Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Buddhar Piran
Buddhar Piran
Buddhar Piran
Ebook1,105 pages9 hours

Buddhar Piran

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Gauthama Neelambaran was born on 14th-June 1948, and left this world on 14'th September 2015 is an Eminent Journalist & Novelist rendering unprecedented service for more than forty years in Tamil literary world. His contributions to Tamil Literature starts with his first work “Buddharin Punnagai” - a Tamil short story. This story was published in “Swadesamitran” – Tamil daily newspaper during the year 1970. He had penned over 200 short stories on history and social genre, poems, articles and 65 Historical Novels and Dramas. Many of his historical plays has been broadcasted in “All India Radio” and telecasted in Chennai Doordharsan TV Channel. He had also penned down over 10 Spiritual books on Hindu Religion & Philosophy. He had worked in various famous & Prestigious Tamil Journals like Deepam, Idhayam Pesugiradhu, Gnana Bhoomi, Mayan, Maniyan Matha Ithazh, Ananda Vikatan, Kungumam, Muththaram and Kunguma Chimizh for over 40 years and retired from his journalist job in October 2014. Some of his significant works in Historical Novels includes, Sethu Banthanam, Chozha Vengai, Raja Ganganam(Ezhavendhan Sangili), Mohini Kottai, Vijaya Nandhini, Masidoniya Maaveeran, Nila Mutram, Kalinga Mohini, Nayana Dheepangal, Maruthanayagam, Sanakiyarin Kadhal, Vetri Thilagam, Vengai Vijayam, Kochadayan, Suthanthira Vengai ( History of King Poolithevan, a foremost freedom fighter in South India). Driven by his interest toward “Gautama Buddha” he had penned down the detailed Life History of Buddha which was published in “Mutharam Tamil Weekly” as weekly episodes for nearly 3 ½ years. This work was later compiled & published as a book “BuddharPiran”. He was survived by his wife, K Akila and his son Vijaya Sankar.K who works in an IT organization.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9788193087107
Buddhar Piran

Read more from Gauthama Neelambaran

Related to Buddhar Piran

Related ebooks

Reviews for Buddhar Piran

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Buddhar Piran - Gauthama Neelambaran

    http://www.pustaka.co.in

    புத்தர்பிரான்

    Buddhar Piran

    Author:

    கௌதம நீலாம்பரன்

    Gowthama Neelambaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    போதிமாதவனின் பேரொளி

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    அத்தியாயம் 81

    அத்தியாயம் 82

    அத்தியாயம் 83

    அத்தியாயம் 84

    அத்தியாயம் 85

    அத்தியாயம் 86

    அத்தியாயம் 87

    அத்தியாயம் 88

    அத்தியாயம் 89

    அத்தியாயம் 90

    அத்தியாயம் 91

    அத்தியாயம் 92

    அத்தியாயம் 93

    அத்தியாயம் 94

    அத்தியாயம் 95

    அத்தியாயம் 96

    அத்தியாயம் 97

    அத்தியாயம் 98

    அத்தியாயம் 99

    அத்தியாயம் 100

    அத்தியாயம் 101

    அத்தியாயம் 102

    அத்தியாயம் 103

    அத்தியாயம் 104

    அத்தியாயம் 105

    அத்தியாயம் 106

    அத்தியாயம் 107

    அத்தியாயம் 108

    அத்தியாயம் 109

    அத்தியாயம் 110

    அத்தியாயம் 111

    அத்தியாயம் 112

    அத்தியாயம் 113

    அத்தியாயம் 114

    அத்தியாயம் 115

    அத்தியாயம் 116

    அத்தியாயம் 117

    அத்தியாயம் 118

    அத்தியாயம் 119

    அத்தியாயம் 120

    அத்தியாயம் 121

    அத்தியாயம் 122

    அத்தியாயம் 123

    அத்தியாயம் 124

    அத்தியாயம் 125

    அத்தியாயம் 126

    அத்தியாயம் 127

    அத்தியாயம் 128

    அத்தியாயம் 129

    அத்தியாயம் 130

    அத்தியாயம் 131

    அத்தியாயம் 132

    அத்தியாயம் 133

    அத்தியாயம் 134

    அத்தியாயம் 135

    அத்தியாயம் 136

    அத்தியாயம் 137

    அத்தியாயம் 138

    அத்தியாயம் 139

    அத்தியாயம் 140

    அத்தியாயம் 141

    அத்தியாயம் 142

    அத்தியாயம் 143

    அத்தியாயம் 144

    அத்தியாயம் 145

    அத்தியாயம் 146

    அத்தியாயம் 147

    அத்தியாயம் 148

    அத்தியாயம் 149

    அத்தியாயம் 150

    அத்தியாயம் 151

    அத்தியாயம் 152

    அத்தியாயம் 153

    அத்தியாயம் 154

    அத்தியாயம் 155

    அத்தியாயம் 156

    அத்தியாயம் 157

    அத்தியாயம் 158

    அத்தியாயம் 159

    அத்தியாயம் 160

    அத்தியாயம் 161

    அத்தியாயம் 162

    அத்தியாயம் 163

    அத்தியாயம் 164

    அத்தியாயம் 165

    அத்தியாயம் 166

    அத்தியாயம் 167

    அத்தியாயம் 168

    அத்தியாயம் 169

    அத்தியாயம் 170

    அத்தியாயம் 171

    அத்தியாயம் 172

    அணிந்துரை

    ந.ஆவுடையப்பன்

    தனி அலுவலர்,

    மேனாள் இயக்குநர்,

    நூலக வளாகம் கட்டும் பணி,

    கன்னிமாரா பொது நூலகம்.

    சென்னை - 600 002.

    அறவாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்க வல்லது புத்தரின் வாழ்க்கை வரலாறு. வைதிக எதிர்ப்பை முன் வைத்து இந்தியாவில் வளர்ந்த புத்த மதக் கருத்துகள், உலக நாடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கின. ஞானத் தேடலை மிகுதியும் உடைய புத்தரின் கருத்துகள் சங்க காலமான கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் இலக்கிய உலகிலும், அதன் பின்னர் களப்பிரர் கால இலக்கியத்திலும் புகத் தொடங்கின.

    புத்தர் வாழ்க்கை வரலாறு சுவையானது. இல்லறத்திலிருந்து துறவறம் மேற்கொண்ட அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகள் அவரை ஒரு வரலாற்று மாந்தராகவே கொண்டாடச் செய்வன. அவற்றையெல்லாம் நூல் வழியே கற்றறிந்து கவனமுடன் நூலாகத் தந்துள்ளார் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள்.

    விரிவான விளக்கங்களோடும், ஓரளவு கல்வி கற்றோரும் படிக்கும்படியான எளிமையான நடையோடும் அமைந்ததுள்ளது இந்த வரலாற்று நூல். ஆங்காங்கே நாடகம் போல் உரையாடல் நலன் சிறந்துள்ளது. சில இடங்கள் கவித்துவமாக விரிகிறது. புத்தர் உரையாடுவது போன்று வரும் நிகழ்ச்சிகள் படிக்கச் சுவை தருவனவாய் உள்ளன. இந்த நூலாசிரியர் வரலாற்றுப் புதினங்கள் படைப்பவராகவும் இருப்பதால் அத்தகைய நிகழ்ச்சிகள் அழகுறத் தர முடிந்திருக்கிறது.

    ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் தலைப்புகள் தந்திருந்தால் ஒரு புதினத்தைப் படிப்பது போலவே இருந்திருக்கும்.

    வருணனைகளை விரித்துரைக்கும் பாணி இவருக்குக் கைவந்த கலை என்பதனை மெய்ப்பிக்கும் வண்ணம் இவரது வருணனைத் திறன் விளங்குகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒன்று.

    அதோ அநோமை நதிக்கரை புலப்படுகிறது... சில்லென்ற காற்று. மலர்களின் நறுமணம் பூசியபடி வந்து நாசியில் உரசுகிறது. மெல்லென விடியல் வெளிச்சம் எங்கும் பரவுகிறது. அது சாதாரண விடியல் அல்ல. உலகிற்கே ஒரு புதிய விடியலைக் காட்டப் போகும் புனிதன் மாளிகை. மஞ்சம். மகுடம், மங்கையர் களியாட்டம் எனச் சகலமும் துறந்து ஞான வேட்கையுடன் மண்ணில் கால் பதிக்கும் மகத்தான விடியல்.

    என்ற வியப்புடன் நடை இதற்குச் சான்றாகும். உணர்ச்சி மயமான நடைகளும் ஆங்காங்கே விரவிக்கிடக்கின்றன.

    தம் மகனைப் பார்த்துவிட்டு சித்தார்த்தர் வெளியேறும் இடம். சந்தகனிடமிருந்து விடைபெற்றுத் துறவறம் பூணும் நிலையும், சந்தகம் புலம்பலும் இதற்குச் சான்றுகளாம். சாக்கிய இளைஞர்களிடம் சித்தார்த்தர் போர் பற்றிப் பேசும் உரைகள் இன்றைய உலகச் சூழ்நிலைக்குப் பொருந்துவதாய் உள்ளன. போரை எதிர்த்து முழங்கிய அவரது வீர முழக்கம் சிந்திக்கும்படியான சூழலை உருவாக்கி விடுகிறது. சாதிச் சங்கங்கள் குறித்த முரண் புத்தரின் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது என்பதனை இதன் வழி அறியலாம். கோலியர் மீது போர்த் தொடுக்கச் சாக்கிய இளைஞர் முனைந்து நின்றபோது அவர் உரைத்த பேருரை இந்நூலுள் நன்கு பதிவாகியுள்ளது.

    கபிலவஸ்துவில் அமைச்சர் முன்னிலையில் பேசும் கௌதம சித்தார்த்தரின் உள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளமை நினைத்தற் குறியது.

    என் உள்ளம் உறுதியானது. அதைக் குலைக்க எந்தச் சக்தியாலும் முடியாது. வானிலிருந்து கதிரவனே மண்மீது வீழ்ந்தாலும் சரி, இமய மலையே ஆடி அசைந்தாலும் சரி, என் உள்ளத்தின் உறுதி குலையாது. மெய்ப்பொருளை அறியாமல் விடமாட்டேன். புலன் இன்பச் சபலங்கள் ஒருபோதும் என் இதயத்தில் துளிர்விடாது. என் இலட்சியத்தை அடையாமல், பாதியில் அரண்மனைக்குத் திரும்புவதைவிட எரிதழலில் மூழ்குவதே எனக்கு உவப்பானது.

    என்ற உரை அவரின் உள்ளத்துறுதியைத் தெளிவாகக் காட்டும்படி உள்ளது.

    நூலாக்கத்திற்குரிய தகுதி படைத்தவர் கௌதம நீலாம்பரன் அவர்கள் என்பதனை ஆங்காங்கே அவர் காட்டிச் செல்லும் இணைப்புச் செய்திகள் வழி அறியலாம்.

    புத்தர் தொடர்பான கருத்துகள் அனைத்தையும் இந்த ஒரு நாளில் தந்துவிட வேண்டும் என்ற பேரவா அவரிடம் இருந்துள்ளது என்பதற்கான சான்றுகளை நிறையச் சொல்லலாம். ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் கதையோட்டமாய்ச் செல்லும்படியாக நூலை உருவாக்கி இருக்கிறார்.

    புத்தர் பற்றிய நூல்கள் பல வந்திருந்த போதிலும் அவை ஒரு புதினத்தின் சுவை போல அமைந்துள்ளனவா என்பது ஐயமே! எழுநூறு பக்கங்களைக் கடந்த இந்த நூல் படிக்கப் படிக்க இனிமையான ஒரு புதினம் போலவே இருப்பதால் இதன் மதிப்பு கூடியிருப்பதாக உணர்கிறேன். எழுத்தாளர் திரு. கௌதம நீலாம்பரன் அவர்கள் மேலும் பல நூல்களை இந்த வகையில் தருவாராக.

    இந்நூல், ‘முத்தாரம்’ வார இதழில் தொடராக வெளிவந்தபோது மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் இனமானப் பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் தொடரின் சில அத்தியாங்களைப் படித்து, அதன் கருத்தாழம் கருதி முழுமையாகப் படிக்க விரும்பினார்கள். உதவியாளர் மூலம் தொடரின் அனைத்துப் பகுதிகளையும் கன்னிமாரா பொது நூலகத்திலிருந்து நகலெடுத்து பெற்றுக் கொண்டார்கள். தொடராக வெளி வந்தபோது மாண்புமிகு பேராசிரியர் பெருந்தகை அவர்கள் விரும்பிப் படித்த பெருமை இந்நூலுக்கு உண்டு. ஆசிரியர் கௌதம் நீலாம்பரன் அவர்களின் எழுத்துப் பணிக்கு இதைவிட பெரும் அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும். தமிழாய்ந்த பெருமகனார் விரும்பிப் படித்த தொடர், நூலாக வெளிவரும்போது அதற்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மகிழ்வைத் தருகிறது.

