Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Nagesh
Naan Nagesh
Naan Nagesh
Ebook326 pages3 hours

Naan Nagesh

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரான, திரையுலக ஜாம்பவான் திரு. நாகேஷ் அவர்களின் திரையுலக மற்றும் வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பே இந்நூலாகும்.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580160009325
Naan Nagesh

Read more from S. Chandra Mouli

Related to Naan Nagesh

Related ebooks

Reviews for Naan Nagesh

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Nagesh - S. Chandra Mouli

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நான் நாகேஷ்

    Naan Nagesh

    Author:

    எஸ். சந்திரமௌலி

    S. Chandra Mouli

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-chandra-mouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. வயிற்று வலி நோயாளி

    2. குகனுக்கு மரியாதை

    3. பாஸ் மார்க் வாங்கினால் புத்திசாலியா?

    4. அழகு கொடுத்த திமிர்

    5. படிப்புக்கு குட் பை

    6. பிடியுங்க ராஜினாமா!

    7. ‘ஏன் தம்பி இந்த வேலை?’

    8. ‘வேலை கிடைச்சாச்சு!’

    9. ‘என் டீக்காசைக் குடுடா!’

    10. வெள்ளிக் கோப்பை எங்கே?

    11. பத்தான் படுத்தின பாடு

    12. குட் ஷாட்!

    13. கிளப் ஹவுஸ் பிரவேசம்

    14. தை தாயானது!

    15. வெட்கப்பட வைத்த சீட்டாட்டமும் வேதனைப்படுத்திய லாண்டரிக்காரரும்

    16. பாலாஜி கொடுத்த இன்ப அதிர்ச்சி

    17. ஐந்நூறு ரூபாய் கற்பனை

    18. சொக்கு - மக்கு

    19. சிம்ம சொப்பன எம்.ஆர்.ராதா

    20. திரிசங்கு சொர்க்கம்

    21. வீணை பாலசந்தர் பார்த்த சாம்ராட் அசோகன்

    22. பாலமுரளியின் பெருந்தன்மை

    23. ‘நீர் நல்ல ரசிகன்!’

    24. எல்.வி. பிரசாத்தின் பாராட்டு

    25. டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் வாய்ப்பு

    26. வாகினி அதிபரைக் கிண்டல் பண்ணினேன்

    27. கார் வாங்க கடன்

    28. நாளாம் நாளாம் திருநாளாம்

    29. வாழ்த்து பலித்தது!

    30. டைரக்டர்னா கொம்பு முளைச்சவரா?

    31. ரயில்வே கேட் நகைச்சுவை

    32. முருகா! முருகா!

    33. கை கொடுத்த வானொலி

    34. சிவாஜியைச் சமாளித்தது எப்படி?

    35. ‘எங்கள் எம்.ஜி.ஆர். வாழ்க!’

    36. ‘காமெடிக்கு லாஜிக் கிடையாது!’

    37. மறக்க முடியாத தருமி!

    38. குறும்பு விளையாடல்கள்!

    39. ராவ்ஜி! பிரமாதம்டா!

    40. பாட்டும் மெட்டும்

    41. சாஸ்திரியிடம் ஒரு சத்தியம்

    42. வராத டான்ஸ் வந்தது

    43. ‘ராவுஜி! நீ ஜெயிச்சிட்டே!’

    44. யானை என்ன செவிடா?

    45. கலைந்துபோன இந்திக் கனவு!

    46. வருத்தமும் சந்தோஷமும்

    47. மீண்டும் வயிற்று வலி நடிப்பு

    48. எமனுக்கு கால்ஷீட்

    49. அம்மை என்கிற உளி!

    50. எங்க வாத்தியார்

    51. மரியாதைக்குரிய ஜே.கே.

