Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruppumunai
Thiruppumunai
Thiruppumunai
Ebook377 pages2 hours

Thiruppumunai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘திருப்புமுனை’ கற்பனை கலந்து எழுதப்பட்ட கதையாயினும், அதில் வரும் சிறந்த பள்ளி ஆசிரியர் எங்கள் அன்புத் தந்தையாரே என்று சொல்லிக் கொள்ளுவதில் பெருமை கொள்ளுகிறேன். இத்தொகுதியில் 30 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உட்கிடக்கையை வலியுறுத்தும் விதத்தில் அமையப் பெற்றுள்ளது இதன் சிறப்பம்சத்தை வாசித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateJan 22, 2021
ISBN6580101507799
Thiruppumunai

Read more from Jyothirllata Girija

Related to Thiruppumunai

Related ebooks

Reviews for Thiruppumunai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruppumunai - Jyothirllata Girija

    https://www.pustaka.co.in

    திருப்புமுனை

    Thiruppumunai

    Author:

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    அறுபது ஆண்டுகளுக்கு முன், இரண்டு வீடுகள் வாங்கக்கூடிய அளவுக்கான தொகையை (ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் போடுவதற்காகச் சில மாணவர்களின் சார்பில்) கையூட்டாகக் கொடுக்க முன்வந்த சில செல்வந்தர்களைச் சினந்து விரட்டிவிட்ட நேர்மையான பள்ளியாசிரியரும், சாரணத் தலைவருமான என் தந்தை அமரர் திரு. (வத்தலக்குண்டு) அ. சுப்பிரமணியம் அவர்களுக்கு இத்தொகுதியைக் காணிக்கையாக்குகிறேன்.

    ‘திருப்புமுனை’ கற்பனை கலந்து எழுதப்பட்ட கதையாயினும், அதில் வரும் சிறந்த பள்ளி ஆசிரியர் எங்கள் அன்புத் தந்தையாரே என்று சொல்லிக் கொள்ளுவதில் பெருமை கொள்ளுகிறேன்.

    சென்னை- 600101

    அக்டோபர். 2008.

    பொருளடக்கம்

    1. பிணக்கு

    2. நீ ஒரு சரியான முட்டாள்!

    3. அம்மாவின் அந்தரங்கம்

    4. இந்த இவர்கள்

    5. தலைமுறை விரிசல்

    6. தென் ஆப்பிரிக்க மாப்பிள்ளை

    7. வெட்கமறியாத ஆசைகள்...

    8. எலும்பில்லாத நாக்கு

    9. அந்த இரவும் இந்த இரவும்

    10. உள்ளுணர்வு

    11. கூறாமல் சந்நியாசம் கொள்

    12. திருப்புமுனை

    13. ஊர் வாய்

    14. திட்டத்திற்கு அப்பால்...

    15. விபரீத சோதனை

    16. ஆண் விபசாரிகள்

    17. நியாயங்கள்

    18. கண்ணன் மனசில் ஒரு காயம்

    19. என்னைக் காதலிப்பது உண்மையானால்...

    20. எனக்கு நிகரில்லை

    21. அது வேறு; இது வேறு!

    22. அம்மா

    23. இரண்டு பதினெட்டுகள்

    24. எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள்

    25. எம்மதமும் சம்மதம்

    26. கம்யூனிஸ்டுகள் காதலிக்கலாமா?

    27. கொலையும் செய்வாள்

    28. சிறுவாடு

    29. சிவப்பு விளக்கு இருக்கவே இருக்கு!

    30. நல்ல நியாயம்!

