Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thavaripona Thaayanai 2050
Thavaripona Thaayanai 2050
Thavaripona Thaayanai 2050
Ebook416 pages2 hours

Thavaripona Thaayanai 2050

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். “தவறிப்போன தாயனை 2050” வெறும் புதினம் அல்ல. சிறுவயதிலிருந்து எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு, தற்போது நானே விடை தேடிக் கண்டறிந்து, காலத்தால் மறைந்து போன உண்மைகளை சேகரித்து, அறிவியல் அடிப்படைகளோடு பின்னிய ஒரு கதையாகும். கடவுள் என்பவர் யார்? எங்கிருந்து வந்தார்? எப்படி நீண்ட நாள் வாழ்கிறார்? போன்ற கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான விடை தேடும் போது உருவான படைப்புதான் இந்த அறிவியல் புனைவு. அந்தத் தேடலில், நான் எந்தப் பக்கம் சென்றாலும் என் கண்ணில் பட்டவை சித்தர்களைப் பற்றிய பேருண்மைகள். சித்தர்கள் இல்லாத ஒரு கடவுளின் வரலாறு இருக்கவே முடியாது. இந்நிகழ்வின் ஆய்விற்காக சித்தர்கள் எழுதிய பாடல்களைப் படிக்கும்போதுதான் எப்பேர்ப்பட்ட அறியாமையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சித்தர்களைப் பற்றி தமிழர்களாகிய நாம் அனைவருமே மறந்து போனது என்னைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நம் பழமையைக் கிளறி எடுக்க வில்லையென்றால், இறுதி வரை நம் மனித இனத்தின் உண்மை வரலாற்றை அறியாமலேயே அழிந்து விடுவோம். அதுமட்டுமின்றி, இதன் கதை மாந்தர்கள் வருங்காலத்திற்கு உங்களை அழைத்துச் சென்று அங்கு நிகழவிருக்கும் நவீன தொழில் நுட்பங்களை பற்றிய சிந்தனையையும் தூண்டுவார்கள் என்று நம்புகிறேன். என் கற்பனையில் விரிந்த எதிர்கால உலகை, தொழில்நுட்ப வளர்ச்சியோடு காட்சிப்படுத்தியுள்ளேன். முப்பது வருடங்கள் கழித்து, இந்நாவலை வாசித்தவர்களில் ஒருவரேனும், என்னை ஒரு முறை நினைவு கூர்ந்தால், அதுவே எனது பாக்கியம். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதியுள்ளேன். வாசித்து மகிழுங்கள்!

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580148007717
Thavaripona Thaayanai 2050

Read more from Kava Kamz

Related to Thavaripona Thaayanai 2050

Related ebooks

Reviews for Thavaripona Thaayanai 2050

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thavaripona Thaayanai 2050 - Kava Kamz

    https://www.pustaka.co.in

    தவறிப்போ‌ன தாயனை 2050

    Thavaripona Thaayanai 2050

    Author:

    கவா கம்ஸ்

    Kava Kamz

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kava-kamz

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பாகம் - 1

    பாகம் - 2

    பாகம் - 3

    பாகம் - 4

    பாகம் - 5

    பாகம் - 6

    பாகம் - 7

    பாகம் - 8

    பாகம் - 9

    பாகம் - 10

    பாகம் - 11

    பாகம் - 12

    பாகம் - 13

    பாகம் - 14

    பாகம் - 15

    பாகம் - 16

    பாகம் - 17

    பாகம் - 18

    என் மனதில் இக்கதையின் கருவை விதைத்த லட்சுமி ஐயர் என்னை சரியான பாதையில் வழிநடத்திய Dr. சுகந்தி சென்றாயன் (சித்த மருத்துவர்) இருவருக்கும் சமர்ப்பணம்!

