Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanathu Nilavu
Vaanathu Nilavu
Vaanathu Nilavu
Ebook574 pages3 hours

Vaanathu Nilavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம் மனதை ஆழமாகப் பாதிக்கும் சிறு விதையே, மிகப் பெரிய நாவலுக்கான கதைக் கருவாக வளர்கிறது. அந்த வகையில், உங்கள் கைகளில் தவழும் 'வானத்து நிலவு' நாவல், என்னுடைய 30 ஆண்டு கால பத்திரிகைத் துறை அனுபவங்களின் திரட்டாக உருவாகியிருக்கிறது. இதுவரை யாரும் அதிகம் எடுத்துக் கையாளாத கதைக் கரு இது என்பது, இந்த நாவலுக்கு புதியதொரு மெருகையும், சிறப்பையும் கொடுக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பொதுமக்களுக்கு வழங்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் நிருபர்கள், செய்தி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்களின் வாழ்க்கையை வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டும் என்ற உந்துதலின் வெளிப்பாடுதான் 'வானத்து நிலவு' நாவல்.

Languageதமிழ்
Release dateDec 2, 2023
ISBN6580127310321
Vaanathu Nilavu

Read more from G. Meenakshi

Related to Vaanathu Nilavu

Related ebooks

Reviews for Vaanathu Nilavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanathu Nilavu - G. Meenakshi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வானத்து நிலவு

    Vaanathu Nilavu

    Author:

    ஜி. மீனாட்சி

    G. Meenakshi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-meenakshi

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    முன்னுரை

    சிவசங்கரி

    எழுத்தாளர்

    இலக்கியம் என்றால் என்ன?

    காலத்தை வென்று நிற்பதும், இலக்கை நோக்கிச் செல்வதும், சமுதாய நடப்புகளையும் சூழலையும் பிரதிபலிப்பதும்தான் சிறந்த இலக்கியம் என்று காலம்காலமாக அனைவருமே கூறி வந்திருக்கிறார்கள்.

    நல்ல இலக்கியம் என்பதற்கு ஏதாவது வரையறை இருக்கிறதா?

    நாம் படைக்கும் இலக்கியம் வாசகருக்கு இரண்டாவது தோல் போல அவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கவிதாயினி கமலாதாஸும்;

    பேனா ஒரு துடைப்பம்... நம்மை சுற்றி உள்ள குப்பைகளை அகற்ற துடைப்பம் உதவுது போல சமுதாயப் பிரச்சினைகளை இனம் காட்டி தீர்வு காண நல்ல எழுத்து உதவ வேண்டும் என்று படைப்பாளி சுகதகுமாரியும்;

    நல்ல இலக்கியம் சமுதாயத்தைப் பிரதிபலிப்பதோடு அதில் நிஜம் இருக்க வேண்டும்... அந்த நிஜம் மாற்றங்களுக்கு உள்ளாகும்போது அதையும் இலக்கியம் வெளிப்படுத்த வேண்டும்... முகம் பார்க்கும் கண்ணாடியை முகம் பார்க்க மட்டுமல்லாது முகத்தை சீர் செய்து கொள்ளவும் உபயோகிப்பதைப் போல இலக்கியத்தின் தன்மை இருக்க வேண்டும் என்று வங்காள மொழி படைப்பாளி சுபாஷ் முகோபாத்யாயாவும் இன்னும் பல படைப்பாளிகளும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

    இதைப்போலவே சிறுகதை, நாவல் பற்றியும் இந்திய மொழிகளின் முன்னணி எழுத்தாளர்கள் கொண்டுள்ள கருத்துகள் சுவாரஸ்யமானவை. ஹிந்தி மொழியில் மூத்த எழுத்தாளரான மிருதுளா கர்க், நம்முடைய ஞாபகத்தில் தங்கிவிடும் ஓர் அனுபவத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதை வடமொழியில் அனுபூதி என்பார்கள். அந்த அனுபவத்தை மறுபடியும் நாம் நினைவு கூறும்போது அதே தீவிரம் வீரியத்துடன் அதிக மாற்றம் இல்லாமல் வெளிப்பட்டால் அது சிறுகதையாக ஆகும். இடைப்பட்ட காலத்தில் அழுத்தமான கற்பனையோடு இரண்டறக் கலந்து விட்டால், அதுவே நாவலுக்குரிய கருவாக மாறிவிடும். பெரும்பாலும் சிறுகதைகளில் ஒரு ரசம் மட்டுமே பிரதானமாக வெளிப்படும். ஆனால், நாவலில் ஒன்பது ரசங்களுமே தீவிரமாக வெளிப்படலாம்... இப்படி நான் கூறினாலும் ‘இதுதான் விளக்கம், இதுதான் வரையறை’ என்று படைப்பாளியை கட்டுப்படுத்துவது சரியான நோக்கம் அல்ல என்று கூறுகிறார்.

    உருது மொழியில் மூத்த எழுத்தாளராக திகழ்ந்த குருத்துலைன் ஹைதர், தன் கருத்தை இன்னும் ஒரு வகையாக வெளிப்படுத்துகிறார்... சிறுகதைகள், நாவல்கள் திடுமென சொர்க்கத்திலிருந்து விழுந்து விடவில்லை... அவை நாடோடிக் கதைகளிலிருந்தும் புராணங்களிலிருந்தும்தான் மெல்ல மெல்ல உருவாயின... அந்த நாட்களில் இரவு நேரங்களில் தீயை மூட்டிவிட்டு சுற்றிலும் மக்கள் அமர்ந்துகொள்ள ‘தாஸ்டங்கோ’ என்பவர் பல நாட்களுக்கு கதைகளை சொல்லும் வழக்கம் இருந்தது. அப்படி கதை கேட்கும் பழக்கத்தை ‘க்விஸா’ என்று அழைப்பார்கள்... நாளடைவில் இந்த க்விஸாவில் இருந்துதான் சிறுகதைகளும் புதினங்களும் வளர்ச்சி கண்டன என்கிறார் அழுத்தம் திருத்தமாக...

    தம் தம் கருத்துக்களைப் படைப்பாளிகள் வெவ்வேறு வார்த்தைகளில் கூறினாலும் அவர்களின் பேச்சுக்களில் அடிநாதமாக இருப்பது ‘ஒரு நல்ல இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு எழுத்தாளரின் திருஷ்டி - பார்வை - சிந்தனை – வளமாக, துல்லியமாக, நேர்மையாக, எதார்த்தமாக இருப்பது அவசியம்’ என்பதுதான்!

