Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinnanchiru Kiliye...
Chinnanchiru Kiliye...
Chinnanchiru Kiliye...
Ebook281 pages1 hour

Chinnanchiru Kiliye...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபல திரைப்பட கதாநாயகர் மதுசூதனன். அவரின் மனைவி சித்ரா மற்றும் அவர்களின் ஒரே மகன் ஸ்ரீநாத். மதுசூதனனுக்கு தன் மகன் தன்னை போலவே நடிகராக வேண்டும் என்ற ஆசையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மகனோ, ஜுலி என்ற ஏழை குடும்ப பெண்ணை விரும்புகிறான். இதனால் அவர்கள் குடும்பத்தில் நடந்த குழப்பங்கள் என்ன? ஸ்ரீநாத் - ஜுலி இவர்களின் காதல் உண்மையான காதலா? அந்த சின்னஞ் சிறு இரு கிளிகள் இணைந்தார்களா? வாருங்கள் வாசிப்போம் காதல் சுவையுடன்...

Languageதமிழ்
Release dateJun 28, 2023
ISBN6580123909407
Chinnanchiru Kiliye...

Read more from Indhumathi

Related to Chinnanchiru Kiliye...

Related ebooks

Reviews for Chinnanchiru Kiliye...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinnanchiru Kiliye... - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சின்னஞ் சிறு கிளியே...

    Chinnanchiru Kiliye...

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    அன்று காலையில் வெகு சீக்கிரம் எழுந்துவிட்டார், மதுசூதனன். படுக்கை அறையை ஒட்டின வராந்தாவில் வந்து நின்றபோது கீழே புல் தரையின் நடுவில் இருந்த சரவிளக்கு இன்னமும் எரிந்து கொண்டிருந்தது. ராத்திரி அவிழ்த்து விடப்பட்ட டைனியும் ஜானியும் காம்பவுண்டைச் சுற்றி வந்துகொண்டிருந்தன. தோட்டக்காரன் இந்த நேரத்திற்கெல்லாம் எழுந்து அவைகளைக் கட்டிப்போட்டு, வாசல் கேட்டில் எரியும் விளக்குகளையும், புல் தரையின் சரவிளக்குகளையும் அணைத்துவிட்டு, ரப்பர் குழாயை இழுத்துப்போட்டு, ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பான். இன்று இன்னமும் அவன் எழுந்திருக்கவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் மதுசூதனன். உடனே சித்ரா ஊரில் இல்லாதது ஞாபகத்திற்கு வந்தது. அவள் இருந்திருந்தால் எல்லாம் ஒழுங்காக நடக்கும். வேலைக்காரர்கள் சரியாக ஐந்தடித்ததும் எழுந்து விடுவார்கள். சந்தடி எதுவுமின்றித் தங்கள் வேலைகளை அமைதியாகக் கவனிப்பார்கள்.

    ஆனால் இன்று மணி ஐந்தரையாகியும் விளக்குகள்கூட இன்னமும் அணைக்கப்படவில்லை. நாய்கள் கட்டப்படவில்லை. தோட்டக்காரன் எழுந்திருக்கவில்லை. வாசலில் கூர்க்காவைக் காணவில்லை. கீழே வீட்டின் பின்பக்கமிருந்து சமையல்காரரோ, வேலைக்காரியோ பாத்திரங்களை உருட்டுகிற சத்தம் பெரிதாகக் கேட்டது.

    அத்தனைக்கும் மதுசூதனனுக்குக் கோபம் வரவில்லை. மாறாக அந்த ஒழுங்கற்றதனத்தை ரசிக்க வேண்டுமென்று தோன்றியது. அன்று என்னவோ எல்லாமே புதுசாகத் தெரிகிறமாதிரி இருந்தது. அவர் இப்படி ஐந்தரைக்கு எழுந்திருப்பதுகூடப் புதுசான ஒரு காரியம்தான். இவ்வளவு அதிகாலையில் எழுந்து, பால்கனியில் நின்று, புதுக்காற்றைச் சுவாசித்து எத்தனையோ நாட்களாகி விட்டன. நாட்களா...? வருடக்கணக்காகி விட்டது. இந்தப் பாதி இருட்டைப் பார்த்து, கிட்டத்தட்ட நாலைந்து வருடங்கள் இருக்குமா? இல்லை. அதற்கும் மேலே ஆகிவிட்டது. அவர் நடிப்புத் தொழிலை நிறுத்தியே நான்கு வருடங்கள் இருக்கும். அப்போது பி.ஏ. முதல் வருடம் படித்துக்கொண்டிருந்த அவரின் ஒரே மகன் ஸ்ரீநாத் படித்து முடித்து இன்று நடிக்க வந்திருக்கிறான். அவனைக் கதாநாயகனாக வைத்து அவரே முதல் படத்தைத் தயாரிக்கிறார். தன்னுடைய மற்றத் தயாரிப்புகளைவிட இது மிகச் சிறந்ததாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். தன்னைவிடத் தன் மகன் இன்னும் சிறந்த நடிகன் என்ற பெயரை எடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்.

