Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aagayathil Bhoogambam
Aagayathil Bhoogambam
Aagayathil Bhoogambam
Ebook346 pages2 hours

Aagayathil Bhoogambam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஃப்ளைட் ஹைஜாக்கை மையமாகக் கொண்டு எழுதிய கதை தான் "ஆகாயத்தில் பூகம்பம்". ஒரு பைலட், ஒருபிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் இயக்குநர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள். இவர்களது வாழ்க்கைக் கனவுகள், இலட்சியம், அடிப்படை சித்தாந்தம் ஆகியவற்றை ஜல்லிக்கட்டு தொடங்கி சர்வதேச அரசியல்வரை உள்ள நடப்பு நிகழ்வுகள் எல்லாம் இடம்பெறும் ஒரு வலைப்பின்னலானக் கதையை பட்டுக்கோட்டை பிரபாகருக்கே உரித்தான, விறுவிறுப்பான நடையில் படிப்போமா...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580100906678
Aagayathil Bhoogambam

Read more from Pattukottai Prabakar

Related to Aagayathil Bhoogambam

Related ebooks

Related categories

Reviews for Aagayathil Bhoogambam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aagayathil Bhoogambam - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    ஆகாயத்தில் பூகம்பம்

    Aagayathil Bhoogambam

    Author:

    பட்டுகோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    முன்னுரை

    அன்புள்ள உங்களுக்கு...

    வணக்கம்.

    குமுதத்தில் சிறுகதை வருமா என்று ஏங்கிய நாட்கள் உண்டு. பிறகு பார்த்தால் அத்தனை நாவல்களும், தொடர் கதைகளும் எழுதினேன். இப்போதும் அதன் ஆசிரியர்கள் மாறினாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். அவர்களின் நல்லப் புத்தகங்களில் நான் இருப்பதால் இது சாத்தியமாகிறது. (சில ஆங்கில வாக்கியங்களை தமிழ்படுத்தினால் இப்படித்தான் படுத்தும்.) ஒரே ஒரு குறை... குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களைச் சந்தித்ததேயில்லை.

    ஆகாயத்தில் பூகம்பம் கதையை தொடராக குமுதத்தில் எழுதியபோது திரு. ப்ரியா கல்யாணராமன் எனக்களித்த உற்சாகத்தையும், சுதந்திரத்தையும் குறிப்பிட்டேயாக வேண்டும். நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டேயிருந்தேன். பார்த்தால் 44 ஆவது அத்தியாயத்தில்தான் முற்றும் வந்து நிற்கிறது. ஆகவே இது நான் எழுதியதிலேயே மிக நீளமான தொடர்கதையானது.

    இந்தக் கதைக்கு வாசகர்கள் அளித்த விமரிசனமும் வித்தியாசமானது. இருபதுக்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முகநூலின் உள்பெட்டியில் விடாமல் விமரிசித்து வந்தது எனக்குப் புதிய அனுபவம்.

    துப்பறியும் நாவல்கள் எழுதுவதென்பது எனக்குப் பிடித்த விஷயம். மூளைக்குள் கட்டங்கள் அமைத்து கற்பனையில் காய்களை நகர்த்தி விளையாடும் சதுரங்கம் போன்ற சுவாரசிய சவால். ரசித்து ரசித்து எழுதியவை ரசித்து ரசித்துப் படிக்கப்பட்டதால் நூற்றுக் கணக்கில் எழுதிவிட்டுத் திரும்பிப் பார்த்தால் ஒரே ரத்த வாடையும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுகளும், போலீஸ் சைரன்களும் கனவிலும் துரத்தின.

