Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gopuramum Bommaigalum
Gopuramum Bommaigalum
Gopuramum Bommaigalum
Ebook375 pages2 hours

Gopuramum Bommaigalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் கோபுரம் பொம்மைகளும் என்னும் சிறுகதையில் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், அவற்றை எதிர்கொள்ளும் விதத்தையும், அதுமட்டுமில்லாமல் அதையும் தாண்டி பெண்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், சமுதாயத்திற்கு தேவையான நேர்மறை கருத்துக்களை ஒவ்வொரு கதையிலும் எடுத்துரைக்கிறார். நாம் அவற்றை வாசித்து தெளிவு பெறுவோம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateJan 22, 2021
ISBN6580101507795
Gopuramum Bommaigalum

Read more from Jyothirllata Girija

Related to Gopuramum Bommaigalum

Related ebooks

Reviews for Gopuramum Bommaigalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gopuramum Bommaigalum - Jyothirllata Girija

    https://www.pustaka.co.in

    கோபுரமும் பொம்மைகளும்

    Gopuramum Bommaigalum

    Author:

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அக்காவுக்கு வயசாச்சு

    2. காலம் மாறியபோது...

    3. கடவுள் ஒரு கணக்கன்

    4. அதிசயக் கணவன்

    5. புதிய முடிவு

    6. அவரும் நானும்

    7. அதென்ன நியாயம்?

    8. ரௌடி ராமையா

    9. மாப்பிள்ளை ஊரில் இல்லை

    10. இளந்தலைமுறை

    11. கடவுளே உனக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’!

    12. அது வேறு நியாயம்

    13. அதிர்ச்சி

    14. விடாய்

    15. கோபுரமும் பொம்மைகளும்

    16. காதலுக்கு ஒரு தலைமுழுக்கு

    17. அத்தானுடன் தனியாக ஒரு வருடம்

    18. கோழையாகவே இருந்துவிட்டுப் போகிறேன்

    19. ஈஸி சேரில் அப்பா

    20. கடிதம் கிழிந்தது

    1. அக்காவுக்கு வயசாச்சு

    சுந்தரியிடம் அந்தப் பேச்சை எப்படி எடுப்பதென்று எனக்குத் தெரியவில்லை. இக்கட்டான அந்தப் பொருளைப் பற்றி நான் எவ்வளவு நாசூக்காகவும், என் உள் நோக்கம் அவளுக்குப் புரியாதபடியும், அதிகப்படியான அக்கறையும் மென்மையும் என் குரலில் வெளிப்படும் வண்ணமும் - ஏன், ஒரு தேர்ந்த நடிகைக்குரிய பக்குவத்தோடு என் கண்களைக் கனிவு மயக்கமாக்கிக் கொண்டு - பேசினாலும் கூட, பெண்களுக்கே உரிய உள்ளுணர்வு, சராசரிப் பெண்களைவிட அதிகம் வாய்க்கப் பெற்றுள்ள சுந்தரி என் அந்தரங்கத்துள் புகுந்து பார்த்து என் உள் நோக்கத்தைக் கண்டுபிடித்து விடுவாள் என்று நான் உள்ளூற அஞ்சினேன்.

    இந்தத் தயக்கத்தினாலும் கூச்சத்தினாலும் நான், கடந்த ஓராண்டுக் காலமாக அந்தப் பேச்சை எடுப்பதற்கான தேவை ஏற்பட்டு விட்டதைப் பொருட்படுத்தாமல் - அல்லது அதற்கு வேண்டிய துணிச்சல் வராமல் - மனசுக்குள்ளேயே அதை மூடி வைத்து வந்திருக்கிறேன். அக்கா எனக்காகவும், தன்னோடு பிறந்த மற்றவர்களுக்காகவும் கடமையுணர்வோடு புரிந்திருக்கும் எண்ணிறந்த தியாகங்களை நினைத்துப் பார்க்கையில், அந்தப் பேச்சையே எடுக்காமல் ஆயுள் முழுவதும் இருந்து விடுவதுதான் நியாயம் என்று மனச்சாட்சி கூறுகிறது.

