Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jayakanthan Munnuraigal Part - 1
Jayakanthan Munnuraigal Part - 1
Jayakanthan Munnuraigal Part - 1
Ebook290 pages1 hour

Jayakanthan Munnuraigal Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜெயகாந்தன் நூல்கள் அனைத்திலும் இடம்பெற்றுள்ள 'முன்னுரைகள்' ஒவ்வொன்றும் வாசகர்களின் கவனத்தையும் கருத்தையும் பெரிதும் ஈர்த்திருக்கின்றன. பலர் அவற்றை பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள்.

முன்னுரைகளை ஒழுங்குபடுத்தி அவை எந்தெந்த தொகுதியில் வருகின்றன, அத்தொகுதியில் உள்ள மற்ற கதைகள் என்னென்ன, எந்தெந்த ஆண்டுகளில் எழுதப்பட்டன என்பனவும் இதில் உள்ளன.

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580103906929
Jayakanthan Munnuraigal Part - 1

Read more from Jayakanthan

Related to Jayakanthan Munnuraigal Part - 1

Related ebooks

Reviews for Jayakanthan Munnuraigal Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jayakanthan Munnuraigal Part - 1 - Jayakanthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜெயகாந்தன் முன்னுரைகள் பாகம் – 1

    Jayakanthan Munnuraigal Part – 1

    Author:

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்க்கை அழைக்கிறது

    இனிப்பும் கரிப்பும்

    கை விலங்கு

    தேவன் வருவாரா?

    மாலை மயக்கம்

    பிரம்மோபதேசம்

    யாருக்காக அழுதான்?

    யுகசந்தி

    உன்னைப்போல் ஒருவன்

    உண்மை சுடும்

    புதிய வார்ப்புகள்

    பிரளயம்

    கருணையினால் அல்ல

    பாரீஸுக்குப் போ!

    சுயதரிசனம்

    கோகிலா என்ன செய்துவிட்டாள்?

    இறந்த காலங்கள்

    ரிஷிமூலம்

    சில நேரங்களில் சில மனிதர்கள்

    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

    குருபீடம்

    சினிமாவுக்குப் போன சித்தாளு

    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

    சக்கரம் நிற்பதில்லை

    இந்த நேரத்தில் இவள்

    முன்னோட்டம்

    அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்

    நினைத்துப் பார்க்கிறேன்

    நினைத்துப் பார்க்கிறேன்

    சுதந்திரச் சிந்தனை

    ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்

    ஒரு பிரஜையின் குரல்

    வாழ்விக்க வந்த காந்தி

    பாரதி பாடம்

    வாழ்க்கை அழைக்கிறது

    (ஆகஸ்டு, 1957)

    நாவல்

    இது எனது முதல் நாவல். இந்த நாவலில் வரும் பாத்திரங்களிடையே குணமும் உண்டு, குறையும் உண்டு.

    ஏனென்றால், அவர்கள் மனிதர்கள்! நம்மிடையே வாழ்ந்து, தினசரி நம்மோடு பழகும் மனிதர்களும் இதில் உண்டு. நம்மால் ஒதுக்கி வைக்கப்பட்டு, நாம் ஒதுங்கி வந்துவிட்ட மனிதர்களும் உண்டு.

    எனினும் வாழ்க்கை யாரையும் ஒதுக்கி வைத்துவிடவில்லை; அவர்களும் வாழத்தான் வாழ்கிறார்கள்.

    சாரங்கன் நாவலுக்காக உயிர் பெற்றவனல்ல; வாழ்க்கையில் நான் சந்தித்த மறக்கமுடியாத மனிதன்தான் அவன்.

    இந்த நாவலில் நான் கண்ட உண்மைகளை எல்லாம் கூறிவிட்டேன் என்பதில்லை; கூறாமல் மறைத்துவிட்ட விஷயங்களும் உண்டு. எனது கைச்சரக்கும் உண்டு.

    இதில் கூறப்படாத விஷயங்களைக் கூறுவதற்குக் குறுக்கே நின்று ஏதோ ஒன்று தடுத்துவிட்டது.

    இதில் என்னென்ன இல்லை என்பதைப் பார்க்காமல், என்னென்ன இருக்கிறது. எப்படியெப்படி இருக்கிறது என்று கூறுவீர்களானால் அது எனது வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் உதவும் என்று நம்புகிறேன்.

