Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paal Tumbler
Paal Tumbler
Paal Tumbler
Ebook379 pages2 hours

Paal Tumbler

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமகாலத் தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் எழுதிய இருபத்தோரு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்தும் பிரபலமான தெலுங்கு மொழி இதழ்களில் வெளியாகி வாசகர்களின் பேராதரவைப் பெற்ற சிறுகதைகள். இவை ராஜி ரகுநாதனின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பில் கணையாழி, திசையெட்டும், சிநேகிதி, அக்ஷரா, சொல்வனம் ஆகிய பிரபல தமிழ் பத்திரிகைகளில் பிரசுரமாகி வாசகர்களின் பாராட்டை பெற்றன. இவை தெலுங்கு மொழிபேசும் பகுதிகளின் தன்மையை பிரதிபலிக்கும் சிறுகதைகள். புதுமையான திருப்பங்களைக் கொண்டு வாழ்வின் நுட்பங்களை உணர்த்தும் புனைவுகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு கதையும் சமூகத்தில் நிலவும் பலவிதமான பிரச்னைகளைச் சித்தரிக்கின்றன. புகழ்பெற்ற பெண் எழுத்தார்களான ஏழு தெலுங்கு கதாசிரியர்களின் பொறுக்குமணியான இருபத்தோரு சிறுகதைகளை மொழிமாற்றம் என்ற சுவடே தெரியாதவாறு அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் ராஜி ரகுநாதன். அனைவரும் பெண் எழுத்தாளர்கள் என்பது தனிச்சிறப்பு.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580142606731
Paal Tumbler

Read more from Raji Ragunathan

Related to Paal Tumbler

Related ebooks

Reviews for Paal Tumbler

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paal Tumbler - Raji Ragunathan

    https://www.pustaka.co.in

    பால் டம்ளர்

    Paal Tumbler

    Author:

    ராஜி ரகுநாதன்

    Raji Ragunathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/raji-ragunathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இரு மொழி தேவதைகள்

    1975 ல் திருமணமாகி ஹைதராபாத் வந்தபோது சுந்தரத் தெலுங்கு என்னை வரவேற்றதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் என்னைப் பெண் பார்க்க வந்தபோதே என் கணவர் முப்பது நாட்களில் தெலுங்கு மொழி என்ற நூலை கொண்டு வந்து கொடுத்தார். திருமணத்திற்கு இருந்த அந்த இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் அந்த புத்தகத்தை முழுவதுமாகப் படித்து விட்டேன். தேர்வு வைத்தால் எழுதி நூறு மார்க் வாங்கியிருப்பேன். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாது. ஏனென்றால் மொழி வளர வேண்டுமென்றால்... மொழியில் பேசும் திறமை வர வேண்டுமென்றால் அந்த மொழி காதில் விழுந்து கொண்டே இருக்க வேண்டும். ஹைதராபாத் வந்த பின்பு தெலுங்கு மொழி காதில் கேட்டுக் கொண்டே இருந்ததால் எனக்கு விரைவில் பேசுவதற்கு வந்துவிட்டது.

    ஆரம்பத்தில் மட்டுமல்ல. இப்போது கூட தெலுங்கு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை எப்போதும் என் மனம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கும். வியந்து கொண்டே இருக்கும். ஒரே சொல் இருக்கும். ஆனால் வேறு பொருளோடு விளங்கும். உதாரணத்திற்கு ‘ஓடிப் போனான்’ என்றால் தமிழில் ‘விரைந்தோடிப் போய்ட்டான்’ என்ற பொருளில் வரும். ஆனால் தெலுங்கில் ‘ஓடிப்போயாடு’ என்ற வார்த்தை ‘தோற்றுப்போனான்’ என்ற பொருளில் வரும்.

