Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Instagram Thadayangal
Instagram Thadayangal
Instagram Thadayangal
Ebook401 pages2 hours

Instagram Thadayangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"தமிழ்நாடு காவல் துறையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புனைவு"

"ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி திருமதி. வசந்தி திருமலைச்சாமி அவர்களின் பணிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளைக் குறிப்புகளாக எடுத்துக் கொண்டு, கற்பனையான கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் சேர்த்து இந்த நாவலை எழுதியுள்ளேன். நான் பிறந்து வளர்ந்த தமிழ்நாட்டில் என்னைச் சுற்றி இவ்வளவு குற்றங்கள் நடந்து கொண்டு இருக்கின்றனவா என்று எனக்கே மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சில சமயம் உண்மை என்பது புனைவை விடக் கொடூரமானதாக, மனதைப் பிளப்பதாக இருக்கின்றது!"

எங்களது இந்த முயற்சி, இந்தச் சமுதாயத்தைப் பற்றிய உண்மை நிலையை உணர்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்!

Languageதமிழ்
Release dateFeb 12, 2024
ISBN6580148010730
Instagram Thadayangal

Read more from Kava Kamz

Related to Instagram Thadayangal

Related ebooks

Related categories

Reviews for Instagram Thadayangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Instagram Thadayangal - Kava Kamz

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இன்ஸ்டாகிராம் தடயங்கள்

    Instagram Thadayangal

    Author:

    கவா கம்ஸ்

    Kava Kamz

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kava-kamz

    பொருளடக்கம்

    என்னுரை

    வாழ்த்துரை

    அணிந்துரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    என்னுரை

    இந்த நாவல் உருவானது மிகவும் எதிர்பாராத ஒரு நிகழ்வு. எனக்கும் காவல் துறைக்கும் வெகு தூரம். ஒரே ஒரு முறை ‘பாஸ்போர்ட்’ வாங்குவதற்காகக் காவல் நிலையம் சென்றதாக ஞாபகம். ஆனால், ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி திருமதி வசந்தி திருமலைச்சாமி அவர்களைச் சந்தித்த பின்தான் காவல்துறை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

    அவர் தனது பணிக் காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளையும் அவர் சந்தித்த சவாலான வழக்குகளையும் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது உண்மையிலேயே அவர் மீதும் காவல்துறை மீதும் எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. படிப்படியாக நான் அவரது தீவிர ரசிகை ஆகிவிட்டேன் என்பதே உண்மை. அவரது நேர்மையும் துணிச்சலும் இக்கட்டான நேரங்களில் காட்டிய மனத் திட்பமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தன.

    திருமதி வசந்தி திருமலைச்சாமி அவர்களை நான் எனது சிறுவயதிலேயே சந்தித்திருந்தால், நிச்சயமாக அவரால் ஈர்க்கப்பட்டு எப்பாடு பட்டாவது காவல்துறைப் பணியில் சேர்ந்திருப்பேன். இவரைப் போல் இன்னும் எத்தனை வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்றை நாம் அறியாமல் இருக்கிறோமோ தெரியவில்லை. அவரைச் சந்தித்ததற்காகவும் இந்த நாவலை எழுதும் வாய்ப்பு கிடைத்ததற்காகவும் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

    எனக்காக நேரம் ஒதுக்கித் தன்னைப் பற்றிப் பகிர்ந்து கொண்டதற்காகவும், நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதில் கூறியதற்காகவும் காவல்துறை உயரதிகாரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவரது பணிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளைக் குறிப்புகளாக எடுத்துக் கொண்டு, கற்பனையான கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் சேர்த்து இந்த நாவலை எழுதியுள்ளேன். அதாவது அனுபவம் அவருடையது; கதை என்னுடையது.

    அவரது சாதனைகள் அனைத்தையும் என்னால் இந்தப் புத்தகத்தில் கொண்டுவர முடியவில்லை. ஆயினும் முடிந்தவரை முக்கியமானவற்றை எடுத்துக் கொண்டுள்ளேன். இந்த நாவலில் எது உண்மை எது புனைவு என்று பிரித்தறிவது கடினமே. இது முழுக்க முழுக்க மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் நோக்கத்துடனேயே எழுதப்பட்டுள்ளது. இந்த நாவல் ஒரு புனைவு என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன்.

    சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும், பாதுகாப்பு இல்லாத ஒரு சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கதையிலாவது ‘தர்மம்’ ஜெயிக்கட்டுமே என்று இந்தப் புனைவில் தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவதைப் போல் கதையை முடித்துள்ளேன்.

    ஆனால், உண்மையில் இந்த நொடி, அந்த நபர்கள் சுதந்திரமாக அதே அரசியல் மற்றும் பண பலத்துடன் உலவிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட ஒருவர் கூட இன்னும் தண்டிக்கப்படவில்லை என்று திருமதி வசந்தி திருமலைச்சாமி அவர்கள் மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்தார்.