    52. அந்தக் கால வெரைட்டி

    53. நிஜம் நிழலானது

    54. அறிவுரை சொன்ன ஆச்சி

    55. கமல் கமல்தான்

    56. ரஜினி ரஜினிதான்

    57. ஞானியார் அருள்

    58. விடை பெறுகிறேன்

    பல்லாங்குழி வாழ்க்கையில் விழுந்து எழுந்த என் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

    - நாகேஷ்

    முன்னுரை

    27 செப்டம்பர் 1933 அன்று கன்னட பிராமண குடும்பத்தில் பிறந்த நாகேஸ்வரனது குடும்பம் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் வசித்தாலும், அப்பாவுக்கு மைசூர் மாநிலத்தில் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக உத்தியோகம். மிகவும் கண்டிப்பான மனிதர். எஸ்.எஸ்.எல்.சி. முடித்த கையோடு கோவை பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் இன்டர்மீடியட் சேர்ந்தான் நாகேஸ்வரன். வீட்டில் செல்லப்பெயர் குண்டு ராவ். இரண்டாவது வருட பரிட்சைக்கு சில நாள்கள் முன்பாக கடும் அம்மை தாக்கியது. அது குணமடையும் தறுவாயில் இரண்டாவது தாக்குதல். அடுத்து மூன்றாம் தடவையும் தாக்கியது. பிழைத்ததே பெரிய விஷயம்தான். ஆனாலும் அந்த அம்மை, நாகேஸ்வரனது வாழ்க்கையை சுனாமியாகத் தாக்கி புரட்டிப்போட்டுவிட்டது. பால் வழியும் முகம்கொண்ட நாகேஸ்வரனது முகத்தில் அம்மை தனது ஆட்டோகிராஃபை கிறுக்கிவிட்டுப்போனது. மனம் வெறுத்த நாகேஸ்வரன் வீட்டைவிட்டு வெளியேறினான். இலக்கில்லா வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. பலவிதமான வேலைகள். ஹைதராபாத்தில் ஒரு கூலித் தொழிலாளியாகக்கூட வேலை பார்த்திருக்கிறான்.

    எதேச்சையாக எழுதிய ரயில்வே பரிட்சையில் தேர்வாகி, சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கிளார்க் வேலை கிடைத்தது. அங்கேதான் நாடக ஆசை துளிர்விட்டது. நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தான். அவனது நடிப்புத்திறமையால் ரசிகர்களின் கவனத்தை மட்டுமின்றி திரையுலகினர் கவனத்தையும் ஈர்த்தான்.

    1959ஆம் ஆண்டு முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் தாமரைக்குளம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் நாகேஸ்வரன் என்கிற நாகேஷ். ஹாலிவுட்டின் ஜெர்ரி லூயிஸ் பாணியிலான நாகேஷின் நகைச்சுவை நடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது.

    கே. பாலசந்தரின் தொடர்பு ஏற்பட்டு, நாகேஷுக்கென்றே கேரக்டர்களை உருவாக்கி, நாடகங்கள் எழுத, அவை அனைத்தும் தமிழ் மக்களிடம் அபாரமான வரவேற்பினைப் பெற்றன. அதற்கு முக்கியமான காரணங்கள், அவரது டைமிங் சென்சும், மிகவும் புதுமையான நடன அசைவுகளும் ஆகும்.

    ஒரு படத்தில் நடிகையுடன் சேர்ந்து நடனமாட வேண்டிய காட்சியில், சரியாக நடனம் ஆடாதது கண்டு டைரக்டர் நாகேஷின் மனம் புண்படும்படியாக கமெண்ட் அடித்துவிட, அன்று இரவு முழுக்க அறைக்கதவை சாத்திக்கொண்டு, கிராமபோன் ரெகார்டு ஒலிக்க, உண்ணாமல், உறங்காமல் பயிற்சிசெய்து மறுநாள் டைரக்டரை ஆச்சரியப்படுத்தி மனத்துக்குள் வெட்கப்பட வைத்தார் நாகேஷ்.