    என் அக்காவுக்காக நான் வேண்டுமானால், என் மனசை அடக்கிக் கொள்ளலாம். ஆனால், கடந்த ஒரு வருடமாக என்னை மணந்து கொள்ள விரும்பி, திருமணத்துக்காக என்னை அவசரமும் படுத்தி வரும் அவரை என்னால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

    நான் மெதுவாகச் சுந்தரியின் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். அறைக்குள் எட்டிப் பார்த்தது தெரியாமல் அவள் கண்களை மூடியாவாறு சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அவள் உட்கார்ந்திருந்த நிலை, எதைப் பற்றியோ அவள் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்ததை எனக்கு உணர்த்தியது. எனக்குக் கொஞ்சம் திகைப்பாயிருந்தது. எதையோ பறிகொடுத்து விட்டுத் துயரமே உருவாக அவள் உட்கார்ந்திருப்பது போல் எனக்குத் தோன்றியது. இன்னதென்று விளங்காத திகில் என் மனத்தில் எழுந்தது.

    அந்த நிலையில் அவளை நான் பார்த்து விட்டது தெரிந்தால், அவள் வெட்கிப் போவாளே என்கிற நாகரிக உணர்வு எனக்கு இருந்தாலும், பேசாமல் திரும்பிப் போய்விட முடியாமல் அக்கா என்று மெதுவாய்க் கூப்பிட்டேன். அயர்ந்த தூக்கத்தில் உலுக்கி எழுப்பப்பட்டவள் போல் அவள் திடுக்கிட்டுக் கண் திறந்தாள். சிவந்திருந்த கண்கள் அவளை வாட்டிக் கொண்டிருந்த துயரத்தையும், அதன் விளைவாய் எழுந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவள் செய்து கொண்டிருந்த முயற்சியையும் எனக்கு உணர்த்தின.

    நான் பதறிப்போய் அவளெதிரில் சென்று நின்றேன். அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டுப் புன்னகை செய்தாள். உயிரேயில்லாத அந்தப் புன்னகையைப் பொருட்படுத்தாமல் நான் அவளைக் கூர்ந்து பார்த்தேன்.

    என்ன அக்கா? ஏன் ஒரு மாதிரி இருக்கே? என்று பதற்றத்தோடு நான் கேட்டதைச் சிறிதும் பாராட்டாமல், ஒரு மாதிரியும் இல்லை. எப்பவும் போலத்தான் இருக்கேன் என்று சிரித்தவள், என்ன சமாசாரம்? என்று கேட்டாள். முகத்தில் கப்பிக் கிடந்த துயரத்தையெல்லாம் ஒரு நொடியில் துரத்தி விட்டு எப்போதும் போல் அமைதியான தோற்றத்தை வருவித்துக் கொண்டு விட்ட அவள் கெட்டிக்காரத்தனத்தை மனத்துள் வியந்த வண்ணம், என் சமாசாரம் கிடக்கட்டும். நீ ஏன் வருத்தமாயிருக்கே? என்ன நடந்தது? எங்கிட்டே சொல்லக் கூடாதா? என்று கேட்டேன்.

    சீச்சீ! என்னது நீ? ஒண்ணும் நடக்கல்லே... அப்பா அம்மாவை நினைச்சுண்டேன், மனசுக்கு வேதனையாயிருந்தது.

    அக்கா! இதோ பாரு. நான் மண்டுவா இருக்கலாம். உன்னைவிட அசடாயிருக்கலாம். ஆனா நீ நினைக்கிற அளவுக்கு நான் மக்கு இல்லே. கூடப் பிறந்தவகிட்டே கூட நீ இவ்வளவு ஒளிவு மறைவா நடந்துக்கறது துளிக்கூட நல்லாயில்லே. என்னிக்கோ செத்துப்போன அப்பா அம்மாவை நினைச்சுண்டு இன்னிக்கு நீ அழுதேங்கிறதை நான் நம்பத் தயாராயில்லை.

    நான் கடைசியாய்க் கூறிய சொற்கள் அவளைப் புண்படுத்தி விட்டன என்பதை, மேற்கொண்டு அவள் பேசிய பேச்சிலிருந்து உணர்ந்து நான் வருந்தினேன்.

    என்ன பேச்சுப் பேசறே கமலா? அப்பா அம்மாவை நெனைச்சு நான் வருத்தப்படக் கூடியவ இல்லேங்கிறயா?

    அக்கா! அக்கா! நான் அந்த அர்த்தத்திலே சொல்லல்லே. நீ இப்போ வருத்தப்பட்டுக்கிட்டிருக்கிறதுக்கு அது காரணமில்லேன்னு சொல்ல வந்தேன். அவ்வளவுதான். நீ எதையோ மறைக்கிறேன்னு நல்லாத் தெரியறது எனக்கு!

    நீ வீணா எதை எதையோ கற்பனை பண்ணிக்கறே! எப்பவுமே சிரிச்சிக்கிட்டிருக்க முடியுமா? நானும் மனுஷிதானே?