    என்னுரை

    ப்ராஜக்ட் ஃ என்னும் எனது முதல் நாவலுக்கும் அதனைத் தழுவி எடுக்கப்பட்ட, ‘ழகரம்’ என்னும் தமிழ்த் திரைப்படத்திற்கும் மிகப் பெரும் ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    ஒவ்வொரு முறையும் எனது எழுத்தின் பிழைகளைக் களைந்து மெருகேற்றித் தரும் டாக்டர் புதேரி தானப்பன் அவர்களுக்கும்,

    என்னையும் எனது முயற்சிகளையும் அரவணைத்துச் செல்லும் எனது குடும்பத்தினர், என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருக்கும்,

    எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    இது வெறும் புதினம் அல்ல. சிறுவயதிலிருந்து எனக்குள் எழுந்த நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு, தற்போது நானே விடை தேடிக் கண்டறிந்து, காலத்தால் மறைந்து போன உண்மைகளை சேகரித்து, அறிவியல் அடிப்படைகளோடு பின்னப்பட்ட ஒரு கதையாகும். கடவுள் என்பவர் யார்? எங்கிருந்து வந்தார்? எப்படி நீண்ட நாள் வாழ்கிறார்? போன்ற கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான விடை தேடும் போது உருவான படைப்புதான் இந்த அறிவியல் புனைவு. அந்தத் தேடலில், நான் எந்தப் பக்கம் சென்றாலும் என் கண்ணில் பட்டவை சித்தர்களைப் பற்றிய பேருண்மைகள். சித்தர்கள் இல்லாத ஒரு கடவுளின் வரலாறு இருக்கவே முடியாது. இந்நிகழ்வின் ஆய்விற்காக சித்தர்கள் எழுதிய பாடல்களைப் படிக்கும்போதுதான் எப்பேர்ப்பட்ட அறியாமையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சித்தர்களைப் பற்றி தமிழர்களாகிய நாம் அனைவருமே மறந்து போனது என்னைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நம் பழமையைக் கிளறி எடுக்க வில்லையென்றால், இறுதிவரை நம் மனித இனத்தின் உண்மை வரலாற்றை அறியாமலேயே அழிந்து விடுவோம். சித்தர்களின் மருத்துவ அகராதியை எழுதி நம் சித்தர்களின் மகத்தான மருத்துவத்திற்கு உயிரூட்டிய மறைந்த திரு. சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அதுமட்டுமின்றி, இதன் கதை மாந்தர்கள் வருங்காலத்திற்கு உங்களை அழைத்துச் சென்று அங்கு நிகழவிருக்கும் நவீன தொழில் நுட்பங்களை பற்றிய சிந்தனையையும் தூண்டுவார்கள் என்று நம்புகிறேன். என் கற்பனையில் விரிந்த எதிர்கால உலகை, தொழில்நுட்ப வளர்ச்சியோடு காட்சிப்படுத்தியுள்ளேன். முப்பது வருடங்கள் கழித்து, இந்நாவலை வாசித்தவர்களில் ஒருவரேனும், என்னை ஒரு முறை நினைவு கூர்ந்தால், அதுவே எனது பாக்கியம்.

    என்றும் உங்களோடு எழுத்து வடிவில்

    கவா கம்ஸ்

    அணிந்துரை

    இவ்வளவு சிறிய கடுகில் இத்தனைக் காரமா? நினைக்கவே வியப்பாக இருக்கிறது. ஆசிரியர் கவா கம்ஸ் அவர்களைத்தான் சொல்லுகிறேன். அவருக்குள் இவ்வளவு பெரும் ஆற்றலைக் கண்டு பாராட்டுகிறேன்!

    இறந்துபோனவர்களை உயிர்ப்பிக்கும் கலை இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்துள்ளதை நாம் ஆன்மீக நூல்களில் படித்திருக்கிறோம். உண்மையான துறவிகளுக்கு அப்படிப்பட்ட சக்தி இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இக்கலையில் மானுடம் ஒரு புதிய மைல் கல்லைத் தொட்டிருக்கிறது என்பதை நாம் இந்தப் புதினத்தில் படித்துப் பெருமை கொள்கிறோம்.

    பழையன கழிதலும் புதியன புகுதலும்

    வழுவல கால வகையினானே!

    என்று நன்நூலை எழுதிய பவணந்தி என்னும் சமண முனிவர் நமக்குப் புதிய பாதையை வகுத்துக் கொடுத்துள்ளார். அவரது கூற்றுக்கேற்ப மானுடத்தின் அறிவியல் வளர்ச்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.

    நம் வாழ்க்கையோடு ஒன்றிய பலப்பல விளையாட்டுகளும் பழக்க வழக்கங்களும் பற்பலப் பயன்பாட்டுப் பொருட்களும் பொது வாழ்க்கையில் தவிர்க்க இயலாததாக இருந்த தந்தி, அஞ்சல் அலுவலகம், தொலைபேசிக் கடைகள் மற்றும் கருவிகள் இப்படி எவ்வளவோ காணாமல் போய் புதுப் புது பயன்பாட்டுப் பொருட்களும் பிறவும் வந்து கொண்டே இருக்கின்றன. இன்னும் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று இறந்தவர்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்பது. இக்கலையைக் கண்டுபிடித்து விட்டதாக இந்த நாவலாசிரியர் கவா கம்ஸ் அவர்கள் தமது கற்பனையில் பதிவிடுகிறார்.

