Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilakkiyam Moolam India Inaippu - Part 2
Ilakkiyam Moolam India Inaippu - Part 2
Ilakkiyam Moolam India Inaippu - Part 2
Ebook1,403 pages8 hours

Ilakkiyam Moolam India Inaippu - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான்கு தொகுதிகளைக் கொண்ட 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ பணியின் தென்னிந்திய மொழிகளைப் பற்றிய முதல் தொகுப்பை 1998ல் வெளியிட்டபோது இல்லாத தயக்கம், பயம், இப்போது கிழக்கிந்திய மொழிகளைக் குறித்தான இரண்டாம் தொகுப்பை வெளியிடும் தருணத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை என்னைப் பீடித்திருக்கிறது!

கிழக்கு மொழிகளின் ஆய்வுக்காக சில எழுத்தாளர்களை ஆங்கிலத்தில் பேட்டிகாண்பதில் எழுந்த சிக்கல்கள், வித்தியாசமான உச்சரிப்போடு இருந்த பேட்டிகளை ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகலெடுப்பதற்குள் உண்டான சந்தேகங்கள், கேள்விக்கான பதில் முழுமையாக இல்லை என்ற உணர்வில் மீண்டும் டார்ஜீலிங் அல்லது இம்ஃபாலில் உள்ள எழுத்தாளர்களோடு தொடர்புகொண்டு, அவர்களுக்கு வசதிப்படும் நாளில் சென்னையில்லிருந்து வெகு தொலைவிலுள்ள அந்த ஊர்களுக்கு மறுபடியும் சென்ற பயணங்கள் - என்று நடைமுறையில் எழுந்த பிரச்சினைகளை சமாளிப்பதற்குள் நான் திண்டாடித்தான் போனேன்!

ஒரு மொழி சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சேகரிப்பது (Spade Work); குறிப்பிட்ட படைப்பாளிகளுடன் தொடர்புகொண்டு, அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பேட்டியெடுப்பது (Field Work); சென்னைக்கு வந்த பிறகு 15 - 20 ஒலிநாடாக்களிலிருந்து எழுத்தில் நகலெடுத்து, அவற்றை எடிட் செய்து எழுதுவது (Editing and Writing) - என்று பிரதானமாய் மூன்று தளங்கள் கொண்ட இப்பணியில், ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகல் (Transcribing) எடுப்பதற்கு மட்டும் நான் மற்றவர்களின் உதவியை நாடுகிறேன். தென்னிந்திய மொழிகளோடு பரிச்சயம் இருந்த காரணத்தால் சீக்கிரமே நகலெடுத்துத் தந்தவர்களால், கிழக்கிந்திய மொழி எழுத்தாளர்களின் பேட்டிகளை எளிதில் நகலெடுக்க இயலவில்லை. உச்சரிப்பு மட்டுமின்றி, பெயர்கள், சம்பவங்கள், இலக்கியங்கள் என்ற அனைத்துமே இங்குள்ளவர்கள் அதிகம் கேள்விப்படாமல் இருந்ததில், 'எழுத்தில் நகலெடுப்பது சாத்தியமில்லை' என்று சிலர் ஒலி நாடாக்களைத் திருப்பித் தந்ததும்கூட நடந்தது. புது நபர்களைத் தேடி, என் குறிக்கோளை விளக்கி, ஒருவழியாய் பணியை நிறைவேற்றுவதற்குள் முழுசாய் ஒரு வருடம் ஓடிப்போய்விட்டது.

சரியாகத் தொடர்புகொள்ள முடியாமல்போனதில், முக்கியமான படைப்பாளிகள் சிலரின் நேர்காணல் இத்தொகுதியில் இடம்பெறாதது எனக்கு ஒரு குறைதான். ஞானபீடப் பரிசு பெற்ற ஒரியக் கவிஞர் திரு. சீதாகாந்த் மகாபாத்ராவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியும், ஏனோ அவருடன் என்னால் தொடர்புகொள்ள இயலவில்லை. விலாசம் தவறாக இருந்து கடிதங்கள் அவரைச் சென்றடையாததைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? கிழக்கிந்திய மொழிகளுக்கான ஆய்வைத் துவங்கி, புத்தகம் வெளியாகும் வரையிலான இடைப்பட்ட வருடங்களில் என்னென்ன இழப்புகள், மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன! கெளஹாத்தியிலும் டார்ஜிலிங்கிலும் அன்போடு என்னை வரவேற்று, பேட்டி அளித்து, தம் வீட்டிலேயே உணவருந்தச் செய்து, குடும்பத்து அங்கத்தினர்களை அறிமுகப்படுத்திக் குதூகலித்த திரு. பிரேந்திர பட்டாச்சார்யா, திரு. ஜகத் செத்ரி ஆகியோர், இன்று நம்மிடையே இல்லை. மிகுந்த உற்சாகத்தோடு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறி என்னை ஊக்குவித்த திரு. சுபாஷ் முகோபாத்யாயவினால், தற்சமயம் பலகையில் எழுதிக் காட்டத்தான் இயலுகிறது! இழப்புகளின் சோகம் மனதைக் கவ்வினாலும், கூடவே, அவர்கள் நன்றாக இருந்தபோது பேசி, கேட்டு உரையாடிய அதிர்ஷ்டம் எனக்கிருந்ததை நினைத்து நிறைவும் தோன்றுகிறது.

மற்றபடி, எனக்குத் தெரிந்தவரையில், முடிந்தளவில், நேர்மையான முறையில் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் முழு ஒத்துழைப்போடு இத்தொகுப்பு தரமான படைப்பாக வெளிவந்திருப்பது, நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளிகளாக மறையச் செய்துவிட்டது. .

ஞானபீட விருது பெற்ற திரு. எம். டி. வாசுதேவன் நாயர் அவர்களின் முன்னுரை, இத்தொகுப்புக்குக் கிடைத்த ஆபரணம், உயர்ந்த பெருமை. அவரையும், இத்தொகுப்பை சாத்தியமாக்கிய அனைத்து நபர்களையும், இத்தருணத்தில் நெகிழ்ச்சியோடு நினைத்துக்கொள்கிறேன்.

'அரைக்கிணறு வெற்றிகரமாய்த் தாண்டிவிட்டாய், இன்னும் பாதிதானே! அயர்ந்து உட்காராமல் மற்ற இரண்டு தொகுப்புகளையும் சீக்கிரம் முடித்துவிடு!' என்று குரல் கொடுக்கும் என் ஆன்மாவுக்கு, வலிமையும், மனஉறுதியும் அதிகம். அதுவே, மேற்கு, வடக்கு தொகுப்புகளின் வேலைகளில் என்னை உற்சாகமாக ஈடுபடவைக்கும்... உறுதியாய்!

- சிவசங்கரி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803515
Ilakkiyam Moolam India Inaippu - Part 2

Read more from Sivasankari

Related to Ilakkiyam Moolam India Inaippu - Part 2

Related ebooks

Reviews for Ilakkiyam Moolam India Inaippu - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilakkiyam Moolam India Inaippu - Part 2 - Sivasankari

    http://www.pustaka.co.in

    இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு

    (இரண்டாம் தொகுப்பு - கிழக்கிந்திய மொழிகள்)

    Ilakkiam Moolam India Inaippu

    (Irandam Thoguppu - Kizhakindia Mozhigal)

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை - 1

    என்னுரை - 2

    தேர் இழுக்க வடம் பிடித்து உதவியவர்கள்

    பயணக்கட்டுரை-1

    (பேட்டி: கதை / கவிதை)

    அஸ்ஸாம்

    1.பி.கே. பட்டாச்சார்யா

    மாகோனும் பூசாரியும்

    2.நிர்மல்பிரபா பர்தோலய்

    கவிதைகள்

    3.ந வகாந்த பரூவா

    கவிதைகள்

    4. பாபேந்திரநாத் சைக்யா

    எலிகள்

    5.பந்திதா புக்கன்

    அன்புள்ள அப்பாவுக்கு...

    ஆய்வுக்கட்டுரை - நவீன அஸ்ஸாமிய இலக்கியம்

    பயணக்கட்டுரை-2

    (பேட்டி: கதை / கவிதை)

    மேற்கு வங்காளம்

    1.சுபாஷ் முகோபாத்யாய

    கவிதைகள்

    2.சுனில் கங்கோபாத்யாய

    கதாநாயகி

    3.மஹாஸ்வேதா தேவி

    திரெளபதி

    4.பிமல் கர்

    சத்யதாஸ்

    5.ஸமரேஷ் மஜும்தார்

    மனிதனைப் போல

    6.நபருன் பட்டாச்சார்யா

    சோளக்கொல்லை பொம்மை

    7.திப்யேந்து பாலித்

    ஆய்வுக்கட்டுரை - நவீன வங்க இலக்கியம்

    பயணக்கட்டுரை-3

    (பேட்டி: கதை / கவிதை)

    மணிப்பூரி

    1.பினோதினி தேவி

    இசை

    2.ஈ ஸோனாமணி சிங்

    பத்திரிகையில் போடாதீர்கள்

    3.ஸ்ரீ பிரேன்

    நழுவல்

    5.ஈ. தினமணி சிங்

    அரசமர ஏலம்

    ஆய்வுக்கட்டுரை - நவீன மணிப்பூரி இலக்கியம்

    பயணக்கட்டுரை-4

    (பேட்டி: கதை / கவிதை)

    இமயமலை அடிவாரத்தில்...

    1.ஜகத் செத்ரி

    பத்மா

    2.இந்திர பஹதூர் ரய்

    இரவெல்லாம் அடித்த புயல்

    3.ஆர். பி. லாமா

    தமாங்குகளும் அவர்களின் வாத்தியம் தம்புவும்

    4.லக்கி தேவி சுந்தாஸ்

    மூன்றாவது வீடு

    5.கேவல் சந்திர லாமா

    குன்று

    6.சுபா கெய்ஸிங்

    மானே

    ஆய்வுக்கட்டுரை - நவீன நேபாளி இலக்கியம்

    பயணக்கட்டுரை-5

    (பேட்டி: கதை / கவிதை)

    ஒரிஸ்ஸா

    1.ரமாகாந்த ரத்

    கவிதைகள்

    2.கிஷோரி சரண் தாஸ்

    விருந்தாளி

    3.பிரதீபா ராய்

    தீண்டமுடியாத கடவுள்

    4.மனோஜ் தாஸ்

    பெளர்ணமி இரவில் ஒரு பாலம்

    5.ஸந்தனு குமார் ஆச்சார்யா

    கூட்டலும் கழித்தலும்

    ஆய்வுக்கட்டுரை - நவீன ஒரிய இலக்கியம்

    ***

    முன்னுரை

    இந்திய எழுத்தாளர்கள் நிறைந்த கூட்டத்தில் உரையாற்ற அழைக்கப்படும் சந்தர்ப்பங்களை கெளரவமாகக் கருதிப் பெருமைப்படும் அதேசமயம், கூட்டத்தாரோடு பேசிப்பழக எனக்கு அந்நியமான மொழியையே நாட வேண்டியிருக்கிறது என்பதால், தர்மசங்கடமாகவும் நான் உணர்வதுண்டு. அதோடு, பிறமாநில இலக்கியங்களைக் குறித்து நான் புரிந்து கொண்டது மிகக்குறைவானது என்பதால், பொதுவான இந்திய எழுத்துக்களைப்பற்றி என்னால் விமர்சிக்கவும் இயலாது. மொழிபெயர்ப்புகள் மூலமாக எனக்குப் படிக்கக் கிடைக்கும் பிறமொழி இலக்கியங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்ள மற்ற மொழிகளிலிருந்து வரும் என் சக எழுத்தாளர்களுக்கும் இதே பிரச்சினைதான். எங்களில் சிலரால், சமீபத்திய அமெரிக்க இலக்கியப்போக்கு அல்லது சமகாலத்திய லத்தீன் அமெரிக்கக் கதைகள் குறித்து விரிவாக விவாதிக்க இயலும்... ஆனால், பக்கத்து மாநில இலக்கியத்தைப்பற்றி ஏதும் அறியோம்.

    மொழிபெயர்ப்புகளின் மூலம் நாட்டின் பல்வேறு மொழிகளிலுள்ள இலக்கியங்களைப் பரிமாறிக்கொள்ள வெகுசில தீவிரமான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்புப் பணிகளை, சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற சில அரசு சார்ந்த அமைப்புகள் அவ்வப்போது மேற்கொண்டுவருகின்றன. இவற்றின் சேவையை நான் ஒதுக்கிவிடவில்லை என்றாலும், இதுபோன்ற அமைப்புகள் உருவாவதற்கு முன்பே, நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த தனி நபர்கள் பிறமொழிகளைக் கற்று, பல்வேறு இலக்கியங்களையும் தங்கள் சொந்த மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், தாகூர், பிரேம்சந்த் போன்றோரின் பெரும்பான்மையான எழுத்துக்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரிக்கப் பயாட்டுள்ளன. அவை, வாசிக்கும் இன்பத்திற்காக மட்டுமான இலக்கியங்கள் அல்ல; அறிமுகமில்லாத இந்தியா மற்றும் இந்திய வாழ்வை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெளிப்படுத்தும் மின்னல் கீற்றுகள்.

    இப்போது, வியாபாரச்சந்தையும் ஊடகங்களும், இந்திய-ஆங்கில எழுத்துக்களை இந்திய இலக்கியமாகக் காட்டுகின்றன. இந்த வகையில் நல்ல படைப்புகள் இருப்பதில் சந்தேகமில்லை. எனினும், நமது நாட்டின் மாநில மொழிகளில் பிரதிபலிக்கும் இந்திய இலக்கியத்தின் அறிவு மேன்மையை, எவரும் ஒதுக்கிவிட முடியாது. மொழிகளுக்கிடையேயான வேறுபாடுகள், நாட்டின் கலாச்சார முன்னேற்றத்திற்கு ஒரு தடை என்கிற ஆங்கிலேயர்களின் பழங்கருத்தை, இப்போதும் சிலர் வலியுறுத்துவது வருத்தத்துக்குரியது. சல்மான் ருஷ்டியும் குஷ்வந்த் சிங்கும், இந்திய மொழிகளின் மூவாயிரமாண்டுப் படைப்புகளை அங்கீகரிக்க மறுக்கிறார்கள்.

    ஐம்பதாண்டு இந்திய எழுத்துக்களைப்பற்றி 'நியூ யார்க்கர்' பத்திரிகையில் ருஷ்டி தனது பிரபலமான கட்டுரையை எழுதியபோது, மாநிலமொழி எழுத்தாளர்கள் மிகுந்த வேதனையடைந்தார்கள். ஆனால், எல்லோரும் அல்ல. மாநிலமொழி எழுத்தாளர்களான நாங்கள், தகுதி குறைந்தவர்களாக உணரக் காரணமேயில்லை. உலகெங்கிலுமுள்ள எழுத்தாளர் சமுதாயம் நிர்மாணித்துள்ள சிறந்த பாரம்பரியத்தில், நாங்களும் அங்கம்வகிக்கவே செய்கிறோம். இலக்கியப் பாரம்பரியத்தின் பரந்த வரைபடத்தில் எங்களுக்கும் ஒரு சிறிய, ஆனால் மதிப்புமிக்க இடமுண்டு. இலக்கியச் சந்தையைக் கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் நிர்ப்பந்தங்களை மீறிய ஒரு நம்பிக்கையான வாசகர் வட்டம், மாநில எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையேயான இந்த நம்பிக்கையையும் அன்பையும், இருவருமே பெரிதும் மதிக்கிறார்கள். இதன் அடிப்படையில்தான், என் எழுத்துக்கான வாசகர் வரவேற்பு சற்றே குறைந்துவிட்டது என்று எப்போது உணர்கிறேனோ, அந்தக் கணமே எழுதுவதை நிறுத்திவிடுவேன்! என்று வங்காள எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயவினால் தைரியமாகக் கூறமுடிகிறது.

    தேசிய ஒருமைப்பாடு என்பது எனது சகாவும் சிறந்த எழுத்தாளருமான சிவசங்கரிக்குப் பிடித்த, கொள்கையாகவே உள்ள ஒரு விஷயம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நேருவின் வார்த்தைகளில் இவருக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு.