    அவர் நடிக்க வந்தபோது இருந்த சூழ்நிலையே வேறு. இப்போது மாதிரி இவ்வளவு வசதிகள் இல்லை. இவ்வளவு பணம் கொடுக்கப்படவில்லை. தொழில்துறை முன்னேற்றங்களும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவரை நம்பி நடிக்கவைத்துப் படமெடுக்க யாரும் தயாராக இல்லை. அவரும் தன் முயற்சியைக் கைவிடாமல் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கித், தன் நாடகத்துறை அனுபவங்களைச் சொல்லிப் பகத்சிங்காக, கட்டபொம்மனாக, பாரதியாராகவெல்லாம் நடித்துக்காட்டி, ஒரு சந்தர்ப்பம் தரச்சொல்லிக் கெஞ்சி...

    கடைசியில் சித்ராவால்தான் அவருக்கு நடிக்கிற சந்தர்ப்பமே கிடைத்தது. அப்போது அவள் சினிமாவின் முன்னணிக் கதாநாயகியாக இருந்தாள். ஏதோ ஒரு சினிமா கம்பெனிக்கு சான்ஸ் கேட்டு இவர் போன சந்தர்ப்பத்தில் அவள் அங்கே ஸ்டோரி டிஸ்கஷனுக்காக வந்தாள். இவரைப் பார்த்தாள். இவரின் உயரம், நிறம், துடிப்பான கண்கள் எல்லாம் கவர, மெல்லத் திரும்பித் தயாரிப்பாளாரைப் பார்த்து, யார் இவர்...? என்பதைப் பார்வையிலேயே கேட்டாள்.

    யாரோ நடிக்க சான்ஸ் கேட்டு வந்திருக்காரும்மா... டிராமாக்கார ஆள் போலத் தெரியுது...

    பெயரென்னவாம்...?

    மசூதனனாம்...!

    அவளுக்கு அவன் அப்போது நிஜ மதுசூதனனாகவே தெரிந்தான். பார்வையில் அத்தனை ஜாலங்களும் புலப்பட... அவள் முடிவு செய்துவிட்டாள்.

    ஏன் செட்டியார், நம்மளோட இந்தப் படத்திற்கு ஒரு புது ஹீரோவைத் தேடிக்கிட்டு இருக்கீங்க இல்லை...? அந்த ரோலுக்கு இந்த ஆள் தோதாக இருப்பார்னு தோணுது. பேசாமல் இவரையே புக் பண்ணிடுங்களேன்... சொன்னபடி கேட்பார். செலவும் குறையும்... என்ன...?

    இவராங்கம்மா...? என்று செட்டியார் திருப்திப்படாதவராக இழுத்தார்.

    ஏன், இவர் சரிப்படமாட்டார்னு நினைக்கிறீங்களா?

    அப்படியில்லீங்க. புதுசா ஃபீல்டுக்கு வர்றவரு. உங்களுக்கு ஜோடியாக எடுபடுவாரான்னு சந்தேகமாயிருக்கு...

    எனக்குச் சரியான ஜோடின்னு என் மனசுக்குப் படத்தானே உங்ககிட்டே சொல்றேன்... என்று சித்ரா குறும்பும் சந்தோஷமும் தெரியச் சிரிக்கவும், அதன் உள் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட செட்டியார்,

    அப்போ இவரை ஃபிக்ஸ் பண்ணிடட்டுங்களா...? என்று அதே உள் அர்த்தத்துடன் கேட்க, அவளின் முகம் சிவந்து போயிற்று.

    சீ! என்ன செட்டியார் இது. நான் படத்துக்குத்தான் சொன்னேன்...

    நானும் படத்துக்குத்தாம்மா கேட்டேன்...

