Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalachakkaram
Kalachakkaram
Kalachakkaram
Ebook616 pages3 hours

Kalachakkaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

போர் முனையில் எதிரியை நேருக்கு நேர் சந்தித்து வெற்றி காண்பதுகூட எளிது. ஆனால், பசுத்தோல் போர்த்த புலிபோல உலவி வரும் ஜனநாயக விரோத சக்திகளுடன் போராடுவது தான் மிகக் கடினம். தன் தகப்பனார் கெட்ட வழியில் சேர்த்ததாக கருதப்படும் சொத்தை பல குடும்பங்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் விதத்தில் பயன்படுத்த நினைத்து, நிலத்தை விற்று, தொழில் தொடங்க எண்ணுகிறான் தங்கப்பன். தனது லட்சியமும் கனவுகளும் நிறைவேற திருமணத்தை ஒத்திப் போடுமாறு தன் காதலி செல்லத்திடம் கூறுகிறான். இறுதியில் நடந்தது என்ன? தங்கப்பனின் லட்சியம் நிறைவேறியதா? இல்லையா? வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580158910703
Kalachakkaram

Read more from Kalki Kuzhumam

Related to Kalachakkaram

Related ebooks

Reviews for Kalachakkaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalachakkaram - Kalki Kuzhumam

    காலச்சக்கரம்

    கி.ராஜேந்திரன்

    ஓவியம்: வினு

    https://kalkionline.com/

    அச்சு அசல் ஓவியங்களுடன் கல்கி களஞ்சிய வெளியீடு
    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காலச்சக்கரம்

    Kaalachakaram

    Author:

    கி.ராஜேந்திரன்

    K. Rajendran

    Illustrations:

    வினு

    Source :

    கல்கி களஞ்சியம் 1965

    Publisher:

    கல்கி குழுமம்

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalki-kuzhumam

    பொருளடக்கம்

    முதல் பாகம் நேற்று 1952

    யானைப்பெட்டி

    தேர்தல் சர்க்கஸ்

    புதிய அனுபவங்கள்

    அனுபவத்தின் விளைவு

    ஊர் சிரித்தது!

    திருப்தி நிலவியது

    தாமரையின் தவிப்பு

    தங்கப்பனின் திகைப்பு

    அச்சமில்லை!

    இரண்டாம் பாகம் இன்று...

    செல்லத்தின் நாணம்

    மிடுக்குக்கு ஒருத்தி

    ஆபத்துக்குத் தோஷமில்லை!

    இவள் அவள்தானா?

    முழுப் பொய்யும் பாதி உண்மையும்

    அணைக்க வந்த கரங்கள்

    அழகு மயக்கம்

    உயர முடியுமா?

    கறை படிந்த பணம்

    பாதம் காட்டிய பரிவு

    ஒரு மனம் போதுமா?

    இதென்ன கோழைத்தனம்?

    வெற்றி யாருக்கு?

    ரகசியச் சந்திப்பு

    செல்லத்தின் துணிச்சல்

    வாழ்வின் ஒளி

    அத்தானுக்குப் பிடித்தது!

    நெருங்கிய உள்ளங்கள்

    பட்டணத்துப் பட்டிக்காடு

    திறப்பு விழா

    மாருதியின் ஆதரவு

    பரிகாசச் சிரிப்பு

    உஷாவின் விஜயம்

    உறக்கமற்ற இரவு

    கொல்லும் வெறுப்பு

    சலசலப்பு

    உஷாவிடமா அனுதாபம்?

    வேலை நிறுத்தம்

    ஆபத்து யாருக்கு?

    பயமுறுத்தல்கள்

    சூறாவளி சுற்றுப்பயணம்

    தகிடுதத்தங்கள்

    இதயம் இளகுமா?

    பயங்கரச் செய்தி

    பணநாயகம்

    பெண்மைக்குரிய மென்மை

    பட்டப்பகலில் ஒரு மின்னல்!

    சமூக சேவகி

    மிருணாளினி

    மலரும் மங்கையும்

    தேர்தல் ஜீரம்

    மனச் சோர்வு

    உற்சாகம்

    தங்கப்பனின் தடுமாற்றம்

    மூன்றாம் பாகம் - நாளை

    சத்தியம் செத்ததோ?

    மனம் மாறுமா?

    குருவும் சீடனும்

    திடீர் விஜயம்

    எங்கே போவேன்?

    நலிந்த நெஞ்சம்

    போலீஸ் அழைப்பதா?

    வைராக்கியம் விளைந்தது

    C:\Users\ASUS\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\1-min.jpg

    தங்கப்பன்

    போர்முனையில் எதிரியை நேருக்கு நேர் சந்தித்து வெற்றி காண்பது கூட எளிது. ஆனால், பசுத்தோல் போர்த்த புலி போல உலவி வரும் ஜனநாயக விரோத சக்திகளுடன் போராடுவதுதான் மிகக் கடினம். நம்மைப் போன்ற இளைஞர்கள் சதா விழிப்புடனிருக்க வேண்டும்!

    C:\Users\ASUS\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\2-min.jpg

    செல்லம்

    அன்புக்கும் காதலுக்குமிடையில் உள்ள நுண்ணிய வேறுபாடுகளை நான் அறியாதவள் அல்ல. கல்யாணமானால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்றனர் வீட்டிலிருந்த பெரியவர்கள். நானும் அவ்வாறே நம்பினேன். ஆனால் என் நம்பிக்கை? வீண் போகுமா... போகாதா?

    C:\Users\ASUS\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\3-min.jpg

    தீனதயாளு

    எத்தனையோ சிரமங்களைத் தாங்கி விடுதலைக்கு அடிகோலிய என் போன்றோருக்கு இன்று சௌகரியமாக வாழ உரிமை இல்லையா? நேற்றுப் பிறந்தவர்கள் இன்று என்னை எதிர்க்கிறார்கள். நான் பதில் சொல்லித்தானாக வேண்டுமா, என்ன?

