Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pillaitamil - Panmugapaarvai
Pillaitamil - Panmugapaarvai
Pillaitamil - Panmugapaarvai
Ebook346 pages1 hour

Pillaitamil - Panmugapaarvai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் மொழிக்கே உரித்தான ஒரு அருமையான சிற்றிலக்கியம் ஆகும். கடவுளர்கள், அரசர்கள் அல்லது பெருங்குடி மக்கள் ஆகியோரைக் குழந்தையாகக் கொண்டு அவர்கள் வளர்ச்சியைப் பத்துப் பருவங்களில் பாடுவர். இவற்றிலுள்ள சொல் நயம், உவமை, அணிகள், வண்ணம், சந்தம் முதலியனவற்றையும் பாடல்களில் அவ்வத் தெய்வங்களின் பெருமைகளையும், அவர்கள் சம்பந்தப்பட்ட புராண இதிகாசச் செய்திகளையும் தொன்மங்களையும் அவை தமிழின் இலக்கிய நயமும், இனிமையும் வெளிப்பட உரைக்கப்பட்டுள்ளதையும் இந்நூல் ஆய்வு செய்துள்ளது.

ஒரு குழந்தையின் வளர்ச்சியை, அக்குழந்தை தெய்வக் குழவியே ஆயினும், பிள்ளைத்தமிழ் நூல்கள் நுட்பமாக அறிவியல் முறையில் ஆராய்ந்து பதிவு செய்துள்ளன. மகவின் வளர்ச்சியானது அறிவு வளர்ச்சியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெற்றோர் பெருமையுடன் கண்டு களித்துப் பாடும் விதமாக அமைவதனை ஆய்ந்துள்ளது. மேலும், பாட்டுடைத் தலைவர்கள் மட்டுமின்றி, மற்ற கடவுளர்கள் பற்றிய புராணக் கதைகளும், தொன்மங்களும் இந்நூல்களின் செய்யுளிடை விரவியும் கலந்தும் நின்று, தற்காலத்து நவீன உரைநடை நூல்களைப் படிப்பது போன்ற இன்பத்தை நுகர்வோருக்கு வழங்குவதை நோக்கலாம். தெய்வங்களைச் சிறு மக்களாக்கிப் பாடிப் பரவினும் பெரும் சைவ சித்தாந்தத் தத்துவக் கருத்துக்கள் இப்பாடல்களின் ஊடே கலந்து பெருகி நிறைந்து ஒப்பரிய தெய்வ அனுபவத்தைப் படிப்போருக்கு வழங்குவதை உணரலாம்.

இந்த ஆய்வுநூல் 1) பல பெண்பால் மற்றும் ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் இருந்து பலவிதமான இலக்கிய நயங்களைத் தொகுத்தும், ஒப்பிட்டும் உள்ளது; 2) உளவியல், அறிவியல் நோக்கில் இருபால் குழந்தைகளின் வளர்ச்சியை ஆராய்கிறது. 3) பெற்றோரின் நோக்கில் குழந்தையின் வளர்ச்சியை (உடல், உள்ளம் இரண்டின்) ஆராய்ந்து ஒப்பிடுகிறது; 4) சமயக் கருத்துக்களை நுட்பமாக விளக்கியமை பற்றி நோக்கியுள்ளது; 5) பிரபஞ்ச இயக்கத்தை தத்துவ அறிவியல் முறைகளில் ஆய்ந்துள்ளது; 6) ‘தீந்தமிழின் இலக்கிய நயங்களை இந்நூல்களை இயற்றிய புலவர் பெருமக்கள் விவரித்துள்ளதைக் கண்டு போற்றுவது’ எனும் தலைப்புகளில் அமைந்துள்ளது.

