Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iraiyuthir Kaadu - Part 2
Iraiyuthir Kaadu - Part 2
Iraiyuthir Kaadu - Part 2
Ebook893 pages6 hours

Iraiyuthir Kaadu - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழநிமலை முருகனை நவபாஷாணங்கள் கொண்டு செய்வதற்காக போகர் எந்தெந்த மலைகளுக்கு சென்றார்? நவபாஷாணங்கள் கிடைத்ததா? இல்லையா? என்பதை 'அன்று' பகுதியிலும், கதையின் நாயகியான பாரதியிடம் இருக்கும் பெட்டியில் என்ன இருந்தது? அதை அவள் யாரிடம் ஒப்படைத்தாள்? எதற்காக ஒப்படைத்தாள்? என்பதை 'இன்று' பகுதியிலும், சில சுவாரஸ்யமான திடுக்கிடும் தகவல்களையும் வாசித்து தெரிந்து கொள்வோம்...!

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580100709977
Iraiyuthir Kaadu - Part 2

Read more from Indira Soundarajan

Related to Iraiyuthir Kaadu - Part 2

Related ebooks

Related categories

Reviews for Iraiyuthir Kaadu - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iraiyuthir Kaadu - Part 2 - Indira Soundarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இறையுதிர் காடு - பாகம் 2

    Iraiyuthir Kaadu - Part 2

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    அத்தியாயம் 81

    அத்தியாயம் 82

    அத்தியாயம் 83

    அத்தியாயம் 84

    அத்தியாயம் 85

    அத்தியாயம் 86

    44

    அன்று

    சதுரகிரி மெத்து மெத்தென்ற மேகப் பொதிகளுக்குக் கீழே கரும்பச்சை, இளம்பச்சை என இரண்டும் பின்னிப்பிணைந்தாற்போல் மரம், செடி, கொடி எனும் தாவரங்கள். அவற்றையே தன் மேனிக்கான கேசம்போல் ஆக்கிக்கொண்டு விரிந்துகிடந்தது அந்த மலைவெளி.

    கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நாலாபுறமும் சிவன் கொண்டைபோல் மலைகள்…! அதற்கு அப்பாலும் அதன் தொடர்ச்சிகள்... இதில் தென்கிழக்குச் சிகரத்தின் தொடர்ச்சி பொதிகைவரை தொடர்ந்து அங்கே ஒரு பாணதீர்த்தம் என்றும் குற்றாலம் என்றும் அருவிக்கும்மாளம்!

    தென்மேற்குப்புறமோ கேரளமாய் விரிந்து சென்றபடியே இருந்தது. வடபுறமோ கூமாச்சி மலைத்தொடராய் நீண்ண்ண்டபடியே இருந்தது!

    ‘இந்திரகிரி’, ‘ஏமகிரி’, ‘வருணகிரி’, ‘குபேரகிரி’ என்று இவற்றினிடையே நான்கு மலைகள். இதன் நடுவில் கங்காரு வயிற்றுக்குட்டிபோல் துருத்தலாக நான்கு மலைகள். இவற்றுக்கு ‘சிவகிரி’, ‘பிரம்மகிரி’, ‘விஷ்ணுகிரி’, ‘சித்தகிரி’ என்று பெயர். இந்த மலைகளையே சித்தர்கள் உலகம், ‘சதுரகிரி’ என்கிறது. ஒருபடி மேலேபோய் இந்த நான்கு மலைகளும் நான்கு வேதமாகத் திகழ்வதாகவும் கருதுகிறது.

    மலைகள் முழுக்க மூலிகைச் செடிகளின் பிரவாகம். ‘முசுமுசுக்கை, ஆடாதோடை, பெரும்தும்பை, பிரம்மதண்டு, சதை ஒட்டி, ஆடு தீண்டாபாளை, ஆவாரை, ஆத்தி, கரும்பூலா, செந்தொட்டி, பற்படாகம், விஷ்ணுக்ரந்தி, கன்னுபிளை, குமுலம், நீர்முள்ளி, நீலி, பீநாரி, கண்டங்கத்தரி, குன்றுமுத்து, நிலவாகை, நாயுருவி என்று ஒரே மூலிகைக்கூட்டம்! இதன் வேரிலிருந்து தண்டு, இலை, பூ, காய், பழம் என எல்லாமே மருந்துதான்.

    இவற்றுக்கு நடுவே விண்முட்ட உயர்ந்து நிலாவைப் பிடிக்க எத்தனித்தபடியே இருக்கும் விருட்சங்கள் வேறு... ‘வெள்ளை வேம்பு, ஜோதி விருட்சம், கருநெல்லி, உரோம விருட்சம், சுணங்க விருட்சம், ரத்தப்பலாசு, ஏரழிஞ்சி, சாயா விருட்சம், கொஞ்சி, உதிர வேங்கை, கைவளாக்கை, கருக்குவாச்சி, ஊக்குணா, பிரம்மதரு, தொனியா, பிராய், கெட்டிவஞ்சி, கருமருது, வசுவாசி, சுரபுன்னை, தேற்றா, கடுக்காய், பாதிரி, அகில், பாற்பட்டை, சோமவிருட்சம், சேங்கொட்டை, கருநாரத்தை, கணையெருமை, சோகி, அருநெல்லி, தில்லை விருட்சம், வெண்ணாவல், வேர்ப்பலா, கல்லத்தி, தேவதாரு, மருதம், வன்னி, குங்கிலியம், எட்டி, ஆச்சா, தும்புலா, ஆலம், பலுனி, பாற்சொரி, பாற்பட்டை’ என்று நாற்பத்தெட்டு விதமான பெயர்களில் விளைந்து நின்ற அந்த மலைவெளியில், அசுரர்கள் தாங்கள் விளையாடும்போது தூக்கி எறிந்தாற்போல் கிடக்கும் பாறைக்கற்கள் நடுவில் கீறிக்கொண்டு ஓடும் நீர்ப்பாம்பாய் ஓடைகள்!

    இந்தப் பாறைகள் விழுந்துகிடக்கும் விதத்தாலேயே குகைகள் பல உருவாகி, அவற்றின் இடவாகுக்கு ஏற்றாற்போல தேனீக்கள் கூடு கட்டியிருக்க, அவற்றைத் தேடியபடி கரடிகள் சிலவும் அலைந்துகொண்டிருந்தன.

    சில இடங்களில் நீர்வெளியானது அகன்று சமதளத்தில் சிலநூறு அடிகள் ஓடி, பின் பாறை இடுக்குகளில் புகுந்து தடதடத்துக் கீழிறங்கிச் சென்றபடி இருக்க, இந்தச் சமதள நீர்ப்பரப்பில் யானைக் கூட்டம் ஒன்று உருண்டுபுரண்டு நீர் பீய்ச்சிக்கொண்டும், பிளிறிக்கொண்டும் கிடந்தது. பெரு யானைகளைவிட குட்டிகளிடம் கும்மாளம் அதிகம் தெரிந்தது.

    அதன் ஒரு முனையில் புலி ஒன்று சிணுங்கும் கண்களோடு நாக்கை நனைத்தால் போதும் என்பதுபோல் தன் உறுதியில்லாத, துவண்ட ரோஜா நிற நாக்கை, ஓடும் நீர்ப்பரப்பின் மேல் தொட்டுத் தொட்டு எடுத்தபடியே யானைக் கூத்தைப் பார்த்தபடி இருந்தது.

    எங்கே போகிறோம், எதற்குப் போகிறோம் என்கிற இலக்கே இல்லாதபடிக்கு ஒரு மலைப்பாம்பு நீண்ட தன் குழலுடம்பை அந்த மலைத்தலத்தில் நெளித்தபடி இழுத்துச் சென்றுகொண்டிருந்தது.

    அந்த மலைவெளியெங்கும் மார்பு பருத்த மாவீரனால்கூடத் தாங்கவொண்ணா அளவில் பனிக்கலப்பு கொண்ட கூதல் காற்று வீசியபடி இருக்க, ‘வாலாட்டி, மரங்கொத்தி, கொவ்வைக் கிளி, சிறுகுருவி, சிங்காரி, பட்டு மைனா, வண்ணம் பாவி’ என்கிற பறவைக் கூட்டத்தின் குறுக்கோட்டங்கள் மலைத்தலம் முழுக்கக் கண்ணில்பட்டன.

    சர்வத்தையும் ரசிக்க இரு கண்கள் மட்டுமே என்பது ஒருவகை தண்டனைதான்! ஆனபோதிலும் அந்த மலையழகை ரசித்தபடியே விண்வழியே சிறகின்றிப் பறந்து அல்லது மிதந்து வந்த போகர்பிரான், புகை எழும்பியபடியிருக்கும் ‘அகத்தியச் சருக்கம்’ என்னும் வில்வமும் வேம்பும் வேங்கையும் ஒதியமும் மிகுந்து கிடக்கும் இடத்திற்குச் சென்று சேர்த்தார்.

    அந்தச் சூழல் முழுக்க நல்ல வாசப்பெருக்கு! கூடவே ‘நமச்சிவாயம் நமச்சிவாயம்’ என்கிற நாம ஒலி!

    நடக்க நடக்கவே பல ஒற்றைநாடிச் சித்தர்கள் கண்ணில்பட்டனர். கோவணங்கூட பற்றின் மிச்சம் என, அதையும் துறந்து ஓரங்குலத்திற்குச் சுருங்கிவிட்ட தங்களின் இனக்குறி தெரியாதபடி அதைத் தங்கள் சடைமுடி கொண்டு மறைத்தபடி போகர் பிரானைப் பார்த்துப் புன்னகைத்தனர்.

    அவர்கள் பலரின் கண்களில் ரசாயனத் துலக்கல்போல ஒரு புத்தொளி! புருவங்களில் அரிவாள்போல் வளைந்த முடிக்கூட்டம். தாடியில் வெள்ளியானது முடியாக வளர விரும்பியதுபோல் ஒரு பெரும் நீட்டம்.

    போகரும் இணக்கமாய்ச் சிரித்த படியே அகத்தியர் பெருமான் அமர்ந்திருக்கும் குகைக்குமுன் சென்று நின்றார். குகைக்கு வெளியே நசுங்கிய வட்டங்கள் போன்ற பல வடிவங்களில் பாறைகள்! அவற்றின்மேல் நிஷ்டையிலும், நீவலிலுமாய் பல சித்த புருஷர்கள். அவர்களில் கருவூராரும் ஒருவராய் இருந்து எழுந்து நின்று, வந்தனம் வந்தனம் என்றார். அவர் சொன்ன வந்தனத்தால் கலைந்த கொங்கணசித்தர் அடடே போகரா... வருக வருக என்றார். கொங்கணரின் குரல் கோரக்கர், பிரம்ம முனி உள்ளிட்ட பலரை போகரை நோக்கித் திருப்பியது.

