Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ki.Ra. Nooru - Thoguthi 1
Ki.Ra. Nooru - Thoguthi 1
Ki.Ra. Nooru - Thoguthi 1
Ebook1,069 pages6 hours

Ki.Ra. Nooru - Thoguthi 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காந்திய எளிமையும், வட்டார வழக்குச் சொல்லகராதியின் தலைமகனாகவும், தமிழ்நிலத்துக் கலாச்சாரத் தொன்ம வாழ்வியலைப் பேசுபொருளாகவும் வைத்து, முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக நின்றவர். இந்திய இலக்கியத்தின் உயர்ந்த விருதான ஞானபீடம் விருதைப் பெறுவதற்கு எவ்வகையிலும் தகுதியான கி. ராஜநாராயணனை வாசித்தும், பழகியும் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் எழுதிச் சேர்த்த நல்முத்துகளே இக்கட்டுரைகள்.

Languageதமிழ்
Release dateMar 18, 2023
ISBN6580142909649
Ki.Ra. Nooru - Thoguthi 1

Read more from K.S. Radhakrishnan

Related to Ki.Ra. Nooru - Thoguthi 1

Related ebooks

Related categories

Reviews for Ki.Ra. Nooru - Thoguthi 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ki.Ra. Nooru - Thoguthi 1 - K.S. Radhakrishnan

    pustaka_logo-blue_3x

    https://www.pustaka.co.in

    கி.ரா. நூறு - தொகுதி 1

    Ki.Ra. Nooru - Thoguthi 1

    Author:

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    K.S. Radhakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முகப்புரை

    1. தோழர் கி.ரா. - ஆர். நல்லகண்ணு

    2. கரிசல் இலக்கியத்தின் தந்தை - பழ. நெடுமாறன்

    3. ஆண்டுதோறும் கோவில்பட்டியில் கூடுவோம்; அண்ணாச்சி கி.ரா. புகழ் பாடுவோம்! – வைகோ

    4. கி.ரா.-வும் கிரிமினல் வழக்கும் - ஜி.ஆர். சுவாமிநாதன்

    5. கரிசல் மண்ணின் மைந்தர் – சிவகுமார்

    6. கோபல்ல கிராமம் நாட்டார் நாவலா? - நா. வானமாமலை

    7. கரிசல் காட்டுக் கதைஞர் - காசி ஆனந்தன்

    8. ராஜநாராயணனின் படைப்புலகம் - எம்.ஏ. நுஃமான்

    9. தகுதியால் வாழ்தல் இனிது! - நாஞ்சில் நாடன்

    10. கி.ரா-வின் கதாபாத்திரங்கள் - கே. வைத்தியநாதன்

    11. கி.ரா. ஓர் இயல்பு நெறியாளர் - எஸ். தோதாத்ரி

    12. கி.ரா. - தெளிவின் அழகு – ஜெயமோகன்

    13. ‘கோபல்ல கிராமம்’ காட்டும் சித்திரம்! - ஆ. மாதவன்

    14. வாழ்க தமிழுடன் இடைசெவல் நாயனா - நெல்லை கண்ணன்

    15. முன்னத்தி ஏர் – பூமணி

    16. கரிசல் மண்ணின் கதைசொல்லி – அம்பை

    17. ஆயிரம் கதைகளின் நாயகன் - எஸ். ராமகிருஷ்ணன்

    18. தடங்கல் - அ. முத்துலிங்கம்

    19. கி.ரா. எனும் ஞான பீடம் - எஸ்.ஏ. பெருமாள்

    20. ‘குடும்பத்தில் ஒரு நபர்’: மாடும் பதிலியும் – பெருமாள்முருகன்

    21. கிரா... சமூக விடுதலையின் உறுதிப்பாடு - சி. மகேந்திரன்

    22. கருந்தழற்பாவைகள் – கோணங்கி

    23. கரிசல்காட்டுச் சம்சாரி வாழ்க்கைச் சீரழிவுகள்: கி. ராஜநாராயணன் புனைகதைகளை முன்வைத்து - ந. முருகேசபாண்டியன்

    24. கி.ரா.வும் அண்ட்ரண்டா பட்சியும் – இளம்பாரதி

    25. ஒரு நாவலும் மூன்று கதைகளும் - அ.கா. பெருமாள்

    26. சாதாரணமான அசாதாரணர் – கலாப்ரியா

    27. இலக்கியப் பிதாமகன் கி.ரா. - கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    28. கி.ராவின் வழித்தோன்றல்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி - ச. தமிழ்ச்செல்வன்

    29. கி.ராவின் படைப்புலகம் - பருத்திப் பாலின் தீரா ருசி! - தமிழச்சி தங்கபாண்டியன்

    30. கி.ராவின் ‘மொழி வேதியியல்’ - பெ. மகேந்திரன்

    31. கதைசொல்லி வாழ்ந்தவர் கி.ரா. - நாஞ்சில் சம்பத்

    32. மாமி வைத்த மோர்க் குழம்பு ரொம்ப ஜோர் - கமலா ராமசாமி

    33. எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்தாளர் - சோ. தர்மன்

    34. கி. ராஜநாராயணன்: மகத்தான ரசிகர் – பாவண்ணன்

    35. மனிதருள் நீ ஒரு அபூர்வப் பிறவி!!! - சுப்புலட்சுமி செகதீசன்

    36. அது ஒரு தரிசனம் – ராவ்

    37. நன்றே கருதியவர் கி.ரா. – கல்யாணராமன்

    38. கி.ராவின் கரிசல் இலக்கியத்தில் மருதவாழ்க்கை - சு. வேணுகோபால்

    39. கி.ரா. மானுட எழுத்துக்காரர் - பவா செல்லதுரை

    40. கி. ராஜநாராயணனின் கன்னிமை - பா. செயப்பிரகாசம்

    41. கி.ரா. கரிசல் பல்கலைக்கழகம் - சி. மோகன்

    42. அடையா நெடுங்கதவம் - கிருஷி ராமகிருஷ்ணன்

    43. ஜூலி ப்ளோரா அல்லது உப்பு முத்தம் கனிவு சிறுகதையை முன் வைத்து - கீரனூர் ஜாகீர்ராஜா

    44. கரிசல் நாயகன் கி.ரா. - கே. சாந்தகுமாரி

    45. கி. ராஜநாராயணன்: மிச்சமாக முடியாத நினைவுகள் – சமயவேல்

    46. ‘கி.ரா’ இப்படிக் ‘கீறார்’! - த. பழமலய்

    47. கி.ராவின் உலகப்பார்வை - பக்தவத்சல பாரதி

    48. Bonding with Black Soil - Pritham K. Chakravarthy

    49. கி ராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளி - சுப்ரபாரதி மணியன்

    50. கி.ரா. திறந்த கதவு – நிஜந்தன்

    51. தமிழர் கிராமிய வாழ்வியல்! - ப. திருமாவேலன்

    52. கி.ரா. நினைவலைகள் – இரவீந்திரன்

    53. கி.ராவின் மனம் போல - விஜயா மு. வேலாயுதம்

    54. கி. ராஜநாராயணன்: நாடகங்களும் திரைப்படங்களும் - அ. ராமசாமி

    55. நினைவுகளின் உயிர்ப்பில் கி.ரா. – மணா

    56. அந்தமான் நாயக்கர் நாவல் பற்றி ஓர் அலசல் - தி. இராசகோபாலன்

    57. கி.ரா என்னும் இலக்கிய அபூர்வம் - சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

    58. தன் வாழ்வாலும் எழுதிக்காட்டிய கலைஞன் – ரவிசுப்பிரமணியன்

    59. கி.ரா. எனும் கரிசல் காட்டு மைனா - அ. வெண்ணிலா

    60. கி.ரா. அவர்களிடம் கிடைத்த அனுபவங்கள் - தள.ப.தி. கோபாலகிருஷ்ணன்

    61. எளிமையாய் சொல்லப்பட்ட நவீன கதைகள் - லாவண்யா சுந்தர்ராஜன்

    62. நிலவரைவியல் இலக்கிய முன்னோடி - கி.ரா – அப்பணசாமி

    63. எண்ணமும் எழுத்தும் ஒன்னென - எஸ் இலட்சுமணப்பெருமாள்

    64. கி.ரா. படைப்புகளில் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் - இரா. நாறும்பூநாதன்

    65. கி.ரா. எனும் நாட்டார் மரபின் கதைசொல்லி - இரா. காமராசு

    66. கி.ராவைப்பற்றி... - குரு. ஸ்ரீ. வேங்கடப்பிரகாஷ்

    67. கரிசல் நிலப் பெண்களும், சில காதல் கதைகளும் - எம். கோபாலகிருஷ்ணன்

    68. கி.ரா. என்ற மகத்தான கதைசொல்லி – உதயசங்கர்

    69. உறவாக வாழ்ந்த கி. ராஜநாராயணன் – குறிஞ்சிவேலன்

    70. கி.ரா - பாரதி கிருஷ்ணகுமார்

    71. கதைகள் முடிவதில்லை! - அசோகன் நாகமுத்து

    72. காகிதப் பறவைகள் - இரா. மீனாட்சி

    73. ‘கிரா’மியம் - பேரா. சு. சண்முகசுந்தரம்

    74. கி.ரா. என்றொரு மானுடம் - க. பஞ்சாங்கம்

    முகப்புரை

    எளிய மக்களின் கிராமிய மூப்பன், கரிசல் மண்ணின் கதைசொல்லி கி. ராஜநாராயணன் பற்றிய கதைகளை எப்படிச் சொல்வது? சிமிழுக்குள் அடைபட்ட பூதத்தைத் திறப்பதற்கு ஒப்பான செயல் எனவே தோன்றியது.

    மழைக்குக்கூட நான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவனில்லை. அப்படி ஒதுங்கிய சிலபோதும் மழையை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்துவிட்டேன் என்றவர்.

    அகத்தையும், புறத்தையும் மிக நுட்பமாக அணுகி நிலத்தையும், பருவங்களையும், மக்களையும் அவர்கள் புழங்கும் சொற்களையும் அவற்றின் நுட்பமான வளமைகளையும் வாய் வழக்காறுகளில் இருந்து நமக்கு கதைகளாக்கித் தந்தவர். அவற்றின் மூலம் மரபுகளும், பண்புகளும், மறந்துபோன ஏராளமான சொற்களும், நமக்கு மொழிப்பத்தாயமாக, களஞ்சியமாக, கிராமிய வாழ்வின் தொன்மங்களாக, பூர்வீக மனிதர்களின் நம்பிக்கைகளாக, நடத்தைகளாக கிடைத்து, அவற்றுக்கு ஒரு மீட்சியையும் அளித்த ஒரு ஞானவாணியாக அவரை உணர்வதற்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது என்றால் அது மிகையாகாது. முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் பாலமாக நின்றவர்.

    நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சொல்லகராதிகள், பல சொற்பொழிவுகள், பல்கலைக்கழகச் சந்திப்புகள், நேர்காணல்கள், பயணங்கள் என பலவற்றையும் எழுதி மக்கள் மனதில் நீங்கள் இடம்பிடித்த அபூர்வ மனிதர்.

    அத்தகைய முழுவாழ்வு வாழ்ந்த படைப்பாளி குறித்து அவருடன் பழகியவர்கள், அவரை வாசித்தவர்கள், அதில் இலக்கிய இன்பம் பேசியவர்கள், பலரும் தங்கள் நினைவுகளைக் கட்டுரைகளாக்கி, இந்த எளியவனின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதித் தந்தவைகளே இத்தொகுப்பு உருவாகுவதற்கான முழுமுதற்காரணங்கள்.

    இங்கு என்னுடைய ஞாபகங்களில் இருந்து சில...

    1967-இல் இருந்து தொடங்கியிருந்த, திரு. நாராயணசாமி அவர்களின் நாடு தழுவிய விவசாயப் போராட்டங்களின்போது, அதில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்த நேரம். என்னுடன் கி.ராவும் அதில் கலந்து கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலங்கள் மனதில் நிழலாடுகிறது.

