Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deva Ragasiyam
Deva Ragasiyam
Deva Ragasiyam
Ebook593 pages5 hours

Deva Ragasiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முழுவதும் திரை மறைவில் நடைபெறும் அரசியலை பற்றித்தான் இந்த நாவலில் கூறப்பட்டுள்ளது. பத்திரிக்கைகளில், நாளிதழ்களில், ஊடகங்களில் நாம் காண்பதோ நம்மிடம் உரைக்கப்படுவதோ உண்மையான அரசியல் அல்ல என்பதை படம்பிடித்து காட்டியுள்ளார் இதன் ஆசிரியர். வாருங்கள் நாமும் அதன் ரகசியங்களை வாசித்து அறிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateApr 15, 2023
ISBN6580132109522
Deva Ragasiyam

Read more from Kalachakram Narasimha

Related to Deva Ragasiyam

Related ebooks

Reviews for Deva Ragasiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deva Ragasiyam - Kalachakram Narasimha

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    தேவ ரகசியம்

    Deva Ragasiyam

    Author:

    காலச்சக்கரம் நரசிம்மா

    Kalachakram Narasimha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalachakram-narasimha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஒரு ‘கிசுகிசு’ டீசர்

    01. ‘ஐஸியு’ உள்ளே...

    02. அவனன்றி யார் அறிவார்?

    03. நடுநிசி ஓலங்கள்

    04. அரசியல் கா(க)ண்டம்

    05. ரகசிய சினேகிதி

    06. ஜெகஜ்ஜால ஜித்தன்

    07 என் கேள்விக்கு என்ன பதில்?

    08. ஆகாயத்தில் பூகம்பம்

    09. சூழ்ச்சிக்கு ஒரு சூத்திரம்

    10. எச்சரிக்கை... ஜித்தா எச்சரிக்கை

    11. தேவ வனம்

    12. குறி தப்புமா?

    13. சீவற சிந்தாமணி

    14. கல்லூரியில் ஒரு ஒத்திகை

    15. மாதம்மா... தாமதம்மா

    16. தானாகச் சேர்ந்த கூட்டம்

    17. முதல் அதிர்ச்சி

    18. போட்டியின்றி ஒரு வெற்றி

    19. சித்தர் காட்டில்... சித்தமாக

    20. வஞ்சம் தீர்க்க வாராயோ...

    21. அங்கப்பிரதட்சிணம்

    22. மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?

    23. சிந்தாமணி சிந்திய ரகசியம்

    24. காதல் என்பது அரசியலானால்

    25. மூணு புள்ளிகள்

    26. என்ன கொடுப்பான்... எதைக் கொடுப்பான்?

    27. அதிரடி அங்கா

    28. ஜகதல பிரதாபன்

    29. நால்வர்அணி

    30. வேட்டையாடு விளையாடு

    31. இதயம் பொல்லாதது.

    32. ஆடு புலி ஆட்டம்

    33. டேக் இட் ஈஸி(ஜி)

    34. விஷப் பரீட்சை

    35. நாம் மூவர்... நமக்கு ஒருவர்

    36. ரூபம் அரூபம்

    37. விண்வெளி வீரன்

    38. ரகசிய சினேகிதன்

    39. ஊழி முதல்வன்

    40. மிஸ்டர் எக்ஸ்

    41. கதவுகள் திறந்தன

    42. குட் பை தமிழகம்

    43. எதிர்பாராத திருப்பம்

    44. அங்கா திடீர் பயணம்

    45. புலித்தோலில் பசு. பசுத்தோலில் புலி

    46. மலர் வளையம்

    முன்னுரை

    ஆங்கில நாளிதழ் தி ஹிந்துவில் நிர்வாக ஆசிரியராகப் பணிபுரிந்த நான், எனது பணிச்சுமையின் அழுத்தத்தைக் குறைக்கவும், தமிழ்மீது உள்ள நாட்டத்தினாலும், சின்னத்திரை சீரியல்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதத் தொடங்கினேன்.

    பல சின்னத்திரை சீரியல்களுக்கு எழுதியும், மனதில் வெறுமைதான் நிலவியது. எனது அம்மாதான், புதினங்களை எழுதிப் பார்! மனநிறைவு கிடைக்கும் என்றார்.

    ஒரு நாள்,

    பெரியவர் வானதி திருநாவுக்கரசரிடம், எனது தாய் கமலா சடகோபன் அவர்களின் புதினம் ஒன்றைக் கொடுப்பதற்காகப் போனேன்.

    என்னைப் பற்றி விசாரித்த அவர், தந்தை சித்ராலயா கோபு, தாய் கமலா சடகோபன் இருவருமே பெரிய எழுத்தாளர்கள். அவர்களுக்கு வாரிசு வேண்டாமா? என்று கேட்டு, என்னை வலுக்கட்டாயமாக, ஒரு புதினத்தை எழுதித்தரும்படி கேட்டார்.

    நான் இந்தியன் எக்ஸ்பிரஸில் பணியாற்றியபோது டெல்லி அரசியலில் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு கிசுகிசுவை மையமாக வைத்து ‘காலச்சக்கரம்’ என்கிற முதல் புதினத்தை எழுதினேன்.

    பிரபஞ்சத்தில் நமது புலன்களுக்கு எட்டாத, பதில் கிடைக்காத கேள்விகளைக் குறிவைத்து, அவை குறித்து தோண்டி துருவி ஆய்வு செய்து எழுதி, அவற்றிற்கு என்னால் இயன்ற அளவுக்கு பதில்களைக் கொடுக்க வேண்டும் என்கிற துடிப்புடன்தான் எழுதுகிறேன்.

    எனது புதினங்களை ஒரு குறிப்பிட்ட genre என்று முத்திரை குத்திவிட முடியாது. மர்மங்கள் எங்கு அதிகம் நிலவுகிறதோ, அவற்றை தேடிச் செல்கிறேன். அதனால் சரித்திரம், அரசியல், காதல், மருத்துவம், மனோதத்துவம் என்று பல விஷயங்களைப் பற்றி எழுதினாலும் அவை எல்லாமே திரில்லர்களாகவே இருக்கின்றன.

    ஆனால் வரலாற்றிலும், அரசியலிலும்தான் அதிகம் பதில் கிடைக்காத மர்மங்கள் இருப்பதால், சரித்திர, அரசியல் கதைகளையே அதிகம் எழுதுகிறேன். ஆனால் எதைப் பற்றி எழுதினாலும் மர்மங்களும், நமது புலன்களுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளையும்தான் அதிகம் கையாண்டிருக்கிறேன்.

