Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalanilai Mattram!
Kaalanilai Mattram!
Kaalanilai Mattram!
Ebook356 pages2 hours

Kaalanilai Mattram!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலநிலை மாற்றம் என்ற பேரிடர் இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது. மனிதரின் இயற்கைக்கு முரணான செயல்களால் அது தீவிரப்படுத்தப்பட்டு, ஒரு புறம் அதிதீவிர கனமழை, கடும் வெள்ளம் என்றும், மறுபுறம் வறட்சி, காட்டுத்தீ மற்றும் தண்ணீர்ப்பஞ்சம் என்றும் நாம் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றோம். இத்தகைய இடர்களை சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் வன உயிரினங்கள் முதலான உயிரியப்பன்மயத்தைப் பாதுகாப்பதன் வாயிலாகவும், இயற்கை நமக்களித்த வரமாகிய மரங்களை வளர்ப்பதன் மூலமும் எவ்வாறு நாம் எதிர்கொள்ள முடியும் என்பது பற்றியும் மற்றும் அது தொடர்பான இன்ன பிற சுவாரஸ்யமான தகவல்களையும் இந்நூல் தன் வசம் கொண்டுள்ளது.

அனைவரும் இத்தகு அரிய செய்திகளை அறிந்துகொள்வதோடு, அவற்றை நடைமுறைப்படுத்தி, நாம் வாழும் இந்தப் புவியினை எதிர்வரும் இளம் தலைமுறையினருக்கு நல்ல நிலையில் ஒப்படைக்க வேண்டும் என்று நூலாசிரியர் அனைவரையும் வேண்டுகின்றார்.

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580174210628
Kaalanilai Mattram!

Related to Kaalanilai Mattram!

Related ebooks

Reviews for Kaalanilai Mattram!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalanilai Mattram! - V. Sundararaju

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காலநிலை மாற்றம்!

    Kaalanilai Mattram!

    Author:

    வ. சுந்தரராஜு

    V. Sundararaju

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-sundararaju

    பொருளடக்கம்

    அணிந்துரை

    வாழ்த்துரை

    ஆசிரியர் உரை

    1. காலநிலை மாற்றம்!

    2. எல்-நினோ (El-Nino)-லா-நினா (La-Nina)!

    3. காலநிலைமாற்றத்தை எதிர்கொள்வதில் முன்னோடி மாநிலம்- தமிழ்நாடு!

    4. சுற்றுச்சூழல் மேலாண்மையும் காலநிலை மாற்றமும்!

    5. புவி வெப்ப உயர்வும் காலநிலை மாற்றமும்!

    6. உயிரியப் பன்மயம் காத்துக் காலநிலை மாற்றத்தைத் தணிப்போம்!

    7. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் பறவைகளின் சூழியல் சேவைகள்!

    8. காலநிலை மாற்றத்தைத் தணிப்பதில் கடல்பசுக்களின் பங்களிப்பு!

    9. காலநிலைமாற்றமும் காட்டுத்தீயும்!

    10. காலநிலை மாற்றத்தைத் தணிக்க உதவும் வனஉயிரினங்கள்!

    11. பசுமையை மீட்டெடுத்துக் காலநிலைமாற்றத்தைத் தணிப்போம்!

    12. காலநிலைமாற்றத்தால் நேரும் வறட்சியை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்!

    13. காலநிலை மாற்றமும் தண்ணீர்த் தட்டுப்பாடும்!

    14. காலநிலை மாற்றத்தைத் தணித்திடும் புலிகள் காப்பகம்!

    15. சூழியலைச் சீர்குலைக்கும் ‘எம்-சாண்ட்’!

    16. மரம் வளர்ப்பைத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்!

    17. மரங்களை நேசித்த மாமனிதர்!

    18. அலையாத்திக்காடுகள் ஆற்றும் சூழியல் சேவைகள்!

    19. காடுகளைக் காத்திடும் யானைகளைக் காப்போம்!

