Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chola Venghai
Chola Venghai
Chola Venghai
Ebook655 pages7 hours

Chola Venghai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்திய சரித்திரத்தில் இமயமாய் உயர்ந்து நிற்பவன் மாமன்னன் அசோகன். அவனுக்கு இணையாகத் தமிழர் சரித்திரத்தில் ஒரு மன்னனைக் குறிப்பிட வேண்டுமெனில், என் நினைவில் முதலில் எழுந்து நிற்பவன் கோச்செங்கணான் தான். முற்காலச் சோழர்களில் முதன்மை பெற்ற புகழுக்குச் சொந்தக்காரனான ‘கோச்செங்கட் சோழன்' எனப்படும் கோச்செங்கணானின் வீர வரலாறு. சங்க காலப் புலவர் பொய்கையார் பாடிய “களவழி நாற்பது” என்னும் அற்புதமான நூலினுள் பொதிந்து கிடக்கிறது. மேலும் புறநானூற்றின் எழுபத்து நான்காம் பாடலும் இப்பெரு வேந்தனை அடையாளப் படுத்துகிறது.

வரலாறு வாழ்த்துவதே போன்று, புராணமும் போற்றிப் புகழ்பாடும் புகழ்ச் சரிதத்திற்கு உரியவன் கோச்செங்கணான். கோச்செங்கணான், சேரன் கணைக்காலனைச் சிறைப்படுத்தினான் என்பதும், அங்கு ஆவி தவிக்க அம்மன்னன் குடிநீர் கேட்டு, அதைக் காவலன் தரமறுத்த சினம் தாளாமல் புறப் பாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் நீத்தான். சேரன் கணைக்காலன் என்பதும் அனைவரும் அறிந்த செய்திதான் பள்ளி மாணவர்கள் பலரும் தமிழ்ப்பாட நூல்களில் படித்தறிந்த செய்திதான் இது.

இந்த வரலாறுகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; அசோகனைப் போற்றுகிற அளவு இந்திய சரித்திரம் இச்சோழ மாமன்னனை ஏன் போற்றவில்லை என்பதுதான் எனக்குப் புரியவில்லை. தென்னிந்திய சரித்திரம் - அதுவும் தமிழர் சரித்திரம் அத்தனை இளக்காரமாகி விட்டதா என்ன? அடுத்தவர்களை விடுங்கள், முதலில் நாம் இத்தமிழ் மன்னனை எந்த அளவு கொண்டாடுகிறோம்? சிபிச் சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் என்றெல்லாம் மிகைப்படுத்திய உயர்வு நவிற்சிக் கற்பனை மகிழ்வுகள் மட்டுமே நமக்குப் போதும் என்றாகிவிட்டதோ?

நான் இக்காவிய காலப் பெருவேந்தர்களின் புகழில் சிறுகீறல் ஏற்படுத்தவும் எண்ணவில்லை. அவர்களும் சோழ மரபின் சூரிய ஒளிக் கதிர்களாகத் திகழ்ந்தவர்கள் தாமே! அதே மரபின் வரலாற்றுக்கால நாயகனான கோச் செங்கணானின் கீர்த்தி எவ்வகையில் குறைந்து போயிற்று என்பது தான் நான் எழுப்பும் வினா.

‘சரி, போர் என்ன அன்புப் பிரசாரம் செய்யவா நிகழ்த்தப்படுகிறது?' எனக் கேட்பீர்கள். போரும் காதலும் தமிழரின் பண்டைச் சிறப்புகளாகப் பேசப்படுவதைத் தானே அகநானூறும் புறநானூறும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கின்றன? மேலும் போர்கள் இரு வகைப்பட்டவையாக அமைந்திருக்கின்றன. ஒன்று நாடு விரிவாக்கம் என்ற பெயரில், திரட்டிவைத்த சேனைக்குத் தீனிபோட நிகழ்த்தப் படுவது - மற்றொன்று, நாட்டைக் கபளீகரம் செய்ய எண்ணிப் பாய்ந்து வரும் மாற்றான் சேனையைத் தடுத்து நிறுத்தி, தற்காப்புப் போர் துவங்கி, கொப்பளிக்கும் வீரத்தால் மாற்றானைப் புற முதுகிட்டு ஓட ஓட விரட்டுவது. இதில் முதல் வகையை 'அசைவம்’ எனில், அடுத்ததைச் 'சைவம்' எனலாம். போரிலும் சைவப் போர் உண்டு தான்!

இந்த இரண்டாம் வகைப் போரை நிகழ்த்தியவனாகவே சோழ மாமன்னன் கோச்செங்கணான் திகழ்ந்துள்ளான். அதுமட்டுமல்லாது, போர்த் தொடுத்து வந்த சேரன் கணைக்காலன், மூன்று முறை தோற்றுச் சிறைப்பட்ட போதும் அவனை மன்னித்து விடுதலை செய்தான் சோழன் என்பது வரலாறு. பின்னும் அடாத செயல் செய்து, மீண்டும் தோற்றுச் சிறைப்பட்டபோதே ஆவி தவிக்க நீர் கேட்டு, அவமான முற்று சிறைக் கோட்டத்தில் மடிந்தான் சேரன்.

போரை விலக்கி, தமிழ் மன்னர்கள் நட்பால் ஒன்றி வாழத் தடம் அமைக்க எண்ணி முயன்றவன் கோச்செங்கணான். சோழ பூமியைச் சோறுடைத்த வளநாடாக மாற்ற அரும்பாடு பட்டு, காவிரிக்கு வழி கண்டும் - கரை அமைத்தும் - கல்லணை கட்டியும் தொண்டாற்றிய சோழகுல முன்னோர்களான கவேரனும் கரிகாலனும் சொர்க்கத்திலிருந்து வாழ்த்த, காவிரிக் கரைநெடுக எழுபது சிவாலயங்களை எழுப்பிய இணையற்ற வேந்தன் கோச்செங்கணான். அன்றைய காலகட்டத்தில் அவை, “மக்கட் பணியே மகேசன் பணி” என்று சமூக மேம்பாட்டுக்குப் பாடுபட்ட அன்பாலயங்களாகவே திகழ்ந்தன. 'அன்பே சிவம்' என்னும் கொள்கை பரப்பின. அன்று ஆலயங்களை ஒட்டியே மருத்துவம் பேணும் ஆதுல சாலைகள் இருந்தன - மூலிகை நந்தவனங்கள் அமைந்தன - அன்னசத்திரங்கள் திகழ்ந்தன. ஆலயங்களே ஊர்ப் பொது மன்றங்களாக இயங்கின.

‘சாவி‘யின் உறவினரான திரு. ராதாகிருஷ்ணன் நடத்திய 'குண்டூசி' வெகுகாலம் சினிமா இதழாக இருந்து, பிறகு ஆன்மிக இதழானது. அப்போது அதில் மூன்று வருட காலம் தொடராக இக்கதையை எழுதினேன். ‘கனல் விழிகள்' என்னும் தலைப்பில் இது வெளியானது. இப்போது அந்த நவீனத்தை 'சோழ வேங்கை'யாக, மிகச் சிறப்பான முறையில் உருவாக்கி அளித்துள்ளேன்

கோச்செங்கணானின் புகழ்பேசும் ‘களவழி நாற்பது' பாடல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் இடம்பெறச் செய்துள்ளோம். இனி ‘சோழ வேங்கை' உங்கள் கரங்களில்.

- கௌதம நீலாம்பரன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580102004198
Chola Venghai

Read more from Gauthama Neelambaran

Related to Chola Venghai

Related ebooks

Related categories

Reviews for Chola Venghai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chola Venghai - Gauthama Neelambaran

    http://www.pustaka.co.in

    சோழ வேங்கை

    Chola Venghai

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நிலாக்கால இரவில்........

    2. வீரனை வீழ்த்தும் விழிகள்!

    3. ஆற்றங்கரை மண்டபத்தில்

    4. தூது வந்த மேலாடை!

    5. அக்கினி நயனங்கள்!

    6. உறையூர் வீதியில்.....

    7. நெஞ்சக் கனல்!

    8. வேங்கையின் கனவுகள்!

    9. வந்தது போர்வாள்

    10. கீதவெள்ளம்

    11. கலைக் காவலன்

    12. மனநோய்க்கு மருந்து

    13. சூரிய விழிகள்

    14. விடியலுக்கான வீரம்...