    அதே போல் அண்டை அயலார் பேச்சுவாக்கில் தெலுங்கில் ஏதாவது பழமொழி கூறினார்கள் என்றால் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளை என் மனம் தேடும். அதை கண்டுபிடித்து மகிழ்ச்சியடையும். இதுபோல் என்னுள் இந்த சொல் விளையாட்டு தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. தொடக்க நாட்களில் தெலுங்கு பழமொழிகளின் இடத்தில் அதற்கேற்ற தமிழ்ப் பழமொழிகளை இட்டு மொழிபெயர்த்தேன். பின்னர் அந்த தெலுங்குப் பழமொழிகளை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால் புதுப் பழமொழிகளும் வழக்குச் சொற்களும் தமிழுக்குக் கிடைக்கும் என்று எண்ணி அது போல் செய்கிறேன். இது புதுமையாகவும் தேய்மொழிகளைத் தவிர்ப்பதாகவும் இருப்பதால் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

    நாங்கள் ஹைதராபாத் டாக்டர் ஏஎஸ் ராவ் நகரில் மகிழ்ச்சியாக வசிக்கிறோம். என் கணவர் பணிபுரிந்த ஈசிஐஎல் என்ற எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை மும்பையிலிருந்து ஐதராபாத் எடுத்துவரப் போராடி வெற்றியும் கண்ட டாக்டர் ஏஎஸ் ராவ் அவர்களை அனுதினமும்   நன்றியோடு நினைவுகூர நாங்கள் தவறுவதில்லை. ஓய்வூதியம் கிடையாது என்ற குறையைத் தவிர இந்த அலுவலகம் வேறு எந்த குறையையும் எங்களுக்கு வைக்கவில்லை. நாங்கள் இங்கே வந்து சொந்த வீடும் கட்டிக் கொண்ட பின் இந்த மண்,  இந்த நீர்,  இந்த மக்கள்,  இந்த பயிர்கள் எங்களை சுகமாக வாழ வைக்கின்றன. அதற்கான நன்றியுணர்வு மேலெழ, தெலுங்கு மொழியை விடாமுயற்சியோடு நானாகவே விரும்பி கற்றேன். அப்பொழுது டிவி வந்த புதிது. டிவியில் தெலுங்கில் ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுக்கும் குழந்தைகள் நிகழ்ச்சி இருந்தது. அதைப் பார்க்க நான் கட்டாயம் அமர்ந்து விடுவேன். பள்ளியில் எங்கள் இரு மகன்களும் மூன்றாவது மொழியாக இரு ஆண்டுகள் தெலுங்கு  மொழியை எடுத்துப் படித்ததால் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் விதமாக என் மொழியறிவு மேலும் வளர்ந்தது. ஆன்மீக நூல்களை வாங்கிப் படித்து சிலவற்றை எழுதியெழுதிப் பார்த்து என் மொழி வளர்ந்தது. யாரிடமும் சென்று நான் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தெலுங்கில் ஏதாவது ஐயம் ஏற்பட்டால் என் தெலுங்குத் தோழிகள் எனக்கு அன்போடு உதவுகிறார்கள். அவர்கள் என் உற்சாகத்தை பார்த்து வியப்பார்கள். அதனால் எனக்கு தெலுங்கில் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதில் எந்த கடினமும் ஏற்பட்டதில்லை. ஆனால் ஒரே ஒரு சிரமம் என்னவென்றால் தெலுங்கு மொழியும் சரளமாகப் பரிச்சயம் ஆகிவிட்டதால் சில நேரங்களில் தெலுங்குச் சொற்களே தமிழ் போன்று தோன்றிவிடுகிறது. பிற மொழிபெயப்பாளர்களுக்கும் இது போன்ற மாயத் தோற்றம் ஏற்படக்கூடும் என்றே கருதுகிறேன்.

