Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ki.Ra. Nooru - Thoguthi 2
Ki.Ra. Nooru - Thoguthi 2
Ki.Ra. Nooru - Thoguthi 2
Ebook1,121 pages7 hours

Ki.Ra. Nooru - Thoguthi 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காந்திய எளிமையும், வட்டார வழக்குச் சொல்லகராதியின் தலைமகனாகவும், தமிழ்நிலத்துக் கலாச்சாரத் தொன்ம வாழ்வியலைப் பேசுபொருளாகவும் வைத்து, முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக நின்றவர். இந்திய இலக்கியத்தின் உயர்ந்த விருதான ஞானபீடம் விருதைப் பெறுவதற்கு எவ்வகையிலும் தகுதியான கி. ராஜநாராயணனை வாசித்தும், பழகியும் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் எழுதிச் சேர்த்த நல்முத்துகளே இக்கட்டுரைகள்.

Languageதமிழ்
Release dateMar 18, 2023
ISBN6580142909650
Ki.Ra. Nooru - Thoguthi 2

Read more from K.S. Radhakrishnan

Related to Ki.Ra. Nooru - Thoguthi 2

Related ebooks

Related categories

Reviews for Ki.Ra. Nooru - Thoguthi 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ki.Ra. Nooru - Thoguthi 2 - K.S. Radhakrishnan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    கி.ரா. நூறு - தொகுதி 2

    Ki.Ra. Nooru - Thoguthi 2

    Author:

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    K.S. Radhakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கி.ரா. என்கிற சுத்த மனசுக்காரர்! - மு. ராமசாமி

    2. வாசம் பரப்பும் மலர்ச்சோலை - திடவை பொன்னுசாமி

    3. அரங்கம்… மொட்டைமாடி… கேணி… - செல்வ புவியரசன்

    4. நினைவலையில் என் குருநாதர் - சூரங்குடி அ. முத்தானந்தம்

    5. பேச்சு நடையே எழுத்தின் வலிமை – ப்ரியன்

    6. கி.ரா. - மு.சுயம்புலிங்கம்

    7. கி.ரா. தாத்தாவும் அவரது அனிமேஷன் கதைகளும்…! - யவனிகா ஸ்ரீராம்

    8. கி.ரா. எனும் மனித நேயம் - ராசி அழகப்பன்

    9. மண்ணின் மைந்தர் கி.ரா… - சாந்தா தத்

    10. கோபல்ல கிராமமும் மக்களும் - அருள்செல்வன்

    11. கரிசல்காட்டுக் கதுவாலிப் பறவை - கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

    12. கரிசல் இலக்கிய பிதாமகன் கி.ரா.வுடன் ஒரு மாலைப்பொழுது - ஆ. தமிழ்மணி

    13. கி.ராவுடனான என் பிணைப்பு - ஆகாசம்பட்டு வெ. சேஷாசலம்

    14. இரு மொழிப் பயன்பாடு - கி.ரா.வுடன் ஒரு சொல்லாடல் - விஜயலட்சுமி ராஜாராம்

    15. கடல் உப்பும் மலை நாரத்தையும் - சிலம்பு நா. செல்வராசு

    16. கரிசல் மொழியை நயமாக்கியவர் கி.ரா. - நா. சுலோசனா

    17. கி. ராஜநாராயணன் - கூரலகுப் பறவையொன்றின் கதாவலசை – ஆகாசமூர்த்தி

    18. கி. ராஜநாராயணனின் கிடை குறுநாவலில் உவமைகள் - இர. சாம்ராஜா

    19. காரிக்கஞ் சேலையும் கன்னி மொழியும் - இரா. வீரமணி

    20. கி.ரா. - கரிசல் எழுதிக் கொண்ட இலக்கியம்! - இரா. மோகன்ராஜன்

    21. ஊருக்கு முந்துன வெதப்பு கி.ரா. - கி. உக்கிரபாண்டி

    22. கி.ராவும் கதவும் – உதயகுமார்

    23. அவர் ஒரு மக்கள் எழுத்தாளர் - உதயை மு. வீரையன்

    24. கி.ராவுடன் சில தருணங்கள் - உமா மோகன்

    25. கி.ராவின் ‘காய்ச்ச மரம்’: தன்னையறிதல் - பி. எழிலரசி

    26. கி.ராவின் சங்கீத நினைவுகள் - என்.ஏ.எஸ். சிவகுமார்

    27. மொழியாஞ்சலி - இளசை அருணா

    28. கி.ரா. எனும் கதைப் பத்தாயம்! - எஸ். ராஜகுமாரன்

    29. கரிசல் குயில் கி.ரா. - கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் - காசி விஸ்வநாதன்

    30. இப்படியும் ஒரு மனுசம் - கி.ரா. பிரபி

    31. அனுபவக் களஞ்சியம் கி.ரா. – அம்சா

    32. நித்தமும் நூறு வாழ்ந்து பேறு பெற்ற பேராசான் கி.ரா. பிரியமானவர் - எஸ்.பி. சாந்தி

    33. அப்பா எப்போது வருவீர்கள்? – பாரததேவி

    34. கி.ராவின் பெண்கள்: நாச்சிய்யார், செவனி, பேச்சி: பேயாகுதலின் பரிணாம வளர்ச்சி - முபீன் சாதிகா

    35. கி.ரா. என்கிற கரிசல்காட்டுக் கதைசொல்லி - சௌந்தர மகாதேவன்

    36. கி. ராஜநாராயணன் என்னும் ஆளுமை - சோ. பத்மநாதன்

    37. கி.ராவின் படைப்புகளில் வாழ்வியல் - கவிமுகில் சுரேஷ்

    38. கி.ராவின் நாற்காலி - ந. கார்த்திகாதேவி

    39. கரிசல் மண்ருசியும் கி.ராவின் மொழிருசியும் - கி. பார்த்திபராஜா

    40. உள்ளத்தில் ஊஞ்சலாடும் உறவுகள் - செ. திவான்

    41. கி.ராவின் கடித வரிகளுக்கிடையே வைரங்கள் – ஜனநேசன்

    42. பேசித் தீரா கி.இரா. தாத்தா - கு.அ. தமிழ்மொழி

    43. கி.ராவுடன் சில நினைவுகள் - கோவி. ராதாகிருஷ்ணன்*

    44. கி.ராவின் பைதாவின் பட்டைகள் - ச. சுபாஷ் சந்திரபோஸ்

    45. கி.ரா… கதை சொல்லியின் கதா விநோதங்கள் – சாரதி

    46. கி.ரா. நினைவலைகள் - சி. திலகம்

    47. தந்தையின் நண்பர் கி.ரா. - சீராளன் ஜெயந்தன்

    48. அன்று பெய்த மழைக்கு நன்றி சொல்வோமா? - சென்னிமலை தண்டபாணி

    49. கி.ரா. எனும் ராயகோபுரம் - மு. ராஜேந்திரன்

    50. இன்னும் இருக்கிறவர்கள்… - சுகா

    51. ‘வாசகன்’ பார்வையில்… கி.ரா. – தஞ்சிகுமார்

    52. கதை வானின் அண்டரண்டப்பட்சி - துரை. அறிவழகன்

    53. மொழிபுதிது; அனுபவம்புதிது - பத்மா நாராயணன்

    54. கி.ரா. மாமாவும் நானும் - பாரதி மோகன்

    55. கதையும் கிழவனும் - மாளவிகா பி.சி.

    56. சில விவாதங்களை முன்வைத்து கி.ராவின் ‘கன்னிமை’: பெண் பற்றிய புரிதலும் ஆண் மனமும் - பி. பாலசுப்பிரமணியன்

    57. கி.ரா.: புதுச்சேரியில் மணம் வீசிய தெற்கத்தி ஆத்மா! - பி.என்.எஸ். பாண்டியன்

    58. கி.ரா. ஒரு அபூர்வம் - ஜெ. பொன்னுராஜ்

    59. கி.ராவின் படைப்புலகம் ‘காய்ச்ச மரம்’ கதையை முன்வைத்து - எஸ். ரவிச்சந்திரன்

    60. கரிசல்மண்ணின் ஆவணக் காப்பகம்: கி.ரா., - ம. பிரசன்னா

    61. பிரம்மரிஷி – மஞ்சுநாத்

    62. காலத்தின் கதைப் பெட்டகம்… - ம. மணிமாறன்

    63. கரிசல் நிலத்தில் உரமாகிப் போன பெரு மரம்! – மதரா

    64. எங்கள் மண்ணின் மைந்தர் கி.ரா.! - கு.வ. மார்க்கண்டேயன்

    65. இலக்கியச் சிந்தனையும் கி.ராவும் - மு. இராமனாதன்

    66. Ki. Rajanarayanan’s Kaancha Maram: A Comparative and Stylistic Study - Dr. R. Arunachalam

    67. கரிசல் மண்ணின் கலைஞர் - கி. ராஜநாராயணன்!

    68. கி.ராவின் கோபல்லபுரத்து மக்கள் புதினத்தில் வாழ்வியல் - முனைவர் சு.அர. கீதா

    69. கதைசொல்லி கி.ரா. - கோ. சுப்பையா

    70. கி.ராவின் கதைகளில் பெண் மதிப்பீடு - கோ. சந்தனமாரியம்மாள்

    71. தமிழ்ப் புலத்தில் அடியுரமாக விழுந்த கிடை - மு. சரோஜாதேவி

    72. நாயக்கர் வரலாறு கூறும் முன்மாதிரியில்லாத சாதனைப் புதினங்கள் - சீதாபதி ரகு

    73. கி.ரா. - பண்புகளின் பன்முகம் - இராச. திருமாவளவன்

    74. ‘காய்ச்ச மரம்’ மற்றும் ‘முதுமக்களுக்கு’ கதைகள் மூலம் உணர்த்திய வாழ்க்கைப் பாடம் - பெ. சரஸ்வதி