    முதல் பதிப்பிலிருந்தபடியே பின்னர் வந்த மறு பதிப்புகளில் எவ்வித மாற்றமும் செய்யாமல் என் முதல் ‘படைப்பு’ என்று கருதி அப்படியே விட்டிருக்கிறேன். இதை நல்ல முறையில் வெளியிட்டுள்ள மீனாட்சி புத்தக நிலையத்தாருக்கு என் நன்றி என்றும் உரியது.

    இனிப்பும் கரிப்பும்

    (ஆகஸ்டு, 1976)

    சிறுகதைத் தொகுதி

    1. இனிப்பும் கரிப்பும்

    2. பிணக்கு

    3. தாலாட்டு

    4. ஓவர்டைம்

    5. நிந்தாஸ்துதி

    6. நந்தவனத்தில் ஓர் ஆண்டி

    7.தாம்பத்தியம்

    8. பற்றுக்கோல்

    9. புகைச்சல்

    10. தர்க்கம்

    11. ஒரு பிரமுகர்

    இத்தொகுதியைப் பற்றிப் பேச வேண்டியவர்கள் நீங்கள், என் கதைகளைப் பற்றிப் பேச வேண்டியது காலம். இடையில் நீங்களும், நானும் பேசிக்கொள்வது எனக்கு உதவும்; உங்களுக்கு உதவுமா என்பது நீங்கள் யோசிக்க வேண்டிய விஷயம்.

    நான் பலரோடும் பேசிப் பேசிப் பயின்றவன். வளர்ந்தவன்; அழிந்தவன்கூட. அழிகின்றபோதே வளர்கின்றவன் நான். ஏனென்றால் அப்பொழுதும்கூட உங்களோடு பேசிக்கொண்டே இருந்தேன்.

    பேச்சுத்தான் மனிதனின் பலவீனம். அது எந்த அளவுக்குப் பலவீனமோ, அந்த அளவுக்கு அதுவே அவனது பலமிக்க ஆயுதம்.

    யாரோ சிலர் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்ததாலோ, அவர்களில் ஒருவனாய் நானும் இருந்ததனாலோ, என்னிடம் வந்து ஒருவர் பேசியதனாலோ பல கதைகள் பிறந்திருக்கின்றன.

    பேசுபவர்கள் அப்படிப்பட்ட நோக்கத்தில் பேசுவது கிடையாது. எங்கு எதைக் கண்டாலும், யார் எதைச் சொன்னாலும் அதில் எனக்கு ஒரு கதை காத்துக்கொண்டிருக்கும்; என் மனசின் பக்குவம் அப்படி.

    அவர்கள் பேசிய பேச்சிற்கும், அதிலிருந்து எனக்குக் கிடைத்த கதைக்கும் கொஞ்சமும் சம்பந்தமற்றிருப்பதாகக்கூடத் தோன்றும். என்றாலும், அதற்கு வித்து அவர்கள் பேசியதுதான். ஒருவரின் பேச்சிலிருந்து எனக்குக் கதைக்கு வேண்டிய ‘தீம்’ என்பார்களே அதுவும், நான் கண்ட நிகழ்ச்சிகள் - மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கும். சில சம்பவங்களிலிருந்தும் கதைக்குரிய பாத்திரங்களும், நிகழ்ச்சிகளும் கிடைத்துவிடுகின்றன.

    இப்படியாக என்னைச் சுற்றி இருக்கும் எனது நண்பர்களும், உலகில் நான் காணும் மனிதர்களும் எனக்குப் பேசவும், எழுதவும், சிந்திக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

    நான் சுயம்பு அல்ல; என் உள்ளேயே அமிழ்ந்து அமிழ்ந்து லயம் பெறுவதற்கு. எல்லோரும் சொல்லிக்கொள்வது போல அங்கே - என்னுள்ளே - ஒன்றுமில்லை. எனக்கு வெளியேதான் எல்லாம் இருக்கின்றன. அந்த ‘வெளி’யில்தான் நானும் இருக்கிறேன். எனது ஆத்மாவைப் பற்றியே நான் சிந்தித்துக் கொண்டிருக்க விரும்புவது பிரேத விசாரணைக்கொப்பாகும். ‘அதுதான் இன்பம், அதில்தான் இன்பம்’ என்று சொல்லிக் கொள்வது சேற்றில் கிடக்கும் பன்றி ‘இதுதான் சொர்க்கம்’ என்பதற்கு ஒப்பாகும்.