    20. மரம் காத்த மங்கையர் திலகங்கள்!

    21. கடவூர் தேவாங்கு சரணாலயம்

    22. வனஉயிர்களைக் கொல்வது பேரிடர்க்கு வழிகோலும்!

    23. வனஉயிர் மேலாண்மையும் காலநிலை மாற்றமும்!

    24. பூமியைக் காத்திடப் பொலிந்திடும் வாழ்வே!

    25. மரம் இயற்கை நமக்கு அளித்த வரம்!

    அணிந்துரை

    திருக்குறள்: -

    ‘நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்

    வான் இன்று அமையாது ஒழுக்கு’

    என்ற திருவள்ளுவரின் வார்த்தைகளில் அன்றே காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளைக் குறிப்பிட்டுள்ளார். இந்த உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பேராபத்து காலநிலை மாற்றம் என்பதுதான். காலநிலை மாற்றம் என்பது இயற்கைக் காரணிகளாலும், இப்பூவுலகில் வாழ்கின்ற மனிதர்களின் வாழ்க்கை முறைகளால் ஏற்படும் செயற்கைக் காரணிகளாலும் உருவாகின்றன. மனிதரால் இயற்கைக் காரணிகளைக் கட்டுப்படுத்துவதும் மாற்றுவதும் இயலாத காரியம். ஆனால், செயற்கைக் காரணிகளால் ஏற்படும் காலநிலை மாற்றத்தினைக் கட்டுப்படுத்துவது மனித குலத்தினால் இயலும் காரியமே. இப்புவியை அச்சுறுத்துகின்ற காலநிலை மாற்றத்தைப் பற்றித் தெளிவான அறிவியல் பூர்வமான கருத்துக்களைத் தொகுத்துக் காலநிலை மாற்றம் என்ற தலைப்பின் கீழ் திரு. வ. சுந்தரராஜு. இ.வ.ப (பணி நிறைவு), மேனாள் துணை வனப்பாதுகாவலர் அவர்கள் வழங்கி உள்ளார். இப்புத்தகம் ஒரு மிகச்சிறந்த அறிவியல் தொகுப்பாகும். காலநிலை மாற்றத்தைப் பற்றி ஆங்கிலத்தில் பல்வேறு புத்தகங்கள், கட்டுரைகள், ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டு, இணையத்தில் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் உள்ளன. ஆனால், நம் தாய்மொழியாம் தமிழில் காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் பூர்வமான தொகுப்புகள் மிகக்குறைவாகவே உள்ளன. அவற்றில் மணிமகுடமாக இப்புத்தகம் விளங்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.

    ‘சோலை எழிலன்’ என்ற அழகிய புனைபெயர் கொண்டு பல்வேறு நூல்களை எழுதி உள்ள ஆசிரியர் திரு. வ. சுந்தரராஜு. இ.வ.ப (பணி நிறைவு), மேனாள் துணை வனப்பாதுகாவலர் அவர்கள் தமிழ்நாடு வனத்துறையில் 36- ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றித் தான் மேற்கொண்ட அனைத்துப் பணிகளிலும் செம்மையாகச் செயல்பட்டு, மிகச்சிறந்த கள அலுவலர் மற்றும் நிர்வாகத் திறமை படைத்தவராக விளங்கி உள்ளார். தன்னுடைய கள அனுபவங்கள் அடுத்த தலைமுறைக்கும் சென்று சேர வேண்டும் என்று பல்வேறு நூல்களை வடிவமைத்து உள்ளார். அவற்றில் முத்தாய்ப்பாகக் ‘காலநிலை மாற்றம்’ குறித்த அறிவியல் தொகுப்பினை இந்நூலில் வழங்கியுள்ளார்.