    நல்ல திருஷ்டியில் இருந்து தான் நல்ல சிருஷ்டி உருவாகிறது...

    ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு படைப்பை படைக்கும் முன்னர் நாம் எதைப் பார்க்கிறோம்? எங்கிருந்து பார்க்கிறோம்? எந்த மனநிலையில் பார்க்கிறோம்? என்பது குறித்தான விழிப்புணர்வோடு செயல்படுவது ரொம்ப அவசியம்.

    உதாரணத்திற்கு, மலையின் உச்சியிலிருந்து அருகில் இருக்கும் பள்ளத்தாக்கை நாம் உற்று நோக்கினால் கிடைக்கும் காட்சி மலையின் அடிவாரத்தில் இருந்து நாம் காணும் காட்சியில் இருந்து மாறுபட்டு இருக்கும்! உச்சியில் இருந்து பார்க்கும்போது வெகு தொலைவு நம்மால் பார்க்க முடியும்; ஆனால், நாம் காணும் பொருட்கள், அது வீடு மரம் எதுவாக இருப்பினும், அளவில் சிறியதாகத் தெரியும்... அதே பள்ளத்தாக்கை அடிவாரத்தில் இருந்து பார்க்கும்போது சிறிது தூரத்தில் இருக்கும் விஷயங்களை மட்டுமே காண முடியும்; அவைகளும் அளவில் பெரியதாகக் காட்சியளிக்கும்! பொருள் ஒன்றுதான்; ஆனால் பார்வையும் கோணமும் மாறுபடுவதில் காட்சி வித்தியாசமாக தெரிகிறது என்ற இந்த விழிப்புணர்வை ஒரு படைப்பாளி பெற்றுவிட்டால் சொந்த விருப்பு வெறுப்புகள் ஊடுருவாமல், மஞ்சள் கண்ணாடி மாட்டிக்கொள்ளாமல், ஜட்ஜ்மெண்டலாக இல்லாமல், ஒரு படைப்பைத் தருவது சாத்தியமாகிறது.

    சிறுகதையோ நாவலோ எதை எழுதினாலும் கதைக்கு உள்ளே சென்று கதை மாந்தர்களோடு ஐக்கியமாகி விடுவது எதார்த்தமாக கதையை கொண்டு செல்ல உதவும். கூடு விட்டு கூடு பாய்தல்... இதை வடமொழியில் ‘பர காய பிரவேசம்’ என்று கூறுவார்கள். எந்த கதாபாத்திரத்தைப் பற்றி எழுதுகிறோமோ நாம் அதுவாக மாறுவது அந்த பாத்திரப் படைப்புக்கு வெகுவாக உதவும். இதற்கு களப்பணி செய்வது அவசியம். இயற்கையாக எல்லாவற்றையுமே தெரிந்துகொண்டு எழுதுவது எவருக்குமே இயலாத காரியம்... ஆனால், தெரியாத விஷயங்களைத் தெரிந்து, புரிந்து, உள்வாங்கிக் கொண்டு எழுதும்போது அந்த எழுத்து வாசகர்களை வேகமாகச் சென்று அடைகிறது. நம் ஐம்புலன்களை பாதித்து நம்மை எதுவெல்லாம் சந்தோஷப்பட, துக்கப்பட, கோபப்பட, சிந்திக்க வைத்தனவோ அவை அனைத்தையும் குறித்து வைத்துக்கொண்டு இந்தக் கருவை எந்த கோணத்தில் இருந்து பார்த்து எழுதலாம் என்பதை ஒரு எழுத்தாளர் தீர்மானிக்க வேண்டும். இப்படிப்பட்ட சரியான திருஷ்டியுடன் செயல்படும்போது மிகத் தரமான சிருஷ்டி கிடைக்கும் என்பது உறுதி.

    அப்படிப்பட்ட ஒரு ஆழமான சரியான பார்வையோடும் சிந்தனையோடும் திட்டமிடுதலோடும் ஆசிரியர் ஜி. மீனாட்சி ‘வானத்து நிலவு’ என்ற இந்த அருமையான புதினத்தை நமக்குத் தந்திருக்கிறார்.

    இதுவரை தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்படாத ஒரு சூழலை, பின்னணியை தன் கதைக்களமாக தேர்ந்தெடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

    கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் பத்திரிகைத் துறையில் ஈடுபாடு கொண்டு சென்னைக்கு வந்து ‘நமது நண்பன்’ என்ற ஒரு நாளேட்டில் நிருபராக பல அனுபவங்களைப் பெற்று அதையெல்லாம் செய்திகளாக எழுதி தன்னை அவர் பத்திரிகை உலகில் எப்படி நிலைநிறுத்திக் கொள்கிறார் என்பதும், இதனூடே வருடிக் கொடுக்கும் தென்றலாக ஒரு காதல் மலர்வதும் மிக இயல்பாகச் சித்தரிக்கபட்டிருக்கின்றன.

    பத்திரிக்கை துறையின் வெவ்வேறு செயல்பாடுகளை - ஒரு நிருபர் சம்பவம் நடக்கும் இடத்துக்குச் சென்று அரும்பாடுபட்டு செய்திகளை சேகரிப்பதையும், அதை மக்களுக்குச் சென்று அடையும் வகையில் எளிமையான கட்டுரையாக எழுதுவதையும், பின்னர் அது அச்சு கோர்க்கப்பட்டு, லே அவுட் செய்யப்பட்டு, பிரிண்டுக்கு செல்லும் வரையிலான செயல்பாடுகளை - மிக சுவாரஸ்யமாக ஆசிரியர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

    இந்த புதினம் ‘ராணி’ பத்திரிகையில் தொடராக வரும்போதே அதை படித்து ரசித்தவள் நான். சில வாரங்கள் அத்தியாயங்களை படித்துவிட்டு மகிழ்ந்து, மீனாட்சியோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த சம்பவத்தை மிக அழகாகச் சித்தரித்து இருக்கிறாய்... செய்திகள் சேர்க்க ஒரு நிருபர் படும் கஷ்டங்களை நன்றாகப் புரிய வைத்திருக்கிறாய் என்று பாராட்டி இருக்கிறேன்.

    ‘சரியான கருவும், சரியான உத்தியும் ஒன்று சேரும்போது ஒரு மாயம் நிகழ்ந்து தரமான இலக்கியம் படைக்கப்படுகிறது’ என்று மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் அடிக்கடி கூறுவார். இந்தக் கருத்தை ‘வானத்து நிலவு’ கதை நிரூபித்திருக்கிறது.