    அப்படின்னா மேக்-அப் போட்டு டெஸ்ட் பண்ணிப் பார்த்து அந்த ஸ்டில்களை எனக்கு அனுப்பி வையுங்க. பார்த்துட்டுச் சொல்றேன்.

    தான் சித்ராவால் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறோம் என்பது தெரிந்ததும் அவனால் ஒரு வினாடி ஒன்றும் பேசமுடியவில்லை.

    கிராமத்தை விட்டுக் கிளம்பினபோது அவளைப் பார்ப்போம் என்றுகூட அவன் நினைக்கவில்லை. ஒவ்வொரு ஸ்டுடியோ வாசலிலும் தவம் கிடந்தபோது எத்தனையோ பேர் வெளியில் வருவதை அவன் பார்த்திருக்கிறான். ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், பாலையா, நாகையா, கண்ணாம்பா... இப்படி நிறையப் பேர்களோடு அவன் பேச முயற்சி பண்ணியிருக்கிறான். அவர்களின் வாகனங்களின் பின்னாலேயே சிறிது தூரம் ஓடியிருக்கிறான். ஒரு சிலரோடு பேசியும் இருக்கிறான். அப்போதெல்லாம்கூட அவனால் சித்ராவைப் பார்க்க முடிந்ததில்லை. அவள் அவன் கண்ணில் பட்டதில்லை. அவன் வாசல் கூர்க்காவையும், ஸ்டுடியோ வாசலில் நின்றிருந்த மற்றவர்களையும்...

    ஏன் சார், இவங்கள்ளாம் போறாங்களே... சித்ரா தேவி போகமாட்டாங்களா...? என்று கேட்டிருக்கிறான். அதைக்கேட்டு கூர்க்கா அவனைக் கலாட்டா பண்ணியிருக்கிறான்.

    நீ வாசல்ல நிக்கறேன்னு நான் வேணா உள்ளார போயி சொல்லட்டுமா...? உடனே உன்னைப் பார்க்க... சித்ராம்மா ஓடியாருவாங்க... என்று சொல்லிச் சிரித்திருக்கிறான்.

    அந்தச் சித்ராவே இப்போது தனக்குச் சிபாரிசு செய்திருக்கிறாள். அதுவும் அவளோடு நடிக்கவே அந்தச் சிபாரிசு...!

    மேக்-அப் போட்டுக் கொண்டபோது அவனுக்குள் சொல்ல முடியாத கவலைகளும், பயங்களும், சந்தேகங்களும் விஸ்வரூபமெடுத்தன. மேக்-அப் போட்டபின் தன் முகம் எப்படி இருக்கும்...? சித்ராவிற்குப் பிடிக்குமா...? காமிராவில் எடுபடுமா...? புகைப்படத்தில் சரியாக விழுமா...? தனக்குள் ஏற்பட்டிருக்கும் படபடப்பில் நடித்துக்காட்டச் சொல்கிறபோது சரியாக நடிக்க வருமோ வராதோ...? வசன உச்சரிப்பு குளறினால் என்னவாகும்...?

    ஆனால் அவன் அழுத்தம் திருத்தமாக வசனம் பேசினான். ஒரு காதல் காட்சி. ஒரு சோகக் காட்சி. வீரக்காட்சி என்று அவர்களின் முகங்களில் திருப்தி படர நடித்துக் காட்டினான். ஆனாலும் அவர்கள்,

    உன் விலாசத்தைக் கொடுத்துவிட்டுப் போப்பா. சொல்லியனுப்பறோம்... என்கிற அதே வழக்கமான வசனத்தைச் சொல்லவும் இவன் நம்பிக்கையிழந்தவனானான்.

    எனக்கு விலாசமெல்லாம் ஒன்னுமில்லீங்க... என்றபோது குரலில் அழுகை எட்டிப் பார்த்தது.

    விலாசமில்லையா...? அப்படின்னா பிளாட்பாரத்துலியா இருக்கே...?

    ஆமாங்க. இதே ஸ்டுடியோ எதிர்லதாங்க ராத்திரிநேரப் படுக்கை. பகல் நேரத்துல ஒவ்வொரு ஸ்டுடியோவாக அலைஞ்சுக்கிட்டிருப்பேங்க...

    ஏம்ப்ப்பா... தங்க உனக்கு ஒரு இடமில்லை...?