    தமிழ்நாடு வனத்துறையில் நீண்ட காலம் பணியாற்றிப் பல்வேறு கள அனுபவங்களைப் பெற்றதன் காரணமாக வன மேலாண்மை மூலமாகக் காலநிலை மாற்றத்தை எதிர் கொள்வது குறித்துத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இந்த அனுபவப் பகிர்வு மற்றும் அறிவியல் தொகுப்புகள் சாதாரண பாமரனுக்கும் புரிகின்ற விதத்தில் எளிமையாக வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும், வனத்துறையில் பணிபுரிகின்ற பல்வேறு களப்பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் மிகச் சிறந்த நூலாக அமையும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.

    பணிநிறைவுக்குப் பின்பும் வனத்திற்கும், வனத்துறைக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து நூல்கள் தொகுப்பின் மூலமாகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசிரியரின் எண்ணத்தையும், முயற்சியையும் மனமாரப் பாராட்டுகிறேன். இதுபோல மென்மேலும் பல படைப்புகளை வழங்கிச் சமூக சேவை ஆற்றவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.

    அன்புடன்,

    வே. திருநாவுக்கரசு. இ.வ.ப.

    கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர்,

    முதல்வர்,

    மாநில வணப்பணிக்கான மத்திய கல்விநிலையம்,

    (Central Academy for State Forest Service),

    கோவை-641002.

    வாழ்த்துரை

    வன அலுவலர் திரு. வ. சுந்தரராஜு. இ.வ.ப. அவர்கள் பணி நிறைவு பெற்றாலும் எழுத்துப் பணியில் முழுவதுமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். மிகக் குறுகிய காலத்தில் பத்துக்கும் அதிகமான நூல்களை வெளியிட்டிருக்கும் அவர் கவிதை, கட்டுரை, ஆன்மீகம், பாடல்கள் எனப் பல்வேறு பரிமாணங்களில் நூல்களை வெளியிட்டு வருவது சிறப்பு.

    இந்த நூல் சுற்றுச்சூழல் குறித்தது. ‘காலநிலை மாற்றம்’ என்ற தலைப்பில் வெளி வருகிறது. குமரி மாவட்டத்தில் அவர் மாவட்ட வன அலுவலராகப் பணியாற்றிய காலங்களிலேயே காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த தனது கருத்துக்களைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் அங்கு பணியாற்றிப் பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இன்றளவும் அவர் நினைவுகூரப்படுகிறார் என்றால், அதற்கு இயற்கையின் மாட்டு அவர் காட்டிய ஈடுபாடும், அர்ப்பணிப்புமே காரணமாகும்.

    காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு, சுற்றுச்சூழல் மேலாண்மை, புவிவெப்ப உயர்வு, உயிரியப்பன்மயம், பறவைகள் ஆற்றும் சூழல் மேலாண்மை, காலநிலை மாற்றத்தைத் தணிப்பதில் கடல் பசுக்களின் பங்கு, காலநிலை மாற்றமும் காட்டுத்தீயும், வைகைக்கு உயிரூட்டும் புலிகள் காப்பகம், மரங்களை நேசித்த மாமனிதர், அலையாத்திக்காடுகள் ஆற்றும் சூழியல் சேவைகள் என்று பல்வேறு தலைப்புகளில் காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் பூர்வமான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

    இறைவன் ஈகையாகத் தந்த இந்த பூமியைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதை நல்லநிலையில் எதிர்வரும் சந்ததியினர்க்கும் விட்டுச் செல்ல வேண்டியதும் நமது கடமை என்கின்ற கருத்தினை ஆசிரியர் பல்வேறு இடங்களில் வலியுறுத்தியுள்ளார்.

    இந்தப் புத்தகம் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்குமளவிற்குத் தரம் வாய்ந்ததாக உள்ளது. இளம் தலைமுறையினர், வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு கருத்துக்கள் புத்தகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

    நீர்வாழ் உயிரினங்கள் மட்டுமல்லாமல், கடல் வாழ் உயிரினங்களையும் பற்றிப் பதிவு செய்துள்ளார். உயிரனப்பன்மயத்தில், அனைத்து உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. உணவுச்சங்கிலியில் அனைத்துத் தாவரங்கள், பறவைகள் மற்றும் விலங்கினங்களுக்கும் தொடர்பு உண்டு. இந்த உலகில் அனைத்து உயிரினங்களும் வாழ சமன் சீர்பாடு மிகவும் தேவை என்பதைப் பற்றியெல்லாம் மிகத் தெளிவாக விவரித்துள்ளார்.

