Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mudhal Kural
Mudhal Kural
Mudhal Kural
Ebook226 pages1 hour

Mudhal Kural

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வீட்டில் எந்தக் காயும் நிறைய இல்லாமல், கொஞ்சம் கொஞ்சம் எல்லாக் காயும் இருந்தால் அவியல் செய்வார்கள். சில நேரங்களில் அவியலின் சுவை அபாரமாய் இருக்கும். இந்தத் தொகுப்பும் அவியல் மாதிரி. பல்வேறு சுவைகள்.

ஆரம்ப காலங்களில் நான் எழுதிய கதைகள். அந்தக் கதைகளை இப்போது படிக்கும்போது - அந்த நாட்களில் வீடு, அலுவலகம், சின்னக் குழந்தை என்று நான் ஓடிய ஓட்டத்தை இப்போது காண முடிகிறது. இப்போதும் அந்த ஓட்டம் தொடர்கிறது என்றாலும், காலம் சில விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுத்து அமைதிப்படுத்தி விடுகிறது அல்லவா... அந்த அமைதியோடு கதைகளை மறுவாசிப்பு செய்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 13, 2022
ISBN6580109108476
Mudhal Kural

Read more from Bharathi Baskar

Related to Mudhal Kural

Related ebooks

Reviews for Mudhal Kural

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mudhal Kural - Bharathi Baskar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முதல் குரல்

    Mudhal Kural

    Author:

    பாரதி பாஸ்கர்

    bharathi baskar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bharathi-baskar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    என்னுரை

    கட்டுரைகள்

    1. முதல் குரல்

    2. ஐஸ் ஹவுஸ் நினைவுகள்

    3. பாடிப் பறந்த நீலக்குயில்

    4. லெக்கின்ஸ் மகாத்மியம்

    5. நீங்க பாடுங்க தம்பிகளா...

    6. தீம்தரிகிட தீம்தரிகிட

    7. இலக்கியத்தில் நல்லாட்சி

    8. ஆடி வெள்ளி தேடி உன்னை

    9. சின்னஞ்சிறு கிளியே

    கதைகள்

    1. பூப்போல பூப்போல

    2. மெய்த் திருப்பதம் மேவு

    3. அக்கினிக்குஞ்சு

    4. 1-2-3-4-1

    5. வெங்கட் மற்றும் விக்ரம்

    6. அப்பா என்னும் வில்லன்

    7. ஒரு கடிதம் இன்னொரு கடிதம்

    8. நரிகள்

    9. பெற்றவள் பற்றிய குறிப்புகள்

    பதிவுகள்

    1. நேரம் நம் கையில்

    2. வெற்றிக்கான முதல் ஸ்டெப்

    3. அலுவலகத்தில் பெண்கள் அழலாமா?

    4. ஆண் துணை

    5. ஜெயித்துக் காட்டுங்கள்

    6. பெண் என்பதாலேயே சலுகை எதிர்பார்க்கலாமா?

    7. நடந்ததையே நினைத்திருந்தால்

    8. ஊரே அழுகிறது... தெருவே அழுகிறது...

    சமர்ப்பணம்

    ‘வாழ்வின் அத்தனை அபூர்வங்களும் எளிமையில் உள்ளது’ என்று தன் வாழ்வினால் எனக்குச் சொல்லிக் கொடுத்த

    அம்மாவுக்கு,

    வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடச் சொல்லிக் கொடுத்த

    சித்திக்கு

    என் அம்மாவுக்கும் எனக்கும் அம்மாவாக இருந்த என்

    அத்தைக்கு...

    அம்மா திருமதி கல்பகம்

    சித்தி திருமதி சம்பூர்ணம்

    அத்தை திருமதி லக்ஷ்மி

    என்னுரை

    வீட்டில் எந்தக் காயும் நிறைய இல்லாமல், கொஞ்சம் கொஞ்சம் எல்லாக் காயும் இருந்தால் அவியல் செய்வார்கள். சில நேரங்களில் அவியலின் சுவை அபாரமாய் இருக்கும். இந்தத் தொகுப்பும் அவியல் மாதிரி. பல்வேறு சுவைகள்.

    ‘பேச்சு மேடைகளில் முதல்முதலாய் ஒலித்த குரல் யாருடையது?’ என்று நான் தேடி அலைந்து, கண்டுபிடித்த சரஸ்வதி பாய் அவர்களைப் பற்றிய கட்டுரை, எம்.எஸ். அம்மா பற்றிய சில சிந்தனைகள், தமிழ் இலக்கிய அதிசயங்களைப் பற்றி... என்று வேறு வேறு கட்டுரைகள், தினமலர், அமுதசுரபி, தினமணி, குமுதம் சினேகிதி இவற்றில் வெளியானவை இந்தக் கட்டுரைகள்.