    * ஒரே குடும்பத்தில் மூன்று பிரமுகர்கள் கோரமான முறையில் அதுவும் பத்து வருட காலங்களில் தொடர்ந்து மரணம் அடைவானேன்? என்பதை தோண்டித் துருவி ஆய்வு செய்து, அதைத்தான் ‘காலச்சக்கரமாக’ எழுதினேன்.

    * திருவரங்கன் தனது கோவிலைவிட்டு 48 வருடங்கள் தென்னிந்தியா முழுவதும் சுற்றித்திரிய வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? என்பதைத்தான் ‘ரங்கராட்டினம்’ புதினம் விளக்கியது.

    ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கை, சங்கதாராவிலும், இராஜராஜ சோழன் 16 திருமணங்கள் செய்து கொண்டிருக்க, அவனுக்கு மூத்தவன் ஆதித்த கரிகாலனுக்கு ஏன் திருமண வாழ்க்கை இல்லை என்பது குறித்து ஆய்வு செய்து, அவனது திருமண வாழ்க்கையைப் பற்றி ‘கூடலழகி’ புதினங்களிலும் கையாண்டேன்.

    * பஞ்சநாராயண கோவில்களை கட்டிய ஹொய்சள மன்னன் விஷ்ணுவர்தன் வாழ்க்கையில் நடந்த அமானுஷ்ய நிகழ்வுகளை ‘பஞ்சநாராயண கோட்டம்’ புதினத்தில் எழுதினேன்.

    கர்ணபரம்பரை’யில் சித்தர்கள் மற்றும் மூலிகைகளைப் பற்றிய மர்மங்களையும், குபேரவன காவலில் ஆண்களை சித்ரவதை செய்ய விரும்பும் மதனபயங்கரிகளாக உலவும் பெண்களைப் பற்றியும், மயிலங்கியில் மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களைப் பற்றியும் விவரித்தேன்.

    அதே வரிசையில், இதோ அடுத்ததாக உங்களுக்கு ஒரு பரபரப்பு நாவல்...

    ‘தேவ ரகசியம்.’

    இது முற்றிலுமாக ஒரு அரசியல் த்ரில்லர். தங்களை நிரந்தரம் என்று எண்ணுபவர்கள் அரசியல்வாதிகள். அதிகாரத்துடன் வளைய வரும் அவர்களின் வாழ்க்கை, சாதாரண குடிமகனின் வாழ்க்கையைவிட நிரந்தரம் இல்லாதது, என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்தபாடில்லை. சரித்திர காலத்திலும் சரி தற்போதைய காலகட்டத்திலும் சரி, பதவி நாற்காலியில் உட்காருபவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியில்லாதது... நிச்சயமில்லாதது! அவர்கள் படும் நிரந்தர துயரத்தைத்தான் தேவ ரகசியம் விளக்குகிறது.

    தேவ ரகசியம் எதைப் பற்றி?

    முழுவதும் திரை மறைவில் நடைபெறும் அரசியலைப் பற்றித்தான்.

    பத்திரிகைகளில், நாளிதழ்களில், ஊடகங்களில் நாம் காண்பதோ, நம்மிடம் உரைக்கப்படுவதோ, உண்மையான அரசியல் அல்ல! திரைமறைவில் நடப்பவை வேறு! நம் கண்முன்பாக நடப்பவை வேறு!

    தமிழகத்தில் சில அரசியல் நிகழ்வுகளுக்கு பதில் கிடைக்காமலேயே போய்விட்டது. ஒரு பெரிய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்றாலும், எனது கற்பனை என்னும் நூலால் நான் ஒரு சிலந்தி வலையைப் பின்னி இருக்கிறேன்.

    நான் தமிழில் விளையாட்டாகத்தான் எழுதத் தொடங்கினேன். இன்று அமரர் கல்கியின் குடும்பம், எழுத்தாளர் சாண்டில்யனின் குடும்பம், இன்னும் பல எழுத்துலக நண்பர்கள் எனது புதினங்களை சிலாகித்து, என்னை பாராட்டி வருகிறார்கள் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.

    கல்கி குழுமம், ‘வந்தியத்தேவன் பாதையில் ஒரு அனுபவ’ பயணத்தை நடத்திச் செல்ல என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது எனக்கு இந்திரலோக பதவியே கிடைத்தது போல.

    ‘மயிலங்கி மங்கையின் மரகதப்பெட்டி’ என்கிற எனது வரலாற்றுப் புதினம் Bynge செயலியில் தொடராக வந்து, பிறகு நூலாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடராக வந்தபோதே, ஐந்து இலட்சம் பேருக்குமேல் அதை பாராட்டி பின்னூட்டங்களை இட்டு என்னை ஆதரித்துள்ளனர்.

    இன்று எழுத்துலகில் எனக்கென்று ஒரு வாசகர் வட்டத்தைக் கொண்டிருக்கிறேன் என்பதை அறியும் போது, உண்மையில், நான் இந்த இடத்தை அடைவதற்காக பாடுபட்டவர்களை நினைக்காமல் இருக்க முடியாது.

    எனது தந்தை சித்ராலயா கோபு, எனது தாய் கமலா சடகோபன், வானதி திருநாவுக்கரசர் ஆகியோர்தான் நான் தமிழில் எழுதுவதற்கு காரணம்.

    என்னை ஆங்கில பத்திரிகைத் துறையிலும் ஊடகத்துறையிலும் ஊக்குவித்த, இந்தியன் எக்ஸ்பிரஸ் மாஸ்டர் சி.பி. சேஷாத்திரி, தி இந்து குடும்பம், மற்றும் கல்கி குடும்பம் ஆகியோருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டவன்.

    காவியக்கவிஞர் வாலி, வானதி டாக்டர் இராமநாதன், அமுதசுரபி திருப்பூர் கிருஷ்ணன், கலைமகள் கீழாம்பூர், கல்கி ரமணன், குங்குமம் சிவராமன், புஸ்தகா ராஜேஷ், பம்பாய் கண்ணன், Storytell, Bynge (தற்போது Notion), அனைவரும் தங்களது ஆதரவை நல்கி என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளனர்.

    என்னால் சுந்தர சோழர் என்று அழைக்கப்படும், சரித்திர ஆர்வலர் திரு சுந்தர் கிருஷ்ணன் அவர்களுக்கு, எனது நன்றி.

    தேவ ரகசியத்தை இதோ சொல்லப் போகிறேன்... காதுகளைத் தீட்டிக் கொள்ளுங்கள்.

    ‘காலச்சக்கரம்’ நரசிம்மா.’

