Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1
Gauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1
Gauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1
Ebook938 pages8 hours

Gauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரித்திர நாவல்கள் படிப்பதில் தமிழ் வாசகர்களுக்கு என்றுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. தமிழ் மண்ணின் பழங்கால வரலாறுகளை - முடிசூடி நாடாண்ட மூவேந்தர் பரம்பரையின் ஆட்சிச் சிறப்பை - பண்பாடு மாட்சிச் சிறப்பை - வீரத்தின் வெளிப்பாடுகளை அக்கதைகள் விரித்துரைக்கின்றன என்பதால், அவற்றைப் படித்து மகிழ்வதில் ஒரு தனி இன்பமும் பெருமிதமும் ஏற்படுகிறது. சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள் - சாளுக்கியர் படையெடுப்பு, ஹொய்சாளர் படையெடுப்பு, பிற்கால நாயக்கர் ஆட்சி, ஐரோப்பியர் வருகை, முகமதியர் கால பாதிப்புகள், தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி என்று இரண்டாயிரம் ஆண்டுக்கால சரித்திரம் எத்தனையோ செய்திகளை ஏந்திக் கிடக்கிறது. அவற்றை அடித்தளமாகக் கொண்டு எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

“கடந்த காலத்தின் காலடிச் சுவடுகள், நிகழ்காலத்துக்கான நடைபாதை. சம்பவங்களைச் சரித்திரங்களாய் மதிப்பிட்டு விடுவதும், சரித்திரங்களைச் சம்பவங்களாய் விலக்கி விடுவதும், பெரும்பாலான கல்வியாளர்களின் பலவீனம். ஆனால்... காலத்தின் கணக்கில், வரவு வைக்கப்பட வேண்டியவற்றைத் தேர்ந்து தெளிவதே வரலாற்று நவீனம்” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அது உண்மைதான்.

சரித்திரக் கதைகள் என்னும் தளம் மிக விரிவானது; ஆழமானது; சுயாரஸ்யமானதும் கூட.

அமரர் கல்கி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இத்துறையில், அவரை அடியொற்றிப் பல எழுத்தாளர்கள் சரித்திரக் கதைகள் எழுதிப் புகழடைந்திருக்கிறார்கள். சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், கோவி.மணிசேகரன், விக்கிரமன், மீ.ப.சோமு, கலைஞர் மு.கருணாநிதி என்று தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்தாளப் பெருமக்கள் பலர் உண்டு. அந்த வரிசையில், இளந்தலைமுறை எழுத்தாளர்களில் கௌதமநீலாம்பரன் குறிப்பிடத்தக்கவராகத் நிகழ்கிறார். இவருடைய சரித்திர நவீனங்கள் வாசகர்களிடம் மகத்தான வரவேற்பைப் பெறுகின்றன.

இப்போதெல்லாம் பத்திரிகைகளில் தொடராக வரலாற்றுக் கதைகள் அவ்வளவாக வருவதில்லை என்ற குறை இருக்கிறது. அக்குறையை இதுபோல் பதிப்பகங்கள் வெளியிடும் தனி நூல்கள்தான் போக்கி வருகின்றன.

கௌதமநீலாம்பரன் எழுதிய சரித்திர நவீனங்கள் அனைத்தையும் தொகுதி நூல்களாக வெளியிடும் முயற்சியில் செண்பகா பதிப்பகம் ஈடுபட்டுள்ளது. இதோ அவர் எழுதிய முத்தான மூன்று வரலாற்றுக் கதைகள் உள்ள முதல் தொகுதி உங்கள் கரங்களில்.

வாங்கி, வாசித்து மகிழுங்கள். உங்கள் மேலான கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர் வரலாற்றின் புகழ்!!

- ஆர்.எஸ். சண்முகம்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580102004116
Gauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1

Read more from Gauthama Neelambaran

Related to Gauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1

Related ebooks

Related categories

Reviews for Gauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu 1 - Gauthama Neelambaran

    http://www.pustaka.co.in

    கெளதம நீலாம்பரனின் சரித்திர நாவல்கள் தொகுப்பு - 1

    Gauthama Neelambaranin Sarithira Novelgal Thoguppu - 1

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பல்லவ மோகினி

    கலிங்க மோகினி

    மோகினிக் கோட்டை

    பொருளடக்கம்

    பதிப்புரை

    முன்னுரை

    வாழ்த்துகிறார், கவிப்பேரரசு வைரமுத்து

    பல்லவ மோகின

    1. வழிப்போக்கன்

    2. வீரக்கலை வித்தகன்

    3. முத்தரையர் மாளிகையில்...

    4. மதுரவல்லியின் மனக்கலக்கம்!

    5. சிங்கம் சிறைப்பட்டது!

    6. முத்தரையர் முழக்கம்!

    7. ஆட மறுத்த அழகி

    8. நம்பிக்கை நாயகன்

    9. கூரம் சபதம்!

    10. கூத்தரசனின் வேண்டுகோள்!

    11. விக்கிரமாதித்தன் அளித்த விருந்து

    12. பொய்யில் புதைந்த உண்மை!

    13. சிறைக் கூடத்தில்...

    14. உக்கிரதண்டனின் பயணம்

    15. வாளை உருவி நின்ற வனிதை

    16. மோகினி கூறிய கொலைத் திட்டம்!

    17. வீர விளையாட்டு...

    18. இரண்டு சிங்கங்கள்

    19. மோகினி செய்த கொலை!

    20. இணைந்தன இளைய சிங்கங்கள்!

    21. பூட்டிய அறைக்குள்...

    22. மதுரவல்லியின் மனக்கவலை!

    23. அடிகளாரின் அக்கினிப் பிரவேசம்!

    24. கங்க வேந்தனின் பேராசை

    25. உக்கிரோதய மாலை!

    26. மதுராவின் மனக்கணக்கு!

    27. பல்லவ குமாரனைப் பதைக்க வைத்த பாண்டிய கட்டளை!

    28. குத்துக்கல்லும் குலவிளக்கும்

    29. மாய மீன்கள்

    30. தழுவல் காவியம்!

    31. கோவிந்தமாறன் கூறிய யோசனை

    32. மீட்சிக்கு அறிகுறி

    33. சித்திரக் கனவுகள்

    34. சத்திரத்தில் ஓர் இரவு

    35. ஓடைக்கரையில் ஒரு குள்ளன்

    36. பத்ரகாளி அளித்த பரிசு!

    37. போர்ப் பொலிவு!

    38. நெஞ்சேந்திய நினைவுகள்!

    39. வில் விஷமம்

    40. விக்கிரமாதித்தனின் திகைப்பு!

    41. ஆனந்தத் திருவிழா

    பல்லவ மோகினி

    பதிப்புரை

    சரித்திர நாவல்கள் படிப்பதில் தமிழ் வாசகர்களுக்கு என்றுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. தமிழ் மண்ணின் பழங்கால வரலாறுகளை - முடிசூடி நாடாண்ட மூவேந்தர் பரம்பரையின் ஆட்சிச் சிறப்பை - பண்பாடு மாட்சிச் சிறப்பை - வீரத்தின் வெளிப்பாடுகளை அக்கதைகள் விரித்துரைக்கின்றன என்பதால், அவற்றைப் படித்து மகிழ்வதில் ஒரு தனி இன்பமும் பெருமிதமும் ஏற்படுகிறது. சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள் - சாளுக்கியர் படையெடுப்பு, ஹொய்சாளர் படையெடுப்பு, பிற்கால நாயக்கர் ஆட்சி, ஐரோப்பியர் வருகை, முகமதியர் கால பாதிப்புகள், தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி என்று இரண்டாயிரம் ஆண்டுக்கால சரித்திரம் எத்தனையோ செய்திகளை ஏந்திக் கிடக்கிறது. அவற்றை அடித்தளமாகக் கொண்டு எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

    கடந்த காலத்தின் காலடிச் சுவடுகள், நிகழ்காலத்துக்கான நடைபாதை. சம்பவங்களைச் சரித்திரங்களாய் மதிப்பிட்டு விடுவதும், சரித்திரங்களைச் சம்பவங்களாய் விலக்கி விடுவதும், பெரும்பாலான கல்வியாளர்களின் பலவீனம். ஆனால்... காலத்தின் கணக்கில், வரவு வைக்கப்பட வேண்டியவற்றைத் தேர்ந்து தெளிவதே வரலாற்று நவீனம் என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

    அது உண்மைதான்.

    சரித்திரக் கதைகள் என்னும் தளம் மிக விரிவானது; ஆழமானது; சுயாரஸ்யமானதும் கூட.

    அமரர் கல்கி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இத்துறையில், அவரை அடியொற்றிப் பல எழுத்தாளர்கள் சரித்திரக் கதைகள் எழுதிப் புகழடைந்திருக்கிறார்கள். சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், கோவி.மணிசேகரன், விக்கிரமன், மீ.ப.சோமு, கலைஞர் மு.கருணாநிதி என்று தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்தாளப் பெருமக்கள் பலர் உண்டு. அந்த வரிசையில், இளந்தலைமுறை எழுத்தாளர்களில் கௌதமநீலாம்பரன் குறிப்பிடத்தக்கவராகத் நிகழ்கிறார். இவருடைய சரித்திர நவீனங்கள் வாசகர்களிடம் மகத்தான வரவேற்பைப் பெறுகின்றன.

    இப்போதெல்லாம் பத்திரிகைகளில் தொடராக வரலாற்றுக் கதைகள் அவ்வளவாக வருவதில்லை என்ற குறை இருக்கிறது. அக்குறையை இதுபோல் பதிப்பகங்கள் வெளியிடும் தனி நூல்கள்தான் போக்கி வருகின்றன.

    கௌதமநீலாம்பரன் எழுதிய சரித்திர நவீனங்கள் அனைத்தையும் தொகுதி நூல்களாக வெளியிடும் முயற்சியில் செண்பகா பதிப்பகம் ஈடுபட்டுள்ளது. இதோ அவர் எழுதிய முத்தான மூன்று வரலாற்றுக் கதைகள் உள்ள முதல் தொகுதி உங்கள் கரங்களில்.

    வாங்கி, வாசித்து மகிழுங்கள். உங்கள் மேலான கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள்.

    வாழ்க தமிழ்! வளர்க தமிழர் வரலாற்றின் புகழ்!!

    - ஆர்.எஸ். சண்முகம்

    முன்னுரை

    முத்தான மூன்று வரலாற்று நவீனங்கள் ஒரே தொகுதியாக இதோ உங்கள் கரங்களில் தவழ்கிறது. இதில் முதல் கதை, பல்லவமோகினி.

    பல்லவர் வரலாற்றில் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் காலகட்டம் எந்த அளவு முக்கியத்துவமும் சிறப்புத் தன்மையும் வாய்ந்ததோ அதே போன்றே பரமேஸ்வரவர்மன், ராஜசிம்மன் காலகட்டமும் அமைந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம்.

    கலைகள் வளர்த்த விதமும் சாளுக்கியர்களோடு போரிட்ட சம்பவங்களும் அப்படியே திரும்பி ஒரு முறை நிகழ்ந்தது போலிருக்கின்றன.

    கடல் மல்லையில் கலைக்கனவுகளுடன் குடைவறைகளைத் தோற்றுவித்தனர் மகேந்திர பல்லவரும் நரசிம்மபல்லவனும்.