    15. மகா மனிதன்

    16. புலிக்குகையில் போர் மறவர்கள்

    17. பொற்கொடியின் தவிப்பு!

    18. கணைகள் நிகழ்த்திய ஜாலம்!

    19. நாட்டிய அரங்கம்

    20. ஆபரண சாலையில்......

    21. அரங்கேற்றம்

    22. கூற்றுவனின் குறுவாள்

    23. விருந்தில் கலந்த விழிநீர்

    24. புதிய உபதலைவன்

    25. காதல் தர்க்கம்

    26. காதல் நதி

    27. கண்ணியிலே சிக்கிக் கொண்டான் காளை

    28. நீலாம்பரி

    29. பிறவி ரகசியம்

    30. வெள்ளாற்றங் கரையில்....

    31. கனிவால் பிறந்த காதல்

    32. பானுகோபனின் கோபம்!

    33.கூற்றுவன் கூறியவை

    34. கறுப்பு நிலா

    35. நீலனின் நிபந்தனை

    36. கள்வர்களின் களியாட்டம்

    37. கடம்ப வனம்

    38. மந்திர ஜாலம்

    39. கடந்தையில் கொள்ளை!

    40. புரவிப்போர்

    41. கூற்றுவனின் வியப்பு

    42. கொள்ளைக் கூட்டமா? கொள்கைக் கூட்டமா?

    43. வெள்ளாற்றுப் போர்!

    44. நீலாம்பரியின் கண்ணீர்

    45. தந்தையின் வீரவாள்!

    46. அறுவர் கூட்டும், அதர்மப் படுகொலைகளும்!

    47. இரட்டை வாட்கள் நிகழ்த்திய இந்திரஜாலம்!

    48. குருதி வெள்ளம்!

    49. காராக்ருகத்தில் ஒரு கவிதை!

    முன்னுரை

    இந்திய சரித்திரத்தில் இமயமாய் உயர்ந்து நிற்பவன் மாமன்னன் அசோகன். அவனுக்கு இணையாகத் தமிழர் சரித்திரத்தில் ஒரு மன்னனைக் குறிப்பிட வேண்டுமெனில், என் நினைவில் முதலில் எழுந்து நிற்பவன் கோச்செங்கணான் தான். முற்காலச் சோழர்களில் முதன்மை பெற்ற புகழுக்குச் சொந்தக்காரனான ‘கோச்செங்கட் சோழன்' எனப்படும் கோச்செங்கணானின் வீர வரலாறு. சங்க காலப் புலவர் பொய்கையார் பாடிய களவழி நாற்பது என்னும் அற்புதமான நூலினுள் பொதிந்து கிடக்கிறது. மேலும் புறநானூற்றின் எழுபத்து நான்காம் பாடலும் இப்பெரு வேந்தனை அடையாளப் படுத்துகிறது.

    வரலாறு வாழ்த்துவதே போன்று, புராணமும் போற்றிப் புகழ்பாடும் புகழ்ச் சரிதத்திற்கு உரியவன் கோச்செங்கணான். சுபதேவச் சோழனும் கமலவதி ராணியும் பெற்றெடுத்த இந்த அருந்தவப் புதல்வனின் வரலாறுதான் திருவானைக்காவல் திருத்தலத்தின் மகிமைச் சரிதமாகப் போற்றப்படுகிறது. கோச்செங்கணான், சேரன் கணைக்காலனைச் சிறைப்படுத்தினான் என்பதும், அங்கு ஆவி தவிக்க அம்மன்னன் குடிநீர் கேட்டு, அதைக் காவலன் தரமறுத்த சினம் தாளாமல் புறப் பாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் நீத்தான் சேரன் கணைக்காலன் என்பதும் அனைவரும் அறிந்த செய்திதான் பள்ளி மாணவர்கள் பலரும் தமிழ்ப்பாட நூல்களில் படித்தறிந்த செய்திதான் இது.

    ஆயினும் அதன்பின்னே எத்தகு அற்புத வரலாற்றுச் சம்பவங்கள் புதைந்து கிடக்கின்றன என்பதை எத்தனை பேர் அறிவார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஒரு புதைபொருள் ஆய்வாளனைப் போன்ற பொறுப்புணர்வுடன் அச்சம்பவங்களைத் தேடியெடுத்துக் காட்சிகளாக்கி உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இப்புதினத்தின் வாயிலாக.

    கோச்செங்கட் சோழனின் காலத்தை கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, ஐந்தாம் நூற்றாண்டு வரை அலசியும் நிர்ணயம் செய்ய முடியாமல் விட்டு விடுகிறது வரலாற்று நூல்கள். களப்பிரர் கால் இருள் கிழித்து எழுந்த இளஞ்சோழ சூரியனாக நான் பாவிக்கிறேன். சேர, சோழ, பல்லவ முக்கோண மோதல்களில் முகிழ்த்த கதை இது.

    இந்த வரலாறுகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; அசோகனைப் போற்றுகிற அளவு இந்திய சரித்திரம் இச்சோழ மாமன்னனை ஏன் போற்றவில்லை என்பதுதான் எனக்குப் புரியவில்லை. தென்னிந்திய சரித்திரம் - அதுவும் தமிழர் சரித்திரம் அத்தனை இளக்காரமாகி விட்டதா என்ன? அடுத்தவர்களை விடுங்கள், முதலில் நாம் இத்தமிழ் மன்னனை எந்த அளவு கொண்டாடுகிறோம்? சிபிச் சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் என்றெல்லாம் மிகைப்படுத்திய உயர்வு நவிற்சிக் கற்பனை மகிழ்வுகள் மட்டுமே நமக்குப் போதும் என்றாகிவிட்டதோ?

    நான் இக்காவிய காலப் பெருவேந்தர்களின் புகழில் சிறுகீறல் ஏற்படுத்தவும் எண்ணவில்லை. அவர்களும் சோழ மரபின் சூரிய ஒளிக் கதிர்களாகத் திகழ்ந்தவர்கள் தாமே! அதே மரபின் வரலாற்றுக்கால நாயகனான கோச் செங்கணானின் கீர்த்தி எவ்வகையில் குறைந்து போயிற்று என்பது தான் நான் எழுப்பும் வினா.

    அன்பைப் பரப்ப அவதாரம் எடுத்தவன் போன்று கற்பிக்கப்படும் அசோக மன்னனும் புத்தன் வழியை ஏற்குமுன் கலிங்க பூமியில் களம் கண்டு, ஊழிக் கூத்தாடியவன் தானே? அம்மட்டோ….. உடன் பிறந்தாருக்கெல்லாம் கொடுங்கூற்றுவனாய் அவனிருந்த வரலாறும் உண்மைதானே? கோச்செங்கணான் அத்தகு மாபாதகம் எதனையும் இழைத்தவனோ, பின்னர் மனம் கசிந்து மாற்றம் கண்டவனோ அல்ல. போரையே நீதி இலக்கணம் வழுவாமல் நடத்திய புனிதன் இவன் இதைப் பொய்கைப் புலவனின் களவழிப்பாடல் ஒவ்வொன்றும் எடுத்தியம்புகின்றது.

    ‘சரி, போர் என்ன அன்புப் பிரசாரம் செய்யவா நிகழ்த்தப்படுகிறது?' எனக் கேட்பீர்கள். போரும் காதலும் தமிழரின் பண்டைச் சிறப்புகளாகப் பேசப்படுவதைத் தானே அகநானூறும் புறநானூறும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கின்றன? மேலும் போர்கள் இரு வகைப்பட்டவையாக அமைந்திருக்கின்றன. ஒன்று நாடு விரிவாக்கம் என்ற பெயரில், திரட்டிவைத்த சேனைக்குத் தீனிபோட நிகழ்த்தப் படுவது - மற்றொன்று, நாட்டைக் கபளீகரம் செய்ய எண்ணிப் பாய்ந்து வரும் மாற்றான் சேனையைத் தடுத்து நிறுத்தி, தற்காப்புப் போர் துவங்கி, கொப்பளிக்கும் வீரத்தால் மாற்றானைப் புற முதுகிட்டு ஓட ஓட விரட்டுவது. இதில் முதல் வகையை 'அசைவம்’ எனில், அடுத்ததைச் 'சைவம்' எனலாம். போரிலும் சைவப் போர் உண்டு தான்!