    75. கரிசல் பெருநிலத்தின் வியாசன் - ராஜா சிவக்குமார்

    76. கரிசல் கண்ணாடி - பொ. ராஜாராம்

    77. கரிசல் சம்சாரி - கி.ரா. - சு. விநாயகமூர்த்தி

    78. கி.ரா., புனைகதைகளும் அஃறிணைப் பொருட்களும் - கு. லிங்கமூர்த்தி

    79. கி.ராவின் கோபல்ல கிராமத்தில் கரிசல் வட்டாரவழக்கு - மா. ரமேஷ்குமார்

    80. கி. ராஜநாராயணன் கதைகளில் பெண் - பெ. இராஜலட்சுமி

    81. உளவியல் பார்வையில் கோபல்ல கிராமம் - அ. இராஜலட்சுமி

    82. கரிசல் காட்டு நாயகன் கி.ரா. - வாசு. அறிவழகன்

    83. కీ.రా. తో నా పరిచయం - డా. సగిలి సుధారాణి

    84. ಕನ್ಯತ್ವ - ತಮಿಳಿನಲ್ಲಿ: ಕಿ. ರಾಜನಾರಾಯಣನ್ - ಕನ್ನಡದಲ್ಲಿ: ಕೆ. ನಲ್ಲತಂಬಿ

    85. மௌன வாசிப்பில் நம் ஜீவனைத் தொடும் கி.ராவின் நினைவு – மதுமிதா

    86. உலகு தழுவும் புனைவுச் சிறகுகள் – அரவிந்தன்

    87. கி. ராஜநாரயணன்

    88. வெளி வந்த நூல்கள்

    89. காட்சி ஊடகம்

    90. வானொலி ஊடகம்

    91. மொழிபெயர்ப்புகள்

    92. பெற்ற விருதுகள்

    93. கி.ராவின் படைப்புகள் குறித்த நூல்கள்

    94. கி.ரா. பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள்

    1. கி.ரா. என்கிற சுத்த மனசுக்காரர்! - மு. ராமசாமி*

    96¾ ஆண்டுகள் வரையும், கரிசலின் கதைசொல்லியாய், கரிசலின் கலைக்களஞ்சியமாய்த் தன் எழுத்தாற்றல் மூலம், கரிசலாய்க் கொலு வீற்றிருந்து, கரிசலின் மண்மணத்தை, அழகிய சித்திரமாய்த் தமிழ் மண்ணுக்குப் படைத்தளித்த எழுத்தாளர் கி.ரா. என்கிற கி. ராஜநாரயணன் பற்றிச் சொல்வதற்கு, அவர் எழுத்தை வாசித்திருக்கிற, அல்லது, அவரோடு ஒரு பொழுதாகிலும் கலந்து கதையாடியிருக்கிற எவரொருவருக்கும், பொலபொலவென்று விடிகிற அனுபவமாய், கீசுகீசென்று ஆனைச் சாத்தான் அதை மொழிபெயர்த்து, தன் பெடையுடன் ‘கலந்து’ பேசுகிற பேச்சரவ அனுபவமாய், கதையன்று தங்காமல் போகாது. அப்படியான, கனதியான குணம் கொண்டவர் அவர்! கோவில்பட்டிக்குத் தெற்கே 7 கி.மீ. தொலைவிலிருக்கிற ஒரு குட்டிக் கிராமம் இடைச்செவல்! நெடுஞ்சாலையில், அந்த ஊரின் பெயர்ப் பலகையைக் கடக்காமல், கோவில்பட்டிக்குத் தெற்கேயிருக்கிற எங்கள் ஊர் பாளையங்கோட்டைக்குப் போக முடியாது. அப்பொழுது, நான் எழுதத் தொடங்கியபோது, இடைச்செவல், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்தது. அரசியல் மற்றும் நிருவாகக் காரணங்களால், 1986இல், அது, வ.உ. சிதம்பரனார் மாவட்டமாய்த் தனியாகப் பிரிந்துபோய், 1997இல், அது, தூத்துக்குடி மாவட்டமானது. எங்கள் மாவட்டம் என்னும் ‘துவரை’ அளவு பற்றிலேயும், இப்போது பசலை பிடிக்க ஆரம்பித்துவிட்டது. 1759இல், வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து, மேஜர் காலியத்தின் பீரங்கிக்குத் தன் மார்பை நிமிர்த்திய, மண்டியிடாத மானத்துக்குச் சொந்தக்காரர், அழகுமுத்துவின் கட்டாலங்குளமும், 1799இல், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, மேஜர் பானர் மென்னின் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட, துவண்டுவிடாத வீரத்திற்குச் சொந்தக்காரர், வீரபாண்டியக் கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சியும், பறங்கியர் ஆதிக்கத்தை எதிர்த்து, இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவித்துச் சிறைக் கொட்டடிக்குள் செக்கிழுத்த கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் ஒட்டப்பிடாரமும், ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’வான பாட்டுக்கொரு புலவன் பாரதியின் எட்டையபுரமும், திருநெல்வேலியிலிருந்து தனிக் குடித்தனமாகியிருந்த தூத்துக்குடியின் பங்கிற்குக் கிடைத்திருக்கும் பெரும் ஆஸ்திகள்! இப்போது, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றானதற்குப் பின், தரிக்கிற இடம்தான் நமக்கான வரிக்கிற இடமான பொழுதும், சொந்த ஊர் என்றால், மனசுக்குள் மெல்லியக் கிண்கிணி கேட்கத்தான் செய்கிறது. பிரிந்துபோன, அந்தத் தூத்துக்குடி ஆஸ்திகளின் வரிசையில் அமைந்துபோனவர்கள்தான், மணிக்கொடிக் காலத்து, அதையொட்டிய எழுத்தாளர்கள் எனும் முத்திரைபெற்ற, சாகித்ய அகாடமி விருதுபெற்ற, பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்களான கு. அழகிரிசாமியும், கி.ரா. என்றழைக்கப்படுகின்ற கி. ராஜநாராயணனும்! வீட்டில் அவருக்கு வைத்த பூர்வீகப் பெயர், ‘ராயங்கா ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமானுஜன்’ பொதுவுடைமை இயக்கத்துடன் தன்னை இழைத்துக் கொண்டிருந்த இவர் பிறந்தது, செப்டம்பர் 16, திராவிட முன்னேற்றக் கழகம், ராபின்சன் பூங்காவில் உதயமான நாள்! திரு ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் பதவியேற்ற பத்தாவது நாளில் (மே 17), கொரோனாவின் இரண்டாவது அலையால் தமிழகம் அல்லோலகப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பொழுதில், வயோதிகம் காரணமாக வாழ்வின் இறுதிப் பயணத்தை மேற்கொண்டு, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு அரசின், இரட்டை அரசு மரியாதைகளை ஏககாலத்தில் பெற்றிருக்கிற, அதிலும் தமிழ்நாட்டில் எழுத்தாளரைக் கொண்டாடுகிற விதமாய், முதல்முறையாக, அரசு மரியாதையுடன் வழியனுப்ப, அவருக்கான மணிமண்டபம் எழுப்ப முயற்சி என்று எழுத்தாளரைக் கௌரவிக்கிற விதமாய் அரசே முனைந்திருப்பது, தமிழுக்குக் கிடைத்திருக்கிற புதுவரவு! வானம் பார்த்த பூமியிலிருந்து, வளமான கதைகளை, அதன் வட்டார வழக்குகளைத் தமிழுக்கு நீராய்ப் பாய்ச்சிய கி.ரா.விடமிருந்து, அந்தப் புது மரபு தொடங்கியிருப்பதற்கு, தமிழ்ப்படைப்புச் சமூகம், தமிழ்நாடு அரசுக்குத் தன் பூரிப்பையும் நன்றியையும் சொல்வது கடமையாகும். அதேபோல், அவரில்லாத இந்த (2021) செப்டம்பர் 16இல், அவரின் நினைவாக, மலர் ஒன்று கொண்டுவர நினைத்திருக்கிற மலர்க் குழுவிற்கும், அதற்கு முன்சால் ஓட்டியிருக்கிற திரு கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் அதற்குத் துணைநிற்கிற அத்தனைத் தோழமை உள்ளங்களுக்கும் என் நன்றி!

    கி.ரா. எனக்கெப்படிப் பழக்கம்? எழுபதுகளில், முதுகலைத் தமிழ் இலக்கியம் படிக்கிற ஒரு மாணவன் அல்லது இலக்கியத்தேட்டம் உள்ள ஒருவர், கி.ரா. என்கிற பெயரைக் கடந்துவராமல் நிச்சயமாய் இருக்க முடியாது. அப்படித்தான் நானும்! அதற்குமுன், என் பத்தாவது வகுப்பிலிருந்து, என்னைப் புடம்போட்டுக் கொண்டிருந்த, கல்கி, மு.வ., ந.பா., ஆகிய சுத்த சைவ எழுத்துகளை ஓரம்கட்டி வைக்கிற விதமாய், நவீனத் தமிழ் இலக்கிய ஜாம்பவான்களை அறிமுகம் கொள்வதற்கான, அதில் இலயித்து மகிழ்வதற்கான கல்லூரிப் புறச்சூழல்களும், அதை உள்வாங்கிக் கொள்ளும் அகச்சூழலும் எனக்குள் உருவாகியிருந்தன. அப்படி, 1971இல் பாளை, தூய. சவேரியார் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயில்கிறபோது, என்னை வந்தடைந்த, முதல் பருவத்து எழுத்தாளர்களின் எழுத்துகளில் ஒன்றாய், அவரது ‘கிடை’ - குறுநாவல் எனக்குப் பாடமாயிருந்தது. வாசகர் வட்டம் 1968இல் வெளியிட்ட அறுசுவைத் தொகுப்பில் ஒரு சுவையாய் அப்பொழுது ‘கிடை’ இருந்தது. அப்பொழுது, அதில் கிறங்கிப்போய்க் கிடந்தவர்களில் நானும் ஒருவன். கிடை பற்றிய, அச்சமூகம் பற்றிய, கிடை ஆடுகள் பற்றிய தகவல் கலைக்களஞ்சியமாயும், அது இலக்கிய வனப்புடன் மிளிர்ந்தது. இப்படித்தான், அவர் எனக்குள், தன் எழுத்தின் வழி, தன் முகம் காட்டிக் குடிகொண்டிருந்தார். மொழியில் புத்திசாலித்தனத்தைக் காட்டிக்கொள்ளாத அவரின் மொழி, செம்புலப் பெயல் நீராய், கரிசல் மண்ணுடன், அங்குள்ள மனித உறவுகளுடன் பாசாங்கின்றி ஒருசேரக் கலந்து மிளிரக்கூடியது.

    என் ஆசிரியர்கள் தமிழவன், சிவசு ஆகியோர்களின் முன்முனைப்பில், முதுகலை மாணவர்களான எங்கள் சிலரையும் சேர்த்துக்கொண்டு, ‘ஆக்டோபஸ்ஸும் நீர்ப்பூவும்’ (1972) கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்து, நா. காமராசனின் ‘கறுப்புமலர்க’ளுக்குப்பின், கவிதைகளில் முற்போக்கு பேசிய ஒன்றாகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரம் அது! ‘தெருக்கூத்து’ என்கிற இதழையும், தமிழவனின் பெங்களூர் முகவரி போட்டு, பாளையிலிருந்து அச்சடித்துக் கொண்டுவந்து கொண்டிருந்த நேரமும் அது! அப்பொழுதுதான் நெல்லை மாவட்டத்து இலக்கியவாதிகள் பலரும் அறிமுகம் ஆகிறார்கள் எனக்கு! தி.க.சி., கல்யாண்ஜி, வல்லிக்கண்ணன், வண்ணநிலவன், கலாப்ரியா, கரிசல் படைப்பாளிகளாக பா. செயும், பூமணியும் கூட அறிமுகம் ஆகிறார்கள். 1973இல் வெளிவந்திருந்த கலாப்ரியாவின் ‘தீர்த்தயாத்திரை’ கவிதைத் தொகுப்பிற்கு, கி.ரா. எழுதியிருந்த, ‘கிழவனுக்கல்ல வாகைத்தடி வேண்டும்… உனக்கென்ன ராசா’ என்கிற வீரியமுள்ள ஒரு வரி, என்னை, அப்பொழுது உலுக்கிப் போட்டிருந்தது; இன்னமும், எனக்குள் சலசலத்து அந்தவரி ஓடிக் கொண்டேயிருக்கிறது. அப்பொழுது அவர் எனக்குள் இன்னுமே கொஞ்சம் உயர்ந்திருந்தார். நானே, அந்த வரிகளைப் பலருக்கும் பரிந்துரைத்திருக்கிறேன். இந்தச் சூழலிலேதான், நான் மதுரைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் ஆய்வு மாணவனாகச் சேருகிறேன். அங்கு, 1974இல், தமிழ் முதுகலை முதலாமாண்டு படிக்க வந்து, பக்கத்து மாணவர் விடுதியில் தங்கியிருந்த, டி. மணி (தென்காசிக்காரர் என்பதாக நினைவு! அப்பொழுது அதுவும் நெல்லை மாவட்டம்) இலக்கியவாதிகளிடம், பழுத்த அனுபவப் பழக்கம் கொண்டவராயிருந்தார். அவர் மூலமாகத்தான் கி.ரா., வல்லிக்கண்ணன், லா.ச.ரா. போன்றோர் என் விடுதி அறைக்கு வரத்தொடங்கினர். ஆய்வு மாணவன் என்பதால் தனி அறை எனக்கு! வந்தால், தங்கிக்கொள்ளவும், அசதியை நீக்கிக்கொள்ளவும் அவர்களால் முடிந்தது. ஒருமுறை என் அறைக்கு வந்திருந்தபோது, நான் எழுதியிருந்த என்னுடைய மூன்றாவது கதையை - ‘நீர்க்கசிவு’ அதன் பெயர். கி.ராவிடம் படிக்கக் கொடுத்துக் கருத்துக் கேட்டதும், அவர் படித்து முடித்துவிட்டுக் கருத்தெதுவும் சொல்லாமல், தலையை மட்டும் ஆட்டி, மெல்லிய சிரிப்பை முகத்தில் நகர்த்தியபடி, என் கையில் கொடுத்ததும் பசுமையாய் நினைவிலிருக்கிறது. யாரையும் தொல்லை பண்ணிவிடக் கூடாதென்று நினைக்கிற பெரியமனம் அவருக்கு! அதன்பின், எழுத்தை யார் கையிலும் கொடுத்து, முகத்திற்கு நேராகக் கருத்துக் கேட்பதில்லை என்கிற திடமான முடிவிற்கு வரக் காரணமாயமைந்தது அது! அப்பொழுது பேரா. கனகசபாபதி, பேரா. துரை சீனிச்சாமி, தமிழ் இரண்டாமாண்டு மாணவர் செ. மோகன், கவிஞர் பரிணாமன், நான் என்று, சிலர் சேர்ந்து, ‘விழிகள்’ இலக்கியப் பத்திரிகையை மதுரையிலிருந்து கொண்டுவரத் தொடங்கியிருந்தோம். ஆகையால், பத்திரிகைக்காரனாகவும், முற்போக்கு முகாமிலிருந்து எழுதுகிறவனாகவும் மற்றவர்கள் என்னைப் பார்க்க ஆரம்பித்திருந்தனர். இந்த வகையில், ‘அழகின்தேம’லாய்ப் ‘பரிதி புணர்ந்து படரும் விந்து’ ‘வாய்ப்பரவுகிற புலருதல்’ என்பது, கவிதைக்குள் பிடிபடாத மாதிரி, பூவின் மலர்தலாய், இயல்பான ஒரு மகிழ் அனுபவம் உள்ளுக்குள் உருவாகி, அது இன்னமும் நெருக்கமாக்கியிருந்தது, அவருடன்!