    1. பிணக்கு

    தலையை உயர்த்திப் பார்த்த லீலா, எழுத்தாளர்களின் மொழியில் சொல்லுவதானால் கல்லாய்ச் சமைந்து போனாள். இப்படி நடக்கக் கூடும் என்று அவள் நினைத்ததே இல்லை. ரஞ்சனும் திகைத்துத்தான் போய் விட்டான். திகைத்தது மட்டுந்தானா? இல்லை. முகம் வெளிறிச் சாம்பல் பூத்துப் போய்விட்டது. கையும் களவுமாகப் பிடிபட்டவனுக்குரிய சிறுமை உணர்ச்சி அவளும் அவனும் சற்றும் எதிர்பாராத வகையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நேர்ந்த அந்தக் கணத்தில் அவன் முகத்தில் சட்டென்று தோன்றிவிட்டது. லீலா தன் கண்களை நீக்கிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அது வெறும் திகைப்பாக மட்டும் இராமல், ‘இப்படிப் பொய் சொல்லி என்னை ஏமாற்றி விட்டீர்களே? இது நியாயமா?’ என்கிற கேள்வியைத் தன்னுள் அடக்கி இருந்தாற்போலவும் அவனுக்குத் தோன்றியதால் அவன் அவளை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தன் பார்வையைத் தழைத்துக் கொண்டு விட்டான். அவன் மார்பு தடதடவென்று இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தது.

    என்ன இருக்குன்னு கேட்டோமே? பதில் சொல்லாம நின்னா என்ன அர்த்தம்? என்று அந்த மேசையருகே உட்கார்ந்திருந்த மற்றப் பெண்களுள் ஒருத்தி கேட்டதும்தான் அவனுக்குத் தன்னுணர்வு திரும்பிற்று.

    அவன் மனம் எங்கேயோ இருக்க, அவன் நாவு மட்டும் முடுக்கி விடப்பெற்ற பொறி மாதிரித் தன் போக்கில் பாடம் ஒப்பிக்கலாயிற்று. ஜாங்கிரி, குலாப் ஜாமூன், ரவா கேசரி, வீட் அல்வா, பாதாங்கீர், ரோஸ் மில்க், லெமன் ஜூஸ், தவலை வடை, மலபார் அடை, ஆனியன் வடை, பொட்டேடோ பஜ்ஜி, பூரி - பாம்பே சட்னி. ஓமப்பொடி...

    அவன் பார்வை தாழ்ந்தே இருந்தாலும், லீலாவின் கண்கள் தன்னை விட்டு அகலவில்லை என்பது அவனுக்குத் தெரியவே செய்தது. அவன் முகம் சிவந்தது.

    அந்தப் பெண்களுள் ஒருத்தி, என்னடி லீலா சாப்பிடலாம்? என்று கேட்கவும், லீலா, நீங்களே சூஸ் பண்ணுங்கடி. எனிதிங்... என்று பதில் சொன்னாள்.

    தன் தோழிகளை அங்கே அழைத்துக்கொண்டு வந்திருந்தது லீலாதான் என்பது இப்போது அவனுக்குப் புரிந்தது. ‘என்ன காரணமாக இருக்கும்? அலுவலகத்தில் ஏதேனும் ப்ரொமோஷன் இது மாதிரி ஏதாவதோ?’

    அந்தப் பெண்களின் இன்னொருத்தி, எல்லாரும் ஒரே மாதிரியான ஸ்வீட் காரம் சாப்பிடலாம்டி... குலாப் ஜாமூன் கொண்டு வாங்க... காரம் அப்புறம் சொல்றோம்... என்றாள். ரஞ்சன் நகர்ந்தான். அவனுக்கு நெற்றியில் வேர்த்து விட்டிருந்தது. கழுத்துத் துணியால் முகத்தை அழுத்தித் துடைத்து விட்டுக் கொண்டான்.

    கைகள் இனிப்புத் தட்டுகளை எடுத்து ட்ரேயில் வைத்துக் கொண்டிருக்க, அவன் மனம் லீலாவைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. ‘இவள் மனசு மாறிப் போகுமா? இவள் இப்போது என்னைப்பற்றி என்ன நினைப்பாள்? ஒருவேளை ரொம்பவும் கோபமாக இருக்கிறாளோ? என்னைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாளே, ஏன்? நானும் கூடத்தான்... நானே திகைத்து விட்டபோது அவள் இன்னும் அதிகமாகத் திகைத்துப் போனதில் என்ன ஆச்சரியமிருக்க முடியும்?’

    கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்த அவன், தட்டுகளை மேசை மீது வைத்தவாறே சற்றுத் துணிச்சலுடன் மன்னிப்புக்கோரும் பாவனையிலும் லீலாவைப் பார்த்தான். லீலாவின் கண்கள் இப்போது தாழ்ந்து இருந்தன. இவனை என்ன பார்வை வேண்டிக் கிடக்கிறது? என்கிற பொருட்படுத்தாமை அவள் கண்களிலிருந்து தெறித்து வந்ததாக அவனுக்குத் தோன்றிற்று. அவன் தட்டுகளை வைத்துவிட்டு, அவளைப் பார்த்தவண்ணமே அப்பால் நகர்ந்தான்.

