Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyeri
Kanaiyeri
Kanaiyeri
Ebook316 pages1 hour

Kanaiyeri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என அரசுக்கே அறம் சொன்ன பண்பாடு நம்முடையது. அறம் பிறழ்பவனுக்கு அதுவே கூற்றுவனாக மாறிவிடும் என்பதைப் பல கதைகள் எடுத்துப் பேசுகின்றன. அடிப்படைப் பண்பில் ஒழுங்கில்லாதவனுக்கு வாழ்க்கை வீணே. ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் எண்ணங்களே எல்லாவற்றுக்கும் காரணமாக அமைகின்றன. ஆகவே தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று அழுத்தமாகச் சான்றோர் உரைத்தார். குடும்ப வாழ்வில் சரியில்லாதவனுக்குக் குடும்பம் இன்றிப்போகும் எனும் சிறு உண்மையே இந்நாவல். காலங்கடந்தபின் எல்லாமும் கடந்துபோகின்றன. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் பயனற்றதுதான். நீச்சல் தெரியாதவன் பெருங்கடலில் உழல்வதைப் போலவே நெறிபிறழ்ந்தவன் குடும்பக் கடலில் துன்புறுகிறான். தீர்வற்றதும் சிலருக்கு வாழ்க்கையாக அமைந்துவிடுவது ஊழ்வினைதான்.

Languageதமிழ்
Release dateOct 7, 2023
ISBN6580167910254
Kanaiyeri

Read more from Harani

Related to Kanaiyeri

Related ebooks

Reviews for Kanaiyeri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyeri - Harani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கனையெரி

    Kanaiyeri

    Author:

    ஹரணி

    Harani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/harani

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 1

    நாலைந்து தவிட்டுக் குருவிகள் தெருவில் தத்திக்கொண்டிருந்தன. மின்கம்பியில் புறாக்கள் வரிசையாக அமர்ந்திருந்தன. நாலாவது தெருவின் மாடியிலிருந்து அவற்றைத் திறந்துவிட்டிருந்தார்கள். வழக்கமாக அவை இங்கு வந்து மின்கம்பியில் அமர்ந்தபின் கிளம்பிப்போகும் போட்டிக்குத் தயாராவதைப்போல. எல்லார் வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளித்துக் கூட்டிப் பெருக்கிவிட்டுக் கோலம் போடத்தொடங்கியிருந்தார்கள். டிரைவர் வீட்டின் வாசல் மட்டும் காய்ந்துகிடந்தது. இந்தத் தெருவின் யாரும் பார்க்காத போதே நீர்தெளித்துத் தெருக்கூட்டிக் கோலம் போட்டுவிடுபவள் டிரைவர் மனைவி. முப்பது முடிந்துவிட்டது டிரைவர் இறந்துபோய். அன்றோடு வீட்டிற்குள்ளே முடங்கிப்போனாள் டிரைவர் மனைவி. இல்லையெனில் அதிகாலையில் போவோர் வருவோரை விளையாட்டு வம்பிழுத்துக் கச்சேரியைத் தொடங்கிவிடுவாள். அப்படியே எதிர்மாறாக ஆகிவிட்டது. சுத்தமாக ஓர் ஊமையைப்போலத் தன்னை ஆக்கிக் கொண்டுவிட்டாள் டிரைவர் மனைவி. கணவன் இறந்துபோனபின் இந்த உலகமே இனி தேவையில்லை. என்ன இருக்கிறது இனிமேல்? என்பதுபோன்ற நினைவுகள் முடக்கிவிடுகின்றன. ஒரு பெண்ணுக்கு ஆண்தான் (கணவன்தான்) அவன் எத்தகைய பண்புடையவனாக இருந்தபோதிலும் – பலம், பாதுகாப்பு அரண், வாழ்வு என்கிற கூறுகளை விடாப்பிடியாகக் கொண்டு இயங்குகிறார்கள். ஆகவே கணவன் இறந்துபோனான் என்றால் எல்லாமும் முடிந்துவிட்டது என்கிற மனோபாவம் உறுதியாகிவிடுகிறது எல்லாப் பெண்களிடமும். இதில் படித்த பெண், படிக்காத பெண், கிராமத்துப்பெண், நகரத்துப்பெண், நாகரிகமானவள், வேலைக்குப் போய் சம்பாதிக்கிறவள் என்கிற பாகுபாடு எல்லாம் கிடையாது. கணவன் இல்லை என்றால் இல்லைதான்.

