Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karunaikku Marupeyar Kasaap
Karunaikku Marupeyar Kasaap
Karunaikku Marupeyar Kasaap
Ebook268 pages1 hour

Karunaikku Marupeyar Kasaap

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகின் மகோன்னத நாடு பாரதம், அந்த பாரதத்தில் தலைசிறந்தவர்கள் தமிழர்கள் என்பதே மகாகவி சுப்ரமண்ய பாரதியின் உறுதியான எண்ணம். பாரதப் பண்பாடும், தமிழ்ப் பண்பாடும் வேறு வேறு என்பதைப் போன்ற பொய்ப் பிரசாரம் திராவிட, கம்யூனிஸ, கிறிஸ்தவ, இஸ்லாமிய இயக்கங்களின் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அவர்களது திணிப்புகளுக்கு உதவும் என்பதால் இந்தத் திரிபுகளில் அவர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.

இந்தப் பொய்மையை முறியடிக்க நம்மிடம் உள்ள இலக்கிய ஆதாரங்களை நாம் ஊன்றிப் படிக்கவேண்டும். அந்த வகையில் சிலச் சில சந்தர்ப்பங்களில் நான் எழுதிய கட்டுரைகளை இங்கே தொகுத்து அளிக்கிறேன்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580149107577
Karunaikku Marupeyar Kasaap

Read more from Padman

Related to Karunaikku Marupeyar Kasaap

Related ebooks

Reviews for Karunaikku Marupeyar Kasaap

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karunaikku Marupeyar Kasaap - Padman

    https://www.pustaka.co.in

    கருணைக்கு மறுபெயர் கசாப்

    Karunaikku Marupeyar Kasaap

    Author:

    பத்மன்

    Padman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/padman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நுழைவாயில்

    உலகின் மகோன்னத நாடு பாரதம், அந்த பாரதத்தில் தலைசிறந்தவர்கள் தமிழர்கள் என்பதே மகாகவி சுப்ரமண்ய பாரதியின் உறுதியான எண்ணம். பாரதப் பண்பாடும், தமிழ்ப் பண்பாடும் வேறு வேறு என்பதைப் போன்ற பொய்ப் பிரசாரம் திராவிட, கம்யூனிஸ, கிறிஸ்தவ, இஸ்லாமிய இயக்கங்களின் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அவர்களது திணிப்புகளுக்கு உதவும் என்பதால் இந்தத் திரிபுகளில் அவர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.

    இந்தப் பொய்மையை முறியடிக்க நம்மிடம் உள்ள இலக்கிய ஆதாரங்களை நாம் ஊன்றிப் படிக்க வேண்டும். அந்த வகையில் சிலச் சில சந்தர்ப்பங்களில் நான் எழுதிய கட்டுரைகளை இங்கே தொகுத்து அளிக்கிறேன். இவ்வாறு தொகுத்து நூலாக வெளியிடுமாறு இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி திரு. இராம. கோபாலன்ஜி கட்டளையிட்டதை எனது பாக்கியமாகக் கருதுகிறேன்.

    இதனை சிரமேற்கொண்டு நூலாக வெளிக் கொணரும் முயற்சிக்கு உதவிக்கரம் நீட்டிய நண்பர் திரு. அம்பேத் வெங்கி என்ற திரு. வெங்கடேசனுக்கும் அவரது தடாக மலர் பதிப்பகத்துக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன் பத்மன்

    தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

    திராவிட – ஆரிய மாயை!

    தாலி அகற்றல் புரட்சி அல்ல, சிந்தனை வறட்சி!

    புலாலும் ஆரியமும்

    சங்கத் தமிழில் சனாதன தர்மம்

    சனாதனத்தில் சமத்துவம்

    சம்ஸ்கிருதத்துடன் ஏனிந்த சமர்?

    சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்

    புனிதப் போர்

    தேவையற்ற தடுமாற்றம்

    பாரத மாதா மதச்சார்புள்ளவரா?