    காலநிலை மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். பேராபத்துக்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமாகிறது. அந்த வகையில், இந்த நூல் படிப்பவர் மனதை நிச்சயம் சலனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நூலாசிரியர் சூழல் மேம்பாட்டுக்குத் தன் பங்களிப்பைச் செவ்வனே ஆற்றியுள்ளார். சுற்றுச்சூழல் என்பது அவரது உணர்வில் கலந்தது. அவர் மேலும் இதுபோன்ற நல்ல நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தரவேண்டும். அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் நீடித்த ஆயுளையும், நல்ல உடல் நலத்தையும் தரவேண்டும் என வேண்டி எனது வாழ்த்துரையை நிறைவு செய்கின்றேன்.

    அன்புடன்,

    ஜெ. ஜோ.பிரகாஷ்.M.A.M.Ed,

    மேனாள் தலைமை ஆசிரியர்,

    மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்,

    கன்னியாகுமரி.

    ஆசிரியர் உரை

    காலநிலை மாற்றம் என்ற இடர்பாடு காலம் காலமாக பூமியில் நிலவி வந்தபோதும், அண்மைக்காலங்களில் மனிதருடைய செயல்பாடுகளால் அது பேரிடராக மாறிக்கொண்டு வருகின்றது.

    ‘எல்-நினோ’ போன்ற இயற்கையான நிகழ்வுகள், பூமியின் மீது விழும் சூரிய ஒளியின் அளவை மிஞ்சிய கதிர்வீச்சு, பூமியின் சுற்றுப்பாதையில் நேரும் மாற்றங்கள், எரிமலை வெடிப்புகள் ஆகிய இயற்கை நிகழ்வுகளால், காலநிலை மாற்றம் நிகழ்ந்து வந்தபோதும், இயற்கைக்கு எதிரான மனிதர்தம் செயல்பாடுகளான பசுமையக வாயுக்களின் அளவுக்கு அதிகமான வெளியேற்றம், காடுகள் அழிப்பு, உயிரியப்பன்மய அழிப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு, இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டால் ஏற்படும் சூழல் சீர்குலைவு ஆகியவற்றால், காலநிலை மாற்றம் தீவிரம் அடைந்து, அதனால், நாம் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றோம்.

    மாறிவரும் காலச் சூழலால், நமது சுற்றுச் சூழல் சீர்குலைந்து, மனிதரும் இன்னபிற உயிரினங்களும் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளான காற்று, நீர், மண், உணவு என்று அனைத்தும் மாசுபட்டு, இந்தப் புவியில் உயிர்த்திருப்பதே ஒரு சவாலாக மாறிவிட்டது.

    புதைபடிவ எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தி வாகனங்களையும், தொழிற்சாலைகளையும் மிக அதிக அளவில் இயக்கி வருகின்றோம். இதனால், நாம் வாழும் இந்தப் பூவுலகின் வெப்ப நிலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகின்றது. இத்தகைய வெப்ப நிலை உயர்வினால் பூமியே ஒரு நோயாளியாக மாறி, அழிந்துவிடும் நிலையில் இருந்து வருகின்றது.