    வாழ்க்கை பல விசித்திரங்களைக் கொண்டிருக்கிறது. அது அவ்வப்போது ஒவ்வொன்றாக வெளிப்படுகிறது. அந்த விசித்திரங்களை என்ன செய்யமுடியும்?

    மெல்ல கண்விழித்து மணியைப் பார்த்தான் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன். மணி ஏழைத்தொட இன்னும் நான்கு நிமிடங்கள் இருந்தன. உள்ளிருந்து காபி வாசனை வந்தது. உடலில் அடிபட்ட பாம்பு தலையைத் தூக்குவதுபோல அடுப்படி இருந்த பக்கம் ஒருக்கணித்துத் தலையையுயர்த்திப் பார்த்தான். வானதி காபி போட்டுக்கொண்டிருந்தாள். அவள் முகத்தைப் பார்த்தான். சிரிக்க மறுக்கிற முகமாய் இருந்தாள். எல்லாவற்றையும் ஒரு கடமையாகச் செய்துவிட்டு நகர்ந்துவிடவேண்டும் இந்த வாழ்விலிருந்து என்று போடப்படாத ஒரு ஒப்பந்தத்தைப் பின்பற்றுபவளாக இருந்தாள்.

    என்ன பண்ணறே? என்றான் சத்தமாய்.

    பதில் பேசாமல் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    ஏய் வானதி உன்னத்தாண்டி கேக்கறேன்?

    திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். இன்னொரு அடி விழுந்த பாம்பு தலையைப் படிமானம் செய்வதுபோல செய்துகொண்டான்.

    எழுந்து பாயை சுருட்டி வைத்து போர்வையை மடித்து வைத்துவிட்டு பாத்ரூம் போய் பல் துலக்கி, முகம் கழுவி கூடத்துக்கு வந்தபோது டிவி டேபிளில் காபி சூடாக இருந்தது. பேசாமல் எடுத்துக் குடித்தான். குடித்துவிட்டு டங்கென்று டம்ளரை டிவி டேபிள்மேல் மோதி வைத்தான்.

    வானதி எதையும் கண்டுக்கொள்ளாமல் பேசாமல் சமையல் வேலையைத் தொடங்கியிருந்தாள். எல்லாவற்றையும் ஒன்பது மணிக்குள் முடித்துவிட்டு அவள் கிளம்பவேண்டும்.

    ஒரு ஹார்டு வேர்ஸ் கடையில் வேலைக்குப் போகிறாள்.

    கோபி குளிக்க எழுந்து உள்ளே போய் குளித்துவிட்டு வருவதற்குள் வானதி ஒரு அடுப்பில் தோசைக்கல்லைப்போட்டு தோசையை ஊற்றி அடுக்கினாள். இன்னொரு அடுப்பில் மதியத்திற்குக் குழம்பு வைத்து, தொட்டுக் கொள்ள கறியும் செய்து முடித்திருந்தாள். தக்காளி, சின்ன வெங்காயம், சிவப்பு மிளகாய், கல் உப்பு போட்டு பச்சையாக மிக்சியில் போட்டு காரச் சட்டினி தயார் செய்திருந்தாள். காலை டிபனை முடித்துத் தனியாக எடுத்து வைத்துவிட்டு அடுப்படியை விட்டு வெளியே வந்து குளிக்கப்போனாள். மணி எட்டாகிவிட்டிருந்தது.

    பிள்ளைகள் பெண்பிள்ளைகள் இரண்டும் தூங்கிக்கொண்டிருந்தன.