    உண்மையான ஆண்கள் – சுவாமிஜியும், மகாகவியும்

    கங்கைக் கரை சத்ருக்கள்

    இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

    கருணைக்கு மறுபெயர் கசாப்

    ஆய்வுக்கு அப்பாற்பட்டதா இடஒதுக்கீடு?

    இந்தியை ஏற்பது இழிவல்ல!

    காங்கிரஸ் : கைவிடப்பட வேண்டிய கட்சி

    மூன்றாம் பாலும் முறையில்லா உறவும்

    மாறாப் புகழ் நிறை மதுரை

    பார் போற்றும் பாண்டியர்கள்

    தன்னையே தண்டித்த தகையாளன்

    சொக்கநாதரின் அருள்விளையாடல்

    இருக்கு ஆனா இல்லை

    மகாபாரதத்தில் மகாசேனன்

    தமிழ்த் தாயைக் காத்த தனயன்

    வருணாசிரமும் வந்த சிரமும்

    புதுயுகச் சித்தர்

    சீனத்தை அடக்க சினம் மட்டும் போதுமா?

    விடுதலைப் போரின் வீரரேகைகள்

    விடுதலை விதைத்த தமிழகம்

    கடவுள் துகள் என்றால் என்ன தவறு?

    திராவிட – ஆரிய மாயை!

    (தினமணி நாளிதழில் 24-10-2015 அன்று வெளியான நடுப்பக்கக் கட்டுரை)

    விதியே விதியே தமிழச்சாதியை என்செய நினைத்தாய்? என்று மகாகவி பாரதி புலம்பிய வரிகளை இரவல் வாங்கத் தோன்றுகிறது, இன்றைய தமிழறிஞர்கள் சிலரது கூற்றுகளை செவிமடுக்கும்போது.

    ‘திராவிடர்களான தமிழர்களிடம் ஆரிய நாகரிகம் புகுத்தப்பட்டுவிட்டது, ஆகையால் தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல’ என்று சில தமிழறிஞர்கள் முழங்குகிறார்கள். இவ்வாறு கூறுவதன் மூலம் ஹிந்து என்று பொதுவான பெயரில் வழங்கப்படும் இந்திய மதங்களின் தொகுப்புக்கு, ஆன்மிகத் தத்துவக் கரூவூலத்துக்கு தமிழர்களின் மாபெரும் பங்களிப்பை அவர்கள் மறுதலிக்கிறார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும், அந்தத் தமிழறிஞர்கள் எவையெல்லாம் ஆரியம் என்று வகைப்படுத்துகிறார்களோ அவையெல்லாம் தமிழ்நாட்டில் போற்றுதலுக்குரியதாய், தமிழனுக்கு உரியதாய் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளனவே!

    தமிழர்களின் முருகன் வேறு, ஆரியர்களின் முருகன் வேறு, ஆரியர்களின் புராணக் கதைகளில் கூறப்படும் சிவன் தமிழர்கள் வழிபடும் சிவன் அல்ல, தீ ஓம்புதல் (வேள்வி செய்தல்) ஆரியர்களின் செயலே அன்றி தமிழர்களுடையது அல்ல, ஆரியர்களின் தலைவன் இந்திரன் தமிழர்களின் எதிரி என்றெல்லாம் புனைவுகள் தமிழகத்தில் எடுத்தோதப் படுகின்றன.

    அப்படியா? என்று ஆச்சரியத்துடன் சங்க இலக்கியங்களைப் படிக்கப் புகுந்தால், அதைவிட ஆச்சரியம்! புராணங்களை விஞ்சும் கற்பனைகளைத்தான் தமிழகத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை வெட்டவெளிச்சமாகிறது.