    நமது குழந்தைகள் எப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கொஞ்சம் கைப் பேசியையும், மடிக்கணிணியையும் ஓரமாய் வைத்துவிட்டு வெளியில் வந்து பாருங்கள். உண்மை என்பது புனைவை விடக் கொடூரமானதாக, மனதைப் பிளப்பதாக இருக்கின்றது!

    விழித்துக் கொள்ளுங்கள்! இன்றேல் வருங்காலத்தில் தண்ணீருக்காக நம் நிலத்தைத் தோண்டினால், தண்ணீர் இருக்காது; ரத்தம்தான் உறைந்து கிடக்கும்!

    எழுத்து வடிவில் என்றும் உங்களோடு

    கவா கம்ஸ்

    வாழ்த்துரை

    நான் வசந்தி திருமலைச்சாமி.

    1981இல் எனது ஆர்வத்தின் காரணமாகவும் பிடிவாதத்தின் காரணமாகவும் காவல்துறைப் பணியில் சேர்ந்தேன். பல இடங்களில் சிறப்பாகப் பணியாற்றினேன். நேர்மை, திறமை, ஒழுக்கம் இந்த மூன்றையும் தாரக மந்திரமாக எனது வாழ்க்கையில் கடைபிடித்துப் பணியாற்றி 2019-இல் ஓய்வு பெற்றேன்.

    நான் மனதார விரும்பி ஏற்றுக் கொண்ட பணி இது. என்னுடைய தந்தை காவல் துறையில் தலைமைக் காவலராக இருந்ததனால், சிறுவயதில் இருந்தே அவருடைய நடை, உடை, மிடுக்கு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு நான் இப் பணியில் சேர்ந்தேன். மிகவும் விருப்பப்பட்டு இந்தப் பணியில் சேர்ந்ததால் எனது அனைத்துக் கடமைகளையும் மிகவும் விரும்பிச் செய்தேன்.

    பல இடையூறுகளும் துன்பங்களும் காவல்துறையில் இருந்தாலும் நியாயமாகவும் நேர்மையாகவும் பணியாற்றினேன். அதற்குரிய அங்கீகாரமும் எனக்குக் கிடைத்தது.

    இந்த நாவல் உண்மையும் கற்பனையும் கலந்த கலவை. என்னுடைய அனுபவங்களும் கவா கம்ஸ் அவர்களின் கைப் பக்குவமும் இணைந்து இந்த நாவலை உருவாக்கி உள்ளது.

    இந்த நாவல் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகின்றேன்.

    நன்றி

    வசந்தி திருமலைச்சாமி

    ஓய்வு பெற்ற உயர் அதிகாரி

    தமிழ்நாடு காவல்துறை

    அணிந்துரை

    இன்ஸ்டாகிராம் தடயங்கள் என்னும் இந்தப் புதினம் கவா கம்ஸ் அவர்களின் வாசகர்களுக்கு ஒரு புத்துணர்வைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. அவர்களிலும் கணிணி அறிவியல் துறையில் இருப்பவர்களுக்கு கணிணித் தொடர்பான அறிவையும் ஆர்வத்தையும் கூடுதலாக இயக்கும்.

    புதினத்தை எழுதுவதில் குறிப்பிட்ட இலக்கை எழுத்தாளர் கவா கம்ஸ் அவர்கள் எட்டிவிட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. இது இவரது நான்காவது புதினம். புதினத்தை எழுதத் தொடங்கினால் விறு விறு என்று வேகமாக எழுதிக் கொண்டே போகும் திறமை இவருக்கு இயல்பாகவே இருக்கிறது. மணல் ஊற்று நீர் போல் அவரது சிந்தனை பீரிட்டுக் கொண்டே இருக்கும். இந்த இயல்பு இவருக்கு இருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

    நமது நாட்டுக் காவல் துறையைப்பற்றி மக்களுக்கு இருக்கும் இயல்பான புரிதலிலிருந்து மாறுபட்ட கோணத்தை இந்தப் புதினம் ஏற்படுத்தும் என்பது உறுதி. அரசியல்வாதிகளும் மக்களைப் பற்றியும் இளம் பிஞ்சுகளைப் பற்றியும் கவலைப்படாமல் பணம் ஒன்றே நோக்கமாகக் கொண்ட சமுதாயக் களைகளும் எவ்வாறு நாட்டைச் சீரழிக்கின்றனர் என்பதை இப் புதினம் அழகாக எடுத்துச் சொல்வதை வாசகர்கள் நன்கு உணரலாம்.

    ஒரு சாதாரணக் காவலராக இருந்தாலும் உண்மை, உழைப்பு, நீதி, நேர்மை ஆகியவற்றுக்கு உரிமையாளராக இருக்க முடியும் என்பதற்கு கான்ஸ்டபிள் சுந்தரம் ஓர் எடுத்துக்காட்டு.