    C:\Users\ASUS\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\4-min.jpg

    உஷா

    வாழ்க்கையை நன்கு அனுபவிப்பதே ஒரு கலை; அதைக் குறைவறக் கற்றுத் தேற வேண்டும். அதற்குச் சமூகத்தில் நமது அந்தஸ்து உயர வேண்டும், உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்!

    C:\Users\ASUS\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\5-min.jpg

    மிருணாளினி

    வேலிக் கம்பு உறுதியாக நிற்பதுபோல் தோன்றும் வெளிப்பார்வைக்கு, உள்ளுக்குள்ளே செல் அரித்திருப்பது தெரியாது. தொட்டால்போதும் பொல பொலவென்று உதிர்ந்துவிடும். கம்யூனிஸம் இந்த வகையிலேதான் ஊடுருவ வேண்டும்; ஜனநாயக வேலியைத் தகர்க்க!

    முதல் பாகம் நேற்று 1952
    அத்தியாயம் 1

    யானைப்பெட்டி

    ஊரின் பிரதானமான இரண்டு சாலைகளுள் ஒன்றன் வழியே அந்த நீண்ட சைக்கிள் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. சைக்கிள்களை ஓட்டிச் சென்றவர்கள் மொத்தம் இருபது பேர்கள் இருக்கலாம். யானைப் படம் வரையப்பட்ட அட்டையில் நீண்ட கழியைப் பொருத்தி அதனை ஒரு கையில் பிடித்துச் சென்றார்கள் சிலர். மற்றவர்கள் யானைக் கொடியேந்தியபடியே சைக்கிளைச் செலுத்தினார்கள். ஒவ்வொரு சைக்கிளின் முன்புறத்திலும் ஒரு சிறு யானைக் கொடி பறந்தது.

    அந்தச் சைக்கிள் ஊர்வலத்தின் மத்தியில் ஒரு கிழட்டு யானையும் தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருந்தது. அதன் முன்னும் பின்னுமாகப் பத்துப் பத்து சைக்கிள்களில் சவாரி செய்தவர்கள் யானையின் நிதானமான நடைக்கு ஏற்பச் சைக்கிள்களையும் மெதுவாக ஓட்டிச் செல்ல முடியாமல் சிரமப்பட்டார்கள்.

    ஓய்! சர்க்கஸ்காரரே! கொஞ்சம் எட்டி அடி எடுத்து வையும்! என்று கேட்டுக் கொண்டான் மெதுவான ஓட்டத்தில் சைக்கிள் சாய்ந்து சரிவதைத் தவிர்க்க முடியாமல் தவித்துக் காலூன்றி நின்ற ஒருவன்.

    யானையின் தும்பிக்கையில் இலேசாகக் கரம் பதித்து இட்டுச் சென்றவன் ஒரு சர்க்கஸ் கோமாளி. ஜம்போவை வாடகைக்கு எடுத்ததுபோல், கொஞ்சம் செலவுகூட ஆனாலும் பரவாயில்லை என்று எங்க சர்க்கஸின் சைக்கிள் வீரர்களையும் கூட்டிக்கிட்டு இருக்கணும். அவங்க இப்படியா ‘பாலன்ஸ்’ பண்ண தெரியாமல் திணறுவாங்க? என்றான் அவன். இதற்கெல்லாம் பணத்தை எண்ணிப் பார்த்துக்கிட்டிருந்தால் நடக்குமா? தேர்தல்னா சும்மாவா?

    என் பொழைப்பிலே நீ ஏனய்யா மண்ணைப் போடணும்னு நினைக்கிறே?" என்று காரசாரமாகக் கேட்டான் சைக்கிள் ஓட்டி.

    சர்க்கஸ் கோமாளி ஒரு மழுப்பல் புன்னகையை உதிர்த்தான். முகம் முழுவதும் அவன் பூசியிருந்த சாயத்தின் விளைவாக அந்தப் புன்னகை ஒரு பரிதாபத் தோற்றத்தையே ஏற்படுத்தியது!

    யானை மேல் ஒரு சிறுவன் கம்பீரமாக அமர்ந்து தன்னைச் சுற்றிலும் அலட்சியப் பார்வையை வீசிக் கொண்டிருந்தான். இவர்களுடைய பேச்சு எதுவும் அவன் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. யாருக்கும் கிடைக்க மாட்டாததான ஓர் அரிய வாய்ப்பு தனக்கு மட்டும் கிட்டிவிட்ட பெருமை அவன் முகத்தில் மிளிர்ந்தது. ‘யானைச் சவாரி என்றால் என்ன, இலேசா?’

    சில விநாடிகளுக்கு ஓய்வெடுத்துக் கொண்டு சோடா குடித்துத் தொண்டையை நனைத்துக் கொண்ட சைக்கிள் ஊர்வலத் தலைவன் இப்போது தன் வாகனத்தில் ஆரோகணித்து முதலிடத்துக்கு விரைந்தான். பழைய பல்லவியை மீண்டும் தொடங்கினான். முக்கோண வடிவத்திலிருந்த நீண்ட குழலைக் கையிலேந்தி வாய்க்கு நேராகப் பிடித்து, அடித்தொண்டையில் அலறினான்:

    ஓட், ஃபார்!

    எலிபெண்ட் பாக்ஸ் என்று மற்றப் பத்தொன்பது கண்டங்களிலிருந்து பேரிரைச்சல் எழும்பியது.

    யானையையும் அதன் மேல் அமர்ந்திருக்கும் சிறுவனையும் சர்க்கஸ் கோமாளியையும் மாறி மாறிப் பார்த்துக் குதூகலிக்கும் சிறுவர் கூட்டம் ஊர்வலத்தைச் சூழ்ந்து கொண்டது.

    யானைப் பெட்டிக்கே...! என்று ஊர்வலத் தலைவன் கரகரப்பான குரலில் ஒலி எழுப்பவும். ஒட்டுப் போடுங்கள்! என்று சைக்கிள் ஊர்வலத்தைச் சேர்ந்த பிறருடன் சர்க்கஸ் யானையை வேடிக்கை பார்க்கக்கூடிய சிறுவர்களும் ஒன்றாகக் கோஷமிட்டார்கள். ஒரே உற்சாகம் அவர்களுக்கு.