    நான் அப்பொழுது, தமிழக நாட்டார் நிகழ்த்துக்கலைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த நேரம்! நிகழ்த்துக்கலைகளைத் தேடிப் போகிற இடங்களில், அவர்களின் தொடர்புகளின் மூலம், தொடர்புகளுக்குமேல் தொடர்புகள் என்று, ஊர்களைத் தேடி, ஊர்களின் கதைகளைத் தேடி, அவர்களின் பாடல்களைத் தேடி என்று, பயணப்பட்டு அனைத்தையும் பதிவு செய்துகொண்டிருந்த நேரம் அது! இந்த இடத்தில், என் கல்லூரிக் காலத்துத் தமிழ்ப் பேராசிரியர், தே. லூர்து அவர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவேண்டும். அவரும் ஒரு கதைப் பொக்கிஷம்! அவரின் முனைவர் பட்ட ஆய்வு, அமெரிக்காவில் பேராசிரியர் ஆலண்டண்டிஸ் (Alan Dundes) மேற்கொண்டிருந்த உளவியல் சார் ஆய்வான, ‘கழிவறைக் கிறுக்கல்கள்’ (Latrinalia) ஆய்வைப் பின்பற்றிய ஒன்றான, ‘தமிழகப் பழமொழிகள்’ (Proverbium) ஆகும். ஒருமுறை, வகுப்பறையில், ‘கெட்ட வார்த்தைப் பழமொழிகள்’ பற்றி அவர் சிலாகித்துப் பேசினார். மாணவர் அனைவருமே ஆண்கள்! அது, புதுமாதிரியாக இருந்தது எனக்கு! மாணவர்களாகிய எங்களிடம், அந்தக் காலத்திலேயே (1971), அப்படியான பழமொழிகளை அவருக்குச் சேகரித்துக் கொடுத்து உதவ வேண்டினார். தரவுகள் சேகரிப்பதற்கான ஒரு வழியாக, அதை அவர் எங்களிடம் கேட்க, நானும் அவருக்கு உதவுகிற தோரணையில், என் பங்கிற்கு, கல்லூரி நாட்டாரியலில் (College Folklore), அதுமாதிரியான தரவுகளின் களங்கள் அதிகம் என்பதால், அவற்றைச் சேகரிக்க ஆரம்பித்தேன். யாரும் கேட்டால், பேராசிரியரின் முனைவர் பட்டத்திற்காக என்று சொல்லிக்கொள்வது, கூடவே, அமெரிக்காவிலேயே அப்படித்தான் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்பதாய்ப் பெருமிதம் பேசுவது என்று, அவர்களின் முகங்களுக்குள் நான் மறைந்து கொள்வது, கொஞ்சம் வசதியானதாகவே எனக்கு இருந்தது. பேராசிரியருக்காக, அமெரிக்காவிலேயே இதுதான் நாட்டாரியல் போக்கு என்று, இப்படியான சேகரிப்பிற்காக நான் இறங்கப் போய், நானே பிற்பாடு, அதற்குள் முத்துக்குளிக்க ஆரம்பித்துவிட்டதும் நடந்தது. அது, மிகப்பிருமாண்டமான களம்! மனிதர்களின் உளவியல், சமூகவியல், பண்பாட்டியல் ஆய்வுகளுக்குப் பெருத்த துணை செய்யக்கூடியது அது. மதுரைப் பல்கலைக்கழகத்தில், எனக்கு நானே ராஜாவாயிருந்ததால், நானாகவே அதுமாதிரியான கதைகளையும், பேய்க்கதைகளையும் சேகரிக்கத் தொடங்கினேன். எந்தச் சூழலில், அந்தப் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன, அந்தப் பழமொழிகளுக்குப் பின்னாலிருக்கிற, அதை உருவாக்கியிருக்கிற கதைகள் என்னென்ன, எந்த வயதினரிடமிருந்து, எந்த ஊரில் வைத்து அவை சேகரிக்கப்பட்டன என்கிற தகவல்களுடன் அவற்றைப் பதிவுசெய்து வைத்திருந்தேன்.

    முதலில் தெரியாது என்று சங்கோசம் காட்டி, நல்லபிள்ளை எனப் பெயர் வாங்க ஆசைப்படுவார்கள். தனித்து அழைத்துச்சென்று கேட்டால், குரல் மட்டும்தான் என்பதால், முதலில் வெட்கப்படுவார்கள், மெல்ல, நாம் ஒரு கதையைக் கூச்சம்போக்க எடுத்துவிட்டால், அது தொற்றி, ஒருவரிடமிருந்து மற்றவர் என்பதாய், ஒருவர் சொன்னதை, மற்றவர் திருத்தியும் என்பதாய்க் ‘கெட்ட வார்த்தைக் கதை’களை வழங்குகிற அட்சயப் பாத்திரமாக அவர்கள் மாறிவிடுவார்கள். அப்படிக் கிடைத்த, அற்புதமான தரவுகள் கொண்ட ஒலிப்பேழைகளை மதுரைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில், நான் அங்கிருந்து வெளியேறுமுன் (1982), கொடுத்துவிட்டு வந்தேன். இப்பொழுது அதன் புகலிடம் என்னவானதென்று யாருக்கும் தெரியவில்லை. தோற்பாவை நிழற்கூத்துக் கதைகளை எடுத்தெழுதியவன், இந்தக்கதைத் தொகுப்புகளின் பதிவுகளை எடுத்தெழுதாமல் மறைத்து வைத்திருந்து, பின் பல்கலைக்கழகத்திடம் அத்தனையையும் கொடுத்துவிட்டு, வெறுங்கையனாய் அங்கிருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டது. 45 அல்லது 46 ஆண்டுகளுக்கு முந்தைய ஆடவர்களிடமிருந்து பெற்ற அரிய சேகரிப்புகள் அவை! அதன்மதிப்பு, நாற்பத்தாறு ஆண்டுக் காலத்திற்கு முந்தைய மனிதரில், ஒருசாராரின், பாலியல் அறிவுபற்றிய வாய்மொழிக்கதை மரபு!

    இந்த வகைச் ‘சேகரிப்புச் சேகர’னாய், நான் உலா வந்துகொண்டிருந்த பொழுதில், 1975-76இல் கோவில்பட்டி நண்பர்கள் கௌரி ஷங்கர் போன்றோர் ஏற்பாட்டில், கோவில்பட்டியில், ஒரு பள்ளியில் திரையிட்டிருந்த, சத்யஜித் ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’ படம் பார்க்கக் கோவில்பட்டி போயிருந்தேன். அது, காந்திக் கிராமத்தின் சேகரிப்பிலிருந்து பெறப்பெற்றிருந்த படப்பெட்டி! திரையிட்டு முடிந்தபின், அங்கிருந்து அதைத் திரும்ப மதுரைக்கு வாங்கிச் செல்லும் பொறுப்பு என்னுடையது. நான் காந்திக்கிராமம் சென்று, அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த இராமானுஜம் சாரிடம் அதை ஒப்படைக்க வேண்டும் என்பது ஏற்பாடு! கி.ராவும் வந்திருந்தார். படம் பார்த்து முடியவும், படப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு, இரவு உணவு முடித்துக் கிளம்புகையில், கி.ரா., நான், கௌரி ஷங்கர், இன்னும் சிலர் விடிகாலை இரண்டரை அல்லது மூன்று மணிக்குக் கோவில்பட்டியிலிருந்து நான் மதுரைக்கு இரயில் ஏறும்வரையும், இரயில் நிலையத்தில் அமர்ந்து ராக்கோழிகளாய்ப் பேசிக் கொண்டிருந்தது நன்றாக நினைவிலிருக்கிறது. படத்தைப் பற்றியும் எழுத்தைப் பற்றியுமே, அக்கு அக்காய்ப் பிரித்து நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். இராமானுஜம் சாரின் தொடர்பால், எனக்குள் பட்டுப்போயிருந்த நாடக ஆர்வம், மெல்லத் துளிர்விட்டு எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது. ‘விழிகள்’ இதழில், ‘யானெ’ என்கிற நாடகத்தை அப்பொழுது எழுதியிருந்தேன். நாடகக்காரனாய் இலக்கிய உலகில் என்னை அடையாளப்படுத்த அடியெடுத்துக் கொடுத்திருந்தது அந்த உரையாடல்! அதைப்போன்றே இப்பொழுது சொல்லப் போகிற இந்த நாடக நிகழ்த்தல் அனுபவமும், இதுவும் 1976ஆம் ஆண்டாகவே இருக்கலாம். பேருந்து ஏற்பாடு செய்து, தமிழ்த்துறையினர் அனைவரும், நிலக்கோட்டைக்கு அருகிலிருக்கிற அணைப்பட்டிக்குச் சுற்றுலா போகிற வழியில், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாயிருந்த ஒரு பொழுதில், அந்தப் பேருந்திற்குள் கி.ராவின் கதையொன்றை நாடகமாக நிகழ்த்திக் காட்ட விரும்பினேன். அது பேருந்திற்குள் நடக்கிற நிகழ்வுதான்! கி.ராவின் ‘மின்னல்’ கதை!

    பேருந்து போய்க் கொண்டிருக்கிறது. பயணம் செய்யும் பயணிகள், ஒவ்வொரு மாதிரியான சிந்தனைகளுடன், இறுகிப்போன முகத்துடன், பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். நடத்துநர், பயணச் சீட்டு வழங்கிக் கொண்டிருக்கிறார், கொஞ்சம் எரிச்சலுடன், கொஞ்சம் கலகலப்புடன், கொஞ்சம் மோதலுடன்! பயணிகளில் சிலர், அருகிலிருப்பவரின் தோளோடு தோள் உரசி மல்லுக்கட்ட ஆரம்பிக்கின்றனர். சன்னல் வழியாக எச்சிலைத் துப்பியதால், பின் இருக்கைக்காரர்களிடமிருந்து ஒரே ஏச்சுப் பேச்சு! எதையும் காதில் வாங்காமல் தூங்கிக் கொண்டிருப்பவர் சிலர் பக்கத்து ஆளின் தோளில் தலைசாய, அவர் பண்ணுகிற எடக்குமடக்கென்று பேருந்துப் பயணம் நடக்கிறது.

    ஒரே சச்சரவாயிருக்கிறது அந்தப் பேருந்துப் பயணம்! சுற்றமாய் யாரையும் பார்க்காததால், எல்லாமே குற்றமாயிருந்தது அங்கு! அப்பொழுது ஒரு நிறுத்தத்தில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்துகிறார். ஒரு பெண்ணும், அவரின் இடுப்பில் அமர்ந்திருக்கிற ஒரு குழந்தையும் பேருந்தில் ஏறுகின்றனர். நடத்துநர், பயணச் சீட்டுக் கொடுத்துவிட்டு, நகர்கிறார். குழந்தை பேருந்தை நோட்டம் விடுகிறது. சிடுமூஞ்சிக்காரர்கள் ஒவ்வொருவராக, தங்கள் சமன் குலைய, குழந்தையைப் பார்த்துச் சிரிக்கின்றனர்; சொடக்குப் போடுகின்றனர்; தலையை ஆட்டிக் கூப்பிடுகின்றனர்; சப்தம் எழுப்பி வேடிக்கை காட்டுகின்றனர். குழந்தை சிரிக்கிறது; தாயிடம் முகம் மறைத்து, வெளிக்காட்டி வேடிக்கை காட்டுகிறது. பேருந்து முழுக்கவும் கலகலப்பாயிருக்கிறது. குழந்தையைக் கவர ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். ஒரு நிறுத்தத்தில், அந்தப் பெண்ணும் குழந்தையும் இறங்கிவிடுகின்றனர். மீண்டும் அந்தப் பேருந்து, பழையமாதிரி இறுக்கமாகிப் போகிறது. இதைக் காட்சியாக விளக்கி, யார்யார் என்னென்ன செய்யவேண்டும் என்பதை விளக்கிவிட்டு, அவரவர்களுக்கு என்னென்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் செய்யலாம் என்று கூறி, பெண் ஆராய்ச்சி மாணவி ஒருவரையும், ஒரு ஆசிரியரின் குழந்தையையும் கடைசி இருக்கையில் உட்காரச் சொல்லிவிட்டு, அவர்களை மறைக்கும்படியாக நான்கைந்துபேரை அவர்களின்முன் நிற்கச் சொல்லிவிட்டேன். பேருந்து நிற்கையில், அந்தப் பெண்ணும் குழந்தையும் மறைவாகப் பின்வாசல் வழியாக இறங்கி, முக்காடிட்டுக் கொண்டு, முன்வாசல் வழியாகப் பேருந்தில் ஏறி, நடுப்பகுதியின் வெளி ஓரத்தில் அமர்வார்கள். எல்லாம் திட்டமிடப்பட்டவைதாம்! பேருந்து கலகலப்பாக மாறும். பின் ஒரு நிறுத்தத்தில் இருவரும் முன்வாசல் வழியாக இறங்க, பின்வாசல் வழியாக ஏறி அவர்கள் இடத்தில் அமர்ந்து கொள்வார்கள். அருமையான அனுபவமாயிருந்தது அனைவருக்கும்! ஒழுங்கு சிறிது சிதறியிருந்தாலும், ஒத்திகைகள் பார்த்து மெருகேற்றி இருக்காதிருந்ததாலும், பேருந்தில் இருந்த அத்தனைப்பேரும், நிகழ்த்தும் கதையின் குவி மையத்தில் கருத்தூன்றி இருந்து, தங்கள் தங்கள் மனதிற்குப் பிடித்தபடி, பங்கேற்பாளர்களாய், எல்லோருமே குழந்தைகளாக ஆகிப்போனது நடந்தது. என் பேராசிரியருக்கு, என்மேல் நம்பிக்கையும் பிடிப்பும் வர இதுவும் காரணமாயிற்று. பேருந்து போய்ச் சேரும்வரையும் அதுவே பேசுபொருளாயுமிருந்தது.