    பிறகு துப்பறிவதை கொஞ்சம் சைடில் வைத்துவிட்டு காதலிக்கவும், கிச்சு கிச்சு மூட்டவும் துவங்கினேன். ரொமான்சும், நகைச்சுவையும், சமூகமும் மாறி மாறி எழுத... அவையும் வரவேற்பைப் பெற்றன. இப்படி ஆல் ரவுண்டராவதற்கு பேனா பிடித்ததிலிருந்து சுமார் பத்து வருடங்கள் பிடித்தது. ஆனாலும் இப்போதும் என்னை க்ரைம் கதை எழுத்தாளனாக மட்டும் சிலர் அடையாளப்படுத்தும்போது கொஞ்சம் மனம் கோணிக் கொள்ளும்.

    என்னைச் சந்திக்கும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளில் தவறாமல் இடம் பெற்றிருக்கும் ஒன்று:.'பரத் சுசிலா நல்லா இருக்காங்களா?' என்பதே. அவ்வளவு தூரம் அவர்கள் இருவரையும் வாசகர்கள் நேசிக்கிறார்கள் என்பது உண்மையிலேயே எனக்குப் பெருமையான விஷயம்தான். ஆனால் இந்தக் கதையில் பரத், சுசிலா இல்லை . நான் அவர்களைத் தவிரவும் நிறைய பாத்திரங்களை உருவாக்கி அவர்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறேன். தயாளன், நியூட்டன், அனாமிகா, கிரண், ராவ், அலெக்ஸ், சேட்டை கோபி மற்றும் பலர்... இவர்களில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த தயாளன் ப்ரொமோஷன் பெற்று அசிஸ்டெண்ட் கமிஷனராகி இந்தக் கதையில் இடம் பெற்றிருக்கிறார்.

    விமானக்கடத்தல், மாவோயிஸ்ட்ஸ் பிரச்சினை, பயங்கரவாதியின் காதல் இந்தப் பின்னணியில் எழுதப்பட்ட இந்தக் கதையில் அவினாஷ் என்று ஹீரோவுக்கும், ஆதர்ஷ் என்று வில்லனுக்கும் ஒரே ஒலிக் குறிப்பில் பெயர் வைத்ததால், சில இடங்களில் குழப்பமுற்றோம் என்று சிலர் கருத்து சொன்னார்கள். எனவே கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்.

    தயாளன் துப்பறிகிறார் என்கிற தலைப்பில் தயாளன் இடம் பெற்ற பல கதைகளையும் இவர் தொடர்ந்து வெளியிட இருக்கிறார் என்கிற நற்செய்தியுடன்...

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    சென்னை.

    1

    கோடு போட்ட நோட்டைத் திருப்பிப் பிடித்ததைப் போல ஓடுகளிலிருந்து மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. பட்டாசாய் வெடித்த இடிக்கு ஜன்னலில் கதவொன்று உதறிக் கொண்டது. தரை முழுக்க அந்தக் கால ஆத்தங்குடி சலவைக் கற்களின் சதுரங்கள் சேர்ந்து டிசைன் அமைத்திருந்தன. அதேக் கற்கள் சுவற்றிலும் இடுப்புயரத்திற்கு பதிக்கப்பட்டிருந்தன.

    இந்த வீட்டில்தான் சில அத்தியாயங்களுக்குப் பிறகு ஒரு கொலை நிகழப் போகிறது. அப்போது இந்த மாதிரி மழை பெய்து கொண்டிருக்கும்.

    சில நிமிடங்களில் சென்னையில் இறங்கப் போவதாகவும், சீதோஷ்ண நிலை ரம்யமாக இருப்பதாகவும் சொல்லி, தங்கள் விமானத்தில் பயணம் செய்தமைக்கு பைலட் நன்றி நவின்ற மைக் செய்தி கேட்டு 'கரோலின் கூனே' எழுதிய டெர்ரரிஸ்ட் நாவலை மூடினாள் அவள். முட்டை வடிவ ஜன்னல் வழியாக கரையான் பென்சிலில் வரைந்தது போல சலனமற்ற வங்காள விரிகுடாவில் கப்பல்கள் காகிதக் கப்பல்கள் சைஸில் மிதந்தன.