    நான் ஆரம்பத்தில் சின்னச் சின்னதாக பலருக்கு சிறு நூல்களும் பத்திகளும் மொழிபெயர்த்து கொடுத்திருந்தாலும், முதலில் பத்திரிகையில் வெளிவந்தது பிரம்மஶ்ரீ டாக்டர் சாமவேதம் சண்முக சர்மா அவர்களின் ஆன்மீக கட்டுரைகளின் மொழி பெயர்ப்புதான். ஶ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளிவந்தன. அதன்பின் அதைப்பற்றி ஶ்ரீசண்முக சர்மா அவர்களிடம் தெரிவித்தபோது அவர் ‘ஏஷ தர்ம: சனாதன:’ என்ற அவருடைய பெரும் கட்டுரைத் தொகுப்பு நூலைக் கொடுத்து தமிழில் மொழிபெயர்க்கும்படி பணித்தார். அறுநூறு பக்கங்களுக்கு மேல் தமிழில் அதை மொழிபெயர்த்து கொடுத்தேன். அதை 2016ல் அவர்களுடைய ருஷிபீடம் பதிப்பகம் வெளியிட்டது. அது மிகச் சிறந்த நூலாக வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெறுகிறது. அதைப் போலவே ருஷி வாக்கியம் என்று 108 கட்டுரைகள் பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முகசர்மா அவர்களின் உபன்யாசத்தில் இருந்து எடுத்து மொழியாக்கம் செய்து எழுதினேன். அவை தினம் ஒன்றாக தொடராக திரு செங்கோட்டை ஶ்ரீராம் அவர்களின் தினசரி டாட் காமில் வெளிவந்தன. திருமதி.லதா ரவிசந்திரன் நடத்தும் ‘மதுரமுரளி' தெலுங்கு மாத இதழுக்காக பத்து ஆண்டுகளாக ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் ஆன்மீக உரைகளை தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளித்து வருகிறேன். திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி என் தெலுங்கு மொழி விரிவுரையோடு ருஷீபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்து தெலுங்கு மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. டாக்டர் சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் சமாதானம் என்ற ஆன்மீகக் கேள்வி பதில் இரண்டு பாகங்களையும் தமிழில் மொழிபெயர்த்து வருகிறேன். மேலும் சிலர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களின் நூல்களையும் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டுள்ளேன். ஆன்மீகக் கட்டுரைகள், சமூகக் கதைகள் மட்டுமல்ல. ஒரு க்ரைம் நாவல் கூட மொழிபெயர்த்திருக்கிறேன். 2018ம் ஆண்டுக்கான திருப்பூர் சக்தி விருது என் மொழிபெயர்ப்பு பணிக்குக் கிடைத்தை பெருமையாகக் கருதுகிறேன்.

    1988, 89, 90 களில் நான் எழுதிய சுமார் 30 சிறுகதைகள் குமுதம், கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், மங்கையர் மலர், கணையாழி முதலிய முன்னணி தமிழ் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. கணையாழி தி ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டி 1989-90 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு கதைகளுள் எழுத்துலக ஜாம்பவான்கள் ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், பாவண்ணன் போன்றோர் கதைகளோடு சேர்ந்து ‘அறிவு தோற்க வேண்டும்’ என்ற என் கதையும் தேர்வானதை மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன். கணையாழி களஞ்சியம் பாகம் 3 ல் நான் எழுதி கணையாழி செப்டம்பர் 1989ல் வெளியான ‘வேப்பமரத்தை வெட்டிய போது..." என்ற கதை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த சிறுகதைகளுக்கான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

    முதலில் நிறைய நிறைய சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த எனக்கு நடுவில் இருபது வருடம் இலக்கிய அஞ்ஞாதவாசம் நேர்ந்தது. நீண்ட காலம் கதை எழுதுவதைக் கைவிட்ட காரணத்தால் சிறுகதை தேவதை என் மேல் ஏமாற்றமும் சினமும் கொண்டுவிட்டதாகக் காண்கிறது. மங்கையர் மலரில் 2015ல் ஆறுதல் பரிசு வென்ற ‘தாய் மண்ணே வணக்கம்’ தான் இரண்டாவது இன்னிங்சில் நான் எழுதிய முதல் கதை. அதன் பிறகு எனக்குச் சிறுகதை கைகூடி வர மறுக்கிறது.