    வேகமாகக் குளித்துவிட்டு உடைமாற்றி வந்து தட்டில் இரண்டு தோசைகளை எடுத்து வைத்து சட்டினியை ஊற்றி கோபி முன் வந்து கொடுத்தாள். வாங்கிக்கொண்டு அவளை நிமிர்ந்து ஒருமுறை பார்த்துவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தான். அதைக் கண்டுகொள்ளவில்லை வானதி.

    தான் ஒரு தட்டெடுத்துத் தோசையை வைத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். விறுவிறுவென்று சாப்பிட ஆரம்பித்து முடித்துக் கிளம்பினாள். கிளம்புவதற்கு முன் பெரிய பெண்ணை எழுப்பி...

    என்னம்மா… இன்னிக்கு லீவும்மா... என்று முனகினாள்.

    தெரியும்... தெரியும்... எல்லாம் முடிச்சு வச்சிட்டேன். அரிசியும் எடுத்து வச்சிருக்கேன். சாதம் சூடாக சாப்பிடும்போது வடிச்சுக்கங்க. தோசை ஊத்தி ஹாட்பேக்குல வச்சிருக்கேன். காரச்சட்டினி எண்ணெய் எல்லாம் வச்சிருக்கேன் சாப்பிடுங்க... சாமானை ஒழிச்சுப்போட்டுட்டேன். விளக்கி வெயில்ல வச்சிடு. காய்ந்த துணிங்கள மடிச்சு வச்சிடு. சின்னவள எழுந்து படிக்கச்சொல்லு... அடுத்தவாரம் பரிச்சை ஆரம்பிக்குது. என்ன படிக்குதுன்னு தெரியல? கேக்கறதுக்கும் ஒரு நாதி கிடையாது. ஒழுங்காப் படிக்கச்சொல்லு... இல்லாட்டி என்னமாதிரி சிரிப்பாச்சிரிச்ச வாழ்க்கைதான் வாழணும்...

    என்னடிப் பேசறே? என்றான் கோபி.

    உள்ளதான சொல்றேன் என்றாள்.

    என்னடி உள்ளத சொல்றே? சத்தியவான் புத்திரியா?

    உங்க வூட்டு மனுஷங்களுக்கு எங்கப்பாவும் அம்மாவும் சத்தியவானுங்கதான்...

    காலையிலே ஆரம்பிக்காத... கடுப்பாயிடுவேன்... தூக்கிப் போட்டு மிதிப்பேன்...

    அய்யய்யே... காலையில ஆரம்பிச்சாச்சா... நீ கிளம்பும்மா... நீங்க சாப்பிட்டுட்டு கிளம்புங்க...

    அத்தோடு அந்த சிறு சண்டை முடிந்தது. தினமும் சிறு சண்டை தொடங்கும்... முடியும். விடுமுறை நாளில் அரைமணிநேரத்துக்கு ஒருமுறை சிறு சண்டை வரும். சமயங்களில் இரவுப்பொழுதில் அது பெருஞ்சண்டையாகி பெருஞ்சத்தம் தெருவரை சிதறும்.

    வெளியே வந்து தெருவிறங்கினாள்... தெருவில் கூட்டமாக நின்று ஆண்களும் பெண்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் கலவரம் தெரிந்தது.

    வானதி நிதானித்தாள். அதற்குள் கோபி சாப்பிட்டுவிட்டு அவனும் வேலைக்குக் கிளம்பி தெருவிறங்கியிருந்தான்.

    கோபி... உனக்குச் சேதி தெரியுமா? என்று எதிர்வீட்டுப் பெண்மணி கேட்டாள். நடுத்தர வயது. உடம்புப் பெருத்தவள்.

    ஏங்கக்கா... என்னாச்சு? என்று பதட்டமாகக் கேட்டான். பெண்களிடம் பேசும்போதும் உணர்ச்சியும் பதட்டமும் அடைவது கோபியின் இயல்பு.

    கடைத்தெரு பக்கம் போகலியா?

    என்னாச்சு?