    கி.ரா. அப்பொழுது என்னை இப்படியும் பாதித்திருந்தார். எனக்கும் அது புதிய அனுபவம்! பயணம் செய்த அத்தனை பேருக்குள்ளும், ஓட்டுநர், நடத்துநர் வரையும் கி.ரா. இப்படித்தான் அன்று பதியமாகிப் போயிருந்தார். நல்லதொரு அனுபவம் அனைவருக்கும்!

    கதையின் பெயர், எனக்கு இப்பொழுது நினைவிற்கு வரவில்லை. ஆனால் காட்சிகளின் அசைவுகள் ஒவ்வொன்றும் எனக்குள் இன்னமும் மறக்காதிருக்கிறது. எழுத்தாளர், தோழர் பா.செ. அவர்களைத் தொடர்புகொண்டு, அசைவுகள் ஒவ்வொன்றையும் அவரிடம் சொல்லி, கதையின் தலைப்பைக் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, ‘நீங்க நாடகக்காரர்ங்றதுனால ஒவ்வொரு குறிப்பையும் சொல்லுறீங்க. எனக்கு அதெல்லாம் ஞாபகமில்லெ. ஆனா, அந்தக் கதையின் பேரு மின்னல்’ என்கிறார். கி.ராவிற்கு நான் செய்திருந்த அந்தப் படையல், பார்வையாளர்கள் யாருமின்றி, எல்லோருமே பங்கேற்பாளர்களாகக் கலந்து கொண்ட, புதுவகை நாடக அனுபவமாயிருந்தது!

    2018 என்று நினைக்கிறேன், ராஜீவ் கிருஷ்ணன் நெறியாளுகையில் உருவான, சென்னை ‘பெர்ச்’ குழுவினரின் ‘கி.ரா. குழம்பு’ என்கிற, அவரின், பல கதைகளின் கலப்பில் உருவான ஒரு நாடகத்தை, மதுரையில் நடத்த, மணியம்மை தொடக்கப் பள்ளியில் இடம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன், நிஜநாடக இயக்கத்தின்மூலம்! இரண்டாவது முறையாக, கி.ராவின் படைப்பு, மதுரை மண்ணில் நாடகமாக நிகழ்த்தப்பட்டிருந்தது என்பது முக்கியமானது!

    அது 1979 அல்லது 1980 ஆக இருக்கலாம். மதுரையில் ஒரு திருமணத்தில் சந்தித்தது நினைவிருகிறது. யாருடைய திருமணம் என்பது இப்பொழுது நினைவிலில்லை. ஆனால், திருமணத்தை ஒட்டி நிகழ்ந்த மறக்கமுடியா நிகழ்வு ஒன்று பசுமரத்தாணியாய் உள்ளுக்குள் உறைந்து கிடக்கிறது. திருமணம் முடிந்து, கீழவெளி வீதி சிந்தாமணித் திரையரங்கு அருகில், அம்சவல்லி பவனுக்கு எதிரே ஒரு முக்குக் கட்டிட மாடியில் நான், கி.ரா., தஞ்சை பிரகாஷ், விக்கிரமாதித்தன், வண்ணநிலவன், கலாப்ரியா ஆகியோர் இரவில் அங்குத் தங்கியிருந்து, காலையில் அவரவர்கள் பாடுகளுக்குக் கிளம்ப வேண்டியதிருந்தது. இரவில் துங்காமல் முழு இரவும் பேசிக் கொண்டிருந்தோம். தூக்கம் வராமலிருக்க, தஞ்சை பிரகாஷ், விக்கிரமாதித்தன் என்கிற நம்பிராஜன் இருவரும், கெட்ட வார்த்தைக் கதைகளை, ‘நைனா’ கி.ராவைச் சொல்லச் சொல்லிக் கேட்க, மிகுந்த பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தனர். இரண்டாம்கட்ட நிலையிலிருந்து, நாங்கள் சிரித்தபடி, அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான், கி.ரா. ஒரு நிபந்தனையைப் போட்டார். அதாவது ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லி வரவேண்டும். அவருக்குத் தெரியாத கதையாக இருந்தால் மட்டுமே, அவர் கதை சொல்வதாக ஒப்பந்தமானது. ஒவ்வொருவராக, அவரவர்களுக்குத் தெரிந்த கதைகளை எடுத்துவிட ஆரம்பித்தனர். இலக்கியவாதிகள் ஒவ்வொருவராக ஒருவொரு கதை சொல்லிவர, எதுவும் கி.ராவிடம் எடுபடவில்லை. அந்த வரிசையில், கடைசியாக என்னிடம் கதை கேட்டு நின்றது அந்த ஜமா! நான், என் மனச் சேகரிப்புகளிலிருந்து, இதுவரையும் அங்குச் சொல்லாத ஒரு கதையினை, இனம்புரியாத வெட்கத்தோடு, சொல்ல ஆரம்பித்தேன். பேச முடியா மகாகவி காளிதாஸ், தட்டுத்தடுமாறி எழுத்தெண்ணிப் பாட, அதுவே பிற்பாடு, அருவியாய்க் கொட்ட ஆரம்பித்த மாதிரி, கதை கரைபுரண்டு ஓடத் தொடங்கியது என்னிடமிருந்து! காளியின் அருட்பார்வை காளிதாஸுக்குக் கை கொடுத்ததுபோல், கி.ராவின் அருட்பார்வையும், முன்னாடி, அண்ணாந்து வாய்ப் பார்த்திருந்த இலக்கியப் பக்தகோடிகளின்மேல் விழத் தொடங்கியது. இது, நான் இதுவரையும் கேட்காத கதை என்று பெருமூச்சுவிட்டார் கி.ரா.! எல்லோருக்கும் அப்படியொரு சந்தோஷம்! கி.ரா. கதை சொல்லத் தொடங்கினார். கதைச் சுற்று விடியும்வரையும் தொடர்ந்தது. அந்த இடத்தில் கி.ராவின் பார்வை, என்மீது சனி தோஷமாய் விழ ஆரம்பித்தது. நான் கூறியவற்றில் பலதும் அவருக்குத் தெரியாததாயிருந்தது. கரிசல் பூமிக்காரர், வையைக் கரைக்காரருக்கு (பொருநை நதி தான் பூர்வீகம்) மகுடம் சூட்டியது அங்குதான் நிகழ்ந்தது. இது எதுவும் என் புத்திசாலித்தனத்தால் உருவானவை அல்ல. எல்லாம் கல்லூரி மாணவர்களிடமிருந்தும், கதை சொல்லிகளிடமிருந்தும் திரட்டியவைதாம்! பேரா. லூர்து மாதிரியான ஆசிரியர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். கல்லூரியில்தான் அவர் பேராசிரியர்; கண்ணாடியைக் கழட்டினால் இதுமாதிரிக் கதைகளின் பொக்கிஷம் அவர்! அவரின் உளப்பூர்வமான மாணவனாயிருந்ததால், கி.ரா. மகுடம் அப்பொழுது என்னை அந்த இடத்தில் அழகு கூட்டியது. பொழுது புலரவும், அவரவர்கள் பாடுகளைக் கவனிக்க, ஒவ்வொருவராய் விடைபெற்றுச் சென்றுவிட்டோம். 1982 - 83 இருக்கலாம். அப்பொழுது, எழுத்துச் சித்தர் வலம்புரி ஜான் ஆசிரியராயிருந்த ‘தாய்’ இதழில் கி.ராவின் பாலுணர்வுக் கதைகள் வெளிவருவதாய் அறிவிப்பு வந்திருந்தது. அவரின் கதைப் புதையலுக்குள், என் கதையும் கலந்திருக்குமா என்பதை அறிகிற ஆர்வம் மட்டுமே, லேசாக எனக்குள் வந்துபோனது. அவ்வளவே! பாளையங்கோட்டை போயிருக்கிறேன். ஒருநாள், என் சித்தப்பா என்னை அழைத்து, ‘தாய்’ பத்திரிகை ஒன்றை நீட்டி, ‘இது நீயாப்பா’ என்கிறார்கள். நான் வாங்கிப் பார்க்கிறேன். ‘வயது வந்தோர்க்கு மட்டும்’ என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. அதில்தான், அந்தத் தொடர் ஆரம்பிக்கிறது. தயக்கத்துடன் வாசித்துப் பார்க்கிறேன். தொடருக்கான முன்னுரையாக அவர் சில விஷயங்களைச் சொல்லி வருகிறபோது, ஓரிடத்தில், மதுரைப் பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும், செக்ஸ் கதைகளில் ‘கில்லாடி’யான மு. ராமசாமி என்கிற வரியைப் படிக்கிறபோதே, என் சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. அவமானம், ஆஜானுபாகுவாய், என்னை மிஞ்சி வளர்ந்து நின்றது. வாய் பேசமுடியா மகாகவி காளிதாஸாக, வார்த்தைகள் எனக்குள் தள்ளாடத் தொடங்கின. ‘நீதானாப்பா அது?’ - திரும்பவும் குத்தீட்டி கொண்டு வார்த்தைகள் என்னைக் குத்த தொடங்கின. ‘இல்லெ. நான் ஆய்விற்காகச் சேகரித்த சில நாட்டுப்புறக் கதைகளை அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன், அவ்வளவுதான்.

    அவரு இப்படி எழுதுவார்னு எனக்குத் தெரியாது’ என்கிறேன், இழுத்து இழுத்து நான்! ‘இப்படியா அசிங்கப்படுத்துறது. சரி, அவர் முகவரியைக் கொடு… நான் அவருக்கு எழுதுறேன்’ - சித்தப்பா!

    ‘இலக்கியம் செய்வதென்றால் எளிதில்லை, எழுத்தாளா’ என்பது அசரீரியாக உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘இல்லை, நானே எழுதுறேன்’ என்று அஞ்சலட்டையில் அவருக்குக் கடிதம் அனுப்பினேன். அதன் சாரம் இப்படி:- ‘ஒரு நாட்டுப்புற ஆய்வாளன் என்கிற கோதாவில், நான் சேகரித்த சில கதைகளை, உங்களிடம் பகிர்ந்தது உண்மை. அது உங்களிடமிருந்து ‘கில்லாடி’ பட்டம் பெறுவதற்காக அல்ல. ஆய்வாளன் என்கிற முறையில், அதில் ஆர்வமுள்ள உங்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன். எனக்குப் பெரிய மானக்கேடான காரியத்தை நீங்கள் செய்துவிட்டீர்கள். உங்களைப் பெரியவராக நினைத்துப் பேசியது அது, எனக்குச் சிறுமை சேர்த்துவிட்டீர்கள்… அவமானமாயிருக்கிறது என் சித்தப்பாவைப் பார்ப்பதற்கே… இந்தப் பழியை இனி எப்படித் துடைக்க முடியும்’ என்பதாக எழுதியிருந்தேன். அவரிடமிருந்து மறுமொழி வந்திருந்தது, என் சித்தப்பாவின் முகவரி கேட்டு! என் சித்தப்பாவிடம் அவர் பேசிக் கொள்வதாக! வெறுத்துப்போய், இந்தக் கண்டத்திலிருந்து தப்பிக்க, அவருக்குக் கடிதம் எழுதுவதையே அத்துடன் விட்டுவிட்டேன். ‘சேரிடம் அறிந்து சேர்’ என்பதைச் சும்மாவா சொல்லி வைத்தார்கள் பெரியவர்கள் என்பதாக என்னையே நொந்து கொண்டேன்.

    இதன்பிறகு, அதையெல்லாம் மறந்து, நான் என் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தேன். ‘தாய்’ இதழ் போலவே, அழுத்தமான வடுவாக மனதில் தங்கிப் போன இன்னொன்று, பதினெட்டு ஆண்டுகளுக்குப்பின், 1998இல் நிகழ்ந்தது. அப்பொழுது, என் செண்பகம், மதுரை சினிப்ரியா திரையரங்கிற்கு எதிரே இருக்கும், ஜெ ஜெ மருத்துவமனையில், தன் இறுதிப் பயணத்திற்கான போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார். மார்ச் 14 காலக் கணக்கன் என் செண்பகம் கணக்கை முடித்து வைத்த நாள்! இது மார்ச் 10 அல்லது 11 ஆக இருக்கலாம். தினமும் வருகை தருவோர் எண்ணிக்கை, மருத்துவமனையில் கூடிக் கொண்டேயிருந்தது. இனி இங்கிருப்பதால் பயனில்லை, ஆகவே, மருத்துவமனையிலிருந்து, என் செண்பகத்தை வீட்டிற்குக் கொண்டு செல்ல மருத்துவர் என்னைக் கூப்பிட்டுப் பேசுகிறார். அப்பொழுது, என் செண்பகத்துடன் பணிபுரியும் அவர் துறைப் பேராசிரியர் ஒருவர், என் செண்பகத்தின் அசைவற்ற உடலைப் பார்க்கிறார். அசைவுகள் மெல்லக் குறைந்து கொண்டே வருகின்றன. கண்கள் மட்டும் எதையோ சொல்லத் தவித்துக் கொண்டிருப்பது மட்டும் தெரிகிறது, மற்றபடி பேச்சில்லை.