    பாரதிகூடச் சொன்னானே,

    காசிநகர்ப் புலவர் செய்யும் உரைதான்

    காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்

    என்று! பாரதியாரின் கனவு பின்நாட்களில் நனவாக வில்லையா? ஆகவே மனிதனின் கற்பனையே இச் சமுதாய வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது.

    கவா கம்ஸ் அவர்கள் தனது இந்த நாவலில் சொல்லிச் செல்லும் கற்பனைகள் யாவும் நிறைவேறும் என்ற நம்பிக்கையை நமக்குத் தருகிறது. எதிர் கால உலகம் எத்தகையதாக இருக்கும்; அந்த உலகத்தில் பயன்படுத்தப்படும் பொருள்களும் உடைமைகளும் சாதனங்களும் எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஆசிரியரின் நடைமுறைக்கு ஏற்ற கற்பனைத் திறன் நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

    ஆசிரியர், அறிவியல் தமிழ்ச் சொற்களைக் கையாளும் நெறிமுறையைப் பாராட்டியே ஆக வேண்டும். இது ஆசிரியரின் மூன்றாவது நாவல். ஒவ்வொரு நாவலிலும் இவரது எழுத்தின் வலிமை கூடிக்கொண்டே போவதை நான் உணர்கிறேன்.

    இந் நாவலாசிரியர் இந்த நாவலைப் படைத்து, தமிழ் அன்னையின் காற்சிலம்புக்கு அழகு சேர்த்ததன் விளைவாக, தான் ஒரு சிறந்த படைப்பாளர் என்னும் தகுதியைப் பெற்று விட்டதாகவே கருதுகிறேன். எனவே இது தமிழ் மக்களின் பாராட்டுதலுக்கு உரித்ததாகத் திகழும் என்பது எனது துணிபு.

    ஆசிரியருக்கு எனது வாழ்த்துகள்!

    புதேரி தானப்பன்.

    பாகம் - 1

    டிசம்பர் 9, 2050

    கடுங்குளிர் தொழில்நுட்ப ஆய்வகம்¹

    கோவை

    லட்சுமி படுக்க வைக்கப்பட்டிருந்த அந்த அறையின் நான்கு சுவர்களிலும் ஒளியுமிழ் இருமுனையம் திரைகள்² பொருத்தப்பட்டிருந்தன. வலது பக்கத் திரையில் அவளுடைய சிறுவயது நிழற்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்து கொண்டிருந்தன. மற்ற மூன்று சுவர்களின் திரைகளும் லட்சுமியின் இருபது வயது, அழகிய, மாநிற தேகத்தின் மேல் நீல நிறத்தைப் போர்த்தியிருந்தன. அவளது மீன் விழிகள் திறக்கச் சக்தி இல்லாமல் சோர்ந்திருந்தன.

    மூன்று மணி நேரம் கழித்து, லட்சுமி மெல்லக் கண் திறந்தாள். அவளது தலைக்கு மேல் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.

    அவளது பெருமூளை சட்டென வேலை செய்யத் தொடங்கியது. அந்த நட்சத்திரங்கள் உண்மை இல்லை என்று அவளது உள்மனம் கூறியது.

    நா… நா… நான்தான் செத்துட்டேனே!

    அவளையும் அறியாமல் அவளது உதடுகள் முணுமுணுக்க, ஒருவித நடுக்கத்துடன் சட்டென எழுந்து உட்கார்ந்தாள். அவள் எழுந்த வேகத்தில், அவள் மேல் போர்த்தப்பட்டிருந்த மெல்லிய துணி விலகியது. அப்போதுதான், அவள் தன் உடல் ஆடையில்லாமல் நிர்வாணமாய்ப் படுக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தாள். அவளது கைகள், விருட்டென்று விலகிய துணியைப் பிடித்து நெஞ்சை மூடிக் கொண்டன. பதட்டத்தில் அவளுக்கு வியர்க்கத் தொடங்கியது. அவளது இருதயம் வேகமாக அடிக்க, சுற்றுமுற்றும் தனது பார்வையை ஓட விட்டாள்.