    நகைச்சுவை சிகரத்தைத் தொட்டதுடன் இல்லாமல், அங்கேயே பர்மனென்டாக டென்ட் அடித்துத் தங்கிவிட்டவர். அவர் உச்சத்தில் இருந்தபோது, மற்ற நடிகர்கள்போல எட்டு மணிநேர கால்ஷீட் தருகிற வழக்கமில்லை. எட்டு மணிநேரத்தை நாலாகப் பிய்த்து, நான்கு கம்பெனிகளுக்குக் கொடுப்பார். காலையில் அவரது வீட்டு வாசலில் ஏழெட்டு சினிமா கம்பெனிகளின் கார்கள் காத்துக்கொண்டிருக்கும். எந்தக் காரில் ஏறிக்கொண்டு ஸ்டுடியோவுக்குச் சென்றாலும், மற்ற கார்கள் அதைப் பின்தொடரும். அங்கே வேலை முடிந்ததும், எப்படியாவது தங்கள் பட ஷூட்டிங்குக்கு அழைத்துக்கொண்டு போய்விட வேண்டும் என்பது மற்ற அனைவர் நோக்கம்.

    தமிழ்த் திரையுலகில் இருபெரும் இமயங்களாக விளங்கிய

    எம்.ஜி.ஆர்., சிவாஜி, இருவருடனும் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்த பெருமை நாகேஷுக்கு உண்டு. அவர் எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களுள் பெரிய இடத்துப் பெண், அன்பே வா, எங்க வீட்டுப்பிள்ளை, நம் நாடு, ஆயிரத்தில் ஒருவன், பணக்காரக் குடும்பம், உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவை முக்கியமான சில படங்கள். அதேபோல சிவாஜியுடன் நடித்த படங்களில் தில்லானா மோகனாம்பாள், ரத்தத் திலகம், ஊட்டிவரை உறவு, கௌரவம், கலாட்டா கல்யாணம், சவாலே சமாளி போன்றவை குறிப்பிடத்தக்கவை. எம்.ஜி.ஆர்., சிவாஜி, இருவர் மட்டுமின்றி ஜெமினிகணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித் ஆகியோர்வரை தலைமுறைகள் கண்டவர் நாகேஷ்.

    திருவிளையாடல் படத்தில் சிவாஜி - நாகேஷ் இணைந்து நடித்த காட்சியில் தருமியாக நடித்ததும், தில்லானா மோகனாம்பாள் படத்தில் சவடால் வைத்தியாக நடித்ததும், நாகேஷுக்கு மிகப்பெரிய பேரையும், புகழையும் பெற்றுத்தந்தது. அதேபோல இன்றளவும் பேசப்படும் இன்னொரு காட்சி காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் தன் அப்பா பாலையாவுக்கு சினிமா கதை சொல்லும் காட்சி.

    நாகேஷ் சுமார் 600 படங்கள் நடித்திருப்பார் என்று கணக்கு சொல்கிறார் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். ஆனால், நாகேஷ் அந்த விபரங்களையெல்லாம் குறித்து வைத்துக்கொண்டதில்லை. ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடமேற்று லட்சக்கணக்கான ரசிகர்களை சிரிக்க வைத்த நாகேஷ், சர்வர் சுந்தரம், நீர்குமிழி, எதிர் நீச்சல், தேன் கிண்ணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தன்னால் வில்லனாகவும் திறம்பட நடிக்க முடியும் என்பதை கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் காட்டினார். பல்வேறு படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் நாகேஷ், பிணமாகக்கூட தன்னால் மிகச் சிறப்பாக நடிக்க முடியும் என்று மகளிர் மட்டும் படத்தில் நிரூபித்தவர்.

    ஒரு கட்டத்தில் நகைச்சுவையிலிருந்து குணச்சித்திர வேடங்களுக்கு மாறினாலும், அவரது நகைச்சுவை உணர்ச்சி மட்டும் என்றுமே குறையவில்லை. ஒருமுறை இன்றைய நகைச்சுவை நடிகர்கள் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அடித்த நச் கமெண்ட்: ‘சிலருக்கு டைமிங் சென்ஸ் நல்லா இருக்கு; சிலருக்கு டைம் நல்லா இருக்கு.’