    வசுந்தராதேவி, யமுனா போன்றவர்களாலேயே இச் சமுதாயம் கவலையின்றி உறங்கச் செல்லுகிறது.

    பிச்சைக்காரியாக இருந்தாலும், நன்றி மறப்பது நன்றன்று என்னும் திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாக பாகேஸ்வரி விளங்குகிறாள்.

    அதிகாரம் உள்ள இடமே அச்சப்படாமல் தவறு செய்யும் களனாக இருக்கிறது என்னும் கருத்தை இப் புதினம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    நட்புக்கு இலக்கணமாக இப்ராஹிம் இலங்குவதை நமது கண்ணீர்த் துளிகள் தெரிவிக்கின்றன.

    தங்களுக்கு வாழ்வு கொடுத்த வசுந்தரா தேவிக்காகத் தங்களது உயிரையே அர்ப்பணிக்கத் துணிந்த அடித்தட்டு மக்கள்!

    இப்படி இப் புதினத்தைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

    கவா கம்ஸ் அவர்கள் இன்னும் நிறைய எழுதி, எழுத்துலகைக் கைக் கொண்டு விருதுகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துகிறேன்.

    டாக்டர் புதேரி தானப்பன்

    புது டெல்லி

    அத்தியாயம் 1

    தமிழகம் முழுவதுமே அன்றைய பொழுது, புரியாத புதிர்களுடன்தான் விடிந்தது.

    ‘தனுஷும் ஐஸ்வர்யாவும் திரும்பவும் இணைந்து விட்டார்களா?’ என்பது தொடங்கி ‘அடுத்த பிக்பாஸ் ஓ.டி.டியில் போட்டியிடப் போகும் பிரபலங்கள் யார்?’ என்பது வரை அத்தனை முக்கியமான தகவல்களைப் பற்றியும் விவாதித்துக் கொண்டே விடியும் காலைப் பொழுது, இந்த முறை மிகவும் வித்தியாசமாக மலர்ந்தது.

    தொண்ணூறுகளில் செய்தித்தாளைப் படிக்காதவன் எப்படி மதிக்கப்படுவதில்லையோ அப்படித்தான் இப்பொழுது வாட்சாப்பிலும் இன்ஸ்டாவிலும் வரும் செய்திகளைப் பார்க்காதவன் மதிக்கப்படுவதில்லை. காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்யும் காலம் போய், சோசியல் மீடியா நமஸ்காரம் செய்யத் தொடங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. அவ்வாறு தங்களது உலக அறிவை வளர்த்துக் கொள்ள, காலையில் கூசும் கண்களைத் திறக்க முடியாமல், கண்களைச் சுருக்கியபடித் தங்களது கைப்பேசியைத் தட்டி, இன்ஸ்டாவைத் திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஏனென்றால் அவை ஹேக் செய்யப்பட்டிருந்தன.

    அன்று காலை மட்டும், கிட்டதட்ட பத்தாயிரம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருந்தன. ‘என்ன நடக்கிறது?’ என்று புரியாமல் மக்கள் பீதியுடன் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்கைத் திறந்து எவனோ ஒருவன் தனக்குத் தேவைப்படுகிற தகவலைப் பகிர்ந்திருந்தான். நம்முடைய பற்குச்சியை எடுத்து வேறு யாரேனும் பல் விளக்கினால் கூட நமக்கு அவ்வளவு கோபம் வராது. ஆனால், நமது கைப்பேசியை எடுத்து யாராவது உபயோகித்து விட்டால், நமக்கு எப்படி ‘சர்’ரென்று கோபம் தலைக்கேறும்? அப்படித்தான் அன்று பலருக்கும் நடந்தது. அதனால், மருந்துக் கடைகளில் ரத்த அழுத்த மாத்திரைகளின் விற்பனையும் சூடு பிடித்தது.

    இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஹேக் செய்யப்பட்ட அத்தனைக் கணக்குகளிலும், சொல்லி வைத்தாற்போல் ஒரே செய்திதான் இடம் பெற்றிருந்தது.

    வெறும் செய்தி என்றாலோ வடிவேலுவைக் கொண்டு மீம்ஸ் போட்டிருந்தாலோ சிரித்துக் கொண்டே கடந்து சென்றிருப்பார்கள். ஆனால், இந்தச் செய்தியைப் பார்த்ததும் மக்கள் பதறினார்கள். ஏதோ கெட்ட சகுனமாக, தவறு நடக்க இருப்பதாக அவர்களது மனங்கள் கூறின. வெறும் ‘இன்ஸ்டாகிராம் போஸ்ட்’ என்றாலும் கூட பயந்துதான் போனார்கள்.