    அதே கடல் மல்லைக்கு மகுடம் சூட்டியது போன்று அலைவாயில் எழுந்து நின்று 'கடற்கரைக் கோயில்' என்றே உலகோரால் இன்று போற்றிப் புகழப்படும் ஆலயத்தை மும்மூர்த்திகளுக்காக அமைத்தவன் இந்த நாவலின் நாயகனான இராஜசிம்மன். அதைப் போலவே மேலும் சற்று பெரிதான கைலாசநாதர் ஆலயத்தைக் காஞ்சியில் எழுப்பியவனும் இவனே. இதை முன்மாதிரியாகக் கொண்டே பின்னாளில் மேலும் பெரிதாக ராஜராஜ சோழனால் எழுப்பப்பட்டது தஞ்சைப் பெரிய கோயில்.

    இராஜசிம்ம பல்லவனின் தந்தை பரமேஸ்வர வர்மனோ தமிழகத்தின் முதல் கற்கோயிலை கூரம் என்னமிடத்தில் உருவாக்கியவன் என்னும் பெருமைக்கு உரியவன். இவன் காலத்தில் சாளுக்கிய புலிகேசியின் புதல்வனான முதலாம் விக்கிரமாதித்தன் காஞ்சிமீது படையெடுத்தான். காஞ்சியைக் கைப்பற்றியும் விட்டான். ஆனால் பரமேஸ்வரனும் இராஜசிம்மனும் எப்படியோ தலை மறைவாகி, காஞ்சியை மீட்கப் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டனர். தந்தை ஆந்திர நாட்டில் சென்று படை திரட்டி வந்தான். ஆனால் வழியில் கங்கர்களோடு போரிட்டுத் தோற்றான். உக்கிரோதயம் என்னும் இரத்தின மாலையையும் தொலைத்து விட்டு மனம் சோர்ந்து போனான்.

    இராஜசிம்மனோ தமிழகத்திலேயே உலவி, முத்தரையர்கள் உதவியையும் பாண்டிய நாட்டுப் படை உதவியையும் முயன்று பெற்று சாளுக்கிய வேந்தன் மீது போர் தொடுத்தான். பெருவளநல்லூரில் நடந்த இந்தப் போரில் தந்தை பரமேஸ்வர பல்லவனும் பங்கு பெற்றான். சாளுக்கியனை ஓடஓட விரட்டி, காஞ்சியை மீட்டனர்.

    இந்த முயற்சிகளில் பல்லவ - பாண்டிய நாடுகளிடையே நட்பும் உறவும் வளர்ந்துள்ளதை வரலாற்று நூல்கள் மூலம் அறியமுடிகிறது. பாண்டிய இளவரசன் கோச்சடையன் ரணதீரன் இந்த நட்புறவின் அடையாளமாகத் தன் மகனுக்கு ராஜசிம்மன் பெயரை வைத்தான். அதற்கு காரணம் அவன் ராஜசிம்மன் மகளை மணந்தது தான் என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன. ஆனால் இதுபற்றி உறுதியாக எந்தத் தகவலும் இல்லை, பாட்டன் பெயரை பேரனுக்கு வைக்கும் மரபை எண்ணி எழுந்த ஊகமாகவே இதைக் கருக வேண்டியிருக்கிறது.

    பல்லவ இளவரசனும் பாண்டிய இளவரசனும் சம வயதுடைய நண்பர்களாகத் தோன்றுவதாலும், இரண்டு பேருமே தங்கள் தந்தை சார்பில் போரில் ஈடுபட்டு, ரணதீரன், ரணஜெயன் என்ற விருதுப் பெயர்களைச் சூடியிருப்பதாலும் நான் அந்த நட்புறவுக்குக் காரணமான இளம் பெண்ணை பல்லவ இளவரசனின் தங்கையாகக் கொண்டு இந்த நவீனத்தை எழுதியுள்ளேன். அவள்தான் பல்லவ மோகினி. கோச்சடையன் ரணதீரன் தன் புதல்வனுக்கு ஏன் இரண்டு நாடுகளின் நட்புறவின் அடையாளமாகத் தனது நண்பனின் பெயரைச் சூட்டியிருக்கக் கூடாது? இது பொருத்தமுடையதாகவும் தோன்றுகிறது.

    வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர் மா. ராசமாணிக்கனாரின் பல்லவர் வரலாறு, பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரின் பாண்டியர் வரலாறு, திரு.ம. இராசசேகர தங்கமணி பட்டப்படிப்பிற்காக எழுதிய பாண்டியர் வரலாறு, தொல் பொருள் ஆய்வுத் துறை வல்லுநர் திரு. நடன. காசிநாதனின் ‘முத்தரையர்' ஆகிய நூல்கள் இந்த நாவலை எழுத எனக்குப் பெரிதும் ஆதாரமாக அமைந்தன. 'பல்லவ மோகினி'யை மலேசிய 'வானம்பாடி' வார இதழில் தொடராக வெளியிட்ட டாக்டர் பழனியப்பன் அவர்களுக்கும் எழுதத் தூண்டிய அவரது புதல்வர் டாக்டர் பழ. செல்லப்பா அவர்களுக்கும் இந்த வேளையில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

    கவிவேந்தன் திரு. வைரமுத்து அவர்களின் தமிழ் நெஞ்சம் கம்பீரமான அணிந்துரை அளித்து, 'பல்லவ மோகினி'யை போற்றியுள்ளது. அவருக்கு என்றென்றும் என் உளமார்ந்த நன்றி.

    இரண்டாவதாக உள்ள நவீனம் 'கலிங்கமோகினி'. பாண்டியர் வரலாற்றில், மகோன்னதமான ஒரு காலகட்டத்தில் அமைந்த அருமையான கதைக்களம். இதன் நாயகன் மதிதுங்கன் 'தனி நின்று வென்றான்' எனப்படும் அழகன்பெருமாள், உண்மையாகவே வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்தவன். மகத்தான சாதனைகள் புரிந்த இவன் இன்னும் அதிகமாகவே பேசப்பட்டிருக்கவேண்டும். ஏன் எல்லோரும் மறந்தனர்? என்பது புரியவில்லை.

    இந்த வரலாற்றுக் கதையை வாசித்து வாழ்த்தியவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். அவருடைய ஒப்பற்ற வாழ்த்துரை உங்களுக்குப் பல புதிய செய்திகளைச் சொல்லும்.

    மூன்றாவது கதை. 'மோகினிக் கோட்டை. 'திருமலை நாயக்கரின் தம்பி குமாரமுத்துதான் இதன் நாயகன். 'இரவிக் குட்டிப்பிள்ளை போர்' என்னும் நாட்டுப் பாடல்களின் கம்பீரமான அடித்தளத்தில் எழுதப்பட்ட சரித்திரக் கதை இது. 'வாண்டுமாமா' என்று சிறுவர் இலக்கிய உலகில் மிகப் பிரபலமாகத் திகழும் கெளசிகன் இதற்கு அணிந்துரை நல்கி, வாழ்த்தியுள்ளார்.

    இவர்களுக்கு நன்றி கூறுவதுடன், என் சரித்திர நவீனங்கள் அனைத்தையும் தொகுதி நூல்களாக வெளியிடும் அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ள நண்பர், செண்பகா பதிப்பக அதிபர், திரு. R.S. சண்முகம் அவர்களுக்கு என் இதயப் பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சரித்திர நவீனங்களை வாசிப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டும் தமிழ்வாசக அன்பர்கள் எங்களின் இப்புதிய முயற்சிக்கு மகத்தான ஆதரவினை நல்கி, வாழ்த்துவார்கள் என நம்புகிறோம்.

    - கெளதம நீலாம்பரன்

    4-D, சாய்சரோவர்,

    100 அடி பை பாஸ் சாலை,

    வேளச்சேரி,

    சென்னை - 42

    வாழ்த்துகிறார், கவிப்பேரரசு வைரமுத்து

    கடந்த காலத்தின் காலடிச் சுவடுகள், நிகழ் காலத்துக்கான நடைபாதை, சம்பவங்களைச் சரித்திரங்களாய் மதிப்பிட்டு விடுவதும், சரித்திரங்களைச் சம்பவங்களாய் விலக்கி விடுவதும், பெரும்பாலான கல்வியாளர்களின் பலவீனம். ஆனால் காலத்தின் கணக்கில், வரவு வைக்கப் பட வேண்டியவற்றைத் தேர்ந்து தெளிவதே வரலாற்று நவீனம்.

    இந்தக் கூர்மையோடு, களத்தில் இறங்கிய பெருமை, கெளதம் நீலாம்பரனுக்கு உண்டு. தமிழினம், தனக்குள்ளேயே பொருது நின்ற சூழலில் தலைநுழைத்த பகைவர்களை, தமிழர்கள் இணைந்து நின்று களையெடுத்த வரலாற்றை, பல்லவ மோகினி பறைசாற்றுகிறது.

    கவிதை இழையோடும் கம்பீரமான நடை, படைப்பு முழுவதும் உயிரோட்டத்தோடு ஊறித் ததும்புவதைப் பார்க்கிறோம். பாண்டியர்களும், பல்லவர்களும் தோள்தழுவி நின்று, வாளுருவி வந்த சாளுக்கியர்களை விரட்டியடித்த வெற்றிச் சரித்திரம், பல்லவ மோகினி.

    வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் கடந்த காலத் தமிழன் கவனமாயிருந்ததை, நிகழ்காலத்திற்கு இந்நூல் நினைவூட்டுகின்றது.

    இளைய பாண்டியன், என் இதயம் கவர்ந்த பாத்திரம். ஈரமும், வீரமும் இணைந்த அந்த இதயத்தை, கௌதம நீலாம்பரன், காவியமாகவே வடித்திருக்கிறார்.

    சுவாசத்தைத் துரிதம் செய்யும் சூடான திருப்பு முனைகளைப் படைப்பு முழுவதிலும் பார்க்க முடிகிறது.

    வீதியே எங்கள் வீடு. வித்தையே எங்கள் செல்வம், நாடோடிப் பெண் மங்காவின் நாவில் இருந்து தெறிக்கும் இந்த வார்த்தைகள், ஒரு அறுசீர் விருத்தத்திற்கே அடியெடுத்துக் கொடுக்கின்றன.

    இத்தகைய தெறிப்புகள், இந்தப் படைப்பு முழுவதும் கிடைக்கின்றன. கௌதம நீலாம்பரன், அமரர் நா.பா. ஏற்றி வைத்த இலக்கிய தீபங்களில் ஒரு எழுச்சி தீபம். சரித்திர நவீனங்களில் சரித்திரம் படைக்கும் இவர் குங்குமச் சிமிழுக்குள் குடியிருக்கும் சிங்கம்.

    இவரது விரிந்த அறிவின் விலாசமாகவும், தெளிந்த நடையின் பிரவாகமாகவும், பல்லவ மோகினி பரிமளிக்கிறது.

    உணர்வு ரீதியான ஒருமைப்பாட்டுக்கு உரக்கக் குரல் தரும் பல்லவ மோகினி உறங்கிக் கிடக்கும் இன உணர்வுக்குப் பள்ளியெழுச்சி பாடப் புறப்பட்டு வருகிறாள். எழுங்கள் தமிழர்களே!

    இது வைகறைக் காலம்!

    வெளிச்சத்தை எதிர்நோக்கி,

    வைரமுத்து.