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580150409184
Pillaitamil - Panmugapaarvai

Read more from Meenakshi Balganesh

Related to Pillaitamil - Panmugapaarvai

Related ebooks

Reviews for Pillaitamil - Panmugapaarvai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pillaitamil - Panmugapaarvai - Meenakshi Balganesh

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பிள்ளைத்தமிழ் – பன்முகப்பார்வை

    (ஒரு திறனாய்வு)

    Pillaitamil – Panmugapaarvai

    Author:

    மீனாக்ஷி பாலகணேஷ்

    Meenakshi Balganesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/meenakshi-balganesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அணிந்துரை

    அணிந்துரை

    1. காலங்கள்தோறும் பிள்ளைத்தமிழ்

    2. அழகியல் சார்ந்த கூறுகள்

    3. அறிவியல் சார்ந்த பார்வை

    4. சமயம் சார்ந்த கருத்துக்கள்

    5. அரிதாகப் பாடப்பட்ட பிள்ளைப்பருவங்கள்

    6. பாடப்படாத பிள்ளைப்பருவங்கள்

    முடிவுரை

    சமர்ப்பணம்

    தமிழ்த்தாயின் திருவடிகளுக்கும்

    தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதையர்

    அவர்களுக்கும்

    முன்னுரை

    ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி’யாகிய தமிழரின் மொழியானது தொன்மையும் இனிமையும் வாய்ந்து மட்டுமின்றி, அன்றுமுதல் இன்றுவரை பல்லாயிரவகையான இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்து, வளர்ந்து, சிறந்து உலகச் செம்மொழியாகத் திகழ்கின்றது.

    வழக்கும் செய்யுளும் என இருவகைப்படும் தமிழ் மொழியில், ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என நால்வகைக்கவிகளைக் கொண்டமைவது பாச்செய்யுள் ஆகும். இவற்றுள் ஒன்றான பொருள்தொடர்நிலைப்பாச் செய்யுள் எனும் அமைப்பினுள் உள்ளதே பிள்ளைத்தமிழ். இது பிள்ளைச்செய்தியாகிய ஒருபொருளின்மேல் பல செய்யுட்களாக அமைவதனால் பொருள்தொடர்நிலைப்பாச் செய்யுள் ஆகின்றது. இத்தகைய இலக்கணச் சிறப்புப் பொருந்திய சிற்றிலக்கியவகை தமிழ்மொழியில் மட்டுமே தோன்றி நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. தொண்ணூற்றாறுவகைச் சிற்றிலக்கியங்களுள் மிகப்பெருமை வாய்ந்தது பிள்ளைத்தமிழாகும். கடவுள், அரசன் அல்லது மாந்தருள் உயர்ந்தோரைப் பிள்ளையாகக்கொண்டு பாடுவது இதன் தனிச் சிறப்பாகும். இதுகாறும் ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன, இன்னும் இயற்றப்படுகின்றன என்பதே இதன் உயர்வை விளக்கும்.

    இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இச்சிற்றிலக்கியவகை புலப்படுத்தும் அழகியல் நயங்களையும் அவற்றிலுள்ள ஆழமான சமய, தத்துவ, வேதாந்த, விஞ்ஞான உட்கருத்துக்களையும், பயில்வோரின் பன்முகப் பார்வையாக ஆய்ந்து ஒப்புநோக்கி, உய்த்துணர்ந்து இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்மொழியின் வளர்ச்சியில் சிற்றிலக்கியங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. பிள்ளைத்தமிழ் என்று தமிழை அடைமொழியாக வைத்தே ஒரு சிற்றிலக்கியம் படைக்கப்பட்டுப் போற்றப்படுமாயின் அதன் சிறப்பு கூறுதற்கரியதாகும். உயர்வானதொரு அமைப்பைக்கொண்டு விளங்கும் இத்தகைய பிள்ளைத்தமிழ் நூல்கள் பெரும்பாலும் தெய்வங்களின் மீதே இயற்றப்பட்டன. பலதலங்களிலுறையும் ஒரே தெய்வத்தை (உமையம்மை, முருகன்) பாடினாலும், பலவிதமான புராண, தொன்மக் கதைகளையும், தலபுராணங்களையும், சமய வழிபாட்டின் முறைமைகளையும், பல அறிவியல் (உளவியல், வானவியல், வாழ்வியல்) சிந்தனைகளையும் தம்முள் கொண்டு சிறந்து விளங்குவதனால் அவற்றைச் சிறப்பாக விரித்தெடுத்துப் போற்றுவதே இந்நூலின் நோக்கமாகும். மேலும் பாட்டியல் நூல்களும் நிகண்டுகளும் குறிப்பிடும் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் சில, அதிகமாகப் பாடப்படாமலும், சில பாடலே பெறாமலும் உள்ளன. அவற்றைப்பற்றிய விரிவான செய்திகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.