    ஒரு ‘கிசுகிசு’ டீசர்

    மக்களின் அபிமானத்தை முழுவதுமாகப் பெற்ற ஒரு முதலமைச்சர், உடல்நிலை சரியில்லாமல் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, 24 மணிநேரமும் அவரது உடல்நிலையை மருத்துவர்களும், நர்ஸ்களும் கண்காணிக்கிறார்கள். முதல்வரோ ஒரு மாத காலமாக கோமாவில் இருக்கிறார்.

    ஒரு நாள்,

    அன்றாடம் ஐசியூவை கூட்டித் துடைக்கும் ஆயா ஒருத்தி, ஐசியுவினுள் ‘மாப் ஸ்டிக்’ வாளி சகிதம் வர, அவள் பணியைச் செய்யட்டும் என்று, நர்ஸ்கள் காபி குடிக்க வெளியே வெராந்தாவுக்குப் போகிறார்கள்.

    அப்போது திடீரென்று கண் விழிக்கிறார் முதல்வர். ஆயா பரபரப்படைந்து, நர்ஸ்களை அழைப்பதற்காக ஓட எத்தனிக்க, முதல்வர் அவளை தடுத்து நிறுத்தி, ஒரு ரகசியத் தகவலை அவளிடம் சொல்கிறார்.

    நான் ஒரு தகவலைச் சொல்கிறேன். அதை என் மனைவி, கட்சியினர், டாக்டர்கள், நர்ஸ்கள் யாரிடமும் சொல்லாதே! நான் சொல்லும் நபரிடம் மட்டும் அந்த ரகசியத்தை சொல்லு! வேறுயாரிடம் சொன்னாலும் என் உயிருக்கு ஆபத்து என்கிறார்.

    அந்த மருத்துவமனை ஆயா முதல்வர் குறிப்பிட்ட அந்த நபரைத் தேடிக் கொண்டிருக்க, அதற்குள் முதல்வர் மறைந்துவிடுகிறார். ஆனால், அவர் கூறிய ரகசியம் மட்டும் அந்த ஆயாவின் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது.

    அந்த இரகசியம் என்ன?

    அதை யாரிடம் சொல்ல வேண்டும்?

    அந்த ரகசியம்தான் தேவ ரகசியம்!

    Disclaimer

    பொதுவாக எனது புதினங்களுக்கு, நான் Disclaimers கொடுப்பதில்லை. எனது எழுத்துகளைப் பற்றி வாசகர்கள் அறிவார்கள். இருப்பினும் இது முற்றிலும் அரசியல் திரில்லர் என்பதால், இந்த disclaimer அவசியமாகிறது!

    இது முழுவதும் ஒரு கற்பனைக் கதையே! எந்த ஒரு பிரமுகரையோ, தனிப்பட்ட மனிதர்களையோ, சம்பவங்களையோ கருத்தில் கொண்டு, இந்த புதினம் எழுதப்படவில்லை. முழுவதுமாக, எனது கற்பனையில் தோன்றிய கதை என்று உறுதியளிக்கிறேன்.

    ஆனால் அதே சமயம், சில சம்பவங்கள் நாம் விரும்பியபடி நடக்கவில்லையென்றால், கற்பனையில் அவற்றை நாம் விருப்பப்படியே நடத்திக் கொள்வதில் தவறில்லை.

    அத்தகைய ஒரு சம்பவத்தைத்தான், நான் எனது பாணியில், ஒரு ‘த்ரில்லர்’ கதையாகச் செதுக்கி இருக்கிறேன்.

    இப்படித்தான் நடந்தது என்று நான் கூறவில்லை. இப்படி நடந்தால் எப்படி இருந்திருக்கும்? என்பதைக் கூறும் கதைதான் இது.

    ‘காலச்சக்கரம்’ நரசிம்மா.’

    Breaking News

    அண்மைச் செய்தி

    முதல்வர் தேவாஜி கவலைக்கிடம்!

    01. ‘ஐஸியு’ உள்ளே...

    ‘பகல்’ கணவனின்மீது படர்ந்திருந்த இரவு மனைவி, ‘இனி விலக வேண்டியதுதான்’ என்பது போன்று, தனது கிழக்கு கன்னத்தை முந்தானையால் ஒற்றி எடுத்தபடி, நெகிழ்ந்திருந்த தனது கரிய சேலையைத் திருத்திக்கொண்டு, அவனிடம் இருந்து அகன்று செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவள் கிழக்கு கன்னம் அதனால் செம்மையாகி கொண்டிருந்தது.

    சுறுசுறுப்புக்கு பெயர் போன சென்னை நகரத்தின் முதல் பிரஜையாக கண்விழித்து, எழுந்து, காலை கடன்களை முடித்து, குழந்தைகளுக்கும், கணவனுக்கும் சமையலைத் தயார் செய்துவிட்டு, தனது குடியிருப்பிலிருந்து புறப்பட்டாள் மாதம்மா.

    முன்பு குடிசைப் பகுதிகளாக இருந்து, தனது வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டி, முதல்வர் தேவாஜியால் குடியிருப்புகளாக மாற்றி கட்டித் தரப்பட்ட அந்த காலனியில், ‘பைம்பொழில்’ என்கிற அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து இறங்கிய மாதம்மா சாலையில் நடக்கத் தொடங்கினாள்.

    வானத்தில் நட்சத்திரங்கள் இன்னும் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. தெருக்கோடியில் பன்னிரண்டு மாடி கட்டிடமாக ஜெகஜ்ஜோதியாக விளக்குகள் மின்ன நின்ற மெட்ரோ மருத்துவமனையில்தான், ஆயாவாக பணிபுரிகிறாள், மாதம்மா.

    தங்களுக்கு வீடு கட்டி கொடுத்த முதலமைச்சர் தேவாஜியை, அவளது மனம் வாழ்த்தாத நாள் கிடையாது. என்றாவது ஒரு நாள், அவரை நேரில் சந்தித்து தனது நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும் என்கிற ஆசைதான். ‘இவள் எங்கே முதல்வரை சென்று சந்திப்பது?’ என்றுதான் அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தாள். இருப்பினும், மனதினுள் ஒரு சிறு நப்பாசை.

    என்றைக்காவது, சாலையில் செல்லும்போது முதல்வர் தனது காரை நிறுத்தி, இவளுடன் பேசினால், நன்றியை கூறிவிடலாம், என்றுதான் நினைத்திருந்தாள்.

    மனதினுள் ஒரு ஆசையை உருப்போட்டுக்கொண்டே இருந்தால், அந்த ஆசை நிறைவேறும் என்று ஒரு சாமியார் அவளிடம் கூறியிருந்ததால் தேவாஜியை சந்தித்து நன்றி கூற வேண்டும் என்கிற ஆசையை மட்டும் மனதினுள் வளர்த்துக்கொண்டே இருந்தாள். ஆனால் அந்த ஆசை இப்படியா நிறைவேற வேண்டும்?