    இந்த இரண்டாம் வகைப் போரை நிகழ்த்தியவனாகவே சோழ மாமன்னன் கோச்செங்கணான் திகழ்ந்துள்ளான். அதுமட்டுமல்லாது, போர்த் தொடுத்து வந்த சேரன் கணைக்காலன், மூன்று முறை தோற்றுச் சிறைப்பட்ட போதும் அவனை மன்னித்து விடுதலை செய்தான் சோழன் என்பது வரலாறு. பின்னும் அடாத செயல் செய்து, மீண்டும் தோற்றுச் சிறைப்பட்டபோதே ஆவி தவிக்க நீர் கேட்டு, அவமான முற்று சிறைக் கோட்டத்தில் மடிந்தான் சேரன்.

    போரை விலக்கி, தமிழ் மன்னர்கள் நட்பால் ஒன்றி வாழத் தடம் அமைக்க எண்ணி முயன்றவன் கோச்செங்கணான். சோழ பூமியைச் சோறுடைத்த வளநாடாக மாற்ற அரும்பாடு பட்டு, காவிரிக்கு வழி கண்டும் - கரை அமைத்தும் - கல்லணை கட்டியும் தொண்டாற்றிய சோழகுல முன்னோர்களான கவேரனும் கரிகாலனும் சொர்க்கத்திலிருந்து வாழ்த்த, காவிரிக் கரைநெடுக எழுபது சிவாலயங்களை எழுப்பிய இணையற்ற வேந்தன் கோச்செங்கணான். அன்றைய காலகட்டத்தில் அவை, மக்கட் பணியே மகேசன் பணி என்று சமூக மேம்பாட்டுக்குப் பாடுபட்ட அன்பாலயங்களாகவே திகழ்ந்தன. 'அன்பே சிவம்' என்னும் கொள்கை பரப்பின. அன்று ஆலயங்களை ஒட்டியே மருத்துவம் பேணும் ஆதுல சாலைகள் இருந்தன - மூலிகை நந்தவனங்கள் அமைந்தன - அன்னசத்திரங்கள் திகழ்ந்தன. ஆலயங்களே ஊர்ப் பொது மன்றங்களாக இயங்கின.

    பூர்வ ஜென்ம புராணக் கதை ஒன்றைச் சொல்லி செங்கணான் எழுப்பிய ஆலயங்களை யானைகள் ஏற முடியாத மாடக்கோயில்கள் என்கிறார்கள். யானைகளாலும் தகர்க்க முடியாத அளவு பலம் வாய்ந்த இந்த மாடக் கோயில்கள், மழைக்காலங்களில் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்படும் சிற்றூர் வாழ் விவசாயப் பெருங்குடி மக்களுக்குப் புகலிடமாகவே ஏன் அமைக்கப்பட்டிருக்கக்கூடாது என்பது தான் என் கேள்வி. உண்மை நோக்கம் அதுவே தான்; வேறில்லை.

    இம்மன்னன் சைவனாக இருந்தபோதும், மத பேதமின்றி எட்டு திருமால் திருத்தளிகளையும் இதே போன்ற மாடக் கோயில்களாக அமைத்தளித்துள்ளான். இதைத் திருமங்கை ஆழ்வாரும் போற்றிப் புகழ்பாடியுள்ளார். தீவிர வைணவரான திருமங்கை ஆழ்வார், கோச்செங்கணானின் சிவத் தொண்டைப் போற்றவும் தவறில்லை.

    'இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோளீசற்கு

    எழில் மாடம் எழுபது செய்து உலகமாண்ட

    திருக்குலத்து வளச் சோழன்.....’ (பெரிய திருமொழி 6:6:8, 505) எனும் பாசுரப் பகுதி இதை நமக்கு உணர்த்துகிறது.

    மேலும் அவர் –

    'உலகமாண்ட தென்னாடன்’

    'குடக் கொங்கன் சோழன்'

    'தென் தமிழன் வடபுலக்கோன்’

    'கழல் மன்னர், மணிமுடிமேல் காகம் ஏறத் தெய்வவாள் வலம் கொண்ட சோழன்’

    'விறல் மன்னர் திறல் ஒழிய வெம்மாவுய்த்த செங்கணான்'

    'படை மன்னர் உடல் துணியப் பரிமாவுய்த்த தேராளன்’ என்றெல்லாமும் பாராட்டுகிறார்.

    'களவழிக் கவிதை பொய்கை உரை செய்ய உதியன்

    கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட பரிசும்’

    என்று கலிங்கத்துப் பரணியும்-

    ‘இன்னருளின்....

    மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்

    பாதத் தளையிட்ட பார்த்திபனும்’

    என்று விக்கிரசோழன் உலாவும்-

    பொறையனைப் பொய்கை கவிக்குக் கொடுத்துக் களவழிப் பாக்கொண்டோனும்

    என்று குலோத்துங்க சோழன் உலாவும்-

    ‘பொய்கை களவழி நாற்பதுக்கு

    வில்லவன் கால் தளையை விட்டக் கோன்'

    என்று இராசராச சோழன் உலாவும் நம் கோச்செங்கட் சோழனைப் போற்றிப் புகழ்கிறது.

    எதிரியை மிகக் கடுமையான போரில் வென்று, சிறைப்படுத்தி, ஒரு தமிழ்ப் புலவனின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து மும்முறை விடுதலை செய்த இம்மாமன்னனின் பண்பை எண்ணுகையில் தேகம் சிலிர்க்கிறது. இவனுடைய வீர நெஞ்சும் - ஈர நெஞ்சும் ஆயிரம் காவியங்களில் போற்றத்தக்க பெருமையுடையது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்கவியலாது.

    வீரத்தை வீரத்தால் சந்தித்து. வெற்றியும் கண்ட பிறகே எத்தனை முறை வேண்டுமாயினும் மன்னிக்கத் தயங்காத பேருள்ளம் கொண்டவனான சோழன் கோச்செங்கணான் மட்டும் வடக்கே பிறந்திருந்தால், அசோகச் சக்கரவர்த்தி, கனிஷ்க மாமன்னன், ஹர்ஷ வர்த்தனருக்கு இணையாகப் போற்றப்பட்டிருப்பான். என்னைப் பொறுத்தவரையில், ‘இவர்களையெல்லாம் விட மிகவும் உயர்ந்தவன் சோழன் கோச்செங்கணான்' என்பதே உறுதியான கருத்து.

    ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பு ‘குண்டூசி' என்னும் மாதம் இருமுறை இதழ் வெளிவந்தது. இந்தியாவிலேயே 'கேள்வி – பதில்’ பகுதியை முதன் முதலில் துவக்கிய பத்திரிகை என்ற பெருமை 'குண்டூசி' இதழுக்கு உண்டு. இதன் பிறகுதான் வட இந்தியாவில் ‘மதர் இண்டியா' ஏட்டில் பாபுராவ் படேல் ‘கேள்வி - பதில்' பகுதியை எழுதிப் பிரபல மாக்கினார் என்பார்கள். ‘சாவி‘யின் உறவினரான திரு. ராதாகிருஷ்ணன் நடத்திய 'குண்டூசி' வெகுகாலம் சினிமா இதழாக இருந்து, பிறகு ஆன்மிக இதழானது. அப்போது அதில் மூன்று வருட காலம் தொடராக இக்கதையை எழுதினேன். ‘கனல் விழிகள்' என்னும் தலைப்பில் இது வெளியானது. இப்போது அந்த நவீனத்தை 'சோழ வேங்கை'யாக, மிகச் சிறப்பான முறையில் உருவாக்கி அளித்துள்ளேன், எனது வரலாற்று நாவல் தொகுதி பாகம் நான்கில் இதனையும் சேர்த்து அருமையான நூலாக்கியுள்ள செண்பகா பதிப்பகத்தாருக்கும் என் எழுத்து முயற்சிக்கு என்றும் ஊக்கமும் ஆக்கமும் அளித்துவரும் உவகை மாறாப் பெருந்தகை திரு. சின்னக்குத்தூசியார் அவர்களுக்கும் உளப்பூர்வமான நன்றியினை உரித்தாக்குகிறேன்.

    கோச்செங்கணானின் புகழ்பேசும் ‘களவழி நாற்பது' பாடல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் இடம்பெறச் செய்துள்ளோம்.