    தொல்காப்பியரால் முன்மொழியப்பட்ட பிள்ளைத்தமிழில், குழந்தை வளரும் பருவங்களுக்கேற்ப இலக்கியக் கருத்துக்கள் பலவிதமான உள்ளடக்கங்களைக் கொண்டும், பலவிதமான நயங்களுடனும் அழகான உயர்ந்த, ஒத்த கருத்துக்களைக் கொண்டு பல்வேறு புலவர்களால் எவ்வாறு வித்தாரகவியாகப் படைக்கப்பட்டுள்ளன எனவும் விளக்கப்பட்டுள்ளது.

    பிள்ளைத்தமிழின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் நோக்கியும், பாட்டியல் நூல்கள் இவற்றுக்கு வகுத்தமைத்துள்ள இலக்கணத்தின்படி குழந்தையின் வளர்ச்சி தொடர்பான நிகழ்வுகளை வரிசைக்கிரமமாகப் பட்டியலிட்டும், தொகுத்தும் இயற்றியுள்ள தன்மையையும், அவ்வாறு தொகுக்குங்காலை, அரிய புனைவுகளையும், மற்றைய புராண இதிகாச இலக்கியங்களிலிருந்து தொன்மங்களையும் கவினுறப் பாடல்களிற் பொருத்தி இயற்றியுள்ள நயத்தையும், இவற்றாலெல்லாம் இச்சிற்றிலக்கியம் நுகர்வோர்க்கு நல்கும் பேரின்பத்தையும் இந்நூல் பதிவு செய்கின்றது.

    கி. பி. எட்டாம் நூற்றாண்டில் எழுந்த பெரியாழ்வாரின் திருமொழி முதற்கொண்டு, முதல் பிள்ளைத்தமிழ் நூலான குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் (கி. பி.12-ம் நூற்றாண்டு) பகழிக்கூத்தரின் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் (14-ம் நூற்றாண்டு), குமரகுருபரனாரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (16-17-ம் நூற்றாண்டு) இவற்றின் காலகட்டத்தின் பின்பு எழுதப்பட்ட பல அரிய சிறப்பான பிள்ளைத்தமிழ் நூல்கள் இவற்றிலிருந்து பாடல்களும் நயங்களும் கருத்துக்களும் விளக்கப்பட்டுள்ளன.

    பெரும்பான்மை பிள்ளைத்தமிழ் நூல்களில் காணும் பத்துப்பருவங்களுக்கு மேல் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகக் காணும் வேறு பருவங்களும், அப்பருவங்களுக்கான கவின்மிகு பாடல்களைக் கொண்டமைந்த பிள்ளைத்தமிழ் நூல்களும் அவை பற்றிய விளக்கங்களும் ‘அரிதாகப் பாடப்பட்ட பிள்ளைப்பருவங்கள்’ எனும் பகுதியில் தரப்பட்டுள்ளன. பெரியாழ்வாரின் திருமொழியில் மட்டுமே காணப்படும் பலவிதமான பிள்ளைப்பருவங்களும் ‘பாடப்படாத பிள்ளைப்பருவங்கள்’ எனும் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

    தமிழுக்குத் தனிச்சிறப்பு வாய்ந்த சிற்றிலக்கியமாகத் திகழும் பிள்ளைத்தமிழ் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு திகழ்கின்றது. அவற்றில் சிலவற்றையாவது படித்து, அவற்றின் அருமை பெருமைகளைத் தொகுத்து ஆய்வு செய்ய வேண்டும் எனும் அவாவின் அடிப்படையில் எழுந்ததே இவ்வாய்வும், நூலும்.

    பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் புரந்துகாப்போர் இன்மையினால் காணாது போய்விட்டன. கடந்த சில ஆண்டுகளில் இவற்றுள் சில மறுபதிப்புப் பெற்றும் வருகின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத்தில் இவ்வாய்வினை மேற்கொள்ள வாய்ப்பளித்த துணைவேந்தர் அவர்களுக்கும், இன்முகமும் அன்பும் கொண்டு நெறிப்படுத்திய நெறியாளர், பேராசிரியர் முனைவர் ப. தமிழரசி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இவ்வாய்வுக்குப் பெருத்த ஆதரவு அளித்தும், ஊக்கமளித்தும் ஐயங்களை யாண்டும் தெளிவுபடுத்தியும் வந்த பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி) அவர்களுக்கு எனது பணிவுகலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் அறிவியல் பின்புலத்திலிருந்து இலக்கிய ஆராய்ச்சிக்கு வந்ததை உற்சாகமுடன் வரவேற்ற இப்பெரியவர் என் ஆய்வு நூலில் அறிவியல், உளவியல், ஆகியன சார்ந்த கருத்துக்களையும் ஒரு இயலாக எழுதப் பணித்தார். இது எத்தகைய பரந்த நோக்குக்கொண்ட பான்மை!

    இலங்கையின் பல பழமையான திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள தெய்வங்களின் மீதான பல அரிய பிள்ளைத்தமிழ் நூல்களைப் பெற உதவிய திரு. கிரியா இராமகிருஷ்ணன் (சென்னை), திரு பத்மநாபன் ஐயர் (இலண்டன்), திரு. செல்லத்துரை சுதர்சன் (இலங்கை), ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைப் பதிவாக்குகிறேன்.

    பலவிதங்களிலும் எனக்கு ஊக்கமளித்து வரும் பெரியோர்களும் நண்பர்களுமாகிய முனைவர் தி. இரா. மீனா, பூசை. திரு. ஆட்சிலிங்கம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத்துறைத் தலைவரான முனைவர் க. திலகவதி, பல அருமையான அரிதான பிள்ளைத்தமிழ் நூல்களைக் கொடுத்துதவிய திரு. கம்பபாதசேகரன் (திருநெல்வேலி), அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    இவ்வாய்வுப் பணிக்குத் தேவையான அரிய பல பிள்ளைத்தமிழ் நூல்களை நான் வேண்டியபோதெல்லாம் கொடுத்துதவிய ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குனர் திரு. சுந்தர், நூல்நிலைய மேலாளரான திருமதி மாலா, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகப் பொறுப்பாளரான முனைவர் கவிதா, டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூலகத்தைச் சார்ந்த திருமதி சுப்புலட்சுமி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    தமிழிலக்கியங்களைக் காலந்தோறும் காப்பாற்றிவைக்க முனைவர் திரு. கல்யாணசுந்தரம் (Lausanne, Switzerland) அவர்களால் தொடங்கப்பட்டு இயங்கும் மதுரை தமிழிலக்கியத்திட்டம் (Project Madurai) என்றொரு அற்புதமான புதையலாகிய இணையதளம் மூலம் அருமையான பல பிள்ளைத்தமிழ் நூல்கள் எனக்குக் கிடைத்தன. இன்று நான் சேகரித்த பல அரிய நூல்களை அவ்விணையதளத்தில் வலையேற்றக் கொடுத்து வருகிறேன்

