Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

O! Pakkangal - Part 4
O! Pakkangal - Part 4
O! Pakkangal - Part 4
Ebook239 pages1 hour

O! Pakkangal - Part 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நானும் நீங்களும் ‘ஓ’ பக்கங்களும்

அக்டோபர் 2005ல் நான் ‘ஓ’ பக்கங்களை ஆனந்தவிகடன் இதழில் எழுதத் தொடங்கியபோது, ஏன் இதற்கு ‘ஓ’ பக்கங்கள் என்று பெயரிட்டேன் என்பதைத் தெரிவித்திருந்தேன்.

‘தமிழில் இருக்கும் ஒற்றை எழுத்துச் சொற்களில் என்னை நீண்ட நாட்களாக வசீகரிக்கும் சொல் ‘ஓ’!

மற்ற ஒற்றை எழுத்துச் சொற்களான ஆ.ஈ.ஊ.ஏ.ஐ. எல்லாம் குறைவான அர்த்தமும், தொனியும் உடையவை. ‘ஓ’ ஒன்றுதான் இடத்துக்கு ஏற்ப பல மாறுபட்ட தொனிகளில் பயன்படுத்தக் கூடியது. எழுத்தாளர்களில் ஜெயகாந்தன் ஒருவர்தான் ‘ஓ’வை இப்படி வெவ்வேறு தொனிகளில் கையாண்டிருக்கிறார். (‘ஓ’, கோகிலா என்ன செய்துவிட்டாள்?’)

நம்முடைய வீட்டுக்குள்ளும், வெளியிலும், ‘ஓ’ விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. (கவனியுங்கள். ‘ஓ’ போடுவதற்கான விஷயங்கள் என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அர்த்தமே மாறிவிடும். அதுதான் ‘ஓ’வின் சிறப்பு. அத்துடன் சேருகிற சொல்லுக்கேற்ப பரிமாணம் மாறும். பஜ்ஜி மாவில் உருளைக்கிழங்கோ, வெங்காயமோ சேர்ந்தால் பஜ்ஜியின் தன்மை மாறுகிற மாதிரி)

இந்தப் பக்கங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் ‘ஓ’வை எந்த தொனியில் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580121206402
O! Pakkangal - Part 4

Read more from Gnani

Related to O! Pakkangal - Part 4

Related ebooks

Reviews for O! Pakkangal - Part 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    O! Pakkangal - Part 4 - Gnani

    https://www.pustaka.co.in

    ஓ! பக்கங்கள் - பாகம் 4

    O! Pakkangal - Part 4

    Author:

    ஞாநி

    Gnani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gnani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    நானும் நீங்களும் ‘ஓ’ பக்கங்களும்

    அக்டோபர் 2005ல் நான் ‘ஓ’ பக்கங்களை ஆனந்தவிகடன் இதழில் எழுதத் தொடங்கியபோது, ஏன் இதற்கு ‘ஓ’ பக்கங்கள் என்று பெயரிட்டேன் என்பதைத் தெரிவித்திருந்தேன்.

    ‘தமிழில் இருக்கும் ஒற்றை எழுத்துச் சொற்களில் என்னை நீண்ட நாட்களாக வசீகரிக்கும் சொல் ‘ஓ’!

    மற்ற ஒற்றை எழுத்துச் சொற்களான ஆ.ஈ.ஊ.ஏ.ஐ. எல்லாம் குறைவான அர்த்தமும், தொனியும் உடையவை. ‘ஓ’ ஒன்றுதான் இடத்துக்கு ஏற்ப பல மாறுபட்ட தொனிகளில் பயன்படுத்தக் கூடியது. எழுத்தாளர்களில் ஜெயகாந்தன் ஒருவர்தான் ‘ஓ’வை இப்படி வெவ்வேறு தொனிகளில் கையாண்டிருக்கிறார். (‘ஓ’, கோகிலா என்ன செய்துவிட்டாள்?’)