    பக்கத்து மேசை மீது சாய்ந்தவாறே ரஞ்சன் இந்த மேசையை வெறித்துக் கொண்டிருந்தான்.

    என்னது, லீலா? திடீர்னு மௌனமாயிட்டே? ஒண்ணுமே பேசமாட்டேங்கிறயே? என்று ஒரு பெண் கேட்டது அவன் செவிகளில் விழுந்தது. அதற்கு அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்பதற்கு அவன் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு நின்றான்.

    என்னடி இருக்கு பேசறதுக்கு? என்று அவள் சொன்னது தனக்கும் சேர்த்துத்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குத் தான் ஒன்றும் அசடு இல்லை என்று அவன் தனக்குத் தானே பேசிக் கொண்டான் மனசுக்குள்தான். ஆமாம் ‘இனி உங்களுக்கும் எனக்கும் எந்தப் பேச்சு வார்த்தையும் சாத்தியமில்லை’ என்பதை அவள் மறைமுகமாகத் தெரிவித்து விட்டாள். ஆனால் அவனுக்கு இதயம் அடித்துக் கொண்டது. இது ஒரு சின்ன தவறு. இதை இவள் மன்னிக்கக் கூடாதா? அப்படி என்ன நான் கொலைபாதகமா செய்து விட்டேன்? அதுகூட இவளை இழந்து விடுவோமோ என்கிற பயத்தில் சொன்ன பொய்தானே? இதற்கு ஏன் இவள் இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள்?

    அடுத்து அவர்கள் சூடாகத் தவலை வடை கேட்டார்கள். அவன் அங்கிருந்து அகன்றான். தலையைக் குனிந்துகொண்டு நடந்து சென்ற அவனது முதுகுப்புறத்தைக் கண்களால் தொடர்ந்தவாறே லீலாவும் சிந்தித்தாள். ‘சீ’ எவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லி என்னை ஏமாற்றி விட்டார்? இதற்குப் பொய் ஏன் சொல்ல வேண்டும்? நான் ஒருகால் இவரை நிராகரிப்பேனோ என்கிற பயத்தால் பொய் சொல்லியிருப்பாராகில், இப்போது இவரை மறுதலிக்கும் சாத்தியக்கூறு இன்னும் அதிகமாகி விட்டதோ? அதைப்பற்றி இவர் யோசித்திருக்க வேண்டாமா? தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக பொய் சொல்லக்கூடியவர் என்கிற உண்மை இப்போது வெளியாகி விட்டதே? இருக்கட்டும். எப்படியும் நான் இவரைச் சந்திக்காமல் இருக்கப் போவதில்லை. அப்போது என் கேள்விகளுக்கு என்ன சமாதானம் சொல்லுகிறார் என்று பார்ப்போம். இவர் தன்னை ஒரு பட்டதாரி என்று சொல்லிக் கொண்டது கூடப் பொய்யோ என்னவோ... அவன் மீது கொண்டிருந்த அன்பை மீறி ஒருகணம் போல் அவள் மனம் வெறுப்பால் நிறைந்தது.

    அடுத்து அவன் ஆவி பறந்த தவலை வடைகளைக் கொணர்ந்து வைத்துச் சென்றான். அவள் பார்வை கலங்கியிருந்ததைக் கவனித்து விட்டு, அவன் அங்கே நின்று கொண்டிருக்க முடியாமல்தான் போனான்... இவள் என்னை நிராகரிக்கத்தான் போகிறாள். அதனால்தான் இவளுக்கு அழுகை வருகிறது... தன் காதல் இப்படியாகி விட்டதே என்கிற வருத்தம் இவளை அலைக்கழிக்கிறது... என்று நினைத்த அவனுக்கும் கண்கள் கலங்கத் தொடங்கின. அவன் அவசர அவசரமாகத் துண்டால் கண்களைத் தேய்த்துக் கொண்டான். எப்படியும் என்னைச் சந்தித்து இவள் ஒரு சண்டை போட்டு விட்டுத்தான் பிரிவாள். இவளுக்கு என்ன பதில் சொல்லுவது? உண்மையைத்தான் சொல்ல வேண்டும். நான் சொல்லா விட்டாலும் இவள் ஊகித்திருப்பாளே. இவளைக் கவர்வதற்காக நான் பொய் சொன்னேன் என்று குற்றஞ்சாட்டக்கூடும்... இவள் என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்...?