    ****

    போதிமாதவனின் பேரொளி

    பேராசியர். முனைவர் இராம.குருநாதன்

    மக்களுடைய மனம் என்கிற நிலத்தில் தருமத்தைப் பயிர் செய்பவன் நான். ஞானம் ரறிவே என் கலப்பையும், நுகத்தடியும், தீ வினை அச்சமே எனது தார்க்கோல். விடா முயற்சி என்கிற காளைகள் இந்த ஏரை இழுக்கின்றன. கவனமே நான் விதைக்கும் விதைகள். நல்லொழுக்கமே நான் பாய்ச்சும் நீர். சொல், செயல், உணவு ஆகியவற்றில் மிதமாய் இருத்தல் என்பதே என் பயிர்க் கண்காணிப்பு. ஆசை என்னும் களைகளைப் பறித்தெறிதலே களையெடுப்பு. என் வயலில் வரப்புகளோ, விளிம்புகளோ இல்லை... இந்த வயலில் விளைவது என்ன தெரியுமா? என்றும் அழிவில்லாத - மரணமில்லா - நிர்வாண அமுதம்தான். என்னைப் போன்ற உழவுப்பணியை எவன் மேற்கொள்கிறானோ அவன் துன்பமற்ற நிலையினைப் பெறுவான்.

    (சுத்தநிபாதம் - காசி பரத்துவாஜ சூத்திரம்)

    கௌதம புத்தர் முழுமதி நாளில் பிறந்த முழுமதி! அவர் அன்பின் நிறைமதி! அறவாழி அந்தணர்! உலகு அறம் வழி உய்ய வேண்டும் என்பதில் கருத்திருத்திய மெய்ஞ்ஞானி! தாமரையில் தவமிருந்த தவம்.

    என் நண்பர் எழுதிய இந்த நூல் எனக்கு அளிக்கப்பட்ட அன்புத் தண்டனை. அவரது உள்ளச் சிறையில் இருப்பதால் இந்த அன்புத் தண்டனையை ஏற்றுக் கொண்டேன். வயது அறுபது கடந்த நிலையில் நான் பரிபக்குவ நிலைக்கு வந்துவிட வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை - இந்நூலிற்கு என்னை அணிந்துரை எழுதச் சொன்னார் போலும்!

    புத்தரைக் குறித்த நூல்களும், ஆய்வுகளும் பரந்த அளவில் எழுதப்பட்டன. எழுதப்பட்டும் வருகின்றன. அவரைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. நண்பர் அவற்றையெல்லாம் ஒருங்கு திரட்டி நடுநிலையோடு இதனை உருவாக்கியுள்ளார்.

    புத்தர் கபிலவஸ்துவில் பிறந்தது முதல். அவர் ஒரிசாவில் பிறந்ததாகக் கருதும் இன்றைய ஆய்வு வரை தகவல்களைத் திரட்டி நல்லதொரு நூலாகப் படைத்துள்ளார். அதற்கான உழைப்பும் ஆர்வமும் நூலாசிரியரிடம் குன்றாமல் இருந்து வந்துள்ளமையைப் பாராட்ட வேண்டும். கௌதம நீலாம்பரனின் உள்ளத்தில் புத்தர் ஒளிர்ந்து இதனை உருவாக்கச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது.

    கௌதம புத்தர் பற்றிய தமிழ்ஃஆங்கில நூல்களையும், திரிபிடகம் மற்றும் பௌத்தம் குறித்த தமிழ் இலக்கியம் முதலியவற்றையும் படித்தறிந்து இதனை எழுதியுள்ளார். யுவான் சுவாங். பாஹியான் புத்தர் பற்றி எழுதி வைத்த குறிப்புகள் முதலியவற்றையும் ஆங்காங்கே எடுத்துக் காட்டியுள்ளார்.

    வரலாற்றை நூலாக எழுதுவது என்பது சுவையுடையதாய் இருப்பதில்லை என்பது பொது விதி. ரோம் நகரின் வீழ்ச்சி பற்றி நூல் எழுதிய எட்வர்ட் கிப்பன் அதனைச் சுவைபட எழுதியிருப்பதாகக் கூறுவர். ஆயின். தனிப்பட்ட ஒருவரது வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது அதனை ஒருவர் சுவைபடத் தர முடியுமா? அது நடுநிலையாக அமையுமா? என்றெல்லாம் சிந்தனை செய்ய வேண்டியிருக்கிறது. நண்பர் கௌதம நீலாம்பரன் இதனை வாசகர் ஆர்வமுடன் படிப்பது போலத் தந்துள்ளார். இஃது எல்லோருக்கும் கைவராது. நூலாசிரியர் வரலாற்று நாவலாசிரியராகவும், பத்திரிகையாளராகவும் இருப்பதால் இலக்கிய நடையையும். இதழியல் நடையையும் சம அளவில் விரவிப் படிப்பதற்குச் சுவை மிகுந்த நாவல் போலவும், காட்சிகளைக் கவினுறக் காட்டும் திரைப்படம் போலவும் இவரால் இவ்வாறு தர முடிந்திருக்கிறது.

    நடை எளிமை, காட்சிப்பட ஒவ்வொன்றையும் எழுதிச் செல்லும் இலாவகம், வருணனையை ஆங்காங்கே ஒரு படைப்பாசிரியருக்கே உரிய வகையில் விளக்கமுறக் காட்டல். நிகழ்ச்சிகளை ஒருங்காகவும், ஒழுங்காகவும் நிரல்பட அமைத்தல். கதைபோலச் சில நிகழ்வுகளை ஆர்வ நாட்டம் தோன்றும் வகையில் உணர்த்தல் முதலானவற்றைத் தமக்கே உரிய பாணியில் ஆசிரியர் எழுதியிருப்பது மிகுந்த போற்றுதலுக்குரியது.

    புத்தர் பெருமானின் புகழ் இந்திய அறிஞர்களால் பரவியதைவிட, ஐரோப்பிய அறிஞர்களால் உலகம் முழுவதும் பரவிற்று எனச் சுட்டும்போது.

    ‘தமிழ் மொழியும் தமிழர் வரலாறும் ஜி.யு. போப். கால்டுவெல் போன்ற அறிஞர்களால் எப்படி ஏற்றமும் இணையற்ற பெருமையும் பெற்றனவோ, அதை போன்று புத்தர்பிரானின் புகழ் வெளிச்சமும் பல ஐரோப்பிய அறிஞர்களின் அயரா உழைப்பாலேயே உலகம் முழுக்கப் பரவிற்று’ என்கிறார்.

    சர். ஜான் வில்லியம்ஸ். எஃப். புக்கனன் ஆகியோர் புத்தர் பற்றிப் பரப்பிய கருத்துகளின் வன்மை. நேபாளத்தில் பிரிட்டிஷ் அரசின் பேராளராய்ப் பொறுப்பேற்ற பிரையன் ஹாஃப்டன் ஹக்ஸன் புத்தர் பற்றிய தகவல் திரட்டுவதில் மிகுந்த ஈடுபாடு காட்டியமை. ஃயூஜின் பரனூஃபு பௌத்த வரலாற்றை முறைப்படுத்தி உலக மக்களுக்குப் புத்தரைப் பற்றி உண்மையான கருத்தை வெளிப்படுத்தியமை மற்றும் அலெக்ஸாண்டர் கன்னிங்காம் முதலியோர் அரிதின் முயன்று கண்ட செய்திகள் முதலானவற்றை உள்வாங்கி இந்நூலைப் படைத்திருப்பது நூலிற்கு ஒரு நம்பகத்தன்மை தருகிறது. இந்திய அளவில் புத்த சமயத்தை ஏற்றுப் போற்றி அவரைத் தனிபெரும் நிகழ்வாகக் காட்டிய அம்பேத்கர் பற்றியும் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். பௌத்த நெறி விளக்கத்திற்கு அம்பேத்கர் நூல் ஓர் அறக்கொடையாகும்.

    காரல் மார்க்ஸின் நவீன சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்னும் சித்தாந்தத்தோடு புத்தரின் கொள்கைகளை ஒப்பிட்டு அண்ணல் அம்பேத்கர் தெரிவித்துள்ளதை ஆங்காங்கே காட்டி புத்தரின் கருத்தாக்கங்களுக்கு வலிமை சேர்த்துள்ளார் ஆசிரியர். நேரு, விவேகானந்தர் ஆகியோர் புத்தர் பற்றிச் சுட்டிக் காட்டியிருக்கும் கதையையும், கருத்துகளையும் பொருத்தமான இடத்தில் இடம்பெறச் செய்துள்ளார். புத்தர்க்கும் அவரது வெற்றிக்கும் காரணமானதை இரத்தினச் சுருக்கம் போலச் சுட்டி அவரை அறிமுகப்படுத்தும்போது.

    ‘இந்தியாவில் புரோகிதர்களுக்கும் தீர்க்க தரிசிகளுக்கும் நடந்த போராட்டத்தின் வெற்றிதான் புத்தர்! கடவுளைப் பற்றி நிலவிய அன்றைய கருத்துகளைத்தான் அவர் மறுத்தார். அந்தக் கருத்துகள் மக்களைப் பலவீனர்களாக மூடநம்பிக்கையுற்றவர்களாக ஆக்குவதைத்தான் அவர் மாற்ற எண்ணினார். (41)

    என்ற ஆசிரியரது கண்ணோட்டம் மிக ஏற்புடையது.

    பாரதி பிற்றை நாளில் கனகலிங்கத்தைப் பார்ப்பனராக்கிப் பூனூல் அணிவித்தமைக்கு முன்னுதாரணமாகப் புத்தர், உபாலி என்னும் நாவிதனைச் சமய குரவாக உயர்த்தியதனை எடுத்துக்காட்டுகிறார் (49). உயர்ந்தோன் - தாழ்ந்தோன் என்கிற பேதங்கள் புத்தரின் கண்ணோட்டத்தில் என்றுமே இருந்ததில்லை என்று உரைப்பதிலிருந்து ஆசிரியரின் நடுநிலை இகவாத பண்பினைக் காண முடிகிறது. புத்தரின் கருத்துகள் நாடு முழுவதும் சென்றடைந்தமைக்கு உரிய காரணங்களுள் அவர் சாதி பேதம் பார்த்தது கிடையாது என்பதுதான்! சாதிப் பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும், விலங்குகளை வேள்வி என்ற பெயரில் பலியிடலும் நிறைந்த காலகட்டத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி அதில் வெற்றி கண்டவர் புத்தர்.

    கபிலவஸ்துவில் புத்தர் உதித்த செய்தியை விளக்கும் முன்பு அந்நகரைப் பற்றிய விளக்கம், லும்பினி வன வருணனை ஆகியவை காப்பியப் பாங்குடையன... மாயாதேவி கண்ட கனவும் அழகுற விளக்கப்பட்டுள்ளது. புத்தர் தசபலர் (பத்துவிதப் பண்புகள் நிறைந்திருப்பவர்) என்று நிறுவி இருக்கும் முறை பாராட்டுக்குரியது. இதுகுறித்து நீலகேசிப் பாடலையும் சுட்டிச் செல்கிறார். நிகழ்வுகளை ஆங்காங்கே தொகுத்துச் சொல்லும் முறையும் நன்கமைந்துள்ளது. பருவ காலங்களுக்கு ஏற்ப கபிலவஸ்துவில் மாளிகையின் மாடங்கள் இருந்ததனை அழகுற வருணிக்கிறார் சித்தார்த்தரின் மனப்போக்கை மாற்ற, அவன் தந்தை கிரேக்கத்திலிருந்து மது வகைகளையும், நடன மாதர்களையும் எடுத்தாண்டிருப்பது ஆசிரியரின் ஆய்வுத் தேடலுக்கு அடையாளம். அதேபோல், அம்பேத்கரின் ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலிலிருந்து பல அரிய கருத்துகளை இந்நூலில் பெய்திருக்கின்றார்.

    சித்தார்த்தரின் தந்தை தன் மகனின் மனம் திருமணத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காக மகளிர் பலரை வரவழைத்து அவர்களைக் கொண்டு சித்தார்த்தனை மயக்க முயலுமிடம் திரைப்படக் காட்சிபோல் வருணிக்கப்பட்டுள்ளது. புத்தரின் வரலாற்றை எடுத்துச் சொல்லும் போது இது தேவையா என வினவலாம். அந்த எண்ணம் வராதபடிக்கு ஆசிரியர் கற்பனையும் வருணனையும் தோன்ற சுவையோட அந்நிகழ்வினைக் கூறிச் சென்றுள்ளார். அவர் தந்தை கையாண்ட முயற்சி எதுவும் சித்தார்த்தரிடம் பலிக்கவில்லை. ஆசிரியர் அது பற்றிய விமர்சனமாக,

    கற்கண்டை நோக்கி அலையும் எறும்பாகவும் கௌதமர் இருக்க விரும்பவில்லை. நீரில் விழுந்து கரைந்து போகும் கற்கண்டாக இருக்கவும் அவர் விரும்பவில்லை. கண்ணெதிரே இருக்கிறது என்பதற்காக எதையும் தீண்டிப் பார்க்க அவர் இதயம் விரும்புவதே இல்லை.

    என்னும் ஆசிரியரின் விவரிப்பு நடை சூழ்நிலையை நன்கு புரிந்து கொள்ள உதவும்.