    சில வருடங்களுக்கு முன் சென்னையில் நாங்கள் சந்தித்தபோது, இந்தப் பணியைப்பற்றி மிகுந்த ஆர்வத்துடனும் உறுதியுடனும் கூறினார். வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் என்பது ஒன்றுதான் என்ற டாக்டர் ராதாகிருஷ்ணனின் கருத்தை வலியுறுத்திப் பேசினார்.

    முதலிரண்டு தொகுதிகளைப் படித்தபின் (நான்கு தென்னிந்திய மொழிகளைக் கொண்டது முதல் தொகுதி), ஆதாரமற்ற கற்பனை ஒருங்கிணைப்பை இந்திய இலக்கியத்தில் காண அவர் முனையவில்லை என்ற திருப்தி எனக்கு உண்டாயிற்று. பல்வேறு எழுத்தாளர்களின் பேட்டிகள், அவர்களது நடையிலும் உட்பொருளிலுமான வித்தியாசங்களை வெளிப்படுத்துகின்றன. அவை மாநிலம் சார்ந்தவை - குறிப்பிட்ட விஷயங்களையும், சமூக யதார்த்தங்களையும் சார்ந்தவை. வித்தியாசங்களைக் குறித்த ஆதாரபூர்வத் தேடலும்கூட, ஒற்றுமையை உணர்வதற்கான ஒரு வழிதான். இதுதான் சிவசங்கரியின் சாதனை.

    சாகித்ய அகாடமி இந்நாட்டில் இருபத்தியிரண்டு மொழிகளை அங்கீகரித்துள்ளது. கூடவே, அங்கீகரிக்கப்பட்ட முக்கியப்போக்கில் சேர்வதற்காகப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் போடோ, துளு போன்ற சிறுபான்மை மொழிகளின் இலக்கியங்கள் வேறு. இவை போதாதென்று, அடையாளம் வேண்டி கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் எண்ணற்ற வட்டார மொழிகளும் உண்டு.

    ஒற்றை மொழியோடும் ஒரே மதக் கலாச்சாரத்துடனும் நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேய அரசு, இந்திய வாழ்வின் பன்மொழி மற்றும் பலமதப் பண்பாட்டைப் புரிந்துகொள்ளத் தவறியது.இந்தியாவின் 'தரமற்ற' மொழிகளில் அறிவியலும் இலக்கியமும் வளர்ந்துவிடப்போகிறதே என்கிற பயத்தில், படிப்பாளி வர்க்கத்தின் ஒரே மொழியாக ஆங்கிலம்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தார்கள் மின்டோ பிரபுவும் மெக்காலே பிரபுவும்.

    ஆங்கிலேயர்களால் நம் மொழிகளுக்குப் பதிலாக வேற்றுமொழியை முடமாகக் கொண்டுவர முடியவில்லை. மாறாக, ஆங்கிலத்துடனான தொடர்பை, நவீனமயமாக்குதலுக்கான வாய்ப்பாக நம் மொழிகள் பாடன்படுத்திக்கொண்டன.

    சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், மாநில மொழிகளின் இடத்தை இந்திமொழி பெற்றுவிடும் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால், தேசியமொழி ஒருங்கிணைப்புக்காக மாநில மொழிகளையும், சிறுபான்மை மொழிகளையும், வட்டார மொழிகளையும் மீறி முன்னேற, இந்தியினால், அது எவ்வளவு வளமானதாக இருந்தாலும்கூட, முடியாது என்பதை அவர்கள் வெகுவிரைவில் புரிந்துகொண்டார்கள். ஒரு தேசிய மொழியின் மூலம் இந்திய இலக்கியத்தைக் குறிப்பிட்ட அளவுகோலுக்குள் கொண்டுவருவது என்பது மின்டோவின் கருத்தைப் போன்றதுதான். ஒவ்வொரு மொழிக்கும், எத்தனை பேர்களால் பேசப்படுகிறது என்கிற எண்ணிக்கையைத் தாண்டிய அடையாளமும் உயிர்த்துடிப்பும் உண்டு. மொழிகளின் ஒருங்கிணைப்பும்கூட சாத்தியமில்லை. துளஸிதாஸ், 'ராம்சரித்மானஸை' அவதி மொழியில் இயற்றினார். காலத்தைத் தாண்டி, மொழித் தடைகளையும் தாண்டி, இந்தி பேசும் உலகு முழுவதையும் அது சென்றடைந்திருக்கிறது. வித்யாபதி மைதிலியிலும், சூர்தாஸ் போஜ்புரி மொழியிலும் எழுதினார்கள். தத்தம் வட்டாரமொழிகளில் உறுதியாக நின்ற அவர்கள், பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் கவிதையைப் படைத்தார்கள்.

    1992-ம் ஆண்டு குளிர்காலத்தில் இப்பணியைத் துவக்க கேரளத்துக்கு வந்தார் சிவசங்கரி. தன் திட்டத்தை அவர் விவரித்தது எனக்கு பிரமிப்பைத்தந்தது. நாடு முழுவதும் பயணித்து பதினெட்டு மொழிகளைச் சார்ந்த இலக்கியவாதிகளைச் சந்திப்பதென்பது எளிதான காரியமல்ல. (இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் எட்டாம் பிரிவின்படி அமைந்த பதினெட்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்திருந்தார்). கலைக்களஞ்சியம் போன்ற தொகுப்பு வேலையை அவர் திட்டமிடவில்லை. ஆனால், குறிப்பிட்ட எழுத்தாளர்களுடனான விரிவான பேட்டிகளைக் கொண்ட நான்கு தொகுப்புகள் மூலம் பதினெட்டுமொழி இலக்கியங்களையும் அறிமுகப்படுத்த விரும்பினார். இப்பணியில் அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். வெறியோடு இருந்தார் என்றுகூடச் சொல்லலாம்.

    'நவீன மலையாள மொழியின் தந்தை' எனப் போற்றப்படும் பதினாறாம் நூற்றாண்டுக் கவி துஞ்சத்து எழுத்தச்சனின் பிறந்த ஊரான திரூருக்கு அவரை முதலில் அழைத்துச் சென்றேன். தலைசிறந்த கவிதைகளை எழுத எழுத்தச்சன் உபயோகித்த இரும்பு எழுத்தாணியைக் கையில் பிடித்தபோது, சிவசங்கரிக்கு உண்டான சிலிர்ப்பையும் பயபக்தியையும் என்னால் உணரமுடிந்தது. பின்னர், வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரப் பிள்ளை இருவருடனுமான அவரது சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தேன். படுத்த படுக்கையில் இருந்தாலும், அந்த நீண்ட சந்திப்பை ரசித்தார் பஷீர். ஒருசில மாதங்களில் மறைந்துவிட்ட பஷீரின் கடைசிப் பேட்டி அது. தகழிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. ஆனாலும், மணிக்கணக்கில் பேசினார். இரு சந்திப்புகளின்போதும் நானும் கூடவே இருந்தேன். பேட்டியாளர், மலையாள இலக்கியத்தைப்பற்றி நிறைய படித்து, பேட்டிக்கு நன்கு தயாராகவே வந்திருந்தார் என்பதைக் கவனிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

    இப்பணியின் பிரும்மாண்டத்தை வைத்துப் பார்க்கையில், எனக்குச் சில சந்தேகங்களும் இருந்தன. ஆனால், முதலிரண்டு தொகுப்புகளை வெற்றிகரமாக நிறைவுசெய்து, அடுத்த இரண்டு தொகுப்புகளுக்கான வேலையைத் துவக்கத் தயாராக சிவசங்கரி இருப்பதை இப்போது என்னால் உணரமுடிகிறது. எட்டு வருட வேள்வியின் பலன்! இந்த இரண்டாம் தொகுப்புக்கு முன்னுரை எழுதுவதற்குக் கிடைத்த வாய்ப்பை, கெளரவமாகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.

    இத்தொகுப்பைப் படிப்பதற்கு முன், நேபாளி மற்றும் மணிப்பூரி இலக்கியங்களைக் குறித்தான எனது அறிவு மிகமிகக் குறைவு. வங்காள, ஒரிய, அஸ்ஸாமிய இலக்கியங்களோடு எனக்கு ஓரளவுக்குப் பரிச்சயம் உண்டு. இம்மூன்று மொழிகளைப் பொறுத்தவரை, மேலும் அதிக விவரங்களையும் அறிவையும் இத்தொகுப்பு அளித்திருக்கிறது. குறைகள் இருந்தாலும் இருக்கலாம்... 'ஏ' எழுத்தாளருக்கு பதில் 'பி' எழுத்தாளர் இடம் பெற்றிருக்கவேண்டும்; இன்னாரை விட்டுவிட்டது தவறு – என்றெல்லாம் சிலர் சுட்டிக்காட்டலாம். ஆனால், இந்த பிரமிக்கத்தக்க தொகுப்பின் மூலம் நிஜமாகவே பலனடைந்திருப்பதாக நான் எப்படி உணர்கிறேனோ, அதே போலப் பலரும் உணர்வார்கள்.

    பேட்டிகளின்போது சில சமயம் எழுத்தாளர்கள் பளிச்சென்ற கருத்துக்களை வெளியிடுகிறார்கள். ஓரிய எழுத்தாளர் மனோஜ் தாஸ், ஒவ்வொரு மொழிக்கும் உயிர்த்துடிப்பு உள்ளது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார். அந்தத் தெய்வீக சக்தியின்பால் நாம் வைக்கும் நம்பிக்கை, அதனோடு நம் உறவு சரியாக இருந்தால், நிச்சயம் பலனும் அமோகமாக இருக்கும் என்கிறார். விளம்பரப் பலகைகளுக்கு வர்ணம் தீட்டுவதை வயிற்றுப்பிழைப்புக்காகத் தொழிலாக ஏற்றுள்ள இளைஞரான நேபாளிக் கவிஞர் கேவல் சந்திரலாமா, புதிதாய் புரட்சி ஒன்று வெடித்து, தற்சமயம் இருக்கும் நிலை தலைகீழாக மாறவேண்டும் என்ற லட்சியக் கனவைக் கொண்டிருக்கிறார். மணிப்பூரி எழுத்தாளர் பினோதினி தேவிக்கு, எழுத்தில் 'கமிட்மெண்ட்' என்பது, அரசியல் கட்சியில் உள்ளது போன்ற கோட்பாடுகள் இல்லை. ஓர் உண்மையான, நேர்மையான எழுத்தாளராக இருக்க முயற்சிப்பதுதான் என்னைப் பொறுத்தவரை கொள்கை அல்லது கமிட்மெண்ட்' என்பேன் என்கிறார். ஒரியக் கவிஞர் ரமாகாந்த ரத், நாமாக உண்டுபண்ணாமல், உடனடியாக நடக்காமல், பிரக்ஞையின் ஒரு நிலையைத் தானாக அடையும் அந்தத் தேடல்தான் எனது எழுத்துகள். அங்கு வேறு ஒரு நிஜம் இருக்கிறது. அந்த நிஜம் நம்முடைய வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருப்பினும், உடனடியாக நிகழாதது" என்ற கருத்தை வெளியிடுகிறார்.

    இலக்கியத்தின் மூலம் இந்தியாவை இணைக்க முடியுமா? இலக்கியத்தைப் புரிந்துகொள்வது என்பது, மக்களையும் அவர்கள் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்வதைப் போன்றது. நம் மொழிகளை அலட்சியம் செய்வது, ஆங்கிலேய ஆக்ரமிப்புத் தாக்கம் ஏற்படுத்திய 'கலாச்சார மறதிநோயின்' பாதிப்புதான்.

    சிவசங்கரியின் பணி, இந்தியாவின் சமகால மாநில இலக்கியங்களைப் பற்றின வெறும் அறிமுகம் அல்ல. நமது கலாச்சார நினைவிற்குப் புத்துயிர் ஊட்டுவதற்கும், நமது மொழிகளின் அடையாளங்களை மீண்டும் கண்டறிவதற்குமான முறையீடுதான் இது.

    ஜனநாயக இந்தியாவை, சகிப்புத்தன்மையற்ற சுவர்களை எழுப்புவதன் மூலம் மொழியரசியல் துண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இது போன்ற பணிகளுக்கான தேவை மிக அதிகம் என்று கருதுகிறேன்.

    - எம்.டி. வாசுதேவன் நாயர்

    கோழிக்கோடு,

    மார்ச், 2000.

    தமிழில்: லலிதா வெங்கடேஷ்.

    ***

    என்னுரை - 1

    (தென்னிந்திய மொழிகளைப் பற்றிய முதல் தொகுப்பில் இடம்பெற்றது)

    நான் சின்னப்பெண்ணாக இருக்கையில் என் அம்மா ஒரு கதையைச் சொன்னதுண்டு. 'ஒரு ஊரில் ஒரு ஏழை அனாதைச் சிறுமி வசித்தாள். அவள் ரொம்ப நல்லவள். தன் கஷ்டத்தைப் பாராட்டாமல் அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய நினைக்கும் ரகம். அவள் ஒருநாள், 'கடவுளே… என்னிடம் மட்டும் ஒரு பணம் காய்க்கும் மரம் இருந்தால் எத்தனை பேருக்கு உதவி செய்யமுடியும்!' என்று எண்ணியவாறு உறங்கிவிட்டாள். காலையில் கண்விழித்துப் பார்த்தால், குடிசைக்கருகில் பிரும்மாண்டமாய் ஒரு மரம், அதில் காய்களுக்குப் பதிலாய் வட்டவட்டமாய் தங்க நாணயங்கள்! 'இதற்கு யார் விதை போட்டது; இது எப்போது மரமானது?' என்று போவோர் வருவோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாவிட்டாலும், தினமும் காசுகளைப் பறித்து சகல ஜனங்களுக்கும் அப்பெண் விநியோகித்ததால் அந்த நாட்டில் ஏழ்மை என்பதே இல்லாமல் போனது' - என்று அம்மா சொன்ன கதையின் முன் பகுதியை விட்டுவிட்டு, பின்பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட அந்தச் சிறுமியின் நிலையில் நான் இருப்பது புரிகிறது.

    'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற இந்த விருட்சத்திற்கு எது அல்லது யாரால் எப்போது என்னுள் அந்த வீரிய விதை விதைக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியாவிடினும், சரியான மண்வளம், நீர், உரம் கிட்டியதில் அந்த விதை ஆரோக்கியமாக முளைத்து வளர்ந்து, கிளைகளைப் பரப்பிய மாபெரும் மரமாகத் தழைத்துவிட்டதும், அதன் நிழல் தரும் சுகத்தையும், பூக்களின் மணத்தையும், கனிகளின் ருசியையும், மரத்தில் கூடுகட்டி வாழும் பறவைகளின் சங்கீதத்தையும் நான் மட்டும் அனுபவிக்க நினைக்காமல், என் நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ள விழைவதும் நிஜம்.

    இப்போது இந்த முன்னுரையை எழுத உட்காரும் நிமிடத்தில், என்னுள்ளே சில நினைவுகள் எட்டிப்பார்க்கின்றன. சுமார் பத்து வருடங்களுக்கு முன் மைசூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், கறுப்பர் இனத்தைச் சார்ந்த அமெரிக்கப் பெண்மணி எழுதியிருந்த நாவல் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு கிட்ட, சென்றேன். வெவ்வேறு மாநிலங்களைச் சார்ந்த சுமார் இருபது எழுத்தாளர்கள் ஒன்றுகூடி, அந்தப் புதினத்தைப் பல கோணங்களிலிருந்து வரிவரியாக ஆய்வு செய்தது தந்த நினைவுடன் ஊர் திரும்பியபோது - சக்திவாய்ந்த கேள்வி ஒன்று என்னுள் எழுந்தது. கறுப்பர் இலக்கியம், லத்தீன் அமெரிக்கர் இலக்கியம், ஐரோப்பியர் இலக்கியம் என்று உலகளவில் படைக்கப்படும் இலக்கியங்களை நன்கறிந்து விமர்சித்து, விவாதிக்கும் அளவுக்கு, இந்திய மொழிகளில் வெளியாகும் இலக்கியம் குறித்தான விழிப்புணர்வு - மக்களை விடுங்கள், பரவலாக எழுத்தாளர்களுக்கே இருக்கிறதா? நிச்சயம் இல்லை. காரணம்? இந்திய மொழிகளிடையே போதுமான மொழிபெயர்ப்புப் பரிவர்த்தனை நடக்கவில்லை என்பதுதானே?