    அந்த அறை வெறுமையாக இருந்தது. அவளது படுக்கைக்குச் சற்று அருகில் மட்டும் இருக்கை போன்று ஒன்று மிதந்து கொண்டிருந்தது. பச்சை வண்ணம் தீட்டப்பட்ட அது இரும்பினாலோ அல்லது அலுமினியத்தினாலோ செய்யப்பட்டிருக்கலாம். அதன் மேல் ஊதா நிறத்தில் நாலு சென்டிமீட்டர் உயரத்தில் ஒரு சிறிய அழகிய பொம்மை வீற்றிருந்தது. அவளது மூளையில் ஏதோ தோன்ற, சட்டென அவள் அமர்ந்திருந்த கட்டிலின் அடியில் குனிந்து பார்த்தாள். ஆச்சரியமூட்டும் வகையில் கட்டிலுக்கும் கால்கள் இல்லை. அதுவும் மிதந்து கொண்டிருந்தது. தான் படுத்துக் கொண்டிருந்தது மிதக்கும் காந்தப் படுக்கை³ என்பது அவளுக்குப் புரிந்தது.

    மிதக்கும் காந்தப் படுக்கையில் மாறும் காந்தப் புலத்தினால், ‘எடி நீரோட்டங்கள்’ உருவாகின்றன. அவை அவற்றுக்கு எதிராக மின்காந்த அலைகளை உருவாக்கும்போது, அது தரையில் புதைந்திருக்கும் தாமிர அடித்தளத்தின் மின்காந்த அலைகளுக்கு நேர் எதிராய் இருப்பதால், அந்தப் படுக்கை மிதக்கிறது. தான் சிறுவயதில் என்றோ பார்த்த ஒரு காணொலி மங்கலாக ஞாபகம் இருந்தாலும், அதன் வரிகள் தெளிவாய் அவள் காதுகளில் ஒலித்தன.

    தான் சிறுவயதில் புனைவாய்ப் பார்த்தவற்றை நிஜத்தில் காண்பது அவளுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ‘உலகம் மாறிவிட்டதா? ஒருவேளை பல நாட்கள் ஆழ்மயக்கத்தில்⁴ இருந்தோமா?’ என்று தீவிரமாக யோசிக்கும் போதே தலை வலித்தது. வலது கையைத் தூக்கி வலதுபக்கத் தலைமேல் வைத்து அழுத்தினாள். இதமாக இருந்தது. இரண்டு நிமிடங்கள் தலையை அழுத்திவிட்டுக் கீழே வந்த கை, மீண்டும் வேகமாகத் தலைக்குச் சென்று, தலை முழுவதும் தடவிப் பார்த்தது. அவளுக்கு மூச்சு முட்டியது. அவள் தலையில் முடியே இல்லை. தனக்கு நேர்ந்ததை நம்ப முடியாதவளாய் எதுவும் செய்யத் தோன்றாமல் தனது வலப்பக்கம் ஓடிக் கொண்டிருந்த ஒளிப்படங்களைச் சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அதுவரை அவள் பார்த்திராத பல ஒளிப்படங்கள் திரையில் வந்து கொண்டிருந்தன.

    ‘நான் இப்ப எங்கிருக்கேன்? என்னை யார் இங்க கொண்டு வந்து வச்சிருக்காங்க? எனக்குப் புற்றுநோய் வந்து ரொம்ப நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். நான் இருந்த நிலைமையை வச்சுப் பார்த்தா கண்டிப்பா செத்துப் போயிருக்கணும்’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவள் வலது கையில் ஏதோ ஒன்று நெருடுவதைப் போல் உணர்ந்தாள். லட்சுமி தனது வலது கையை ஆராய, அவளது ஈரக்குலையே ஒருமுறை நடுங்கிவிட்டது. அவளது வலது கையின் மணிக்கட்டுப் பகுதியில், தோலுக்கு அடியில் ஒரு நுண்சில்லு⁵ பொருத்தப்பட்டிருந்தது. அவசரமாகத் தனது உடல் முழுக்க ஆராய்ந்தாள். அவளது புருவம் முதற்கொண்டு அவள் உடலில் உள்ள அத்தனை ரோமங்களும் நீக்கப்பட்டிருந்தன. மற்ற அனைத்தும் சரியாகத்தான் இருந்தன. ஆனால், உடல் முழுவதும் வாசனையே இல்லாத ஏதோ எண்ணெய் போன்ற திரவம் தடவப்பட்டிருந்தது.

