Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Project AK
Project AK
Project AK
Ebook290 pages2 hours

Project AK

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ப்ராஜக்ட் ஃ' நாவலைத் தழுவிய 'ழகரம்' திரைப்படம் ஏப்ரல் 12, 2019 திரையரங்குகளில் வெளியானது. தற்போது 'அமேசன் ப்ரைம்'மிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

"ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை இது. ஹிட்ச்காக் திரைப்படத்தின் ஓட்டத்துக்குச் சற்றும் குறைவில்லாத வேகத்தையும் விறுவிறுப்பையும் இதில் ஒருவர் அனுபவிக்கமுடியும்.

இன்றைய கார்ப்பரேட் யுகத்தையும் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையையும் மையமாகக் கொண்டிருக்கும் அதே சமயம், ஆச்சரியமூட்டும் இடங்களில் நாம் முற்றிலும் எதிர்பார்க்காத வரலாற்று விநோதங்களைச் சாமர்த்தியமாக அறிமுகப்படுத்துகிறது.

ஒரு பக்கம், நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு புதிர்ப் பயணம் பின்னோக்கி நிகழ்கிறது. இன்னொரு பக்கம் எதிர்காலத்தை நோக்கி ஒரு மாபெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்படுகிறது. எதிரும் புதிருமான இந்த இரு பயணங்களும் தொட்டுக்கொள்ளும் இடம் சுவாரஸ்யமானது. புதுமைக்கும் பழமைக்கும் முடிச்சுப்போடும் இத்தகைய இடங்கள் நாவலை வேறொரு தளத்துக்குக் கொண்டுசென்றுவிடுகின்றன.

அறிவியல் புனைக்கதைத் துறையில் இந்நாவல் குறிப்பிடத்தக்க ஓரிடத்தைப் பிடிக்கப்போவது உறுதி. சிலிர்க்கவைக்கும் புதியதோர் அனுபவத்துக்குத் தயாராகுங்கள்."

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580148007714
Project AK

Read more from Kava Kamz

Related to Project AK

Related ebooks

Related categories

Reviews for Project AK

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Project AK - Kava Kamz

    https://www.pustaka.co.in

    ப்ராஜக்ட் ஃ

    Project AK

    Author:

    கவா கம்ஸ்

    Kava Kamz

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kava-kamz

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    நம்பமுடியாத பல அதிசயங்கள் இப் பூமிப் பந்தில் நாளும் நிகழ்ந்து வருகின்றன. அவற்றில் சில, மனிதச் சிந்தனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. அதற்காக அவை சாத்தியமே இல்லை என்று நாம் எண்ணுவது அறியாமை. அவ்வாறு எனக்குத் தோன்றிய ஒரு சரித்திர நிகழ்வை நான் ஆராய முற்பட்டேன். அதன் விளைவே இப் புதினம்.

    அந்த ஆய்வில் நான் கற்பனையாய் நினைத்துக் கொண்டிருந்த பலவற்றிற்கு ஆதாரங்கள் கிடைத்தன. அந்த ஆதாரங்கள் அனைத்தையும் வைத்து கற்பனையோடு தொகுத்து நகைச்சுவையையும் கலந்து இப் புதினத்தை உருவாக்கியுள்ளேன்.

    இதை நான் எழுத முற்படும்போது தமிழின் தொன்மையையும் பெருமையையும் நம் முன்னோர்களின் கலைத்திறனையும் அவர்கள் நமக்காக விட்டுச்சென்றுள்ள நினைவுச் சின்னங்களையும் இன்னும் பல செய்திகளையும் தெரிந்து கொண்டேன். இதில், கடுகளவை என் கதை மாந்தர்கள் உங்களுக்குச் சொல்லுவார்கள். இவற்றைத் தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு இளைஞனும், தான் தமிழனாகப் பிறந்ததற்காக நிச்சயம் கர்வப்படுவான்.

    இப் புதினத்தை நீங்கள் படித்து முடிக்கும்போது உங்களுக்குத் தமிழின் மீதும் நமது முன்னோர்கள் மீதும் இருக்கும் மரியாதை இரண்டு மடங்காகக் கூடினால் அதுவே எனது எழுத்துக்குக் கிடைத்த தவப்பயன்.