    அதற்குள் குகைக்குள்ளிருந்து அகத்தியரின் சீடர்கள் என்று வந்த இருவர் வந்தனாதி வந்தனம் போகர்பிரானே... தங்களைப் பெருமான் அழைத்துவரப் பணித்துள்ளார் என்றனர்.

    புன்னகை மாறா முகத்தோடு குகைக்குள் நுழைந்தார் போகர். உள்ளே வெளிச்சம் நிறைந்த ஒரு பெருவெளி... மூலிகைப் புகையின் மந்தமான வாசம்... அவ்வளவு குளிரில்லாத ஓர் இள வெப்பம். சற்றே மட்டமான பாறை ஒன்றின்மேல் பத்மாசனத்தில் காட்சி தந்தார் அகத்தியர்.

    தமிழ்முனிக்கு என் தண்ணார்ந்த வந்தனங்கள் என்ற போகரைப் பார்த்த அகத்தியரும், அந்தத் தமிழுக்கே அணியாய், உயிராய் விளங்கும் முருகனை பாஷாணத்தில் படைக்க இருக்கும் உங்களுக்கு என் ஆசிகள் என்றார் அகத்தியர்.

    ஆசிகளுக்கு என் நன்றிகள்...

    மகிழ்ச்சி போகரே... பணிகள் எந்த அளவில் உள்ளன?

    ஒன்பது பாஷாணங்களுக்கு ஒன்பது சீடர்களைத் தேர்வு செய்து அவர்கள் வசம் பாஷாணத்தைச் சேர்த்து, அது ஒளியுடம்பை என்ன செய்கிறது என்கிற ஆய்வு நடந்தபடி உள்ளது...

    நல்ல முன்னெடுப்பு... போகட்டும்... பாஷாணங்களால் முருகனின் ஸ்தூல உடலை உருவாக்க, பிரத்யேக காரணங்கள் ஏதுமுண்டா?

    பாஷாணம் என்னும் விஷம் அதை உண்ணும் சமயம் உயிராற்றலுக்கு எதிரானதாக, ஓர் உயிரைச் செயலிழக்கச் செய்வதாக உள்ளது... அதேசமயம் பாஷாணம் என்பது தனித்த நிலையில் பெரும் இயக்கத்திறன் கொண்டதாக உள்ளது. ஓர் இயக்கத்திறன் இன்னோர் இயக்கத் திறனை அதாவது உயிராற்றலை ஏன் ஸ்தம்பிக்கச் செய்கிறது… இது ஓர் ஆச்சர்யமல்லாவா?

    ஆம் ஆச்சர்யம்தான்...

    அதேசமயம் பாஷாணங்கள் பலவகைகளாகவும், அவை ஒன்றோடொன்று கலக்கும்போது அதன் வினைப்பாடு புதிய இயக்கவிசை உடையதாகவும் மாறுகிறது.

    இது பிரம்ம சிருஷ்டியின் விநோதம்.

    அந்த மாற்றத்தைக் கண்டறிந்து அதை மருந்தாக மாற்றுவதே என் நோக்கம்...

    இந்த மருந்து எனும் சொல் எப்படி உருவானதென்று தெரியுமா?

    தமிழுக்கு, ‘அகத்தியம்’ என்ற இலக்கண நூலையே எழுதிய தங்களிடம் நான் எதையும் அறியவே விரும்புகிறேன். இம்மட்டில் நான் அறிந்தது என்று ஒன்று பெரிதாக இல்லை.

    தங்களிடம் ‘நான்’ என்கிற ஆணவம் அடங்கிவிட்ட ஓர் ஆனந்த நிலையைக் காண்கிறேன். இம்மட்டில் நான் உணர்ந்ததைக் கூறுகிறேன். தமிழில், ‘மறந்து’ என்று ஒரு சொல் உண்டு. அதன் பொருள், ‘நாம் அறியப்பெற்ற ஒன்றை இழந்துவிடுவது’ என்பதாகும். இந்த மறதி தற்காலிகமானதாக இருந்து, ஞாபகம் மீண்டும் வரலாம். முற்றாகவும் மறந்து, ஞாபகம் இல்லாமலும் போகலாம். மொத்தத்தில் அறிந்த ஒன்றை இழந்துவிடுவது என்பதே ‘மறந்து’ எனும் சொல்லுக்கான பொருள். இதில் ஓர் எழுத்து சற்றுத் திரிந்து அதாவது ‘ற’கரம் ‘ரு’கரம் என்று மாறிவிடும்போது ‘மறந்து’, ‘மருந்து’ என்றாகிவிடுகிறது. ஆமல்லவா?

    ஆம் பெருமானே...

    மொத்தத்தில் இழந்துவிட்டதை அல்லது இழக்கவிருப்பதை நாம் திரும்ப அடைவதையே மருந்து குறிப்பிடுகிறது... ஆம்தானே?

    ஆமாம் பெருமானே...

    இம்மட்டில் நாம் மருந்தால் அடைவது ஆரோக்கியம் அல்லது ஆதர்ச சக்தி. அதுவுமில்லையேல் இழக்கவிருந்த உயிர்... இம்மூன்றையும் பெற்றுத்தருவதாய் மருந்துதானே உள்ளது?

    உண்மை... முக்காலும் உண்மை.

    ஓர் எழுத்து மாற்றம் எப்பேர்ப்பட்ட பொருள் மாற்றத்தையே அளித்துவிடுகிறது என்பதை கவனித்தீரா...?

    ஆம்... இறைமொழி, இனியமொழி என்றெல்லாம் தமிழைச் சொல்வதன் பொருளை உடல், உயிர், உள்ளம் என்னும் மூன்றாலும் உணர்வது என்பது உண்மையில் பெரிய பாக்கியமல்லவா?

    மருந்து என்று சொன்னவுடன் எனக்குள் இப்படிப் பல எண்ணங்கள். முருகப்பெருமான் பிறப்பே ஒரு மருந்துதானே... அசுரனான சூரபத்மனால் தேவர்கள் உலகமே அல்லல்பட்டபோது, அந்த அல்லல் போக்கும் மருந்தாக எம்பெருமானின் நெற்றிக்கண்ணின் சுடரிலிருந்து பிறந்த பிள்ளையல்லவா இந்த முருகன்...

    மட்டுமா... முற்பிறப்பில் பூரணமான பிரம்ம ஞானி... எல்லோரும் பிள்ளை வரம்பெற்றுப் பிள்ளையை அடைவார்கள். ஆனால் முருகனோ, தானே வரம்தந்து தானாய் முன்வந்து உதித்த பிள்ளையல்லவா?

    ஆம்... நன்கு சொன்னீர். முருகன் என்னும் மருந்து தேவர்கள் பொருட்டு தானாக அல்லவா வந்தது?

    அப்படி தேவர்கள்பொருட்டு நெற்றிச் சுடரிலிருந்து வந்தவனைத்தான், மாந்தர்கள் பொருட்டு நான் பாஷாணத்திலிருந்து பெற விரும்புகிறேன். அதிலும் நவ சக்திகளோடு பெற விரும்புகிறேன்... அதற்கே நவ பாஷாணங்கள்...

    நவகோள்களால் இயக்கப்படும் மனித உயிர்களுக்கு அந்தக் கோள்களின் அம்சமான பாஷாணங்களாலேயே புத்துயிர் அளிப்பதுதான் தங்கள் நோக்கம் என்று சொல்லுங்கள்...

    ஆம் பெருமானே...! கதிரவன் தன் உஷ்ணத்தால் மேனி தீண்டுவதுபோல், காற்று தன் குளிர்ந்த தன்மையால் தன்னை உணர்த்துவதுபோல், வாசமானது விழிகளுக்குப் புலனாகாவிட்டாலும் நாசிக்குப் புலனாகிப் பரவசம் அளிப்பதுபோல், இந்த நவபாஷாண முருகன் ‘தண்டபாணி’ என்னும் திருநாமத்தோடு தன்னைக் காண்பவர் மேனியில் பல அரிய வேதியியல் மாற்றங்களைச் செய்யப் போகிறான்.

    மேலான இச்செயலுக்கு மனோன்மணியே உறுதுணையாக இருக்க அனைத்தும் நலமாக முடியும். கவலை வேண்டாம். உமக்கு எமது பூரண நல்லாசிகள்!

    மகிழ்வும் நன்றியும் பெருமானே!

    உமது மருந்து ஒரு புனிதத்தலமாகவே ஆவதாக... இதனால் காலத்தால் நரை திரை மூப்பை வென்று நீர் சிந்திக்கப்படுவீராக...!

    அகத்தியர் வாழ்த்தியருளிட, ஏனைய சித்தர் பெருமக்களும் அங்கு ஒன்றுகூடி வாழ்த்தியதோடு, போகர் பிரானே... பொதினியில் தண்டபாணித் தெய்வம் ஆலயம் காணும் சமயம் சித்தநெறி உயிர்த்துடிப்போடு திகழும் வண்ணம் அதன் தொடர்போடு கூடிய ஒரு செயலைச் செய்திட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம் என்று கருவூராரும் கொங்கணரும் ஒரு சேரக் கூறினர்.

    தாங்கள் கூற வருவது எனக்கும் புரிகிறது. நிலையாக ஓர் ஆலயம் உருவாகப் போவதைப்போலவே ஒரு நடமாடும் ஆலயத்தையும் நான் உருவாக்கம் செய்ய இருக்கிறேன். எம்பெருமானாகிய அந்த ஈசன், லிங்க வடிவில் அந்த நடமாடும் ஆலயத்து தெய்வமாக சித்தநெறியை விளங்கச் செய்வான். சித்த நெறியால் இந்தமலையும், மலையின் காடும், காட்டின் விருட்சங்களும் என்றும் பொலிவோடு திகழும்... என்றார் போகரும்.

    அட... நாங்கள் விருப்பத்தைத்தான் கூறினோம். ஆனால் அது ஒரு செயல் வடிவாகவே உங்களிடம் காணப்படுகிறதே... மகிழ்ச்சி... மிக்க மகிழ்ச்சி...

    அந்த லிங்க வடிவோடு நான் விரைவில் இங்கு வருவேன். அகத்தியர் பெருமானே அதன் முதல் வழிபாட்டைத் தொடங்கி வைத்து ஆசிகூற வேண்டும்.

    போகரின் கூற்றைக் கேட்டு அகத்தியர் பொலிந்த புன்னகையால் அதற்குச் சம்மதம் தெரிவித்திட, போகரும் மனதுக்குள் கருமார்கள் இருவரும் செய்யத் தொடங்கியிருக்கும் நவபாஷாண லிங்க வடிவை ஒரு விநாடி தன் மனக்கண்ணில் எண்ணிப் பார்த்தார்!

    கன்னிவாடி குகைக்குள் கருமார்கள் தேன் மெழுகாலேயே அந்த லிங்கத்தை அழகாய் வடிவமைத்து, அதன்மேல் களிமண்ணையும் பூசி அதைத் தீயிலிட்டு வாட்டியபடி இருந்தனர்.