    ‘சேறு என்ன, சொர்க்கம் என்ன? இரண்டும் ஒன்றுதான்’ என்று அத்வைதம் பேசுகிறவர்கள், ‘சேற்றிலும் இன்பம் இருக்கிறது’ என்று சொல்லிக் கொள்ளட்டும். ஆனால், ‘இதுதான் இன்பம். நானே உயர்ந்தவன் எல்லோரும் இங்கு வாருங்கள்’ என்று அழைப்பதனால் சொர்க்கம் என்பதாக ஒன்று இல்லை என்று அர்த்தமாகி விடாது.

    சொர்க்கம் ஒன்று உண்டு. அது என்னுள் இல்லை; வெளியில் இருக்கிறது. வெளியெல்லாம் நரகம் என்றால் என்னுள் மட்டும் சொர்க்கம் எப்படி இருக்க முடியும்? அந்த சொர்க்கம் முதலில் வெளியில் பிறக்கட்டும்; அதன் பிறகு அது என்னுள் வரட்டும்; வரும்.

    நான் வெளியிலேயே திரிகிறேன். வெளியிலேயே வாழ்கிறேன். உலகை, வாழ்வை, மனிதர்களைக் கூர்ந்து நோக்குவதில் மகிழ்கிறேன். கண்டதை, சொன்னதை, கேட்டதை எழுதுகிறேன்.

    எதையும் நான் கற்பனை செய்ததில்லை. உலகில் யாரும் எதையும் கற்பனை செய்ததில்லை. ஒரு தலை இருக்கக் கண்டுதான் மனிதன் பத்துத் தலையைக் ‘கற்பனை’ செய்தான். தலையையே மனிதன் கற்பனை செய்துவிடவில்லை.

    எல்லோருக்கும் தனித் தனியாகத் தெரிந்த உண்மைகளை ஏனோ, எல்லோருமே நேர் நின்று பார்க்கக் கூசுகிறோம். இந்தக் கூச்சம்கூடப் போலிக் கூச்சம்தான். நான் கண்டதை, அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப்பட்டதை, நான் கேட்டதை அதாவது வாழ்க்கை எனக்குச் சொன்னதை நான் உலகத்துக்குத் திரும்பவும் காட்டுகிறேன்; அதையே உங்களிடம் திரும்பவும் சொல்கிறேன். அது அசிங்கமாக, அது அற்பமாக, அது கேவலமாக அல்லது அதுவே உயர்வாக, உன்னதமாக எப்படி இருந்தபோதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்? அப்படிக் காட்டும் கருவியாய், கண்ணாடியாய், ஓவியமாய், கேலிச் சித்திரமாய், சோக இசையாய், என் எழுத்து இருந்தது என்பதைத் தவிர, மற்றதெல்லாம் உங்களுடையதுதானே, அதாவது நம்முடையதுதானே! இகழ்ச்சிக்கு உரியவன் நானா? நான் மட்டும் தானா? உங்களுக்கு ஒன்றும் பங்கில்லையா?

    நான் பத்து வருஷமாகக் கதைகள் எழுதிய போதிலும் இப்பொழுது ஒரு நான்கைந்து வருஷமாகத்தான் எனக்கு ‘மௌஸ்.’

    இந்த ‘மௌஸ்’ எனக்குப் பிறந்தது ‘சரஸ்வதி’ பத்திரிகையில் நான் எழுதும்போது. அந்தப் பத்திரிகை, நான் எனது மனசில் சிந்திப்பது போலெல்லாம் ‘ரத்தமும் சதையுமாய்’ எழுத இடமளித்து, விளையாடத் தளமமைத்துத் தந்திருந்தது.

    இத்தொகுதியில் உள்ள தலைப்புக்கதை ‘கங்கை’யில் வெளிவந்தது. ‘புகைச்சல்,’ ‘ஓவர் டைம்’ இரண்டும் ஆனந்த விகடனில் வெளிவந்தவை. அவ்வாசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    இத்தொகுதியை வெளியிட முன்வந்த மீனாட்சி புத்தக நிலைய அதிபர் நண்பர் செல்லப்பன் அவர்களுக்கும், அச்சிடுவதிலும் பிழை திருத்திப் புத்தகம் நன்கு அமையவும் உதவி புரிந்த நண்பர்கள் கண. முத்தையா, வ. விஜயபாஸ்கரன் அவர்களுக்கும் நன்றி செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.