    6-min

    டேய், தங்கப்பா! என்னையும் ஏத்திக்கோடா! என்று சிறுவன் ஒருவன் கெஞ்சாத குறையாகக் கேட்டான். தங்கப்பன் அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. கைகளை விட்டுவிட்டுச் சைக்கிள் ஓட்டுவதுபோல், யானைச் சவாரியும் செய்யத் தெரியும் என்று காண்பித்துக் கொள்ள விரும்புபவன்போல் கரங்களை மார்போடு அணைத்தாற்போல் கட்டி, தலையைச் சற்றுச் சாய்த்து உயர்த்தினான். அவனையும் அறியாமல் அவன் புருவங்கள் வளைந்து எழுந்தன. வழவழப்பான பச்சை ஸாட்டின் சொக்காயில் கரங்கள் உராய்வது அவனுக்கு ஓர் அலாதியான ஆனந்தத்தை அளித்தது.

    7-min

    சத்தியபுரித் தொகுதி வாக்காளப் பெருமக்களே! உங்கள் மேலான வோட்டுக்களை யானைப் பெட்டிக்கே போட்டுத் தியாகசீலரான திருவாளர் சுப்புராமனை ஆதரியுங்கள்! என்று சைக்கிள் ஊர்வலத் தலைவன் குட்டிப் பிரசங்கம் புரிந்தான்.

    அதைத் தொடர்ந்து,

    ஓட் ஃபார்...!

    எலிபெண்ட் பாக்ஸ்!

    யானைப் பெட்டிக்கே...!

    ஓட்டுப் போடுங்கள்! என்று மீண்டும் பலத்த கோஷங்கள் எழுந்தன.

    தங்கப்பா! நீயும் கத்தேண்டா! என்றான். கீழே நடந்து வந்த அவன் நண்பனொருவன். அப்போதுதான் விழிகளைச் சற்றுத் தாழ்த்தினான் தங்கப்பன். அதுவும் கீழே இருப்பவனைத் துச்சமாக நோக்குகிற மாதிரியாகத் தான். ‘உங்களைப்போல நான் சாமான்யப்பட்டவனல்ல, கும்பலோடு கோவிந்தாவாகக் கோஷம் போடுவதற்கு என்பது போலிருந்தது அந்தப் பார்வை.

    இதற்குள் இரு பிரதான வீதிகளும் சந்திக்குமிடத்தில் நின்ற உயரமான மணிக் கூண்டினை ஊர்வலம் அணுகி விட்டது. சைக்கிள் ஊர்வலத்தில் பங்கு பற்றிய ஒருவனிடமிருந்து சிறிய முக்கோண வடிவக் குழலொன்றைச் சர்க்கஸ் கோமாளி கையில் வாங்கி யானையின் தும்பிக்கையில் வைத்தான். யானை தும்பிக்கையை மேலே உயர்த்தித் தங்கப்பனிடம் அதனை நீட்டியது. தங்கப்பன் குழலைப் பெற்றுக்கொண்டு வாயில் பொருத்திக் கணீரென்ற குரலில் பாட ஆரம்பித்தான்:

    பாருடாப்பா பாருடாப்பா பாருடாப்பா பார்! – நல்லாப்

    பாருடாப்பா பாருடாப்பா பாருடாப்பா பார்!

    யாஆஆஆஆனை, யானைப் பெட்டிக்கே உந்தன் – ஓட்டைப்

    போடுடாப்பா போடுடாப்பா போடுடாப்பா போடு,

    போடுடாப்பா போடுடாப்பா போடுடாப்பா போடு!

    தங்கப்பன் பாடி நிறுத்தியதும், உய்! உய்ய்! ஹோ! ஹோ! என்று ஒரே ஆரவாரக் கூக்குரல்! கை தட்டல், அமர்க்களம்!

    சாலையில் அவசரமாகச் சென்று கொண்டிருந்தவர்கள் நின்று ஊர்வலத்தை வேடிக்கை பார்த்தார்கள்; குழாயடியில் தண்ணீர் பிடித்த மாதர்கள் குடம் நிரம்பி வழிவதையும் வேறு பல குடங்கள் க்யூ வரிசையில் காத்து நிற்பதையும் பொருட்படுத்தாமல் நின்றார்கள்; கடைக்காரர்கள் வியாபாரத்தை மறந்து தமாஷை அநுபவித்தார்கள். பொருள் வாங்க வந்தவர்கள் வாயைப் பிளந்தார்கள்.

    வெற்றிலைப் பாக்குக் கடை கதவோரத்தில் விரலில் மிச்சமிருந்த சுண்ணாம்பைத் தடவி விட்டுக் கடைசி வெற்றிலையையும் மடித்து வாயில் போட்டுக் கொண்டபின், புகையிலைப் பொட்டலத்தை நிதானமாகப் பிரித்து இடது உள்ளங்கையில் வைத்து மூன்று விரல்களால் கொஞ்சம் புகையிலையை இலேசாக உதறி எடுத்தவாறே, பார்த்தீர்களா, மாருதி! யானைப் பெட்டிக்கு வோட்டுச் சேகரிப்பதற்காக யானையையே கொண்டாந்துட்டார் சுப்புராமன்! என்று அதிசயித்தார் ஒருவர்.

    அவருக்குச் சௌகரியமா இந்தச் சமயம் பார்த்துப் பக்கத்து டவுனிலே சர்க்கஸ் கூடாரம் போட்டிருக்கே. அதைச் சொல்லும்! என்றார் மாருதி என அழைக்கப்பட்டவர்.

    சாயங்காலத்துக்கு மேலேதான் சர்க்கஸ் ஆரம்பம். அதனாலே காலை நேரத்திலே சும்மா இருக்கிற யானையை இப்படி வீதி வீதியா அழைச்சுக்கிட்டு வந்தால் சுப்புராமன் கொடுக்கிற வாடகைக்கு மேல் வரும்படிதானே சர்க்கஸ்காரனுக்கு? அதோடே சர்க்கஸுக்கு விளம்பரத்துக்கு விளம்பரமுமாச்சு என்றார் முன்னவர் புகையிலையை வாயில் போட்டபடி.