    அவரது ‘கோபல்லபுரம்’ நாவல் தயாரான நேரம். அதை சிட்டி சிவபாத சுந்தரத்தோடு இணைந்து, காங்கிரஸ் தலைவர் திரு. சத்யமூர்த்தி அவர்களின் புதல்வி, மறைந்த திருமதி. லஷ்மி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.சி., அவர்களின் தலைமையில் இயங்கிய வாசகர் வட்ட விழாவில் வெளியிடுவதில் ஒரு அணியாகப் பணியாற்றி உள்ளேன்.

    கி.ரா-வின் அறுபது வயது நிறைந்த மணிவிழாவினை மதுரை காலேஜ் ஹவுஸ் அரங்கில் கவிஞர். மீராவுடன் இணைந்து சிறப்பாகக் கொண்டாடியதும், பின் அவரது எழுபது, எழுபத்து ஐந்து, எண்பது, தொண்ணூறுகளுக்கான விழாக்களை டெல்லி தமிழ்ச்சங்கம், தினமணி இதழும் இணைந்து 95 வயது வரையிலான கொண்டாட்டங்களை புதுச்சேரியில் வைத்து நடத்திய அத்தனை நிகழ்வுகளையும் ஒருங்கிணைப்பதில் பங்காற்றினேன் என்பது என் இலக்கியப் பணியின் முக்கியமான காலகட்டங்களாக உணர்கிறேன்.

    ஒருமுறை கி.ரா-வின் இடைசெவல் இல்லத்திற்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நான் அழைத்துச் சென்றிருந்தேன். 1984 வாக்கில் வந்த அவருடன் கி.ரா. பேசும்போது, இலங்கைத் தமிழ் மக்களின் மீதான தனது அக்கறைகளையும், கவலைகளையும், ஆதரவுகளையும், பிரபாகரன் அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு உளம் நெகிழத் தெரிவித்தார்.

    ரசிகமணி டி.கே.சி. பள்ளியைச் சேர்ந்தவன் என்ற பெருமிதமும், கு. அழகிரிசாமியை எழுத்துத் துணையாகவும் ஜீவா போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடனான உறவும், காந்திய எளிமையும், வட்டார வழக்குச் சொல்லகராதியின் தலைமகனாகவும், தமிழ்நிலத்துக் கலாச்சாரத் தொன்ம வாழ்வியலைப் பேசுபொருளாகவும் வைத்து, நம்மிடையே இருப்பவர் போலவே கி.ரா மறைந்தும் போனார். இந்திய மொழிகள் எதிலும் இத்தகைய ‘மக்கள் கதைசொல்லி’ இருக்க இயலாது என்பது என் துணிபு.

    அவரின் சமகால எழுத்தாளர்கள் தொட்டு, கவிஞர்கள், சிந்தனையாளர்கள், கல்விப்புலம் சார்ந்தவர்கள், ஆய்வாளர்கள், வேற்றுமொழி இலக்கியவாதிகள், மெய்யியல்வாதிகள், நாட்டார் வழக்காற்றுக் கோட்பாட்டாளர்கள், பின்நவீனவாதிகள் என அனைவரின் கட்டுரைகளையும் பொறுமையாக கேட்டு வாங்கிக் கொடுத்துள்ள இந்நூல், கி.ரா-வின் முழுவாழ்வுப் பணிகளுக்கான, ஆதாரமாய் விளங்குகிறது.

    இந்திய இலக்கியத்தின் உயர்ந்த விருதான ஞானபீடம் விருதைப் பெறுவதற்கு எவ்வகையிலும் தகுதியான கி. ராஜநாராயணனை வாசித்தும், பழகியும் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் எழுதிச் சேர்த்த நல்முத்துகளே இக்கட்டுரைகள்.

    அடியேன் அவற்றை ஒரு நூலில் கோர்த்து, இத்தமிழ் கூறும் நல் உலகத்தின் முன்பு ஒப்படைத்துள்ளேன். போக, இந்நூல் வெளிவர கைகொடுத்துதவிய கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம், பா. செயப்பிரகாசம், மாநிலக் கல்லூரி முதல்வர் கல்யாணராமன், பத்திரிகையாளர் மணா, கோவில்பட்டி மாரீஸ் போன்ற நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது எனது பொறுப்பு மட்டுமல்ல; கி.ரா மீது அவர்கள் கொண்டுள்ள நேசத்தையும் இங்குக் குறிப்பிட வேண்டிய அவசியம் கருதியே! இந்நூலை நல்ல முறையில் வடிவமைத்து உரிய நேரத்தில் பிரதிகள் அச்சடித்து கொடுத்த புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் நன்றி.

    அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்...!

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    வழக்கறிஞர் – அரசியலார்

    பொதிகை - பொருநை – கரிசல்

    கதைசொல்லி

    முகாம்: கோவில்பட்டி

    01-03-2023

    1. தோழர் கி.ரா. - ஆர். நல்லகண்ணு*

    எழுத்தாளர் கி. ராஜநாரயணன் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் என்ற கிராமத்தில் பிறந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்.

    அங்கு ஆத்துபாசனம் கிடையாது. எனவே மழை பெய்தால்தான் விவசாயம். அல்லது கிணற்று தண்ணீர்தான். முழுவதும் கரிசல்மண். விவசாயிகள் கடும் பஞ்சத்தில் இருந்த பொழுது பிரிட்டிஷ் அரசு விவசாயிகளுக்கு வரி போட்டார்கள். இதனை எதிர்த்து விவசாயிகள் போராடினார்கள்.

    வானம் பொழிகிறது பூமி விளைகிறது, பின் எதற்கு உங்களுக்கு வரிகட்ட வேண்டும் என்றார்கள்.

    இந்தப் புஞ்சை மண்ணை சேர்ந்த அந்த வட்டார விவசாயிகளின் திக்கற்ற நிலையையும், அவர்களது வாழ்க்கையின் நெருக்கடிகளையும், கண்டு மனமுருகி, அவர்களது மனக்குமுறலை உள்வாங்கி தன்னுடைய எழுத்தில் பாடமாக கதையாக கி.ரா. வெளிப்படுத்தினார்.

    குறிப்பாக, குடியேறி வந்த விவசாயிகளின் வரலாற்றையும் பதிவு செய்து சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். தமிழக இலக்கிய உலகில் அவர் ஒரு சிறந்த படைப்பாளியாகவும் திகழ்ந்தவர். மண்ணின் மனம் மாறாமல் அவரது படைப்புகள் மேலோங்கி நிற்கும்.

    எழுத்துலகில் அவரது வாழ்வு பெருவாழ்வானது. தொடர்ந்து அவர் கதைசொல்லி என்ற தலைப்பில் பல கட்டுரைகள் எழுதி வந்தார். அதை வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் வெளியிட்டு வந்தார்.

    தற்சமயம் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் என அறிஞர் பெருமக்கள் எல்லாம் கி.ரா-வைப் பற்றி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிடுவது மகிழ்ச்சியைத் தருகிறது.

    இத்தகைய பணியைச் செவ்வனே செய்து முடித்த கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இதயப்பூர்வமாக நன்றி பெருக்கோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    * கி.ரா-வின் நண்பர் – இத்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்.

    2. கரிசல் இலக்கியத்தின் தந்தை - பழ. நெடுமாறன்*

    கி.ரா. என்னும் என்னும் கி. இராஜநாராயணன் தன்னுடைய முப்பதாவது வயதில் எழுதத் தொடங்கி 99 வயது வரை பல படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். அவருடைய பேனா ஓய்வில்லாமல் இயங்கியது. கரிசல் காட்டைச் சேர்ந்த இடைச்செவல் என்னும் சிற்றூரில் பிறந்து வளர்ந்த காரணத்தினால் தன் மண் சார்ந்த இலக்கியத்தைப் படைப்பதில் அவரது கவனம் சென்றது.

    கரிசல் மண்ணில் வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும்தான் அவர் எழுதிய கதைகளின் நாயகர், நாயகிகளாக விளங்கினார்கள். வாழ்க்கையில் தான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் இலக்கியமாகப் படைத்தார். விவசாயிகள் போராடியபோது ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்காமல் அவரும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். விவசாயிகளின் வாழ்க்கையைப் பதிவு செய்ததோடு நின்றுவிடாமல் அவர்களின் சுக துக்கங்களிலும் பங்கேற்றார்.

    தனது சமகால படைப்பாளிகளுடன் நெருக்கமான நட்புறவுக் கொண்டிருந்தார். அவர் வீட்டிற்குச் சென்று அவருடன் அளவளாவி மகிழாத எழுத்தாளர்களோ அல்லது இடதுசாரித் தலைவர்களோ இல்லை என்றுதான் கூற வேண்டும்.

    நமது நாட்டுப்புற மக்கள் பேசிய மொழியையும், கையாண்ட பழமொழிகளையும் தனது படைப்புகளில் பதிவு செய்த முதல் எழுத்தாளர் அவரே. அவற்றையெல்லாம் இலக்கியமாக யாரும் ஏற்காத காலத்தில் இலக்கியமாக செய்து காட்டிய பெருமை அவருக்கு உண்டு. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கி.ரா. அவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாட்டார் வழக்காற்றியல் துறையின் வருகைதரு சிறப்புப் பேராசிரியராக பணியாற்ற அழைக்கப்பட்டப் பெருமைக்குரியவர். கல்லூரிகள் பக்கம்கூட எட்டிப் பார்க்காமல் படைப்பாளியாக மாறிய அவரின் எழுத்தாக்கங்களை அடிப்படையாகக்கொண்டு முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்தவர்களில் பெண்கள்தான் அதிகம்.

    ஆங்கில மொழியின் முதல் அகராதியைத் தொகுத்தவரும் ஆங்கில மொழியின் தந்தை என போற்றப்படுபவருமான மேதை ஜான்சன் அவர்கள் தன்னைச் சந்திக்க வருபவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்கள் அவருடைய நண்பராக இருந்த பாசுவெல் அவர்களால் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டு நூலாக வந்தபோது இலக்கியத் தகுதி பெற்றது. அதைப்போல கி.ரா. அவர்கள் மற்றவர்களுடன் உரையாடியதை யாரேனும் தொகுத்து வைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அவை தொகுக்கப்படுமானால் மேலும் பல நாட்டுப்புற வழக்காறுகளையும், சொலவடைகளையும் ஒருங்கே நாம் சுவைத்து மகிழ முடியும்.

    கரிசல் வட்டார வழக்கு அகராதி, நாட்டுப்புற கதைக் களஞ்சியம் ஆகிய அவரது படைப்புகள் தமிழுக்குப் புதியவை என்பதோடு மொழிக்குச் செழுமைச் சேர்த்தன.

    கரிசல் மண்ணின் மணம் கமழக்கமழ அவர் எழுதிய, கோபல்லபுரத்து மக்கள் என்னும் நெடுங்கதை ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளியாகி மக்களின் உள்ளங்களை ஈர்த்தது. அது நூலாக வெளிவந்து சாகித்திய அகாதமி விருதும் பெற்றது.

    கி.ரா-வின் கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. அவருடைய படைப்புகள் பல விருதுகளைப் பெற்றன. ஆனாலும் அவர் ஒரு எளிமையான மனிதராக இறுதிவரை வாழ்ந்தார்.

    தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் இருந்தும் ஒன்றுகூட அவர் வாழும் காலத்தில் அவரை நேர்கண்டு அவரது எண்ணங்களைப் பதிவு செய்யத் தவறிவிட்டன என அவருடன் நெருங்கிப் பழகிய இயக்குநர் தங்கர்பச்சான் எழுதியிருப்பதைப் படித்தபோது நெஞ்சம் கசிந்தது. ஆனாலும்கூட அவருடைய கதைகள் இரண்டு திரைப்படங்களாக ஆக்கப்பட்டன.