    முதலமைச்சர் தேவாஜி உயிருக்கு ஆபத்தான நிலையில் திடீரென்று ஒரு நாள் நள்ளிரவு மெட்ரோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் மனைவி ‘அங்கா’ என்கிற அங்கயற்கண்ணி கதறியபடி உடன் வந்தாள். பேசிக்கொண்டே இருந்தவர், திடீரென்று மயங்கிப் போனார் என்று மட்டும்தான் அங்கா கூறினாள். மருத்துவமனையின் ‘ஐசியு’ இருந்த மூன்றாவது மாடியே இரண்டாக பிரிக்கப்பட்டு முதல்வருக்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. மருத்துவமனையின் மிகச்சிறந்த மருத்துவர்களும் சீனியரான நர்ஸுகளும், தேவாஜிக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள்.

    மிகவும் பொறுமையாகவும், சிரித்த முகத்துடனும், சுத்தமாகவும், மருத்துவமனையை வைத்துக்கொள்ளும் மாதம்மாவிடம் முதல்வர் படுத்திருந்த ஐசியு அறையை சுத்தப்படுத்தும் பொறுப்பைக் கொடுத்திருந்தார், மருத்துவமனையின் டீன் பீதாம்பரம்.

    அன்றாடம், விடியற்காலையில் தொடங்கி மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை, மாதம்மா ஐசியு அறையை கிருமி நாசினி போட்டு துடைப்பாள். டாக்டர்கள் நர்ஸுகள் கூட, மாதம்மா வருகிறாள் என்றால் மரியாதையுடன் ஒதுங்கி இடம் விடுவார்கள்.

    மாதம்மாவின் தோற்றத்தைப் பார்த்தாலே, நோயாளிகளுக்கு நேர்மறையான எண்ணங்களும், புதிய நம்பிக்கைகளும் தோன்றும். வட்டவடிவமான முகம். கருணை பொங்கும் கண்கள். மஞ்சள் பூசிய முகத்தில், பெரிதாக துலங்கும் குங்குமப் பொட்டு. அதன்மேலே மஞ்சள் கீற்று. பொட்டின் கீழே திருநீறு. அதன் மையத்தில், கருஞ்சாந்து பொட்டு. இரு காதுகளிலும் மயில் வடிவத்தில் தங்கத்தோடுகள். படிய வாரி, பின்மண்டையின் உச்சியில் முடிக்கப்பட்டிருந்த கொண்டை. கொண்டையின் உச்சியில் மருத்துவமனையின் பெயரைத் தாங்கிய குல்லாய். கையில் ‘மாப் ஸ்டிக்’ இன்னொரு கையில் வாளி என்று அவள் வரும்போதே, அந்த இடமே தெய்வீகமாக மாறும். அவ்வப்போது, சுருக்குப்பையில் வைத்திருக்கும் விபூதியை எடுத்து, நோயாளிகளின் நெற்றியில் வைத்து நல்லபடியா சொஸ்தமாகிடும் என்று அவள் கூறும்போதே, நோயாளிகளுக்குப் புத்துணர்வு பிறக்கும்.

    தேவாஜியின் அறையை சுத்தம் செய்யும் பணி கிடைத்ததும் கதறிவிட்டாள் மாதம்மா.

    ஐயோ...! வீடு கட்டி கொடுத்த அந்த மகராஜனுக்கு எப்படியாவது நன்றி சொல்லணும்னு இவ்வளவு நாளா காத்திருந்தேனே! இப்ப பக்கத்துலயே இருக்காரு. ஆனா நான் நன்றி சொன்னாலும், அவருக்கு கேட்காத கோமா நிலையில இருக்காரே. பிள்ளையாரப்பா! எனக்காக நான் உன்னை எதுவுமே கேட்டதில்லை. முதல்முறையா கேட்கிறேன். தேவாஜி ஐயா நாட்டுக்கு ரொம்ப தேவை. அவரை குணப்படுத்தி வீட்டுக்கு நல்லபடியா அனுப்பிடு என்று மெட்ரோ ஆஸ்பத்திரி வாசலில் இருக்கும் விநாயகரிடம் தினமும் பிரார்த்தனை செய்துவிட்டுத்தான், மேலே வருவாள்.

    ஐந்தரை மணிக்கே தேவாஜி படுத்திருக்கும் ‘ஐசியு’ சென்று முதல் முறையாக சுத்தம் செய்துவிடுவாள். மெட்ரோ ஆஸ்பத்திரி கார்டியாலஜிஸ்ட் டாக்டர் அனந்தசயனம் மற்றும் டீன் பீதாம்பரம் இருவரும் சரியாக ஆறு மணிக்கு முதல் ரவுண்டு வருவார்கள். நேராக முதல்வர் படுத்திருக்கும் அறைக்குத்தான் வருவார்கள் என்பதால் ஐந்து மணிக்கே மருத்துவமனைக்கு புறப்பட்டுவிடுவாள். அவள் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடைதான். கீழே பிள்ளையாரிடம் ஒரு ஐந்து நிமிட பிரார்த்தனை. மேலே சென்று யூனிபார்ம்மை மாட்டிக்கொண்டு, வாளி, மாப் ஸ்டிக்குடன் அவள் ஐசியுவில் நுழைந்தால் மணி சரியாக ஐந்தரை, என்பதாகப் பொருள்.

    மருத்துவமனை பிள்ளையார் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த போலீஸ் மையத்தில், பிளாஸ்டிக் நாற்காலிகளில் நிறைய காவலர்கள் அமர்ந்திருந்தனர். இன்னொரு பக்கம், கும்பலாக அகில இந்திய மற்றும் லோக்கல் ஊடகங்களின் டிஷ் ஆன்டெனாவுடன் கூடிய வேன்கள் நின்றன. அந்த வேன்களை சுற்றி பத்திரிகை நிருபர்கள். டி.வி. நிருபர்கள், கேமிராமேன்கள், என்று ஆண்களும் பெண்களுமாக வம்புகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

    ஒரு ஆலமரத்தின் கீழ் ஆண்-பெண் பேதமில்லாமல் தேவாஜியின் கட்சியான ‘வளமை தமிழகம்’ தொண்டர்கள் படுத்திருந்தனர். ‘தேவாஜி குணமாகி வீடு திரும்பினால்தான் நாங்கள் இங்கிருந்து நகருவோம்’ என்று உணர்ச்சிவசப்பட்டுக் கதறியவர்கள் அவர்கள். கடந்த ஒரு மாத காலமாகவே, அந்த மரத்தடியில்தான் வாசம்.