    பல்லவ மோகின

    1. வழிப்போக்கன்

    வான வீதியைக் கூட்டிப் பெருக்கிக் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் வைகறைக் கன்னி. கோடுகள் தெரியாத அந்த மங்கலக் கோலத்தின் ஒளிப் புள்ளிகளாய் இன்னமும் ஆங்காங்கே ஒன்றிரண்டு விண்மீன்கள் - செம்மண் தீற்றல்களாய் கீழ்வானச் சிவப்பு.

    மரங்களிலிருந்து பறவை இனங்கள் தங்கள் வித வித இன்னொலிகளால் வைகறைக்கு வரவேற்புக் கவிதை படித்தன.

    ஓ! சூரிய வரவு எத்தனை சுந்தரமாகக் கொண்டாடப்படுகிறது பிரபஞ்சத்தில்!

    இன்னும் சமுத்திர ஸ்நானத்தை முடித்துக் கொண்டு ஒளி சிதறும் கிரண் இழைகளாலான தங்க அங்கிகளை அணியவில்லை கதிர்த்தேவன். ஆனால், நிலம் தெளிந்து வெளிச்சவண்ணம் பூசத் துவங்கிவிட்டதே எப்படி?

    ஓ! அதுதானே உலகின் முதல் சுப சூசகம். நல்லோர் வருகை எப்போதுமே நன்மை எனும் நறுமணத்தை முன்னதாகவே கமழச் செய்துவிடும் போலும்! அதனால்தான் அந்த பிரபஞ்ச மித்திரனின் பெருமைக்குரிய வருகையை எதிர்பார்த்து வழி மீது விழி வைத்துக் காத்திருக்க பூக்களெல்லாம் வைகறைக்கு முந்தைய சாமங்களிலேயே முகையவிழத் துவங்கி விடுகின்றனவோ!

    கோடி வண்ணத்தைக் கொட்டிக் குழைத்துத் தீட்டிய அற்புத ஓவியங்கள் அலங்கரிக்கும் சித்திர மண்டபம் போன்று இருக்கும் கீழ்வானில். இதோ ராஜகம்பீரமாய் சூரிய உலா துவங்கப் போகிறது.

    எங்கிருந்தோ ஒரு விசித்திர சங்கீதம் கேட்கத் துவங்குகிறது. ஒலிக்குச் சுவை உண்டா என்ன? பாருங்களேன், இந்த கல்…கலீர் சப்தம் நெஞ்சில் தேன் பிலிற்றுகிறது! அது என்ன... ஓ! இளம் பெண்களின் பாதசரங்கள் எழுப்பும் இன்னொலி - மௌனத்தை ஒட்டு மொத்தமாகப் பகிஷ்கரித்து விட்ட அவர்களின் காரணமில்லாக் கலகல நகையொலிகள்! புலர்காலைப் பூபாளம் பூந்தேனின் இனிமை பூசிக் கொண்ட ரகசியம் இப்போது புரிகிறது!

    பட்டுப் பாதங்களைப் பனித் துளிகள் அபிஷேகிக்கப் பசும் புற்களின் மீது பாவவிட்டுத் தாவித் தாவி குதூகலம் கொப்பளிக்க ஓடும் பொன் மான்களைப் போன்ற அந்தப் பெண் மான்கள் அருகிலிருக்கும் மகேந்திர தடாகத்தை நோக்கி நீராடச் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒரு பெரிய இலுப்பை மரம். அருகே வந்த பிறகு தான் அதன் பெரிய பெரிய வேர் முண்டுகளுக்கு நடுவே ஒரு மனிதன் படுத்துக் கிடப்பது அவர்கள் கண்களில் படுகிறது.

    ஏக காலத்தில் அதைக் கவனித்துவிட்ட அந்த மான்கள் ஒன்றாக மருண்டு தயங்கின.

    அந்த வேளையில் அங்கு ஒரு மனிதன் படுத்துக் கிடப்பது என்பது அசந்தர்ப்பமானதுதான். இத்தனை விடியலில் பாதையோர மரத்தினடியில் ஒரு மனிதன் படுத்துக் கிடப்பானா என்ன... அவர்கள் மரத்தைத் தாண்டி நடப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஒருத்தி, அடி, நேற்று மாலை இதே வழியாக நாம் வரும்போது, நம்மிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தானே அவனே தான் இவன்... என்றாள்.

    சற்று துணிவு வந்தவர்களாக அந்தப் பெண்கள் நெருங்கிச் சென்றனர். ஆமாம். அவள் கூறியது உண்மை தான். ஆனால், நம்மிடம் என்று அந்தப் பெண் கூறினாளே தவிர, முதல்நாள் மாலை அதே மனிதன் நெடுந்தூரம் நடந்து வந்த களைப்போடு கண்கள் இருள, தொண்டை வறள பாதையோரம் நின்று, அம்மணி! தாகம் தீர்க்க கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள் என்று இரண்டு கரங்களையும் வாயருகே குழித்துப் பிடித்தபடி குனிந்து நின்று கேட்டபோது அவர்கள் அவ்வளவு எளிதாக அவன் தாகத்தைத் தீர்த்து விடவில்லை.

    பெண்களை வழிமறிக்கிறாயே... நீயெல்லாம் ஒரு மனிதனா-? என்று கூறினாள் ஒருத்தி.

    நாடு இப்படி ஆகிவிட்டதடி - பெண்களுக்கு எந்தப் பாதுகாப்புமில்லை... என்றாள் மற்றொருத்தி.

    சிறிது தூரத்தில் தடாகம் இருக்கிறது. அங்கு போய் எவ்வளவு வேண்டுமானாலும் குடி... என்றாள் இன்னொருத்தி.

    என்னால் ஒரு அடி கூட இதற்குமேல் நடக்க முடியாது போலிருக்கிறது. நான் உங்களுக்கு உபத்திரவம் கொடுப்பவனல்ல. மனமிருந்தால் சிறிது நீர் கொடுங்கள். இல்லாது போனாலும் பாதகமில்லை. நீங்கள் போகலாம் என்று அம்மனிதன் கூறியதும் மதுரவல்லிதான் மனமிரங்கி, என்னடி இது... நின்று வம்பு வளர்க்கிற நேரத்தில் அவருக்குச் சிறிது குடிநீர் கொடுத்துவிட்டுப் போயிருக்கலாமே... விலகுங்கள். நானே கொடுக்கிறேன் என்று முன் வந்து, தன் குடத்தை அவனுடைய குழிந்த கரங்களில் சரித்தாள்.

    எத்தனை தாகத்தோடிருந்தான் அம்மனிதன் என்பது அடுத்த கணமே புரிந்தது. ஊற்றிய நீர் முழுவதையும் தன் வயிற்றில் நிரப்பிக் கொண்டிருந்த அவனைப் பார்ப்பதற்கே மதுரவல்லிக்கு வேதனையாக இருந்தது. தலைப்பாகை மறைக்க குனிந்திருந்த முகத்தைச் சற்று நிமிர்த்தி, விழிகளை மேல் நோக்கி உயர்த்தி, போதும் என்பது போல் அவன் தலையை அசைத்தபோது, அந்தக் கண்களில் நன்றி மட்டுமல்ல, நீர்த் துளிகளும் நிறைந்திருந்தன.

    அதன் பிறகு அவர்கள் சென்றுவிட்டிருந்தனர். இப்போது அம்மனிதன் அங்கே படுத்துக் கிடப்பதைப் பார்த்தால், அவன் முந்தைய நாள் மாலையிலிருந்தே அந்த இடத்தைத் தாண்டிச் செல்லவில்லை என்று தெரிகிறது. ஒரு வேளை மூர்ச்சையுற்றோ அல்லது ஆயாச மிகுதியாலோ அவன் அந்த மரத்தினடியிலேயே முடங்கிக் கிடந்திருக்க வேண்டும் என்று மதுரவல்லி எண்ணினாள். அருகில் சென்று அவனையெழும்பி, என்ன ஏது என்று விசாரிக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

    வாடி, போய்விடலாம். நாடு இருக்கிற நிலைமையில் நாம் முன்பின் தெரியாத ஒரு மனிதனிடம் எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளக் கூடாது. நீ நேற்று அந்த மனிதனுக்குத் தண்ணீர் ஊற்றியதே தவறு. நாம் உடனே இந்த இடத்தை விட்டுப் போய் விடுவதே நல்லது... என்றனர்.

    அடியே மதுரா, நீ இந்த ஊருக்கு உன் குலதெய்வத்தைப் பூஜிப்பதற்காகத்தான் வந்திருக்கிறாய். வந்த வேலையைக் கவனிக்காமல் வழிப்போக்கனைக் கவனிப்பதெல்லாம் நியாயமில்லை. வா போகலாம் என்று சிரித்தபடியே கூறி, அவள் கையைப் பிடித்துத் தர… தரவென்று இழுத்துக் கொண்டு நடக்கலானாள் ஒருத்தி.

    மதுரவல்லி, மகேந்திர தடாகம் சென்று நீராடிய பின், ஈரப் புடவையுடன் குடத்தில் நீரெடுத்து வந்து அந்த ஏரிக் கரையிலிருந்த பிரம்மாண்டமான அரசமரத்தின் கீழ் அமைந்திருந்த சப்தமாதர், நாகர், வனதுர்க்கை விக்கிரங்ககளுக்கு அபிஷேகம் செய்தாள். கோவில் என்று எதுவும் அங்கில்லை. தெய்வ உருவங்கள் வெட்ட வெளியில் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து கிடந்தன. வானமே விதானம், பூமியே மண்டபம், மரங்களெல்லாம் மாணிக்கத் தூண்கள் என்று சொல்லலாம் போல் ஓர் இயற்கை ஆலயமாகத் திகழ்ந்தது அந்த இடம்.

    சூரிய உலா தொடங்கியது. அந்த சுந்தரத் தழல் மேனியன் தன் கதிர்க் கரங்களால் உயிர்க் குலத்தை வாஞ்சையோடு வருடினான். இன்னும் கொஞ்சம் உறங்கும் சபலத்தோடு இருக்கும் ஜீவராசிகளைச் செல்லமாகத் தட்டியெழுப்பி, அதுவும் போதாததாலோ என்னவோ சுள்ளென்று தன் ஒளிச் சாட்டையைச் சுழற்றினான். அந்தக் கதிர்க் கோபம் யாருக்கு உறைத்ததோ இல்லையோ... அந்த வழிப்போக்கனுக்கு உறைத்தது. அவன் சட்டென்று விழித்து, சுற்றுப்புறத்தை நோக்கினான்.

    ஓ! இங்கயே இரவு முழுக்க உறங்கிவிட்டோம் போலிருக்கிறதே என்று எண்ணியபடியே அவன் எழுந்திருக்க யத்தனித்தான். ஆனால் உடல் ஒத்துழைக்க மறுத்தது. கண்களுக்குள் முட்கள் நெருடின. கை, கால்கள் இற்று விழுந்து விட்டாற்போல் பிரமை தட்டிற்று.

    ஜீவிதகாலம் முழுவதும் மனிதனை விடாது பற்றியிருக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த, உணவுக்கும் வயிற்றுக்கும் உள்ள பந்தம் அறவே புறக்கணிக்கப்பட்டிருந்ததால் அவனது அன்ன மய கோசங்கள் பிராணமய கோசங்களை வம்புக்கு இழுத்தன.