    யாரோ தன்னை இங்கு நிர்வாணமாய்ப் படுக்க வைத்து, ஏதோ ஒரு திரவத்தை உடல் முழுக்கத் தடவியுள்ளனர்.

    அதை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருந்தது. மேலும் தனது உடல் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்ற உணர்வால் அவளுக்குத் தனது உடல் மேல் வெறுப்பு உருவாவதை அவளால் தடுக்க முடியவில்லை.

    லட்சுமி தீவிரமாக யோசிக்கத் தொடங்கினாள். அவள் இறந்துவிட்டாள் என்பது அவளுக்கு நிச்சயமாகக் தோன்றியது. ஏதேனும் மருத்துவ ஆராய்ச்சிக்காக அவளை உபயோகிக்கிறார்களோ என்று சந்தேகித்தாள்.

    ஆனால் ஏன்? எப்படி? அவளுக்கு எதுவும் புரியவில்லை.

    ஒரு முடிவுடன் அந்தப் படுக்கையிலிருந்து கீழிறங்கினாள். அந்த மெல்லிய துணியை எடுத்துத் தன்னைச் சுற்றி மார்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டாள். அந்தத் துணியின் மறுமுனை அவளது அந்தரங்கத்தை மறைத்தவாறு முட்டிவரை தொங்கிக் கொண்டு இருந்தது.

    அந்த அறையை விட்டு எப்படி வெளியேறுவது என்று அவள் சுற்றுமுற்றும் தேடினாள். நீலநிறத்தைக் கக்கிக் கொண்டிருந்த ஒளியுமிழ் இருமுனையத் திரைகளை வருடிப் பார்த்தாள். எங்கேயும் கதவோ வழியோ இருப்பதாகத் தெரியவில்லை. லட்சுமிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவள் திரும்பவும் காந்தப் படுக்கையின் மேல் சென்று அமர்ந்து கொண்டாள். வலப்பக்கத் திரையில் ஒளிர்ந்த ஒரு ஒளிப்படம் அவள் கவனத்தை ஈர்த்தது. அதில் லட்சுமி தன் அம்மாவின் மூக்கைச் செல்லமாகக் கடிப்பதைப் போலவும் அவள் அம்மா அதைப் புன்னகையுடன் ரசிப்பதைப் போலவும் இருந்தது. அதைப் பார்த்தவுடன் லட்சுமி அடக்கி வைத்திருந்த கண்ணீர், கட்டுப்பாட்டை மீறி அவள் கன்னங்களை நனைத்தது.

    அம்மா! என்று அவள் நா தழுதழுக்கக் கூற, அதே நேரம் இடப் பக்கத் திரையில், நீல நிறத்திற்கு பதில் வெண்மை நிறம் பாய்ச்சப்பட்டது. வெள்ளை நிறத் திரையில் நீல நிறக் கதவு ஒன்று தெளிவாகத் தெரிந்தது.

    லட்சுமி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஆர்வமாய் எழுந்து அந்தத் திரையின் அருகில் வந்தாள். அந்தக் கதவில் கைப்பிடி எதுவுமில்லை. அவள் ஒருவித பயத்துடன் அதைத் தள்ள, அது திறந்து கொண்டது.

    வெறும் மெல்லிய துணியை மட்டுமே தனது ஆடையாய்க் கொண்டு, நடுக்கத்துடனும் உண்மை என்னவென்று தெரியாத குழப்பத்துடனும் அந்தக் கதவின் வழியே எட்டிப் பார்த்தாள். அங்கு ஆள் நடமாட்டமே இல்லை. தனது பாதங்களை மெல்ல நகர்த்தி வெளியே வந்து கதவைச் சத்தம் வராமல் மூடினாள். அது ஒரு பெரிய காலி அறை. அவளது அறைக் கதவைப் போலவே இன்னும் அங்கு மூன்று கதவுகள் இருந்தன. எந்தக் கதவிலும் கைப்பிடி இல்லை. அதில் ஏதோ ஒன்றுதான் வெளியே செல்ல வழியாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.