    திடீரென்று அவர், பையிலிருந்து, வெள்ளை வண்ணத்திலான ஒரு நீண்ட புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார், அது ‘வயது வந்தோர்க்கு மட்டும்’ நூல்! நான், திருட்டு முழி முழிக்கிறேன். அவர்கள் கல்லூரி நூலகத்தில் இருந்ததாம். எடுத்துப் படித்தால், முன்னுரையைப் புரட்டி, ‘இது நீங்கதானா சார்?’ என்கிறார். ‘தாய்’ இதழில், 18 அண்டுகளுக்குமுன், நான் படித்து, என்னைக் குலைநடுங்க வைத்த அதே சங்கதி, நூல் வடிவிலும்! மேற்படி ‘பார்ட்டி’யா நீ, என்பதாக என்னையே அருவெறுக்கச் செய்ததாயிருந்தது அது! எனக்குள் குமைந்து போனேன். பதினெட்டு ஆண்டுகளாக என்னைத் தொடர்ந்தே வரும், பாவக் கறை இது என்பதாக எனக்குள் மருகினேன். திரும்பவும், ‘ஆய்வுக் கண்ணோட்டத்துடன் சேகரித்தது’ என்பதையே வாய் சொல்லிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு, ‘மதுரைப் பல்கலைக்கழகம்’ என்பதும் ‘மு. ராமசாமி’ என்பதும் என்னைத்தான் என்பது, உறுதியாகத் தெரியும். பின் எதற்காக அரம் கொண்டு நெஞ்சை அறுக்கிற இந்தக் கேள்வி? அந்தக் ‘கில்லாடி’ பட்டத்தின் உறுதியை இப்படிச் சோதிக்கிறார்களோ? என் செண்பகத்தின் கையறவுக் கணக்கு, இன்றோ நாளையோ என்று இழுத்துக் கொண்டிருக்கையில், இந்தக் ‘கில்லாடி’ பட்டம், என்னைப் பார்த்துக் கூடுதலாய்க் கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது.

    எழுத்தாளர் பா.செ. அவர்கள் இப்படியொரு கட்டுரை கேட்ட நேரத்தில், எதை எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், கைவசம் நூல்கள் எதுவும் இல்லாத நிலையில், கொரோனா இரண்டாம் அலையில் எங்குமே போக முடியாச் சூழலில், ‘வயது வந்தோர்க்கு மட்டும்’ நூலுக்காகப் பலரையும் பல நூலகங்களையும் தொடர்புகொண்டேன்.

    அந்தவகையில், ஒரு தொடர்பில் அந்த நூல் கிடைத்தது. ஆனால், அது, அகரம் வெளியீடாக, வளைகோட்டிற்குள் ‘நாட்டுப்புறப் பாலியல் கதைகள்’ எனக் குறிப்பிட்டு, கி. ராஜநாராயணன், கழனியூரன் ஆகியோர் பெயர்களில் முதற்பதிப்பாக, சனவரி 2011இல் வெளிவந்திருந்தது. 17-07-1992இல் பேரா. பஞ்சாங்கம் அவர்கள் அணிந்துரை வழங்கியிருக்கிறார். அட்டைப் படமும் நான் பார்த்து, என் மனதிற்குள் பதிந்திருந்த அந்த வெள்ளை வண்ண அட்டைப் படமும் இல்லை. குழப்பம் உச்சத்தில் நின்று கூத்தாடத் தொடங்கியது. கி.ராவின் முன்னுரையைப் படித்தால், தமிழில் உள்ள நாட்டுப்புறப் பாலியல் கதைகளைத் தொடர்ந்து புத்தகங்களாகக் கொண்டுவருவது என்ற நடைமுறையில் இது ரெண்டாவது. (முதல் தொகுப்பு, ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்ற பெயரில் வந்தது) ரொம்ப ரொம்ப யோசித்துக் கொண்டே இருக்காமல், துணிவாக அதைப் புத்தகமாகக் கொண்டுவந்தவர்கள், சென்னை - 15 நீலக்குயில்காரர்கள். அட்லஸ் நோட்டுச் சைஸில், ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களின் வரைபடங்களோடு அட்டகாசமாய் வந்தது அப்புத்தகம், சிறப்பாகத் தயாரிக்க வேணும் எனும் நோக்கில். ஆனால் பாருங்கள், எதிர்பார்த்தபடி விற்பனை போகவில்லை. ரொம்ப ஏமாத்தம் ‘நீலக்குயில்காரர்களுக்கு’ என்றிருக்கிறது.

    மணா, மணா மூலம் திரு கே.எஸ். இராதாகிருஷ்ணன் என்று பட்டியலை நீட்டிக் கொண்டே போனால், யாரிடமும் அந்த முதற்பதிப்பு இல்லை. அன்னம் பதிப்பகம் - கதிரைத் தொடர்பு கொண்டேன். அவரும் கைவசம் அந்தப் பதிப்பு இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறி, அவருக்குத் தெரிந்த கதைகளைப் பகிர்ந்தார். கடைசிவரைக்கும், கி.ராவிற்கு இதுமாதிரித் தொகுப்புகளைக் கொண்டுவரும் ஆர்வம் இருந்திருந்தது என்பதைத் தெரிவித்தார். ‘முதற்பதிப்பில் அவர் எழுதியிருந்த முன்னுரை வேண்டாம்’ என்று அவர் புதிதாக எழுதிக் கொடுத்தது நினைவில் தட்டுப்படுகிறது என்றார். மற்றவர் மனம் கோணாமல் நடக்கக்கூடியவர் அவர், என் மனம்தான் என்னமோ அவரைவிட்டுக் கோணிப்போய்விட்டது என்றேன். திடீரென்று கதிர் சொன்னார், ‘சார், உங்க மனசு வருத்தப்படுமேன்னுதான், முதற்பதிப்பு முன்னுரையைத் திருத்தி எழுதிக் குடுத்திருக்கணும்னு நினைக்கிறேன். அப்படி லேசா ஞாபகமிருக்குது’ என்றார். எனக்கு, அவரின் பெருந்தன்மையும், பரந்த உள்ளமும் அப்பொழுதுதான் வானளவு உயர்ந்து நின்றது புரிந்தது. ‘இருக்கலாம் அந்தமாதிரி மனசுக்காரர்தான் அவர்’ என்றேன். இப்பொழுதாவது, இந்தக் கட்டுரையின் வழியாவது, அவரின் மற்றவரை மதிக்கிற அலாதிப் பண்பைப் பகிரங்கப்படுத்த விரும்புகிறேன். இப்படியாகத்தான், என்னிடம் சிறைப்பட்டுக்கிடந்த, அந்த அவமானத்திற்கு ஒரு விடுதலை கிடைத்திருக்கிறது. அவரின் மனச் சுத்தத்தைக் கண்டடைந்ததன் வழி, என் மனசையும் சுத்தப்படுத்திக் கொள்ள முடிந்தது. பெரியவர்கள் என்றும் பெரியவர்களே!

    * பேரசிரியர், எழுத்தாளர், நாடகக்கலைஞர், நடிகர், திரைப்படத் திறனாய்வாளர்

    2. வாசம் பரப்பும் மலர்ச்சோலை - திடவை பொன்னுசாமி*

    விரிந்து பரந்த தமிழ் இலக்கிய வாசகர் வட்டத்தில் எழுபதுகளில் நான் கால் பதித்திருந்த காலம். புராண இதிகாசக் கதைகளை வியப்பும் மிரட்சியுமாய் அலைந்து திரிந்த காலம். எங்கும் எதிலும் பிடிப்பற்ற ஒருநிலை. ஆனாலும் கதைகளைப் படிப்பதிலும் கேட்பதிலும் இருந்த பேரார்வம். மாய உலகில் சஞ்சரித்தவனை மனிதர்களுக்கு வெகு அருகில் கொண்டு வந்து நிறுத்தியது ஷேக்ஸ்பியரின் வெனிஸ் வர்த்தகன்தான் ஷைலக்கின் குரூரம் கண்டு திகைப்புற்றேன்.

    அதுவரையிலும் நானறிந்திருந்தவையெல்லாமே அந்நியத் தன்மையுடனேயே இருந்தது. எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே நேரத்தில் எப்படிப் பதில் கிடைக்கும் ஒரு பதில் எல்லாக் கேள்விகளுக்குமான பதிலாகயிருந்தால்! ஆம், கி. ராஜநாராயணனின் கறிவேப்பிலைகள்தான் என்னை முற்றாக மாற்றியமைத்தது.

    எத்தனமுறை வாசித்தாலும் புதிதுபுதிதாய் எனக்குப் பொருள் தந்தது. அயர்ச்சி என்பதேயில்லை. தொடர்ந்து கி. ராஜநாராயணனின் படைப்புகளை வாசித்தேன். நான் காண நினைத்ததை கி.ராவின் படைப்புகளில் தரிசித்தேன். கி.ராவின் படைப்புகள் எல்லாம் சாமானியர்களின் வாழ்க்கையில் சாதாரண வார்த்தைகளில் சொல்லப்பட்டவை. ஆனாலும் அவை அசாதாரண படைப்புகளே.

    எளிமையும் நுட்பமுமே படைப்புகளை மெருகேற்றுகிறது. புள்ளிகளும் கோடுகளும் மிகச் சாதாரணமானவைதான். அவை நேர்த்தியாய் இணைக்கப்படுவதால் கோலங்களாய் விரிகின்றன. கி.ராவின் படைப்புகளும் அப்படிப்பட்டவையே. சிறுகதை, நாவல், நாட்டுப்புறக்கதைகள், வட்டார வழக்கு அகராதி இப்படி ஆல விருட்சமாய் கிளை பரப்பி இருந்தாலும் அவரை ஒரு சிறந்த சிந்தனையாளராகவே காண்கிறேன்.

    கதவு, கருவேப்பிலைகள், ஜீவன், பேதை, ஜடாயு, கிடை இப்படி நீண்டதொரு பட்டியலே உண்டு. எப்பொழுது வாசித்தாலும் ஒரு புதிய படைப்பாகவே தோன்றும். அவரின் கதைமாந்தர்கள் நாம் அன்றாடம் சந்திக்கிற சாமானியர்கள். எவ்வித ஒப்பனையுமற்றவர்கள். எனக்கு அவர்கள் ஒருபோதும் அந்நியமானவர்களாகவே தோன்றவில்லை. அவரது படைப்புகள் அனைத்தும் எவ்வித வர்ணப்பூச்சுகளின்றி அசலாகவே உள்ளன. எந்தவொரு வாசகனும் அவரது கதை மாந்தர்களை எளிதில் அடையாளம் காணவும் நெருங்கவும் முடிகிறது.

    கி.ராவின் மொழி சாமானியனுடையது. அவர் தன்னந்தனியாக கம்பெடுத்துச் சுழற்றி சிலா வரிசை போட்டு தனக்கென தனியிடத்தைப் பெற்றிருக்கிறார். மேட்டிமைத்தனமற்ற அவரது படைப்புகளை எந்த ஒரு வாசகனும் எளிதில் நெருங்கி விட முடியும்.

    கி.ரா. கரிசல் கதைகள் தொகுப்பிற்காகப் படைப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்த காலம். மூன்று கதைகளை எழுதி அனுப்பினேன். ஒன்று தேர்வு செய்யப்பட்டது. இடைவெளி என்று எழுதியிருந்த தலைப்பை மிச்சம் என மாற்றித் தொகுப்பில் சேர்த்தார். அச்சில் வந்த முதல் கதை அதுதான். என் எழுத்தை அங்கீகரித்தவர் அவர்தான். கி. ராஜநாராயணன் மோதிரக்கையால் குட்டுப்பட்டவன் நான்.

    நான் அறிந்தவரையில் கி.ரா. ஒரு மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர். மிகப் பிரம்மாண்டமாதொரு படைப்புலகை, தமிழ் இலக்கியத்திற்கு கொடையாக அளித்திருக்கிறார். தவிர்க்கவும் கடந்து செல்லவும் முடியாதவர் கி.ரா. பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கி வாசம் பரப்பும் மலர்ச்சோலை கி.ரா. அதில் தேனுக்காய் வட்டமடித்துச் சுற்றி வரும் தேன்சிட்டுவைப் போல நான்.