    என்றும் உங்களோடு எழுத்துவடிவில்

    கவா கம்ஸ்

    நன்றி

    தாய்மொழியாம் தமிழ்மொழியை

    தித்திப்பாய் தினம்ஊட்டிய

    தாய்தந்தை தமையன்தனை

    தலைவணங்கியென் எழுதுகோலைத்

    தமிழுக்காய் தவம்செய்யப் பணிக்கின்றேன்!

    சாணைதீட்டிச் செம்மைப்படுத்தி

    செழுமையாயென் தமிழ் இலக்கணம்

    சிறக்க ஜெய்வாபாய் பள்ளியாசிரியர்கள்

    செலவழித்த கணங்களுக்குக் கடன்படுகின்றேன்!

    என்னை எனக்கே அறிமுகப்படுத்தி

    எந்தநிலையிலும் எனக்குத்துணைநிற்கும்

    என் கணவருக்கே

    எல்லாப் புகழும்!

    பிழைகளைக் களைந்து இந்நூலினை

    பரிசுத்தம்செய்த புதேரி தானப்பன் அவர்களுக்கும்

    பாருக்குஇதனை அறிமுகம் செய்யும்

    பார்புகழ் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கும்

    பற்றுதலாக அறிமுகவுரைதந்த

    ஜி.பி. சதுர்புஜன் அவர்களுக்கும்

    பணிவாய் என்நன்றிகளை

    பதிவுசெய்கிறேன்! வணங்குகிறேன்!!

    அணிந்துரை

    இந் நூலின் ஆசிரியர் கவா கம்ஸ்ஸா?

    யார் இவர்?

    இப்படியும் ஒரு பெயரா?

    இவர் ஆணா பெண்ணா?

    எத்தனை நூல்களை எழுதியிருக்கிறார்?

    இவர் தமிழ் மொழிப் பற்றாளரா அன்றி ஆங்கில மொழிப் பற்றாளரா?

    இவருக்கு என்ன வயதிருக்கும்?

    என்ன படித்திருப்பார்?

    என்னவாகப் பணி புரிவார்?

    இவர் ஓர் ஆய்வறிஞராக இருப்பாரோ?

    கணித ஆசிரியராக இருப்பாரோ?

    என்பன போன்ற வினாக்கள் எதுவும் இந் நாவலைப் படிக்குமுன் உங்கள் உள்ளத்தில் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இந் நாவலைப் படிக்கப் படிக்க மேற் கூறிய வினாக்கள் எழக்கூடும்; இது இயல்பு.

    இந்த நாவலைப் படிப்பவர்கள் தமிழ் மொழிப் பற்றாளராக இருப்பார்களேயாயின், ‘இதை எழுதியவர் ஆங்கில மொழியின் மீது அளவிலா மோகம் கொண்டவராக இருப்பாரோ?’ என்னும் அய்யம் எழும். ஆனால் படிக்கப் படிக்க இந்த அய்யம் குறையும்.

    எனினும் நாவல் முழுவதும் ஆங்கிலச் சொற்களே நிரம்பி வழிகின்றன என்று நினைக்கும்போது இந்த ஆசிரியர் மீது நமக்குக் கோபம் வருகிறது.

    தெரிந்தோ தெரியாமலோ மனித இனத்திற்குப் பல்வேறு வகையில் நன்மை புரிந்து வரும் பிற உயிரினங்கள் இந்தப் பூமித் தாய்க்குக் கட்டாயம் தேவைப்படுகின்றன. அவை அழிக்கப்படும் அளவுக்கு ஏற்ப மனித இனத்துக்கும் சுற்றுப் புறச் சூழலுக்கும் விரும்பத் தகாத விளைவுகள் நிகழ்கின்றன என்னும் கருத்து இந்த நாவலில் புதைந்து கிடக்கின்றது.

    இன்றைய இளைஞர் உலகம் கணினி, பணம் பண்ணுதல், ஆடற் பாடல், கூத்து கொண்டாட்டம் என்னும் திசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்னும் கருத்திலிருந்து இந்த நாவல் சற்று விலகி நிற்கிறது.

    கணிப்பொறியின் ஊடே சிக்கித் தவித்தாலும் அத்தி பூத்தாற்போல ஆங்காங்கே சில இளைஞர்கள் தமிழ் மொழிப் பற்றுள்ளவர்களாகத் திகழ்கின்றனர் என்பதை இந்த நாவல் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது.