    தனக்கு மிக அருகில் இருந்த கதவை நோக்கி பயத்துடன் நகர்ந்தாள். இடது கையால் தன் நெஞ்சில் படர்ந்திருந்த துணியை இறுகப் பிடித்துக் கொண்டு, நடுங்கியவாறு வலது கையால் கதவைத் தள்ளினாள். உள்ளே இருட்டாக இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அவள் உள்ளே சென்றதும் கதவு தானே ‘க்ரீச்’ என்ற சிறிய சத்தத்துடன் மூடிக் கொண்டது.

    நொடிப்பொழுதில் அந்த அறை வெளிச்சமானது. லட்சுமியின் இதயம் வேகமாகத் துடிப்பதை அவளால் உணர முடிந்தது. அவள் தலைக்கு மேலே எங்காவது குழல் விளக்கு⁶ இருக்கிறதா என்று பார்த்தாள். மேற் கூரை காலியாக இருந்தது. அப்போதுதான், அவளது வலப்பக்கச் சுவரிலுள்ள ஒளியுமிழ் இருமுனையத் திரை, வெள்ளை நிறத்தைக் கக்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

    தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அந்த அறையை நோட்டமிட்டாள். வலப்பக்கச் சுவரின் கீழே ஒரு பெரிய குழாய் பொருத்தப்பட்டிருந்தது. அந்தக் குழாய், சுவரில் புகுந்து அடுத்த அறைக்குச் சென்றது. அதன் மறுமுனை ஒரு பெரிய இரும்பு போன்ற எட்டு அடி நீளமுள்ள பெட்டியுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஏதோ ஒரு பொருள் வலப்பக்க அறையிலிருந்து அந்த அறைக்குக் குழாய் மூலம் அனுப்பப்பட்டு அந்தப் பெட்டியில் சேகரிக்கப்படுகிறது என்று யூகித்துக் கொண்டாள். ஆனால் அந்தப் பொருள் என்னவாக இருக்கும் என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை.

    லட்சுமி வலப்பக்கச் சுவர் அருகில் நின்றிருந்ததால், அந்த 5 அடி உயரப் பெட்டியின் பின்பக்கத்தை மட்டுமே அவளால் காண முடிந்தது. அந்தப் பெட்டியின் முன்பக்கத்தை நோக்கி நகர்ந்தாள். அந்தப் பெட்டியின் முன்பாதியின் மேல்பகுதியில் மட்டும் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. உள்ளே சேகரிக்கப்படும் பொருளைக் காண லட்சுமிக்கு மிக ஆர்வமாக இருந்தது. சுற்றுமுற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மெல்ல அந்தக் கண்ணாடிக்குள் எட்டிப் பார்த்தாள்.

    பார்த்த வேகத்தில் அலறியபடி பின்னால் வேகமாய் நகர்ந்து சுவரில் முட்டி நடுங்கிக் கீழே விழுந்தாள். பதற்றத்துடன் ஓடிப்போய் கதவை வேகமாகத் தட்டினாள். அவள் கதவைத் திறங்க என்று கத்த முயன்றாள். ஆனால், வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டு வெளியே வர மறுத்தன. வேகமாக மூச்சு வாங்கியது. அவள் செய்த அந்த ஆர்ப்பாட்டத்தில் அவள் சுற்றியிருந்த துணி, அவள் தடுக்கி விழுந்த அச்சுவரின் அருகில் விழுந்திருந்ததை அவள் கவனிக்கவில்லை.

    அவள் பதற்றத்திலிருந்து மீள்வதற்கு முன்பே, யாக்கை 100048 முழுவதுமாக நிர்வாணம் ஆக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்று கணீரென்று ஓர் ஆண் குரல் ஒலித்தது.

    அவள் மேலும் பதற்றமாகி, நிலைமையை உணர்ந்தவளாய் ஓடிப்போய் துணியை மீண்டும் எடுத்துத் தன்மேல் சுற்றிக் கொண்டே சுற்று முற்றும் தேடினாள். அவளுக்கு மூச்சு முட்டியது. அவள் இதயம் மிக வேகமாய்த் துடித்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அதே ஆணின் குரல் ஒலித்தது.

    "யாக்கை 100048 பனிக்குளியல்⁷ செய்யப்பட்டு செயற்கை இரத்த ஓட்டத்திற்குத் தயார் நிலையில் உள்ளது."