    பழைய இரும்புக்கடை வச்சிருக்கான்ல... கோபாலு...

    ஆமாம்...

    அவனை வெட்டிக் கொன்னுட்டாங்களாம் யாரோ?

    என்னக்கா சொல்றீங்க? அய்யய்யோ... ஏங்க்கா... நல்ல மனுஷங்க்கா... பழைய இரும்பு போட்டா கிலோவுக்கு மத்தவங்கள விடக் காசு கூடக் கொடுப்பாருக்கா...

    காசு கூடக் கொடுக்கறவன் எல்லாம் நல்லவன் என்றாள் வானதி.

    ஏம்பா... நீ வேற... அவன் நல்லவனா? நல்லவன ஏன் வெட்டிக் கொல்றாங்க? நாலு பொண்டாட்டியாம்... அவனுக்கு...

    நாலு பொண்டாட்டியா? தெரியாதவன்போல கேட்டான் கோபி.

    ஏன் உனக்குத் தெரியாதா? என்பதுபோல அவனை ஒருமுறை ஊடுருவிய கோபத்துடன் பார்த்தாள் வானதி.

    சின்ன வயசுப்பா... புள்ளங்க எல்லாம் பள்ளிக்கூடத்துல படிக்குது... இவன் போயிட்டான் இருக்கறவரைக்கும் எது செஞ்சா என்னன்னு? இப்போ குடும்பம் நிலைகுலைஞ்சு போயிடிச்சு...

    எதுக்கு குடும்பம் போவப்போவுது... அதான் ஊர் தாலியறுத்து சேத்து வச்சிட்டுப்போயிட்டானே... இன்னும் நாலு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம்... என்றாள் பக்கத்துவீட்டுப் பெண்.

    செத்தே போயிட்டாராக்கா? என்றான் கோபி.

    நாலஞ்சு பேருப்பா... நேத்து ராத்திரி... அங்கேயே உசிரு போயிடிச்சாம்...

    பொம்பளய பொறுக்கறவனுக்கு எல்லாம் இதான் கதி... இப்படிச் சக்க சக்கயா கழிக்கறதுதான் சரி... நேரமாச்சு நான் போறேன் என்றபடி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள் வானதி.

    அவள்போவதையே பார்த்துக்கொண்டிருந்தான் கோபி. உள்ளுக்குள் லேசாக ஒரு அதிர்வு வந்தது. காட்டிக்கொள்ளவில்லை. என்றாலும் ஒரு பயம் மெல்ல குட்டிப்பாம்புபோல உள்ளுக்குள் ஓடியது.

    அத்தியாயம் 2

    கலைவாணி கோபியின் மூத்தப்பெண். ஈசுவரி கோபியின் இரண்டாவது பெண். பெரியவள் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். கொஞ்சம் ஆடம்பரமானவள். எதையும் எளிதில் நம்புகிறவள். கோபியும் வானதியும் சண்டைபோடுவது கண்டு ஏன் இந்தக் குடும்பத்தில் பிறந்தோம் என்று எண்ணிக்கொண்டிருப்பவள். சின்னவள் ஈசுவரி படித்துக் கொண்டிருக்கிறாள். பிளஸ் ஒன்று.

    யேய் ஈசு... எழுந்திரிடி... பரிட்சைக்குப் படிக்கவேண்டாமா?

    சும்மா... இருடி... இன்னிக்குப் பரிட்சை இல்ல... அடுத்த பரிட்சைக்கு நாலு நாள் இருக்கு.

    அதுக்காகப் படிக்கமாட்டியா? அம்மா என்ன சொல்லிட்டுப் போச்சு?

    போ... அதுக்கும் வேலை இல்ல உனக்கும் வேலை இல்ல. காபி போட்டுட்டியா?

    இருக்கு. அம்மா போட்டு பிளாஸ்க்ல ஊத்தி வச்சிருக்கு. எழுந்திரிச்சு குடிச்சிட்டுப் படி ஈசு...

    படிப்பேன். மது வரேன்னிருக்கா... வந்ததும் குருப் ஸ்டடி பண்ணுவோம்...