    நீங்க என்ன இந்தப் புகையிலைப் பழக்கத்தை விடப் போவதில்லையா? என்னையெல்லாம்விட ரொம்ப சீனியரான உங்களுக்கு நம்ப ஹெட்மாஸ்டருக்கு இதெல்லாம் பிடிக்காது என்பது தெரிஞ்சு இருக்குமே? நாசூக்காகப் பல தடவைகளில் நாம் மாணவர்களுக்கு விஷயங்களில் முன்மாதிரியாக விளங்கணும் என்று சொல்லியிருக்கிறாரே என்றார் மாருதி.

    ஸீனியராக இருப்பதால்தான் கொஞ்சம் துணிச்சலாகக் காரியம் செய்யறேன் நான்! நிஜமா முயன்று பார்க்கிறேன் மாருதி, முடியலை! கிளாஸ் எடுக்கறப்போ வாயைக் கொப்பளித்து விட்டுத்தான் போகிறேன். அப்புறம் ‘பீரியட்’ முடிகிற வரையில் முக்கால் மணி நேரம் மனசை எப்படி அடக்குகிறேன்னு எனக்கே ஆச்சரியமாயிருக்கும்! அதுசரி, என்ன ‘காம்பொஸிஷன்’ நோட்டுப் புத்தகங்களையெல்லாம் இன்றைக்கு நீங்களே தூக்கிக்கிட்டு வந்துட்டீங்க? இதுவும் புதுசா ஹெட்மாஸ்டர் போட்டிருக்கும் உத்தரவோ?

    அதெல்லாம் இல்லை, ஷண்முகம் ஸார்! அந்தப் பயல் தங்கப்பன் வழக்கமா வீட்டுக்கு வந்து இதைச் சுமந்துக்கிட்டு வருவானில்லே; அவனை இன்னைக்குக் காணோம். இங்கே வந்த பிறகு பார்த்தால் யானை மேலே உட்கார்ந்து டப்பா பாட்டுப் பாடிக்கிட்டிருக்கான்!

    அட, அந்தப் பயல் தானா அது? என்று கேட்ட ஷண்முகம், சட்டைப்பையிலிருந்து மூக்குக் கண்ணாடியை எடுத்து மூக்கின் மேல் பொருத்திக் கயிற்றால் காதைச் சுற்றிக் கட்டியவாறே முகத்தை நீட்டி உற்றுப் பார்த்தார். அடே, ஆமாம்! இத்தனை நேரம் யாரோன்னா நெனச்சுக்கிட்டிருந்தேன். கண்டிச்சு வையுங்க மாருதி! என்றார்.

    ஆகட்டும் விசாரிக்கிறேன் என்றார் மாருதி. பின்னர் யானை - சைக்கிள் ஊர்வலத்தால் மீண்டும் கவரப்பட்டவராக, நம்ப தீனதயாளு இதற்குப் போட்டியா என்ன ஊர்வலம் விடப் போறார்ன்னு பார்க்கணும் என்றார்.

    அவருடைய சின்னம்தான் நம்ப வீதிகளிலே தினம் தினம் யாரும் அழைக்காமலே வளைய வந்துக்கிட்டிருக்குதே! ஊர்வலம் வேறே எதற்கு? என்றார் ஷண்முகம்.

    அவர் பொல்லாதவரய்யா! இதற்குள்ளே ‘ஐடியா’ ஏதாகிலும் யோசித்து வைத்திருப்பார். திடீருன்னு நம்மை அசந்து போக வைச்சுடுவார். தேர்தலுக்குச் சரியா நாலு மாசம் இருக்கிறப்போ நேருஜி, கட்சியின் காரியக் கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்து அதிர்ச்சி வைத்தியம் பண்ணவில்லையா? அந்த மாதிரி இவரும் ‘குபுக்’கென்று ஏதாவது பண்ணிப் பிரமாத நல்ல பேர் சம்பாதிச்சுடுவார்!

    இந்தச் சமயத்தில், அதோ! அதோ காரிலே தீனதயாளுவே போகிறாரே என்றார் மாருதி. பக்கத்திலே இருப்பது யாரு? அவர் மகளா? பள்ளிக்கூடத்திலே கொண்டுவிடப் போறாப்பலே இருக்கு. பார்த்தீங்களா யானை ஊர்வலத்தைப் பெண்ணுக்கு வேடிக்கை காட்டுகிறார்? அடேடே! வண்டியை நிறுத்தச் சொல்லிட்டாரே!

    அவர்கள் இருந்த இடத்துக்குப் பத்தடி தொலைவில்தான் அந்தப் பெரிய சவர்லெ கார் நின்றது. அதனுள்ளே இருந்து தூய்மையான, வெண்மையான எட்டு முழக் கதர் வேஷ்டியும், ஜிப்பாவும் அணிந்து தலையில் கதர்க் குல்லாயுடன் காட்சியளித்த ஒருவர் இறங்கினார். பின்னர் காரை நோக்கித் திரும்பித் தமது கரங்களை நீட்டினார். பட்டுப் பாவாடையும், சொக்காயும், கழுத்தில் கனமான தங்கச் சங்கிலியும், காதில் சின்னஞ் சிறு குடை விரித்தாற் போன்ற ஜிமிக்கியும் அணிந்த சிறுமி அவர் கரங்களில் தாவினாள். சிரித்துக்கொண்டே அவளைத் தட்டா மாலை விளையாடுவதுபோல ஒரு சுழற்றுச் சுழற்றித் தூக்கி எடுத்துத் தோளில் வைத்துப் பிடித்துக் கொண்டார். கலகலப்பான சிரிப்புடன், காற்றை அளைவது போல் கால்களை முன்னும் பின்னுமாக ஆட்டி மகிழ்ந்தாள் குழந்தை உஷா. தீனதயாளுவின் நெஞ்சில் விழுந்த ஒவ்வோர் உதையும் அவருக்குப் பரமானந்தத்தைக் கொடுத்தாற்போலிருந்தது. மாறாத புன்னகையுடன் மகிழ்ச்சி பொங்க நின்ற அவர் சுட்டிக் காட்டிய திக்கில் குழந்தையின் குறுகுறுப்பான பார்வை திரும்பியது.