    இனி ‘சோழ வேங்கை' உங்கள் கரங்களில்.

    - கௌதம நீலாம்பரன்.

    1. நிலாக்கால இரவில்........

    நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர்

    வாள்மாய் குருதி களிறு உழக்கத் தாள்மாய்ந்து,

    முன்பகல் எல்லாங்குழம்பாகிப் பின்பகல்

    துப்புத் துகளில் கெமூஉம் புனல் நாடன்

    தப்பியார் அட்ட களத்து.

    - களவழி நாற்பது

    வானம் நீலப்பட்டாடையாய் காட்சியளித்தது. இளநிலவு பூமிக்கு பாலபிஷேகம் செய்து கொண்டிருந்தது. எனினும் அந்த அடர்ந்த கானகத்தில் பருத்த கிளைகளும் தழைத்த இலைகளும் தடுத்துத் தடுத்துக் குட்டை குட்டையாகப் பாலைத் தேக்கி வைத்தது போன்று திட்டுத் திட்டாகவே நிலவின் ஒளி பூமியில் பட்டுக் கொண்டிருந்தது.

    கப்பிக் கிடக்கும் காரிருளாய் அடர்ந்த மரங்களின் நிழல்களினூடேயும், நிலவின் ஒளிவெள்ளங்களினூடேயும் தாளவயம் தவறாமல் மேளத்தில் கொட்டுவது போல, ‘டக்... டொக்' கென்ற ஓசையுடன் புரவியொன்று நடைபோட்டுக் கொண்டிருந்தது.

    அந்த இரவின் நிசப்தத்தை மரக்கிளைகள் ஒன்றோடொன்று இழைந்து எழும் கிரீச்... கிரீச் சென்ற சப்தங்களும் சிள் வண்டுகளின் ரீங்காரங்களும் பறவையின் சிறகுகள் படபடக்கும் ஓசையும், காற்றில் உதிரும் கனிகள் சருகுகளில் தொப்பென்று வீழ்ந்து எழும் சப்தமும், இவைகளையெல்லாம் மிஞ்சுமளவில் ஒலித்துக் கொண்டிருந்த அந்த ஒற்றைக் குதிரையின் குளம்பொலிகளும் ஒருவித சங்கீதம் போல் சப்தங்களை எழுப்பி, சப்தங்கள் எப்போதும் சாவதில்லை என்பதை உணர்த்துவது போல் நிறைத்துக் கொண்டிருந்தன.

    அடர்ந்த இருளும், சின்னஞ் சிறிய ஒளித் திட்டுகளுமாகக் காட்சியளிக்கும் அந்தக் கானகம், ‘இருள் எப்போதுமே நிறைந்து ஆட்சி செய்து கொண்டிருந்து விடுவதுமில்லை. ஒளி மறைந்து அழிந்து விடுவதுமில்லை’ என்பதை உணர்த்துவது போல் தோன்றியது.

    நிதானமாக அந்தக் குதிரையின் தாளகதியில் நினைவுகளை எங்கோ பறக்கவிட்டு விட்டு ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்து போய், கடிவாளக் கயிற்றை தளர விட்டிருந்த இளந்திரையன், சற்றுத் தொலைவுக்கு அப்பாலிருந்து கேட்டுக் கொண்டிருந்த கோஷ்டி கானமொன்றை இப்போது மிக நன்றாகக் கேட்க முடிந்ததும், சிந்தனை கலைந்தவனாய் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துக் குதிரையின் போக்கைக் கட்டுப்படுத்தி நிறுத்தினான்.

    அது பல்லக்கு சுமப்பவர்களின் பாடலைப் போல் இருந்தது தான் அவன் திகைப்புக்குக் காரணமாக இருந்தது. 'இந்த அடர்ந்த கானகத்தில் இப்போதெல்லாம் யாரும் பல்லக்கில் பயணம் செய்வதில்லையே... இந்த அளவு துணிச்சல் எப்படிச் சோழநாட்டு மக்களுக்கு வந்திருக்க முடியும்? ஒரு வேளை செத்துக்கிடந்த வீரம் புத்துயிர் பெற்று மீண்டும் எழுந்துவிட்டிருக்குமோ?’

    'சே...! சே...! வீரமாவது விழித்தெழுவதாவது...’ அது இனி என்றைக்குமே இந்தத் தமிழ் மண்ணில் உயிர் பெற்றெழக்கூடாது என்பதற்காகத்தானே ஊர்தோறும் சிலம்பப் பள்ளிகள் மண்மூடிப் புல் மண்டிக் கிடக்கிறது. காளையர்கள் கத்தியைக் கண்டாலும் பாவமென்று கண்ணை மூடிக்கொண்டு விடுகின்றனர். கொலைக்கருவியான வாளைத் தொடுவதும் பாவமென்று சமண, பௌத்த ஞானிகள் போதித்து வருகின்றனர். மீறி எந்த இளைஞனாவது சிலம்பக்கழியையோ, வாளையோ கையில் எடுத்தால் கலவரம் விளைவிக்க முயன்றான் என்று குற்றம் சாட்டிக் கூண்டிலடைத்து விடக் களப்பிரர்கள் கடுமையான சட்டங்கள் இயற்றி வைத்திருக்க, அதை 'ஆமாம், இதுதான் தர்மம்' என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு கூடத் தாடும் சோழச் சிற்றரசின் பிரஜைகளுக்கு இனியாவது வீரமாவது வருவதாவது? வீரம் பாவமென்று பச்சைக் குழந்தைகளுக்கும் பாடம் போதித்தாகிவிட்டதே, இனி எப்படி அந்த வீரம் உயிர்பெற்று வர முடியும்?

    இப்படிச் சிந்தித்த வண்ணமாய் குதிரையிலிருந்து கீழே இறங்கிப் பத்தடி நடந்தவன், ‘ஆ.... ஐயோ... ஆபத்து… ஆபத்து' என்ற அலறலையும் அதைத் தொடர்ந்து சில கூக்குரல்களையும் கேட்டவுடன் பட்டென்று குதிரை மீது தாவியேறிக் கொண்டு விரைந்து சென்றான். குரல் வந்த திசையை நோக்கி, இவனுடைய குதிரை பாய்ந்த சில வினாடிகளில் குறுக்குப் பாதை யொன்றின் சந்திப்பில் பல்லக்கு ஒன்றைச் சுற்றிப் பத்துப் பதினைந்து முரடர்கள் உருவிய வாளுடன் வழிமறித்து நின்று கொண்டிருந்தனர். பல்லக்குத் தூக்கிகள் அவர்களிடம் ஏதோ கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

    காற்றைக் கிழித்துக் கொண்டு பாய்ந்த புரவியின் மீதிருந்த இளந்திரையனுக்கு எளிதில் விஷயம் விளங்கிவிட்டது. புயலெனப் பாய்ந்த புரவியை அந்த முரடர்கள் மீதே செலுத்தினான். ஓங்கிய வாளுடன் சிதறி விலகிய அந்த முரடர்கள் கண்களில் சீற்றம் பொறி பறக்க, 'ம்... கீழே இறங்கு' என்று இரைந்தபடியே அவனைத் தாக்கத் தொடங்கினர்.

    அடுத்த வினாடி அந்த இடத்தில் ஓர் சின்னப் போர் நிகழவாரம்பித்துவிட்டது. ஆனால் அது பயங்கரமாகவுமிருந்தது. கருகருவென்று இருளை வழித்து நிறம் பூசியது போல் தோன்றிய பயங்கரமான அந்த முரடர்களிடையே செப்புச் சிலை யொன்று சுழல்வது போல் செந்நிறக் கரங்களைச் சுழற்றியபடி பாய்ந்து தாக்கிக் கொண்டிருந்தான் இளந்திரையன்.

    உருவிய வாளுடன் குதிரையில் இருந்து குதித்து அத்தனை முரடர்களையும் ஏககாலத்தில் ஒருவனாக எதிர்க்கவாரம்பித்த இளந்திரையனுக்கு மனங்கொள்ளா மகிழ்வுண்டாகியது. தினவெடுத்த தோள்களுக்கு நல்ல வாய்ப்பு என்று எண்ணியபடியே மின்னல் வேகத்தில் வாளைச் சுழற்றிக் கொண்டிருந்தான்.