    மேற்சொன்ன அனுபவம்தான் எனக்குள்ளே நான் அறியாமலேயே ஓர் விதையாயிற்றோ? இருக்கலாம்.

    மற்றொரு சந்தர்ப்பத்தில் சிக்கிமில் நடந்த எழுத்தாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதும், அங்கு வந்த எழுத்தாளர்களுக்குத் தமிழ்நாட்டின் இட்லி சாம்பாரும், பட்டுப்புடவைகளும் அறிமுகமாகியிருந்தனவே ஒழிய, தமிழ்க் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு குறித்தோ, தற்கால நடப்பு, இலக்கியங்கள் பற்றியோ எந்தப் பரிச்சயமும் இல்லை என்பது அப்பட்டமாக விளங்க, அந்த நிதர்சனம் என்னை மறுபடியும் கேள்வியாகத் தாக்கியது. நம்மைப்பற்றி அவர்கள் அறியவில்லை என்பது இருக்கட்டும்… மற்றவர்களைக் குறித்து நாம் என்ன தெரிந்துவைத்திருக்கிறோம்? கல்கத்தா என்றால் ரஸகுல்லாவும், ராஜஸ்தான் என்றால் சலவைக்கல்லும், கேரளா என்றால் தேங்காய்நார்ப் பொருள்களும்தானே நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும் விஷயங்கள்? உண்மையில் இந்தியர்களாகிய நாம் மற்ற மாநிலத்தாரின் இலக்கியம், பழக்கவழக்கம், சந்தோஷ துக்கங்களை எந்த அளவுக்குத் தெரிந்து கொண்டிருக்கிறோம்? அல்லது, அறிந்து, புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்?

    காசியில் வாழும் மனிதர் தன் பிள்ளைக்கு 'ராமநாத்' என்று தென்கோடி ராமேஸ்வரக் கடவுளான ராமநாதனின் பெயரைச் சூட்டுவதும், தமிழ்ப் பெண்ணுக்கு இமயமலையின் அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும் பெண் தெய்வமான வைஷ்ணவியின் பெயரை வைப்பதும், மீரா பஜன் தெற்கிற்கு வருவதும், கதக்களி டெல்லியில் பிரபலமாவதுமாக இப்படி மத, கலை, அரசியல் ரீதியாகச் சில பிணைப்புக்கள் நடந்துகொண்டிருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், இன்றைய பாரததேசத்தை இன்னும் இறுக்கமாகப் பின்னி, இறுகச் செய்ய இவை மட்டும் போதுமா? இந்தப் 'பின்னல்' முயற்சியில் இலக்கியத்தின் பங்கு என்ன? 'பல மொழிகளால் எழுதப்பட்டாலும், இந்திய இலக்கியம் ஒன்றே ஒன்றுதான்' என்று முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது இன்றைய சூழலுக்கும் பொருத்தமானதுதானா? செம்மையான படைப்புகளால் இன்றைக்கும் மக்களின் சிந்தனைகளை வளப்படுத்திக்கொண்டிருக்கும் அஸ்ஸாமின் பிரேந்திர பட்டாச்சார்யாவையும், கர்நாடகத்தின் சிவராம் காரந்தையும், வங்காளத்தின் மஹாஸ்வேதா தேவியையும் எத்தனை இந்தியர் அறிவர்? இந்த அறிமுகத்திற்கும், அதன் மூலம் கிட்டும் பெருமை கலந்த வளர்ச்சிக்கும் மொழியே ஒரு பாலமாக வேண்டாமா?

    சீறிக்கொண்டு எழுந்த மேற்சொன்ன கேள்விகள் தாம் ஒருவேளை என்னுள் விழுந்த வீரிய விதைக்கு உரமாகவும் நீராகவும் அமைந்து, அதை முளைவிட வைத்தனவோ? செடியாக, மரமாக, பேணிக் காத்தனவோ? இருக்கலாம்.

    தொடர்ந்து, 'இதுகுறித்து என்னால் ஏதும் செய்ய இயலுமா?' என்று விடாமல் யோசித்தேன்.

    பாரத தேசம் பழம்பெரும் தேசம்

    நாம் அதன் புதல்வர்...

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த

    ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

    முண்டாசுக் கவிஞர் பாரதியின் வார்த்தைகள் எனக்குத் தூண்டுகோலாக அமைய, அவற்றைச் சிரமேற்கொண்டு 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' பணியை நான்கு வருடங்களுக்கு முன் துவக்கியது இப்படித்தான்.

    இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் எட்டாம் பிரிவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பதினெட்டு மொழிகளிலிருந்தும் சில எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வழியே அந்தந்த மாநில மக்களின் கலாச்சாரம், வரலாறு, இலக்கியத்தை மற்ற இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் இத்திட்டத்தின் தலையாய நோக்கம். அந்தந்த பிராந்தியத்திலுள்ள மொழிகளில் ஆய்வு செய்து, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு என்று நான்கு தொகுதிகளாக இறுதியில் வெளியிட எண்ணம்.

    நினைத்ததைச் செயலாக்க முனைந்தபோது, நடைமுறைப் பிரச்சினைகள் - 'தனிப்பெண்ணாக மணிப்பூருக்கும் காஷ்மீருக்கும் எழுத்தாளர்களைத் தேடிச் சென்று சந்திப்பது சாத்தியமா? லட்சக்கணக்கில் தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது? ஒரு மொழிக்கான தயாரிப்பில் இருக்கும்போது, மற்ற மொழிக்கான பயணத்திலும், இன்னொன்றை மொழிபெயர்த்து எழுதுவதுமாக ஒரே சமயத்தில் மூன்று தளங்களில் இயங்குவது தனிநபரால் செய்யக் கூடிய காரியம்தானா?' என்பது போன்ற பிரச்சினைகள் - நிறையவே எழுந்தன. இவற்றோடு - 'இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி செய்யமுடியுமா?' என்ற விண்ணப்பத்துடன் மத்திய அரசையும், தேச ஒற்றுமைக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் இதர பெரிய ஸ்தாபனங்களையும் அணுகிய போது, 'நூதன, சிறப்பான திட்டம்; ஆனால், இதற்கு உதவி செய்ய எங்கள் விதிமுறையில் இடமில்லை' என்று அவர்கள் கையை விரித்தபோது - மனசு நொறுங்கித்தான் போயிற்று. நான்கு கடிதங்கள் போட்டும் பதில் எழுதாத சில எழுத்தாளர்கள், எந்த விவரத்தையும் கொடுத்துதவ முன்வராத இலக்கிய அமைப்புகள் போன்றவர்களின் மனோபாவமும்கூட என்னை பயமுறுத்தவே செய்தன. இருப்பினும், கடவுளின் ஆசிர்வாதமும், பல நல்லிதயங்களின் ஆதரவும் கிட்டியதில், கஷ்டங்களை மீறி செயல்பட முடிந்ததில், இப்போது 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' முதல் தொகுதி உங்கள் கரங்களில் தவழ்கிறது. இது மட்டுமல்லாது, கிழக்கு மொழிகளின் வேலை முடிந்து, அச்சுக்குப் போக அத்தொகுதி தயாராகிக்கொண்டிருப்பதையும், மேற்கு மொழிகளின் எழுத்தாளர்களைச் சந்திக்கும் பணி துவங்கியிருப்பதையும் உங்களுடன் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    சொந்தக் கற்பனையில் ஈடுபட்டு எழுதுவதைத் தொடர்ந்தால் கவனம் திசைதிரும்பிவிடும் என்கிற கவலையில், 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு'த் திட்டத்தைத் துவக்கிய காலமாய் கதைகள் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். இதுகுறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால் இந்த நான்கு வருடங்களில், பத்து மொழிகளில் எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேட்டியெடுத்து, அந்தந்த மாநிலங்களில் முடிந்தவரையில் பயணித்து, மக்களை, அவரவர் பழக்கவழக்கங்களைத் தெரிந்துகொண்டிருப்பது எனக்குள் உண்டாக்கியிருக்கும் விழிப்புணர்வை எண்ணிப்பார்க்கையில் - ஒருவித பிரமிப்பிற்கு வாஸ்தவமாக உள்ளாகிறேன். என்ன பேறு செய்தேன் இத்தகைய மகத்தான அனுபவங்களைப் பெற என்று நெகிழ்ந்துபோகிறேன். முடிந்தவரையில் எனக்குக் கிட்டிய அறிவை, ஞானத்தை, உணர்ச்சியை, சீக்கிரமே என் பாரதநாட்டு மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற பரபரப்பு என்னை ஆக்ரமிப்பதை உணர்கிறேன்.

    ஒவ்வொரு மொழியிலும் தகுந்தவர்களைத் தேர்ந்தெடுக்க நான் மேற்கொண்ட வழியை இங்கு வெளிப்படுத்துவது அவசியமாகிறது. ஆங்காங்கு இருக்கும் இலக்கிய அமைப்புகள், பத்திரிகை அலுவலகங்களுக்கு அந்த மாநிலத்தின் முக்கியப் படைப்பாளிகளை இனம்காட்டும்படி எழுதியதற்கு வந்த பதில்களில், பொதுவாகக் காணப்படும் பெயர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு கடிதத்தொடர்பு கொண்டு, நேரில் சென்று பேட்டியெடுப்பதைப் பின்பற்றியதில், தகுதியான இலக்கியக்கர்த்தாக்களைக் கொண்டே இந்த இலக்கியப்பாலம் கட்டப்பட்டுவருகிறது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். முடிந்தவரையில் இளைய தலைமுறையினரின் கண்ணோட் படத்தையும் சேர்க்க முயற்சித்திருக்கிறேன்.

    இதுவரை நான் சந்தித்த மூத்த எழுத்தாளர்களில் சிலர், ஆயிரம் பிறை காளக்கண்டவர்கள்; ஓரிருவர் 90 வயதைத் தாண்டியவர்கள். அப்படியும் என்ன நினைவாற்றல், என்ன நிதானம், பேச்சில் என்ன தெளிவு! எல்லா வசதிகளும் காப்பாக இருந்திருப்பின், அத்தனை பேட்டிகளையும் 'வீடியோ'வில் பதிவு செய்திருப்பேன்... கட்டாயம்! தற்சமயம் போட்டோ, 'டேப்'பில் பதிவு என்பதோடு நிறுத்தவேண்டிவருவதில் எனக்குக் குறைதான். அதுவும், மலையாள மொழியின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீரை, நோய்வாய்ப்பட்டிருந்தபோதும் அந்த வேதனையை மறந்து கண்களில் சிரிப்பு வெளிச்சம் போட குறும்புடன் பேசிய பஷீரை - கடைசியாக நீண்ட பேட்டியெடுத்தது நான்தான், அதன்பின் சில மாதங்களில் அவர் மறைந்துவிட்டார் என்பதை நினைக்கும்போது, அத்தகைய 'நடமாடும் அறிவுப்பெட்டகங்களை' ஒளிநாடாவில் பதிவுசெய்யாதது என் குறையை அதிகரிக்கச் செய்கிறது.

    இத்தொகுப்பில் வெளியாகியுள்ள உரையாடல்களில், எழுத்தாளர்களின் கருத்துக்களை, பதிவுசெய்யப்பட்ட பேட்டிகளிலிருந்து முழுக்கமுழுக்க அவரவர் வார்த்தைகளையே உபயோகித்து எழுத முயற்சித்திருக்கிறேன். சில எழுத்தாளர்களின் தனிப்பட்ட, முரண்பட்ட கருத்துக்களுக்குக்கூட மறுபக்கம் உண்டு என்பதால், கூடுமானவரையில் எதிர்கருத்துக்களையும் சேகரித்து வெளியிட்டிருக்கிறேன். அப்படியும் குறிப்பிட்ட சில விமர்சனங்களுக்கு விளக்கம் கிட்டாததற்கு, பலமுறைகள் தொடர்புகொண்டும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பேட்டிக்கான நேரத்தை ஒதுக்காததுதான் காரணம்.

    ஒரு மொழியில் பேட்டிகள் தொடங்குவதற்கு முன் அந்த மாநிலத்தைப் பற்றிய சின்ன பயணக்கட்டுரை இடம்பெறுகிறது. இயந்திரகதியில் வாழ்ந்து, எதையும் தேடிப்படிக்கக்கூட அவகாசமின்றி ஓடிக்கொண்டிருக்கும் சராசரி இந்தியருக்கு மற்ற மாநிலத்தில் வாழும் சக இந்தியர்களை அறிமுகப்படுத்தி வைப்பது இத்திட்டத்தின் நோக்கமாதலால், அவர்களை இலக்கியப் பேட்டிகளுக்குள் இழுக்கும் முயற்சியாக இப்பயணக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். பேட்டிகளையும், அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புகளையும் படித்தபின், அந்த மாநிலத்தை, அதன் மக்களை, அந்த மொழியை, அதன் இலக்கியத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் வாசகர்களில் ஒருசிலருக்கு உண்டானால்கூட, இத்திட்டத்தை மேற்கொண்டதற்கான பலனை நான் தொட்டுவிட்டதாக மகிழ்வேன்.

    'ஊர் கூடித் தேர் இழுப்பது' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்தத் திட்டம் அதற்குச் சரியான சான்றாகிறது. தனிநபராக நான் செயல்பட்ட போதும், எனக்குத் தோள்கொடுக்க எழுத்தாளர்களும், இன்னும் பலரும் முன்வரவில்லை என்றால், 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்கிற என் ஆசை கானல் நீராகவே இருந்திருக்கும்.

    'சரி, இப்படி நான்கு தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் இந்திய ஒற்றுமை குறைவின்றி தழைத்துவிடும் என்று வாஸ்தவமாக நினைக்கிறாளா?' என்ற சந்தேகம் பலருக்கு எழலாம். இல்லை... அப்படியொரு அசாதாரண எதிர்பார்ப்பு கண்டிப்பாக என்னிடம் இல்லை. 'போய்ச் சேரவேண்டிய தூரம் அதிகம்; இதில் முதல் சில அடிகளை எடுத்துவைக்க இந்த முயற்சி உதவவேண்டும்' என்பதுதான் என் விருப்பம். இங்கு ராமாயணத்திலிருந்து ஓர் இடத்தைச் சுட்டிக்காட்ட எண்ணுகிறேன். அனுமன் போன்று மிகப்பெரிய அளவில் உதவமுடியாதபோதும், அணில்கள் தண்ணீரில் முங்கி, மணலில் புரண்டு, சேது அணை கட்டுமிடத்திற்குச் சென்று உடம்பை உதறி, பாலம் கட்ட தங்களாலான உதவியைச் செய்த விவரம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படியொரு சின்னஞ்சிறு அணிலாக இருந்து, என்னளவில் பாரததேசத்தை இன்னும் உறுதியாகப் பின்னுவதற்கு இழைகளை நெய்யும் முயற்சிதான் இந்த 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு'த் திட்டம்.

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

    இருந்ததும் இந்நாடே – அதன்

    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

    முடிந்ததும் இந்நாடே - அவர்

    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

    சிறந்ததும் இந்நாடே - இதை

    வந்தனை கூறி மனதில் இருத்திஎன்

    வாயுற வாழ்த்தேனோ? இதை

    'வந்தே மாதரம், வந்தே மாதரம்'

    என்று வணங்கேனோ?

    - மகாகவி பாரதி.

    வணக்கம்.

    சிவசங்கரி

    மே,1997

    சென்னை

    ***

    என்னுரை - 2

    நான்கு தொகுதிகளைக் கொண்ட 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' பணியின் தென்னிந்திய மொழிகளைப் பற்றிய முதல் தொகுப்பை 1998ல் வெளியிட்டபோது இல்லாத தயக்கம், பயம், இப்போது கிழக்கிந்திய மொழிகளைக் குறித்தான இரண்டாம் தொகுப்பை வெளியிடும் தருணத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை என்னைப் பீடித்திருக்கிறது! தென்னிந்திய மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய நான்குடனும் நினைவு தெரிந்த நாள் முதல் பரிச்சயம் இருந்ததோடு, வருடா வருடம் விடுமுறைக்கு அண்டை மாநிலங்களிலுள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்வதைப் பழக்கமாக்கிக்கொண்டிருந்ததில், திருவனந்தபுரத்திற்கோ, பெங்களூருக்கோ, ஹைதராபாத்துக்கோ எழுத்தாளர்களைச் சந்திக்கவெனச் சென்றதும், தங்கியதும், எனக்குள் எவ்வித சங்கடத்தையும் உண்டுபண்ணவில்லை.