    இளம் பருவத்திலிருந்தே தமிழ்மீது என்னை தீராக்காதல் கொள்ள வைத்து வளர்த்த எனது அன்பான பெற்றோர், அனைத்துப் பள்ளி, கல்லூரித் தமிழ் ஆசிரியர்கள், ஆசிரியைகள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

    ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்’ எனும் தெய்வ வாக்குக்கேற்ப, நான் தேடிக் கண்டெடுத்த முத்துக்களை இந்நூலில் தொகுத்துப் பதிவு செய்துள்ளேன். இதனைத் தமிழன்னையின் திருவடிகளுக்கும், பல அரிய தமிழ்நூல்களை நமக்காகத் தேடித்தந்து காத்தளித்த நமது தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாத ஐயரவர்களுக்கும் எனது எளிய காணிக்கையாக்குகிறேன்.

    இதுகாறும் நான் பார்த்த, படித்த அல்லது கேள்விப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்களின் பட்டியல் பிற்காலத்து ஆய்வாளர்களுக்கு பயன்படக்கூடும் எனப் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.

    அணிந்துரை

    முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி,

    மேனாள் முதல்வர், த. சா. அ. கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி,

    பேரூர். கோவை. 641042

    ‘கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்

    ஒண்டொடி கண்ணே யுள’

    எனத் தலைவன் ஐம்புல இன்பத்தையும் தலைவியிடத்தே ஒருங்கே பெற்ற இன்ப நலத்தை வியந்து பாராட்டுதலைத் திருவள்ளுவர் எடுத்தியம்பினார். இப்புலனின்பத்தினும் மேலான இன்பத்தைச் சின்னஞ்சிறுகிளி போன்ற குழந்தையிடம் பெற்ற மேன்மையை மகாகவி பாரதியார் கண்ணம்மா எனும் குழந்தையிடம் பெற்றுப் போற்றினார்.

    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

    என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

    பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே

    அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே

    ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி

    ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி

    உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி

    மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

    கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி

    உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி

    சற்றுன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடி

    நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடி

    உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

    என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

    ஒரு தாயின் ‘வாத்சல்லியம்’ முழுமையும் இங்கு வெளிப்படுகின்றதன்றோ. பத்திநெறியில் ஒரு பக்தன் அன்புக் கடலில் தன்னையே இழந்துவிடுகின்றான். தாயின் நிலையும் இத்தகையதே. குழந்தையின் ஒவ்வோரசைவிலும் தன்னையிழந்த இன்ப அனுபவத்தை அடைகிறாள்.

    சொல்லொணாத இந்த இந்த அனுபவத்தினைச் சொல்லில் வெளிப்படுத்தும் இலக்கியவகை பிள்ளைத்தமிழ். சிற்றிலக்கிய வகையில் மிகுதியானது இப்பிள்ளைத்தமிழ் நூல்களே.

    இப்பிள்ளைத்தமிழ் நூல்களின் கவிச்சுவைக்குத் தம்மைப் பறிகொடுத்த மருந்துத்துறை அறிவியலாளர் திருமதி மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்றாலும் தமிழ்ச்சுவையை அனுபவிப்பதிலிருந்து ஓய்வுபெறாமல் தமிழ் முதுகலையில் சிறந்த தேர்ச்சி பெற்றுத் தமிழாராய்ச்சியிலும் வெற்றி பெற்றுள்ளார். பிள்ளைத்தமிழ்க் கடலின் அகலத்தையும் ஆழத்தையும் அளந்தறிந்து, மூழ்கி அக்கடலின் ஆழத்தில் கிடக்கும் இரத்தினங்களைக் கண்டெடுத்து இவ்வாய்வினைப் படைத்துள்ளார்.

    இவ்வாய்வினைத் தமிழ் இலக்கியவுலகமும் ஆய்வுலகமும் பயன் கொள்க. அம்மையாருக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக் கொள்கின்றேன்.