    வாழ்க்கையை வெகு யதார்த்தமாக எதிர்கொண்டவர் நாகேஷ். பண விஷயத்தில் அவரை வெகு கறாரான மனிதர் என்று சினிமா உலகில் சொல்வார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் வெகு எளிமையான மனிதர் அவர். ‘எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே?’ என்பார். சினிமா உலகத்தினரது வீட்டு வரவேற்பறையில் அவர்கள் வாங்கிய ஷீல்டுகளை ஷோகேஸ் அமைத்து காட்சிக்கு வைப்பது சர்வசகஜம். ஆனால், நாகேஷ் வீட்டில் ஒரு ஷீல்டைக்கூட பார்க்க முடியாது. தன்னைப் பற்றி பெருமையாகப் பேசுவது நாகேஷுக்குப் பிடிக்காத விஷயம்.

    அவர் ‘வயதாகிவிட்டது; இனி நடிக்க வேண்டாம்’ என்று பலமுறை முடிவெடுத்திருக்கிறார். ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை. காரணம் பல இயக்குனர்களும், ‘இந்த ரோலை நீங்க பண்ணினாத்தான் நல்லா இருக்கும்; மறுக்காம சம்மதிக்கணும்’ என்று நிர்பந்தப்படுத்தும்போது அவரால் மறுக்க முடியவில்லை. உடம்பு முடியாத நிலையிலும் அவர் கமலுக்காக நடித்துக் கொடுத்த படம் தசாவதாரம்.

    ***

    கல்கியில் அவரது வாழ்க்கை அனுபவங்களை எழுதலாம் என்ற நோக்கத்துடன் அவரை சந்தித்துப் பேசியபோது, சுமார் ஒரு மணிநேரம் நிறைய பேசிவிட்டு, ‘இவற்றையெல்லாம் எதற்காக பத்திரிகையில் எழுத வேண்டும்? யாருக்கு என்ன பயன்?’ என்று ஒரு போடு போட்டார். அதனைத் தொடர்ந்து நானும் உடன் வந்திருந்த புகைப்படக்காரர் யோகாவுமாக அரை மணிநேரம் பேசி அவரை சம்மதிக்க வைத்தோம். அதன்பின் ஒவ்வொரு சந்திப்பின்போதும் அவர் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது.

    சினிமா மூலம் கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த, சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் நாகேஷ் சொந்த வாழ்க்கையில் பட்ட அவமானங்கள், வேதனைகள், ரணங்கள் ஏராளம். அவற்றைக்கூட அவ்வப்போது நகைச்சுவை கொப்பளிக்க தேர்ந்த ரசனையுடன் குரலில் ஏற்ற இறக்கம் கொடுத்து, மீண்டும் நினைவு கூறும்போது என்னை மறந்து சிரித்துவிடுவேன்.

    2009 ஜனவரியில் அவர் மரணம் அடைவதற்கு சில மாதங்கள் முன்பிலிருந்தே உடல்நலமில்லாமல் இருந்தார். அவ்வப்போது, அவரது வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு வருவது என் வழக்கம். அப்படி ஒருநாள் அவரது வீட்டுக்கு நான் சென்றிருந்த சமயம் இயக்குனர் கே. பாலசந்தரும் அங்கே வந்திருந்தார். தன் நெடுநாளைய நண்பனின் கைகளை வருடிக் கொடுத்தபடி, ‘ராவுஜி! எப்படிடா இருக்கே?’ என்று கே.பி. கேட்டபோது, பேச முடியாத நிலையிலும் நாகேஷின் உதட்டோரத்தில் ஒரு புன்னகை. அந்தப் புன்னகை இன்னும் என் மனத்தில் நிழலாடுகிறது. அடுத்த சில தினங்களில் (31 ஜனவரி 2009) அவரது மரணம் நிகழ்ந்தது.