    நீயும் மனுஷிதான். அதனாலேதான் கேக்கறேன். உனக்கு என்ன வருத்தம்னு. சும்மாச் சொல்லு அக்கா எங்கிட்ட

    சொல்லு சொல்லுன்னா என்னத்தைச் சொல்றது? ஏதாவது இருந்தாத்தானே சொல்றதுக்கு?... அது சரி, நீ எதுக்காக வந்தே?

    என் மார்பு ‘படபட’வென்று அடித்துக் கொண்டது.

    ஒண்ணுமில்லே... சும்மாத்தான். தற்செயலா எட்டிப் பார்த்தேன். நீ என்னமோ ஒரே வருத்தமா உட்கார்ந்திட்டிருந்த மாதிரி தெரிஞ்சுது. என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு வந்தேன்.

    நீதான் இப்போ பொய் சொல்றே என்கிற அழுத்தம் திருத்தமான சொற்கள் சுந்தரியிடமிருந்து வெளிப்பட்டன.

    பொய் சொல்றவங்களுக்குப் பிறத்தியாரெல்லாம் பொய் சொல்ற மாதிரி தான் தோணும் என்று வெடித்துவிட்டு, நான் அவள் முகத்தைக் கண் கொட்டாது பார்த்தேன். அவள் முகத்தில் அமைதி குடிகொண்டிருந்தது. வழக்கமான நிலைக்குத் திரும்பி விட்ட உணர்ச்சியற்ற அந்த முகத்திலிருந்து என்னால் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

    என்ன வேணுமோ சொல்லிட்டுப் போ என்று புன்னகை செய்த சுந்தரிக்குப் பதில் சொல்லாமல் நான் ஒருவகை ஏமாற்றத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தேன்.

    ஏய்! விஷயத்தைச் சொல்லாமலே போனா என்ன அர்த்தம்? என்று அவள் இரைந்து கூவவும், நான் நின்று திரும்பிப் பார்த்தேன்.

    நீ மட்டும் உன் மனசை மூடி மூடி வெச்சுக்கும் போது நான் மட்டும் ஏன் வெகுளியா இருக்கணும்?

    சுந்தரி எழுந்து வந்து என் அருகில் நின்றாள். நீ சொல்லல்லேன்னா எனக்குத் தெரியாதா என்ன?

    அதுதான் தெரிஞ்சிருக்கே... பின்னே ஏன் கேட்குறியாம்?

    விவரமாத் தெரிஞ்சுக்கலாமேன்னுதான்... கல்யாண விஷயமாத் தானே பேச வந்தே?

    என் திகைப்பை மறைத்துக் கொள்ள முடியாதவளாய் அவளை நான் விழித்துப் பார்த்தேன். எவ்வளவு கெட்டிக்காரி இந்த அக்கா! யார் கல்யாண விஷயம் என்று கூறாமல், ‘கல்யாண விஷயம்’ என்று பொதுப்படையாய்க் கூறுகிறாளே? இவள் சாமர்த்தியம் யாருக்கு வரும்?

    ***

    "என்னடி அசந்து போய் நிக்கறே? யாரு அந்த அதிருஷ்டக்காரப் பையன்? உன்கூட வேலை பார்க்கிறவனா? என்று முகமெல்லாம் குறும்பு கூத்தாட அவள் சிரித்துக் கொண்டே வினவியபோது, நான் தடுமாறிப் போனேன். சமாளித்துக் கொண்டு நிதானத்துக்கு வர எனக்குச் சில விநாடிகள் ஆயின. முகத்தில் பொய்யான ஒரு சிடுசிடுப்பை வரவழைத்துக் கொண்டு, ஆமாமா! உனக்கு முன்னாடி நான் பண்ணிக்கப் போறேன் ஆளைப் பாரு! உனக்குத்தான் என் மேலே பிரியம்னு நினைச்சுக்காதே. எனக்கும் உன் மேலே கொஞ்சம் பிரியம் உண்டு" என்றேன் ‘வெடுக்’கென்று.

    ஏண்டி இப்படிக் கத்தறே? அக்கம் பக்கத்திலே இருக்கிறவங்க காதிலெல்லாம் விழணுமா? என்ற சுந்தரி, வாடி உள்ளே, வந்து எல்லாத்தையும் விவரமாச் சொல்லு என்றவாறு என் கையைப் பிடித்து இழுத்தாள். விஷயத்தை ஓரளவு அவள் ஊகித்து விட்டாள் என்கிற உண்மை என்னை அவமானத்துக்கும் கூச்சத்துக்கும் உட்படுத்தியது. இருந்தாலும் என் சுயநலத்தை அவள் தெரிந்து கொண்டு விடக்கூடாது என்கிற தன்மான உணர்வினால் உந்தப்பட்டு ‘ஒன்றுமே இல்லை’ என்று சாதித்து விடுவதென முடிவு செய்து விட்டேன்.