    மதுவா?

    ஆமா. மதுவந்திதான்.

    இரு அம்மாக்கிட்ட போன் பண்ணி சொல்றேன். அந்தப் புள்ளக்கூட சேராதன்னு அம்மா சொன்னிச்சுல்ல...

    அது என்னோட கிளாஸ் மேட்... படிக்க வருது. நல்லா படிக்கிறவ அவ... எனக்கு அக்கவுண்ட்ஸ் தெரியும் சொல்லிக்கொடுப்பேன். அவளுக்கு இங்கிலிஸ் நல்லா வரும் எனக்குச் சொல்லிக்கொடுப்பா...

    முடியாது... நான் இப்பயே அம்மாவுக்குப் போன் பண்ணறேன் என்று செல்போனை கையில் எடுத்தாள் கலை என்கிற கலைவாணி.

    பண்ணிக்கோ... எனக்கொண்ணும் பயமில்ல. சும்மா மிரட்டிக்கிட்டு அலையாதே... இல்ல நான் அவ வூட்டுக்குப்போறேன்... அங்கப் போய் படிச்சிட்டு வரேன்...

    வேணாம். அவ வீட்டுக்குப் போகக்கூடாதுன்னு அப்பா சொல்லியிருக்காங்கள்ள...

    போடி... இவளே... இங்கதான் மது வருவா... படிக்கப்போறோம்... ஏதாச்சும் அவகிட்ட சொன்னே... அப்புறம் பாத்துக்க... என்றபடி சின்னவள் எழுந்துபோய் அடுப்படிக்குப்போய் காபியை ஒரு டம்ளரில் ஊற்றிக்கொண்டு வந்து உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தாள்.

    கூடவே கலைவாணியும் ஆரம்பித்தாள்...

    ஏய் பல்விளக்குனியா?

    போடி வேலயப் பாத்துக்கிட்டு... நொய்நொய்னு ஏதாச்சும் நொட்டம் பேசிக்கிட்டேயிருக்கே…

    மது என்கிற மதுவந்தி வந்தாள். ஈசுவரியுடன் படிக்கிறவள். நன்றாகப் படிக்கிறவள். ஆனால் அவள் வீடு சரியில்லாத வீடு. அவளின் அம்மா கணவனை இழந்தவள். அப்படியும் இப்படியும் இருப்பதாக சொல்லிக்கொள்வார்கள். மதுவந்தி அவள் தங்கை, அண்ணன் என மூன்று பேர்கள். அவர்களும் மனம்போன போக்குதான்... ஆனால் மதுவந்தி படிப்பில் கெட்டிக்காரி.

    உடனே கலைவாணி மதுவந்தியைப் பார்த்ததும் கோபிக்குப் போன் செய்து தகவல் சொன்னாள். அடுத்த அரைமணிநேரத்தில் கோபி வீட்டில் இருந்தான்.

    வாங்க அங்கிள் என்றாள் மதுவந்தி.

    என்னம்மா எதுக்கு வந்திருக்கே வீடு வரைக்கும்? என்றான்.

    அடுத்தவாரம் பரிட்சை அங்கிள்... குருப் ஸ்டடி பண்ணலாம்னு... எங்க வீட்டுக்குத்தான் கூப்பிட்டேன்... நீங்கப் போகக்கூடாதுன்னு சொன்னீங்களாம்... அதான் நான் இங்க வந்தேன். அக்கவுண்ட்ஸ் எனக்குச் சரியாப் போடவராது... ஈசுவரி நல்லாப் போடுவா... கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்... என்றாள் சாதாரணமாக.

    கோபியால் எதுவும் சொல்லமுடியவில்லை. இங்க வந்தவரைக்கும் நிம்மதிதான். மதுவந்தி வீடு சரியில்லைதான். கோபி நினைத்துப் பார்த்தான்.