    ‘நாகேஷ் இன்று நம்மிடையே இல்லை; எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’ - இது அவரது குடும்பத்தினருக்கு அல்ல; அந்த மகத்தான கலைஞனை உரிய முறையில் கௌரவிக்கத் தவறிய இந்திய அரசாங்கத்துக்கு.

    - எஸ். சந்திரமெளலி

    1. வயிற்று வலி நோயாளி

    A black and white image of a person's face Description automatically generated with medium confidence

    அப்போது எனக்கு ரயில்வேயில் வேலை. காலையில் ஆபீசுக்குப்போனால், ‘நான் உண்டு, என் வேலை உண்டு’ என்று இருப்பேன். வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தட்டிக்கேட்க ஆள் இல்லை. முதல் தேதியானால் சம்பளம் வந்துவிடும். ஒண்டிக்கட்டை. வாழ்க்கைச் சக்கரம் ஏதோ உருண்டோடிக் கொண்டிருந்தது.

    ஒருநாள், எனக்குள்ளே ஏதோ ஒரு வெறி! ஆபீசின் பல்வேறு பிரிவுகளுக்கும்போய், பலரிடமும், இங்கே பாட்டு, நாடகம் போன்ற விஷயங்களை ஊக்குவிக்கும் விதமாக ‘கலாசாரப் பிரிவு’ இயங்கி வருகிறதா? என்று கேட்டேன். பலருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. கடைசியாக ‘ம.ரா.’ என்று ஒருவர், நாடகங்களை எழுதி, இயக்கி வருவதாகவும், அந்த நாடகத்தில் ரயில்வேயில் வேலை பார்க்கிறவர்கள் நடிப்பதாகவும், எனக்குத் தெரியவந்தது. அந்த ம.ரா. என்பவரைப் போய்ப் பார்த்தேன்.

    ஒல்லியான உடம்புகொண்ட நான், அவர் முன்னால்போய் நின்றேனே ஒழிய, நான் அவர் கண்ணுக்குத் தென்படவே இல்லை.

    மெதுவாகச் செருமி, ஒரு வழியாக அவருடைய கவனத்தை நான் ஈர்க்க, ‘என்னய்யா வேணும்?’ என்று கேட்டார்.

    ‘நீங்க நாடகம் போடறீங்களாமே! அதுல நடிக்கணும்னு விரும்பறேன்’ என்றேன்.

    ‘இந்த உடம்பை வெச்சுக்கிட்டு நடிக்க வந்துட்டியா? இந்தக் காலத்துல யார்யாருக்கு நடிக்க ஆசை வரணும்னு விவஸ்தையே இல்லாமப் போயிடுச்சுப்பா!’ என்றார் இடக்கான குரலில்.

    அவர் சொன்னதற்காக நான் கவலைப்படவில்லை. ‘சார்! சார்! எனக்கு நடிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. உங்க நாடகத்துல ஏதாவது ஒரு சின்ன ரோல் கொடுத்தீங்கன்னாகூடப் போதும். நான் சந்தோஷமா ஏத்துக்குவேன்’ என்று கெஞ்சும் குரலில் கேட்டேன்.

    ‘நடிச்ச அனுபவம் ஏதாவது இருக்கா?’ இது அவரது அடுத்த கேள்வி.

    ‘இல்லை சார்! எனக்கு நடிப்புன்னா என்னன்னு தெரியாது சார்! ஆனா ஒரு சின்ன சான்ஸ் கொடுத்தீங்கன்னா, அதுல என் திறமையைக் காட்டமுடியும்னு தன்னம்பிக்கை இருக்கு சார்!’

    ‘உனக்கு தன்னம்பிக்கை இருக்கு! ஆனா எனக்கு உன்மேல நம்பிக்கை வரலையே! மேடையில, வேகமா படுதா அசைஞ்சாக்கூட விழுந்துருவேபோல இருக்கே!’