    யாருடி அந்த மன்மதன்?

    சீச்சி! சும்மா இரு அக்கா. அப்புறம் எனக்குக் கோபம் வரும். உண்மையைச் சொல்லிடட்டுமா? உன் கல்யாண விஷயமாய்ப் பேசுறதுக்குத்தான் வந்தேன். ‘நீ பாட்டுக்கு அந்த எண்ணமே இல்லாம இருக்கியே. வயசும் ஆயிட்டிருக்கே. சீக்கிரம் நீ கல்யாணம் பண்ணிக்கணும்’னு சொல்லத்தான் வந்தேன். நீ ஒரு மாதிரியா இருக்கவே, நேரம் இப்போ சரியாயில்லேன்னு திரும்பிட்டேன்.

    இந்தா... நூத்துக் கிழவி மாதிரிப் பேசாதே! ஆமா என்னிக்கும் இல்லாம திடீர்னு என் கல்யாணத்தைப் பத்தி இன்னிக்கு உனக்கு ஞாபகம் வருவானேன்? - இப்படிக் கேட்டபோது, அவள் முகம் சாதாரணமாகவே இருந்தது. குரலும் சாதாரணமாகவே ஒலித்தது. உணர்ச்சிகள், முகத்திலும் குரலிலும் வெளிப்படா வண்ணம் அவற்றை ஒளித்துக் கொள்ளும் சாகசம் அவளுக்குத்தான் அதிகமாக இருந்ததோ, இல்லாவிடில், அவற்றைக் கண்டுபிடிக்கிற சாமர்த்தியம் எனக்குத்தான் இல்லையோ.

    ரெண்டு மூணு வருஷமாகவே கேட்கணும்கிறதுதான். உன்னைவிட, ஒன்பது வயசு சின்னவளான நான், எப்படி அந்தப் பேச்சை எடுக்கிறதுங்கிற தயக்கத்திலேயே இத்தனை நாளும் ஓடிப்போயிடுத்து.

    ஓகோ! இப்போதான் அந்தத் தயக்கம் போச்சாக்கும்! அக்கா சிரித்தாள். நான் கண்களை இடுக்கிக்கொண்டு அவளை ஆத்திரத்தோடு பார்த்தேன்.

    சிரிக்காதே அக்கா. இந்தக் குடும்பமும், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பிரச்சினைகளும் எப்பவுமே இருந்துண்டுதான் இருக்கும். முடிவில்லாத அந்தப் பிரச்சினைகளுக்காக நீ இப்படியே இருக்கணும்கிறது என்ன நியாயம்?

    அக்காவுக்கு அப்புறம்தான் தங்கை கல்யாணம் பண்ணிக்கணும்கிறதும் என்ன நியாயம்? - இப்படிக் கேட்டுவிட்டு, அவள் இடி இடியென்று சிரித்தாள். எனக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

    உன் மாதிரி பொடி வெச்சுப் பேசற கெட்டிக்காரத்தனம் எனக்கு வராது அக்கா... அப்படியே தான் இருக்கட்டுமே. என் கல்யாணத்துக்காகத் தான் உன்னை அவசரப்படுத்தறேன்னே வச்சுக்கோயேன். அதிலே என்ன தப்பு?

    அக்காவுக்கு முந்தி தங்கை பண்ணிக்கிறதுலே மட்டும் என்ன தப்பு?

    அக்கா, விளையாட்டாப் பேசறதா நினைச்சுக்கிட்டு நீ என்னைப் புண்படுத்தறே - கலங்கிவிட்ட என் கண்களைக் கவனித்தவுடன், சுந்தரியின் கண்களில் பளிச்சிட்டிருந்த குறும்புத்தனம் ‘சட்’டென்று மறைந்தது. சிந்தனை தேங்கிய கண்களால் அவள் சில விநாடிகள் என் முகத்தையே நோக்கியபடி மௌனமாயிருந்து விட்டுச் சொன்னாள்.

