Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nindru Olirum Sudargal
Nindru Olirum Sudargal
Nindru Olirum Sudargal
Ebook263 pages1 hour

Nindru Olirum Sudargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘தமிழ்த் திரையுலகக் குணச்சித்திரங்களின் நடைச் சித்திரம்’ என்கிற சிறு விளக்கக் குறிப்போடு இப்புத்தகத்திற்கு ‘நின்று ஒளிரும் சுடர்கள்’ என்று நான் தலைப்பிட்டிருக்கிறேன்.
‘கருப்பு-வெள்ளைக் காலங்கள்’ என்ற தலைப்புத்தான் முதலில் மனதில் தோன்றியது. அது ஏதோ சரித்திரப் பின்னணியைக் கொண்டதானற ஒன்றை உணர்த்தி விடுமோ என்கிற ஐயப்பாட்டிலும், கவிதைத் தொகுப்பிற்கான தலைப்பாக உணரக் கூடும் என்ற நினைப்பிலும், மக்களுக்குப் பழகிய மொழியில் இருத்தல் அவசியம் என்கிற உணர்தலிலும் மேற்கண்ட தலைப்பும், அதன் குறிப்பும் மனதுக்குள் உருவாகி நிலைத்திட அதையே வைக்க முடிவு செய்தேன்.
எழுபதுகள் வரையிலான கால கட்டத்தின் தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் பலர். ஏறக்குறைய அவர்கள் எல்லோருமே நாடகப் பின்னணியிலிருந்து திரையுலகுக்குள் வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இளம் பிராயத்திலேயே நாடகக் கம்பெனிக்குள் நுழைந்து, அங்குள்ள எல்லா வேலைகளையும் ஒரு எடுபிடியாய் இருந்து செய்து கற்று, பின்பு சின்னச் சின்ன வேஷங்களாய்த் தரப்பட்டு அதனிலும் தேர்ந்து முன்னணிக்கு வந்து, ஒரு கைதேர்ந்த கலைஞனாய்த் திரையுலகுக்குள் அரிதான, அதிர்ஷ்டமான, பரிந்துரையுடனான வாய்ப்புக் கிடைக்கப் பெற்று அதன் மூலம் படிப்படியாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் பாடுபட்டு, காலம் கனிந்த பொழுதுகளில் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலெல்லாம் நீங்கா இடம் பெற்றவர்களாய் வலம் வந்து வெற்றி கண்டவர்கள் இவர்கள்.
மிகச் சிறந்த குணச்சித்திரங்களாகவும், தேர்ந்த நகைச்சுவை நாயகர்களாயும், எந்தவிதக் கதாபாத்திரத்திற்குள்ளும் தங்களைக் கச்சிதமாய்ப் பொருத்திக் கொள்பவர்களாயும், பல பரிமாணங்களில், தங்களை ஒதுக்க முடியாத ஒரு நிலைத்த ஸ்தானத்தில் நிறுத்திக் கொண்டு ஸ்திரம் பெற்றார்கள் இவர்கள்.
எழுபதுகள் வரையிலான கருப்பு வெள்ளைப் படங்கள் பலவும் வெறும் படங்களாக இல்லாமல், வாழ்க்கைப் பாடங்களாக அமைந்தவை எனலாம். மனித மேன்மைகளை, வாழ்க்கையின் சீர்மைகளைத் தூக்கிப் பிடித்தவை என்றும் நிறுவலாம். அப்படியான திரைப்படங்களின் தொடர்ந்த வெற்றிக்கு தங்கள் நடிப்பாற்றலினால் உத்தரவாதம் வழங்கியவர்கள் பலர். எந்தக் கதாபாத்திரம் ஆனாலும் இவரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஸ்தாபித்தவர்கள். சின்ன வேஷம், பெரிய வேஷம் என்ற வித்தியாசம் பார்க்காதவர்கள். பரஸ்பரத் திறமைகளை மதிக்கத் தெரிந்தவர்கள்.
அன்றைய காலகட்டத்தில் குடும்பப் படங்களே மேலோங்கி நின்றன. உறவுகளின் மேன்மையும், ஊடாடும் வாழ்க்கைச் சிக்கல்களும், சீர் குலைந்துவிடக் கூடாத குடும்ப அமைப்பின் கட்டுக் கோப்பினை விவரிப்பவையாக அமைந்து, அன்பு, கருணை, பாசம், நேசம், ஒற்றுமை, சந்தோஷம் இவைகளை முன்னிறுத்தி ஒழுக்கமும் பண்பாடும் மிக்க வாழ்க்கையினை வலியுறுத்தி, திரைப்படங்கள் என்பதே சமுதாயத்தின் மேன்மைகளுக்கும், மேம்பாடுகளுக்கும்தான் என்று சீராக வலம் வந்தன.
அப்படியான மிகச் சிறந்த திரைப்படங்களில் தங்களைக் கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டிய தமிழ் நடிகர்கள் பலர். அவர்கள் பல படங்களில் குணச் சித்திரங்களாகவும், நகைச்சுவை நாயகர்களாகவும், வில்லன்களாகவும், கதாநாயகர்களாகவும் இன்னும் பல்வேறுவிதமான சின்னச் சின்ன வேஷங்களிலும், தங்களின் திறமையைத் திறம்பட நிரூபித்திருக்கிறார்கள். ஏற்காத வேடமில்லை என்ற ஏற்புடையவர்கள்.
அப்படியானவர்களில் முக்கியமான நடிகர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் குறிப்பிட்ட தாங்கள் நடித்த அந்தப் படங்களின் வெற்றிக்கு எவ்வகையில் உதவியிருக்கிறார்கள் என்பதையும், இயக்குநரின் காட்சிப்படுத்தலில் எவ்வாறு பொருத்தமாய்த் தங்களை இருத்திக் கொண்டு, தங்களின் பல பரிமாணத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் இப்புத்தகத்தின் காட்சி ரூபத்திலான வசன நடைச்சித்திரங்கள் மூலம் உணர்ச்சி பூர்வமாயும், நெகிழ வைக்கும் தன்மையிலும், விளக்கியிருக்கிறேன்.
நடைச்சித்திரங்கள் என்று சொல்லும்போது குறிப்பிட்ட காட்சிகளின் வீரியத்திற்குக் காரணமான வசனகர்த்தாக்களையும் நினைவு கூறுவது கடமையாகிறது. சத்தான காய்கறிகள் இல்லையெனில் தேர்ந்த சமையல் அமைவது எப்படி? அவர்களுக்கெல்லாம் இந்தத் தொகுப்பின் மூலம் நன்றி பாராட்டுகிறேன்.
சிறந்த நடிப்பு, அழுத்தமான வசனங்கள், செழுமையான கதாபாத்திரங்கள் என்கிற வட்டத்திற்குள் நின்று எனக்குள் தோன்றிய பல நடிப்பு வேந்தர்களுள் சிலர் வருமாறு - நடிகர் திலகம், எஸ்.வி. ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, வி. நாகையா, டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா, வி.கே. ராமசாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.எஸ். துரைராஜ், ஏ. கருணாநிதி, நாகேஷ் ஆகியோர்.
இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்தான். அவர்கள் நடித்த மிகச் சிறந்த திரைப்படங்களும் இருக்கிறதுதான்.
அன்பன்,
Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580129904847
Nindru Olirum Sudargal