    சித்தார்த்தர் தாம் வழியில் தாம் கண்ட முதியோர், பிச்சைக்காரன், நோயாளி ஆகியோர் பற்றித் தெரிவிக்கும் கருத்துகள் அருமையாக விளக்கம் பெற்றுள்ளன. சித்தார்த்தனுக்கு இருந்த புத்திர பாசத்தை வெளிப்படுத்தி இருக்கும் ஆசிரியரின் நடையில் உணர்ச்சி கலந்த சித்திரத்தைப் பார்க்கலாம். அதேபோல் சித்தார்த்தர் பற்றிய எதிர்மறையான விமரிசனங்களுக்குப் பதில் கூறுவதில் உணர்ச்சி வாய்ந்த உரைநடை வெளிப்படுத்தியது.

    சித்தார்த்தரின் சீரிய சிந்தனைகள் அறிவின் சுய ஒளியால் ஒளிர்பவை. அன்பின் தூய்மையால் மிளிர்பவை. உலகை அவன் பார்த்த பார்வை ஞானப்பார்வை. அச்சம் என்பதே அறியாத சிந்தனைச் சிங்கம் அவன். தன் வீடு, தன் மனைவி, தன் மக்கள் என்னும் தன்னலச் சேற்றில் புதைந்து போகாத சரித்திர நாயகன், உலகோர் உச்சி மீது வைத்து மெச்சிப் புகழும் உத்தமன்; காலத்தால் மூத்த தத்துவன். புத்தரின் புனித வரலாற்றைச் சரியாக வாசிக்காதவர்கள் செய்யும் வீண் விமரிசனங்கள் செந்தணலைச் சிறு வைக்கோலால் கிளறுவதற்கு ஒப்பான செயலாகும்

    என எழுதுகிறார். மகளிரை ஏவிப் புத்தரை மயக்கவும், அவருக்கு அவப்பெயர் உண்டாக்கவும் புறச்சமயிகள் தூண்டிய இழி செயலை ஆசிரியர் தமக்கே உரிய நடையில் சித்தரித்துள்ளார். கிரிஷாகோதமி யசோதரை கண்ட கனவுகள் ஆகியவை வருணனை கலந்த நடையில் விளக்கமுற அமைந்துள்ளன. சித்தார்த்தருக்கு யசோதரை தான் கண்ட கனவை உரைத்தலும் அதற்கு அவர் பதிலிறுத்த சொற்களும் வலிமை வாய்ந்த அழகிய காட்சியின் நடைச்சித்திரமாய் நகர்கின்றன.

    சன்ஸ்தாகர் என்ற சாக்கிய இனத்தவரின் சங்கத்தில் அங்கம் வகித்த புத்தருக்கும் அச்சங்கத்து உறுப்பினர்களுக்கு இடையே நிகழ்ந்த வாதங்கள் குறிப்பிடத்தக்கவை. அன்புதான் சிறந்த வழி. அனைத்தையும் வெல்லக்கூடிய நெறியும் அதுதான் என்ற கருத்துப்பட அச்சங்கத்தில் அவர் உரைத்த கருத்துகள் உலகை வன்முறையிலிருந்து மீட்டெடுக்க உதவும் அறநெறிகள் ஆகும். போரற்ற சமுதாயம் காண விழைந்த புத்தர் அச்சங்கத்தில் முழங்கிய முழக்கத்தை எடுத்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

    உலக வரலாற்றில் மானுட நேயத்தோடு

    போரை எதிர்த்து முழங்கிய முதற் குரல்

    என ஆசிரியர் அந்தச் சூழலைச் சுட்டிவிட்டு, கீதையில் கண்ணன் சொன்ன கருத்துக்கு இணையான இக்கருத்தை அன்று சித்தார்த்த கௌதமர் அடியோடு மறுத்து முழக்கமிட்டார் என்று எழுதிகிறார். பொருளாதார மேதையான மெக் ஐவர், ‘உண்மையான சமுதாயம் என்பது போருக்கு எதிரானது’ என்று கருத்திற்கு இது வலிமை சேர்க்கிறது.

    ஆன்மாவைப் பற்றிய புத்தரின் விளக்கமும் சச்சகனிடம் கூறிய புத்தரின் தன்னிலை விளக்கமும் எளிமையாகவும் தெளிவாகவும் கருத்தை உணர்த்துகின்றன. வாழ்க்கை நுட்பத்தில் வாழ்க்கைத் தவத்தையும் யாழையும் ஒப்பிட்டுக் கூறும் பகுதி ஆசிரியரின் நடைத்திறத்தில் ஒளிர்கிறது.

    ‘யாழின் தந்தியை அதிகம் முடுக்கினால் அறுந்து விடும். நாதம் எழுப்பவியலாது. தந்தி மிகவும் தளர்ந்தால். அதில் நாதம் பிறக்காது. எனவே, வலிவும் மெலிவுமின்றி, சமமாக முடுக்கப்படும் தந்திக் கம்பியில்தான் இனிய இசை மீட்ட முடியும். இது யாழின் இசை மட்டுமல்ல. மானுட சரீரத்தின் வாழ்க்கை நுட்பமும் கூடத்தான்... உடலை அதிகம் வருத்தினால் அறிவாகிய தந்தி அறுத்துவிடும். தத்துவ போதம் காண வழியில்லாது போகும். அளவுக்கு மிஞ்சி உண்டு சுகித்து, உடலை போஷித்தாலோ அறிவென்னும் தந்தி இழை தளர்ந்து இயக்கமற்று, மற்ற மந்த கதியில் நாதமே எழாது போகும்.

    என்ற வரிகள் எண்ணி மகிழக்கூடியதாகும். புத்தர் மாரன் வீசிய மயக்க வலையில் வீழாது. தன்னிலை தாழாதும் வெற்றி கண்ட விதம் நன்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. விசுத்தி பற்றிய விளக்கம், அஷ்டாங்க மார்க்கம் ஆகியன எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கப் பெற்றுள்ளன. உருவேலா வனத்தில் கொடிய பாம்பு புத்தரிடத்து உயிர்ப்பிச்சை வேண்டல், புத்தரைச் சரண் அடைந்த மௌத்கல்யாயனர், சாரீபுத்திரன் பற்றிய செய்திகள் புத்தர் தங்குவதற்காக உபவனப் பூங்காவைப் பொற்காசுகளால் பரப்பிய அநாத பிண்டிதர் குறித்த செய்தி நந்தன் கதை விசாகையின் மாமனாரான மிகாரை நெறிப்படுத்துதல் முதலியன கிளைக் கதை போல அமைந்துள்ளன. புத்தர் விசாகையின் புகுந்தகத்திற்கு வந்து அவளுடைய மாமனாரான மிகாரரைப் பற்றி விசாரிக்கிறார். புத்தரை வெறுக்கும் அவர், புத்தரைக் காணக்கூடாது என்பதற்காக அறையில் கண்ணைக் கட்டிக்கொண்டு ஒளிந்து இருக்கிறார். புத்தர் அவரைப் பற்றி வினவ, புத்தரின் பக்தையான மருமகள், ‘வெளிச்சம் கண்ணைக் கூச வைக்கிறது’ என்று அறைக்குள் இருக்கிறார் எனக் கூறுகிறாள். அவள் கூற்றில் உள்ள விநயத்தை நாமும் புரிந்துகொள்ளுமாறு பொருள் பொதிந்த இத்தொடரை இடம் நோக்கி ஆசிரியர் எழுதுகிறார். புத்தரின் ஒளிவெள்ளம் தன் கண்ணைப் பிற ஒன்றில் செலுத்திவிடாது கூசச் செய்வதான பொருளில் அவள் அத்தொடரைக் கையாள்கிறாள்.

    கடலையும் புத்த சங்கத்தையும் ஒப்பிட்டுக் கூறும் எட்டுக் குணங்கள் அற்புதமானவை ஷேமை என்ற அழகிய வரலாற்று நாவலுக்குரிய தன்மையில் வருணிக்கிறார் ஆசிரியர். புத்தரைக் களங்கப்படுத்த சமணர் ஏவிய சுந்தரி தொடர்பான செய்திகள் புத்தரின் பண்பை உயர்த்திக் காட்டவல்லன. அதேபோல சிஞ்சா என்ற பிராமணப் பெண் செய்த சூழ்ச்சி வேடிக்கையானது. இழிந்த சாதி என்று பிறர் எள்ளி நகைப்போரை எள்ளும் வகையில் அவர்களுக்கு உயர்ந்த இடத்தை அளித்துள்ளமையைப் புத்தரின் வரலாறு உணர்த்தும் உபாலி என்ற நாவிதனுக்கும், துப்புரவுத் தொழிலாளியான சனிதன் என்பவனுக்கும், சோபகா என்ற பறையனுக்கும், சுப்பியா என்ற வெட்டியானுக்கும் வாழ்வளித்துத் தம் சங்கத்தில் சேர்த்துக் கொண்டதை அறியலாம். அவர்கள் தொடர்பான நிகழ்வுகள் புத்தரின் புகழுக்கும் நூலுக்கும் பெருமை சேர்ப்பன.

    நதிநீர்ப் பங்கீடு பற்றிய சிக்கல் இன்னும் இருந்துகொண்டே இருக்கும் இன்றைய சூழ்நிலையை, சாக்கிய இனத்தவருக்கும், கோலிய இனத்தவருக்கும் இடையே நிலவி இருந்த அன்றைய சூழலோடு பொருத்திப் பார்க்கலாம். புத்தர் அவ்வினத்தவர்கள் ஒருவரோடொருவர் இரத்த வெறி கொண்டு தாக்குவதைத் தவித்தார். புத்தர் ரோகிணி ஆற்றுப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தார். (நமக்கும் அப்படி ஒரு புத்தர் கிடைக்கமாட்டாரா) இந்தச் சிக்கலை எடுத்துக் காட்டிவிட்டு ஆசிரியர் உணர்ச்சிவயப்பட அதனை ஒரு படைப்பாளுமை மிக்க ரசனையோடு எழுதுகிறார்.

    எந்த ரோகிணி ஆற்று நீரைத் தங்கள் உதிரத்தால் சிவப்பாக்கி, இரத்த நதியாக மாற்ற சற்று முன் துடித்தீர்களோ அந்த ரோகிணி ஆற்று நீர் இப்போது அவர்களின் பாவங்களையெல்லாம் கழுவியபடி, அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து சிந்தும் கண்ணீரைச் சுமந்தபடி சலசலவென்று அவர்கள் கால்களிடையே ஓடிக் கொண்டிருந்தது.

    என்று புனைவுபட அழகுற வெளிப்படுத்தியுள்ளார்.

    நியக்குரோதா வனம் சென்ற புத்தர் நிகழ்த்திய அற்புதச் செயல் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வாகத் தோன்றுகிறது. அங்கிருந்தும் அதிசய மரம் பற்றி செய்தி வியப்பளிக்கிறது. யுவான் சுவாங் அது பற்றிய அரிய தகவலைத் தந்திருப்பதனை ஆசிரியர் சுட்டிச் சென்றுள்ளார். மாகந்தி பற்றிய நிகழ்ச்சி சாமாவதி ஆகிய பெண்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் வண்ணத்திரைக்குக் கருப்பொருளாகும் வகையில் ஆசிரியரால் தரப்பட்டுள்ளன. ஏழு வகை மனைவி பற்றி சுஜாதா புத்தரிடம் வினவும் ஐய வினா சுவையான நிகழ்ச்சி. ஆலவிகன், அங்குலிமான் ஆகியோர் பற்றிய நிகழ்ச்சிகளில் புத்தரின் புகழுக்குப் பெருமை சேர்ப்பன. அஜாதசத்ரு மற்றும் அவனது ராஜகுரு தேவதத்தன் பற்றிய நிகழ்ச்சிகளும் அவ்வாறே பாடலிபுத்திரம் என்று பெயர் வந்தது பற்றிய தகவல் சுவையானது.

    புத்தரின் இறப்பு பற்றிய பல்வேறு ஐயங்கள் உள்ளன. அவற்றை மெய்ப்பிக்க இயலாவாறு அவரது வரலாறு உள்ளது. எனினும் கந்தன் படைத்தளித்த உணவு அவர்க்குக் கடைசி உணவானது. அவன் மீது பழி தூற்றக்கூடாது என்ற அறிவுரையை ஆனந்தனிடம் தெரிவித்த செய்தியை ஆசிரியர் பதிவு செய்யும் போது, ‘பெயக்கண்டும் நஞ்சுண்டமைந்த அந்த அருளாளரின் நயத்தக்க நாகரிகத்தை, நற்கருணையை என்னென்பது!’ (685) என உணர்த்தியுள்ளார்.

    நண்பர் கௌதம நீலாம்பரன் புத்தரின் வரலாற்றை இவ்வகைகளில் சுவைபட ஓர் உரைநடைக் காப்பியமாகவே படைத்தளித்தமைக்குப் பாராட்ட வேண்டும்.

    இந்த நூல் -

    அமுத மொழிகளால் புத்தருக்கு எடுத்த ஆராதனை.

    ஒளியை நோக்கிய பயணத்திற்கு வழிகாட்டி.

