Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vayathu 17
Vayathu 17
Vayathu 17
Ebook400 pages2 hours

Vayathu 17

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580126705282
Vayathu 17

Read more from Ra. Ki. Rangarajan

Related to Vayathu 17

Related ebooks

Reviews for Vayathu 17

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    wow what a novel Have read this story when i was very small in hard copy .Never even imagined i will get an opportunity like this to read on scribd Author has taken the readers into the reality seldom novels are like this we are missing such a wonderful writers

Book preview

Vayathu 17 - Ra. Ki. Rangarajan

http://www.pustaka.co.in

வயது 17

Vayathu 17

Author:

ரா. கி. ரங்கராஜன்

Ra. Ki. Rangarajan

For more books

http://www.pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

அத்தியாயம் 30

முன்னுரை

ரா.கி.ரங்கராஜன்: 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத் திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள் - என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளார்;

- கல்கி

'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'

- சுஜாதா

*****

1

தீர்ப்பை நீதிபதி வாசித்து முடிக்கிற வரையில் அருணுக்குப் பொறுமையில்லை. இதைக் காட்டிலும், மாணவனாய் லட்சணமாய் சட்டக் கல்லூரியில் பேராசிரியரின் போரையே சகித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாமே?

ஒன்றா, இரண்டா? ஃபுல்ஸ்காப் காகிதத்தில் ஒன்பது தாளாவது இருக்கும். இப்போதுதான் பாதி வந்திருக்கிறது.

கோர்ட் அறையின் ஒரு மூலையில், கதவுக்குப் பக்கமாக உட்கார்ந்திருந்தான் அருண். இருக்கை கொள்ளாததால், விரல்கள் பெஞ்சியில் துருத்திக் கொண்டிருந்த ஓர் ஆணியை வெளியே இழுப்பதும் உள்ளே தள்ளுவதுமாகச் சேட்டை புரிந்தவாறிருந்தன.

‘என்னய்யா வளவளவென்று!' - தன் மனத்துக்குள் திட்டிக் கொண்டான் அருண். பத்மனாபன் பல முறை சொல்லியிருக்கிறான் இந்த ஜஸ்டிஸ் நீலமேகத்தைப் பற்றி. சுத்த இது.

அருகில் நின்றிருந்த டவாலி கொட்டாவி விட்டான். அவனை அப்படியே கட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது அருணுக்கு.

ஜஸ்டிஸ் நீலமேகம் ஒரு கண்ணாடியைக் கழற்றி, சாவதானமாக மேஜைமீது வைத்துவிட்டு, வேறொரு கண்ணாடியை இன்னொரு பிளாஸ்டிக் கூட்டுக்குள்ளிருந்து எடுத்து மாட்டிக் கொண்டு மேலே தொடர்ந்தார். ஷார்ட் ஸைட், வெள்ளெழுத்து, சாளேசுரம் எல்லாக் கோளாறுகளுக்கும் சேர்ந்து, ஒரே கண்ணாடியாகப் பிரமாதமாய்த் தயாரிக்கிறார்கள். என்ன ஜட்ஜ் உத்தியோகம் பார்த்து என்ன? இந்தச் சின்ன விஷயம் தெரியாமல், ஒவ்வொரு நிமிடத்துக்கு ஒரு கண்ணாடி என்று மாற்றிக் கொண்டிருக்கிறீர்! ஹூம்!

எழுந்து போய் ஒரு கிரஷ்ஷாவது குடித்துவிட்டு வரலாமா? செருப்பைத் துழாவி, மெதுவாய் மாட்டிக் கொண்டான் அருண். ஒரு கால் அவன் வருவதற்குள் தீர்ப்புச் சொல்லி முடித்துவிட்டால்? அந்த முக்கியமான கட்டத்துக்காகக் காத்திருந்ததெல்லாம் வீணாகிவிடாதா? அருண், கழுத்தை உயர்த்தி, பிராசிக்யூட்டரின் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நண்பனைப் பார்த்தான். பத்மனாபனுக்கு எத்தனை அமைதி! அவர் சிரிக்கிறாரா, கோபமாய் இருக்கிறாரா? கொஞ்சம் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்களேன், என்று பத்மனாபனின் மனைவி கல்யாணி அடிக்கடி அருணிடம் சொல்வதுண்டு. அத்தனையும் அவ்வளவும் உண்மை. அழுத்தக்காரன். நம்மைப் போல் நூறு மடங்கு பதற்றம் அவனுக்கு இருக்கும். நிச்சயம். ஆனால் என்ன கம்பீரமாக, எப்படிப்பட்ட அறிவாளித்தனமான புன்னகையுடன் நீதிபதியின் ஒவ்வோர் உச்சரிப்பையும் ரசித்து மகிழுகிற மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறான்.