    ஆனால் கிழக்கு மொழிகளின் ஆய்வுக்காக நான் மேற்கொண்ட பயணங்கள், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட தடுமாற்றத்தைப் பலமுறை எனக்குள் தோற்றுவிக்கவே செய்தன. மொழி புதுசு, ஊர் புதுசு, உணவுப் பழக்கவழக்கங்கள் புதுசு - என்று சாதாரணமாக எல்லோரும் சிரமமாகக் கருதும் விஷயங்களின் நீண்ட பட்டியலைவிட, சில எழுத்தாளர்களை ஆங்கிலத்தில் பேட்டிகாண்பதில் எழுந்த சிக்கல்கள், வித்தியாசமான உச்சரிப்போடு இருந்த பேட்டிகளை ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகலெடுப்பதற்குள் உண்டான சந்தேகங்கள், கேள்விக்கான பதில் முழுமையாக இல்லை என்ற உணர்வில் மீண்டும் டார்ஜீலிங் அல்லது இம்ஃபாலில் உள்ள எழுத்தாளர்களோடு தொடர்புகொண்டு, அவர்களுக்கு வசதிப்படும் நாளில் சென்னையில்லிருந்து வெகு தொலைவிலுள்ள அந்த ஊர்களுக்கு மறுபடியும் சென்ற பயணங்கள் - என்று நடைமுறையில் எழுந்த பிரச்சினைகளை சமாளிப்பதற்குள் நான் திண்டாடித்தான் போனேன்!

    ஒரு மொழி சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சேகரிப்பது (Spade Work); குறிப்பிட்ட படைப்பாளிகளுடன் தொடர்புகொண்டு, அவரவர் இருப்பிடங்களுக்கே சென்று பேட்டியெடுப்பது (Field Work); சென்னைக்கு வந்த பிறகு 15 - 20 ஒலிநாடாக்களிலிருந்து எழுத்தில் நகலெடுத்து, அவற்றை எடிட் செய்து எழுதுவது (Editing and Writing) - என்று பிரதானமாய் மூன்று தளங்கள் கொண்ட இப்பணியில், ஒலிநாடாவிலிருந்து எழுத்தில் நகல் (Transcribing) எடுப்பதற்கு மட்டும் நான் மற்றவர்களின் உதவியை நாடுகிறேன். தென்னிந்திய மொழிகளோடு பரிச்சயம் இருந்த காரணத்தால் சீக்கிரமே நகலெடுத்துத் தந்தவர்களால், கிழக்கிந்திய மொழி எழுத்தாளர்களின் பேட்டிகளை எளிதில் நகலெடுக்க இயலவில்லை. உச்சரிப்பு மட்டுமின்றி, பெயர்கள், சம்பவங்கள், இலக்கியங்கள் என்ற அனைத்துமே இங்குள்ளவர்கள் அதிகம் கேள்விப்படாமல் இருந்ததில், 'எழுத்தில் நகலெடுப்பது சாத்தியமில்லை' என்று சிலர் ஒலி நாடாக்களைத் திருப்பித் தந்ததும்கூட நடந்தது. புது நபர்களைத் தேடி, என் குறிக்கோளை விளக்கி, ஒருவழியாய் பணியை நிறைவேற்றுவதற்குள் முழுசாப் ஒரு வருடம் ஓடிப்போய்விட்டது. (இந்தப் பிரச்சினை மேற்கு, வடக்கு மொழிகளை ஆய்வு செய்யும்போதும் கண்டிப்பாய் தலையெடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்!)

    இத்தனை பிரச்சினைகள் இருந்தபோதும், 1999-ல் வெளியாகியிருக்க வேண்டிய இரண்டாம் தொகுப்பை, 2000-வது ஆண்டிலாவது என்னால் இயன்ற அளவுக்குச் செம்மையாக வெளிக்கொணர முடிந்ததே என்கிற சந்தோஷம் இந்த நிமிடம் என் நெஞ்சை முழுமையாய் நிறைப்பது நிஜம்.

    அது என்ன 'இயன்ற அளவுக்கு?' என்று உங்களில் சிலர் கேள்வி எழுப்பக்கூடும். இதோ விளக்கிவிடுகிறேன். முடிந்தவரையில் சந்தேகங்களை மீண்டும் கண்டும் கடிதத்தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொண்ட போதிலும், சில படைப்பாளிகள் வெளியூர், வெளிநாடு போய்விட்டதாலும், சிலரிடமிருந்து பதில் குறித்த நேரத்தில் வராததாலும், ஓரிரு இடங்களில் என்னையும் மீறி சில விவரங்கள் தவறாக அச்சேறியிருக்கலாம். தவிர, பெயர்கள், தேதிகள், இத்யாதிகள் ஒவ்வொரு குறிப்பில் ஒவ்வொரு தினுசாகக் காணப்படுவதும்கூட நான் தவறான விவரத்தை வெளிபிடக் காரணமாகக்கூடும். ஹூக்ளி நதியின் பெயர் Hugly என்று ஒரு குறிப்பேட்டிலும், Hoogly என்று இன்னொன்றிலும்; சுந்தர்வனத்தின் (Sundarbans) விஸ்தீரணம் 9630 சதுர கி.மீ. என்று ஒரு கையேட்டிலும், 2608 சதுர கி.மீ. என்று மற்றதிலும்; சாந்திநிகேதன் பள்ளி 1901-ல் தாகூரால் துவக்கப்பட்டது என்று ஓர் இடத்திலும், 1890-ல் பிரும்ம வித்யாலயம் கவியரசரால் ஆரம்பிக்கப்பட்டது என்று வேறொன்றிலும் - காணப்படுவதைச் சில உதாரணங்களாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

    சரியாகத் தொடர்புகொள்ள முடியாமல்போனதில், முக்கியமான படைப்பாளிகள் சிலரின் நேர்காணல் இத்தொகுதியில் இடம்பெறாதது எனக்கு ஒரு குறைதான். ஞானபீடப் பரிசு பெற்ற ஒரியக் கவிஞர் திரு. சீதாகாந்த் மகாபாத்ராவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியும், ஏனோ அவருடன் என்னால் தொடர்புகொள்ள இயலவில்லை. விலாசம் தவறாக இருந்து கடிதங்கள் அவரைச் சென்றடையாததைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

    கிழக்கிந்திய மொழிகளுக்கான ஆய்வைத் துவங்கி, புத்தகம் வெளியாகும் வரையிலான இடைப்பட்ட வருடங்களில் என்னென்ன இழப்புகள், மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன! கெளஹாத்தியிலும் டார்ஜிலிங்கிலும் அன்போடு என்னை வரவேற்று, பேட்டி அளித்து, தம் வீட்டிலேயே உணவருந்தச் செய்து, குடும்பத்து அங்கத்தினர்களை அறிமுகப்படுத்திக் குதூகலித்த திரு. பிரேந்திர பட்டாச்சார்யா, திரு. ஜகத் செத்ரி ஆகியோர், இன்று நம்மிடையே இல்லை. மிகுந்த உற்சாகத்தோடு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறி என்னை ஊக்குவித்த திரு. சுபாஷ் முகோபாத்யாயவினால், தற்சமயம் பலகையில் எழுதிக் காட்டத்தான் இயலுகிறது! இழப்புகளின் சோகம் மனதைக் கவ்வினாலும், கூடவே, அவர்கள் நன்றாக இருந்தபோது பேசி, கேட்டு உரையாடிய அதிர்ஷ்டம் எனக்கிருந்ததை நினைத்து நிறைவும் தோன்றுகிறது.

    மற்றபடி, எனக்குத் தெரிந்தவரையில், முடிந்தளவில், நேர்மையான முறையில் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் முழு ஒத்துழைப்போடு இத்தொகுப்பு தரமான படைப்பாக வெளிவந்திருப்பது, நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளிகளாக மறையச் செய்துவிட்டது. .

    ஞானபீட விருது பெற்ற திரு. எம். டி. வாசுதேவன் நாயர் அவர்களின் முன்னுரை, இத்தொகுப்புக்குக் கிடைத்த ஆபரணம், உயர்ந்த பெருமை. அவரையும், இத்தொகுப்பை சாத்தியமாக்கிய அனைத்து நபர்களையும், இத்தருணத்தில் நெகிழ்ச்சியோடு நினைத்துக்கொள்கிறேன்.

    'அரைக்கிணறு வெற்றிகரமாய்த் தாண்டிவிட்டாய், இன்னும் பாதிதானே! அயர்ந்து உட்காராமல் மற்ற இரண்டு தொகுப்புகளையும் சீக்கிரம் முடித்துவிடு!' என்று குரல் கொடுக்கும் என் ஆன்மாவுக்கு, வலிமையும், மனஉறுதியும் அதிகம். அதுவே, மேற்கு, வடக்கு தொகுப்புகளின் வேலைகளில் என்னை உற்சாகமாக ஈடுபடவைக்கும்... உறுதியாய்!

    சிவசங்கரி

    சென்னை

    31-3-2000

    ***

    தேர் இழுக்க வடம் பிடித்து உதவியவர்கள்

    இறைவன்

    துவக்கத்திலிருந்து அனைத்து சிந்தனை, செயல்பாடுகளிலும் கூடவே இருப்பவர்

    திரு. ஏ. கே. மூப்பனார்

    'சிவசங்கரியின் வெற்றியை என் வெற்றியாக எண்ணி மகிழ்வேன்' என்று துவக்க விழாவில் பெருமிதத்துடன் கூறியதுடன், ஒவ்வொரு கட்டத்திலும் உற்சாகம் கொடுத்து என் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்தவர்.

    திரு. என். நாராயணன் (சேர்மன், இந்தியன் சின்டான்ஸ் லிமிடெட்), திருமதி மீனா நாராயணன்

    'உங்கள் முயற்சிக்கு எங்களாலான உதவி' என்று கூறி, கிழக்கிந்தியப் பயணங்களுக்கான செலவை ஏற்க முன்வந்த இனிய நண்பர் தம்பதி.

    திரு. எம். கோபாலகிருஷ்ணன் (முன்னாள் சேர்மன், இந்தியன் வங்கி)

    'இலக்கியததின் வளர்ச்சியில் இந்தியன் வங்கிக்கும் பங்குண்டு' என்று சொல்லி வங்கி சேர்மனாக இருந்த சமயத்தில் முதல் தொகுப்புக்கு நிதி உதவி செய்ததோடு, கல்கத்தா, ஸிலிகுரி, டார்ஜீலிங், கெளஹாத்தி ஆகிய இடங்களிலுள்ள இந்தியன் வங்கியின் கிளை அலுவலகங்கள் மூலம் என் பயணங்களை பாதுகாப்புடன் திட்டமிட உதவியவர்.

    திருமதி. உமா சந்தானராமன், திரு. சந்தானராமன் (மேலாளர், கல்கத்தா), திரு. தோப்ப (ஸிலிகுரி கிளை), திரு. பிரதான், திரு. பாக்சி (டார்ஜீலிங்), திரு. விஜயகுமார், திரு நாகராஜன், திரு. ரிங்கே ஃபோனிங், திரு. பாலு (கௌஹாத்தி).

    மொழி புரியாத அஸ்ஸாம், டார்ஜீலிங் பகுதிகளில் எழுத்தாளர்களைச் சந்திக்கவும் ஊரைச் சுற்றிப்பார்க்கவும் உதவிய இந்தியன் வங்கி அதிகாரிகள்.

    திருமதி ஜெயந்தி நடராஜன் (முன்னாள் மத்திய அமைச்சர்)

    'உங்கள் அரிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்' என்றதோடு நிற்காமல், இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் உதவியவர்.

    திரு. வீரராகவன் (முன்னாள் ஐ.ஜி.பி., காவல்துறை, தமிழ்நாடு)

    'தனிப்பெண்ணாக மணிப்பூருக்குச் செல்வது அபாயமானது' என்று பலர் பயமுறுத்தியதை ஒதுக்கி, மணிப்பூர் போலீஸுக்குத் தகவல் தந்து, பாதுகாப்புடன் என் பணி நிறைவேறக் காரணமானவர்.

    திரு. மகேஷ் ஷர்மா (டி.ஜி.பி. மணிப்பூர்)

    பர்மா எல்லைவரை சென்று, நினைத்த விதத்தில் சாதாரண மக்களைச் சந்தித்து, மாநிலத்தின் நாடித்துடிப்பை உணர உதவியவர்.

    பாரதிய பாஷா பரிஷத் (கல்கத்தா)

    இலக்கியம் குறித்துத் தேவையான விவரங்களைத் தந்து, சில எழுத்தாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொடுத்த இலக்கிய ஸ்தாபனம்.

    திரு. பி.டி. சுரேகா, திருமதி பகவதி சுரேகா

    'என்னுடைய இன்னொரு இல்லம்' என்று நினைக்குமளவுக்குத் தங்குமிடம், போக்குவரத்துக்கு வண்டி என்று சகலத்தையும் தந்த தம்பதி. கல்கத்தாவை எனது முக்கிய தளமாகக் கொண்டு அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவருவதை சாத்தியமாக்கிய நல்லிதயம் கொண்ட நண்பர்கள்.

    திருமதி குஸும் கெமானி

    கிழக்கு மொழிகள் குறித்தான ஆய்வுக்குப் பல விதங்களிலும் உதவிய இனிய சினேகிதி.

    இந்தியன் ஏர்லைன்ஸ்

    எழுத்தாளர்கள் சந்திப்புக்காக நான் கிழக்கிந்தியாவில் பயணிக்க இலவசப் பயணச்சீட்டு தந்தவர்கள்.

    திரு. எம்.டி. வாசுதேவன் நாயர்

    சுருக்கமான, ஆனால் அர்த்தம் நிறைந்த முன்னுரையை இப்புத்தகத்திற்கு அணிகலனாக அணிவித்த உயர்ந்த, சிறந்த எழுத்தாளர், இனிய நண்பர்.

    எழுத்தாளர்கள்

    பேட்டிக்கு ஒப்புக்கொண்டு, எந்தக் கேள்விக்கும் முகம் சுளிக்காமல் பதிலளித்து, சினேகத்தோடு பழகியவர்கள்.

    கதை, கவிதை, கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தந்துதவியவர்கள்.

    திரு. சச்சிதானந்தன் (செயலர், மத்திய சாகித்ய அகாடமி)

    மத்திய சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரைகளை இத்தொகுப்பில் சேர்க்க அனுமதித்தவர்.

    திரு. பி.சி. ராமகிருஷ்ணா

    'உங்கள் இலக்கியப்பணி குறித்துக் கேள்விப்பட்டேன். இதில் எந்த விதத்தில் நான் உதவ முடியும்?' என வலிய வந்து கேட்டு, ஒலிநாடாக்களிலிருந்து பல பேட்டிகளை எழுத்தாக்கம் செய்து தந்தவர்.

    திரு. கிருஷ்ணமூர்த்தி (உதவி ஆசிரியர், சாகித்ய அகாடமி, சென்னை)

    கடந்த பல வருடங்களில் இலக்கியம் குறித்து எனக்குத் தேவையான விவரங்களை அவ்வப்போது தந்து பெரியளவில் உதவியவர்.

    திரு. மாலன்

    இந்த முயற்சி மக்களைச் சென்றடையவேண்டும் என்ற ஆர்வத்தில், 'தினமணி'யின் ஆசிரியராக இருந்தபோது அஸ்ஸாம், நேபாளப் பேட்டிகள் 'சுடர்' இதழில் வெளிவரக் காரணமானவர்.

    திரு. தோட்டா தரணி

    இந்திய மொழிகளிலுள்ள எழுத்துக்களைக் கொண்டு இப்புத்தகத்தின் மேலட்டையை அற்புதமாக உருவாக்கிக் கொடுத்தவர்.

    எம்.சி.எஸ். கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

    ஒவ்வொரு மாநிலத்தின் வரைபடத்தையும், பொருத்தமான படங்களையும் கொண்ட வண்ணப்பக்கங்களை உருவாக்கித் தந்தவர்கள்.

    வானதி பதிப்பகம்

    இப்புத்தகம் அழகுற உருவாகக் காரணமானவர்கள்.