    மெட்ரோ மருத்துவமனையே, ஒரு மினி தலைமை செயலகமாக மாறி இருந்தது. காவல் அதிகாரிகள் மருத்துவமனையின் வெளியிலும், அரசு அதிகாரிகள் முதல் மாடி காரிடாரிலும் இருந்தனர். முதல் மாடியில் ஒரு அறை தேவாஜியின் மனைவி அங்கா என்கிற அங்கயற்கண்ணிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. தேவாஜியின் செயலாளர்களுக்காக, ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

    பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு, மாடிக்குச் சென்று, சேலையைக் களைந்து யூனிபார்மை மாட்டிக்கொண்டு, மாதம்மா தேவாஜியின் அறைக்குள் நுழைந்தபோது, ஐசியு நர்ஸ்கள், சோபியா ஜூலியட்டும், ஓமனாவும் ரோஷிணியும் மட்டுமே இருந்தனர்.

    முதல்வர் தேவாஜியின் பக்கத்திலேயே, நர்ஸ் ரோஷிணி நின்றிருந்தாள். சோபியா காலை நேர டூயூட்டிக்கு வரும் நர்ஸுகளுக்கு, நைட் ரிப்போர்ட் எழுதிக்கொண்டிருக்க, ஓமனா இ.சி.ஜி. செய்வதற்காக சம்மந்தப்பட்ட துறையுடன் இன்டெர்காமில் பேசிக் கொண்டிருந்தாள்.

    நர்ஸ் ரிப்போர்ட்டை எழுதி முடித்த சோபியா, ஃபைலை மூடியபடி மாதம்மாவை நோக்கி தலையசைத்துவிட்டு, மற்ற இரு நர்ஸுகளையும் பார்த்தாள். ஐசியு வெளியே காரிடாரில், காபி டீ ‘வெண்டிங் மெஷின்’ ஒன்றை, டாக்டர்கள் மற்றும் நர்ஸுகளுக்காக அமைத்திருந்தார்கள், மெட்ரோ மருத்துவமனை நிர்வாகம்.

    தினமும் மாதம்மா ஐசியுவை சுத்தம் செய்யும் நேரத்தில், நர்ஸுகள் காபி குடிப்பது வழக்கம்.

    கமான் சிஸ்டர்ஸ்! லெட் ஹேர் டூ ஹேர் ஒர்க்! இட்ஸ் காபி டைம் நௌ! என்றபடி சோபியா நகர, மற்ற இரண்டு நர்ஸுகளும் அவளைப் பின்தொடர்ந்தனர்.

    ‘மாப் ஸ்டிக்’ கை பக்கெட்டினுள் நனைத்த மாதம்மா வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக, அப்படியே மாப் ஸ்டிக்கை அணைத்தபடி படுக்கையில் கிடந்த தேவாஜியையே வெறித்தாள்.

    ‘இப்படி கிழிஞ்ச நாரா கிடக்கறீங்களே ஐயா! எவ்வளவு கம்பீரமா நடப்பீங்க? இருபத்தி ஏழு வயசிலேயே முதல்வராகி இன்னும் முப்பத்தி ரெண்டு வயசைக்கூட எட்டிப் பிடிக்கலை. அதுக்குள்ளாற இப்படி படுத்த படுக்கையா கிடக்கிறீங்களே... அடுத்த தேர்தலுல, அமோகமாக ஜெயிக்கப் போறீங்கன்னு எல்லாரும் எதிர்பார்த்திருக்கச்சே இப்படி கோமாவுக்கு போயிட்டீங்களே. ஒரு மாசமா நாடே ஸ்தம்பிச்சு கெடக்குது. நீங்க எப்ப திரும்பி வரப்போறீங்கன்னு நாடே பிரார்த்தனை பண்ணிக்கிட்டு இருக்கு. நீங்களோ... எங்களை பத்தி எல்லாம் கவலைப்படாம இப்படி கிடக்கிறீங்களே. சீக்கிரம் எழுந்து வாங்க தேவாஜி ஐயா!’ மனதினுள் கதறியவள், பிறகு மாப் ஸ்டிக்கின் முனையை வாளியிலேயே பிழிந்துவிட்டு, அந்த விஸ்தாரமான ஐசியு அறையைத் துடைக்கத் தொடங்கினாள்.

    தேவாஜி படுத்திருந்த கட்டிலின் அடியில் துடைப்பதற்காக கட்டிலை நெருங்கியவள், குனிந்து மாப் ஸ்டிக்கை கட்டிலின் அடியில் நீட்ட, சரியாக அவளது முகம் முதல்வர் தேவாஜியின் முகத்திற்கு நேராக வந்தது. அவரது முகத்தில் பொருத்தப்பட்டிருந்த மாஸ்க்கை கவனித்தாள், மாதம்மா.

    நான் உங்கள் வீட்டு மூத்த பிள்ளை. உங்களது மற்ற பிள்ளை பெண்கள் எனது சகோதர சகோதரிகள். மூத்த பிள்ளை நான் என்பதால், அவர்களை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன் என்று பேசி மக்களை தனது கம்பீர குரலால் வசப்படுத்தியிருந்த தேவாஜி, இப்படி மாஸ்க்கினால் நாசியையும் வாயையும் மூடிக்கொண்டு படுத்திருக்க வசமா?

    மாதம்மாவின் கலங்கிய கண்கள் தேவாஜியின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தாலும், கைகள் கட்டிலின் அடியில் ‘மாப் ஸ்டிக்’கினால் துடைத்துக் கொண்டிருந்தன. அவரது முகத்தையே மாதம்மா கவனித்துக் கொண்டிருந்த போதுதான்,

    திடீரென்று,

    கோமாவில் இருந்த முதலமைச்சர் தேவாஜியின் கண்கள் திறந்து கொண்டன.

    திறந்துகொண்ட கண்கள் நிலைகுத்தி நிற்காமல் பரபரத்தன. இப்படியும் அப்படியுமாக பம்பரமாக சுழன்ற அவரது பார்வை, ஒரு வழியாக மாதம்மாவின் முகத்தை நோக்கித் திரும்பி அப்படியே நிலைபெற்றன.

    மாதம்மாவின் திகைப்பு பரவசமாக மாறியது.

    முதல்வர் தேவாஜி கண் விழித்துவிட்டார். எனது பிரார்த்தனை வீண் போகவில்லை... நர்ஸம்மா... நர்ஸம்மா! என்று அலறுவதற்காக வாய் திறந்தாள் மாதம்மா.