    ஒருமுறை ஈசுவரி பள்ளிவிட்டு ரொம்பநேரமாகி வரவில்லை என்றதும் தேடிக்கொண்டு போனான். அவள் மதுவந்தி வீட்டில் இருப்பதாகத் தகவல் அறிந்து அங்கே போனான்.

    அங்கே பார்த்ததும் அதிர்ந்துபோனான். அங்கே மதுவின் அம்மா... மது... அவளின் அண்ணன் மற்றும் நிறைய ஆண்பிள்ளைகள் ஒன்றாக உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நடுவே ஈசுவரியும் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தாள்.

    இது சரியில்லை என்பதுபோல கோபிக்குப் பட்டது.

    ஈசுவரி... என்று சத்தம்போட்டுக் கூப்பிட்டான்.

    உள்ளிருந்து மது வந்தாள்... அட... வாங்க அங்கிள்... உள்ள வாங்க.

    இருக்கட்டும். ஈசுவரிய கூப்பிடு... என்றான்.

    ஈசுவரி வந்தாள். கூடவே மதுவந்தியின் அம்மாவும் வந்தாள். இளம் வயது விதவை.

    வாங்க ஈசு அப்பா உள்ளே என்று நெடுநாள் பழகியதுபோலக் கூப்பிட்டாள். அவளைப் பார்த்ததும் ஒருகணம் கோபிக்கு மனம் தடுமாறியது. அழகான முகம் அதுவும் விதவை முகம்...

    உள்ளே போய் உட்கார்ந்தான்.

    ஒரு ஆண் உள்ளே வந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த ஆண்பிள்ளைகள் சத்தம்போட்டு அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அதுவே சரியாகப்படவில்லை கோபிக்கு.

    இங்கே ஏதோ தப்பு இருக்கிறது என்று தோனியது அவனுக்கு.

    காபி சாப்பிடுறீங்களா சார்? என்றாள் மதுவந்தியின் அம்மா.

    வே...வேண்டாம்... என்று தடுமாறினான். அவன் பார்வை முழுக்க அந்த ஆண்பிள்ளைகள் மேலேயே இருந்தது. பெண்பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளும் வெகு சகஜமாக அரட்டையில் இருந்தார்கள்.

    அதைக் கவனித்தாள் மதுவந்தியின் அம்மா.

    எல்லாரும் நம்ப பசங்கதான் சார்... எல்லாம் அக்கம் பக்கத்துவீடுங்க. நாள் முழுக்க இங்கதான் இருப்பானுங்க... எம்பொண்ணுங்களோட ஒரே அரட்டைதான்... இங்கேயே சாப்பிடுவானுங்க... நல்ல பசங்க என்று சான்றிதழ் தந்தாள் மதுவந்தியின் அம்மா கோபியைப் பார்த்தபடி. ஈசுவரி உள்ளேயிருந்து வந்தாள்.

    என்ன பண்ணறே உள்ளே? என்றான் கோபி.

    பாத்ரூம் போனப்பா என்றாள்.

    சரி... நான் கிளம்பேறன்... வா ஈசுவரி என்றான்.

    வாசல் வரை வந்தார்கள் வழியனுப்புவதுபோல.

    சார்... ஈசுவரியை அனுப்புங்க... மதுவுக்கும் அவளுக்கும் குருப் ஸ்டடி நல்லாப் போயிட்டிருக்கு... ரெண்டுபேரும் நல்லா படிக்கறவங்க...

    சரி... என்று வேண்டாவெறுப்பாகத் தலையாட்டினான்.

    வெளியே வந்து வண்டியைத் தள்ளிக்கொண்டு நடந்தான் கொஞ்ச தூரம்.

    எதுக்கு வண்டியத் தள்ளிட்டு வர்றீங்க? ஸ்டார்ட் பண்ணுங்க... போகலாம்...

    போலாம்... போலாம்... என்றபடியே தள்ளினான்.

    ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டான். ஈசுவரி பக்கம் திரும்பிக் கத்த ஆரம்பித்தான்.