    இல்லீங்க. இங்க சொந்தக்காரங்க யாரும் கிடையாது. ஓட்டலில் தங்கலாம்னா நிறையக் காசு கேட்கறாங்க. ஊரைவிட்டு ஓடி வந்தவன்கிட்டே ஏதுங்க அவ்வளவு பணம்...?

    ஏம்ப்பா ஊரைவிட்டு ஓடி வந்தே...? அங்கே யாரெல்லாம் இருக்காங்க...?

    எல்லாரும் இருக்காங்க. அம்மா, அப்பா. தங்கச்சி எல்லாம் இருக்காங்க...

    என்ன செய்யறாங்க...?

    விவசாயம்தாங்க. சொந்தமா பத்து ஏக்கரா நிலம் இருக்குங்க. பம்ப் ஸெட் போட்டு நல்ல விளைச்சல். வீடு, மாந்தோப்பு, சவுக்குத் தோப்பு எல்லாம்கூட உண்டு...

    அடப்பாவி, அத்தனையையும் விட்டுவிட்டுப் பட்டணத்துக்கு வந்து பிளாட்பாரத்துல தங்கணும்னு உனக்குத் தலையெழுத்தா...?

    பின்னே என்னங்க பண்றது...? நான் நடிகனாகணும்னு நினைச்சது அப்பாவுக்குப் பிடிக்கலை. ஒருநாள் கூப்பிட்டுக் கண்டிப்பா சொல்லிட்டாரு. ‘எலே, ஒழுங்கா படிச்சு நிலம், நீரைக் கவனிக்கிறதா இருந்தால் இங்கே இரு. இல்லாட்டிப் போனா’ இப்படி நடிப்பு நடிப்புன்னு சுத்தறதானா வீட்டை விட்டுப் போயுடு. ரெண்டுல ஒன்னை இன்னிக்கு ராத்திரிக்குள்ள முடிவு பண்ணிக்கன்னு, தீர்மானமாகச் சொல்லிட்டாரு. அன்னிக்கு ராத்திரியே ரயில் சார்ஜுக்கும், கைச்செலவிற்கும் கொஞ்சம் பணம் எடுத்துக்கிட்டு நான் இங்கே வந்துட்டேங்க...

    எதுவரைக்கும் படிச்சே...?

    எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சை எழுதணும். எழுதாமல் இங்கே வந்துட்டேன்...

    நடிப்பாசையில் படிப்பைக்கூட விட்டுட்டியா...? சரி, ஸ்டில்ஸைப் பார்த்து சித்ராம்மா என்ன சொல்றாங்களோ, அதுதான் முடிவு. நீ இன்னிக்குப்போய் நாளை இதே நேரத்துக்கு இங்கே வந்து என்னைப் பாரு...

    மறுநாள் அவன் வந்ததும், ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். மூன்று வருட கான்ட்ராக்ட் என்றார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று அப்போது அவனுக்குப் புரியவில்லை. அவன் கேட்டுக் கொள்ளவும் இல்லை. கிடைக்கப்போகிற ஊதியம் எவ்வளவு என்பதும் தெரியவில்லை. அதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படவும் இல்லை. நடிக்கப்போகிற ஒரே சந்தோஷத்தில் - அதுவும் சித்ராவுடன் சேர்ந்து நடிக்கிற சந்தோஷத்தில் வேறு எதுவும் பெரிதாகப் படவில்லை. இதற்காக அவளைத் தனியாகச் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்து, ஆனால் அவள் இப்போது எங்கே இருப்பாளோ...? கேட்டால் இவர்கள் பதில் சொல்வார்களோ மாட்டார்களோ... என்று தயங்கி நின்றிருந்தபோது,

    சித்ராவே கார் அனுப்பி அவனைத் தன் வீட்டிற்கு வரச்சொல்லிக் கூப்பிட்டனுப்பியிருந்தாள்...

    2

    சித்ராவின் வீட்டு வாசலில் காரை விட்டு இறங்கின மதுசூதனன் ஒரு வினாடி அயர்ந்து போனான். பிரம்மாண்டமான அந்த வீடும், அதன் வெளித்தோற்றமும் அவனை ஒரு வினாடி தயங்க வைத்தது. உள்ளே இருப்பவர்களின் கம்பீரத்தை வீடே சொல்வது போலிருந்தது. கிராமத்தில் அவன் வீடும் மிகப்பெரியதுதான். இரண்டு கட்டு வீடு. வாசல் கதவு கோவில் கதவு மாதிரி இருக்கும். திறக்க இரண்டு ஆள் வேண்டும். அல்லது இரண்டாள் பலம் வேண்டும். உள்கூடமும், மச்சும், நெல் கொட்டுகிற சன்ன அறைகளுமாகக் கிராமத்திலேயே பெரிய வீடுதான்.