Read more from Ushadeepan

Related authors

Related to Nindru Olirum Sudargal

Related ebooks

Reviews for Nindru Olirum Sudargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nindru Olirum Sudargal - Ushadeepan

    http://www.pustaka.co.in

    நின்று ஒளிரும் சுடர்கள்

    Nindru Olirum Sudargal

    Author:

    உஷாதீபன்

    Ushadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ushadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சிவாஜி ஒரு சகாப்தம்

    2. ஒரு சோறு பதம்

    3. மானசீகத் தந்தை

    4. நடிப்புப் பொக்கிஷம்

    5. பழுத்த அனுபவம்

    6. இருந்தாலும் அவர்தான் பெஸ்ட்

    7. அவருக்கு நிகர் அவரே

    8. லட்சிய நடிகருக்கு லட்சிய அஞ்சலி

    9. வந்தே மாதரஞ் சாமி...!

    10. அடே லேக்கா, போடாதே காக்கா

    11. இவரை மிஞ்ச எவருமில்லை

    என்னுரை

    ‘தமிழ்த் திரையுலகக் குணச்சித்திரங்களின் நடைச் சித்திரம்’ என்கிற சிறு விளக்கக் குறிப்போடு இப்புத்தகத்திற்கு ‘நின்று ஒளிரும் சுடர்கள்’ என்று நான் தலைப்பிட்டிருக்கிறேன்.

