Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilakkiyam Moolam India Inaippu - Part 1
Ilakkiyam Moolam India Inaippu - Part 1
Ilakkiyam Moolam India Inaippu - Part 1
Ebook1,338 pages19 hours

Ilakkiyam Moolam India Inaippu - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' எனும் இந்த ‘தவத்தில்' பதினாறு வருடங்கள் சிவசங்கரி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

இந்தியர்களை இதர இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஒவ்வொருவரது இலக்கிய மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்வதன் மூலமாக அவர்களை ஒருங்கிணைக்க முனைவதே அவரது மாபெரும் இம்முயற்சியின் நோக்கம். இதற்காக அவர், நாட்டின் பல பகுதிகளுக்குப் பிரயாணம் செய்திருக்கிறார். பல்வேறு கலை, கலாச்சாரப் பின்னணிகளைப்பற்றி அறிய முயன்றிருக்கிறார். அந்தந்தப் பிராந்திய மொழிகளின் இலக்கியங்களைப் பற்றி ஆராய்ந்து விவரங்களைச் சேகரித்திருக்கிறார். ஒவ்வொரு மொழியிலும் பல முன்னணி எழுத்தாளர்களைப் பேட்டி கண்டிருக்கிறார். வெவ்வேறு மொழி இலக்கியப் படைப்புக்களிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தருவதோடு, அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் இத்தொகுப்புகளில் இணைத்திருக்கிறார்.

அவர் சந்தித்துள்ள படைப்பாளிகள் அனைவருமே தாங்கள் இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்பவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், நம் தேசத்தில் இன்று நிலவும் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்டவர்களாகவும் இருக்கும் ஒற்றுமையை, அவரது பயணக்கட்டுரைகள், பேட்டிகள், மொழிபெயர்த்துள்ள ஆய்வுக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. ஏழ்மை, அறியாமை, சாதி வர்க்க ஆண்/பெண் பால் பேதங்கள், நவீனத்துவம் எதிர்நோக்கியுள்ள சவால்கள், மதமாச்சர்யங்களின் எழுச்சி, கொள்கைவெறி, மூடநம்பிக்கை மற்றும் பொறுமையின்மை, சட்டமீறல், வன்முறை மற்றும் காந்திய மதிப்புகள் போன்றவற்றின் சீரழிவைக் குறித்த விழிப்புணர்வை முடிந்தவரையில் உண்டாக்கி, மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி, வலிமையான இந்தியாவை உருவாக்க எழுத்தாளர்களால் இயலும் என்பது சிவசங்கரியின் நம்பிக்கை.

இம்முதல் தொகுப்பில், 27 எழுத்தாளர்களது பேட்டிகளும் அவர்களின் படைப்புக்களும் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பேட்டியும் ஒரு சிறந்த இலக்கியவாதியின் ஆழ்ந்த பார்வை, சிந்தனைகளை வெளிப்படுத்துவதோடு, ஒவ்வொரு படைப்பும் மொழிபெயர்ப்பில் சிதைந்துவிடாத ரத்தினமாகவும் திகழ்கின்றன.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803336
Ilakkiyam Moolam India Inaippu - Part 1

Read more from Sivasankari

Related to Ilakkiyam Moolam India Inaippu - Part 1

Related ebooks

Reviews for Ilakkiyam Moolam India Inaippu - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilakkiyam Moolam India Inaippu - Part 1 - Sivasankari

    http://www.pustaka.co.in

    இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு

    முதல் தொகுப்பு - தென்னிந்திய மொழிகள்

    Ilakkiyam Moolam India Inaippu

    Part 1- South Indian Languages

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    தேர் இழுக்க வடம் பிடித்து உதவியவர்கள்

    கேரளம்

    1. எம்.டி. வாசுதேவன் நாயர்

    சின்னச் சின்ன பூகம்பங்கள்

    2. கமலாதாஸ்

    ராஜவீதிகள்

    3. தகழி சிவசங்கரன் பிள்ளை

    வெள்ளம்

    4. வைக்கம் முகம்மது பஷீர்

    புலி

    5. சுகதகுமாரி

    சுகதகுமாரி கவிதைகள்

    6. சேது

    தூது

    7. பாலச்சந்திரன் சுள்ளிக்காட்

    பாலச்சந்திரன் சுள்ளிக்காட் கவிதைகள்...

    நவீன மலையாள இலக்கியம்

    கர்நாடகம்

    1. டாக்டர் யூ. ஆர். அனந்தமூர்த்தி

    மயில்கள்

    2. டாக்டர் சிவராம் காரந்த்

    சோமன துடி

    3. எஸ். எல். பைரப்பா

    வம்சவிருட்சம்

    4. தேவநூரு மஹாதேவா

    தாரின் வருகை

    5. சதுரங்க

    திருப்புமுனை

    6. எல். எஸ். சேஷகிரி ராவ்

    நவீனக் கன்னட இலக்கியம்

    ஆந்திரப் பிரதேசம்

    1. டாக்டர் ஸி. நாராயண ரெட்டி

    டாக்டர் ஸி. நாராயண ரெட்டி கவிதைகள்

    2. வாஸிரெட்டி சீதாதேவி

    வெள்ளம்

    3. ஆருத்ரா

    ஆருத்ரா கவிதைகள்

    4. ராவூரி பரத்வாஜா

    ஒரு எலியின் கதை

    5. மாலதி செந்தூர்

    ஹ்ருதய நேத்ரி

    6. சேஷேந்த்ர ஷர்மா

    சேஷேந்த்ர ஷர்மா கவிதைகள்

    நவீனத் தெலுங்கு இலக்கியம்

    தமிழ்நாடு

    1. அப்துல் ரகுமான்

    அப்துல் ரகுமான் கவிதைகள்

    2. இந்திரா பார்த்தசாரதி

    பயணம்

    3. ஜெயகாந்தன்

    அக்கினிப் பிரவேசம்

    4. ராஜம் கிருஷ்ணன்

    கண்ணகி

    5. சு. சமுத்திரம்

    ஏவாத கணைகள்

    6. பிரபஞ்சன்

    பிரும்மம்

    7. பொன்னீலன்

    தேன் சிட்டு

    8. முனைவர் மு. தமிழ்க்குடிமகன்

    நவீனத் தமிழ் இலக்கியம் - 1

    நவீனத் தமிழ் இலக்கியம் - 2

    திருமதி சிவசங்கரி

    சிவசங்கரி

    இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு

    முதல் தொகுப்பு – தென்னிந்திய மொழிகள்

    சிவசங்கரி

    ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' எனும் இந்த ‘தவத்தில்' பதினாறு வருடங்கள் சிவசங்கரி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

    இந்தியர்களை இதர இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஒவ்வொருவரது இலக்கிய மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்வதன் மூலமாக அவர்களை ஒருங்கிணைக்க முனைவதே அவரது மாபெரும் இம்முயற்சியின் நோக்கம். இதற்காக அவர், நாட்டின் பல பகுதிகளுக்குப் பிரயாணம் செய்திருக்கிறார். பல்வேறு கலை, கலாச்சாரப் பின்னணிகளைப்பற்றி அறிய முயன்றிருக்கிறார். அந்தந்தப் பிராந்திய மொழிகளின் இலக்கியங்களைப் பற்றி ஆராய்ந்து விவரங்களைச் சேகரித்திருக்கிறார். ஒவ்வொரு மொழியிலும் பல முன்னணி எழுத்தாளர்களைப் பேட்டி கண்டிருக்கிறார். வெவ்வேறு மொழி இலக்கியப் படைப்புக்களிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தருவதோடு, அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் இத்தொகுப்புகளில் இணைத்திருக்கிறார்.

    அவர் சந்தித்துள்ள படைப்பாளிகள் அனைவருமே தாங்கள் இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்பவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், நம் தேசத்தில் இன்று நிலவும் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்டவர்களாகவும் இருக்கும் ஒற்றுமையை, அவரது பயணக்கட்டுரைகள், பேட்டிகள், மொழிபெயர்த்துள்ள ஆய்வுக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. ஏழ்மை, அறியாமை, சாதி வர்க்க ஆண்/பெண் பால் பேதங்கள், நவீனத்துவம் எதிர்நோக்கியுள்ள சவால்கள், மதமாச்சர்யங்களின் எழுச்சி, கொள்கைவெறி, மூடநம்பிக்கை மற்றும் பொறுமையின்மை, சட்டமீறல், வன்முறை மற்றும் காந்திய மதிப்புகள் போன்றவற்றின் சீரழிவைக் குறித்த விழிப்புணர்வை முடிந்தவரையில் உண்டாக்கி, மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி, வலிமையான இந்தியாவை உருவாக்க எழுத்தாளர்களால் இயலும் என்பது சிவசங்கரியின் நம்பிக்கை.

    முதல் தொகுப்பில் தென்னிந்தியாவின் மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ்: இரண்டாம் தொகுப்பில் கிழக்கிந்தியாவின் அஸ்ஸாமி, வங்காளி, மணிப்பூரி, நேபாளி, ஒரியா; மூன்றாம் தொகுப்பில் மேற்கிந்தியாவின் கொங்கணி, மராத்தி, குஜராத்தி, சிந்தி: நான்காம் தொகுப்பில் வடக்கிந்தியாவின் காஷ்மீரி, பஞ்சாபி, உருது, இந்தி, சம்ஸ்கிருத மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்களையும் இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இம்முதல் தொகுப்பில், 27 எழுத்தாளர்களது பேட்டிகளும் அவர்களின் படைப்புக்களும் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பேட்டியும் ஒரு சிறந்த இலக்கியவாதியின் ஆழ்ந்த பார்வை, சிந்தனைகளை வெளிப்படுத்துவதோடு, ஒவ்வொரு படைப்பும் மொழிபெயர்ப்பில் சிதைந்துவிடாத ரத்தினமாகவும் திகழ்கின்றன.

    *****

    முன்னுரை

    ஐரோப்பிய கண்டத்தைவிட அளவில் பெரிதாகவும், மரபு, மதம், மொழியில் பல வேறுபாடுகளைக் கொண்டிருப்பதுமான ஒரு நாட்டிற்கு, ஒருங்கிணைந்து வாழ்வதில் சங்கடங்கள் வரத்தான் செய்யும். நாம் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே, இந்தியா விரைவில் தனித்தனி ஆட்சிகளைக்கொண்ட மாநிலங்களாகச் சிதறிப்போய் விடும் என்றுதான் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் கருதி வருகிறார்கள். நம்மைவிடக் குறைந்த எண்ணிக்கையில் இன, மத, மொழிகளைக் கொண்ட சோவியத் யூனியனும் யுகோஸ்லேவியாவும், சிறிய மாநிலங்களாகப் பிரிந்ததும், இந்தியாவும் அதே பாதையில் தொடரும் என்று நமக்கு வேண்டாதவர்கள் கணித்தார்கள். அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. வடமேற்கு மாநிலங்களான நாகாலாந்திலும் மிஸோராமிலும் தலைகாட்டிய சில போராட்ட இயக்கங்களும், காலிஸ் தான் தேவை என்ற குரலும் கூடத் தோல்வியடைந்தனர். நாம் நமது அண்டை நாடுகளுடன் நான்கு யுத்தங்களைப் போரிட்டிருக்கிறோம். சீன, பாகிஸ்தான் நாடுகளுடனான போராட்டத் தொடர்புகளை உபயோகித்து, இந்திய ஒற்றுமையைக் குலைக்க எந்த இந்தியக்குழுவும் முயன்றதில்லை. மாறாக, ஒவ்வொரு முறை அந்நிய சக்தியுடன் மோதும் போதும், நமது இந்தியத் தன்மையைத்தான் உறுதிப்படுத்தியிருக்கிறோம். நாம் ஆதிவாசிகளாக, மங்கோலிய இனத்தவராக, திராவிடர்களாக, ஆரியர்களாக இருக்கலாம்; என்றாலும், நாம் இந்தியர்கள்தான். வெவ்வேறு கடவுள்களை வணங்கலாம்; வெவ்வேறு சடங்குகளைக் கடைப்பிடிக்கலாம்; ஆனால், நாம் அடிப்படையில் இந்தியர்கள். பதினெட்டு மொழிகளையும், 350 வட்டார மொழி வழக்குகளையும் பேசுவதால், ஒருவரோடு ஒருவர் பேசிப்பழக இயலாமல் இருக்கலாம்; இந்திய ஜனத்தொகையில் 2% மக்கள் மட்டுமே பேசக்கூடிய ஆங்கிலம்தான் நமது ஒரே தொடர்புச் சாதனமாக இருக்கலாம்; இருந்தும், நாம் இந்தியர்களாகவே இருந்து வந்திருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்குள் நாம் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டாலும், எந்த அந்நியராவது நம்மில் ஒருவரோடு மோதி வன்முறையைப் பிரயோகிப்பதாக மிரட்டினால், நாம் ஒருவருக்கொருவர் உதவ முன்வந்து விடுவோம். ஒவ்வொரு இந்தியனும் தன் நாட்டு மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.

    கடந்த 50 வருட அனுபவங்களையும் மீறி, நாடு சிதறிப் போய் விடுமோ என்கிற பயம் நம்மைத் தொடர்ந்து ஆக்ரமித்து வருகிறது. உயர்ந்த உள்ளம் கொண்ட பாபா ஆம்தே போன்ற தேசியவாதிகள் அவ்வப்போது இந்தியா முழுவதிலும் நடந்து சென்று அல்லது சைக்கிளில் பயணம் செய்து, இந்தியாவை ஒருங்கிணைக்கப் பாடுபட்டு வருகிறார்கள். நாட்டு நிலையை ஆராய்வதற்கும், ஒற்றுமைக்கு எதிரான தீயசக்திகளை ஒடுக்குவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கும், பிரதம மந்திரி, முதல் மந்திரிகள் மற்றும் தலைசிறந்த அறிவுஜீவிகளைக் கொண்ட தேசிய ஒருங்கிணைப்புக்குழு அவ்வப்போது டெல்லியில் கூடி விவாதித்து வருகிறது. ஆபத்து விலகியதும், மக்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க, தேசிய ஒருங்கிணைப்புக்குழுவும் தூங்கப் போய்விடுகிறது.

    ஒவ்வொருவரின் இலக்கிய மரபு பற்றிய அறிவுமூலம் இந்தியாவைப் பின்னிப்பிணைக்க முற்பட்டிருக்கும் சிவசங்கரியின் முயற்சிக்கு இன்னும் அழுத்தமான, ஸ்திரமான தாக்கம் நிச்சயம் இருக்கும் நம் எழுத்து வடிவங்களில், பன்மொழி இலக்கியங்களில், எல்லாவற்றிற்கும் மேல் - வறுமை, அறியாமை, சாதி - இன - வர்க்க பேதங்கள், நவீனமயமாக்கல் எதிர்கொள்ளும் சவால்கள், மதவாத அடிப்படைப் பிரிவினைகளின் எழுச்சி, கொள்கைவெறி, மூடநம்பிக்கை, சட்டத்தின் மீது அவமதிப்பு, காந்தியக் கொள்கைகளின் சிதைவு, வன்முறையின் பால் சார்ந்து விடல் - போன்று நம் நாட்டை நெருக்கிக் கொண்டிருக்கும் பல பிரச்னைகளைக் குறித்து எழுத்தாளர்களும் கவிஞர்களும் கொண்டுள்ள அக்கறையையும், அத்தனையையும் மீறி நமக்குள் எத்தனை ஒற்றுமை இருக்கிறது என்பதையும் இத்தொகுப்பின் மூலம் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.