    திருமதி லலிதா வெங்கடேஷ்

    இத்திட்டத்தின் 'கரு' உருவான நாளிலிருந்து, இத்தொகுதி புத்தகமாய் வெளியாகும்வரை சகலவிதத்திலும் - புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்துவந்து குறிப்பு எடுப்பது, அவசியமானால் மொழிபெயர்ப்பது, வெளியூர்ப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்வது, எழுதிய கட்டுரைகளைத் தொகுப்பது, அச்சுப்பிழை திருத்துவது என்று அனைத்தக் காரியங்களிலும் - எனது வலதுகரமாய் செயல்பட்டவர்.

    என் குடும்பத்தார்

    கண்களில் பெருமையும் சந்தோஷமும் வெளிச்சம்போட எனக்கு ஊக்கம் தந்தவர்கள்.

    என் வாசகர்கள்

    'ஏழு வருடங்களாக நீங்கள் கதைகள் எழுதாதது குறையாக இருப்பினும், எடுத்துக்கொண்ட காரியத்தை நல்லவிதமாய் முடியுங்கள், நாங்கள் காத்திருக்கிறோம்' என்று அன்போடு கூறியவர்கள்.

    இவர்களைத் தவிர, இப்புத்தகத்தை உருவாக்க ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், உறுதுணையாய் நின்ற நண்பர்களுக்கும், நெகிழ்ந்த நெஞ்சோடு , மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சிவசங்கரி

    ***

    அஸ்ஸாம்

    அஸ்ஸாம்

    இந்திய-ஆர்யக் கலப்பில் உருவான மொழிகளில் ஒன்றான அஸ்ஸாமியமொழி, பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் வசிக்கும் சுமார் ஒரு கோடி மக்களால் தாய்மொழியாக ஏற்கப்பட்ட பாஷை. 1228-ம் ஆண்டில், 'தாய்' அல்லது 'ஷான்' என்று தங்களை அழைத்துக்கொண்ட இனத்தவர் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கின் மேல் படையெடுத்து அதை ஆக்ரமித்தபோது, ஏற்கனவே அங்கு வசித்துவந்த மண்ணின் மைந்தர்கள், அந்நியர்களை 'அஸ்ஸாமியர்கள்' என்று குறிப்பிட்ட நாளடைவில் அந்தப் பிரதேசமும் அங்கு வாழும் மக்களுமே அஸ்ஸாம், அஸ்ஸாமியர்கள் என்று அழைக்கப்படலானார்கள். ஸர் ஜி.ஏ. க்ரீபர்ஸனின் கணிப்புப்படி, இன்றைக்கு வழக்கிலிருக்கும் கிழக்கு மொழிகளான அஸ்ஸாமிய மொழி, பெங்காலி, ஒரியா அனைத்துமே, விதேகம், மகதத்திலிருந்து வந்த 'மகதி' மொழியிலிருந்து ஜனித்தவைதாம்.

    'காமரூப்' என்று அழைக்கப்பட்ட பண்டைக்காலப் பிரதேசத்தை இந்து மன்னர்கள் ஆண்டபோது எழுதப்பட்ட செப்புத் தகடுகளும், ஏழாம் நூற்றாண்டில் விஜயம் செய்த ஹுவான் ஸாங் (Hieun Tsang) என்ற சீன யாத்ரீகரின் ஸியூகி (Si Yu Ki) என்ற குறிப்புகளும், அஸ்ஸாமிய மொழியின் தொன்மைக்கு சாட்சி கூறுவதாக உள்ளன.

    தற்கால அஸ்ஸாமிய மொழிக்கு, மேற்கில் பேசப்பட்ட காமரூபியும், கிழக்கில் புழக்கத்திலிருந்த வட்டார மொழியும் அடியோட்டங்களாக இருந்த போதும், இன்றைய பொது அஸ்ஸாமிய மொழியின் வளர்ச்சி / வீழ்ச்சிக்கு, வரலாற்று நிகழ்ச்சிகள் முக்கியக் காரணங்களாகின்றன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

    பதினேழாம் நூற்றாண்டுவரை மிகுந்த அதிகாரங்களோடு ஆட்சிபுரிந்து கொண்டிருந்த 'கோச்' அரசு வலிமையிழக்க முற்பட்டதும், அதுவரை பிராந்திய மொழி, இலக்கியங்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த முக்கியத்துவம், கிழக்கு அஸ்ஸாமில் அதிகாரத்திலிருந்த 'அஹோம் கோர்ட்'டுக்கு மாற்றப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அஸ்ஸாம், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுமைக்கு வந்து, ஸிப்ஸாகர் என்ற இடத்தைத் தங்கள் நடவடிக்கைகளின் மையமாக ஆங்கிலேயர்கள் தேர்ந்தெடுத்தபிறகு, அந்தப் பிரதேசத்தில் வழக்கத்திலிருந்த வட்டார மொழி பிரதானம் பெறத் துவங்கி, கிழக்கு அஸ்ஸாமிய மொழி எல்லா விதத்திலும் மேன்மையுள்ள பொது மொழியாகவே அனைவராலும் ஏற்கப்பட்டு, இன்றைய நிலையில் அஸ்ஸாமில் மட்டுமல்லாது, மேகாலயா, நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் பரவலாகப் பேசப்படும் மொழியாக இருக்கிறது.

    இப்போதைக்கு மொழியைப் பற்றின விளக்கங்கள் இத்தனை போதும். இனி, அஸ்ஸாமுக்கும் மேகாலயாவுக்கும் சென்று, அப்பிரதேசங்களை எட்டிப்பார்த்து, அங்கு வாழும் மக்கள், அவர்களின் பழக்கவழக்கங்களையும் கொஞ்சம் அறிமுகப்படுத்திக்கொள்ளலாம்.

    'கிழக்கின் ஒளிவிளக்கு' என்றும், இந்தியாவின் 'ஷாங்க்ரி லா' என்றும் போற்றப்படும் அஸ்ஸாம் மாநிலத்தின் அந்நாளைய பெயர், 'காமரூபம்'. காம தேவனான மன்மதன், தனது இழந்த அழகான உடலை மீண்டும் பெற்ற ஸ்தலம் என்பதால் இப்பெயர். இதனாலேயே, அஸ்ஸாமின் தலைநகராக விளங்கும் (இந்நகரம் நரகாசுரனால் நிர்மாணிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்) கௌஹாத்தியில் இருக்கும் புகழ்பெற்ற 'காமாக்யா' கோவிலின் சரித்திரத்தை சுருக்கமாக அறிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்..

    இமயத்தை ஆண்ட தக்ஷன் மிகப்பெரிய அளவில் யாகம் செய்ய முனைந்து, அதற்கு மருமகன் பரமேஸ்வரனை அழைக்காமல் அலட்சியம் செய்து விட்டபோதும், பிறந்த வீட்டுப் பாசம் போகாத பார்வதி மட்டும் தனித்து வர, பொது இடத்தில் மறுபடியும் கணவனை, பெற்றவர் கேவலப்படுத்தியது தாளமுடியாமல்போக, வேள்வித்தீயில் பாய்ந்து அம்மை தன்னை மாய்த்துக் கொள்கிறாள். சோகத்தில் மூழ்கும் ஈஸ்வரன், இறந்துபோன மனைவியின் சடலத்தைத் தூக்கிக்கொண்டு பைத்தியம்போல அலைய, ஸம்ஹார வேலைகள் தடைபட்டுப்போனதில் மகாவிஷ்ணு தனது சுதர்ஸனச் சக்கரத்தை ஏவி, பார்வதியின் சடலத்தைக் கண்டதுண்டமாக வெட்டி அழிக்கச் செய்கிறார். அப்படி வெட்டப்பட்ட பார்வதியின் 'யோனி', நீலமலை என்ற பர்வதத்தின் குகைக்குள் விழுந்துவிடுகிறது. மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிடும் ஈசனைக் கவர மன்மதன் பாணம் எறிந்ததும், கோபமுறும் சிவன் அவனை எரித்ததும், ரதியின் கெஞ்சலுக்கு மனமிறங்கி மன்மதனுக்கு அரூபமாய் உயிர்ப்பிச்சை அளித்ததும் ஊரறிந்த கதை. ஆனால், அழகான உடம்பு மறுபடியும் கிட்ட பார்வதியின் 'யோனி' விழுந்த 'காமாக்யா' இடத்தில் மன்மதன் தவம் செய்ததாகவும், காமதேவன் மறுபிறப்பு பெற்றதால் அப்பிரதேசம் 'காமரூபம்' என்று பண்டைக்காலத்தில் அழைக்கப்பட்டதாகவும், அந்நகர மக்களும் கோவில் ஸ்தல புராணமும் கூறுவது, என்னைப் பொறுத்தவரை இதுவரை நான் அறிந்திராத புதுக்கதை.

    கௌஹாத்தியில் காமாக்யாவைத் தவிர உமாகந்தர், நவக்கிரகம், வஸிஷ்டர் என்று பல தெய்வங்களுக்குக் கோவில்கள் உள்ளன. எல்லாம் நிறைய அழுக்கு, புராதனத் தோற்றத்தோடு காட்சியளிக்கின்றன. காமாக்யாவைப்பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததில், மிகுந்த ஆர்வத்தோடு சென்ற எனக்கு, கர்ப்பக்கிருகத்தில் அன்று பலி கொடுக்கப்பட்ட ஆட்டின் தலை மட்டும் கண்களைப் பரிதாபமாக விரித்தபடி சிலைக்கு வெகு சமீபத்தில் இருந்ததைப் பார்த்தது, நிஜமான அதிர்ச்சி!

    ஏழு சகோதரிகள் என்று செல்லமாக அழைக்கப்படும் அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், இமாசலப் பிரதேசம் மாநிலங்கள், இயற்கை அழகிற்கும் வனத்திற்கும் பெயர் போனவை என்பதால், அக...ண்டு கண்ணுக்கெட்டிய தூரம்வரை, அக்கரை தென்படாத பிரம்மபுத்ரா நதியிலிருந்து, அடர்ந்த காடுகள், வெல்வெட் பச்சையில் விரிந்திருக்கும் டீத்தோட்டங்கள், மலைத்தொடர்கள், அவற்றில் விளையாடும் மேகக்கூட்டங்கள் என்று எதைப் பார்த்தாலும் ரமிக்கும் விதத்தில் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால், இத்தனை செழிப்பான பூமியில், மூக்கில் விரலை வைக்கும்படியாக அந்தந்த மாநிலத்தவர் ஏனோ எதுவுமே செய்யவில்லையென்பது வருத்தமான விஷயம். விசாரித்தால், 'நாங்கள் என்ன செய்வது மத்திய அரசு எங்களை மாற்றாந்தாய் மனோபாவத்துடன்தானே கவனிக்கிறது? எங்கள் மேல் அக்கறை கொண்டு திட்டங்களைத் தீட்டாதபோது, நாங்கள் என்ன செய்ய?" என்கிறார்கள் ஒருவர் விடாமல்.

    இந்தக் காரணம் வாஸ்தவமாகவே இருப்பினும்கூட, கிழக்கிலிருக்கும் மக்கள் பொதுவாகக் கடின உழைப்புக்குத் தயாராக இல்லாமலிருப்பதும் ஒரு முக்கியக் காரணம் என்கிற கருத்தை, அங்கு பிழைக்கப்போன பலர் என்னிடம் கூறவே செய்தார்கள். இக்கருத்து ஓரளவுக்கு சரியானதுதானோ என்று நான் என்னும் வகையில் சில அனுபவங்களும் கிட்டவே செய்தன. காரைபுரணடு ஓடும் பிரம்மயுத்ரா கைக்கெட்டிய தொலைவில் இருக்க, யோகா 'கௌஹாத்தி நகரில் சில இடங்களில் தண்ணீர்ப்பஞ்சம் உண்டு' என்று உள்ளுர்வாசி என்னிடம் குறைப்பட்டுக்கொண்டபோது, மேற்சொன்ன குற்றசாட்டை நம்பாமல் எப்படி இருப்பது! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், அல்லவா?

    கிழக்கு மாநிலங்களின் பல நகரங்களில் வசிப்பவர்களுக்குக்கூடத் தெளிவான விலாசங்கள் கிடையாது என்பது, என்னை வியப்பிலாழ்த்திய இன்னொரு விஷயம். பல தெருக்களுக்குப் பெயர்கள் சூட்டப்பட வில்லை. வீடுகளுக்கு ஏனோதானோவென்ற விதத்தில் எண்கள். உதாரணத்திறகு ஞானபீடப் பரிசு வாங்கிய எழுத்தாளரான திரு. பிரேந்திரகுமார் பட்டாச்சார்யாவின் விலாசத்தையே எடுத்துக்கொள்ளலாம்... 'டாக்டர் பி.கே. பட்டாச்சார்யா, கர்குலி, கௌஹாத்தி' என்பது அவர் கடிதத்திலிருந்த விலாசம். இதை வைத்துக்கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டேன். கர்குலி என்பது ஒரு குட்டி மலை. இங்கொன்றும் அங்கொன்றுமாய் வீடுகள். தெருப்பெயர் இல்லாததால் சில கடைகளில் விசாரித்து, சில வீடுகளில் கேட்டறிந்து, ஒருவழியாய் அவர் வீட்டைக் கண்டுபிடிக்க ஒரு முழு மாலைப்பொழுதும் செலவாயிற்று. இந்தியன் வங்கியைச்சார்ந்த விஜயகுமார், அஸ்ஸாமிய மொழி தெரிந்தவர், என்னோடு வந்திருந்தாரோ, நான் பிழைத்தேனோ! இல்லாவிட்டால், திண்டாடித்தான்போயிருப்பேன்! பிரபலமான நபரைச் சந்திக்கவே இத்தனை சிரமம் என்றால், சாதாரணர் வீட்டுக்குப் போவது எப்படி? எனக்குப் புரியவில்லை. அஸ்ஸாமில் மட்டுமல்லாது மணிப்பூரிலும் இந்தக் கஷ்டத்தை நான் நிறையவே அனுபவித்தேன். 'எங்கள் மாநிலங்களில் மக்கள் தொகை கம்மி... ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர் என்பதால், விசாரித்தாலே தெரிந்துவிடும். எனினும், நகரச் சீரமைப்புத் திட்டத்தின்கீழ் இந்தப் பிரச்சினைகள் கவனிக்கப்பட்டுவருகின்றன. விரைவில் சரியாகிவிடும்' என்கிறார்கள், நான் சந்தித்த எழுத்தாளர்களில் சிலர், தங்கள் மாநிலத்தை விட்டுக்கொடுக்காமல்.

    இங்குள்ள பெண்கள் வண்ணக்கோடுகள் கொண்ட பாவாடை, தாவணி போன்ற உடைகளை (மேக்லா, சதார்) அணிகிறார்கள். மீனைப் பிரதான உணவாக ரசித்துச் சாப்பிடுவதிலிருந்து, சோலைகள் சூழ்ந்த இடங்களில் வசிப்பதுவரை அம்மாநிலத்தவர்கள் கேரளத்துக்காரர்களை எக்கச்சக்கத்துக்கு நினைவூட்டுகிறார்கள்.

    புகையிலையுடன் வெற்றிலை போட்டுத் துப்பும் பழக்கம் நிறைய இருக்கிறது. 'தாம்பூல்' என்று ஒருவகைக் கொட்டைப்பாக்கு இங்கு வெகுவாக விரும்பப்படுகிறது. பாக்கைப் பறித்து பச்சையாய் ஒரு சாக்கில் போட்டுக் கட்டி, பூமியில் மூன்று வாரங்களுக்குப் புதைத்து, அது புளித்து, நிறம் மாறின பிறகு எடுத்து உபயோகிக்கிறார்கள். 'போட்டுப்பாருங்கள்... ஆனால் தலையைச் சுற்றினால் சமாளித்துக்கொள்ளுங்கள், ஜாக்கிரதை!' என்று ஆளாளுக்கு எச்சரித்துவிட்டுத் தந்ததை வாயில் போட்டு மெல்ல முயன்றேன். செமை நாற்றம்! தாளமுடியாமல் துப்பிவிட்டேன்.

    அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பூமி என்பதால் பல மாடிகளைக் கொண்ட கட்டடங்களையே காணோம். பெருவாரியான வீடுகள் ஒரு தளத்தோடு, தட்டி, தகர ஷீட்டுகளைக் கூரைகளாகக் கொண்டு ராணுவ பாரக்ஸ் போல அமைக்கப்பட்டிருக்கின்றன.