    முன் வரிசை கண்ணாடிப் பையன், மாம்! அண்ணா சமாதி! இதோ..மெரீனா ஸ்விம்மிங் பூல்! என் ஜாமெண்ட்ரி பாக்ஸ் சைஸ்ல இருக்கு! வாவ்.. லைட் ஹவுசை இப்படிப் பார்த்ததே இல்லல்லம்மா? இதானே சாந்தோம் சர்ச்? ஹை! கத்திப்பாரா பட்டர்ஃப்ளை பிரிட்ஜ் பாரும்மா.. என்று குதிக்க... எட்டி அவன் தலையை செல்லமாகக் கலைத்தாள்.

    ஓடுபாதையில் வழுக்கி, திரும்பி விமானம் நிற்பதற்குள்.. இறங்கியதும் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட்டைக் கிளப்ப பொத்தான் அமுக்கப்போகிற அவசரத்துடன் வரிசை கட்டி நின்று கொண்டவர்களின் செல்போன்கள் செயலுக்கு வந்ததாய் விதவிதமாக சிணுங்கின.

    பார்டன்? என்றான்.

    ஐ தாட் யு வாண்டட் டு நோ மை சைஸ்..

    அந்த பதில் தனக்கில்லை என்பதாக அவன் போனை நோண்டியபடி நகர்ந்தான். இன்றிரவு சரக்கடிக்கும்போது, திமிர் பிடிச்சவடா அவ மாமு. பாக்கக் கூடாதுன்னா எதுக்கு அவ்ளோ டைட்டா டாப்ஸ் போடறே? சிக்ஸ்ட்டீ ன் முழம் சுத்திக்க வேண்டியதுதானே? என்று சொல்வான்.

    சுழல் பெல்ட்டில் தன் லக்கேஜை தேடியபடி தள்ளு வண்டியோடு காத்திருந்தபோது ஒரு செல்ஃபி எடுத்து "வந்தாச்! ' என்கிற செய்தியோடு வர்ஷாவுக்கு அனுப்பினாள்.

    இனிமே நான் செத்தேன் என்று வர்ஷா பதிலியதும் புன்னகைத்துக் கொண்டாள்.

    தலையில் விழுகிற சாத்தியத்துடன் ஏதாவது கண்ணாடிக் கூரை இருக்கிறதா என்று பார்த்தபடி வெளியே வந்து டாக்ஸி பிடித்து, அடையாறு என்றாள்.

    டிரைவர் கடலை ஆர்வத்தில், என்னம்மா... வெயில் இப்படிப் பொளந்துகட்டுதே... என்று சொல்லி, அவள் கண்டுகொள்ளாமல் வெளியே பார்க்க... தேவையில்லாமல் ஹாரன் அடித்தான்.

    வேலை முடியாத மெட்ரோ பாலத்தின் வாட்டர் டேங்க் சைஸ் தூண்களில் வேட்பாளர்கள் கும்பிட்ட கரங்களுடன் ஓட்டு கேட்டார்கள். முச்சந்தியில் மேடை போட்டு வியர்வை வழிய, உனக்கு தில் இருந்தா தொகுதியில் கால் வை பாக்கலாம்.. என்று சவால் விட்டார் சினிமாவில் ரிட்டயரான நடிகர்.

    வாட்ஸ் ஆப்பில் ஆங்கிலத்தில், இப்போது சென்னையில் என்று டைப்செய்து அனுப்பிக் காத்திருந்தாள்.

    நல்வரவு கண்ணே! என்று பதில் வந்தது.

    எப்போது சந்திக்கிறோம்?

    நான் சென்னை வந்ததும்

    எங்கே இருக்கிறாய் நீ?

    லெசோதோ!

    என்னது? யசோதாவா?

    சவுத் ஆஃப்ரிக்காவில் ஒரு நாடு.. லெ..சோ..தா!

    அங்கு என்ன?

    ஆணுறை விற்க வந்தேன்

    உளறாதே!

    எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமுள்ள நாட்டில் வேறென்ன செய்வது?

    எனில் வாலாட்ட மாட்டாய்!