    இந்தியாவை ஒருங்கிணைக்க சிவசங்கரி மேற்கொண்டுள்ள முயற்சிக்கு, நாவலாசிரியர்களும், சிறுகதை எழுத்தாளர்களும், கவிஞர்களும் ஒரு மனித சமுதாயத்தின் சிந்தனையையே மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கைதான் அடிப்படைக் காரணம் தனது லட்சியத்தில் அவர் கொண்டுள்ள நம்பிக்கையின் தொடர்ச்சிதான், என்னை அவர் அழைத்துத் தென்னிந்திய இலக்கியத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதச் சொன்னதும். இம்மொழிகளில் எதனிலும் எனக்குப் பழக்கமில்லை. அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கும் படைப்புக்களை எழுதிய ஒருசிலரைப்பற்றி மட்டும் மேலோட்டமாக அறிவேன். அவரது ஆழ்ந்த நேர்காணல்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். முன்பு கிரேக்க மொழிபோல அந்நியமாகத் தெரிந்த பல விஷயங்களை, இப்போது எனக்கு மிக நெருக்கமாக உணர்கிறேன்.

    தெலுங்கு

    ஆந்திரப் பிரதேசத்தின் பூகோளரீதியான அமைப்பு, அதன் தெலுங்கு மொழிக்குச் சில பிரத்யேக குணாதிசயங்களைத் தந்திருக்கிறது. இந்தியாவின் மையத்தில் அமைந்துள்ள ஆந்திரத்தின் வடக்கு எல்லைப்பகுதி, மராத்தி, இந்தி மற்றும் ஒரிய மொழி பேசும் மக்களால் சூழப்பட்டுள்ளதோடு, அதன் தெற்கு எல்லை, தெலுங்கு உள்ளிட்ட திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் மாநிலங்களைக் கொண்டுள்ளது. தவிர, உருது, பாரசீக மொழிகளைப் பேசிய முகம்மதிய அரச பரம்பரைகளால் பல நூற்றாண்டுகளுக்கு ஆந்திரம் ஆளப்பட்டது. ஹைதராபாத்திலும் அதைச் சுற்றிய இடங்களிலும் சாதாரண மக்களின் மொழியாக இருப்பது தக்கானி உருது. இந்த ஒட்டுறவுக் கலாச்சாரத்தின் பொருத்தமான உதாரணம், கவிஞர் டாக்டர் சி. நாராயண ரெட்டி.

    டாக்டர் ரெட்டி, வசதியான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறந்த கல்வியாளரான அவர், தெலுங்கு சர்வகலாசாலையின் துணைவேந்தராக இருந்தவர். சாகித்ய அகாடமி, ஞானபீடம் மற்றும் சோவியத்லேண்ட் விருதுகளைப் பெற்றவரும்கூட. வாழ்வில் அவரது முதல் காதலாக இருந்ததும், இருப்பதும் - கவிதை. கவிதை என் உயிர் மூச்சு என்று தீர்மானமாகக் கூறுகிறார். திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுவதில் அவருக்குத் தயக்கமேதும் இல்லை, ஏனெனில் இப்பாடல்கள் மூலம்தான் சாதாரண மக்களிடையே அவருக்குப் பரவலான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தற்போது அவர், இமாலயத்தில் பிறந்து வங்காள விரிகுடாவில் மறையும் புனித கங்கை நதியைப்பற்றிக் காப்பிய வடிவிலான கவிதையை எழுதுவதில் ஈடுபட்டிருக்கிறார்.

    இவருக்கு நேர் மாறாக, ராவூரி பரத்வாஜா ஏழ்மையில் பிறந்து வளர்ந்து, முறையான பள்ளிக்கல்வி இல்லாதவர். சிறுவயது முதலே தன் வயிற்றுப்பாட்டுக்காக, கூலியாக, கடைச் சிப்பந்தியாக, சினிமாத் தியேட்டரில் ஊழியனாக, குண்டூரின் விபசார விடுதிகளில் எடுபிடியாக - பல சில்லறை வேலைகளைச் செய்தவர். விலைமாதுக்கள் அவருக்கு உணவும், உடையும், இருப்பிடமும் கொடுத்தார்கள். அவருக்குக் கண்பார்வை மங்கியபோது, ஐந்து ரூபாய் கொடுத்து மூக்குக் கண்ணாடி வாங்க உதவியவர்களும் அவர்களே. சாகித்ய அகாடமியின் விருது வழங்கும் விழாவில் பல்லாயிரம் ரூபாய்க்கான காசோலையைப் பெற்ற சந்தர்ப்பத்தில், இதுவரை அவர் பெற்றதிலேயே இதுதான் உயர்ந்த விருதா என்று கேட்டபோது அவர் சொன்னார் – இல்லை, விலைமாதுக்கள் வாங்கிக் கொடுத்த அந்த மூக்குக் கண்ணாடிதான் ஈடு இணையில்லாத பரிசு. அவர்கள் தாய் சொரூப்மானவர்கள். உண்மையில், அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமானால் லக்ஷ்மியின் (அவருக்கு உதவியவர்களில் முக்கியமானவர்) மகனாகப் பிறக்கவே விரும்புகிறேன்

    எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இப்போது அவர் கண்ணீரோடு நினைவுகூரும் அவரது ஏழ்மை அனுபவங்களின் அடிப்படையிலேயே அவர் எழுதிய கதைகள் அமைந்துள்ளன. அவற்றில் சில திரைப்படங்களாகியுள்ளன. வாழ்வைக் குறித்து அவருக்கு மிக எளிய கருத்துதான் இருக்கிறது. திருமதி இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியபோது, அவர் அகில இந்திய வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். நெருக்கடி நிலை ஏற்பட்டதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அதன் சார்பாகப் பேசவேண்டியிருந்தது. என்ன செய்வது? என்கிறார். நாய் வேஷமிட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்! நான் ராவணனாக நடிக்க ஒப்புக்கொண்டு விட்டேனே!

    ராவூரி பரத்வாஜா ஒரு நாத்திகராக இருந்தவர். அவரது கதைகளுக்கு ஏராளமான வாசகர்கள், அவர்களில் ஒருவரான பணக்காரத் தொழிலதிபர் ஒருவர் தன் மகளை இவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். மகிழ்ச்சியான மணவாழ்வில் பரத்வாஜாவுக்கு நான்கு பிள்ளைகள், ஒரு பெண். மனைவியின் மறைவுக்குப் பின் அவர் மதத்தில் அடைக்கலமாகிவிட்டார்.

    இந்திய வாழ்வில் மதிப்புகளின் சீரழிவைச் சாடுகிறார் அவர். தேசம் முழுவதுமே ஒரு பெரிய சேரியாக ஆகிவிட்டது. நமது சட்டசபைகளும் பாராளுமன்றமும் அரசியல் சேரிகள், நமது கலாசாலைகள் கல்விச் சேரிகள், அரசாங்கம் ஒரு நிர்வாகச் சேரி என்கிறார். இதுதான் அவரது அடுத்த நாவலான ‘சந்தை' என்பதின் கதைக்கரு. என் பையன்களை விற்கும் நான், மருமகன்களை விலைக்கு வாங்குகிறேன் என்கிறார். வாழ்வில் அவரது சித்தாந்தம் - பணம் இல்லாமல் போவது வறுமை அல்ல. அன்பும் இரக்கமும் இல்லாமல் போவதுதான் வறுமையிலும் வறுமை!

    சேஷேந்திர சர்மா, வசதியான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி இந்திரா தேவி, ஹைதராபாத்தின் ராஜா தன்ராஜ் கிர்ஜியின் மகள் சர்மாவுக்கு விருப்பமானது கவிதையும், இந்தியாவின் இந்தியத்துவமும்தான். பல வருடங்களுக்கு அவர் மாநகராட்சி ஆணையாளராக இருந்து நகரின் பல சேரிகளை அடிக்கடி பார்வையிட்டிருக்கிறார். ஓரிடத்தில் ஒரு ஓட்டலிலிருந்து வெளியே வீசப்பட்ட உணவுக்காக ஏழைக் குழந்தைகள் பரபரப்பதைப் பார்த்தார். அவர்கள் குப்பையை மொய்க்கும் ஈக்களைப் போலிருப்பதாகத் தோன்றியது. இந்த அனுபவம், அவரது எழுத்துக்குக் கருவாயிற்று. அவரது பிரதான படைப்பு, 'என் நாடும் என் மக்களும்’ தன் படைப்புக்களைத் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். அதில் ஓரளவுக்குத் திருப்தியடையவும் செய்கிறார். அவருக்கும் தன் வாசகர்களோடு பிரச்னைகள் இருந்திருக்கின்றன. ஆபாசமாய் எழுதுகிறார் என்று குற்றம்சாட்டி சிலர் அவரைக் கோர்ட்டுக்கும் இழுத்திருக்கிறார்கள். கடைசியில் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

    பாகவதுல சதாசிவ சங்கர சாஸ்திரி, 'ஆருத்ரா' என்ற புனைப் பெயரில் எழுதும் கவிஞர். ராஜாக்கர் போராட்டத்தைக் கண்கூடாகப் பார்த்து, ஹைதராபாத் இந்தியாவில் இணைந்ததையும் கண்டவர். ராஜாக்கர்களின் போராட்டத்தின் போது ஒரு ரயில் பயணத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை விவரிக்கிறார். ஒரு பெண் பயணி திடுமென எழுந்து நின்று தன் ஆடைகளைக் களைகிறாள். 'இப்படிச் செய்ய உனக்கு அவமானமாக இல்லை?' என்று கேட்டதும், மனிதத்தன்மையின்றி இவர்கள் நடந்து கொள்வதாக அவள் குற்றம் சாட்டுகிறாள். நிஜாமின் குண்டர்களான ராஜாக்கர் போராளிகள் அவள் ஆடைகளைக் களைந்து அவளை மானபங்கப்படுத்தியிருக்கிறார்கள் என்ன மனிதர்கள் அவர்கள்? இந்த விஷயம் ஆருத்ராவின் மனதில் பதிந்து போயிற்று. அதுவே அவரது ‘த்வமேவஹம்' என்ற கவிதையாய் உருவாயிற்று.

    இதர பல கவிஞர்களைப் போலவே, ஆருத்ராவும் சினிமாவுக்குப் பாட்டு எழுதுகிறார். தன் விருப்பத்திற்குக் கற்பனைக் கவிதைகளை மட்டும் எழுதி எந்தத் தெலுங்குக் கவிஞரும் வாழ்ந்துவிட முடியாது.

    மாலதி செந்தூர், தன் தந்தையை இழந்தபோது அவர் ஆறுமாதக் குழந்தைதான். அம்மாதான் அவர் குரு. அவருக்குப் பதினாறு வயதானபோது, அப்போதைய வழக்கப்படி, தாய்மாமனுக்கு மணமுடிக்கப்பட்டார். பல வருஷங்களாகச் சென்னையில் வசித்து வருகிறார்கள் இத்தம்பதி. இங்குதான் அவர் தானாகவே தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளைக் கற்றுக் கொண்டார். திரைப்படங்களின் கேடு விளைவிக்கும் தன்மையும், பணத்தின் மீதான அளவு கடந்த ஆசையும், இன்றைய தலைமுறையை ஆக்கிரமித்துள்ளது குறித்து மிகுந்த கவலையோடு பேசுகிறார்.

    வாஸிரெட்டி சீதாதேவி - 40 நாவல்களின் ஆசிரியையும், சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல இலக்கிய விருதுகளையும், பல்கலைக்கழகங்களிலிருந்து பல கெளரவ டாக்டர் பட்டங்களையும் வென்றவருமான இவர், இதர தெலுங்கு எழுத்தாளர்களிலிருந்து மாறுபட்டுத் தனித்து நிற்கிறார். ஒரு குக்கிராமத்தில், பழமையில் ஊறிய ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். பெண்களைப் படிக்க வைப்பதிலோ, திருமணமாகும் வரை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதிலோ நம்பிக்கை இல்லாத குடும்பம் அது. இவற்றையெல்லாம் எதிர்த்த சீதாதேவி, மேற்படிப்பைத் தொடர்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறியதோடு அல்லாமல் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார். சென்னையில் எம். ஏ. படித்துவிட்டு, ஆசிரியராகப் பணியாற்றியபடி இந்தியிலும் தெலுங்கிலும் எழுதத் துவங்கினார். ஆந்திரா ஒரு தனி மாநிலமாக ஆனபின், ஹைதராபாத்துக்குத் தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு, இன்று வரை அங்கு வாழ்ந்து வருகிறார், திருமணம் செய்து கொள்ளாமலே.

    பெரும்பாலான தெலுங்கு எழுத்தாளர்களைப் போலவே, சீதாதேவிக்கும் நக்ஸல்பாரிகளிடம் அனுதாபம் உண்டு. அவரது நாவல் ‘மரீச்சிகா’ முதலில் தடை செய்யப்பட்டு, பின் உயர்நீதிமன்றத்தால் 1982-ல் தடைநீக்கம் பெற்றது.

    சீதாதேவியும் மற்ற கலைஞர்களைப்போல, கால ஓட்டத்தைக் குறித்தும் இறப்பைக் குறித்தும் தீவிரமான சிந்தனை உடையவராக இருக்கிறார். தனது ஏழாவது வயதிலிருந்தே அதைப்பற்றி அழுத்தமாகச் சிந்தித்து வருகிறார். மரணம் என்பது என்ன? ஒருவர் இறந்தபின் என்ன ஆவார்? உயிர் என்பது எப்படி, எங்கிருந்து வருகிறது? எங்கே, எப்படிப் பிரிகிறது? என்று கேட்கிறார். இப்படிப் பல கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்காமல் போகலாம். அதனால் பரவாயில்லை. என் சிந்தனைகள் இந்த ரீதியில் வளர்ந்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன் என்றும் கூறுகிறார்.