    சிறிது நேரங்கழித்து அவன் அந்த மேசைக்குப் போன போது அந்தப் பெண்கள் காப்பி கொண்டுவரச் சொன்னார்கள். லீலா காப்பி குடிப்பதில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆயினும் அது தனக்குத் தெரியும் என்று எப்படிக் காட்டிக்கொள்ளுவது என்று புரியாமல் ஒரு கணம் அவன் நின்றான். பிறகு, ...அஞ்சு காப்பியா? என்றான். அவன் கண்கள் லீலாவைத் தவிர்த்தன.

    நல்ல வேளைடி, லீலா... நீ காப்பி சாப்பிட மாட்டியே... என்னடி எங்கேயோ பார்த்துண்டிருக்கே? உனக்கு போர்ன்விடா கொண்டு வரலாமா? என்று ஒரு பெண் கேட்டதும், லீலா திடுக்கிட்டவள் போல் கண்களை மலர்த்திக் கொண்டாள். போர்ன்விடாதான் என்றாள். இந்தப் பதிலைச் சொன்னபோது அவள் பார்வை அந்தக் கேள்வி கேட்ட பெண்ணின் மீதுதான் படிந்திருந்தது.

    பில்லைக் கொண்டு வந்து அவன் பொதுவாக மேசை மீது வைத்தான். லீலா அதை எடுத்துக்கொண்டு ஒரு பத்து ரூபாய் நோட்டைத் தட்டில் வைத்தாள். அவன் மறுபடியும் அதை எடுத்துச் சென்றான். பின்னர் மீதிப் பணம் ஒன்றரை ரூபாய் அடங்கிய தட்டைத் திரும்பவும் கொண்டு வந்து அதை மேசை மீது வைத்தான்.

    லீலா அதை எடுத்துக்கொண்டு தன் கைப்பையைத் திறந்தபோது, டிப்ஸ் வைக்க மறந்துட்டியா? என்று ஒரு பெண் ஞாபகப்படுத்தினாள். லீலா எந்த மாறுதலையும் தன் முகத்தில் காட்டாமல் ஒரு ரூபாய்த் தாளை எடுத்துத் தட்டில் வைத்துவிட்டு நகர்ந்தாள்.

    எதுக்குடி ஒரு ரூபா வெச்சே? எட்டணா போறாதா? என்று மற்றொரு பெண் கிசுகிசுத்தது அவன் காதில் விழுந்தது. அவன் அவர்கள் மறைந்ததும் தட்டை எடுத்துக்கொண்டு சென்றான். அதில் அவள் போட்டுச் சென்றிருந்த ஒரு ரூபாயை எடுத்து ஒதுக்கமாகத் தன் பர்சில் வைத்துக் கொண்டான். இவள் என்னைச் சந்திக்க விரும்பா விட்டாலும் கூட இந்த ஒரு ரூபாயைத் திருப்பிக் கொடுப்பதற்காக வேண்டியாவது நான் இவளைப்போய்ப் பார்த்தாக வேண்டும். ஆனால் இவளை நான் இவளது அலுவலகத்துக்குப் போய்ப் பார்க்க முடியாது. இவளுடன் இப்போது காணப்பட்டவர்கள் இவள் அலுவலகத் தோழிகளாக இருப்பின்... இன்னும் அதிகமாக என் மீது இவள் கோபப்படக் காரணமாகி விடும். வழக்கமான இடத்துக்குப் போய் நின்று பார்க்கலாம்.