    நாற்பது வயதுக்குக் கீழே பெண்களில் ஐம்பது சதவிகிதத்தினருக்கு ஹெச்.ஐ.வி! அதாவது... இரண்டில் ஒருத்திக்கு! எப்படி ரிஸ்க் எடுப்பது?

    உருப்படியாக வந்து விடுவாய்தானே?

    டாய்லெட்டில் தவிர ஜிப்பை இறக்குவதாக இல்லை

    யாருக்கும் வேறு வேலையே இல்லையா?

    முரண் பார்... நாட்டை செழிக்க வைக்கும் வைரச் சுரங்கங்கள் டாலர்களைக் கொண்டு வந்து கொட்டுகின்றன

    டேய்! நீ எதற்குச் சென்றாய் என்று புரிந்துவிட்டது

    புரிந்ததை உன் அழகான இதயத்திற்குள் பத்திரமாய் வை!

    கேப்டன் பேசினாரா?

    அவர்தான் தேர்தல் மும்முரத்தில் மக்களே, மக்களே என்று அலைந்து கொண்டிருக்கிறாரே..

    கடிக்காதே ஆதர்ஷ்! சீரியஸ் ப்ளீஸ்..

    சரி.. சீரியஸாகிறேன். இல்லை!

    ஏன்?

    உனக்கு பதில் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். அல்லது... என்னை ஆழம் பார்க்கிறாயா?

    எனக்குத் தெரியாதென்று நீ நம்ப நான் என்ன செய்ய வேண்டும்?

    ஒரு முத்தப் படம் அனுப்பு. நம்புகிறேன்

    முடியாது. வேறு?

    உன்னைப் பொறுத்தவரைக்குமான அந்த மூன்று கெட்ட வார்த்தைகள் கொண்ட பேக்கேஜ்?

    அது வார்த்தையாக வரக் கூடாது முட்டாளே! இயற்கையாக வர வேண்டும். வற்புறுத்தி வரவழைக்க அதென்ன அழுகையா? உன்னை நினைத்தால் இதயத்தில் புறா பறக்க வேண்டும். எனக்குப் பறக்கவில்லை

    புறா வேண்டாம். ஒரு வண்ணத்துப் பூச்சிக்கூடவா பறக்கவில்லை? ஈசல்? அட்லீஸ்ட்... கொசு?

    ஐந்து புள்ளி ஒன்பது உயரம் உள்ள, XXL டிர்ட் போடுகிற ஆதர்ஷ் இப்படிக் கெஞ்சுவது ப்ளஸ் ட்டூத்தனமாக இல்லையா?

    இல்லை . காதல்.. அவமானப்படுவது, ஆப்பு வாங்குவது இதையெல்லாம் இடது கையால் துடைத்துப் போட்டுவிடும். அந்தக் கால முரளி, இந்தக் கால சிவகார்த்திகேயனின் விடா முயற்சி அவசியம் டியர்

    எனில் பிளேடு வாங்கி வைத்திருக்கிறாயா?

    என்னிடம் ட்ரிம்மர் இருக்கிறது

    அதற்கில்லை. மணிக்கட்டில் அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட!

    ஓ! நீ ஹாரர் ப்ரியை இல்லையா? ஹாஸ்பிடலில் டெட்டால் வாசனைக்கு மத்தியில்தான் நமக்குள் அது மலர வேண்டுமா?

    ஒன்று செய்கிறாயா?

    காத்திருக்கிறேன். சொல்! நயாகராவில் குதிக்க வேண்டுமா? நட்சத்திரத்தைச் சுட்டு வீழ்த்த வேண்டுமா? உன்னை நினைத்துக் கொண்டால் எல்லாமே சாத்தியம்

    முதலில் இப்படி முந்தா நாள் கவிதை எழுத ஆரம்பித்தவன் மாதிரி பிதற்றுவதை நிறுத்த வேண்டும். குறைப் பிரசவம் மாதிரி ஒரு பிஸ்டல் வைத்திருப்பாயே.. RUGER LCR9 MM!