    பந்து குதிப்பது போல் திடீரென்று வந்து குதித்த அவன் பாய்ந்துப் பாய்ந்து வாளைச் சுழற்றிய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர் முரடர்கள்.

    பத்துப் பதினைந்து மின்னல்களுக்கு நடுவே ஒரு நெருப்புக் கோளம் சுழல்வது போல் சக்கர வட்டமாகச் சுழன்று கொண்டிருந்த இளந்திரையனை, பல்லக்கின் பட்டுத் திரைகளை விலக்கி கொண்டு ஒரு பொற்சிலை, தன் விற்கலை விழிகளை வியப்பால் மலர்த்தி நோக்கிக் கொண்டிருந்தது.

    நிலவின் ஒளியில் மின்னி மின்னி நெருப்புப் பொறிகளை கக்கிய வண்ணம் சுழன்று சுழன்று சூடேறிக் கொண்டிருந்த இளந்திரையனின் வாள், முரடர்களின் கைகளிலும் மார்பிலும் பாய்ந்து கிழித்து இரத்தத்தைப் பூசிக் கொண்டது.

    கணகணவென்று ஒலித்தபடி சில வாட்கள் முரடர்களின் கைகளிலிருந்து பறந்து விழுந்தன. பாதிப் பேருக்கு மேல் நிராயுத பாணிகளாகவும், ரத்தக் களறியான மேனியர்களாகவும் மாறினர். இந்த ஒற்றை இளைஞன் என்ன வீரமாகப் போரிடுகிறான்.... ‘அசுர பலம் பெற்றவனாய் வாளைச் சுழற்றுகிறானே... இனி இவனை எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியாது நம்மால்' என்று எண்ணியபடியே, முரடர்கள் விழுந்தடித்துக் கொண்டு சிதறி ஓடினர்.

    அத்தனை முரடர்களுடன் போரிட்டும் ஒரு சிறு காயம் கூட இன்றி குருதி படிந்த வாளுடன் பல்லக்கின் அருகில் வந்து பல்லக்குத் தூக்கிகளைப் பார்த்து, கொஞ்சங் கூட நெஞ்சில் உரமில்லாமல் திருடர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்த நீங்கள் எப்படித் துணிந்து இந்தக் காட்டு வழியே பல்லக்கை சுமந்து வந்தீர்கள்? கொடிய ஆறலைக் கள்வர்களும், வன விலங்குகளும் நிறைந்த இந்தக் கானகத்தில் இரவுப் பயணத்தை ஏன் மேற்கொண்டீர்கள்? என்று கேட்டுக் கொண்டிருந்த இளந்திரையனை நோக்கி....

    அது என் விருப்பத்தினால் தான். தக்க சமயத்தில் வந்து கடவுள் போல் காத்தருளியமைக்கு மெத்த நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியபடியே பட்டுத்திரைகளை விலக்கிக் கொண்டு பல்லக்கிலிருந்து கீழிறங்கி வெளிப்பட்ட அந்த அழகியைக் கண்டவுடன் ஒரு கணம் நிலைகுலைந்த இளந்திரையன், மறுகணம் நிதானமாக, கானகத்து வழியே செல்லும் பல்லக்குகளைக் காப்பது தான் அந்தக் கடவுளுக்கு வேலை போலும். கையில் வாளேந்திக் கள்வர்களுடன் ஒருவன் போரிட்டு வெற்றி கண்ட பிறகும் நன்றியைக் கடவுள்பால் கூறுகின்றீர்களே... நன்றாக இருக்கிறது உங்கள் நன்றி கூறல்! என்றான். அவன் குரலில் கேலி மிகுந்திருந்தது.

    கடவுள் போல் வந்து... என்ற சொற்களால் என்முன் ஒழுகும் குருதி படிந்த போளுடன் நிற்பவரைத்தான் குறிப்பிட்டேனேயன்றி கடவுளை அல்ல, அப்படியே இருந்தாலும் கடவுள் மேல் உங்களுக்கு அப்படி என்னதான் கோபமோ? என்று சிரித்த படியே வினவிய அந்த அழகியுடன் பல்லக்கிலிருந்து மற்றொரு பெண் கீழே இறங்கினாள். தோழி போலும்! அவள், ஐயா, வீரரே! எப்படிக் கூற வேண்டுமென்று தாங்கள் உரைக்கின்றீர்களோ, அப்படியே நன்றி கூறுகிறோம். முதலில் அந்த வாளை உறையில் போட்டுக் கொள்ளுங்கள். எங்களுக்கு அதைப் பார்க்கவே அச்சமாயிருக்கிறது! என்றாள்.

    அதற்கு, அது உங்கள் மேல் குற்றமில்லை அம்மணி! ஒரு அழகிய பெண்ணின் கண்களைக் கண்டபோதும் 'வாளைப்பதித்த இருவிழிகள்’ என்று வர்ணிக்குமளவு வாளையே நினைத்துக் கொண்டிருந்த மறத்தமிழன். இன்று எவனாவது வழிமறித்து வாளை உருவினால் உடனே அவன் காலடியில் வீழ்ந்து கெஞ்சி உயிர்ப்பிச்சை கோரும் அளவு கோழையாகிவிட்ட பிறகு, அப்படிச் சிலரின் துணையில் தனிவழியே வந்திருக்கும் ஒரு பெண் வாளைக்கண்டால் பயமாயிருக்கிறது, என்று கூறுவதில் வியப்பொன்றுமில்லை! என்று பதில் கூறினான் இளந்திரையன்.

    அவனை நோக்கி, சோழ வளநாட்டின் வீரம் மடிந்து விட வில்ல. அது இந்தக் கானகத்தில் தான் உலவிக் கொண்டிருக்கிறது என்பதே போல், தாங்கள் சற்று முன் வாளைச் சுழற்றிய விதத்திலிருந்தும் இப்போது நாவைச் சுழற்றும் விதத்திலிருந்தும் நாங்கள் உணருகிறோம். வீரம் குன்றிய இந்த ஆட்களுடன் தனி வழி வந்தமைக்கு வருந்துகிறோம். ஒரு வகையில் மகிழ்வுமடைய வேண்டியிருக்கிறது. இப்படித் தனி வழி வந்திராவிடில், சோழ நாட்டுப் புலி இந்தக் கானகத்தில் தான் மறைந்திருக்கிறது என்பதை நாங்கள் எப்படி அறிந்து கொள்ள முடிந்திருக்கும்? தயை கூர்ந்து மேலும் இந்த இரவுப் பயணத்திற்கு எங்களுடன் வந்து உறையூர் எல்லை வரை வழிகாட்டினால் மிகவும் உதவியாக இருக்கும் என்றாள் அந்த அழகிய இளம் பெண்.

    வளைகள் குலுங்க பூங்கரங்களால் அபிநயம் பிடிப்பது போல் ஆட்டி அசைத்து இதழில் மென்னகை மலரக் கூறிய அந்த அழகியை ஏறிட்டு நோக்கிய இளந்திரையன். 'இவள் ஒரு நடனக்காரியாக இருப்பாள் போலிருக்கிறது’ என்று மனத்துள் எண்ணியவனாக....

    முதலில் வீரம் உலவுகிறது என்று அஃறிணையில் மறைத்துக் கூறினீர்கள். இப்போது நேரடியாகவே புலி என்ற வார்த்தையால் என்னை அஃறிணைப் பொருளாக - மிருகமாக ஆக்கிவிட்டீர்கள். பிறகு மெல்லிய கலைகள் பயிலும் வெள்ளிய மின்னல் போல தென்றலில் துள்ளி நடமாடும் தேவதைகளுக்குத் துணை வர இந்த மிருகத்தைப் போய் அழைக்கின்றீர்களே... அம்மணி? என்று குத்தலாக மறுமொழி ஈந்த இளந்திரையனை நோக்கி.

    அப்படியெல்லாம் தவறான எந்த அர்த்தத்திலும் நான் பேச கவில்லை. தாங்கள் அணிந்திருக்கும் இந்த மேலங்கிதான் அப்படி ஒரு வார்த்தையைப் பிரயோகிக்கும்படி செய்துவிட்டது - என்று அவன் அணிந்திருந்த புலித்தோல் மேலங்கியைச் சுட்டிக் காட்டினாள் அந்த அழகி.