    நடை... நடை... இரவு பகல் என்று பாராமல் நடந்து கொண்டேயிருந்த அவன் இந்தக் கிராமத்தில்தான் முழுவதுமாக ஓர் இரவு விழுந்து கிடக்க உடலை அனுமதித்திருந்தான். முதல் நாள் மாலை மதுரவல்லியிடம் அவன் நீர் கேட்டுப் பருகியதும் சிறிது இளைப்பாறலாம் என்றுதான் அந்த மரத்தின் அடியில் போய்ப் படுத்தான். ஆனால், அதன் பிறகு எழவிடாதவாறு அயர்வுகள் அவனை ஆக்ரமித்தன. என்னவோ அந்த மண்ணில் விழுந்து புரள வேண்டும் போல் தோன்றியது. காரணம், அந்த ஊரின் பெயரும் அதைச் சுற்றியுள்ள ஊர்களின் பெயர்களும் அவன் சிந்தைக்குள் சிலிர்ப்பூட்டி வீரக் கதைகள் பேசின.

    அந்த ஊரின் பெயர் நரசிங்கமங்கலம். சுற்றிலும் மன்னன் பாடி, செருமங்கலம், நந்திமங்கலம்... ஓ! இங்கே பல்லவ சாம்ராஜ்யத்தின் வேர்கள் எப்போதோ ஆழமாக ஊன்றப் பட்டிருக்க வேண்டும். மாபெரும் யுத்தங்கள் நிகழ்ந்த சுவடுகள் வழியெங்கும் புலப்படுகின்றன. வழி நெடுக மக்கள் பழைய வீர வரலாறுகளையும், பல்லவத்தின் இன்றைய இழி நிலையையும் பற்றி நெடு மூச்சு பறியப் பேசிக் கொண்டிருந்தனர்.

    பல்லவ மன்னர் எங்கோ ஓடிப் போய்விட்டாராம். சாளுக்கியர்கள் என்றைக்கு, எந்த ஊரைக் கொள்ளையடிப்பார்கள் என்ற பதற்றத்திலேயே நம் பொழுது பழுது பட்டுக் கழிகிறது. எந்த வேலையும் நிம்மதியாகச் செய்ய முடியவில்லை.

    சாளுக்கியர்கள் இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அவர்களை எதிர்க்கத்தான் யாருமே இல்லையே... பாண்டிய நாடு பல்லவப் பகையால் சாளுக்கியர்களின் அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாதிருக்கிறது.

    மாமன்னர் மகேந்திரவர்மரும் நரசிம்ம பல்லவரும் இணையற்ற இதிகாச நாயகர்களாக உலவிய மண்ணில் இப்படியா ஓர் இழிநிலை வரவேண்டும்...?

    ம்... இனி காஞ்சியை மீட்க ஒருபோதும் பல்லவர்களால் முடியாது போலிருக்கிறதே...

    பல்லவ நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் எந்த உணர்வும் எண்ணங்களும் ஆக்கிரமித்து நெஞ்சு நலியச் செய்து கொண்டிருந்தனவோ, அதே உணர்வோடும் எண்ணங்களோடும் தான் அந்த வழிப்போக்கனும் வதைப்பட்டுக் கொண்டிருந்தான்.

    ஆனால், இதில் நம்பிக்கை இழந்து போக எதுவுமில்லை. தனி மனிதனுக்கு எப்படி வாழ்வும் தாழ்வும் இயல்பாக மாறி மாறி நிகழ்வதுண்டோ, அது போன்றதுதான் மாபெரும் பேரரசுகளுக்கு நிகழும் எழுச்சியும் வீழ்ச்சியும்!

    ஒரு காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலும், உறையூரிலும் திருவாரூரிலுமாக எழுச்சியுற்ற சோழர்குடி, கொடி பறக்கக் கோலோச்சியது. இன்று, உறையூரின் சோழ மாளிகையில் சாளுக்கியன் வந்து தங்கியிருக்கிறான். சோழர்குடி, பழையாறையில் முடங்கிக் கிடக்கிறது.

    ஆர்த்தெழுந்து அதிரும் வெற்றி முரசுகளின் வீர ஒலி தேய - தமிழ்ச் சங்கம் தளர்வுற - மூவேந்தர் முடி சாய, மூத்த குடி, 'இனி விடியலே கிடையாதோ' வென நெட்டுயிர்க்குமளவு இரண்டொரு நூற்றாண்டுகள் தமிழ் மண்ணில் கரு மேகங்கள் கவிழ்ந்து கிடந்தாற் போல் பரவிப்படர்ந்திருந்த களப்பிரக் கலி இருள், கடுங்கோன் எனும் பாண்டியப் பகலவனின் எழுச்சிக்குப்பின் கலைந்துதான் போயிற்று.

    மூன்று தரையாண்ட பெருமை பேசும் முத்தரையர் குடி, இதோ இன்று தஞ்சையின் செந்தலை மாளிகைக்குள் ஆகாயமளாவிய அதிகாரம் செலுத்திக் கிடக்கிறது!

    இரண்டு மூன்று தலைமுறைக்கு முன் பாண்டியர் எழுச்சியுற்ற அதே போதில்தான் பல்லவமும் துளிர்த்தது. சிம்மவிஷ்ணு வெற்றி உலாக்கள் நிகழ்த்தினார். மகேந்திர பல்லவரும் நரசிம்ம பல்லவரும் வெற்றித் தேவதைக்காக வீர காவியங்கள் இயற்றிக்கொண்டிருந்தனர். அதற்குள் சாம்ராஜ்ய மண்டபத்தில் சரிவுகள் - சாளுக்கிய வெளவால்கள்!

    இருக்கட்டுமே... இந்த இருள் விலகாமலா போய்விடும்! காஞ்சிக்குள் மட்டும் பிரவேசிக்க மாட்டேன் என்று கதிரவன் என்ன சபதமா செய்திருக்கிறான்?

    எப்படியும் எழுந்தாக வேண்டும். ஆனந்த நந்தி அடிகளின் தபோவனம் கொள்ளிடக் கரையில் இருக்கிறது. அதை நோக்கித்தான் அவன் இந்த நடைப்பயணத்தை துவக்கியிருக்கிறான். வழிப்பயணம் இப்போது பாதுகாப்பானது அல்ல என்று அவனுக்குத் தெரியும். அவன் ஜீவித்திருப்பதில் அத்தனை நாட்டமில்லாதவனாக இருந்தான். அடிகளாரின் தபோவனம் நோக்கித்தான் பயணம். ஆனால், கட்டாயம் அங்கு செல்ல வேண்டுமென்பதில்லை. வழியிலேயே எந்த வகையிலேயும் அவன் உயிருக்கு அபாயம் நேர்ந்தாலும் பாதகமில்லை. ஆத்மஹத்தி செய்து கொண்டான் என்ற அவப்பெயர் மட்டும் வந்துவிடக்கூடாது.

    அதற்காகத்தான் இந்த நடைப்பயணம். அன்ன ஆகாரம் பற்றிய நினைவுகளை முற்றாகப் புறக்கணிப்பதில் ஒரு யோகியின் மன நிலையை அடைந்திருந்தான். ஆன்ம, உறுதியோடு சரீரத்தைத் தண்டிப்பது அவனுக்கு இந்தப் பயணத்தில் நன்கு கைவரப் பெற்றது.

    இப்படிச் சிந்தனைகளோடு இன்னும் சிறிது நேரம் படுத்திருந்தால் தேவலை என்று சண்டித்தனம் செய்த சரீரத்தை, 'நான் அனுமதிக்க முடியாது. எழுந்து நட, இலக்கு நோக்கி ஒரு சருகாகவேனும் நீ உருண்டு புரண்டு சென்றாக வேண்டும்' என்று அவன் மனம் எச்சரித்து விரட்டிக் கொண்டிருந்த அந்த வேளையில், எங்கிருந்தோ பெண்கள் எழுப்பும் ஓலம் அவன் செவிகளைத் தாக்கியது.

    சோர்வுகளை உதறிவிட்டு, மனமும் உடலும் ஒத்துழைக்கச் சடாரென்று எழுந்து நின்று, ஓலம் வந்த திசையில் பார்வையைச் செலுத்தினான். சிறிது தூரத்தில் மலைச்சரிவு போன்றிருந்த மகேந்திர தடாகத்தின் கரையிலிருந்து நாலைந்து புரவிகள் பாதையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் மீதிருந்த சாளுக்கிய முரடர்கள், நீராடச் சென்றிருந்த இளம் பெண்களை கதறக் கதறத் தூக்கியபடி வந்து கொண்டிருந்தனர்.

    அந்தப் புரவிகள் சற்றுமுன் தடதடவென்று சப்தமெழுப்பியவாறு அதே பாதையில் சென்றிருந்தன. ஆனால், அப்போது உணர்வு மங்கிய நிலையில் அதை அவன் கவனித்திருக்கவில்லை. இப்போது தொலைவிலிருந்து பெண்கள் கதறலும், ஓலமும் அவன் செவிகளில் துல்லியமாக விழுகிறது. இது எதற்காக? விதி அவனை ஏன் இப்படித் தூண்டி விடுகிறது? 'உயிரைப் பொருட்படுத்தவில்லை என்கிறாயே, இதோ அதை விட்டுவிட இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்' என்று குரூர உள்ளத்தோடு ஏளனம் செய்கிறதா?

    ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும். அதோ கொலைப் பட்டினியால் உடல் வலு அனைத்தும் ஒடுங்கிப் போயிருந்த அந்த வழிப்போக்கன், பசி, சோர்வு, மயக்கம் அவயவங்களின் அலுப்பு அனைத்தையும் உதறியெறிந்து விட்டு, அந்த சாளுக்கிய முரடர்களைச் சந்திக்கும் சித்தத்தோடு பாதையில் அவர்களை எதிர் நோக்கி நின்றான்.

    2. வீரக்கலை வித்தகன்

    நரசிங்கமங்கலம் கிராமத்திலுள்ள மகேந்திர தடாகத்தின் கரையிலிருந்து ஐந்தாறு இளம் பெண்களைக் கதற கதறத் தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்த அந்த சாளுக்கிய முரடர்கள் தங்கள் புரவிகள் செல்லும் பாதையில் எதிரே ஒரு மனிதன் இடுப்பில் கைகளைப் புதைத்துக் கொண்டு தங்களை வழி மறிப்பவனைப் போன்று நின்றிருப்பதைக் கவனித்தனர். அவன் ஒரு பைத்தியக்காரனாக இருக்கக் கூடும் என்றெண்ணினர்.

    'சாளுக்கிய வீரர்களை எதிர்த்து நிற்க இந்த நாட்டில் ஒரு ஜீவனுக்குத் துணிவிருக்கிறதா, என்ன?' என்றும் எண்ணினர். கையில் எந்தவித ஆயுதமுமின்றி நிற்கும் அந்த மனிதன் ஒரு வேளை தங்கள் புரவிகளின் குளம்புகளில் மிதிபட்டு சாகத் துணிந்து விட்டவனாக இருக்குமோ என்றும் எண்ணினர்.

    அவர்களின் தலைவன் போன்றிருந்தவன் மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தன் புரவியை முன்னால் செலுத்தியவனாக,

    என் வாள் ரத்தப் பசியோடு இருக்கிறது. தற்கொலைக்குத் துணிந்து விட்டவன் போல் அங்கே நிற்பவன் தலையை நானே என் வாளால் வெட்டியெறிகிறேன் என்று கூறியபடி தன் புரவியின் விலாவில் அழுந்த உதைத்து வேகம் கூட்டினான். அது தலைதெறிக்க ஓடத் துவங்கியது. முரடனின் இடக் கரப் பிடிக்குள் திமிறிய வண்ணம் புரவியின் முன்புறத்தில் அமர்ந்திருந்தாள் மதுரவல்லி. அவள் அலறலையோ திமிறலையோ சற்றும் பொருட்படுத்தாமல் அவளுடைய இடையைத் தன் இடக்கரத்தால் அழுத்தியபடி கடிவாளக் கயிற்றையும் பற்றியிருந்தான் அந்த முரடன். வலக்கரத்தில் தன் நீண்ட வாளை உருவிக் கொண்டிருந்தான். அந்த அளவுக்கு மற்றவர்களுக்கு லாகவம் இல்லாததால் அவர்கள் திமிறும் பெண்களைச் சமாளிப்பதிலேயே தங்கள் கவனத்தில் பெரும் பகுதியைச் செலவிட வேண்டியிருந்தது.