    கன்னடம்

    நவீனக் கன்னட இலக்கியத்திலிருந்து சிவசங்கரி தேர்ந்தெடுத்திருக்கும் ஆறு எழுத்தாளர்ச்களுக்குள் இரண்டு விஷயங்கள் பொதுவில் நிற்கின்றன. எல்லோரும் கர்நாடகத்தில் பிறந்தவர்கள், எல்லோருக்கும் விருதுகளால் அங்கீகாரங்கள் கிடைத்திருக்கின்றன. என்றாலும், அவர்களின் பின்னணியில் வேறுபாடுகள் இருக்கின்றன. சிலர் வசதியான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள், பிற்பட்ட சாதியில் வறுமையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவென்றால் - முற்போக்காளர்கள், அழகியலாளர்கள் என்று எப்படிப்பட்ட முத்திரை பெற்றவரானாலும், எந்தச் சாதியைச் சார்ந்தவரானாலும், பிற்பட்ட சாதிக்காரர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துத் தங்கள் எழுத்துக்கள் மூலம் தீவிரமாக உரத்த குரல் எழுப்பியவர்களாகவே இருப்பதுதான். துரதிருஷ்டவசமாக அப்படைப்புக்களில் ஒருசில மட்டுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால், கன்னடம் படிக்கத் தெரியாதவர்களுக்கு கிரீஷ் கர்னாட், அனந்தமூர்த்தி போன்றவர்களது படைப்புக்கள் மட்டுமே பரிச்சயமாகியிருக்கின்றன. சாகித்ய அகாடமி, ஞானபீட விருதுகள் பெற்றதால் மற்றவர்கள் பெயரளவில் பரிச்சயமாகி இருக்கிறார்கள்.

    சாகித்ய அகாடமி, ஞானபீட விருதுகளைப் பெற்றுள்ள 91 வயது சிவராம் காரந்த், சிறுவர்களுக்கான தனது கலைக்களஞ்சியங்கள் மூலமும், சந்தர்ப்பத்துக்கேற்றபடி அமையும் உரையாடல், பாட்டு, நடனம் நிறைந்த 'யக்ஷகான’ நாடகங்கள் மூலமும், கன்னட இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறார். தொடர்பு கொள்ளுதல் இலக்கியத்தின் பிரதான அம்சம் என்று கூறும் அவர், தன் இலக்கியத்தின் மூலம் வாசகர்களோடு தொடர்பு கொள்ளும்போது, ஒரு எழுத்தாளர் தனக்குத் தெரிந்தது, தெரியாதது இரண்டையுமே எடுத்துச் சொல்ல முனைவது இயற்கை என்கிறார்.

    காரந்த் ஒரு காந்தியவாதி காந்தியைப் போலவே பகவத்கீதையிலிருந்து உத்வேகம் பெறுகிறார்; உண்மையைப் பேசுவதில் உறுதியாக நிற்கிறார். உண்மையை எழுதும் போது தான் பேனா வாளைவிடக் கூர்மையானதாக ஆகிறது. இன்றைய பேனா, விஷத்தைக் கக்குவதாகவே இருக்கிறது. மிகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.

    கடவுள் நம்பிக்கை உண்டா? என்று கேட்டபோது, வாழ்வின் இறுதி நாட்களில் இருக்கும் இந்த மனிதர் மறைக்காமல் கூறுகிறார், முன்பு இருந்தது. இப்போது எதுவுமில்லை. வாழ்க்கை என்பது ஒளிக்குச் சமமானது. அந்த ஒளி நமக்கு மட்டுமில்லாமல் அடுத்தவர் மேலும் வெளிச்சம் விழச் செய்வதாக இருக்க வேண்டும். கற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத வாழ்க்கை, சாரமற்றது, அர்த்தமற்றது. இறுதி மூச்சுவரை வாழ்வு நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.

    யூ. ஆர். அனந்தமூர்த்தியுடன் தனது உரையாடலை சிவசங்கரி, ‘மென்மையான கவிதையைப் படிப்பதுபோல' என்று வர்ணிக்கிறார். அனந்தமூர்த்தியும், கிரீஷ் கர்னாடும், ஆங்கிலம் பேசும் உலகில் மிகப் பரிச்சயமான இரு கன்னடக்காரர்கள். ‘சம்ஸ்காரா' என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நாவல் மூலமும், சாகித்ய அகாடமியின் தலைவர் என்ற ரீதியிலும் அனந்தமூர்த்தி பிரபலமானவர். ஹரிஜனங்களின் பரிதாபநிலை, பாதிக்கப்பட்டவர்களோடுகூட அனந்தமூர்த்தி போன்ற பிராமணர்களுக்கும் வேதனை தந்திருப்பதற்கு 'சம்ஸ்காரா' ஒரு சிறந்த சான்று. அவரைப் பொறுத்தவரையில், தீண்டாமை என்பது பயங்கரமான ஒரு வக்கிரம் இரண்டு தனி நபர்களை இணைக்கும் மென்மையான இணைப்புதான் தொடுதல் என்கிறார். அக்கறையோடுகூடிய மென்மை இல்லாவிட்டால், தொடுதலுக்கு அர்த்தமே இல்லை. தொடுதலும் பாலுணர்வும் மதத்தைப் போன்றவை. அவை ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். வாழ்க்கையே அப்படிப்பட்டதுதான்.

    'சதுரங்க' என்ற புனைப்பெயரில் எழுதும் சுப்ரமணிய ராஜ அர்ஸ், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு நேர்மாறானவர், தேவனூர் மகாதேவா - மூன்று மனைவிகளும் அவர்கள் மூலம் குழந்தைகளும் கொண்ட ஒரு ஹரிஜனப் போலீஸ்காரரின் மகன் அவர். தேவனூர் மகாதேவா பள்ளிப்படிப்பில் தோல்வியடைந்தபோது, அவரை லாக் அப்பில் பூட்டிவைத்துப் படிக்க வற்புறுத்தினார் அவரது தந்தை. ஆனால், அங்கு தன் முதல் சிறுகதையை எழுதினார் மகாதேவா. ஒரு எழுத்தாளரின் முக்கிய கடமை, தொடர்பு கொள்வதுதான் என்று நம்புகிறார் அவர். எழுத்தாளன் என்பவன் ஒரு படைப்பாளி. தான் படைப்பதைப் படைப்பாளியே விளக்க வேண்டும் என்றால், எழுதுவது எதற்கு?

    கன்னடத்தின் மிக சுவாரஸ்யமான எழுத்தாளர் என்று எஸ்.எல் பைரப்பாவைக் குறிப்பிடலாம். தன் தந்தை ஒரு நாடோடி என்கிறார் அவர். தந்தையிடமிருந்து அவருக்கும் அதே ஜீவ அணுக்கள் வந்திருக்கின்றன. ஒரு சமயம் பயங்கர பிளேக் நோயில் ஏறக்குறைய அவரது குடும்பம் முழுவதுமே அழிந்து போயிற்று. அவரது பதினான்காவது வயதிலேயே, தன் ஏழு வயதுத் தம்பியின் சடலத்தை ஒற்றை ஆளாய் தூக்கிப்போய் சுடுகாட்டில் எரியூட்ட வேண்டியிருந்தது. சாப்பாட்டுக்குப் பிச்சை எடுத்திருக்கிறார், சினிமாத் தியேட்டரில் காவலாளியாக இருந்திருக்கிறார், டிக்கெட்டில்லாமல் பயணம் செய்து பிடிபட்டிருக்கிறார், சமையல் எடுபிடியாகப் பணிபுரிந்திருக்கிறார், சமையல் கற்றிருக்கிறார், சிறு நாடகங்களில் நடித்திருக்கிறார், பம்பாய்க்கு ஓடிவந்து 'டோங்கா' ஓட்டுபவர்களுக்கு சமைத்துப் போட்டிருக்கிறார். பிறகு ஒரு சாமியார்க் கூட்டத்தில் சேர்ந்து கடைசியில் மைசூருக்குத் திரும்பிவந்து, ஊதுபத்திக் கட்டுக்களைக் கடையில் விநியோகித்து சம்பாதித்துப் படிப்பைத் தொடர்ந்திருக்கிறார். வகுப்பில் முதல் மாணவனாக வந்தும், பிராமண சாதிக்காரர் என்பதால் உதவித்தொகை அவருக்கு மறுக்கப்பட்டது. பிற்பட்ட சாதியினரான சில பையன்கள், தங்கக் கைக்கடிகாரம் அணிந்தும், விலைமாதுக்களிடம் செல்லும் அளவுக்குப் பணப்புழக்கம் உள்ளவராக இருந்தும்கூட, சாதி அடிப்படையில் உதவித்தொகை பெற்றார்கள். பைரப்பாவின் அனுபவங்கள் அவரைக் கசப்படையச் செய்யவில்லை. மேல்படிப்புப் படித்து, 'உண்மையும் அழகும்’ என்பதைப் பற்றிய ஆய்வையும் முடித்து முனைவர் பட்டம் பெற்றார். ஒரு கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்தார், ஆனால், அவளது பெற்றோர் இவரை மதம் மாறச் சொன்னதால் அந்தக் காதல் திருமணத்தில் முடியவில்லை. இதுவே அவரது நாவல் 'தர் மஸ்ரீ' யின் கருவாயிற்று. "கனமான அனுபவங்களின் அஸ்திவாரத்தில் உருவாவதே என் கதைகள். அதில் நிஜம் இருக்கும், டிராமா இருக்காது' என்று தீர்மானமாய்க் கூறுகிறார்.

    மலையாளம்

    கேரளம், தன் நாட்டில் படிப்பறிவு பெற்றவர்கள் 100% என்கிறது, மற்ற எந்த மாநிலமும், இப்படியொரு அறியாமை நீங்கிய மக்களைப் பெற வெகு காலமாகும். அதற்கேற்ப, கேரளத்தில் வாசகர்களும் மிக அதிகம், மலையாளப் பத்திரிகைகளின் விற்பனையும் மிக அதிகம். இம்மொழியின் முக்கிய எழுத்தாளர்களுக்குச் சிறந்த கெளரவமும், புத்தக விற்பனை மூலம் இந்தியாவின் மற்றெந்த பகுதி எழுத்தாளர், கவிஞர்களைவிட அதிக அளவில் சன்மானமும் கிடைக்கின்றன. ஏழு தலைசிறந்த மலையாள எழுத்தாளர்களின் கருத்துக்களை சிவசங்கரி வெளிக்கொணர்ந்திருக்கிறார்,

    மலையாள எழுத்தாளர்களில் தற்போது மூத்தவர் தகழி சிவசங்கரன் பிள்ளை முதிர்ந்த, தலை நரைத்த, கேட்கும் சக்தி சற்று மந்தமாகிவிட்ட மனிதர். தான் பிறந்த ‘தகழி' கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். பல விருதுகளையும், கெளரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றிருக்கும் அவர், வாசகர்களுக்குச் செய்தி எதனையும் கூற மறுக்கிறார். எழுத்தாளன் என்பவன் ஒரு கலைஞனும் கூட அவன் படைப்பு இயற்கையாகவே வாசகர்களைச் சிந்திக்க வைத்துவிடும் என்கிறார். வாழ்க்கையைக் கூர்ந்து கவனியுங்கள். நியாயமான காரியங்களைச் செய்து, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளுங்கள் என்று இளம் எழுத்தாளர்களுக்குக் கூறுகிறார். இளைஞனாக இருந்தபோது மார்க்ஸீயவாதியாகவும் பகுத்தறிவுவாதியாகவும் இருந்திருக்கிறார். கடவுளை நான் மறுத்தேன். ஆனால், இப்போது கடவுள் இல்லை என்று நான் வாதிடுவதில்லை என ஒப்புக் கொள்கிறார். திருப்தியடைந்த முழு மனிதர் அவர். எனக்கு வருத்தங்கள் ஏதுமில்லை என்கிறார் உறுதியாக.

    ஆங்கில உலகில் நன்கு பரிச்சயமான மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டி - 'கமலாதாஸ்' என்ற பெயரில் அறியப்பட்டவர். நான் மூன்று மொழிகளைப் பேசி இரண்டில் எழுதி, ஒன்றில் கனவு காண்பவள் என்கிறார், தனக்கேயுரிய பூடகமான பாணியில், நான் பேசும் மொழி என்னுடைய தல்லவா? என்கிறார். பாலுணர்வை வெளிப்படையாகத் தனது எழுத்தில் படைத்து, சம்பிரதாயமான வாசகர்களை ஸ்தம்பிக்க வைத்தவர். என்னுடைய நிர்வாணத்தை இரு பரிமாணங்களாக வாராந்திர, மாதாந்திர, காலாண்டுப் பத்திரிகைகளின் பக்கங்களில் நான் நிரப்பியது ஒரு வருந்தத்தக்க தியாகம் என ஒப்புக் கொள்கிறார்.

    கமலாதாஸின் ஜீவ அணுக்களிலேயே கவிதை உண்டு. அவரது தாய் பாலாமணி அம்மா ஒரு பிரபல கவிதாயினி. மலையாளி அல்லாதவர்கள் கமலாதாஸை ஒரு எழுத்தாளராக அறிந்திருக்கையில், கேரளத்தில் அவர் ஒரு கவிதாயினி என்றே பிரபலமாயிருக்கிறார். தனக்குக் கிடைத்திருக்கும் வெற்றியையும் மீறி, ஆண்களைப்பற்றிப் பேசுகையில் அவருக்கு வருத்தமிருக்கிறது. நான் பெண் என்பதாலேயே என்னை வெறுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்கள் என்கிறார்.

    இலக்கியங்களை நன்கு படித்தவரும், பெரிய வாசக வட்டத்தை உடையவருமான எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர், கிராமத்து மண்ணில் தன் வேர்களை அழுந்த ஊன்றியவர். நான் கேள்விப்பட்டிருக்கும் சில அற்புதமான பிரும்மாண்ட சமுத்திரங்களைவிட, நான் பார்த்து, மிக நெருக்கமாக உணர்ந்திருக்கும் என் கிராமத்து ஆறு எனக்கு உன்னதமானது என்கிறார். எழுத்தாளராவதைத் தவிர வேறு எந்தக் கனவும் இல்லாத எம் டி., தனது பதினான்காவது வயதிலிருந்தே எழுதி வருகிறார். எழுதவேண்டும் என்ற நினைப்பு ஒரு எழுத்தாளருக்குள் ஆக்ரமிப்பாக மாறிவிட வேண்டும் என்கிறார் உறுதியாக. இதோடு காந்தம் போலக் கவர்ந்திழுக்கும் மாயாஜால உத்தியும் சேர்ந்தால், அற்புதமான எழுத்து ஜனிக்கும் உலகின் எந்த மொழி இலக்கியத்திற்கும் ஈடாக மலையாளமும் சிறந்த இலக்கியங்களைத் தந்திருக்கிறது எனக் கருதுகிறார் அவர்.

