Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nallathor Veenai Seithen
Nallathor Veenai Seithen
Nallathor Veenai Seithen
Ebook392 pages2 hours

Nallathor Veenai Seithen

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுயசரிதைகள் இரண்டு வகை – ஒன்று, உடன் வாழ்பவர்களைக் காயப்படுத்தும்; இரண்டு, அப்படிக் காயப்படுத்தக்கூடாதே என்பதற்காகப் பொய் சொல்லும். எப்படி வாழ்வது என்று துடித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு மாதிரி வரைபடத்தையாவது தரலாமே என்ற ஆதங்கத்தில் விளைந்ததுதான் இந்த மூன்றாவது வகை.. இதில் பொய்யும் இல்லை. காயப்படுத்துதலும் இல்லை.

இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றது, ஒரு பெரிய சமுதாய மாற்றத்திற்கு வித்திட்டது, புற்று நோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்தது, ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனத்தைத் தொடங்கியது - இவை போன்ற பிரம்மாண்டங்கள் எதுவும் என் வாழ்க்கையிலும் இல்லை; இந்த நூலிலும் இல்லை. ஒரு நூல் வெளியீட்டு விழாவைத் தடுத்து நிறுத்தியது, , நான் செய்த பெரிய தவறைப் பெரிய மனதுடன் மன்னித்த என் வாடிக்கையாளர், தேர்வில் தன் மகன் தவறிவிட்டான் என்று தெரிந்தும் அவனை அரவணைத்து ஆறுதல் சொன்ன தந்தை, நான்கு பேர் மட்டுமே கலந்து கொண்ட ஒரு புத்தக வெளியீட்டு விழா, பத்து ரூபாய் கேட்டதற்காக மாதச் சம்பளத்தையே தன் மகனிடம் கொடுத்த ஒரு மத்தியதர வர்க்க தந்தையின் தொலைநோக்குப் பார்வை–இவை போன்ற அன்பின் பிரம்மாண்டங்கள் இதில் இறைந்து கிடக்கின்றன.

வீணையைச் செய்து முடித்துவிட்டேன். என்னிடம் இருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டேன். வைத்துக்கொண்டு வஞ்சனை செய்யவில்லை. நல்லதோர் வீணை செய்தேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்றாலும் இந்த வீணையை வாசித்துப் பார்த்து நீங்கள் சொல்லும் தீர்ப்பே முடிவானது.

Languageதமிழ்
Release dateAug 14, 2021
ISBN6580142407355
Nallathor Veenai Seithen

Read more from Varalotti Rengasamy

Related to Nallathor Veenai Seithen

Related ebooks

Reviews for Nallathor Veenai Seithen

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nallathor Veenai Seithen - Varalotti Rengasamy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நல்லதோர் வீணை செய்தேன்

    Nallathor Veenai Seithen

    Author:

    வரலொட்டி ரெங்கசாமி

    Varalotti Rengasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/varalotti-rengasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மனநோயா? எனக்கா…?

    2. பால் நினைந்தூட்டும் தாயினும்

    3. கண்ணன் கல்நெஞ்சுக்காரன்

    4. மண்ணரசும் யான் வேண்டேன்

    5. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

    6. கேட்டதைக் கொடுத்தால்தான் என்னவாம்?

    7. ஒரு தவறு செய்தால்…

    8. பாடத்திட்டத்திற்கு வெளியே கிடைக்கும் கல்வி

    9. மகத்தான தருணங்கள்

    10. தந்தையாய் வந்தென் சிந்தை கவர்ந்தாய்

    11. மரணத்தின் மணியோசை

    12. பிரிவோம் சந்திப்போம்

    1. மனநோயா? எனக்கா…?

    சமீபகாலத்தில் எப்போதாவது மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டாயா?

    ஒரு முறை எனக்குத் தலைசுற்றல் வந்தபோது என் மருத்துவ நண்பரின் அறிவுரைப்படி அப்பல்லோவில் முழுப் பரிசோதனை செய்துகொண்டேன்.

    மாஸ்டர் ஹெல்த் செக்கப்?

    ஆமாம். ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டார்களே!