    தீ நாக்குகளிடையே மண்ணாலும் மெழுகாலும் ஆன அந்த லிங்கம், ‘அண்டம் நான், அகிலம் நான், சர்வமும் நான்’ என்பதுபோல் ஜொலித்துக்கொண்டிருந்தது!

    ***

    இன்று

    அரவிந்தன் தான் எழுதியிருந்த எண்களைக் காட்டியவன், "இதுல ‘ச’ங்கற எழுத்தோட மதிப்பு 2. ‘ங்’கற எழுத்தோட மதிப்பு 6. அதேபோல ‘க’ங்கற எழுத்தோட மதிப்பும் 2 தான். அடுத்து ‘ர.’ இதோட மதிப்பு 5. அப்புறம் ‘ம்.’ இதோட மதிப்பு 1. ஆக 26251.

    இந்த மதிப்பை இந்தப் புத்தகத்தைப் படிச்சுக் கணக்கு போட்டுக் கண்டுபிடிச்சேன். ‘கடபயாதி’ங்கற இந்தப் புத்தகம் ஆயிரம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால இருந்த ஒரு விநோதமான கணிதமுறை’ என்று சொல்லி நிறுத்தியவனாக பாரதியையும், சாந்தப்ரகாஷையும், சாருபாலாவையும் ஆழமாகப் பார்த்தான்.

    அரவிந்தன்... உங்க விளக்கமெல்லாம் அப்புறம். இப்ப இந்த 26251ங்கற எண்ணைக்கொண்டு என்ன செய்யப் போறீங்க? மிக ஷார்ப்பாகக் கேட்டாள் பாரதி.

    இந்த மரப்பெட்டியில் இந்த எழுத்துகளுக்குக் கீழே இருக்கற துவாரத்துக்குள்ள முடுக்கப்பட்டு, பூட்டப்பட்ட ஸ்க்ரூக்கள் இருக்கு. அதை வழக்குல ‘திருகாணி’ன்னு சொல்வாங்க. அந்தத் திருகாணிகள் தான் லாக் சிஸ்டமா இருக்கு. அந்தத் திருகாணிகளை முதல்ல அதோட முனை உள்ள இருக்கற லாக்கிங் சிஸ்டத்துக்குக் காரணமான உள்பரப்புல போய் முட்டற அளவு நாம் திருப்புளியால திருகி முடிச்சிடணும். பிறகு ‘ச’ங்கற எழுத்துக்குக் கீழே இருக்கற துவாரத்துல இரண்டு முழுச்சுற்று மட்டும் பின்புறமாத் திருப்பணும். அதேபோல ‘ங்’கற துவாரத்துல ஆறு முழுச்சுற்று, திரும்ப ‘க’வுல இரண்டு முழுச் சுற்று, ‘ர’வுல ஐந்து, ஒண்ணுல ஒரு சுத்துன்னு சுத்திட்டுத் திறக்க முயற்சி செய்தா திறந்துடும்.

    அப்ப என்ன பேச்சு... முதல்ல திறங்க... பாரதி மிக வேகமானாள். அரவிந்தனும் திருப்புளியை எடுத்தவனாக முருகன் படத்தைப்பார்த்தான். இதற்குமேல் இந்தப்பெட்டியோடு அல்லாட முடியாது என்பதுபோல் பார்த்தவன், துவாரங்களுக்குள் திருப்புளியை நுழைத்துத் திருகாணியின் தலைப்பாகத்து காடியில் திருப்புளியின் கூரிய, அதே சமயம் தட்டையான பரப்பைப் பதியச்செய்து அவ்வளவு திருகாணிகளையும் முதலில் முட்டுமளவு திருகி முடித்தான். பின், பெயருக்குக் கீழுள்ள எழுத்துகொண்ட துவாரங்களில் அவன் கணித்த எண்ணிக்கைக்கு ஏற்பத் திருகினான்.

    இறுதியாக ‘ம்’ என்ற எழுத்துக்கான ஒரே ஒரு சுற்றைத் திருகி முடித்த நொடி, பெட்டி பட்டென்று திறந்து கொண்டதுபோல் ஒரு சப்தம். அதே நொடி சாருபாலாவும் முகம் மாறியவளாக வாந்தி வந்துவிட்ட அறிகுறிகளோடு வேகமாய்க் கைகளை வாய்மேல் வைத்துப் பொத்திக்கொண்டவள் ‘உவ்வேவ்...!’ என்று சப்தமிட்டாள்! அரவிந்தன் கவனமும் வேகமாய் அவள்மேல்தான் சென்றது. சாந்தப்ரகாஷ் வேகமாய்ப் புரிந்துகொண்டு என்ன சாரு, திரும்ப வாந்தியா... வெயிட்... வெயிட்... ஆங் பாரதி மேடம், இங்கே பாத்ரூம் எங்க இருக்கு? என்று வேகமாய்க் கேட்க, பாரதியும் மிக வேகமாய் பானூ... என்றாள் பலத்த குரலில்.

    ஒரு கர்ட்டன் பின்னால் ஒளிந்தபடி உடம்பை வளைத்து நடக்கப்போவதை கவனிக்க இருந்தவள், பாரதி அழைக்கவும் ஓடி வந்தாள்.

    மேடம்...

    முதல்ல இவங்களை பாத்ரூமுக்குக் கூட்டிக்கிட்டுப் போ...

    யெஸ் மேடம்...

    பானு ஆமோதிப்பதற்குள்ளாகவே மூடிய வாயை மீறிக்கொண்டு சில திவலைகள் தெறித்து சாருவின் மார்பில்பட்டு கெட்ட வாடையும் வீசத் தொடங்கிவிட்டது.

    கமான் கோ ஃபாஸ்ட்...

    தப்பா எடுத்துக்காதீங்க. என் மனைவி இப்ப கன்சீவ் ஆகியிருக்கா... இப்ப மூணு மாசம்... என்று விளக்கமளித்தபடியே பானுவோடு சாந்தப்ரகாஷ் சாருவைப் பிடித்தபடி ஓடினான்.

    ஒரு மரம்போல் நின்று பார்த்தபடியே இருந்த முத்துலட்சுமி மட்டும் நெருங்கி வந்து, பெட்டி திறந்துடுச்சா? என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டாள்.

    அரவிந்தன் அடுத்த நொடி பெட்டிமீது பார்வையைப் பதித்தான். ஒட்டிக்கொண்டிருந்த மேல் மூடியும், அதுபடியும் பெட்டியின் மேல் பாகத்துக்கும் நடுவில் ஓர் எறும்பு புக முடிந்த அளவில் இடைவெளி உருவாகியிருந்தது!

    கமான் அரவிந்தன்... அந்த பானு திருட்டுத்தனமா பார்க்கறது தெரிஞ்சுதான் அவளைக் கூப்பிட்டு பாத்ரூம் பக்கம் அனுப்பினேன். கமான், திறந்துகிட்ட மாதிரிதான் தெரியுது. ஓப்பன் பண்ணுங்க முதல்ல... என்று படபடக்கத் தொடங்கிவிட்டாள் பாரதி.

    அரவிந்தனும் தொட்டுத் தூக்க முயன்றான். மேல் பாகம் ஓர் அங்குலம்வரை எழும்பி அதற்குமேல் எழும்பாமல் சிக்கிக்கொண்டதுபோல் நின்றது.

    திறந்துடிச்சி... திறந்துடிச்சி...! என்று உற்சாகமானாள் பாரதி. அரவிந்தனிடமும் படபடப்பு. காதின் கிருதாவை ஒட்டி வியர்வைப் பாம்பு. அப்படியே பெரிதும் முயன்று திரும்ப எத்தனித்தான்!

    இப்போது அங்கே அவர்கள் இருவரோடு முத்துலட்சுமி மட்டும்தான் இருந்தாள். அவளும் மிக நெருக்கமாய் வந்து நின்றுகொண்டாள்.

    தம்பி திறப்பா சீக்கிரம்... அப்படி என்னதான் உள்ளே இருக்குன்னு பார்த்துடுவோம் என்றாள்.

    அரவிந்தனிடமும் அசுரப்பிரயாசை. திருப்புளியைக் கொண்டு நெம்பி அழுத்தம் கொடுக்கவும் இறுதியாக ஒருவித சப்தத்தோடு திறந்துகொண்டது. அடுத்தநொடி உள்ளிருந்து ஒரு சிறு கருவண்டு ‘ரொய்ங்ங்...’ என்கிற சப்தத்துடன் பறந்து வெளியேறியது.

    உள்ளே காய்ந்த இலைச்சருகுகள்! அதனுள்ளிருந்துதான் அந்த வண்டும் பறந்து சென்றது. அது எப்படி காற்றுக்கூடப் புக முடியாத அந்தப் பெட்டிக்குள் சென்றது அல்லது வாழ்ந்தது? தொடக்கமே வியப்பைத் தர அரவிந்தன் அந்த இலைச்சருகுகளை அள்ளி எடுத்தான்.

    பாத்ரூமில் சாரு பெரிதாய் வாந்தி எடுத்து முடித்திருக்க, சற்றுத் தள்ளி நின்றபடி இருந்த பானுவின் முகத்தில் ஓர் இனம்புரியாத படபடப்பு.

    ‘சரியாகப் பெட்டியைத் திறக்கப்போன அந்த நேரம் பார்த்துத்தானா இவளுக்கு வாந்தி வரவேண்டும். அதற்கு என்னைத்தான் கூப்பிட வேண்டுமா என்ன?’ பானு அலமலப்போடு வெறித்தாள்

    சாந்தப்ரகாஷ் தன் கர்ச்சீப்பால் அவள் முகத்தைத் துடைத்தபடி, நத்திங் டார்லிங்... நல்லா இழுத்து மூச்சுவிடு என்று சொன்னான்.

    சந்தா... ஐ வில் டேக்கேர்... நீ போய் அந்தப் பெட்டியைப் பார். அது நம்ம பெட்டி... பாழாப்போன வாந்தி இப்பத்தான் எனக்கு வரணுமா? உவ்வ்...! என்று திரும்ப எக்கியவள் சுதாரித்து, கோ மேன்... என்று கத்தினாள்.

    நோ பிராப்ளம்... அவங்க என்ன ஓடியா போயிடப் போறாங்க. நீ முதல்ல ஃப்ரீயாகு... என்றான் சாந்த ப்ரகாஷ்.

    அப்ப நீங்க நல்லா ரெஃப்ரெஷ் பண்ணிகிட்டு வாங்க... என்று பானு செல்ல முயன்றாள். அதுவரை நின்று பேசிக்கொண்டிருந்த சாருவிடம் சட்டென்று ஒரு கிளுகிளுப்பு.

    சாந்தா சம்திங் ராங்... எனக்குத் தலை சுத்துது... என்றபடியே அவன் மேல் விழுந்தாள்.