    முன்னால் சென்ற அந்த சாளுக்கிய முரடர் தலைவன், பாதையில் வழிமறித்து, குத்துக்கல் போல் நிற்பவனை வெட்டியெறியும் முனைப்போடு வாளை உருவி ஓங்கிருந்தாலும் அவன் அப்படிச் செய்ய வேண்டுமென்றால் அந்த வழிப்போக்கன் சிறிதேனும் அஞ்சி, பாதையை விட்டு விலகினால்தான் அது சாத்தியம். அல்லது அந்த சாளுக்கியனாவது தன் புரவியைச் சற்று இடப்புறம் ஒதுக்கிச் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இருவருமே அப்படிச் செய்யவில்லை. பாதையை மறித்து நிற்கும் மனிதன் சற்றும் விலகாதிருக்கவே புரவி அவன் அருகில் வந்ததும் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாது திகைத்தது.

    அப்போதுதான் அந்த சாளுக்கிய வீரன் ஒரு தவறு செய்தான், நெடுமரம் போல் நிற்பவனின் உறுதி கண்டு வியந்தபடி, புரவியின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தான். கடைவாய் கிழிபடும் நோவில் கனைத்தபடி அந்த அசுவம் மிரண்டு தன் முன்னங்கால்கள் இரண்டையும் உயரத் தூக்கியது. அப்படித் தூக்கிய அதன் கால்களை மின்னல் வேகத்தில் அவிழ்த்திருந்த தன் தலைப்பாகைத் துணியை இரு கரங்களிலுமாக இழுத்துப் பிடித்தபடி தடுத்த வழிப் போக்கன், நொடிப் போதில் இரு கரங்களையும் சுழற்றி, புரவியின் இரு கால்களிலும் துண்டின் இருமுனைகளைச் சுற்றி விட்டான். மறுகணம் பூமியில் கால்களை ஊன்றிய அந்த அசுவம் அடுத்த அடியெடுத்து வைக்க இயலாமல் தடுமாறியது.

    புரவிக்கு நேராக அவன் நின்றிருந்தாலும் புரவியின் முன் புறத்திலிருந்த மதுரவல்லி கீழே இறங்க முயன்று திமிறியதாலும் சாளுக்கிய வீரனால் தன் வாளை ஓங்கி வீச முடியாதிருந்தது. அவன் சினம் மிகுந்தவனாய்,

    விலகிச் செல்லடா என்று கூவினான்.

    நான் உன்னைத் தடுத்து நிறுத்தியாயிற்று. இங்கிருந்து ஒரு அடி உன்னை நகர விடமாட்டேன். விலகாது வழிமறிப்பவனை விலக்க வேண்டுமானால் நீதான் கீழிறங்கி வரவேண்டும் என்றான் வழிப் போக்கன்.

    அதே சமயம், மற்ற புரவி வீரர்கள் பாதையை விட்டு விலகிப் பரவலாக வந்திருந்த போதும், தங்கள் தலைவனைத் தாண்டிச் செல்ல விரும்பாமல் தங்கள் புரவிகளை இழுத்துப் பிடித்து நிறுத்தினர். அதன் மீது ஏற்கனவே திமிறிக் கொண்டிருந்த பெண்கள் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு எப்படியோ துள்ளிக் குதித்துக் கீழிறங்கி விட்டனர்.

    சூழ்நிலை குழப்பமாவதைக் கண்டு எரிச்சலடைந்த சாளுக்கிய முரடர் தலைவன்,

    அடேய்! எவனாவது ஒரு வீரன் கையில் வாளோடு வந்து வழி மறித்திருந்தால் நான் பெருமைப் பட்டிருப்பேன், இந்த நாட்டில் சாளுக்கியர்களை எதிர்த்துப் போராடவும் ஓர் ஆண்மகன் இருக்கிறானே என்று. நீ முட்டாள். இத்தனை பேரை எதிர்த்து நம் ஒருவனால் என்ன செய்துவிட முடியும் என்று கூட எண்ணிப் பார்க்க சிந்தனைத் திறன் இல்லாதவன். சாகத் துணிந்ததற்காக வேண்டுமானால் உன்னைப் பாராட்டலாம் என்றவாறே மதுரவல்லியை விட்டு விட்டு ஓங்கிய வாளுடன் புரவி மீதிருந்து கீழே குதித்தான்.

    பெண்ணே! இங்கிருந்து தப்பி ஓடலாம் என்று எண்ணாதே. நொடிப்போதில் இவனை வெட்டியெறிந்து விட்டு வந்து விடுவேன். நீ எங்கும் ஓடி விட முடியாது. அப்படி ஓடினாலும் ஊருக்குள் புகுந்து உன்னையும் உன் தோழிகளையும் தூக்கிச் செல்வோம். எதிர்ப்பவர் வாழ்வு அந்தக் கணமே முடிக்கப்படும். வீண் விபரீதங்களை உருவாக்கா திருப்பது உனக்கு நல்லது... என்று மதுரவல்லியை எச்சரித்தான்.

    உனக்கு அத்தனை சிரமங்கள் ஏற்படாது. அவர்கள் யாரும் எங்கும் போய்விட மாட்டார்கள். அவர்களுக்குப் பல்லவ நாட்டில் யாராவது சில சாளுக்கிய வீரர்கள் அடிபட்டுச் சாவதைப் பார்க்க மாட்டோமா என்று மிகவும் ஏக்கமாக இருக்கிறதாம். ஒருவேளை அது இப்போது நிறைவேறக் கூடுமல்லவா? என்றான் வழிப்போக்கன்.

    பல்லவ நாட்டில் எங்களோடு எதிர்நின்று போராட்ட வீரர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, உன் போன்ற முட்டாள்கள் சாவதற்கு முன் வாய் வீரம் பேச மட்டும் சளைப்பதே இல்லை. வாளேந்தி நிற்கும் என் முன் வாயாடும் உன்னைக் கொல்லாமல் எப்படி விடுவது? என்றபடியே சாளுக்கிய முரடர் தலைவன் வாளை ஓங்கியபடி அந்த வழிப் போக்கன் மீது பாய்ந்தான்.

    அத்தனை ஆஜானுபாகுவான மனிதனின் ஆவேசத் தாக்குதலில் வேறு எந்த நிராயுதபாணியான சாமான்ய மனிதனாக இருந்தாலும் தப்பியிருக்க முடியாதுதான். ஆனால், அந்த வழிப்போக்கன் வெகு லாகவமாக அந்த வாள் வீச்சிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டான். அடுத்த இரண்டு மூன்று வீச்சுகளும் அப்படியே வியர்த்தமாயின. சிறகு முளைத்த ஒரு மனிதச் சக்கரமே போன்று இங்கு மங்கும் பாய்ந்து அந்த வாள் வீச்சைக் குறி தவறச் செய்த அவனைச் சற்று முன்பு வரை பசியும், பஞ்சடைந்த கண்ணுமாய் துவண்டு கிடந்தவன் என்று சொன்னால் எவராலும் நம்ப முடியாதுதான்.

    உணவுகளை அல்ல, உணர்வுகளையே பிரதானமாகக் கொண்டது தன் ஜீவ வாழ்க்கை என்று அவன் கடந்த சில நாட்களாகவே தன் மனதுக்கு நிரூபித்துக் கொண்டிருந்தான்.

    அதன் உச்சக் கட்டமாக அப்போதைய நிகழ்ச்சிகள் அமைந்தன. ஆவேசமான வாள் வீச்சுகளை வெகு அலட்சியமாக அவன் வியர்த்தமாக்கிக் கொண்டிருந்த போது ஏனைய சாளுக்கிய வீரர்களும் தங்கள் கவனத்தை அந்தப் பெண்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு வாட்களை உருவியபடி புரவி மீதிருந்து குதித்து ஓடி வந்தனர்.

    வாள் ஓர் ஆபத்தான ஆயுதம்தான். ஆனால் அதை ஏந்திப் போரிடுவது வீரம் என்றால், அதை ஏந்தாமலே ஆபத்துக்களின் நடுவே சாகசம் புரிந்து தன்னைக் காத்துக் கொள்வதுதானே வீரக்கலைகளிலேயே தலைசிறந்த வித்தை! அந்த வித்தைக்கு அங்கே இலக்கணம் எழுதிக் கொண்டிருந்தான் அந்த வழிப்போக்கன். நீண்ட வாட்களை வீசிச் சுழற்றிய சாளுக்கிய முரடர்கள், அவை காற்றைக் கிழிக்கிறதே தவிர, எதிரியின் சரீரத்தை ஸ்பரிசிக்கவே இல்லையே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவர்களுடைய புஜங்களிலும், மார்பு, தோள் பகுதிகளிலும் இடி இறங்குவது போன்ற அடி விழுவதை உணர்ந்தனர். வாள் வீச்சுக்களையும் தாண்டி அவன் கைகளும் கால்களும் எப்படித் தங்களைத் தீண்டுகிறது என்பதைத்தான் அவர்களால் உணர முடியாதிருந்தது. நான்கு ராஜ நாகங்கள் ஒன்றிணைந்து சீறிப் பாய்வது போன்றிருந்தது. அந்த வழிப் போக்கனின் தாக்குதல் கலை.

    அவனுடைய சூறாவளி வேகச் சுழல் தாக்குதலில் சாளுக்கிய முரடர் தலைவன் உட்பட இரண்டு மூன்று பேர் வாட்களை இழக்க நேர்ந்தது. தலைவன், வாள்பிடி நழுவிப் போன சினத்தில் நேர்மையை உதறியெறிந்து விட்டு, தன் இடைக் கச்சிலிருந்த குறுவாளை உருவி வீசினான். அது வழிப்போக்கனின் இடது புஜத்தில் ஆழமாகப் பாய்ந்தது. மறுகணமே அவன் அந்தக் குறுவாளைப் பிடுங்கி, எய்தவன் மீதே வீசினான். அது வியத்தகு விதத்தில் இலக்கு தவறாமல் சென்று சாளுக்கிய முரடர் தலைவன் கழுத்தில் பாய்ந்தது. கொடூர ஓலமெழுப்பியபடி அவன் மண்ணில் சாய்ந்தான். வழிப்போக்கன் குறுதிச் சேதாரம் அதிகமானதால் கவனம் சிதறிச் சற்று நிலை தடுமாறி நின்ற கணப்போதில் அவன் மார்பில் சாளுக்கிய வாட்கள், இதோ உன்னைத் தொட்டு விட்டோம் என்று ஏளனம் காட்டியது போல் தாறுமாறாக ஓடிக் கோடிழுத்தன.

    ஓ...! அந்த வீரக்கலை வித்தகனின் மார்பில் தான் எத்தனை இரத்த மின்னல்கள்...!