    2008-ஆம் ஆண்டு ஆகசுடு 16-ஆம் நாளில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் மதுரையில் உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாட்டினை நாங்கள் நடத்தியபோது அவருக்கு உலகப் பெருந்தமிழர் என்னும் விருதினை வழங்கிப் பெருமையடைந்தோம். தனது துணைவியாருடன் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த அவர் பேசுகையில் என்னை தமிழன் என ஏற்றுக் கொண்டதற்கு நன்றி எனக் குறிப்பிட்டபோது அது அனைவரையுமே நெகிழ வைத்தது. நாட்டார் வழக்கியல் குறித்த தன்னுடைய படைப்புகளின் மூலம் தமிழுக்கு வளம் சேர்த்துத் தந்த அந்த மாமனிதரின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த ஆதங்கம் வெளிப்பட்டது.

    2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் நண்பர்கள் கே.எசு. இராதாகிருட்டிணன், செயப்பிரகாசம் ஆகியோரின் ஏற்பாட்டில் புதுச்சேரியில் நடைபெற்ற அவரது 95-ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

    (கி.ரா விற்கு நான் தலைமை தாங்கினேன்.) எழுத்தாள நண்பர்களும், பேராசிரியர்கள் பலரும் நடிகர் சிவகுமார் அவர்களும் அதில் பங்கேற்று அவருக்குப் புகழாரம் சூட்டினார்கள். அவரின் நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்றுக் கொண்டாடும் எங்களுக்குக் கிடைக்குமென நம்பினோம். ஆனால் அதற்கு ஓராண்டிற்கு முன்பாகவே அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

    கிட்டத்தட்ட 70-ஆண்டுகள் எழுத்துப் பணிக்காக தன்னை ஒப்படைத்துக்கொண்ட அவர் தனது மனதில் பட்டதை எழுதி மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவரது எழுத்தாக்கங்கள் அவரின் வாழ்வை உயர்த்த வழிவகுக்கவில்லை. அவரைப் போன்ற ஒரு எழுத்தாளர் மேற்கு நாடுகளில் பிறந்திருந்தால் அவரது சொந்த வாழ்க்கையே வேறு மாதிரி அமைந்திருக்கும். அவரும் உலகம் அறிந்த எழுத்தாளராக விளங்கியிருப்பார்.

    இதுவரை தமிழ் எழுத்தாளர் எவருக்கும் அளிக்கப்படாத மரியாதையை அவருக்குத் தமிழக அரசு செய்துள்ளது. அரசு மரியாதையுடன் அவர் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டிருப்பதும் சிலை நிறுவதாகக் கூறியிருப்பதும் புதுச்சேரி அரசும் அவருக்கு மரியாதை செய்திருப்பதும் மக்களுக்கு மனநிறைவை அளித்துள்ளது.

    தமிழ் எழுத்துலகில் கி.ரா. வகித்த இடம் வேறு எவராலும் இட்டு நிரப்ப முடியாததாகும்.

    * நிறுவனர் – தமிழர் தேசிய இயக்கம்.

    3. ஆண்டுதோறும் கோவில்பட்டியில் கூடுவோம்; அண்ணாச்சி கி.ரா. புகழ் பாடுவோம்! – வைகோ*

    தெற்குச் சீமையில், மானாவாரிப் பருத்தி செழித்து வளரும் கருப்பு மண்தான், கரிசல் காடு. வீரம் விளைந்த மண்; அங்கே, இலக்கியம் செழித்தது; இசை வளர்ந்தது; கலைகள் செழித்தன.

    வீரபாண்டிய கட்டபொம்மன், செக்கு இழுத்த செம்மல் வ.உ.சி, கவிதைக்கு பாரதி; இசைக்கு விளாத்திகுளம் சுவாமிகள்; இலக்கிய ஞானத்திற்கு ரசிகமணி டி.கே.சி, இவர்களுடன், கரிசல் நிலம் தந்த மற்றொரு அருட்கொடைதான் ஐயா கி.ரா. என்று அன்போடு அழைக்கப்படுகின்ற அண்ணாச்சி கி. இராஜநாராயணன்.

    100 ஆண்டுகளை நெருங்கிய நிறை வாழ்வு வாழ்ந்த அந்தப் பெருந்தகை, நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரது உடலுக்கு அரசு மரியாதை அளித்ததுடன், அன்னாருக்கு, கரிசல் மண்ணின் தலைநகராம் கோவில்பட்டியில் சிலை நிறுவப்படும் என, நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துச் சிறப்புச் செய்து இருக்கின்றார். அத்துடன், ஆயிரம் பக்கங்கள்கொண்ட மலர் ஒன்றை ஆக்கித் தருகின்றார் நம்முடைய அன்புச் சகோதரர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் என்பதை அறிந்து மகிழ்கின்றேன். ஏற்கனவே, கி.ரா. அவர்களை ஆசிரியராகக் கொண்டு, ‘கதைசொல்லி’ என்ற இலக்கிய இதழையும் நடத்தி, கி.ரா-வுக்குப் பெருமை சேர்த்து இருக்கின்றார். கி.ரா.வின், பிறந்த நாள் விழாக்களை வெகு சிறப்பாக நடத்தினார். அவரது அழைப்பின் பேரில், ஐந்தாறு நிகழ்வுகளில் நான் பங்கேற்று உரையாற்றி இருக்கின்றேன்.

    கி.ரா. அவர்கள் நினைவாக, கே.எஸ்.ஆர். ஆக்குகின்ற மலரில், எண்ணற்ற படைப்பாளிகள், படைப்புகளைத் தருகின்றார்கள். அது ஒரு இலக்கியக் கலைக் களஞ்சியமாகத் திகழும்; அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் என்பதில் ஐயம் இல்லை.

    என்னுடைய பார்வையில், கி.ரா. அவர்களின் படைப்புகளைப் பற்றிச் சில கருத்துகளைத் தர விழைகின்றேன்.

    உலகின் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு, தமிழகத்திற்கு, தமிழ் இலக்கியங்களுக்கு உண்டு. சங்க இலக்கியங்களில், பெயர்களைக் குறிப்பிடுகின்ற வழக்கம் இல்லை; தலைவன், தலைவி என்றே குறிப்பிடுவர்; அது எல்லோருக்கும் பொதுவானது. அதுபோல, அக இலக்கியங்களில், தாம் வாழுகின்ற பகுதியை, அந்த வட்டாரத்தை உள்ளடக்கித்தான் பண்டைய புலவர்கள், இலக்கியம் படைத்து இருக்கின்றார்கள். அதுபோலத்தான், ‘குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு’ என்பவையும்.

    தொல்காப்பியச் சூத்திரத்திலேயே, வழக்கு இயல் இலக்கியத்தைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கின்றார்.

    உயர்ந்தோர் கிளவியும், வழக்கொடு புணர்தலின்,

    வழக்கு வழிப்படுத்தல் செய்யுட்குக் கடனே.

    இது, தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரத்தில், பொருள் இயலின் 23 ஆவது சூத்திரம். இதுதான், வழக்கு இயல் இலக்கியத்தின் அடிப்படை.

    ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கும், வட்டாரச் சொலவடைகளும்தான், இலக்கியத்தின் அடிநாதம் ஆகும். கதை இலக்கியம் என்பது, ஒரு முன்னோடி. உலகாயுதம், காலம், இடம் என்ற இந்த மூன்றையும் உள்ளடக்கியதுதான் வட்டார இலக்கியம்.

    அந்த வகையில், கிராமப்புற வாழ்க்கையை, அந்த வட்டாரத்து மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கிய இலக்கியங்கள் தமிழில் எப்பொழுது வரத் தொடங்கிற்று என்றால், 1888-ஆம் ஆண்டு குருசாமி சர்மா எழுதத் தொடங்கி, 1893-ஆம் ஆண்டு அச்சில் வெளிவந்த ‘பிரேமகலா மத்யம்’ என்ற நாவல்தான். அது எந்த வட்டாரத்தைக் குறிப்பிடுகின்றது என்று கேட்டால், சேக்கிழார் பெருமான் திரட்டித் தந்த பெரிய புராணத்தில், சிவன் அடியார்கள் விரும்பிக் கேட்கின்ற பாடல்களுள், ‘மழபாடியுள் மாணிக்கமே’ என்கிறாரே, அந்த மழபாடி மற்றும் அன்பில் ஆகிய இரண்டு ஊர்களையும், அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கையையும் மையமாக வைத்துத்தான், அந்த நாவலை அவர் எழுதி இருக்கின்றார்.

    அதே 1893-ஆம் ஆண்டு, விவேகசிந்தாமணியில், டி.எஸ். ராஜம் ஐயர் அவர்கள், ‘கமலாம்பாள் சரித்திரம்’ எழுதினார்கள். அது, மதுரை வட்டாரத்து மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றது. அடுத்த கட்டமாக, பொன்னுச்சாமி பிள்ளை என்பவர், ‘கமலாட்சி’ என்ற நாவலை எழுதினார். அது, நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வாழ்க்கையைச் சித்தரித்தது.

    இப்படி, தொடக்கத்தில், ஒவ்வொரு வட்டாரத்து மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துத்தான் நாவல்களை எழுதத் தொடங்கினார்கள். நடேசன் என்பவர், 1940-ஆம் ஆண்டு, ‘மண்ணாசை’ என்ற தலைப்பில் ஒரு சிறந்த நாவலை வடித்தார். அதுவும், அவர் ஆங்கிலத்தில் எழுதி, அதைத் தமிழில் மொழிபெயர்த்தார்கள்.

    சமூக அக்கறையுடன், மறக்க முடியாத நாவல்களைப் படைத்தவர் மராட்டிய எழுத்தாளர் வி.ச. காண்டேகர். அவர் எழுதிய ‘கிரௌஞ்ச வதம்’; அதன் தலைமைப் பாத்திரம் திலீபனையும் நாம் மறக்கவே முடியாது. அவரது அத்தனை நூல்களையும் உயிரோட்டமாக மொழிபெயர்த்துத் தந்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர் சொல்லுகின்றார்: ‘கிராமத்து மண்ணோடு போராடுகின்ற குடியானவனின் வாழ்க்கையை, இந்த நாவல், எத்தனை அழகாக, எழிலாக வருணிக்கின்றது’ என வியக்கின்றார்.

    நான் பள்ளிப் பருவத்தில் அவற்றைப் படித்ததன் விளைவாகத்தான், அடுத்து மு.வ. எழுதிய நாவல்களைப் படித்தேன்.

    அந்த வகையில், கரிசல் மண்ணின் மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியவர், நம்முடைய கி.ரா. அவர்கள் ஆவார்.

    ‘ஒரு குகையில் இரண்டு சிங்கங்கள் இருக்க முடியாது; ஒரே உறைக்கு உள்ளே இரண்டு வாட்களைச் சொருக முடியாது’ என்பார்கள். ஆனால், ஒரே குகையில் இரண்டு இலக்கியச் சிங்கங்கள் இருக்க முடியும்; இரண்டு வாட்களுக்கு இடம் உண்டு என்பதைக் காட்டிய ஊர் இடைசெவல். ஆம்; ‘பாலம்மாள் கதை, அழகம்மாள், ராஜா வந்தார், திரிபுரம், சுயம்வரம்’ ஆகிய கதைகளைத் தந்த கு. அழகிரிசாமியும், நமது கி.ரா-வும் அந்த ஊர்க்காரர்கள்.