    ‘அப்படியெல்லாம் சொல்லிடாதீங்க சார்! ஒரு சின்ன ரோல் குடுங்க சார்! ப்ளீஸ்!’

    அடுத்த சில நிமிடங்களுக்கு, அவர் ஒன்றும் பேசாமல் ஏதோ யோசனை செய்துகொண்டிருந்தார். சட்டென்று, ‘ம்… ஒரு சின்ன ரோல் இருக்கு! வயித்து வலிக்காரனா நடிக்கணும்.’

    ‘சரி சார்!’

    ‘சின்ன ரோல்தானேன்னு நினைக்கக்கூடாது. சின்சியரா இருக்கணும். ரிகர்சலுக்கெல்லாம் தவறாம வந்துடணும்’ என்றார்.

    ‘சின்ன ரோலா இருந்தால் என்ன சார்! அதுலகூட என் திறமையைக் காட்டமுடியும்! ரொம்ப தேங்க்ஸ்.’

    ‘நாளையிலிருந்து ரிகர்சல்! கரெக்டா நேரத்துக்கு வந்திடணும்.’

    எனக்கு சந்தோஷமான சந்தோஷம்! நாமும் மேடை ஏறப்போகிறோம் என்பதை என்னால் நம்பக்கூட முடியவில்லை.

    மறுநாள் ஆபீஸ் முடிந்து நேரே நாடக ஒத்திகை நடக்கும் இடத்துக்குப் போனேன். ‘இப்படி உட்கார்! உன் சீன் வரும்போது சொல்றேன்’ டைரக்டர் சொல்லிவிட்டார்.

    ஒரு மூலையில்போய் உட்கார்ந்துகொண்டே இருந்தேன். அடுத்த சீனில் கூப்பிடுவாரோ என்று ஒவ்வொரு காட்சியாக எதிர்பார்த்துக் காத்திருக்க, ஏறத்தாழ நாடகம் முடியப்போகிற கட்டத்தில், ‘ம்… வா!’ என்று கூப்பிட்டார் டைரக்டர்.

    ‘காட்சியில் டாக்டர் அம்மா உட்கார்ந்திருப்பாங்க! அவங்க ஒரு வயித்துவலி நோயாளியைப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது ஹீரோ போய் அவங்களைப் பார்த்துப் பேசுகிறாற்போல சீன். நீதான் அந்த வயித்துவலி நோயாளி! உனக்குப் பெரிசா வசனமெல்லாம் கிடையாது! டாக்டர் அம்மா, அடுத்த பேஷண்டை வரச்சொன்னதும், நீங்க போறீங்க! என்ன பிரச்னைன்னு டாக்டர் கேட்க, நீங்க, ‘வயித்துவலி தாங்க முடியலையே!’ன்னு சொல்லணும். அவங்க மருந்து எழுதிக்கொடுத்ததும், நீங்க சீட்டை வாங்கிக்கிட்டு வந்திடணும்! இதுதான் சீன்! ஒழுங்கா நடிக்கணும்’ என்று காட்சியை விளக்கினார் டைரக்டர்.

    நானும், ஏதோ இந்த மட்டுக்கும் ஒரு சிறிய ரோலாவது கிடைத்ததே என்று திருப்திப்பட்டேன்.

    ஒருநாள் விடாமல் ஒத்திகைக்குப்போவேன். பதினேழாவது சீனில்தான் எனக்கு வேலை என்பதால், அதுவரை பொறுமையாகக் காத்திருப்பேன். சலிப்பாக ஏதாவது சொல்லி, அது டைரக்டர் காதுக்கு எட்டினால், இந்த சான்ஸும் போய்விடுமே என்கிற பயம் வேறு!

    ***

    சுமார் ஒன்றரை மாத காலம் ஒத்திகை முடிந்து, நாடகத்தின் அரங்கேற்றத்துக்கான தேதி குறிக்கப்பட்டது. கோகலே ஹாலில் நாடகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    முதல் தடவையாக மேடை ஏறப்போகிக்றோம் என்கிற சந்தோஷம்; ஒழுங்காக நடிக்க வேண்டுமே என்கிற பயம். இப்படி ஒரு கலவையான உணர்வுடன் மேடையின் பக்கவாட்டில், நான் நடிக்க வேண்டிய காட்சிக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.