    ஆமாம். கிண்டல் செய்யாதே! அதன் பவர் என்ன தெரியுமா? லேட்டஸ்ட் ஹிட் அதுதான். அது வேண்டுமா உனக்கு?

    அதை எடுத்து உன் நெற்றிப் பொட்டில் வைத்துக் கேட்டாலும் என் பதில் நோ என்பதுதான். போதுமா?

    அதையே உன் நெற்றிப் பொட்டில் வைத்துக் கேட்டால்?

    வெட்கமாய் இல்லை? என்னை நேசி! இல்லை.. கொன்று விடுவேன்! என்ன ஒரு அபத்த முரண்! நேசிப்பவளைக் கொல்லத் துணிந்தால்.. அது எப்படிக் காதல்?

    தப்புதான். வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆதர்ஷ்... நீ இல்லாமல் என்னால் ஒரு முறை இமைக்கக்கூட முடியாது' என்று உன்னைச் சொல்லவைக்கிறேன் பார்"

    முயற்சி செய்

    இனிமேல் ரீடர்ஸ் டைஜஸ்ட் டெக்னிக்தான்

    அதென்ன?

    விடாமல் துரத்தி வாழ்க்கையில் ஒரு தரமாவது சந்தா கட்ட வைத்து விடுவார்களே... சரி... சென்னையில் எங்கு தங்குகிறாய்?

    வர்ஷா ஒரு தனி வீடெடுத்துத் தங்கியிருக்கிறாள். அவளுடன்.

    எப்போதும் போனை அணைக்காமல் வைத்திரு.

    சீக்கிரம் வா. நீ வந்ததும் வேலை இருக்கிறது.

    என்ன, நகத்திற்கு வண்ணம் பூச வேண்டுமா?

    இந்த மொக்கைக்கெல்லாம் சிரிக்க முடியாது.

    உனக்கு என்ன வாங்கி வரட்டும்?

    நூறு காரட்டில் ஒரு வைரம் வாங்கி வாயேன்!

    நூறு காரட் வேண்டுமானால் வாங்கி வருகிறேன்

    பழைய ஜோக். முடிக்கிறேன். உனக்கு கோணல் மூஞ்சி ஸ்மைலி கூடகிடையாது... போ! என்று அனுப்பிவிட்டு போனை மூடினாள் அவள்.

    டாக்ஸி அடையாறு போய்ச் சேர்வதற்குள் அவள், அவள் என்று சொல்லப்படும் அவளைப்பற்றி சில வரிகள்... .

    ஒப்பனை அதிகமில்லாமலேயே கொஞ்சம் அழகிதான். விளம்பரப் பெண்களுக்குப் போல 360 டிகிரியிலும் அலை பாயும் கூந்தல். காஜலால் அடிக்கோடிடப்பட்ட பளபள பூனைக் கண்கள். சற்றே சாயம் போன சிவப்பில் மூக்குக்குக் கீழே இன்னொரு பளபள ஜோடி. அந்த உதடுகள் திறந்தால் வசீகரிக்கும் வரிசை தவறாத முத்துப் பற்கள் எந்தக் கடையில பேஸ்ட் வாங்கறிங்க? என்று விசாரிக்கத் தூண்டும். கொப்புளிக்கத் தயார் நிலை போல உப்பிய, மாருதியின் ஓவியப் பெண்ணின் கன்னங்கள். காதுகளில் ஊசலாடும் பிளாட்பாரத்தில் வாங்கின லாலிபீலி. கழுத்தில் லென்ஸ் வைத்துப் பார்த்தால் கண்டுபிடிக்க முடிகிற ஒல்லியான தங்கச் செயின். அதன் டாலராகத் தொங்கும் காதல் சின்னம். ஒரு கையில் வாட்ச். மறு கையில் டிராகன் டாட்டூ. இன்னொரு டாட்டூ இருக்கிறது அவள் குளிக்கும் போது மட்டுமே பார்க்க முடிகிற இடத்தில். அவள் பெயர் விபுலா.