    நான் சங்கீதத்தைக் காதலித்தேன்; ஆனால், எழுத்துக்கு வந்துவிட்டேன் என்கிறார் கி.ரா. அழகிரிசாமியின் தூண்டுதலின் பேரில், முதன்முதலாக இரண்டு குழந்தைப் பாடல்களை எழுதிய கி.ரா. அதை, நாரண. துரைக்கண்ணன் நடத்தி வந்த பிரசண்ட விகடன் இதழுக்கு அனுப்பி வைத்தார். அச்சில் ஏறியது. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் அழகாகச் சொன்னான், ‘The child is the father of man’ ‘குழந்தையே மனிதனுக்குத் தந்தை’ என்று. எனவே, கி.ரா. அவர்களின் எழுத்து நுழைவுக்கு, தலைப்பிரசவம் சிறப்பாக அமைந்துவிட்டது. ஒரு தாய்க்குத்தான் தெரியும், குழந்தைப் பிறப்பின் வலி. அதுபோல, ஒரு படைப்பாளனுக்குத்தான், அந்தப் படைப்பின் வலி தெரியும். செப்டெம்பர் 16 பிறந்த நாள். முதன்முதலாக சொந்தம் என்ற தலைப்பில் கதை எழுதி, சக்தி இதழுக்கு அனுப்பினார். அது, சொந்தச் சீப்பு என்ற தலைப்பில், 1948-ஆம் ஆண்டு வெளிவந்தது.

    அதன்பிறகு, எத்தனையோ நூல்கள் வெளிவந்துவிட்டன. அத்தனையும் கருத்துக் கருவூலம்; காலத்தை வென்று நிற்கும்.

    அடுத்த கதை, சரஸ்வதி இதழில், ‘மாயமான்’ என்ற கதை வந்தது. இந்தத் தலைப்பே அருமை. கம்பனின் காப்பியத்தில் திருப்பத்தைத் தந்ததே மாயமான்தானே? ஆனால், அண்ணாச்சி என்ன நோக்கத்தில் இந்தக் கதையை எழுதினார் என்பது எனக்குத் தெரியாது.

    அந்தக் கதையில் அப்பாவு செட்டியார், ஒரு கடை வைத்து இருக்கின்றார். வாழ்க்கை நல்லபடியாகப் போகின்றது. அப்போது, புஞ்சை நிலம் வைத்து இருப்பவர்கள், கிணறு வெட்டுவதற்கு, அரசாங்கம் 400 ரூபாய் தருவதாக அறிவிப்பு வெளிவருகின்றது. எனவே, இனி மழை இல்லை என்றாலும் கவலை இல்லை என்று மகிழ்கின்றார். கிணறு வெட்ட முயற்சிக்கின்றார். ஆனால் அந்த 400 ரூபாய் போதாது. அதற்காகக் கடன் வாங்குகின்றார். அவர்கள் 500 ரூபாய் கொடுத்துவிட்டு, 1000 ரூபாய்க்கு நோட்டு எழுதி வாங்குகின்றார்கள். அதுதான் வழக்கம்.

    அந்தப் பணத்தைக் கொண்டு கிணறு வெட்டுகின்றார். அந்த ஆண்டு, மிளகுவத்தலுக்கு நல்ல விலை என்று அறிந்து, மிளகாய் பயிரிட ஏற்பாடு செய்து இருக்கின்றார்.

    அப்போது அரசு அறிவிப்பு வருகின்றது. ‘கிணறு வெட்ட அரசு மானியம் பெற்றவர்கள், பணப்பயிர்களைப் பயிரிடக் கூடாது; உணவுப் பொருள்களைத்தான் பயிரிட வேண்டும்.’ அதைக் கேட்டு நொந்து போகின்றார். கேப்பை பயிரிடுகின்றார். மழை இல்லை. நிலம் வறண்டு போனது. பயிர் கருகிப் போயிற்று. கடன் ஆகிவிடுகின்றது.

    மனைவியின் நகைகளை எல்லாம் விற்றார். கடைசியில், வீடு, வாசல், நிலத்தையும் விற்றுவிட்டு, அந்த ஊரை விட்டே வெளியேறுகின்றார். அதற்கு முன்பு இறந்த தாயை, அவரது நிலத்தில்தான் புதைத்தார். அந்த இடத்தைப் பார்த்துக் கீழே விழுந்து கதறி அழுது புலம்புகின்றார். ரயிலில் ஏறுகின்றார்கள். மதுரையைத் தாண்டி, சோழவந்தானில் வண்டி நிற்கின்றது. அங்கே ஒரு செய்தி கிடைக்கின்றது. ‘புஞ்சை விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். இந்த ஆண்டு, மானியத்தொகையை, 500 ரூபாயாக உயர்த்தி இருக்கின்றோம்’ என அரசு அறிவிப்பு. அந்தப் பேப்பரை வாங்கி, சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிகின்றார். அத்துடன் அந்தக் கதை முடிந்தது. இதுதான், மாயமான்.

    அடுத்து, ‘கிடை’ என்ற குறுநாவலை எழுதினார். அதில் 52 வகை ஆடுகளைப் பற்றி எழுதி இருக்கின்றார். எவ்வளவு பெரிய ஆராய்ச்சி! கோபால் நாயக்கரும், கிருட்டிணக் கோனாரும் உட்கார்ந்து பேசுகின்றார்கள். அந்த உரையாடலில்தான், ஆடுகளின் வகைகளை வகுத்துக் காட்டுகின்றார் கி.ரா.

    அன்றைக்குச் சமுதாயத்தின் நிலைமை, ஏழைக் குடியானவர்கள் பட்டப்பாடுகள், தீர்வை கட்ட முடியாத விவசாயி, பசியோடும், பட்டினியோடும் போராடிக்கொண்டு இருந்த குடும்பங்களின் கதைகளைச் சொன்னார் கி.ரா.

    வீட்டு நிலைக் கதவில் குழந்தைகள் ஏறிக்கொண்டு இப்படியும், அப்படியும் ஆட்டி, ‘ரயில் வருகின்றது, போகின்றது’ என்று சொல்லி விளையாடிய காட்சிகள், நொடிப்பொழுதில் மாறிவிடுகின்றது. ஆம்; தீர்வை கட்டாததற்காக, வீட்டு நிலைக்கதவைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு போய்விடுகின்றார்கள். தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் பறிமுதல் செய்துவிடுவார்கள். அன்றைக்கு அதுதான் நிலைமை. அந்தக் காட்சிகளை எல்லாம் கி.ரா. அவரது எழுத்து நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திவிடும். நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

    தீப்பெட்டி அட்டைகளில் ஒட்டி இருக்கின்ற படத்தைக் கத்தரித்து எடுத்து, கிராமத்துக் குழந்தைகள் வீட்டுக் கதவு, சுவர்களிள் ஒட்டி வைப்பது வழக்கம். அந்தக் கதவு இல்லாத வீட்டுக்கு உள்ளே குளிர்காற்று வீசுகின்றது. அதைத் தாங்க முடியாமல் ஒரு குழந்தை இறந்து போகின்றது. ஊர்ச் சத்திரத்தில் அந்த வீட்டுக் கதவு சாத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது. அதை லட்சுமியும், சீனிவாசனும், அந்த அக்காவும், தம்பியும் பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றார்கள். அந்தக் காட்சிகளைத்தான், ‘கதவு’ என்ற தலைப்பில் கதையாகத் தந்தார்.

    ‘தொண்டு’ என்ற கதையில், ஒரு பெண் தன்னையே தியாகம் செய்கின்றாள். பணத்திற்காக அல்ல; அந்த ஊருக்கு உதவுகின்றாள். பலருடைய மகிழ்ச்சிக்கு அவள் பயன்படுகின்றாள். இந்த நேரத்தில் அந்த ஊரில் பெரிய போக்கிரியை, யாரோ கொலை செய்து விடுகின்றார்கள். ரிசர்வ் பட்டாளம் வருகின்றது. அந்தக் காலத்தில் அந்தப் பெயரைக் கேட்டாலே எல்லோரும் அஞ்சி நடுங்குவார்கள். அடி பிரித்து விடுவானே. என்ன செய்வது?

    எல்லோரும் கூடிப் பேசுகின்றார்கள். அப்போதும், அந்தப் பெண் காமம்மாளின் உதவியைத்தான் நாடுகின்றார்கள். அவள் மேலும் தியாகம் செய்கின்றாள். இரண்டாம் உலகப் போரின்போது, மடாகரி என்ற படம் வந்தது. எதிரிகளிடம் இருந்து செய்தியை அறிந்து கொள்வதற்காக, ஒரு பெண் தன்னையே இழக்கின்றாள். அதைப்போலத்தான், தொண்டு என்ற கதையில், அந்த ஊருக்கு அந்தப் பெண் தொண்டு செய்கின்றாள்.

    அடுத்து ‘ஜடாயு’ என்ற கதை. ரசிகமணிக்கு நெருங்கியவர் அல்லவா கி.ரா.? அதனால், அந்த வாடை.

    இலங்கை வேந்தன் இராவணன் சீதையைக் கவர்ந்துகொண்டு போகும்போது, ஜடாயு தடுத்தான். அவனுடைய இறக்கைகளை வெட்டி வீழ்த்திய போதும் அலகுகளால் குத்திப் போரிட்டான். ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தான். அந்தக் காட்சிகளை கம்பன் வருணித்து இருக்கின்றான்.

    கி.ரா. எழுதிய கதையில், போலம்மாள் என்ற பெண்ணை, நான்கு போக்கிரிகள் கெடுத்து விடுகின்றார்கள். கோவில்பட்டி சந்தைக்குச் சென்று பொருட்களை விற்றுவிட்டு, மாட்டு வண்டி ஓட்டி வருகின்ற ஊர்ப் பெரியவர், அந்த நான்கு பேரையும் எதிர்த்துப் போரிடுகின்றார். கடைசியில், அவர்கள் அவரது இரண்டு கைகளையும் வெட்டி விடுகின்றார்கள். அப்போது அவர் அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘ஐயோ, உன்னைக் காப்பாற்ற முடியவில்லையே அம்மா’ என்று கதறுகின்றார்.

    இப்படிப்பட்ட கதைகளில், எப்படிப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்துகின்றார் கி.ரா. என்பதை நாம் பார்க்க வேண்டும்.

    திரை உலகில் கிராமியச் சூழலைக் கொண்டுவந்து நிறுத்தியவர், இயக்குநர் பாரதிராஜா. சாதனை படைத்து இருக்கின்றார். அவரை நான் பாராட்டுகின்றேன். அதைப்போலவே, கிராமத்து இசையைத் திரை உலகுக்குக் கொண்டு தமிழ் இசையை மீட்டு எடுத்து நிலை நிறுத்திய இளையராஜாவை நான் பாராட்டுகின்றேன். அவர்கள் இருவரும் சேர்ந்து ஆக்கிய திரைப்படம்தான் ‘முதல் மரியாதை’. அந்தப் படத்திற்கு உயிர்த்தன்மையான காட்சி, கோபல்ல கிராமத்து நாவலின் தொடக்க நிகழ்ச்சிதான். முதல் அத்தியாயமே மெய்சிலிர்க்க வைக்கும்.

    ஒரு பெண் வீட்டில் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகின்றாள். ஒத்தையடிப் பாதையில், தன்னந்தனியாக வருகின்றாள். பதைபதைக்க, தண்ணீர் தாகம். வழியில் ஒரு குளத்தைப் பார்க்கின்றாள். குனிந்து இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளிப் பருகுகின்றாள். அப்போது, மறைவில் இருந்து இரண்டு கழுகுக் கண்கள் அவளைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. அதை அவள் கவனிக்கவில்லை. மறைந்து இருந்த கயவன், அவள் காதுகளில் போட்டு இருந்த தோடுகளைப் பறிக்க முயற்சிக்கின்றான்; அவள் எதிர்த்துப் போராடுகின்றாள். அவன் அவளை அந்தத் தண்ணீருக்கு உள்ளே போட்டு அமுக்குகின்றான். மூச்சுத் திணறுகின்றது; ஆனால், அவள் அவனுடைய காலின் கட்டை விரலைக் கடித்து விடுகின்றாள்.

    இந்த நேரத்தில், தாத்தைய நாயக்கர் வண்டி ஓட்டிக்கொண்டு வருகின்றார். அவர் அந்தக் குளத்திற்கு அருகே வண்டியை நிறுத்திக் கழுவுகின்றார். அப்போது ஒருவன் வேகமாக மூச்சு இரைக்க ஓடி வருகின்றான்.