    ‘கருப்பு-வெள்ளைக் காலங்கள்’ என்ற தலைப்புத்தான் முதலில் மனதில் தோன்றியது. அது ஏதோ சரித்திரப் பின்னணியைக் கொண்டதானற ஒன்றை உணர்த்தி விடுமோ என்கிற ஐயப்பாட்டிலும், கவிதைத் தொகுப்பிற்கான தலைப்பாக உணரக் கூடும் என்ற நினைப்பிலும், மக்களுக்குப் பழகிய மொழியில் இருத்தல் அவசியம் என்கிற உணர்தலிலும் மேற்கண்ட தலைப்பும், அதன் குறிப்பும் மனதுக்குள் உருவாகி நிலைத்திட அதையே வைக்க முடிவு செய்தேன்.

    எழுபதுகள் வரையிலான கால கட்டத்தின் தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் பலர். ஏறக்குறைய அவர்கள் எல்லோருமே நாடகப் பின்னணியிலிருந்து திரையுலகுக்குள் வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இளம் பிராயத்திலேயே நாடகக் கம்பெனிக்குள் நுழைந்து, அங்குள்ள எல்லா வேலைகளையும் ஒரு எடுபிடியாய் இருந்து செய்து கற்று, பின்பு சின்னச் சின்ன வேஷங்களாய்த் தரப்பட்டு அதனிலும் தேர்ந்து முன்னணிக்கு வந்து, ஒரு கைதேர்ந்த கலைஞனாய்த் திரையுலகுக்குள் அரிதான, அதிர்ஷ்டமான, பரிந்துரையுடனான வாய்ப்புக் கிடைக்கப் பெற்று அதன் மூலம் படிப்படியாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் பாடுபட்டு, காலம் கனிந்த பொழுதுகளில் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலெல்லாம் நீங்கா இடம் பெற்றவர்களாய் வலம் வந்து வெற்றி கண்டவர்கள் இவர்கள்.

    மிகச் சிறந்த குணச்சித்திரங்களாகவும், தேர்ந்த நகைச்சுவை நாயகர்களாயும், எந்தவிதக் கதாபாத்திரத்திற்குள்ளும் தங்களைக் கச்சிதமாய்ப் பொருத்திக் கொள்பவர்களாயும், பல பரிமாணங்களில், தங்களை ஒதுக்க முடியாத ஒரு நிலைத்த ஸ்தானத்தில் நிறுத்திக் கொண்டு ஸ்திரம் பெற்றார்கள் இவர்கள்.

    எழுபதுகள் வரையிலான கருப்பு வெள்ளைப் படங்கள் பலவும் வெறும் படங்களாக இல்லாமல், வாழ்க்கைப் பாடங்களாக அமைந்தவை எனலாம். மனித மேன்மைகளை, வாழ்க்கையின் சீர்மைகளைத் தூக்கிப் பிடித்தவை என்றும் நிறுவலாம். அப்படியான திரைப்படங்களின் தொடர்ந்த வெற்றிக்கு தங்கள் நடிப்பாற்றலினால் உத்தரவாதம் வழங்கியவர்கள் பலர். எந்தக் கதாபாத்திரம் ஆனாலும் இவரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஸ்தாபித்தவர்கள். சின்ன வேஷம், பெரிய வேஷம் என்ற வித்தியாசம் பார்க்காதவர்கள். பரஸ்பரத் திறமைகளை மதிக்கத் தெரிந்தவர்கள்.

    அன்றைய காலகட்டத்தில் குடும்பப் படங்களே மேலோங்கி நின்றன. உறவுகளின் மேன்மையும், ஊடாடும் வாழ்க்கைச் சிக்கல்களும், சீர் குலைந்துவிடக் கூடாத குடும்ப அமைப்பின் கட்டுக் கோப்பினை விவரிப்பவையாக அமைந்து, அன்பு, கருணை, பாசம், நேசம், ஒற்றுமை, சந்தோஷம் இவைகளை முன்னிறுத்தி ஒழுக்கமும் பண்பாடும் மிக்க வாழ்க்கையினை வலியுறுத்தி, திரைப்படங்கள் என்பதே சமுதாயத்தின் மேன்மைகளுக்கும், மேம்பாடுகளுக்கும்தான் என்று சீராக வலம் வந்தன.

