Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marupadiyum Pozhuthu Vidiyum
Marupadiyum Pozhuthu Vidiyum
Marupadiyum Pozhuthu Vidiyum
Ebook501 pages3 hours

Marupadiyum Pozhuthu Vidiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1997ஆம் ஆண்டில், இந்தியாவின் நிலையை அடிப்படையாகக் கொண்டு சமுதாய உணர்வுடன் நாவல் எழுதப்பட வேண்டும் என்கிற குறிப்பை மனத்தில் கொண்டு புனையப்பட்ட கதை.

Languageதமிழ்
Release dateJan 10, 2022
ISBN6580101507794
Marupadiyum Pozhuthu Vidiyum

Read more from Jyothirllata Girija

Related to Marupadiyum Pozhuthu Vidiyum

Related ebooks

Reviews for Marupadiyum Pozhuthu Vidiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marupadiyum Pozhuthu Vidiyum - Jyothirllata Girija

    https://www.pustaka.co.in

    மறுபடியும் பொழுது விடியும்

    Marupadiyum Pozhuthu Vidiyum

    Author:

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காணிக்கை

    சமுதாய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த விரும்பும் நாட்டுப்பற்று மிக்க நாயகனைப் படைக்க உந்துகோலாக இருந்த திரு எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களுக்கு.

    முன்னுரை

    மறுபடியும் பொழுது விடியும் என்னும் இந்தப் புதினம் திருப்பூர்க் கலை இலக்கியப் பேரவை 1997ஆம் ஆண்டில், இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டத்தின் பின்னணியில் நடத்திய நாவல் போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றது. இந்தியாவின் இன்றைய நிலையை அடிப்படையாகக் கொண்டு சமுதாய உணர்வுடன் நாவல் எழுதப்பட வேண்டும் என்கிற குறிப்பை மனத்தில் கொண்டு புனையப்பட்ட கதை.

    ஜோதிர்லதா கிரிஜா

    சென்னை 600101

    டிசம்பர் 1999.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    இந்திய விடுதலைப் பொன் விழா நாவல் போட்டியில் திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் பரிசு பெற்ற நாவல்

    1

    நாட்காட்டியின் மீது பதிந்த தமது பார்வையை நீக்கிக் கொள்ளாமல் அதைப் பார்த்தவர் பார்த்தபடியே குமாரசாமி உட்கார்ந்து கொண்டிருந்தார். நாட்காட்டியில் ஜனவரி இருபத்தேழாந்தேதியைப் பார்க்கும் போதெல்லாம், இந்தியாவை விட்டு இங்குவந்து சேர்ந்து ஓர் ஆண்டு முடிந்துவிட்டது... ஈராண்டுகள் முடிந்துவிட்டன... மூன்றாண்டுகள் முடிந்துவிட்டன... என்று அவரும் வரிசையாக வருடங்களை எண்ணிக்கொண்டுதான் வந்துள்ளார். இன்றைக் கணக்கின்படி அமெரிக்காவுக்கு அவர் வந்தபின் இருபத்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டதால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் வெள்ளி விழா எனும் நினைப்பால் அவர் உதடுகள் புன்சிரிப்புக் கொண்டன.

    என்ன அப்பா, உங்களுக்குள்ளேயே சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்? எனும் கேள்வியால் அவரது கவனம் கலைந்தது. அவர் தலை திருப்பிப் பின்னால் பார்த்தார்.

    அறைக்குள் நுழைந்து கொண்டிருந்த அவர் மகள் மேரி மின் உலர்த்தியை இயக்கிவிட்டு அதன் அருகே தனது ஈரத் தலைமுடியைப் பிரித்துப் பரப்பி விட்டுக்கொண்டே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து அவரைப் பார்த்துச் சிரித்தாள்.

    குமாரசாமிக்குச் சற்றே வெட்கமாக இருந்தது. முகச் சிவப்பை மறைத்துக்கொள்ள முடியாமல், வேறொன்றுமில்லை மேரி! நான் இந்த நாட்டு மண்ணில் காலடி வைத்து இன்றோடு இருபத்து மூன்று ஆண்டுகள் முடிவடைகின்றன; இன்னும் இரண்டு ஆண்டுகள் போனால் வெள்ளி விழா என்று நினைத்துச் சிரித்துக்கொண்டேன் என்று உண்மையான பதிலைச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.

    மேரி ஆழமாக அவரை ஒரு பார்வை பார்த்தாள். மகள் தம்மை ஏதோ கேட்க நினைத்து அதை வாய்க்குள்ளேயே நிறுத்தி விழுங்கிக்கொண்டதாக உணர்ந்த குமாரசாமி தாமும் அவளை உற்றுப் பார்த்தார்.

    என்ன மேரி? எதையோ கேட்க நினைத்து அதைக் கேட்காமல் இருப்பதுபோல் தெரிகிறதே!

    மேரி தனது பார்வையை அகற்றிக்கொண்டாள். அவரது கேள்விக்குப் பதில் கூறாமல், சில நொடிகளை மவுனத்தில் கரைத்தாள். அதன் பின் அவளிடமிருந்து வெளிப்பட்ட சன்னமான பெருமூச்சு அவளது முயற்சியை மீறி வெளிப்பட்ட ஒன்று என்பது குமாரசாமிக்கு நன்றாகவே புரிந்தது.

    அந்தக் கணத்தில் அவளது மனத்தில் ஓடிக்கொண்டிருந்த எண்ணம் இன்னதென்பது அவருக்கு உள்ளுணர்வாகத் தெரிந்திருந்ததாலேயே அவள் பதில் சொல்லவில்லை என்பதும் அவருக்குப் புரியவே செய்தது. அதன் பின் அவருக்கும் சன்னமாய் ஒரு பெருமூச்சு வந்தது.