    கமலா, இதோ பாரு. என் கல்யாணத்தைப் பத்தி நீ அலட்டிக்காதே. எனக்கு முப்பது வயசாச்சு. இனிமே நான் கல்யாணம் பண்ணிக்கிறதும் ஒண்ணுதான், பண்ணிக்காம இருக்கிறதும் ஒண்ணுதான்! அப்படி அவசியம் பண்ணிண்டுதான் ஆகணும்கிற நெருக்கடி வந்தா, கண்டிப்பா நான் பண்ணிக்கிறேன். ஆனா, இப்போ இல்லை. உனக்கும் ராதாவுக்கும் பண்ணி வெச்ச பிற்பாடுதான்.

    என்ன அக்கா இது? நம்மகிட்டே சேர்ந்திருக்கிற பணம் ஒரு கல்யாணத்துக்குத்தானே காணும்? என் கல்யாணத்தை முடிச்சுட்டு, மறுபடியும் பணம் சேர்த்து ராதா கல்யாணத்தையும் முடிக்கிறதுக்குள், நீ கிழவியாயிடுவே.

    ஆனா ஆயிட்டுப் போறேன். மூணு பேரும் வயசுப்படி வரிசையாய் பண்ணிக்கணும்னு முனைஞ்சா எல்லாருக்குமே முப்பது வயசுக்கு மேலே ஆயிடும் கல்யாணத்தப்போ, என்னாலே நீங்க ரெண்டு பேரும் ஏன் வயசு கடந்து பண்ணிக்கணும்?

    என் கண்களில் தெறித்த மகிழ்ச்சியை அவள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக நான் அவற்றைத் தாழ்த்திக் கொண்டேன். அக்கா தொடர்ந்தாள்.

    உன் கல்யாணத்துக்கு ரெண்டு வருஷத்துக்கு முந்தியே நான் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்தான். ஆனா, கையிலே போதுமான பணம் சேரட்டும்னுதான் கொஞ்சம் காலம் கடத்தினேன். வர்ற வைகாசிக்கு உனக்கு இருபத்தொண்ணு நிறையுது இல்லையா? உன் கல்யாணத்தை இப்போ முடிச்சிட்டா, இன்னும் நாலஞ்சு வருஷத்திலே பணம் சேர்ந்ததும் ராதாவுக்குப் பண்ணி விடலாம். அவளுக்கு அப்போ இருபத்து மூணு, அல்லது இருபத்து நாலு வயசாகியிருக்கும்.

    ஆமா, உனக்கு அப்போ முப்பத்து நாலு வயசு ஆகியிருக்கும்... என்று நான் கத்தினேன்.

    அக்கா பேசாதிருந்தாள். முகத்தில் மட்டும் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

    அக்கா...

    சொல்லு...

    இந்த ஏற்பாட்டுக்கு நான் சம்மதிக்க முடியாது.

    சம்மதிச்சுத்தான் ஆகணும்... எனக்குப் பிறகு பண்ணிக்கறது பெரிய தியாகம்னு நெனச்சுக்கிட்டிருந்தா, அந்த எண்ணத்தை விட்டுடு. அது வடிகட்டின அசட்டுத்தனம். உணர்ச்சிமயமான நிலையிலே அறிவுக்கும் கொஞ்சம் வேலை தரணும். அதனாலே நான் சொல்றபடி நீ கேட்டுத்தான் ஆகணும். கேட்கப் போறே, தெரிஞ்சுதா?

    என் கண்கள் மறுபடியும் தாழ்ந்தன.

    நான் பார்க்கட்டுமா, இல்லே உனக்கு யாரையாவது தெரியுமா? - என் துணிச்சலையெல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு நான் கண்களை உயர்த்தி அக்காவைப் பார்த்தபோது, அவள் முகத்தில் மறுபடியும் கூத்தாடிய குறும்புத்தனம் என்னைத் தடுமாறச் செய்தது. குனிய விழைந்த தலையை வலிய நிமிர்த்தியவாறு நான் ‘விருட்’டென்று எழுந்தேன். அவளை முறைத்துப் பார்த்துவிட்டு நடந்தேன். அக்கா சிரித்தாள்.

    நான் திரும்பி நின்று, இப்படிச் சிரிச்சுச் சிரிச்சு மழுப்பினா நான் ஏமாற மாட்டேன். உன் கல்யாணம்தான் இந்த வீட்டிலே முதல்லே நடக்கணும் என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். அக்கா மறுபடியும் சிரித்தாள்.

