Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vadakku Veethi
Vadakku Veethi
Vadakku Veethi
Ebook243 pages2 hours

Vadakku Veethi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

- அ. முத்துலிங்கம் " />

ஒவ்வொரு கதைக்கும் ஒரு தனிக்கதை உண்டு. எல்லாவற்றையும் நான் கூறுப்போவதில்லை. அநேகமாக கதைகளில் அடிநாதமாக மனிதநேயம், உயிர்நேயம் அல்லது பிரபஞ்சநேயம் இருக்கும். படிக்கும்போது வாசகர்களாகிய நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

வாழ்க்கையின் வடக்குவீதியில் நிற்கும் நான் இந்தத் தொகுதிக்குள் 'வடக்குவீதி' என்று தலைப்பிட்டது பொருத்தமே. இத்தொகுதியில் வெளிவந்திருக்கும் கதைகள் அவ்வப்போது கணையாழி, கல்கி, இந்தியா டுடே, கிழக்கும் மேற்கும் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தவை; இன்னும் சில இந்தத் தொகுப்புக்காகவே எழுதப்பட்டவை. இக்கதைகள் பற்றி வாசகர்களின் கருத்தை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

- அ. முத்துலிங்கம்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580113801767
Vadakku Veethi

Related to Vadakku Veethi

Related ebooks

Reviews for Vadakku Veethi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vadakku Veethi - A.Muthulingam

    http://www.pustaka.co.in

    வடக்கு வீதி

    Vadakku Veethi

    Author:

    அ. முத்துலிங்கம்

    A. Muthulingam

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. வடக்கு வீதி

    2. எலுமிச்சை

    3. குந்தியின் தந்திரம்

    4. வசியம்

    5. பூமாதேவி

    6. யதேச்சை

    7. கம்புயூட்டர்

    8. ரி

    9. உடும்பு

    10. மனுதர்மம்

    11. விசா

    12. ஒட்டகம்

    சமர்ப்பணம்

    இடருற்று அவதிப்படுவது மனிதர்கள் மாத்திரமல்ல; இந்தப் பூலோகத்தில் அழிவின் எல்லையில் பல விலங்கினங்கள், பறவைகள், ஏன் தாவரங்கள் கூட உண்டு.

    மற்ற உயிரினங்களுக்கு தீங்கிழைப்பது வேறு யாருமில்ல; ஆறறிவு படைத்த மனிதன்தான். இந்த மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக மன்னிப்பு கேட்டு இந்நூலை இடருற்ற உயிரினங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

    என்னுரை

    சமீபத்தில் நான் எதியோப்பியா நாட்டுக்கு சென்றிருந்தேன். இது பைபிளில் கூறப்படும் ஒரு பழம்பெருமை வாய்ந்த நாடு. யேசு பிறப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இங்கே நாகரீகம் கொடிகட்டிப் பறந்தது. ஸ"பா என்ற அதிரூபசுந்தரி ராணியாக ஆட்சி புரிந்தது இங்கேதான். இந்த ராணி பல ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்து பூதர்களின் அரசன் சொலமனை தரிசிக்க ஜெரூஸலம் சென்றதும் அவர்களுக்கிடையில் நட்புண்டாகி மெனலிக் எனற ஆண்மகவு பிறந்ததும் சரித்திரம். மெனலிக்கில் தொடங்கிய அந்த அரச பரம்பரை 3000 வருடங்கள் சங்கிலித் தொடர் போல நீண்டு சமீபத்தில் (1974) அரசன் ஹெயிலி செலாஸ’யின் முடியாட்சி பறிக்கப்பட்டதுடன் ஒரு முடிவுக்கு வந்தது.