    இளைஞர்களுக்கு நிரந்தர வேலை இருப்பதில்லை. அவர்கள் ‘நித்ய கண்டம் பூரண ஆயுசு’வோடுதான் வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர் என்னும் உண்மையைக் கதை மாந்தர்கள் மூலமாக அறியவருகிறோம்.

    தமிழ் மொழி அறிவும் கணிப்பொறி அறிவும் கைகோர்த்து விளையாடுகின்றன.

    யாழ்ப்பாணத் தமிழர்களின் நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நிகழ்ச்சி ஆசிரியருக்கு மட்டுமல்ல, தமிழ் உலகுக்கே ஓர் ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டது என்பதை உணர்கிறோம்.

    காலாவதியாகிப்போன தந்திமுறையின் எழுத்துகளை இனிவரும் தலைமுறையினருக்குக் கொண்டுசேர்க்கும் நாவலாசிரியரின் உத்தி பாராட்டுதற்குரியது.

    சங்க காலக் கவிதைகளின் சான்றோர்ச் சிந்தனைகளை மதித்து இவர் சரமாய்க் கோர்த்துக் கொள்கிறார்.

    கோவை மாநகரின் பாதாள லிங்கத்தைப் பார்க்க நமக்குள் ஓர் ஆர்வத்தை இந்த நாவல் தூண்டுகிறது.

    தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தை நம்மில் எத்தனைப் பேர் பார்த்திருக்கிறோம்? அது நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தப்படுகிறது.

    மகாபலிபுரத்தின் ஒரு கற்பனைக் காட்சி படிப்போர் மனதில் வியப்பை ஏற்படுத்திவிடுகிறது.

    ராஜராஜ சோழனின் தமிழ் ஆர்வத்தை நாவலில் படிக்கும் பொது நம் குழந்தைகள் மூலமாகத் தமிழை ஒதுக்கித் தள்ளும் நாம் வெட்கத்தால் தலை குனிகிறோம்.

    கிரிக்கெட் விளையாட்டின் மீது உலகம் முழுவதும் பெருவாரியான மக்களுக்கு மோகம் உள்ளதுதான். ஆனால் இந்த விளையாட்டைப் பற்றிய அறிஞர் பெர்னாட்ஷாவின் கருத்தை ஏற்றுக் கொள்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இந்த நாவலாசிரியர் ஓர் எடுத்துக் காட்டு.

    இவருடைய கணித அறிவுக்கு ஈடு கொடுத்து நாவலைப் படிக்கும் போது நமது ஓட்டம் சற்று தடைபட்டுத்தான் போகிறது.

    இந்த நாவலின் ‘ப்ராஜக்ட் ஃ’ என்னும் தலைப்பு ஆங்கிலத் தலைப்புதான். ஆனால் இது நாவலின் ஒருவகை உத்தி என்பது வெளிப்படை. எனினும் நூல் முழுவதும் உள்ள உரையாடல்கள் ‘தமிங்கில’த்தில் அமைந்துள்ளது போலவே நாவலின் தலைப்பும் ஆங்கிலத்தில் அமைய வேண்டுமா என்னும் ஏக்கம் நம்முள் எழத்தான் செய்கிறது. இந்த ஏக்கத்தை ‘ழகரம்’ அமைப்பு என்னும் அழகான தமிழ்ப் பெயர் சட்டெனப் போக்கிவிடுகிறது.

    இப்படி இந்த நாவலின் உயிரோட்டத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நாவலைப் படித்து முடித்தபின் ஆசிரியரை நேரில் பார்க்கும்போது, இந்தக் கடுகுக்கு இவ்வளவு காரமா? என்று கேட்கத் தோன்றுகிறது.

    நீங்கள் கட்டாயம் இந்த நாவலைப் படிக்க வேண்டும். ஓரிரு சொற்றொடர்களில் உங்களது கருத்தைச் சொல்லவேண்டும். இதுவே என் அவா. இதுவே நீங்கள் செய்யும் தமிழ்த் தொண்டு. எழுத்துலகிற்கு இவர் ஒரு புதிய வரவு. எழுத்தாளர்கள் இவரை வரவேற்க வேண்டும். தமிழன்னையின் ஆயிரம் அணிமணிகளுக்கிடையில் இவர் ஒரு துரும்பாய் ஒளிரினும் எனக்கு மகிழ்ச்சியே!