    ஆனால் அப்பல்லோ மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் மனதில் இருக்கும் பிரச்சினையைக் கண்டுபிடிக்க முடியாது.

    என்னடா சொல்கிறாய்?

    உனக்கு இருப்பது ஒரு மோசமான மன நோய்!

    அடப்பாவி!

    பின்ன என்னடா! இப்போத்தான் நீ எழுதின Krishna’s Kiss புஸ்தகத்தைப் படிச்சி முடிச்சேன். கடவுள்னு ஒரு வார்த்தை வந்துருச்சின்னா போதும். அந்தப் பக்கம் பூரா அழுது வச்சிருக்க. உன்னைப் போல் ஒரு புத்திசாலி, படிப்பாளி, படைப்பாளி பகவத் கீதையப் பத்தி எழுதியிருக்க. கீதைய ஒரு புதுப் பரிமாணத்துல காட்டப்போறேன்னு ஆசையோட படிக்க ஆரம்பிச்சேன்…

    என்ன ஆச்சு?

    அந்தப் புஸ்தகத்துல பக்கத்துக்குப் பக்கம் ஒப்பாரி. ஆஹா! கண்ணனப்போல ஒரு தெய்வம் உண்டா? கண்ணன்னு சொன்னவுடன் கண்ணுல கண்ணீர் வருது. இப்படியே எல்லாப் பக்கத்துலயும் அழுது வச்சிருக்க.

    "பகவத் கீதையில நம்ம அறிவுக்குத் தீனி போடற மாதிரி ஆயிரம் விஷயம் இருக்கு. கர்ம யோகம், பக்தி யோகம் சாங்க்ய யோகம், அத்வைதம் விசிஷ்டாத்வைதம் இப்படி எவ்வளவோ இருக்கு. எல்லாத்தையும் விட்டுட்டான். 18ம் அத்தியாயத்துல வர ஒரே ஒரு சுலோகத்துக்கு - அந்தச் சரணாகதி சுலோகத்துக்கு, ரெண்டு வரி சுலோகத்துக்கு - 93 பக்கம் வியாக்கியானம்.

    அதுவும் கீதை விளக்கம் மாதிரி இல்ல. ஏதோ ஒரு காதல் கதை மாதிரி இருக்குது. இது மன நோய்க்கான அடையாளம். சீக்கிரம் ஒரு நல்ல சைக்கியாட்ரிஸ்ட்டாப் போயிப் பாருடா."

    ஏனோ தெரியவில்லை. பகவத் கீதையில் இருக்கும் தத்துவ நுட்பங்களில் மனம் அவ்வளவாகச் செல்லவில்லை. நாம் எக்கேடுகெட்டால் ஆண்டவனுக்கு என்ன வந்தது? அவன் நினைத்தால் நம்மை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு வேறு ஒரு புதிய நல்ல பிரபஞ்சத்தைப் படைக்கலாமே? அப்படிச் செய்யாமல் அவனும் போர்க்களத்துக்கு வந்து அவதிப்பட்டு சில சமயங்களில் காயமும்பட்டு இப்படித்தான் ராஜா வாழ வேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுத்த அந்த வாஞ்சையில் மனமும் கண்களும் நிரம்பிவிடுகின்றன.

    அதன்பின் சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம், தியானத்தின் மகாத்மியம் போன்றவை மேல் மனம் செல்லவில்லை. கண்ணனின் அன்பு மட்டுமே மனம் முழுவதும் வியாபித்திருந்தது. அந்தத் தாக்கத்தின் விளைவாக நான் கடவுளுக்கு எழுதிய காதல் கடிதங்கள்தான் அந்த இரண்டு நூல்கள்.

    உங்களுக்குக் கணினியைச் சரியாக இயக்கத் தெரியவில்லை என்றால் கணினியின் அடிப்படை மென்பொருளை உருவாக்கிய பில்கேட்ஸ் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் கைகளைப் பிடித்துப் பாடம் சொல்லிக் கொடுப்பாரா? கண்டிப்பாக மாட்டார். ஆனால் கண்ணன் செய்தானே! இந்த உலகத்தைப் படைத்த அந்த ஆண்டவன் உலகில் எப்படி வாழ்வது என்று அருகில் வந்து அரவணைத்தபடி கையைப் பிடித்துச் சொல்லிக்கொடுக்காத குறையாச் சொல்லிக் கொடுத்தானே!