பத்மனாபா! நீ அரசாங்க வக்கீலாக ஒளி வீசுவாயோ மாட்டாயோ, நடிப்புத் தொழிலில் புகுந்தால் உனக்கு மண் காட்ட ஓர் ஆள் இருக்காது!

... ஆகவே, இரண்டு தரப்பு வாதங்களையும் ஒப்பிட்டுக் கவனிக்கையில்...

அருண் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

ஜஸ்டிஸ் நீலமேகம் தீர்ப்பைச் சொல்லி முடித்தார். 'நெக்ஸ்ட்' என்று இன்னொரு கட்டை எடுத்து வைத்துக் கொண்டு, மீண்டும் கண்ணாடி மாற்று படலத்தில் இறங்கினார்.

அருணின் முகம் மலர்ந்து விரிந்தது.

பத்மனாபன் முதல் தடவையாக, அவனைப் பார்த்துப் புன்னகை செய்தான். அந்தப் புன்னகையின் விரிவு அரையங்குலம்தான் இருந்தது. ஆனால் அதில் செறிந்திருந்த திருப்தியும் பெருமிதமும் நன்றியும் ஆயிரம் டன் எடைக்கு மேலேயே இருந்திருக்கும்.

அருணுக்குக் கையும் காலும் பறந்தன. சில்க் ஸ்லாக் சட்டையின் ஒரு பக்கத்துப் பையில் கைவிட்டான். ஒரு பிடி சில்லறை வந்தது. அப்படியே, பக்கத்திலிருந்த டவாலியின் கையில் அழுத்தி, இவ்வளவுதான் இருக்கிறது! என்று சொல்லிவிட்டு, கோர்ட் ஹாலை விட்டு வெளியே வந்தான்.

கல்யாணிக்குச் சொல்ல வேண்டும் முதலில். இவனைப் போல உம்மணா மூஞ்சியா அவள்? இல்லை. மகிழ்ந்து போவாள். ஐந்தே நிமிஷத்தில் ஒரு கேசரியாவது கிளறி, இந்தாருங்கள் ஸ்வீட் என்று வெள்ளித் தட்டில் வைத்து நீட்டுவாள். சாயந்தரம் சினிமாவுக்குக் கட்டாயம் போகவேண்டும். பத்மனாபன் பிகு செய்வான். விடக் கூடாது.

வெளி வெராந்தாவில் நின்றபடியே கோர்ட்டை நோக்கினான் அருண். என்ன இது? பத்மனாபன் வரவே மாட்டானா?

பிராசிக்யூடர் பத்மனாபன் கட்டுகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். எதெதிலோ கையெழுத்துப் போட வேண்டியிருந்தது. யார் யாருக்கோ பதில் சொல்ல வேண்டியிருந்தது. இரண்டொருவர் அவன் கையை லேசாகக் குலுக்கிப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். கோர்ட் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் பாராட்டையும் பெற்று, நன்றியையும் தெரிவித்தவாறிருந்தான் பத்மனாபன்.

அருணுக்குச் சலிப்பு ஏற்பட்டது.

இவன் எப்போது வந்து, எப்போது வீட்டுக்குப் போய்...

கல்யாணிக்குப் போன் பண்ணிச் சொல்லிவிட்டால்?

விடுவிடுவென்று வக்கீல்களின் அறை வரிசை வழியே நடந்தான்.