    இந்த பாரம்பரியத்தில் எதியோப்பிய பெண்கள் பேரழகு படைத்தவர்கள். இங்கே ஓர் இளம் பெண்ணின் நடனம் பார்த்தேன். நடனம் முழுக்க அந்தப் பெண் தலையை ஒரு பக்கம் சாய்த்து கண்களால் நிலத்தை நோக்கியபடியே ஆடினாள். அவள் கைகளுக்கும் கால்களுக்கும் வேலை குறைவு. மார்புகளும், கழுத்தும், தலையும் மாத்திரம் நளினமாக குலுங்கிக் குலுங்கி அசைந்தன. பெண்ணின் முகத்தை மட்டும் கடைசிவரை பார்க்கவே முடியவில்லை. இது என்ன நடனம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். பரத நாட்டியம், கதக, கதகளி, ஒடிசி, மணிப்புரி போன்ற நடனங்களை பார்த்த கண்களுக்கு அப்படித்தான் தோன்றியது.

    ஆனால் பிறகு சிந்தித்துப் பார்த்ததில் அந்த நடனத்திலும் ஓர் அழகு இருந்ததாக எனக்குப் பட்டது. அந்த நடனமே திருப்பி திருப்பி மனதிலே வந்தது. அதில் ஒரு நளினமும் மனதைக் கவரும் சக்தியும் இருந்தது புலப்பட்டது. ஒரு நாட்டு மக்களின் அழகுணர்ச்சியையோ, கலை வெளிப்பாட்டையோ சரியாக எடை போடுவதற்கு எனக்கு என்ன யோக்கிதை இருக்கிறது என்ற எண்ணம் வலுத்தது.

    மேற்கு ஆப்பிரிக்காவில் நான் இருந்த சமயம். ஒரு நாள் தமிழ் சினிமாப்படம் ஒன்றை வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆப்பிரிக்கர் ஒருத்தர் உள்ளே வந்தார். நன்றாகப் படித்து உயர் பதவியில் இருப்பவர். வீடியோவில் கல்யாணசீன் ஒன்று நடந்துகொண்டிருந்தது. மணப்பெண் வழக்கம்போல ஒரு காலை மடித்து வைத்து மற்றக் காலை குத்துக்காலிட்டு நிலம் பார்த்து உட்கார்ந்திருந்தாள். இந்த மனுசன் கண் வெட்டாமல் இந்தக் காட்சியை பார்த்துவிட்டு சொல்கிறான், 'இந்தப் பெண் இருக்கும் முறை எவ்வளவு செக்ஸ’யாக இருக்கிறது' என்று. எனக்கு அதிர்ச்சி, அகராதிப்படி அந்தப் பெண் மிகவும் நாணமாக, ஒடுக்கமாக, பவ்யமாக அல்லவா இருந்தாள்!

    இன்னும் எத்தனையோ, நாங்கள் மதித்துப் போற்றும் சில விஷயங்கள் பிற நாட்டவருக்கு விநோதமாகப் படுகின்றன. அவர்கள் செய்யும் காரியங்களோ எங்களை ஆச்சரியப்பட வைக்கின்றன. கன்னிமை என்பது எவ்வளவு பெரிய விஷயம். கன்னியம் காப்பது என்பது எங்கள் கிராமத்துப் பெண்களுக்கு ஒரு தவம் மாதிரி.

    அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் பதினாறு வயதுக்கு மேல் கன்னித் தன்மையோடு ஒரு பெண் இருந்துவிட்டால் அவளுக்கு எவ்வளவு அவமானம். அவள் பொய்யுக்காவது கன்னி கழிந்துவிட்டது என்று சொல்லவேண்டிய நிர்பந்தம்.

    இது மாத்திரமா? அமெரிக்கக்காரனுக்கு எழுந்து மரியாதை செய்து 'சேர்' என்று அழைத்தால் பிடிப்பதில்லை. ஆங்கிலேயனுக்கு கால்களை ஒடுக்கிவைத்து மரியாதை முன்னே தலைகுனிந்து நிற்பது அசிங்கமாகப் படுகிறது. ஜெர்மன்காரனுக்கு கைகட்டி பவ்யமாக நின்றால் போதும், வேறு விளையே வேண்டாம். ஆனால் எங்கள் ஊர்களில் இன்றுகூட ஒரு பெரியவரைக் கண்டதும் தோளில் போட்ட சால்வையை எடுத்து கக்கத்தில் வைப்பது நடந்துகொண்டு தான் வருகிறது.