    யானையையும் அதன்மேல் இருந்த சிறுவனையும் அடி உதட்டைப் பற்களால் கடித்தபடி உன்னிப்பாய்க் கவனித்தாள் உஷா. பிறகு தகப்பனாரின் தலைக்கருகே குனிந்து ஏதோ கேட்டாள். ‘இல்லை’ என்பது போல் தீனதயாளு இலேசாகச் சிரத்தை அசைத்தார். சிறுமியைத் தோளிலிருந்து இறக்கி மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

    தானும் யானை மேல் உட்காரலாமா என்று குழந்தை கேட்கிறாப்போல இருக்கு. பார்த்தீங்களா மாருதி அவர் சாமர்த்தியத்தை! யானை ஊர்வலமெல்லாம் குழந்தைத்தனமான செயல்கள் என்று நிமிஷ நேரத்திலே நிரூபிச்சுட்டார்! என்றார் ஷண்முகம். தீனதயாளு குழந்தையைக் காரில் ஏற்றினார்; தாமும் ஏறிக் கொண்டார்.

    எம்.எல்.ஏ. கிளம்பியாச்சு! சரி, காரிலே இருக்கிற அந்த அம்மாள் யாரு?

    அவரோட தங்கையாயிருக்கும். பெண்டாட்டியை அவர் பறி கொடுத்து ரொம்ப வருஷமாச்சே.

    கார் கிளம்பி விரைந்தது. மணி அடிக்க இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. வாங்க, போகலாம் என்று கூறி வேகமாக நடந்தார் மாருதி.

    அத்தியாயம் 2

    தேர்தல் சர்க்கஸ்

    அரைமணி நேரம் தாமதமாக வந்து வகுப்பு அறையின் வாசலில் நின்றான் தங்கப்பன். அவன் இப்போது பச்சை ஸாட்டின் சொக்காய் அணிந்திருக்கவில்லை. சர்வ சாதாரணமான சட்டைதான். அதிலும் வண்ணானுக்குப் போய் வந்தது போன்ற மடிப்புக்கள் ஏதுமில்லை. உடல் கசங்கியும், காலர் சுருண்டும் இருந்தன. எனினும் சுத்தமாகத் தோய்த்து உலர்த்தப்பட்ட சட்டைதான் அது.

    ஏண்டா லேட்? என்று கேட்டார் மாருதி. காரணம் அவருக்கே தெரிந்ததுதான். இருந்தாலும் மற்றப் பையன்கள், உபாத்தியாயர் அவனை விசாரிக்காமல் இருந்து சலுகை காட்டினார் என்று நினைத்துவிடக் கூடாதல்லவா?

    தங்கப்பன் பதில் பேசாது நின்றான். இடது பக்கக் குதிகாலை வலது கால் கட்டை விரல் சொறிந்து கொடுத்தது.

    ஏண்டா! ஊமையாகிவிட்டாயா? என்று இரைந்தார் மாருதி.

    தேர்தல் சர்க்கஸ் பண்ணினான் ஸார்! வகுப்பின் ஒரு மூலையிலிருந்து விஷமத்தனமான கூக்குரல் எழுந்தது. யானைச் சவாரி! என்றான் இன்னொரு பையன்.

    ஸைலன்ஸ்! என்று அதட்டினார் மாருதி.

    டப்பாப் பாட்டு பாடினான் ஸார்! ஒரு சிறுவனால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. துடிப்புடன் சொல்லிவிட்டான். அதற்காகக் காசு கொடுத்தாங்க. வெங்கடா லாட்ஜிலே புகுந்து வாங்கித் தின்னுட்டான்!

    ஆன் தி பெஞ்ச்! என்றார் மாருதி. சந்தோஷமாகத் துள்ளி எழுந்து நின்றான் அந்தப் பையன். ‘குட்டை’ வெளிப்படுத்திய பெருமைக்குப் பின் அதற்காகப் பத்து நிமிஷங்கள் இந்தத் தண்டனையை அடைந்தால்தான் என்ன? போ! நீயும் ஏறி நில்லு கடைசி பெஞ்சு மேலே! என்று தங்கப்பனைப் பார்த்துக் கூறிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்தார் மாருதி.

    கட்டளைக்குக் கீழ்ப்படிந்து கையைக் கட்டிக்கொண்டு கடைசிப் பெஞ்சுமீது ஏறி நின்ற தங்கப்பனுக்குப் பாடத்தில் கவனம் செல்லவில்லை. யானை மீது உட்கார்ந்து இதேபோல் கையைக் கட்டிக்கொள்கையில் ஸாடின் சொக்காய் எத்தனை வழுவழுப்பாக இருந்தது! அதைக் கழற்றித் தருமாறு கேட்டுத் திருப்பி வாங்கிக்கொண்டு விட்டாரே, சுப்புராமனின் வீட்டிலுள்ள அவர் கணக்குப்பிள்ளை. பாட்டுப் பாடறபோது மட்டும் போட்டுக்க என்றுதான் அதைக் கொடுத்தாங்களாம். சுப்புராமனின் பிள்ளைக்கு எந்தக் காலத்திலோ தைத்தது. இன்று அவனுக்கு அது சின்னதாகத்தான் இருக்கும்... போனால் போகட்டும்; எட்டணாக் காசு கொடுத்தாங்களே! கோதுமை அல்வாவும் தாங்களே! மசால் தோசையும் எவ்வளவு பிரமாதமாயிருந்தன! அவற்றின் ருசி தங்கப்பனின் நாவை இன்னும் சூழ்ந்து கொண்டிருந்தன. அம்மா எங்கே இதையெல்லாம் செய்கிறாள்? எப்போ பார்த்தாலும் பழைய சோறும் வற்றல் குழம்பும்தான்...!