    ***

    அன்று பிற்பகல். அலுவலகத்தில் சாப்பாட்டு நேரத்தில், எங்கள் பிரிவு காலியாயிருந்த போது, அக்காவுடன் காலையில் நான் பேசியதைப் பற்றி ‘அவரு’க்குத் தெரிவிக்கும் எண்ணத்துடன் தொலைபேசியின் ஒலிவாங்கியை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டபோது, லைனில் ஏற்பட்ட குறுக்குத் தொடர்பினாலோ என்னவோ யாரோ இருவர் வேறு தொலைபேசிகளில் பேசிக்கொண்ட பேச்சு என் காதில் விழுந்தது. நான் ஒலிவாங்கியை வைத்து விட எண்ணிய நேரத்தில், இன்னிக்குக் காலையிலே என் தங்கை கமலா என் கல்யாண விஷயமா என்னோடு பேசினா என்ற பெண் குரல் என்னைத் திடுக்குறச் செய்தது. நான் திகைப்போடு அப்படியே இருந்தேன்.

    என்ன பேசினாள்? - மறுமுனையில் ஓர் ஆண் குரல் ஒலித்தது.

    நான்தான் முதல்லே பண்ணிக்கணுமாம்.

    நியாயம்தானே?

    என்னைப் பொறுத்தவரை அது நியாயம்னு தோணல்லே...

    ஏனாம்?

    ஏன்னா, கமலாவைப் பண்ணிக்க ஒரு பையன் ஆசைப்படறான்.

    அவ சொன்னாளா? அப்படீன்னா அவ ஒரு பெரிய சுயநலவாதியாய்த்தான் இருக்கணும்.

    இருங்க, இருங்க, அவசரப்படறீங்களே. அவ சொல்லல்லே. தற்செயலா நேத்துத்தான் எனக்குத் தெரிய வந்தது. நானே சமயம் பார்த்து அவகிட்டே அதைப்பத்திக் கேட்கணும்னு இருந்தேன். ஆனா, அவ நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியத்தைப் பத்தி இன்னிக்குக் காலையிலே எங்கிட்டே பேசினா.

    உன் விஷயத்தை நீ சொல்றதுதானே?

    எனக்கு அது சரியாப் படல்லே. அவங்க ரெண்டு பேருக்கும் முதல்லே பண்றதுதான் நியாயம். ஏன்னா, எனக்கோ வயசாயிடுத்து. இவ்வளவு காலம் கடத்தினவ இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுப் பண்ணிக்கறதாலே ஒண்ணும் குடி முழுகிடாது.

    அதுக்காக?

    அவங்க ரெண்டு பேருக்கும் காலா காலத்திலே பண்ணி வெச்சிட்டு அப்புறம்தான் நம்முடையதைப் பத்தி நான் நினைக்க முடியும். குடும்பத்தை விட்டுட்டு இப்போ நான் வெளியிலே வந்துட்டேன்னா, நிலைமை ரொம்ப மோசமாயிடும். எல்லாரும் சின்னவங்க. சம்பாதிக்கிறதை எல்லாம் ‘தாம் தூம்’னு செலவழிச்சுடுவாங்க. கல்யாணத்துக்குப் பணம் சேராது. அப்புறம் அவங்களுக்கும் என் வயசு வந்துடும்.

    சுந்தரி, நீ ஒரு சரியான பயித்தியம். கூடப் பிறந்தவங்க மேலே ஏதோ பிரியம் இருக்க வேண்டியதுதான். அதுக்காக இப்படியா! நீ அவங்க மேலே வெச்சிருக்கிற பிரியம் அவங்களுக்கெல்லாம் உன் மேலே இருக்கிறதா தெரியலையே.

    அதென்ன அப்படிச் சொல்லிட்டீங்க? பிரியம் இல்லாமலா என் தங்கை என் கல்யாணத்தைப் பத்தி இன்னிக்குப் பேசினாள்?

    உனக்கு விடிஞ்சா, தனக்கும் விடியுமேன்னுதான். சுந்தரி, நான் சொல்றேனேன்னு வித்தியாசமா நினைச்சுக்காதே. கிட்டத்தட்ட உன்னுடையது மாதிரிதான் என்னுடைய நிலையும், தங்கைகளுக்குக் கல்யாணம் பண்ணிவிட்டுத்தான் நாம பண்ணிக்கணும்னு இருந்ததாலேதான் இன்னிக்கு முப்பத்து நாலு வயசாகியும் நான் கல்யாணமாகாமலே இருக்கேன். தெரிஞ்சுதா? தியாகம் பண்றதுக்கும் ஒரு அளவு இருக்கணும்...