    இப்படித்தான் அப்கானிஸ்தானில் ஒரு நாள் நாங்கள் பத்து பதினைந்து பேர் ஆட்டு மயிரில் செய்த கம்பளத்தில் நிரையாக உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம். பத்து அடி நீளமான ரொட்டி ஒன்று எங்கள் மடிகளில் மலைப்பாம்பு போல தவழ்ந்து கொண்டிருந்தது. நான் என் மடியில் கிடந்த ரொட்டிப் பகுதியை இழுத்து, பிய்த்து கடித்துக் கொண்டிருந்தேன்.

    அங்கேயெல்லாம் மரக்கறி வசதி,அரிது. கோழி, ஆடு, ஒட்டகம் என்று எல்லாம் இறைச்சி மயம்தான். தேநீரில் தோய்த்து ரொட்டியை சாப்பிட்டபடியே நான் அவர்களுக்கு எங்கள் ஊர் நடப்பு ஒன்றை சொன்னேன். அங்கே எப்படி உடும்பு பிடிப்பார்கள் என்றும், அதை உயிருடன் கட்டி தொங்கவிட்டு, தோலை உரித்து என்னமாதிரி சமைப்பார்கள் என்பதையும் விவரித்தேன். அவர்கள் ஸ்தம்பித்து போய்விட்டார்கள். பத்து 'அவ்கானி' காசு கடனுக்காக துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல தயங்காதவர்கள், கல்நெஞ்சக்காரர்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்திராத ஒரு உடும்புக்காக இரக்கப்பட்டார்கள். என்னால் நம்ப முடியவில்லை. இந்தச் சிந்தனையில் பிறந்ததுதான் 'உடும்பு' கதை.

    அந்தக் காலத்து அரசர்கள் குற்றம் செய்தவர்களை குழுத்தளவு மணலில் புதைத்து வைத்து யானையின் காலால் இடறச் செய்வார்களாம். யானை முதல் முறை ஓடி வரும்போது அநேகமாக மிஸ் பண்ணிவிடும், பாகன் இரண்டாவது தடவையாக திருப்பிக் கொண்டு வருவான். யானை தன்பாட்டுக்கு போய்க்கொண்டிருக்ககும். பிறகும் தவறிவிடும். இப்படியாக நாலைந்து தடவை தவறவிட்டு கடைசியில் யானையின் கால்பட்டு தலை பனங்காய்போல உருண்டோடும். இவ்வளவுக்கும் புதையுண்டவன் மனம் என்ன பாடுபடும். எவ்வளவு கொடுமையான சாவு.

    சிலுவையில் அறைவதும், கழுவில் ஏற்றுவதும் கூட இப்படித்தான். பயங்கரமான சாவு. உயிர் உடனே போகாது குற்றவாளி நோவு தாங்காமல் இரவிரவாக அலறிக்கொண்டே இருப்பானாம். இரண்டு மூன்று நாள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரியும். இப்படி கொடூரமான தண்டனைகள் இப்பவும் சில நாடுகளில் தொடருகிறது. பிரம்படி கொடுப்பதும், தலையை துண்டிப்பதும், கல்லால் அடிப்பதும் இன்றும் சில நாடுகளில் கடைப்பிடிக்கும் தண்டனைகள்தான்.

    மேல்நாடுகளில் இறைச்சிக்காக மாடுகளைக் கொல்லும்போது கூட அவைக்கு நோகாத மாதிரி பார்த்துக் கொள்ளுகிறார்கள். நான் சிறுவனாய் இருந்தபோது ஒரு பாவமும் அறியாத என்னுடைய செல்ல வளர்ப்பு நாயை, ஊரார் விசர் என்று தவறாகக் கணித்து உலக்கையால் அடித்து கொன்றதை கண்ணால் பார்த்தேன். அந்த நினைவில் பிறந்தது தான் 'எலுமிச்சை' கதை.