    அடையாறில் இந்திரா நகரில் 28ஆவது தெருவுக்கு கூகுள் மேப் பார்த்துக்கொண்டு வழி சொன்னாள்.

    வர்ஷா சொன்ன அடையாளப்படி தல பில்லா அஜித் ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து நான்காவது தனி வீட்டின் வாசலில் முருங்கை மரமிருந்தது. சின்ன கேட் திறந்து நுழைந்தால் இரண்டு வரிசைகளில் காவலுக்கு நிற்பவர்கள் போல் தொட்டிச் செடிகள். மூன்றாவது தொட்டிக்கடியில் பேசிக்கொண்டபடி சாவி இருந்தது.

    உள்ளே வந்ததும் தரையில் ரத்தவெள்ளத்தில் கிடந்தவளைப் பார்த்து அவள் 'ஆ! ' என்று அலறவில்லை .

    மாறாக... லக்கேஜ்களை வைத்துவிட்டு விரல் விரலாக நெட்டி முறித்து விட்டுப் போன் செய்து,வந்துட்டேன் கேப்டன்... இப்பதான்... இன்னும் இல்லை... ஆமாம்... தெரியும்... அப்படியா?.. அது சுலபம்தான்... எப்போ?... சரி... சொல்லுங்க... நான் யாரை சுடணும்? என்றாள்.

    2

    ஹெட்போன் மாட்டி ஏடிசியை அழைத்து முதலில் தன் புனைப் பெயரான அக்னி புத்திரனைச் சொல்லி குரல் தெளிவாகக் கேட்கிறதா என்று ஆங்கிலத்தில் கேட்டான் அவினாஷ்.

    கண்ட்ரோல் டவர் ஆமோதித்த பிறகு, agniputhiran requests the ground run at bay number 4 என்றான்.

    Ground run approved. Temperature 24 degree. Report on entering runway என்று சொல்லப்பட்டதும் அருகில் கோ பைலட்டுக்கு கட்டை விரல் உயர்த்திக் காட்டினான்.

    கட்டை விரலில் இரண்டு முற்றுப் புள்ளிகள், ஒரு படகு மாதிரி கவிழ்ந்த பிராக்கெட் கொண்டு பால் பாயிண்ட் பேனாவால் வரையப்பட்டிருந்த ஸ்மைலியைப் பார்த்து புன்னகைத்தான் கோ பைலட்டான ஜீனோ.

    என்ஜின்களை ஸ்டார்ட் செய்தான் அவினாஷ். தங்கள் முன்னாலும் தலைக்கு மேலும் பரவியிருந்த அத்தனை தகவல் ஏந்திகளிலும் பாராமீட்டர்களைச் சோதித்தார்கள்.

    ஜீனோ சிலுவைக் குறி போட்டு உதட்டைத் தொட்டுக் கொள்வதை கவனித்தபடி அந்த வானத்தின் ராணி என்றழைக்கப்படும் போயிங் 747 ஜம்போ ஜெட் விமானத்தை ஓடு பாதையில் செலுத்தினான் அவினாஷ்.

    ஹேய் லுக்! என்றான் ஜீனோ ஆயில் என்ஜின் பிரரின் அளவைப்பார்த்து.

    என்ன.. நூத்தி அஞ்சிதானே? பரவால்ல.. சம் டைம்ஸ் ஹேப்பன்ஸ்.. குறைஞ்சிடும். பயப்படாதே.

    சில விநாடிகளில் அழுத்தம் பத்து புள்ளிகள் குறைந்துவிட... வேகம் கூட்டி காற்றில் சாய்வுக் கோணத்தில் எழுப்பி மேலே மேலே என்று அந்த விமானத்தைப் பறக்க வைத்து சமநிலைக்கு வந்தும் தானியங்கியில் போட்டுவிட்டு ஒரு சாக்லேட் எடுத்துப் பிரித்தான் அவினாஷ்.