    * தபால்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கி.ராவின் ‘கரிசல் கதை’ நூலில் இவர் எழுதிய ‘மிச்சம்’ கதை இடம்பெற்றுள்ளது

    3. அரங்கம்… மொட்டைமாடி… கேணி… - செல்வ புவியரசன்*

    கி.ராவை மொத்தமாகவே மூன்று முறைதான் பார்த்திருக்கிறேன். அதிலிரண்டுதடவை அவரது பிறந்தநாளில். தனது பிறந்தநாளில் சிற்றிதழ்களுக்குப் பரிசளிப்பது அவரது வழக்கமாகையால் பரிசு வாங்கச் சென்ற நண்பர்களோடுதான் இரண்டுதடவையும் புதுவை சென்றிருந்தேன். முதல் பரிசு ‘தமிழினி’ கலை இதழுக்காக. சென்னையிலிருந்து ஒரு குழு, கோவையிலிருந்து ஒரு குழு என ஏறக்குறைய இருபதுபேர் திரண்டு சென்றிருந்தோம். வாங்கிய ஐயாயிரம் பரிசைக் காட்டிலும் நான்கைந்து மடங்கு பதிப்பாளருக்குச் செலவாகியிருக்கக்கூடும். அந்தப் பரிசை கி.ராவின் வாழ்த்தாக எண்ணிக் கொண்டாடினோம். பிறந்தநாள் விழாவும் பரிசளிப்பு விழாவும் அரங்கத்தில் நடந்தது. அன்றைய புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதனும், வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணனும் கலந்துகொண்டனர். ‘கதைசொல்லி’யின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்த ரமேஷ் கடைசி வரிசையில் அமைதியே உருவாக அமர்ந்திருந்த காட்சி நினைவிலிருக்கிறது. இலக்கியச் சிந்தனை அமைப்பை நிறுவியவரும் ப. சிதம்பரத்தின் தமையனாருமான ப. லட்சுமணனும் அந்த விழாவில் கலந்துகொண்டார். அவரது கையிலிருந்த மஞ்சள் பையைப் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். தம்பி அப்போது நிதியமைச்சர். அந்தக் கூட்டத்தில் கி.ரா. என்ன பேசினார் என்றோ இல்லை அவரைப் பற்றி மற்றவர்கள் என்ன பேசினார்கள் என்றோ ஒரு நினைவும் இல்லை.

    மற்றொருமுறை, நண்பர் செண்பகநாதன் நடத்திய மந்திரச்சிமிழ் காலாண்டிதழுக்குப் பரிசு வாங்குவதற்காக அவருடன் புதுவை சென்றிருந்தேன். நாதஸ்வர இசையின் காதலரான கி.ரா.வுக்கு ஏதேனும் இசைவட்டுகளைப் பரிசளிக்கலாம் என்று எங்களிடம் ஒரு திட்டமிருந்தது. நாதஸ்வர இசை என்றால் பெரிதும் அவர் கேட்டதாகத்தான் இருக்கக்கூடும், அதற்குப் பதிலாக ஷெனாய் இசைவட்டு வாங்கலாம் என்று முடிவுசெய்தோம். புதுவையில் ஆடியோ சி.டி. கடைகளில் ஏறி இறங்கி கடைசியாய் பிஸ்மில்லா கானைப் பிடித்துவிட்டோம். அவரிடம் இசைவட்டைக் கொடுத்தபோது உண்மையான மகிழ்ச்சியை உணர முடிந்தது. அந்த ஆண்டு அவரது வீட்டில் மிகவும் எளிமையாக விழா நடந்தது. வீட்டிலேயே கூட்டம் ஆரம்பித்துவிட்டது. பா. செயப்பிரகாசம், க. பஞ்சாங்கம் முன்னமே வந்திருந்து பேசிக்கொண்டிருந்தனர். இன்னும் சில நண்பர்களும். அப்போது நடந்த ஒரு உரையாடல்தான் கி.ராவைக் குறித்த எனது வியப்பு இன்னும் அகலாமலிருப்பதற்குக் காரணம்.

    கி.ராவைச் சந்திக்க வந்திருந்த ஒரு இலக்கிய வாசகர் நெல்லை சுலோச்சன முதலியார் பாலத்தின் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார். அவர் பேசி முடிக்கும்வரை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த கி.ரா. கடைசியாக சில விடுபடல்களைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த வாசகர் சொன்ன வரலாற்றில் இருந்த பிழைகளையும் சரி செய்தார். அது குறித்து இன்னும் மணிக்கணக்கில் பேசவும் கி.ராவிடம் தகவல்கள் இருப்பது தெரிந்தது. ஆனால், ஒரு வாசகர் தப்பும் தவறுமாக தான் அறிந்த தகவல்களைச் சொல்லும்போது அதை முன்கூட்டியே குறுக்கிட்டுத் தடுக்காமல், தனக்கு அதைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று காட்டிக்கொள்ள விரும்பாமல், பொறுமைகாத்து அதன்பின் பேச முற்பட்டது என்னை மிகவும் கவர்ந்தது. இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் பலரை நினைத்துப் பார்க்கிறேன். வந்தவரை வழியனுப்பிவிட்டுச் சுவரோடு பேச ஆரம்பித்துவிடுவார்களோ என்று பயந்த தருணங்கள்தான் எத்தனை எத்தனை. பின்மதியத்திலிருந்து வீட்டுக்குள் நடந்த உரையாடல்கள் பொழுது சாய்ந்ததும் மொட்டை மாடியில் இலக்கியக் கூட்டமாக மாறியது. ‘மந்திரச்சிமிழ்’ செண்பகநாதன் மேடைக் கூச்சத்தால் பேசமுடியாமல் தடுமாறியபோது இறுக்கம் தளர்த்தி அவரை இயல்பாகப் பேசவும் வைத்துவிட்டார் கி.ரா.

    சென்னையில் ஞாநி ஒருங்கிணைத்த ‘கேணி’ கூட்டத்திலும் ஒருமுறை கலந்துகொண்டு பேசினார் கி.ரா. நல்ல கூட்டம். முதல் வரிசையில் சிஷ்யனுக்குரிய பவ்யத்துடன் சார்லி அமர்ந்திருந்தார். பெரியாரை ராமசாமி நாயக்கர் என்று கூட்டத்தில் அவர் குறிப்பிட்டபோது பெருமிதம் என்றே நான் பொருள் புரிந்துகொண்டேன். அவர் பேசி முடித்ததும் ‘உன்னதம்’ கௌதம சித்தார்த்தன் ஒரு கேள்வியை எழுப்பினார். ‘நம்முடைய எதார்த்தவாத எழுத்துகள் கதைசொல்வதாக மட்டும்தான் இருக்கின்றன. லத்தீன் அமெரிக்க இலக்கியங்களைப் போல ஏன் மாய எதார்த்தம் நோக்கியோ நுண்ணரசியல் நோக்கியோ நகரவில்லை?’ ஏறக்குறைய குற்றம்சாட்டும் தொனியில்தான் அவர் பேசினார். கி.ரா. நேரடியாக அதற்குப் பதில் சொல்லவில்லை. எல்லாமும் இங்கேயும் உண்டு என்பதாக சுருக்கமாக அவர் முடித்துக்கொண்டார். அவர் தன்னைப் பற்றி விவரிக்கவும் இல்லை. மற்றவர்களுக்கும் சேர்த்து முட்டுக்கொடுக்கவும் முயலவில்லை.

    கி.ராவின் எழுத்துகளில் மாய எதார்த்தம், குறியீடுகள், புராணீகக் கூறுகள் எல்லாமும்தான் இருக்கின்றன. தன்னை வெளிச்சமிட்டு வெளிப்படுத்திக்கொள்ளாமல் உள்ளுறைந்து நிற்கின்றன. உடனடியாக எனக்கு அவரது ‘ஜடாயு’ என்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது. ஊட்டி பெரணிமலை நாராயண குருகுலத்தில் ஜெயமோகன் நடத்திய ஒரு இலக்கியச் சந்திப்பில் இந்தக் கதையைக் குறித்து அவர் பேசினார். புராணீகத்தையும் எதார்த்தத்தையும் முடிச்சிடும் கி.ராவின் அந்த நுட்பம் வியக்கத்தக்கது. ஆனால், அந்தக் கூட்டத்தில் ஜெயமோகன் இந்தக் கதையைச் சொன்னதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ‘தமிழ்ஹிந்து’ ஜடாயுவும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். திமுக மேடைப் பேச்சாளர்களைப் போல எதிரிலிருக்கிற எல்லோரையும் தன் பேச்சுக்குள் உள்ளிழுத்துப்போடும் ஜெயமோகனின் உத்தி அது.

    நவீன இலக்கியம் பேசும் எந்தக் குழுவின் உரையாடலிலும் கி.ரா. தவிர்க்க முடியாதவர். அவரது கதைகளிலிருந்து உள்ளடக்கம், உருவம், சொல்முறை என்று இளையவர்கள் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கின்றன. அவரது கதைகளும் கட்டுரைகளும் செய்தித்தாள், புலனாய்வு வார இதழ்கள் என்று எல்லாவிதமான இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. பொது வாசகருக்கும் அவை வாசிப்பு இன்பம் வழங்கும். அதே நேரத்தில், இலக்கிய வாசகருக்கும் சவால் விடுக்கும். இலக்கிய வாசிப்பைத் தாண்டி ஒரு பழுத்த அனுபவஸ்தரால் மட்டுமே புரிந்துகொண்டு புன்னகை பூக்கக்கூடிய குறும்புத்தனங்களும் அதில் ஒளிந்திருக்கும். அவரவர் கொள்திறன்.

    * கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர். இந்து தமிழ் திசை நாளிதழின் தலையங்கப் பக்க தலைமை உதவியாசிரியர்.

    4. நினைவலையில் என் குருநாதர் - சூரங்குடி அ. முத்தானந்தம்*

    தூத்துக்குடி மாவட்டம் தங்கம்மாள்புரம் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் நாட்டுப்புறவியல் எஸ்.எஸ். போத்தையா அவர்கள் எனக்கு ஏழாப்பு சார். வகுப்பில் நான் முதல் மாணவன். என்னுடைய வாசிப்புத் திறனையும் அவ்வப்போது நான் அவர்களிடம் கேட்கும் கேள்விகளையும் வைத்து என்னைக் கூர்ந்துக் கவனித்த அவர்கள் எனக்கு இலக்கிய ருசியை ஏற்ற ஆரம்பித்தார்கள். முற்போக்குச் சிந்தனை அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் வையாபுரிப்பிள்ளை நூலகத்திலிருந்து, புதுமைப்பித்தன் கதைகள், ரகுநாதனின் வரைவுகள், கி. ராஜநாராயணன் கதைகள், பா. செயப்பிரகாசம் நூல்கள் ஆகியவற்றைப் படிக்கச் சொல்லி எடுத்துக் கொடுப்பார்கள்.

    காலப்போக்கில் நானும் இடைநிலை ஆசிரியரானேன். மேலும் அவர்களிடம் இருக்கும் இலக்கியச் செறிவுகளைக் கற்றுக்கொள்ள வாராவாரம் அவர்கள் வீடு தேடிப் போவேன். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் ஒரு மணிவரை பேசிக்கொண்டே இருப்போம். அவர்கள் பேச்சு எனக்குப் பிடிக்கும். என் கேள்விகள் அவர்களுக்குப் பிடிக்கும். வீட்டுக்கு விடமாட்டார்கள். சில சமயங்களில் மோர் விட்டுக் கரைத்த கம்மங்கஞ்சியும் குடித்ததுண்டு அவர்கள் வீட்டில்.

    ஓராண்டுக்குப்பின் நான் கதைகள் எழுத ஆரம்பித்தேன். எஸ்.எஸ்.பி. அவர்களிடம் கொண்டு போய்க் காட்டுவேன். பார்த்துவிட்டு நல்லா இருக்கு தாமரைக்கு அனுப்பு என்றார்கள், அனுப்பினேன். அந்த மாதமே அந்தக் கதை வெளியாயிற்று. அதன்பின் செம்மலர், தீபம், கண்ணதாசன் ஆகிய இதழ்களில் கதைகள் வெளிவரத் தொடங்கின. எல்லாக் கதைகளையும் பார்த்த எஸ்.எஸ்.பி. அவர்கள் என்னை கி.ரா. அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னமோ, அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இடைசெவலுக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போனார்கள். அப்போ நேரம் மதியம் இருக்கும்.

    கி.ரா. அவர்கள் வீட்டில் எங்களுக்கு வரவேற்பும் உபசரிப்பும் தடபுடலாக இருந்தது. சார் அவர்கள் தன் கையில் இருந்த இரண்டு பைகளில் ஒன்றை கி.ரா. அவர்களின் துணைவியாரிடமும் இன்னொன்றை கி.ரா. அவர்களிடம் கொடுத்தார்கள். இதுல தட்டார் ஆச்சாரியார் வீட்டுக் குப்பை மாதிரி வட்டாரச் சொல்லகராதிக்கான சொற்களைக் கொண்டு வந்திருக்கேன். இதுல 700 சொற்கள் வரை இருக்கும். என்னைக் காட்டி இவன் இருநூறு சொற்கள் வரை என்னிடம் கொண்டுவந்து கொடுத்தான் என்றார்கள். நானும் அப்படித்தான் நினைச்சேன் என்றார்கள் கி.ரா.