    ஆனால் தேவாஜியின் இடதுகை அவளது முகத்தை நோக்கி உயர்ந்து, ‘யாரையும் அழைக்க வேண்டாம்’ என்பது போல, இப்படியும் அப்படியுமாக அசைந்தது. மாஸ்க் பின்பாக, அவரது வாய் துடிதுடித்து எதையோ சொல்ல முயலுவதைக் கண்டாள், மாதம்மா.

    ‘எதுவாக இருந்தாலும் நர்ஸை கூப்பிடுவதுதான் உசிதம். துப்புரவு தொழிலாளி ஒரு நோயாளியைத் தொடக் கூடாது, அதுவும் மாநில முதல்வரை’ என்று மாதம்மா நினைத்த அதே நேரம், சட்டென்று தேவாஜியின் இடதுகரம் பறந்து வந்து தனது மாஸ்க்கை நீக்கியது.

    அவசரமாக தனது ‘மாப் ஸ்டிக்’கை கட்டிலின்மீது சரித்துவிட்டு, அவரை நோக்கி குனிந்தாள்.

    உங்க பொஞ்சாதி அங்கா அம்மாவை போயி கூப்பிட்டு வரட்டா? மாதம்மா நெகிழ்ந்த குரலில் கேட்டாள்.

    கிசுகிசுத்த குரலில் தேவாஜி பேசினார்.

    யாரையும்... கூப்பிட வேண்டாம்... அம்மா! ஒரு உதவி செய்யுங்க. ஆபத்துல இருக்கேன்னு ஆத்மிகாகிட்டே சொல்லுங்க. உடனே என்னைக் காப்பாத்தணும்-னு ஆத்மிகாகிட்டே... சொல்லுங்க! ஆத்மிகா... கிட்டே மட்டும் சொல்லுங்க! வேற யார்கிட்டேயும் சொல்லாதீங்க! என்று குரல் தழுதழுக்க சொன்ன, தேவாஜியின் விழியோரத்தில் தளும்பிய நீர், அப்படியே வழிந்து தலையணையை நனைத்தது.

    விக்கித்து போய் செய்வதறியாது நின்றிருந்தாள், மாதம்மா.

    தொடர்ந்து பேச முயன்றார், தேவாஜி. ஆனால் அவரது உடல் தூக்கிப் போட, தேவாஜியால் அதற்குமேல் பேச முடியாதபடிக்கு, நாக்கு புரள மறுத்தது. அவரது பார்வை நர்ஸ் சோபியாவின் மேஜையின்மீது பதிந்தது.

    தனது தலையை மேஜையை நோக்கி அசைக்க, மாதம்மா அவரது பார்வை போகும் திக்கை கவனித்தாள்.

    அவரது பார்வை நர்ஸ் சோபியா ஜூலியட் தயார் செய்து வைத்திருந்த காலை பணி நர்ஸுகளுக்கான ரிப்போர்ட் ஃபைல்லின்மீது படர்வதை உணர்ந்தாள், மாதம்மா.

    சோபியாவின் மேஜையில் ‘மெட்ரோ மருத்துவமனை’ என்கிற எழுத்துகளுடனும், மருத்துவமனையின் முகப்பு படத்துடன் கூடிய நீல நிறத்தில், ஃபைல் இருந்தது. விரைந்து சென்று அதை எடுத்து வந்து தேவாஜி பார்ப்பதற்கு வசதியாக, அவரது முகத்துக்கு நேராக உயர்த்தி பிடித்தாள்.

    தனது இடது கையால் ஃபைலின் முதல் பக்கத்தை திருப்பிய தேவாஜி, இரண்டாவது பக்கத்தைப் பார்த்தார். அவரது கலங்கிய கண்களில் ‘திடீர்’ மலர்ச்சி.

    அவர் எதை எதிர்பார்த்து, அந்த ஃபைலை கொண்டு வரச்சொன்னாரோ, அது இதோ கிடைத்துவிட்டது.

    தேவாஜி தனது இடது கையால் அந்த பக்கத்தை உருவியவர், அதை மாதம்மாவிடம் நீட்டினார்.

    ஆத்... ஆத்... தேவாஜியின் நாக்கு புரள மறுக்க, ‘ஆத்மிகா’ என்கிற பெயரை அவர் சொல்ல முடியாமல் திணறுவதை, மாதம்மா உடனே புரிந்து கொண்டாள்.

    சரிங்க! இதை பத்திரமா ஆத்மிகாகிட்டே கொடுத்துடறேன். உங்களை உடனடியா காப்பாத்தணும்னு அவங்ககிட்டே சொல்லிடறேன். வேற யார் கையிலேயும் இந்த விஷயத்தை சொல்லமாட்டேன்.

    தேவாஜி சொல்ல விரும்பியதை, மாதம்மாவே யூகித்துச் சொல்ல, அவர் முகத்தில் நிம்மதி பரவியது.

    மாதம்மா அவர் நீட்டிய தாளை வாங்கிக் கொண்டாள்.

    தேவாஜி அவளை நோக்கி கையை உயர்த்தி, டக்கென்று கட்டிலில் அவள் சரித்து வைத்திருந்த மாப் ஸ்டிக்கை இறுகப் பிடித்தார். பிறகு மூன்று முறை மாப் ஸ்டிக்கை சுழற்றினார்.

    மாதம்மா குழப்பத்துடன் அவரை பார்த்தபடி நிற்க மாப் ஸ்டிக்கை அவளிடம் நீட்டினார். அவரது வாய் எதோ கூறியது. ஆனால் மாதம்மாவுக்கு புரியவில்லை. சற்றே குனிந்து காதுகளைக் கூர்மையாக்கினாள்.

    ருபா... ஒரு ரூபா...! என்று முணுமுணுத்துக் கொண்டிருந்த தேவாஜியின் கண்கள் சொருகத் தொடங்கிவிட்டதை கவனித்தாள், மாதம்மா. தேவாஜி மீண்டும் முற்றிலுமாக மயக்கத்தில் ஆழ்ந்து போனார்.

    மாதம்மா உறைந்து போய் நின்றிருந்தாள்.

    தேவாஜி கண் விழித்த நேரத்தில், அவள் தனது நன்றியை சொல்லியிருக்கலாம். ஆனால் தேவாஜி வாய் திறந்து, இவளிடம் அல்லவா உதவி செய்யுங்க என்று கேட்டிருக்கிறார். ஒருவேளை, அவருக்கு உதவியை செய்வதன் மூலம் இவளை தனது நன்றிக்கடனை செலுத்த சொல்கிறாரா, கீழே இருக்கும், மெட்ரோ மருத்துவமனை பிள்ளையார்.