    ஒரு கம்யூட்டர் ஒரு குடும்பத்துக்குள் புகுந்து விடுகிறது. அந்தக்குடும்பத்தினரின் அந்நியோன்யம் சடுதியில் கூடிவிடுகிறது. பேப்பர் விரயம் கம்யூட்டரின் வரவால் எப்படி தடுக்கப்படுகிறது; எவ்வளவு மரங்கள் காப்பாற்றப்படுகின்றன. கம்யூட்டருடன் பிணக்கமும், நட்பும் மாறி மாறி ஏற்படுகிறது. இதுதான் 'கம்யூட்டர்' கதை.

    விசா வாங்குவதற்கும் அலைந்து அலைந்து, கால் தேய்ந்து வருடக்கணக்காக வருத்தப்பட்டு, அந்த சோகத்தில் பிறந்தது 'விசா' கதை.

    அகதிகளாக புலம் பெயர்ந்தவர்கள் படும் அவதிபற்றி அநேக கதைகள் வெளிவந்துவிட்டன. அந்த அகதிகளின் சிலர் எதிர் நீச்சல் போட்டு உயர்நிலைக்கு வந்தாலும், அவர்கள் தங்கள் கலாசாரத்தில் எவ்வளவுதான் ஊளி ஊளி வளர்ந்தாலும், அந்நிய கலாசாரம் எப்படியும் அவர்கள் வாழ்க்கையில் மெதுவாக புகுந்து விடுகிறது என்பதைக் கூறுவது 'பூமாதேவி' கதை.

    இப்படியாக ஒவ்வொரு கதைக்கும் ஒரு தனிக்கதை உண்டு. எல்லாவற்றையும் நான் கூறுப்போவதில்லை. அநேகமாக கதைகளில் அடிநாதமாக மனிதநேயம், உயிர்நேயம் அல்லது பிரபஞ்சநேயம் இருக்கும். படிக்கும்போது வாசகர்களாகிய நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

    வாழ்க்கையின் வடக்குவீதியில் நிற்கும் நான் இந்தத் தொகுதிக்குள் 'வடக்குவீதி' என்று தலைப்பிட்டது பொருத்தமே. இத்தொகுதியில் வெளிவந்திருக்கும் கதைகள் அவ்வப்போது கணையாழி, கல்கி, இந்தியா டுடே, கிழக்கும் மேற்கும் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தவை; இன்னும் சில இந்தத் தொகுப்புக்காகவே எழுதப்பட்டவை. இக்கதைகள் பற்றி வாசகர்களின் கருத்தை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

    இந்நூலுக்கு ஓர் அழகான முன்னுரை வழங்கிய பெருமதிப்புக்குரிய நண்பர் அசோகர் மித்திரனுக்கும், எப்போதும் எனக்கு தூண்டுதலாகவும், உதவியாகவும் இருக்கும் அன்பு நண்பர் வி.சுந்தரலிங்கம் (பிபிசி) அவர்களுக்கும், இந்த தொகுதியை உரிய நேரத்தில் வெளிக் கொணர்ந்த மணிமேகலைப் பிரசுரத்தாருக்கும், அடங்கா ஆர்வமும் அன்பும் காட்டிய நண்பர் ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் தக்க அட்டைப்படமும், உள்படங்களும் வரைந்துதவிய ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கும் என் அன்பு உரித்தாகுக.