    அடுத்த பேச்சு திசை மாறியது.

    இவன் தாமரை, செம்மலர், தீபம், கண்ணதாசன் ஆகியவற்றில் நிறையக் கதைகள் எழுதியிருக்கான். எல்லாமே கரிசல்மண் வாடையுள்ள கதைகள் என்றார்கள்.

    நானும் கவனிச்சிருக்கேன். இதழ்களில் வரும் முத்தானந்தின் கதைகளை வாசிக்க ஆரம்பிக்கும்முன் ஒரு தாளும் ஒரு பேனாவும் எடுத்து வைச்சுக்கிருவேன். எனக்கு நினைவுக்கு வராத சொற்களும் அவர் பக்கத்து அபூர்வ சொற்களும் கதைகளில் வரும். அவைகளை எழுதி வைத்துக்கொள்வேன் என்றார்கள் கி.ரா.

    நான் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். உதாரணத்திற்குத் தீத்தாங்கி என்றார்கள் கி.ரா. தீத்தாங்கியின்னா கூரை வீடுகளில் விறகு அடுப்பிலுள்ள தீ மேலே தாவி விடக்கூடாது என்பதற்காக அமைக்கப்படும் ஒரு சாதனம். தலைகீழ் ‘ப’ வடிவில் இருக்கும்.

    ***

    புதுச்சேரியில் இருக்கும்போது கி.ரா. அவர்கள் பிரபியிடம் ரெண்டு மாசத்துக்கு ஒருதடவையோ அல்லது மூணு மாசத்துக்கு ஒருதடவையோ நான் அவரிடம் பேசுவேன். சில சமயங்களில் அவர் என்னிடம் பேசுவார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த கி.ரா. அவர்கள் அன்று பிரபியிடம் யார்ட்டப் பேசுற என்று கேட்கிறார்கள். அது எனக்கு நல்லாவே கேட்கிறது. பிரபி என்னிடம் பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறார். கொண்டா கொண்டா என்று செல்லைக் கேட்கிறார்கள். அடுத்து கி.ரா. அவர்கள் என்னிடம் பேசுகிறார்கள். நலம் விசாரித்துவிட்டு ஒங்களுக்கு குறுநாவல் நல்லா வருது. அதோடு பெரிய அளவில் நாவல் ஒன்று செய்யுங்க என்கிறார்கள் சரி என்றேன். ஒங்களுக்கு வயசு என்ன ஆகுது என்று கேட்டார்கள். எண்பது என்றேன். எண்பது எல்லாம் ஒரு வயசா உற்சாகமாக எழுதுங்கள் என்றார்கள்.

    கி.ரா. அவர்கள் இது குறித்து எனக்கு ஒரு 2004 செப்டம்பர் 28ல் கடிதமும் அனுப்பி வைத்தார். அதில், உங்கள் ஒப்புதல் கடிதம் கிடைத்தது. நிறைவைத் தந்தது. கதையைவிட உங்களுக்கு குறுநாவலே கைவந்த கலை. உங்கள் பேனாவுக்கு ஒரு கொண்டாட்டம் வந்துவிடுகிறது. நீங்க ஒரு குறுநாவல் ஸ்பெஷலிஸ்ட்தான். குறுநாவல் மன்னன் என்று பட்டமே கொடுத்துவிடலாம் உங்களுக்கு. உங்களைப் போல சுருதி சுத்தமாக யாராலும் எழுத்தில் வாசிக்க முடியாது. அப்படி ஒரு வரம் வாங்கி வந்திருக்கிறீர்கள். விட்டுப்போன காலத்துக்கெல்லாம் வட்டியும் முதலுமாக எழுதி குவித்து வைக்கப் போகிறீர்கள். தமிழுக்கு யோகம்தான் கரிசல் இலக்கியம் உங்களால் புகழ் பெற்றது. ஒரு அருமையான குறுநாவல் ஒன்றை எழுதி அனுப்புங்கள். தொகுப்பிலேயே உங்கள் குறுநாவல்தான் பேர் வாங்க போகிறது. பக்கத்தைப் பற்றி கவலை வேண்டாம் என்று எழுதியிருந்தார் கி.ரா.

    ***

    ஒரு ஞாயிற்றுக்கிழமை கி.ரா. அவர்களை மரியாதை நிமித்தமாக பார்க்க போயிருந்தேன். அப்போ எனக்கு முப்பது வயசு அல்லது அதற்கு மேலிருக்கலாம். இலக்கிய இதழ்களில் வந்த என் கதைகளைப் பற்றி சொன்னேன். நானும் உங்கள் கதைகளைப் படித்து இருக்கிறேன் என்றார்கள். கி.ரா.

    பேச்சை வளர விட்டார்கள் அவர்கள்.

    ஆமாம், ஒங்களுக்கு எந்த ஊர்ல சம்பந்தம்?

    கழுகுமலைக்கு கிழக்கே வானரமுட்டியில்.

    வீட்டுக்காரம்மா?

    கந்தமாள். அவ அப்பா ஆறுமுகம் பிள்ளை.

    சைவ செட்டியார் என்று உங்களை அறிவேன் பிள்ளைமார் வீட்டிலா உங்களுக்குச் சம்பந்தம்?

    இல்லை. சைவ செட்டியார்களும் இந்தப் பிள்ளைமார்களும் ஒரே இனம்தான். எங்க ஊர் சூரங்குடி பக்கமும் இந்த மேக்காட்டுப்பக்கம் பக்கமும் சில வீடுகளுக்குப் பிள்ளை பட்டம் உண்டு. ஒரு காலத்தில் அந்தந்த வீட்டில் உள்ள மூதாதையர்கள் அரண்மனைகளில் கணக்கு எழுதி வந்தார்கள். ராஜாக்கள் பார்த்து ‘கணக்குப்பிள்ளை’ பட்டம் கொடுத்ததால் வழிவழியாக வந்துக்கிட்டு இருக்கு. அந்த வீட்டார்கள் இன்றைக்கும் அதனைப் பெருமையாகக் கருதுகிறார்கள். வேறு எந்த இனத்து மக்களுக்கும் கிடைக்காத வெகுமதியாகக் கொள்கிறார்கள். கல்யாண பத்திரிக்கைகளிலோ வேறு எந்த அழைப்பிதழ்களிலோ இன்ன பிள்ளை என்று போட்டிருந்தால் மட்டுமே பத்திரிக்கையை வாங்கிக் கொள்வார்கள். தெரிந்தோ தெரியாமலோ செட்டியார் என்று போட்டிருந்தால் பத்திரிகையை வாங்க மாட்டார்கள். இன்னொரு பத்திரிகையை எடுத்து இன்ன பிள்ளை என்று எழுதிக்கொடு வாங்கிக்கிறேன் என்பார்கள். அப்படி வந்ததுதான் இந்தப் ‘பிள்ளைப் பட்டம்’ செட்டியார்களுக்கு.

    நான் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டே இருந்த அவர்கள் ‘அப்படியா சங்கதி! இது எனக்குத் தெரியாமல் போச்சே’ என்று லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்கள். மேலும் நான் சொன்னேன், ‘சைவ செட்டியார் வீடுகளில் பிள்ளைமார்களும் பிள்ளைமார்கள் வீடுகளில் செட்டியார்களும் சம்பந்தம் வைத்துக் கொள்வது சகஜமாகப் போச்சு. எங்க மூத்த பையனுக்குக்கூட சைவப் பிள்ளைமார் வீட்டில் பெண் எடுத்துள்ளோம்’ என்று.

    ***

    சாயந்தர நேரம். நான் ஊருக்குப் புறப்பட ஆயத்தமானேன். அப்போது கணவதி அம்மா அவர்கள் நீங்க அடுத்ததடவை வரும்போது உங்க வீட்டு அம்மாவைக் கூட்டிக்கிட்டு வாங்க. அவர்களைப் பார்க்கணும் பேசணும் என்றார்கள். கி.ரா. அவர்களும் புன்னகையோடு அவர்களுக்குத் தக்கன தாளம் போட்டார்கள்.

    நேரம் மணி 5. பையை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டேன். போயிட்டு வாரேன் என்று இருவருக்கும் கைகூப்பி வணக்கம் போட்டுக் கொண்டேன். அப்போது கி.ரா. அவர்களும் இருங்க நானும் வர்றேன் என்று சொல்லிக்கொண்டே செருப்பை எடுத்துக் காலில் மாட்டிக் கொண்டார்கள். இருவரும் பஸ் ஸ்டாப்பை நோக்கிப் போனோம். பஸ் வரும்வரை இருவரும் பேசிக்கொண்டே இருந்தோம். பஸ் வந்ததும் என்னை ஏற்றிவிட்ட பிறகு அவர்கள் வீடு திரும்பினார்கள்.

    ***

    கி.ரா. அவர்கள் எங்க வீட்டுக்கு இரண்டுதடவை வந்திருக்கிறார்கள். முதல்தடவை காரைக்குடியில் நடைபெறும் எருதுகட்டு பார்க்க இரண்டாவதுதடவை மகன் பிரபாகரனோடு. அவர்கள் இந்தப் பக்கம் வரும் நாளை முன்கூட்டியே போத்தையா சார் அவர்களுக்கும் எனக்கும் கடிதம் போட்டுத் தெரிவித்து விடுவார்கள்.

    அன்று எருதுகட்டுப் பார்க்க கி.ரா. அவர்கள் வருகிற நாள். கோவில்பட்டியிலிருந்து எங்க ஊருக்கு வரும் பஸ் பத்து மணிக்குத்தான் வரும். இப்போ மாதிரி அப்போ பஸ் போக்குவரத்து அவ்வளவாக இல்லாத காலம். ஒரு நாளைக்கு அஞ்சுதடவை மட்டுமே வந்து போகும். கி.ரா. அவர்களை வரவேற்க போத்தையா சார் ஒன்பது மணிக்கெல்லாம் வந்து விட்டார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் ஒரு நபர் மாதிரி அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் எங்க ஆச்சியிடம்தான் வாயக் குடுத்துப் பேசிக்கிட்டு இருப்பாங்க. எங்க அம்மா அடுப்பு துடுப்புமாக இருப்பா. இல்லாட்டி வீட்டில் அத்தம் சொத்தம் பார்த்துக்கிட்டு இருப்பா. இல்லாட்டா காடுகரை வேலைக்கு வெள்ளங் காட்டியே போயிருப்பதும் உண்டு.

    எங்க வீட்டில் எப்போதும் பால்மாடு நிற்கும். போத்தையா சார் வரும்போதெல்லாம் எங்க வீட்டு மோரைக் கேட்டு வாங்கிக் குடிப்பார்கள். அவ்வளவு பக்குவம் செய்ததாக இருக்கும் அது. எங்க ஆச்சிக்கு நேரம் போகலைன்னா எங்க வீட்டு தெருக்கோடி வாசலில் வந்து உட்கார்ந்து கொண்டு வெளியே போகிற வருகிற தெரிந்த பொம்பளைகளைப் பார்த்து ஏட்டி, செம்பைக் கொண்டு மோர் வாங்கிக் கொண்டாந்து வாங்கிக்கிட்டுபோயேன். கம்மஞ்சோத்துல ஊத்திக்கரைச்சுச் குடிச்சா கொண்டா கொண்டான்னு கஞ்சிய இருக்கும். அப்படி ஒரு மனசு என் ஆச்சிக்கு.

    நேரம் 10 மணி ஆகப்போகுது. அவர்களை வரவேற்க நானும் போத்தையா சாரும் பஸ் ஸ்டாப்புக்குப் போனோம். சொல்லிவைத்தது போல அவர்கள் அந்தப் பஸ்ஸில் வந்து இறங்குகிறார்கள். எங்க வீட்டுக்கு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்தேன். எஸ்.எஸ்.பி. சார்தான் தன்னோடு வேலைபார்க்கும் இராமலிங்கம்பட்டி பெருமாள் சாரிடம் அவர்கள் (எனக்கு ஆறாப்பு சார்) கூண்டு வச்ச வில் வண்டி கொண்டுவரச் சொன்னேன். அது பெருங்கொண்ட சம்சாரி வீடு. தொமு வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். கொஞ்சம் முன்னபின்ன வருவார் என்றார் எஸ்.எஸ்.பி. சார்.

    கி.ரா. அவர்களைக் கண்டதும் எங்க ஆச்சி கையெடுத்துக் கும்பிட்டார். என் பேரனை விட நீங்கள் மிச்சமாகக் கதை எழுதுகிறவர்களாமே! என் பேரன் சம்சாரம் சொல்லி இருக்கா கி.ரா. அவர்கள் லேசாக சிரித்துக் கொண்டார்கள்.