    மத்தியானம் இடைவேளையின்போது கட்டுரை நோட்டுப் புத்தகக் கட்டைக் கொண்டுபோய் உபாத்தியாயர்கள் அறையில் மேஜைமீது வைத்துவிட்டுத் தயங்கி நின்றான் தங்கப்பன்.

    என்ன? என்றார் மாருதி.

    ஸார்! இந்தக் கட்டுச் சுமக்கிற வேலை எனக்கு வேண்டாம் ஸார்! எல்லாரும் கேலி செய்கிறார்கள்! என்றான் தங்கப்பன்.

    என்னடா சொல்கிறார்கள்?

    நான் கட்டுத் தூக்கிக் காக்காய் பிடிக்கிறேனாம்!

    மேஜையைச் சுற்றியிருந்த உபாத்தியாயர்கள் குபீரென்று சிரித்தார்கள்.

    பார்த்தாயா மாருதி! இங்கே கூட ‘பாலிடிக்ஸ்’ புகுந்து விளையாடுகிறது! என்றார் ஷண்முகம்.

    இதையென்ன மிகைப்படுத்திப் பேசப் போய் விட்டீர்கள்? நமது நகர சபை அங்கத்தினர்கள் பள்ளி நிர்வாகத்திலே இடையறாது தலையிடுவதனாலே நம் முதல்வர் கால் காகிதத்தில் ராஜினாமாக் கடிதம் கொடுத்துவிடலாமா என்றுகூட யோசித்து வருகிறார் என்றார் தமிழ்ப்பண்டிதர்.

    பையனை வைச்சுக்கிட்டு இதையெல்லாம் பேசாதீங்க என்ற ஷண்முகம் தங்கப்பனின் காதைப் பிடித்துத் திருகித் தம் பக்கமாக இழுத்தார். டேய்! பழம் வேணுமாடா, பழம்? கையை நீட்டு, தருகிறேன் என்று கூறி அவன் உள்ளங்கையில் ‘சுளீர்’ என்று பிரம்பால் ஒரு தட்டுத் தட்டினார். சாப்பிடு என்றார்.

    சாப்பிடுவது போல் பாவனை செய்துவிட்டு மறுபடியும் கையை நீட்டினான் தங்கப்பன்.

    இன்னும் கொஞ்சம், ஸார்! டிராயிங் மாஸ்டர் ஷண்முகத்துக்கு இது பிடித்தமான விளையாட்டு என்று அவனுக்குத் தெரியும்.

    தங்கச்சிக்கு எடுத்துக்கிட்டுப் போடா என்று கூறி மீண்டும் உள்ளங்கையில் பட்டென்று தட்டினார் ஷண்முகம்.

    தங்கச்சி எனக்கு இல்லே ஸார். அம்மா தான் இருக்கா என்று கூறியபடியே கால் சராய்ப் பைக்குள் ‘பழத்’தைப் போட்டுக் கொண்டான் தங்கப்பன்.

    ஏண்டா! யானைப் பெட்டியிலே ஒட்டுப் போடுங்கன்னு பாடினியே, யார் சொல்லிக் கொடுத்தது?

    நான் வந்து உடைடாப்பா உடைடாப்பான்னு பாடிக் காண்பிச்சேன் ஸார்! நான் பாடினது நல்லா இருக்குன்னாங்க: அப்புறம் ‘போடுடாப்பா போடுடாப்பான்னு பாடு’ன்னு கத்துக் கொடுத்தாங்க.

    பேஷ்! சரிதான், நீ பாடினது எதற்காக? அதற்கு என்ன அர்த்தம்னு உனக்குத் தெரியுமாடா? என்று கேட்டார் ஷண்முகம்.

    ஓ யெஸ்! இப்படியெல்லாம் ஆடிப்பாடித் தேர்தலைக் கொண்டாடினா, நேருஜி வருவார்! அதற்காகத்தான்!

    கலகலவென்ற நகைப்புக்கிடையே மாருதி மின்சாரம் தாக்கியவர் போலத் துள்ளி எழுந்து நின்று, அட ஆண்டவனே! என்று கூறிக் கரத்தை உதறினார். ஹெட்மாஸ்டரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு நம்ப பசங்களுக்கு ‘டிம்பக்டு’ எங்கே இருக்கிறது என்று கற்றுக் கொடுப்பதற்கு முன்னால் நம் நாட்டில் ஜனநாயகம் எப்படி நடக்கிறது என்று கற்றுத் தர வேண்டும் என்றார்.

    ஒரு சிறு திருத்தம். எப்படி நடைபெறுகிறது என்றல்ல; எப்படி நடைபெற வேண்டும் என்று பிள்ளைகளுக்குப் பாடம் போதித்தல் நலம்! என்றார் தமிழ்ப் பண்டிதர்.

    மாணவர்களை அரசியலில் இழுத்துவிடுகிறோம் என்று ஆட்சேபணை கிளம்பும் என்றார் ஷண்முகம்.

    ஆனால் பள்ளி நிர்வாகத்தில் நகர சபை அங்கத்தினர்கள் அரசியலை இழுப்பது குறித்துத் தடை ஏதும் இருக்க முடியாதல்லவா? என்றார் தமிழாசிரியர்.

    சம்பாஷணை தங்கப்பன் கேட்கவேண்டிய அவசியமில்லாத திசைகளில் திரும்புவதாக மாருதிக்குத் தோன்றவே. சரி, நீ போ, போ! என்று அவனை விரட்டினார். பின்னர் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவர்போல அவனைத் திரும்பவும் அழைத்து நோட்டுப் புத்தகங்களை உபாத்தியாயருக்காகத் தூக்கிக்கொண்டு வருவதை உனக்கு அளிக்கப்பட்ட ஒரு கௌரவமாக நினைக்க வேண்டும். மற்றப் பையன்களுக்கு அந்த உரிமை கிடைக்க வேண்டுமானால் அவர்களும் உன்னை மாதிரி நல்லமார்க் வாங்கவேண்டுமென்று சொல்லு! கேலி செய்வதையெல்லாம் ஒருபோதும் பொருட்படுத்தாதே! தெரிந்ததா? என்று சற்றுக் கடுமையான குரலில் கூறினார்.