    என்னுடைய மொழிபெயர்ப்பு எப்படி அமையும் என்றால் மூல எழுத்தாளர் கூறும் எந்த ஒரு அம்சத்தையும் சொல்லையும் விட்டுவிட மாட்டேன். அப்படியே அதை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக தமிழில் எழுத வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அது போல் எழுத முடிவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களே தமிழில் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன். இதனை பெருமைக்காக கூறவில்லை. மனத் திருப்தியோடு சொல்கிறேன். தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. விரும்பிச் செய்கிறேன். இந்த தொகுப்பிலுள்ள கதைகளை வெளியிட்ட தமிழ் இதழ்களின் ஆசிரியர்களும் மொழிபெயர்ப்பு தெளிவாக, சீராக உள்ளதாக பாராட்டினார்கள். பிற மொழியிலிருந்து செய்த மொழிபெயர்ப்பு போலவே இல்லை. அசல் தமிழில் எழுதியது போலவே உள்ளது என்று தெரிவித்து மேலும் எழுதுவதற்கு உற்சாகப்படுத்தியுள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    என்னைப் பொறுத்தவரை 'எழுத்தாளர்' என்பது ஒரு உத்தியோகம் அல்ல. ஏனென்றால் அதில் வருமானம் இல்லை. அது ஒரு தகுதி. நான் பிஏ படித்திருக்கிறேன் என்று கூறிக் கொள்வது போல் நான் ஒரு எழுத்தாளன் என்று கூறிக் கொள்ளலாம். அவ்வளவுதான். அதிலும் மொழிபெயர்ப்பு என்பது தமிழ் இதழ் சூழலில் சற்றும் மதிக்கப்படுவதில்லை என்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன். ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய இலக்கியப் பத்திரிகைகளைத் தவிர யாரும் மொழிபெயர்ப்பு கதைகளை வெளியிட முன்வருவதில்லை.

    ‘பால் டம்ளர் - தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்' என்ற இந்த நூல் வெளிவருவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது என் பல நாள் கனவு. இந்த 21 மொழிபெயர்ப்புக் கதைகள் தமிழ் இதழ்களில் வெளிவந்ததில் எனக்கு கிடைத்த மொழியின்பத்தையே பிரதானமாகக் கருதி எழுதினேன். எதையும் எதிர்பார்த்து செய்யாவிட்டாலும் மொழிபெயர்ப்பும் மதிக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கம் என்னுள் உள்ளது. ஆனால் பொருளாதாரத்தை தாண்டிய நன்றி உணர்வு என்னுள் மிகுந்து உள்ளது என்பதை உணர்ந்துள்ளேன். இரு மொழி அறிவு அளித்து என்னை ஆட்கொண்ட, மொழி தேவதைகளனைத்தும் ஓருருவாகக் கொண்ட சரஸ்வதி தேவியை சரணடைந்து செயல் ஊக்கம் பெற்று வருகிறேன். ஒவ்வொருமுறை எழுதும்போதும் எனக்குப் பெரும் பொறுப்பை இவ்விரு மொழிகளுக்கும் உரிய தேவதைகள் கருணையோடு அளித்து ஆசி வழங்குவதாக எண்ணுகிறேன். வீட்டிலேயே இருந்து எந்த ஒரு சன்மானமும் வெகுமானமும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து எழுதுவது என்பது மொழி தெய்வத்தின் அருள் இன்றி சாத்தியமில்லை. 

    நான் ஒன்றும் அதிகம் எழுதிவிடவில்லை. இது குறித்து என்மேல் எனக்கு மிகவும் கோபம் உண்டு. வானமே எல்லையாக எவ்வளவோ செய்வதற்கு இருக்கிறது. அதிலும் இருமொழி தேவதைகளும் அருளியிருக்கும் நிலையில் இருமொழி இலக்கியங்களையும் இலக்கிய படைப்பாளிகளையும் இருமொழி வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தும் பொறுப்பு எனக்குள்ளதாக எப்போதும் எண்ணுவேன்.