    கை விலங்கு

    (ஜனவரி, 1961)

    குறுநாவல்

    ஏன் எழுதினேன்?

    முன்னுரை என்பது எழுதிய ஒன்றைப்பற்றி எழுதுவது என்று நான் நினைத்திருக்கும் ‘சூத்திரம்’ சரியானால் ‘ஏன் எழுதினேன்?’ என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரை வரைவது சிறப்பான முன்னுரையாக இருக்க வேண்டும்.

    ‘இந்நூலைப் படித்து, இது சிறந்ததா இல்லையா? என்று வாசகர்களே தீர்ப்பளிக்க வேண்டும்’ என்பதை எவ்வளவு சம்பிரதாய பூர்வமான தன்னடக்கமாக நீங்கள் கருதுவீர்களோ, அந்த அளவுக்கு இந்த முன்னுரையையும் நீங்கள் கருதலாம்.

    எனக்கு எது சிறப்பு என்று தோன்றுகிறதோ அதைத்தான், அதை மட்டுமே, நான் செய்கிறேன். எனது செயலாற்றலில் உள்ள அந்தரங்க சுத்தியைப்பற்றி இன்னொருவரிடம் (அவர் எனது மிகச் சிறந்த வாசகராகத்தான் இருக்கட்டுமே, அவரிடம்) பறையடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அதைப் பிறர் உணர்வதுதான் சிறப்பு.

    எனினும், இந்தக் ‘கை விலங்கு’ எழுதப்பட்ட சம்பிரமத்தைப் பற்றிக் கொஞ்சம் பேசுவது நல்லது. ஏனெனில், நாவலைக் கண்டு நான் மிரண்டு ஓடுகிறவன். அது என்னவோ மிகப் பெரிய அசுர - தேவ சாதனை என்று உள்ளூர எண்ணி, சிறந்த நாவல் ஒன்றைப் படிக்க நேர்ந்தால் அவ்வாசிரியனைக் கண்டு பிரமித்துப் போகிறவன். நாவல் என்ற பேரில் ‘அரை வேக்காட்டில் ஒன்றை அவித்துப் போட்டுத் தோற்றுப்போனேன்’ என்ற நினைப்போடு ஒதுங்கிக் கிடந்தவன் (நாவல் விஷயத்தில்).

    தமிழில் வரும் நாவல்களில் ஓரிரண்டைப் படித்தும்கூட நானும் ஓர் அரை வேக்காட்டு நாவலை எழுதிச் சலிப்புற்ற பின்னும் கூட நாவலின் மீது எனக்கிருக்கும் பிரேமை குறையவில்லை. என்றாவது ஒரு நாள் தமிழில் இணையற்ற நாவலொன்றை நான் சிருஷ்டித்தே தீருவேன் என்று பேராசைப்படும் குணம் வளர்ந்து வருகிறது, சமீபகாலமாய்.

    அந்தப் பேராசையை நடைமுறைக்குக் கொண்டுவரத் தடையாக இருப்பவை எத்தனையோ காரணங்கள். அவை ஒரு புறம் இருக்கட்டும்.

    இப்படிப்பட்ட பேராசைக்காரனாகிய எனக்கு ‘கல்கி’ பத்திராதிபரான திரு. சதாசிவம் அவர்களிடமிருந்து கடந்த வருஷம் மார்ச்சு மாதத்தில் ஒரு கடிதம் வந்தது. அது எனக்கு மட்டும் பிரத்யேகமாக வந்ததன்று. பல தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கலாம். அதில், ஐந்தாறு இதழ்களுக்குத் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கத்தக்க அளவுக்கு வாராவாரம் ஆவலைத் தூண்டும் திருப்பங்களோடு ஒரு நாவலை எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தார்கள்.

    ‘கல்கியில் 25 பக்கங்களுக்கு வருகிற மாதிரி ஒரு குறுநாவலை எழுதி அனுப்ப முயல்கிறேன். ஆனால், அது வாரா வாரம் ஆவலைத் தூண்டும் திருப்பங்கள் அமைந்ததாய் இருக்காது’ என்று பதில் எழுதினேன். பிறகு புத்தாண்டு மலரில் ஒரே இதழில் பிரசுரிக்கத் தகுந்த குறு நாவலாக அதை எழுதலாம் என்ற ஒப்பந்தத்தில் நான் இந்தக் கைவிலங்கு எழுதினேன்.