    அறிவிருக்கா... உனக்கு? படிக்க வரேன்னு அவ வீட்டுலே கூத்து அடிக்கறியா? ஆம்பளப் பசங்க இப்படிக் கூத்து அடிக்கறானுங்க... அந்தம்மா கண்டுக்காமப் பேசுது...

    நான் கூத்து அடிச்சு பாத்திங்களா? என்றாள் ஈசுவரி.

    அத வேற பாக்கணுமா? நீ செய்வியா? என்றான் கோபமாக.

    நீங்க எதுக்கு எதைப் பார்த்தாலும் தப்பாவே எடுத்துக்கறீங்க?

    மது ரொம்ப நல்லவளா?

    அவளப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?

    பார்த்த முதல் தடவயிலேயே ஒருத்தி யோக்கியதை தெரியாது? இனிமே நீ அவ வீட்டுக்குப்போகக்கூடாது... சொல்லிப்புட்டேன்... அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.

    அவளும் நானும்தான் கிளாஸ்ல நல்லாப் படிக்கறவங்க... ஆனுவல் எக்சாம் வருது... குருப் ஸ்டடி பண்ணறதுக்கு அவதான் எனக்கு சரியா இருக்கும். நான் படிக்கத்தான் போறேன்... அந்தப் பசங்க கூத்தடிச்சா எனக்கு என்ன? மார்க் எடுத்துக் காமிக்கறேன்... அப்புறமா பேசுங்க... என்றபடி விறுவிறுவென்று முன்னாள் நடக்க ஆரம்பித்துவிட்டாள் ஈசுவரி.

    கோபி இதை எதிர்பார்க்கவில்லை... வண்டியை ஸ்டார்ட் பண்ணி ஓட்டிப்போய் அவளருகில் நிறுத்தி...0 எறு ஈசுவரி... உனக்கு நல்லது சொன்னாவே பிடிக்காது? என்றான்.

    நல்லது எது? கெட்டது எது?ன்னு தெரியாத பொண்ணு இல்ல நானு... வண்டிய எடுங்க என்றபடி வண்டியின் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டாள்.

    நினைவு கலைந்தான் கோபி. மது சாப்பிட்டியா? என்றான்.

    சாப்பிட்டேன் அங்கிள். மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போயிடுவேன் அங்கிள். ஒருமணிநேரம் இவகிட்ட கேட்டுட்டுப் போயிடுவேன் என்றாள் கோபி எதிர்பார்த்ததுக்குப் பதில் சொல்வதைப்போல.

    கலை... ரெண்டு பேருக்கும் காபியப் போட்டுக்கொடு... என்று சொல்லிவிட்டு தனியே வந்து கலைவாணியிடம்... எதுவும் பேசாத... இங்க வந்தவரைக்கும் ஒண்ணுமில்ல... படிச்சிட்டுப் போவட்டும்... நான் கடையில வேலை இருக்கு கிளம்பறேன் என்று கிளம்பிப்போய்விட்டான்.

    மது டீ குடிக்கறியா? என்று கேட்டாள் கலைவாணி.

    வேணாங்க்கா... என்றாள்.

    ஈசுவரி... இந்த அக்கவுண்ட்ஸைச் சொல்லிக்கொடு என்றாள்.

    கலைவாணி பாத்ரூம் உள்ளே போனாள்.

    இதுதான் சமயமென்று ஈசுவரியிடம் குசுகுசுவென்று பேசினாள்.

    யேய்... ஈசுவரி... அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை என் தங்கச்சியோட பொறந்தநாளு... நீ வந்துடு... நம்ப பசங்களோட செம்மயான பார்ட்டி எல்லாம் இருக்கு. மறந்துடாத... சரி... சரி... உங்கக்கா வந்துடப்போறா என்றாள்.

    கண்டிப்பா வரேன்... என்று ஜாடைகாட்டிச் சிரித்தபடி தலையாட்டிவிட்டுப் பாடப் புத்தகத்தை விரித்தார்கள்.

    ஈசுவரிக்குப் பாடப்புத்தகம் மேல் நாட்டம் வரவில்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1