    இந்த சிறுகதைத் தொகுப்புக்கு கேட்டவுடன் அன்போடு முன்னுரை எழுதிக் கொடுத்த எழுத்தாளரும் என் அன்புத் தோழியுமான திருமதி ரேவதி பாலு அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கதைகளைப் படித்தவுடன் என்னை தொடர்பு கொண்டு முதலில் அவர் குறிப்பிட்டது விடிவெள்ளி முளைத்தது கதை குறித்துதான். அதைப் படித்து மகிழ்ந்த அவர் எதிர்பாராத முடிவு... இப்படித்தான் பெண்கள் போராட வேண்டும் என்று மனதார புகழ்ந்தார்

    இந்த தொகுதியில் உள்ள சிறுகதைகளின் தெலுங்கு மூல ஆசிரியர்கள் அனைவருமே எனக்குச் சிறந்த தோழிகள். அவர்களை தமிழ் வாசகர்களுக்கு சுருக்கமாக அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.

    டாக்டர் ஷோபா குரஜாட பெரிந்தேவி: சிறந்த எழுத்தாளரும் சமூக சேவகியுமான இவருடைய இரண்டு கதைகள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 2020ம் ஆண்டு மகளிர் தினத்தன்று ‘விசிஷ்ட மகிளா புரஸ்கார்’ தெலங்காணா அரசாங்கத்தால் அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். முதியோர் பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் ஷோபா பெரிந்தேவி ‘தெலுகு கத – வ்ருத்துல சமஸ்யலு’ என்ற ஆராச்சி நூலை எழுதியுள்ளார்.. 

    துரகா ஜானகிராணி: தெலுங்கின் மூத்த எழுத்தாளர் மறைந்த திருமதி. துரகா ஜானகிராணி. சமூக சேவகியாகவும், ரேடியோ அக்காவாகவும் மிகுந்த புகழ் பெற்றவர். இவருடைய ஐந்து கதைகள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஆல் இண்டியா ரேடியோவில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் கொடுத்தவர். பாதிப்புக்குள்ளான பெண்கள் கூறிய உண்மைக் கதைகளாக சிலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

    டாக்டர் முக்தேவி பாரதி: தெலுங்கு இலக்கியத்தில் 1960 முதல் இன்று வரை  நிரந்தரம் இலக்கிய சேவையில் ஈடுபட்டு வரும் தெலுங்கின் மூத்த பெண் எழுத்தாளரான டாக்டர்  முக்தேவி பாரதியின் ஏழு சிறுகதைகள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.. எழுத்தாளரும் அறிஞருமான சிலகமர்த்தி லட்சுமி நரசிம்மம் அவர்களின் படைப்புகள் பற்றி ஆராய்ச்சி செய்து பிஹெச்டி முனைவர் பட்டம் பெற்றார். முப்பதுக்கும் மேல் இவருடைய சிறுகதைத் தொகுதிகளும் நாவல்களும் நூல்களாக வெளிவந்துள்ளன. கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.  நான் தமிழில் மொழிபெயர்த்த இவருடைய ‘மேடம் கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவை நவம்பர் 2018 ல் டாக்டர் முக்தேவி பாரதி மிகச் சிறப்பாக ஹைதராபாத் தியாகராஜ கான சபையில் ஏற்பாடு செய்து என்னை கௌரவித்தார். 