    நம்முடைய வீட்டுக்குள்ளும், வெளியிலும், ‘ஓ’ விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. (கவனியுங்கள். ‘ஓ’ போடுவதற்கான விஷயங்கள் என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அர்த்தமே மாறிவிடும். அதுதான் ‘ஓ’வின் சிறப்பு. அத்துடன் சேருகிற சொல்லுக்கேற்ப பரிமாணம் மாறும். பஜ்ஜி மாவில் உருளைக்கிழங்கோ, வெங்காயமோ சேர்ந்தால் பஜ்ஜியின் தன்மை மாறுகிற மாதிரி)

    இந்தப் பக்கங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் ‘ஓ’வை எந்த தொனியில் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

    அடுத்த இரு வருடங்களில் ‘ஓ’ பக்கங்களுக்கு கிடைத்த வாசகர் ஆதரவு எந்த அளவுக்கு இருந்தது என்றால், ஓரிரு வாரங்கள் ‘ஓ’ பக்கங்கள் வெளிவரவில்லையென்றால், வாசகர்களின் கற்பனைகள் சிறகு விரித்துப் பறந்து, என்னை பலத்த காயங்களுடன் பிரும்மாண்ட கட்டுகளுடன், ஏதோ ஒரு மருத்துவமனையில் அனுமதித்து விடும் அளவுக்கு இருந்தன.

    இதற்கு காரணம் கறாராக கருத்தைத் தெரிவிப்பது, தனிப்பட்ட சுயநல நோக்கங்கள் ஏதும் இல்லாமல் பொதுநலம் கருதி மட்டுமே கருத்து தெரிவிப்பது முதலிய செயல்கள் தமிழகத்தில் அபூர்வமாக இருக்கும் சூழல்தான். ஒற்றைத் தனிக் குரலாக ஒலிக்கும் ‘ஓ’ பக்கத்தைக் கொண்டாடப்பட வேண்டியதாக ஆக்குகிறது. அதே தீவிரத்துடன் வசை பாடலுக்குரியதாகவும் ஆக்கியிருக்கிறது.

    இரண்டாண்டுகள் கழித்து அக்டோபர் 2007ல், என்னுடைய ஒரு கட்டுரைக்கு, ஒன்று சேராத பிரமுகர்களையெல்லாம் ஒன்று திரட்டி, பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் செலவில் ஒரு கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. இதிலிருந்து மூன்று மாதங்கள் கழித்து முறையான காரணம் எதுவும் சொல்லப்படாமல் ‘ஓ’ பக்கங்கள் விகடனில் நிறுத்தப்பட்டன.

    அதையடுத்து பிப்ரவரி 2008 முதல் ‘ஓ’ பக்கங்கள் குமுதம் இதழில் தொடர்ந்து வெளிவந்தும் கொண்டிருக்கின்றன. தமிழக இதழியல் வரலாற்றிலேயே ஓர் எழுத்தாளர் தன் பத்திப் பகுதியை ஒரு பத்திரிகையிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிக் கொண்டது இதுவே முதல் முறையாகும். ‘ஓ’ பக்கங்களைப் பின் தொடரும் நிழலாக எண்ணற்ற வாசகர்கள் இருப்பதே தொடர்ந்து இந்தப் பகுதியின் வெற்றிக்குக் காரணமாகும்.

    ரயிலில், தெருவில், சினிமா கொட்டகையில் என்னைத் தற்செயலாகச் சந்திக்கிற பல வாசகர்கள் பொதுவாக என் துணிச்சலைப் பாராட்டுகிறார்கள். அவர்களில் சிலர் ‘எப்படி இவ்வளவு தைரியமா எழுதறீங்க?’ என்று என் காதருகே வந்து ரகசியமாய்க் கேட்கிறார்கள்.