    தொய்வில்லாமல் கதை நகரும் வகையில் சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து இருப்பதோடு, கதாபாத்திரங்களை கச்சிதமாக செதுக்கி இருப்பதை விசேஷமாகக் குறிப்பிட வேண்டும். இந்தக் கதையின் முக்கிய நாயகி நாயகனான நந்திதா - அஸ்வின் இருவரும் தங்கள் முன் உதாரணங்களாகப் பார்க்கும் எடிட்டர் சத்யா, அவர் மனைவி அகிலா மற்றும் பத்திரிகையோடு சம்பந்தப்பட்ட தெய்வநாயகம், நவீன், ராமநாதன், சண்முகம், தோழிகளான சாரதா, சுமித்ரா, நந்திதாவின் அண்ணன் அண்ணி இன்னும் பலரின் படைப்புகளும் அந்தந்த பாத்திரங்களின் இயல்புத் தன்மையோடு எதார்த்தமாக படைக்கப்பட்டிருப்பது நாவலுக்கு உரம் சேர்க்கிறது.

    என்னுடைய 30 ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் பத்திரிகைத் துறையை நேசிக்கும் பத்திரிகையாளர்களின் இயல்புகள், பத்திரிகைத் துறையின் செயல்பாடுகள், நெருக்கடிகள், சவால்கள், மக்களுக்கான சேவை என்று பலதரப்பட்ட கோணங்களிலும் அலசி ஆராய்ந்து விரிவாக எழுதப்பட்ட நாவல் இது என்று கூறும் ஆசிரியர் மீனாட்சி, தன்னுடைய நோக்கத்தில் முழு வெற்றி அடைந்திருக்கிறார்.

    கதைக்கு விறுவிறுப்பு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சம்பவத்தையோ, ஒரு கதாபாத்திரத்தையோ மிகைப்படுத்தாமல், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் கச்சிதமாக அவர் எழுதியிருப்பது புதினத்தை இலக்கியத் தரம் கொண்டதாக ஆகியிருக்கிறது.

    ஆசிரியர் மீனாட்சி தொடர்ந்து வரும் வருஷங்களில் மாறுபட்ட களங்களில், வித்தியாசமான கதைகளை எழுதி தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து நம்மை சிந்திக்க வைப்பார் என்ற நம்பிக்கையை புத்தகம் தோற்றுவித்துள்ளது.

    ஆசிரியருக்கு என் பாராட்டுகள்... வாழ்த்துக்கள்.

    என்னுரை

    நம் மனதை ஆழமாகப் பாதிக்கும் சிறு விதையே, மிகப் பெரிய நாவலுக்கான கதைக் கருவாக வளர்கிறது. அந்த வகையில், உங்கள் கைகளில் தவழும் ‘வானத்து நிலவு’ நாவல், என்னுடைய 30 ஆண்டு கால பத்திரிகைத் துறை அனுபவங்களின் திரட்டாக உருவாகியிருக்கிறது. இதுவரை யாரும் அதிகம் எடுத்துக் கையாளாத கதைக் கரு இது என்பது, இந்த நாவலுக்கு புதியதொரு மெருகையும், சிறப்பையும் கொடுக்கிறது.

    ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் பத்திரிகைத் துறை, உலகம் முழுக்க தினசரி நடக்கும் சம்பவங்களைத் திரட்டி சாமானிய மக்களுக்கு செய்திகளாக வழங்கி வருவதுடன், பொதுமக்களின் குரலாகவும், மனசாட்சியாகவும் செயல்பட்டு வருகிறது என்று சொன்னால், அது மிகையல்ல.

    செய்திகளை உடனுக்குடன் பொதுமக்களுக்கு வழங்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் நிருபர்கள், செய்தி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்களின் வாழ்க்கையை வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டும் என்ற உந்துதலின் வெளிப்பாடுதான் ‘வானத்து நிலவு’ நாவல். செய்திகளைச் சேகரிப்பதிலிருந்து அதை சுவையான கட்டுரைகளாக்கித் தருவது, மொழிபெயர்ப்பது, பிழை திருத்துவது, வாசகர்களைப் படிக்கத் தூண்டும் வகையில் சிறப்பான லே அவுட்டாக வடிவமைப்பது வரை, ஒரு நாளிதழின் பல்வேறு படி நிலைகளை இந்த நாவலில் அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறேன்.

    சிறுகதையோ, நாவலோ, எதுவாக இருந்தாலும், மாறுபட்ட தளத்தில், வேறுபட்ட கோணத்தில், புதிய துறை சார்ந்து எழுதும்போது, படிப்பவருக்கு அது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாது, புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் மாறி விடுகிறது.

    பத்திரிகைத் துறையை நேசிக்கும் பத்திரிகையாளர்களின் இயல்புகள், பத்திரிகைத் துறையின் செயல்பாடுகள், நெருக்கடிகள், சவால்கள், மக்களுக்கான சேவை என்று பலதரப்பட்ட கோணங்களிலிருந்தும் அலசி ஆராய்ந்து, விரிவாக எழுதப்பட்ட நாவல் இது. இதில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையாக இருந்தாலும், சம்பவங்கள் அனைத்தும் பத்திரிகைத் துறையினர் அன்றாடம் சந்தித்து வரும் நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.

    போர்முனையில் நிற்கும் போர் வீரனின் சாகசங்களுக்கு சற்றும் குறையாத சவால்களும், திருப்புமுனைகளும், வலிகளும், வேதனைகளும் நிரம்பியது, ஒரு பத்திரிகையாளனின் வாழ்க்கை.

    எல்லோரும் பண்டிகைகளைக் கொண்டாடும்போது பத்திரிகையாளன் களத்தில் நின்று செய்தி சேகரித்துக் கொண்டிருப்பான். வார விடுமுறை நாட்களில்கூட அலுவலகத்தில் அமர்ந்து கட்டுரை எழுதிக் கொண்டிருப்பான். வெயிலோ, மழையோ, பனியோ எல்லாமுமே பத்திரிகையாளனுக்கு ஒன்றுதான். நேரம் காலம் பார்க்காமல், தன்னலம் கருதாமல், குடும்பத்தைக்கூட மறந்து பணியில் லயித்துப் போகும் பத்திரிகையாளர்கள் அநேகர்.