    அதற்கு கல கலவென்று சிரித்தபடியே 'அப்படியானால் நான் புலிவேஷம் போட்டிருக்கிறேன் என்று கூறுகின்றீர்கள். அப்படித் தானே?' என்றான் இளந்திரையன்.

    இப்படி எதற்கெடுத்தாலும் குதர்க்கமாக மறு மொழி பேசுகின்றீர்களே... இதென்ன வம்பு? உங்களுக்கு அந்தத் திருடர்களே தேவலை போல் இருக்கிறதே? என்று குறுக்கிட்டுப் படபடத்தாள் அந்த அழகியின் தோழி போன்றிருந்தவள். அதைக் கேட்ட இளந்திரையன் அமைதியாகச் சிரித்தபடியே.

    அப்படியா அம்மணி! தங்கள் விருப்பம் அதுவானால் சோழ நாட்டிலே இப்போது அதற்குப் பஞ்சமே இல்லை. இந்தக் காட்டிலேயே இன்னும் நிறைய கள்வர்கள் இருக்கின்றனர். போகப் போக நீங்கள் தாராளமாக அவர்களைச் சந்திக்கலாம். ஏன் அவர்களே உங்களைச் சந்திக்க வருவார்கள். வந்தனம், போய் வாருங்கள் என்று இரு கைகளையும் நீட்டிக் குனிந்து வழி விடுவது போல் பாவனை செய்து கூறிக்கொண்டே, வாளை உறையிலிட்டுக் கொண்டு அருகில் நின்ற குதிரையின் மீது தாவியேறிக் கொண்டு விடைபெறுவது போல் கைகளை அசைத்தான்.

    சீ... என்னடி இது... பேசத் தெரியாமல் பேசி வம்பை வளர்க்கிறாய்? என்று தன் தோழியைக் கடிந்து கொண்டாள் அந்த அழகி... அவளுக்கு இளந்திரையன் போய் விடுவானோ என்று பயமாயிருந்தது. அவனைத் தடுத்து நிறுத்தித் தங்களுக்கு உதவும்படி கேட்டுக் கொள்ள நினைத்தாள் அவள். உடனே, குதிரைமேல் ஏறிக்கொண்டு புறப்படத் தயாராயிருந்த இளந்திரையனை நோக்கித் தன் இரு கரங்களையும் குவித்து.

    தாங்கள் இப்படிக் கோபித்துக் கொண்டால் என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை. இந்த அடர்ந்த கானகத்தில் எங்களை இப்படி நிர்க்கதியாக விட்டு விட்டுப் போவது சரியென்று தோன்றினால் நீங்கள் போகலாம். எங்கள் விதிப்படி ஆவது ஆகட்டும் உங்களைத் தடுத்து நிறுத்தவோ, துணைவரச் செய்யவோ எங்களுக்கு உரிமை இல்லை என்று கண்களில் நீர் ததும்பக் கூறிய அந்த அழகியைப் பார்த்து இளந்திரையன் மனமிரங்கியவனாய்."

    அம்மணி! அப்படியெல்லாம் நீங்கள் வருந்த வேண்டிய அவசியமெதுவும் இப்போது ஏற்பட்டு விடவில்லை. நானும் உறையூரை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் முன்பின் அறிந்திராத ஒரு பெண்ணின் பல்லக்கின் பின்னால் துணைக்கு வருவது போல் வர எனக்குப் பழக்கமில்லை. மேலும் உங்கள் ஆட்கள் சோர்வுற்றுக் காணப்படுகின்றனர். இத்தனைக் களேபரமான நிகழ்ச்சிகள் இங்கு நடந்து கொண் டிருந்தும் அதோ பாருங்கள் அவர்களை என்று பல்லக்கின் மேல் சாய்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்த பல்லக்குத் தூக்கிகளைக் காண்பித்து. இதற்கு மேல் அவர்களை தொல்லைக் குள்ளாக்காமல் சிறிது ஓய்வு கொடுத்து நிம்மதியாக உறங்கவிடுங்கள். நீண்ட வழிப் பயணத்தை மேற்கொண்டதில் நீங்களும் சோர்வுற்றே காணப்படுகிறீர்கள். எல்லாரும் இளைப்பாறி, பொழுது புலர்ந்த பின் புறப்பட்டு வாருங்கள். சிறிது தொலைவு சென்றபின் ஆறு ஒன்று வரும். அந்த ஆற்றின் மணலில் குதிரையைப் புரளவிட்டுக் கரையில் உலவிக் கொண்டிருப்பேன். நிச்சயம் என் கவனத்தை மீறி உங்கட்கு இந்தக் காட்டில் எந்தவிதத் துன்பமும் ஏற்படாது என்பதற்கு மட்டும் உறுதியளிக்கிறேன் என்று கூறி விட்டுக் குதிரையைத் தட்டிவிட்டுக் கொண்டு புறப்பட முயன்ற அவனை இடைமறித்து."

    இவ்வளவு உறுதியளிப்பவர் எங்களுடன் வருவதால் அப்படி யென்ன இழுக்கு வந்துவிடும்? பெண்களைக் காத்தல் ஆண்களுக்குக் கடமையல்லவா? வீரம்மிக்க உங்கள் துணையைக் கோரும் எங்களை நிராகரித்துச் செல்ல முயலுதல் எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? என்றாள் அந்த அழகிய இளநங்கை."

    அது எந்த வகையில் வேண்டுமானாலும் நியாயமாக இருக்கட்டும், அல்லது நியாயமில்லாமல் போகட்டும். நான் ஒன்றும் தாங்கள் உரைப்பது போல் பெண்களைக் காக்க உறுதி பூண்டு வாழ்பவனல்லன். என் உயிருக்கும் மேலான இந்தச் சோழவளநாடு வீரம் செத்துப் போய், வீணர்கள் கொழுக்க உழைத்து மாள்கிறது. களப்பிரர்கள் குதிரைகளின் மேல் காலாட்டித் திரிகின்றனர். சோற்றால் மடையடைக்கும் சோழவள நாட்டின் விரிந்து சாம்ராஜ்யம் சிதைந்து சிற்றரசுகளாகி, சிதிலமடைந்த கோட்டை போல் படை வலிவிழந்து கிடக்கிறது. பணிந்து வாழும் பண்பினராகி விட்டனர் தமிழர்கள். அன்பும் அறனும் இல்வாழ்க்கைப் பண்புகளாயும், வீரமும் வெற்றியுமே தேசபக்தியாகவும், நற்பண்புகள் அமையப் பெற்ற வீரமறத் தமிழரினம் என்ற நிலை மாறி மாற்றானின் புற மதங்களால் மனம் மழுங்கிப் போய் விரக்தி மிக்கத் தொனியில் வேதாந்தம் பேச ஆரம்பித்துவிட்டனர். சமணமும், பௌத்தமும் பாலிமொழியும் பரவலாக எல்லோர் நெஞ்சிலும் பதிந்து விட்டன.

    இந்தக் கொடிய தளைகளை உடைத்து விலக்கி என் தாய் நாட்டின் இழிந்த நிலையை விலக்கி, என்று வீரத்தை விழித்தெழச் செய்யப் போகிறோம் - வெற்றிகளைக் குவித்து வீணர்களை விரட்டியடிக்கப் போகிறோம் என்பதிலேயே சதா- சிந்தனைகளை செலுத்தி, என் நினைவுகள் வேறுபுறம் திரும்பாமலிருக்க மனத்தில் உறுதியை வளர்த்துக் கொண்டிருப்பவன் நான். இந்த நிலையில் உங்களுக்கும் உங்கள் பல்லக்கிற்கும் ஏற்ற துணைவனாக நானிருப்பது இயலாத காரியம், ஆயினும் ஆபத்தினைப் பார்த்துக் கொண்டு என் வாள் உறையில் உறங்கிக் கொண்டிராது. எனவே என்னை என் வழியில் போகவிட்டு மெல்ல இளைப்பாறி வாருங்கள்... என்று கூறிவிட்டு, புரவியைத் தட்டிவிட்டான் இளந்திரையன்.

    2. வீரனை வீழ்த்தும் விழிகள்!

    ஞாட்பினுள் எஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்ப்

    போர்ப்பில் இடிமுரசின் ஊடுபோம் ஓண்குருதி

    கார்ப்பெயல் பெய்தபின் செங்குளக் கோட்டுக் கீழ்

    நீர்த்தாம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன்

    ஆர்த்தமர் அட்டகளத்து.