    நான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன். மனதில் பட்டதை, என் பகுத்தறிவு கொண்டு முடிவுக்கு வந்ததைத் தயங்காமலும் கண்ணியமாகவும் அதே சமயம் கறாராகவும் சொல்லுவது என்பது 35 வருடங்களாக என் இயல்பு. இதில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றம் என்னைச் சுற்றி நிகழ்ந்திருப்பதுதான்.

    அரசியல் என்றால் மோசமாகத்தான் இருக்கும். நாம் எதைப் பற்றியும் முணுமுணுப்பது கூட ஆபத்தானது என்ற மனநிலை சாதாரண நடுத்தர வகுப்பு மக்களிடையே கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில்தான் மிக அதிக அளவில் பெருகியிருக்கிறது. இதை உருவாக்கிய முக்கியமான காரணங்களில் ஒன்று - இங்கே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டிற்கும் இடையில் வித்யாசங்கள் குறைந்து கொண்டே வந்துவிட்டதுதான். ஆட்சியில் இருக்கும் போது எல்லாரும் ஒரே மாதிரி ஊழல் பேர்வழிகளாகவும் அராஜகவாதிகளாகவும் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும் போது இதே ஊழல், அராஜகங்கள் பற்றி ரொம்ப அலட்டிக் கொள்வதில்லை. ஒப்புக்கு எதிர்ப்பதாக பாவனை காட்டுகிறார்கள்.

    பத்திரிகைகள், குறிப்பாக புலனாய்வு அரட்டை மன்றங்களாகிவிட்டன. எந்த சமூக, அரசியல் பிரச்சனையையும் ஆழமாக விவாதிப்பது, அலசுவது குறைந்துவிட்டது. பரபரப்பு, கிளுகிளுப்பு மட்டுமே பிரதான நோக்கங்களாகிவிட்டன. இப்படிப்பட்ட எழுத்தையே ரசித்துப் படிக்கும் பழக்கத்தையும் ஆழமாக எதையும் எதிர்பார்க்காத மனநிலையையும் அவை கணிசமான வாசகரிடையே ஏற்படுத்திவிட்டன.

    என் ‘ஓ’ பக்கங்களைக் கூட சில வாசகர்கள் டைம் பாஸ் ஆகவோ, காரமான சைட்டிஷ் போல மட்டுமோ பயன்படுத்துகிறார்களே என்ற கவலையும் அச்சமும் எனக்கு உண்டு. ‘நல்லா திட்டியிருக்கீங்க’, ‘இன்னும் திட்டியிருக்கலாம்’, ‘இந்த தடவை கொஞ்சம் டல்லு’ என்ற மாதிரி கமெண்ட்கள் சிலரிடமிருந்து கிடைக்கும் போது, இவர்களுக்காக ஏன் எழுத வேண்டும் என்ற மன அலுப்பு வருவதுண்டு.

    இப்படிப்பட்ட மேலோட்டமான கமெண்ட்கள் இல்லாமல், எழுதப்பட்ட பிரச்சனை பற்றி விவாதிக்கும் சில வாசகர்களை சந்திக்கும் போது, அலுப்பு முற்றாக நீங்காவிட்டாலும், தொடர்ந்து எழுதுவதற்கான உத்வேகம் சற்றேனும் கிடைக்கிறது.

    ‘என்னை விமர்சித்தால் நீ என் எதிரியின் ஆள்; என் எதிரியின் கருத்தை விமர்சித்தால் நீ நம்ம ஆள்; எங்கள் இருவரையும் விமர்சித்தால், நீ இன்னும் ஆபத்தானவன்; அப்போதும் உன்னை ஒரு சார்பாக சித்தரித்து அவதூறு செய்வோம்’’ என்பதுதான் இங்கு நீண்டகாலமாக பொது வாழ்க்கையில் அணுகுமுறையாக இருந்து வருகிறது. இதைப் பொருட்படுத்தாமல் இயங்கும் மனநிலையை ஒருவர் அடையாவிட்டால், இயங்கவே முடியாமல் போய்விடும்.

    இதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி, நாம் யார் பக்கம் நிற்பது என்ற கேள்விக்கு பதில் மக்கள் பக்கம் இருப்பதுதான் ஒரே சரியான நிலை என்ற தெளிவுடன் செயல்படுவது மட்டும்தான். மக்களே மக்கள் பக்கம் நிற்காத அளவுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் பொதுச் சூழலில் கூட, எல்லா தடைகளையும் தயக்கங்களையும் மீறி செயல்பட எனக்கு சாத்தியமாகியிருப்பது இந்த மனநிலையினால்தான்.

    என்னுடன் உடன்படுபவரும் முரண்படுபவரும் தொடர்ந்து காட்டும் எதிர்வினைகளே என்னை செழுமைப்படுத்துகின்றன. எதுவும் பொது விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும் என்ற என் உறுதியான கருத்தை சாத்தியப்படுத்தி வரும் இரு சாராருக்கும் என் நன்றி.

    குமுதம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் ‘ஓ’ பக்கங்களின் முதல் தொகுப்பு இது. இதனை சாத்தியப்படுத்திய குமுதம் நிர்வாகத்திற்கும், ஆசிரியர் குழு நண்பர்களுக்கும் என் நன்றி.

    மெளனமாக ஒரு புதிய தலைமுறை, நாளைய மாற்றத்துக்காக திரட்டிக் கொண்டிருக்கும் பார்வைகளுக்கான தேடலில் ‘ஓ’ பக்கங்களும் ஒரு கருவியாக பயன்படுவதை அறியும் ஒவ்வொரு தருணமும் என்னை உற்சாகப்படுத்துகிறது. மீண்டும் நன்றி.

    ஞாநி

    சென்னைக் கடலோரம்

    அக்டோபர் 2008

    உள்ளே...

    1. ஓ பக்கங்கள்

    2. காகித ஓடம் கடலலை மீது...

    3. வீடுதோறும் வரலாறு எழுதுங்கள்!

    4. அருவருப்பான அரசியல் தறிகெட்டுப்போகும் கிரிக்கெட்

    5. திருமணம் செக்ஸுக்காகவா? நட்புக்காகவா?

    6. வித்தியாசமான சினிமா

    7. நாறும் தேசபக்தி

    8. தமிழ்நாடு தனி நாடாக வேண்டுமா?

    9. இளமை எதோ எதோ?

    10. கிருமி லேயரில் எது கிருமி?

    11. கலைஞர் தரவேண்டிய பிறந்தநாள் பரிசு!

    12. அது வேறு உலகம்?

    13. ஒரு தேர்தல்!ஒரு கைது! ஒரு மரணம்!

    14. குடும்பம் எனும் குழப்பம்

    15. தயவுசெய்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.100 ஆக உயர்த்துங்கள்...

    16. தாயுமானவன்!

    17. காப்பாற்றுங்கள் கலாம்

    18. மதிகெட்ட மாமன்னன் மன்மோகனன்

    19. ஓம் நமோ நாராயணாய…

    20. வெட்கங்கெட்டவர்கள் நாளைய அரசியல்!

    21. முஸாஃபர் என்கிற விவேக் என்கிற முஸாஃபர் என்கிற விவேக்

    22. ரஜினிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

    23. நச்சுனு 4 கேள்வி

    24. குசேலனால் குபேரனான ரஜினி

    25. என்ன கொடுமை கருணாநிதி இது?

    26. உலகத்தின் குப்பைத்தொட்டியா இந்தியா?

    27. தமிழகம் 5 வெட்கக்கேடுகள்

    1. ஓ பக்கங்கள்

    ஓபக்கங்கள் பகுதி, நம்மை ‘ஓ’ என்று சொல்லவைக்கும் பல்வேறு வகையான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான பகுதி என்று சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆனந்த விகடனில் இதை எழுதத் தொடங்கியபோது அறிவித்திருந்தேன்.