    ஈனத்தனமான அந்த வாள் வீச்சுக்களை நொடிப் போதில் தடுத்து நிறுத்திய வழிப்போக்கன், தன் மார்பைத் தீண்டிய வாட்களை ஏந்தியிருந்த கரங்களை வர்மக்கலையின் சூட்சும திசைகளில் பாய்ந்து, திருகி ஒடித்தான். அந்த சாளுக்கிய முரடர் அனைவரும் அடுத்த சில கணங்களில் அங்கே கை கால்கள் ஒடித்தெறியப் பட்டு மண்ணில் விழுந்து புரண்டனர்.

    எதிரிகளின் கையிலிருந்து நழுவி விழுந்த வாட்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு போரிடுவது சாத்தியமாக இருந்தும், அப்படிச் செய்யாமல் கூரிய வாள் முனைகள் மார்பைக் கிழித்தும் குறுவாள் இடது புஜத்தில் பாய்ந்தும் ஒழுகும் குருதியைப் பொருட்படுத்தாது, ஊழிக்கூத்தாடும் பரமேசுவரன் போன்று கோர நர்த்தனம் புரிந்து உக்கிரமாகச் சாடி அவர்களை வீழ்த்திய வழிப்போக்கனைக் கண்டு அந்த இளம் பெண்கள் பிரமித்துப் போய் நின்றனர்.

    மதுரவல்லி துணிந்து அவனருகே சென்று, "ஐயா, நீங்கள் மட்டும் இந்த நேரத்தில் இங்கே எதிர் நின்று இவர்களை வழிமறித்துப் போரிடாதிருந்தால் எங்கள் மானம் பறி போயிருக்கும். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

    நீங்கள் யார்? உங்களைப் பார்த்தால் ஒரு வழிப்போக்கர் போன்று தெரிகிறது. எங்கிருந்து வருகிறீர்கள். எங்கே செல்கிறீர்கள்? உங்கள் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?" என்று வினவினாள்.

    நான் ஒரு வழிப்போக்கன். வாத்யவித்யாதரன். வேறு எந்தக் கேள்விக்கும் பதில் சொல்கிற நிலையில் நான் இல்லை. நேற்று மாலை என் தாகம் தணிய நீர் வார்த்த உங்களை இப்போது இந்த முரடர்களிடமிருந்து காக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி. நீங்கள் போகலாம் என்று பதிலிறுத்த அவன்,

    கண்கள் இருளத் துவங்கி, தள்ளாடினான்.

    மதுரவல்லி தயக்கங்களை உதறிவிட்டு ஓடிச்சென்று அவனைத் தாங்கிக் கொண்டாள்.

    அடியே, வாருங்களடி... நம் மானத்தையும் உயிரையும் காத்த இந்த மனிதருக்கு இப்போது நாம் உதவுவது அவசியம். அருகில் வந்து உதவுங்கள் என்று தோழிகளை அழைத்தாள்.

    அந்தப் பெண்களின் உதவியோடு அம்மனிதனை கைத் தாங்கலாக மெல்ல அழைத்துச் சென்று, அவன் முன்பு படுத்திருந்த மரத்தினடியில் சாய்ந்தவாறு உட்காரச்செய்து, தன் உடம்பிலிருந்து ஈரப்புடவையைக் கிழித்து அவனுடைய இடதுபுஜ ரணத்தில் ஆழத்திணித்துப் பொங்கி வரும் குருதி ஊற்றைக் கட்டுப்படுத்தினாள். ஆனால், மார்புக் காயங்களைத் துடைத்துக் குருதிக் கசிவைச் சரிப்படுத்த அந்த இடம் ஏற்றதல்ல என்று நொடிப்போதில் தீர்மானித்த மதுரவல்லி,

    ஐயா! எப்படியாவது சிரமம் பாராமல் எங்களோடு வாருங்கள். உடனடியாகத் தங்களுக்கு மருத்துவ உதவி அவசியம்... என்றாள்.

    ஆனால், அதற்கு சம்மதம் அளித்தோ, மறுத்தோ பதிலளிக்கிற நிலையில் அவன் இல்லை... மூர்ச்சையுற்றிருந்தான்.

    தலை இடப்புறத் தோளில் சரிந்து தொய்ந்தது.

    அதுகண்டு மதுரவல்லி மனம் பதறினாள். தங்களுக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாது எதிரிகளுடன் போரிட்டு, மரண மூர்ச்சையுற்றுக் கிடக்கும் அந்த வீர இளைஞனை எப்படியும் காப்பாற்றியாக வேண்டுமென்று துடித்தாள் அவள்.

    திரும்ப அந்த வழிப்போக்கன் கண் விழித்த போது, அரண்மனைக்கு நிகரான மாளிகை ஒன்றின் அலங்கார அறையில் சகமான பஞ்சணை மஞ்சத்தில் கிடந்தான்.

    என்ன நிகழ்ந்தது, எப்படி அங்கே வந்தோம் என்பது ஒன்றும் அவனுக்குப் புரியவில்லை.

    3. முத்தரையர் மாளிகையில்...

    அலங்காரத் தூண்களும் அழகிய சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த மேல் விதானமும் விசாலமான உட்புறமும் அந்த இடம் ஒருமாளிகை என்பதை உணர்த்தியது இளைஞனுக்கு

    இதமான பஞ்சணை முதுகுக்குச் சுகமூட்டியது. மார்பிலும் இடது புஜத்திலும் விண் விண்ணென்று தெறித்த வலிகூட இப்போது அதிகம் தெரியவில்லை. கட்டுகள் போடப் பட்டிருப்பதை நோக்கினான்.

    விரிந்த விழிகளில் வியப்பு வந்து தொற்றியது. அந்த விழிப்பே நிஜம்தானா என்று புருவங்கள் வினாக்குறியாய் தெரிந்தன. என்ன நிகழ்ந்தது? இது எந்த இடம்? இங்கு எப்படி வந்தேன்? இலுப்பை மரத்தினடியில் அல்லவா உணர்வுகள் அற்று விழுந்தேன்...?

    கண்கள் இருண்ட அந்த வேளையில் நிகழ்ந்தவை, மங்கிய சித்திரங்களாய் நினைவுத் திரையில் புலப்பட்டன.

    அப்போது அந்த இளம் பெண்களின் முன்னால் தன் உடலின் வேதனைகளைக் காட்டிக் கொள்ள வேண்டாம் என எண்ணினான் அவன். ஆனால், அவர்கள் தங்களை ஒரு விபரீத ஆபத்திலிருந்து காத்தவன் என்ற நன்றி உணர்வோடு அவனுக்குத் தயக்கமோ கூச்சமோ பாராமல், எந்த உதவியும் செய்யத் தயாராக இருந்தார்கள். அதுதான் அவனை மிகவும் சங்கடப்படுத்தியது. அவன் யாரிடமும் உரிமை கலந்த அன்பையோ, இரக்கத்தையோ, உதவியையோ எதிர்பார்க்கவில்லை. அவர்கள் உடனே அந்த இடத்தைவிட்டுப் போனால் போதுமென்றிருந்தது. கண்கள் இருள்வதையோ உடல் தள்ளாடுவதையோ தவிர்க்க முடியாத நிலையிலிருந்த அவன், முகத்தில் நீர் தெளித்து அவர்களால் ஆசுவாசப்படுத்தப் பட்டதும்,

    என் காயத்திற்குக் கட்டுப் போட்டதற்கு மிகவும் நன்றி. எனக்கு ஒன்றுமில்லை. சிறிது நேரத்தில் எழுந்து நடக்கத் துவங்கி விடுவேன். நீங்கள் போகலாம்... என்றான்.

    இல்லை ஐயா! உங்கள் மார்பில் காயங்கள் அதிகம். வெறும் ஈரத்துணியைச் சுற்றினால் மட்டும் போதாது. உடனே காயங்களைக் கழுவி, மருந்திட வேண்டும். சிரமம் பாராமல் தயவு செய்து எங்களோடு வாருங்கள்... என்றாள் மதுரவல்லி.

    நான் இந்தக் காயங்களைப் பொருட்படுத்தவில்லை. எனக்கு மருத்துவ உதவி அவசியமுமில்லை...

    உங்களுக்கு அவசியமில்லாமல் போகலாம். ஆனால், உங்களை அழைத்துச் சென்று மருந்திடுகிற எளிய உதவியைக்கூட செய்யவில்லையென்றால் எங்கள் மனம் அமைதியுறாது. அத்துடன் இந்த முரடர்களிடமிருந்து நீங்கள் எங்களைக் காத்து மீட்ட உண்மை மற்றவர்களுக்குத் தெரிந்தேயாக வேண்டும். இல்லாது போனால் ஆளுக்கு ஒருவிதமாகக் கற்பனை செய்வார்கள். காற்றில் படிகிற புழுதியை விட எளிதாகப் பெண்கள் மீது அவப்பெயர் படிந்துவிடும். தயவு செய்து வாருங்கள்...

    மதுரவல்லியின் இந்தப் பேச்சுதான் அவனது பிடிவாதத்தைத் தளர்த்தியது. தனக்காக இல்லாது போனாலும் அந்தப் பெண்கள் அவச் சொல்லுக்கு ஆளாகிவிடக்கூடாதென்ற உணர்வினால் எழுந்து அவர்களுடன் நடக்க முயன்றான். ஆனால், ஏகப்பட்ட குருதிச் சேதாரம் ஆகியிருந்ததால், பத்துப் பதினைந்து அடிகள் கூட அவனால் நடக்க முடியவில்லை. தள்ளாடிச் சரிய இருந்தான். மதுரவல்லி தோள் கொடுத்துத் தாங்கினாள்.

    அந்த நிலையிலும் அவன் மனம்,

    'அவப் பெயர் வந்து விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் நடந்து கொள்கிற லட்சணமா இது...?' என்று எண்ணியது. ஆனால், என்ன காரணத்தினாலோ அந்த வசீகரமான இளம் பெண்ணின் நெருக்கம் தேவை என்பதை - அவள் தளிர்க் கரங்களால் தீண்டிய முதல் காணத்திலிருந்து அவன் மனம் கூவிக் கொண்டிருந்தது. இப்போது ஒரு பயாறை சரியாதிருக்க யாரோ மென்பஞ்சுப் பொதியால் முட்டுக் கொடுத்தது போன்று அவள் தன் மென்மையான கரத்தால் அவனைத் தாங்கி அணைத்ததும் இதம் சுகம் எல்லாவற்றையும் உணர்ந்தான் அவன். ஆனால், அதன் பிறகு நடந்த எதுவும் அவன் நினைவில் இல்லை.

    நரசிங்க மங்கலத்துப் பெருநிலக்கிழார் சம்பந்த வேளார் வீட்டில்தான் மதுரவல்லி வந்து தங்கியிருந்தாள். வேளார் மகள் முத்துநகை, மதுரவல்லியின் தோழி. மகளும் மதுரவல்லியும் வேறு சில பெண்களுமாகச் சேர்ந்து ஓர் இளைஞனைத் தூக்கி வருவதைப் பார்த்து, சம்பந்த வேளார் பதைபதைத்துப் போனார். ஊர் மக்கள் அவர் வீட்டு வாசலில் திரளத் துவங்கினர்.