    காபி குடிக்க சென்றிருக்கும் நர்ஸ்கள் திரும்பி வந்ததும், அவர்களிடம் தேவாஜி கண் விழித்து தன்னிடம் பேசியதைப் பற்றி சொல்லலாமா? இல்லை பேசாமல் இருந்துவிடலாமா? ‘யாரிடமும் சொல்லாதே. ஆத்மிகாவிடம் மட்டும் சொல்லு!’ என்றாரே தேவாஜி!

    அவசரமாக மீண்டும் மாஸ்க்கை அவர் முகத்திலேயே பொருத்திவிட்டு, தனது கையில் இருந்த அந்த ஃபைலையும் இருந்த இடத்திலேயே வைத்தாள்.

    மாதம்மாவுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.

    கடைசியாக தேவாஜி ஏதோ சில வார்த்தைகளை சொன்னாரே... சொற்களின் பொருள் புரியவில்லை. ஆனால் அவற்றை அவர் உச்சரித்த விதம் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.

    நர்ஸ் மேஜையில் இருந்த பேனாவை எடுத்து, தேவாஜி தந்த தாளின் பின்புறமாக, அவர் சொன்ன சொற்களை எழுதினாள்.

    ரூபா... ஒரு ரூபா..!

    தாளின் பின்பாக அவசரமாக எழுதியவள், அந்த தாளை மடித்து தனது யூனிஃபார்ம் பேண்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டாள். பிறகு ‘மாப் ஸ்டிக்’கை எடுத்துக்கொண்டு, தனது பணியை செய்தாலும், அவ்வப்போது அவளது பார்வை, தேவாஜியையே திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது.

    டாக்டர்கள் வரும் நேரம் ஆகிவிட்டது. இதோ காபி குடிக்க சென்றிருக்கும் நர்ஸ்கள், எந்நேரத்திலும் திரும்பி வந்துவிடக்கூடும். சுதாரித்துக்கொண்டு, அறையின் எஞ்சிய பகுதியை அவசரமாகத் துடைத்தாள். ஓரக்கண்ணால், முதல்வர் தேவாஜியை நோட்டம்விட்டுக் கொண்டேதான் இருந்தாள்.

    ‘மீண்டும் அவரிடம் ஏதாவது அசைவு தோன்றுகிறதா? ம்ஹும்...!’

    வாளியை கையில் எடுத்துக் கொண்டு இவள் நிமிரவும், நர்ஸ்கள் சோபியா, ரோஷிணி மற்றும் ஓமனா மூவரும் உள்ளே நுழைந்தனர்.

    முதல்வர் தேவாஜி கண்களை திறந்து, தன்னிடம் சில நிமிடங்கள் பேசினார் என்று இவள் கூறினால் அந்த நர்ஸ்கள் நிச்சயம் திடுக்கிட்டுப் போவார்கள். ஒருவேளை, அவள் சொல்வதை நம்பாமல் சிரிக்கவும் கூடும்!

    ஒரு மாதமாக கோமாவில் கிடந்திருந்த முதல்வர், கண்திறந்து அவளிடம் பேசினார் என்றால், டாக்டர்கள் நர்ஸுகள் மட்டும் அல்ல, முதல் மாடியில் தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தங்கியிருக்கும் அங்கயற்கண்ணி, செயலாளர்கள், வெளியே குழுமியிருக்கும் பத்திரிகையாளர்கள், கட்சிக்காரர்கள் அனைவருமே அவளை விரட்டத் தொடங்குவார்கள் என்கிற உண்மையை, அப்போதைக்கு மாதம்மா உணரவில்லை. வாளியில் இருந்த அழுக்குத் தண்ணீரைக் கொட்டுவதற்காக பாத்ரூமை நோக்கி நடந்தாள், மாதம்மா.

    தேவாஜி தன்னிடம் பேசியது குறித்து, மாதம்மா குழம்பிப் போனாள். ‘தேவாஜி குறிப்பிட்ட அந்த ஆத்மிகா யார்?’ என்று யோசித்தபடி, மெட்ரோ ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடி பாத்ரூமினுள் நுழைந்தாள்.

    ‘கோமாவில் இருந்த முதல்வர் தேவாஜி, திடீரென்று கண்விழித்து ஆத்மிகாவிடம் சொல்லி, தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சியது ஏன்? தேவாஜிக்கு அப்படி என்ன ஆபத்து நேர உள்ளது? அவருக்கு யார் ஆபத்தை விளைவித்திருப்பார்கள்? அவர் மனதில் உள்ள ரகசியம் என்னவோ? எதற்காக இவளது ‘மாப் ஸ்டிக்’கை பற்றி மூன்று முறை சுழற்றினார்?’

    பாத்ரூம் ‘ஃபிளஷ் அவுட்’டினுள் வாளியில் இருந்த அழுக்குத் தண்ணீரைக் கொட்டியவள், பிறகு நிதானமாக ஃப்ளஷ் செய்தாள். சிறிது ஆசிடையும் பினாயிலையும் ஊற்றி, மீண்டும் ஃபிளஷ் செய்தவள், பாத்ரூம் கதவை தாளிட்டாள்.

    கையை டிஷ்யூ ஒன்றினால் துடைத்துக் கொண்டு, தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து, தேவாஜி கொடுத்த அந்த வெள்ளைத் தாளை உருவினாள்.

    நர்ஸ் சோபியா இரவு பணியைப் பற்றி எழுதியிருந்த ரிப்போர்ட். முதல்வருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்ட நேரம், அவர் உடலில் ஏற்பட்ட அசைவுகள் குறித்து தகவல்கள், இரவு டாக்டர் ரவுண்ட்ஸ் வந்த நேரம், குடும்பத்தினர் யாராவது ‘ஐசியு’ வந்தார்களா? என்பது குறித்த தகவல்கள், நர்ஸுகளுக்கு வந்த போன் கால்கள், என்று எல்லா தகவல்களும் குறிக்கப்பட்டிருந்தன. எழுத்துக் கூட்டி ஆங்கிலத்தை படிக்கத் தெரிந்த மாதம்மா, மீண்டும் மீண்டும் அந்த தாளில் தனது கண்களை மேயவிட்டாள். நர்ஸ் சோபியாவின் அழகிய எழுத்துகளை தவிர, வேறு ஒன்றுமே இல்லை. பின்பாக இவள் கிறுக்கி இருந்த வார்த்தைகள். ரூபா... ஒரு ரூபா...!

    யாரை தேவ்ஜி திட்டுகிறார்?