கட்சிக்காரர்களும், சாட்சிகளும், ஜூனியர்களும் பல்வேறு நிலையில் பல்வேறு பாவங்களில் காட்சியளித்தார்கள் ஒவ்வோர் அறையிலும். சில அறைகளில் உரத்த வாக்குவாதம் கேட்டது. சாயபு! நீர் கவலையே படாதேயும். இவன் ஒரு மடையன்... என்று ஒரு குரல். கறிகாயையும் பழங்களையும் வீட்டண்டேயே இறக்கி விட்டேனுங்க, என்று இன்னோர் தகவல். டக் டக் கென்று குதிகால் செருப்பணிந்த ஒரு பெண் அருணைத் தள்ளிக் கொண்டு விரைந்தாள்.

வக்கீல் அனந்துவின் அறை கொஞ்சம் சௌகரியமாய் இருக்கும். தனி அறை வைத்திருக்கிறவர் அவர். இந்த மாதிரி ஏழெட்டுப் பேருடன் கூட்டுத் குடித்தனம் பண்ணுகிறவரல்ல. ஆனால் அவருக்கும் உடும்புக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். உடும்புக்குத் தொண தொணக்கத் தெரியாது.

அட! அருணா! எது, சட்டக் கல்லூரி மாணவனுக்கு ஹைகோர்ட் பக்கம் கூட காற்றடிக்கிறது!

அயன் அனந்துவேதான்!

ஆனால் நல்லவேளை, எங்கேயோ கிளம்பிக் கொண்டிருக்கிறார். கத்தரித்து விடலாம்.

வணக்கம் சார். ஒரு சினேகிதனைப் பார்ப்பதற்காக வந்தேன். சாரையும் பார்த்து ரொம்ப நாளாயிற்றே என்றுதான்...

இதோ பார்! என்று வக்கீல் அனந்து தனது இரு செவிகளையும் பிடித்து இழுத்துக் காட்டினார் அருணுக்கு. எனக்கு ஒரு வயசாகிற போதே என் அப்பா அம்மா காது குத்திவிட்டார்கள். நீ வேறு செய்யாதே!

ஐயய்யோ! பொய்யில்லை. சார், நிஜமாய்!

சரி, சரி. உன் வாலை நிமிர்த்த நம்மாலே ஆகாது! என்றார் அனந்து. நான் சொல்வதைக் கேள். படி படி என்று அப்பா உன் பிராணனை வாங்குகிறார் என்பதற்காக, நாலு வருஷமாய் லா படிக்கிறதா? உன்னோடு படித்தவனெல்லாம் இரண்டு பை போதாமல் நாலு பை தைத்துக் கொள்கிறான்! பேசாமல் ஏதேனும் ஒரு வேலை பார்த்துக் கொள்ளக் கூடாது? மூளையை மட்டும் ஒழுங்காய் உறுதியாய்ச் செலவழித்தால் உன்னை எவன் ‘பீட்' பண்ண முடியும்?

வக்கீல் சார்! எவ்வளவோ தெரிந்த நீங்கள் கூட இப்படிச் சொல்லலாமா? நான் வேலைக்குப் போனால், உண்மையிலேயே வேலைக்காக அலைகிற ஒருத்தன் வாயில் மண்தானே? அந்தப் பாவம் எனக்கேன்?

பேசடா ராஜா பேசு! என்று அவர் பெருமூச் செறிந்தார். அப்பா ஒரு முனிசிபல் கமிஷனர்! ஒரு அண்ணன் பிலாயில் எஞ்சினியர், ஒரு அண்ணன் நேவியில் அதிகாரி, ஒரு அண்ணன் இந்துஸ்தான் டெலிபோனில் ஆபீசர், ஒரு அண்ணன் பம்பாயில் கவர்மெண்ட் செகரட்டரி, ஒரு அண்ணன் ஷேர் மார்க்கெட் சூரன் - என்று ஐந்து பேர் படியளக்க எனக்கும் இருந்தால் உன்னைக் காட்டிலும் உல்லாசமாக ஊர் சுற்றுவேன்!

கண் வைக்காதீர்கள் சார்! என்று கெஞ்சினான் அருண். இந்த மாசம் இந்த நிமிஷம் வரை ஐந்து பேரும் கப்சிப் பணம் அனுப்ப மறந்து விட்டார்கள், சார்! உங்களைப் போன்ற குடும்ப சினேகிதர்களைத் தான் பிடிக்க வேண்டும் என்றிருக்கிறேன்...

அப்பா மகாராஜா போய் வா என்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, வெட்டிக் கொண்டார் வக்கீல் அனந்து.