    அந்தக் கருணையை என்னவென்று சொல்வது? கீதையை மையமாக வைத்துத் தமிழில் ‘கண்ணா வருவாயா’ என்ற நூலை முதலில் எழுதினேன். எனக்குத் திருப்தியில்லை. அதில் சொல்லியிருந்தவற்றை மேலும் விரித்து ஆங்கிலத்தில் Krishna’s Kiss (கண்ணனின் முத்தம்) என்ற நூலை எழுதினேன். அந்த நூல் எழுதியதற்கு எனக்குக் கிடைத்த சன்மானம் – சாகித்ய அகாடமி பரிசு இல்லை. முனைவர் பட்டம் இல்லை. மன நோயாளி என்ற பட்டம். என்னைப் பொறுத்தமட்டில் இதுவும் கண்ணனின் பிரசாதம்தான்.

    அவன் சொன்னது சரிதான். அந்தப் புத்தகத்தை அழுதுகொண்டேதான் எழுதினேன்.

    இறைவனைப் பற்றி எதை எழுதினாலும், பேசினாலும் ஏன் நினைத்தாலும்கூடக் கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறதே அது ஏன்? ஒரு வேளை நண்பன் சொல்வது போல் இது ஒருவகை மனநோயாக இருக்கலாமோ? சோதித்துப் பார்த்தால் என்னவென்று தோன்றியது.

    என்னுடைய மருத்துவ நண்பர் என்னை ஒரு அழகான மனநல நிபுணியிடம் அனுப்பி வைத்தார்.

    உங்களப் பத்தி டாக்டர் எஸ்.எம்.எஸ் விவரமாச் சொன்னார். இந்தப் பிரச்சினை எப்ப ஆரம்பிச்சதுன்னு ஞாபகம் இருக்கா?

    இது பிரச்சினை இல்லை டாக்டர். ஒரு மனநிலை. இதைச் சில பேர் பக்தின்னும் சொல்றாங்க.

    நான் உங்க ஆன்மீக குரு இல்லை. சைக்கியாட்ரிஸ்ட். என்கிட்ட வார்த்தை விளையாட்டு எல்லாம் வேண்டாம். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க.

    பதில் கொஞ்சம் நீளமா இருக்கும். பரவாயில்லையா?

    பரவாயில்லை, சொல்லுங்க.

    "இந்தப் பிரச்சினையை என்னைப் பெற்றவள்தான் தொடங்கிவைத்தாள். அவள் எனக்கு சோறு ஊட்டியபோது இறையன்பு என்ற நெய்யில் அதனைத் தோய்த்துத் தோய்த்துத்தான் ஊட்டினாள்.

    இறைவனின் அன்பைப் பற்றிக் கதை கதையாகச் சொன்னாள். என்னை மறந்து வாயில் இருக்கும் சோற்றை உண்ண மறந்து தாய் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருப்பேன்."

    உனக்கு என்ன வேண்டுமோ அதை அந்தக் கண்ணனிடம் கேட்கலாம் என்ற சொற்களை என்னுள் உருவேற்றினாள் என் தாய்.

    தொலைக்காட்சித் தொடர்கள், வலைதளங்கள் போன்றவை இல்லாத அறுபதுகளில் திரைப்படங்கள் மட்டுமே பெரியவர்களின் பொழுதுபோக்காக இருந்தது. எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சனிக்கிழமை தவறாமல் மாலைக்காட்சிப் படத்துக்குப் போய்விடுவார்கள்.

    அந்தச் சனிக்கிழமையும் அப்படித்தான் போயிருந்தார்கள். அன்று மாலை ஆறரை மணியிருக்கும். வீட்டில் நாங்கள் நான்கு குழந்தைகள் மட்டுமே இருந்தோம்.

    அக்கம் பக்கம் நிறைய வீடுகள், எல்லோரும் நல்ல பழக்கம் என்பதால் பயம் இல்லை. நான்தான் மூத்தவன். அன்று மாலை அசுரத்தனமாகத் தெருவில் விளையாடிவிட்டு வீட்டிற்குள் அப்போதுதான் நுழைந்திருந்தோம்.