    வாரணாசி நாகலட்சுமி: சிறந்த எழுத்தாளரும் ஓவியரும் கவிஞருமான வாரணாசி நாகலட்சுமி எம்எஸ்சி., எம்பில்., படித்தவர். பல கவிதை நூல்களும் சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். சிறுகதைப் போட்டிகளில் மட்டுமின்றி பெயிண்டிங், கவிதை என்று அனைத்திலும் பரிசுகள் பல வென்றுள்ளார். இந்தத் தொகுப்பில் இவருடைய நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 

    ஜ்யோதி வலபோஜு: இவருடைய ஒரு சிறுகதை இந்த தொகுப்பில் இடம்பிடித்துள்ளது. சிறந்த மகளிர் விருது 2019ல் தெலங்காணா அரசால் அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். இல்லத்தரசியாக இருந்து கொண்டே சமையல் நூல் வல்லுனராகவும் தெலங்காணாவின் முதல் பெண் புத்தகப் பதிப்பாளராகவும் திகழ்கிறார். மாலிகா என்ற இணைய இதழையும் நடத்துகிறார்.

    பொத்தூரி விஜயலட்சுமி:  மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாரான பொத்தூரி விஜயலட்சுமியின் ஒரு சிறுகதை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இதுவரை 250 சிறுகதைகளும் 14 நாவல்களும் எழுதியுள்ளார். அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய முதல் நாவல் ‘பிரேமலேக’ 1984 ல் ‘ஸ்ரீவாரிகி பிரேமலேக’ என்ற திரைப்படமாக வெளிவந்து சிறப்பான வெற்றி பெற்றது.

    பத்மலதா ஜெயராம் நந்திராஜு: ஏஜிஎஸ் ஆபீசில் பணி புரிகிறார். இவருடைய ஒருகதை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. 200 சிறுகதைகளும் 9 நாடகங்களும் எழுதி தொகுப்புகளாக வெளியிட்டுள்ளார். பல இலக்கிய பரிசுகளை வென்றுள்ள இவர் ‘ரஞ்சனி’ என்ற இலக்கிய அமைப்பின் தலைவராக உள்ளார். 

    தரமுள்ள இலக்கியப் படைப்புகளுக்கு தமிழ் வாசகர்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பை உங்கள் கரங்களில் அளிக்கின்றேன். அன்புகூர்ந்து வாங்கிப் படித்து மேலும் எழுத ஆதரவு தாருங்கள்!

    பணிவுடன்,

    ராஜி ரகுநாதன்

    மொழிபெயர்ப்பாளர் கலாசாரத் தூதுவர்

    இருமொழி எழுத்தாளரான திருமதி ராஜி ரகுநாதன் தன் திருமணத்திற்கு பிறகு தமிழ்நாட்டு கீழ்வேளூரிலிருந்து தெலங்காணா ஹைதராபாதுக்குக் குடித்தனம் வந்தார். முதலில் தமிழில் சிறுகதை, கட்டுரை, கவிதை என்று எழுதிக் கொண்டிருந்தார். கணையாழியில் வெளியான இவருடைய சிறுகதை கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட கணையாழி களஞ்சியம் பாகம் -3 தொகுப்பில் வெளியானதையும், மங்கையர்மலர் மாத இதழ் சிறுகதைப் போட்டியில் பரிசு கிடைத்ததையும் பெரிய பாராட்டாகவும் கௌரவமாகவும் கருதுகிறார்.

    தமிழில் இளங்கலை பட்டதாரியான ராஜி ரகுநாதன் ஹைதராபாதில் சம்ஸ்கிருதத்தில் சர்ட்டிபிகேட் கோர்ஸ் படித்தார். இந்த மாதரசி வீட்டு நிர்வாகம், குழந்தைகள் வளர்ப்பு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு வீட்டிலிருந்தே விடாமுயற்சியுடன் தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டார். ஊக்கத்துடன் தன் மொழியறிவை செம்மையாக வளர்த்துக் கொண்ட இவர், தெலுங்கில்  தான் படித்து ரசித்த கதைகள், கட்டுரை, கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்க ஆரம்பித்து சிறந்த மொழிபெயர்ப்பு எழுத்தாளராக அறியப்படுகிறார். கணினியின் உபயோகமும் கற்றுத் தேர்ந்த இவர் இணையத்தில் வெளிவந்த எழுத்தாளர் மாலனின் 'அக்ஷ்ரா' என்னும் பத்திரிகையிலும் எழுதியிருக்கிறார்.