    அந்த இளநிலவின் ஒளியில், ஒத்தையடிப்பாதையின் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஓடும் அந்தப் புரவியின் மீதிருந்த இளந்திரையன் என்ற அந்த சுந்தர வாலிபனைப் பற்றிய நினைவுகள் நெஞ்சில் அலைமோத அந்தத் திசையையே பார்த்தபடி திகைத்து நின்ற தோழிப்பெண். அம்மா! அந்த ஆள் ரொம்பத்தான் திமிராகப் பேசுகிறான் நள்ளிரவில் நம்மை இந்த நடுக்காட்டில் தவிக்க விட்டு விட்டுச் செல்வதிலிருந்தே தெரிகிறது பாருங்கள், சரியானக் கல் நெஞ்சக்காரன் அவன் என்று என்றாள், தோழிப் பெண் இப்படிக் கூறியதும் அவளைக் கடிந்து கொண்டாள் அந்த இளநங்கை...

    சீ வாயை மூடடி! அவர் ஆண் பிள்ளை, அதிலும் வீரர். நம் பல்லக்கின் பின்னால் வர இவர் மறுத்ததில் நியாயமிருக்கிறது. நாம் தான் அவர் பின் செல்ல வேண்டும். எழுப்பு இந்த ஆட்களை என்று அவள் செல்லச் சினத்தோடு கட்டளையிட்டதும், நாங்கள் உறங்கவில்லையம்மா! மிகவும் அசதியாக இருந்தது... சிறிது கண் மூடியிருந்தோம் அவ்வளவுதான். ஆயினும் பரவாயில்லை. தாங்கள் பல்லக்கில் ஏறிக் கொள்ளுங்கள். இனியும் அதிக நேரம் இந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தால் வேறு ஆபத்துக்கள் வந்தாலும் வரக்கூடும் என்று மறுமொழியீந்தான் ஒரு பல்லக்குத் தூக்கி.

    அந்த இளநங்கையும் தோழிப் பெண்ணும் பல்லக்கில் ஏறிக் கொண்டதும், பல்லக்கைத் தூக்கிக் கொண்டு நடக்கவாரம்பித்தனர். பல்லக்குத் தூக்கிகள். அந்த இளநங்கையின் இதயத்தில் இளந்திரையனின் பேரழகும், வீரமும், திண்புயத்தோள்களும், தேன் தமிழ் வீரச்சொற்களும் தெவிட்டாத நினைவலைகளை புரளவிட்டுக் கொண்டிருந்தன.

    கொஞ்ச தூரம் சென்றதும் குதிரையின் வேகத்தைக் குறைத்து மெல்ல நடக்கவிட்டுத் தன்னையும் மீறி அந்தப் பல்லக்கின் பின்னாலேயே சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் சிந்தனைகளை எப்படி அடக்குவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் இளந்திரையன்.

    மேலே வானத்திலிருந்து வெண்ணிலவு போதை கலந்த பாலை பூமியில் பொழிந்து கொண் டிருந்தது. சில்லென்ற அந்தக் காற்று சிந்தையைக் கிறங்கச் செய்வதாயிருந்தது. பின்னாலிருந்து சிறிது தொலைவில் பல்லக்குத் தூக்கிகள், பல்லக்கைச் சுமந்து பயத்தாலும், அசதியாலும் நலிந்த குரலில் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டு ஓடி வரும் ஓசையும் கேட்டுக் கொண்டிருந்தது.

    இளந்திரையனின் விழித்திருந்த கண்களுக்கு முன்னாலும் பட்டுத் திரையை விலக்கிக் கொண்டு பவழ இதழில் மென்னகை மலர பதிலிறுக்கும் குரலில் சங்கீதம் மிளிர, பளிங்கனைய கரங்களின் வளைகள் குலுங்க வானத்து வெண்ணிலவு வையகத்தில் பெண்ணுருக் கொண்டு இறங்குதல் போல், செம்பஞ்சுக் குழம்பு தீட்டிய செம்மலர்ப் பாதங்களைப் பூமியில் பதித்து இறங்கி வரும் அந்த எழில் நங்கையின் பொன்னுருவம், அழியாத ஓவியம் போல் அப்படியே காட்சியளித்துக் கொண்டிருந்தது. 'அந்த இரவின் சொச்ச நேரத்துக்குள் அது வரைக் காத்து வந்த இளமையின் செருக்குகள் அனைத்தும் தோல்வியுற்று தானும் ஒரு சாதாரண மனிதனாகி அவள் அழகு வலையில் வீழ்ந்து காதல் மயக்கத்தில் மூழ்கிவிட நேர்ந்து விடுமோ என்ற எண்ணம் எலுப்பெற்று. அவனுடைய வைர நெஞ்சத்தை வாட்டி வதைக்கலாயிற்று. அதே கணத்தில் *பழையாறைக் காட்டு தவப்பள்ளியிலிருந்து தான் கிளம்பும் போது பெரியவர் சிவானந்த அடிகள், "இளந்திரையா! நீ ஏற்றுச் செல்லும் பொறுப்பு இந்தச் சோழ வள நாட்டின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப் போகின்ற ஒன்றாகும்.

    *தற்போதைய கும்பகோணத்திற்கு அருகிலிருந்த அக்காலச் சோழர்களின் முக்கிய நகரங்களில் ஒன்று.

    நீ எந்த அளவுக்கு வீரன் என்பது உண்மையோ அந்த அளவுக்கு மேலாக நீ அழகன் என்ற உண்மையே மற்றவர்கட்குப் புலனாகும் அளவு சுந்தர வாலிபனாக இருக்கும் உனக்கு இந்தக் காரியத்தைச் செய்து முடிக்கும் முன்னும் சரி, பின்னும் சரி, இடையேயும் சரி, வருகின்ற ஆபத்துகள் வீரர்களாலோ வீரத்தின் சூழ்ச்சிகளாலோ இருப்பதைவிட அழகாலும், அழகின் சூழ்ச்சிகளாலும் அதிகமாக இருக்கலாம். எனவே எதிரியின் வாள் எவ்வளவு பலமாகத் தாக்கிய போதும் சக்கரவட்டமாகச் சுழலும் உன் கரத்திலிருந்து எப்படி வாள் பிடி நழுவிவிடாமல் இருக்கிறதோ அதைவிட வலிமையாக உன் மனம் உன் பிடியிலிருந்து நழுவி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு என்பதாக அவர் உரைத்திருந்தது - நினைவில் வந்தது அவனுக்கு.

    அவர் கூறியிருந்தபடியே எனக்கு வந்த முதல் சோதனையான போட்போரில் காட்டுத்தனமாகத் தாக்கிய பல முரடர்களையும் எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்டுவிட்ட நான், இரண்டாவது சோதனையான இந்த வனிதையின் விழிகளில், மயங்கி விடாமலிருக்க என் மனத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரத்தில், இப்படி சிரமப்படுகிறேனே என்று எண்ணிக் கொண்டிருந்த இளந்திரையனுக்கு, அந்த நிலவின் தண்ணொளியையும், குளிர்ந்த காற்றையும் மீறி உடல் முழுவதும் ஒரு வெம்மை படர்வது போலிருந்தது.

    அவனைச் சுமந்து ஓடிக் கொண்டிருந்த கருநீல வண்ணப் புரவி ஆற்றின் இறங்கு துறைக்கு முன் வந்து ஆற்றில் இறங்கலாமா வேண்டாமா என்று யோசிப்பதைப்போல் தயங்கி நின்றது. அதைப் புரிந்து கொண்ட இளந்திரையன், பாவம் நெடுந்தூரமாகத் தன் தினவைத் தணித்துக் கொள்ள முடியாமல் நம்மைச் சுமந்துவரும் இந்தப் புரவியேனும் தன் தினவை இந்த மண்ணில் வீழ்ந்து புரண்டு தணித்துக் கொள்ளட்டும் என்று எண்ணியவனாகக் கீழிறங்கி குதிரை பின் முதுகிலிருந்தச் சேணங்களைக் களைந்து ஆற்றில் இறங்கிச் சென்று மணலில் புரள விட்டு விட்டுக் கரை ஓரமாக உலவிக் கொண்டிருந்தான்.