    அமெரிக்க மண்ணில் அவர் அடி எடுத்து வைத்தது ஜனவரி இருபத்தேழில் என்றால், நடந்திருக்கக்கூடாத அந்த நிகழ்ச்சி அவர் வாழ்க்கையில் நடந்ததும் ஒரு ஜனவரியில் தான். ஆனால் நாள் தான் வேறு. ‘இருபத்தொன்று!’ அந்தத் தேதியைப் பார்க்குந்தோறும்கூட அவர் வருடங்களை எண்ணிக்கொண்டுதான் இருந்து வந்தார்! மகளும் எண்ணிக்கொண்டிருக்கவே செய்வாள் எனும் நினைப்பால் அவருள் ஒரு வருத்தம் பீறிட்டுப் புறப்பட்டு அவர் கண்களைச் சிவக்கச் செய்தது. அவர் சட்டென்று தமக்கு எதிரே இருந்த மேசை மீதிருந்து நியூயார்க் டைம்ஸ் இதழை எடுத்து முகத்துக்கு நேரே மறைப்பாகப் பிரித்துப் பிடித்துக்கொண்டார்.

    அந்தக் கணத்தில் அந்தப் பெரிய அறையில் நிலவிய அமைதியின் இறுக்கம் இருவருக்குமே தாங்க முடியாத ஒன்றாக இருந்தது. அதைக் குறைக்கும் முயற்சியில், சாப்பிடலாமா அப்பா? என்று கேட்டாள் மேரி.

    முதலில் உன் தலை நன்றாக உலரட்டும். அதன்பின் சாப்பிடலாம். அது சரி, இன்றைக்கு என்ன சமைத்தாய்? என்று கேட்டுவிட்டு அவர் நாளிதழைத் தழைத்தார்.

    சப்பாத்தி, உருளைக்கிழங்குக் கறி, வெங்காயத் தயிர்ப் பச்சடி... அப்புறம் கேரட், வெள்ளரிக்காய், முட்டைக்கோசு மூன்றுங்கலந்த பச்சைத் துருவல்! போதுந்தானே...

    கொள்ளையோ கொள்ளை. இரவுச் சமையல் நான் செய்வேன். தெரிகிறதா?

    முறை போட்டுக்கொண்டு நீங்களும் நானும் சமைக்க வேண்டும் என்று ஏதாவது சட்டமா என்ன! என்று சிரித்தபடி கேட்டுவிட்டு முடி உலர்த்தியின் இயக்கத்தை நிறுத்திய மேரி அதே அறையில் ஓர் ஓரத்தில் இருந்த சாப்பாட்டு மேசை மீதிருந்த வெள்ளைத் துணியை உதறிச் சரி செய்ய முற்பட்டாள்."

    நீயே என்னைத் தண்டித்துக் கொண்டிருந்தால் எப்படி? நானும்தான் உன்னை முறை போட்டுத் தண்டிக்கிறேனே! என்ன தப்பு?

    நாற்காலிகளை ஒழுங்காக நகர்த்திப் போட்டபடி, அப்படி என்றால்? என் சமையல் உங்களுக்குத் தண்டனையா? என்று பொய்ச் சினத்துடன் செல்லமாய்ச் சிணுங்கிய மகளைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்த அவர்... நானும்தான் உன்னை முறை போட்டுத் தண்டிக்கிறேனே என்று நான் சொன்னதற்கு நீ மறுப்பே சொல்லவில்லையே, என் அன்பு மகளே! என்னுடையது தண்டனையெனில். உன்னுடையதும் தண்டனையே. என்று கூறிக் கண்சிமிட்டினார் குறும்பாக.

    என்னுடையது வேண்டுமானால் உங்களுக்குத் தண்டனையாக இருக்கலாம். ஆனால் உங்கள் சமையல் எனக்குப் பிடிக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

    இப்போது நீ என்ன சொன்னாயோ அதுவேதான் என்னுடைய பதிலும்.

    சரி, சரி. நம் இருவர் சமையலுமே இருவருக்கும் பிடிக்கும் எனும் சமாதான உடன்படிக்கைக்கு வந்து விடலாம். சரிதானே?

    முற்றும் சரி... என்றவாறு எழுந்து நின்ற குமாரசாமி கால் நுனி விரல்களால் நின்று உடம்பை உயர்த்திப் பின்புறமாக வளைத்து முகக் கோணலுடன் சோம்பல் முறித்தார்.

    உன்னால் நான் சோம்பேறியாகப் போகிறேன் பார்! நீ உட்கார். நான் போய்ச் சமையலறையிலிருந்து எல்லாவற்றையும் எடுத்து வருகிறேன்.

    இரண்டுபேருமே எடுத்து வந்தால் போயிற்று. எனக்குப் பசி பிராணன் போகிறது. நீங்கள் நான்கு நடை நடப்பீர்கள். இருவரும் சேர்ந்து செய்தால் இரண்டே நடை. நேரம் மிச்சமாகும்... என்றவாறு மேரி அவரைப் பின் தொடர்ந்தாள்.

    சற்றுப் பொறுத்துத் தகப்பனும் மகளும் எதிரெதிராக அமர்ந்து கொண்டு சாப்பிடத் தொடங்கினார்கள்.

    உனக்கு நல்ல கைமணம் மேரி...

    எல்லாம் நீங்கள் சொல்லிக் கொடுத்ததுதானே?

    அது சரி, ஆனாலும் கைமணம் என்பது சொல்லிக் கொடுத்து வருவதில்லை என் அன்புமகளே! சமைக்கும் போது ஒரு பெண் அல்லது ஆணுக்கு அந்த வேலையில் ஏற்படும் ஆழ்ந்த ஈடுபாட்டால் வருவதே அது. ஏனோ தானோ என்று அசிரத்தையுடன் சமையல் செய்யும்போது சுவையும் வராது, மணமும் வராது!