    அவர்கள் பயப்படும் அளவிற்கு அங்கு எதுவுமில்லை என்று நாம் சொல்லிவிட முடியாது. அந்தப் பதிவுகளில் இடம் பெற்றவை சில எண்கள்.

    020124624601

    வெறும் எண்களுக்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று நினைக்க வேண்டாம். காரணம் இருக்கிறது. அந்த எண்கள் இரத்தத்தினால் எழுதப்பட்டதைப் போன்று தோன்றியது. கூடவே அவை சிதறி உறைந்த இரத்தத் துளிகளின் மேல் எழுதப்பட்டிருந்தன. இரத்தத்தைப் பார்த்தாலே சிலருக்கு ஒவ்வாமை இருப்பது இயற்கைதான். ஆனால், தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில், தான் பகிர்ந்ததைப் போன்று பகிரப்பட்டுள்ளது அனைவரையும் அதிர வைத்தது. தன்னுடைய கணக்கில் தொடர்பில் உள்ள நண்பர்களும் தன்னைத் தொடர்பவர்களும் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று ஒருபுறம் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

    பதிவு செய்யப்பட்டது என்னவோ பத்தாயிரம் கணக்குகளில் என்றாலும் அதற்கும் ‘லைக்ஸ்’ போட்டுப் பகிர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர். எதைப் போட்டாலும் மக்கள் விருப்பப் பொத்தானை அழுத்தி விடுவார்களா என்ன? போன தலைமுறையில் நாம் நேரில் மனிதர்களைப் பார்த்தால் நமது கைகள் நம்மையும் அறியாமல் வணக்கம் வைத்துவிடும். அதேபோல்தான், தற்போது, தனது நண்பர்கள் எதைப் பகிர்ந்தாலும் முதலில் விருப்ப பொத்தானைத் தட்டி விட்டுவிட்டு, பின்னர்தான் என்ன பதிவு என்பதையே சிலர் வாசிக்கிறார்கள்.

    சமூக வலைத் தளத்தில் அன்று காலையில் இருந்தே இந்தப் பதிவுதான் பரப்பரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. சமீபத்தில் விவாக ரத்தாகி கிழித்துத் தொங்க விடப்பட்டுக் கொண்டிருந்த சினிமா பிரபலங்கள், அப்பாடா நாம தப்பிச்சோம். என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    இந்த இரத்தத் துளிகளுக்கு என்ன அர்த்தம்? ஏதாவது குண்டு வெடிப்பைப் பற்றிய தடயமா? இல்லை, சீரியல் கில்லரின் தகவலா? இல்லை, ஏதாவது மருத்துவனையில் இருந்து செய்தியா? இதைத் தீவிரமாகப் பரிசீலிப்பதா? அல்லது யாரோ விளையாட்டுக்காகச் செய்திருக்கிறார்கள் என்று அந்தப் பதிவை அழித்து விட்டு மற்ற வேலைகளைப் பார்ப்பதா? யாருக்கும் எதுவும் புரியவில்லை.

    ஆனால், அன்று சோசியல் மீடியாவில் விவாதிப்பதற்கு ஒரு செய்தி கிடைத்துவிட்டது. இரத்தத்தில் பொறிக்கப்பட்ட எண்கள் என்று ஹாஸ்டாக் உருவாக்கி டிவிட்டரில் தேசிய அளவில் பரபரப்பைப் பகிர்ந்து கொண்டிருந்தனர் மக்கள்.

    இன்றைய சோசியல் மீடியாவில் ஒரு பெரும் பிரச்சினை உண்டு. ஒரு தகவல் உண்மையோ பொய்யோ; அது டிரெண்டாகி விட்டால் மக்கள் அதை உண்மை என்றே நம்பி விடுகிறார்கள். எது உண்மை என்று ஆராயாமலே மனதில் உள்ள வன்மத்தை எல்லாம் கொட்டித் தீர்க்கிறார்கள். ஹேக் செய்தவன் சொல்லிச் சென்ற செய்தி ஒன்றுதான். ஆனால், அது இதுவாகத்தான் இருக்கும் என்று மீம்ஸ்களும் தகவல்களும் இன்ஸ்டாவில் நொடிக்கொன்று பறந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தன.

    ***

    சென்னை

    தாம்பரம் காவல் நிலையம்

    இன்ஸ்பெக்டர் யமுனா விறைப்பாய் உள்ளே நுழைய, தொப்பையைச் சுருக்கியபடி மரியாதை செய்து ஒரு சல்யூட் வைத்தார் காவலுக்காக முன்னே நின்று கொண்டிருந்த காவலர். இன்ஸ்பெக்டர் யமுனா நல்ல உயரம்; மாநிறம்; எப்பொழுதும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டுதான் நடப்பார். வயது முப்பது என்று யாராவது சொன்னால்தான் தெரியும். நேர்மையானவர்.