    அணிந்துரை

    முனைவர் ப. தமிழரசி,

    பேராசிரியர் மற்றும் தலைவர்,

    தமிழ்த்துறை,

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,

    கோவை – 21.

    அயலார் வருகை, ஆங்கிலக் கல்வி, அச்சு இயந்திரங்களின் வருகை முதலான காரணங்களால் தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை முதலான உரைநடை இலக்கியங்கள் தமிழில் பல்கிப் பெருகத் தொடங்கின. 19, 20 ஆம் நூற்றாண்டுகளின் புத்திலக்கிய வகைகளின் எழுச்சியும் பெருக்கமும் பழைய மரபிலக்கிய வகைகளை வீழ்த்திவிட்டனவோ? என்று தோன்றும். கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுகாலம் செல்வாக்கோடு திகழ்ந்த தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் காலம் முடிந்தது என்று ஒரு மாயத்தோற்றத்தை உரைநடை இலக்கியங்களின் பெருக்கம் ஏற்படுத்தினாலும் உண்மை இதற்கு நேர்மாறானது. ஏனைய நூற்றாண்டுகளை விடவும் இருபதாம் நூற்றாண்டில்தான் சிற்றிலக்கியங்கள் அதிக அளவில் பாடப்பட்டன என்பது ஒரு வியக்கத்தக்க உண்மை.

    சிற்றிலக்கியங்களிலேயே பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுக்கு என்று ஒரு தனித்த மரபு உண்டு. கடவுளரையோ, மன்னர்களையோ, புலவர்களையோ, வள்ளல்களையோ நாம் வணங்கிப் பாராட்டத்தக்க ஒருவரைக் கற்பனையில் குழந்தையாகப் பாவித்து காப்பு முதலிய பத்து பருவங்கள் அமைத்துப்பாடி மகிழ்வது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும். பாடல் யாப்பு ஆசிரிய விருத்தத்தில் அமைதல் மரபு.

    சாற்றரிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி

    மாற்றரிய முத்தமே வாரானை – போற்றரிய

    அம்புலியே ஆய்ந்த சிறுபறையே சிற்றிலே

    பம்புசிறு தேரோடும் பத்து. (வெண்பாப் பாட்டியல்-8)

    பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் வரை சிற்றிலக்கியப் பாட்டுடைத் தலைவர்கள் பெரிதும் கடவுளர்களாகவோ அரசர்களாகவோ வள்ளல்களாகவோ அமைந்தனர். கடவுளரைப் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள் அதிகம் பாடப்பட்டன. அதில் கடவுளரைக் குறித்தான பிள்ளைத்தமிழ் நூல்களை ஆய்வுக்களமாகக் கொண்டு ஆய்வுசெய்து பட்டம் பெற்ற திருமிகு. மீனாட்சி அவர்கள், தனது முனைவர் பட்ட ஆய்வேட்டினை நூலாக வெளியிடுகிறார். அம்மையார் அவர்கள் நுண்ணுயிரியலில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சியளராய்ப் பணிபுரிந்து வருபவர். தமிழின் மேல் கொண்ட காதலின் காரணமாய் தமிழ் படித்து முனைவர் பட்டப்பேற்றிற்காக பிள்ளைத்தமிழை ஆய்வாக எடுத்து அதில் முனைவர் பட்டம் பெற்றவர். பிள்ளைத்தமிழ் குறித்து தமிழில் அதிக நூல்கள் இல்லை என்ற குறை இவரின் வருகைக்குப்பின் குறையும். இவர் இன்றைய வளரும் எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்கான மிகப்பெரும் முன்னுதாரணம். தேடிச்சென்று பல அரிய பிள்ளைத்தமிழ் நூல்களைக் கண்டறிந்து ஆய்வுக்களத்தைச் செழுமைப்படுத்தியவர். ஆற்றொழுக்கான எளிய தமிழ்நடையும், ஆங்காங்கே பொருத்தமாகக் காட்டப்பெற்றுள்ள அநுபவ எடுத்துக்காட்டுகளும் இந்நூலின் தரத்தை மேலும் உயர்த்துகின்றன.