    ஆனாலும் இவ்வளவு பெரிய வீடில்லை. இதுவரை அவன் இந்த மாதிரியான வீட்டைப் பார்த்திருக்காததாக உணர்ந்தான். இது வெறும் சினிமாவில் சம்பாதித்த பணமில்லை என்பதைப் புரிந்துகொண்டான். பரம்பரை பரம்பரையாக வருகிற பணமாக இருக்கவேண்டும்... என்ற நினைவில் தயங்கி வராந்தாவில் நின்றபோதே உள்ளேயிருந்து நல்ல உயரமும் கையில் பைப்பும் நேருஜிபாணி உடையும் அதே கம்பீரத் தோற்றமுமாக வெளியில் வந்த அந்தப் பெரியவர், கண்ணாடியைக் கழற்றித் துடைத்துப் போட்டுக்கொண்டே நல்ல தெளிவான ஆங்கிலத்தில்.

    எஸ்... யார் வேண்டும்...? என்று கேட்டார்.

    இங்கே... சித்ரா... சித்ராதான் என்னை... என்று தடுமாறினான் அவன்.

    ஐ ஸீ. சித்ரா வரச்சொன்னாளா...? உங்கள் பெயர்...?

    மது... மதுசூதனன்...

    நான் சித்ராவின் தகப்பனார். என் பெயர் கிருஷ்ணசாமி அய்யர். அவர் கைகுலுக்கக் கை நீட்டினார். அந்தச் சரளமான பேச்சில் தன் பயம் சற்றே தெளிய இவனும் கைகுலுக்கினான். உள்ளே வாங்களேன், சித்ராவிற்குச் சொல்லியனுப்புகிறேன்... என்றதும், இவன் உள்ளே நுழைந்தான்.

    வரவேற்பறையில் கிருஷ்ணசாமி அய்யரின் அதே முகத்தோற்றத்தில் ஒரு பெரியவரின் ஆளுயரப் புகைப்படம். இன்னொன்றில் அவரே மகாத்மா காந்தியுடன் நிற்கிறார். படேலுடன் கை குலுக்குகிறார். நேருவுடன் பேசுகிறார்...

    அதையெல்லாம் அவன் பார்ப்பதைக் கவனித்த கிருஷ்ணசாமி அய்யர் சொன்னார்,

    காந்திஜியோடு கடைசிவரைகூட இருந்தவர். என் அண்ணா ராமசாமி அய்யர், கேள்விப்பட்டிருப்பீர்களே... எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு ஜெயிலுக்குப் போனவர். காந்தி போன மூன்றாம் நாளே இவரும் போய்விட்டார். பரம்பரையாகவே எங்கள் குடும்பம் தேசபக்திக் குடும்பம்...

    இவனுக்குச் செய்தித்தாளில் எப்போதோ ராமசாமி அய்யரின் மரணம் பற்றின செய்தியும், புகைப்படமும் பார்த்தது நினைவிற்கு வந்தது. தேசபக்தர் திவான்பகதூர் மரணம் என்று கொட்டை எழுத்துகளில் போட்டிருந்தார்கள். அவர் மட்டுமில்லை. கிருஷ்ணசாமி அய்யர் பற்றியும் இவன் நிறையப் படித்திருந்தான். இவரும் காங்கிரஸ் பிரமுகர். நேருவின் நண்பர்களில் ஒருவர். எல்லோரும் எவ்வளவோ சொல்லியும் எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர். அரசியலைவிட்டே விலகியிருப்பவர். சில ஆங்கிலத் தினசரிகளுக்கு மட்டும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வருபவர்...