    அம்மாவும் நன்றாகவே சமைப்பாள் எனும் எண்ணம் அப்போது அவளுக்கு வந்தது.

    என்ன யோசிக்கிறாய் மேரி?

    ஒன்றுமில்லை அப்பா

    அவள் என்ன யோசித்தாள் என்பது அவருக்குப் புரிந்தது. ஒருவேளை இவள் அம்மாவுக்காக ஏங்குகிறாளோ? எனும் ஐயம் அவருக்கு அந்தக் கணத்தில் உண்டாயிற்று. சப்பாத்தியை மென்றபடி அவர் அவளைக் கூர்ந்து பார்த்தார். அவள் தன் விழிகளைக் கணத்துக்கும் குறைவான நேரம் தழைத்துப் பின் உயர்த்தி இயல்பாகச் செய்த புன்னகை மிகுந்த முயற்சியின் பேரில் செய்யப்பட்ட நடிப்பு என்பது புரிய, குமாரசாமி ஓசை எழுப்பாமல் உள்ளுக்குள் பெருமூச்சு விட்டுக்கொண்டார்.

    இந்த ஆண்டு முடிவுக்குள்ளாவது நாம் இந்தியாவுக்குப் போகிறோமா, அப்பா? எனும் அவளது கேள்வி அவரது எண்ணங்களைத் தற்காலிகமாக நிறுத்தியது.

    கண்டிப்பாகப் போகிறோம் மேரி. உனக்கு நான் தமிழும் கற்பித்திருப்பதால், உன்னை ஏற்பதில் அவர்களுக்கும் சரி, அவர்களை ஏற்பதில் உனக்கும் சரி எந்தப் பிரச்சினையும் வராது என்று நம்புகிறேன்! என்று கூறிவிட்டு அவர் வாயகலப் புன்னகை புரிந்தார்.

    பேசுகிற மொழி மட்டும் ஒன்றாக இருந்துவிட்டால் போதுமா அப்பா? நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள முடியாத சங்கடம் கொஞ்சம் குறையலாமே தவிர, பிரச்சினைகள் எழா என்று சொல்லவே முடியாது! என்று அவள் பட்டென்று இடை மறித்தபோது அவரால் பதில் சொல்ல இயலாது போயிற்று. உண்மைதான். எனும் உணர்வால் மறுபடியும்

    அவர் உள்ளுக்குள் பெருமூச்செறிந்தார்.

    மேரி தொடர்ந்து பேசினாள்: இந்தியாவுக்குப் போனதும் ஆங்கிலம் அறியாத என் பாட்டியுடன் பேசும் போது நீங்கள் கற்றுக் கொடுத்துள்ள தமிழ் எனக்குப் பயன்படும்தான்! நான் மறுக்கவில்லை. ஆனால் பாட்டி என்னை அங்கீகரிப்பாரா இல்லையா என்பது கடைசிவரையில் கேள்விக்குறியாகத்தான் இருக்கப் போகிறது?

    அவள் சொன்னது சரிதான் என்று அவருக்குப் பட்டது. அவர் ஒன்றும் சொல்லாதிருந்தார். அதன்பிறகு இருவரும் பரிமாறல் சம்பந்தப்பட்ட உரையாடலில் மட்டும் ஈடுபட்டுச் சாப்பிட்டு எழுந்தார்கள்.

    தம் பெற்றோரிடம் தாம் சொல்லி வைத்திருந்த பொய் தெரியவந்தால் மகள் தம்மைப்பற்றி என்ன நினைப்பாள் என்று எண்ணிப் பார்த்தபோது அவருக்குத் திக்கென்றது. பொய் சொல்லி ஒருவரை ஏமாற்றுவதைவிட உண்மையைச் சொல்லிச் சண்டை போடுவது தான் முறை என்று ஒரு முறை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மேரி வெளியிட்ட ஆணித்தரமான கருத்து அவருக்கு அந்தக் கணத்தில் நினைவுக்கு வந்தது தான் அதற்குக் காரணம்.

    "மேரியின் எதிரொலி எதுவானாலும் அவள் என்னைப்பற்றி என்ன நினைத்தாலும் கோழை என்று நினைத்தாலும் சரி, பொய்யன் என்று நினைத்தாலும் சரி, கொள்கை இல்லாதவன் என்று கணித்தாலும் சரி.

    அவளிடம் தனது நிலையை விளக்கிச் சொல்லிவிட வேண்டியது தான் என்று அவர் தமக்குள் எண்ணிக்கொண்டார். கடவுளே! அதற்கான மன உறுதியையும், மேரி புரிந்து கொள்ளும் வகையில் விளக்கும் சாமர்த்தியத்தையும் எனக்குக் கொடு.

    எச்சிற்தட்டுகளை எடுத்தபடி, என்ன அப்பா அப்படி ஆழமாக யோசிக்கிறீர்கள்? என்றாள் மேரி.

    மகளுடன் சேர்ந்து தாமும் எழுந்து கொண்ட அவர் கழுவு தொட்டி நோக்கி நடந்தவாறு எல்லாம் உன்னைப் பற்றித்தான். வேறு என்ன? பாட்டி உன்னை ஏற்க வேண்டுமே எனும் கவலை தான். தாத்தா அப்படி இல்லை. பெண்கள் படிக்க வேண்டும் என்பது இதற்காகத்தான் என்றார்.

    இதற்காக மட்டும் தானா? தன் மகன் அயல்நாட்டுப் பெண் ஒருத்தியை மணந்து கொள்ளுவதை அங்கீகரிக்க முன் வருவதற்கு மட்டுமே ஒரு பெண்மணிக்குக் கல்வி உதவினால் போதுமா அப்பா?