    இவர்கள் நாள்தோறும் சந்தித்துக் கொள்ளும் வழக்கமுடையவர்கள் அல்லர். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை ஐந்தரை மணிவாக்கில் கடற்கரையில் சந்திப்பது அவர்கள் ஏற்பாடு. சனிக்கிழமை வருவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்தன. தன்னால் ஒருநாள் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. அவளது அலுவலகத்துக்கு ஃபோன் பண்ணலாமா என்று கணம் போல் யோசித்தான். ஆனால் அந்தப்பெரிய அலுவலகத்தில் இருந்த தொலைபேசித் தொடர்பகத்தின் வாயிலாகத்தான் அவன் அவளோடு தொடர்புகொள்ள முடியும். நேரடியான இலக்கம் அவளுக்கு இல்லை. இதனாலேயே அவள் தனக்கு அவன் ஃபோன் பண்ணக்கூடாது என்று ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தாள். தொலைபேசி இயக்குநர்கள் ஒட்டுக் கேட்பார்களாம். இன்றைக்குப் புதிதாக விளைந்துவிட்ட திருப்பத்தில் அவன் அவளைத் தொலைபேசியில் அழைத்துப் பேச முற்படுவதை அவள் விரும்பவே மாட்டாள் என்று அவன் எண்ணினான். இதனால் அவனது சோர்வு மிகுதியாயிற்று.

    மறுநாள் மாலையில் அவளது அலுவலகம் மூடப்படுகிற நேரத்தில் அவள் நிற்கும் பேருந்து நிறுத்தத்தில் தானும் நிற்கலாமா என்று அவன் நினைத்தான். கடைசியில் அதுதான் சரி என்று முடிவுகட்டினான். சந்தர்ப்பம் சரியாக இருந்தால் பேசிப் பார்ப்பது... என்று அவன் நினைத்து நிமிடங்களை எண்ணலானான்.

    மறுநாள் மாலை அவள் வரவே இல்லை. ஒருகால் விடுமுறை எடுத்திருக்கலாம் என்று எண்ணினான். மறுநாளும் போனான்... ஐந்து பத்துக்கெல்லாம் அவள் தன் தோழியர் இருவருடன் பேசிச் சிரித்தவாறு பேருந்து நிறுத்தத்துக்கு வந்து நின்றாள். ரஞ்சனைப் பார்த்ததும் அவள் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்துவிட்டது. அவன் மீது படிந்த அவளது பார்வை அவனைக் குத்தியது. அதை எதிர்கொள்ள மாட்டாமல் அவன் தலை குனிந்தான். பேருந்து வந்ததும் ஏறிப் போய்விட்டாள். போவதற்கு முன்னால் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டே போனாள்.

    வீட்டுக்குத் திரும்பி வந்ததன் பிறகும் அவள் பார்த்த அந்தப் பார்வை – குத்துகிற பார்வை - அவன் மனக்கண்கள் முன்பு தோன்றிய வண்ணமாக இருந்தது.

    சனிக்கிழமை வந்தது. அவன் ஆவலுடன் கடற்கரைக்குப் போனான். வழக்கமான இடத்தில் நின்றான். அவள் தன் மீது மிகவும் சினமும் ஏமாற்றமும் அடைந்திருந்த போதிலும் அன்று அவள் வருவாள் என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியது. தன்னோடு சண்டை பிடிப்பதற்காகிலும்...

    மணி ஐந்தரையைத் தாண்டியதும் அவன் கொஞ்சம் சோர்வடைந்தான். இருப்பினும் நம்பிக்கை இழக்கவில்லை; சில நாட்களில் அவளால் சரியாக ஐந்து மணிக்குக் கிளம்ப முடியாது; ஏதேனும் அவசர வேலை குறுக்கிடும். அப்படியானால் அவள் வரும்போது ஐந்தே முக்கால்கூட ஆகிவிடும். இந்த நம்பிக்கையுடன் அவன் நின்று கொண்டிருந்தான். சட்டென்று நினைவு வந்தவன் போல் தான் கொண்டு வந்திருந்த பையைத் திறந்து பார்த்தான். அவன் எடுத்து வந்திருந்தவை பத்திரமாக இருந்தனவா என்பதை - தேவையே இல்லாதிருந்தும்கூட ஒரு தடவை சரிபார்த்துக் கொண்டான்.

    ஐந்து முப்பத்தைந்து அவள் நடந்து வருவது தெரிந்தது. அவன் மார்பு படபடத்தது. நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுபவனின் பரபரப்புடன் அவன் நின்றான். உள்ளங்கைகள் வியர்க்கத் தொடங்கிப் பிசுபிசுத்தன.