    மேடம் ஹெல்ப்... என்று, விலகிப்போன பானுவை சாந்தப்ரகாஷும் திரும்ப அழைத்தான்.

    ஐயோ என்னாச்சு?

    என்னன்னு தெரியலை. மயக்க மாயிட்டா... இப்படி ஆனா உடனடியா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணச் சொல்லியிருந்தார் டாக்டர். லெட் வி கோ தேர்... என்று அவளைத் தோளில் போட்டுத் தூக்கிக்கொண்டு சாந்தப்ரகாஷ் அங்கிருந்து ஹால் நோக்கிச் செல்ல, பானுவும் ஒரு கையால் பிடித்தபடி உடன் வந்தாள்.

    ஹாலில் பெட்டி மூடப்பட்ட நிலையிலிருக்க அருகில் அந்த இலைச்சருகுகளும் இல்லை.

    என்னாச்சு?

    முதல்ல வாந்தி. இப்ப மயக்கம். நான் இம்மீடியட்டா டாக்டரைப் பார்க்கணும். ஐ ஆம் சாரி. உங்களை நான் தொந்தரவு பண்ணிட்டேன். பை த பை பெட்டியைத் திறந்துட்டீங்களா? என்று தோளில் சாருபாலாவோடு அந்த நிலையிலும் கேட்டான் சாந்தப்ரகாஷ்.

    ஐ வில் ட்ரை... இன்னும் முழுசாத் திறக்கலை...

    வாவ்... என்ன ஒரு விபூதி வாசனை...

    எல்லாம் இதுலேருந்துதான்...

    உங்கள பெக் பண்ணிக் கேட்டுக்கறேன். இதை எங்ககிட்ட ஒப்படைச்சிடுங்க. நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் தர்றேன்... இங்கே இப்போ இப்படி ஆகும்னு நான் நினைக்கலை... நான் இப்போ போயிட்டு பிறகு வர்றேன் என்று அவளைச் சுமந்தபடியே வாசல் நோக்கி நடந்தான். அரவிந்தனும் உடன் சென்றான்.

    மிஸ்டர் சாந்தப்ரகாஷ்... முதல்ல இவங்க உடம்பை கவனியுங்க. இந்தப் பெட்டி பத்தின கவலையை விடுங்க என்று, அவர்கள் இருவரும் செல்வதுதான் நல்லது என்பது போல் நடந்துகொண்டான்.

    வாசலில் நின்றபடி இருந்த வாடகைகாரின் பின்னால் சாருவின் உடலைக் கிடத்தி அப்படியே ஏறிக்கொள்ள காரும் புறப்பட்டது.

    அந்த நொடி ‘அப்பாடா...’ என்றிருந்தது அரவிந்தனுக்கு. பானு பார்த்துக்கொண்டே இருந்தாள். அரவிந்தன் திரும்பப் பெட்டியருகே வந்தான்.

    பாரதி... நாம ரூமுக்குப் போய் என்ன ஏதுன்னு பார்ப்போம்... என்றபடியே பெட்டியை ஒரே தூக்காய்த் தூக்கினான்.

    பானு முகத்தில் பலத்த ஏமாற்றம்.

    பானு... நீ போய் உன் வேலையைப் பார்... வாங்க அரவிந்தன்... என்று பாரதியும் அங்கிருந்து அவள் அறை நோக்கி ஓடினாள்.

    ‘இவர்கள் திறந்து பார்த்துவிட்டனர்... உள்ளே மதிப்புமிக்கதாய் ஏதோ இருக்கிறது... அதை யாரும் பார்ப்பதை பாரதி விரும்பவில்லை’ என்று மளமளவென்று கணக்கு போட்ட பானுவிடம் பெரும் படபடப்பு.

    முத்துலட்சுமியோ பூஜை அறையில் விளக்கு ஏற்றிக்கொண்டிருந்தாள்.

    ‘இங்கே என்னதான் நடந்தது... இது விளக்கேற்றும் நேரமில்லையே...?’ பானு சலனத்தோடு நடக்கையில் திரும்பவும் அவள் செல்போனில் அழைப்பொலி.

    அந்த டெல்லி ஜோசியர்தான்...

    பானு... என்னாச்சு... திறந்துட்டாங்களா?

    திறந்தாச்சுங்க ஜீ. ஆனா என்னாலதான் எதையும் பார்க்க முடியலை. அந்த அரவிந்தனும் பாரதிமேடமும் ஏதோ பிளான் பண்றாங்க. இப்போ பார்த்து, ‘அந்தப் பெட்டி எங்க சொந்தம்’னு சொல்லிக்கிட்டு வந்தவங்களும் வாந்தி மயக்கம்னு வெளியே போயிட்டாங்க...

    அப்படியா?

    ஆமாம் ஜீ... இப்பகூட பெட்டியோட தனியா ரூமுக்குள்ள போயிட்டாங்க. உள்ளே நிச்சயம் பெருசா ஏதோ இருக்கு ஜீ...

    அதுல எது வேணா இருந்துட்டுப் போகட்டும். ‘சொர்ண ஜால மகாத்மியம்’னு ஒரு ஏட்டுக் கட்டு நிச்சயம் இருக்கும். அது எனக்குக் கிடைச்சா போதும். கூடவே ‘த்ரிகால பலகணி’ன்னு ஒரு ஏட்டுக்கட்டும் இருக்கும். இந்த இரண்டும் எனக்குக் கிடைச்சா நான்தான் இந்த உலகத்துல குபேரன்...

    என்னென்னவோ சொல்றீங்க... எனக்குத்தான் என்ன பண்றதுன்னு தெரியலை...

    நீ எதுவும் பண்ண வேண்டாம். நான் வர்றேன். அவங்களை எப்படிக் கட்டிப் போடறேன்னு பார்... டெல்லி ஜோதிடர் நந்தாவின் குரல் அடங்கியது. பானுவிடமும் அதிர்வு!

    அறைக்குள்!

    மீண்டும் பெட்டியை அரவிந்தன் திறந்து உள்ளே பார்த்தபோது அந்த ஜோதிடன் சொன்ன ஏட்டுக்கட்டுகள்... அதன் நடுவில் அந்த லிங்கம்! போகரின் அதே நீலகண்ட பாஷாண லிங்கம்...!

    45

    அன்று

    தீ நாக்குகள் இடையே சுடப்பட்டுக்கொண்டிருந்த அந்த லிங்க உருவை, பெரும் உலோக இடுக்கியால் இறுக்கிப் பிடித்து, எல்லாப் பக்கங்களிலும் சம அளவு வெப்பம்படும்படி செய்வதில் செங்கான் மும்முரமாய் இருந்தான்.

    ஆழிமுத்து மாட்டுத்தோலால் ஆன துருத்தியைக் கொண்டு காற்றை மடக்கிப் பிடித்து அது தீக்குழியில் சீறி வெளியேறும்படி செய்தபடி இருந்தான்.

    இருவருக்கும் அந்த வெப்பம் இதமானதாக இருந்தது.

    இருவருக்குள்ளேயும் ‘நம்மைச் செய்த கடவுளை நாமும் செய்கிறோம்’ என்றும் ஓர் எண்ணம். எப்போதும் இதுபோன்ற உக்ரமான பணியின்போது பேசிக்கொண்டோ இல்லை பாடிக்கொண்டோ வேலை செய்தால் அலுப்போ களைப்போ தெரியாது.

    செங்கான்... இந்தச் சாமி இப்ப நம்மண்ட இந்தப் பாடு படுது... ஆனாலும் நாளைல இருந்து இதுக்கு தினம் அபிஷேகமும், பூசையும்தான்... இல்லியா? என்று ஆழிமுத்து ஆரம்பித்தான்.

    பொறவு... பூட்டிவைக்கவா சாமி? ஏத்திக்கொண்டாடத்தானே?

    எமட்டமோ சாமிகள நாம் செய்திருந்தாலும் எனக்கென்னவோ இந்தச் சாமி ரொம்ப விசேசமா மனசுக்குப் படுது. உனக்கு அப்படி ஏதும் தோணலுண்டா?

    அவர்கள் இருவரும் தங்களுக்குள் தங்கள் பிராந்திய வழக்கில் பேசுகையில் ஒருவகை உறுமல் சப்தம் நடுவில் கேட்டது. காற்றுத் துருத்திதான் சப்தமிடுகிறது என்று நினைத்து அதை நிறுத்தவும் மேலும் பெரும் சப்தம். இருவருமே ஒருசேர திரும்பி குகை வாயில் பக்கம் பார்த்தபோது நெஞ்சம் திக்கென்றானது. இமைகளிரண்டும் துடிப்பற்று விரிந்து அப்படியே நின்று போனது.

    அவர்கள் பார்த்த குகை வாயில் பரப்பில் ஒரு வரிப்புலி! பிளந்த வாயும், இளைக்கும் நாவும் வெறித்த விழிப்புமாய் அந்தப் புலி அவர்கள் இருவரையும் பார்த்தபடி இருந்தது.

    செங்கானும் ஆழிமுத்துவும் விதிர்க்கத் தொடங்கிவிட்டனர். ‘பாதுகாப்பான குகை... ஆபத்துக்கு இடமேயில்லை என்று புலிப்பாணி சொன்னதெல்லாம் பொய்யா?’

    மனதுக்குள் கேள்வி ஓடினாலும் அருகிலிருந்த தீக்கங்கும் அதில் கிடந்த கிடுக்கியின் நெருப்புச் சிவப்பும் அவர்களுக்குச் சற்று தைரியமளித்தன. ஆழிமுத்து மெல்ல அந்த இடுக்கியைக் கையில் எடுத்துக்கொண்டான். செங்கான் அருகில்கிடந்த கடப்பாரை ஒன்றைக் கையில் எடுத்தான். பார்த்தபடியே இருந்த புலி ஒரு செருமிய உறுமலோடு முன் மூக்கைத் தன் நாவால் நக்கிவிட்டுக்கொண்டு அவர்களை நெருங்க ஆரம்பித்தது.

    செங்கான், உனுப்பாயிரு! பாஞ்சிச்சுன்னா செருகிடு... என்று முணுமுணுத்த ஆழிமுத்து இடுக்கியைத் தன் மார்புக்கு முன்னால் குத்திவிடுவதுபோல் பிடித்தான். அதன் சிவந்த நிறம் சாம்பல் தட்டிக் கறுத்து, புகை பிரிந்தபடி இருந்தது. அந்தப்புலி அவர்கள் எதிர்க்கப்போவதை லட்சியமே செய்யாமல் தொடர்ந்து முன்னால் வந்து லிங்கம் கிடக்கும் நெருப்புக்குழிக்கு இரண்டடி முன்னால் அப்படியே உட்கார்ந்தது.

    இருவருக்கும் அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.

    என்னா இது குத்தவெச்சிடுச்சி... குந்திப் பாயப் போவுதோ? ஆழிமுத்து சற்றே நடுங்கியபடி கேட்க பாஞ்சாலும் பாயும்... பொல்லாப்புலி! வவுத்தப்பார் வத்திக்கிடக்கு. இரை சரியா கிடைக்கலபோல இருக்கு என்றான் செங்கான்.