    முதலில் இந்திரனைப் பார்ப்போம். இந்திரனும், வருணனும் ஆரியக் கடவுளர்கள் என்றால் அவர்களுக்கு தமிழ்கூறும் ஐந்திணைகளில் மருதம், நெய்தல் ஆகிய இரு திணை நிலங்களை ஒதுக்கியது ஏன்? இந்திரன் வேறு யாருமல்ல, வேந்தன் அதாவது மன்னன் என்று சிலர் விளக்கங்கள் கொடுக்கிறார்கள். அவ்வாறெனில்,

    ‘நூறுபல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து ஈரிரண்டு ஏந்திய மருப்பின், எழில்நடை தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன்’ (பலநூறு வேள்விகளை நடத்தியவனும் போர்களில் எதிரிகளைக் கொன்று பல வெற்றிகளைப் பெற்றவனும், நான்கு கொம்புகளையுடைய மகுடத்தைத் தரித்தவனும் எழிலான நடையும் நீண்ட கைகளும் உடையவனும், ஐராவதம் என்ற யானையில் வருகின்ற, செல்வம் நிரம்பிய செல்வனுமாகிய இந்திரன்) என்று திருமுருகாற்றுப்படையில் சிறப்பிக்கப்படும் இந்திரன் யார்?

    இப்போது முருகன் பற்றிய தவறான கூற்றுக்கும் இதே திருமுருகாற்றுப்படை கூறும் மறுப்பைக் காண்போம்: திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் ஆறுமுகங்களைப் புகழும்போது ‘ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்குமே’ என்று பாடுகிறார் நக்கீரர். மந்திர விதிமுறைகளில் பிசகாது, மரபுப் படி அந்தணர் நடத்துகின்ற வேள்வியை ஆறுமுகப் பெருமானின் ஒரு முகம் விரும்பி ஏற்கிறதாம். திராவிட முருகன் ஏன் ஆரிய வேள்வியை விரும்பி ஏற்கிறார்?

    ஏனெனில் பாரதம் முழுவதிலும் நடைபெறும் வேள்வியும் தமிழர்களுக்குரியதே. சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையை, அரிசில் கிழார், ‘கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை’ (பதிற்றுப்பத்து பாடல் 74) என்று பாராட்டுகிறார். அருமறை குறித்த விளக்கங்களை நன்கு கேட்டறிந்து, அதன் முறை தவறாது வேள்விகளைச் செய்தான் இரும்பொறை என்பது இதன் பொருள்.

    பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானை ‘கொலை கடிந்தும் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் நல் ஆனொடு பகடு ஓம்பியும் நான் மறையோர் புகழ் பரப்பியும்’ வாழ்ந்ததாகப் போற்றுகிறார். கரிகால் சோழனின் அரசாட்சியிலே கொலை, கொள்ளை போன்ற தீமைகள் அகற்றப்பட்டிருந்தன. அமரர்கள் எனப்படும் தேவர்களுக்கு உரிய யாகங்களைச் செய்து அவர்களுக்கு உரிய ஆவுதிகளை (வேள்வி செய்து அவிப்பாகங்களை வழங்குகின்ற ஆகுதிகளை) முறை தவறாமல் வழங்கியிருக்கிறான் மன்னன் கரிகாலன். அத்துடன் அதனைச் செய்வித்த அந்தணர்களுக்கு நல்ல பசுமாடுகளை தட்சணையாக அளித்ததுடன், நான்கு மறைகளை அறிந்த அந்தணர்களின் புகழைப் பரப்பியும் வந்திருக்கிறான்.

    மதுரைக் காஞ்சியில், தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்துபாடும் மாங்குடி மருதனார், நெடுஞ்செழியனின் முன்னோராகிய பெருவழுதி, பல யாகங்களை நடத்தியவன் என்பதை, ‘பல் சாலை முது குடுமியின் நல் வேள்வித் துறை’ என்று குறிப்பிடுகிறார்.

    இறுதியாக சிவபெருமானுக்கு வருவோம்.