    குறைந்த வருமானம், மனம் நிறையக் கற்பனைகள், உலகையே தம் பேனா முனையால் புரட்டிப் போட்டுவிடும் உத்வேகம், தம் எழுத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, சாமானிய மக்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திவிடத் துடிக்கும் லட்சிய தாகம் என்று எழுத்தையே தம் வாழ்வாகக் கொண்டு வாழும் லட்சோப லட்சம் பத்திரிகையாளர்களின் எழுச்சிமிக்க வாழ்க்கைப் பயணத்தின் சிறு துளிதான், ‘வானத்து நிலவு’. இதில் வரும் கதாபாத்திரங்களான சத்யா, அகிலா, நந்திதா, அஸ்வின், தெய்வநாயகம், நவீன், பரசுராமன் போன்ற பத்திரிகையாளர்கள் பலரும், நம்முடன் ரத்தமும் சதையுமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான்.

    இந்த நாவலைப் படித்துவிட்டு, பத்திரிகைத் துறையில் அடியெடுத்து வைக்க வேண்டுமென்ற ஆசை ஒரு சிலரின் நெஞ்சிலாவது துளிர்விட ஆரம்பித்தால்கூட போதும், அதுவே என் எழுத்துக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.

    இந்த நாவலுக்கு செறிவானதொரு முன்னுரை எழுதித் தந்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய என் அபிமான எழுத்தாளர் சிவசங்கரி அம்மாவுக்கு என்றென்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

    மிக்க அன்புடன்,

    ஜி. மீனாட்சி

    செல்பேசி எண்கள்: 9600045293, 9994941195

    சென்னை

    நவம்பர், 2022

    1

    உதிக்கின்ற செங்கதிர் உச்சித்

    திலகம் உணர்வுடையோர்

    மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்

    போது மலர்க்கமலை

    துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்

    குங்குமத் தோயமென்ன

    விதிக்கின்ற மேனி அபிராமி

    என்றன் விழுத்துணையே.

    அன்னை கற்பகாம்பாளுக்கு எதிரே பக்தர் ஒருவர் கண்மூடி, கணீரென்ற குரலில் பாடியதைக் கேட்டபோது மெய்சிலிர்த்துப் போனது நந்திதாவுக்கு. அவளுக்காகவே பாடிய அபிராமி அந்தாதிப் பாடலாய்த் தோன்றியது. தான் இன்று எடுத்து வைக்கும் புதிய முயற்சிக்கு அம்பாள்தான் வழித்துணையாய் வந்து காப்பாற்ற வேண்டும் என்று மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டவள், அர்ச்சகர் தந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு, மீண்டும் ஒரு முறை அம்பாளைக் கண் குளிர தரிசித்துக் கைகூப்பினாள்.

    காலை 9 மணிக்கெல்லாம் அவள் ‘நமது நண்பன்’ பத்திரிகை அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்.

    காலையிலிருந்து மாலை வரை பல கட்டமாக நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வரும்படி நேற்று முன்தினம் இ-மெயிலில் கடிதம் வந்ததிலிருந்து அவளுக்கு இருப்புக்கொள்ளவில்லை. மனம் பரவசத்தில் துள்ளிக் குதித்தது. அந்தப் பத்திரிகையில் இருந்து அழைப்பு வந்திருப்பதே, அங்கு வேலை கிடைத்து விட்டதைப் போன்ற மகிழ்ச்சியைத் தோற்றுவித்தது. சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு வரும்போதே, எப்படியாவது ‘நமது நண்பனில்’ சேர்ந்துவிடவேண்டும் என்ற லட்சியக் கனவுடன்தான் அவள் ரயிலேறினாள். கடந்த ஆறு மாதங்களாக ஒரு சிறிய பத்திரிகையில் நிருபராக வேலை பார்த்து வருகிறாள்.

    இரண்டு மூன்று முறை ‘நமது நண்பனுக்கு’ விண்ணப்பித்தும், கிணற்றில் போட்ட கல்லாக எந்த அழைப்பும் வராமல் போக, மனதளவில் கொஞ்சம் சோர்ந்துதான் போயிருந்தாள். சென்ற வாரம் எதிர்பாராதவிதமாக ஒரு பிரஸ் மீட்டில் அந்த செய்தித்தாளின் முதன்மை நிருபர் பரசுராமனைச் சந்திக்க நேர்ந்தது. தானாகவே போய் அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் லட்சியத்தைச் சொன்னாள்.

    என் மெயிலுக்கு உங்க பயோ டேட்டாவை அனுப்புங்க... வாய்ப்பு வரும்போது சொல்றேன்... என்று அவர் நம்பிக்கை அளிக்க, அன்றே அவரது மெயிலுக்கு பயோ டேட்டாவை அனுப்பி வைத்தாள். எண்ணி மூன்றே நாட்களில் இன்டர்வ்யூக்கு வரச்சொல்லி அழைப்பு. பூரித்துப் போனாள் நந்திதா. கால்கள் தரையில் பாவாமல் ஆகாசத்தில் மிதந்தன. எப்படியும் அங்கு வேலை கிடைத்துவிடும் என்ற திடமான நம்பிக்கையுடன், கடவுளின் ஆசிர்வாதமும் வேண்டி விடியற்காலையிலேயே எழுந்து குளித்து முடித்து கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று உள்ளன்போடு வேண்டிக் கொண்டாள்.

    கோயிலுக்கு வெகு சமீபத்தில்தான் இருந்தது அவள் தங்கியிருந்த லேடீஸ் ஹாஸ்டல். ஹாஸ்டலுக்குப் போய் காலை உணவு சாப்பிட்டுவிட்டு, முன்தினம் இரவே எடுத்து வைத்திருந்த சான்றிதழ்கள் அடங்கிய ஃபைலை எடுத்துக்கொண்டு, பொடி நடையாய் பஸ் நிலையத்துக்கு வந்தாள். இரண்டு நிமிடங்களில் அண்ணா சாலை செல்லும் பஸ் வந்ததும், ஏறிக் கொண்டாள்.

    இதோ...