    தலையைப் பலமாக ஆட்டிவிட்டுச் சிட்டாகப் பறந்தான் தங்கப்பன். அவனுக்கு வாத்தியார் தன்னைப் பாராட்டினாரா, கோபித்தாரா என்றே புரியவில்லை.

    ‘டிபன்பாக்ஸி’லிருந்த தயிர்சாதத்தை நிமிஷமாகக் காலி செய்துவிட்டுக் கை கழுவிய பின், கால் சராய்ப் பைக்குள் கையை நுழைத்தான் தங்கப்பன். அந்தப் பையின் அளவுக்குக் கச்சிதமான பருமனுடையதாக இருந்த டென்னிஸ் பந்து உள்ளே திணிக்கப்பட்டிருந்தது. அதனைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிதுக்கி வெளியே எடுத்தான்.

    பள்ளியின் ஒரு மூலையில் சுவரில் ஒரு சிறிய வளையம் இருந்தது. மொட்டை மாடியிலிருந்து மழை நீரைக் கீழே கொணரும் குழாயினைச் சுவரோடு ஒட்டினாற்போலப் பொருத்தி வைப்பது அந்த வளையத்துக்கு ஏற்பட்ட வேலை. ஆனால் எக்காரணத்தாலோ குழாய் உடைந்துவிட வளையம் மட்டும் சுவரில் பதிந்திருந்தது.

    தங்கப்பன் பந்தைத் தரையில் நாலு தடவை தட்டி எடுத்தான். பின்னர் ஓர் எம்பு எம்பி அந்த வளையத்தினுள் பந்தைப் போட முயன்றான். பந்து அதனுள் விழவில்லை. சுவரில் மோதித் திரும்பியது. மறுபடியும் பந்தைத் தட்டியபடியே ஒரு பிரதட்சணம் வந்தான். பின்னர் மிக அலட்சியமாக ஒரு நொடிப்புடன் திரும்பித் தாவிப் பந்தைக் குறிபார்த்துப் போட்டான். இப்போது அது வளையத்தின் வெளிப்புறத்தில் பட்டுத் திரும்பியது அவன் கரத்துக்கு. தங்கப்பன் விடவில்லை. கடந்த ஐந்தாறு நாட்களாகவே அந்தப் பந்து அவனிடம் படாத பாடுபட்டு வருகிறது. தன்னைப் பெரிய பாஸ்கெட் பால் வீரனா கற்பனை செய்துகொண்டு விளையாடுவான் தங்கப்பன். பந்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளவும் பிடிக்காது அவனுக்கு! பள்ளிக்கூடத்தின் அந்த மூலை முடுக்கில் அவன் விளையாடுவது அவன் நண்பர்களுக்குத் தெரியவும் தெரியாது!

    பத்தாவது முறையாக அவன் பந்தை வீசியபோது அது கணக்காக வளையத்தினுள் நுழைந்து கீழே விழுந்தது. ஒரே உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தான் தங்கப்பன். அவன் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்கிற மாதிரியாக யாரோ கைகொட்டிச் சிரித்து, ஜோர், ஜோர்! பலே ஜோர்! என்று ஆரவாரிக்கும் சத்தம் கேட்டது.

    யார் கண்ணிலும் படாதவாறு தான் அங்கு விளையாடுவதாக நினைத்துக்கொண்டிருந்த தங்கப்பன் திடுக்கிட்டு நிமிர்ந்து நோக்கினான்.

    வலதுபக்கம் காம்பவுண்டுச் சுவருக்கு மேலே ஒரு சிறுமியின் அழகிய முகம் மட்டும் தெரிந்தது.

    ஏய் பையா! நீதானே இன்னைக்குக் காலமே யானை சவாரி செய்தது? என்று மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டாள் உஷா.

    அத்தியாயம் 3

    புதிய அனுபவங்கள்

    அந்தச் சிறுமி தன்னைக் கூப்பிட்ட விதம் தங்கப்பனுக்குப் பிடிக்கவில்லை. அதிகாரத் தொனியை அவன் உபாத்தியாயர் அவனிடம் கையாண்டிருக்கிறார். அவன் தாயாரும் அன்புடன் அரவணைத்தது போலவே பல தருணங்களில் அதட்டியுமிருக்கிறாள். ஆனால் ஏய், பையா என்ற அலட்சியத்துடன் கூடிய மிடுக்கான அழைப்பு அவனுக்குப் புதிய அனுபவம்தான்,

    எனினும் பெருமை பீற்றிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை எங்கிருந்தோ ஒரு மூலையில் கிளர்ந்தெழுந்து தங்கப்பனின் இதயம் முழுவதும் விநாடி நேரத்தில் பரவியது. கிடைத்த சந்தர்ப்பத்தை தழுவவிடாமல், ஆமாம்! நான்தான் அந்தத் தேர்தல் சர்க்கஸ் பண்ணி டப்பாப் பாட்டும் பாடினேன் என்றான் அவன்.

    1

    இதென்ன பிரமாதம்? நான்கூடத்தான் யானை மேலே ஏறி ஊர்வலம் வந்திருக்கேன் என்றாள் உஷா. பட்டணத்திலே ஜூ இருக்கு. அதிலே சிங்கம், புலி, கரடி எல்லாம் உண்டு. சர்க்கஸிலே இல்லாத மிருகங்களெல்லாம் கூட அங்கே இருக்கும். நான் சிங்கத்துக்கிட்டே போய்த் தட்டிக் கொடுப்பேன்; எனக்குப் பயமேயில்லை!

    சும்மா அளக்காதே! என்றான் தங்கப்பன். பட்டணத்துக்குப் போய் வந்திருக்கும் அவனிடம் அவனுக்குக் கொஞ்சம் மதிப்பு மிகுந்தது. தானும் ஒன்றும் சாமானியப்பட்டவனல்ல என்று நிரூபித்துத் தன் திறமையைக் காண்பித்துக் கொள்ள விரும்புபவன் போல் சட்டென்று அருகிலிருந்த வேப்ப மரத்தின்மீது பாய்ந்து ஏறினான்.