    சமையற்கட்டை நோக்கி நடந்தபடியே கேட்ட மகளை ஏறிட்டவாறு அவளைப் பின்பற்றிச் சென்ற அவர் அதற்கு மட்டும் என்று யார்தான் சொல்லுவார்கள்? கல்வி தரும் மனமாறுபாடுகளில் அதுவும் ஒன்று. அவ்வளவு தான் என்று பதில் சொல்லிக்கொண்டே சுவர்க் கொக்கியில் தொங்கிக்கொண்டிருந்த துண்டில் தம் கைகளைத் துடைத்துக்கொண்டார்.

    சமையலறை முற்றத்தில் தட்டுகளைப் போட்டுக் கை கழுவியபின் அவற்றைத் துலக்க முற்பட்ட மகளுக்கு அவர் தாமும் உதவ முற்பட்டார்.

    கழுவிக்கொண்டே காதல் எனும் சொல் காதில் விழுந்தாலே கட்டையை எடுத்துக்கொள்ளும் பெற்றோர்கள் தாம் இன்றும் இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இத்தனைக்கும் இந்தியா சுயம்வரம் எனும் ஏற்பாட்டுக்குப் பெயர் பெற்ற நாடு என்று அவர் சிரித்தார்.

    சுயம்வரம் எனும் ஏற்பாடு இளவரசிகளுக்கு மட்டுந்தானே அப்பா இருந்தது. சாதாரணக் குடும்பத்துப் பெண்களின் கருத்தை யார் கேட்டறிந்தார்கள்?

    மிகவும் சரியாகச் சொன்னாய்! என்று அவள் கருத்துடன் அவர் ஒத்துப் போனார்.

    அப்பா!

    என்ன குழந்தாய்?

    நாம் இந்தியாவில் எத்தனை நாட்கள் இருப்போம்? குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது இருக்கலாம் அப்பா! இந்தியா முழுவதையும் நான் நன்றாகச் சுற்றிப் பார்க்க வேண்டும். சென்ற ஆண்டு சுற்றுலாச் சென்ற என் தோழிகள் இந்தியாவை புகழ்கிறார்கள் புகழ்கிறார்கள் அப்படிப் புகழ்கிறார்கள்.

    அப்படியா?

    ஆமாம் அப்பா...

    என்னுடைய நண்பர்கன் சிலர் திட்டவன்றோ செய்தார்கள்?

    என்னவென்று?

    அசுத்தமான தேசம் என்று?

    என் தோழிகளும் அதே கருத்தையும் வெளியிட்டார்கள்தான். ஆனால் விளக்க முடியாத காரணங்களால் இந்தியா தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள். இந்திய மண்ணில் கால் பதிந்ததுமே மனத்தில் காரணம் சொல்லத் தெரியாத ஓர் அமைதி ஏற்பட்டதாக அவர்கள் எல்லாருமே ஒட்டுமொத்தமாய்ச் சொல்லுகிறார்கள். ஓரிருவர் சொன்னால் ஏற்க வேண்டாம். ஆனால் நிறையப்பேர் சொல்லும்போது...?

    ஏற்க வேண்டியது தான். என் நண்பர்களும் அப்படிச் சொல்லுவதுண்டு தான். நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் பார்வைக் கோணம் நிச்சயமாக வித்தியாசப்படும் பெண்களின் கோணம் வேறுதானே? இந்த நாட்டு உல்லாசங்களையெல்லாம் எதிர்பார்த்துக்கொண்டு போகிறவர்களுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கும். பெரிய நகரங்களில் வேண்டுமானால் ஏமாற்றத்துக்கு இடமில்லாதிருக்கலாம். மற்றபடி, சின்ன ஊர்கள், கிராமங்கள் ஆகியவற்றை அவர்களால் ஜீரணிக்க முடியாது தானே!

    ஆமாம்... நாம் நியூயார்க்கில் இருந்தபோது ஒரே சந்தடியாக இருந்தது. அமைதிக் குறைவாக இருந்தது. ஆனால் பால்ட்வின் அமைதியாக இருக்கிறது!

    அதனால்தான் நியூயார்க்கிலிருந்து முப்பது மைல் தள்ளி இருந்தாலும் பரவாயில்லை என்று நான் இங்கே வீட்டைக் கட்டினேன். இங்கு வந்தபிறகுதான் நமக்குக் கொஞ்சம் அமைதி கிடைத்தது.

    அப்பா...

    சொல்லு.

    என் கேள்விக்கு நீங்கள் இன்னும் சரியாகப் பதில் சொல்லவே இல்லை இந்தியாவில் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது இருக்க வேண்டும் என்று சொன்னேனே.

    ஓ, அதுவா! இருக்கலாம் இருக்கலாம். உனக்குப் பிடித்துப் போனால் நிரந்தரமாகவே இந்தியாவில் தங்கிவிடவும் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறிவிட்டு அவர் அவளைக் கவனித்தார்.

    அவள் விழிகள் விரிந்தன.

    உண்மையாகவா சொல்லுகிறீர்கள்?

    ஆமாம் மகளே. இன்னும் சொல்லப் போனால், என்னுடைய ஆசை அதுதான் இந்தியாவில் இனி நிரந்தரமாய்க் குடியேறிவிட வேண்டும் என்பது! இங்கே என்ன வைத்திருக்கிறது நமக்கு? சொல்லு...

    மேரி மேற்கொண்டு ஏதும் பேசாமல் இருந்தாள். தட்டுகள் இருவராலும் கழுவி முடிக்கப்பட்டிருந்தன. அவற்றை மேடையில் கவிழ்த்து வைத்துவிட்டு மறுபடியும் கூடத்துக்கு வந்து நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

    என்ன மேரி, மவுனமாகிவிட்டாய்? இந்தியாவில் நிரந்தரமாகத் தங்க முடிவு செய்தபிறகு நாம் கிளம்புவதுதான் சரியாக இருக்கும், என்ன சொல்லுகிறாய்?