    சற்றுத் தொலைவில் ஆற்றின் தென்கரையில் மண்டபமொன்று தென்பட்டது. அதுவரை சென்று கொஞ்ச நேரம் கண்ணயர்ந்து கொண்டிருந்துவிட்டு வரலாம் என்று எண்ணிய அவன். சேணங்களை எடுத்துக் கொண்டு புறப்படலாமென்று எண்ணி கரை மீது ஏறவும் அந்தச் சுந்தர எழில் நங்கையைச் சுமந்த பல்லக்கு வந்து கரையில் நீக்கவும் சரியாக இருந்தது.

    3. ஆற்றங்கரை மண்டபத்தில்

    ஒமுக்குங் குருதி உழக்கித் தளர்வார்

    திமுக்குங் களிற்றுக்கோடு இன்றி யெமுவர்

    மழைக்குரல் மாமுரசின் மல்குநீர் நாடன்

    பிழைத்தாரை அட்டகளத்து.

    ஆற்றங்கரையில் இளந்திரையனைக் கண்டவுடன் அவனைத் தாண்டிக் கொண்டு பயணத்தைத் தொடர்வதா? அல்லது அங்கேயே பல்லக்கை இறக்கி வைப்பதா? என்று தெரியாமல் பல்லக்கை சுமந்து வந்தவர்கள் திகைத்து நின்றபோது, பட்டுத் திரைகளை விலக்கிக் கொண்டு முகில்களிடையே சிறைப்பட்ட நிலவு வெளிப்படுவது போலத் தன் முகத்தை நீட்டிய அந்த சுந்தர் எழில் நங்கை எதிரே ஆற்றையும், ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்த இளந்திரையனையும் பார்த்துவிட்டு, பல்லக்கைக் கீழே இறக்குங்கள் என்று கட்டளை இட்டாள்.

    பல்லக்கு கீழே இறக்கி வைக்கப்பட்டதும் அதிலிருந்து கீழிறங்கி, மயில் ஒன்று ஆடி அசைந்து நடை பயின்று வருவது போல் வரும் அந்த எழில் நங்கையுடன் பேசுவதா வேண்டாமா என்ற யோசனையுடன் குனிந்து சேணங்களை எடுத்துத் தோளின் மேல் போட்டுக் கொண்டு உறையிலிருந்த வாளை ஆற்று நீரில் கழுவிக் கொண்டு போகலாமென்ற எண்ணத்தில் வாளைக் கையில் உருவிக் கொண்டு புறப்பட்ட இளந்திரையனுக்கு அருகில் வந்து நின்ற எழில் நங்கை.

    தங்கள் சீற்றம் இப்பொழுதேனும் தணிந்திருக்கும் என்று எண்ணினேன். ஆனால், அது பொய் என்பதே போல் இப்படி வாளை உருவிக் கொண்டு வருகின்றீர்களே, இங்கு அப்படி யாரும் உங்களுக்கு நிகரான எதிரிகள் வரவில்லையே? என்று சிரித்துக் கொண்டே கேட்டதற்கு மறுமொழியாக.

    அம்மணி! எனக்கு எதிரிகள் என்றால் கையில் வாளுடன் தான் வரவேண்டுமென்பதில்லை முகத்தில் வாளைப் பதித்தது போன்ற இருவிழிகளுடனேயும் வரலாம் ஆனால், இப்போது நான் வாளை உருவியது எதிரிகளை எதிர் நோக்கியல்ல. இதில் படிந்திருக்கும் இரத்தக் கறைகளைக் கழுவிக் கொள்ளவே! என்று கூறிவிட்டு அவன் நடக்கத் தொடங்கினான்.

    வாள்வீரர் என்றால் ஒரு பெண்ணின் கண்களைக்கூட வாள் என்றுதானா வர்ணிக்க வேண்டும்? அப்படி ஒரு கொலைக் கருவியைப் போல் என் கண்களை நான் எப்போதும் பயன்படுத்துவதில்லை! என்றாள் அந்த இளநங்கை.

    நீங்கள் உங்கள் கண்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அம்மணி… எனக்கு என் வாள்தான் உயிர்! என்று ஒரு கணம் நின்று அவளுக்கு மறுமொழி கூறிவிட்டு மேலும் நடக்கத் தொடங்கிய அவனை.

    கொஞ்சம் நில்லுங்கள் நட்ட நடுக்காட்டிலே உங்கள் உயிருக்குயிரான வாட்களை விட்டு விட்டுப் போகின்றீர்களே? இதுதானா உங்கள் உயிர் மேலும், உயிரைவிட மேலான உங்கள் வாள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் பற்று? என்ற வினாவினால் சில விநாடிகள் திகைக்க வைத்துவிட்டாள் அவள்.

    தன் கையிலிருந்த வாளை உயர்த்திப் பார்த்துவிட்டு ஒன்றும் புரியாதவனாக, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்றான் அவன்.

    என் கண்களை உங்கள் வாளுக்கு ஒப்பீட்டீர்கள். அந்த வாள் உங்கள் உயிருக்கு நிகரானது என்றும் உரைத்தீர்கள், இப்போது ஒன்றும் புரியாதவர் போல் திகைத்து நிற்கிறீர்கள். இனி என்ன செய்யப் போகின்றீர்களோ? எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்று சிரித்தபடியே வினவிய அவளிடம் அக்கரை மேட்டில் தென்பட்ட மண்டபத்தைச் சுட்டிக்காட்டி.

    அம்மணி, உங்களைப் போல் பேசும் வல்லமைகளை நான் அதிகம் பயிற்சி செய்து கொள்ளவில்லை. வாளை வீசுவேன், அதனோடு தான் பேசுவேன். இப்போது அதோ அங்கே சென்று சிறிது கண்ணுறங்கி விட்டு அதிகாலையில் புறப்படலாமென்று எண்ணியுள்ளேன். என்னைவிட குதிரை மிகவும் களைப்புற்றிருக்கிறது. அதற்கும் சற்று ஓய்வு கொடுக்க வேண்டும் - என்று கூறிவிட்டு அவன் புறப்பட்டான்.

    அப்படியானால் நாங்களும் அந்த மண்டபத்தில் வந்து சிறிது இளைப்பாறிக் காலையில் புறப்படலாமா? என்று வினவினாள் அவள்.

    யாரோ கட்டி வைத்த மண்டபத்தில் யாரோ படுக்க என்னிடம் எதற்கு அனுமதி கேட்க வேண்டும்? என்று கூறிவிட்டு அவன் புறப்பட்டுவிட்டான்.

    எந்த வகையில் அவனைப் புரிந்து கொள்வதென்று புரியாமல் தவித்த அவள். யாரோ கட்டி வைத்த மண்டபத்தில் யாரோ படுக்கவல்ல அனுமதி கேட்பது, யாரைக் கண்ட சில விநாடிகளில் என் இதயத்தில் நிறைத்துக் கொண்டிருக்கிறேனோ அந்தச் சுந்தர வாலிபர் தங்கியிருக்கப் போகும் ஒரு மண்டபத்தி அவருடன் தங்கியிருக்க அனுமதி கேட்கிறேன்! என்று கூறினால் இதை அவள் சொல்லி முடிப்பதற்குள் விழிகளிலிருந்து நீர் முத்துகள் உருண்டு உதிர்ந்து அவளுடைய பளிங்கனைய கன்னங்களில் வழிந்தோடிவிட்டது.

    என்னதான் உறுதியாக இருக்க நினைத்தாலும் அந்த அழகிய இளநங்கையின் அன்பும், பரிதவிப்பும் இளந்திரையனை மேலும் மேலும் மனம் நெகிழ வைப்பதாகவே இருந்தது. ஆயினும்.

    "அம்மணி, என்னை தர்மசங்கடமான நிலையிலாழ்த்தி விடாதீர்கள். நான் அதற்கெல்லாம் தகுதியற்றவன். என் இதயம் முழுவதும் இந்த வாளுக்கு இரை தேடுவது பற்றிய நினைவுகள் தாம் நிறைந்திருக்கின்றன. சரி, உங்கள் தோழி பல்லக்கிலிருந்து இறங்குகிறார்கள். நான் அந்த மண்டபத்துக்குச் செல்கிறேன். நீங்களும்

    Enjoying the preview?
    Page 1 of 1