    ‘நமது நண்பன்’ அலுவலகம் இருக்கும் அண்ணா சாலை எல்.ஐ.சி. நிறுத்தம் அருகே பஸ் இறக்கிவிட, பரபரப்பான போக்குவரத்து நெரிசலைக் கடந்து ஸ்பென்சர் பிளாசாவுக்கு எதிரே இருந்த அந்தத் தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

    தெருமுனையிலேயே பத்திரிகை அலுவலகத்தின் பிரம்மாண்டமான கட்டடம் கண்ணில்பட்டது. இதயம் படபடக்க, நெற்றியில் பூத்த வியர்வையை துப்பட்டாவால் ஒற்றிக்கொண்டாள். தோளின் வழியே நழுவிய ஹேண்ட் பேக்கை சரியாக இழுத்துவிட்டவள், மார்போடு அணைத்திருந்த ஃபைலை வலது கைக்கு மாற்றிக் கொண்டாள். ‘கேட்’டருகே நின்றிருந்த செக்யூரிட்டியிடம் தான் வந்திருப்பதற்கான காரணத்தைக் கூறி, இன்டர்வ்யூக்கான அழைப்புக் கடிதத்தை காண்பித்தாள். அவளது பெயர், செல்போன் எண்ணை அங்கிருந்த நோட்டில் குறித்துக் கொண்டவர், அவளது கையெழுத்தை வாங்கிக்கொண்டு கடிதத்தை அவளிடமே திருப்பிக் கொடுத்தார். பின்னர், ஒரு சிறிய ரசீதுப் புத்தகம் போல் இருந்த நோட்டில் ஏதோ எழுதி, அந்த சீட்டைக் கிழித்து அவளிடம் நீட்டினார்.

    திரும்பி வரும்போது இந்த பாஸை மறக்காம கொண்டு வாங்க என்றார். மற்றொரு செக்யூரிட்டி அவளது உடலை ஸ்கேனரால் செக் செய்து ‘கேட்’டைத் திறந்து வழிவிட, உள்ளே நுழைந்தாள்.

    அடேயப்பா! பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைவதற்கே இவ்வளவு செக்கிங், கெடுபிடியா என்ற மலைப்புடன், சுற்றிலும் கண்களைச் சுழலவிட்டாள். நேர்த்தியாக வெட்டப்பட்ட பசும்புல் தரைகள் இருபக்கமும் அணிவகுக்க, நடுவே இரண்டு கார்கள் போகுமளவுக்கு அகலமான வழி. ஆங்காங்கே உயர்ந்து வளர்ந்து நிழல் பரப்பிக் கொண்டிருந்த மரங்கள். மெல்ல நடந்து முப்பதடி தூரத்தில் இருந்த பிரதான கட்டடத்தை அடைந்தாள். நீண்ட வராண்டாவைக் கடந்து மெயின் ஹாலுக்குச் சென்றாள். சுற்றிலும் கண்ணாடியால் மறைக்கப்பட்ட தடுப்புக்குப் பின்னே இருந்த ரிசப்ஸனிஸ்ட், ஜீன்ஸ் பேண்ட், டீ ஸர்ட் அணிந்திருந்தாள். உதடுகளில் வழிந்த சிவப்பு லிப்ஸ்டிக் அவளது நிறத்தை தூக்கிக் காட்டியது. அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் நந்திதா.

    உள்ள போய் இடதுபக்கம் திரும்புனீங்கன்னா, கான்பரன்ஸ் ஹால் வரும். அங்க போய் உட்காருங்க... என்றவள், மேஜையிலிருந்த தொலைபேசி ஒலிக்க, எடுத்து காதுக்குக் கொடுத்து, எஸ்... ப்ளீஸ்... என்றாள்.

    கான்பரன்ஸ் ஹாலில் பத்துப் பன்னிரண்டு பேர் இருந்தனர். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். எல்லோருமே இன்டர்வ்யூக்கு வந்தவர்கள் என்பது அவர்கள் கையிலிருந்த ஃபைலைப் பார்த்தபோதே புரிந்தது. அறையின் வலதுகோடியில் இருந்த நீண்ட சோபாவில் இரண்டு இளம்பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகே போய் உட்கார்ந்து கொண்டாள்.

    இருவருமே சுடிதார் அணிந்திருந்தனர். ஒருத்தி நல்ல சிகப்பாக, உயரமாக இருந்தாள். மற்றொருத்தி குள்ளமாய், மாநிறமாய் இருந்தாள். அவர்களைப் பார்த்து நட்புடன் புன்னகைத்தவள், ஹலோ... நீங்களும் இன்டர்வ்யூக்குத்தான் வந்திருக்கறீங்களா? என்றாள் மெல்லிய குரலில்.

    ஆமாம். நீங்க... என்றாள் சற்றே மாநிறமாக இருந்தவள்.

    நான் நந்திதா... சென்னையிலதான் இருக்கேன். சொந்த ஊர் திருப்பூர்.

    என் பேர் சுமித்ரா. கன்னியாகுமரியிலிருந்து வந்திருக்கேன்...

    நான் சாரதா. கோயமுத்தூர்... என்றாள் உயரமாக இருந்தவள்.

    இன்டர்வ்யூவுக்காகவா கன்னியாகுமரியிலிருந்தும், கோயமுத்தூரிலிருந்தும் வந்திருக்கீங்க? என்றாள் நந்திதா ஆச்சரியத்துடன்.

    ஏரியா நிருபர்களைத் தேர்ந்தெடுக்கவும் இன்னிக்கு இன்டர்வ்யூ நடக்குது... என்றாள் சுமித்ரா.

    அதற்குள் அந்த ஹால் நிரம்பிவிட்டிருந்தது. சரியாக பத்து மணியானபோது, ஆபீஸர்கள் போல இருந்த நான்கு பேர் உள்ளே வந்தனர். அதில் இரண்டு பேர் இளைஞர்கள். மற்ற இருவர், நடுத்தர வயதைத் தாண்டியிருந்தனர். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர். பின்னர் நடுத்தர வயதுக்காரர் ஹாலுக்கு நடுவில் வந்து நின்றார்.

    குட்மார்னிங். வெல்கம் ஆல் ஆஃப்யூ. ‘நமது நண்பன்’ செய்தித்தாளுக்கு நிருபர்கள், உதவி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கற இன்டர்வ்யூ இன்னிக்கு நடக்குப் போகுது. பல ஊர்கள்ல இருந்தும் வந்திருக்கற உங்க எல்லாருக்கும் வாழ்த்துகள். என் பேர் தெய்வநாயகம். நான் இந்தப் பத்திரிகையோட நியூஸ் எடிட்டர். இந்த இன்டர்வ்யூ மூணு கட்டமா நடக்கும். முதல் கட்டம், எழுத்துத் தேர்வு. அதுக்கு ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும். அதுல செலக்ட் ஆகறவங்களுக்கு அசைன்மென்ட் கொடுப்போம். வெளியே போய் பண்ணிட்டு வரணும். அதுல தேர்ந்தெடுக்கப்படறவங்களை எடிட்டர் இன்டர்வ்யூ செய்வார். அதுக்குப் பிறகுதான் ரிசல்ட் தெரியும்... ஆல் த பெஸ்ட்!