    அவள் அவனுக்கு எதிரில் வந்து நின்றாள். என்னை மன்னித்து விடு லீலா என்பது போல் அவன் அவளை ஒரு பார்வை பார்த்தான். அவள் கண்களில் குத்துகிற அந்தப் பார்வை இல்லை. ஆனால் அதில் ஒரு துயரம் தெரிந்தது. அதன் பொருள் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள அவன் துடித்தான். இவள் என்னை நிராகரிக்கப் போகிறாள்... அதைச் சொல்லாமல் பிரிவது நியாயமில்லை என்பதற்காக வந்திருக்கிறாள்...

    அவர்கள் ஒன்றும் பேசிக் கொள்ளாமலேயே தங்கள் வழக்கமான இடத்துக்கு போய் உட்கார்ந்தார்கள். அவன் தொண்டையைச் செருமிச் சரிசெய்து கொண்டான் பிறகு, ‘இந்தாங்க உங்க ஒரு ரூபாய்’ என்று அவள் டிப்ஸ் வைத்துச் சென்ற அதே ஒரு ரூபாய்த் தாளை எடுத்து அவளிடம் நீட்டினான்.

    அவள் அதைப் பெற்றுக் கொள்ளாமலேயே, என்ன புதுசா ‘நீங்க’ போட்டு மரியாதையாப் பேசறீங்க? என்று கேட்டாள். அவள் கண்கள் அமைதியாக இருந்தன. அவன் சற்றுத் துணிவடைந்தவனாக, அதுதான் நமக்குள்ளே ஒரு சுவர் எழும்பிடுத்தே இப்ப என்றான். அவனது கை ரூபாய் தாளுடன் நீண்டே இருந்தது. கடைசியில் அவள் அதை வாங்கிக் கொண்டாள். ஆனால் அதைத் தன் கைப்பையில் வைத்தபடியே, சுவர் எழும்பிடுத்துன்னு யாரு சொன்னாங்க என்று அவள் கேட்டதும் அவன் மனம் சிறிது உற்சாகம் கொண்டது.

    அவன் பரபரப்புடன் தன் பையிலிருந்து சில நற்சான்றிதழ்களை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவை அவனது படிப்பை மெய்ப்பிக்கும் சான்றிதழ்கள். அவன் ஒரு பி.எஸ்ஸி. பட்டம் வாங்கியவன் என்பதை உணர்த்துபவை. அவனது எஸ்.எஸ்.எல்.ஸி., பி.யூ.ஸி. ஆகியவை கூட இருந்தன. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவள் அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.

    இதெல்லாம் உங்களுடையதுதான்னு என்ன நிச்சயம்...? என்று அவள் கேட்டதும் கணம் போல் அதிர்ச்சி அடைந்தான். அவன் முகம் வெளிறியது.

    என்னை நீங்க நம்பல்லியா?

    நீங்க சொன்ன அந்தப் பொய்க்கு அப்புறம் உங்களை நான் எப்படி நம்ப முடியும்...?

    அவனால் சட்டென்று பதில் சொல்ல முடியத்தான் இல்லை. லீலா... பொய் சொல்லணும்கிற எண்ணத்துலே நான் உண்மையை மறைக்கல்லே... என்று அவன் தொடங்கியபோது அவள் பட்டென்று இடை வெட்டினான்.

    உண்மையை மறைக்கிறது கூடப் பொய் சொல்றதுக்குச் சமானந்தான். அது மட்டுமா? நீங்க பொய்யே சொல்லியிருக்கீங்களே? ராஜன் அண்ட் கம்பெனியிலே பார்ட்னர்னு சொன்னீங்களே? நான் எப்பவாவதுதான் ஆபீசுக்கும் போவேன். அதனாலே... போன் கீன் பண்ண வேண்டாம்னு எங்கிட்டேச் சொல்லி வெச்சிருந்தீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்? உங்க வண்டவாளம் எனக்கு தெரிஞ்சுடுமேன்னு தானே அப்படிச் சொன்னீங்க?