    ஊரின் புறத்தேயுள்ள மகேந்திர தடாகத்தின் எதிர்க் கரையில் அன்றாடப் புழக்கமற்ற பகுதியில் சம்பவங்கள் நடந்திருந்ததால், ஆளுக்கொரு விதமாக ஊகித்துக் கொண்டு பரபரப்படைந்தனர். சம்பந்த வேளார் மதுரவல்லியிடம் விவரம் விசாரித்து, ஊரார் முன் உரத்த குரலில் எடுத்துரைத்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் கூட்டம். மெல்லக் கலைந்து சென்றது. மருத்துவன் வரவழைக்கப்பட்டான். அந்தக் கிராம மருத்துவன், இளைஞனின் உடலைப் பரிசோதித்து விட்டு,

    வைத்திய முயற்சிகள் வீண். அதிகம் போனால் இன்று மாலைக்கு மேல் இவன் பிழைத்திருக்க மாட்டான்... என்றான்.

    மதுரவல்லி, 'ஓ' வென்று வாய் விட்டே கதறி விட்டாள். மருத்துவனைப் பார்த்து,

    உம்மிடம் சோதிடமா கேட்டேன்? ஒரு மனிதன் எப்போது சாவான் என்று கூறுவதா மருத்துவன் வேலை? என்று சீறினாள். பிறகு சம்பந்தவேளாரைப் பார்த்து,

    என்ன ஆனாலும் சரி, இவர் பிழைத்தேயாக வேண்டும். உடனே பயணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் வேளாரே, நான் செந்தலையிலுள்ள எனது பெரிய தகப்பனாரின் மாளிகைக்கு இவரைக் கொண்டு செல்கிறேன். அங்கே கைதேர்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். என்றாள்.

    கிராம் வைத்தியன்,

    "அம்மா! நான் எனக்குத் தெரிந்த வைத்தியம் செய்கிறேன். இருந்தாலும் இவர் நிலைமை மோசமாக இருக்கிறது என்ற உண்மையை நான் சொன்னதில் தவறில்லை. அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்பார்கள். இந்த மனிதர் வயிற்றைப் பாருங்கள். குழி விழுந்து எப்படி இருக்கிறதென்று. அன்னத்தை நிராகரித்து, ஆத்ம ஹத்தி செய்து கொள்ள விரும்பியிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. நாடி பிடித்துப் பார்த்து, இந்த மனிதனின் நரம்பு மண்டலங்களைப் பரிசோதித்து விட்டுதான் நான் உண்மை கூறினேன். வெறி பிடித்தவன் போல் இவன் நெடுந்தூரம் நடந்து வந்திருக்கிறான். கால்களைப் பாருங்கள், நரம்புகள் புடைத்து முடிச்சிட்டுக் கிடப்பதை...

    காற்றும் நீரும் மட்டுமே உண்டு கடுமையாக உடலை வாட்டி வதைத்திருக்கும் இம்மனிதனின் சரீரத்தில் ரத்தம் சுண்டிப்போய் விட்டது. கொஞ்ச நஞ்சமிருந்த குருதியும் இந்த வாட் காயங்களால் வடிந்து விட்டதம்மா. கடுமையான காய்ச்சலால் வேறு அவதிப் பட்டிருக்கும் இந்த நிலையில் மருந்து கொடுத்து இவனைப் பிழைக்க வைக்கும் ஆற்றல் எனக்கில்லை..." என்று கூடுவிட்டு, தைலக் குப்பியைத் திறந்து வழிப்போக்கனின் காயங்களில் தைலம் பூசிவிட்டு,

    இனி இவன் இறைவன் சித்திமிருந்தால் பிழைக்கட்டும். நீங்கள் நல்ல மருத்துவர்களிடம் கொண்டு செல்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. என்று கூறிவிட்டுச் சென்றான்.

    சம்பந்த வேளார் மதுரவல்லியைப் பார்த்து,

    அம்மா! இந்த மனிதர் யாராக இருப்பினும் சரி, இந்த நிலையில் இவருக்கு வைத்தியம் செய்து, உயிர் காக்கும் கடமை நமக்கும் இருக்கிறது. பெண்களின் மானம் காத்த இந்த மாவீரனுக்கு நிச்சயமாக நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். ஆனால் நீ இங்கு வந்த காரியம் இன்னும் பூர்த்தியாகவில்லை. காடுகிழாள் கோயிலில் வழிபாடு நிகழ்த்த மூன்று நாள் தங்கியிருக்க வேண்டும். விரத பங்கம் வந்து விடக்கூடாதே - அதுதான் யோசிக்கிறேன்... என்று கூறினார்.

    இல்லை வேளாரே. இன்னொரு முறை வந்து நான் இந்த விரதத்தைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்கிறேன். இப்போது இவரை உயிர் பிழைக்கச் செய்வதுதான் என் இலட்சியம். தயவு செய்து நீங்கள் உடனே வண்டிக்கு ஏற்பாடு செய்யுங்கள்... என்று உறுதிப் புலப்படக் கூறினாள். அதற்குமேல் சம்பந்த வேளார் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. வண்டி தயாரானது. செந்தலை மாளிகைக்கு அந்த இளைஞனை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள் மதுரவல்லி. அனல் வீசித் தகித்த அவனது காய்ச்சலை மருத்துவரின் சக்தி வாய்ந்த மருந்து முதல் நாளே கட்டுப்படுத்தி விட்டிருந்த போதும், அவன் ரணங்களின் பாதிப்பினால் மிகவும் நலிந்து போயிருந்தான். பச்சிலைப் பூச்சின் போதும், திரவ பதார்த்தமான ஆகாரத்தின் போதும் அவன் விழிப்படைந்தான். ஆனால் வாய் திறந்து எதுவும் பேசக் கூடிய நிலையில் இல்லை. கண்களைப் பெரும்பாலும் மூடிக் கொண்டேயிருந்தான்.

    இரண்டு நாட்களுக்கு மதுரவல்லி அவனுக்குச் செய்த பணிவிடைகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட மகத்தான விஷயம். செந்தலை முத்தரையர் அதை முழு மனத்தோடு அனுமதித்திருந்தார். எந்த மனிதன் இல்லாது போயிருப்பின் தனது தம்பி மகளின் மானம் சாளுக்கிய முரடர்களிடம் பறி போயிருக்குமோ, அந்த மாபெரும் மனிதனுக்கு அவள் பணிவிடைகள் செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று தீர்க்கமாகச் சிந்தித்தே அனுமதி அளித்திருந்தார். அவன் மட்டும் தக்க தருணத்தில் எதிர்த்துப் போரிடத் துணிந்திராவிடில், சின்னஞ்சிறு பறவையை வேட்டையாடிய வல்லூறுகள் அதன் சிறகுகளைப் பிய்த்தெறிவது போலல்லவா மதுரவல்லியின் கதியும் ஆகியிருக்கும்?

    நன்றி ததும்ப அவர் அவனை ஏறிட்டு நோக்கினார்.

    ‘எவ்வளவு கம்பீரமான தோற்றம். நிச்சயம் இவன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது. உடல் நலிவுற்றுக் கிடக்கும் இந்த நிலையிலும் எவ்வளவு தோரணையுடன் படுத்திருக்கிறான் விழி மூடிக் கிடக்கும் போதே இவன் முன் நமக்கு ஒரு மரியாதை உணர்வு தோன்றுகிறது. கண்களைத் திறந்தால்? இப்படியொரு கம்பீரமான மனிதன் எதற்காகப் பட்டினி கிடந்து, நெடுந்தூரம் நடந்து வந்தான்...? எது இவன் ஊர்? எங்கே செல்வது இவன் நோக்கமாக இருக்கு?' என்றெல்லாம் அவனைப் பற்றிய பல்வேறு விதமான கேள்விகளையும் தன்னுள் அவர் எழுப்பிக் கொண்டிருந்த போதுதான் அவன் கண்களைத் திறந்தான். அதில் களைப்பும், உடல் அவதிகளும் நீங்கி, ஓரளவு தெம்பும் திடமும் அடைந்துவிட்ட தெளிவு நன்கு புலப்பட்டது.

    விழி திறந்து, பார்வையை நாலாபுறமும் ஓடவிட்ட அவன் அருகில் கம்பீரமாக அமர்ந்திருந்த அவரைப் பார்த்ததும்,

    ஐயா, நீங்கள் யார்? இது எந்த இடம்? என்று வினவியவாறே படுக்கையிலிருந்து எழ முயன்றான். அவனைத் தடுத்து,

    நீங்கள் எழ வேண்டாம். அப்படியே படுத்திருங்கள். நான் செந்தலை முத்தரையன். என் மாளிகையில் தான் தாங்கள் இப்போது படுத்திருக்கிறீர்கள். சாளுக்கிய முரடர்களிடமிருந்து மதுரவல்லியைக் காப்பாற்றினீர்கள் இல்லையா, அவள் என் தம்பியின் மகள். அவள்தான் நரசிங்கமங்கலம் கிராமத்திலிருந்து உங்களை இங்கு அழைத்து வந்தாள். இரண்டு நாட்களாக நினைவற்ற நிலையில் இருந்தீர்கள். மருத்துவம் பாதி, மதுரவல்லியின் பிரார்த்தனையும் கவனிப்பும் பாதி சேர்ந்து உங்கள் உயிரை மீட்டு விட்டது. மிகவும் கவலையோடு இருந்தோம். இப்போதுதான் நெஞ்சில் நிம்மதி ஏற்படுகிறது... என்றார் முத்தரையர்.

    மிகவும் நன்றி ஐயா... மன்னிக்கவும். முத்தரையர்கள் கீர்த்தி வாய்ந்த அரச வம்சத்தவர்களாயிற்றே. தங்களை எப்படி அழைப்பது என்பது தெரியால் ஏதோ உளறி விட்டேன். மன்னிக்க வேண்டும். தாங்கள் என்னை மரியாதைப் பன்மையின்றி ஒருமையிலேயே அழைக்க வேண்டும். நான் சாதாரணமானவன். என்னைக் கொண்டு வந்து உங்கள் - மாளிகையில் மஞ்சத்தில் வைத்து உபசரித்திருக்கிறீர்கள். என்னால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக மிகவும் வருந்துகிறேன்...

    "தம்பி! அப்படியெல்லாம் சொல்லாதேயப்பா. நீ சாதாரண மானவன் அல்ல. உன் மார்பிலும், புஜத்திலும் ஏற்பட்ட வாட்காயங்கள் சாதா ரணங்கள் அல்ல. மருத்துவர் அந்த ரணங்களைத் துடைத்து, மருந்திட்ட போது நான் அருகிலிருந்து பார்த்தேன். பயங்கரமான ரணங்கள். நரசிங்க மங்கலத்து கிராம வைத்தியன் உன் மார்பு ரணங்களைப் பார்த்துவிட்டு, 'இனி இவன் பிழைப்பது ஐயம்தான்' என்றானாம்.

    அவன் சொன்னதில் தவறே இல்லை. அந்த நிலையில் தான் நீ இருந்தாய். ஆனால், மதுரவல்லி எப்படியும் உன்னை உயிர் பிழைக்கச் செய்தே தீருவேன் என்று சபதம் போல் கூறி, அந்த வைத்தியனைக் கன்னா பின்னாவென்று திட்டித் தீர்த்து விட்டாளாம்.