    புத்தர் பற்றி ஊனக்கண் கொண்டு பார்ப்போரின் விழி திறக்கும் ஞான ஒளிவிளக்கு.

    மனம், மெய், மொழி இவற்றைத் தூய்மையாக்கும் மாமருந்து.

    இதனைப் படைத்தளித்தமைக்கு ஆசிரியருக்கு நன்றி சொல்வோமாக!

    ****

    முன்னுரை

    ‘புத்தர்பிரான்’ என்னும் தலைப்பில், அண்ணலார், அமலர், அறவாழி அந்தணராம் புத்தபெருமானாரின் திவ்ய சரிதத்தை எளியேன், ‘முத்தாரம்’ வார இதழில் தொடராகச் சற்றேறக்குறைய மூன்றரை வருடங்கள் எழுத நேர்ந்தது. கருணைக் கடலாம் போதி மாதவரின் திருவருள் என்றே எண்ணுகிறேன்.

    ஆர்வம் ஒன்றைத்தவிர, வேறு பெரிய தகுதிகள் ஏதுமில்லாதவன் நான்.

    இது, வால்மீகி இராமாயணத்தைப் பாற்கடலுடன் ஒப்பிட்டு தன்னைத் தாழ்த்திப் பேசும் கம்பனின் அவையடக்கம் போன்ற ஒன்றல்ல. ‘கல்வியில் பெரியவன் கம்பன்’ எனச் சான்றோரால் போற்றப்படும் மாமேதை கம்பன். அடியேன் மிகமிகச் சாதாரணன்.

    கதைகள் ஏராளம் எழுதிப் பழகிய கைதான் இது. ஆனால், புத்த சரிதம் வெறும் கதையல்ல; உலகம் போற்றும் ஒப்பற்ற மாமணியின் வரலாறு. புத்தர்பிரானைக் கடவுளாகப் போற்றும் பல நாடுகள் இருக்கின்றன. அரசர்கள் பலருடைய வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு சரித்திரச் சிறுகதைகள் பல நான் எழுதியிருக்கிறேன். நவீனங்களும் படைத்திருக்கிறேன். ஆனால், அவற்றில் காதல், வீரம், தந்திரங்கள் எனக் கற்பனைக் காட்சிகள் கலந்தே எழுதப்பட்டிருக்கும். அவ்வாறு இதனை எழுதவியலாதே!

    ஒருவகையில் இது, ஊடகங்களில் செய்தி வாசிப்பவர்களின் நிலை போன்றதே. அவர்கள் செய்திகளை உற்பத்தி செய்யவியலாது, வருகிற செய்திகளை அழகாக, உணர்வுபூர்வமாக வாசிக்க வேண்டும். அவ்வளவுதான். நானும் புத்தர்பிரான் தொடரை எழுத ஏராளமான நூல்களை வாசித்தேன். அவற்றிலிருந்து நான் உள்வாங்கிய விஷயத்தை நேரிய முறையில் தொகுத்து, என் வார்த்தைகளில் வார்த்தெடுத்துள்ளேன். பல மலர்களிலிருந்து தேனைச் சேகரித்து வழங்கும் ஒரு தேனீயின் பணியினைப் போன்றதே என் பணியும்.

    புராணக் கதாயகாலட்சேபம் செய்கிறவர்கள் சிலர். அந்தக் கதைகளுடன் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, தங்கள் கைவசமிருக்கும் கற்பனைச் சரக்கையும் நிறையவே அதனுடன் சேர்த்துக் குழைத்துக் கூறிச் சபையைக் கலகலப்பூட்டி விடுவர். நாளடைவில் அந்தப் புராணக் கதைகளுடன் அச்சம்பவங்களும் ஊடாடிக் கலந்து விடும். சொற்பொழிவு போல் நிகழ்த்தியவற்றைப் பிறகு அவர்கள் நூலாகவும் வெளியிடுவர். அது ஒரு அழுத்தமான பதிவாக அமைந்து விடும். பின்னால் வருகிறவர்கள் அந்தப் பெரியவர்களின் மீதுள்ள மரியாதை காரணமாக அந்த நூல்களைப் புனித நிலையில் வைத்துப் போற்றுவர். அப்போது, தேவையற்ற, உண்மையற்ற, பொருத்தமற்ற பல செய்திகள் பிரித்துப் பார்க்க முடியாத நிலையை எட்டியிருக்கும். இப்படி எத்தனையோ இடைச் செருகல்களால் பல காவியங்களும் தத்துவ நூல்களும் மாசு படிந்து கிடப்பதை நாடறியும்; நல்லோர் அறிவர்.

    ‘இதுபோன்ற ஒரு பிழையை நாமும் செய்துவிடக் கூடாது’ என்கிற எச்சரிக்கை உணர்வுடனேயே இத்தொடரினை நான் எழுதி வந்தேன். இதற்காக நான் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வாசித்தேன் என்றால், வியப்பாக இருக்கும். புத்தர் மீது ஒரு ஈர்ப்பு பெருகி வருகிறது என்றவுடன், அவருடைய படத்தை அட்டையில் போட்டு, ஆளுக்கு ஒரு புத்தகம் அவசர அவசரமாக எழுதிக் குவித்து விட்டார்கள் சிலர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

    சிலர் புத்தர்பிரானை ஒரு நாத்திகர் என்று நிறுவுவதிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்தி, அதற்கு அணி செய்யும் வாதங்களை அள்ளி இறைத்து நூலை எழுதுவதே குறியாகச் செயல்படுகிறார்கள். இன்னுஞ் சிலர் இதற்கு மறுப்பு உரை எழுதுவதாக நினைத்துக்கொண்டு, ‘புத்தர் ஓர் இந்துதான். அவர் பழைய சம்பிரதாயங்களில் சில மாறுதல்களைக் கொண்டுவர மட்டுமே விரும்பினார். அவர் எங்கேயும் தம்மை ஒரு நாத்திகர் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை’ என்று நிறுவுவதற்கான முயற்சிகளையே தங்கள் நூல்களில் செய்துள்ளார்கள்.

    புத்தர்பிரான் தன் பாதையை ‘மத்திய மார்க்கம்’ என்று கூறியவர். நானும் அதையே - அவரையே பின்பற்றி, இந்த இரு அணியினர் பக்கமும் சேராமல், புத்த சரிதத்தைச் சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளேன். ‘முதலில் பலரும் புத்தர்பிரானைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ளட்டும். பிறகு சிந்திக்கட்டும். அதன்பிறகு அண்ணலாரின் அருளால் அவர்களின் உள்விழிகள் திறக்கும்; உண்மைகள் புரியும்’ என்பது மட்டுமே என் எண்ணமாய் இருந்தது.

    ஒரு பிரபலமான நிறுவனத்தின், நீண்டகாலச் சிறப்புடைய வெளியீடான வார இதழில், நூற்றுக்கணக்கான வாரங்கள் புத்தபெருமானின் வண்ணப் படங்களுடன் அவருடைய சரிதம் இப்படியொரு நெடுந்தொடராக இதற்கு முன் எப்போதும் வெளிவந்ததில்லை என்றே எண்ணுகிறேன். அப்படியொரு தொடரினை அடியேன் எழுத நேர்ந்தது மகத்தான வாய்ப்பு என்பதில் ஐயமில்லை. இந்த வாய்ப்பினை எனக்கு நல்கியவர், ‘ஆனந்த விகடன்’ புகழ் திரு. ராவ் அவர்கள். அவருக்கு இந்த வேளையில் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

    திரு. ராவ் அவர்களை நான் நன்கறிவேன். ஆனந்த விகடனில் நானும் சில வருடங்கள் பணிபுரிந்ததுண்டு. அவர் அங்கிருந்து ஓய்வு பெற்றபின், ‘குங்குமம்’ வார இதழின் பொறுப்பாசிரியராகச் சில காலம் பணிபுரிந்தார். அப்போது ‘முத்தாரம்’ வார இதழில் ஒரு புதிய தொடர் ஆரம்பிக்கத் திட்டமிட்டபோது, ‘அது புத்த சரிதத் தொடராக இருந்தால் நல்லது’ என்று திரு. ராவ் கூறியிருக்கிறார். ‘முத்தாரம்’ இதழின் பொறுப்பாசிரியராக அப்போது பணிபுரிந்த திரு. எம்.ஜி. தாஸ் அவர்கள், ‘நமது கௌதம நீலாம்பரன் ஏராளமான தகவல்களை அவர் அடிக்கடி சொல்வது வழக்கம்’ என்று கூற, திரு. ராவ் என்னை அழைத்து, இப்பொறுப்பை ஒப்படைத்தார். மகிழ்வுடன் ஏற்று, எழுதத் துவங்கினேன்.

    ‘முத்தாரம்’ வார இதழில் ‘புத்தர்பிரான்’ தொடர் ஆரம்பமாகி, நாலைந்து இதழ்கள் வெளிவந்ததும், இரண்டு அரிய வாய்ப்புகள் எனக்கு வந்து, என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டன.

    ஒருநாள் ஒரு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் பேசியவர் பெயர் திரு. சுகுணன். ‘தொடர் அருமையாக இருக்கிறது... எங்கிருந்து இவ்வளவு ஆதாரங்களைத் திரட்டி எழுதுகிறீர்கள்?’ என்று வியந்து பேசினார், வாழ்த்தினார். பிறகு, பெரம்பூர் பஸ் நிலையம் அருகில், நெல்வயல் சாலையில் உள்ள புத்தர் ஆலயத்தின் பொறுப்பாளர் என்று தம்மை அறிமுகம் செய்து கொண்ட சுகுணன், அந்த ஆலயத்தில் நிகழும் வைசாக பௌர்ணமி விழாவுக்கு நான் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சம்மதித்தேன். அடுத்த சில நாளில் திரு. சுகுணன் ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களுடன் ஓர் அழைப்பிதழை வைத்து எடுத்துக் கொண்டு வந்து, ‘குங்குமம்’ அலுவலகத்தில் என்னை சந்தித்தார். ஆசிரியர் திரு. ராவ், திரு.எம்.ஜி. தாஸ் ஆகியோருக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தேன். சுகுணனின் அழைப்பை ஏற்று, பெரம்பூர் புத்த ஆலயம் சென்று, அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

    அந்த ஆலயம் மிகுந்த வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. பண்டித அயோத்தி தாசரால் நூறு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட புத்த சங்கத்திற்குச் சொந்தமான ஆலயம் இது. புத்தபெருமான் போதிஞானம் பெற்ற புத்தகயா திருத்தலத்தின் புனரமைப்புக்காக அரும்பாடுபட்ட இலங்கை பிக்கு அனகரிக தர்மபாலரின் பொருளுதவியால் தோற்றுவிக்கப்பட்ட ஆலயம் என்கிற பெருமையும் இதற்கு உண்டு. எத்தனையோ புகழ் வாய்ந்த அறிஞர்களும் மேதைகளும் வந்து தரிசித்து, உரையாற்றிய இந்த ஆலயத்தில் அடியேனையும் அழைத்து உரையாற்ற வைத்த பாக்கியத்தை என்னவென்பது?

    அடுத்த சில நாட்களில் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. வாசவன் அவர்கள் என்னை அழைத்து, ‘ஒரிசா, கல்கத்தா, காசி, சாரநாத், கயா, புத்தகயா போன்ற இடங்களுக்கு ஒரு குழு சுற்றுலா புறப்படுகிறோம். நீங்களும் வரவேண்டும்’ என்றார். எண்பது வயதைத் தாண்டிய அந்த முதுபெரும் எழுத்தாளரை நான் நன்கறிவேன். வாசவனின் வாசகன் நான். ஆனால் நெருங்கிப் பழகியதில்லை. அவர் என்னை, அண்ணலாம் போதி மாதவன் உலவிய புண்ணிய பூமியான புத்தகயாவுக்கும் சாரநாத்துக்கும் வா என்று அழைப்பு விடுத்தது அதிசயம் இல்லாமல் வேறென்ன?

    எழுத்தாளர்கள் பலர் குடும்பத்தோடு புறப்பட்ட அச்சுற்றுலாவுக்கு நானும் என் துணைவியார் திருமதி. கே. அகிலாவுடன் சென்று வந்தேன். ஐயன், அமலன் புத்தர்பிரான் பாதம் பட்ட, ஞானம் பெற்ற திவ்ய திருத்தலங்களைத் தரிசித்து வந்தேன். அப்போது அறிமுகமான நண்பர்களில் திரு. இலா. சுந்தர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். கிறிஸ்துவரான இவர், புத்தர் தொடர் எழுதுபவன் என்பதால் என்னிடம் காட்டிய தனித்த அன்பு மிகவும் நெகிழ்வை அளித்தது. புத்தர் பற்றி மிகுந்த ஆர்வமுடன் என்னிடம் பேசினார். அடுத்த சுற்றுலாவில் இதே குழு நேபாளம் சென்று வந்தது. நான் செல்ல முடியவில்லை. ஆனால், புத்தர் பிறந்த லும்பினியைப் பார்க்கும் வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே என மிகவும் கவலைப்பட்டேன். திரு. இலா, சுந்தர் எனக்காகவே அக்குழவை வற்புறுத்தி, பயணத் திட்டத்தில் சிரமங்கள் ஏற்பட்டபோதும் விடாமல், லும்பினிக்குச் சென்று வந்து, பல விவரங்களைத் தெரிவித்தார். லும்பினி பற்றிய ஆங்கில நூலும் வாங்கி வந்து தந்தார். அடுத்து இவர் சொந்தப் பயணமாகச் சீனாவுக்குச் சென்று வந்தபோதும், அங்கே கண்ட புத்த ஆலயங்கள் பற்றிய குறிப்புகளையும் படங்களையும் ‘நெட்’டில் அனுப்பி வைத்தார். உ.வே.சா. அவர்களின் உரையுடன் கூடிய ‘மணிமேகலை’ நூல் எனக்குத் தேவை என்றதும், படாத பாடுபட்டு, எங்கெங்கோ அலைந்து திரிந்து அந்த நூலை வாங்கி வந்து எனக்களித்தார்.