    உளவியல் அண்மைக்காலத்தது. சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் மெய்ப்பொருளியலின் ஒருபகுதியாகக் கருதப் பெற்ற உளவியல் துறை சென்ற நூற்றாண்டில்தான் தனியாகப் பிரிந்தது. அறிவியல் என்ற சிறப்பும் பெற்றது. ஆயினும் ஒரு ஆய்வாளராய், ஆராய்ச்சியாளராய் பிள்ளைத்தமிழில் காணலாகும் அறிவியலை ஒரு இயலாக தொகுத்துத் தந்துள்ளமை சிறப்பு. ஒரு ஆசிரியராக, ஆய்வாளரை வாழ்த்துவதோடு அவரின் தமிழ்ப் புலமையைப் பாராட்டுகிறேன்.

    1. காலங்கள்தோறும் பிள்ளைத்தமிழ்

    தமிழரின் தொன்மைவாய்ந்த மொழியானது சங்ககாலம் தொட்டு இன்றுவரை எண்ணற்ற இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் படைத்துச் சிறப்புற்றிருக்கிறது. இன்று நமக்குக் கிடைத்துள்ள பழமையான நூல் தொல்காப்பியமாகும். இதன் முதலிரு பகுதிகளான எழுத்தும் சொல்லும் தமிழின் அமைதியைப் பற்றி விளக்குவனவாம்; பொருளதிகாரம் அம்மொழி பேசுவோரின் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.

    தமிழ்மொழியில் சங்ககாலத்து இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சங்கம் மருவிய காலத்து எழுந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பல்லவர் காலத்தில் இயற்றப்பெற்ற சைவ, வைணவ சமயநூல்களான பன்னிரு திருமுறைகள், திவ்வியப்பிரபந்தம், இலக்கண நூல்கள், சோழர்காலத்து ஐம்பெருங்காப்பியங்கள், பலவகையான சமயநூல்கள், இடைக்காலத்தில் பலவகைப்பட்ட பிரபந்தங்கள் என்னும் 96 வகைச் சிற்றிலக்கியநூல்கள் எனப் படிப்படியாக, பலவகைப்பட்ட நூல்கள் இயற்றப்பெற்று தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவி, அதன் புகழையும் பன்மடங்கு பெருக்கின. இவற்றுள் உலா, கலம்பகம், பரணி, தூது, பிள்ளைத்தமிழ் ஆகியன சிறப்பானவையாகும்.

    இவற்றுள்ளும் பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியமானது பெருமளவில் படைக்கப்பட்ட ஒன்றாகும். இதனைப் பன்முகப் பார்வையாகக் நோக்குங்கால் அதன் சிறப்புகளை மேலும் விளக்கமாக அறியலாம்.

    பிள்ளைத்தமிழும் தொல்காப்பியமும்

    தமிழ்ச்சிற்றிலக்கியங்களில் முதன்மை இடம் வகிப்பது பிள்ளைத்தமிழ் என்பர். இது சீரும் சிறப்பும் பெற்று வளர்ந்திருக்கும் பிரபந்தமாகும். பிறமொழிகள் எதிலும் காணப்படாத இந்த இலக்கியவகை, சுவைவாய்ந்த சிற்றிலக்கியங்களுள் தனித்தன்மை வாய்ந்து சிறந்து விளங்குவது என்பார் அறிஞர் மு. வரதராசனார்1. இன்றுவரை கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆகவே இவ்வகை இலக்கியம் பிற சிற்றிலக்கிய வகைகளைவிட எண்ணிக்கையிலும் மிகுந்து காணப்படுகின்றது.