    தெய்வநாயகம் ரத்தினச் சுருக்கமாகப் பேசி முடித்தவுடன், அவருடன் நின்றிருந்த இளைஞர்கள் தங்கள் கையிலிருந்த கேள்வித்தாள்களை வந்திருந்தவர்களுக்கு வழங்க ஆரம்பித்தனர்.

    பக்கத்து ரூம் காலியா இருக்கு. கொஞ்ச பேர் அங்கபோய் உட்கார்ந்து எழுதலாம் என்று தெய்வநாயகம் சொல்ல, சிலர் அந்த அறையை நோக்கி நடந்தனர்.

    கேள்வித்தாள் ஈஸியாகவே இருந்தது. பள்ளி, கல்லூரியில் தமிழ் பாடத்தில் படித்ததை நினைவுபடுத்தும் வகையிலான வினாக்கள். மூன்றில் இரண்டு பங்காகச் சுருக்குதல், பொருத்தமான தலைப்பிடல், தவறாக அச்சாகியிருக்கும் தமிழ்ச் சொற்களை நீக்கி சரியாக எழுதுதல். உப்புச்சப்பில்லாமல் நிருபர் கொடுக்கும் ஒரு கட்டுரையை, எப்படி சுவாரஸ்யமான கட்டுரையாக மாற்றுவது... என்பன போன்ற பல கேள்விகள். எல்லாவற்றுக்கும் சிரத்தையாக விடையளித்துவிட்டு நந்திதா நிமிர்ந்தபோது, மணி பன்னிரண்டை எட்டியிருந்தது. மேலும் அரை மணி நேரத்துக்குள் எல்லோரும் எழுதி முடித்து விடைத்தாள்களைக் கொடுத்தனர். உங்களுக்கெல்லாம் கேன்டீன்ல லன்ச் ஏற்பாடு செய்திருக்கு. சாப்பிட்டுட்டு சரியா ரெண்டு மணிக்கு இங்கயே வந்துடுங்க... என்றார் தெய்வநாயகம்.

    மதிய உணவு சாப்பிட்டு முடிப்பதற்குள் நந்திதாவும், சுமித்ராவும், அகிலாவும் மிகவும் நெருக்கமாகிவிட்டனர். அவரவர் ஊரின் சிறப்புகள், பிடித்த விஷயங்கள், பத்திரிகைத் துறை பணி மீதான காதல் என்று சுவாரஸ்யமாகப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

    லன்சுக்குப் பிறகு எல்லோரும் கான்பரன்ஸ் ஹாலில் மீண்டும் கூடினர். இரண்டரை மணிக்கு தெய்வநாயகம் குழுவினர் கையில் விடைத்தாள்களுடன் வந்தனர். ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் மாணவர்களின் எதிர்பார்ப்புடன் எல்லோரும் அவர் முகத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தனர்.

    எழுத்துத் தேர்வுல தேர்ந்தெடுக்கப்பட்டவங்களோட பெயர்களை நான் வாசிக்கிறேன். அவங்க மட்டும் பக்கத்து அறைக்குப் போங்க. அங்க உங்களுக்கு மிஸ்டர் நவீன் அசைன்மெண்ட் கொடுப்பார்... என்றபடியே ஒவ்வொரு பெயராக வாசிக்க ஆரம்பித்தார்.

    மூன்றாவது பெயராக நந்திதாவின் பெயர் அழைக்கப்பட்டவுடன், மனதில் உற்சாகக் குமிழிகள் போட்டிபோட, மற்ற இருவரையும் பார்த்து புன்னகைத்துத் தலையாட்டியவள், அடுத்த அறையை நோக்கிச் சென்றாள். அங்கு இரண்டு இளைஞர்கள் இருந்தனர். கூலிங் கிளாஸுடன் சினிமா ஹீரோ போன்ற தோற்றத்தில் இருந்தவன்தான் நவீன் என்பது சொல்லாமலேயே புரிந்தது. அவனுக்குப் பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் ட்ரேயில் பழுப்பு நிற உறைகள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. மற்றொரு இளைஞன் ஒரு நோட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.

    அவளைப் பார்த்து, யுவர் நேம்... என்றான் நவீன் சற்றே தோரணையுடன்.

    நந்திதா...

    இந்த கவர்ல ஐநூறு ரூபா இருக்கு. செலவுக்கு வெச்சுக்கோங்க. வெளிய எங்காவது போய் ஏதாவது சுவாரஸ்யமான பேட்டி எடுத்துட்டு வரணும். ஆட்டோலயோ, கால் டாக்ஸியிலயோ போகலாம். இல்ல நடந்தேகூட போய் எடுத்துட்டு வரலாம்... யாரை பேட்டி எடுக்கப் போறீங்க... எங்க போறீங்கங்கறது உங்க சாய்ஸ்... என்றபடியே பழுப்பு நிறக் கவரை நீட்டினான் மற்றொரு இளைஞன்.

    ஸீ நந்திதா... யூ கேன் கோ எனிவேர், பட், யூ ஷூட் கம் வித் த இன்டர்வ்யூ இன் ஒன் அவர்... அண்டர்ஸ்டேண்ட்... இங்கிலீஷ் புரியுமில்ல... சற்றே கேலியாக நவீன் கேட்க, முதல் சந்திப்பிலேயே அவனை ஏனோ அவளுக்குப் பிடிக்காமல் போனது.

    மெல்லத் தலையாட்டியபடியே கவரை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது, எதிரே சுமித்ராவும், சாரதாவும் வந்து கொண்டிருந்தனர். எழுத்துத் தேர்வில் பாஸான மகிழ்ச்சி இருவரது முகங்களிலும் அப்பட்டமாய்த் தெரிந்தது.

    அசைன்மெண்ட் கொடுத்திருக்காங்க... வெளியே போய் எடுத்திட்டு வரணுமாம். நான் கிளம்பறேன். அப்புறம் பார்க்கலாம்... பை... பை... என்றபடியே வராண்டா பக்கம் சென்றாள் நந்திதா.

