்களில் பரவி வாழும்போது, தங்கள் வழிபாட்டிற்காகச் சில ஆலயங்களை நிறுவியிருக்கின்றனர். அப்படி பீட்டர் மாரிட்ஸ் பர்க் நகரில் உள்ள சிவசுப்பிரமணியர் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயங்களைப் போய்ப் பார்த்த யோகா, அங்குள்ள தெய்வ விக்கிரகங்கள், வழிபாட்டு முறைகள் பற்றியெல்லாம் நமக்கு விவரிக்கும் போது, ஒரு தேர்ந்த ஆன்மிக ஞானி போன்றே பல அரிய விளக்கங்களைச் சொல்கிறார்.

    இந்துமத வழிபாடுகளின் மேன்மையை இதைவிடவும் யாரும் எடுத்துரைத்துவிட முடியாது. கொடிமரம், பலிபீடம், நந்தி சிலை, சிவலிங்கச் சிறப்பு, ஓம் என்னும் பிரணவத்தின் உட்பொருள், பராசக்தியின் விளக்கம், நடராஜர் விக்கிரக தத்துவம், தீப ஒளியின் அருஞ்சிறப்பு, அகர்பத்திகள் - கற்பூர ஆரத்தி ஆகியவை உணர்த்தும் ஆன்மிக ஆனந்தம், தேங்காய் ஏன் உடைக்கப்படுகிறது... இப்படி எண்ணற்ற விளக்கங்களை நமக்கு ஓர் ஆன்மிக வகுப்பு நடத்துவதைப் போன்றே விவரிக்கிறார் யோகா.

    யோகாவை அங்கு அழைத்துச்சென்ற ஷான் பிள்ளை மிகவும் கொடுத்து வைத்தவர் என எண்ணும் போதே, ஷான் பிள்ளை போன்ற நண்பர்கள் நமக்கு அமையவில்லையே என்றும் எண்ணத் தோன்றுகிறது.

    ஆப்பிரிக்க மண்ணில் ஐரோப்பியர்கள் நிறுவிய காலனி ஆதிக்க அரசுகள் நடத்திய நிறவெறித் தாண்டவங்களை, சமூகக் கொடுமைகளை அவற்றை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களை அருமையாகவும், ஆழமாகவும் விரித்துரைக்கும் இந்த நூலை வாசிப்பவர்கள், இது மற்ற சுற்றுலாப் பயணிகளின் கட்டுரை நூல்களைப் போன்று வெறும் பயண அனுபவ நூலாக மட்டும் இல்லாமல், கலாசாரத் தூதர் ஒருவரின் ஆழமான நோக்குடன் அலசல் பார்வையுடன் பல்வேறு தகவல்களை நமக்களிக்கும் ஒரு பொக்கிஷமாக அமைந்திருப்பதை நிச்சயம் உணர்வர்.

    கலை இலக்கிய ஈடுபாடுகளில் தனிச்சிறப்பு மிக்கவரான யோகா, கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார். உலகளாவிய பார்வையும், வரலாற்றுக் கண்ணோட்டமும் கொண்டு, மானுட மேம்பாட்டை வலியுறுத்தும் விதமாக அவரால் எழுதப்பெற்றிருக்கும் இந்த நூல், பல பரிசுகளைப் பெற வேண்டும் என்றும் சுற்றுலாத் தொடர்பான கல்வி பயில்வோருக்குப் பாடநூலாக வைக்கும் தகுதியையும் இந்த நூல் பெற்றிருக்கிறது என்றும் கூறி, வாழ்த்துகிறேன்.

    கௌதம நீலாம்பரன்

    சரித்திர நாவலாசிரியர்

    என்னுரை
    Enjoying the preview?
    Page 1 of 1