    தமிழில் நாவல் இலக்கியம் எழுதுவதும் படிப்பதும் பெருமளவு குறைந்துவிட்ட இந்நாளில் இவரது நாவல் எழுதும் முயற்சி பெரிதும் வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

    தமிழன்னையின் பொற்பாதச் சிலம்புதனில் இவரது மாணிக்கப் பரல்கள் பல பதிக்கப்பட்டு மேன்மேலும் இவர் சிறப்புப் பெற வாழ்த்துகிறேன்.

    வாழ்த்துகளுடன்

    புதேரி தானப்பன்

    இளைஞர்களுக்கென்றே ஒரு நாவல்

    கதை கேட்பதும் கதை சொல்வதும் மனித வாழ்க்கையின் இயல்பான விஷயங்களில் ஒன்று. கதை என்றதுமே நாம் நம்மையறியாமல் நம் காதுகளைத் தீட்டிக் கொள்கிறோம். திரும்பிப் பார்த்தால், நம் வாழ்க்கையே ஒரு நீண்ட கதையாகவும் குட்டிக்கதைகளின் தோரணமாகவும் நமக்குத் தெரிகிறது. பாட்டி தாத்தா சொன்ன புராணக் கதைகள், அன்னை மடியில் கேட்ட குழந்தைக் கதைகள், நண்பர்கள், உறவினர்கள் கட்டிவிட்ட கதைகள், பள்ளியிலும் கல்லூரியிலும் நம் ஆசிரியர்கள் வகுப்பில் சுவையூட்ட சேர்த்த கதைகள், மேடையில், திரைப்படத்தில், தொலைக்காட்சியில் என்று பற்பல வடிவங்களில் நாம் கண்டு களித்த கதைகள்… இப்படி வாழ்க்கை முழுவதும் நம்மோடு கதைகள் பயணித்துக் கொண்டே, அதே நேரத்தில், நம் ரசனையைத் தூண்டிவிட்டு நம் வாழ்க்கைக்கு சுவையும் செறிவும் சேர்க்கின்றன கதைகள்.

    கதைகளை நாம் யார் வேண்டுமானாலும் கேட்கலாம்; படிக்கலாம். ஆனால், நம் ஆவலைத் தூண்டும் விதத்தில் ரசித்துக் கேட்கவும் படிக்கவும் செய்ய ஒரு சில கதைசொல்லிகளாலும் கதாசிரியர்களாலும் மட்டுமே முடிகிறது. அவருடைய திறமையினாலும் முயற்சியினாலும் கற்பனை யினாலும் ஒரு நல்ல கதையைப் படைத்தளிக்க ஒரு தேர்ந்த எழுத்தாளரால் மட்டுமே முடிகிறது.

    1876-இல் அறிஞர் வேதநாயகம்பிள்ளையில் தொடங்கி இன்றைய நாவலாசிரியர்கள் வரை, தமிழில், ஒரு இடைவெளியில்லாத தொடர்போல பல்வேறு எழுத்தாளர்கள் பங்களித்திருக்கிறார்கள். இன்றும் நல்ல சுவையான படைப்புகளைத் தந்து கொண் டிருக்கிறார்கள். இந்த பெருமைமிகு வரிசையில் இப்போது இணைந்திருக்கும் ஒரு புதிய நல்வரவு ‘கவா கம்ஸ்’ என்ற புனைப்பெயரில் எழுதும் இந்நாவலின் ஆசிரியர்.

    கவா கம்ஸ் அவர்களை நான் சில திங்களாகத்தான் அறிவேன். அவருடைய அருமைக் கணவர் நான் படித்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் எனக்குப் பல ஆண்டுகள் பின்னால் படித்து வெளிவந்த முன்னாள் மாணவர். அவர் மூலம் கவா கம்ஸ் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு தன்னுடைய முதல் நாவலான இந்த ’ப்ராஜக்ட் ஃ’ என்ற நாவலைப் படித்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தலைநகர் தில்லியிலுள்ள அவர் தருமமிகு சென்னையில் வசிக்கும் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார்.