    அவர் வெளிப்படையாய்ச் சொல்லாமல் இருத்திக் கொண்டது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. இந்தியாவுக்கு நிலையாகக் குடிபெயர்வது என்பது அப்பாவின் முடிவு. ஆசை! அதற்கு என் மனநிலை தயாரான பிறகு இருவரும் கிளம்பவேண்டும் என்பது அவர் விருப்பம்!

    அப்படியானால் இந்தியாவில் நிரந்தரமாக வசிக்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா அப்பா?

    சில கணங்கள் தாமதித்த பின், ஆமாம், மேரி என்றார் அவர்.

    ஒரு தடவை போய்ப் பார்த்தபிறகு முடிவு எடுத்தால் நன்றாக இருக்குமே அப்பா?

    இந்தியா உனக்குப் பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று பயப்படுகிறாயா மகளே?

    அதுவும் ஒரு காரணந்தான்...

    அதுவும்... என்கிறாயே, அப்படியானால் அதைத் தவிர வேறு காரணங்களும் இருக்கின்றனவா, மேரி?

    குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தக் காரணமும் இல்லை அப்பா. தேசம் விட்டு தேசம் பெயரும்போது நாலையும் நாம் யோசிக்க வேண்டுமல்லவா?

    அதுதான் என்னவென்று கேட்கிறேன்? தயங்காமல் சொல்லு மேரி, எதுவானாலும்...

    மேரி பதில் சொல்லாமல் மேசைமீது நகத்தால் கீறிக் கொண்டிருந்தாள்.

    ஏன் தயக்கம் மேரி? எதுவானாலும் சொல். நாம் இங்குதான் இருக்க வேண்டும் என்றாலும் சொல்லிவிடு. உன் மகிழ்ச்சியும் விருப்பமும்தான் இதில் எனக்கு அதிக முக்கியம் மேரி.

    அவள் தன் விழிகளை உயர்த்தி அவரைப் பார்த்த கணத்தில் அவள் எதுவும் சொல்லாமலே அவருக்குப் புரிந்துவிட்டது.

    2

    ஜகந்நாதன் குத்துக்காலிட்டுத் தமது திருவல்லிக்கேணியின் குகை போன்ற ஒடுக்கமான வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். எண்பதாவது வயதை நெருங்கிக் கொண்டிருந்த அவரது உடம்பின் தளர்வு புடைத்திருந்த பச்சை நரம்புகளிலும், எடுப்பான மூக்கு முகத்தின் சதைக் குறைவால் இன்னும் அதிக எடுப்பாகக் காணப்பட்டதிலும், சற்றே கூனிய முதுகிலும் தெற்றெனத் தெரிந்தது. ஒரு காலத்தில் வெள்ளை வெளேரென்று இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க வைக்கும் நிறம் மட்டும் அவ்வளவாகக் குறையவில்லை. கிட்டத்தட்ட அரை அங்குலப் பருமனுடன்போல் காணப்பட்ட மூக்குக் கண்ணாடி வழியே அவருடைய விழிகள் குண்டு குண்டாக மிதந்து கொண்டிருந்தன. விழிப்படலத்துக்காகக் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் செய்து கொண்டிருந்த அறுவைச் சிகிச்சையின் விளைவான கனத்த கண்ணாடி, பார்ப்பதற்கு ஒன்று, படிப்பதற்கு ஒன்று என்று இரண்டு கண்ணாடிகள் கொடுத்திருந்தார் மருத்துவர்.

    ஜகந்நாதனுக்குப் படிக்காமல் இருக்கவே முடியாது. வடமொழி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வியக்கத்தக்க புலமை படைத்தவர். இவ்வளவுக்கும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்தவர்தாம். பட்டதாரியல்லர் ஆசிரியராக வேலை ஏற்றபின் ஓர் ஆர்வத்தால் இம்மூன்று மொழிகளிலும் சொந்த முயற்சியின் பேரில் நிறையப் படித்துத் தமது படிப்பறிவையும் மொழியறிவையும் மேம்படுத்திக் கொண்டவர். இந்து நாளிதழைக் கையில் எடுத்தால், அதன் ஒரு வரி விடாமல் விளம்பரங்கள் உட்பட வாசித்து முடிக்கிற பழக்கம் உள்ளவர்.

    அன்றும் அப்படித்தான் இந்து நாளிதழைக் கரைத்துக் குடித்தபிறகு வேறு என்ன படிப்பது? என்று அவர் யோசித்த வேளையில் அஞ்சல்காரர் அவரிடம் ஓர் அயல் நாட்டுக் கடிதத் தாளைக் கொடுத்துப் போனார். காதல் கடிதம் பெறும் இளம் பெண்ணுக்குரிய பரவச முகத்துடன் அவர் கை நீட்டி அதைப் பெற்றுக்கொண்டார்.

    அடியே சரசு, அமெரிக்காவிலேருந்து லெட்டர் வந்திருக்குடி என்று உற்சாகத்துடன் குரல் கொடுத்துக் கொண்டே கடிதத்துடன் உள்ளே விரைந்தார்.

    சுவரில் சாய்ந்தபடி விசிறிக்கொண்டிருந்த சரசுவதியம்மாள் நீட்டி இருந்த கால்களை மடக்கி முதுகு நிமிர ஆவலுடன் தலை உயர்த்திப் பார்த்து, சதாபிஷேகத்துக்கு வரானாமா? என்றாள். அவளின் வயோதிகக் கண்கள் ஓர் எதிர்பார்ப்பின் மகிழ்ச்சியுடன் பளபளத்தன.