    நவீன மலையாள இலக்கியத்தில் மிகவும் மதிக்கப்படும் படைப்புகள், வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவை. அவரது எழுத்தைப்போலவே அவர் வாழ்வும் சுவாரஸ்யமானது. வறுமையில் பிறந்து, நாடோடியாய் வளர்ந்து, 'திகம்பரர்கள்' எனப்படும் நிர்வாண சாமியார்களோடும் கம்யூனிஸ்டுகளோடும் இணைந்தவர். ஏழு முறை சிறைக்குச் சென்றவர். குடிப்பழக்கத்தின் காரணமாய் மருத்துவமனையில் இருக்க நேர்ந்தவர். தன் அனுபவங்களை ஒளிக்காமல் மனம் திறந்து வாசகர்களுக்குக் கொடுத்தவர். மிகுந்த சிரமத்தோடு குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்தவர். எழுத்தாளனுக்குச் சிந்தனைத் தூய்மை அவசியம். குடி, குழப்பம் என்கிற ஒரே கதவைத் திறந்துவிட்டு, நாசத்துக்கு வழி பண்ணிவிடுகிறது

    இவையெல்லாம் ‘பைத்தியத்தின் உலகம்' என்ற அவரது நாவலில் காணப்படுகின்றன.

    முப்பத்தைந்து வயதான பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் அவரது மனைவி விஜயலஷ்மியும் கவிஞர் தம்பதி. கவிதையே அவர்களை ஒன்றாக இணைத்தது எனலாம். பாலச்சந்திரனுக்கு அதில் மிகுந்த மகிழ்ச்சி. முந்தைய தலைமுறைக் கவிஞர்களுக்குக் கவிதைதான் மதம்; அவர்களது முதலும் கடைசியுமான கடவுளாகக்கூட இருந்தது என்கிறார். இந்தத் தலைமுறைக் கவிஞர்கள் தங்கள் கவிதைப் பாணிக்கு உண்மையாயில்லை, அவர்கள் உழைப்பது போதாது என்றும் சொல்கிறார். ஒரு நல்ல கவிதை உருவாவதற்குமுன், அதற்கான தேடல் இருக்கவேண்டும். உங்களுக்கென ஒரு தென்னை மரம் வேண்டுமென்றால், ஆறு வருடங்கள் முன்பே ஒரு தென்னங்கன்றை நடவேண்டும் என்கிறார்.

    இளைஞரான சேதுவுக்கு, வட இந்திய மொழிகளிலிருந்து மலையாளப் படைப்புக்கள் எப்படி வித்தியாசப்படுகின்றன என்பதைக் குறித்த சுவையான பார்வை உண்டு. சுதந்திரத்திற்குப்பின், வங்காளம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் படையெடுப்பும் இனக்கலவரங்களும் ஏற்படுத்திய கொந்தளிப்புகளைப்போன்று கேரள எழுத்தாளர்கள் அனுபவித்ததில்லை என்று சொல்கிறார். கொந்தளிப்பு, ஒரு எழுத்தாளனைத் தன்னை வெளிப்படுத்த உதவுகிறதா? என்றால், நிச்சயமாக. இல்லையானால், செயற்கைச் சூழ்நிலையிலிருந்து, சூன்யத்திலிருந்து சிருஷ்டிக்க வேண்டிவரும் என்று பதிலளிக்கிறார்.

    ஒரு எழுத்தாளர் தன் மனசுக்கு நியாயமாக நடக்க வேண்டுமே தவிர, ஜனரஞ்சகத்துக்குத் துணைபோகக் கூடாது என நம்புகிறார் சேது. வாசகர் விரும்புவதை எழுதாமல், நாம் எழுதுவதை அவர்கள் படிக்கச் செய்ய வேண்டும்

    சிவசங்கரியின் தொகுப்பில் காணப்படும் இன்னொரு பெண் எழுத்தாளர் சுகதகுமாரி, அவர் ஒரு கவிதாயினி. அவரது தந்தை சுதந்திரப் போராட்டத்திற்காகத் தன் சொத்தில் பெரும் பகுதியைக் கொடுத்துவிட, அவரது தாயின் ஆசிரியப் பணியில் கிடைத்த வருமானத்தில்தான் குடும்பம் வாழ்ந்தது. சுற்றுப்புறச் சுழலைப் பாதுகாப்பதற்கான இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் சுகதகுமாரி. குறிப்பாக, 'அமைதிப் பள்ளத்தாக்கு’ தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டார். சமுதாயச் சிந்தனையை உருவாக்குவதில், ஒரு பண்டிதரைவிட எழுத்தாளர் அதிகம் சாதிக்க முடியும் என்கிறார். அவரது படைப்புக்கள் மூலம், நூற்றுக்கணக்கான சிறு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் மாநிலமெங்கும் உருவாயின. ஜனரஞ்சகமாக எழுதுவது குறித்து அழுத்தமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார் சுகதகுமாரி. பொழுதுபோக்குப் படைப்புக்கள் பெருகி வருகின்றன. அவற்றைச் 'சக்கை' எழுத்துக்கள் என்போம் இந்திய சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்த கமலாதாஸின் கருத்துக்களோடு இவரும் உடன்படுகிறார். பல பெண்கள் சமுதாயத்திற்கு பயந்தவர்கள். குடும்பப் பிரச்னைகளிலும், சொந்த நலனிலுமே மூழ்கியிருக்கிறார்கள். பெண்களுக்கு நேரமில்லை. எழுதவும் துணிச்சலில்லை. பெண்கள் கோழைகள் என்கிறார். காந்தியத்தில் தீவிர நம்பிக்கை உடைய சுகதகுமாரி, மக்கள்தொகைப் பெருக்கம், மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய பிரச்னைகளுக்கு காந்தியமே சிறந்த வழி என்றும் நம்புகிறார்.

    தமிழ்

    இந்தியாவின் மிகப் பழம்பெரும் மொழி என்ற பெருமை, சம்ஸ்கிருதத்திற்கு அடுத்தபடியாக, 2000 வருஷத்து இலக்கியப் பாரம்பரியமிக்க தமிழுக்குத்தான் உண்டு. 60 மில்லியன் இந்தியர்கள் தமிழ் பேசுபவர்கள். தவிர, தனி வானொலியும் தொலைக்காட்சியும் உடைய இலங்கை மற்றும் சிங்கப்பூர் தமிழர்களும், மேற்கு ஆப்ரிக்கா, பிரிட்டன், கனடா, அமெரிக்க நாடுகளில் வசிக்கும் தமிழர்களும்கூட தமிழ் பேசுபவர்கள்தான். தமிழ் செய்தித்தாள்கள், பத்திரிகைகளுக்குப் பெரும் வாசகர் வட்டங்கள் உண்டு. ஆனந்த விகடன், 'குமுதம்' போன்ற பத்திரிகைகள் மிக நன்றாக் விற்பனையாகின்றன. சிறந்த எழுத்தாளர்களுக்கும், எழுதத் துவங்கியுள்ளவர்களுக்கும் வாசகர்களுடனான தொடர்பை இவை ஏற்படுத்துகின்றன. கவிஞர்கள், நாவலாசிரியர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் ஆகியோரின் படைப்புக்களை வாசகர்களுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பினை உருவாக்கும் தமிழ்ப் புத்தக வெளியீட்டகங்கள் ஏராளம் உண்டு.

    மற்றெந்த மொழி இந்தியரையும்விடத் தமிழர்களுக்கு அந்நியத் தாக்கங்கள் அதிகம். ஆங்கிலம் முதன் முதலில் தன் அஸ்திவாரத்தை ஊன்றியது தமிழ் நாட்டில். இதேபோல், சுதந்திரத்திற்கு முன்புவரை பிரெஞ்சு அரசாங்கம் பாண்டிச்சேரியில் ஆண்டு வந்தது. பிரெஞ்சு, ஆங்கிலக் கவிஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புக்கள், கற்றறிந்த தமிழர்களால் பரவலாகப் படிக்கப்பட்டன. அதோடு, பல நூற்றாண்டுகளாக, சம்ஸ்கிருத தமிழ்ப் பண்டிதர்களுக்கிடையே ஆரோக்கியமான, சில சமயம் பகைமையோடும், போட்டி நிலவி வந்திருக்கிறது. பிராமணர்கள் மற்றும் ஆரியர்களின் மொழியாக சம்ஸ்கிருதமும்; பிராமணர் அல்லாதவர், திராவிடர்கள் மற்றும் பிற்பட்ட திராவிடர்களின் மொழியாகத் தமிழும் கருதப்பட்டன. 'நமஸ்காரம்' என்ற சொல்லுக்கு எதிராக 'வணக்கம்'! சில சமயங்களில் இந்தப் போட்டி தீவிரமடைந்து, நாகரிக சர்ச்சைகளின் எல்லைகளையும் தாண்டி வன்மையடைந்ததும் உண்டு. ஆனால், இந்தியாவின் தேசிய மொழியாக இந்தியைத் திணிக்கும் முயற்சி தோல்வியடைந்ததற்கு, தமிழர்களின் தீவிர எதிர்ப்பே முக்கிய காரணம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    தங்கள் தாய்மொழியில் மட்டுமல்லாது இந்திய - ஆங்கில இலக்கியத்திலும் முத்திரை பதித்த பல கவிஞர்கள், நாவலாசிரியர்கள், பத்திரிகையாளர்களைத் தமிழகம் இந்தியாவிற்குத் தந்துள்ளது. இங்கு பட்டியலிட முடியாத அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

    'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ படைப்பின் தொகுப்பாசிரியரின் தாய்மொழி தமிழ்தான். தமிழ் எழுத்தாளர் என்பதோடு ஆங்கிலத்திலும் நன்கறியப்பட்ட தமிழர்களின் சீரிய வரிசையில் சிவசங்கரியும் முக்கியமானவர். தமிழ் இலக்கிய உலகிலும், தனது சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் சாதாரண மக்கள் நடுவிலும் தனக்கென ஓர் இடத்தைக் கொண்டிருப்பவர் அவர். இத்தொகுப்பில் பேட்டி காண ஏழு தமிழ் இலக்கியவாதிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்று, பரவலாக வாசகர்களால் வரவேற்கப்படுபவர்கள். அவர்களிடம் சிவசங்கரி கேட்டுள்ள கேள்விகள், முக்கிய இலக்கியப் போக்குகளிலிருந்து தொடங்கி, பெண் எழுத்தாளர்களின் நிலை, தலித் இலக்கியம், எதிர்காலம் குறித்த கருத்துக்கள் வரை விரிகின்றன.

    மதுரையில் 1937-ல் பிறந்த அப்துல் ரகுமான், ஒரு கல்வியாளர். 29 வருடங்கள் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய பின், எழுத்தை முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளார். அவரது தந்தை பள்ளிக்கூடத்தில் உருதுவும் பாரசீக மொழியும் கற்பித்தவர். ரகுமான் இம்மொழிகளை அவர் மூலம் கற்று, உருது முன்னணிக் கவிஞர் இக்பால் போன்றோரின் கவிதைகளையும், உருது கஜல் பாடல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் ஜப்பானிய 'ஹைக்கூ' வடிவிலும் கவிதைகளை எழுதியுள்ளார். ஆர்ய பிராமண சம்ஸ்கிருதத்தின் பாரம்பரியப் பெருமையுடனான போட்டி மனப்பான்மையில்தான் தமிழ் எழுத்தின் வளர்ச்சி உண்டானது என்று ஒப்புக் கொள்கிறார். சம்ஸ்கிருதத்தைவிட பிராக்ரித் மற்றும் பாலி மொழித் தாக்கங்களைத் தமிழ்மொழி எளிதில் ஏற்றுக் கொண்டது. முகம்மதிய ஆதிக்கத்தின்போது, பாரசீக மொழியின் தாக்கத்தையும் சொற்களையும்கூட தமிழ் ஏற்றது. இலக்கிய உலகில் ரகுமானுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம், தமிழர்களின் அணுகு முறையில் அந்நியத் தாக்கத்திற்கு எதிராக எந்தத் தடையும் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நேர் எதிரான குணமுடைய இரு மனிதர்கள் உண்டு என்கிறார் ரகுமான். எனக்குள் இருவர் இருக்கின்றனர் என்கிறார். ஒருவன் பாடகன், மற்றொருவன் பித்தன்... இருவரும் இரு துருவங்கள்

    சமுத்திரம் (பிறப்பு - 1944), தென்னிந்தியாவின் கடைக்கோடியில் கன்யாகுமரிக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்திலிருந்து வருபவர். ஏழை விவசாயியான தந்தை இறந்தபின் பிறந்து, மிகுந்த வறுமையில், இளம் விதவைத்தாயை மாமியாரும் மற்ற உறவினர்களும் கொடுமைப்படுத்துவதைப் பார்த்தவாறு வளர்ந்தவர். பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து, ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பின், கூட்டுறவுச் சங்கங்களின் கண்காணிப்பாளராகவும், பஞ்சாயத்து அதிகாரியாகவும் உயர்ந்தவர். தற்போது அவர் தமிழக அரசு விளம்பரத் துறையின் இணை இயக்குனர்.

    சமுத்திரம், கவிதை எழுதுவதில்தான் தனது எழுத்துலகப் பணியைத் துவக்கினார். தொடர்ந்து, சிறுகதைகள், நாவல்கள் எழுத ஆரம்பித்தார். தொலைக்காட்சியும் திரைப்படமும் இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தியுள்ள மோசமான தாக்கம் குறித்துக் கவலையோடு பேசுகிறார். அவரது ஆரம்பகால எழுத்துக்கள், குடும்ப உறவுகளைச் சுற்றி அமைந்தன. கடந்த ஐந்தாண்டுகளாக, தமிழர் மற்றும் தமிழ்நாட்டின் பிரச்னைகள் குறித்து எழுதி வருகிறார். தமிழன் இன்று சினிமா என்னும் தேனைச் சுவைக்கப் போன ஈயாகி, இறக்கை நனையும் அளவுக்கு அதிலேயே வீழ்ந்து விட்டான், இதனால் தேனும் கெட்டு விட்டது; ஈயும் செயலற்று விட்டது. சமுத்திரம் குறிப்பிடுவதுபோலத் தமிழர்கள் எவ்வளவு தூரம் சினிமாவினாலும், சினிமா நடிகர்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தமிழ் நாட்டுக்குச் சென்றுதான் பார்க்கவேண்டும்!

    பிரபஞ்சன், பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். கரந்தைக் கல்லூரியில் 'புலவர்' பட்டம் பெற்றவர். ஆசிரியராகவும் பத்திரிகையாளராகவும் இருந்தவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். அவரது படைப்புக்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரெஞ்சுக் காலனியில் ஆரம்ப நாட்களில் வசித்திருந்தாலும், ஒரு கள்ளுக்கடை அதிபரின் மகனாக இருந்த போதும், 'மாப்பஸான்' எழுத்துக்களைத் தவிர வேறு பிரெஞ்சு இலக்கியமோ, அங்கு வசித்த அரவிந்தரின் எழுத்துக்களோ பிரபஞ்சனை அதிகம் பாதிக்கவில்லை. அவர் உணர்ச்சிபூர்வமாக அதிகம் பாதிக்கப்பட்டது சுயமரியாதை இயக்கத்தினால் தான். பிராமணர்களுக்கு எதிரான சுயமரியாதை இயக்கம் 1916- ல் துவங்கியது. முதலில் முதலியார்களால் நடத்தப்பட்டு, செட்டியார்களால் பண உதவி பெற்றாலும், பின்னர் இந்த இயக்கம் எல்லா திராவிடர்களையும் தன்பால் இழுத்துக்கொண்டது. இவ்வியக்கத்திற்கு ஒரு மார்க்ஸிய, மத எதிர்ப்புச் சாயலைக் கொடுத்தவர் பெரியார்.