    குடும்பப் பெண்கள் பூ வைத்துக்கொள்வது தவறான எண்ணத்தைத் தரும் என்று நம்புவதில், எங்குமே பூக்கடைகளைப் பார்க்க முடியவில்லை. அதிசயமாய் கோவிலை ஒட்டி இருக்கும் கடைகளில்கூட துலுக்க சாமந்தி மாலைகள்தாம் தென்பட்டன.

    ஜோர்ஹாட் நகரிலிருந்து 55 கி.மீ. தொலைவில் இருக்கும் ஸிப்ஸாகர் (சிவ சாகர் - அதாவது, சிவபெருமானின் கடல்), கோவில்களுக்கும் அதன் சரித்திர வரலாற்றுக்கும் பிரசித்தி பெற்றது. வலிமைமிக்க அஹோம் அரச பரம்பரையின் தலைநகராக சுமார் அறுநூறு வருடங்கள் செயல்பட்ட பெருமை இந்நகரத்துக்கு உண்டு. இங்குள்ள இருநூறு வருடத்து ஸிப்ஸாகர் ஏரியின் நீர்மட்டம், ஊரின் தரைமட்டத்திலிருந்து உயரத்தில் அமைந்திருப்பது ஓர் ஆச்சர்யமான சேதி! இந்த ஏரியின் கரையில் மூன்று கோவில்கள் - சிவ தோல், விஷ்ணு தோல், தேவி தோல் - இருக்கின்றன. இந்தச் சிவன் கோவில் கோபுரத்தின் உயரம் 104 அடி என்றும், இந்தியாவின் அனைத்து சிவ ஸ்தலங்களிலும் இந்தக் கோபுரம்தான் உயரம் அதிகமானது என்றும் கூறுகிறார்கள். அரசபரம்பரை ஆண்ட பூமி என்பதால், ஸிப்ஸாகரில் கோட்டைகளுக்கும், மாடகூட கோபுரங்களுக்கும், கோவில்களுக்கும் பஞ்சமேயில்லை. அவற்றில் கார்கான் (Gargaon) அரண்மனை, ரங் கர் (Rang Ghar) போன்றவை, பார்க்கவேண்டிய இடங்கள். பல அரசர்கள் பிரும்மாண்டமான குளங்களை உண்டாக்கி, அவற்றின் கரைகளில் கோவில்களைக் கட்டியுள்ளதில், ஸிப்ஸாகரிலும் அதனைச் சுற்றியும் சுமார் ஐநூறு குளங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

    தேசிய நெடுஞ்சாலை 37-ல் சுமார் 217 கி.மீ. பயணித்துச் சென்றால், காஸிரங்கா தேசியப் பூங்கா வருகிறது. அங்குள்ள காட்டு விடுதியில் தங்கி, யாண மேல் அமர்ந்து அடர்ந்த காட்டுக்குள் சென்று, கிட்டத்தட்ட குட்டி யாணைகளாகக் காலடியில் மேயும் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களை, வயிற்றில் படம் முடிச்சுப்போட கண்காணிப்பது, ஒரு சிலிர்ப்பான அனுபவம். இந்தப் பகுதியில் புலி, காட்டுமாடு, காட்டுப்பன்றி, விதவித மான்கள், மலைப்பாம்பு - போன்ற மிருகங்கள் வாழ்கின்றன என்று வழிகாட்டி பட்டியல் போட்டாலும், அதிர்ஷ்டம் இருந்தால்தான் எல்லாவற்றையும் காண்பது சாத்தியம். எங்கள் அதிர்ஷ்டத்தின் வீச்சில் அன்று சிக்கியவை மான்களும் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும் மட்டுமே!

    கௌஹாத்தியிலிருந்து நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணிநேரம் பயணித்தால், நகாங் நகரம் இருக்கிறது. இங்கிருந்து 14 கி.மீ. தொலைவில் போர்டோவ என்ற சிற்றூர் உள்ளது. இது, 'மகாகவி' என்று அஸ்ஸாம் இலக்கியவாதிகளால் போற்றப்படும் ஸ்ரீசங்கர்தேவின் பிறப்பிடம் என்ற சிறப்பைப் பெற்ற ஊர். இங்குள்ள ஆலயம், வைணவர்களின் புனிதத்தலமாக வெகுவாகப் போற்றப்படுகிறது.

    மகாகவி சங்கர்தேவைப்பற்றிச் சொல்லும்போது, அவருடைய வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றை விவரிப்பது சுவாரஸ்யமாக இருக்குமென்று நம்புகிறேன்.

    பதினனந்தாம் நூற்றாண்டில் அப்பிரதேசத்தை ஆண்ட நரநாராயணன் என்ற அரசரின் அவையில், ஆஸ்தானப் புலவராக இருந்தவர் சங்கர்தேவ் (1449-1568). (119 வயது வாழ்ந்தவரா? எனக்கும் ஆச்சர்யம்தான்! ஆனால், இப்படித்தான் அவரைப் பற்றின குறிப்பேடு சொல்கிறது!). ஒரு சமயம் இவரை அழைத்த அரசர், பாகவதப் புராணத்தை ஒரே இரவில் சுருக்கி எழுதும்படி உத்தரவிட, அந்த இமாலயப்பணியை சங்கர்தேவ் கச்சிதமாய் செய்து முடித்ததன் விளைவுதான் 'குணமாலா' என்கிற அற்புதமான நூல். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, 'யானையைக் கொன்று அச்சடலத்தை சிறு பானையில் அடைப்பது போல' என்று ஓர் அர்த்தமுள்ள பழமொழியே அம்மாநிலத்தில் உருவாகிவிட்டதாம். அஸ்ஸாம் சென்று இந்த விவரத்தை அறிந்துவந்த நாளிலிருந்து, 'எப்படிச் செய்வோம்' என்று மலைப்புத் தரும் காரியத்தை ஒருவர் எப்படியாவது செய்து முடிக்கும் சந்தர்ப்பம் எழும்போதெல்லாம், 'யானையைக் கொன்று (அல்லது பிடித்து) பானையில் அடைத்துவிட்டீர்களே!' என்று அவர்கள் முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்!

    கௌஹாத்தியிலிருந்து 32 கி.மீ. தொலைவிலிருக்கும் ஹஜோ என்ற சிற்றூரை அங்கு பன்னெடுங்காலமாய் நிலவிவரும் மதநல்லிணக்கப் பழக்க வழக்கங்களுக்காகப் பாராட்டுவது அவசியமாகிறது. இந்து, முஸ்லிம், பௌத்த சமயத்தைச் சேர்ந்த மக்கள் அங்குள்ள ஹைக்ரியா மாதவ், போவ மெக்கா, பௌத்த மடாலயம் என்ற மூன்று திருத்தலங்களுக்கும் சென்று வழிபடுவதில், சர்வமதங்களும் அங்கு சமமாகக் கொண்டாடப்படுகின்றன. போவ மெக்காவில் மனமுருகிப் பிரார்த்தித்தால், அசல் மெக்காவுக்குப் போன பலன் கைமேல் கிட்டும் என்று அங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

    அஸ்ஸாமியத் திருவிழாக்களில் 'பிஹு' கொண்டாட்டங்கள் அம்மக்களால் முக்கியமானவையாகக் கருதப்படுவதில், அவை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மூன்று பிஹு திருவிழாக்களில் - வசந்தகால உற்சவம், போஹாக் பிஹு அல்லது ரங்காலி பிஹு ரொம்ப விசேஷமானது. ஏப்ரல் மாதத்தில், வசந்தருது துவங்கும் சமயம், உழவர்களுக்கு ஊக்கம் தரும் விதமாய் ரங்காலி பிஹு கொண்டாடப்படுகிறது. எனது சினேகிதி புரொஃபஸர் ஜாமினி தேவியிடம் கேட்டபோது, 'விதவிதமாய் உடை உடுத்தி இதற்கென புனையப்பட்டிருக்கும் பாடல்களை மக்கள் பாடி ஆடுவது கண்கொள்ளாக் காட்சி' என்றார், குரலில் பெருமை எட்டிப்பார்க்க!

    கௌஹாத்தியிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கும், அங்கிருந்து அறுபது கி.மீ. தள்ளி சிரப்புஞ்சியும் (நான்காவது வகுப்பில் 'இந்தியாவிலேயே அதிக அளவு மழை பெய்யும் இடம்' என்று படித்தோமே, அதே சிரப்புஞ்சிதான்!) இருக்கின்றன. ஒருநாள் காலை ஏழு மணிக்குக் கிளம்பி, ஒரு வாடகை வண்டியில் அங்கு போனேன். டிரைவர் பெயர் பிரஸாத். உத்திரப் பிரதேசத்திலிருந்து பிழைக்க வந்தவர். சரியான தள்ளுமாடல் வண்டி. போட்டோ எடுப்பதற்காக எங்காவது நிறுத்திவிட்டால்போயிற்று... மறுபடி நாலு பேரை அழைத்துத் தள்ளினால்தான் கிளம்பும்! ஆனால் இதை வைத்துக்கொண்டு, கௌஹாத்திக்கும் ஷில்லாங்கிற்கும் மாதம் இருபது ட்ரிப் அடிப்பாராம்... சம்பாத்தியம் இருபத்தையாயிரம் என்கிறார்!

    மேகாலயாவில் வசிக்கும் காஸி (Khasi), காரு (Garu), ஜெயின்தியா (Jaintia) என்ற மூன்று பழங்குடி இனத்தவரில், காஸி பிரிவினர் கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதம். இவர்களின் மூதாதையர்களின் பூர்வீகம் தாய்லாந்து. தாய்வழி மரபு இன்றைக்கும் இம்மாநிலத்தில் கோலோச்சுகிறது. திருமணமான பிறகு வீட்டோடு மாப்பிள்ளை ஆவதோடு, மனைவியின் பெயரை ஏற்பது இந்த இனத்தவரிடையே கடைப்பிடிக்கப்பட்டுவரும் வழக்கம் என்கிற விவரம், இந்தியாவின் இதர பகுதிகளில் வசிக்கும் பல பெண்களுக்கு நிச்சயம் சந்தோஷத்தைத் தரும்.

    காஸி இனத்தில் பெண்களுக்கு விசேஷ மரியாதை. அதுவும், கடைக்குட்டிப் பெண்ணாப் பிறப்பது, இன்னமும் விசேஷம். பெற்றோரின் சொத்தில் பெரும்பகுதி அந்தப் பெண்ணுக்குச் செல்வதனால், அவளை மணப்பவன் கட்டாயம் அவள் வீட்டோடு குடிபெயர்ந்து, மாமனார் மாமியாரைப் பார்த்துக்கொள்வதில் உதவ வேண்டும். புதிதாய் வேலையில் சேர மனுச் செய்யும் ஆண்கள், அம்மா அல்லது மனைவியின் பெயர்களைத் தன் பெஸ்டாயம் படு சொத்து உபயோகிப்பது இங்கு நாம், இந்த ஆணின் மகள், மனைவி என்று சொல்வது போல, அங்கு இந்தப் பெண்ணின் மகன், கணவன் என்கிறார்கள் சகஜமான வழக்கம்.

    பொறுப்பு அதிகமாக இருப்பதாலோ என்னவோ, பெண்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அலுவலகம் சென்றுவரும் பெண்கள்கூட உபரி வருமானத்திற்காக கறிகாய், மளிகைக்கடை போன்ற வியாபாரத்தையும் மேற்கொள்வதைப் பல இடங்களில் பார்த்தேன். விவாகரத்தும் மறுமணமும், யாரும் புருவத்தை உயர்த்தாமல் வெறும் சாதாரண நடவடிக்கைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால், இப்படிப் பெண்களுக்கு அதீத சுதந்திரமும் முக்கியத்துவமும் கொடுப்பதை எதிர்த்து, நான் அங்கு சென்றதற்கு முந்தைய மாதம் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் மேற்கொண்டதும் நடந்திருக்கிறது.

    டாக்டர் ஹேம்லெட் பார்ச் (Hamlet Barch), வடகிழக்கு சர்வகலா சாலையின் முன்னாள் துணைவேந்தர். காஸி இனத்தவரின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் குறித்துப் பல புத்தகங்கள் எழுதியுள்ள பண்டிதர். முன்பு சுமார் எண்ணூரு வார்த்தைகளுடன் புழக்கத்திலிருந்த காஸி மொழிக்குப் புத்துயிர் கொடுத்து ஆங்கிலம் இதர மொழிகளின் கலப்பினால், இன்றைக்கு நான்காயிரம் வார்த்தைகள் கொண்டதாக உருவாக்கப் பாடுபட்டவர்களில், டாக்டர் பெயர் பார்ச்சுக்குப் பெரும் பங்குண்டு.

    கிழக்கு மாநிலங்களில் சின்னக் குழந்தைகளை நம்மூர் போல் இடுப்பில் சுமப்பதில்லை. உழக்கு போல இருக்கும் பெண்கள்கூட, இன்னொரு சின்ன மழலையை முதுகோடு இறுகக் கட்டிக்கொண்டு பம்பரமாய் உழைப்பதைப் பார்த்தது, புது அனுபவம்.

    முதுகிலிருந்து குழந்தை எப்படி வழுக்கிவிழாமல் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளக் காரை நிறுத்தச் சொல்லி இறங்கி, ஆங்காங்கே நின்றிருந்தவர்களிடம் போட்டோ எடுக்கலாமா என்று வினவியபோது, பலர் உடன்படவேயில்லை. வண்டியோட்டி காஸி மொழியில் என் நோக்கத்தை விளக்கியும், 'போட்டோ எடுத்தால் ஆயுசு குறைந்துவிடும்' என்ற காரணத்தால் மறுத்துவிட்டார்கள். கடைசியில் ஒரு குடும்பத்தில் சம்மதித்தார்கள். அந்தப் பெண்ணுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருந்தால் அதிகம்... அவள் முதுகில் கொழுக்மொழுக்கென்று ஆறுமாதக் குழந்தை! இடுப்போடு குனிந்து, இடக்கையால் குழந்தையை அலட்சியமாகத் தூக்கி முதுகில் குப்புறப் போட, அது குரங்குக்குட்டி மாதிரி இவள் கழுத்தைப் பிடித்துக்கொண்டதும், 'ஜெய்ன்செம்' என்ற துணியால் குழந்தையின் முதுகைச் சுற்றி முன்னால் மார்பில் குறுக்காகக் கட்டிக்கொண்டாள். இதைச் செய்துமுடிக்க அந்தப் பெண்ணுக்குப் பத்து நொடிகள் கூட ஆகவில்லை!

    அஸ்ஸாம் மாநிலத்தின் 'மூகா' பட்டு, கம்பளிச் சால்வைகள், கமோசா என்ற பூ வேலைப்பாடு கொண்ட துண்டுகள், சன்னமான பிரம்பு மூங்கில் நார்களால் செய்யப்பட்ட கைவினைப்பொருள்கள், தேயிலை, இத்யாதிகள், இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் வெகுவாக விரும்பப்படும்கின்றன.

    நேரமின்மை மட்டுமின்றி, பாதுகாப்புக் கருதியும் அஸ்ஸாமின் இதர எல்லை நகரங்களுக்குச் செல்ல முடியாமல்போனதில், எனக்கு ஏமாற்றம்தான். எனினும், 'இன்னொரு சந்தர்ப்ப ம் கிட்டும்' - There is always another time - என்ற கூற்றில் எனக்கு நம்பிக்கை இருப்பதால், இத்துடன் பயண விவரங்களை நிறுத்திவிட்டு, எழுத்தாளர்களைச் சந்திக்க உங்களை அழைத்துப் போகிறேன்.