    ஆரம்ப காலங்களில் நான் எழுதிய கதைகளை ‘கல்கி’யும், ‘அமுதசுரபி’யும் தொடர்ந்து வெளியிட்டன. அந்தக் கதைகளை இப்போது படிக்கும்போது - அந்த நாட்களில் வீடு, அலுவலகம், சின்னக் குழந்தை என்று நான் ஓடிய ஓட்டத்தை இப்போது காண முடிகிறது. இப்போதும் அந்த ஓட்டம் தொடர்கிறது என்றாலும், காலம் சில விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுத்து அமைதிப்படுத்தி விடுகிறது அல்லவா... அந்த அமைதியோடு கதைகளை மறுவாசிப்பு செய்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

    வேறு வேறு அலுவலகங்களில் வேலை செய்யும் என் தோழிகளோடு நான் பகிர்ந்து கொண்ட சில பதிவுகள், அலுவலகம், வீடு என்று ரெட்டைச் சுமை சுமக்கும் பெண்களுக்காக எழுதுவதுபோல், எனக்கு நானே சொல்லிக் கொண்டவை. இவை என் வலைப்பூவிலும், குமுதம் சிநேகிதி பத்திரிகையிலும் வெளிவந்தவை.

    ‘காலை எப்போது வரும் என்று ஒவ்வொரு கதவாய்த் தட்டிப் பார்க்கிறேன்’ என்றாராம் எழுத்தாளர் எமிலி டிக்கின்ஸன். வாழ்நாள் முழுதும் தன் எழுத்துக்களை வெளிக்கொண்டுவரப் போராடிய பெண்மணி அவர். எமிலியின் கஷ்டங்களை என்னை உணரவிடாது உதவி செய்த தினமலர், குமுதம், அமுதசுரபி மற்றும் அத்தனை பத்திரிகை அன்பர்களுக்கும், திரு. சொக்கலிங்கம் அவர்கள் தன்னைச் சுற்றி அன்பு விதைகளை தூவிக்கொண்டே இருக்கும் அருமையான மனசுக்குச் சொந்தக்காரர். நாற்பது வருஷங்களாக அவர் செய்து வரும் பணி மேலும் சுடர்விட என் வாழ்த்துகள். என் எல்லாப் புத்தகங்களுக்கும் பின் இருந்து என் பணிகளுக்கு உதவி செய்யும் என் குடும்பத்தினருக்கும் என் நன்றி.

    அன்புடன்,

    பாரதி பாஸ்கர்

    13 மே, 2016

    சென்னை, கோபாலபுரம்.

    கட்டுரைகள்

    1. முதல் குரல்

    நான் கணவருடனும் குழந்தைகளுடனும் எப்போதாவது வெளியே போகும்போது, சில நெருடல்கள் நிகழும். தொலைக்காட்சி அறிமுகத்தில் என்னை அடையாளம் கண்டுகொண்ட சிலர் அருகே வந்து பேசத் தலைப்படுவர். பெரும்பாலானவர்கள், ‘மேடம், சூப்பரா பேசறீங்க...’ போன்ற தொல்லை அற்ற கமென்டுகளுடன் விலகி விடுவர். மிகச் சிலர் குறிப்பாக ஆண்கள் என்னுடன் பேசத் தயங்கி - ‘பொது இடங்களில் ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது’ என்கிற சம்பிரதாயத் தயக்கமோ என்னவோ - என் கணவருடன் பேசமுற்படுவர். ‘சார், மேடையில் இப்படி பாயிண்ட் பாயிண்டா பேசறாங்களே, வீட்டில் எப்படி சார் சமாளிக்கறீங்க?’ என்று கேட்டுவிட்டுத் தங்களின் நகைச்சுவைக்காகப் பெரிதாக தாங்களே சிரிப்பர். என்னை மடக்கி விட்டதாக நினைப்பு! ஆரம்பத்தில் எல்லாம் என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்த என் கணவர் போகப் போக பழகி, இப்போதேல்லாம் முகத்தை ரொம்ப சீரியஸ் ஆக வைத்துக்கொண்டு, ‘ஆமால்ல, என்ன பண்ணலாம் சார்?’ என்று அவரிடமே யோசனை கேட்கிறார். வந்தவர் கொஞ்சம் தடுமாறி, ‘அவசரமா கரண்ட் பில் கட்டணும், அப்புறம் பாக்கலாம் சார்’ என்று கிளம்பும் வரை ‘எதாவது யோசனை சொல்லுங்க சார்’ என்று இவர் நச்சரிக்க ஆரம்பிக்கிறார்.