    அந்தக் காலை நேரத்தில் தூங்கி வழிந்து கொண்டிருந்த ஒரு காவலரை, முறுக்கு மீசை வைத்த மற்றொரு காவலர் முதுகில் தட்ட, அவர் விருட்டென எழுந்து இன்ஸ்பெக்டர் யமுனாவிற்கு சல்யூட் வைத்தார்.

    யமுனா, ஏன் உட்கார்ந்துக்கிட்டே தூங்கறீங்க. அதுக்குள்ள போய் நல்லா படுத்துத் தூங்கலாமே என்று குற்றவாளி இல்லாமல் காலியாகத் திறந்து கிடந்த அந்தச் சிறைக் கதவைக் காட்டினார்.

    அந்தக் காவலர், சாரி மேடம்... இனிமேல் இப்படி எல்லாம் நடக்காது என்று கூற, ‘ம்’ என்று ஒரு மிரட்டல் பார்வையைத் தந்து விட்டு உள்ளே சென்றார். யமுனா வந்ததும் அந்தக் காவல் நிலையமே பரபரவென இயங்கத் தொடங்கிவிட்டது.

    இன்ஸ்பெக்டர் யமுனா அவரது நாற்காலியில் அமர்ந்த உடனே அவரது கைப்பேசி அலறியது. எடுத்து காதிற்குக் கொடுத்தார்.

    சார்... யெஸ் சார்... என்று மறுமுனை கூறுவதை எல்லாம் ஆமோதித்து, ஓகே சார்... என்று பதில் கூறி வைத்து விட்டு பரபரப்புடன் எழுந்து வெளியே வரவும், அவரைப் போனில் அழைத்த டி.எஸ்.பி தணிகாச்சலம் காவல் நுழையத்திற்குள் நுழையவும் சரியாக இருந்தது. அவரைப் பார்த்து இன்ஸ்பெக்டர் யமுனா சம்பிரதாய சல்யூட் ஒன்றை அடிக்க, இருவரும் வேகமாக உள்ளே சென்று அமர்ந்தனர்.

    இன்ஸ்டாகிராம் அகௌன்ட்ஸ்லாம் ஹேக் பண்ணிட்டாங்களாம். நியூஸ் கிடச்சுதா? என்று ஆரம்பித்தார் டி.எஸ்.பி தணிகாச்சலம். டி.எஸ்.பி தணிகாச்சலம் கொஞ்சம் பருத்த தேகம்; நிறைய புத்திசாலித்தனமாக யோசிப்பார்; ஆனால் அவரை விட நன்றாக யாராவது யோசித்து விட்டால் அவருக்கு அது பிடிக்காது; முக்கியமாக இன்ஸ்பெக்டர் யமுனாவை அவருக்கு அறவே பிடிக்காது; அதற்கு அவர் ஒரு பெண் என்பதும் காரணம். பெண்கள் எல்லாம் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளப் பிறந்தவர்கள் என்பது அவர் எண்ணம். அப்படியே தப்பித்தவறி காவல்துறையில் சேர்ந்து விட்டாலும், ‘சார்ஜ் சீட்’ எழுதிக் கொண்டு ஒரு மூலையில் அமர்ந்திருந்தால், நாங்கள் மற்ற விசயங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வோம் என்று நினைப்பார். ஆனால், கொலை வழக்கோ கொள்ளை வழக்கோ இறங்கி வேலை செய்வார் யமுனா. டி.எஸ்.பிக்கு அவரை பிடிக்காமல் போவதற்கு இதை விட ஒரு நல்ல காரணம் வேண்டுமா?

    யெஸ் சார். காலையில் இருந்து மீடியா பூரா இதைப் பத்திதான் பேசிட்டிருக்காங்க. என்றார் யமுனா.

    ஆனா, இது ஒண்ணும் கவலைப்படுற அளவுக்குப் பெரிய விசயமா இருக்காது. யாராவது காலேஜ் ஸ்டுடன்ட்ஸ் கெத்து காட்ட செஞ்சு இருப்பானுங்க. என்றார் டி.எஸ்.பி.

    நோ...நோ... அப்படியெல்லாம் சாதாரணமா விட்டிட முடியாது சார். ஏன்னா ஹேக் பண்ணப்பட்ட எல்லா கணக்குகளிலும் ஒரே பதிவுதான் போட்டிருக்காங்க. அதுவும் இரத்தத் துளிகளுக்கு நடுவில் இரத்தத்தால் எழுதப்பட்ட எண்கள். என்றார் இன்ஸ்பெக்டர் யமுனா.

    இப்பல்லாம் மக்களுக்குப் பொறுப்பே இல்லே. யார்கேட்டாலும் எல்லா தகவல்களையும் கொடுத்திடறாங்க. அப்புறம் பேங்க்ல பணத்தைக் காணோம் நகையைக் காணோம்னு நம்ம தலையை உருட்ட வேண்டியது. இவங்க ஒழுங்கா அகௌன்ட் டீடெயில்ஸ் வச்சுக்கிட்டா எப்படி ஹேக் பண்ண முடியும். என்று பொறுப்பாய்ச் சீறினார் டி.எஸ்.பி.