    இந்த நாவலை எழுதுவதற்காக நான் ஜெயிலுக்குப் போய் தண்டனை அனுபவிக்கக்கூட விரும்பியதுண்டு.

    ஏனென்றால் நேரடியான அனுபவத்தோடு எழுதுவதுதான் சிறப்பு என்பது எனது கொள்கை. என்றாவது ஒரு நாள் நான் ஜெயிலுக்குப் போகவேண்டும். போவேன் என்ற நம்பிக்கையில் இந்தக் கதைக்குரிய விஷயத்தை மனசில் சிறை வைத்திருந்தேன். எனினும் ஜெயிலில் பலகாலம் வாழ்ந்திருக்கும் பல நண்பர்களிடம் பல்வேறு ஜெயில்களைப் பற்றியும் பேசிக் குறிப்புக்கள் சேகரித்தேன்.

    ஜெயிலில் சில காலம் வாழ்ந்த என் நண்பரொருவர் அந்த ஜெயிலின் சூப்பிரண்டென்டாக இருந்த ஒரு கொடுமைக்கார அதிகாரியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பொழுதுபோக்குப் பேச்சிலிருந்துதான் இந்தக் கதை உருவாயிற்று,

    என் நண்பர் வர்ணித்த அந்தக் கொடுமைக்கார சூப்பிரண்டென்டுக்குப் பதிலாக ராகவையரை என் மனம் ஸ்வீகரித்தது. நேரடியான அனுபவங்கள் எனக்கிருந்தால் அந்தக் கொடுமைக்காரனிடமே இந்த ராகவையரை நான் கண்டிருப்பேன். அது இல்லாமையினால் முரண்பாடுகளை விவரிக்க என்னால் இயலாது போயிற்று. அதனால்தான் ராகவையர் ஒரு கற்பனை பாத்திரமாகவே எனக்கு இப்பொழுதும் தோன்றுகிறார். வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று சித்தரிப்பதே அது எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காகத்தானே? அப்படி எனது நல்லுணர்வில், மனித வர்க்கத்தின் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையில் பிறந்தவர் ராகவையர். எனினும், அவர் நம்பமுடியாத, இயற்கைக்கு ஒவ்வாத படைப்பல்ல.

    மனிதனைக் கெட்டவனாகச் சித்தரிப்பது ரொம்பச் சுலபம். அதேபோல் மனிதனை மகாத்மாவாகச் சித்தரிப்பதும் சுலபம். ஏனெனில் இரண்டிலும் உண்மையைவிட, வாழ்க்கையைவிட நமது கருத்துக்கள் வலுப்பெற்று வாசகரை ஏதாவது ஒரு பக்கம் தள்ளிவிடும்.

    ஆனால், மனிதனை மனிதனாக அதாவது ரஜோ குணமும், தமோ குணமும் பின்னிப் பிணைந்த, கெட்டதும் நல்லதும் கலந்து, ஒன்றை ஒன்று மிஞ்சப் போராடி ஏதோ ஒன்று இறுதியில் வெற்றிபெற்று ஒரு பாத்திரத்தை இன்னது என்று நிலைநிறுத்தும் யதார்த்தமான பாத்திரப் படைப்பாக ஓர் அசல் மனிதனைக் காட்டிவிடும் காரியம் அவ்வளவு சாமான்யமானது அல்ல. அதற்குப் புத்தகத்தைப் படிப்பதுபோல் மனிதனைப் படிக்க வேண்டும். நான் அந்த நண்பர் சொன்ன சூப்பிரண்டென்டைப் படிக்கவில்லை; ஆனாலும், முழுக்க முழுக்க கற்பனையாக இருக்கக்கூடாது என்பதற்காக எங்கோ நான் படித்த ஒரு சிறந்த மனிதருக்கு இந்த சூப்பிரண்டென்டு உத்தியோகத்தைக் கொடுத்தேன். அதனால் அவரை உங்கள் பக்கத்தில் நிறுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு.