    சென்ற வார குமுதம் முதல் பக்க அறிவிப்பைக் கண்டதும் ‘ஞாநிகுமுதத்திலா? ஓ!’ என்று பல வட்டாரங்களிலிருந்தும் மாறுபட்ட தொனிகளில் பலரும் ‘ஓ’ போடுகிறார்கள்! நியாயம்தான். குமுதம் 61 வருடங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் பத்திரிகை. நான் 33 வருடங்களாக முழு நேர எழுத்தாளனாக இருப்பவன். இதுவரை குமுதத்தில் நான் கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு எதுவும் எழுதியதில்லை.

    ஒரே ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன், சுமார் 30 வருடங்களுக்கு முன்னால்! அதுவும் குமுதத்தில் வெளியான தமிழ் நாடகத் துறை பற்றிய சுஜாதாவின் கட்டுரையைக் கண்டித்து! அந்தக் கடிதத்தை குமுதம் 16.8.1979 இதழில் என் புகைப்படத்துடன் கட்டுரை போல வெளியிட்டதால், எனக்கு இந்தியன் எக்ஸ்பிரஸில் வேலை பறிக்கப்பட்டது!

    இனி ஆங்கில நிருபர் வேலை வேண்டாமென்றும் முழு நேர தமிழ் எழுத்தாளனாவதென்றும் முடிவு செய்தேன். அப்போது புதிய பத்திரிகையான ஜூனியர் விகடனில் வேலைக்குச் சேர்ந்தேன். என் வேலை நீக்கத்துக்கு எதிராக எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தபோது அன்றைய குமுதம் உதவி ஆசிரியர் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன், ‘நான் குமுதத்துக்கு கடிதம்தான் எழுதினேனே தவிர, கட்டுரை எதுவும் எழுதவில்லை’ என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஒரு சாட்சிக் கடிதம் கொடுத்தார். நான்கு வருடம் நடந்த வழக்கில் நான் ஜெயித்தேன்.

    அப்போது என் கருத்தை குமுதம் வெளியிட்டதால், என் எக்ஸ்பிரஸ் நிருபர் வேலை போயிற்று. இப்போது என் கருத்தை வெளியிட முடியாத நிலை விகடனில் வந்ததால், நான் குமுதத்தில் எழுத வந்திருக்கிறேன். கடைசியாக நான் ஜல்லிக்கட்டு பற்றி எழுதிய ‘ஓ’ பக்கக் கட்டுரை, கடைசி நிமிடத்தில் அச்சாகாமல் நிறுத்தப்பட்டது. காரணம் பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுக்கு விரோதமாக அது இருந்ததாம். அது மட்டுமா? நான் எழுதிய, எழுதுகிற, எழுதப் போகும் பல விஷயங்கள் அப்படித்தானே! எந்த செண்ட்டிமெண்ட்டுக்கும் விரோதமாக இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவது ஒரு எழுத்தாளனின் வேலை அல்ல. பகுத்தறிவுக்கும் பொதுநலனுக்கும் விரோதமாக எது இருந்தாலும் அதை உரக்கச் சொல்வதே நம் பணி.

    அப்படி உரக்கச் சொல்வதுதான் சிலருக்கு சங்கடமாக இருக்கிறது. சில மாதங்கள் முன்பு என் ‘ஓ’ பக்கக் கட்டுரையைக் கண்டித்து, தி.மு.க.வின் புதிய நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான கவிஞர் தமிழச்சி ஏற்பாட்டில் ஓர் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் சுமார் மூன்று மணி நேரம் எனக்கு நடத்தப்பட்ட அந்த சஹஸ்ரநாமம் லட்சார்ச்சனையில், ஒரே ஒருவர்தான் என்னைக் கண்டிக்கும் சக்திகளின் அசலான பிரச்சனை என்ன என்பதைத் தன் பேச்சில் தொட்டதாக எனக்குப்பட்டது.