    ஹேக் செய்யப்பட்ட எல்லா அகௌன்ட்டுகளிலும் ஒரு லட்சத்திலே இருந்து பத்து லட்சம் வரை பாலோவர்ஸ் இருக்காங்க.

    சோ?

    சார்... என்னுடைய கணிப்புப்படி இதை எல்லாம் செஞ்சவன் இந்த உலகத்திற்கு ஏதோ ஒரு மெசேஜ் சொல்ல விரும்புறான். அது நிறைய பேரைச் சென்று சேரணும் அப்படின்னு தான் நிறைய பாலோவர்ஸ் இருக்கிற அகௌன்ட்ஸ்ஸா செலக்ட் செய்து ஹேக் செய்திருக்கான்.

    ம்.... என்று தலையை ஆட்டியபடியே முறுக்கு மீசைக் காவலர் கொண்டுவந்த டீயை வாயில் வைத்து உறிஞ்சினார்.

    ஓ... க்ரைம் மீடிங்கிற்கு நேரமாச்சு என்று தனது கைக் கடிகாரத்தைப் பார்த்துப் பதற்றத்துடன் கூறியவராய் எழுந்தார் இன்ஸ்பெக்டர் யமுனா.

    டி.எஸ்.பியும், அந்த டீயை கீழே வைக்க மனமில்லாமல் அவசர அவசரமாய் இரண்டு முறை உறிஞ்சிவிட்டு அந்த காலி கோப்பையை அலட்சியமாய் அந்த மேஜைமேல் வைத்து விட்டுக் கிளம்பினார்.

    பத்து நிமிடங்களில் கிட்டதட்ட ஏழு எட்டுக் காவலர்கள் காத்திருக்க, எஸ்.பி சக்கரவர்த்தி உள்ளே நுழைந்தார். அவரது உடல் முறுக்கேறிக் கிடந்தது; வழுக்கை விழுந்த அவரது தலையை அந்தத் தொப்பி அழகாய் மறைத்துக் காப்பாற்றியது; அளவாய்க் கத்தரித்திருந்த மீசையில் நரை படர்ந்து அவரது கம்பீரத்தை இன்னும் சற்று அதிகரிக்கச் செய்தது.

    அவரைப் பார்த்ததும் மரியாதை நிமித்தம் எழுந்த காவலர்களை அமருமாறு சைகை செய்துவிட்டு, பரபரப்புடன் சென்று அவரது நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

    இப்ப கரண்ட் இஷ்யு பத்தி எல்லாருக்கும் தெரியும் இல்லே. இதுதான் இப்ப ஹை ப்ரையாரிட்டி. இன்னொரு ஹேக் நடக்கிறதுக்கு முன்னாடி, இதை யாரு எதுக்கு செய்யறாங்கன்னு நாம கண்டு பிடிச்சே ஆகணும். அவரது நரை மீசை ஒருமுறை நகர்ந்து அவரது பதற்றத்தைப் பறைசாற்றியது.

    எல்லோரும் அமைதியாகத் தலையாட்டினர்.

    எஸ்.பி. யே தொடர்ந்து பேசினார்.டி.எஸ்.பி தணிகாச்சலம் இந்த கேஸில் உங்கக் கருத்து என்ன?

    டி.எஸ்.பி ஒருமுறை மற்றக் காவலர்களை நோட்டம் விட்டுவிட்டுப் பேசத் தொடங்கினார்.சார்... எனக்கு என்னமோ இதை எல்லாம் ஹேக் செஞ்சவன் நமக்கு ஏதோ ஒரு மெசேஜ் சொல்ல விருப்பப்படுற மாதிரித் தோணுது. நல்லா அனலைஸ் பண்ணிப் பார்த்தீங்கன்னா, அவன் ஹேக் செஞ்ச எல்லா இன்ஸ்டாகிராம் அகௌன்ட்ஸ்லையுமே நிறைய பாலோவர்ஸ் இருக்காங்க. என்று கம்பீரமாகத் தன் வாதத்தை முன் வைத்தார்.

    இன்ஸ்பெக்டர் யமுனா முறைப்பாக இவரைப் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தும் கவனிக்காததைப் போல எஸ்.பியைப் பார்த்தார்.

    வெல் டன் தணிகாச்சலம்... நீங்க சொல்றது நடக்கக் கூடியதுதான். ஓ.கே நீங்களே இந்தக் கேஸுக்கு இன்சார்ஜ் எடுத்துக்கோங்க. கூட இரண்டு இன்ஸ்பெக்டர்ஸ் வேணும்னாலும் எடுத்துக்கோங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ நாம இதை முடிச்சாகணும். என்று படபடவெனப் பேசி முடித்தார் எஸ்.பி சக்கரவர்த்தி.