    அப்படியான மிகச் சிறந்த திரைப்படங்களில் தங்களைக் கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டிய தமிழ் நடிகர்கள் பலர். அவர்கள் பல படங்களில் குணச் சித்திரங்களாகவும், நகைச்சுவை நாயகர்களாகவும், வில்லன்களாகவும், கதாநாயகர்களாகவும் இன்னும் பல்வேறுவிதமான சின்னச் சின்ன வேஷங்களிலும், தங்களின் திறமையைத் திறம்பட நிரூபித்திருக்கிறார்கள். ஏற்காத வேடமில்லை என்ற ஏற்புடையவர்கள்.

    அப்படியானவர்களில் முக்கியமான நடிகர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் குறிப்பிட்ட தாங்கள் நடித்த அந்தப் படங்களின் வெற்றிக்கு எவ்வகையில் உதவியிருக்கிறார்கள் என்பதையும், இயக்குநரின் காட்சிப்படுத்தலில் எவ்வாறு பொருத்தமாய்த் தங்களை இருத்திக் கொண்டு, தங்களின் பல பரிமாணத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் இப்புத்தகத்தின் காட்சி ரூபத்திலான வசன நடைச்சித்திரங்கள் மூலம் உணர்ச்சி பூர்வமாயும், நெகிழ வைக்கும் தன்மையிலும், விளக்கியிருக்கிறேன்.

    நடைச்சித்திரங்கள் என்று சொல்லும்போது குறிப்பிட்ட காட்சிகளின் வீரியத்திற்குக் காரணமான வசனகர்த்தாக்களையும் நினைவு கூறுவது கடமையாகிறது. சத்தான காய்கறிகள் இல்லையெனில் தேர்ந்த சமையல் அமைவது எப்படி? அவர்களுக்கெல்லாம் இந்தத் தொகுப்பின் மூலம் நன்றி பாராட்டுகிறேன்.

    சிறந்த நடிப்பு, அழுத்தமான வசனங்கள், செழுமையான கதாபாத்திரங்கள் என்கிற வட்டத்திற்குள் நின்று எனக்குள் தோன்றிய பல நடிப்பு வேந்தர்களுள் சிலர் வருமாறு - நடிகர் திலகம், எஸ்.வி. ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, வி. நாகையா, டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா, வி.கே. ராமசாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.எஸ். துரைராஜ், ஏ. கருணாநிதி, நாகேஷ் ஆகியோர்.

    இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்தான். அவர்கள் நடித்த மிகச் சிறந்த திரைப்படங்களும் இருக்கிறதுதான். அவர்களையெல்லாம், அவைகளையெல்லாம் விடுபடாமல் சொல்ல வேண்டும் என்கிற தீராத அவா உண்டுதான். ஆனால் இந்த என்னுடைய முதல் முயற்சியில் இதில் உள்ளது மட்டுமே இப்போதைக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.

    ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்துவது போன்றதான முயற்சி இது என்பதைத் தமிழ்த் திரை ரசிகர்கள், வாசகர்கள் கண்டிப்பாக உணர முடியும். குறிப்பிட்ட அந்த நடிகர்களின் படங்களைக் கைக் கொள்ளுதலும், தொடர்ந்து அவைகளைக் காட்சிப்படுத்தி, கவனம் விடாமல் பார்த்துப் பார்த்து உள்வாங்கி உருப்படுத்துதலும், உணர்ச்சிகரமான காட்சிகளைத் தேர்வு செய்தலும், அதற்கான வசனங்களை விடுபடாமல் வரி வரியாகப் பதிவு செய்து கொள்ளுதலுமாகிய பல் நோக்குப் பணிகள் என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல என்பதை வாசக நண்பர்கள் உணர்வீர்களாக. அப்படியான சிரமத்தில்தான் இந்தப் புத்தகத்திலுள்ள நடைச் சித்திரங்களை, காட்சி ரூபங்களை நான் தொடர்ந்து தெரிவு செய்தேன். தேர்ந்த ரசனை உள்ளவர்கள் இப்புத்தகத்தை ஆழ்ந்து அனுபவித்துப் படித்துப் பாராட்டுவார்கள் என்பது நிச்சயம்.