    எல்லாருக்கும் புரிகிற மாதிரி நான் எழுதுவதுதான் அவர்களுக்கு ஆபத்து என்றார் அவர். பத்தாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்காத பத்திரிகைகளில் மட்டுமே நான் எழுதுவதுதான் அவர்களுக்கு நல்லது என்றார். லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் நான் எழுதுவதுதான் அவர்களுக்கு சிக்கலாக இருக்கிறது என்ற பின்னணியில் நான் இடப்பெயர்ச்சியானதற்கு, பாவம் ஜல்லிக்கட்டு மாடுகள் என்ன செய்யும்?!

    முழு நேரப் பத்திரிகையாளனாகப் பணிபுரியும் இந்த 33 வருடங்களிலும் சென்னையில் பெரும்பாலும் வாடகை வீடுகளில்தான் வசித்து வருகிறேன். கீழ்ப்பாக்கத்தில் ஒரு மாதம். மேற்கு மாம்பலத்தில் ஒரு வருடம். ராயப்பேட்டையில் சுமார் 20 வருடங்கள். அடுத்த மூன்றாண்டுகள் திருவான்மியூரில் சொந்த வீடு. பிறகு மறுபடியும் 3 வருடம் அடையாறில் வாடகை வீடு. மறுபடியும் 3 வருடம் சொந்த வீடு. கடன்கள் இல்லாத வாழ்க்கைக் கனவுக்காக அதை விற்றுவிட்டு திரும்பவும் அடையாறு, திருவல்லிக்கேணி என்று மாறி மாறி வாடகை வீடுகள்.

    வசதிகளும் சிரமங்களும் வாடகை வீட்டிலும் உண்டு; சொந்த வீட்டிலும் உண்டு. நாம் விரும்பிய மாதிரியான சொந்த வீடோ வாடகை வீடோ அமைய, நாம் தரவேண்டிய விலை மிகப் பெரியது. ஒவ்வொரு உரிமையாளரும் ஒரு விதம்; இது உங்க வீடு மாதிரி என்று வாடகைதாரரிடம் முழு அன்புடன் வீட்டை ஒப்படைக்கும் அபூர்வங்கள் முதல், ஏரியா தாதாக்களுக்கு பயந்துகொண்டு தன் சொந்த வீட்டில் யாரையாவது குடி வைப்பதற்குக் கூட அனுமதி கேட்கும் கோழைகள் வரை பல ரகம்.

    புது வீட்டுக்குக் குடி வந்ததும், ‘ஓவரா ஆணி அடிக்காதே’, ‘ஓவரா சத்தம் போடாதே’, ‘டேங்க்கை ஒரு தடவையாவது நிரப்பாம, வெறுமே அஞ்சு நிமிஷத்துல அணைச்சா எப்பிடி’ முதலான முணுமுணுப்புகள் இரு தரப்பிலும் ஒலிக்கத்தான் செய்யும். ‘உங்களைப் பாக்க வரணும்னா ரெண்டு மணி நேரம் ஆகும். இப்ப சிட்டி செண்ட்டருக்கு வந்துட்டீங்களா, அடிக்கடி பாக்க முடியுது’, ‘தொலைவா இருந்தாலும் சுத்தமான காத்து, நல்ல தண்ணி’ போன்ற விதவிதமான சந்தோஷங்களும் இருக்கத்தான் செய்யும்.

    எழுத்தாளனுக்குப் பத்திரிகை என்பது வாடகை வீடு. வீட்டுக்காரருக்கும் குடியிருப்பவருக்கும் இசைந்து வராத சமயங்களில் இடப்பெயர்ச்சிகள் தவிர்க்க முடியாதவை.

    காதல்

    பொங்கல் நேரத்து ஜல்லிக்கட்டு வீரம் சீசன் முடிந்து இப்போது பிப்ரவரி 14 காதல் சீசன் தொடங்குகிறது.

    தமிழர்களின் வாழ்க்கையில் காதலும் வீரமும்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1