    எங்க வீட்டு வடக்குத் திண்ணையில் நாங்கள் மூவரும் உட்கார்ந்து இருந்தோம். எதிரே உள்ள திண்ணையில் எங்க ஆச்சி. ஆச்சி நல்ல சிவப்பு. பாம்படம் போட்டிருக்கும். தோளைத் தொடும் காதுகள். இன்னும் ஒரு பல்கூட விழாத பல் வரிசைகள். நெற்றியில் நிறைந்த வாடா திருநீறு. மெல்லிய வெள்ளைச் சீலையில் இருந்தாள் அவள். அதிகமாக நரைக்காத தலை. ஆச்சியை முதல்தடவையாக பார்ப்பவர்கள் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அவ்வளவு அழகு சித்திரம் அவள்!

    கி.ரா. அவர்கள் ஆச்சியிடம் கேட்டார்கள் பாட்டி உங்களுக்கு எத்தனை வயசு இருக்கும்?

    தொண்ணூறுக்குமேல் இருக்கும். என்னக் காரைவீட்டுக்காரின்னு சொல்லுவாங்க. கொஞ்சச்… சொத்தா… எல்லாமே காலப்போக்குல தவிடுபொடியாப் போச்சு. மூணு குறுக்கந்தான் மிச்சம். அதைக் கிண்டி கிளறித்தான் கதை நடக்குது.

    ஒங்க பேரென்ன பாட்டி?

    பொன்னம்மா…

    ஒங்களுக்கு ஆம்பள பிள்ளைக?

    ஆவடை பெத்த பிள்ளை அஞ்சும் ஒன்னு போலன்னு சொலவம் சொல்லுவாங்க. அதுபோல நான் பெத்த அஞ்சும் இப்ப எனக்குக் கஞ்சி ஊத்த எந்தப் பயலும் இல்ல.

    கி.ரா. அவர்களின் முகம் சோர்ந்து போயிற்று.

    பேசிக்கொண்டிருக்கும்போதே உபசரிப்புகள் நடந்து முடிந்திருந்தன.

    வெளியே பெருமாள் சார் கொண்டுவந்திருக்கும் சலங்கை மணி பூட்டிய சவாரி வண்டிச் சத்தம் கேட்டது.

    உடனே, சரி பாட்டி இன்னொரு நாள் வந்து உங்ககிட்ட இருக்கிற இருப்புச் சரக்குகளை வாங்கிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு விடை பெற்றுக்கொண்டார்கள் கி.ரா. அவர்கள்.

    ***

    அன்று செவ்வாய்க்கிழமை தரைக்குடி உமையம்மன் கோவில் பொங்கல் விழா. நான்கு ஊர்களுக்குப் பாத்தியப்பட்டது அக்கோயில். அதில் ராமலிங்கம்பட்டியும் ஒன்று. பெருமாள் சார் அவர்கள் குடும்பத்தோடு பொங்கல் வைக்க புறப்பட்டார்கள், அன்று இரவு. மறுநாள் புதன்கிழமை காலையில் கிடாய் வெட்டு. வீடு தவறாமல் கிடாய் வெட்டி, சாமி கும்பிட்டுவிட்டு கொண்டு போயிருந்த மொட்டை வண்டியில் கிடாயைத் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்தார்கள்.

    அன்று மதியம் போத்தையா சார் வீட்டில் தங்கியிருக்கும் கி.ரா. அவர்களையும் சார் அவர்களையும் கறிச் சாப்பாட்டுக்கும் எருதுகட்டுப் பார்க்கவும் அழைத்துக்கொண்டு போனார்கள் பெருமாள் சார். நான் சைவம் என்பதால் என்னைப் பெரிதுபடுத்தவில்லை அந்த சார்.

    விளாத்திகுளத்திலிருந்து தரைக்குடி வரை ஸ்பெஷல் பஸ் எருது கட்டுக்காக விட்டிருந்தார்கள். அந்தப் பஸ்ஸில் போய் எருதுகட்டு களரியில் வைத்து அவர்களைச் சந்தித்து அவர்களோடு இணைந்துகொண்டேன்.

    அப்போ மணி ஒன்று. பாக்கு வைக்கப்பட்ட எட்டு மாடுகளும் ஒன்றின்பின் ஒன்றாக களரியில் இறக்கி விடப்பட்டனர். ஒன்று ரெண்டு சோடை போக மற்ற எருதுகள் எல்லாம் நல்லபடியாக விளையாடின.

    மாலை ஐந்து மணி எருதுகட்டு நிறைவுக்கு வந்தது. கி.ரா. அவர்களையும் போத்தையா சார் அவர்களையும் பெருமாள் சார் அவர்களது பிளான்படி, போத்தையா சார் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.

    மறுநாள் காலை கி.ரா. அவர்களும் போத்தையா சார் அவர்களும் காலை சாப்பாட்டை முடித்துக்கொண்டு மங்கம்மா சாலையில் வரிசையாக நிற்கும் அடர்ந்த புளிய மரங்கள் குளுகுளுவென்று இருக்கும் நிழல் குடையை அனுகூலமாகப் பற்றி நேராக சூரங்குடி பஸ் ஸ்டாப்புக்கு வந்து இருக்கிறார்கள். இன்ன மாதிரி என்று எனக்கு ஒரு பையன் மூலம் தகவல் சொல்லி அனுப்பி இருந்தார்கள். நான் நாலு எட்டில் போய் அவர்களைச் சந்தித்தேன். பத்து நிமிடத்தில் கோவில்பட்டிக்கு போகும் பஸ் வந்து நின்றது. கி.ரா. அவர்களுக்கு வணக்கம் சொல்லி வழியனுப்பி வைத்தோம்.

    ***

    அந்த வருஷம் மே மாத கடைசியில் போத்தையா சார் கி.ரா. அவர்கள் வீட்டுக்குப் போய் இருக்கிறார்கள். அப்போ பிரபாகரன் பற்றிய பேச்சு வந்திருக்கு. பிரபாகரன் உள்ளூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் அஞ்சு வரைக்கும் படிச்சிருக்கார். ஆறாம் வகுப்புக்கு அவ்வளவாகப் பள்ளிக்கூடம் போகவில்லை. கரிசக்காட்டு வேலைகளில் தான் அவருக்கு ஈடுபாடு அதிகம். காட்டில் வேலை செய்யும் ஜனங்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் சொல்வதைக் கேட்டு ரசிக்கவும் சிந்திக்கவும்தான் அவரது பொழுதுபோக்காக வைத்துக்கொண்டிருக்கிறார். சாப்பிட மட்டும்தான் வீட்டுக்கு வருவது. இளங்கன்று அப்படிதான் இருக்கும். படிக்கிற வயசில் படிக்க வேண்டாமா கி.ரா. அவர்களின் எண்ண ஓட்டமும் அப்படித்தான் இருந்திருக்கிறது அவன் படிக்கணும்.

    கி.ரா. அவர்கள் போத்தையா சாரிடம் கேட்டார்கள் ஒங்க ஊர்ப்பக்கம் நல்லா சொல்லிக் கொடுக்கிற ஹாஸ்டல் வசதியுடன்கூடிய பள்ளிக்கூடங்கள் இருக்கா?

    சூரங்குடியில் இருந்து நான்கு மைல் தூரத்தில் வேம்பார் என்ற ஊரில் ரெண்டு பள்ளிக்கூடங்கள் இருக்கு. இரண்டுமே நல்ல நடுநிலைப் பள்ளிகள்தான். கிறிஸ்துவ பள்ளிகள். ரெண்டு பள்ளிக்கூடங்களிலும் நல்ல ஹாஸ்டல் வசதி உண்டு. என்னைவிட முத்தானந்தத்துக்குத்தான் அந்தப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் எல்லாருக்கும் நல்ல பழக்கம். அவன் வேம்பாருக்குப் பக்கமுள்ள முத்தையாபுரம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கான். அந்தப் பக்கம் பஸ் வசதி இல்லாததால் சைக்கிளில்தான் நித்தமும் பள்ளிக்குப் போய் வருவான். வேம்பாரில் உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு அவனுக்குத்தான் அழைப்புக் கொடுப்பார்கள். நல்ல பேச்சாளன்தான். அவன் நகைச்சுவையாகப் பேசுவதிலும் அவனுக்குத் திறமை உண்டு. சாதிமதம் பார்க்காதவன். அதனாலேயே அம்மக்கள் அவனோடு சினேகிதம் வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்றார்கள்.

    ஊருக்கு வந்ததும் அவர்கள் எங்க வீட்டுக்கு வந்து என்னிடம் வந்து கி.ரா. அவர்களின் மகன் பிரபாகரனை வேம்பார் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது பற்றி நிறைய பேசினோம். உன்னைப் பற்றியும் விசேஷமாக அவர்களிடம் சொல்லி இருக்கிறேன். பிரபாகரனைப் பள்ளியில் சேர்ப்பதற்குக் கடிதம் போட்டுவிட்டு வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் என்றார்கள். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

    ***

    கி.ரா. அவர்கள் போட்டிருந்த கடிதத்தின்படி ஜூன் மாதம் அஞ்சாம் தேதி வாக்கில் கி.ரா. அவர்களும் பிரபாகரனும் டிரங்க் பெட்டி சகிதமாக அதே பத்து மணி பஸ்சுக்கு வந்து இறங்கினார்கள். நானும் போத்தையா சார் அவர்களும் விருந்தினர்கள் இருவரையும் வரவேற்று எங்க வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தோம். எங்கம்மா பக்குவம் செய்யப்பட்ட மோர் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தாள். அது சுகமோ சுகம்! நான் வீட்டுக்குள்ளே போய் மதியம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய எங்க அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தபோது எங்க வீட்டுக்காரி கந்தம்மா விருந்தினரை நோக்கி கும்பிட்ட கையோடு வந்து நின்றாள். அவளிடம் கி.ரா. அவர்கள் பேச்சுக் கொடுத்தார்கள். அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சி. நாச்சியாபுரம் ல. சண்முகசுந்தரமும் நீங்களும் ரசிகமணி டி.கே.சி. அய்யா நடத்தும் வட்டத்தொட்டி இலக்கிய அமைப்புக்கு போய் வருவதாக எங்க வீட்டுக்காரர் சொல்லியிருக்கார். ல. சண்முகசுந்தரம் அவர்கள் எங்க பெரியப்பா முறை என்றாள். அப்படியா அம்மா! ரொம்ப சந்தோசம். அவர் நல்ல ரசிகர், படிப்பாளி என்கிறார்கள்.

    கி.ரா. அடுத்து வந்த காரியத்தை சொன்னார்கள்.

    அப்படியா! எங்க வீட்டுக்காரருக்கு வேம்பாரில் உள்ள பள்ளிக்கூடங்களையும் அங்குள்ள ஆசிரியர்கள் பற்றியும் நன்றாகவே தெரியும் என்றாள்.

    நேரம் 10.45. தூத்துக்குடியிலிருந்து வேம்பார் போகும் 11 மணி பஸ்சுக்குப் போக இருந்ததால் வீட்டைவிட்டுப் புறப்பட்டோம். வேம்பார் புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளிக்கு நாங்க நால்வரும் போனோம். அழைப்பு மணியை அழுத்தியதும் ஒரு சிஸ்டர் உள்ளேயிருந்து வெளியே வந்தார். அவர் எங்களுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு எங்களை அங்கு கிடந்த சாப்பாட்டு மேஜையை சுற்றிலும் கிடக்கும் நாற்காலிகளைக் காட்டி அதில் உட்காருங்க என்று சொல்லிவிட்டு, தலைமை ஆசிரியை அறைக்குள் போனார். அடுத்த நிமிஷம் பெரிய சிஸ்டர் வந்து எங்களுக்கு வரவேற்பு சொல்லிவிட்டு அவரும் அங்கு கிடந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டார். அடுத்த நொடியில் பிஸ்கட்டும் டீயும் வந்தன. எல்லாமே மேல்நாட்டு சரக்குகள் மாதிரி தெரிந்தது.

    சாப்பிடுங்கன்னு சொல்லிவிட்டு என்னையும் போத்தையா சார் அவர்களையும் பார்த்து ஒரு புன்னகை பூத்துக்கொண்டு என்ன விசயமா வந்தீங்க என்று கேட்டார் தலைமை சிஸ்டர். போத்தையா அவர்களைப் பற்றிய லேசான மேலான சாதனைகளைச் சொல்லிவிட்டு எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றியும் சொன்னார்கள். அப்படியா சந்தோஷம் நான் இப்போ என்ன செய்யணும் என்று கேட்டார்கள். நான் சொன்னேன் இந்த எழுத்தாளருடைய பையன் பிரபாகரன். இவரை ஹாஸ்டல் வசதியோடு இருக்கும் இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளணும். ஹாஸ்டலுக்குரிய பீசையும் பள்ளிக் கட்டணத்தையும் கட்டி விடுகிறோம். அப்போது பெரிய சிஸ்டர் தன் கையிலிருந்த அச்சடித்த ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1