    ... ‘வண்டவாளம்’கிற வார்த்தையை நீங்க உபயோகப்படுத்தறதுலேர்ந்தே உங்க மனசு எனக்குப் புரிந்து போயிடுத்தே லீலா, நான் அதை எதிர்பார்த்துத்தான் அப்படி ஒரு பொய்யைச் சொன்னேன். நான் செய்யற தொழிலைச் சொன்னா உங்களுக்கு என்னைப் பிடிக்காம போயிடுமேங்கிற இதுலேதான் அப்படிப் பொய் சொன்னேன்.

    ... ‘வண்டவாளம்’கிற வார்த்தையை நான் சொன்னது அந்த அர்த்தத்திலே இல்லே. நீங்க மறைச்ச உண்மை எனக்குத் தெரிஞ்சு போயிடுமேங்கிற அர்த்தத்திலேதான் அப்படிச் சொன்னேன். உங்க தொழிலைப் பத்தி நீங்களே கேவலமாக நினைக்கிறீங்க, அதனாலேதான் பொய் சொல்லியிருக்கீங்க. நான் அதைப்பத்தி என்ன நினைக்கிறேன்கிறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

    அவன் மறுபடியும் அதிர்ந்தான். இல்லே, லீலா, இல்லவே இல்லே. எனக்கு வேறு வேலை கிடைக்கல்லே. அதனாலே இப்போதைக்குக் கிடைச்ச இந்த வேலையை நான் செய்யறேன். அவ்வளவுதான். அதை ஒண்ணும் நான் கேவலம்னு நினைக்கல்லே...

    மறுபடியும் பொய் சொல்லாதீங்க. நீங்க அப்படி நினைக்காதவராயிருந்தா உண்மையைச் சொல்லியிருக்கலாமே? ஏன் அதை மறைச்சு பார்ட்னர் கீர்ட்னர்ரெல்லாம் சொல்லணும்?

    லீலா... நான் பொய் சொன்னது தப்புத்தான். ஆனா நீங்க என்னைக் கேவலமா நினைச்சுடப் போறீங்களேன்னுதான் பொய் சொன்னேன். உங்ககிட்டேருந்து எதையும் மறைக்கணும்கிறதுக்காக இல்லே. நிச்சயமா இல்லே.

    நான் ஏன் கேவலமா நினைக்கணும்? அதிலே என்ன கேவலம் இருக்க முடியும்? எல்லாத் தொழிலும் நல்ல தொழில்தான். அதை எந்த அளவுக்கு நாணயமாயும் உண்மையாயும் நாம செய்யறோம்கிறதுதான் முக்கியம். தவிர, கல்யாணம் பண்ணிண்டவங்களும் சரி, கல்யாணம் பண்ணிக்க இருக்கிறவங்களும் சரி, மனசுவிட்டு உண்மைகளைத்தான் பரிமாறிக்கணும். இதுமாதிரிப் பொய்களை இல்லே - இப்படிச் சொன்னவாறே அவள் அவனது நற்சான்றிதழ்களைத் திருப்பிக் கொடுத்தாள். அவன் முகம் சிறுத்துப் போய்ச் சொல்லுவதறியாது உட்கார்ந்திருந்தான்.

    அவள் தொடர்ந்து சொன்னாள். உண்மைகள் கசப்பாக இருந்தாலும், அதையெல்லாம் அப்பப்போ பேசித் தீர்த்துடணும். வேஷம் போட்டுண்டு ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திண்டிருக்கிறதைவிட, உண்மைகளைப் பேசிச் சண்டை போட்டுகிறது மேல்னு நான் நினைக்கிறேன்...

    சரி, முடிவா என்ன சொல்றீங்க? என்று அவன் அலுப்புடன் கேட்டான். கேட்டான்.

    இனிமேலும் என்னை ‘வாங்க, போங்கன்னெல்லாம்’ பன்மையிலே பேசினீங்கன்னா எனக்குக் கெட்ட கோபம் வரும்... என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு அவள் எழுந்து தாங்கள் வழக்கமாகச் செல்லும் சிற்றுண்டி விடுதி நோக்கி நடக்கலானாள். அவன் நிம்மதியாயும், மகிழ்ச்சியுடனும் அவளைப் பின்பற்றினான்.

    2. நீ ஒரு சரியான முட்டாள்!