    மலைபடுகடாம் எனப்படும் கூத்தர் ஆற்றுப்படையில் அதன் ஆசிரியர் புலவர் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், சிவபெருமான் ஆலகால விஷம் அருந்திய புராணச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் அவரை ‘காரி உண்டிக் கடவுள்’ என்று புகழ்கிறார். பரிபாடலின் 5-ஆவது பாடலில், முருகனைத் தோற்றுவித்த அவன்தம் தந்தையாகிய சிவபெருமான், ‘அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்’ என்றும் ‘விண்ணோர் வேள்வி முதல்வன்’ என்றும் போற்றப்படுகிறார். இந்தப் பரிபாடலின் 8-ஆவது, 9-ஆவது பாடல்களில் சிவபெருமான் ‘மணிமிடற்று அண்ணல்’ (நீலகண்டன்) என்று புகழப்படுகிறார்.

    இவ்வாறெனில், தமிழ்ச் சிவன் எப்படி புராணங்களில் கூறப்படும் ஆரியச் சிவனில் இருந்து வேறானவர்? முதலில் ஒரு விஷயத்தை தெளிவு செய்துகொள்வோம்: திராவிடம் என்பது இனமல்ல. தமிழ் என்பதைக் குறிக்கும் சம்ஸ்கிருதச் சொல்தான் அது. திராவிடம் தனி இனம் என்றால் அதனைக் குறிப்பிடும் சங்க இலக்கியம் எது? அதேபோல் ஆரியம் என்பதும் இனமல்ல. உயர்ந்த, சிறந்த என்று பொருள்படும் சொல் மாத்திரமே. அதனால்தான் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது உலகெங்கும் காணோம் என்று பாடிய மகாகவி பாரதி, ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரிய மந்திரம் வந்தேமாதரம் என்றும் பாடினார். இதன் உட்பொருள் உணர்வோம். வீண் திரிபுவாதங்கள் தவிர்ப்போம்.

    தாலி அகற்றல் புரட்சி அல்ல, சிந்தனை வறட்சி!

    (தினமணி நாளிதழில் 16-04-2015 அன்று வெளியான நடுப்பக்கக் கட்டுரை)

    தமிழர்களின் மரபுச் சின்னமான தாலியை, பெண்களின் அடிமைச் சின்னம் என்று கூறி, அதனை அகற்றும் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம் அறைகூவல் விடுத்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் திடீர் ஞானோதயத்தால் மறுதலிக்கப்பட்ட, ஆனால் பெருவாரியான தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்ற தமிழ்ப் புத்தாண்டு தினத்தை (ஏப்ரல் 14), அந்த நிகழ்வுக்கான தினமாகவும் அறிவித்தது.

    இந்தக் கேலிக்கூத்துக்கு காவல்துறை தடை விதித்தபோதிலும், உயர் நீதிமன்றத்தின் தடை நீக்கம், மீண்டும் தடை என்ற குழப்படிக்கு மத்தியில், அவசர அவசரமாக இந்த தாலி அகற்றும் அலங்கோலம் அரங்கேறியது. தமிழர்களின் திருமண வாழ்வில் தாலி இடைக்காலத்தில் வந்ததுதான், அதனை அகற்றி எறிவதில் என்ன தவறு? என்பது இவர்களது வாதம்.

    திருமணம், குடும்ப வாழ்க்கை என்பதே இடைக்காலத்தில் வந்ததுதான். ஆதிகாலத்தில் எதுவும் இல்லை. அந்தக் கற்காலத்துக்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டுமா? காடுகளில், மலைகளில் கூட்டமாக வாழ்ந்த மனிதன், குடும்பமாக வாழத் தலைப்பட்டதால்தான் சமூகம் உருவானது, நாகரிகமும், பண்பாடுகளும் மலர்ந்தன. அந்த நாகரிகத்தையும், பண்பாட்டையும்தான் தமிழர்களின் கலாசார அடையாளங்களாக நாம் போற்றுகிறோம், வழிவழியாய் பின்பற்றுகிறோம். அதன் உட்பொருளை உணர்ந்துகொள்ளாமல், கட்டுடைக்கிறோம் என்று கட்டாந்தரையில் முட்டி மோதுவதா பகுத்தறிவு?