    அவள் இங்கு உன்னைக் கொண்டு வந்து, நீ செய்த வீர சாகசங்களையெல்லாம் வாய் ஓயாமல் விவரித்துக் கூறிக் கொண்டேயிருந்தாள். அரண்மனை மருத்துவனிடம்,

    'இவரைப் பிழைக்க வைத்துக் காட்டும் பார்க்கலாம். இது உமது மருத்துவ சாஸ்திரத்திற்கே விடப்படுகிற அறைகூவல்' என்று கூறினாள். நீ கண் விழிக்க வேண்டுமென்று அவள் துடித்த துடிப்பு இருக்கிறதே, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஊண், உறக்கம் பாராமல் அவள் உனக்குப் பணிவிடை செய்தாள். எல்லாவற்றிலும் மேலாக அவள் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் பிரார்த்தனை ஒன்று எங்களையெல்லாம் சிலிர்க்கச் செய்து விட்டது. அதுதானப்பா உன்னைப் பிழைக்க வைத்திருக்க வேண்டும்..."

    என்ன பிரார்த்தனை ஐயா அது...?

    "நீ உயிர் பிழைத்தாலன்றி உணவே உண்ணுவதில்லை என்று பிடிவாதமாக மறுத்து விட்டாள். அவள் மீது எனக்குப் பாசம் அதிகம். தம்பி மகள் என்றே ஒருபோதும் எண்ணுவதில்லை நான். அந்தச் சிறு பெண் பட்டினி கிடந்தால் என் மனம் தாங்குமா? மகளே, மகளே என்று மன்றாடினேன். ஒரு பிடி அன்னம் கூடத் தொடுவதில்லை என்று மறுத்து விட்டாள்.

    'இவர் பிழைக்க வேண்டும் பெரியப்பா... அதற்காக இறைவனிடம் அடம் பிடிப்பது என்று முடிவெடுத்து விட்டேன். என் பிரார்த்தனை இதுதான். இதற்கு சர்வேஸ்வரன் செவி சாய்க்க மறுத்து விட்டால், நான் இப்படியே உண்ணா நோன்பிருந்தவாறே உயிர் துறப்பேன். அந்த இறைவன் மீது ஆணை! இது சத்தியம்...' என்று கூறிவிட்டாள். மிகவும் போராடி, அவளைச் சிறிது பால் மட்டுமே பருகச் செய்ய முடிந்தது எங்களால். இளைஞனே, நீ மகத்தானவன், மாவீரன். ஒரு பெண்ணின் மானம் காப்பதற்கு இணையாக வேறு எதுவுமே இல்லை. அதுவும் உன் சக்திக்கு மீறிய நிலையில் நீ அதைச் செய்திருக்கிறாய். உனக்காக என் அன்பு மகள் வீரப்பிரதிக்ஞை போல் செய்த அந்தப் பிரார்த்தனையை நான் ஆட்சேபிக்கவில்லை. மாறாக நானும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன். 'இறைவா! என் அன்பு மகளின் ஆசையை நிறைவேற்று. அவளை எனக்கு உயிரோடு மீட்டுத்தா...' என்று. அந்தப் பிரார்த்தனையிலேயே உனது நலனும் அடங்கியிருந்தது."

    எப்பேர்ப்பட்ட அன்பு உள்ளங்கள். இதற்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்... முத்தரையரே, ம்... நான் தங்களை அன்புடன் இவ்வாறு அழைக்கலாமல்லவா?

    தம்பீ! நீ உன் விருப்பம் போல என்னை அழைக்கலாம். தஞ்சை முத்தரையர்கள் தரணி ஆண்டது ஒரு காலம். அப்போது கேட்டிருந்தால், மாமன்னா... தார்வேந்தே என்று அழைக்குமாறு உனக்கு உத்தர விட்டிருப்பேன். இது நாங்கள் வாழ்விழந்து, வதைபடும் காலம். நீ என்னை, முத்தரையரே என்று அழைப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் இந்த வேளையில் ஒன்றைக் குறிப்பிடாதிருக்க இயலவில்லை என்னால்...

    கூறுங்கள் முத்தரையரே, என்ன அது...?

    அப்பா! நீ யாரோ எவரோ எனக்குத் தெரியாது. என் மகளின் மானம் காத்தாய், மகிழ்ச்சி. மரியாதைப்பன்மை வேண்டாமென்றாய் - மனத்தினுள் நெருக்கமான ஒரு நேசம் இழையத் துவங்கி விட்டது. ஆனால், முத்தரையரே என்றாயே, அதைக் கேட்கும்போது அப்படியே என் தேகம் சிலிர்க்கிறது...

    ஐயா! நான் உங்கள் உள்ளம் நோக ஏதும் சொல்லியிருந்தால் மன்னித்து விடுங்கள். நான் தங்களை இனி மன்னா, அரசே என்று அழைக்கிறேன்...

    வேண்டாம் அப்பா, நானே அதை விரும்பவில்லை. என் மக்களைக்கூட அப்படிச் சொல்லுமாறு நான் நிர்ப்பந்திப்பதில்லை. மாளிகைக்குள் முடங்கிக் கிடப்பவனுக்கு எதற்கப்பா வீண் ஆர்ப்பாட்டங்கள்? சோழர்களே சுருண்டு கிடக்கிறார்கள். பாராண்ட பல்லவர்கள் பதறிச் சிதறி எங்கோ பரதேசிகளாக அலைவதாகச் சேதிகள். தேசமே சீரழிந்து கிடக்கிறது. எங்கும் பன்றிகள் மேய்கின்றன. சாளுக்கியச் சதிராட்டம் நடக்கின்ற சண்டாள வேளை இது. இதில் நான் வேறு மன்னன் என்று மார்தட்டி நிற்பதில் பொருளென்ன இருக்க முடியும்...? உள்ளம் நோக நீ ஒன்றும் உரைக்கவில்லை. நான் உள்ளம் பூரித்து நின்ற ஒரு நினைவைத்தான் கிளறி விட்டாய். அதுதான் தேகச் சிலிர்ப்புக்குக் காரணம்...

    புரியவில்லையே...

    "புரியச் சொல்கிறேன். எங்கள் வம்சம் பல்லவ ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்ட ஒன்று. மாமன்னர் நரசிம்ம பல்லவர் என் வயதை ஒத்தவர் - ஒன்றிரண்டு வயது நான் இளையவனாக இருக்கக் கூடும். எங்கள் நட்பு அசாத்தியமானது. என் மீது அவர் காட்டியது சகோதர வாஞ்சை. ஒன்றாகவே போர்ப் பயிற்சி பெற்றோம். சக்கரவர்த்தி மகேந்திர பல்லவர் ஒரு சமயம் எங்களை அழைத்து மகனின் வீரத்தைப் பரிசோதிப்பதற்காக,

    'எங்கே... இவனோடு வாட்போரிடு, பார்க்கலாம்' என்றார். எங்கள் போர் ஆசானும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், இறுதியில் நரசிம்ம பல்லவர் உறுதியாக,

    முத்தரையன் என் சகோதரன். அவனோடு விளையாட்டுச் சண்டைகூட எனக்குச் சாத்தியமில்லை. தோழர்களுக்குள் வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே வாய்ப்பு அமைந்துவிடக் கூடாது... என்று கூறி, மறுத்துவிட்டார். அவர் என்னை எப்போதும் தோழமைச் சுவையோடு ‘முத்தரையா' என்றுதான் அழைப்பார். ஆட்சி பீடத்தில் ஏறியதும் அதில் சிறு மாற்றம் செய்து ‘முத்தரையரே' என்று அழைக்கத் துவங்கினார். எவ்வளவோ மறுத்தேன். 'பதவியில் இருப்பவர்களுக்குப் பண்பு அவசியம். பல்லவ மன்னன் சிற்றரசர்களை மரியாதையின்றி அழைப்பவன் என்று யாரும் கூறி விடக்கூடாது' என்று விளக்கம் தந்தார். அவர் என்னை எப்படி அழைப்பாரோ அதே பாவனை - குரல் நயம் இப்போது உன் குரலில் காண்கிறேன்..." இதைச் சொல்லும் போது முத்தரையரின் ராஜவிழிகளில் நட்பு ஞாபகம் ஈரம் கட்டியிருந்தது.

    இளைஞன் மஞ்சத்திலிருந்து சட்டென்று துள்ளியெழுந்து நின்றான். ஏதேதோ ஞாபகங்கள் வதை செய்தன. முத்தரையர் சட்டென்று இமை ஈரத்தைத் துடைத்தபடி பாய்ந்து,

    நீ ஏனப்பா எழுந்து விட்டாய்? இன்னும் சிறிது நேரம் படுத்திருந்து ஓய்வெடுக்கலாமே... என்று கூறி, அவன் தோள் பற்றி மஞ்சத்தில் அமரச் செய்ய முனைந்தார்.

    இல்லை முத்தரையரே! என் உடல் நிலை பூரணமாகத் தேறிவிட்டது. மஞ்சத்திலேயே படுத்துக் கிடப்பது சலிப்பூட்டுகிறது. நீங்கள் என் மீது காட்டும் பாசமும் பரிபூரண அன்பும் என்னைச் சிலிர்க்க வைத்திருக்கிறது. நிச்சயமாக இதற்கெல்லாம் நான் அருகதை உடையவனே அல்ல. நான் உடனே இங்கிருந்து போய்விட எண்ணுகிறேன். அதுதான் எனக்கும் நல்லது. உங்களுக்கும் நல்லது. எங்கே உங்கள் அன்பு மகள் மதுரவல்லி...? அவர்களை முதலில் சாப்பிடச் சொல்லுங்கள். அவர்களையும் பார்த்து ஒருவார்த்தை நன்றி கூறிக் கொண்டு, நான் புறப்பட்டு விடுகிறேன்... என்றான் அந்த இளைஞன்.

    தம்பி அவசரப்படாதேயப்பா. அவ்வளவு சுலபத்திலெல்லாம் உன்னை இங்கிருந்து போக விட்டுவிட மாட்டோம். உனக்குத் தெம்பு வந்திருக்கலாமே தவிர, உன் உடல் நலம் இன்னும் பூரணமாகக் குணமாக வில்லை. அப்படியே ஆகியிருந்தாலும் அதை நாளை மருத்துவர் வந்து தான் கூற வேண்டும். அதன் பிறகும் கூட நீ சில நாள் இங்கு தங்கிச் செல்லலாம். இப்போது உனக்குப் படுத்துக்கிடப்பது சலிப்பூட்டுகிறது என்றால், சிறிது காலாற நடந்து சென்று வரலாம். மதுரவல்லி மலர்வனம் சென்று, கொஞ்சம் பூக்கள் பறித்து மாலை தொடுக்க வேண்டுமென்றாள். எல்லாம் உன் நலனுக்காக இறைவனைப் பிரார்த்திக்கத் தான். வேண்டுமானால், நீ மலர்வனம் சென்று அங்கேயே மதுரவல்லியைச் சந்திக்கலாம். நீ எழுந்து நடப்பது கண்டால் அவள் மிகவும் மனம் மகிழ்வாள்... என்று கூறினார் முத்தரையர்.

    உடனே அந்த மாளிகையிலிருந்து வெளியேறினால் போதும் என்று அந்த இளைஞன் தவியாய் தவித்தான். முத்தரையர் காட்டும் அன்பு அவனைத் திணறச் செய்தது. அவரை எதிர்த்தோ மறுத்தோ பேசும் திறனற்றவனாய் அவன் அந்த மாளிகையின் பின்புறமுள்ள மலர்வனம் நோக்கி நடந்தான்.

    அங்கே, மலர்களே மலர்களைப் பறிப்பது போல மதுரவல்லி சற்று உயரமான கிளை ஒன்றை இழுத்துப் பிடித்தவாறு தங்க அரளி மலர்களைக் கொய்து கொண்டிருந்தாள். அவளுடைய விரல்களுக்கும் அந்த மலர்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்கவில்லை. மலர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1