    'மதுரமுரளி' தெலுங்கு மாத இதழுக்காக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் தமிழ் உரைகளை தெலுங்கில் மொழிபெயர்த்து அளித்து வருகிறார். ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், தீபம், சினேகிதி, ஞான ஆலயம், அமுதசுரபி, கணையாழி, திசைஎட்டும், சொல்வனம் போன்றவற்றில் கதை, கட்டுரை, கவிதைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்.

    சுந்தரத் தெலுங்கை கசடறக் கற்றுக் கொண்டுள்ள ராஜி ரகுநாதன் ஒரு தெலுங்கு எழுத்தாளராகவும் தெலுங்கு பத்திரிகைகளில் ஆன்மீக, சமூக கட்டுரைகளையும், கவிதைகளையும் தொடர்ந்து எழுதிவருகிறார். அது மட்டுமா?  தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களிலும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஹைதராபாத் அகில இந்திய வானொலியில் பல தலைப்புகளில் தெலுங்கில் உரையாற்றி வருகிறார். நம் அண்டை மாநிலங்களில் நடக்கும் ருசிகரமான நிகழ்வுகளை இவர் எழுத்துக்களில் தினசரி டாட்காம் இணைய தினத்தாளில் தினம் தினம் படித்து ரசிக்கலாம்.

    ஆந்திர பிரபா, ஆந்திர ஜோதி, ஆந்திர பூமி, நதி, பூமிகா, இந்தியா டுடே,  சுவாதி,  நவ்யா போன்ற பிரபலமான தெலுங்கு மொழி பத்திரிகைகளில் வெளிவந்த புகழ் பெற்ற பெண் எழுத்தாளர்களான துரகா ஜானகிராணி, வாரணாசி நாகலட்சுமி, டாக்டர் முக்தேவி பாரதி, பொத்தூரி விஜயலட்சுமி, பத்மலதா ஜயராம் நந்திராஜு, டாக்டர் ஷோபா குரஜாட பெரிந்தேவி, ஜோதி வலபோஜு ஆகியோரது இருபத்தோரு சிறந்த சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவை கணையாழி,  திசையெட்டும், மஞ்சுளா ரமேஷ் சினேகிதி, அக்ஷ்ரா, சொல்வனம் ஆகிய பிரபல தமிழ்ப் பத்திரிகைகளில் பிரசுரமாகி பாராட்டைப் பெற்றன. பெண் எழுத்தாளர்கள் எழுதியுள்ள சிறுகதைகள் என்பதால் பெண்களின் வாழ்க்கை, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இங்கே முதன்மைப்படுத்தப்பட்டு விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு தீர்வுகள் பெற முயற்சி எடுக்கப்படுகின்றன. எந்த மாநிலமாக இருந்தால் என்ன? எந்த மொழி பேசுபவர்களாக இருந்தால் என்ன? எல்லா இடங்களிலும் குடும்பங்களில் சந்தோஷங்கள், பிரச்சனைகள் இருக்கத்தானே செய்கின்றன?