    ‘ஐயா, இந்தப் பக்கமாக ஒரு பெண் பிள்ளை போனதைப் பார்த்தீர்களா? வீட்டில் கோபித்துக்கொண்டு வந்துவிட்டாள்’ என்று கேட்கின்றான்.

    இவருக்கு சந்தேகம். அவர் வந்த வழியில் வேறு யாரும் வரவில்லை. ஆனால், குளத்திற்கு உள்ளே அவன் நிற்கின்றான். ‘என்னடா, ரொம்ப நேரமாக அங்கேயே நிற்கிறாய்? வெளியே வாடா’ என்று மிரட்டுகின்றார். அவனால் வர முடியவில்லை. காரணம், அவனது கட்டை விரல் செத்துப்போன அந்தப் பெண்ணின் வாய்க்கு உள்ளே மாட்டிக்கொண்டு இருக்கின்றது.

    இவர், வண்டியில் இருந்து ஒரு கம்பியை எடுத்து அவன் மேல் எறிந்து, ‘வெளியே வாடா’ என்று மிரட்டியபிறகு, வேறு வழி இன்றி அவன் காலை இழுக்கின்றான். ஆனால் முடியவில்லை. இவர்களுக்குப் புரிந்து விட்டது. அதன்பிறகு அவனைப் பிடித்து, ஒரு கத்தியை எடுத்து, அவன் கட்டை விரலை வெட்டி, அவனை ஊருக்கு உள்ளே இழுத்துக்கொண்டு வந்து, கழுவில் ஏற்றிவிடுகின்றார்கள். அதனால்தான் கழுவன் என்று பெயர் வந்தது.

    இந்தக் காட்சியைத்தான், முதல் மரியாதை படத்தில் வைத்து இருக்கின்றார்கள்.

    இப்படி, இந்த ‘கோபல்லபுரம் கிராமம்’ என்ற கதையில், மான உணர்வுள்ள விவசாயிகளின் வாழ்க்கையை, வீரத்தை, அவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தை, பஞ்சத்தை, பசியை, பட்டினியை எல்லாவற்றையும் விவரித்து இருக்கின்றார் கி.ரா. அந்தப் பின்னணியில்தான் அடுத்து, ‘கோபல்லபுரத்து மக்கள்’ எழுதினார். அது சாகித்ய அகடமி விருதைப் பெற்றது. அது ஒரு இனிய காதல் கதை. ரோமியோ ஜூலியட் போல, அம்பிகாபதி அமராவதி போல, தேவதாஸ் பார்வதி போல, லைலா மஜ்னு போல, அச்சந்தலு கிட்டப்பா கதை. அவர்கள் இரண்டு பேருக்கு இடையிலான காதலை விவரிக்கின்றார் கி.ரா.

    இந்தக் கட்டுரையில் நான் தருவது எல்லாம் ஒரு திரைப்படத்தின் டிரெய்லர் போலத்தான். முழுக்கதையையும், அவரது புத்தகங்களை வாங்கி நீங்கள் படிக்க இன்புற வேண்டும். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? கி.ரா.வின் கதைகளைப் படியுங்கள். அவை, கதை அல்ல; உண்மை. சமூக விழிப்பு உணர்விற்கான எழுத்து அது. அதில் சொல்லப்பட்டு இருக்கின்ற செய்திகள் எல்லாம் களஞ்சியம்.

    அதை மட்டும் அல்ல; நாட்டின் விடுதலைக்காகப் போராடிய பகத்சிங், தூக்கில் போடப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டு, அந்தக் கிராமத்து மக்கள் எப்படி எல்லாம் வேதனைப்பட்டார்கள் என்பதை கி.ரா. வருணிப்பதைப் படித்துப் பாருங்கள். வேதனையின் வலியை உணர்வீர்கள்.

    ஐயா அவர்கள் மூன்று முறை சிறைவாசம் இருந்தார். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அவர் ஒரு போராட்டக்காரர். 1943 முதல் 49 வரை, பொது உடைமை இயக்கத்தில் உறுப்பினர் அட்டை வைத்து இருந்தார். பொது உடைமை இயக்கத்தில் ஒரு பெரிய இலக்கியவாதி ஜீவா அவர்கள் ஆவார். தந்தை பெரியார் மீது பெரும் பற்று கொண்டு இருந்தார். மண்ணை நேசித்தவர். கடைசி வரை வறுமையோடு போராடி மறைந்தார்.

    ரசிகமணி டி.கே.சி., அவர்கள், கம்பனின் பாடல்களை எல்லாம் திருத்தம் செய்ததை ஜீவா ஏற்கவில்லை. ‘இப்படிச் செய்தால் எப்படி?’ என்று எதிர்த்தார். அவரிடம் நமது கி.ரா. அவர்கள் விளக்கம் அளித்தார்கள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்கூட அந்தத் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு இருக்கின்றார் என்று சொன்னபோது, ‘அப்படியா? சரி அவர் செய்த திருத்தங்களை எல்லாம் எனக்கு அனுப்பி வையுங்கள்’ என்று சொன்னாராம். அப்படி டி.கே.சி. அவர்கள் மீது பெருமதிப்பு கொண்டவர் நம்முடைய கி.ரா. அவரைப் பற்றி, ‘மாந்தருள் ஓர் அன்னப்பறவை’ என்று எழுதினார்.

    நான் முதன்முதலாக, 44 ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பார்க்க இடைசெவல் கிராமத்திற்குச் சென்றேன். நெருக்கடி நிலை காலத்தில் ஓராண்டு சிறைவாசம் முடித்து வெளியே வந்திருந்தேன். திராவிட இயக்கத்தின் தலைசிறந்த இலக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர், சிறுகதை மன்னன் என்று அழைக்கப்பட்டவர் எஸ்.எஸ். தென்னரசு அவர்கள் அழைத்தார்கள். ‘வைகோ, இடைசெவலில் கி. இராஜநாராயணன் இருக்கின்றார். அற்புதமான எழுத்தாளர். என் மனம் கவர்ந்தவர். அவரை நான் சந்திக்க விரும்புகின்றேன். எப்போது வரலாம் என்று கேட்டுச் சொல்லுங்கள்’ என்றார். அவர்கள் சந்திப்பிற்கு நான் ஏற்பாடு செய்தேன். அண்ணன் தென்னரசு அவர்களோடு நானும் இடைசெவலுக்குச் சென்றேன். அவரைச் சந்தித்து உரையாடினோம். அவர்களுடைய இல்லத்தின் விருந்தோம்பும் பண்பு மிக உயர்ந்தது.

    கி.ரா., கதைக்களஞ்சியம் தந்தார்; வட்டார வழக்குச் சொல் அகராதி ஆக்கி இருக்கின்றார். அவர் எழுதி, தொகுத்து வெளியிட்ட நாடோடிகள் கதைக் களஞ்சியத்தில் எல்லா வகையான கதைகளும் இருக்கின்றன.

    இவை எல்லாம், தமிழுக்கு அவர் ஆற்றி இருக்கின்ற அருந்தொண்டு.

    ஒரு வாசகன் என்ற முறையில், எனது பார்வையில், கி.ரா-வின் எழுத்துகளில் வரலாற்றுக் கூறுகள் இருக்கின்றன. புராணக் கதைக் கூறுகள் இருக்கின்றன. நாடோடிக் கதைக் கூறு இருக்கின்றது; மனித வாழ்வியல் கூறுகள் இருக்கின்றன. ஒருவருடைய எழுத்தில், இத்தனையும் சேர்ந்து இருப்பது அரிது.

    நாவல்களைப் படைத்தார். கதைகளை எப்படித் தேடிப்பிடித்து எழுதி இருக்கின்றார் தெரியுமா? சிறுவனாக இருந்தபோது, அந்தக் கதைகளை நானும் கேட்டு இருக்கின்றேன். வயதான பெரியவர்கள் பாட்டிகள் சொல்லுவார்கள். ‘பட்டுக்கிட்டாரு விட்டில பட்டர்’ என்று சொல்லுவார்கள். அந்தக் கதையை, கி.ரா. எழுதி இருக்கின்றார். உணவில் எப்படி அறுசுவை உள்ளதோ, அதைப்போல நாட்டுப்புறக் கதைகளில் பலவகையான சுவை இருக்கின்றது. இன்பச்சுவை, அவலச்சுவை, காதல் சுவை எல்லாம் இருக்கின்றது. அதிவீரராம பாண்டியன் கதையும் இருக்கின்றது. இவை எல்லாமே, கி.ரா. எழுதிய கதைகளில் இருக்கின்றன.

    இன்றைக்கு எண்ணற்ற இளைஞர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றார்கள். அங்கே இருக்கின்ற முதியோர் இல்லங்கள் நமது தமிழ்நாட்டுக்கு உள்ளேயும் வந்துகொண்டு இருக்கின்றன. பெற்ற தாய், தகப்பனைக் கொண்டுபோய் முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் விட்டுவிடுகின்றார்கள். மாதந்தோறும் பணம் அனுப்புவார்கள். ஆனால், அவர்களைப் போய்ப் பார்க்கமாட்டார்கள்.

    வறுமையின் கொடுமையை, ‘கறிவேப்பிலைகள்’ என்ற கதையில் கி.ரா. சொல்லுகின்றார். அதைப் படிக்கும்போதே, கண்களில் கண்ணீர் வடியும்.

    ஒரு கணவன் மனைவிக்குப் பிள்ளைகள் இல்லை. அவர்களுக்கு மாற்று உடை இல்லை. அவன் கோவணம் கட்டிக்கொண்டு இருக்கின்றான். அவன் மனைவியிடம் ஒரேயொரு கிழிந்து நைந்துபோன சேலைதான் இருக்கின்றது. மண்ணைக் குழைத்துப் பூசி ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு அதில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். இருவரும் மாடாக உழைத்தார்கள். வயதான காலம். வேலைக்குப் போக முடியவில்லை. கஞ்சித் தண்ணிக்கு வழி இல்லை. இருவரும் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொள்கின்றார்கள். ஓரளவிற்குப் பசி தணிகின்றது. அப்போது அவன் சொல்லுகின்றான்: ‘இப்படி ஈரத்துணியைக் கட்டிக்கொண்டால் பசி தணியும் என்பதைச் சொன்ன அந்தப் புண்ணியவாளன் நல்லா இருக்கணும்’ என்கிறான்.

    இப்படி வறுமையின் கொடுமையைச் சொல்லுகின்ற அதே உணர்வோடுதான், ‘காய்ச்ச மரம்’ என்ற கதையை எழுதி இருக்கின்றார்.

    அங்கிள் டாம்ஸ் கேபின் என்ற கதையைப் படித்து, ஆபிரகாம் லிங்கன் துடித்ததை நான் படித்து இருக்கின்றேன். அப்படி, காய்த்த மரம் என்ற கதையைப் படிக்கின்ற யாரும் அழாமல் இருக்க முடியாது. மனிதநேயம் உள்ளவர்கள் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.

    நல்ல வசதியான வீடு. நம்ம கி.ரா-வும் நல்ல வசதியான வீட்டுக்காரர்தான். நல்ல சம்சாரி. நான்கு ஜோடி உழவு மாடுகள், அவர் வீட்டில் கட்டிக் கிடந்தன. நம்முடைய கணவதி அம்மையாரும், பெரிய வீட்டுக்காரர்தான். இவர்களுடைய விருந்தோம்பல் புகழ்பெற்றது. பலமுறை பார்த்து உணர்ந்து இருக்கின்றேன்.

    இந்தக் கதையில், ஒரு பெரியவருக்கு எட்டு ஜோடி உழவு மாடுகள் இருக்கின்றன. நான்கு காரை வீடுகளும் இருக்கின்றன. அவருக்கு எட்டுப் பிள்ளைகள். நான்கு ஆண் மக்கள், நான்கு பெண் பிள்ளைகள். செல்வமும், செல்வாக்கும் நிறைந்த குடும்பம். பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நன்றாக இருக்கின்றார்கள்.