    நான் சிறுகதைகள், கவிதை, கட்டுரை என்று பல நூல்கள் புனைந்திருப்பினும், நாவல்கள் பொதுவாக என்னை ஈர்ப்பதில்லை. நாவல்களைப் படிக்கத் தொடங்கினாலும், தொடர்ந்து முனைந்து முடிவுவரை பலநூறு பக்கங்கள் படிக்கப் பொறுமை இருப்பதில்லை. ஆகவே, சற்று தயக்கத்துடனேதான் கவா கம்ஸின் ’ப்ராஜக்ட் ஃ’ நாவலைப் படிக்கத் தொடங்கினேன்.

    என் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக, இந்த மர்மநாவல் ஒரு ஹிட்ச்காக் திரைப்படம் போல எடுத்த எடுப்பிலேயே சூடுபிடிக்கிறது. இந்தக்கால படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பொரேட் சூழலில் பரபரவென்று தொடங்கி, இந்த நாவல் நம்மை மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது. அகில், கீர்த்தி, சுதர்சன், பானு, சினேகா என்று சேரும் நண்பர்குழாம் நம்மையும் கூடவே சேர்த்துக் கொண்டு ஒரு தேடலில் கொண்டு செல்கிறது. இடையிடையே நமக்குத் தெரியாத பல ருசிகரமான, ஆச்சரியமான வரலாற்று விபரங்கள் கதை நடுவே ஊடுபாவாக நெய்யப்படுகிறது. இந்த புத்திசாலித்தனமான, புதுமையான கதைப்பின்னணியில் நாம் கரைந்து விடுகிறோம். ‘அடுத்து என்ன நடக்கப் போகிறது?’ என்று ஒவ்வொரு நிமிடமும் நம்மை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது இந்த ப்ராஜக்ட் ஃ நாவல். ஒரு சிறந்த மர்ம நாவலுக்கான வேகமும் விறுவிறுப்பும், இந்த நாவலின் நாடித்துடிப்பாக தொடர்ந்து இயங்குகிறது.

    கவா கம்ஸ் ஒரு சிறந்த நாவலாசிரியராக உருவெடுப்பார் என்பதற்கு இந்த கன்னிமுயற்சி கட்டியம் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால், நாவல் உலகைத்தவிர, திரைக்கதையிலும் வரும் நாட்களில் இவர் முத்திரை பதிக்க வல்லவர் என்று இவருடைய நடையும், பாத்திரப்படைப்பும் உறுதியளிக்கின்றன.

    ’ப்ராஜக்ட் ஃ’ இளைஞர்களும் மனதில் இளமை உள்ளவர்களும் படித்து மகிழவேண்டிய மர்மநாவல். எழுத்தாளராக மேன்மேலும் வளர்ந்து வெற்றிகள் பல பெற கவா கம்ஸ் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ஜி.பி. சதுர்புஜன்

    மேற்கு மாம்பலம், சென்னை: 600033.

    மின்னஞ்சல் – kvprgirija@gmail.com

    6-12-2014

    சத்யம் மென்பொருள் நிறுவனம்

    காலை 9 மணி

    இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தனது இயல்பு மாறாமல், சூரியன் பூமியின் உயிர்களைத் தன் வெப்பத்தால் இதப்படுத்திக் கொண்டிருந்தான். மனிதனின் பார்வைக்குத் தப்பி மிஞ்சிய பறவை இனங்கள் நாளைய கவலையின்றி மகிழ்ச்சியாய்ப் பறந்து கொண்டிருந்தன. உயிர்த் தியாகம் செய்தது போக எஞ்சிய மரங்கள் சிலுசிலுவென தொன்றலை வீசி நடனமாடிக் கொண்டிருந்தன.

    இவை எதையுமே கண்டுகொள்ளாமல் தங்களது காதுகளின் இயர்போனில் ஒலிக்கும் இன்னிசைப் பாடலில் மயங்கி, தனக்குத்தானே தலையாட்டிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையின் அந்த இனிய காலைப் பொழுதில்……

    வலது கையில் கைப்பேசியோடு இடது கையிலிருந்த கைகுட்டையால் நெற்றி வியர்வையைத் துடைத்தபடியே உள்ளே நுழைந்தான், அகில். அவனது கண்களில் பயம் தெரிந்தது.

    இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரம்மாண்டமாய் அமைந்திருந்தது அந்த மென்பொருள் நிறுவனம். கண்ணாடிச் சுவர்கள் கம்பீரமாய் நின்று கொண்டிருந்தன. மிடுக்காக உடையணிந்த பொறியாளர்களும் மற்ற துறையினரும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர். அவர்களது பூட்ஸ் சத்தம் மட்டுமே காற்றில் மிதந்தது. அங்கு வேறு எந்த ஒலியும் கேட்கவில்லை. ஒருவருக்கொருவர் எதிர்ப்படும்போது மட்டும் அளவான புன்னகையை உதிர்த்துச் சென்றனர்.

    அகிலைக் கண்டதும் மூடியிருந்த கண்ணாடிக் கதவு வணங்கி வழிவிட்டது. வரவேற்பறையின் மீன் தொட்டியில் நீச்சலடித்துக் கொண்டிருந்த மீன்கள் ஒரு நிமிடம் நின்று அவனை உற்றுப் பார்த்தன. அகில் அவற்றைக் கண்டுகொள்ளாத காரணத்தால் மீண்டும் நீந்தத் தொடங்கின.

    ஹாய் அகில்! குட் மார்னிங்.... எனிதிங் ராங்? ஏன் உங்களுக்கு இப்படி வேர்த்திருக்கு? ரிசப்சனிஸ்ட் பிரேமா வழிமறித்தாள்.

    பிரேமா அந் நிறுவனத்தின் 'டாப் பிகர்களில்' ஒருத்தி. அன்று சிகப்பு நிற சர்ட்டும் கருப்பு நிற பேன்ட்டும் அணிந்திருந்தாள். பெரிய விழிகளை மையினால் கூர்மையாக்கியிருந்தாள். உதடுகளில் லிப்ஸ்டிக் ஒட்டிக்கொண்டிருந்தது. பிரேமாவின்மீது அங்கு வேலை செய்யும் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு கண். திருமணம் ஆனவர்களுக்கோ இரண்டு கண்களும்!! ஆனால் பிரேமாவின் கண்களோ அகில்மீது! ஒருதலைக் காதல்!!

    அகிலும் அவளுக்கு நிகர்தான். மாநிறம்; நல்ல உயரம்; வசீகரமான முகம். பார்த்தாலே ஒரு 'சாப்ட்வேர் என்ஜினியர்' என்று குழந்தைகூட சொல்லக்கூடிய அளவில் எப்போதுமே அவனது நடை உடை இருக்கும்.

    நோ! நோ! ஐயாம் பைன்... என்றான் அகில்; திரும்பி வாசலைப் பார்த்தபடியே. ஒருமுறை தன்னை யாரும் பின் தொடரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பிரேமாவின் பக்கம் திரும்பினான்.

    ஏதோ ஒரு அழகான பொண்ணைப் பார்த்து பயந்து ஓடி வரமாதிரி தெரியுது.... நகைத்தாள் பிரேமா.

    இல்ல... என்னை யாரோ பாலோ பண்ணி வந்தமாதிரி இருந்துச்சு..... அதான்.... என்றான் அகில், குழப்பத்துடன்.

    உள்ளே வந்திட்டீங்க இல்லே... இனி யார் வந்தாலும் என்னைத் தாண்டித்தான் உங்களை நெருங்க முடியும்... போய் நிம்மதியா வேலை செய்யுங்க! அவளது உதடுகள் சிரித்தன.

    பதிலுக்கு அகிலும் புன்னகையை உதிர்த்துவிட்டுத் தன் அறையை நோக்கி நடந்தான். ஒரு பெரிய ஹாலில், பகுதி பகுதியாக ‘கேபின்’ எனப்படும் சிறுசிறு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால் கதவுகள் கிடையாது. எழுந்து நின்றால் யார் வேண்டுமானாலும் மற்றவர்களைப் பார்த்துக் கண்ணடிக்கலாம்; கை குலுக்கலாம்!! ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கணினி, தொலைபேசி, நாற்காலி – ஏன், குப்பைத் தொட்டிகூட கொடுக்கப்பட்டிருந்தது. குளிர்சாதனப் பெட்டி மிதமான குளிரைப் பரப்பிக் கொண்டிருந்தது.

    "ஹலோ பாஸ்….! நாம அனுப்பின அந்த ஜாவா ஸ்கிரிப்ட் பாதியிலேயே

    Enjoying the preview?
    Page 1 of 1