    மக்கள் தொகைப் பெருக்கத்தால் மிகுந்து வரும் தேவைகளுக்காக அணைகள், நீர்மின்நிலையங்கள், சாலைகள், சுரங்கங்கள் அமைக்க வேண்டிக் காடுகள் வரைமுறை ஏதுமின்றி அழிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பூமியிலே உயிரினங்கள் வாழ அத்தியாவசியத் தேவைகளை வழங்கி, அடிப்படை ஆதாரமாக விளங்கி வரும் உயிரியப்பன்மயம் அதிவேகமாக அழிந்து வருகின்றது,

    இத்தகைய ஓர் இக்கட்டான சூழ்நிலையில், எவ்வாறு நாம் வாழும் இந்தப் பூவுலகை அழிவிலிருந்து மீட்பது என்பது பற்றி நாம் ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்தித்துத் தீர்க்கமான முடிவெடுத்து, முனைப்போடு செயல்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம்.

    இத்தகைய இடர்பாடுகளைச் சரியாகப் புரிந்துகொண்ட நம் தமிழக அரசு விரைந்து முனைப்போடு செயல்பட்டு, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக விளங்குவது நாம் பெருமைப்படக்கூடிய ஒன்றாகும்.

    மேற்படிக் கருத்துக்களை முன்னிறுத்தி, எவ்வாறு சுற்றுச் சூழலை மேலாண்மை செய்வது, புவி வெப்ப உயர்வைக் குறைப்பது, சூழல் பேணும் பறவைகளைக் காப்பது, பசுமையை மீட்பது, வறட்சியை எதிர்கொள்வது, காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவது என்று பலதரப்பட்ட தலைப்புக்களில் இந்நூலில் விரிவாக விவாதித்துப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

    அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இப்புவியைப் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மீட்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

    இவ்வகையில், காடுகளைப் பேணிப் பாதுகாப்பதற்காக வேண்டி சரணாலயங்கள் (Sanctuaries), தேசியப்பூங்காக்கள் (National Parks), புலிகள் காப்பகங்கள் (Tiger Reserves), உயிர்க்கோளப் பகுதிகள் (Biosphere Reserves), சமுதாய ஒதுக்குப் பகுதி (Community Reserve), பாதுகாக்கப்பட்ட ஒதுக்குப்பகுதி (Conservation Reserve) என்று இயற்கை வளம் நிறைந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கை செய்யப்பட்டுவருகின்றன.

    அண்மையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் உயர் நீதிமன்றம் சண்டிகரில் அமைந்துள்ள ‘சுக்னா’ ஏரிக்கு ‘வாழும் நிறுவனம்’ (Living Entity) என்று அங்கீகாரம் கொடுத்துள்ளது. இது போன்ற நல்லெண்ணச் செயல்பாடுகள் இயற்கைக் சூழியல் மாட்டு, மக்களின் மாறிவரும் மனோபாவத்தையே காட்டுவதாக அமைகின்றது.

    ‘கால நிலை மாற்றம்’ என்ற இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் எவ்வாறு நம்முடைய இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளால், நாம் வாழும் இந்தப் பூமி பல்வேறு பேரிடர்களைச் சந்தித்து வருகின்றது என்பது பற்றியும், அத்தகைய பேரிடர்களை நமது அறிவார்ந்த, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையினால் எப்படி எதிர்கொள்ளமுடியும் என்பது பற்றியும் ஒரு தெளிவான முடிவுக்கு வருவார்கள் என்பது திண்ணம்.

    மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், அறிவியல் வல்லுநர்கள், சமூக அக்கறையாளர்கள், பொதுமக்கள் என்று அனைத்து சாராரும் இந்நூலைப் படித்து, நமது புவியின் தற்போதைய நிலையைப் பற்றி மக்களிடையே எடுத்துரைத்து, அனைவரும் ஒன்றிணைந்து நாம் வாழும் இந்தப் புவியினை அழிவிலிருந்து மீட்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