    தமிழ்தாத்தா உ.வே. சாமிநாத ஐயரவர்கள் சங்கத் தமிழ் நூல்களைத் தேடித் தேடி உரை எழுதிப் பதிப்பித்த போது, ‘மணிமேகலை’ எந்த சமயத்தை விவரிக்கும் நூல் என்பது பிடிபடாமல் பட்ட சிரமங்களை அந்த நூலின் முன்னுரையில் உ.வே.சா. அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ‘புத்த சமயம்’ பற்றிய நூல்தான் மணிமேகலை என்று நிறுவ, ஐயர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மகத்தானவை. மணிமேகலையில் குறிப்பிடப்படும், ‘துடித லோகம், பாரமிதை, அரூபப்பிரமர், உரூபப்பிரமர்’ முதலிய சொற்களுக்கு உள்ள பொருள் அறிந்து கொள்வதிலும், ‘ஆயிரவாரத்தாழியான்’ என்னும் சொல் எந்தக் கடவுளைக் குறிப்பிடுகிறது என்பதை அறிவதிலும் உ.வே.சா. அவர்களுக்கு நிறைய சிக்கல் இருந்திருக்கிறது. மணிமேகலை பற்றிய ஆராய்ச்சியில் உ.வே.சா. அவர்களுக்கு மளூர் அரங்காச்சாரியார் என்கிற கும்பகோணம் கல்லூரி ஆசிரியர் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார். புத்தர் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டினர் பலருக்கும் கடிதங்கள் எழுதியும் பத்திரிகைகளில் அறிவிப்புகள் வெளியிட்டும் செய்திகளைத் திரட்டியிருக்கின்றனர் இவர்கள்.

    புத்தர்பிரான் மகாபரிநிருவாணமுற்ற தருணத்தில், அருகிலிருந்த சீடர்கள் புலம்புவதாக வீரசோழிய உரை நூலில் உள்ள,

    ‘மருளறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலமால்

    என் செய்கேம் யாம்

    அருளிருந்த திருமொழியால் அறவழக்கம் கேட்டிலமால்

    என் செய்கேம் யாம்

    பொருளறியும் அருந்தவத்துப் புரவலரைக் கண்டிலமால்

    என் செய்கேம் யாம்...’

    என்னும் செய்யுளை வாசிக்கும்போது, உ.வே.சா. அவர்களும் ரங்காச்சாரியாரும் நாத்தழுதழுத்தனராம். அந்த சோக உணர்வில் அப்படியே உருகிக் கரைந்திருக்கிறார்கள் இருவரும்.

    இவர்களைப் போன்ற உத்தமர்கள் அரும்பாடுபட்டு புத்த சரிதத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததால்தான் என் போன்றவர்கள் இன்று புத்தபெருமான் பற்றிய நூல்களை எழுத முடிகிறது.

    மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்,

    மளூர் அரங்காச்சாரியார்

    பிரையன் ஹாஃப்டன் ஹக்ஸன் (1834-1894)

    ஃரெடெரிக் மாக்ஸ்முல்லர் (1823-1900)

    லூயி தெலா வாலிபுசின் (1869-1939)

    எமில் செனார்ட்டு (1847-1928)

    ஹெர்மன் ஓல்டன்பர்கு (1854-1920)

    டி.என். ரைஸ் டேவிஸ் (1843-1922)

    இராசேந்திரலால் மித்திர (1824-1891)

    அனகரிக தர்மபால (1864-1933)

    ஹரப்பிரசாத சாஸ்திரி (1853-1931)

    தர்மானந்த கோசாம்பி (1871-1957)

    இந்தப் பெருமக்களின் கடின ஆராய்ச்சி உழைப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால், புத்தர்பிரானைப் பற்றிய உண்மை வரலாறு வெளிச்சத்திற்கு வராமலே போயிருக்கும்.

    கருணை வள்ளலாம் புத்தர்பிரான் பற்றி நம் மக்கள் எப்படி அறிந்து வைத்திருந்தனர் என்பதற்காக ஒரு செய்தி சொல்கிறேன் கேளுங்கள்; கண் கசிந்து போகும்.

    நாற்பது ஆண்டுகளுக்கு முன் நாளிதழ் ஒன்றில் நான் கண்ட செய்தி இது. சேலம் பக்கம் ஒரு சிற்றூர். அங்கே மிகப்பெரிய இரண்டு புத்தர் சிலைகள் முட்புதரில் தலைகுப்புற நெடுங்காலம் கிடந்திருக்கின்றன. திடீரென ஒருநாள் அவற்றைப் புரட்டிப் போட்டவர்கள், எதோ சாமி சிலை என்று தூக்கி நிறுத்த, ஊர் கூடி வந்து பார்த்து மகிழ்கிறது. ‘இது மகாமுனி, ஜடாமுனி சிலைகள். அண்ணன் சாமி, தம்பி சாமி’ என ஏதேதோ கூறுகிறார்கள் சிலர். உடனே ஒரு சிலைக்கு திருநீற்றுப்பட்டையும் குங்கமமும் பூசி, இன்னொரு சிலைக்கு நாமப்பட்டைகள் இட்டு, ஆடு வெட்டிப் படையலிட்டுப் பூசை நடக்கிறது. சில நாள் கழித்து யாரோ ஒரு புண்ணியவான் ‘இது புத்தர் சிலைகளடா’ என்று கூற, அவர்கள் ஆர்வம் சப்பிட்டுப் போகிறது. அப்புறம் ரொம்ப நாள் மழையிலும் வெயிலிலும் காய்ந்து கிடந்தனவாம் அச்சிலைகள். இப்படி எங்கள் ஊரிலும் ஓடைக்கரை ஒன்றிலிருந்து இரு புத்தர் சிலைகள் அகப்பட்டன. அவற்றைக் கொண்டு வந்து மாரியம்மன் கோயில் வாசலில் வைத்து வழிபட்டனர். (நல்லவேளை, பலி எதுவும் தரவில்லை.)

    இச்செய்திகளின் விளைவாக 1969-ஆம் ஆண்டு நான், ‘புத்தரின் புன்னகை’ என்று ஒரு சிறுகதை எழுதினேன். அது அடுத்த ஆண்டு ‘சுதேசமித்திரன்’ நாளிதழின் வார அனுபந்தம் ஒன்றில் பிரசுரமாயிற்று. இதுவே என் முதற் கதை. பிறகு ‘சுஜாதை தந்த பாலன்னம்’, ‘புத்தரின் கருணை’ என்று வானொலி நாடகங்கள் இரண்டு எழுதினேன். இவ்வாறு புத்தர் மீது ஈடுபாடு கொண்டு புத்த சரித நூல்களை ஆழ்ந்து வாசித்து வந்த எனக்கு, இப்படியொரு புனித நூலை என் கரத்தால் எழுத நேர்ந்ததில் ஏற்படும் மகிழ்வை விவரிக்க இயலாது.

    பொறுப்பாசிரியர்கள் மாறினாலும், ‘முத்தாரம்’ வார இதழில் தொடர்ந்து நான் இத்தொடரை எழுத ஊக்குவித்த ‘குங்குமம்’ பப்ளிகேஷன்ஸ் நிறுவன நிர்வாகிகளுக்கும், முதன்மை ஆசிரியர் திரு.த. முருகன், ஆசிரியர் குழவினர், முத்தாரத்தின் தற்போதைய பொறப்பாசிரியர் திரு. வித்தகன் ஆகியோருக்கும் என் இதயப்பூர்வ நன்றி உரித்தாகுக. ‘புத்தர்பிரான்’ தொடரை வாசித்து, வாரம்தோறும் பல ஊர்களிலிருந்து கடிதங்கள் எழுதி, ஊக்குவித்த வாசகர்களின் பெயர்களைப் பட்டியலிட்டால், அது நீண்டுகொண்டே போகும். ஒரு வாசக அன்பர், முத்தாரம் இதழை வாங்கி வாசித்து மகிழ்வதுடன், அதை ஊர்ப் பொது மன்றத்தில் வைத்து எல்லாருக்கும் படித்துக்காட்டச் செய்து மகிழ்வதாகவும் எழுதியிருந்தார். இதற்கெல்லாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்பதை உணர்கிறேன்.

    ‘தீபம்’ எஸ். திருமலை என் அண்ணன் போன்றவர். இவர் உ.வே.சா. அவர்களின் உரைநடை நூல்கள் தொகுதி மூன்றையும். திருவான்மியூரில் உள்ள உ.வே.சா. நூலகத்திலிருந்து வாங்கி வந்து எனக்களித்தார். புத்தபெருமானின் வரலாற்றுத் தொடர்புடைய அத்தனை இடங்களுக்கும் பயணம் செய்து, விவரங்கள் சேகரித்து, அவர் புகழ் உலகறியச் செய்து, அசோக மாமன்னருக்குப் பின் அருந்தொண்டாற்றிய பயணிகளான யுவான் சுவாங், பாஹியான் பற்றிய நூல்களைப் பிரதியெடுத்து (ஜெராக்ஸ்) அளித்து உதவியவரும் இவரே. குங்குமம் நிறுவனத்தில் நெடுங்காலம் பிழை திருத்துநராகப் பணிபுரியும் நண்பர் திரு. எஸ். சண்முகவேல், புத்தர் தொடர்பான ஆங்கில நூல்கள் சிலவற்றை எனக்கு வாங்கித் தந்ததுடன், அவற்றில் உள்ள முக்கியச் செய்திகளை எடுத்துரைத்து உதவி, ஊக்கமூட்டியபடி இருந்தார்.

    கன்னிமரா நூலகராக இருந்த திரு. ஆவடையப்பன் அவர்கள், பலமுறை என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘மாண்புமிகு அமைச்சர், பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் உங்கள் புத்தர்பிரான் தொடரைப் படித்து வருகிறார். விடுபட்ட ஒன்றிரண்டு ‘முத்தாரம்’ இதழ்களை வாங்கி அனுப்பச் சொன்னதாகத் தகவல் வந்தது. நானும் தொடர்ந்து படிக்கிறேன். புத்தர் பற்றிய எல்லா விவரங்களையும் விரிவாக எழுதுங்கள்’ என்று கூறி, ஊக்கமூட்டினார். திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளரும், முரசொலி அறக்கட்டளை விருதுபெற்றவருமான திரு.க.திருநாவுக்கரசு அவர்கள் ஒரு விழாவில் என்னிடம் நேரில், ‘நாங்கள் செய்ய வேண்டிய பணியினை நீங்கள் செய்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து படிக்கிறேன், பாராட்டுகள்’ என்று கூறி, ஊக்கமூட்டினார். ‘முரசொலி’ பொறுப்பாசிரியர் திரு. சக்திவேல் அவர்களும் ஊக்கமூட்டினார். என் எழுத்து முயற்சிகளை என்று வாழ்த்தி, ஊக்கமூட்டும் மூத்த பத்திரிகையாளரும் மிகச்சிறந்த சிந்தனையாளருமான அண்ணன், என் வாழ்வின் வழிகாட்டி, திரு.சின்னக்குத்தூசி அவர்களின் பாராட்டும் ஊக்கமும் இத்தொடருக்கும் கிடைத்தது. மன்னார்குடி கம்பன் கழகத் தலைவரும் முன்னால் எம்.எல்.ஏ.வுமான மன்னை மு. அம்பிகாபதி அவர்கள், நிறையவே வாழ்த்தி, தம்மிடமிருந்த ‘தீக நிகாயம்’ நூலை அனுப்பி உதவினார்.

    இந்த நூலை முழமையாக வாசித்து, மிக விரைவான ஆழமான முன்னுரையினை எழுதி, வாழ்த்தியருளியுள்ளார், பேராசிரியர் இராம. குருநாதன்.

    இத்தனை அன்புள்ளங்களுக்கும், இந்த மகத்தான நூலை இவ்வளவு அழகாக உயரிய பதிப்பாக வெளியிட்டிருக்கும் கவிதா பப்ளிகேஷன் சகோதரர் திரு. சேது சொக்கலிங்கம் அவர்களுக்கும், என் நண்பர் திரு. மாரிமுத்து அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    இதோ ‘புத்தர்பிரான்’ புனித சரித நூல் உங்கள் கரங்களில்...