கொஞ்சம் போன் பண்ணணும், சார்! ரூம் திறந்திருக்கிறதா?

ஜூனியர் இருக்கிறான். ஞாபகமாய்ப் பதினைந்து பைசாவைக் கொடுத்துவிடு அவனிடம்

பத்மனாபனின் மனைவிக்குப் போன் செய்து தகவலைத் தெரிவித்த பிறகு, இன்னொரு யோசனை தோன்றியது.

ஜூனியரின் கையில் விரிந்திருந்த தினசரித்தாள் தான். அதற்குக் காரணம்.

எண்களை மறுபடி ஒருமுறை சுழற்றினான். உதவி ஆசிரியர் திருவேங்கடம் என்று ஒருத்தர் இருக்கிறாரா சார் அங்கே? என்று கேட்டான்.

ஆமாம்.

கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? ஒரு சினேகிதர் என்று சொல்லுங்கள்.

பலவிதமான பொத்தான் ஓசைகளுக்குப் பிறகு, திருவேங்கடம் லயனில் கிடைத்தார்.

கடகடவென்று ஆரம்பித்தான் அருண்: என்னை நினைவிருக்கிறதா சார்? அருண்! போன மார்ச் மாதம் மதுரையிலிருந்து உங்களோடு பட்டணம் வரையில் வந்தேனே? நீங்கள் கூட உங்கள் விலாசம் கொடுத்தீர்களே?

உதவி ஆசிரியர் திருவேங்கடம் இப்படிப் பல பேரிடம் விலாசம் கொடுத்து விட்டுத் திண்டாடியவர் என்பது அவரது பதிலிலேயே தெரிந்தது. இருக்கும். ஆமாம். என்ன வேண்டும்?

ஒன்றுமில்லை. ஒரு சின்ன உதவி. ஜெயஸ்ரீ கம்பெனி மோசடி வழக்கு என்று எட்டு மாதமாய் நடக்கிறதில்லையா?

ஆமாம்... லட்ச ரூபாய் மோசடி வழக்குதானே?

அதே அதே! அப்பீலிலே தீர்ப்பு சொல்லிவிட்டார்கள். சாயந்தரப் பேப்பரில் நியூஸ் போடுவீர்களோ?

ரிப்போர்ட்டர்கள் நியூஸ் கொண்டு வந்தால், தகுந்தபடி செய்வோம்.

என்னமோ போல் சொல்கிறீர்களே? சார் கட்டாயம் பிரசுரியுங்கள். பொது மக்கள் ரொம்ப ஆவலாய்ப் படிப்பார்கள்.

ஆகட்டும், பார்க்கலாம் என்றார் உதவி ஆசிரியர். ஆமாம், இதிலே உங்களுக்கு என்ன அக்கறை?

கேட்டீர்களே ஒரு கேள்வி. பிராசிக்யூஷன் தரப்பில் பூராபூரா கேஸை நடத்தியது பத்மனாபன் என்ற என் உயிர் சினேகிதன் தான். முதல் கேஸ்...

உதவி ஆசிரியர் இடைமறித்தார். பிராசிக்யூட்டராக இருப்பது தாஸ் இல்லையோ?

ஆமாம், ஆமாம். அவருடைய அஸிஸ்டெண்ட் தான் இந்தப் பத்மனாபன். கடைசி இரண்டு நாளைக்கு தாஸ் வரவேயில்லை உடம்பு சரியில்லை என்று. நீரே நடத்தய்யா! இனிமேல் அட்ஜர்ன்மெண்ட் தர முடியாது! என்று ஒரு நாள் ஜஸ்டிஸ் நீலமேகம் பச்சைக் கொடி காட்டிவிட்டார். அதற்கப்புறம், என் சினேகிதன் பத்மனாபனே பாயிண்ட் பாயிண்டாய்ப் பிய்த்து...

சரி. கவனிக்கிறேன்; அவ்வளவுதானே?

பத்மனாபனின் பெயரைக் கொஞ்சம் பெரிய எழுத்தில்...

எப்படி வழக்கமோ அப்படிச் செய்கிறோம். முதலில் நியூஸ் வரட்டும்.

நன்றி சார், என்று டெலிபோனை வைத்தான் அருண்.