    காப்பியத்தின் உறுப்புகளாக இருந்தவை காலமாற்றத்தில் தனித்தனி இலக்கிய வகைகளாக உருப்பெற்றமையால் அவற்றைப் பேரிலக்கியமாகிய காப்பியங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் பொருட்டுச் சிற்றிலக்கியங்கள் என வழங்கப்பட்டன. தொல்காப்பியர் புதியதாகப் படைக்கப்பட்ட இலக்கியங்களை விருந்து எனக் குறிப்பிடுகிறார்.

    ‘விருந்தே தானும் புதுவது

    கிளந்த யாப்பின் மேற்றே.’2

    எனப் பிரபந்த மரபியலும்

    ‘பிள்ளைக்கவி முதல் புராணம் ஈடுத்

    தொண்ணூற் றாறெனுந் தகைய,’3

    எனத் தொண்ணூற்றாறு வகைச்சிற்றிலக்கியங்களை வகைப்படுத்துகின்றது.

    தொல்காப்பியம் இந்த இலக்கியவகைக்கு இலக்கணம் அமைத்து, ‘குழவி மருங்கினும் கிழவதாகும்,’4 என்று விளக்குகிறது. ‘சிறுபிள்ளைகளும் பாட்டுடைத்தலைவராக விளங்குவர்’ என்பது பொருள். ‘கிழவதாகும்,’ எனுங்குறிப்பு குழவிப்பருவம் கடந்த முதியவரை அவரது குழவிப்பருவம் பற்றிப் பாராட்டிப் பாடினும், அது அந்த முதியவருடன் ஒற்றுமையுடைய அக்குழவிக்கு உரிமையுடைமையால் அது வழுவாகாதென்று உணர்த்துகின்றது. இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும்,

    ‘இளமைந்தர் நலம் வேட்ட

    வளமங்கையர் வகையுரைத்தன்று,’5

    எனும் நூற்பாவால் அறியலாம்.

    நச்சினார்க்கினியர், ‘குழவிப்பருவத்தும் காமப்பகுதி உரியதாகும்’ என்றும் ‘மருங்கு’ என்றதனால் மக்கட்குழவியாகிய ஒரு மருங்கே கொள்ளவேண்டுமெனவும், தெய்வக்குழவி இன்மையாயின் இதனை மேலவற்றோடு ஒன்றாது வேறு கூறினார். தந்தையரிடத்தன்றி ஒரு திங்களில் குழவியைப்பற்றிக் ‘கடவுளர் காக்க’ என்று வேண்டுதலானும், குழவியின் விளையாட்டுகளைப் பாராட்டி, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனப் பல பெயரிட்டு வழங்கும் முறையானும், குழவிப்பருவம் கழிந்த பாட்டுடைத்தலைவன் அது வேண்டியக்காலும் அக்குழவிப் பருவத்தினையே எண்ணிப்பாடுக என்றதனால் கிழவதாகுமென்றார்,’ என விளக்கவுரை தருவார்.6

    இவ்விளக்கத்தின்மூலம் காப்புமுதல் சிறுதேர் ஈறாகவுள்ள பிள்ளைத்தமிழின் பத்துப்பருவங்களையும் நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டியுள்ளார்.

    பிள்ளைத்தமிழ் எனும் இவ்வகைப்பாட்டு தமிழ்மொழி ஒன்றிற்கே சிறந்தமையால் தமிழ் என்னும் பொதுப்பெயரே அடையெடுத்துச் சிறப்புப்பெயராகி நின்றது என்பார் சிவங். கருணாலய பாண்டியப்புலவர்.7 தமிழ்மொழிக்கே சிறந்ததனைத் தமிழ்மொழியெனவும் பெயர் பகர்தலும், தமிழ்மொழிக்கே சிறந்த அகத்திணைப்பொருள் கூறியதனை தமிழ் கூறியதெனக் களவியலுரை வழங்குதலாலும் அறிந்துகொள்ளலாம்.

    பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியத்தின்

    Enjoying the preview?
    Page 1 of 1