    சித்ராவின் குடும்பப் பின்னணி இவ்வளவு பலம் பொருந்தியதாகவோ, மகத்தானதாகவோ இருக்கும் என்பதைச் சிறிதுகூட எதிர்பார்க்காத அவன் இன்னமும் தடுமாறிப் போனான். அவள்மீது வைத்திருந்த மதிப்பு அதிகமாயிற்று. ஸ்டுடியோக்களில் அவள் எதிரில் எல்லோரும் கைகட்டி வாயைப் பொத்திக்கொண்டு நிற்பதன் காரணம் புரிந்தது. இத்தனை பலமான பின்னணி இருப்பதால்தான் அவளால் ஒரு மகாராணி மாதிரி நடந்துகொள்ள முடிகிறது. மற்றவர்களைச் சேவகப்பார்வை பார்க்க வைக்கிறது. அலட்சியமாக எதையும் தூக்கி எறிய வைக்கிறது. பணம் இவளுக்குப் பெரிதில்லை. பதவியும் பெரிய விஷயமில்லை. இப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவள் நிச்சயம் நன்கு படித்தவளாகத்தான் இருக்கவேண்டும். இவ்வளவு தகுதிகளும் பெற்றுப் பின் இவள் ஏன் நடிப்பதற்கு வரவேண்டும்... என்கிற ஒரு கேள்வி மனதை நெருட அவன் சோபாவில் உட்கார்ந்ததும் கிருஷ்ணசாமி மெதுவாகக் கேட்டார்.

    நீங்கள் காபி சாப்பிடுவீர்கள், இல்லையா...?

    இவன் தலையாட்டின இரண்டு நிமிடங்களுக்கெல்லாம் காபி வந்தது.

    எடுத்துக்கொள்ளுங்கள்... என்றவர், மீண்டும் கேட்டார். நீங்கள் ஏதாவது பத்திரிகையிலிருந்து வருகிறீர்களா...? காபியை உறிஞ்சிக்கொண்டே மெதுவான குரலில் இல்லை... என்று மறுத்தான் அவன்.

    என்ன செய்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா...?

    அவன் சற்றுத் தயங்கி, நடிப்பதற்காக வந்திருக்கிறேன்... என்றதும், அவர் உதட்டில் லேசாய்ப் புன்னகை ஓடிற்று.

    ஸோ, சித்ரா மாதிரிதானா நீங்களும்...? என்று கேட்டபோது, அந்தக் குரலில் தெரிந்த பாவம் எது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும் அவன் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொன்னான்.

    இல்லைங்க. அவங்களை மாதிரி நான் வர முடியுங்களா? அவங்க எவ்வளவு பெரிய ஸ்டார்! நான்... நான் இனிமேல்தான் முதல் படத்திலேயே நடிக்கப் போகிறேன்... அதுவும் அவங்க தயவு இருந்ததனால்தான் அதற்கே ஒப்பந்தமானேன்.

    அதைக் கேட்டுக்கொண்டே படியிறங்கி வந்த சித்ரா,

    என் தயவு என்ன...? காமிராவில் உங்க முகம் அழகாக விழுந்தது. மேக்-அப் பொருந்திப் போச்சு. நடிக்கச் சொல்லிப் பார்த்தபோது திறமை தெரிந்தது. இந்த மூன்றும்தான் உங்களுடைய சினிமாப் பிரவேசத்திற்குக் காரணமே தவிர நான் இல்லை...

    அந்தக் குரலைக் கேட்டதுமே, சோபாவைவிட்டு எழுந்து விட்டான் அவன். எதிரில் நின்ற சித்ராவைப் பார்த்தான், மேக்-அப் எதுவுமின்றிப் பாவாடை தாவணியில் ஹைஸ்கூல் பெண்ணாக நின்றிருந்தாள் அவள். மிகவும் சின்னவளாகத் தெரிந்தாள். முகம் இயற்கை அழகில் பளிச்சிட்டது. ஸ்டுடியோவில் பார்த்த சித்ராவிற்கும் இப்போது எதிரில் நிற்பவருக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக அவனுக்குப் பட்டது.

    என்ன பார்க்கிறீர்கள்? உட்காருங்கள்... என்று சிரித்தவள்,

    இவர்தான் என்னுடைய அப்பா... என்று ஆரம்பித்ததும், கிருஷ்ணசாமி சோபாவை விட்டு எழுந்து கொண்டார்.

    ஏற்கெனவே நாங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டாச்சும்மா... நீ வரணும்னுதான் காத்துக் கொண்டிருந்தேன். எனக்குக் கொஞ்சம் வெளியில் போகிற வேலை இருக்கிறது. நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். நான் போய்விட்டு வருகிறேன். வரட்டுமா, மிஸ்டர் மதுசூதனன்...?

    அவன் மரியாதையாய்ப்

    Enjoying the preview?
    Page 1 of 1