    தாலி கட்டுவது என்பது ஆரியர், அதாவது வடநாட்டார் அதாவது பிராமணர் வழக்கம் என்றும் அதனை தமிழர்கள் மீது புகுத்திவிட்டனர் என்றும் சில அமைப்பினர் கூறுவதில் உண்மை இல்லை.

    நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக எதையாவது பிரச்னையாக்கித் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகத்தான் இது தெரிகிறது.

    தாலி கட்டும் பழக்கத்துக்கு அந்தணர் ஓதுகின்ற வேதத்தில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா? முடியாது. வேதத்தில் அது இல்லை. வைதீகம் என்று கூறி நடத்தப்படுகின்ற சடங்குகளிலே தாலி இருக்கிறது. ஆனால் வேத இலக்கியங்களில் இல்லை.

    (வைதீகச் சடங்குகளும் அவற்றுக்கான சம்ஸ்கிருத மந்திரங்களும் காலப்போக்கில், அந்தந்த வட்டாரங்களுக்கு, அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை. உதாரணத்துக்கு, திராவிட இயக்கத்தாரின் திராவிட நாட்டு வரையறைக்குள் இடம்பெறும் ஆந்திரத்தில் நடைபெறும் வைதீகத் திருமணச் சடங்குகள் தமிழர்தம் வைதீகச் சடங்குகளில் இருந்து வேறானவை. இதேபோல்தான் கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் வைதீகச் சடங்குகளும் மாறுபாடுடையவை. ஆக வைதீகச் சடங்குகளில் இடம்பெற்றாலும் தாலிக்கு வேத நிரூபணம் இல்லை.)

    அதேசமயம், தமிழர்தம் சங்க இலக்கியத்திலே திருமணச் சடங்குகளும் இருக்கின்றன, தாலியும் இருக்கிறது. ஊர் கூடித் திருமணம் நடத்தும் முறை ஏன் வந்தது என்பதற்கு ‘பொய்யும் வழுவும் தோன்றிய பி்ன்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ (கற்பியல் - 143) என்ற தொல்காப்பியச் செய்யுள் விடை தருகிறது.

    விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையிலே தங்களுக்குள் எந்த பந்தமும் இல்லை என்று பொய் கூறி ஏமாற்றுவதும், தவறுகளும் மலிந்துவிட்ட காரணத்தால்தான், கரணம் எனப்படும் திருமண முறையை, சமூகத் தலைவர்கள் கொண்டுவந்தனர் என்பது இதன் பொருள்.

    இந்தத் திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கும் தொல்காப்பியம் விளக்கம் தருகிறது. (கற்பியல் - 140)

    "கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை

    கொடைக்கு உரி மரபினர் கொடுப்ப, கொள்வதுவே".

    மணப்பெண்ணை ஏற்பதற்கு உரிய குடியைச் சேர்ந்த மணமகன், அப் பெண்ணைத் தனக்கு இல்லாளாகத் தருவதற்கு உரிய குடியைச் சேர்ந்தோர் கொடுக்க, ஏற்றுக்கொள்வதே திருமணம் என்கிறது தொல்காப்பியம்.

    இவ்வாறாக தகுதியுடைய மணமகனுக்கு, தகுதி உடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணை மணமுடித்துத் தருகின்றனர். அந்தத் தகுதியை எவ்வாறு தேர்ந்தெடுத்தனர்? வீரமுடைய ஆண்மகனுக்கே முதலிடம். ஆகையால் புலியோடு போராடி அதனுடைய பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து, தன் வீரப் பரிசாக பெண்ணுக்குத் தாலியை அணிவித்தான் அக்காலத் தமிழன். பின்னர் உண்மையான புலிப் பல்லைக் கொண்டு வருவது அருகி, பொன்னால் ஆன புலிப்பல், தாலியில் இடம்பெற்றது. ஆகையால்தான், இக்காலத்திலும் தமிழர்களின் தாலியின் கீழே இருபுறமும் புலிப் பல் போன்ற தோற்றத்துடன் அமையப் பெற்றுள்ளது.