    பிரபஞ்சன் எழுத்துலகிற்குள் நுழைந்த விதம் சுவாரஸ்யமானது. உடன் படித்த ஒரு பெண்ணால் கவரப்பட்டு அவளுக்குக் காதல் கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதம் எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் அவரது தந்தையின் கைகளில் வந்தடைந்தது. ஒரு பெண் மீது கொண்ட ஈர்ப்புக்காக மகனைக் கண்டிப்பதை விடுத்து அவர் தந்தை 'இப்படி எழுதலாமா?' என்று அன்பு மாறாமல் கேட்டார். இந்நிகழ்ச்சியை ஒரு சிறுகதையாக ஆக்கினார் பிரபஞ்சன். அது 'தீபம்' பத்திரிகையில் வெளிவந்தது. இதற்கு முன்பு அவர் எழுதிய சிறுகதை பத்திரிகையில் வெளிவந்தபோது அவரது வயது பதினான்கு.

    பிரபஞ்சன், தீவிரமான குறிக்கோளுடையவர். உலகம் திரும்பிப் பார்க்கிற மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த வகையில் சில நாவல்களை எழுதத் திட்டம். இந்த நூற்றாண்டை முழுவதுமாகச் சித்தரித்து, மதிப்புகளின் சீரழிவு, அதை எப்படி புனருத்தாரணம் செய்வது போன்ற விஷயங்களை ஒரு புத்தகத்தில் எழுத எண்ணம் என்கிறார்.

    பொன்னீலன் (பிறப்பு - 1940) பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரிகிறார். பயணக்கதைகள், சிறுகதைகள், வாழ்க்கைச் சரிதங்கள் எழுதியுள்ள அவர், ஆங்கிலப் புதினங்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். தன்னை ஒரு முற்போக்காளராக, மார்க்ஸீயவாதியாக வர்ணித்துக் கொள்கிறார். அழகான ஒன்றைப் பாராட்டுவதற்கு அழகை ரசிக்கும் குணம் வேண்டும். பிரபஞ்சம் எவ்வளவு பெரியதோ அத்தனை பெரியது தனிமனிதனின் அகமும் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய அத்தனையும் ஒவ்வொருவரிடத்திலும் நுணுக்கமாக உள்ளது. வெளியே உள்ளதுதான் உங்களிடமிருந்து வெளிப்படுகிறது. பிரபஞ்சத்தில் இல்லாதது வெளிப்படாது. ஆக, புறவயமாக இருப்பது அகவயமாக முகிழ்கிறது. இந்த மாதிரியானப் பார்வையை உருவாக்குவதுதான் மார்க்ஸிய அழகியல் என்கிறார்.

    பொன்னீலனின் வாழ்வில் ஒரு சுவாரஸ்யமான மாற்றம் நடந்திருக்க வேண்டும். கிராமியப் பூசாரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். அவரது தாய் அவ்வளவாகப் பள்ளிப்படிப்பு இல்லா விட்டாலும், தானாகவே இந்தி, ஆங்கிலம், மலையாள மொழிகளைக் கற்றவர். மகன் எழுத்தாளராகத் தூண்டுகோலாக இருந்தவர். பொன்னீலன் ஏராளமாக எழுதி வருகிறார். விருது பெற்ற அவரது நாவல் 'புதிய தரிசனங்கள்' 2000 பக்கங்களைக் கொண்டது.

    இந்திரா பார்த்தசாரதி, கும்பகோணத்தில் 1930 -ல் பிறந்தவர். ஆசிரியரான அவர், டெல்லி, போலந்து, கனடா நாடுகளில் பணியாற்றியிருக்கிறார் திராவிடம் என்ற கருத்தே பிரிட்டிஷார் உருவாக்கியது என்று தீர்மானமாகக் கூறுகிறார். ஜெர்மானியர்கள் சம்ஸ்கிருத்தை ஆதரித்தபோது, அம்மொழியைத் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்றார்கள் ஆங்கிலேயர்கள்.

    இந்திரா பார்த்தசாரதி, ஆசாரம் மிகுந்த வைஷ்ணவ மிராசுதார் குடும்பத்திலிருந்து வருபவர் அவரது தந்தை ஒரு சம்ஸ்கிருதப் பண்டிதர். 'இந்திரா' என்ற பெண் பெயரை வைத்துக் கொண்டிருப்பது பற்றி விளக்குகிறார் பார்த்தசாரதி. இவரது உண்மையான பெயர் ரங்கநாதன் அவர் மனைவி உடல் நலமில்லாமல் படுக்கையில் இருந்தபோது, அவரை உற்சாகப்படுத்த எண்ணி அவரது பெயரில் ஒரு சிறுகதை எழுதினார். அக்கதை 'ஆனந்த விகடன்' பத்திரிகையில் வெளியாயிற்று. பின், இந்திரா என்ற அந்தப் பெயரே ராசியான பெயராக அவரோடு ஒட்டிக்கொண்டு விட்டது.

    பார்த்தசாரதி ஒரு பொறுப்புள்ள எழுத்தாளர். சமுதாயப் பிரச்னைகள், அவலங்கள் பற்றி மக்களிடம் ஒரு தீவிர விழிப்புணர்வை உண்டாக்குவதுதான் நான் எழுதுவதின் நோக்கம். நானே ஒரு வைத்தியராக இருந்து தீர்வைச் சொல்லவேண்டும் என்பது அவசியமில்லை என்கிறார். அவரது முதல் நாவல், டெல்லி வாழ்க்கையை, அதன் மதிப்புச் சீரழிவைப் பற்றியது. அதைச் சரிசெய்யும் வழிமுறை எதனையும் தெரிவிக்க அவர் சிரமப்படவில்லை. மனிதன் மனதில் எது பதிந்து நிற்கிறதோ, எது அவன் சிந்தனையைத் தூண்டுகிறதோ, அதுதான் இலக்கியம் என்று விளக்குகிறார்.

    ராஜம் கிருஷ்ணன், 1925-ல் முசிறியில் பிறந்தவர் முறையான கல்வி அதிகமாக இல்லாத போதும், இலக்கியத்தில் ஆர்வம் இருந்தது. தான் கற்றதை எழுதாமல், தான் அனுபவித்ததைப் பற்றி எழுதுகிறார். ஒரு எழுத்தாளர் சமூக அவலங்களை அலசி ஆராய்ந்து, அவற்றிற்குத் தீர்வும் கூற முயற்சிக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறார். சாதிப் பிரிவினைகள் திராவிடக் கழகம் தோன்றக் காரணமாயிருந்ததைப்போல, பெண்களுக்கு எதிரான வர்க்க பேதங்கள் இவருக்குக் கதையெழுத கருக்களைத் தொடர்ந்து கொடுத்து வருவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

    கணித ஆசிரியரான அவரது தந்தையின் ஆறு குழந்தைகளில் ராஜம் கிருஷ்ணனும் ஒருவர். அவருக்குப் பதினைந்தாவது வயதிலேயே திருமணமாகிவிட்டது. முதன் முதலில் பிரசுரமான தனது கதையை ஆங்கில மொழியில் எழுதியிருந்தார் அவர்.

    ராஜம் கிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர். தனது எழுத்துக்கள் மூலம், தமிழ் நாட்டில் நாவல் படிக்கும் பழக்கமுடையவர்களில் பெரும்பான்மையான பெண்களைச் சென்றடைவதே அவரது லட்சியம். எழுத்து வாழ்க்கைக்கு உபயோகமாக இருக்க வேண்டும், இதுதான் முக்கியம் என்கிறார்.

    புகழ் பெற்ற எழுத்தாளரும் சிந்தனாவாதியுமான ஜெயகாந்தன் சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 1934-ல் கடலூரில் பிறந்த முறையான பள்ளிக்கல்வி இல்லாத ஜெயகாந்தனை, ஒரு சுயம்பு மனிதர் என்றே கூறலாம். சிறந்த படிப்பாளியான இவரது எழுத்துக்களை வளப்படுத்தியவை, இவரின் சொந்த அனுபவங்களும், உலகளவில் வெளியாகியுள்ள சிறந்த எழுத்துக்களைப் படித்ததுமே ஆகும்.

    தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகும் கதைகள் தரம் குறைந்தவை, படிக்கத் தகுதியானவை அல்ல என்ற கருத்து என் மூலம் அகற்றப்பட்டதாக வாசகர்களும் பத்திரிகை ஆசிரியர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தரமான கதைகள் எழுதி, தமிழ் இலக்கியத்தை உலக இலக்கியத் தரத்திற்கு உயர்த்தியவர்களில் நானும் ஒருவன் என்பதே சரியான கணிப்பாக இருக்கும் என்கிறார் ஜெயகாந்தன். எனினும், இலக்கியம் மனிதனுக்கு நல்ல துணையாக இருக்க வேண்டுமே ஒழிய, இலக்கியத்தை நம்பி, அண்டி, மனிதன் இருக்க முடியாது, கூடாது என்றும் கூறுகிறார். ஜெயகாந்தனைப் பொறுத்தவரை, மனிதர்களிடையே ஒற்றுமையைத் தோற்றுவிப்பதும், பல பேதங்களுக்கிடையேகூட நாம் மனிதர்களாக இருக்கிறோம் என்பதும்தான் இலக்கியத்தின் நோக்கமாகும்.

    சிவசங்கரியின் முயற்சிகள் தென்னிந்திய மொழிகளுடன் நின்றுவிடவில்லை. இன்னும்கூட வடக்கு கிழக்கு, மேற்கு மாநில மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்களுடனான பேட்டித் தொகுப்புகளும் வெளியாகவிருக்கின்றன. தற்போதைய முயற்சியை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், அடுத்து வரவிருக்கும் புத்தகங்களும் இதேபோன்று, எடுத்துக்கொண்ட பொருளின் திறனாய்வில் கருத்தாழமுடனும் முழுமையாகவும் வெளிவரும் என்பது உறுதியாகிறது,

    புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியும் சிவசங்கரியின் தீவிர முயற்சியையும், இப்பணியில் அவருக்குள்ள ஆழ்ந்த ஈடுபாட்டையும் பிரதிபலிக்கின்றது. தனது உரையில் அவரே குறிப்பிட்டுள்ளது போல, உலகளவில் படைக்கப்படும் இலக்கியங்களை நன்கறிந்து விமர்சித்து, விவாதிக்கும் அளவுக்கு, இந்திய மொழிகளில் வெளியாகும் இலக்கியம் குறித்தான விழிப்புணர்வு நமக்கு இல்லாமல் போனது வருத்தப்படவேண்டிய விஷயம். சக இந்தியர்களின் கலாச்சார, பாரம்பரியங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி ஒற்றுமை உணர்வைத் தூண்டுவதுடன் நிற்காமல், அவர்களின் இலக்கிய அறிவை விரிவாக்குவதிலும் இம்முயற்சி நிச்சயம் வெற்றிபெறும்.

    தன்னுடைய இந்தப் பணியினால் மட்டுமே இந்திய ஒற்றுமை குறைவின்றித் தழைத்து விடும் என்ற அசாதாரண எதிர்பார்ப்பு கண்டிப்பாகத் தன்னிடம் இல்லை என்று சிவசங்கரி தன் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும், தேசிய ஒருமைப்பாட்டை அடையும் முயற்சியில் அவரது 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ பணியின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் நோக்கத்தில் அவர் முதல் சில அடிகளை எடுத்து வைத்திருப்பதை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

    இந்தப் பிரயாணம் மிக நீண்டதுதான்; எனினும், அவர் ஒரு சலிக்காத பயணி. இந்நீண்ட பாதையில் அவரது பயணம் இனிமையாக அமைய என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். தனது குறிக்கோளில் சிறப்பான வெற்றிகளை அவர் நிச்சயம் பெறுவார் என்று நம்புகிறேன்.

    குஷ்வந்த் சிங்

    தமிழில்: லலிதா வெங்கடேஷ்

    புதுதில்லி

    ஜூன் 1997.

    *****

    என்னுரை

    நான் சின்னப் பெண்ணாக இருக்கையில் என் அம்மா ஒரு கதையைச் சொன்னதுண்டு. 'ஒரு ஊரில் ஒரு ஏழை அனாதைச் சிறுமி வசித்தாள். அவள் ரொம்ப நல்லவள். தன் கஷ்டத்தைப் பாராட்டாமல் அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய நினைக்கும் ரகம். இவள் ஒருநாள், 'கடவுளே - என்னிடம் மட்டும் ஒரு பணம் காய்க்கும் மரம் இருந்தால் எத்தனை பேருக்கு உதவி செய்ய முடியும்!' என்று எண்ணியவாறு உறங்கிவிட்டாள். காலையில் கண் விழித்துப் பார்த்தால், குடிசைக்கருகில் பிரம்மாண்டமாய் ஒரு மரம், அதில் காய்களுக்குப் பதிலாய் வட்ட வட்டமாய் தங்க நாணயங்கள்! "இதற்கு யார் விதை போட்டது: இது எப்போது மரமானது?' என்று போவோர் வருவோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாவிட்டாலும், தினமும் காசுகளைப் பறித்து சகல ஜனங்களுக்கும் அப்பெண் விநியோகித்ததால் அந்த நாட்டில் ஏழ்மை என்பதே இல்லாமல் போனது' - என்று அம்மா சொன்ன கதையின் முன்பகுதியை விட்டுவிட்டு, பின் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட அந்தச் சிறுமியின் நிலையில் நான் இருப்பது புரிகிறது.

    'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற இந்த விருட்சத்திற்கு எது அல்லது யாரால் எப்போது என்னுள் அந்த வீரிய விதை விதைக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியாவிடினும், சரியான மண் வளம், நீர், உரம் கிட்டியதில் இந்த விதை ஆரோக்கியமாக முளைத்து வளர்ந்து, கிளைகளைப் பரப்பிய மாபெரும் மரமாகத் தழைத்து விட்டதும், அதன் நிழல் தரும் சுகத்தையும், பூக்களின் மணத்தையும், கனிகளின் ருசியையும், மரத்தில் கூடுகட்டி வாழும் பறவைகளின் சங்கீதத்தையும் நான் மட்டும் அனுபவிக்க நினைக்காமல், என் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள விழைவதும் நிஜம்.