    26, நவம்பர் 1997 அ. முத்துலிங்கம்

    ஒரு சுருக்கமான முன்னுரை

    சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு திரு அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு 'வம்சவிருத்தி' நூலை முன்னிட்டுச் சென்னையில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்திற்குச் செல்ல நேர்ந்தது. ஏராளமானோர் வந்திருந்தனர். அங்கு இலங்கைத் தமிழரின் ஒரு மிக முக்கிய படைப்பாளியான எஸ். பொன்னுத்துரை இருந்தார். கோவி மணிசேகரனும் இருந்தார். கவிஞர் எஸ். வைதீஸ்வரன் இருந்தார். லேனா தமிழ்வாணனும் இருந்தார். பல ருசிகளையுடைய படைப்பாளிகள் அங்கு முத்துலிங்கம் அவர்களைப் பாராட்டக் குழுமியிருந்தனர். அன்று நான் அவர் படைப்புகள் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் 'வம்சவிருத்தி' நூலிலுள்ள பதினொரு கதைகளையும் இந்தத் தொகுப்பில் அடங்கப்போகும் இன்னொரு பனிரெண்டு கதைகளையும் படித்த பிறகு முத்துலிங்கம் அவர்கள் ஏராளமான படைப்பாளிகளையும் வாசகர்களையும் கவர்ந்திருப்பதில் காரணம் தெரிந்தது. அவருடைய புனைகதை வெளிப்பாடு மனித இயல்பின் பல்வேற ஆர்வங்களையும் தாபங்களையும் குதூகலங்களையும் சோகங்களையும் வெகு நுட்பமானவகையில் தூண்டிவிடக்கூடியது. தேர்ந்தெடுத்த சொற்களில், சிறப்பான வடிவத்தில் முத்துலிங்கத்தின் புனைகதையுலகம் பரந்துபட்டது. காலத்திலும் தளத்திலும் மிகுந்த வீச்சுடையது. அதே நேரத்தில் படிப்போரின் அந்தரங்க உணர்வை அடையாளம் சொல்லக்கூடிய குடும்ப மற்றும் சமூகப் பாத்திரம் மூலம் விசையூட்டக் கூடியது. அவருடைய மனிதர்கள் பலதரப்பட்டவர்கள்; ஆனால் தனித்துவம் உடையவர்கள். அனைவரும் நிஜத்தன்மையோடு உருவாகியிருப்பவர்கள். இதனால் அவர்களுக்கு நேரும் சில அசாதாரண நிகழ்ச்சிகள் கூடப் படிப்போருக்கு இயல்பானதாகவே தோன்றுகின்றன.

    முத்துலிங்கத்துடைய உலகத்தில் இயற்கைக்கு நிறைய இடமிருக்கிறது. அது மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இடமளிக்கிறது. இன்று சுற்றுக் சூழ்நிலைபற்றி யார் அக்களை காட்டுவது, சில தருணங்களில், நகைப்புக்கிடமாகக்கூட உள்ளது. முத்துலிங்கத்தின் கவனத்தில் மரம் செடிகளும் மிருகங்களும் அவற்றுக்குரிய முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு மரம் வீழ்த்தப்படும்போதோ ஒரு வீட்டுப் பிராணி கொல்லப்படும்போதோ முத்துலிங்கத்துக்கு வருத்தம் இருக்கிறது. ஆனால் இந்நிகழ்ச்சிகளை விவரிக்கையில் அவர் மிகையுணர்ச்சியையும் பச்சாத்-தாபத்தையும் வெகு இயல்பாகத் தவிர்த்து அந்த நிகழ்ச்சிகளின் தவிர்க்க வியலாமையையும் குறிப்பிட்டு விடுகிறார்.

    இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், முத்துலிங்கத்தின் நகைச்சுவையுணர்வு. எல்லா மனிதர்களையும் மிகுந்த பரிவோடு பார்க்கும் ஆசிரியர் அவர்களுடைய நடவடிக்கைகளில் உள்ள சில உம்சங்களையும் கவனித்துப் பதிவு செய்கிறார். ஒரு தகவல், நகைச்சுவை நிறைய உள்ள அவருடைய படைப்புகளில்தான் ஆழ்ந்த சோகமும் உள்ளது.