    செத்த இருடி, நான் இன்னும் பிரிக்கவே இல்லே கவரை. இரு, இரு என்று அவளைப் பார்த்துக் கையமர்த்திவிட்டு, ஜகந்நாதன் ஒரு நாற்காலியைச் சர்ரென்று இழுத்து மனைவிக்குப் பக்கத்தில் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கடிதத்தைக் கவனமாகப் பிரித்தார்.

    குமாரசாமியோட கையெழுத்து மாறவே இல்லே. அழகான கையெழுத்து என்று மகனின் கையெழுத்தைப் புகழ்ந்த பின் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அதை அவர் முணுமுணுவென்று படிக்கலானார்.

    கையெழுத்து அழகா இருக்கணும்னுட்டு அவனைக் கொஞ்ச நஞ்சக் காப்பியா எழுத வெச்சிருக்கேள் நீங்க! ஏன்? நம்மாத்துல எல்லாருக்குமே அழகான கையெழுத்து தான்... கொஞ்சம் எறைஞ்சு தான் படிக்கிறது...

    எறைஞ்சு படிச்சாப் புரிஞ்சுண்டுடுவியோ? இங்கிலீஷ்லேன்னா எழுதி இருக்கான். அவசரப்படாதே. நான் படிச்சு முடிச்சுட்டு உனக்கு விவரம் சொல்றேன்.... என்று வாசிப்பதை நிறுத்திவிட்டு அவளுக்குப் பதில் சொன்ன ஜகந்நாதன் திரும்பவும் முணுமுணுவென்று அதைப் படிக்கலுற்றார்.

    படித்து முடித்துவிட்டு, சதாபிஷேகத்துக்கு வர முயற்சி பண்றேன் அப்படின்னு எழுதி இருக்கான். லீவு கிடைக்கறது ரொம்பவும் கஷ்டமாம். இருந்தாலும் முயற்சி பண்றேன்னிருக்கான். அப்படி லீவு கிடைச்சா பொண்ணை மட்டும் கூட்டிண்டு வறேன்னு எழுதி இருக்கான் என்றார் ஜகந்நாதன்.

    அவன் பொண்டாட்டியை நாம யாருமே பார்த்ததே இல்லே. இப்பவாவது கூட்டிண்டு வரமாட்டோனோ? என்ன அமெரிக்காவோ, அந்தமானோ... இந்தக் காலத்துல காசுதான் பெரிசாப் போச்சு...

    காசு யாருக்குப் பெரிசாப் போச்சுங்கறே? என்று கடிதத்தை மடித்துக்கொண்டே வினவிய அவர் மனைவியைச் சற்றே முறைத்து நோக்கினார்.

    நம்ம எல்லாரையுமேதான் சொல்றேன். எப்ப போனான் குமாரசாமி? இருபத்து நாலு வருஷம் இருக்குமில்ல?

    ஆச்சு. கரெக்டா இருபத்து நாலுதான். நன்னா நெனப்பு வெச்சிண்டிருக்கியே!

    நெனப்பு வெச்சுண்டிருக்கேனாவது? ஒவ்வொரு வருஷத்தையும் எண்ணிண்டுன்னா இருக்கேன்! போய் எட்டு வருஷங் கழிச்சு ஒரு தரம் வந்தான். அத்தனை அக்கா தங்கைகளுக்கும் அவன் அனுப்பிக் குடுத்த பணத்துலதான் கலியாணம் நடந்தது. ஆனா ஒரு கல்யாணத்துக்குக்கூட அவனால வரமுடியல்லே. அடுத்து அஞ்சு வருஷம் கழிச்சு வந்தப்ப தனக்குக் கலியாணம் ஆயிடுத்துன்னு சொல்லி மன்னிப்புக் கேட்டுண்டு அழுதான். நல்ல காலம்; நம்ம ஜாதிப் பொண்ணாப் பார்த்துப் பண்ணிண்டான். அந்தக் கல்யாணத்தை இங்க மெட்ராசுக்கு வந்து ஜாம் ஜாம்னு பண்ணிண்டிருந்திருக்கலாமோல்லியோ?"

    எதுக்குடி இப்ப பழைய குப்பையைக் கிளறிண்டிருக்கே? பொண்ணாத்துக்காரா அத்தனைபேரும் ப்ளேன் சார்ஜ் குடுத்துண்டு இந்தியாவுக்கு வர்றதும் போறதும் லேசுப்பட்ட விஷயமா என்ன? அதுதான் காரணம்னு சொல்லிட்டானோல்லியோ! மத்தப்படி நம்மை மதிக்காத பிள்ளையா என்ன அவன்! எவ்வளவு டாலர் டாலரா அனுப்பிச்சான். அவனாலதான் இப்ப நாம நம்ம கடமைகளையெல்லாம் முடிச்சுட்டு ஹாய்யா உக்காந்துண்டிருக்கோம். அதை நெனச்சுப் பாரு.

    அதெல்லாம் இல்லைன்னு யாரு இங்க சொன்னா இப்ப? அவன் அனுப்பின பணத்துலதான் அத்தனை பொண்ணுகளுக்கும் கல்யாணம் நடந்ததுன்னு நானே தானே இப்ப சொன்னேன்!

    பின்ன எதுக்கு அதையும் சொல்லிட்டு இதையும் சொல்றே?

    கண்ணை மூட்றதுக்குள்ள ஒரு தரமாவது அவன் குடும்பத்தை நான் பார்ப்பேனா...? என்று குமுறிய சரசுவதியம்மாள் அழத் தொடங்கினாள்.