    இந்த தாளை எடுத்து, எதற்கு ஆத்மிகா என்கிற பெண்ணிடம் கொடுக்கச் சொன்னார்? வெறும் நைட் டுயூட்டி நர்ஸ் ரிப்போர்ட்தானே... தேவாஜி குறிப்பிட்ட அந்த ஆத்மிகாவை எங்கே கண்டுபிடிப்பது? அவளிடம் இதை எப்படி ஒப்படைப்பது?

    மனதில் கேள்விகள் அடுக்கடுக்காக மோத, மீண்டும் காகிதத்தை எடுத்து தனது பாண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டவள், பாத்ரூமைவிட்டு வெளியேறி காரிடாரில் நடந்தபோது, எதிரில் நர்ஸ் சோபியா ஜூலியட் பரபரப்புடன் வந்தாள்.

    ‘மாதம்மா! நீ ஐசியுவை சுத்தம் செய்யறச்சே கீழே ஏதாவது பேப்பர் பார்த்தியா? டுயூட்டி ரிப்போர்ட் ஃபைலில் இருந்து ஒரு பேப்பர் காணோம்!" சோபியா குழம்பினாள்.

    இல்லையேம்மா! ஏதாவது கீழே கிடந்ததா எடுத்து மேஜைமேல வச்சிருப்பேனே! இல்ல உங்க கையில் கொடுத்திருப்பேனே! மாதம்மா அப்பாவித்தனமாக சொன்னாள்.

    நர்ஸ் சோபியா திகைத்தாள். பைலில் இருந்த தாள் எங்கே போயிருக்கும்? முதல்வர் படுத்திருக்கும் ஐசியுவின் நர்ஸ் தயாரித்த டெய்லி ரிப்போர்ட் தாள் காணவில்லை என்றால், அது பெரிய சர்ச்சைக்கு இடமளிக்கும் என்று சோபியாவுக்கு தெரியாதா?

    தனக்கு எதுவுமே தெரியாதது என்பது போல மீண்டும் ஒரு ரிப்போர்ட்டை தயாரித்து, அந்த ஃபலில் காணாமல் போன பக்கம் இருந்த இடத்தில் வைத்துவிட்டாள்.

    ஒரு மாதமாக கண்விழிக்காத முதல்வர் தேவாஜி, திடீரென்று கண்விழித்து மாதம்மாவிடம் பேசியதோ, நர்ஸ் ரிப்போர்ட்டிலிருந்து ஒரு காகிதத்தாளை உருவி அவளிடம் கொடுத்ததோ, மருத்துவமனைக்கோ டாக்டர்களுக்கோ நர்ஸ்களுக்கோ தெரியாது. ஏன்? முதல் மாடியில் இருக்கும் தேவாஜியின் மனைவி அங்காவுக்கும் வளமை தமிழகம் கட்சியினருக்கும் கூட, அது தெரிவதற்கு வாய்ப்பில்லை!

    எப்படி வாய்ப்பிருக்கும்?

    ‘ஐசியு’வில்தான் சிசிடிவி கூட இல்லையே!

    Breaking News

    அண்மைச் செய்தி

    தேவாஜிக்கு அமெரிக்காவில் சிகிச்சை?

    02. அவனன்றி யார் அறிவார்?

    முதல்வர் தேவாஜி கண் திறந்து மாதம்மாவிடம், தன்னை காப்பாற்றும்படி கெஞ்சியதற்கு மூன்றாம் நாள்.

    இரவு மணி 11.00.

    மெட்ரோ மருத்துவமனை அடங்கிவிட்டது. மருத்துவமனை அடங்கிவிட்டாலும், மருத்துவமனையைச் சுற்றி, நான்கு அடுக்கு காவல் போடப்பட்டிருந்ததால், யாருக்கும் எந்த பயமும் இல்லை.

    மெட்ரோ மருத்துவமனையின் கீழ்தளத்தில் இருந்தது, ஈ.சி.ஜி. லேப்.

    சிஎம்மின் ஈசிஜி ரிப்போர்ட் இதை கொண்டு போய் ஐசியு நர்ஸ்கிட்டே கொடு. நாளைக்கு கார்டியாலஜிஸ்ட் அனந்தசயனம் கேட்பாரு. லேப் டெக்னிசியன் அருணாச்சலம் தனது உதவியாளர் எஸ்தர் நோயல்லிடம் நீட்ட, அவள் அதை வாங்கிக் கொண்டு கீழ்தளத்தில், வரவேற்பு பகுதியின் அருகே இருந்த வெராந்தாவை நோக்கிச் சென்றாள். அந்த வெராந்தாவின் தொடக்கத்தில்தான் லிஃப்ட்கள் இருந்தன.

    மெட்ரோ மருத்துவமனையின் முகப்பில் தொடங்கிய அந்த நீண்ட வெராந்தா, மருத்துவமனையின் மறுகோடி வரை செல்லும். மறுகோடியிலும் இரண்டு லிப்ட்கள் இருந்தன.

    முதல் மூன்று மாடிகள் முதல்வரின் உபயோகத்திற்கு என ஒதுக்கப்பட்டுவிட்டதால், அந்த வெராந்தாவின் தொடக்கத்தில் இருந்த இரண்டு லிப்ட்டுகளும் முதல்வரின் உபயோகத்திற்காக மட்டுமே, என்று ஒதுக்கப்பட்டிருந்தன. தேவாஜியின் உபயோகத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட லிப்ட்கள், ஐசியு இருக்கும் மூன்றாவது மாடியைக் கடந்து மேலே செல்லாது.

    கீழ்தளத்தில் இரண்டு காவலர்கள் அமர்ந்து, முதல்வர் தேவாஜியின் உபயோகத்திற்காக, என்று ஒதுக்கப்பட்ட லிப்ட்களில், வேறு யாரும் ஏறாமல் காவல் இருப்பார்கள்.

    அதற்குமேல் உள்ள மாடிகளில் இருப்பவர்களின் பயனுக்காக, வெராந்தாவின் மறுகோடியில் உள்ள இரண்டு லிப்ட்களும் இயங்கின.

    லிப்டை நோக்கி நடந்த எஸ்தர் நோயல், அங்கே பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்த காவலரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, லிப்ட் பொத்தானை அழுத்தினாள்.

    மூன்றாவது மாடியில் நின்றிருந்த லிப்ட் மெதுவாக கீழே வந்தது. கதவு திறந்தது, உள்ளே நுழைந்த எஸ்தர், ஐசியு இருந்த மூன்றாவது தளத்திற்கு செல்லும் பொத்தானை அழுத்தினாள்.

    லிப்ட் நல்ல விஸ்தாரமாகவும் ஆழமாகவும் இருந்தது. ஸ்ட்ரெச்சரில் நோயாளிகளை அழைத்துச் செல்ல வேண்டுமே

    Enjoying the preview?
    Page 1 of 1