    தியாகமா! ரொம்ப அழகுதான். நம்ம கடமையைத்தான் நாம செஞ்சிகிட்டிருக்கோமே தவிர, தியாகமாவது இன்னொண்ணாவது?... போகட்டும், பணத்துக்கு என்ன பண்ணுனீங்க?

    அவ்வளவு பெரிய தொகை கொடுக்கக் கூடியவங்க உன்னை விட்டா வேறே யாருமில்லே... கொடுத்தியானா என் தங்கை கல்யாணம் நடந்த மாதிரி தான்...

    எப்போ திருப்பிக் கொடுப்பீங்க?

    நிச்சயமான தேதி எதுவும் சொல்றதுக்கில்லே. அப்பப்போ சிறுகச் சிறுகத் திருப்பிக் கொடுத்துடுவேன்.

    நீங்க என்னை ரொம்ப மன்னிச்சுக்கணும். என் தங்கைகள் ரெண்டு பேரும் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிற்பாடுதான் நாங்க சேமிக்க ஆரம்பிச்சோம். இன்னைத் தேதியிலே எங்ககிட்டே ஐயாயிரம் இருக்கிறது உண்மைதான். ஆனா, அதிலிருந்து மூவாயிரத்தை எடுத்து உங்ககிட்டே கொடுத்துட்டு நான் என்ன பண்றது? கமலா கல்யாணத்துக்கு உடனே பணம் வேணுமே. அந்தப் பையன் இவளுக்குக் கடுதாசி எழுதியிருக்கான், சீக்கிரம் கல்யாணத்தை வெச்சுக்கச் சொல்லி. அதனாலே இதைத் தாமதிக்கிறதுக்கில்லை... ஐயாம் வெரி சாரி...

    ஆல்ரைட், என் தங்கை கல்யாணத்தை முடிச்சிட்டு நான் வரேன். உன் தங்கைகள் கல்யாணங்களை முடிச்சிட்டு நீ வா. வெறுங் கல்யாணத்துக்குப் பதிலா ரெண்டு பேருமா அறுபதாங் கல்யாணமாவே பண்ணிக் கொள்ளலாம். சுந்தரி, இதோ பாரு, நேத்து என் தங்கைக்கு வந்த இன்னொரு வரனைப் பத்திக்கூடச் சொன்னேன். ஞாபகம் இருக்கா?

    பையனுடைய தங்கையை நீங்க பண்ணிக்கிட்டா, பையன் உங்க தங்கையைச் செலவில்லாம பண்ணிக்கத் தயாராய் இருக்கான்னு சொன்னீங்களே, அந்த வரன் தானே?

    ஆமா, அதை ஏத்துக்க வேண்டியதுதான். செலவில்லாம என் தங்கை கல்யாணம் முடியும் பாரு.

    நானே சொல்லணும்னு நெனச்சேன். அதுதான் புத்திசாலித்தனமான காரியம். ஏன்னா எனக்காக நீங்க காத்துக்கிட்டிருக்கக் கூடாதுங்கிறதுதான் என் எண்ணமும்...

    அப்போ பணமில்லைங்கிறயா?

    உங்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையிலே இருக்கிறேன்... ரொம்ப வருத்தப்படுகிறேன்.

    ஆ...ல் ரைட், தென்.

    ‘டக்’கென்று ஒலிவாங்கி வைக்கப்பட்டது. நான் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன். அக்காவும் அவள் மனத்தைக் கவர்ந்தவனும் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டதைக் கேட்க நேர்ந்ததால் ஏற்பட்ட வியப்பு அடங்கவேயில்லை. தொலைபேசியில் ஏற்படுகிற குறுக்குத் தொடர்பின் விளைவாகப் பிறரின் பேச்சை அவ்வப்போது நாம் கேட்க நேர்வது உண்டுதான். எனினும், பேசிக் கொண்டவர்கள் என் அக்காவும் அவள் காதலனும் என்பதும், பேச்சைக் கேட்க நேர்ந்தவள் நான் என்பதும் என்னை வெகு நேரத்துக்கு அந்த வியப்பினின்று விடுபட முடியாமல் செய்தன.

    ***

    காலையில் அக்கா கவலையோடு உட்கார்ந்திருந்ததன் காரணம் இப்போது எனக்குப் புரிந்தது. என் மனம் சற்றே சங்கடப்பட்டது.

    கொஞ்ச நேரம் கழித்து, அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடாத நிலையிலேயே, நான் அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன்.

    என்ன, அக்காகிட்டே சொல்லியாச்சா?