    - 1994

    ***

    பி.கே. பட்டாச்சார்யா

    எழுபது வயதாகும் டாக்டர் பிரேந்திரகுமார் பட்டாச்சார்யா, அஸ்ஸாமிய இலக்கிய மண்டபத்தைத் தூக்கி நிறுத்தும் தூண்களில் ஒருவராகக் கருதப்படுபவர். சிறந்த எழுத்தாளர், விஷயஞானமுள்ள பண்டிதர், சிந்தனையைத் தூண்டும் எழுத்துக்களுக்காக சாகித்ய அகாடமி, ஞானபீடப் பரிசுகளைப் பெற்றவர். மத்திய சாகித்ய அகாடமியின் தலைவராகப் பதவிவகித்தவர். 'ராம்தேனு' (Ramdhenu), 'நவயுக்' (Navayug) என்ற பத்திரிகைகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், முன்னேற்றச் சிந்தனைகளைக் கொண்ட எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் ஊக்குவித்து, அவர்களது படைப்புகளையும் பெருவாரியாக வெளியிட்டு, அஸ்ஸாமிய இலக்கிய உலகில் பல புதியவர்கள் பிரவேசிக்கக் காரணமானவர்.

    மத்தியசாகித்ய அகாடமியின் பிரதிநிதியாக,டாக்டர் பட்டாச்சார்யாவுடன் சேர்ந்து ஐந்து அமெரிக்க சர்வகலாசாலைகளில் கலந்துரையாடவென நாங்கள் பதினைந்து தினங்கள் ஒன்றாய் பயணித்தது, அவரை நன்கு அறிய எனக்கு சந்தர்ப்பம் தந்தது. அது ஓர் அற்புதமான அனுபவம். டாக்டர் பட்டாச்சார்யா, பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மென்மையானவர். பண்பும் அறிவும் கொண்ட நல்ல மனிதர். 'இவருக்குக் கோபம் என்றால் என்னவென்றே தெரியாதா!' என்று வியக்கும்படியான சாந்த, நிதான குணங்கள் நிறைந்தவர். அமெரிக்கப் பயணத்தின்போது, டாக்டர் பட்டாச்சார்யாவுக்கும் எனக்கும் பிறந்த தேதி, மாதம் ஒன்றுதான் என்கிற விவரம் தெரியவந்தது, இனிமையானதோர் ஆச்சர்யம்!

    உங்கள் மூலம் அஸ்ஸாமிய இலக்கியத்தை, தமிழர்களுக்கு மட்டுமல்லாது இதர மொழியின்ருக்கும்

    அறிமுகப்படுத்தவேண்டும் என்பது என் நோக்கமாதலால்,

    உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் தனிப்பட்ட

    முறையில் அணுகுவதற்கு முன் அஸ்ஸாமிய மொழியின்

    இலக்கிய வரலாற்றைச் சுருக்கமாகக் கூற முடியுமா?

    எங்கள் மொழியின் புராதனத்தைத் தேடிப்பார்த்தோமென்றால், கிறிஸ்தவ நூற்றாண்டுகளின் துவக்கத்தில் காமரூப மன்னர்கள் ஆண்ட காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் - அவை சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பினும் - சாட்சியாக உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக 13, 14- ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட 'பிஷப் இலக்கியங்கள்' கிட்டியுள்ளன. மறுமலர்ச்சி காலத்தில் ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத்கீதை போன்ற நூல்களைத் தழுவி எழுதியதும் நடந்திருக்கிறது. 13 முதல் 19-ம் நூற்றாண்டு வரையான ஐநூறு வருடங்களில், அந்தந்த மன்னர்களின் ராஜசபை நடப்புகள் உரைநடையாகவே எழுதப்பட்டிருக்கின்றன. இந்த வகையில், எங்கள் மொழி தொன்மைவாய்ந்தது மட்டுமல்ல, வளம் மிகுந்ததும்கூட.

    பிரிட்டிஷ் ஆளுமையின் கீழ் வந்த பிறகு அஸ்ஸாமிய

    மொழி ஒதுக்கப்பட்டதால், உங்கள் மொழி, இலக்கியங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதல்லவா?

    உண்மை. 1835-ல் ஆங்கில அரசு, அஸ்ஸாமிய மொழியை பகிஷ்கரித்து விட்டு, நீதிமன்றத்திலும் கல்விக்கூடங்களிலும் புழங்க வங்காள மொழியைக் கொண்டுவந்தது. 1873-ல் அந்தச் சட்டத்தை நீக்கிய பின்னரே எங்கள் மொழிக்குப் புத்துயிர் கிட்டி, நவீன இலக்கியங்கள் தோன்ற வழி பிறந்தது. இந்த மாற்றத்திற்கு 'அருணோதயம்' என்று அப்போது துவங்கப்பட்ட பத்திரிகையின் பங்கு மகத்தானது. இத்தனைக்கும், 'அருணோதயம்' அமெரிக்கப் பாதிரி மார்களால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டதுதான். எனினும், உரைநடை மொழியை வளர்க்க அப்பத்திரிகை நல்ல விதத்தில் பாடுபட்டிருக்கிறது.

    உங்கள் மொழியின் முதல் நாவல்கூட, அமெரிக்கப்

    பாதிரிமாரால் எழுதப்பட்டது என்று கேள்விப்பட்டேனே!

    ஆம். ஆனால், ஒரு விலைமாதாக இருந்தவள் மனம் மாறி கிறிஸ்தவ மதத்தைத் தழுவுவதாக எழுதப்பட்ட அதை, நாவல் என்று சொல்வதைவிட கிறிஸ்தவப் பிரச்சார நூல் என்று சொல்வது சரியாக இருக்கும். மற்றபடி, 1884-ல் பத்மாவதி தேவி போக்கனானி எழுதிய 'சுதர்மார் உபாக்யான்', நாவல் போக்குக்கு வித்திட்டது என்று கூறுவார்கள். ஆனால், இதிலும் எனக்கு உடன்பாடில்லை. என்னைக் கேட்டால், 'ஜொனாகீ' என்ற பத்திரிகையில் பெஸ் பரூவா எழுதியதுதான் உண்மையான முதல் புதினம் என்பேன்.

    சில மொழிகளில் அந்தந்த காலகட்டத்திற்கேற்ப

    இலக்கியத்தையும் கட்டம்கட்டியிருப்பது போன்ற

    திட்டவட்டமான பிரிவுகளை, அஸ்ஸாமிய மொழியில்

    என்னால் பார்க்க முடியவில்லை. பொதுவாக ஆரம்பகால

    நாவல்கள், சுதந்திரத்துக்குப் பின்னர் சமுதாயப் பிரக்ஞை

    கொண்டவை, அவற்றிலும்கூடப் பொருளாதார அடிப்படையில் உருவானவை, ஆதிவாசிகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை, நதிகளை ஒட்டிய

    கலாச்சாரங்களை அடிப்படையாக வைத்து சிருஷ்டிக்கப்பட்டவை போன்ற சில மேலோட்டமான

    பிரிவுகளே உள்ளன - என்று எனக்குச் சொல்லப்பட்ட

    கருத்து சரியானதுதானா?

    என்னைக் கேட்டால், அஸ்ஸாமிய மொழி நாவல் வளர்ச்சியை இரண்டு கண்ணோட்டங்களிலிருந்து கணிக்கலாம் என்பேன். ஒன்று உத்தி, இன்னொன்று கருத்து. ஆரம்பகாலத்தில் எழுதப்பட்டவை பெரும்பாலும், அந்தந்த காலகட்டங்களில் அல்லது அதற்குச் சற்று முன்னால் இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. அதையும் காதலுணர்வு மேம்பட எழுதினார்கள் எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகள் வரை நீடித்த இந்தப் போக்கு, 'ஜொனாகீ' பத்திரிகையின் மூலம் துவங்கியது. பிறகு, பெஸ் பரூவா எழுத முற்பட்டதும் இந்த நிலை மாறியது. தொடர்ந்து வந்த வருடங்களை, 'பெஸ் பரூவாக் காலம்' என்று குறிப்பிடுவதுண்டு.

    ஆரம்பகால அஸ்ஸாமிய மொழிப் புதினங்கள், தெய்வாம்சம் நிரம்பியதாக, போதனைகள் கொண்டதாகக் காணப்பட்டன என்று படித்தேனே?

    அந்த விமர்சனம் நாடகங்களுக்கு மட்டுமே பொருந்தும். நாவல்களை எடுத்துக்கொண்டால், முதலில் ஓரளவுக்கு வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட்டவை, மெதுமெதுவாக மாறி, இறுதியில் சமுதாயப் பிரக்ஞைக் காலகட்டத்தை அடைந்தன.

    '1930-க்குப் பிறகு சமுதாயப் பிரக்ஞை கொண்ட தரமான

    நாவல்கள் ஊற்று போலப் பெருக்கெடுத்தன' என்கிற கருத்து சரியானதுதானா?

    உண்மை. காந்தியக் கொள்கைகளை ஏற்று சுதந்திரப் போராட்டத்தில் இலக்கியவாதிகள் பங்கெடுக்கத் துவங்கியது, அந்த மாற்றத்துக்கு வழி செய்தது. அதற்கு முன்னர் தோன்றிய வங்காளப் பிரிவினைப் போராட்டமும், எங்களுக்குள் சமுதாய விழிப்புணர்வு தோன்றக் காரணமாயிருந்தது எனலாம். அஸ்ஸாமை வங்காளத்தோடு இணைத்து, டாக்காவைத் தலைநகரமாக ஏற்றுக்கொள்ளச் செய்த முயற்சிகளை நாங்கள் எதிர்த்தோம். அம்பிகாகிரி ராய் செளத்ரி போன்ற சிறந்த கவிஞர் அந்த எதிர்ப்பில் இணைந்தது, எங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தது. 'தும்' என்கிற தலைப்பில் அவர் எழுதிய நீண்ட கவிதையும், இன்னும் பல கவிதைகளும், தேசிய உணர்வை வெகுவாக மூட்டிவிட்டன. மேற்சொன்ன அனைத்து நிகழ்ச்சிகளுமே, அதுநாள்வரை வெறும் புனைவிய எழுத்துக்களை எழுதியவர்களை சமுதாயப் பிரக்ஞையோடு எழுதத் துண்டின. இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்... சில விமர்சகர்கள் 'ரொமாண்டிக்' (Romantic) எழுத்துக்களையும், தேசிய உணர்வு சமுதாயப் பிரக்ஞை கொண்ட எழுத்துக்களையும், 'இது வேறு, அது வேறு' என்று கட்டம் கட்டுவதை நான் ஏற்கமாட்டேன். அதன் கிளைதான் இது... அதில் எழுதியவர்களில் பலர் இதிலும் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதால், இலக்கியங்களுக்குத் திட்டவட்டமாய் கட்டம் கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.

    அந்தந்த காலகட்டங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களால்

    மக்கள் தூண்டிவிடப்பட்டார்கள் என்று சொல்வதை

    ஏற்கிறீர்களா?

    எழுத்தினால் மக்கள் தூண்டிவிடப்பட்டார்களா, அல்லது சம்பவங்கள் நிகழ்ந்ததால் எழுத்தாளர்கள் அவற்றை எழுத முற்பட்டனரா என்று அறுதியிட்டுக் கூறுவது எவருக்குமே கஷ்டம். இரண்டுமே உண்மைதான்.

    'இரண்டாம் உலகயுத்தக் காலகட்டத்தில், அஸ்ஸாமிய இலக்கிய வளர்ச்சி தேக்கம் கண்டது' என்று ஓர் ஆய்வுக் கட்டுரையில் படித்தேன். அது எதனால்?

    அது ஒரு பெரிய கொடுமை, பெரும் அதிர்ச்சி. புத்தகங்கள் வெளியாவதும், படங்கள் எடுக்கப்படுவதும் சுத்தமாய் நின்றுபோன அந்தப் பத்தாண்டுகாலம், பயங்கரமானது. அண்டை மாநிலமான மணிப்பூர் போர்க்களமாகவே மாறிவிட்ட நிலையில், எந்த நிமிடமும் ஜப்பானியர்கள் அஸ்ஸாமுக்குள் நுழைந்துவிடுவார்கள் என்ற பயம், தவிப்பு, ஒருபக்கம். சண்டை காரணமாய் விலைவாசிகள் தாறுமாறாய் ஏறிப்போனதும், கல்கத்தாவிலிருந்து புத்தகங்கள் அச்சாகி வரவேண்டும் என்கிற நிர்ப்பந்தமும், நிலைமையை இன்னும் கடுமையாக்க, பல எழுத்தாளர்கள் எழுதுவதையே நிறுத்திக்கொண்டார்கள். நாட்டிற்கு சுதந்திரம் கிட்டிய பிறகு, இந்தத் தேக்கம் படிப்படியாக மாறியது. நீங்கள் குறிப்பிட்ட சமுதாய நாவல்களின் ஊற்று, இந்தத் தருணத்தில்தான் தோன்றியது.

    நீங்கள் மும்முரமாக எழுத முற்பட்டதும், பிரபலமானதும், அந்தக் காலகட்டத்தில்தானே?

    ஆம். அப்போது பிரதானமாகச் செயல்பட்ட இரண்டு விமர்சகர்களை இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது. ஒருவர், ஹெம் பரூவா. இவர் சோஷலிஸப் பார்வை கொண்டவர். எம்.பி.யாகச் செயல்பட்டார். இன்னொருவர், மொழி விற்பன்னர் பாணிகாந்த காகாடி. முதலாமவர், 'தொழில்மய மாக்கப்பட்டாலே ஒழிய அஸ்ஸாம் முன்னேற வழியில்லை' என்றும், இரண்டாமவர், 'நம்முடைய கலாச்சாரம் வளமானது, பல புதினங்கள் எழுதுவதற்கான கருப்பொருள்கள் நம் நடைமுறை வாழ்க்கையிலேயே பொதிந்திருக்கின்றன' என்றும் கூறிய வார்த்தைகள், என் சிந்தனைகளை உசுப்பிவிட்டன.

    தொழில்மயமாக்குதல் என்ற வாதம் எவ்விதத்தில் உங்களை, ஓர் எழுத்தாளரை, தூண்டியிருக்கக்கூடும்?

    இங்கிலாந்தின் வரலாற்றைக் கவனித்தால், நான் சொல்லும் கருத்தை நீங்களும் ஏற்பீர்கள். தொழில்கள் வளர்ந்து, வேலைவாய்ப்புகள் பெருகி, தனிநபரின் பொருளாதாரம் மேம்படுவது இருப்பினும், தேசம் தொழில் மயமாக்கப்படும்போதுதான் மனிதனுக்கு உண்மையான விடுதலை எல்லா விதத்திலும் கிட்டுகிறது என்று நான் நம்புகிறேன்.

    உங்கள் எழுத்துக்களைப்பற்றிப் பேச முற்படுமுன், உங்கள் இளமைப்பிராயத்தை லேசாக விவரிக்க முடியுமா?

    1924-ம் ஆண்டு அக்டோபர் பதினான்காம் நாள், ஸிப்ஸாகர் என்ற இடத்திலுள்ள தேயிலைத்தோட்டத்தில் பிறந்தேன். வறுமை இருந்தது, ஆனால் அன்பான குடும்பச் சூழ்நிலை கிட்டியதில், எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் வாழ்வது சாத்தியமாயிற்று. நன்றாகப் படித்தேன். ஸ்காலர்ஷிப் உதவியில் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டங்கள் பெற்றேன்.

    எழுதவேண்டுமென்ற ஆசை, சின்ன வயதிலேயே இருந்ததா?

    நிறைய... ஒரு லட்சியக்கனவாக இருந்தது என்றுகூடச் சொல்லலாம். அப்பாவின் அண்ணன் நிருபராக வேலைபார்த்ததும், இன்னொரு மாமா - பின்னாளில் பிரசித்தி பெற்றிருந்த 'பிஜுலி' பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றியவர் - கொடுத்த ஊக்கமும், என் இலக்கிய ரசனை வளர உரங்களாயின.

    உங்கள் முதல் கதை?

    கதை அல்ல, கவிதை. ஜோர்ஹாட் பள்ளியில் படித்த நாள்களிலேயே, ஒரே மாதிரி எண்ணமுள்ள சில மாணவர்கள் ஒன்றுகூடிக் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். அதில் எழுதியவை நிறைய. ஆனால், அச்சில் வந்ததென்றால், பள்ளிப் பத்திரிகையில் வெளியான கவிதைதான் முதல். சிற்றன்னையின் கொடுமையை விவரிக்கும் கவிதை. நண்பன் ஒருவனின் அனுபவம் என்னை அதை எழுதத் தூண்டியது. பின்னர், கல்லூரியில் படிக்கும்போது, 'மொரிதிபட ஜீவன்' என்ற சிறுகதையை எழுதினேன். "உதிரும் வாழ்க்கை' என்று அதற்குப் பொருள். காசநோயால் அவதிப்பட்ட உறவினர் ஒருவரின் அவஸ்தையை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு, கல்லூரிகளிடையே நடந்த போட்டியில் முதல் பரிசு கிடைத்தது.