பெரிய காரியத்தைச் சாதித்துவிட்ட திருப்தியுடன், ஸ்லாக் பையில் கையை நுழைத்தான். வெறும் கை வெளியே வந்தது. மறு பையை ஆராய்ந்தான். ஒற்றை ரூபாய்த் தாள் கிடைத்தது. முப்பது பைசா டெலிபோனுக்கு. பாக்கியில், ஓட்டலை அடைந்துவிடலாம்.

தாங்க்ஸ் சார், என்று நீட்டினான் வக்கீல் அனந்துவின் ஜூனியரிடம். அவர் இன்னும் தினசரியிலேயே மூழ்கியிருந்தார்.

கையை விரித்தார் அவர். சில்லறை இல்லையே? அப்புறம் வேண்டுமானால் கொடுங்கள்.

நான் மாற்றி வந்து தருகிறேன்.

வெராந்தாவுக்கு வந்தான்.

அவசர அவசரமாய்ச் சென்று கொண்டிருந்த அந்த யுவதிதான் அவன் சந்தித்த முதல் நபர்.

ஆபத்துக்குத் தோஷமில்லை. மன்னிக்க வேண்டும்... சில்லறை இருக்குமோ?

நோ! என்று கடுமைாயகப் பதிலளிப்பதைத் தான் ‘பாஷன்' என்று அந்த வயதுப் பெண்கள் நினைப்பது வழக்கம். இவள் அப்படியில்லாமல், சிறிய பர்ஸொன்றைத் திறந்து, இரண்டு எட்டணாத்தான் இருக்கிறது, என்று கூறிக் கொடுத்தாள். பிறகு, எட்டாம் நம்பர் கோர்ட்டாமே. அது எங்கேயிருக்கிறது? என்று ஆர்வத்துடன் விசாரித்தாள். சாக்லேட் நிறத்தில் பாவாடை தாவணியும், செக்கச் செவேலென்ற சோளியும் அணிந்திருந்தாள் அவள்.

நேரே போய், படியேறி, வலது கைப் பக்கம் திரும்புங்கள், என்று வழிகாட்டினான் அருண். அப்போதுதான் அந்த முகத்தையும் கூர்ந்து கவனித்தான். பதற்றம் முத்து முத்தாக வியர்த்திருந்தது.

நன்றி, என்று அவள் புறப்பட்டாள். அப்படித் திரும்பிய வேகத்தில், அவள் முகத்தை மீண்டும் பார்க்க இதுதான் சாக்கு என்று நினைத்த மாதிரி, பின்னல் சரேலென முன்னால் வந்து எட்டிப் பார்த்துவிட்டு நகர்ந்தது.

அருண் பின்தொடர்ந்தான். நான் கேட்டது சில்லறை. நீங்கள் கொடுத்தது தானம்.

திகைத்து நின்றாள் முதலில். அருணின் நீட்டிய கையில் இருந்த நோட்டைக் கண்டதும் நாணத்துடன் புன்னகைத்தபடி பெற்றுக் கொண்டாள்.

எட்டாம் நம்பர் கோர்ட்டையா தேடுகிறீர்கள்? அருணுக்கு ஏதோ சந்தேகம் தட்டியது. அங்கே யாரைப் பார்க்க வேண்டும்?

யாரையும் பார்க்கக் கூடாது! குறும்பைக் காட்டிலும் கவலை அதிகம் தென்பட்டது அந்த விழிகளில். முக்கியமாக என் அப்பா வந்திருப்பார். தீர்ப்பு என்னவென்று தெரிந்து கொள்வதற்காக. அவர் கண்ணிலே பட்டு விடாமல், தீர்ப்பை மட்டும் தெரிந்து கொண்டு போக வேண்டும்.

தீர்ப்பா?

ஜெயஸ்ரீ கம்பெனி கேஸில் இன்றைக்குத் தீர்ப்பு... கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று காலேஜுக்குக்கூட மட்டம் போட்டுவிட்டு ஓடி வந்தேன். பட்டுப் போன்ற கையின் பவுன் வளையல்களை நெருடியவாறே அவள் பதிலளித்தாள்.

அதுவா? தீர்ப்புச் சொல்லிவிட்டார்களே!