    நான் திருமணங்களில் பேசும்போது, ஒன்றைக் குறிப்பிடுவேன். ‘வீட்டுக்கு வருகின்ற மருமகளைத் தங்கள் பிள்ளை போல, மாமியாரும், மாமனாரும் கருத வேண்டும். அந்த மருமகளும், அவர்கள் தன் தாய் தந்தையரைப்போல மதித்து நடக்க வேண்டும். அதை, சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் சொன்னார். கண்ணகி கோவலனைப் பார்த்துச் சொல்கின்றாள்: உங்கள் தாய் தந்தை வருத்தப்படும்படியாக அல்லவா நீங்கள் நடந்து கொண்டீர்கள்’ என்று சொன்னாள் என்பதைச் சொல்வது உண்டு.

    ஆனால், இந்தக் கதையில், வீட்டுக்கு வந்த மருமகள்கள் போட்ட தலையணை மந்திரம் வேலை செய்கின்றது. அதனால், சொத்தைப் பிரிக்க வேண்டும் என்று பிள்ளைகள் சொல்லுகின்றார்கள். கணவனும், மனைவியும் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தார்கள். பிள்ளைகள் கேட்கவில்லை. வேறு வழி இல்லை.

    அப்போதும் பெரியவர் சொல்லுகின்றார். நாமாகப் பிரித்துக் கொடுத்தால், அதில் ஏதேனும் தார தம்மியம் வந்துவிடும். பக்கத்து ஊரான பாறைப்பட்டியில் கந்தசாமி நாயக்கர் நியாயமான ஆளு; இப்படிப்பட்ட பஞ்சாயத்துகளை எல்லாம் அவர்தான் பேசித் தீர்த்து வைப்பார் என்று சொல்லி, அவரை அழைத்துக் கொண்டு வருகின்றார்கள். அவர் வெற்றிலை போடுகின்ற அழகை எல்லாம் அண்ணாச்சி அழகாக எழுதி இருப்பதைப் படியுங்கள்.

    80 ஏக்கர் நிலம். எல்லாவற்றையும் பங்கு வைத்தாயிற்று. உழவு மாடுகளைப் பிரித்துக் கொடுத்தாகி விட்டது. பெரியவரும், மனைவியும் மாதம் ஒரு மகன் வீட்டில் இருக்க வேண்டும் என முடிவாகின்றது. அப்படி நான்கு மகன்கள் வீட்டில் ஒரு சுற்று இருந்தாகிவிட்டது.

    அடுத்த சுற்றில், மூன்று வேளை சாப்பாடு, இரண்டு வேளையாகி விட்டது. வெற்றிலை பாக்கு வாங்கிக் கொடுப்பது நின்று போனது. ‘கிழடுகளுக்கு எண்ணெய்க் குளிப்பு தேவையோ?’ என்ற இளக்காரப் பேச்சு கேட்கின்றது. நாளுக்கு நாள் அவமானம்.

    இந்த நிலையில், நடுவுள்ள மகள் வருகின்றாள். பெற்றோரின் வேதனையைப் பார்த்து வருந்துகின்றாள். அண்ணன்மார்களைத் திட்டுகின்றாள். ‘அப்பா, என்னோடு வந்து விடுங்கள்’ என்று அழைக்கின்றாள். சம்பந்தி வீட்டில் வந்து இருப்பது மரியாதைக் குறைவு அம்மா என்று கூறி அனுப்பி வைத்து விடுகின்றார்.

    கடைசியில் யாரும் கவனிப்பார் அற்ற நிலைமை. இனி இங்கே இருந்தால் சரியாக இருக்காது; நாம் எங்கேயாவது கண் காணாத இடத்துக்குப் போய் விடுவோம் என்ற முடிவுக்கு வருகின்றார்கள். கோவில்பட்டிக்கு வருகின்றார்கள். அந்த அம்மையாரின் காதுகளில் கிடந்த கம்மல்களை விற்று, ரயிலடிக்குப் போகின்றார்கள். அப்போதும், யாரும் பார்த்துவிடக் கூடாது என்று பம்மிக்கொண்டே நடக்கின்றார்கள். ரயிலில் ஏறி, மதுரைக்கு வந்து விடுகின்றார்கள். அடுத்து எங்கே போவது என்று தெரியவில்லை. நடைமேடையில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். இவர்கள் அருகில், மற்றொரு குடும்பம் உட்கார்ந்து இருக்கின்றது. சின்னப்பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

    மெல்லப் பேச்சுக் கொடுக்கின்றார்கள். ‘நீங்கள் எங்கே போகின்றீர்கள்?’ என்று கேட்கின்றார்கள். ‘நாங்கள் இராமேஸ்வரத்திற்குப் போகின்றோம்’ என்கிறார்கள். ‘அப்படியா? நாங்களும் உங்களோடு இராமேஸ்வரத்திற்கு வருகின்றோம்’ என்று சொல்லி, அங்கே போய்விடுகின்றார்கள்.

    நான்கைந்து மாதங்கள் கழிந்தன. பிள்ளைகள் தேடிப்பார்த்து ஓய்ந்து போனார்கள். இப்போதுபோல அலைபேசிகள் இல்லாத காலம். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    பஞ்சாயத்துப் பேசி சொத்துகளைப் பிரித்துக் கொடுத்தார் அல்லவா, அந்த பாறைப்பட்டி கந்தசாமி நாயக்கர், இராமேஸ்வரத்திற்கு வருகின்றார். கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வருகின்றார். அங்கே வரிசையாக பிச்சைக்காரர்கள் உட்கார்ந்து இருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்த கந்தசாமி நாயக்கருக்குத் தலையில் இடி விழுந்தது போன்ற அதிர்ச்சி. அங்கே இருப்பவர்கள் யார்? தலையில் முடி இல்லை. மொட்டை அடித்து இருக்கின்றார்கள். உற்றுப் பார்க்கின்றார். அடையாளம் தெரிந்தது. நெல்லுண்டி நாயக்கரும், பேரக்காளும்தான் அங்கே உட்கார்ந்து இருக்கின்றார்கள். பிச்சைக்காரர்களாக இருக்கின்றார்கள்.

    எப்படி வாழ்ந்தவர்கள்? 80 ஏக்கர் நிலம்; எட்டுச் சோடி உழவு மாடுகள் இருந்ததே, அவர்களுக்கா இந்த நிலை என்று எண்ணிக் கதறி அழுகின்றார். மாலை மாலையாகக் கண்ணீர் விடுகின்றார். அப்போதும், நெல்லுண்டி நாயக்கர் அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றார். பேரக்காள் மட்டும் கேட்கின்றார்: ‘ஐயா, என் பிள்ளைகள் எல்லோரும் நன்றாக இருக்கின்றார்களா?’ என்று.

    அத்துடன் அந்தக் கதையை முடித்து விட்டார் கி.ரா.

    காதலி கேட்டாள் என்பதற்காகத் தாயின் இருதயத்தை வெட்டி எடுத்துக்கொண்டு போகின்றான் ஒரு மகன். கல் தடுக்கி விடுகின்றது. அப்போதும், ‘மகனே, பார்த்துப் போ’ என்று அந்த இருதயம் சொன்னதாக ஒரு கதை உண்டு. அதுதான் தாய்ப்பாசம். அப்படித்தான், இந்தப் பேரக்காளும், தான் பிச்சை எடுக்கின்ற நிலைமையிலும்கூட, தன் பிள்ளைகள் நன்றாக இருக்கின்றார்களா? என்றுதான் கவலைப்படுகின்றாள்.

    இன்றைய உலகில், இளைஞர்கள், பெண்கள், பத்தாயிரம், இருபது ஆயிரம் என ஐம்பது ஆயிரம் வரை சம்பளம் வாங்குகின்றவர்கள், நல்ல வீடு, கார், ஏர்கண்டிசன் வசதிகளோடு வாழ்கின்றார்கள். ஆனால், அவர்கள் பெற்றோர், தாங்கள் வாழ்ந்த மண்ணை விட்டு வர மாட்டார்கள். அவர்கள் அங்கேயேதான் இருப்பார்கள். அவர்களை, இந்தப் பிள்ளைகள் போய்ப் பார்க்க மாட்டார்கள். பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய், தகப்பனை விடவா வேறு தெய்வம் இருக்கின்றது?

    இந்த சிந்தனைகள் எல்லாம், கி.ரா.வின் எழுத்துகளில் பொதிந்து கிடக்கின்றன. படைப்பாளிகளுக்கு மரணம் இல்லை. மாமனிதர்களுக்கு மரணம் கிடையாது. அவர்கள் காலத்தை வென்று வாழ்வார்கள். அந்தப் பட்டியலில் நம்முடைய கி.ரா.வும் இடம் பெற்று விட்டார்.

    எட்டயபுரத்தில் ஆண்டுதோறும் பாரதி விழா நடத்துகின்றார்கள். கவிஞர்கள் கூடுகின்றார்கள். அதுபோல, ஆண்டுதோறும், இலக்கிய எழுத்தாளர்கள், கோவில்பட்டியில், இடைசெவலில் கூட வேண்டும்; அந்த நிகழ்வுக்கு இளைஞர்கள் நிறைய வர வேண்டும்; வாழ்வியலை எப்படி எழுத வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் படும் பாடுகளை, நேரில் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையில், புதிய படைப்புகளைத் தர வேண்டும்.

    அண்ணாச்சி கி.ரா. புகழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும்!

    * பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

    4. கி.ரா.-வும் கிரிமினல் வழக்கும் - ஜி.ஆர். சுவாமிநாதன்*

    அரசு நூலகங்கள் ஏதோ காரணத்தினால் ‘காலச்சுவடு’ இதழ் வாங்குவதை நிறுத்தியிருந்தன. அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிக்கு காலச்சுவடையும் தெரியவில்லை, சுந்தர ராமசாமியையும் தெரியவில்லை. அவரிடமிருந்து வாய்தா வாங்கி தப்பிப்பதே எனக்கு பெரிய விசயமாகிவிட்டது. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என நான் எனக்குள்ளேயே புலம்பிக்கொண்டதால், அது கண்டெம்ப்ட் ஆகவில்லை.

    நல்லவேளை, கி.ரா. மனுதாரராக நீதிமன்றத்தை அணுகியபோது, யார் கி.ரா. என்ற கேள்வி கேட்கப்படவில்லை. ஒரு நேர்காணலில் நீங்கள் ஏன் தலித் மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதவில்லை என்ற வினாவிற்கு எனக்கு அவன் மொழி தெரியாதே என பதிலளித்தார். கதிரேசன் என்ற புண்ணியவான் கி.ரா.-வின் பதில் பள்ளர் சமுதாயத்தை அவமதித்துவிட்டது என மதுரை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அதனை கோப்புக்கு ஏற்றுக்கொண்ட நடுவர் கி.ரா.-விற்கு சம்மன் அனுப்பினார். மனம் நொந்த கி.ரா. தன் மீது தொடுக்கப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் ‘குவாஷ்’; மனு தாக்கல் செய்தார். நான் செய்த பாக்கியம் அந்த மனு என் முன்னே விசாரணைக்கு வந்தது.