    ஒரு வெற்றிப் புன்னகையை உதிர்த்து விட்டு இன்ஸ்பெக்டர் யமுனாவை நோக்கினார். யமுனா கோபமாக இருக்கிறார் என்பது யமுனாவின் இரண்டு கைகளின் விரல்களும் பிணைந்து விலகிச் சண்டை போட்டுக் கொண்டிருப்பதிலேயே தெரிந்தது.

    சார்... நான் இன்ஸ்பெக்டர் யமுனா, இன்ஸ்பெக்டர் கௌதம் இரண்டு பேரையும் இந்த வழக்கில் எனக்கு உதவி செய்றதுக்கு எடுத்துக்கிறேன் சார். என்றார் டி.எஸ்.பி.

    ம்... குட் சாய்ஸ்... சீக்கிரம் வேலையை முடிங்க. என்று கூறிய எஸ்.பி,

    தலையைத் திருப்பி அனைத்துக் காவலர்களையும் பார்த்தபடி, வேறு ஏதாவது இருக்கா? என்றார்.

    எல்லாரும் ‘நோ சார்’ என்று தங்களது வாய்களுக்குள் முணுமுணுக்க, எஸ்.பி தனது நாற்காலியை விட்டு எழுந்தார். மரியாதை நிமித்தம் எல்லாக் காவலர்களும் எழுந்து நின்று சல்யூட் வைக்க, அவரும் பதிலுக்கு சல்யூட் வைத்து விட்டு விறுவிறுவென்று சென்று விட்டார்.

    இன்ஸ்பெக்டர் யமுனாவிடம், ஹலோ மேடம்! என்று ஒருவன் கை நீட்டினான்.

    இன்ஸ்பெக்டர் யமுனா அவனை ஏற இறங்கப் பார்த்தார். அவரது மார்பில் ‘கௌதம்’ என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருந்தது.

    இன்ஸ்பெக்டர் கௌதம்... என்று புன்னகையுடன் அவனது கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.

    இன்ஸ்பெக்டர் கௌதம் அளவுக்கு மீறி நன்கு உயரமாகவே வளர்ந்திருந்தார்; மாநிறம்; தலையில் போலீஸ் கட்; உடற்பயிற்சியில் முறுக்கேறிய தேகம்; எல்லாவற்றிற்கும் மேலாகப் பளீர்ப் புன்னகை.

    அந்த வழக்கில் உங்க அனலைசிஸ் ரொம்ப சரி... என்றார் இன்ஸ்பெக்டர் கௌதம்.

    ம்... என்று திகைத்த யமுனா, உங்களுக்கு எப்படி அதை நான்தான் யோசிச்சிருப்பேன்னு தெரியும்? என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

    குலுங்கிச் சிரித்த கௌதம், எனக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனா, டி.எஸ்.பி சார் பற்றி நல்லாத் தெரியும். அவர் கூட நான் அஞ்சு வருசம் வேலை செய்திருக்கேன். என்றார்.

    ஓ... என்று புன்னகைத்துவிட்டு, இதுக்கு முன்ன உங்களை எங்க ஸ்டேசனில் பார்த்ததில்லையே என்று கேட்டார் யமுனா.

    நான் வேளச்சேரி டிவிசன். இந்த கேஸுக்காக என்னை ஸ்பெசல் ட்யூட்டி போட்டிருக்காங்க. கவலைப்படாதீங்க! ரொம்பத் தொல்லை பண்ண மாட்டேன். இந்தக் கேஸ் முடிஞ்ச உடனே திரும்பிப் போயிடுவேன். என்றார் புன்னகையுடன்.

    ம்... சரி... இந்த வழக்கு பத்தி உங்க அபிப்ராயம் என்ன? என்று கேட்டார் யமுனா.

    அந்த எண்கள்தான் தடயங்கள். அதில்தான் நமக்கு ஏதோ முக்கியமான தகவல் சொல்ல வர்றாங்க. அது போன் நம்பரா இருக்குமோன்னு கூட எல்லாம் செக் பண்ணிட்டேன். இல்லை. இந்த எண்களை எழுத்தா மாற்றி கூட முயற்சி பண்ணிட்டேன். எதுவும் கிடைக்கலை. இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம். பார்க்கலாம். என்றார் இன்ஸ்பெக்டர் கௌதம்.

    இன்ஸ்பெக்டர் யமுனாவும் தலையை ஆட்டி ஆமோதிக்க, டி.எஸ்.பி யுடனான அடுத்த மீட்டிங்கிற்கு இருவரும் தயாராயினர்.

    அத்தியாயம் 2

    மறுநாள் காலை இன்ஸ்பெக்டர் யமுனா காவல் நிலையத்திற்குள் நுழைய, அவருக்கு முன்பே வந்திருந்தார் இன்ஸ்பெக்டர் கௌதம்.