    நான் சொல்லாமலே அக்காவுக்குத் தெரிஞ்சுப் போயிடுத்து.

    எப்படி?

    நீங்க எனக்கு எழுதின கடுதாசி அக்கா கையிலே அகப்பட்டிருக்கு...

    நீ ஜாக்கிரதையாயிருக்க வேண்டாமா?

    அக்கா தானே பார்த்தாள்? அதனாலே ஒண்ணும் பாதகமில்லே. உண்மையைச் சொல்லப் போனால், சாதகம்தான்...

    அக்காகிட்டே என்ன பேசினே?

    விவரமா ஒண்ணும் பேச முடியல்லே. சந்தர்ப்பம் சரியாயில்லை...

    என்ன பொண்ணு நீ!

    இப்போ நான் ஒரு வழி சொல்றேன்.

    தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கப் போறியாக்கும்.

    இல்லேயில்லை.

    சொல்லு பின்னே.

    இன்னிக்குத் தபால்லே எங்க அக்காவுக்கு விஷயத்தைத் தெரிவிச்சு நீங்க ஒரு கடுதாசி போடுங்க.

    போட்டுடறேன்.

    ஒரு விஷயம் ரொம்ப முக்கியம். உங்க கல்யாணத்துக்குப் பிறகு தான் பண்ணிக்கிறதுதான் நியாயம்னு கமலா அபிப்பிராயப் படறா. ஆனா, என் பெற்றோர் என் கல்யாணத்தை முடிக்க அவசரப்படறாங்க’ன்னு உங்க கடுதாசியிலே மறக்காம குறிப்பிடுங்க. இது ரொம்ப முக்கியம். எங்களுக்காக எவ்வளவோ செஞ்சிருக்கா அக்கா. அவளுக்கு முன்னாலே நான் கல்யாணம் பண்ணிக்க அவசரப்படறதா அவ நெனைச்சுடக் கூடாது பாருங்க. அதுக்காகத்தான். இன்னொரு விஷயமும் ரொம்ப முக்கியம். நீங்க அமெரிக்காவுக்குப் போக இருக்கிறதைப் பத்தி எழுதிட்டு, ‘நான் இந்தக் கடுதாசி எழுதுகிறது கமலாவுக்குத் தெரியாது. தெரிஞ்சா கோபிச்சுக்குவாள்’னும் ஒரு வரி சேர்த்துடுங்க, என்ன?

    பலே கெட்டிக்காரியாயிருக்கியே? என்று அவர் சிரித்தார்.

    ஒலிவாங்கியை வைத்துவிட்டு நான் சிந்தனையில் ஆழ்ந்தேன். அக்கா அந்த மனிதரோடு பேசிய தினுசுக்கும், நான் இந்த மனிதரோடு பேசிய தினுசுக்குமிடையே இருந்த வித்தியாசத்தை எண்ணிப் பார்த்த போது நான் மிகவும் தாழ்ந்தவள் என்பதையும், அக்காவின் தூய அன்புக்கு அருகதையற்றவள் என்பதையும் என் மனம் ஒப்புக் கொண்டது.

    அக்காவுக்கு முன்னால் நான் மணந்து கொள்ள நினைப்பது தகாதது என்பதில் இருந்த கேவலத்தை விட, என் தகாத எண்ணம் அக்காவுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதில் நான் கடைப்பிடித்த தந்திரம் மிகவும் கேவலமானதுதான். ஆனால், தாங்கள் கெட்டவர்களாயிருக்கக் கூடாது என்கிற எண்ணத்தை விட தாங்கள் கெட்டவர்கள் என்கிற இழிவான நிலை பிறருக்குத் தெரிந்து போய் விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை மனப்பான்மையோடு போலியான பண்புகளை வெளிக்காட்டிக் கொள்ளும் சராசரி மனிதக் கூட்டத்தைச் சேர்ந்த என்னால், வேறு எப்படி நடந்து கொள்ள முடியும்?

    ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் கூடிய விரைவில் உயர்ந்த வேலையில் அமர அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கிறார். அவர் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போவதற்கு முன்னால் திருமணத்தை முடித்துவிட வேண்டுமென்று அவருடைய பெற்றோர் அவசரப்படுவதும் நியாயந்தானே!

    திருமணமாகாத நிலையில் அவரை அமெரிக்காவில் விட்டு வைப்பதைப் பற்றி என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் ‘அக்காவுக்கு முதலில் ஆகட்டும்’ என்று என்னால் காத்திருக்க முடியுமா?

    Enjoying the preview?
    Page 1 of 1