    லட்சுமி இரு கைகளாலும் தனது நெஞ்சைப் பிடித்து மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள். தான் சற்றுமுன் கண்ணாடிக்குள் எட்டிப் பார்த்த பிணம் அவள் ஞாபகத்திற்கு வந்து மீண்டும் அவளை பயமுறுத்தியது. தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டு மீண்டும் அந்தப் பெட்டியின் அருகே சென்று எட்டிப் பார்த்தாள். தற்போது அந்தப் பிணம், பிணம்போல் இல்லாமல் யாரோ படுத்து உறங்குவதைப் போல் அவளுக்குத் தோன்றியது.

    அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் ஒரு காற்றழுத்த விசைக் குழாயுடன்⁸ இணைக்கப்பட்ட கம்பி நீண்டு அதன் நெஞ்சின் மேல் நின்றது. அந்தக் குழாயில் இருந்து வந்த மிருதுவான தகடு, அதன் இதயத்தை விட்டுவிட்டு அமுக்கத் தொடங்கியது. பிணத்தின் இதயம் சீரான முறையில் சுருங்கி விரிந்து உடல் முழுவதும் குருதியைக் குருதிக் குழாய்களின்

    ⁹ வழியாகச் செலுத்தியது. மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இரத்தம் சீராகச் செல்லத் தொடங்கியது.

    லட்சுமி தன் கண்கள் விரிய ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

    "யாக்கை 100048 கண்ணாடியாக்கலின்¹⁰போது செல் சேதமடையாமல் இருக்க உறை பாதுகாப்புத் திரவம்¹¹ செலுத்தப்படுகிறது."

    மீண்டும் அந்த ஆண் குரல் அறிவிக்கப் பல சிறுசிறு குழாய்கள் மெல்லிய கம்பிகளின் உதவியால் பெருந் தமனிக்கும் மற்ற தமனிகளுக்கும் இணைக்கப்பட்டு உறை பாதுகாப்புத் திரவம் செலுத்தப்பட்டது. நாளத்திலிருந்து வெளியேறும் இரத்தம், வேறு சில சிறு குழாய்கள் மூலம் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டது. படிப்படியாக அந்தப் பிணத்தின் உடல் முழுவதுமிருந்த இரத்தம் வெளியேற்றப்பட்டு உறை பாதுகாப்புத் திரவத்தால் நிரப்பப்பட்டது. அந்தக் காற்றழுத்த விசைக்குழாய் இதயத்தைச் சீராக அழுத்தி திரவத்தை உடல் முழுவதும் அனுப்பிக் கொண்டிருந்தது.

    யாக்கை 100048 உறை பாதுகாப்புத் திரவத்தின் அடர்த்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரண்டு மணி நேரம் சீராக உடலில் செலுத்தப்படுகிறது.

    அந்த ஆண் குரல் கூறியவுடன் வெள்ளை நிற ஒளி மறைந்து மீண்டும் இருள் சூழ்ந்தது.

    பிரம்மிப்பாய் நடந்தவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த லட்சுமிக்குத் திரும்பவும் பயம் தொற்றிக் கொண்டது. அவள் மூச்சு விடும் சத்தம் அவளுக்கே இரைச்சலாகக் கேட்டது.

    அடுத்து என்ன செய்வது என்று அவளது குட்டி மூளை யோசிக்கத் தொடங்கியது.

    ஒரு முடிவுடன் கதவின் அருகில் சென்று ஒருவித சந்தேகத்துடன் கதவின் மேல் கைகளை வைத்து அழுத்தினாள். கதவு திறந்து கொண்டது. முன்பு பதற்றத்தில் கதவைத் தள்ளாமல் தட்டிக் கொண்டு நின்றதை எண்ணித் தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள்.

    மெல்ல வெளியே வந்த அவள், தற்போது சற்று தைரியமாக இரண்டாவது அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அங்கும் அதே மாதிரி ஒரு பெட்டி இருந்தது. அருகில் சென்று பார்த்தாள். பெட்டி முழுவதுமாக மூடப்பட்டிருந்தது.

    நான் நினைக்கிறது சரியா இருந்தா, இப்போ இதில் நைட்ரஜன் வளிமம் அனுப்பி உள்ளிருக்கும் உடம்ப -124 டிகிரி குளிர்விக்கணும்.

    ஏதோ ஆராய்வதைப் போல் தனது ஆள்காட்டி விரலைத் தன் சிவந்த உதடுகளின் மேல் தடவியபடியே அந்தப் பெட்டியை ஆராய்ந்தாள்.