    பெண்கள் மேடையில் பேசுவது என்பது இப்போதே இப்படி விமரிசிக்கப்படுகிறது என்றால், முதலில் மேடை ஏறிப் பேசின பெண் யார்? அவர் எப்படி இதையெல்லாம் எதிர்கொண்டார்? ஒரு கூட்டத்தை எதிர் நின்று பேசிய முதல் அனுபவம் எந்தப் பெண்ணுக்குச் சொந்தமானது? அவர் எப்படி சமாளித்தார். என் தேடல் துவங்கியது.

    முதல் பெண் டாக்டர் யார்? (ஆனந்தி கோபால் ஜோஷி), முதல் பெண் CA? (ஸ்ரீமதி சிவபோகம்), முதல் பெண் எஞ்சினியர்? (மே ஜார்ஜ்!...) எல்லாத் தகவல்களும் கிடைத்தன. முதல் பெண் பேச்சாளர் யார் எனத் தெரியவில்லை. எங்கள் நடுவர் சாலமன் பாப்பையா சாரிடம் விசாரித்தேன். 50களில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பெண் பேச்சாளர்களைப் பற்றிச் சொன்னார். அவர்களின் பயணங்கனை, பயண வசதி இல்லாத காலங்களில் அவர்கள் பட்ட கஷ்டங்களை, வெளியில் பெண் விடுதலை பேசும் ஆண் புரட்சியாளர்கள் வீடுகளிலும் கூட பெண் பேச்சாளர்கள் ஒடுக்கப்பட்ட கதைகளைச் சொன்னார்.

    அதற்கு முன்?

    அந்தக்கால நாவலாசிரியரும் ஜகன் மோகினி பத்திரிகையின் ஆசிரியரும் ஆன கோதைநாயகி அம்மாள் மிகச்சிறந்த பேச்சாளராக இருந்திருக்கிறார். கோதைநாயகி சீக்கிரமே கதைகள் எழுத வந்தாலும் மேடையில் பேச ஆரம்பித்தது 40களில்தானே...

    அவருக்கு முன்?

    ரொம்ப யதேச்சையாக என் தோழி கே. பாரதி அவர்கள் ஒரு பழைய கல்கி கட்டுரையை அனுப்பி வைத்தார்.

    சரஸ்வதிபாய் என்கிற பிராமண சமூகத்துப் பெண் ஒருவர் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய ஹரிகதை மேடைகளில் முதல் பெண்ணாய் ஒளிவிட்டுப் பிரகாசித்தது பற்றிய கல்கியின் கட்டுரை அது சரஸ்வதி பாய் அவர்களுக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, சமஸ்க்ருதம் என்று ஆறு மொழிகள் தெரியும் என்றும், இந்தியா முழுதும் பயணம் செய்து மேடைகளில் வெளுத்து வாங்கினார் என்றும் கல்கி எழுதுகிறார்!

    ஆஹா! கண்டுபிடித்து விட்டேனா - என் முன் ஏரை! சரஸ்வதி பாய் பற்றி மேலும் தேட ஆரம்பித்தேன். சென்னை நகரில் பணக்கார ஜட்ஜுகள் மற்றும் வக்கீல்களின் மனைவிகளுக்காக என்று இருந்த எழும்பூர் லேடீஸ் கிளப் ஒன்றில் பிரசித்தி பெற்ற ஜட்ஜி ஒருவரின் (ஜஸ்டிஸ் திரு. சங்கரன் நாயர்) மனைவியோடு, சிறு பெண்ணாக இருந்த சரஸ்வதி பாய் வருகிறார். பொழுது போக, அந்தப் பெண்ணை கதை சொல்லச் சொல்கிறார்கள். கதையோடு பாட்டும் பாடின அவளின் குரல் வளத்தையும் ஞானத்தையும் கண்டு அசந்து போகிறார்கள் அனைவரும். இப்படித்தான் ஆரம்பிக்கிறது முதல் மேடைப் பெண்ணின் பிரவேசம்,

    ஆண்டு 1904 ஆக இருக்கலாம். சரஸ்வதி பாயின் தாயும் குரு கிருஷ்ணாச்சார் என்பவரும் முனைந்து 17 வயது சரஸ்வதியை மயிலாப்பூரில் ஒரு மேடையில் ஹரிகதை செய்ய வைக்கிறார்கள். கேட்பவர்கள் சொக்கிப்போகும் குரல் சரஸ்வதிக்கு. இயல்பான புத்திசாலித்தனம் சுடர் விடும் கண்களும் கூட. ஆனால் ஹரிகதை என்பது ஆண்களின் கோட்டை அல்லவா? அதில் ஒரு பெண் நுழைவதா? ஆண்கள் முழு ஒற்றுமையுடன் செயல்பட்டனர். ‘பொம்பள சரிக்குசமமா நின்னு பேசறதா...’ என்று பிரசாரம் தூள் பறந்தது. அவர் பிறந்த ஜாதியில் இதுபோன்ற வழக்கமே இல்லாததால் அவரின் ஒழுக்கம் குறித்து ஏக விமரிசனங்கள்.