    சதாபிஷேகத்துக்கு கண்டிப்பா வந்துடுவாண்டி. நாம எதிர்பார்த்து ஏமாறக்கூடாதேன்னு ஒரு ஜாக்கிரதையோட எழுதி இருக்கானே தவிர, கட்டாயம் வந்து நிப்பான் பாரு!

    மத்த எல்லாரோட கொழந்தைகளையும் பார்த்தாச்சு. இவனோட பொண்ணைத்தான் பார்க்கவே இல்லே. ஃபோட்டோவில பார்த்ததோட சரி! நன்னா லட்சணமாத்தான் இருக்கா. ஏன்னா? இப்ப என்ன வயசு இருக்கும் அதுக்கு?

    பதினாறு வயசு இருக்கும்.

    அவன் பாட்டுக்கு அந்தப் பொண்ணுக்கும் அங்கேயே எவனாவது அமெரிக்காக்காரனுக்குப் பண்ணி வெச்சுடப் போறான்...

    இங்க உக்காந்த வாக்குல நீபாட்டுக்கு என்னத்தையானும் உளறிண்டு கெடக்காதடி சரசு. அப்படி நடந்தாத்தான் நம்மால என்ன பண்ண முடியும்?

    அது சரி...

    அப்போது வாசற்பக்கம் நிழலாட, யாரு? என்று ஜகந்நாதன் குரல் கொடுத்தார்.

    நான்தாம்ப்பா கமலா... என்று பதில் கூறியவாறு அவருடைய கடைசி மகள் தன் கணவன் ரங்கராஜனும் இரண்டு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் பின் தொடர காலணிகளை வழிநடையில் உதறிவிட்டு உள்ளே வந்தாள்.

    மாப்பிள்ளையைக் கண்டதும் சரசுவதியம்மாள் அவசரமாக எழுந்துகொண்டாள்.

    நீ பாட்டுக்கு உக்காரும்மா! உன் வயசென்ன, அவர் வயசென்ன? என்றாள் கமலா சிரிப்புடன்.

    ஆமா? உங்கம்மாவுக்கு என்ன வயசு? செவெண்டி தாண்டியாச்சில்ல? ஆனாலும் என்னமோ செவெண்ட்டீன் இயர் ஓல்ட் கர்ள் மாதிரிதான் நாணிக் கோணிக்கிறா! என்று மாமியாரைக் கிண்டல் செய்தவாறு மாப்பிள்ளை ரங்கராஜன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான்.

    ஆயிரம் தான் இருக்கட்டுமே, மாப்பிள்ளை மரியாதையைக் காட்டித்தான் ஆகணும். நாங்கல்லாம் அந்தக் காலத்து மனுஷா. திடீர்னு மாறச் சொன்னா முடியாது... ஏன்னா? அது சரி, குமாரசாமியோட பெண்ணுக்கு ஒண்ணும் பதினாறு வயசு ஆயிருக்காது. எட்டு வருஷம் கழிச்சு அவன் இங்க வந்தப்ப அவனுக்குக் கலியாணமே ஆகி இருக்கல்லே. ரெண்டாவது தரம் இன்னொரு அஞ்சு வருஷம் கழிச்சு வந்தப்ப தனக்கு ரெண்டு வருஷத்துக்கு முந்திக் கலியாணம் நடந்துடுத்துன்னு சொல்லி அழுதான். அப்ப? அவனுக்கு முப்பத்தஞ்சு வயசுலதான் கல்யாணம் ஆகி இருக்கு. மறு வருஷமே கொழந்தை பொறந்துடுத்துன்னு சொன்னான். அப்ப அந்தப் பொண்ணுக்குப் பன்னண்டு வயசுதான் இருக்கும் இப்ப...

    ஜகந்நாதனுக்குச் சிரிப்பு வந்தது. சரிடி, உன் கணக்கும் நீயும் என்று கூறிவிட்டுச் சாடையாக மகளைப் பார்த்துச் சிரித்தார். அவனுக்கு இருபத்தெட்டில் கல்யாணம் ஆகி, முப்பதில் பெண் குழந்தை பிறந்ததை அவரும் அவர் மக்களும் அறிந்திருந்ததால் இப்போதைய அவனது வயது நாற்பத்தெட்டு என்பதை வைத்து அவர் பதினாறு வயசு என்று கணக்குப் போட்டுச் சொன்னார் ஒருவேளை அவன் சதாபிஷேகத்துக்கு மகளுடன் வந்தால், இவளுக்கா பன்னண்டு வயசுன்னு சொன்னேன்! மேல இருக்கும் போல இருக்கே? என்று அவள் அவனிடம் கேட்கக்கூடும் எனும் சாத்தியக்கூற்றாலும் அவருக்குச் சிரிப்பு வந்தது.

    குமாரசாமிகிட்டேருந்து லெட்டர் வந்திருக்குடி கமலா. லீவு கிடைச்சா சதாபிஷகத்துக்கு வறேன்னு எழுதி இருக்கான்...

    மாமி! இங்க பாருங்கோ. உங்களைவிட நான் எவ்வளவு சின்னவன். இப்படி எனக்காக நீங்க மாப்பிள்ளை மரியாதை அது இதுன்னு பார்க்கிறதா இருந்தா நின்னுண்டுதான் பேசறதுன்னு வெச்சுண்டா நான் எழுந்து போயிடுவேன். இப்ப உக்காரப் போறேனா இல்லியா? என்று ரங்கராஜன் மிரட்டலாக எழுந்ததும் சரசுவதியம்மாள் சிரித்துக்கொண்டே புடைவைத் தலைப்பை இன்னும் நன்றாக இழுத்துப் போர்த்துக்கொண்டு உட்கார்ந்தாள்.

    பாட்டி எப்படி இருக்கே? என்று இரண்டு பேரன்களும் பேத்தியும் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.