    - கௌதம நீலாம்பரன்

    1

    சித்தார்த்த கௌதம புத்தர் -

    இந்தப் பெயரை, இந்தியத் துணைக் கண்டத்தின் கம்பீரமான, பெருமிதமிக்க அடையாளங்களுள் ஒன்றாக ஏற்று, இன்று உலகே உச்சரித்து மகிழ்கிறது. புத்தர் பிரான், உலகின் மூத்த சமய தத்துவ ஞானியர்களுள் முதன்மைச் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வதையும் உலகம் ஒப்புக்கொள்கிறது.

    புத்தர் பிரானையே முழுமுதற் கடவுளாக ஏற்று, வணங்கி வாழும் புத்த சமயத்தினர் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் பலவும் இருக்கின்றன.

    இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர், இந்திய தேசத்தில்தான் புத்தர்பிரான் தோன்றினார் என்றபோதும்; அவரின் பெயரால் அமைந்த புத்த சமயம் இந்திய மண்ணில் அழுத்தமாகக் காலூன்றித் தழைக்க முடியாமல் போயிற்று என்பதும்; கடல் கடந்த நாடுகள் பலவற்றில் சென்றே பரவித் தன் வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மைகளே. எனினும் புத்தரின் சமயம், இந்திய மண்ணை நாற்றங்கால் போலாக்கி, சற்றேறக் குறைய ஆயிரம் ஆண்டுக் காலம் எங்கும் பரவிப் பதியனிட்டுத் தழைத்தோங்கியதும் வரலாற்று உண்மையாக இருக்கிறது.

    வடகோடி இமய நெடுவரையின் அடிவாரத்தில் தோன்றிய புத்த சமயம். தமிழ் நிலத்தின் தென்கோடிக் குமரி முனைக் கடல் வரையில் தனது தடம் பதித்தே சென்றிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. ஒன்று, ஊருக்கு ஊர் மண்ணில் சிலையாகப் புதைந்து கிடக்கும் அல்லது ‘புத்தனேரி’, ‘புத்தமங்கலம்’ என ஊரின் பெயராகவே மக்கள் மனங்களில் பதிந்து கிடக்கும்.

    இன்று நம் இந்திய தேசத்தில் புத்த சமயத்தைப் பின்பற்றும் மக்கள் பெருவாரியான எண்ணிக்கையில் இல்லாது போனாலும் கூட, புத்தர் பிரானின் புகழ் சற்றும் மங்காமல் ஒளிவீசத் திகழ்ந்தபடிதான் இருக்கிறது. இந்தியாவின் ஆட்சிச் சின்னமாக நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் அசோக ஸ்தூபி, புத்தர் பிரானின் புகழைப் பேசும் அடையாளம்தான். புத்தருக்குப் பின், இருநூறு ஆண்டுகள் கழித்துத் தோன்றிய மாமன்னன் அசோகன், ‘இந்த மண்ணில்தான் புத்தர் பெருமான் அவதரித்தார்’ என உலகிற்கு அடையாளம் காட்டவே அந்த அழகிய சிங்கத்தூணை அமைத்தான். அந்த ஸ்தூப முகப்பையம், புத்தர்பிரானே நமது திருவாக்கால், தமது கொள்கைப் பிரசங்கத்தை ‘அறவாழி உருட்டுதல்’ என அடையாளப்படுத்திய தர்மச் சக்கரத்தையுமே இன்று நம் தேசம் தனது சொந்த அடையாளங்களாக ஏற்றுக் கொண்டாடி வருகிறது. இவற்றைத்தான் நமது ரூபாய் நோட்டுகளிலும், தேசியக் கொடியிலும், அரசின் முத்திரைகளிலும் நாம் கண்டு மகிழ்கிறோம்.

    மானுட வாழ்வை மேம்படுத்தும் மகத்தான சிந்தனைகளை அள்ளி வழங்கி, ‘மனித நேயம்’ என்றும் அன்பின் வெளிச்ச வாசலைத் திறந்து வைத்து, உலகிற்கே ஒரு புதுப் பாதை காட்டிய ஞானவான் சித்தார்த்த கௌதமபுத்தர். அவரை ‘ஆசிய ஜோதி’ எனப் புகழ்ந்து கொண்டாடுகிறது மேலைநாட்டுத் தத்துவ வித்தகர் உலகம்.

    ஸர் எட்வின் ஆர்னால்டு, ‘லைட ஆஃப் ஏஷியா’ (Light of Asia) என்னும் தலைப்பில் எழுதிய புத்த சரித நூலைத்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ‘ஆசிய ஜோதி’ என்னும் கவிதை நூலாக எழுதினார். மிகப் பிரபலமான அந்நூல் இங்கு புகழ் பெற்றதைப் போலவே, மூல நூல் மேலை நாடுகளில் பிரபலமானதுடன், புத்தரை நன்கு மேலை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது எனலாம்.

    புத்தர் பிரானைப் பற்றிய செய்திகளை அறிவதில் ஐரோப்பியர் மிகவும் ஆர்வமாக இருந்தனர். காரணம், புத்த சமயம் முன்னொரு காலத்தில் மத்திய ஆசியாவிலும், தூர கிழக்கு நாடுகளிலும் பரவியதைப் போலவே, பண்டைய கிரேக்கத்திலும் மாசிடோனியா வரை பரவியிருந்தது. கிறிஸ்துவமும் இஸ்லாமும் தோன்றி இங்கெல்லாம் பரவி, தனக்கென ஒரு தனிச் சிறப்பினைப் பெறுவதற்கு முன், புத்த சமயம் இங்கு தனது அறவாழியை உருட்டி அன்புப் பயிர் வளர்த்திருந்தது.

    கி.மு. 300-இல் மாமன்னன் அசோகன், புகழ் பெற்ற கலிங்கப் போருக்குப் பின் புத்த சமயத்தை ஏற்றுக் கொண்டவுடன், புத்த சமயக் குருமார்களை உலகெங்கும் அனுப்பி, சித்தார்த்த கௌதமரின் சிந்தனைகளை போதிக்கச் செய்தான். அப்போது புத்த சமயம் எகிப்து, சிரியா, மாசிடோனியா, கிரேக்கம் போன்ற நாடுகளில் பரவியது. அசோகன் இலங்கையில் புத்த சமயக் கருத்துகளை எடுத்துரைக்கத் தன் புதல்வன் மகிந்தன் எனப்படும் மகேந்திரனையும், தன் புதல்வி சங்கமித்திரையையும் அனுப்பி வைத்ததையும், இலங்கை மன்னன் திஸ்ஸன் அவர்கள் இருவரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்ததையும், அசோக மன்னனின் புதல்வனும் புதல்வியும் இலங்கை மண்ணிலேயே தங்கள் இறுதிக்காலம் வரை இருந்து, புத்தசமயத் தொண்டாற்றியதையும் மகாவம்சம், தீபவம்சம் போன்ற இலங்கை வரலாற்று நூல்கள் ஆணித்தரமாக எடுத்தியம்புகின்றன.

    ரஷ்ய தேசத்தில் பல இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் அழகிய புத்தர் சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    இந்திய மண்ணிலும்கூட, புத்தர்பிரான் பற்றிய பல்வேறு கள ஆய்வுகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு, அரிய பல உண்மைகளைக் கண்டறிந்து, உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் ஐரோப்பிய அறிஞர்கள்தான். மிக முக்கியமாக புத்தர் வாழ்ந்த காலம், அவர் தோற்றுவித்த சமயத் தத்துவங்கள், புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்த பிற சமய அறிஞர்கள், மாமன்னன் அசோகன் புத்த சமயத்தை ஏற்றதுடன் - புத்தர் வாழ்ந்த இடங்களில் எழுப்பிய நினைவுச் சின்னங்கள் மற்றும் அவற்றில் பொறித்த கல்வெட்டுகள் என ஏராளமான உண்மைகளைக் கண்டறிந்து, உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர்கள் ஐரோப்பிய ஆய்வாளர்கள்தான்.

    முதலிய ஐரோப்பியர்கள், சமண சமயமும் புத்த சமயமும் ஒன்றே என எண்ணினர். மகாவீரருக்கும் புத்தருக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. இந்தக் குழப்பத்தை நீக்கியவரும், சமணமும் பௌத்தமும் வெவ்வேறு சமயங்கள் என எடுத்துரைத்து - மகாவீரரும் புத்தரும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த இருவெறு சமயத் தலைவர்கள் என்பதையும் தகுந்த ஆய்வுகளின் மூலம் மேலை நாட்டினருக்கு உணர்த்தியவரும் மேஜர் காலின் மெக்கன்ஸி என்னும் இங்கிலாந்து நாட்டு அறிஞர்தான். 1782-ஆம் ஆண்டு, ‘மதராஸ் சேப்பர்ஸ்’ என்னும் படைப்பிரிவில் பணியாற்ற, இங்கிலாந்திலிருந்து மரக்கலம் மூலம் புறப்பட்டு வந்த மெக்கன்ஸி, இங்கு நில அளவைத் துறையின் உயரதிகாரியாகப் பணிபுரிய நேர்ந்தது. இதன்மூலம் அவர் பல அரிய கல்வெட்டுகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றைப் படியெடுத்துத் தொகுத்தார். அவை நமது வரலாற்றுத் துறைக்கே ஒரு வாசல் திறந்து புது வெளிச்சம் தந்தது.

    மேஜர் காலின் மெக்கன்ஸி, பிரையன் ஹாஃப்டன் ஹாக்ஸன், அலெக்சாந்தர் கன்னிங்காம், ரைஸ் டேவிஸ் (இவரது துணைவியார் திருமதி கேஃபு ரைஸ் டேவிஸும் கூட), மவுண்ட் ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டன், மாக்ஸ் முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் மட்டும் கடுமையாகப் பாடுபட்டு, பல ஆய்வுகளின் முத்தாய்ப்பான கருத்துகளை வெளியிட்டிராவிடில், இன்று நாம் இத்தனை அருமையாக சித்தார்த்த கௌதம புத்தரைப் பற்றி அறிந்து மகிழ்ந்திருக்கவே முடியாமல் போயிருக்கும். எந்தப் புராணப் புதைகுழிக்குள்ளோ புத்தர் உருமாறிக் கிடந்திருப்பார்! அதற்குத்தான் ஏகப்பட்ட ஜாதகக் கதைகள் வேறு இருக்கின்றனவே! புத்தரைத் திருமாலின் அவதாரம் என்கிற ஆசாமிகளும் இங்கு உண்டுதானே!

    இதைவிட ஒரு வேடிக்கை பாருங்கள்...

    ‘புத்தர் ஓர் ஆப்பிரிக்கர் - கறுப்பர் இன ஆசாமி! எத்தியோப்பிய நாட்டில் பிறந்தவர்!’ என்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்?

    நம்புவீர்களா இதை?

    ஆனால், இப்படி ஒரு புனைசுருட்டை ஒரு வரலாற்று அறிஞரே நம்பினார். புத்தர் ஓர் ஆப்பிரிக்கர் என்பதோடு மட்டுமின்றி, இதற்காக ஒரு கற்பனைக் கதையும் விஸ்தாரமாக சிருஷ்டிக்கப்பட்டிருந்தது.

    ‘அட!’ என்கிறீர்களல்லவா?

    கேளுங்கள் அந்த விபரீதக் கற்பனை வரலாற்றுக் கதையை.

    * * *

    2

    உலகப் பந்தின் ஒரு மூலையிலிருக்கிற மனிதனும் இன்னொரு மூலையிலிருக்கிற மனிதனும் ஒருவரையொருவர் தேடிக் கண்டுபிடித்துக் கைகுலுக்கிக் கொள்வதற்குள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளைக் காலவெள்ளம் விழுங்கி விட்டிருக்கும் அதிசயத்தை நாம் வரலாற்று ஏடுகளில் நெடுக அறிந்து வியப்படைகிறோம்!

    பூகோள அறிவை மனிதன் பெறுவதற்கு முன்பு, கண் காணாத தூரத்தில், கடலுக்கு அப்பால் இருந்த நாடுகளைப் பாதாள லோகம், நாக லோகம் என்று வேறு உலகங்களாகத்தானே மனிதன் எண்ணினான் - பௌராணிகமாகக் கற்பனைகள் வளர்த்தான்?

    அவ்வளவு ஏன்... நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் சாலமன் அரசன் தனது பட்டமேற்பு விழாக் கொண்டாட்டங்களுக்காகத் தென்பொதிகைச் சந்தனத்தை, அகிலை, மிளகை, அழகிய மயில் தோகைகளை வரவழைத்தான் என்கிறது வரலாறு. நமது கொற்கை முத்துக்களை வாங்குவதற்காகப் பண்டைய ரோமானியம் பாளம் பாளமாகத் தங்கத்தை இங்கே கொண்டு வந்து கொட்டி, தங்கள் நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கிறது என, அந்த நாட்டு அரசவைகளில் அங்கலாய்ப்புகளும் எதிர்க் குரல்களும் எழுந்த விந்தையையும் நாம் வரலாற்றின் பக்கங்களில் பார்க்கிறோம். இருந்தாலும் அப்புறம் என்னவாயிற்று...?

    நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே பண்டைய கிரேக்க, ரோமானிய, எகிப்திய நாடுகளுடன் நாம் கடல் வழி வாணிபத் தொடர்புகள் கொண்டிருந்தது உண்மைதான் என்கிற போதிலும், இடையே ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் ஒருவிதத் துண்டிப்பு நிலைதான் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. கொலம்பஸும், வாஸ்கோடகாமாவும் வந்து வழிமொழிகிற வரை மேலை நாடுகள் நம் இந்திய தேசம் எந்தத் திசையில் இருக்கிறது என்பதைக்கூட அறியாமல்தான் இருந்தன. இந்தியாவைத் தேடப் போய், அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்கள் என்பதுதானே வரலாறு?

    பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்துதான் சர்வ நிச்சயமாக ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் மீது கண்ணையும் கவனத்தையும் திருப்பின எனலாம். இதன்பிறகுதான் போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், இங்கிலாந்து நாட்டினர், பிரெஞ்சுக்காரர்கள் என அத்தனை ஐரோப்பிய தேசத்தினரும் அலை அலையாக ஒரு மரக்கல சுனாமி அடிப்பதே போன்று நமது கடலோரக் கரை நெடுகிலும், மேற்கிலும் கிழக்கிலுமாக வந்து இறங்கினர்.

    வாணிபம், அரசியல், இவை தொடர்பான ஆதிக்கப் போட்டிகள் - யுத்தங்கள் என ஐரோப்பியர் வருகையின் பாதிப்புகள் எத்தனையோ செய்திகளை வைத்திருந்தாலும், நமது வரலாறு புதிய கண்விழிப்பைப் பெற்றது அவர்களால்தான் என்பதில் இரண்டாவது கருத்திற்கே இடமில்லை.

    தமிழ் மொழியும் தமிழர் வரலாறும் ஜி.யு. போப், கால்டுவெல் போன்ற அறிஞர் பெருமக்களால் எப்படி ஏற்றமும் இணையற்ற பெருமையும் பெற்றனவோ, அதேபோன்று புத்தர்பிரானின் புகழ் வெளிச்சமும் பல ஐரோப்பிய அறிஞர்களின் அயரா உழைப்பாலேயே உலகம் முழுக்கப் பரவிற்று.

    சீனம், ஜப்பான் போன்ற தேசங்களில் தனிப்பெரும் சமயமாகத் திகழும் புத்த மதம் பற்றி அறிய நேர்ந்ததும், ஐரோப்பிய அறிஞர் பலர் அதைப்பற்றிய முழு விவரங்களை அறிய ஆர்வம் காட்டினர். புத்த மதம் பரவியிருந்த நாடுகளில், புத்தர்பிரானைக் கடவுளாகப் பார்த்தனரே தவிர, அவரும் ஒரு வரலாற்று மாந்தரே என்னும் கண்ணோட்டம் அவர்களிடம் இல்லை. சமயச் சடங்குகளும் அவற்றுக்கான மந்திரங்களும், நம்பிக்கை அடிப்படையில் காலம் ஏந்தி வந்திருந்த புராணக் கதைகளுமே புத்த மதத்தவரிடமிருந்து அறிய முடிந்தன. அதுவும் நாட்டுக்கு நாடு வேறுபடும்; அவற்றைச் சொல்கிற ஆசாமிகளுக்குத் தக்கவும் மாறுபடும்! மொழிப்பிரச்சினை வேறு!

    இந்த நிலையில்தான். சர் ஜான் வில்லியம்ஸ் என்னும் அறிஞர் புத்தர்பிரான் பற்றி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டார். ‘புத்தர் என்னும் அருளாளர் யார்? அவர் எந்த நாட்டிலே அவதரித்தார்?’ என்கிற கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்த வில்லியம்ஸிடம் யாரோ சிலர், ‘புத்தர் வடகிழக்கு ஆப்பிரிக்க நாட்டில், செங்கடலை ஒட்டியுள்ள எத்தியோப்பியாவில்தான் தோன்றினார்’ என்றனர்! அப்படிச் சொன்னவர்கள் வரலாற்று ஆய்வாளர்களாகவும் இருந்ததால், வில்லியம்ஸ் அக்கூற்றை நம்பினார்!

    ‘எத்தியோப்பியாவுக்கு அப்பால் உள்ள எகிப்து தேசம்தாம் புத்தரின் ஜன்ம பூமி. அங்கே அவர் மாபெரும் புரட்சிக்காரராக விளங்கினார். மரபுகளுக்கு மாறான - முரண்பட்ட புதுமைக் கருத்துகளை மக்கள் நடுவே பிரசாரம் செய்து கொண்டிருந்தார் புத்தர். இது ஆட்சியாளர்களை மிரளச் செய்தது. அவர்கள் புத்தரை மிகவும் கொடுமைப்படுத்தினர். அதுவும் பயனற்றுப் போகவே அவரை நாடு கடத்தினர். ராஜ தண்டனைப்படி எங்கோ ஒரு தீவில் இறக்கி விடப்பட்ட புத்தர், பல்வேறு இன்னல்களை அனுபவித்து, எப்படியோ இந்திய தேசத்திற்கு வந்து சேர்ந்தார். இந்தியா புத்தருக்குப் புகலிடம் அளித்து, அவரை ஏற்றுக்கொண்டது!’ என்றும் சிலர் கூறினர்.

    இது மிகவும் பொருத்தமுடைய தகவல் என்றெண்ணினார் சர் ஜான் வில்லியம்ஸ். அறிஞர்களை, புதிய சமயக் கருத்துகளைப் போதிப்பவர்களை என்றுமே கொடுங்கோல் அரசுகள் ஏற்காது, கொடுமைப்படுத்தும் என்பது உலகறிந்த உண்மைதானே? ஏசுபிரான் வாழ்விலும் சற்றேறக்குறைய இப்படித்தானே நிகழ்ந்தது... எனவே புத்தர்பிரான் வாழ்விலும் இப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு என்று நம்பினார் அவர். இதையே தமது கருத்தாகவும் எழுதினார் - எங்கும் பரப்பினார்.

    எப்படியிருக்கிறது கதை?

    நல்லவேளை, இக்கற்பனைகள் காவியமாகவோ, ஓவியமாகவோ உருப்பெறவில்லை. எட்வின் ஆர்னால்டு இப்படியொரு கதையை ‘லைட் ஆஃப் ஏஷியா’ நூலில் பதிவு செய்திருந்தால், என்னவாகியிருக்கும் நிலைமை. (இதேபோன்று சமணம் பற்றியும் மகாவீரர் பற்றியும் பல ஆய்வுகளை மேற்கொண்ட டாக்டர் எஃப். புக்கனன் என்பவர், ‘அரபு நாட்டில் பெரும் கிளர்ச்சிகள் நிகழ்ந்து, அங்கிருந்து விரட்டப்பட்டு, இந்திய மண்ணில் புகலிடம் பெற்றதே சமண சமயம்’ என்கிற பிழையான செய்தியை எழுதி வைத்துள்ளார் என்பது வேறு கதை.)

    சர் ஜான் வில்லியம்ஸ் மீது நம்பிக்கை கொண்டிருந்த பலரும், புத்தர் பற்றி அவர் சொன்ன கதைகளையும் கருத்துகளையும் அப்படியே நம்பி, தாங்களும் அதையே எழுதிக் கொண்டிருந்தனர். இப்படி ஒரு செய்தியை அவர்கள் நம்பியதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அது, புத்தரின் பெரும்பாலான ஓவிய உருவங்களும் சிற்பங்களும் அவரைச் சுருட்டை முடியுடன் காட்டியதால், அவர் நிச்சயம் ஒரு ஆப்பிரிக்கராகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஐரோப்பியருக்கு ஏற்படுத்தியிருந்தது. மேலும் புத்தரின் போதனைகளும் முழுமையாகத் தெரியாமலிருந்தன. ஏனெனில், அவை ஐரோப்பியர் படித்தறியக்கூடிய எந்த மொழியிலும் வெளியாகியிருக்கவில்லை.

    இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் பிரையன் ஹாஃப்டன் ஹாக்ஸன் என்பார். 1824-ஆம் ஆண்டு நேபாளத்தில் பிரிட்டிஷ் அரசின் பேராளராய் (Resident) பொறுப்பேற்றார். அரசியல் பணிகள் ஒருபுறம் இருந்தாலும், ஹாக்ஸன் புத்தர்பிரான் பற்றியும் புத்தமதம் பற்றியும் ஆராய்வதிலும் அரிய தகவல்களைத் திரட்டுவதிலுமே அதிக ஈடுபாடு காட்டினார். காரணம், புத்தர்பிரானின் ஜன்ம பூமியான லும்பினி. நேபாளத்தை ஒட்டிய பகுதியாக அமைந்திருந்தும்தான்.

    இமயப் பனிமலையின் மீதிருந்த நேபாள முடியரசின் தலைமை அமைச்சர், ஹாக்ஸனின் ஆய்வுப் பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். ஹாக்ஸன், பௌத்த சமயம் பற்றிய பண்டைய நூல்களையும், ஆதாரப் பொருள்களையும் எத்தனை ஆர்வத்தோடு அலைந்து திரிந்து சேகரித்தாரோ, அதே வேகத்துடனும் உற்சாகத்துடனும் அவற்றையெல்லாம் மேலை நாடுகளிலிருந்த பல்வேறு ஆய்வுச் சாலைகளுக்கு மிகுந்த தாராள மனத்தோடு அனுப்பி வைத்தார். சுவடிகள், ஓவியங்கள், ஓலைகள், பல்வேறு மாதிரிப் பொருள்கள் என ஹாக்ஸன் நூற்றுக்கணக்கான ஆதாரப் பொருள்களைச் சேகரித்தார். மேலை நாடுகளுக்கு அனுப்பியதைப் போலவே பல பொருள்களைக் கல்கத்தாவிலிருந்த வங்க ஆசியவியல் சங்கத்துக்கும் அனுப்பினார்.

    பாரிஸ் நகரிலுள்ள ஆசியவியல் சங்கத்திற்கு ஹாக்ஸன் அனுப்பியிருந்த பௌத்தக் கையெழுத்து ஏடுகளைப் பார்த்த அறிஞர் ஃயூஜின் பர்னூஃபு, தமது பௌத்த ஆய்வுக்கு அவை பேருதவியாய் அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இவர்தான் பாரிசிலுள்ள ‘Societe Asiatique’ என்னும் ஆசியவியல் சங்கத்தை நிறுவியவர். (இந்த பர்னூஃபு இந்திய வேதங்கள் பற்றிய நிகழ்த்திய உரைகளைக் கேட்டுத்தான் மாக்ஸ்முல்லர், பண்டைய இந்திய வேத சாஸ்திர நூல்களைக் கற்றறியும் ஆர்வ மேலீட்டை அடைந்தார். மாக்ஸ்முல்லர் இந்திய வேத நூல்கள் பற்றி நிகழ்த்திய மகத்தான ஆய்வுகளையும், அவரால்தான் இந்தியா பற்றியும் இந்தியக் கலாச்சாரம் பற்றியும் மேலை நாடுகள் மிகச்சிறப்பாக அறிந்து கொண்டன என்பதையும் வரலாறு நன்கறியும்.)

    அறிஞர் ஃயூஜின் பர்னூஃபு (1801-1852) பௌத்த வரலாற்றை முறைப்படுத்தி, ஒரு தெளிவான நிலையில் ஆதாரங்களையும் செய்திகளையும் தொகுத்தளித்தவர் என்னும் பெருமைக்கு உரியவர். அதற்கு அடித்தளமாய் அமைந்தது ஹாக்ஸனின் கடின உழைப்பும் ஆய்வுகளுமே. அவரைப் போற்றாத மேலைநாட்டு அறிஞர்களே இல்லை எனலாம்.

    ஆனால், நமது தேசத்திலிருந்த பௌத்த மத குருமார்களோ அவரை வைதனர், வசை பாடினர். ‘ஹாக்ஸனால் புனிதம் கெடுகிறது; புத்த மதமே இந்த வெள்ளைக்காரனால் தீட்டுப்பட்டு விட்டது’ என்றெல்லாம் குற்றம் சாட்டினர் - குமுறினர்.

    ஹாக்ஸன் இதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், ‘புத்தர்பிரானின் புகழை உலகறியச் செய்யாமல் ஓய மாட்டேன்’ என்று கங்கணம் கட்டிச் செயல்பட்டார்; வெற்றியும் கண்டார்.