    புனைகதையில் இன்று சாத்தியமான நவீனத்துவம் அனைத்தும் உள்ளடங்கிய அதேநேரத்தில் முத்துலிங்கத்தின் கதைகள் வாசகர்களில் பெரும்பான்மையோருக்கு எளிதில் எட்டக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன'. ஒரு நல்ல புனைகதாசிரியர் மனித நேயமும் ஜனநாயக உணர்வும் பெற்றிருப்பது அவருடைய வெளிப்பாட்டுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது. முத்துலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்.

    சென்னை, 17, டிசம்பர் '97 அசோகமித்திரன்

    1. வடக்கு வீதி

    அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் அலமேலுவின் நடை என்றால் மத்து கடைவது போன்ற ஓர் அழகு. இடைக்கு கீழே நேராக இருக்க மேலுக்கு மாத்திரம் இடமும் வலமும் அசைந்து கொடிபோல வருவாள். அந்த நேரங்களில் சோதிநாதன் மாஸ்ரர் மனசை என்னவோ செய்யும்.

    மனசை தொடுவது ஒன்று; ஆனால் துளைப்பது என்பது வேறு. இப்ப கொஞ்சக் காலமாக இந்த எண்ணம் அவர் மனசைத் துளைத்து வேதனை செய்தது. தலையிடி வந்து போதுபோல இதுவும் விரைவில் போய்விடும் என்றுதான் எதிர்பார்த்தார். போவதற்கு பதிலாக அது நன்றாக வேரூன்றி நின்றுவிட்டது. அவருக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

    சோதிநாதன் மாஸ்ரர் பயந்தங்கொடிபோல நெடுநேரம் வளர்ந்திருந்தாலும் முதுகு கூனாமல் நிமிர்ந்துதான் நடப்பார். நெற்றியிலே பளிச்சென்று திருநீறு. மார்பிலே அங்கங்கே வெள்ளி மயிர்கள் குடியிருக்கும். ஏதாவது தீவிரமாக யோசனை செய்வதென்றால் அவர் மஸாய் வீரன்போல ஒற்றைக்காலில் நின்றுதான் அதைச் செய்து முடிப்பார். நிற்கும் காலில் கச்சை முடிச்சுகள் ஆலம் விழுதுகள்போல கீழும் மேலுமாக ஓடித்திரியும்.

    அவருடைய வாடகை அறையில் நாற்பது வருடத்திய பத்திரிகை நறுக்குகள் இடத்தை அடைத்துக்கிடந்தன. அவ்வப்போது வெளியாகிய அவருடைய கட்டுரைகளும் அதில் அடக்கம். இவற்றையெல்லாம் ஒருநாளைக்கு தரம் பிரித்து அடுக்கி வைக்கவேண்டும் என்று அவருக்கு ஆசைதான். ஆனால் அந்தச் சிறு அறையில் அது நடக்கிற காரியமா? இவ்வளவு காலமும் சிலந்தியுடனும், கரப்பான் பூச்சியுடனும்,சொடுகுடனும் வாழ்ந்து பழகிவிட்டார். அவற்றைவிட்டுப் பிரிவதும் அவருக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம்.

    அவர் வெக சிரத்தை எடுத்து அந்த அறையை அப்படி அழுக்குப்பட வைத்திருந்தார், என்றாலும்கூட வெளியே போகும்போது நன்றாகக் கஞ்சிபோட்டு சலவை செய்த உடுப்பை அணிந்து கைகளை 15 டிகரி கோணத்தில் விரித்துக் கொண்டுதான் நடப்பார். பார்ப்பவர்களுக்கு உடனே மரியாதை செய்யத்தோன்றும். அப்பழுக்கில்லாத மனிதர் என்றுதான் எல்லோருக்கும் அவரை நினைத்திருந்தார்கள்.

    குறையே இல்லாத சோதிநாதன் மாஸ்ரரில் இரண்டே இரண்டு குறைகளை மட்டும் சொல்லலாம். கட்டுரை எழுதத் தொடங்கினால் அவருக்கு நிறுத்தத் தெரியாது.

    Enjoying the preview?
    Page 1 of 1