    இப்போது இந்த முன்னுரையை எழுத உட்காரும் நிமிஷத்தில் என்னுள்ளே சில நினைவுகள் எட்டிப்பார்க்கின்றன. சுமார் பத்து வருஷங்களுக்கு முன் மைசூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், கறுப்பர் இனத்தைச் சார்ந்த அமெரிக்கப் பெண்மணி எழுதியிருந்த நாவல் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் - பங்கேற்க அழைப்பு கிட்ட, சென்றேன். வெவ்வேறு மாநிலங்களைச் சார்ந்த சுமார் இருபது எழுத்தாளர்கள் ஒன்று கூடி, அந்தப் புதினத்தை பல கோணங்களிலிருந்து வரிவரியாக ஆய்வு செய்தது தந்த நினைவுடன் ஊர் திரும்பியபோது சக்தி வாய்ந்த கேள்வி ஒன்று என்னுள் எழுந்தது. கறுப்பர் இலக்கியம், லத்தீன் அமெரிக்கர் இலக்கியம், ஐரோப்பியர் இலக்கியம் என்று உலகளவில் படைக்கப்படும் இலக்கியங்களை நன்கறிந்து விமர்சித்து, விவாதிக்கும் அளவுக்கு, இந்திய மொழிகளில் வெளியாகும் இலக்கியம் குறித்தான விழிப்புணர்வு, மக்களை விடுங்கள், பரவலாக எழுத்தாளர்களுக்கே இருக்கிறதா? நிச்சயம் இல்லை. காரணம்? இந்திய மொழிகளிடையே போதுமான மொழி பெயர்ப்புப் பரிவர்த்தனை நடக்கவில்லை என்பதுதானே?

    மேற்சொன்ன அனுபவம்தான் எனக்குள்ளே நான் அறியாமலேயே ஒரு விதையாயிற்றோ? இருக்கலாம்.

    மற்றொரு சந்தர்ப்பத்தில் ஸிக்கிமில் நடந்த எழுத்தாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதும், அங்கு வந்த எழுத்தாளர்களுக்கு தமிழ் நாட்டின் இட்லி, சாம்பாரும், பட்டுப்புடவைகளும் அறிமுகமாயிருந்தனவே ஒழிய, தமிழ்க் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு குறித்தோ, தற்கால நடப்பு, இலக்கியங்கள் பற்றியோ எந்தப் பரிச்சயமும் இல்லை என்பது அப்பட்டமாக விளங்க, அந்த நிதர்சனம் என்னை மறுபடியும் கேள்வியாகத் தாக்கியது. நம்மைப் பற்றி அவர்கள் அறியவில்லை என்பது இருக்கட்டும், மற்றவர்களைக் குறித்து நாம் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம்? கல்கத்தா என்றால் ரஸகுல்லாவும், ராஜஸ்தான் என்றால் சலவைக் கல்லும், கேரளா என்றால் தேங்காய் நார் பொருட்களும்தானே நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும் விஷயங்கள்? உண்மையில் இந்தியர்களாகிய நாம் மற்ற மாநிலத்தாரின் இலக்கியம், பழக்கவழக்கம், சந்தோஷ துக்கங்களை எந்த அளவுக்குத் தெரிந்து கொண்டிருக்கிறோம், அல்லது அறிந்து, புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்?

    காசியில் வாழும் மனிதர் தன் பிள்ளைக்கு ‘ராமநாத்' என்று தென்கோடி ராமேஸ்வரக் கடவுளான ராமநாதனின் பெயரைச் சூட்டுவதும், தமிழ்ப் பெண்ணுக்கு இமயமலையின் அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும் பெண் தெய்வமான வைஷ்ணவியின் பெயரை வைப்பதும், மீரா பஜன் தெற்குக்கு வருவதும், கதக்களி டெல்லியில் பிரபலமாவதுமாக இப்படி மத, கலை, அரசியல் ரீதியாக சில பிணைப்புக்கள் நடந்து கொண்டிருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், இன்றைய பாரத தேசத்தை இன்னும் இறுக்கமாகப் பின்னி, இறுகச் செய்ய இவை மட்டும் போதுமா? இந்தப் ‘பின்னல்' முயற்சியில் இலக்கியத்தின் பங்கு என்ன? 'பல மொழிகளால் எழுதப்பட்டாலும், இந்திய இலக்கியம் ஒன்றே ஒன்றுதான்' என்று முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது இன்றைய சூழலுக்கும் பொருத்தமானதுதானா? செம்மையான படைப்புகளால் இன்றைக்கும் மக்களின் சிந்தனைகளை வளப்படுத்திக் கொண்டிருக்கும் அஸ்ஸாமின் பிரேந்திரபட்டாச்சார்யாவையும், கர்நாடகத்தின் சிவராம் காரந்தையும், வங்காளத்தின் மஹாஸ்வேதா தேவியையும் எத்தனை இந்தியர் அறிவர்? இந்த அறிமுகத்திற்கும், அதன் மூலம் கிட்டும் பெருமை கலந்த வளர்ச்சிக்கும் மொழியே ஒரு பாலமாக வேண்டாமா?

    சீறிக் கொண்டு எழுந்த மேற்சொன்ன கேள்விகள்தாம் ஒருவேளை என்னுள் விழுந்த வீரிய விதைக்கு உரமாகவும், நீராகவும் அமைந்து அதை முளைவிட வைத்தனவோ! செடியாக, மரமாக பேணிக் காத்தனவோ? இருக்கலாம்.

    தொடர்ந்து - இது குறித்து என்னால் ஏதும் செய்ய இயலுமா? - என்று விடாமல் யோசித்தேன்.

    பாரத தேசம் பழம்பெரும் தேசம்

    நாம் அதன் புதல்வர்.

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

    ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

    முண்டாசுக் கவிஞர் பாரதியின் வார்த்தைகள் எனக்குத் தூண்டுகோலாக அமைய, அவற்றைச் சிரமேற்கொண்டு இலக்கியத்தின் மூலம் இந்திய இணைப்புப் பணியை நான்கு வருஷங்களுக்கு முன் துவக்கியது இப்படித்தான்.

    இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் எட்டாம் பிரிவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பதினெட்டு மொழிகளிலிருந்தும் சில எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வழியே அந்தந்த மாநில மக்களின் கலாசாரம், வரலாறு, இலக்கியத்தை மற்ற இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் இத்திட்டத்தின் தலையாய நோக்கம். அந்தந்த பிராந்தியத்திலுள்ள மொழிகளில் ஆய்வு செய்து, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு என்று நான்கு தொகுதிகளாக இறுதியில் வெளியிட எண்ணம்.

    நினைத்ததைச் செயலாக்க முனைந்தபோது நடைமுறைப் பிரச்னைகள் - 'தனிப் பெண்ணாக மணிப்பூருக்கும், காஷ்மீருக்கும் எழுத்தாளர்களைத் தேடிச் சென்று சந்திப்பது சாத்தியமா?; லட்சக்கணக்கில் தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது? ஒரு மொழிக்கான தயாரிப்பில் இருக்கும்போது, மற்ற மொழிக்கான பயணத்திலும், இன்னொன்றை மொழிபெயர்த்து எழுதுவதுமாக ஒரே சமயத்தில் மூன்று தளங்களில் இயங்குவது தனி நபரால் செய்யக் கூடிய காரியம்தானா?' என்பது போன்ற பிரச்னைகள் - நிறையவே எழுந்தன. இவற்றோடு - 'இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி செய்ய முடியுமா?' என்ற விண்ணப்பத்துடன் மத்திய அரசையும், தேச ஒற்றுமைக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளும் இதர பெரிய ஸ்தாபனங்களையும் அணுகியபோது 'நூதன, சிறப்பான திட்டம்; ஆனால், இதற்கு உதவி செய்ய எங்கள் விதிமுறையில் இடம் இல்லை' என்று அவர்கள் கையை விரித்தபோது மனசு நொறுங்கித்தான் போயிற்று. நான்கு கடிதங்கள் போட்டும் பதில் எழுதாத சில எழுத்தாளர்கள், எந்த விவரத்தையும் கொடுத்துதவ முன் வராத இலக்கிய அமைப்புக்கள் போன்றவர்களின் மனோபாவமும் கூட என்னை பயமுறுத்தவே செய்தன. இருப்பினும், கடவுளின் ஆசீர்வாதமும், பல நல்லிதயங்களின் ஆதரவும் கிட்டியதில், கஷ்டங்களை மீறி செயல்பட முடிந்ததில், இப்போது இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு முதல் தொகுதி உங்கள் கரங்களில் தவழ்கிறது. இது மட்டுமில்லாது, கிழக்கு மொழிகளின் வேலை முடிந்து, அச்சுக்குப் போக அத்தொகுதி தயாராகிக் கொண்டிருப்பதும், மேற்கு மொழிகளின் எழுத்தாளர்களைச் சந்திக்கும் பணி துவங்கியிருப்பதையும் உங்களுடன் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    சொந்தக் கற்பனையில் ஈடுபட்டு, எழுதுவதைத் தொடர்ந்தால் கவனம் திசை திரும்பிவிடும் என்கிற கவலையில் இலக்கியம் மூலம் இந்திய இணைப்புத் திட்டத்தைத் துவக்கிய காலமாய் கதைகள் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். இது குறித்து எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஏனென்றால் இந்த நான்கு வருஷங்களில், பத்து மொழிகளில் எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேட்டியெடுத்து, அந்தந்த மாநிலங்களில் முடிந்த வரையில் பயணித்து, மக்களை, அவரவர் பழக்கவழக்கங்களைத் தெரிந்து கொண்டிருப்பது எனக்குள் உண்டாக்கியிருக்கும் விழிப்புணர்வை எண்ணிப்பார்க்கையில் ஒருவித பிரமிப்புக்கு நான் வாஸ்தவமாக உள்ளாகிறேன். என்ன பேறு செய்தேன் இத்தகைய மகத்தான அனுபவங்களைப் பெற என்று நெகிழ்ந்து போகிறேன். முடிந்த வரையில் எனக்குக் கிட்டிய அறிவை, ஞானத்தை, உணர்ச்சியை, சீக்கிரமே என் பாரத நாட்டு மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற பரபரப்பு என்னை ஆக்ரமிப்பதை உணர்கிறேன்.

    ஒவ்வொரு மொழியிலும் தகுந்தவர்களைத் தேர்ந்தெடுக்க நான் மேற்கொண்ட வழியை இங்கு வெளிப்படுத்துவது அவசியமாகிறது. ஆங்காங்கே இருக்கும் இலக்கிய அமைப்புகள், பத்திரிகை அலுவலகங்களுக்கு அந்த மாநிலத்தின் முக்கிய படைப்பாளிகளை இனம்காட்டும்படி எழுதியதற்கு வந்த பதில்களில், பொதுவாகக் காணப்படும் பெயர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு கடிதத் தொடர்பு கொண்டு, நேரில் சென்று பேட்டி எடுப்பதைப் பின்பற்றியதில், தகுதியான இலக்கியக் கர்த்தாக்களைக் கொண்டே இந்த இலக்கியப் பாலம் கட்டப்பட்டு வருகிறது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். முடிந்த வரையில் இளைய தலைமுறையினரின் கண்ணோட்டத்தையும் சேர்க்க முயற்சித்திருக்கிறேன்.

    இதுவரை நான் சந்தித்த மூத்த எழுத்தாளர்களில் சிலர் ஆயிரம் பிறைகளைக் கண்டவர்கள்; ஓரிருவர் 90 வயதைத் தாண்டியவர்கள். அப்படியும் என்ன நினைவாற்றல், என்ன நிதானம், பேச்சில் என்ன தெளிவு! எல்லா வசதிகளும் சரியாக இருந்திருப்பின், அத்தனை பேட்டிகளையும் 'வீடியோ'வில் பதிவு செய்திருப்பேன் கட்டாயம். தற்சமயம் போட்டோ, 'டேப்'பில் பதிவு என்பதோடு நிறுத்த வேண்டிவருவதில் எனக்குக் குறைதான். அதுவும். மலையாள மொழியின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த வைக்கம் முகமது பஷீரை, நோய்வாய்ப்பட்டிருந்தபோதும் அந்த வேதனையை மறந்து கண்களில் சிரிப்பு வெளிச்சம் போட குறும்புடன் பேசிய பஷீரைக் கடைசியாக நீண்ட பேட்டி எடுத்தது நான்தான். அதன் பின் சில மாதங்களில் அவர் மறைந்துவிட்டார் என்பதை நினைக்கும்போது, அத்தகைய 'நடமாடும் அறிவுப் பெட்டகங்களை' ஒளிநாடாவில் பதிவு செய்யாதது என் குறையை அதிகரிக்கச் செய்கிறது.

    இத்தொகுப்பில் வெளியாகியுள்ள உரையாடல்களில், எழுத்தாளர்களின் கருத்துக்களை, பதிவு செய்யப்பட்ட, பேட்டிகளிலிருந்து முழுக்க முழுக்க அவரவர் வார்த்தைகளையே உபயோகித்து எழுத முயற்சித்திருக்கிறேன். சில எழுத்தாளர்களின் தனிப்பட்ட, முரண்பட்ட கருத்துக்களுக்குக்கூட மறு பக்கம் உண்டு என்பதால், கூடுமானவரையில் எதிர் கருத்துக்களையும் சேகரித்து வெளியிட்டிருக்கிறேன். அப்படியும் குறிப்பிட்ட சில விமர்சனங்களுக்கு விளக்கம் கிட்டாததற்கு, பலமுறைகள் தொடர்புகொண்டும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பேட்டிக்கான நேரத்தை ஒதுக்காததுதான் காரணம்.

    ஒரு மொழியில் பேட்டிகள் தொடங்குவதற்கு முன் அந்த மாநிலத்தைப் பற்றிய சின்ன பயணக்கட்டுரை இடம் பெறுகிறது. யந்திர கதியில் வாழ்ந்து, எதையும் தேடிப்படிக்கக்கூட அவகாசம் இன்றி ஓடிக் கொண்டிருக்கும் சராசரி இந்தியருக்கு மற்ற மாநிலத்தில் வாழும் சக இந்தியர்களை அறிமுகப்படுத்தி வைப்பது இத்திட்டத்தின் நோக்கமாதலால், அவர்களை இலக்கியப் பேட்டிகளுக்குள் இழுக்கும் முயற்சியாக இப்பயணக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். பேட்டிகளையும், அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புக்களையும் படித்தபின், அந்த மாநிலத்தை, அதன் மக்களை, அந்த மொழியை, அதன் இலக்கியத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் வாசகர்களில் ஒரு சிலருக்கு உண்டானால்கூட இத்திட்டத்தை மேற்கொண்டதற்கான பலனை நான் தொட்டுவிட்டதாக மகிழ்வேன்,

    'ஊர் கூடி தேர் இழுப்பது' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்தத் திட்டம் அதற்குச் சரியான சான்றாகிறது. தனி நபராக நான் செயல்பட்டபோதும், எனக்குத் தோள் கொடுக்க எழுத்தாளர்களும், இன்னும் பலரும் முன்வரவில்லை என்றால், இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்கிற என் ஆசை கானல் நீராகவே இருந்திருக்கும்.