எப்போது? சங்கு போன்ற கழுத்து, சிலிர்த்து நிமிர்ந்தது. இன்னும் நேரமாகுமென்று சொன்னார்களே?

கொஞ்சம் முந்திதான் சொன்னார்கள். நான் அங்கேயிருந்துதான் வருகிறேன்... உங்களுக்கு... யார்...

தீர்ப்பு என்ன, அதைச் சொல்லுங்கள் பரபரத்தாள் அவள் கையைப் பிசைந்து கொண்டு. அண்ணாவை விட்டு விட்டார்களா? விடுதலை செய்து விட்டார்களா?

அண்ணாவா? அருணின் குரலில் தயக்கமும் கலக்கமும் தொனித்தன.

ஆமாம். மூர்த்தி என்பது என் சொந்த அண்ணா தான். யாரோ பொறாமைக்காரர்கள், அவன் பிரமாதமாய்ப் பிஸினஸ் பண்ணுவது பொறுக்காமல், கன்னா பின்னாவென்று ஜோடனை பண்ணி... போகட்டும். விடுதலை செய்துவிட்டார்கள் இல்லையா?

அருண் நிலை குலைந்தான்.

அடக்கடவுளே! என்னுடைய ஆனந்த மாளிகை இவளுடைய கண்ணீரின் மீதா கட்டப்பட்டிருக்கிறது! என்று நினைக்கும் பொழுது அவன் மனத்தில் வேதனை ஏற்பட்டது. கேள்விக்குறியாக விரிந்து நிற்கும் கண்கள், ஆச்சரியக் குறியாக நிமிர்ந்து நிற்கும் அதரங்கள் - இவற்றைப் பார்த்த பின்னும், எப்படிச் சொல்வது உண்மையை?

அ... ஆமாம்... வந்து... என்று தடுமாறியதை அவள் தவறாகப் புரிந்து கொண்டாள்.

எனக்கு அப்போதே தெரியும்! விடுதலை செய்து விடுவார்கள் என்று! குதூகலமாகப் பேசினாள் அவள். சுட்டு விரலை ஆட்டும் போது, செக்கச் செவேலென்ற நகப்பூச்சு டாலடித்தது. இந்த அம்மா ஒரு பயந்தாங் கொள்ளி! அப்பா, சும்மா இரைவதோடு சரி! நான்தான் ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கையாய் இருந்தேன்... ரொம்ப தாங்க்ஸ்! வீட்டுக்குப் போய் அம்மாவிடம் சொல்ல வேண்டும்! என்றவள், எட்டாம் நம்பர் கோர்ட்டின் திசையை ஏக்கத்துடன் பார்த்து, அப்பாவின் கண்ணில் பட்டேனோ, சட்னிதான்! என்று முணு முணுத்தவாறே திரும்பி ஓடினாள்.

மிஸ்டர் மூர்த்தியைப் பார்த்தால் ரகசியமாய்ச் சொல்கிறேன், ‘உங்கள் தங்கை வந்திருந்தார்' என்று! என்றான் அருண். உங்கள் பெயர்?

மாயா! கட்டாயம் அண்ணாவிடம் சொல்லுங்கள். ரொம்பச் சந்தோஷப்படுவான் வெராந்தாவின் திருப்பத்தில் அவள் சென்று மறைந்து விட்டாள்.

அருண் மெல்ல நடந்தான். சிறகொடிந்த பறவையாக அவனுடைய உற்சாகம் அந்த வெராந்தாவிலேயே விழுந்து துடித்தது.

என்ன அருண், ஒரு கங்கிராஜுலேஷன், கை குலுக்கல், காபி எதுவும் கிடையாதா எனக்கு?

வெற்றிப் புன்னகை முகத்தில் கூத்தாட எதிரில் நின்றான் பத்மனாபன்.

வா, வா! வீட்டுக்குப் போகலாம். உனக்காகத் தான் காத்திருக்கிறேன்.

அடப்பாவி! என்னவோ ஜெயிலுக்கு நீ போகப் போகிற மாதிரியல்லவா பேசுகிறாய்! என்ற பத்மனாபன், நண்பனின் கலக்கத்துக்குக் காரணம் புரியாமல் திகைத்தான்.

மாயாவுக்குத் தரையிலே கால் பாவவில்லை.