    1989 என்று நினைக்கிறேன். பாண்டிச்சேரியில் சட்டம் படித்துக் கொண்டிருந்தேன். எனது வாசிப்பை நவீன இலக்கியங்கள் நோக்கி மடைமாற்றியவன் எனது வகுப்புத் தோழன் சிக்கந்தர் அலி. அவன் ‘லயம்’ கால சுப்ரமணியத்தின் பக்கத்து ஊர்க்காரன். அவர் மூலம் பல தமிழ் எழுத்தாளர்களின் அறிமுகம் அவனுக்கு இருந்தது. கி.ரா. பாண்டிச்சேரியில்தான் இருக்கிறார் என்பதும் தெரிந்திருந்தது. ஒருநாள் என்னை ‘வா, கி.ரா.-வைப் பார்த்துவிட்டு வருவோம்’ என அழைத்தான். பெரியவர்களை வெறும் கையோடு பார்க்கக்கூடாதல்லவா? என்ன கொண்டுபோகலாம் என யோசித்து, அதற்கு ஒரு வாரம் முன்பு பழைய புத்தகக் கடையில் வாங்கிய பழமையான இதழ் ஒன்றை எடுத்துச் சென்றேன். அந்த இதழில், கி.ராவின் ‘சீப்பு’ என்ற சிறுகதை இருந்தது. எந்தவொரு எழுத்தாளரும் அவரை படித்திருக்கிறோம் என்று சொல்லும்பொழுது சந்தோசம் அடைவார்கள். அந்த வகையில்தான் ‘சீப்பு’ கதையை அவரிடம் கொடுத்தோம். அந்த சிறுகதை காணாமல் போய்விட்டதாகவே நினைத்திருந்த அவருக்கு, அதைக் கண்டவுடன் மிகுந்த சந்தோசம் ஏற்பட்டது. தனது நெஞ்சார்ந்த நன்றியினை எங்களுக்குத் தெரிவித்தார். அந்த காட்சி என் கண் முன்னே இன்னமும் உள்ளது. ஆனால், இந்த ‘சீப்பு’ சிறுகதை சமீபத்தில்தான் கண்டெடுக்கப்பட்டது என வாசகர்கள் நினைக்கின்றனர்.

    கி.ரா.வை நான் என் மனதிற்குள் ஆயிரம் கொண்டாடினாலும், வழக்கை முறையாக அணுக எனக்கு உதவியது முனைவர் ஜெகந்நாத். அவன் என்ற சொல் மரியாதை குறைவுடையது என சொல்ல முடியாது. சொல் வழங்கப்படும் சூழலுக்கேற்ப பொருள் தரவல்லது என எனக்கு விளக்கி தமிழ் இலக்கியத்திலிருந்து அவர் தந்த சான்றுகள் கி.ரா.-விற்கு எதிரான கிரிமினல் வழக்கை ரத்து செய்ய உதவின.

    * நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்

    5. கரிசல் மண்ணின் மைந்தர் – சிவகுமார்*

    3.12.88

    அன்புள்ள அய்யா அவர்களுக்கு, வணக்கம்.

    கரிசல் மண்ணின் மைந்தராகக் கம்பீரமாக வாழும் தங்களை, செம்மண் காட்டில் பிறந்து சிறு வயதில் சில ஆண்டுகள் அங்கே வாழும் பாக்கியம் பெற்ற நான் ‘அய்யா’ என்று உரிமையுடன் அழைப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். கடிதத்தைத் தொடரும் முன் என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.

    கொங்குச் சீமையின் இளைஞனாகச் சென்னை சென்று, ஆறு ஆண்டுகள் ஓவியக்கலை படித்துத் தேறியபின், கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துவரும் நான் அடிப்படையில் ஒரு கிராமத்தான்தான். ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆகியும், கிராமத்து வாழ்க்கையின் அந்நாளைய நினைவுகள் உயிர்ப்போடு அடிமனதில் தங்கியுள்ளன.

    தங்களது ‘கோபல்ல கிராமம்’ - புத்தகத்தைப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே படித்து மகிழ்ந்திருக்கிறேன். கதாநாயகன், நாயகி என மனிதனை முன் நிறுத்தாமல், கரிசல் மண்ணையும், அதன் மணத்தையும், மண்ணின் மைந்தர்களையும் அழகாக சித்தரித்து ஒரு இனத்தின் வரலாறு போல அற்புதமாக படைத்திருந்தீர்கள்.

    ‘கரிசல் காட்டு கடுதாசி’ - வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஊர்ப் பெரியவரிடம் கடந்தகால அனுபவங்களைச் செவிமடுப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தியது. தற்போது ‘கோபல்ல புரத்து மக்கள்’ என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் எழுதும் தொடர், மீண்டும், என்னுடை சிறு பிராயத்து நினைவுகளை ஆழமாக உழுது வெளியே கொணர்கிறது.

    ‘ராச்சாப்பாடு; நொம்பலப்பட்டு; நெட்டீத்துக் கறவை; பூ மணலில் விரலால் கோடு கிழித்து எழுதிப் பழகுதல்; தாளக்கட்டை மனசுக்குள் சொல்லிக்கொண்டு சிலம்பம் வீசுதல்; முடையடித்த பசுக்களை விரட்டிப் பயிராக்கும் காளை; காம்பில் கன்று வாயை வைத்ததும், வாலை உயர்த்தி கோமியம் விட்டுக்கொண்டே, மாடு கன்றுக்குட்டியின் அரையைப் பிரியத்தோடு நக்கி, கன்று விடும் கோமியத்தைச் சொட்டுவிடாமல் சுவைக்கும்’ என்பன போன்ற மண்ணுக்கே சொந்தமான வார்த்தைத் தொடர்களைப் படித்தபோது, கொப்பளித்துவரும் எனது நினைவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

    கோவை மாவட்டத்தில் ஜிடி நாயுடு பிறந்த கலங்கல் என்னும் கிராமத்துக்கு அருகாமையில் உள்ளது எங்கள் குட்டி கிராமமான காசிகவுண்டன் புதூர். பள்ளிப் பருவம் முடியும்வரை வாழ்ந்த எளிமையான அந்த கிராமிய வாழ்வு என் உயிரோடு கலந்துவிட்ட ஒன்று. கருமேகங்கள் திரண்டு, திடும் என்று கல்மாரி மழையாகக் கொட்டும் ஆலங்கட்டி மழையென்று சொல்வார்கள். அந்தக் கட்டிகளை எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்துச் ‘செலப்பிடித்த மாட்டுக்குக் கொடுப்பார்கள். தீவனமும் தின்னாமல், தண்ணீரும் குடிக்காமல் நாக்கின் அடிப்பாகத்து நரம்பில் நீல ரத்தம் பாய்ந்து தடித்து இருக்கும். அப்போது நாலு காலையும் சேர்த்து கட்டி, கீழே தள்ளி அந்த நரம்பை ஊசியால் குத்தி, ரத்தத்தை வெளியேற்றுவார்கள். சமயங்களில் இந்த ஆலங்கட்டிகளைப் புகட்டுவார்கள்.’

    தாழ்வாரத்தில் விழும் மழைத் தண்ணீரைப் பிடித்துச் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். பருப்பு வகை நன்றாக அந்தத் தண்ணீரில் வேகும். வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடும் மழைத் தண்ணீர் காய்ந்து கிடக்கும் குட்டைகளில் நிரம்பிய மாத்திரத்தில் பல்வேறு வகையான தவளைகளும் உயிர்த்தெழுந்து விடியும்வரை ஜலதரங்கம் வாசிப்பதுபோல விசித்திரமாக கத்தும். இந்தத் தவளைகள் எல்லாம் எங்கே இருந்து வந்தன என்று கேட்டால், ‘ஆகாயத்திலிருந்து மழையோடு கீழே விழும்’ என்று சொல்வார்கள்.

    இடி இடித்தால், ஆகாயத்தில் அர்ச்சுனன் தேரோட்டுகிறான் என்று சொல்வார்கள். உச்சியில் இறங்குவதுபோல ஓங்கி இடி இடித்தால், இருதயமே ஒரு நொடி நின்றுவிடும். அதுபோன்ற சமயங்களில் புங்கப்பத்தி புளியப்பத்தி / ஆத்தைப்பத்தி அரசைப்பத்தி/அர்ச்சுனா... அர்ச்சுனா... என்று அந்த மரத்தின் மேல் போய் இறங்கு" என்று வருணபகவானை வேண்டிக் கொள்வோம்.

    மழைக்காலத்துக்கு முன்னோடியாகத் தட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாய்ப் பறக்கும். கோடை மழை தூத்தலாகப் பெய்யும். தூறலிலிருந்து தப்பிக்கவும், குளிரைத் தாங்கவும், சாக்குப் பையில் ‘கொங்காடை’ போட்டுக்கொள்வோம். பூமி குளிர்ந்து பசுமை படரும்போது, சிவப்பு ‘வெல்வெட்’ துணிபோல, கனமே இல்லாத ‘மொட்டைப் பாப்பாத்தி’ - என்றொரு பூச்சி தென்படும். பொன்வண்டுகளும் பறக்கும். இரவு நேரங்களில் மின்னாம்பூச்சிகள், இறகின் நடுவே ஒளியைக் கக்கும்.

    தும்பைப் பூவின் சாற்றை உறிஞ்ச பட்டாம்பூச்சிகள் பல வண்ணங்களில் படையெடுக்கும். நெட்டீத்துக் கறவை மாடு எங்களிடம் இருந்தது. பத்து தடவை கன்று ஈன்றது. விடுமுறை நாட்களில் அதை ஓட்டிப்போய் பொழிக்காலில் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் அருகம்புல்லில் மேய விடுவேன். மாட்டின் மூச்சுக் காற்றும், கடிபட்ட புல்லின் வாசனையும் இப்போதும் உணர முடிகிறது.

    ‘அசையாக்கட்டை’ என்ற வேரை மாடு தின்றுவிட்டால் பாலில் சூரைவாடையடிக்கும். தயிரிலும் அந்த நாற்றம் தொடரும். மாடு கன்று ஈனுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ‘பாலிதின்’ பை போன்ற நீர்க்குடத்துக்கு உள்ளே இருந்து கன்று பிய்த்துக்கொண்டு வெளியேறும். கால் குளம்புகள் பழுப்புக் கலந்த மஞ்சள் நிறத்தில் கொழுப்புப் போல இருக்கும். தரையில் கால் பதித்து எழுந்து நிற்க முயலும்போது அந்தக் கொழுப்பு பிய்ந்துவிடும். பால் ஊட்டியபின் மண்ணைத் தின்றுவிடக்கூடாது என்பதற்காக வாய்க்கூட்டை போட்டுவிடுவார்கள். முசுக் முசுக்கென்று அதன் வழியே மூச்சுவிடும். தாடையைத் தடவிக் கொடுத்தால் சொர்க்கத்தில் இருப்பதுபோல கண்ணை மூடி அனுபவிக்கும்.

    சீம்பால் சாப்பிட வீட்டில் அடிதடியே நடக்கும். பால் கறக்கும்போது பாத்திரத்தில் பீச்சும் சத்தம், பாலுக்குள் பீச்சும் சத்தம், நுரைமீது பீச்சும் ஓசையெல்லாம் நானும் கேட்டு அனுபவித்தவன் மடியிலிருந்து வாய்க்குப் பால் பீச்சச் செய்து குடித்த சுகமும் உண்டு. காய்ச்சாத பாலில் ஒரு மணம் வருமே அடடா! பணக்கார நாயுடு தோட்டத்தில், காங்கயம் காளைகளை வைத்திருப்பார்கள்.

    மாடு பயிராவதற்கு இலவசமாக விடுவார்கள். காளையின் அசுர கனமும், வேகமும் தாளாமல், சின்ன மாடுகள் ஒடிந்து தரையில் விழுவது பரிதாபமாக இருக்கும். சினை நிற்பதற்காக, மாடு கீழே படுக்க விடாமல், தாழ்வாரத்தில் தலைக் கயிறைத் தூக்கிக் கட்டி மாலை வரை காவல் இருப்பார்கள்.

    கழுதைகள் இறந்துவிட்டால் துர்நாற்றம் ஊரையே கலக்கும். எங்கேயோ இருந்து குட்டி விமானங்கள்போல இறக்கையை விரித்துக்கொண்டு மலங்கழுகுகள் வந்து இறங்கும். குழந்தைகள் அருகே போகப் பயப்படுவர்.

    இரவு நேரங்களில் ஊளையிட்டால் வயதான கட்டைகள் ஏதாவது மண்டையைப் போடும். புதைத்த உடலை, அடுத்த இரவில் நரிகள் தோண்டி வெளியே எடுத்து சதைகளைக் குதறி தின்றுவிட்டு, எலும்பும், தோலுமாக அப்படியே எறிந்துவிட்டுப் போய்விடும்.