    கில்லாடி பாஸ்.. நான் உங்க சீட்ல இருந்தா அவசரப்பட்டு என்ஜினை கட் பண்ணிட்டு ரிப்போர்ட் பண்ணிருப்பேன்

    ஒம்போது வருஷம் ஜீனோ... எட்டாயிரம் ஃபிளையிங் ஹவர்ஸ் தாண்டியாச்சு. அதுல ரெண்டாயிரம் நைட் ஃபிளையிங். இந்த அனுமானம் வரலைன்னாதான் வருத்தப்படணும். சாக்லேட்? ஆமாம்... எதுக்கு சிரிச்ச?

    நீட்டியதை வாங்கிக் கொண்டு ஜீனோ, ஸ்மைலி அழகா இருந்திச்சி. அதுக்குதான்... தீபு வரைஞ்சதுதானே?

    ஆமாம். அக்காப் பொண்ணு. செம வாலு. இப்பதான் எல்.கே.ஜி போறா. என்னமா பேசறா... அன்னிக்கு மழை குறைஞ்சிடுச்சின்னு பேசிட்டிருந்தோம்.மாமா, தினம் மேகத்தைத் தொட்டுக்கிட்டுதானே பறக்கறிங்க, அதுகிட்ட சொல்லக் கூடாதான்னு கேட்டா.."

    இப்ப முட்டாள் குழந்தையே பொறக்கறதில்லை பாஸ். எல்லாம் ஐன்ஸ்டின் ஐ.க்யூவோடதான் பேசுதுங்க. இன்னிக்கு பாஸன்ஜர்ஸ் லிஸ்ட் பார்த்திங்களா பாஸ்? பாதி ஃபிளைட் காலி.

    என்ன வேர்ல்ட் கப் கிரிக்கெட்டா?

    அதான் முடிஞ்சிடுச்சே... தோத்துட்டோம்

    அப்படியா? நான் ஸ்போர்ட்ஸ் பேஜை அப்படியே தாவிடுவேன். போன வாரம் என் ஃபிளைட்ல யார்கிட்டயோ பத்து பாஸன்ஜர்ஸ் செல்ஃபி எடுத்துட்டு இருந்தாங்க. விராத் கோலின்னாங்க.

    மை குட்னெஸ்! அன்னிக்கு உங்களோட நான் வராமப் போயிட்டனே. நானும் எடுத்திருப்பேன். பிக் ஃபேன் பாஸ்

    எதுக்கு கிரிக்கெட்காரன், சினிமாக்காரன் பின்னாடி ஓடறிங்க? ஏதோ புகை அடிச்சி கொசு ஒழிக்கிற மாதிரி வறுமையை ஒழிக்கிறதுதான் ஒரே லட்சியம்னு சொல்லி தலையில் கிரீடத்தை வெச்சிக்கிட்டு வர்ற எல்லா உலக அழகியும் உடனே பத்து காஸ்மெட்டிக் கம்பெனிக்கு தூதராயிடறா. அதுல ரெண்டு ஸ்டில் பார்த்து நடிக்கிறியாம்மான்னு கேட்டதும் சினிமால தொபக்கடீர்னு குதிச்சிடறாங்க. அப்பறம் வறுமையை எங்க ஒழிக்கிறது? ஸ்போர்ட்ஸ் ஆளுங்களை மரியாதைக்கு எம்.பி ஆக்கினா எப்பவாச்சும் பார்லிமெண்ட்டுக்கு போயி ஹாய் ஹாய் சொல்லிட்டு ஒரு கேள்வியும் கேக்காம வந்துடறாங்க

    பாஸ்... பார்லிமெண்ட் கான்ட்டீன்ல பட்டர் சிக்கன் சூப்பரா இருக்குமாம். முப்பத்தி ஏழு ரூபாதானாம்

    ஆமாம். சப்பாத்தி ஒரு ரூபா. டீ ஒரு ரூபா. பாவம்.. ஏழைங்க வந்துபோற இடமில்லையா?

    எதுக்கு செலிபரிட்டீஸ் மேல இவ்ளோ கோபம்?