    புலியிடம் சீரான சுவாச இளைப்பு... அதன் இயல்பான அசமந்தப் பார்வை... சில நொடிகளிலேயே செங்கானுக்கும் ஆழிமுத்துவுக்கும் அதன்மேல் ஏற்பட்ட பயம் மெல்லக் குறைய ஆரம்பித்தது.

    ஒருவேளை இது இந்த குகைக்குத்தான் தலசாய வருமோ? அப்படித்தான் இப்பவும் வந்துருக்குதோ?

    ஒருவேளை கண்ணு தெரியாத கெழட்டுப் புலியோ... நம்பளத் தெரியலியோ...?

    இப்படி இருவரும் தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டே அந்தப் புலியைப் பார்த்தனர். அதனிடம் எந்த மாற்றமுமில்லை. அவர்கள் இருவருக்கும் என்ன செய்வதென்றும் தெரியவில்லை. லிங்க உருவமோ ஒரு பக்கமாகவே வெந்துகொண்டிருந்தது. அந்த வேக்காட்டிற்கும் ஒரு அளவு உள்ளது.

    மேலே மென் கறுப்பு படரும்போது வெளியே எடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் உள்ளே உள்ள மெழுகு உருக ஆரம்பித்து உருவம் வயப்படாமல் போய்விடும். அந்தக் கவலை வேறு இருவரையும் பற்றிக்கொண்டது.

    செங்கான்... உருவம் நொறுங்கப் போகுது, மெழுகும் உருகப்போகுது! போகர் சாமி வந்து கேட்டா என்னத்த சொல்ல? அவர் சொன்ன உச்சி நேரத்துல தானே நாம மெழுகால உருவத்தைப் புடிச்சோம்... ஒருவேளை நேரம் தப்பிடிச்சோ?

    ஆழிமுத்து பதற்றமடையத் தொடங்கினான். அப்போது புலியிடமும் ஒரு மாற்றம். அது திரும்ப எழுந்து நின்று இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வந்தது போலவே திரும்பிச் செல்லத் தொடங்கியது.

    ஆழிமுத்துவுக்கும், செங்கானுக்கும் உயிர் மூச்சும் சீரானது. அவர்களும் வேகமாகி கிடுக்கியால் சிலையைப் பிடித்துத் தீக்குழியிலிருந்து வெளியே எடுத்து அருகிலுள்ள குகைப் பாறைமேல் வைத்தனர்.

    மொத்த லிங்க உருவமும் வெப்பப் புகையை உமிழ்ந்தபடி ஒரு புதிய காட்சியைக் கண்களுக்குக் காட்டியது. அப்போது அதன்மேல் ஒரு மனித நிழல் படவும் திரும்பிப் பார்த்தனர். போகர் பிரான் நின்றிருந்தார்.

    சாமி... வந்துட்டீங்களா?

    அதைத்தான் பார்க்கிறீர்களே... எதனால் உங்கள் குரலில் ஒரு நடுக்கம்... எல்லாம் நல்லபடியாகத்தானே சென்றுகொண்டுள்ளது?

    போகர் இதமாய் கேட்டபடியே ஆவி பறக்கக் காட்சி தரும் லிங்க சுதை உருவைப் பார்த்தார். முகத்தில் ஒருவிதப் பூரிப்பு.

    சரியாகக் கேட்டீங்க சாமி... இந்த குகைக்குள்ள எந்த ஆபத்துக்கும் இடமில்லன்னு புலிப்பாணி சொல்லியிருந்தார். ஆனா நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்காதபடி ஒரு புலியே உள்ள வந்துடிச்சி சாமி...!

    அப்படியா?

    என்ன சாமி அப்படியான்னு சாதாரணமா கேட்கறீங்க. நல்ல பசிச்ச புலி. பாஞ்சிருந்தா அவ்வளவுதான்...

    அதை எதிர்த்துப் போரிட்டீர்களா?

    போரா...? ஒடுங்கிட்டோம்! நல்லவேளை உக்காந்து தீக்குழிக்குள்ள வெந்துகிட்டிருந்த இந்த லிங்க சுதையைப் பார்த்துட்டு எங்கள எதுவும் பண்ணாம திரும்பிப் போயிடிச்சு.

    போகர் அதைக் கேட்டுச் சிரித்தபடியே லிங்க சுதையை நெருங்கி உற்றுப் பார்த்தார்.

    என்ன குரு சாமி... எதுவும் சொல்லாம் சுதைய பாக்கறீங்க?

    அச்சம் வேண்டாம் உங்களுக்கு... அந்தப் புலி எதுவும் செய்யாது. அது என்னைக் காணவேண்டி வந்திருக்கும். நான் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டதுபோலும்.

    உங்களுக்கு அது பழக்கமா இருக்கறதால அதை எப்படி சாமி நாங்க பயமில்லாமப் பாக்க முடியும். புலி எப்பவும் புலிதானே? பசிச்சாபுல்லையா தின்னும்? மாமிசம்தானே அதோட ஆகாரம்...?

    நீங்கள் சொல்வதும் உண்மை நான் சொல்வதும் உண்மை. சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். பார்த்திபன் என்று உங்களைப்போல் ஒரு இளைஞன், கொங்கண சித்தரின் சீடர்களில் ஒருவன்! அஷ்டமா சித்திகளை அடைவதற்காகவே கொங்கணரிடம் வந்தவன் அவன். அஷ்டமா சித்திகளில் ஆறாவது சித்திதான் பரகாயப் பிரவேசம்! அதாவது கூடுவிட்டுக் கூடு பாய்வது என்பவர். அந்த வித்தையைச் சரியாகக் கற்காமல் ஒரு இறந்த புலியின் உடம்புக்குள் புகுந்துவிட்ட பார்த்திபனால் திரும்ப வெளிவர முடியவில்லை. பாவம்... உடலால் புலியாக, உள்ளத்தால் மனிதனாக இந்தக் கன்னிவாடி மலைக்காட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறான். அவ்வப்போது இங்கும் வருவான் அப்படித்தான் இப்போதும் வந்து சென்றிருக்கிறான். மற்றபடி அவன் மிக நல்லவன் நீங்கள் அச்சப்படாதீர்கள்.

    போகர் சொல்லச் சொல்ல இருவரிடமும் பிரமிப்பு. சொல்லி முடிக்கவும் அதன் உச்சத்தில் இருந்தனர் இருவரும்.

    என்ன பேச்சைக் காணோம்... இதை நீங்கள் கற்பனைகூடச் செய்து பார்த்திருக்கமாட்டீர்கள் அல்லவா?

    எப்படிக் கற்பனை செய்ய முடியும்? ஆனாலும் எங்கள் பாட்டிமார்கள் சொல்லும் கதைகளில்கூட இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். விக்கிரமாதித்தன் கதையில் என நினைக்கிறேன்.

    ஆம்... இதெல்லாம்தான் சித்த விலாசம் எனப்படும். சித்த ஜாலம் என்றும் கூறலாம்.

    இது எப்படி சாத்தியம்... உயிர் என்பது நம் உடலில் எங்கிருக்கிறது என்பதே தெரியாத நிலையில் அதை நம் விருப்பத்திற்கு ஆட்டிவைக்க முடியுமா?

    இந்த உலகில் உள்ள எந்த உயிரினத்தாலும் முடியாது. மேலான பிறப்பு எனப்படும் மனிதர்களாலும் முடியாது. ஆனால் மனிதத்தில் இருந்து சித்தத்துக்கு மாறிவிட்ட சித்தர்களுக்கு இது சாதாரண விஷயம்...

    அது எப்படி?

    இரண்டே இரண்டு சொற்களைக்கொண்டு அது எப்படி என்று கேட்டுவிட்டீர்கள்? இங்கே இப்படிக் கேட்பது மிக சுலபம். இதை நம்ப மறுப்பது அதைவிடச் சுலபம். ஆனால் எப்படி என்று விளக்குவதுதான் இந்த உலகிலேயே கடினமான செயல்...

    அப்படியானால் நீங்கள் எங்களுக்குச் சொல்ல மாட்டீர்களா?

    சொன்னால் புரியவேண்டுமே?

    புரியும்படி சொல்லுங்களேன்.

    வேண்டாம், உங்கள் வாழ்வின் திசை மாறிவிடும். ஒரு சித்த ரகசியத்தை இன்னொரு சித்தனாலேயே உணர முடியும். நீங்கள் கர்மப் பிறப்பெடுத்துவிட்டவர்கள். அறுசுவை உணவை உண்டு உடம்பின் கட்டுப்பாட்டில் உங்களை வைத்திருப்பவர்கள் நீங்கள். சித்தன் எனப்படுபவன் தன் கட்டுப்பாட்டில் உடலை வைத்திருப்பவன் ஆவான். எனவே இந்தப் பேச்சை இப்படியே விட்டுவிடுங்கள். நமது விஷயத்திற்கு வாருங்கள்.

    போகரின் பதில் இருவருக்கும் ஏமாற்றமளித்தது. மௌனம் சுமந்து வெறித்தனர்.

    ஏமாற்றமாக இருக்கிறதா?

    ஆம்... முதலில் பிரமிப்பு, இப்போது ஏமாற்றம்.

    எல்லாம் போகப்போக சரியாகிவிடும். லிங்க சுதை தயாராகிவிட்டது போல் தெரிகிறதே?

    ஆம்... பாஷாணக் கலவை வந்தால் அதைக் காய்ச்சி உருக்கி இதனுள்விட பாஷாண லிங்க உருவம் தயாராகி விடும்.

    அதற்காக நவமரை நான் இங்கு வரப் பணித்துள்ளேன். புலிப்பாணி அழைத்து வந்தபடியுள்ளான். சிறிது நேரத்தில் அவர்கள் வந்து விடுவார்கள்...

    நவமர் என்றால்... அது யார்?

    நவமர் என்றால் மொத்தம் ஒன்பது பேர். அதுவல்ல... அவர்கள் என்று சொல்...

    ஒன்பது பேர் இப்போது இங்கே எதற்கு?

    அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு பாஷாணம் உள்ளது. அவர்களை நான் பல தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளேன். அவர்கள் வசமுள்ள பாஷாணத்தை ஒன்றாக்கிக் கலந்தே முதலில் இந்த லிங்க உருவைச் செய்யப்போகிறோம். அதாவது முதலில் பிதா! பிறகே புத்திரன்!

    ஒன்பது பாஷாணமும் ஒருவரிடமே இருக்கக் கூடாதா, எதற்காக ஒன்பது பேர்?