    'சரி - இப்படி நான்கு தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் இந்திய ஒற்றுமை குறைவின்றி தழைத்து விடும் என்று வாஸ்தவமாக நினைக்கிறாளா?' - என்ற சந்தேகம் பலருக்கு எழலாம். இல்லை. அப்படியொரு அசாதாரண எதிர்பார்ப்பு கண்டிப்பாக என்னிடம் இல்லை. 'போய்ச் சேர வேண்டிய தூரம் அதிகம்; இதில் முதல் சில அடிகளை எடுத்து வைக்க இந்த முயற்சி உதவ வேண்டும்' - என்பதுதான் என் விருப்பம். இங்கு ராமாயணத்திலிருந்து ஒரு இடத்தை சுட்டிக்காட்ட எண்ணுகிறேன். அனுமன் போன்று மிகப் பெரிய அளவில் உதவ முடியாதபோதும், அணில்கள் தண்ணீரில் முங்கி, மணலில் புரண்டு, சேது அணை கட்டுமிடத்திற்குச் சென்று உடம்பை உதறி, பாலம் கட்ட தங்களால் ஆன உதவியைச் செய்த விவரம் அனேகமாக அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படியொரு சின்னஞ்சிறு அணிலாக இருந்து. என்னளவில் பாரத தேசத்தை இன்னும் உறுதியாகப் பின்னுவதற்கு இழைகளை நெய்யும் முயற்சிதான் இந்த இலக்கியம் மூலம் இந்திய இணைப்புத் திட்டம்.

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி"

    இருந்ததும் இந்நாடே - அதன்

    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

    முடிந்ததும் இந்நாடே - அவர்

    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

    சிறந்ததும் இந்நாடே - இதை

    வந்தனை கூறி மனதில் இருத்தி என்

    வாயுற வாழ்த்தேனோ? இதை

    'வந்தே மாதரம், வந்தே மாதரம்'

    என்று வணங்கேனோ?

    - மகாகவி பாரதி.

    வணக்கம்.

    மே - 1997

    சென்னை

    சிவசங்கரி

    *****

    தேர் இழுக்க வடம் பிடித்து உதவியவர்கள்

    இறைவன்

    துவக்கத்திலிருந்து அனைத்து சிந்தனை, செயல்பாடுகளிலும் கூடவே இருப்பவர்.

    திரு.ஜி.கே. மூப்பனார்

    'சிவசங்கரியின் வெற்றியை என் வெற்றியாக எண்ணி மகிழ்வேன்' என்று துவக்க விழாவில் பெருமிதத்துடன் கூறியதுடன், ஒவ்வொரு கட்டத்திலும் உற்சாகம் கொடுத்து என் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்தவர்.

    திரு. எம். கோபாலகிருஷ்ணன்

    'இலக்கியத்தின் வளர்ச்சியில் 'இந்தியன் வங்கி 'க்கும் பங்குண்டு' என்று சொல்லி, வங்கி சேர்மனாக இருந்த சமயத்தில் முதல்கட்ட வேலைகளுக்கு நிதி உதவி செய்தவர்.

    திரு. ஆர். சுப்ரமணியம்

    ‘இந்திய ஒற்றுமைக்கான இம்முயற்சியில் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது' என்று கூறி, தான் சேர்மன் - மானேஜிங் டைரக்டராக இருக்கும் 'ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ்' மற்றும் 'மேக்ஸ்வர்த்' க்ரூப் ஆஃப் கம்பெனிகள் மூலம் இரண்டாம் கட்டப் பணிகளை மேற்கொள்ள பொருள் தந்தவர்.

    திரு. குஷ்வந்த் சிங்

    இப்பணியின் துவக்க விழாவில் கலந்து கொண்டதும் அல்லாமல், கேட்ட மாத்திரத்தில் சுமார் 700 பக்கங்களைப் படித்துப் பார்த்து, முன்னுரை எழுதித் தந்து, என்னைப் பெருமைப்படுத்தியவர்.

    எழுத்தாளர்கள்

    பேட்டிக்கு ஒப்புக் கொண்டு, எந்தக் கேள்விக்கும் முகம் சுளிக்காமல் பதிலளித்து, ஸ்னேகத்தோடு பழகியவர்கள்.

    கதை, கவிதைகளை மொழிபெயர்த்துத் தந்துதவியவர்கள்

    திரு. சச்சிதானந்தம் (செயலர், மத்திய சாகித்ய அகாடமி)

    மத்திய சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளை இத்தொகுப்பில் சேர்க்க அனுமதி தந்தவர்,

    திரு. எம்.டி. வாசுதேவன் நாயர்

    'சிவா, எழுத்தச்சனின் ஆசியுடன் இவ்வேள்வியை நீங்கள் தொடங்க வேண்டும்' என்று நம்பிக்கையுடன் கூறி, 'மலையாள மொழியின் தந்தை’யாகக் கருதப்படும் எழுத்தச்சனின் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றதோடு, பழம்பெரும் எழுத்தாளர்களான தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர் போன்றவர்களைச் சந்திக்க தானே என்னை உடன் அழைத்துச் சென்றவர்.

    திரு. பி. சி. ராமகிருஷ்ணா |

    'உங்கள் இலக்கியப்பணி குறித்து கேள்விப்பட்டேன். இதில் எந்த விதத்தில் நான் உதவ முடியும்?' என வலிய வந்து கேட்டு, ஒலிநாடாக்களில் இருந்த பேட்டிகளை எழுத்தாக்கம் செய்து தந்தவர்.

    திரு. நாராயணன் (சேர்மன் - ஆந்திரா வங்கி),

    திருமதி பிரியா நாராயண்

    ஆந்திராவைச் சுற்றிப் பார்த்து, பயணக்கட்டுரை எழுத உதவியவர்கள்,

    மைசூர் தமிழ்ச் சங்கம்

    மைசூரில் வசித்த கன்னட எழுத்தாளர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து தந்தவர்கள்.

    திரு. கிருஷ்ணமூர்த்தி (முன்னாள் உதவி ஆசிரியர், சாகித்ய அகாடமி, சென்னை)

    கடந்த நான்கு வருஷங்களில் இலக்கியம் குறித்து எனக்குத் தேவையான விவரங்களை அவ்வப்போது தந்து பெரிய அளவில் உதவியவர்.

    திரு. மாலன்

    'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ துவக்க விழாவை ஏற்பாடு செய்த நாள் தொடங்கி உடனிருந்து, 'உங்களால் முடியும், செய்யுங்கள்' என்று உற்சாகம் கொடுத்தவர். மக்களை இந்த முயற்சி சென்றடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், ‘தினமணி'யின் ஆசிரியராக இருந்தபோது மலையாள, கன்னட, தெலுங்குப் பேட்டிகள் 'சுடர்' இதழில் வெளிவரக் காரணமானவர்.

    திருமதி லலிதா வெங்கடேஷ்

    இத்திட்டத்தின் 'கரு' உருவான நாளிலிருந்து, இத்தொகுதி புத்தகமாய் வெளியாகும் வரை சகலவிதத்திலும் - புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து குறிப்பு எடுப்பது, அவசியமானால் மொழிபெயர்ப்பது, வெளியூர்ப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்வது, எழுதிய கட்டுரைகளைத் தொகுப்பது, அச்சுப்பிழை திருத்துவது என்று அனைத்துக் காரியங்களிலும் - எனது வலதுகரமாய் செயல்பட்டவர்.

    என் குடும்பத்தார்

    கண்களில் பெருமையும் சந்தோஷமும் வெளிச்சம்போட எனக்கு ஊக்கம் தந்தவர்கள்.

    என் வாசகர்கள்

    'நான்கு வருஷங்களாக நீங்கள் கதைகள் எழுதாதது குறையாக இருப்பினும், எடுத்துக் கொண்ட காரியத்தை நல்லவிதமாய் முடியுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்' என்று அன்போடு கூறியவர்கள்.

    இவர்களைத்தவிர, என் டைப்பிஸ்ட் ஸ்ரீகுமாருக்கும், உறுதுணையாய் நின்ற நண்பர்களுக்கும், இப்புத்தகத்தை உருவாக்க ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், நெகிழ்ந்த நெஞ்சோடு

    மனப்பூர்வமான

    நன்றிகளைத்

    தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிவசங்கரி

    *****

    கேரளம்

    மலையாளம்

    ஆதிநாட்களில் 'பரசுராம க்ஷேத்ரம்' அல்லது 'பரசுராமரின் பூமி' என்று குறிப்பிடப்பட்டு, தற்சமயம் 'கேரளம்' என்று அழைக்கப்படும் மாநிலம் இந்திய நாட்டின் தென்கோடியில் உள்ள பிரதேசம். இங்கும், லட்சத்தீவுகளிலும் பிரதானமாகப் பேசப்படும் மொழி, மலையாளம்.

    இன்றைக்கு மலையாளம் என்ற சொல் ஒரு மொழியை இனம் காட்டினாலும், துவக்கத்தில் மலைக்கும் (மேற்குத் தொடர்ச்சி மலைகள்), 'ஆழம்' (அரபிக்கடலுக்கும்) இடைப்பட்ட நிலப்பரப்பே 'மலையாளம்' என்பதாக அறியப்பட்டு வந்தது என்று ஒரு கருத்து ஆராய்ச்சியாளர்களிடையே நிலவி வருகிறது. 'மலைகள் நிறைந்த பூமி' என்பது கூட இப்பெயருக்குப் பொருந்தும் என்றும் ஒரு விளக்கம் இருக்கிறது இந்த மொழி 'கேரள பாஷா' என்று 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 'லீலா திலகம்' என்ற நூலிலும், 'மலையாளம்புழா' என்று 17-ம் நூற்றாண்டில் டச்சு மொழியில் வெளியான 'ஹோர்டஸ் மலபாரிகஸ்' என்ற தாவரவியல் நூலிலும் அழைக்கப்பட்டிருக்கிறது.

    மலையாள மொழியின் பிறப்பைப் பற்றிக் கூட பல கருத்துக்கள் நிலவுகின்றன. இது சம்ஸ்கிருதத்திலிருந்து ஜனித்தது என்று கூறும் மிகப் பழமையான வாதம் ஒரு பக்கம் என்றால், பூமிபுத்திரர்களான ஆதிவாசிகளின் மொழியும், ஆதிதிராவிட மொழியும் கலந்ததில் தோன்றியது என்றும், சம்ஸ்கிருதமும் தமிழும் இணைந்து உருவானது என்றும், மூத்த மொழியான தமிழின் மகள் என்றும், இல்லையில்லை, ஆதிதிராவிட மொழியின் மகள், அதனால் தமிழுக்கு சகோதரி என்றும் சில வாதங்கள் இன்னொரு பக்கம்.

    எது எப்படியோ, மலையாள மொழியில் முதல் ஆதார ஆவணங்கள் 9-ம் நூற்றாண்டைச் சார்ந்தவையே. துவக்கத்தில் இம்மொழி வட்டெழுத்து என்ற வகையில் எழுதப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்றைக்குப் புழக்கத்தில் இருக்கும் வடிவு 13-ம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் முறைப்படுத்தப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.

    கேரள நாடு தோன்றியதற்குப் புராணரீதியாகச் சில கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று - பரசுராமராக அவதரித்த இறைவன், க்ஷத்ரியர்களைப் பூண்டோடு அழித்து முடித்தபின், ஒருவித மனச்சோர்வுக்குள்ளாகி மேற்கு மலைத் தொடர்களில் கடும் தவம் புரிந்து விட்டு, தன் கோடாலியை வீசியெறிய, அது சமுத்திரத்தில் விழுந்தபோது, கிட்டத்தட்ட அதே அமைப்பில் பூமியாக உருமாறிய பகுதிதான் இன்றைய கேரளம், இதனாலேயே இது பழங்காலத்தில் 'பரசுராம க்ஷேத்ரம்' என்று அழைக்கப்பட்டது என்பதாகும்.

    'வாமன அவதாரத்திற்குக் காரணமான மஹாபலி சக்ரவர்த்தி ஆண்ட பூமி இது. அவரை ஆட்கொள்ளவென மகாவிஷ்ணு வாமனனாக வந்து, மூன்றடி நிலத்தை யாசகமாகக் கேட்டு, பின்னர் இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு விஸ்வரூபம் எடுத்து மூன்றாவது அடியை வைக்க இடம் கேட்டபோது, தன் தலையையே அர்ப்பணித்தவர் மஹாபலி. அவருடைய தீவிர பக்தியை மெச்சியதோடு மக்களிடம் மஹாபலிக்கு இருந்த பிரபலத்தினாலும், வருஷத்துக்கு ஒரு முறை அவர் கேரளத்திற்கு வந்துபோக இறைவன் வரமளித்தார். அப்படி மஹாபலி வந்துபோகும் நாளைத்தான் நாங்கள் 'ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். ஆக, எங்கள் மாநிலத்தின் வரலாறு தொன்மை வாய்ந்தது' என்று தங்கள் கூற்றுக்கு ஓணம் பண்டிகையை சாட்சியாகக் கொண்டு நிறுத்துபவர்களும் உண்டு.

    வரலாற்று ஆசிரியர்களில் ‘கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைக்குக் கேரளம் என்று அறியப்படும் பிரதேசம் பல வெளிநாடுகளுக்கும் பரிச்சயமாகும் அளவுக்குப் பிரபலமாக இருந்தது' என்பவர்களும் உண்டு. முன்பு பாபிலோனியாவை ஸாலமன் அரசர் ஆண்டபோது அவருடைய அரண்மனையை அலங்கரிப்பதற்காக இங்கிருந்து தந்தம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறதாம்! ஷீபா அரசி, ஜெரூசலம் நகருக்குப் பட்டிணப்பிரவேசம் செய்தபோது தன்னோடு எடுத்துப் போன மசாலாக்கள், சந்தன மரம் போன்றவை. அன்று 'மசாலாக் கடற்கரை' என்று பிரபலமாய் இருந்த இன்றைய கேரளப் பகுதியிலிருந்துதான் சென்றன என்பதும் சில அறிஞர்களின் கண்டுபிடிப்பு!

    பண்டைய நாட்களில் மாமிசத்தைப் பதப்படுத்தி வைக்க 'மிளகு' பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டதால், கப்பல்களில் ஏற்றி மிளகை அந்நிய நாட்டுக்கு முதன் முதலில் எடுத்துச் சென்றவர்கள் அரேபியர்கள். எகிப்திலுள்ள 'அலெக்ஸாண்ட்ரியா' துறைமுகத்துக்கும், இன்று கொடுங்கள்ளுர் (Cranganore) என்றும் முன்பு 'முசிரிஸ்' (Mussirs) என்றும் அழைக்கப்பட்ட கேரளத் துறைமுகத்துக்கும் இடையில் இருந்த கப்பல் போக்குவரத்தின் மூலம் வாணிபம் வெகு ஜோராக நடந்திருக்கிறது.