    உங்கள் முதல் நாவல் எது? அதை எந்த சந்தர்ப்பத்தில் எழுதினீர்கள்?

    அது ஒரு சுவாரஸ்யமான, ஆனால் வேதனையான சம்பவம். 1946-ல் கல்கத்தாவில் வாழ்ந்த சமயத்தில், 'ஒரு பயணியின் இறுதி யாத்திரை' என்ற எனது முதல் நாவலை எழுதினேன். என் நண்பன் ஒருவன், நல்ல கவிஞன், அதைப் படித்துப்பார்க்கிறேன் என்று கூறி எடுத்துப்போனான். இந்து - முஸ்லிம் எதிர்ப்பு தீவிரமாய் இருந்த நாள்கள்... அந்தப் போராட்டத்தில் என் நண்பன் கொலை செய்யப்பட்டான். அவனோடு என் கையெழுத்துப் பிரதியும் காணாமல் போனது. அந்த நாள்கள் ரொம்பக் கொடுமையானவை. பலர் என் கண் முன்னாலேயே பயங்கரமாய் கொலை செய்யப்பட்டனர். நல்ல நண்பனை இழந்த சோகத்தைவிட, முதல் நாவலின் இழப்பு எனக்குப் பெரிதாகப்படவில்லை..

    பிறகு?

    தொடர்ந்து கல்கத்தாவில் தங்கப் பிடிக்காமல், கௌஹாத்திக்கே திரும்பினேன். சில பத்திரிகைகளில் வேலைபார்த்தேன். எதுவும் சரிப்பட்டு வரவில்லை. அச்சமயத்தில், நாகாலாந்துக்குச் சென்று அங்கு பள்ளியில் ஆசிரியராகப் பணி செய்யும் வாய்ப்பு தேடி வந்தது. அப்போதெல்லாம் நான் ஒரு லட்சியவாதியாக இருந்ததால், மகாத்மா காந்தி, லோதியா, ஜெயப் பிரகாஷ் நாராயணன் போன்றவர்களின் கொள்கைகளை விட்டுவிடாமல் வேலைபார்க்கவும், மக்களுக்குப் பணிபுரியவும் அது நல்ல சந்தர்ப்பமாகத் தோன்ற, கிளம்பிவிட்டேன்.

    அங்கு கிடைத்த அனுபவங்கள்தான் உங்களின் 'அயரிங்கம்' நாவலுக்கும், இன்னும் சில கதைகளுக்கும் அஸ்திவாரங்களாக அமைந்தனவா?

    நிச்சயமாய். என்னென்ன விதமான அனுபவங்கள்! போய்ச்சேர்ந்த அன்றே, இறால் சாப்பிடச் சொல்லி ஆதிவாசிகள் வற்புறுத்தினார்கள். நானோ ஓர் ஆசாரமான பிராமணன். இருப்பினும், அவர்களின் மதிப்பைப் பெற, சாப்பிட்டேன். மொத்ததில், அங்கே தங்கியிருந்தபோது நானும் ஒரு 'நாகா'வாகவே மாறி, அவர்களின் பழக்கவழக்கங்கள் அத்தனையும் அறிந்துகொண்டேன்.

    அப்போது உங்களுக்கு என்ன வயது?

    இருபத்திநான்கு என்று ஞாபகம். ஒரு சம்பவம் சொல்கிறேன், கேளுங்கள்.. ஒருநாள், போன புதிதில், சர்ச்சில் இறைவழிபாடு நடந்துகொண்டிருந்தது. அது முடிந்ததும், என்னைப் பேசச் சொன்னார்கள். 'ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள். அவர்களோடு, 'நீ உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன்' என்கிற பாகுபாடும் போய்விட்டது. இனி நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபடுவது ஒன்றுதான் உங்கள் சமூகத்தினரையும் நாட்டையும் உயர்த்தும்' என்கிற ரீதியில் பேசி முடித்ததும், கூட்டத்தார் உணர்ச்சிவசப்பட்டுப்போனார்கள். ஆதிவாசிகளின் தலைவர் என்னிடம் வந்து, 'இதுவரை எல்லோரும் எங்களைத் தீண்டத்தகாதவர்களாகத்தான் நடத்திவந்திருக்கிறார்கள். நீங்கள் பேசுவது எங்களுக்கும் புதிய விஷயமாக இருக்கிறது. ஏசுபிரானே உங்களை இங்கு அனுப்பிவைத்திருக்கிறார் என்று நம்புகிறோம்' என்று மனமுருகக் கூறினார். அப்போதுதான், அங்கு நிலவுவது வெறும் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல, மனிதநேயம் சம்பந்தப்பட்டது என்கிற உண்மை எனக்குப் புரிய, அதையே நாவலாக எழுதினேன்.

    'அயரிங்கம்' புதினத்திற்கு முன் நீங்கள் எழுதிய 'ராஜ்பாதே ரிங்கியாய்' (Call of the highway) அவ்வளவாக வரவேற்பு பெறவில்லையே, ஏன்?

    அந்த நாவலில் ஓர் அரசியல் தொண்டனை நாயகனாகக் கொண்டு, 'தற்சமயம் நமக்குக் கிட்டியிருப்பது சுதந்திரம் இல்லை' என்கிற கருத்தைச் சொல்லிவைத்தேன். அதன் கருத்தை யாரும் மறுக்கவில்லை, உத்தியில்தான் தோற்றுவிட்டேன் என்று சிலர் விமர்சித்தார்கள். அது அவர்கள் அபிப்ராயம். என்னைப் பொறுத்தவரை எழுதுவதில் தோல்வி, வெற்றி என்பதெல்லாம் கிடையாது.

    'அயரிங்கம்' உங்களுக்கு மத்திய சாகித்ய அகாடமியின் விருதைப் பெற்றுத்தந்திருக்கிறது. அதை எழுதுவதற்கான பின்னணியை ஏற்கனவே கூறிவிட்டீர்கள். அதன் கதைச் சுருக்கத்தைச் சொல்ல முடியுமா?

    இதைக்கூட சில விமர்சகர்கள் 'அரசியல் நாவல்' என்று முத்திரை குத்திய துண்டு. ஆனால், நான் ஏற்க மாட்டேன். இது நாகர்கள் பற்றிய, அவர்கள் சமுதாயத்தில் தோன்றியிருக்கும் மாற்றங்கள் குறித்தான நாவல். இதன் கதாநாயகன் 'நார்ஸா'வை நான் சந்தித்திருக்கிறேன். இரண்டாம் உலகப்போர் நடக்கையில், ஜப்பானியர்கள் அந்தப் பகுதியில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தபோது நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதுதான் அதன் கதை.

    'அயரிங்கம்' நாவல் எழுத நீங்கள் எடுத்துக்கொண்ட காலம் எத்தனை?

    சுமார் எட்டு வருடங்கள். நாகாலாந்திலிருந்து 1951-ல் திரும்பிய பின் எழுத முற்பட்டதை, 59-ல் முடித்தேன்.

    நீங்கள் ஆசைப்பட்ட மனநிறைவை இந்த நாவல் தந்ததா?

    இதுவரையில் நான் எழுதியுள்ள எந்த நாவலுமே எனக்குத் திருப்தியாக இருந்ததில்லை. சிறந்த எழுத்தை இனிமேல்தான் எழுதப்போகிறேன் என்று நினைக்கிறேன். அதனாலேயே, வாசகர்களின் பாராட்டுக்களை ஒருவித சந்தேகத்துடனே ஏற்பேன்.

    எழுத்துக்களில் தொடர்புகொள்ளல்' (communication) பூரணமாய் இருக்கவேண்டும் என்று நம்புகிறீர்களா? அல்லது, விளக்குவது எழுத்தாளனின் வேலை இல்லை என்று நினைக்கிறீர்களா?

    இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். செய்தியை இலைமறைவு காய்மறைவாய் சொல்லிப் புரியவைப்பது உசிதம். ஆனால், நம் மக்களில் பெரும்பான்மையோர் படிப்பறிவு இல்லாமலிருப்பதால், விளக்கி எழுதுவது அவர்களைப் பொறுத்தவரை அவசியமாகிறது.

    நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள்?

    நான் சாதாரணர்களுக்காக, ஓரளவு படித்தவர்களுக்காக எழுதுகிறேன். பண்டிதர்களுக்காக அல்ல. நல்ல இலக்கியம் என்பது, இறுதியாக அதைப் படிக்கும் வாசகர்களால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. பரிசு, விருதுகளாலோ, விமர்சனங்களாலோ அல்ல என்பது என் அழுத்தமான நம்பிக்கை.

    உங்களுக்கு ஞானபீடப் பரிசைப் பெற்றுத்தந்த 'ம்ருத்யுஞ்ஜய' பற்றிச் சொல்லுங்களேன்...

    1942-ம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் நான் பங்கு கொண்டிருக்கிறேன். என்னையும் விட அதிகமாக சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டு பல அரிய தியாகங்களைச் செய்தவர்களை நெருக்கமாக அறிவேன். அவர்களின் அனைத்துச் செயல்கள் குறித்தும் எழுதுவது கஷ்டம். அதனால், ஒரே ஒரு முக்கியச் சம்பவம், ரயில் கவிழ்ப்புத் திட்டத்தை மட்டும் எனது நாவலின் களமாகத் தேர்ந்தெடுத்தேன். காந்திஜியின் கொள்கை அகிம்சை. ஆனால், சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேர்ந்தெடுத்தது 'ரயில் கவிழ்ப்பு' - தீவிரவாதம். எதனால் இந்த முரண்பாடு? அந்தச் சம்பவத்தைக் கண்ணால் கண்ட பிறகு, அதோடு சம்பந்தப்பட்ட தலைவர்களைச் சந்தித்து விளக்கம் கூட பெற்றேன். அகிம்சைக்கும் தீவிரவாதத்துக்கும் உள்ள முரண்பாடு, என் கதையில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால், இதைச் சொன்னபோது, என் சொந்த விருப்புவெறுப்பு, கருத்துகள் கதையினுள் நுழையாமல், 'தள்ளி நின்று பார்த்தவனாக' எழுதியிருக்கிறேன். கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டதாலேயே, சிலர் இந்த நாவலைத் தரமானது என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

    ஒரு பெண்ணின் பிரச்சினைகளை, ஒரு பெண்ணால்தான் திறம்பட எழுத முடியும்; ஒரு தலித்தினால்தான் தலித்தின் வேதனைகளைப் புரிந்து வெளிப்படுத்த இயலும் என்று ஒரு கருத்து நிலவுகிறதே?

    இதை நான் ஏற்கமாட்டேன். இரக்கமும் (sympathy), அவர்களாக அல்லது அதுவாக மாறி உணரும் குணமும் (empathy) இருந்தால், எந்தக் கதாபாத்திரத்துள்ளும் பூரணமாகப் புகுந்துகொள்வது எழுத்தாளர்களுக்கு சாத்தியம். 'எம்பதி' இல்லாதவர் எழுதவே கூடாது. அறிவுஜீவித்தனமான கண்ணோட்டம், ஒரு கதாபாத்திரத்துள் நுழையும் சக்தியை அழித்துவிடுகிறது. 'எம்பதி'யோடு புரிந்துகொள்வதை, நம்முடைய உணர்ச்சிகள் ஆக்ரமிக்காமல் எழுதுவது முக்கியம். நான் இயற்கையில் உணர்ச்சிபூர்வமானவன்- ஆனால், எழுத முற்பட்டுவிட்டால், சொந்த விருப்பு வெறுப்பின்றிதான் எழுதுகிறேன். பற்றற்று இருப்பது எழுத்தாளருக்கு அவசிய குணம்.

    உங்களுக்கு நேரடி அரசியல் அனுபவம் உண்டா?

    உண்டு. லோதியா, ஜெ.பி. நாராயணன் போன்ற உயர்ந்த மனிதர்களின் சோஷலிஸக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்த பிறகு தான், நிஜமான அரசியல் எனக்குப் புரிந்தது. அங்குள்ள அனைவருக்குமே அதிகாரம்தான் முதல் குறிக்கோள். லட்சியங்கள் எல்லாம் அதற்கடுத்தவை தானே! ஒருவரையொருவர் குறை சொல்வதும், தேவையில்லாமல் விமர்சிப்பதும் என்னால் தாளமுடியாதுபோக, விலகினேன்.

    உங்கள் மொழி இலக்கிய வளர்ச்சியில், பெண்களின் பங்கு என்ன?

    'ராம் தேனு' என்ற பத்திரிகைக்கு நான் ஆசிரியராக இருந்தபோது, 'குங்கும இலக்கியம்' (vermilion literature) என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதில், ஒரு பெண்ணால் மட்டுமே தனக்குள் பார்த்து சிறப்பாக எழுதமுடியுமென்று எழுதினேன். ஆனால்...

    குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்... இப்படிக் கூறுவது சற்றுமுன் நீங்கள் குறிப்பிட்ட 'எம்பதி' கருத்துக்கு எதிராக இருக்கிறதே!

    என்னை முடிக்க விடுங்கள் - அப்போது அப்படி எழுதினாலும், இப்போது என் கருத்தை - ஒரு பெண் ஆணாகவோ, ஆண் பெண்ணாகவோ மாறி எழுதுவது சாத்தியம் என்று மாற்றிக்கொண்டுவிட்டேன். அன்று கூட ஏன் அப்படி எழுதினேன் என்றால், எங்களிடையே நிறைய 'எத்னிக் க்ரூப்ஸ்' (Ethnic Groups) உள்ளன. அவர்களிடம் உள்ள விஷயங்கள் வெளியுலகத்துக்குத் தெரியவேண்டுமென்றால், அந்தக் குழுக்களிலிருந்து சிலராவது பேச, எழுத, முனைய வேண்டும் என்கிற ஆதங்கத்தில்தான், பெண்களிலும் நிறைய பேர் எழுத முன்வரவேண்டும் என்கிற நோக்கில்தான் எழுதினேன்.

    என் கேள்விக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை...

    அதிகமாகப் பெண்கள் எழுதாததற்கு, சொந்த விஷயங்களைப்பற்றிப் பேசி, எழுத அவர்கள் தயங்கியது ஒரு காரணம். தவிர, எழுதப்படும் விஷயத்தோடு எழுத்தாளருக்குத் தொடர்புகொண்டு பார்க்கும் குணம் மக்களிடையே இருப்பதும், பெண்களுக்குத் தயக்கத்தைக் கொடுத்திருக்கலாம். எதிர்காலத்தில் இந்த நிலை கண்டிப்பாக மாறிவிடும்.

    தற்சமயம் அஸ்ஸாமின் தலையாய பிரச்சினையாகப் பேசப்படும் 'தீவிரவாதிகள்', முக்கியமாப் இளைய தலைமுறையினர் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ASU என்ற மாணவர் இயக்கமாக ஆரம்பித்தது AGP என்று அரசியல் கட்சியாகி, இன்று ULFA என்று தீவிரவாதக் கூட்டமாக உருவாகியிருக்கிறது. (Assam Students Union, Assam Gana Parishad, United Liberated Front of Assam). இன்று இங்கே காணப்படும் கிளர்ச்சி, போராட்டம், வன்முறை ஆகியவற்றில், இளைய தலைமுறையினரின் பங்கு என்ன?

    உங்கள் கேள்விக்கு என்னால் உண்மைபூர்வமாக விடையளிக்க முடியும். ஏனென்றால், பல வருடங்களாகக் கல்லூரி மாணவர்களுடனும் இதர இளைய தலைமுறையினருடனும் நான் விடாது தொடர்பு வைத்திருக்கிறேன். இளைய தலைமுறையினரின்மேல் எந்தத் தவறுமில்லை… அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால்,  அவர்களுக்கு நல்ல முன்னுதாரணங்களாக இருக்க இன்றைய தலைவர்களும் அரசும் தவறிவிட்டதில், அவர்களுள் ஒருவித ஏமாற்றமும் விரக்தியும் மண்டிவிட்டன. இங்கு தலைதூக்கிவிட்ட போராட்டங்களுக்கு, இந்த மனோபாவங்கள்தான் காரணம்.

    Enjoying the preview?
    Page 1 of 1