    "சரியான கேள்வி... தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்த உலகில் பஞ்சபூதங்கள், தாதுக்கள், தாவரங்கள், உயிரினங்கள் என்பவற்றில் அசையும் உயிரினத்துக்கே வாழ்க்கை என்கிற ஒன்று உருவாகிறது. அதில் மனித இனத்திற்கு மட்டுமே காலம் என்பதும் உருவாகி தன்னை அறிவது முதல் சகலத்தையும் அறிவது என்பது சாத்தியமாகிறது.

    இந்த மனிதன்கூட 120 வருட காலம் எனும் அளவுக்கு விரிந்து சுருங்கும் உடற்கூறு கொண்ட ஒருவனே! அதற்குமேல் வாழ்வது என்பது இவர்களில் சித்தநிலை அடைந்தவர்க்கே சாத்தியம். சித்தனுக்குக்கூட உடல் என்பது விரிந்து சுருங்கும் ஒன்றே... ஆனால் மனிதர்களைப் போல அல்லாமல் அவரவர் யோக சக்திக்கு ஏற்ப 300 ஆண்டு 400 ஆண்டு என்று மாறுபாடுகள் கொண்டதாம். மொத்தத்தில் எவராக இருந்தாலும் இந்த பூமியில் மாற்றங்களைச் சந்தித்து, தன்னிலையை இழந்தே தீரவேண்டும்.

    இந்த மாற்றத்தைத் தடுத்து அழியாத்தன்மை அளிப்பதுதான் அமுதம். இந்த அமுதத்தின் மறுபக்கமே விஷம் எனப்படும் பாஷாணம்!"

    போகர் பிரான் அந்த குகையில் வழக்கமாய் அமர்ந்து தியானம் செய்யும் இடத்தில் அமர்ந்தவராக அடர்த்தியாய் ஒரு விஷயத்தைக் கூறி, அமுதத்திடமும் பாஷாணத்திடமும் வந்து நின்றார்.

    சாமி... இப்படி நீங்க சொன்னா எப்படி... எங்களுக்கு எதுவுமே புரியல. தப்பா எடுத்துக்காம புரியும்படி சொல்லுங்க அவர்கள் குழந்தனர். போகர் சிரித்தார்.

    "நான் சுருக்கமாய்ச் சொன்னால் உங்கள் தரப்பில் கேள்விகள் மிகுதியாக இருக்கும். அதற்கு இடம் தராமல் விபரமாய்ச் சொன்னேன்.

    போகட்டும். இப்போது நான் சொல்வது புரிகிறதா என்று சொல்லுங்கள்.

    மனிதனின் ஆயுள் 120 வருட காலம், சித்தனின் ஆயுள் அதிகபட்சமாய் மனிதனைப்போல் நான்கு மடங்கு காலம். இந்த ஆயுள் காலத்தில் இரு தரப்புக்குமே உடம்பின் திசு மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. அமுதம் என்னும் ஒன்று இந்தத்திசு மாற்றத்தைத் தடுத்து நிறுத்தி, திசுவை உறுதிப்படுத்திவிடும். பாஷாணமோ இந்தத் திசுவையே அழித்து அதன் உட்கூறினை உடைத்து நொறுக்கிவிடும். இம்மட்டில் 64 வகை பாஷாணங்கள் உள்ளன.

    இதில் ஒன்பதே பிரதான பாஷாணம்!

    அதேசமயம் இந்த பாஷாணங்களையும் இதன் ஆற்றலையும் புரிந்துகொண்டு சேர்க்கின்ற விதத்தில் சேர்த்து இதோடு பஞ்ச பூதங்களைச் சேர்க்கும்போது இதுவே அமுதமாகவும் ஆகிவிடுகிறது.

    இப்போது நான் சொன்னது புரிகிறதா?"

    இப்போதுகூட ஓரளவுதான் புரிகிறது.

    சரி இன்னமும் சுருக்கமாய், மிகப் பாமரமாய்ச் சொல்கிறேன். ஒரு மாம்பழம் பழுத்து உண்ணத் தயாராக உள்ளது. வாசமும் வீசுகிறது. இதை அமுதம் என வைத்துக் கொள்ளுங்கள்.

    சரி...

    இதே பழம் அழுகிப்போய் நாற்றமெடுக்கும்போது இந்தப் பழம் பாஷாணமாகிவிடுகிறது. இப்போது புரிகிறதா?

    புரிகிறது... அமுதமும் நஞ்சும் ஒன்றே! அமுதமே நஞ்சாகிறது.

    மிகச்சரி... அமுதம் நஞ்சாவது சுலபம், ஆனால் நஞ்சு அமுதமாவது சாத்தியமா?

    அதாவது அழுகிய பழம் திரும்ப அழுகாத நிலையை அடைவதைச் சொல்றீங்களா?

    ஆம்..... நான் அதற்கே முயல்கிறேன்.

    முடியுமா?

    முடியும். எல்லாமே ஒரு வட்டச் சுழற்சிதான். முன்னோக்கிய சுழற்சியை அப்படியே மாற்றிவிட வேண்டும்.

    போகர் இப்படி பாஷாணம் குறித்தும், அமுதம் குறித்தும் பேசியபடி இருக்க அங்கே நவமரும் குகை வாசலில் ஒட்டுமொத்தமாய் வந்து நின்றனர். அவர்களில் இரண்டு பேரால் நிற்க முடியவில்லை. குகை வாயிலில் பெருமூச்சோடு உட்கார்ந்துவிட்டனர். மற்றவர்கள் எப்போதையும்விடத் தெம்பாகவும் தெளிவாகவும் காட்சியளித்தனர். அவர்கள் தோள்களில் ஒரு மூங்கில் கூடை... அதில் அவரவர்க்கான பாஷாணங்கள்!

    போகர் அவர்களை வரவேற்றார்!

    ***

    இன்று

    அந்த நீலகண்ட பாஷாணலிங்கம் மேல் சாற்றியிருந்த சந்தனமும் அந்த சந்தனம் மேல் வைத்திருந்த குங்குமமும் ஏதோ சிலமணி நேரத்திற்கு முன்பு வைத்ததுபோல் லேசான ஈரத்தோடு இருந்தன! அரவிந்தன் அதை மெல்லத் தொட்டுத் தூக்கினான். அப்போது யதார்த்தமாக பூஜை அறையில் கற்பூர ஆரத்தியைக் காட்டிய நிலையில் அந்தக் கற்பூரத் தட்டோடு உள்ளே வந்த முத்துலட்சுமி கற்பூரத் தட்டோடு அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

    அந்தச் சூழலில் விபூதியோடு ஒருவகை மூலிகை கலந்த மிக இதமான வாசம் வேறு... பாரதியும் படபடப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அரவிந்தன் தான் பிடித்தபடி இருந்த லிங்கத்தை எங்கே வைப்பது என்று பார்த்து அறையின் அருகில் தரைமேல் முதலில் வைத்தான். அடுத்த நொடி திறந்திருந்த அறை ஜன்னல் வழியாக மேகம் விலகிய நிலையில் சூரியனின் கதிர் ஊடுருவி கச்சிதமாய் அதன்மேல் விழுந்தது!

    முத்துலட்சுமி பிரமிப்பிலிருந்து விடுபட்டவளாக, நான் சொல்லலை... அதே லிங்கம்தான் இது! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... அதே லிங்கம்... என்று தன் கைவசக் கற்பூரத்தைக் காட்டி லிங்கம் முன் அந்தத் தட்டை வைத்தாள்.

    அரவிந்தன் தொடர்ந்து பெட்டியின் உட்புறம் பார்த்தான். ஏராளமான காய்ந்த வில்வ இலைகள். அதன் நடுவில் ஏட்டுக் கட்டுகள், 1, 2, 3, 4, 5, 6 என்று கட்டுகள், அதுபோக ஒரு நீல உறை கொண்ட அகண்ட டைரி. டைரியின் மேல் 1932 என்கிற வருடக்குறிப்பு உள்ளே முதல் பக்கத்தில் பிரமாண்ட ராஜ உடையார் என்கிற கையெழுத்து! அதன் மற்ற பக்கங்களை விசிறுவதுபோல் ஒரு புரட்டு புரட்டினான் அரவிந்தன். எல்லாப் பக்கங்களிலும் அழகிய கையெழுத்தில் அன்றைய நாட்குறிப்பு, சில பக்கங்களில் சில வரைபடங்கள்...

    பார்த்தவரை அப்போதைக்குப் போதும் என்று டைரியை வைத்துவிட்டு உள்ளே இன்னும் என்ன இருக்கிறது என்று பார்த்தான். ஒரு சிறிய கட்டைச் செருப்பு, அதன்பின் ஒரு சிறு கைக்குள் அடங்கிவிடுகிற மரப்பெட்டி. அதைத் திறந்தால் உள்ளே கறுப்பாய் கோலி உருண்டைபோல் ஐந்து ரசமணி உருண்டைகள். சிறியதாய் ஒரு சாண் நீள வேல் ஒன்று, அதோடு உருத்ராட்ச மாலை, ஸ்படிக மாலை, பவழ மாலை என்று மூன்று மாலைகள். சிறியதாய் ஒரு டப்பி. அநேகமாய் வெள்ளி டப்பியாகத்தான் இருக்க வேண்டும். அதைத் திறக்க முனைந்தபோது அது முடியாது போல் தோன்றியது. நெடுநாள்கள் திறக்காததால் இறுகிவிட்டிருந்தது.

    பாரதி அந்தப் பொருள்கள் அவ்வளவையும் ஏதோ தொடக்கூடாத ஒன்றைத் தொட்டு எடுப்பதுபோல் எடுத்துப் பார்த்தாள். குறிப்பாய் ஏட்டுக்கட்டுகள். கட்டின்மேல் உள்ள மரப்பட்டையில் எழுத்துகள் ஊசி கொண்டு செதுக்கியதுபோல் எழுதப்பட்டிருந்தன. ஒன்றில் சொர்ண ஜால மகாத்மியம் என்றிருந்தது, இரண்டாவதில் த்ரிகால பலகணி என்றிருந்தது. மூன்றாவதில் தசாபுக்தி பலன் என்றும், நான்கில் வன மகோத்சவம் என்றும், ஐந்தில் கருட பார்வை என்றும் இருந்தது. ஆறாவதில் ருணரண விமோசனம் என்னும் எழுத்துகள்!

    அவ்வளவும் சித்தர்கள் எழுதின ஏடுங்க... ஒவ்வொண்ணுமே பொக்கிஷம். இதையெல்லாம் பாக்கவே கொடுத்துவெச்சிருக்கணும் என்ற முத்துலட்சுமி, பாரதி பார்த்துவிட்டு வைத்த கட்டுகளை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள்!

    பெட்டியின் உள்ளே இனி எதுவுமில்லை!