    மணமான புதிதில் ஒவ்வோர் இளைஞனின் முகத்திலும் குடிகொள்ளும் நிறைவும், மதர்ப்பும், பொருள் பொதிந்த புன்னகையும் அவன் முகத்திலும் தவழ்ந்து கொண்டிருந்தன. அதற்கு முந்திய நாள் தனக்கும் தன் மனைவிக்குமிடையே நடந்த சிறு பிணக்கும், அதன் பலமணி நேர நீடிப்பும், அது எங்கே ஒருநாள் முழுவதும் நீடித்து விடுமோ என்னும் அவனது அச்சமும், அது தீர்ந்து போனதன் பிறகு ஏற்பட்ட கரை காணாத மகிழ்ச்சியும் மறுபடி இப்போது அவனுக்கு நினைவுக்கு வந்தபோது சிறு கீற்றாக அவன் முகத்தில் பளிச்சிட்ட புன்சிரிப்பு சற்றே அகன்று முகம் முழுவதும் படர்ந்தது. அந்தப் புன்சிரிப்பை அதன் போக்கில் சில விநாடிகளுக்கு விட்டு வைத்திருந்தது அவன் தன் அசட்டுப் புன்னகையை யாரேனும் கவனித்துக் கொண்டிருக்கிறார்களோ என்னும் திடீர்க் கவனத்துடன் பார்வையைச் சுழற்றினான். நல்ல வேளையாக எல்லாரும் வேலையில் ஆழ்ந்திருக்கவே, அவன் வலுக்கட்டாயமாகத் தன் புன்னகையை அகற்றிவிட்டுத் தானும் வேலையில் மூழ்க முயன்றான். முயற்சியில் தோற்றும் போனான். அவள் முகம் அவன் மனக்கண் முன் தோன்றிக்கொண்டே இருந்தது.

    என்ன! புது மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்? என்ற குரலைக் கேட்டு அவன் திகைப்புடன் நிமிர்ந்தான். ராஜப்பா எதிரில் நின்றான்.

    வா, ராஜப்பா. இன்றுதான் விடுப்பிலிருந்து திரும்பினாயா? என்று நண்பனை வரவேற்ற அவன் அவனை உட்காரச் சொல்லிவிட்டுக் காப்பிக்கு ஆள் அனுப்பினான்.

    உன் கல்யாணத்துக்கு நான் இருக்க முடியாமல் போய்விட்டது. என்ன செய்வது? என்று மன்னிப்புக் கோரும் குரலில் அங்கலாய்த்துக் கொண்ட அவன், குடித்தனம் வைத்து விட்டாயல்லவா? என்றான்.

    வைத்து விட்டேன்.

    ஒருவேளை மாமியார் வீட்டிலேயே இருக்கிறாயோ என்பதற்காக அப்படிக் கேட்டேன்.

    உனக்கு விஷயமே தெரியாதா? மாமனார் மாமியார் வராமல்தான் எங்கள் கல்யாணம் நடந்தது.

    உன்னுடைய அப்பா - அம்மா?

    அவர்களும் வரவில்லை. அநாதைகளின் கல்யாணம் மாதிரி கோயிலில் நடந்தது.

    ஆண்டவன் முன்னிலையில் நடந்தது அல்லவா? அது போதும். பதிவும் பண்ணிக் கொண்டீர்கள்தானே?

    ஆமாம், பதிவும் பண்ணிக் கொண்டோம். அவள் பதிவு செய்துதானாக வேண்டும் என்றாள். அதனால்...

    நல்லதுதான். உன் மனைவி கெட்டிக்காரி... ராஜப்பா இப்படிப் புகழ்ந்ததை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சூடாகப் பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. அடக்கிக் கொண்டான்.

    இரு பக்கத்துப் பெற்றோர்களும் இணங்கியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! இத்தனைக்கும் நீங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை... சுத்த மோசம்…

    சில விநாடிகளுக்குப் பேச்சு நின்றது. காபியைக் குடித்துவிட்டு ராஜப்பா கிளம்பிப் போனான். அவன் போனதற்குப் பிறகு, ‘உன் மனைவி கெட்டிக்காரி’ என்று அவன் சொன்னது மறுபடியும் மறுபடியும் அவன் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. நண்பனின் சொற்களுக்கு என்ன பொருள்? ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியும்.

    Enjoying the preview?
    Page 1 of 1