    பார்த்தசாரதி சுவாமி சபாவில் சரஸ்வதியைக் கூப்பிட்டு வாய்ப்பு கொடுப்பதாகத் தீர்மானம் செய்தபோது... மேடையில் ஹரி கதை சொல்லி வந்த ஆண்கள் எல்லோரும் சென்னை மயிலாப்பூரில் கூடி ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். ‘பெண் மேடையில் நிற்பதாவது... அப்படிப் பெண்களைக் கூப்பிடுகிறவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள். எந்த இடங்களில் பெண்களைக் கூப்பிடுகிறார்களோ, அங்கே இனிமேலே ஆண்கள் மேடையேற மாட்டார்கள். பெண்ணுக்குப் பக்கவாத்தியம் வாசிக்கிறவர்கள் இனிமேலே எங்களுக்கு வாசிக்க வேண்டாம்.’

    எல்லாவற்றையும் மீறி நிகழ்ச்சி நடந்தது. அவரின் ஹரி கதை விளம்பரங்கள் ‘முதல் லேடி பாகவதர்’ என்ற வாசகம் தாங்கிவர ஆரம்பித்தன.

    நாள் ஆக ஆக எதிர்ப்புகளும் வலுத்தன. இதன் இடையே சரஸ்வதி நாடெங்கும் போய் மேடையேற ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி என்று ஆறு மொழிகளில் உரையாற்றும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். புனே நகரில் அவரின் பிரசங்கம் மராத்தியில் நடந்தபோது லோகமான்ய திலகர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ‘கீர்த்தனபடு’ என்கிற பட்டத்தை வழங்கி இருக்கிறார்.

    தேவதாசி முறையின் அஸ்தமன காலங்கள் அவை. தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். அந்த சமூகப் பெண்களுக்கு அது பெரும் சவாலான காலகட்டமாக இருந்திருக்க வேண்டும். அவர்களை ஆதரிப்போர் அருகி வந்தனர். பலர் ‘சதிர்கச்சேரி’ என்னும் நாட்டியத்திலிருந்து வெளியேறி, சங்கீதத்திலும் ஹரி கதையிலும் நுழைந்தனர்.

    இப்படித்தான் மேடையில் பெண்கள் அரங்கேறினர். பிரபலமான பாடகியும் குரு தியாகய்யாவிற்கு கோயில் எழுப்பியவரும் ஆன பெங்களூரு நாகரத்தினம் அம்மாள், பன்னிபாய் போன்றோர் எல்லாம் சரஸ்வதியைத் தொடர்ந்து வந்தார்கள்.

    ஹரிகதைதான் இன்றைய பட்டிமன்றங்களுக்கும் பேச்சு மேடைகளுக்கும் முன்னோடி. பாடல்களுக்குப் பெரிய இடம் இருந்தாலும், ஹரிகதை என்பது பாடல் மட்டும் அல்ல - மேடை நிர்வாகம் பற்றிய அறிவு, சொல்வளம், இலக்கியங்களிலும் புராணங்களிலும் தேர்ந்த ஞானம் - எல்லாவற்றுக்கும் மேலாக நகைச்சுவை உணர்வு அத்தனையும் உள்ளவர் மட்டுமே ஹரிகதையில் பிரகாசிக்க முடியும்.

    கதாகாலட்சேபங்கள் ஒருபக்கம் நடக்க, மேடைகள் பாகவதர்களிடமிருந்து இலக்கியவாதிகள் கைகளுக்கு வந்தன. கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்கள் மேடை ஏறிப் பேசுவது பழக்கத்தில் வந்தது. விடுதலைப் போரில் பங்கேற்ற பெண்கள் - நாடக நடிகை ஜானகி அம்மாள், எழுத்தாளரும் பாடகியும் ஆன கோதைநாயகி, தியாகி அம்புஜம் அம்மாள் போன்றோரும் அதன்பின் மூவலூர் ராமாமிருதம் அம்மாள் போன்றோரும் மேடையேறினர். அவர்களைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் பேச்சாளர்கள்... பின்பு இலக்கிய மேடைக்கு வந்த பெண்கள்... மிக நீண்ட பயணம் இது.

    1950 - சரஸ்வதி பாய் தவிர்க்க முடியாத இடத்திற்கு வந்துவிட்டார். இலங்கையிலும் பர்மாவிலும் கூட அவரது கதைகள் நடந்தன என்றால் பாருங்கள்! சென்னை மியூசிக் அகாடமி அவரைக் கௌரவிக்க நினைத்தது. ஆனால்

    Enjoying the preview?
    Page 1 of 1