    எல்லாமே வெளியே வந்து கிடந்தது. அப்படியே பாரதியை ஏறிட்டான். அவன் என்ன நினைக்கிறான் என்றே தெரியவில்லை. பாரதியும் அதேபோலத்தான் பார்த்தாள். அப்போது முத்துலட்சுமி அந்த ரசமணி உள்ள மரப்பெட்டியை எடுத்து ரசமணிகளை உள்ளங்கையில் கொட்டி அதை உற்றுப்பார்க்கலானாள். அந்தநொடி அவள் உடலில் ஒரு புதுத்தெம்பு. மொத்த உடம்பெங்கும் சிற்றெறும்புகள் ஊர்வதுபோல் ஒரு சன்னமான கிளர்ச்சி. அதை கவனித்த பாரதி பாட்டி அதை அந்தப் பெட்டில போட்டுக் கீழ வை. என்ன ஏதுன்னு தெரியாம எதையும் தொட வேண்டாம் என்றாள்.

    பாரதி... இதுல எந்த பயமுறுத்தற விஷயமும் இல்லை. அவ்வளவும் உன் பாட்டி சொன்ன மாதிரி பொக்கிஷங்கள்தான். நமக்குத் தெரிஞ்சே இது பல வருடமா பூட்டியே இருந்த ஒரு பெட்டிதான். அப்படி ஒரு பெட்டியைத் திறந்தா கெட்ட வாடைதான் அடிக்கும். ஆனால் இங்க பார், என்ன ஒரு வாசம். இன்ஃபாக்ட் எனக்கு லேசா தலைவலி இருந்தது. நான் அதைப் பெருசுபடுத்திக்காம சமாளிச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா இப்ப ரொம்ப ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்றேன். இதையெல்லாம் புரிஞ்சிக்கணும்னா இந்த டைரிய படிக்கணும். இது யாருக்குச் சொந்தமோ அவர் எழுதினது என்ற அரவிந்தனுக்கு என்ன பதில் சொல்வது என்று பாரதிக்குத் தெரியவில்லை.

    என்ன யோசனை பாரதி?

    இல்ல... இதுல ஏதோ மருந்து இருக்கலாம்னு சொன்னீங்களே...

    ஆமாம்... ஆனா இதுல இப்ப மருந்து இருக்கற மாதிரி எனக்குத் தெரியல. இருந்தாலும் இந்த ஏட்டுல . இருக்கலாம்கற மாதிரி தோணுது என்றபடியே ‘ருண ரண விமோசனம்’ என்கிற ஏட்டைக் கையிலெடுத்தான் அரவிந்தன்.

    "அரவிந்தன்... இதை முதல்ல படிச்சு, அப்புறம் புரிஞ்சிகிட்டு மூலிகைகளைத் தேடி அலையவெல்லாம் இப்ப யாருக்கு நேரம் இருக்கு? இதை என்னால ஒத்துக்கவும் முடியல, மறுக்கவும் முடியல, பிராக்டிகலா இதெல்லாம் சரியா வராது.

    எனவே... இது எதுவும் நமக்குத் தேவையில்லை... தேடிவந்த அந்த யு.எஸ் ஜோடிகிட்ட கொடுத்துடுவோம். அவங்க என்னமோ பண்ணிட்டுப்போகட்டும். என்ன சொல்றீங்க...?"

    உன்னோட விருப்பம்தான்... ஆனா, பழநி சித்தர் சொன்னபடிதான் எல்லாம் நடந்திருக்கு. அதன்படி பார்த்தா உன் அப்பா குணமடையணும். அது இதாலதான் நடக்கணும்.

    போதும் அரவிந்தன்... இந்தப் பெட்டிமேல ஒரு சின்ன க்யூரியாசிட்டி இருந்தது. இப்ப அது என்வரைல தீர்ந்துபோச்சு. இதை உங்களப்போல பொக்கிஷம் பொடலங்காய்னு நான் சொல்லப்போறதில்லை. இது எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும் பாரதியின் அலட்சியமான பேச்சு முத்துலட்சுமிக்குக் கோபத்தை வரவழைத்தது.

    பாரதி... நீ நல்ல பொண்ணுதான் ஆனா பிடிவாதமா நீ சிலநேரம் நடந்துக்கறத பாக்கும்போது எனக்கு உன் அப்பன் ஞாபகம்தான் வரும். அவனும் இப்படித்தான். நீ எதுல அவனைக் கொண்டிருக்கியோ இல்லையோ, பிடிவாதத்துல, தான் நினைக்கறதுதான் சரிங்கறதுல அப்படியே அவனைக் கொண்டிருக்கே... இதோட மதிப்பு உனக்குத் தெரியல... உன்னைச் சொல்லிக் குத்தமில்ல உன் வயசு அப்படி, நீ வளர்ந்த விதமும் ஒரு காரணம். முதல் தடவையாக முத்துலட்சுமி சீறினாள். பாரதிக்கே அது ஆச்சரியம்தான். அப்போது, நான் வரலாமா என்றொரு குரல்.

    திரும்பிப் பார்த்தபோது அறை வாசலுக்கு அப்பால் அந்த டெல்லி ஜோசியர் நந்தா, கூடவே மருதமுத்து. அவரைப் பார்க்கவுமே வெகுவேகமாய் அவரை நோக்கி நடந்தாள் பாரதி. நெருங்கி வந்தவளிடம், அம்மா சொல்லச் சொல்ல கேட்காம வந்துட்டாரும்மா... என்றான் மருதமுத்து. ஹாலில் பானுவும் வந்து நின்றிருந்தாள்.

    என்ன சார் விஷயம்... எதுக்கு இப்படி விடாமத் துரத்தறீங்க? பாரதியிடம் காட்டமான ஆரம்பம்.

    கோபப்பட வேண்டாம் மேடம். நீங்க அந்தப் பெட்டியைத் திறந்துட்ட விஷயம் எனக்குத் தெரியும். அதுலதான் உங்கப்பாவுக்கு மருந்து இருக்குன்னு நான் நேத்துகூடச் சொன்னேன். இப்பவும் சொல்றேன். கொஞ்சம் ஜல்தியா செயல்பட்டா நிச்சயம் உங்கப்பா பொழச்சிக்குவார். அவர் ஜாதகம் எனக்குத் தெரியும். நான் சொல்றத கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க. ப்ளீஸ்... ஜோதிடரிடம் உச்சபட்சக் கெஞ்சல்.

    அது சரி... பெட்டிய நாங்க திறந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?

    அது இப்ப எதுக்கு? டைம் இல்ல மேடம்! உங்கப்பாவுக்கு இப்ப ஓடிக்கிட்டிருக்கற நட்சத்திரத்துலதான் நல்லது செய்யமுடியும். சிலமணி நேரத்துல அடுத்த நட்சத்திரம் வந்துடுது. அது ஹெல்ப் பண்ணாது.

    இதெல்லாமே ஹம்பக்... ஐ டோன்ட் பிலீவ் ஆல் தீஸ் ப்ளடி திங்க்ஸ். நட்சத்திரம் நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் சும்மா... புத்தில தெளிவு இருந்தா எல்லாநேரமும் காலமும் நல்ல நேரம்தான்...

    அப்ப உங்களால உங்கப்பாவை ஏன் எதுவும் செய்ய முடியல...?

    இது என்ன பேச்சு... எல்லா முயற்சியும் நடந்துகிட்டுதானே இருக்கு?

    எங்க நடந்துகிட்டிருக்கு... எம்.பி சார் இப்ப கிட்டத்தட்ட டெட் பாடி. இன்னும் டிக்ளேர்தான் பண்ணலை ஜோதிடரின் பதில்முன் ஒரு விநாடி பாரதி மடங்கித் தேங்கினாள். அரவிந்தன் குறுக்கிடத் தொடங்கினான்.

    உள்ளிருந்து அங்கு வந்தவன் மிஸ்டர் ஜோசியர்... பெட்டில மருந்துன்னு ஒண்ணு தனியா இருக்கற மாதிரியே தெரியல. எல்லாமே ஏடுகள், அப்புறம் ஒரு சிவலிங்கம், கட்டச்செருப்பு, காஞ்ச வில்வ இலைகள்... இவைதான்! என்றான்.

    இல்ல... இன்னும்கூட விஷயங்கள் இருக்கணுமே?

    அப்படி எதுவும் இல்லை... நீங்க என்ன சூரணம் பஸ்பம் இப்படி ஏதாவது சொல்றீங்களா? அரவிந்தன் கேட்க, முத்துலட்சுமி அந்த ரசமணி கொண்ட பெட்டியோடும், கையில் 5 ரசமணி உருண்டைகளை வைத்துக்கொண்டும் வந்தவளாய் தம்பி, இதுவும் பெட்டிலதானே இருந்திச்சு. இதை விட்டுட்டீங்களே என்றாள். அடுத்த நொடி ஆவேசமாய் முத்துலட்சுமி கையில் இருந்த ரசமணி உருண்டைகளைப் பறித்த ஜோதிடர் நந்தா அதை உற்றுப் பார்த்தபடியே இதுதான் அந்த மருந்து... இதுதான் அந்த மருந்து... என் கூட வாங்க, வந்து நடக்கப் போற அதிசயத்தைப் பாருங்க என்று அதோடு புறப்படப் பார்த்தவரை, பாரதி பலமான குரலில் தடுத்து நிறுத்தினாள்.

    மிஸ்டர் நந்தா... ஸ்டாப் இட்! அதை முதல்ல இப்படிக் கொடுங்க. என்ன இது இன்டீசன்டா பிஹேவ் பண்ணிக்கிட்டு... இது ஏதோ கோலி மாதிரி இருக்கு. இதைப் போய் மருந்துங்கிறீங்க?

    "ஐயோ மேடம்... இது ரசமணி. இதை இடுப்புக்கிட்ட வெச்சா இதுல இருந்து உருவாகற ரேடியேஷன் தொப்புள் வழியா போய் டோட்டல் பாடி முழுக்கப் பரவும். உடம்புல பிரதான நாடின்னு ஏழு நாடி இருக்கு, அதுல ஒவ்வொரு நாடி அடங்கிக்கிட்டே போறதத்தான் சாவை நோக்கிப் போறதா சொல்வாங்க. இது நாடிகளை அடங்கவிடாது. கொஞ்சமா இது ரத்த ஓட்டத்தையும் தூண்டும். அப்ப நாம் வெளிய இருந்து கொடுக்கற மருந்து ரத்தத்துல கலந்து ஓடி உயிரைக் காப்பாத்தும்.

    இதால மட்டும் ஒரு உயிரைக் காப்பாத்த முடியாது. ஆனா இதால உயிர் அடங்கிடாம தடுக்க முடியும்."

    அப்படின்னா ஏன் மெடிகல் ரிசர்ச்லையோ இல்ல சைன்ஸ்லயோ இப்படி ஒரு விஷயமே இல்லை?

    இது முழுக்க முழுக்க சித்த விஞ்ஞானம். பை த பை உங்க கிட்ட இனி பேசி நேரத்த வீணடிக்க நான் தயாரில்லை. உங்கப்பா பிழைப்பார். பிழைச்சா நீங்க என்கூட பேசுங்க. இல்லையா, செருப்பாலகூட அடிங்க வாங்கிக்கறேன். நான் இப்ப கிளம்பறேன்.