    * * *

    3

    உலகிலேயே புத்தர்பிரானுக்கு அமைக்கப்பட்டது போன்ற பிரம்மாண்ட சிலைகள் வேறு யாருக்காவது அமைக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். மலைகளையே புத்தர் சிலைகளாக வடித்திருக்கும் அதிசயம், பாளம் பாளமாக டன் கணக்கில் தங்கத்தைப் போட்டு உருக்கி, வார்த்தெடுக்கப்பட்ட மாபெரும் புத்தர் சிலைகள் என்று புத்தரின் மீது அன்புகொண்ட ஆர்வலர்கள் பெரிதினும் பெரிதாக - அரிதினும் அரிதாக அவருடைய திருவுருவச் சிலைகளைச் செய்து வைத்து, உலகையே பிரமித்துப் போகச் செய்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானத்தில், பாமியான் புத்தர் சிலை தகர்க்கப்பட்டபோது, உலகம் முழுக்க தொலைக்காட்சிகளில் சிதைவுற்ற அந்த பிரம்மாண்ட சிலையைக் கண்டு மக்கள் வியந்தனர். நின்ற கோலத்தில், ஒரு மலையே அல்லவா புத்தர் சிலையாக அங்கு ஆக்கப்பட்டிருந்தது! அதுபோன்ற பிரம்மாண்ட புத்தர் சிலைகளை சீனாவிலும் இலங்கையிலும் இன்றும் ஏராளமாகக் காணலாம்.

    நின்ற கோலம், கிடந்த (சயன நிலை) கோலம், தியானத்தில் அமர்ந்த கோலம் என்று பல்வேறு நிலைகளில் புத்தரின் சிலைகள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. அவருடைய திருவதனத்தில் தவழும் புன்னகை, சஞ்சலப்பட்டுக் கவலைகளில் உழல்கிற மாந்தர்களுக்கு என்றும் எப்போதும் சாந்தியும் அமைதியும் தருவதாக இருக்கும்.

    புத்த சமயம் பரவியுள்ள தேசங்களில், புத்தரின் பிரம்மாண்ட திருவுருவங்களை அமைத்துள்ளதைப் போலவே, விலைமதிப்பற்ற பல உயரிய பொருள்களிலும் அவரது திருஉருவை வடித்து வைத்துள்ளனர். கற்சிலை, மண்சிலை, சுதைச் சாந்துகளால் அமைக்கப்பட்டவை, தங்கச்சிலை, வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் போன்று, விலை உயர்ந்த ரத்தினக் கற்களிலும் புத்தர் சிலைகள் உண்டு. மிகப்பெரிய மரகதக் கல்லால் ஆன புத்தர் சிலையும் உண்டு.

    புத்தரின் உருவச் சிலைகளை வைத்து வழிபட பிரம்மாண்ட புத்தவிகாரைகள் எழுப்பப்பட்டதைப் போல, அவருக்கான வேறு சில வழிபாட்டு இடங்களும் உண்டு. அவை, புத்தரின் பல் மற்றும் எலும்பு, அவரைத் தகனம் செய்த சாம்பல் அடங்கிய பேழைகள் போன்ற புனித நினைவுப் பொருள்களை வைத்து வழிபட அமைக்கப்பட்டவையாக இருக்கும். இதுபோன்ற ஆலயங்களை ‘தாது கோபுரம்’ என்றும், ‘சேதியம்’ என்றும் அழைப்பர்.

    புத்தர்பிரானின் உயரிய கொள்கைகள் - சாமான்யனும் கடைத்தேற வேண்டும் என்று அவர் காட்டிய அன்பு நெறி, உலகெங்கிலும் உள்ள மனித உள்ளங்களில் எத்தகு இடத்தைப் பிடித்தன என்பதன் அடையாளம்தான் இவையெல்லாம் இதுகூட ‘மகாயான பௌத்தம்’ என்னும் பிரிவு மட்டும் தோன்றியிராவிடில், சாத்தியமின்றி போயிருக்கும்.

    அசோக மாமன்னன், கனிஷ்க மாமன்னன், ஹர்ஷவர்த்தன மாமன்னன், மகாகவி அசுவகோஷ் போன்றவர்கள் புத்தர்பிரான் மீது கொண்ட அன்பும், அதிதீவிரப் பற்றுமே பௌத்த சமயச் சிறப்பை உலகம் முழுக்க கொண்டு சென்றது. தொல்பழங்காலத்தில் இவர்கள் செய்த தொண்டு எத்தனை மகத்தானதோ அதற்குச் சற்றும் குறைவற்ற தொண்டு எனலாம். ஹாக்ஸன், காலின் மெக்கன்ஸி, அலெக்சாந்தர் கன்னிங்ஹாம், ஃயூஜின் பர்னூஃபு, மவுண்ட் எல்பின்ஸ்டன், லூயி தெ லா வாலிடிசின், எமில் செனார்ட்டு, ஹெர்மன் ஓல்டன் பர்கு, டி.என். ரைஸ் டேவிஸ், திருமதி கேஃபு ரைஸ் டேவிஸ், இராஜேந்திரலால் மித்திர, அனகரிக தர்மபால, ஹரப்பிரசாத சாஸ்திரி, தர்மானந்த கோசாம்பி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற அறிஞர் பெருமக்கள் செய்த பௌத்த சமய ஆராய்ச்சித் தொண்டு.

    காலவெள்ளம் பிடுங்கிக்கொண்டு போய், மறைத்து வைத்துக் கண்ணாமூச்சி காட்டுகிற பல்வேறு ஆதாரச் செல்வங்களையும் தங்கள் கடின ஆராய்ச்சி உழைப்பால் மீண்டும் பிடுங்கி வந்து, மக்கள் கண்களில் காட்டி, கவனத்தை ஈர்த்துக் கரங்களில் ஒப்படைத்த மகத்தான மனிதர்கள் இவர்கள்.

    புத்தர்பிரானின் திவ்ய சரிதத்தை நாம் மிக விரிவாக அறியவிருக்கிறோம். அதற்குமுன் இந்த அறிஞர் பெருமக்களின் அயரா உழைப்பை, ஆர்வத்தை, ஆராய்ச்சிகளை - புத்தரின் புகழ் எனும் தீபம் ஒளி மங்கிவிடாவண்ணம் திரி தூண்டி, சுடர் தட்டி, விவரச் சேகரிப்பு எனும் எண்ணெய் வார்த்து எத்தனை அரும்பணிகள் செய்துள்ளார்களோ அவற்றையெல்லாம் நாம் ஓரளவேனும் அறிந்துகொள்வது அவசியமல்லவா...?

    பௌத்த குருமார்கள் சிலர், ‘ஒரு வெள்ளைக்காரன் வந்து தங்களின் புனித மடாலயங்களில் புகுந்து தீட்டுப் படுத்துவதா, பகவான் புத்தரைப் பற்றி இந்த மிலேச்சர்களுக்கு என்ன அக்கறை..?’ என்றெல்லாம் எதிர்ப்பு காட்டியபோதும், மனம் தளராமல் ஹாக்ஸன் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். நேபாள அமைச்சர் அவருக்கு உதவியது போலவே, பல பண்டிதர்களும் ஹாக்ஸனோடு நெருங்கிப் பழகி, அவரோடு உரையாடினர். ஹாக்ஸன் தாம் சேகரித்த ஏடுகளை அந்த நேபாளப் பண்டிதர்களின் உதவியோடு படித்தறிந்து பல அரிய தகவல்களைச் சேகரம் செய்தார். அப்படி நூற்றுக்கணக்கான அரிய சுவடிகளைப் படித்தறிந்த ஹாக்ஸன், அவற்றை வங்க ஆசியவியல் சங்கம் வெளியிட்ட ‘ஜர்னல்’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் மதிப்புமிகு கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார்.

    ஹாக்ஸன் தொண்ணூற்றைந்து வயது வரை வாழ்ந்தவர். தமது வாழ்நாளில் அவர் நீண்ட நெடுங்காலம் புத்த சமயம் பற்றிய அரிய விவரங்களை எழுதிக்கொண்டே இருந்ததால், மேலைநாட்டு அறிஞர் உலகம் அவரை உச்சிமீது வைத்து மெச்சிக் கொண்டாடியது. ஹாக்ஸன், வங்க ஆசியவியல் சங்க ‘ஜர்னல்’ இதழின் வாயிலாக ‘புத்த சரிதம்’, ‘அஷ்ட சஹஸ்ரிக’, ‘திவ்விய அவதன்’, ‘கல்ப லத’, ‘ஸ்வயம்பு புராணம்’, ‘லலித விஸ்தாரம்’ போன்ற மகத்தான பௌத்த இலக்கியங்களை உலகறிச் செய்தார். தமது கட்டுரைகளில் மேற்கோள் காட்டி எழுதியதன் மூலம், ‘ஐஸ்வரிக மறை’, ‘ஸ்பவிகக் கோட்பாடு’, ‘கர்மிக முறை’, ‘யத்னிக மறை’, ‘ஆதிபுராணம்’ அல்லது ‘தர்ம’ ‘ஆதிசங்கம்’ போன்ற புத்தசமயக் கோட்பாடுகளை விவரித்துப் பொருளுரைத்த முதல் ஐரோப்பியர் என்னும் சிறப்பையும் பெற்றார்.

    இவரைத் தங்கள் ஆதர்ச ஆசானாக ஏற்றுப் பின்னர் பல ஐரோப்பிய அறிஞர்கள் தங்கள் வாழ்நாள் முழவதையுமே புத்தசமய ஆராய்ச்சிக்காகச் செலவிட்டதுண்டு. அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் அலெக்சாந்தர் கன்னிங்காம். இப்பெருந்தகை, ஹாக்ஸனைத் தொடர்ந்து செய்த புத்த சமய ஆய்வுகள் ஒருபக்கம் இருக்கட்டும். இவர் செய்த மகத்தான செயல் ஒன்றினை புத்தர்பிரான் மீது அன்புகொண்ட எவருமே போற்றிக் கொண்டாடாது இருக்கவியலாது.

    புத்தர் என்றவுடன் அனைவர் மனதிலும் உடனே தோன்றி நிற்பது போதி மரம். புத்த ஞானத்தையே ‘போதி ஞானம்’ என்றுதான் உலகம் உரைப்பது வழக்கம். புத்த சரிதத்திலும், புத்த சமயத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற இந்த போதி மரம் இன்றைக்கும் புத்தரின் புகழைச் சொல்லியபடி புத்தகயா திருத்தலத்தில் இருக்கிறது என்றால், அதற்கு இந்த அலெக்சாந்தர் கன்னிங்காம்தான் காரணம்.

    இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு வைகாச பூர்ணிமை தினத்தில் சித்தார்த்த கௌதமர் எந்த வெள்ளரசு மரத்தின் அடியில் அமர்ந்து தவமியற்றி சம்போதி ஞானம் பெற்றோரோ, அந்த அரச மரமே புத்த சமயத்தார் போற்றிக் கொண்டாடும் போதி விருட்சமாகப் புகழ்பெற்று விளங்கியது. பின்னர் அறியப்படும் புத்தசமயப் புராணச் சிறப்புத் தகவல் என்னவெனில், புத்தர் என்று பூமியில் அவதரித்தாரோ, அன்றே இம்மரம் அவருக்காகவே தேவர்களால் சிருஷ்டிக்கப்பட்டது என்பதாம், அவ்வளவு சிறப்புடைய போதி விருட்சத்தைப் பிற்காலத்தில் சசாங்கன் என்கிற மன்னன் வெட்டியெறிந்தான் என்கிறது வரலாறு.

    ஆனாலும், பழங்கால விருட்சத்தின் வேரிலிருந்து அது மீண்டும் துளிர்த்து வளர்ந்து, பல நூறு ஆண்டுகளாய் தழைத்து மிகப்பெரிய மரமாக இருந்தது. காலப்போக்கில் அதுவும் கவனிப்பாரற்று, பொந்தும் போறையுமாய் மாறிக் காய்ந்து விழுந்து விட்டது. அறிஞர் அலெக்சாந்தர் கன்னிங்காம் பதினெட்டாம் நூற்றாண்டில் சென்று பார்த்தபோது, புனித போதி மரம் சாய்ந்து கிடப்பது கண்டு மிகவும் மனம் நொந்தார். உடனே அதில் பசுமை மாறாதிருந்த ஒரு கிளையினை ஒடித்து, அதே இடத்தில் மீண்டும் நட்டு, காய்ந்த மரத்தை அகற்றி, புதிய போதி விருட்சத்தைப் பாதுகாப்பாய் வளரச் செய்தார். அதுதான் சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் தழைத்து நிற்கிறது.

    இன்னொரு தகவலின்படி, முதல் போதி மரத்தின் கிளை ஒன்றை, மாமன்னன் அசோகனின் புதல்வி சங்கமித்ரா இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் கொண்டு நட்டு வளர்த்தாள். அது இன்றளவும் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாய் வளர்ந்து தழைத்திருக்கிறது. அதன் கிளை ஒன்றைத்தான் கொண்டு வரச்செய்து, அலெக்சாந்தர் கன்னிங்காம், புத்தகயாவில் பழைய போதி விருட்சம் பட்டுக் கிடந்த இடத்தில் நட்டு வளர்த்தார் என்கிறார்கள்.

    எது எப்படியிருந்த போதும், புத்தர்பிரானின் பெருமைகளையும், புத்த சமயத்தின் உயர்வினையும், போதி விருட்சத்தின் உயிரினையும் அலெக்சாந்தர் கன்னிங்காம் போன்ற பல ஐரோப்பிய அறிஞர் பெருமக்கள்தான் உலகில் மீண்டும் தழைத்தோங்கச் செய்தனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

    * * *

    4

    ‘இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி’ என போற்றப்படும்

    Enjoying the preview?
    Page 1 of 1