    இப்படியாக, இந்த நாவலை எழுத என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்று இருந்தேனோ அவற்றுக்கெல்லாம் மாற்றுகண்டு ஒரு நம்பிக்கையுடன் எழுத உட்கார்ந்தேன். ஆகையால், இதில் ஏதும் குறைகாணும் என் நண்பர்கள் எனது அனுபவமின்மைக்காக மன்னிக்க வேண்டும்.

    ***

    நான் எழுதிய அளவுக்குப் பூரணமாக இதை நீங்கள் பத்திரிகையில் படித்திருக்க முடியாது. யாது காரணம் பற்றியோ, என் அனுமதியின்றியே இக் குறுநாவல் வெட்டிக் குறைக்கப்பட்டுப் பாதியளவோ அல்லது பாதிக்கும் கொஞ்சம் கூடுதலாகவோ பத்திரிகையில் வெளிவந்தது. இப்பொழுது கல்கியில் வெளியாவதற்கு முன் நான் எழுதியது அப்படியே கொஞ்சங்கூட மாற்றப்படாமல், திருத்தி எழுதப்படாமல் புத்தகமாக வெளிவருகிறது.

    எனது முழுக் கையெழுத்துப் பிரதியையும் நான் திரும்பப் பெற்றுக்கொண்டு வரும்போதுதான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது.

    ‘இதை நான் ஏன் எழுதினேன்!’

    நாவல் எழுதுவதற்குகந்த சந்தர்ப்பமும், மனோ நிலையும் இல்லாத இந்த நிலையில், ‘நாவலெட்’ என்று சொல்கிறார்களே அந்த மாதிரி ஒன்று நான் எழுதப்போகும் நாவலுக்கு ஒரு முதற்படி போல ஒரு சிறு முயற்சி செய்து பார்க்கலாமே என்ற நினைப்புத்தான்.

    தமிழில் 15 பக்கத்துக்கு ஒரு சிறுகதை எழுதி அதைக் குறுநாவல் என்று சொல்லுகிறார்கள்.

    நாமாவது ‘இதுதான் குறுநாவல்’ என்று ஒன்றை எழுதுவோமே என்று நானே சில விதிமுறைகள் விதித்துக்கொண்டு கூடியவரை விஷயத்தால் விதிமுறையோ அல்லது விதிமுறைகளால் விஷயமோ பாதிக்காத அளவுக்கு என்று நினைக்கும் போது இந்தக் கைவிலங்கு ‘தீம்’ ரொம்பவும் பொருந்தி வந்தது.

    எழுதி முடித்ததும் நான் ரொம்பவும் திருப்தியுற்றேன். எப்படியிருப்பினும் சுத்தமாக, என்னவோ ‘குறுநாவல் குறுநாவல்’ என்கிறார்களே அது இதுதான் என்ற தெம்பை எனக்கு நானே ஊட்டிக் கொள்ளவே நான் இதை எழுதினேன்.

    ஆனால், அது பத்திரிகையில் வரும்பொழுது வழக்கமாக அவர்கள் வெளியிடும், 15 பக்க சிறுகதையாகப் போனதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்.

    அவையெல்லாம் ஒருபுறமிருக்க, இப்படி ஒரு முயற்சிக்கு என்னைத் தூண்டியவர்கள் என்ற முறையில், அவர்கள் தூண்டுதல் இல்லாமல் நான் இதை எழுதி இருக்கமாட்டேன் என்று மனப்பூர்வமாய் நான் எண்ணுகின்ற அளவில், கல்கி ஸ்தாபனத்தாருக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்பொழுது நான் எழுதியது முழுக்கவும் புத்தகமாக வெளி வருவதே, அவர்கள் பழுதுபடாமல் பாதுகாத்துக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்ததனால்தானே! கல்கி ஸ்தாபனத்தாருக்கும் இதை முழுமையாகப் புத்தக வடிவில் வெளிக்கொணரும் மீனாட்சி புத்தக நிலையத்தாருக்கும் என் மனப்பூர்வமான நன்றி உரியது.

    தேவன் வருவாரா?

    (ஜூலை, 1961)

    சிறுகதைத் தொகுதி

    1. தேவன் வருவாரா?

    2. பொம்மை

    3. இரண்டு குழந்தைகள்

    4. குறைப்பிறவி

    5. பேதைப் பருவம்

    6. துறவு

    7. சோற்றுச் சுமை

    8. முச்சந்தி

    9. யந்திரம்

    10. தோத்தோ

    11.

    Enjoying the preview?
    Page 1 of 1