    ‘பால் டம்ளர் - தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் உருவாகியுள்ள இந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பில் முதல் கதையான  ‘ரோஜா' வித்தியாசமான ஒரு சிந்தனையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. வாழ்வில் முறை தவறிப் போய் கர்ப்பமான ஒரு இளம் பெண்ணுக்கு சிறப்பான அறிவுரை எடுத்துரைக்கப்படுகிறது. எதிர்மறைச் சிந்தனைகள் விளையாடும் வாழ்க்கையில் நேர்மறை சிந்தனையோடு வாழ அந்தப் பெண்ணுக்கு அவள் தாயாரின் தோழி வழிகாட்டுகிறார். 'சின்ன உயிர் நோகாதா' என்னும் சிறுகதையில் இதேபோல் கருவைக் கலைக்க வந்த மணமான பெண்ணுக்கு ஒரு பெண் மருத்துவர் கூறும் வழிமுறை சுவைபட விளக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர் எதிராக மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை வைத்துக் காப்பாற்ற முடியாமல் அவளின் சகோதரன் சற்றும் மனம் இன்றிச் செய்யும் செயல் 'சமுதாய பிராணி' சிறுகதையின் கரு. ‘விடிவெள்ளி முளைத்தது’ கதை புதுமையான திருப்பத்தோடு கூடியது. பொதுவாக கணவன்தான் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்துவதாக கேள்விப்படுவோம். ஆனால் இந்த கதை வித்தியாசமாக உள்ளது. 'ஆபத்துக்கு பாவமில்லையா?' என்னும் சிறுகதை மட்டும் கணவனின் மறைவுக்கப்புறம் ஒரு அழகான பெண் தன் வாழ்க்கைப் பாதையில் தவறிப் போவதாக காட்டப்பட்டிருப்பது சற்றே நெருடலாக இருக்கிறது. இது சமூக சேவகியான ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய உண்மை கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'இப்படியும் ஒரு அன்னை'  சிறுகதையில் கால் ஊனமுற்ற பெண்ணிற்கு அக்கறை எடுத்து திருமணம் செய்து வைக்காமல் அவள் சம்பளத்தில் சுகமாக வாழும் பெற்றோரைக் காட்டுகிறது. இவ்வாறு ஒவ்வொரு சிறுகதையும் சமூகத்தில் நிலவும் பலவிதமான பிரச்சனைகளை பேசி விவாதித்து தீர்வு காண முயலுகிறது.

    எத்தனையோ பேர் நம் மாநிலத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு குடி போகிறார்கள். அவர்களில் நிறைய பேர் தமிழ்நாட்டையே காலப்போக்கில் மறந்து விடுகிறார்கள். ஆனால் நம் ராஜி ரகுநாதன் அப்படியா? இவர் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ஆன்மீக நூல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், கவிதைகளால் தமிழ்நாட்டுக்கு, தமிழ் மொழிக்கு, தமிழ் இலக்கியத்திற்கு எவ்வளவு நல்வரவுகள்? அண்டை மாநில மக்களின் பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், அவர்கள் வாழ்க்கை முறை என்று எல்லாவற்றையும் இவரைப் போன்றோரால் அல்லவா நம்மால் அறியமுடிகிறது?

    நாட்டில் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவது என்பது உண்மையிலேயே அந்த எழுத்தாளர் இந்த இரண்டு மொழிகளுக்கும், இந்த இரண்டு மொழிகளைப் பேசும் மக்களுக்கும் ஆற்றும் சிறந்த தொண்டு என்பதால் இந்த எழுத்தாளர்கள் நல்ல கலாச்சார தூதுவர்கள் என்றும் மனதார பாராட்டத் தோன்றுகிறது. அந்த விதத்தில் ஆந்திர மக்களின் வாழ்க்கையையும் அவர்கள் கலாச்சாரத்தையும் விவரிக்கும் இந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு நூல் கல்லூரிகளில் பாடநூலாக வைக்க உகந்தது என்று கண்டிப்பாகக் கூறமுடியும். திருமதி ராஜி ரகுநாதன் மேலும் மேலும் இதே போல மிகச் சிறந்த படைப்புகளைப் படைக்க வாழ்த்துக்கள்.

    ரேவதி பாலு,

    எழுத்தாளர்

    பால் டம்ளர்

    தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்

    பொருளடக்கம்

    1. ரோஜா – துரகா ஜானகிராணி

    2. சமுதாயப் பிராணி - துரகா ஜானகி ராணி

    3. வீட்டுக்காரர் - வாரணாசி நாகலட்சுமி

    4. பால் டம்ளர் - டாக்டர் முக்தேவி பாரதி

    5. காதில் விழாத ராகம் – வாரணாசி நாகலட்சுமி

    6.

    Enjoying the preview?
    Page 1 of 1