    எங்கு போவது?

    வாசல் புல்தரையை நோக்கி மெல்ல நடந்தவள், அங்கிருந்த வேப்ப மரத்தடியில் சற்றே நின்றாள். இன்னும் ஒரு மணி நேரத்தில் யாரைப் பேட்டி எடுக்க முடியும்? எங்கு போக முடியும்? ஏதாவது சுவாரஸ்யமாகச் செய்ய முடியுமா? இரண்டு நிமிடங்கள் நின்று நிதானமாக யோசித்தபோது, கண்டிப்பாக சிறப்பாகச் செய்ய முடியும் என்றே தோன்றியது.

    ஒரு ஆட்டோ பிடித்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் காய்கறி சந்தை அருகே போனால், பேட்டி எடுப்பதற்கான ஐடியாக்கள் நிறைய கிடைக்கலாம் என்ற நினைப்புடன், மெயின் கேட்டைத் தாண்டி, கையிலிருந்த பாஸை செக்யூரிட்டியிடம் கொடுத்துவிட்டு, தெருமுனை ஆட்டோ ஸ்டேண்டை நோக்கி நடந்தாள்.

    அவளைப் பார்த்ததும் ஆட்டோக்காரர் ஒருவர் ஆட்டோவைக் கிளப்பிக்கொண்டு வந்தார்.

    மயிலாப்பூர் போகணும் என்றபடியே ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள் நந்திதா. ஆட்டோ எக்ஸ்பிரஸ் அவென்யூவைத் தாண்டி விரைவதற்குள், அவள் மனதில் பேட்டிக்கான புதுமையான திட்டம் தயாராகியிருந்தது.

    2

    ஆட்டோ திருவள்ளுவர் சிலையைக் கடந்து லஸ் கார்னரை நெருங்கிக் கொண்டிருந்தது. ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த பழுப்பு நிற உறையைப் பிரித்துப் பார்த்தாள் நந்திதா. நூறு ரூபாய் நோட்டுகள் மூன்று, ஐம்பது ரூபாய் நோட்டுகள் நான்கு இருந்தன. அதிலிருந்து நூறு ரூபாய் நோட்டை மட்டும் எடுத்து கையில் வைத்துக்கொண்டு, கவரை மடக்கி ஹேண்ட் பேக்கிலேயே வைத்தாள்.

    ஆட்டோ மயிலாப்பூர் டேங்கைக் கடந்து மார்க்கெட் வீதியில் நுழைந்தது.

    இப்படியே ஓரமா நிறுத்திடுங்க... என்றவள், பணத்தை ஆட்டோக்காரரிடம் நீட்டினாள்.

    வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு பாக்கெட்டிலிருந்து மீதி பணத்தை எடுத்துத் தந்தார் ஆட்டோக்காரர்.

    கொளுத்தும் வெயிலிலும் தலையில் துணியைப் போட்டுக் கொண்டும், பெரிய குடையை விரித்து வைத்துக்கொண்டும் மும்முரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த காய்கறி வியாபாரிகளைக் கடந்து, வலதுபுறத்தில் இருந்த புத்தகக் கடையை நெருங்கினாள். அவள் வழக்கமாக அந்தக் கடையில்தான் பேனா, பேப்பர் போன்ற ஸ்டேஷனரி பொருட்களை வாங்குவாள். அதனால் அங்கிருப்பவர்கள் அனைவரையும் அவளுக்கு நன்கு பரிச்சயம். கோபு, கண்ணன், செல்வி என்று சிலரது பெயரைக்கூடத் தெரிந்து வைத்திருந்தாள். அவள் பத்திரிகையாளராக இருப்பதை அவர்களும் அறிந்திருந்தனர்.

    கடையில் கண்ணனும், கோபுவும் இருந்தனர். நந்திதாவை அந்த நேரத்தில் எதிர்பார்க்காததால் அவர்களது கண்களில் ஆச்சரியம்.

    வாங்க... என்ன இந்நேரத்துல? இன்னிக்கு ஆபீஸ் போகலையா? என்றார் கண்ணன் நட்புடன்.

    இன்னைக்கு எனக்கு ஒரு இன்டர்வ்யூ... என்றவள், ‘நமது நண்பன்’ தினசரியின் நேர்முகத் தேர்வுக்கான அசைன்மென்ட்டுக்காக தான் வந்திருப்பதையும், தனது ஐடியாவையும் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள்.

    உங்கள்ல யாராவது என்கூட கால் மணி நேரம் வந்து போட்டோ எடுத்துத் தந்தீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்... ப்ளீஸ்... - அவள் தயக்கத்துடன் கேட்க, போட்டோ எடுத்துத் தர்றது பெரிய விஷயமில்ல... ஆனா, ரொம்ப ரிஸ்க் எடுக்கப் போறீங்க... ஜாக்கிரதை... என்றார் கண்ணன் எச்சரிக்கும் விதமாக.

    இதெல்லாம் பெரிய ரிஸ்க் இல்ல... இதைவிடப் பெரிய ரிஸ்க் நிறைஞ்சது பத்திரிகைத் துறை... என்று சிரித்தாள் நந்திதா.

    ஓ.கே. நானே வந்து போட்டோ எடுத்துத் தரேன்... என்றவர், உள்ளே புத்தகங்களை அடுக்கிவைத்துக் கொண்டிருந்த கோபுவைப் பார்த்து, கடையைப் பாத்துக்கோடா... பத்து நிமிஷத்துல வந்துடறேன்... என்றபடியே மேஜையுடன் இணைந்திருந்த மரத்தடுப்பைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார்.

    ரொம்ப நன்றிங்க... என்ற நந்திதா முன்னே நடந்தாள்.

    பாத்திரக் கடை, மளிக்கைக் கடை, ஹோட்டல், காபிப் பொடிக் கடை எல்லாவற்றையும் கடந்து, சற்றே கூட்டம் அதிகமாக இருந்த இடத்துக்கு வந்தனர்.

    கண்ணன் சார், இந்தாங்க என்னோட செல்போன்... கேமரா இங்கிருக்குது... நான் என்ன செய்யறேங்கறதை விடாம போட்டோ எடுங்க... அதோ... அந்த சிவப்புச் சேலை கட்டியிருக்கற பூக்காரம்மாவுக்கு நேர் எதிரேதான் நான் கீழ விழுவேன்... அப்போ என்ன நடக்குதுங்கறதையெல்லாம் இந்த போட்டோஸ்தான் பேசணும்... சரியா?