    சங்க காலத்திலே சிறுவர்கள்தான் ஐம்படைத் தாலி அணிந்தார்கள், பெண்கள் தாலி அணிந்ததில்லை என்று கூறுவது திரிபுவாதம். தாலி என்றால் அணியப்படும் கயிறு என்று பொருள். அவ்வகைத் தாலி ஒன்றை அதாவது கயிற்றை, சிறுவர்கள் அணிந்தார்கள் என்பது உண்மையே. அதேபோன்று பெண்களும் மங்கல நாணாகிய கயிற்றை அணிந்திருக்கிறார்கள்.

    தமிழ்ப் பெண்கள் தாலி அணிந்ததற்கு ஏது சங்க இலக்கிய ஆதாரம் என்பதற்கு கீழ்வரும் பாடல்கள் விடைதரும்.

    அகநானூற்றில் கயமனார் இயற்றிய ஏழாம் பாடலின் வரி பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி என்று அமைந்துள்ளது. பாலைத் திணையில் அமைந்த இந்தப் பாடல், தலைவியைப் பார்த்து செவிலித் தாய் பாடியது. பருவப் பெண்ணின் உடல் மாற்றத்தைக் கூறும் அந்தப் பாடலில், தங்கத்தோடு புலிப்பல் கோத்த ஒளிவீசிய தாலியை தன் மகள் அணிந்திருப்பதாக செவிலித் தாய் பாடுகிறாள்.

    அந்தத் தாலி, திருமணமான பெண்கள் கழுத்தில் அணியும் தாலிதானா என்பதற்கு புறநானூற்றின் 127-ஆவது பாடல் சான்று தருகிறது. அப்பாடல், ஆய் என்னும் குறுநில மன்னனை வாழ்த்தி, புலவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.

    ஆய் எனும் மன்னனின் கோயில் அதாவது அரண்மனையானது, யாழிசைத்த பாணர்களுக்கு அம்மன்னன் யானைகளைப் பரிசாகத் தந்து விட்டதால், வெறிச்சோடிக் கிடக்கும் யானை கட்டும் தறிகளில் காட்டு மயில்கள் அச்சமின்றி அமர்ந்திருக்கும் வகையிலும், ஆய் குலத்துப் பெண்கள் ஈகையாக கொடுக்க இயலாத மங்கலநாணாகிய தாலி அன்றி வேறு எந்த அணிகலனும் அணியாத நிலையிலும் பொலிவிழந்து காணப்பட்டாலும், மற்ற மன்னர்களின் அரண்மனையைவிட அதுவே உயர்ந்தது என்கிறார் புலவர். ஏனெனில் ஆயின் கொடைத்தன்மை அத்தகையது. அப்படிப்பட ஆய் மன்னனின் வீட்டுப் பெண்களிடம், மற்ற நகைகள் தங்காமல்போயினும், தங்கத்தாலான தாலி மட்டுமே மிஞ்சியிருக்கிறது. ஏனெனில், கொடை வள்ளல் ஆய் மன்னனாலேயே கொடையாக அளிக்கப்பட முடியாத புனிதம் வாய்ந்தது அந்தத் தாலி என்பதுதானே இதன் பொருள்.

    இதோ அந்தப் பாடல் வரிகள்:

    "களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்

    பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்

    களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்

    கான மஞ்ஞை கணனொடு சேப்ப

    ஈகை யரிய விழையணி மகளிரொடு

    சாயின் றென்ப வாஅய் கோயில்"

    ஈகை அரிய இழையணி மகளிர் என்ற வரிகளை நோக்க வேண்டும். ஈகை அரிய

    Enjoying the preview?
    Page 1 of 1