    அவள் எதிர்பார்த்தவாறே அந்தப் பெட்டியிலிருந்து வெளிவந்த குழாய் ‘நைட்ரஜன் வளிமம்’ என்று பெயர் கொண்ட பெரிய கொள்கலத்தோடு இனணக்கப்பட்டு இருந்தது.

    மகிழ்ச்சியுடன் சில நிமிடங்கள் வேடிக்கை பார்த்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

    விஞ்ஞானியான தனது அம்மா தன்னையும் கடுங்குளிர் தொழில்நுட்ப முறையில் பதப்படுத்தி, தான் என்றாவது ஒருநாள் உயிர் பெறுவேன் என்ற நம்பிக்கையில் இருந்திருக்காங்க. நான் எத்தனை வருசமா கண்ணாடியாக உறைஞ்சு போயிருந்தேன்னு தெரியலையே.. இப்ப அம்மா உயிரோட இருப்பாங்களா? இருந்திருந்தா இப்படி என்னைத் தனியா விட்டிருக்க மாட்டாங்களே! அப்போ? இல்லை.. இல்லை.. இருக்காது. நான் செத்துப் போனது 2020 ஆகத்தான் இருக்கும். இப்போ எந்த வருசம்னு தெரியலையே தனக்குத்தானே நிறைய யோசித்துக் குழம்பிப் போனாள் லட்சுமி.

    சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த லட்சுமி, ஓர் அசாத்திய துணிச்சலுடன் கதவைத் திறந்து வெளியேறி மீதமிருந்த கடைசிக் கதவு வழியாக நுழைந்தாள்.

    லட்சுமி எதிர்பார்த்தது என்னவோ சில நூறு உருளைகள். ஆனால் அங்கு 8 அடி உயரமுள்ள பெரிய பெரிய, முழுவதும் மூடப்பட்ட உருளைகள் ஆயிரக்கணக்கில் இருந்தன.

    வாயடைத்துப் போன லட்சுமி மெல்ல அருகில் சென்றாள். ஒவ்வொரு உருளையின் முகப்பிலும், உள்ளே திரவ நைட்ரஜனால் -196 டிகிரி குளிரூட்டப்பட்டு தலைகீழாய் மிதந்து கொண்டிருந்த உடல்களின் பெயர்களும், அவர்கள் இறந்த வருடமும் யாக்கை என்ற வார்த்தையோடு ஒரு எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தன.

    கண்ணன்

    12 மார்ச் 2035

    யாக்கை 700100

    ஜெர்சி

    4 ஆகஸ்ட் 2043

    யாக்கை 923909

    லட்சுமிக்குத் தலை சுற்றியது. தான் வாழ்ந்து கொண்டிருப்பது எந்த வருடத்தில் என்று சிந்திக்கவே அவளுக்கு பயமாக இருந்தது.

    அங்கிருந்தவற்றில் நூறு உருளைகள் மட்டும் சிறிது வித்தியாசமாகத் தனியாக வைக்கப்பட்டிருந்தன. அவள் அவற்றுக்கு அருகில் சென்று பெயர்களை நோட்டமிட்டாள். அமிதாப், மில்கா சிங், மன்மோகன் சிங், ஜேசுதாஸ், லதா மங்கேஷ்கர், தர்மேந்திரா, பாலசுப்பிரமணியம் என்ற பெயர்களில் உருளைகள் வரிசையாக அமைந்திருந்தன.

    அவற்றில் குறிப்பிட்டிருந்த இறந்த ஆண்டுகளைப் பார்க்க லட்சுமிக்குத் தலைச் சுற்றியது. அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. நடந்து கொண்டிருப்பதெல்லாம் நிஜம்தானா? இவர்கள் எல்லாம் தற்போது பூமியில் இல்லையா? இத்தகைய மாமனிதர்களை உயிர்ப்பிக்காமல் சாதாரண விஞ்ஞானியின் மகளான தன்னை உயிர்ப்பித்தது ஏன்? ஒருவேளை தன்னை வைத்து புது மருந்துகளை ஆராய்ச்சி செய்யும்போது, எதிர்பாராமல் தனக்கு உயிர் வந்துவிட்டதோ? அவள் மனம் கேட்கும் கேள்விகளுக்கு அவளால் பதில் கூற முடியவில்லை.

    தன்னை யாரோ உயிர்ப்பித்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் தன்னைக் காண வருவார்கள் என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டாள்.

    கண்களால் அந்த அறையை அலசி விட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1