    கொடுங்கள்ளுரைப் பற்றிக் குறிப்பிடுகையில் சில ஆச்சர்யமான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். முதல் நூற்றாண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ இந்த இடத்தில் யூதர்களும், கிறிஸ்தவர்களும், முகம்மதியர்களும் வந்து இறங்கி விட்டதில் இந்தியாவிலேயே முதன் முதலில் கட்டப்பட்ட ஸினகாக் (Synagogue) தேவாலயம் (Church), மசூதி (Mosque) இன்றைக்கும் வரலாற்றுச் சின்னங்களாகக் காணப்படுகின்றன!

    1498-ல் வாஸ்கோடகாமா, கோழிக்கோட்டை அடுத்துள்ள 'கப்பாட்' (Kappad) - ல் காலடி எடுத்து வைத்ததைத் தொடர்ந்து போர்த்துகீசியர்களோடு வாணிபம் அதிகமாயிற்று. பின்னர் டச்சுக்காரர்கள், கொஞ்ச நாளைக்கு பிரெஞ்சுக்காரர்கள், அப்புறம், இறுதியில் வெள்ளையர்கள். வியாபாரப்போக்கு கைமாறியதைப் பற்றி எழுதுகையில் டச்சுக்காரர்கள் 1599-ல் மிளகின் விலையை 5 ஷில்லிங் கூட்டியதற்கு ஆங்கிலேயர்கள் எதிர்ப்பைத் தெரிவித்து 'ஈஸ்ட் இந்தியா கம்பெனி'யை உருவாக்கி தங்களுக்கென ஒரு வர்த்தக அமைப்பைத் தோற்றுவித்தார்கள். ஆக, இந்தியச் சரித்திரத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்தது ஒரு சின்ன மிளகு சமாசாரம் தான்' என்று விளையாட்டாக ஒரு குறிப்புக்கூட காணப்படுகிறது!

    அந்நியர்களின் வருகையைத் தவிர்த்து சரித்திரத்தை நோக்கினால், இந்த பூமி சேரமன்னர்களால் நீண்டகாலத்துக்கு ஆளப்பட்டது தெரியவரும். 'சேரர்கள் பூமி' என்பதாலேயே இது சேரளம்' என்று அழைக்கப்பட்டது என்றும், பிற்காலத்தில் இது மருவி 'கேரளம்' ஆனது என்றும் சொல்கிறார்கள்.

    நான் முதல் முறையாகக் கேரளத்திற்குச் சென்றபோது எனக்கு வயசு 6. ஆல்வாய் என்ற இடத்தில் என் தந்தையின் நெருங்கிய நண்பர் வசித்து வந்தார். குடும்பமாகச் சென்று சுமார் ஒரு மாசம் போல அவர் வீட்டில் தங்கி வந்தது என்னால் மறக்க இயலாத ஒரு அருமையான பயணம், ஓடுகள் வேயப்பட்ட பங்களா. சுற்றிலும் பெரிய பெரிய காய்களுடன் பலா, தென்னை, பாக்கு மரங்கள். இடுக்கில் ஓரிரண்டு மா மரங்கள். தலையைப் பின்னுக்குத் தள்ளி மேலே பார்த்தால் வானம் தெரியாதபடி பலாமரத்தின் இலைகள் பச்சைக் கூடாரமாய் கவிழ்ந்திருக்கும், பின் தோட்டத்தை ஒட்டியிருந்த படிக்கட்டுகளில் இறங்கினால் சுழித்துக்கொண்டு ஓடும் ஆறு.

    காலையில் உச்சந்தலையில் எண்ணை வைத்துக்கொண்டு கூட்டமாய் ஆற்று நீரில் இறங்கி விடுவோம். பெரியவர்கள் கழுத்தளவு நீரில் அமிழ்ந்தபடி பாட்டுப் பாடுவார்கள், பேசுவார்கள். குழந்தைகள் நீச்சல் கற்றுக் கொள்கிறோம் என்று கை, கால்களை உதைத்து, கத்தி, ரகளை செய்வோம். இரண்டு மணி நேரம் குளித்தபின், சிகப்பு அரிசிச் சோறு: பப்படம்; வாழை, சேனைக் காய்கள் போட்டு கூட்டு; நேந்திர வறுவல்; சக்கைப்பழம் (பலா) - இத்தியாதிகளுடன் செமை சாப்பாடு! கை கழுவி எழும்புவதற்குள் தூக்கம் கண்களில் ஏறி உட்கார்ந்துவிடும். மாலை திரும்பவும் குளியல். இரண்டு நாட்களுக்கொரு முறை படகில் ஏறிக்கொண்டு காலடி, அம்பலப்புழா என்று சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் சென்று வருவோம். ஆதிசங்கரர் பிறந்து, வளர்ந்த 'காலடி' மண்ணை ஸ்பர்சித்ததையும், அம்பலப்புழாவின் புகழ் பெற்ற பால்பாயஸத்தைத் திகட்டத் திகட்ட குடித்ததையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன், மனசு பூராவும் தித்திக்கிறது.

    'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற இத்திட்டத்திற்காகக் கடந்த சில ஆண்டுகளில், நான் இதுவரை கண்டிராத கேரளப் பகுதிகளுக்குப் பல முறைகள் சென்று வந்தேன். பெரிய நகரங்களைத் தவிர, சின்ன ஊர்களும், கிராமங்களும் முன்பு கண்டு மகிழ்ந்த அதே பசுமை, வளம், எளிமையுடன் திகழ்வது சந்தோஷத்தைத் தந்தது. கேரள நகரம் எதுவானாலும் சரி, ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊரைவிட்டுச் சென்றுவிட்டால் போதும் - பச்சைப்பசேலென்ற பசுமை நம்மைத் தழுவி வரவேற்பது நிச்சயம். முந்திரி, பலா, மா, தென்னை, பாக்கு, தேக்குமரத் தோட்டங்கள். நடுநடுவில் செக்கச் செவேலென்ற பூக்களுடன் சிரிக்கும் செம்பருத்திச் செடிகள், மரகதக் கம்பளமாய் விரிந்திருக்கும் நெற்பயிர்கள் - என எங்கு நோக்கினும் பசுமைப் புரட்சிதான்! சாலையை ஒட்டி கூடவே நம்மோடு நட்போடு ஓடிவரும் ஓடைகள், சிகப்பு ஓடுகள் வேயப்பட்ட சரிந்த கூரைகளைக் கொண்ட வீடுகள், செவ்வாழை, நேந்திரங் குலைகளை சரம் சரமாகத் தொங்கவிட்டு, சுக்குக் காபி, டீ, வகையறாக்களை விற்கும் சின்ன டீக்கடைகள், கக்கத்தில் இடுக்கிய குடைகளுடன் நடமாடும் மலையாளிகள்! கேரளமெங்கும் தப்பாமல் தென்படும் 'மண் வாசனை'க் காட்சிகள் பல சந்தர்ப்பங்களில் ஒரு ஓவியத்தைப் பார்க்கிற உணர்வையே எனக்கு ஏற்படுத்தியுள்ளன.

    ஆனால், அம்மக்களில் ஒரு பகுதியினர் கடந்த 10 ஆண்டுகளில் அரபு நாடுகளுக்குச் சென்று எக்கச்சக்கத்துக்குப் பணத்தை ஈட்டி வந்ததற்கான 'நாகரீக 'க் காட்சிகளும் இல்லாமல் போகவில்லை. ரம்யமான சூழலில் திடுமென அடிக்கவரும் பச்சை, நீல, ரோஜா வண்ணத்தில் பிரும்மாண்டமாக ஒரு பகட்டு பங்களா, அதன் சுற்றுப்புறத்துக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாமல் நிற்பது கண்ணை, மனசை உறுத்தத்தான் செய்கிறது. 'துபாய்ப் பணம்!' என்று உதட்டில் சின்னச் சுழிப்போடு கூடவந்த மலையாள எழுத்தாள நண்பர் சொன்னபோது, இதமான ராக ஆலாபனைக்கு நடுவே தோன்றும் அபஸ்வரம் போல இந்த ஊடுருவல்கள் அவரையும் சுளிக்க வைத்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

    இன்றைய கேரளம், முன்பு மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்ததை வடக்கு மலபார், கொச்சின், திருவிதாங்கூர் சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து 1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது உருவானது. மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோவளம் கடற்கரை, உலகின் அழகிய, சிறந்த பத்து கடற்கரைகளுள் ஒன்றாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. திருவனந்தபுரத்தில் பத்மநாபஸ்வாமி கோவிலும், ஸ்ரீ சித்திரைத் திருநாள் ஆர்ட் காலரியும் என்னை வெகுவாகக் கவர்ந்த இடங்கள். இந்தப் புராதனக் கோவில் கலியுகத்தின் துவக்கத்தில் கட்டப்பட்டது என்றும், மூலவர் சிலை 1001 சாலிக்கிராமக் கற்களோடு, கடுகும் வெல்லப்பாகும் சேர்த்து உருவாக்கப்பட்டிருப்பதால் இங்கு மூலவருக்கு அபிஷேகம் செய்யும் வழக்கம் இல்லை என்றும் தெரிவித்தார் கோவிலுக்குள் நான் சந்தித்த நபர். கோவில் உருவானதற்குக் கர்ணபரம்பரையாய்ப் பல கதைகளைக் கூறுகிறார்கள். அவற்றைக்கூற ஆரம்பித்தால் அதற்கே இந்தக் கட்டுரையின் பக்கங்களைச் செலவிட வேண்டிவரும் என்பதால், விட்டு விடுகிறேன்.

    சித்திரைத் திருநாள் ஆர்ட் காலரியில் உள்ள ஓவியங்கள் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாதவை. ராஜா ரவிவர்மா வரைந்த பல உயிரோட்டமுள்ள ஓவியங்களை, ஒவ்வொரு அறையிலும் 'திணித்து’ வைத்திருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். பாரீஸில் உள்ள 'லுவர்' அருங்காட்சியகத்தில் 'மோனாலிஸா' ஓவியத்தை மிகச் சிறப்பாக மக்கள் பார்வைக்கு வைத்திருக்கும் விதத்தில் (சரியான ஒளி, கோணம் இத்தியாதிகளோடு) ரவிவர்மாவின் ஓவியங்களையும் காட்சிக்கு - display வைத்தால் உலகளவில் இன்னும் இந்தப் படங்கள் பேசப்படும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்,

    மலப்புரா மாவட்டத்தில், கோழிக்கோட்டிலிருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தூரத்தில் திரூர் உள்ளது. இங்கு மலையாள மொழியின் தந்தையாகக் கொண்டாடப்படும் 'எழுத்தச்சனின்' நினைவாலயம் இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை இத்தலத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. முதல் தரம் புகழ்பெற்ற எழுத்தாளரான எம்.டி. வாசுதேவன் நாயர், 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு'க்கான பணியை நான் கேரள மாநிலத்திலிருந்து துவங்கப் போவதை அறிந்து, 'சிவா, நீங்கள் எழுத்தச்சனின் ஆசியுடன் வேலையைத் தொடங்குங்கள்' என்று கூறி, தானே என்னை அங்கு அழைத்துச் சென்றார். 'துஞ்சன்பரம்பு' என்னும் இடத்தில் ஒருசில மண்டபங்களைத் தவிர்த்து மற்றபடி வெறுமையாக இருந்த நினைவகத்துள் எழுத்தச்சன் உபயோகித்த இரும்பு எழுத்தாணியை என் கையில் ஏந்தச் செய்தபோது, உடம்பு பரவசத்தில் உதறித்தான் போட்டது. சென்ற ஆண்டு எழுத்தச்சனின் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள பல மாநில எழுத்தாளர்களுக்கும் அழைப்பு கிட்ட, நானும் போயிருந்தேன். தற்சமயம் எம்.டி. வாசுதேவன் நாயர் அந்த நினைவகத்தின் தலைவராக இருந்து செயல்படுவதில் மிகப் பெரிய நூலகக் கட்டிடம், கருத்தரங்கு மண்டபம், எழுத்தாளர்கள் ஓய்வாகத் தங்கி எழுத்துப் பணியில் ஈடுபட விரும்பினால் அதற்கேற்றவாறு குடியிருப்புகள் - என்று நானாவித வளர்ச்சி அடைந்திருப்பது கண்டு பிரமித்தேன். திரூரில் தங்கியிருந்த மூன்று நாட்களும் கேரள மாநிலத்தை எனக்குப் புதுக் கண்ணோட்டத்தில் அறிமுகப்படுத்தியது நிஜம். வருஷா வருஷம் தஸரா கொண்டாட்டத்தில் விஜயதசமி அன்று சுமார் 3000 குழந்தைகளுக்கு அங்கு 'அட்சராப்பியாசம்' நடத்தப்படுவதும், மொழியின் தந்தைக்கு எடுக்கப்படும் விழாவைத் தங்கள் வீட்டுத் திருமணம் போல ஊரே ஒன்று திரண்டு நடத்துவதும், எழுத்தாளர்களுக்கு வேளாவேளைக்குப் பலதரப்பட்ட கேரளத்து உணவுப் பதார்த்தங்களைக் கிட்ட நின்று ஊரார் பரிமாறியதும், சம்பந்தி உபசரிப்போடு எங்களை அவர்கள் கவனித்துக் கொண்டதும்... அம்மக்களுக்கு இலக்கியத்தின்பால் உள்ள மதிப்பை, ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தன. இதோடு, வேற்று மொழிக் கவிஞரின், எழுத்தாளரின் கவிதை களை, உரையைக் கேட்கக்கூட உள்ளூர் மக்கள் திரளாகக் கூடியது பொதுவாக எழுத்தாளர்களுக்கு அவர்கள் தந்த மரியாதையை பறைசாற்றியது.

    கேரள மாநிலத்தில் எந்த விழாவும் - அது ரோட்டரி சங்கம் நடத்துவதாக இருந்தாலும் சரி, சினிமா இலக்கிய அமைப்புகள் மேற்கொள்வதாக இருப்பினும் சரி, 'மண் வாசனை' யோடு கூடியவையாக அமைவது என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

    தென்னங்கீற்றுத் தோரணங்கள், பூக்களாலான கோலம், பறை எனப்படும் வேலைப்பாடு கொண்ட மரப்பாத்திரத்தில் நெற்மணிகளை நிரப்பி, அதில் தென்னம்பூக்களைச் செருகி வைத்த அலங்காரம், பஞ்ச வாத்தியங்களின் முழக்கம் என்று அனைத்தையும் தவறாமல் காணலாம்.

    பொதுவாகவே கேரள மக்கள் எளிமையானவர்கள் தாம் இயற்கை அன்னையின் பூரிப்பு எங்கும் இருப்பதை எடுத்துக்காட்டும் விதமாய் மக்களின் தோற்றம், ஏன், பழக்க வழக்கங்கள்கூட எளிமையாகக் காணப்படுகின்றன. முண்டு உடுத்தி, ஈர முடியை நுனி முடிச்சுப் போட்டுத் தளரவிட்டு, நெற்றியில் சந்தனக் கீறும், மெல்லிய

    Enjoying the preview?
    Page 1 of 1