    சத்தியபுரி நகரசபையைச் சேர்ந்த பள்ளிகள் இரண்டு, சிறுவர்களுக்கென்றும், சிறுமியருக்கென்றும் அருகருகே அமைந்திருந்தன. இரண்டையும் பிரித்து நின்றது ஒரு மதில் சுவர். அதன் ஓரம் பெண்கள் பள்ளி இருக்கும் பக்கத்தில் என்றோ கட்டிட வேலைக்கென்று தருவிக்கப்பட்டு மிஞ்சிப்போன செங்கல் ஐல்லிக் கற்கள் கொட்டிக் கிடந்தன. ஒன்றிரண்டு வேப்பங்கன்றுகள் கூட அந்தக் குவியலில் வேர்விட்டுத் துளிர்த்திருந்தது. செங்கல் ஜல்லிக் கற்களாலான அந்தச் சிறு குன்றின் மீது ஏற முடியுமா என்று பரீட்சித்துப் பார்க்க வேண்டுமென்ற துருதுருப்பு. மதிலின் மறுபுறம் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆவல்; இரண்டுமாகச் சேர்ந்து உஷாவை இயக்கியது. அதனால்தான் அந்தச் சிறுமியால் மதிலின் உயரத்துக்கு மேலே தலையை நீட்ட முடிந்திருக்கிறது.

    மரம் ஏறுவதில் அவனுக்குள்ள திறமையைக் கண்டு வியந்தவளாய் நின்று கொண்டிருந்தாள் உஷா.

    என்னே இதுமேலே ஏற்றி விடறயாடா? என்று மதிலின் மேற்புறத்தைத் தட்டிக் காண்பித்தாள்.

    2-min

    டான்னு கூப்பிட்டா முடியாது! என் பேரு தங்கப்பன்!

    இல்லேடா, இனிமே டான்னு சொல்லலை!

    மரக்கிளையிலிருந்து மதில் மேல் அடியெடுத்து வைத்த தங்கப்பன் இடது கையால் கிளையைப் பற்றிக்கொண்டு வலது கரத்தை நீட்டினான். அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உஷாவும் மதில்மீது ஏறிக் குறுக்குவாட்டில் சுவரின் இரு புறங்களிலும் கால்களைத் தொங்கவிட்டபடி உட்கார்ந்தாள். தன் உள்ளங்கைகளைப் பார்த்துவிட்டு, ஐயய்ய! கையெல்லாம் ஒரே அழுக்காப் போச்சு என்று கூறித் தட்டினான். பொன்னிறத்தை மாசுபடுத்தித் திட்டுத் திட்டாகப் படித்திருந்த செங்கற் பொடி மண்ணும் சுவரின் சுண்ணாம்பும் முழுமையாக மறைய மறுத்தன.

    தங்கப்பன் பந்தை மதில் சுவரின் மேல்புறத்தில் மெல்லப் போட்டுப் பிடித்து விளையாடியபடியே. என் மாமாகூட என்னை மெட்ராஸுக்கு அழைச்சுக்கிட்டுப் போகப் போகிறார் என்று கூறினான்.

    ஓரிரு தடவைகளில் சென்னையில் வசிக்கும் அவன் அத்தையும் மாமனும் தங்கள் மகள் செல்லத்தோடு சத்தியபுரிக்கு வந்திருக்கிறார்கள். திரும்பிப் போகும்போது இப்போது தங்கப்பனுக்கு லீவுதானே, தாமரை! பட்டணத்தைப் பார்க்கணும்னு ஆசைப்படறான்; வந்துட்டுப் போகட்டுமே! என்று கூறியிருக்கிறார் அவன் மாமன். ஆனால், தாயார்தான் அதற்குச் சம்மதித்ததில்லை. அம்மாவுக்கு எதுவுமே பிடிக்காது, சதா பாடப் புத்தகத்தை நான் கட்டிக்கிட்டு அழுதால் போதும்! ஆத்திரமாக வந்தது தங்கப்பனுக்கு.

    என் அப்பா என்னை ஒவ்வொரு லீவுக்கும் அழைச்சுக்கிட்டுப் போவார். அவர் அடிக்கடி மெட்ராஸுக்குப் போகணும், ஏன்னு கேட்டா அவர்தானே தீனதயாளு, எம்.எல்.ஏ! எம்.எல்.ஏ. என்ற எழுத்துக்களை மிகப் பெருமிதத்தோடு உச்சரித்தாள் உஷா.

    அதன் தாத்பர்யம் அவளுக்குப் புரிந்ததோ என்னவோ, அவனுக்கு அவ்வளவாகத் தெளிவாகவில்லை. அது சம்பந்தமாக அதிகமாகத் தெரியாது என்று அவனிடம் காண்பித்துக் கொள்ளவும் அவன் விரும்பவில்லை ஆகவே, அதை லட்சியம் செய்யாமல் ரயில்லே போகும்போது நீ மேல்தட்டில் படுத்துக்குவியா? உருண்டு விழுத்துடமாட்டே! என்று கேட்டான், ரயில் பிரயாணம் என்றால் அவனுக்கு ரொம்பவும் ஆசை. ஆனால், அதற்கும் அவனுக்கு அதிகமாக வாய்ப்புக்கள் கிட்டியதில்லை.

    சே! ரயில்லே யார் போவா? என்றாள் உஷா வெகு அலட்சியமாக. ஏழை ஜனங்கள்தான் போகும். காரிலே ஏறிண்டு விர்ர்னு ‘ஸ்பீடா’ பறந்து போயிடுவோம். சுவர்லே கார்! அறுபது மைல் வேகத்திலே போகும்!

    பலூனிலிருந்து காற்றுப் போய் அது சுருங்கி விழுவதுபோலத் தங்கப்பனுக்கு ஒரு விநோதமான உணர்ச்சி ஏற்பட்டது. மேற்கொண்டு பெருமை அடித்துக்கொள்ளச்

    Enjoying the preview?
    Page 1 of 1