    செலிபிரிட்டி யாருன்னு மக்களுக்குத் தெரியலையேன்னுதான் கோபம். சியாச்சின்ல மைனஸ் பதினஞ்சி டிகிரி குளிர்ல விரலையெல்லாம் காவுகுடுத்துட்டு துப்பாக்கியோட நிக்கிறான் பாரு... அவனோட ஏன் செல்ஃபி எடுத்துக்க மாட்டேன்ற?

    செல்ஃபியை விடுங்க பாஸ்.. மிலிட்டரிக்காரன்னா பொண்ணு குடுக்கமாட்டேங்கறான் பாஸ்.. ஏன்.. நமக்கும் அந்த அவஸ்தை இருக்கே ..

    உனக்கு என்ன பிரச்சினை? அதான் ரெஜினாவை கரெக்ட் பண்ணிட்ட போலிருக்கே?

    பாஸ்... சட்டையைக் கொஞ்சம் கழட்டுங்க

    எதுக்கு?

    பிரம்மா உங்க முதுகுல எக்ஸ்ட்ராவா ஒரு கண்ணு வெச்சி அனுப்பிச்சிருக்காரான்னு செக் பண்ணணும்

    அவளைப் பார்க்கறப்பா உன் கண்ணுல பாப்பா சொட்டு மருந்து போடாமயே டயலேட் ஆகுதே... இதைப் பாக்கறதுக்குமுதுகுல ஒரு கண்ணு வேணுமா? என்ன சொல்றா?

    கல்யாணத்துக்கப்பறம் வேலையை விட்ருவாளாம்.

    பத்து பெத்துக்கணும்னு லூசு மாதிரி டயலாக் அடிக்கிறாளா?

    நீங்க வேற... பெத்துக்கவே மாட்டாளாம். தத்தெடுத்துக்கணுமாம்.

    சென்செக்ஸ் சரிஞ்சா கவலைப்படணும். முன்னழகு சரிஞ்சா என்ன?

    அதில்லை . பயம்! அவங்க பரம்பரையில் பிரசவத்தப்போ மூணு பேர் செத்திருக்காங்களாம்

    ரிடிகுலஸ்... நான் பேசறேன்

    முதல்ல அவங்க அப்பாகிட்ட பேசுங்க பாஸ்

    என்னாச்சு, வில்லனாயிட்டாரா? என் பொணத்து மேல் நடந்து போன்றாரா?

    என்னைப் பொணமாக்கிடுவேன்றாரு

    ஒரே மதத்துலயும் என்னப்பா பிரச்சினை?

    ஸ்டேட்டஸ்! என்னால விமானத்தை ஓட்டத்தான் முடியும். அவர் நினைச்சா விமானத்தை தயாரிக்கவே முடியும் பாஸ்!

    இதெல்லாம் விசாரிச்சிக்கிட்டு அப்பறம் ப்ரப்போஸ் பண்ணித் தொலைச்சிருக்கலாமில்ல? ஒரேப் பொண்ணு! கரெக்ட்டா?

    எப்படி பாஸ்?

    இதானே எழுதப்படாத கதை இலக்கணம்! அப்பறம் எதுக்கு விமானத்துல ஜூஸ் குடுத்துக்கிட்டிருக்கா?

    சின்ன வயசுலேர்ந்து ஆசை!

    என்ன செய்யப் போறே? திருட்டுக் கல்யாணமா?

    அவங்கப்பன் ஏழு நாய் வளர்க்கறான் பாஸ்.. முக்காலடிக்கு நாக்குவெளில் தொங்குது. என்னை டிஃபன் சாப்ட்ரும் பாஸ்.

    அழுவறியா என்ன? நான் இருக்கேன் ஜீனோ. பார்த்துடலாம்.

    ***

    விமானத்தை சென்னையில் பத்திரமாக இறக்கியதும் ஏர்லைன்ஸ் அலுவலகம்

    Enjoying the preview?
    Page 1 of 1