    கடைசியாக ஒன்று. குணச்சித்திரங்களின் நடைச்சித்திரங்கள் என்று கூறிவிட்டு நடிகர் திலகத்தையும், நகைச்சுவை நடிகர்களையும் எப்படிச் சேர்த்தீர்கள் என்ற கேள்வி வாசகர்கள் மனதில் எழலாம். நடிப்பு என்கிற உலகிற்குள் நுழையும்போதே பல்கலைக்கழகமாக நுழைந்தவர் நடிகர்திலகம் என்பார் அய்யா நெல்லைக் கண்ணன். அந்தப் பிறவி நடிகனின் பெரும்பாலான திரைப்படங்களில் அவரோடு விடாது கைகோர்த்து, தங்களை அவர்களின் திறமையால் குணச்சித்திரங்களாக நிலை நிறுத்திக் கொண்டவர்கள் இத்தொகுப்பில் உள்ள மேன்மை மிக்க பெரியவர்கள். எவரில் எவர் விஞ்சி நிற்கிறார் என்கிற கேள்வியை எழுப்பி நடிகர்திலகத்தையே அயர வைத்தவர்கள். அவரே அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளச் செய்தவர்கள். இவர்களை, அவரை விட்டு ஒதுக்கி, ஒதுங்கிப் பார்க்க முடியாது என்பதால்தான் அவரோடு இணைந்த வெற்றியாளர்களாக இவர்களும் வலம் வந்ததை, அப்படியான குறிப்பிட்ட வெற்றிப் படங்களின் திறம்பட்ட காட்சிகள் மூலம் இந்தப் புத்தகத்தில் உணர்த்தும் கடமையானது எனக்கு. அதனால்தான் இவர்கள் என்றும் நின்று ஒளிரும் சுடர்களாகிறார்கள். காலத்தால் அழியாதவர்கள். என்றென்றும் தமிழ்த் திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற ஜாம்பவான்கள்.

    எப்படி எழுத்துத் துறைக்கு வருபவர்கள் 1930களிலிருந்து 1960கள் வரையிலான மணிக்கொடிக் காலப் படைப்பாளிகள் முதல் ஜெயகாந்தன் வரையிலான மூத்த இலக்கியவாதிகளைக் கற்காமல் எழுத்துப் பணிக்குள் நுழைய முடியாதோ அப்படித்தான் நடிப்புத் துறைக்கு வருபவர்களும் மேற்கூறிய அழியாச்சுடர்களை அறியாமல் உள்ளே அடியெடுத்து வைக்க முடியாது.

    மிகச் சிறந்த திரைப்படங்களின், தரம் மிகுந்த காட்சிகளைத் தொகுத்துரைத்து, அதன் மூலம் தமிழ்த் திரையுலகின் வெற்றிப் பவனி எவ்வாறு இந்தக் கலைஞர்களால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்பதை விவரிக்கும் இந்த நடைச் சித்திரத் தொகுப்பை எழுதியதில் நான் பெருமையடைகிறேன். காலமும், நேரமும் ஒத்துழைத்தால் இது மேற்கொண்டும் தொடரலாம். இன்னும் பல சிறப்புக்களை எய்தலாம்.

    அன்பன்,

    உஷாதீபன்.

    8-10-6 ‘ஸ்ருதி’ இல்லம்,

    சிந்து நதித் தெரு, மகாத்மா காந்தி நகர்,

    மதுரை - 625 014. (செல்-94426 84188)

    (ushaadeepan@gmail.com)

    1. சிவாஜி ஒரு சகாப்தம்

    (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்)

    நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடம் கேட்ட போது அவர் தந்தை பெரியார் என்று சொன்னார்.

    வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத்திறனுக்கு உகந்த, அதற்கும் மேலான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.

    மிகச் சரியாச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.

    யப்பா, எப்படிச் செய்யணும்னு சொல்லு... செய்துடறேன்... இது தான் அவரின் வார்த்தைகள். இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர் திலகம். அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்த போது, அல்லது செய்ய முயன்றபோது காப்பி அடிக்கிறான்யா.... இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு... என்றுதான் கமென்ட் விழுந்தது. ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை.

    மிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது என்பதுவே சத்தியமான உண்மை. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்திவிட்டு, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது நடிகர்திலகம் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று என்று யாராலும் சொல்ல இயலாது அவரின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்து விட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் உகந்ததாகாது. வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நாயக, குணச்சித்திர கதாபாத்திர நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள் என்பதுதான் இங்கே உணர வேண்டிய உண்மை.

    அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம் மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரை வடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற் போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள்.

    அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள்,பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது.

    மிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்து விட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும். அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்த மில்லாத காட்சி இது... சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.

    விமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு. சோ அவர்கள். இப்படி அவர் சொன்னபோது, நீ எப்படி செய்யணும்ங்கிறே... இப்படித் தானே...

    Enjoying the preview?
    Page 1 of 1