    ‘அடுத்த பேஷண்ட்’ என்று டாக்டர் சொல்ல, காட்சி ஆரம்பித்தது. ‘சட்டென்று உள்ளே போ!’ என்று என்னை இலேசாகத் தள்ளினார் டைரக்டர்.

    ‘டாக்டர் கூப்பிட்டவுடன் உள்ளே போவதற்கு நான் என்ன கம்பவுண்டரா சார்! பேஷண்ட்! அதுவும் வயிற்று வலியால் துடிக்கிற பேஷண்ட்! எப்படி என்னால் கிடுகிடுவென்று நடந்து போகமுடியும்?’ என்று இலேசான குரலில், ஆனால், அழுத்தமாக பதில் சொல்லிவிட்டு, ‘டாக்டர்!’ என்று வீறிட்டு அலறியபடி மேடைக்குள் நுழைந்தேன்.

    திடீரென்று இப்படி ஒரு வீறிடும் குரலை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்கள், சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தனர். நிஜமாகவே வயிற்று வலியால் துடிக்கிற நோயாளிபோல உடலை வளைத்து, நெளித்து கைகளால் வயிற்றைப் பிடித்துக்கொண்டே நடந்து, டாக்டருக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த ஒரு ஸ்டூலில் போய் ஒரு வழியாக உட்கார்ந்துகொண்டேன்.

    ‘என்ன உடம்புக்கு?’ என்று டாக்டர் கேட்க, நான் அதை சட்டையே பண்ணாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டு, ‘அம்மா’ என்று துடித்தேன். என் கையில் ஒரு சீட்டு இருந்தது. அதை டாக்டரிடம் நீட்டினேன். அதை அவர் வாங்குவதற்குத் தன் கையைக்கொண்டு வந்தபோது சட்டென்று என் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு உடம்பை ஒரு குலுக்குக்குலுக்கி, ‘ம்மா ஆஆஆ…’ என்றேன். மறுபடி சீட்டைக் கொடுக்க கையை நீட்டினேன். டாக்டர் அதை வாங்கக் கையை நீட்டியபோது, என் கையைப் பின்னால் இழுத்துக்கொண்டு ‘அம்ம்ம்ம்ம்மா!’ என்று கத்தினேன்.

    ஒன்றரை நிமிடங்களுக்கு விதம்விதமான ஏற்ற இறக்கங்களைக் குரலில் கொண்டு வந்து ‘அம்மா’ என்று அலறி, துடித்துக் கதறி… ‘யாரடா இவன்! திடீரென்று வந்து இப்படி அமர்க்களப்படுத்துகிறானே!’ என்று பார்வையாளர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்! கைத் தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

    முதல் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக்கொண்டிருந்த செக்கச் சிவந்த மனிதர், கை தட்டி என் நடிப்பை ரொம்பவும் ரசித்ததையும் நான் கவனித்தேன்.

    ‘அட! நம்மகிட்டேயும் விஷயம் இருக்கு போலிருக்கு! இத்தனை ஜனங்களும் எப்படி கை தட்டி ரசிக்கிறாங்க!’ என்ற சந்தோஷம் ஒரு பக்கம் என்றாலும், ‘நான் சொன்னதைச் செய்யாம, நீ பாட்டுக்கு அதிகப்பிரசங்கித்தனமாக என்னென்னவோ பண்ணிட்டியே!’ என்று டைரக்டர் கோபித்துக் கொள்ளுவாரோ என்ற பயம் இன்னொரு பக்கம்.

    நான் சீனை முடித்துவிட்டு, விண்ணதிரும் கரகோஷங்களுக்கு இடையில் வந்தபோது, ‘அட! போனாப்போகுதுன்னு ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1