    குட் மார்னிங் இன்ஸ்பெக்டர் யமுனா என்று புன்னகையுடன் வரவேற்றார் கௌதம்.

    குட் மார்னிங் என்று யமுனாவும் புன்னகைத்தபடி, ஹேக் பண்ணவன் வெறும் ஒரே ஒரு மெசேஜ் சொல்லிட்டுக் காணாமல் போயிட்டான். சோசியல் மீடியா பூராவும் அந்தத் தடயத்தைத்தான் விதவிதமா பிரிச்சு மேய்ஞ்சிட்டு இருக்காங்க. என்றார் யமுனா.

    ம்... ஆமா... நானும் பார்த்தேன். ஏலியன், மாயன், இலுமினாட்டி இன்னும் என்னென்னமோ கதை கட்டி விட்டுட்டு இருக்காங்க. என்று சிரித்தார் கௌதம்.

    சரி... எனக்கு இன்னைக்கு ‘கரண்ட் பேப்பர்’ல ஒரு கேஸ் வந்திருக்கு. டைரக்ட்டா எஸ்.பி. யிடமே மனு கொடுத்திருக்காங்க. இந்தக் கேஸை பற்றி அப்புறம் டிஸ்கஸ் பண்ணலாம். என்றார் யமுனா.

    கண்டிப்பா... எனக்கும் ஒரு இன்வெஸ்டிகேசன் இருக்கு. நானும் முடிச்சிட்டு வந்திடறேன். என்றவாறு அந்த மேஜை மேல் இளைப்பாறிக் கொண்டிருந்த தொப்பியை எடுத்துத் தலையில் பொருத்திக் கொண்டு விரைந்தார் கௌதம்.

    இன்ஸ்பெக்டர் யமுனா தனது நாற்காலியில் சென்று அமர்ந்தவுடன் மேஜை மேல் இருந்த மணியை அடித்தார். கான்ஸ்டபிள் ஓடி வந்தார். கொஞ்சம் வயதானவர். மெல்லிய தேகத்துடன் அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

    என்ன கான்ஸ்டபிள் சுந்தரம். சாப்பாடே சாப்பிடறது இல்லையா? போலீஸ்னா சும்மா ஜம்முனு இருக்க வேண்டாமா? அப்பதானே மக்கள்கிட்ட நல்ல மரியாதையும் நம்பிக்கையும் கிடைக்கும். என்னவோ போங்க! நானும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிட்டேன். சொல்லத்தான் முடியும்... என்று சலித்துக் கொண்டார் யமுனா.

    இனிமேல் சாப்பிடறேன் மேடம். என்று அசடு வழிந்தார் சுந்தரம்.

    சரி... சரி... அந்த ‘கரண்ட் பேப்பர்’ல வந்த கேஸ் ஃபைல் எடுத்துட்டு வாங்க.

    என்று அதிகாரத் தொனியில் கூறினார்.

    சில நிமிடங்களில் ஃபைல் வந்து சேர்ந்தது. அதை எடுத்துப் புரட்டிப் பார்த்தார் யமுனா.

    அப்போது காவல் நிலையத்தின் முன்னே ஏதோ கூச்சல் கேட்டது. சுந்தரத்தை அனுப்பி என்னவென்று பார்க்கச் சொன்னார்.

    வெளியே சென்று தகவல் அறிந்து வந்த சுந்தரம், மேடம்... நீங்க இப்போ பார்த்துட்டு இருக்கும் கேஸ்தான். அந்தப் பெண்ணோட அப்பாதான் முன்னாடி உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செஞ்சுட்டு இருக்காரு. என்றார் பதற்றத்துடன்.

    ம்... சரி... அவரை சமாதானப்படுத்தி உள்ளே கூட்டிட்டு வாங்க. என்றார் யமுனா நிதானமாக.

    இரண்டு மூன்று நிமிடங்களில் கான்ஸ்டபிள் சுந்தரம் அவரை அழைத்து வந்தார்.

    அந்த நபருக்கு ஒரு ஐம்பது வயது இருக்கும். கண்கள் எல்லாம் கவலையில் ஊறிப்போய் காய்ந்து கிடந்தன. கூலி வேலை செய்பவர். அதற்கேற்றவாறு உடல் இறுகி இருந்தது. உள்ளே வந்து யமுனாவைப் பார்த்தவுடன் ‘தடால்’ என்று காலில் விழுந்து அழ ஆரம்பித்து விட்டார்.

    இன்ஸ்பெக்டர் யமுனா ஆடித்தான் போனார். தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு, எழுந்திருங்க முதல்ல என்று அவரை எழுப்பி நாற்காலியில் உட்கார வைத்து விட்டு, சுந்தரத்தை அனுப்பி

    Enjoying the preview?
    Page 1 of 1