    குடும்பத் தகராறில் குழந்தையோடு கிணற்றில் விழுந்துவிடும் பெண் உடலை, மூன்று நாள் கழித்து உப்பிய நிலையில் மேலே தூக்கி எடுத்து எரிப்பார்கள். தீ எரியும்போது எழும்பும் உடலை கட்டையால் அடித்துப் படுக்க வைப்பதைப் பார்த்தபின் ஒரு வாரத்துக்கு தூக்கம் வராது.

    பெரும்பாலும் இருபது பவுண்டு சம்மட்டி கொண்டு, கிணறு வெட்டும் வேலைக்குச் செல்வது, அருகு தோண்டுவது, உழுவது, கவலை மூலம் நீர் பாய்ச்சுவது, காய்ந்த குளத்திலிருந்து வண்டல் மண்ணை வண்டிகளில் நிரப்பி வந்து பூமியில் பரப்புவது - இவை ஆண்கள் செய்யும் வேலைகள். நிலமில்லாத கூலிகள் பஞ்சக் காலத்தில் கற்றாழை மடல்களை வெட்டி நீரில் ஊரப்போட்டு, முடை வாடை வந்ததும், எடுத்துத் துவைத்துச் சீவி மஞ்சி திரிப்பார்கள். ஓணாண்களுக்கு முந்திக்கொண்டு வேலியிலுள்ள கோவைப் பழத்தை சுவைப்பது ஒருசுகம். கள்ளிப் பழத்தை வாய் சிவக்க விழுங்கிவிட்டு வெளிக்கு வராமல் அவஸ்தைப்படுவது இன்னொரு அனுபவம்.

    பில்லி விளையாடுவது, கோலி குண்டாடுவது, காய்ந்துபோன மாங் கொட்டைகளை அடுக்கி, தட்டையான வட்டவடிவக் கல்களை வீசி வழிப்பது - இப்படி விளையாட்டுகள். கார்த்திகை ஜோதி நாளில், குரூடாயிலுக்குள் வட்ட வடிவமான கம்பியில் பின்னிய துணி உருண்டையை ஊறவிட்டு, நீளக்கம்பியில் சேர்த்து பற்ற வைத்து, ‘சூந்து ஆடுவது விடலைகளின் விளையாட்டு.

    என் தந்தையார் இரவுப் பள்ளி நடத்தினார். இளம் பிள்ளைகளுக்குக் கல்யாண வயதை நெருங்கிட்ட இளைஞர்களுக்கெல்லாம் பாடம் சொல்லித் தருவார். ஆங்கில போதகன்’ புத்தகத்தின் துணையுடன் ஆங்கிலமும் கற்பிக்க முயற்சித்திருக்கிறார். ஆருடம் பார்ப்பதில் அபாரத் திறமை அவருக்கு அவரது கணிப்புப்படியே நான் பிறந்த பத்தாவது மாதத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

    திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மணலைப் பரப்பி, விரல்களால் எழுதிப் பழகி அரிச்சுவடி கற்ற பெருமை எனக்கும் உண்டு. கோயிலில் பூசை செய்யும் பண்டாரம்தான் எனக்கு முதல் வாத்தியார். பள்ளிக்கு வராத பிள்ளைகளையும், சரியாகப் படிக்காத மக்குப் பிளாஸ்திரிகளையும் ‘கோசானத்தில்’ தொங்கவிட்டுத் தண்டிப்பார். இந்த விசித்திரமான அனுபவங்களெல்லாம் ஐந்தாம் வகுப்பு வரைதான்.

    உயர்நிலைப் பள்ளியில், சூலூரில் சேர்ந்த பின் நாகரிகத்தின் சாயல் லேசாக, அனைத்திலும் படிய ஆரம்பித்துவிட்டது. ஒரு சிறு கிராமத்திற்குள் இருந்துகொண்டு, புத்தகங்கள் வழியே நீங்கள் உலகத்தைப் படித்தபோதிலும், மண்ணும் அதன் மக்களும் பேசும் மொழியிலேயே, மானுட வாழ்வின் மகத்துவத்தை வெளிப்படுத்துவது என்னை ரொம்பவும் ஈர்த்தது. மற்ற எழுத்தாளர்களெல்லாம் பள்ளியில், கல்லூரியில் படித்து, பல எழுத்தாளர்களின் படைப்புகளில் திளைத்து, அந்தப் பாதிப்பில் எழுதுபவர்கள். உங்களது எழுத்துக்கள் அப்படியல்லவே.

    உங்களது வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து ரசிக்கும் ஒருசில பட்டண வாசிகளில் இன்று நானும் ஒருவன். கரிசல் காட்டுக் கடுதாசி - தொடரை நீங்கள் தொடங்குவதற்கு முன்வரை ‘இது ராஜபாட்டை அல்ல’ - என்ற தலைப்பில் எனது திரையுலக அனுபவங்களையும், அதில் நுழைவதற்கு முன்னர் இருந்த எனது பின்னணியையும் ‘ஜுனியர் விகடனில்’ 38 வாரங்கள் எழுதி வந்தேன். ஒரு சில இதழ்களை நீங்களும் படித்திருக்கக் கூடும். நான் எழுத்தாளனல்ல. ஓவியன், நடிகன் மட்டுமே. மிகக் குறைந்த எனது சொல்லாட்சியைக் கொண்டு எழுதிய கன்னி முயற்சியே அது. புத்தகத்தை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். படித்தபின், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்பதைச் சில வரிகள் எழுதி அனுப்பவும். குடும்பத்தாருக்கும் எனது அன்பினைத் தெரிவிக்கவும்.

    என்றும் அன்புடன்

    சிவகுமார்

    * திரைக் கலைஞர், எழுத்தாளர் ஓவியர் பேச்சாளர்

    6. கோபல்ல கிராமம் நாட்டார் நாவலா? - நா. வானமாமலை*

    கட்டபொம்மு காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவிலிருந்து பல காரணங்களால் குடி கிளம்பி வந்து தமிழ் நாட்டில், குருமலைச் சரிவுகளில் குடியேறிய கம்மவாரின் வரலாற்றை நாட்டு மக்களின் கண்ணோட்டத்தில் காண்பது இந்த நாவல்.

    ராஜாங்கம் இல்லாத காலத்தில் நவாப்புக்கும், கம்பெனிக்குமாக அரசியல் அதிகாரம் கைமாறிக் கொண்டிருந்த காலம். கொள்ளையும், கொலையும் தாண்டவமாடிக் கொண்டிருந்த போது ஊர்ப் பொதுவில் அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஊர் ஒற்றுமையும், நாட்டார் வீரமும் ஒற்றுமையும் வெற்றி பெறுகின்றன. இந்தப் பரம்பரையின் பூட்டிதான் பழங்கால வரலாற்றின் பிரதிநிதி.

    அவளுக்கு 9 வயதாகும் பொழுது நடந்த நிகழ்ச்சிகளை, அவள் ஒரு பகுதி மறதியிலும், ஒரு பகுதி கற்பனையிலும், மற்றும் ஒரு பகுதி நாட்டார் மரபுக் கதைகளிலும் ஆழ்ந்து கூறுகிறாள். அவர்கள் புறப்பட்ட கதை பஞ்சத்திலும், முஸ்லிம் ராஜாக்களின் கொடுமைகளிலும் துவங்குகிறது. இது நாட்டார் மரபைத் தழுவியதாகும். சரியான வரலாற்றைக் காரணங்கள் மறைந்துவிட்ட பின்னர் நாட்டார் மரபையே காரணங்களாகச் சொல்லுவதும் அதில் நம்பத்தகாத இயற்கைக்கு அதீதமான நிகழ்ச்சிகளை நம்பிக் கதைகளைப் புனைவதும் வழக்கமாகி விடுகின்றன.

    பஞ்சமும், மன்னர் கொடுமையும் அவர்கள் வருகைக்குக் காரணமாவது போலவே, வனதேவதை வரவும் அவள் பனைநார்ப் பெட்டியையும் பிரம்பையும் கொடுத்துத் தெற்கே போகச் சொல்லுவதும் அவர்களது தொடர்ந்த பிரயாணத்திற்குக் காரணமாகின்றன. அதன் பின்னர் ஒரு தேவதை தங்கும் இடம் பார்த்துக் கொடுப்பதும் கோவில் கட்டச் சொல்லுவதும், குடியிருப்புக் கட்டச் சொல்லுவதும் நாட்டார் கதை மரபுக்கு ஒத்ததே.

    இடையில் பலப் பல கதைகள். கோபல்ல கிராமத்தை அவர்கள் அமைத்தது, அதற்கு வாழ்க்கை அடிப்படையாக காட்டைத் தீயிட்டுக் கொளுத்திக் கூட்டு உழைப்பினால் கரிசல் காட்டைத் தோற்றுவித்தது, இந்நிகழ்ச்சிகளில் இயற்கையாதீதத் தன்மை கொண்டவை நடப்பது எல்லாமே நாட்டார் அவர்களது கிராம வரலாற்றை எப்படிக் காண்கிறார்கள் என்பதை விளக்குகிறது.

    காட்டை அழிப்பதும், கரிசலைக் கூட்டுழைப்பால் உருவாக்குவதும் உணவுப் பொருள்களைச் சேகரிக்கும் ஒரு சிறு சமுதாயம் மாறுவதைச் சித்திரிக்கிறது. காட்டில் கிடைக்கும் உணவுப் பொருள்களைச் சேகரிக்கும் ஒரு சிறு கூட்டம், முன்னரே, பல நூற்றாண்டுகளின் வளர்ச்சியில் செய்யக் கற்றுக்கொண்ட இரும்புக் கருவிகளைக்கொண்டு, புதிய சூழ்நிலையில் மண்ணைப் பண்படுத்தி, தானியம் விளைவித்ததை விளக்கும். இதுவொரு இனக்குழுவல்ல, இது பயிரிட்டு நிலைபெற்ற ஒரு குழு. பல காரணங்களால் நாடிழந்து, பிறந்த மண்ணைவிட்டு பெயர்த்தெறியப்பட்டுக் கிளம்பி ஆபத்தில்லாத பூமியில் அடைக்கலம் புகவந்த கூட்டம். அவர்கள் தாங்கள் ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்திய போர்க்கருவிகள், உழுபடைகளோடு, புதிய பூமிக்கு வந்தார்கள். இவர்கள் யாருக்கும் சொந்தமில்லாத வனத்தை எரித்து, கரிசல் மண்ணாக்கி உழுது பயிரிட்டு, உணவுப் பொருள் உற்பத்தி செய்தார்கள்.

    அவர்களுக்கு உணவு அளித்துவந்த காட்டை கிழங்கும், கனியும் பறவையும், சிறு விலங்குகளும் கிடைத்துவந்த காட்டை அழித்து, பயிரிடும் நிலமாக்க முடிவு செய்தார்கள்.

    இந்த முடிவுக்கு எளிதில் வர முடியவில்லை. ஏனெனில் அவர்களுக்குச் சில இடங்களைத் தோண்டும்போது மண் மணம் கமழும் பருத்த கோரைக் கிழங்குகள் கிடைக்கும், உண்பதற்கு வளமான காட்டுக்கீரை வகைகள், வெஞ்சனமாகப் பொரித்துத் தின்பதற்கு நிறைய காட்டுப் பறவைகளின் முட்டைகள் கிடைத்து வந்தன.

    ‘அவர்கள் தங்களிடம் மீதமுள்ள நவதானியங்களைச் சமைத்து உண்டு விடாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். பல நாள் பயணவழி சுமந்து நம்பிக்கையோடு கொண்டு வந்த தானிய மணிகளை உண்ணாமல், மண்ணில் விதைப்பதற்கு பத்திரப்படுத்திக்கொண்டு இந்த மாதிரி உணவுகளையே உண்டு வாழ்ந்தார்கள்.’

    சோற்றுக் கத்தாழைகளை உரித்து

    Enjoying the preview?
    Page 1 of 1