    இப்படிக்கு,

    வ. சுந்தரராஜு.இ.வ. ப,

    மேனாள் துணை வனப் பாதுகாவலர்,

    திருச்சி-620017

    நன்றி பாராட்டுதல்

    ‘காலநிலை மாற்றம்’ என்ற இந்த நூலைப் படித்துப்பார்த்து, அதற்குத் தன்னுடைய அயராத பணிச்சுமைக்கு இடையிலும், ஓர் அழகிய அணிந்துரை வழங்கியுள்ள கோவை மாநில வனப்பணி கல்வி நிலையத்தின் முதல்வர், எனதரும் நண்பர் திரு. வே. திருநாவுக்கரசு. இ.வ.ப. அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையின் மாட்டு மட்டற்ற நேசம் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் எனது இனிய நண்பர் திரு. ஜே. ஜோபிரகாஷ். M.A. M. Ed அவர்கள் தமது தொடர்ந்த சேவைகளுக்கு நடுவே நேரம் ஒதுக்கி, எனது நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார். அவருக்கு எனது உள்ளம் கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இந்த நூல் சிறந்த முறையில் வெளிவர உறுதுணை புரிந்த எனது இளைய மகன் திரு. பிரவீன் குமாருக்கு என் மனமுவந்த நன்றி.

    இது போன்று தொடர்ந்து எனது ஆங்கிலம், தமிழ் மற்றும் கவிதை நூல்கள் அச்சிட்டு வெளிவர எனக்கு ஆதரவு அளித்து வரும் எனது துணைவியார் திருமதி. ஜான்சி ராணி அவர்களுக்கும், என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வரும் எங்கள் மூத்த மகன் திரு. விமல், மூத்த மருமகள் திருமதி. சுமணா, எங்கள் பேத்தி வியனா, எங்கள் இளைய மருமகள் திருமதி. ஜீவா ஆகியோருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.

    ‘காலநிலை மாற்றம்’ என்ற எனது இந்த நூலை நல்லமுறையில் அச்சிட்டு வெளியிட்ட பெங்களூரு புஸ்தகா பிரசுரத்தாருக்கு எனது உளப்பூர்வ நன்றி.

    என்றும் நன்றியுடன்,

    வ. சுந்தரராஜு.இ.வ.ப.

    மேனாள் துணை வனப்பாதுகாவலர்,

    திருச்சி-620017.

    அலைபேசி: 9443170366.

    1. காலநிலை மாற்றம்!

    வானிலை (Weather): வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் வளி மண்டலத்தில் நிலவும் வானிலை மூலக்கூறுகளான சூரிய வெளிச்சம், வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்றின் திசை, காற்றழுத்தம், ஈரப்பதம், முகில்கள், பனி, மூடுபனி மற்றும் தூசிப்புயல்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும். வானிலை என்பது ஒரு நாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் நடைபெறக்கூடிய நிகழ்வினைக் குறிப்பதாகும். இது ஓர் ஆண்டில் நேரத்திற்கு நேரம், காலத்திற்குக் காலம் மாறக்கூடியது. இது அரிதாக ஏற்படக்கூடிய இயற்கை அழிவுகள், சூறாவளி மற்றும் பனிப்புயல் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தின் வானிலையை அங்கே நிலவும் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் காற்றழுத்தம் ஆகிய காரணிகள் நிர்ணயம் செய்கின்றன.

    காலநிலை (Climate): ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீண்டகாலமாக (குறைந்தது பத்து ஆண்டுகள்) நிலவும் வானிலை நிலைமைகளின் தொகுப்பே காலநிலை எனப்படும். அதாவது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலவும் நீண்ட கால வானிலையின் சராசரியே காலநிலை என்பதாகும். வளி மண்டலத்தில் நிலவக்கூடிய வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு, அதாவது 35-ஆண்டுகளுக்குக் கணக்கிட்டுக் கூறுவதாகும். வானிலையின் கூறுகளும், காலநிலையின் கூறுகளும் ஒன்றாகவே இருந்தபோதும், வானிலையைப் போல காலநிலை அடிக்கடி மாறாது.

    பருவநிலை மாற்றமும், காலநிலை மாற்றமும்: பருவ நிலை மாற்றமும், கால நிலை மாற்றமும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டவை.