    ஜோதிடர் நந்தா அந்த ரசமணிகளோடு புயல்போலப் புறப்பட்டார். அரவிந்தனும் பாரதியிடம் கமான் பாரதி... அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்துதான் பார்ப்போமே என்றவன், ஓடிச்சென்று பெட்டிக்குள் திரும்ப எல்லாவற்றையும் வைத்து மூடியவன், ஞாபகமாய் திருப்புளியால் உள்பாகம் தட்டும் வரை திருகி மூடினான்!

    46

    அன்று

    போகர் வரவேற்றிட நவமரான ‘அஞ்சுகன், புலிப்பாணி, சங்கன், அகப்பை முத்து, மல்லி, மருதன், நாரண பாண்டி, பரிதி, சடையான்’ ஆகிய ஒன்பது பேரும் அந்த குகைக்குள் வந்து ஒரு புதிய சூழலைக் கண்டிடும் பிரமிப்போடு நின்றனர். நாரண பாண்டியும் சடையானும் மட்டும் நிற்க முடியாமல் திரும்ப உட்கார்ந்தனர்.

    போகர் அவர்கள் இருவரையும் கூர்ந்து கவனித்தார்.

    மெல்ல அவர்களை நெருங்கி அவர்கள் இருவரின் நாடியையும் பிடித்துப் பார்த்தார். அவர் கைப்பட்ட நொடி அவர்களிடம் ஒரு புதிய தெம்பு. பின் இருவரையும் திரும்பி அமரச்சொல்லி முதுகுத்தண்டுவடம்மேல் தன் ஆட்காட்டி விரலால் மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாய் சிலமுறை வருடிவிட்டார். இறுதியாக இரு கைவிரல் நுனிகளும் ஒன்றோடொன்று தொட்டு நிற்கும் விதத்தில் இரு கைகளையும் கூரைபோல் வைத்துக்கொள்ளச் சொல்லி, நெற்றிப்பொட்டின் மேல் தன் கட்டை விரலை அழுத்தமாய் வைத்து, சில விநாடிகள் கண்களை மூடி மந்திரம்போல் ஏதோ முணுமுணுத்தார். அதன்பின் அவர்களிடம் பெரும் மாற்றம். இருவரிடமும் சுணக்கம் நீங்கி, ஒரு புதிய தெம்பு தோன்றத் தொடங்கிவிட்டது.

    மற்ற சீடர்கள் இதை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

    அந்த குகைக்குள் குளிர்ந்த சூழலும், அதே நேரம் கருமார்கள் இருவரும் போட்டிருந்த கணப்புச் சூடும் ஒருசேர இருந்து, மலை ஏறி வந்த களைப்பும் பெரிதாக எவரிடமும் இல்லை.

    பிரானே... தாங்கள் இப்போது நாரண பாண்டிக்கும் சடையானுக்கும் என்ன செய்தீர்கள் என்று நாங்கள் அறியலாமா? என்று கேட்டான் சங்கன் என்பவன்.

    சொல்கிறேன். நான் இப்போது என் ஆத்ம சக்தியை இவர்களுக்குக் கடத்தியிருக்கிறேன். நீங்களும் இதுபோல் செய்ய முடியும்! முன்னதாக உடம்பின் நாடி வாங்கி எது... நாடி தாங்கி எது... நாடி தூங்கி எது என்று தெரிய வேண்டும். இதில், ‘நாடி வாங்கி’ எனப்படும் இடத்தின் மேல் நம் விரலைவைத்து, நாம் நம் சக்தியை நோயுற்றவருக்குக் கடத்தலாம். நாடி வாங்கிப் பகுதியின் தலைவாசல் நெற்றிப்பொட்டு. இதன்மேல் நம் கட்டை விரல் நுனியை நாம் பதித்து, குறிப்பிட்ட மந்திரம் ஜெபித்திட அதன் காரணமான சப்த அதிர்வு நம் ஒளியுடம்பில் பரவி, அந்த ஒளியுடம்பின் மின் காந்தம், நாம் யாருக்கு சக்தியை வழங்க நினைக்கிறோமோ அவருக்குச் சென்று சேரும். இது, இருக்கிற ஒருவன், இல்லாத ஒருவனுக்கு ஒன்றைத் தருவது போன்ற செயல்பாடே...

    இப்படிக்கூடவா ஒரு முறை இருக்கிறது?

    இதற்கே வியந்தால் எப்படி... பார்த்தேகூட சிகிச்சை அளிக்க முடியும். பார்க்காமல் தொலைவில் இருந்தபடி நினைப்பாலும் சிகிச்சை அளிக்க முடியும்...

    பெரும் மாயமாக உள்ளதே?

    சித்தத்தில் மாயத்திற்கெல்லாம் இடமே கிடையாது. அந்த வார்த்தையே சித்த அகராதியில் கூடாது.

    அப்படியானால் இதற்கு என்ன வென்று பேர்?

    "இதுவும் ஒரு சிகிச்சை முறை... சித்த விஞ்ஞானம், அவ்வளவுதான்! ஆனால் இப்படி சிகிச்சை தர ஒரு சித்தன், உடம்பின் ரசாயனங்கள் குறித்த அறிவுகொண்டிருக்க வேண்டும். நான் முன்பே கூறியதுபோல் வாத, பித்த, சிலேத்தும உடல் பற்றிய தெளிவும் வேண்டும்.

    இந்த உலகில் முதல் அதிசயம் நம் உடலே என்பதைத் தெரிந்துகொண்டு மனதில் வையுங்கள். புற உலகிலுள்ள அவ்வளவும் இந்த உடம்புக்குள்ளும் உள்ளன. அது என்ன... எங்கே உள்ளது அது... அதன் குணப்பாடு எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்வதே உடற்கல்வி. இப்போது அதுகுறித்தெல்லாம் பேச நேரமில்லை.

    நாரணபாண்டியும் சடையானும் களைத்துப்போகக் காரணம் அவர்கள் வைத்திருந்த பாஷாணமே! ஒன்பது பாஷாணங்களில் இரண்டு பாஷாணங்கள், அந்த பாஷாண குணம்கொண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களிடம்கூட எதிர்வினை தான் ஆற்றுகின்றன. அதைத்தான் இவர்களை வைத்து நான் புரிந்து கொண்டேன். மீதமுள்ள ஏழு பாஷாணங்களும் அவற்றுக்குரிய குணம் கொண்டவர்களிடம் இணக்கமாகச் செயல்படுகின்றன; எதிர்வினை ஆற்றவில்லை என்பதே உங்களை வைத்து நான் தெரிந்துகொண்ட முதல் உண்மை. இப்போது நான் ஓர் உண்மையையும் உங்களுக்குக் கூறப்போகிறேன். இந்த பாஷாணக் கலப்புள்ள பானம் ஒன்றை நீங்கள் அருந்தியிருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு அது தெரியாது! உணவருந்தும்போது உங்களுக்கு வழங்கப்பட்ட மிளகு ரசத்தோடு அது கடுகளவு சேர்க்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் உள், வெளி என இரண்டாலும் நீங்கள் பாஷாணங்களோடு இருந்தீர்கள். அது உங்கள் ஆரோக்கியத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அடுத்து உங்கள் மனநலமும் கெடவில்லை. மொத்தத்தில் ஒன்பது பாஷாணங்கள் தனித்தனியே மனிதர்களோடு பெரிய எதிர்வினையின்றிச் செயல்படுகின்றன என்பதே முடிவு. இனி இதன் கலவை உங்களை என்ன செய்யப்போகிறது என்று பரிசோதிக்கப் போகிறேன், முதலில் உங்கள் வசமுள்ள பாஷாணக் கட்டிகளை வரிசையாகக் கீழே வையுங்கள்."

    போகர் விளக்கத்தோடு இட்ட கட்டளைப்படி, அவர்களும் கைப்பிடி கொண்ட ஓரடி உயரமும் ஒன்றரை சாண் விட்டமும் உடைய தங்கள் மூங்கில் கூடைகளை வரிசையாகக் கீழே வைத்தனர்.

    உங்கள் இடுப்பில் கட்டியிருப்பதையும் அவிழ்த்து, கூடையில் போட்டுவிடுங்கள்... என்றார் போகர்.

    அவர்களும் அவ்வாறே செய்தனர். அதன் பின் போகர் அஞ்சுகனையும் சங்கனையும்தான் பார்த்தார்.

    பிரானே...

    நீங்கள் இருவரும் ஒரு காரியம் செய்ய வேண்டுமே...

    உத்தரவிடுங்கள்... காத்திருக்கிறோம்...

    இங்கிருந்து தெற்காக, மிகச்சரியாக ஒரு காக்கை இளைப்பின்றிப் பறக்க முடிந்த தூரமான அரை நாழிகை தூரத்தில் ஒரு மடுவும், மடுவை ஒட்டி யானைக் கூட்டங்களும் உள்ளன.

    நல்லது குருபிரானே!

    அங்கே அநேக தாவரங்கள் உள்ளன. அவற்றில், ‘செந்தாடு பாவை’ என்றொரு மூலிகைத் தாவரம் உண்டு. அதை இனங்கண்டுகொண்டு பறித்துவர வேண்டும். எனக்கு அதன் ரசம் மூன்றுபடி வேண்டும்...

    அது எப்படி இருக்கும் பிரானே?

    நான் ஒரு சுவடி தருகிறேன். அதில் அதன் உருவம் வரையப்பட்டிருக்கும். அதனருகில் சென்று நாம் மூச்சுவிடும் பட்சத்தில் அது குழைந்துவிடும். இந்தக் குறிப்புகள் போதும் என்று கருதுகிறேன்...

    போதும் பிரானே... மீதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்...

    அப்படியானால் புறப்படுங்கள். புறப்படும் முன் நாகதாளி வேர் வளையத்தை இரு கால்களிலும் கட்டிக்கொள்ளுங்கள்.

    நாகங்கள் மிகுந்த வனமா இது?

    ஆம்... தரைப்பரப்பில் நாகங்கள் மிகுதி. பொதுவாக நெல் வயலும் அருகில் மலையும் இருந்தால் உறுதியாக அங்கே நாகம் இருக்கும். நெல் வயல் என்பது தவளைக்குஞ்சுகள் பெருகிட உதவும் ஓர் இடம். தவளைக்குஞ்சுகள் மிகுந்த இடத்தில் நாகமும் மிகுதியாகும். அவை மலையடிவாரப் பகுதியில் பாறைகளுக்குக் கீழ் பதுங்கி வாழ்ந்திடும்.

    அப்படியானால் ராஜாளிக் கழுகுகளும், பருந்து, கருடன் போன்றவையும்கூட இருக்குமல்லவா?

    "உறுதியாக இருக்கும்.

    Enjoying the preview?
    Page 1 of 1