நடையிலே துள்ளளுடன், ஹைகோர்ட்டின் துருப்பிடித்த பழைய கேட்டை ஒரு தட்டுத் தட்டிவிட்டு, சைனா பஜாருக்கு வந்தாள்.

சேத்துப்பட்டுக்குச் செல்லும் பஸ், சைனாபஜாரின் கோடியில், அனாதையாக நின்றிருந்தது. காலி காலியாயிருந்த ஆசனங்கள் அவளை வா வாவென்று அழைத்த போதிலும், மாயாவுக்கு அதில் செல்ல இஷ்டமில்லை. ஒன்றரை மணி நேரம் ஊர்ந்து போகும். அதற்குள் அப்பா, அண்ணா எல்லாரும் வந்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னதாக வீட்டையடைந்து எல்லோருக்கும் சொல்ல வேண்டாமா?

டாக்ஸி! டாக்ஸி! என்று கை தட்டிக் கூப்பிட்டாள்.

நடைபாதை ஓரத்துக்கு விர்ரென்று வளைத்து வண்டியைக் கொணர்ந்தான் டாக்ஸியோட்டி. பின் ஸீட்டில் அமர்ந்து கொண்டாள். சேத்துப்பட்டு பூந்தமல்லி ஹைரோடில் ஓட்டு. பர்ஸை முன்னெச்சரிக்கையாகப் பார்த்துக் கொண்டாள். மூன்று ஒற்றை ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. ஒன்று ‘அவர்' கொடுத்தது. நல்ல மனிதர்.

ஸீட்டில் அவள் விரல்கள் தாளமிட்டன. ஜன்னல் கண்ணாடியில் வெறும் விரலினால் பல கோலங்கள் இட்டாள்.

சாயந்தரம் பேப்பரில் வரும் ஊருக்கெல்லாம் அப்புறம் தெரியும். ‘மிஸ்டர் மூர்த்தி குற்றவாளி அல்ல ஒரு நயா பைசா மோசடி கூடச் செய்யத் தெரியாது அவருக்கு’ - என்பதெல்லாம் அப்புறம்தான் விளங்கும்!

டாக்ஸியில், ஸ்டியரிங்குக்குப் பக்கத்தில் உள்ள மாடத்தில் அன்றைய தினசரி இருந்தது.

அந்தப் பேப்பரைக் கொஞ்சம் கொடுக்கிறீர்களா? என்று கை நீட்டினாள் மாயா. ஒரு நியூஸ் பார்க்க வேண்டும்.

டிரைவர் ரொம்ப அழுத்தம். என்ன நியூஸ்? என்று கேட்காமலே, ஏன் தலையைக் கூட திருப்பாமலே, பேப்பரை எடுத்துத் தந்துவிட்டு, வண்டியை ஓட்டினான்.

சரக் பரக்கென்று சத்தம் கேட்கிற மாதிரி இப்படியும் அப்படியும் புரட்டினாள் பேப்பரை. ஊஹும், காணவில்லையே? அந்த ஜெயஸ்ரீ கம்பெனி வழக்கிலே தீர்ப்பு என்று சொன்னார்கள், ஒன்றையும் காணோம்! என்று வாய்விட்டே முணுமுணுத்தாள். பிறகு தானாகவே கலகலவென்று சிரித்துக் கொண்டு, அடடே நான் ஒரு சுத்த இவள்! இன்றைக்குத் தீர்ப்பு என்றால், இன்றைக்குச் சாயந்தரம், இல்லாவிட்டால் நாளைக் காலையில் தானே பேப்பரில் வரும் என்று சொன்னாள்.

கடன்காரன்! கொஞ்சம் திரும்பி என்ன விஷயம், எது என்று கேட்கமாட்டானா?

டேய் முனியாண்டி! என்று டாக்ஸியிலிருந்து இறங்கும் போதே கூவினாள் மாயா. அண்ணாவை விடுதலை பண்ணிவிட்டார்கள்! நேரே கோர்ட்டுக்கே போய்க் கேட்டுவிட்டு வருகிறேனாக்கும்! தகவலைத் தெரிவித்தவாறே டாக்ஸியோட்டிக்குப் பணத்தைக் கொடுத்தாள்.