    பருவநிலை மாற்றம் எனப்படுவது, பூமியில் குறுகிய காலத்தில் தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றமாகும். எடுத்துக்காட்டாக, தமிழ் நாட்டில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பொழிய வேண்டிய தென்மேற்குப் பருவ மழையும், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையில் பெய்யக்கூடிய வடகிழக்குப் பருவமழையும் பொதுவான வழக்கத்தில் இருந்து மாறுபட்டு சில மாதங்கள் முந்தியோ அல்லது பிந்தியோ பெய்வது பருவநிலை மாற்றம் எனப்படும்.

    காலநிலை மாற்றம் எனப்படுவது பூமியில் நீண்ட காலத்தில் நிகழும் தட்ப வெப்ப நிலை மாற்றமாகும். நாம் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கரியமில வாயு அதிகமாவதால், பூமியின் வெப்ப நிலை உயர்வடைகிறது. இதனால், இதற்கு முன்னர் இல்லாதபடி, வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, பனிப்பாறைகள் உருகி, கடல் நீர்மட்டம் உயர, கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நகரங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.

    காலநிலை மாற்றம்: பத்தாண்டுகள் முதல் பல மில்லியன் ஆண்டுகள் வரையிலான கால கட்டங்களில் நிகழ்ந்த வானிலை மாற்றத்தையே, காலநிலை மாற்றம் என்கிறோம். அது மிகத் தீவிரமான அல்லது தீவிரம் குறைந்த பருவநிலை மாற்றங்களைக் குறிப்பதாகும். காலநிலை மாற்றம் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது பூமி முழுவதிலுமோ நிகழலாம். மீண்டும் மீண்டும் சுழற்சியாக நிகழக்கூடிய எல் நினோ-தெற்கு அலைவு போன்ற காலநிலை மாதிரியாகவோ, அல்லது புழுதிப் புயல் போன்ற ஒரு தனிப்பட்ட நிகழ்வாகவோ கூட அது அமையலாம். காலநிலை மாற்றம் என்பது மனிதர்தம் இயற்கைக்கு முரணான பல்வேறு செயல்பாடுகளால் தூண்டப்பட்டு, மனிதர்கள் மற்றும் இன்னபிற உயிரினங்களின் வாழ்வாதாரங்களை பாதிப்புக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் பல்வேறு இடர்பாடுகள் ஒன்றிணைந்த ஒரு பேரிடராகும்.

    காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள்: எரிமலை வெடிப்புகள், பூமியை வந்தடையும் சூரிய ஒளியின் மிகுதியான கதிர்வீச்சு, புவி மேலோட்டுத்தகடுகளின் இயக்கத்தால் ஏற்படும் மாற்றம், பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற இயற்கையான நிகழ்வுகளும், பசுமையக வாயுக்களின் அளவுக்கு அதிகமான வெளியேற்றம், காடுகள் அழிப்பு, உயிரினப்பன்மய அழிப்பு போன்ற மனிதச் செயல்பாடுகளும் காலநிலை மாற்றத்திற்கான காரணங்களாக அமைகின்றன. மனிதரின் பல்வேறு இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளால் காலநிலை மாற்றம் உருவாகின்றது.

    எரிமலை வெடிப்புகள்: எரிமலை வெடிப்புகள், வெந்நீர் ஓடைகள் மற்றும் கொதிநீர் ஊற்றுக்கள், வாயு மற்றும் திடப்பொருட்களை வளிமண்டலத்தில் வெளியேற்றி, காலநிலையைப் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. மிகப் பெரிய எரிமலை வெடிப்புகள் ஒவ்வொரு நூறு மில்லியன் ஆண்டுகளில் சில முறைகளே நிகழ்ந்து, புவி வெப்பமயமாதல் மற்றும் உயிரின அழிவுக்கு வழிகோலுகின்றன. ஆனாலும், அறிவியல் ஆய்வுகள் எரிமலை வெளியிடுவதை

    Enjoying the preview?
    Page 1 of 1