    அமெரிக்கா மாமா மூஞ்சி எங்களுக்கெல்லாம் ஞாபகமே இல்லே என்றான் மூத்த பேரன்.

    இன்னும் கொஞ்ச நாள் போனா எனக்கே மறந்துடும் போல இருக்கு என்ற சரசுவதியம்மாளின் கண்கள் நொடி நேரத்துள் நிறைந்துவிட்டன.

    அழாதே பாட்டி, மாமா வருவா பாரு சீக்கிரம்: கண்ணைத் தொடச்சுக்கோ என்று ஆறுதல் கூறினாள் பேத்தி.

    குமாரசாமி மொத்தம் நாலுதரம் வந்திருக்கான் இல்லியா? என்றாள் கமலா ஜகந்நாதனைப் பார்த்தபடி:

    ஆமாம்மா. முதல்ல எட்டு வருஷம் கழிச்சு. அப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சு. அதுக்கு அப்புறம் ஒரு நாலு வருஷம் கழிச்சு. கடைசியா இன்னொரு நாலு வருஷம் கழிச்சு. அப்ப? மூணு வருஷத்துக்கு முந்தி பார்த்தோம். தேசம் விட்டு தேசம் வர்றதும் போறதும் லேசா? எவ்வளவு பணம் செலவழியும்? அதையெல்லாம் நமக்குக் காசாக் கொடுத்தா பிரயோசனமா இருக்குமேன்னு அவன் நினைக்கிறான்.

    அவன் நினைக்கிறானோ இல்லியோ நாம நினைக்கிறோம் என்றாள் சரசுவதியம்மாள் கசப்புடன்.

    நாம என்ன நீ வரவேண்டாம், அதுக்குப் பதிலா அந்தப் பெரிய தொகையை எங்களுக்கு அனுப்பிவைன்னு அவங்கிட்ட சொன்னோமா என்ன? என்ன பேசறேடி நீ!

    அங்க வேலை பார்த்துச் சம்பாதிச்சது போறும். இங்க திரும்பி வந்துடுன்னு யாராவது சொன்னோமா?

    அவளது குத்தலான கேள்வி நியாயமானதாகப் பட்டதால் எல்லாருக்கும் வாயடைத்துப் போயிற்று.

    என்னம்மா பேசறே நீ அசட்டுப் பிசட்டுனு? அண்ணாவுக்கு இப்ப நாப்பத்தெட்டு வயசு ஆறது. இந்த வயசுக்கு மேல இங்க வந்தா என்ன வேலை கிடைக்கும் அவனுக்கு? சொல்லு. வேணுங்கற பணங்காசைச் சேர்த்துண்டு அவனே இங்க வந்து செட்டில் ஆனாலும் ஆயிடுவான். பார்த்துண்டே இருபத்து லட்சம் பதினஞ்சு லட்சம்னு சேர்ந்ததும் வந்துடுவான். இங்க வந்து பாங்க்ல போட்டு வச்சா மாசா மாசம் பத்தாயிரம், பதினஞ்சாயிரம்னு வட்டி வரும். அண்ணா வேலைக்கே போகவேண்டாம்.

    ஆமா, நாமளும் உனக்கு எதுக்குடா பத்தாயிரமும் பதினஞ்சாயிரமும்? எங்களுக்கு ஆளுக்கு மாசா மாசம் ஆயிரம், ரெண்டாயிரம்னு கொடுன்னு கேட்டு வாங்கி முடிஞ்சுக்கலாம்!

    சரசுவதியம்மாளின் குரல் நடுங்கி உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. ஏதோ பதில் சொல்ல வாயை அசைத்த கமலாவைப் பார்த்துச் சாடை காட்டிய ஜகந்நாதன், பிள்ளையைப் பார்த்து நாளாயிட்ட ஏக்கத்துல என்னமோ பேசணும்னுட்டுப் பேசறா அவ. கண்டுக்காதே. பத்து மாசம் சுமந்தவளோல்லியோ! உனக்கும் மூணு கொழந்தைகள் இருக்கு. கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பார்த்தாப் புரியும்... வந்தவாளுக்குக் காப்பி வேணுமான்னு கேட்டுக் குடுக்காம என்னென்னமோ பேசிண்டிருக்கோம்... என்ன மாப்பிள்ளை! என்ன சாப்பிடறேள்? காப்பியா இல்லே டீயா? என்று பேச்சை மாற்றினார்.

    என்னமோ அடுக்களைக்குள்ள புகுந்து நீங்கதான் போடப்போற மாதிரி இதென்ன உபசாரம்? மாப்பிள்ளைக்கு டீதான் பிடிக்கும். கமலா காப்பி குடிப்பா. கொழந்தைகள் ஹார்லிக்ஸ் குடிக்கும். என்றபடி சரசுவதியம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்.

    வரச்சே குடிச்சுட்டுத்தாம்மா வந்தோம். உக்காரு. கொஞ்ச நேரம் ஆகட்டும். நானே எல்லாருக்கும் போட்டு எடுத்துண்டு வரேன். உக்காரும்மான்னா? என்ற கமலா தாயை அழுத்திப் பிடித்து உட்கார வைத்தாள்.

    வாயில் வந்ததை நறுக்கென்று சொல்லிவிட்டாளே தவிர, இப்போது சரசுவதியம்மாளுக்குக் கழிவிரக்கமாக இருந்தது. என்ன தான் மனக்குறை இருந்தாலும், மாப்பிள்ளைக்கு முன்னால் அதைத் தான் காட்டிக் கொண்டிருந்திருக்கலாகாது என்று எண்ணி வருத்தப்பட்டாள்.

    எனினும் அவளது கூற்றில் உண்மை இல்லை என்று

    Enjoying the preview?
    Page 1 of 1