    அவளிடமிருந்து செல்போனை வாங்கி கேமராவை இயக்கிப் பார்த்தார் கண்ணன்.

    ஓ.கே.மா என்னோட போன் போலத்தான் இருக்கு. ரொம்ப ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா... பத்திரம்... அடிகிடி பட்டுக்காம பார்த்துக்கோ... என்றார் அக்கறையுடன்.

    பத்து பதினைஞ்சு நிமிஷத்துக்கெல்லாம் வேலை முடிஞ்சிடும். சப்போஸ் ஏதாவது பிரச்சினையாயிடிச்சுன்னா நீங்க வந்து தலையிட்டு என்னை அழைச்சுட்டு வந்திடுங்க... வரட்டுமா... என்றபடியே ஹேண்ட் பேக்கை தோளில் சரியாக மாட்டிக்கொண்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள் நந்திதா.

    ஏற்கெனவே திட்டமிட்டபடி பூக்காரம்மாவுக்கு அருகில் சென்றதும் வேண்டுமென்றே கீழே விழுவதுபோல தடாலென்று சாலையில் விழுந்தாள்.

    விழுந்த வேகத்தில் அவளது ஹேண்ட்பேக் தெறித்து சற்று தூரத்தில் போய் விழுந்தது.

    அருகிலிருந்த காய்கறிக் கடையில் நின்றிருந்தவர்களில் சிலர் திரும்பிப் பார்த்து, ஐயோ... யாரோ பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துட்டாளே... என்று குரல் கொடுத்தனர்.

    அடடா... இந்த கொளுத்தற வெயில்ல வெளியே வந்தா இப்படித்தான் மயங்கி விழ வேண்டியிருக்கும்... பாவம் சின்னப் பொண்ணு...

    அந்தப் பொண்ணத் தூக்கும்மா... என்றபடியே எதிர்ப்புறத்திலிருந்து நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் ஓடி வந்தார். அதற்குள் யாரோ அவளது ஹேண்ட் பேக்கை எடுத்து வந்தனர்.

    பூக்காரி கடையை அப்படியே விட்டுவிட்டு, தன்னிடமிருந்த சொம்புத் தண்ணீரை எடுத்துக்கொண்டு நந்திதாவின் அருகே ஓடினாள். அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து முகத்தை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டாள். சொம்பிலிருந்த தண்ணீரை கையில் ஊற்றி அவளது முகத்தில் தெளித்தாள். இரண்டு நிமிடத்தில் கண்களைத் திறந்தாள் நந்திதா. அவளைச் சுற்றி ஆணும், பெண்ணுமாக நான்கைந்து முகங்கள். அதில் கண்ணனின் முகமும் தெரிந்தது. மெல்ல எழுந்து உட்கார்ந்து மலங்க மலங்க விழித்தாள். பூக்காரி தண்ணீர் சொம்பை அவளுக்கு முன்பாக நீட்டினாள்.

    இந்தாம்மா... ஒரு வாய் தண்ணி குடி...

    அவள் மெல்ல சொம்பை வாங்கி தண்ணீர் குடித்தாள்.

    தார் ரோடே உருகற அளவுக்கு இன்னிக்கு வெயில் கொளுத்துது. ஏம்மா... மத்தியானம் ஏதும் சாப்பிடலையா...? இப்படி மயக்கம் அடிச்சு விழுந்துட்டயே... வீடு எங்கம்மா? காய்கறிக்காரி புடவை முந்தானையை இழுத்து சொருகிக் கொண்டே கேட்டாள்.

    அதற்குள் பின்னால் இருந்து கார் ஹாரன் கேட்டது. டிராபிக் ஜாம். கூட்டம் சற்றே விலகி வழியை விட்டது.

    எந்திரிம்மா... வா... அப்பிடிப் போய் நிழல்ல உட்காரு... காப்பி கீப்பி வாங்கிட்டு வரட்டுமா?

    ‘வேண்டாம்’ என்பது போல அவள் தலையசைத்தாள்.

    பூக்காரி அவளைக் கைப்பிடித்து தூக்கிவிட்டாள். மெல்ல எழுந்த நந்திதா, தன்னுடைய ஹேண்ட் பேக்கைத் தேடினாள்.

    என் ஹேண்ட் பேக்...

    இந்தாம்மா... இங்க இருக்கு... என்று நீட்டினான் ஒரு இளைஞன்.

    சாலையின் வலதுபுறத்தில் இருந்த நடைபாதை நிழலில் அவளை அமரச் செய்தாள் பூக்காரி. கூட்டம் மெல்லக் கலைந்தது. காய்கறிக்காரி தன் இடத்துக்குச் சென்று அமர்ந்துகொண்டாள்.

    பூக்காரி அவளது முகத்தையே பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, பூக்களை நிரப்பியிருந்த கூடைக்கருகே வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸை எடுத்துவந்தாள். அவளிடம் டப்பாவை நீட்டி, இந்த இட்லியைத் தின்னு... என்றாள். நந்திதா சட்டென்று எழுந்து நின்றாள்.

    வேண்டாங்க... பசிக்கல... வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கறேன்...

    தனியாப் போயிடுவியா... வீடு எங்கே...?

    மந்தைவெளிதான். போயிடுவேன்... என்றபடியே துப்பட்டாவை உதறி கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டாள்.

    ரொம்ப தேங்க்ஸ்ங்க... என்றாள் மெல்லிய குரலில்.

    பார்த்துப் போம்மா... ஆட்டோ ஏதாவது புடிச்சு போ... மறுபடியும் விழுந்துடப் போறே... என்றாள் கரிசனத்துடன்.

    இங்க ஒரு கடைக்குப் போகணும். வர்றேங்க... தேங்க்ஸ்... என்றவள், புத்தகக் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

    அதற்குள் அந்த இடம் வழக்கமான வியாபாரத்துக்குத் திரும்பியிருந்தது.

    ஓரமாக நின்று போட்டோ எடுத்துவிட்டு அவளுக்கு முன்பாகவே கடைக்குத் திரும்பியிருந்தார் கண்ணன்.

    அவளைப் பார்த்ததும், முகம் நிறையச் சிரித்தவர், "சூப்பரா நடிச்சீங்க... போட்டோஸும் நல்லா வந்திருக்கு... உண்மையிலயே வெயில்ல மயங்கி

    Enjoying the preview?
    Page 1 of 1