காம்பவுண்டுச் சுவரை ஒட்டினாற் போலிருந்த கிணற்றடியில் பற்றுத் துலக்கிக் கொண்டிருந்த வேலைக்காரி ஓட்டமாய் ஓடி வந்தாள். சின்னையா வந்துவிடுவாராம்மா? ஆமாம், யாரும் கோர்ட்டுக்கு வரக்கூடாது என்று பெரிய ஐயா கண்டிப்பாய் உத்தரவு போட்டிருந்தாரே துணிஞ்சு போனீங்களா, சின்னம்மா?

ஹா! பெரிய உத்தரவு! போடி சரிதான்! என்று உதட்டைச் சுழித்துவிட்டு உள்ளே ஓடினாள் மாயா.

சமையல் கட்டிலிருந்த அம்மா, சப்பாத்திக்கு மாவு பிசைந்த கையோடு புடவைத் தலைப்பை முழங்கையால் இழுத்துச் செருகிக் கொண்டு, புறங்கையால் நெற்றிக் கூந்தலை ஒதுக்கிக் கொண்டு பதறப் பதற வந்தாள். மூர்த்தியை விட்டு விட்டார்களா? நிஜமாகவா? தாயே, மீனாட்சி! வெள்ளி தவறாமல் உனக்கு நெய் விளக்குப் போடுகிறேனடி அம்மா!

மாயாவுக்குக் கோபம் மூக்குக்கு மேல் வந்தது. யார் சொன்னது உனக்கு? இந்த ஓட்டை வாய் முனியாண்டியா? உன்னை யாரடா சொல்லச் சொன்னது? அம்மாகிட்டே முதலிலே நான் சொல்லவேண்டும் என்று அத்தனை ஆசையாய் வருகிறேன். எல்லாவற்றையும் கெடுத்து...

யார் சொன்னால் என்னடி மாயா? என் வயிற்றில் பால் வார்த்தாயே! இரு, சுவாமி சன்னிதியில் இரண்டு ஊதுவத்தி ஏற்றி நமஸ்காரம் பண்ணிவிட்டு வருகிறேன் என்று உள்ளே திரும்பினாள் அம்மா.

முனியாண்டிக்குச் சின்ன எஜமானியைச் சாந்தப்படுத்த வேண்டுமென்ற தவிப்பு.

சின்னம்மா! என்றான் மெல்ல.

என்ன?

எனக்கு ஒரு பிரமாதமான யோசனை தோணுது! பெரிசாய் ஒரு ரோஜாப்பூ மாலை வாங்கி வைச்சிருந்து ஐயா வந்ததும் நீங்க போடுங்க! நாங்கள்ளாம் கை தட்டுகிறோம்! எப்படி! என்றான்.

ஐடியா! என்று தன் உள்ளங்கையில் ஒரு குத்து வைத்துக் கொண்டாள் மாயா, தன் கோபத்தை அந்த நொடியே மறந்து உள்ளே ஓடிப்போய்ப் பணம் எடுத்து வந்தாள். இந்தா ஐந்து ரூபாய்! பிரமாதமான மாலையாக இருக்கணும்! ஒரு அரளிப் பூ இருந்தது. ஒரு உழக்கு ரத்தம் வருகிற மாதிரி தலையில் குட்டுவேன் ஓடு, ஓடு! என்று பணத்தை வீசினாள்.

வாசலிலேயே நின்று கொண்டாள், வைத்த கண்ணை எடுக்காமல் தெருவைப் பார்த்தபடி. முனியாண்டி தெருவெல்லாம் பரப்பிக்கொண்டே போனான் செய்தியை. அவன் மாலையை வாங்கி வரும் முன்னால் இவர்கள் வந்து விட்டால் என்ன பண்ணுவது என்ற தவிப்பு ஏற்பட்டுவிட்டது.

முனியாண்டி வந்துவிட்டான், மாலையும் கையுமாக.

காம்பவுண்டுச் சுவருக்குப் பின்னாலிருந்து, விரற்கடை அகலம் மல்லிகைப் பூ செருகிக் கொண்டிருந்த ஒரு தலை எட்டிப் பார்த்தது.

"ஏண்டி பெண்ணே, உன்

Enjoying the preview?
Page 1 of 1