    கொஞ்ச நேரம் சண்டை போட்டுவிட்டுச் சமர்த்தாய் வீட்டுப்பாடங்களைப் படிக்க ஆரம்பித்தோம்.

    எங்கள் வீட்டின் பழைய சுவர்க்கடிகாரம் சத்தமாக ஏழு மணி அடித்தது. என் வயிற்றில் அதைவிடச் சத்தமாக மணியடித்தது. பசி மணி. எனக்கு அகோரப் பசி.

    சமையலறையைச் சூறையாடிப் பார்த்தாகிவிட்டது. சாப்பிட ஒன்றும் இல்லை. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாத காலம். சனிக்கிழமைகளில் என் தாயும் அத்தையும் சினிமாவிலிருந்து வந்துதான் எங்களுக்கு தோசையோ இட்லியோ செய்து கொடுப்பார்கள். அவர்கள் வர எப்படியும் ஒன்பது மணியாகிவிடுமே!

    அதுவரை எப்படிப் பசி பொறுப்பது? இன்று இருக்கும் அளவிற்கு அன்று ஹோட்டல்கள் இல்லை. இருந்தாலும் சாப்பிடமுடியாது. கையில் காசு இல்லையே!

    உனக்கு என்ன வேண்டுமோ அதை அந்தக் கண்ணனிடம் கேட்கலாம் என்று தாய் சொன்னது நினைவில் நிழலாடியது… கண்ணனிடம் சோறு கேட்டால் என்ன? அம்மா சொல்லிக் கொடுத்த சுலோகம் எதுவும் நினைவிற்கு வரவில்லை. அந்த அளவிற்குப் பசி.

    கண்ணா பசி உயிர் போகுது. ஏதாச்சும் பண்ணேன்.

    மனதின் ஒரு பகுதி மாயக்கண்ணனிடம் பிச்சை எடுத்தபோது மற்றொரு பகுதி அதனைக் கடிந்து கொண்டது.

    கண்ணன் என்ன செய்வான்? வீட்டில் திண்பண்டம் இல்லை. கையில் காசு இல்லை. ஒன்பது மணிவரை பசிக்கிறது என்று முறையிடக்கூடச் சரியான ஆள் இல்லை. கண்ணன் என்ன கடைப்பையனா, கேட்டவுடன் கடலைமிட்டாய் கொண்டு தர?

    கண்ணா பசிக்குது என்பது என்னுடைய அப்போதைய அஷ்டாக்ஷரம் ஆனது. மூன்று நிமிடங்கள் கூடஜெபித்திருக்கமாட்டேன்.

    வீட்ல யாருமில்லையா?

    குரல் கேட்டுத் திண்ணைக்கு ஓடினேன். வெளியே நின்று கொண்டிருந்தது என்னுடைய மாமா. என் தாயின் மூத்த சகோதரர். சென்னையில் இருக்கிறார்.

    தேவகோட்டையில் இருக்கும் அவருடைய வேட்டகத்திற்குப் போய்விட்டுச் சென்னைக்குப் போகும் வழியில் தன் சகோதரி குடும்பத்தைப் பார்க்க வந்திருக்கிறார்.

    மாமா!

    அப்பா அம்மா எல்லாரும் எங்கடா?

    சினிமாவுக்குப் போயிருக்காங்க மாமா. வர ஒம்பது மணியாகும்.

    ஆகட்டும். நீங்க நாலு பேரும் என்னைச் சுத்தி வட்டமா உக்காருங்க பாப்போம்.

    வயிற்றைப் பசி கிள்ளிக்கொண்டிருக்கும்போது இது என்ன சிறுபிள்ளை விளையாட்டு? அவர் சொன்னபடி செய்தோம்.

    ஏய் அந்தத் தூக்கையும் கூடையையும் கொடுடி.

    மாமி கொடுத்தாள்.

    கையை நீட்டுங்கள்.

    நீட்டினோம்.

    எங்கள் கையில் மைசூர்ப்பாகு, அப்பம், சீடை, தேன்குழல், ஆப்பிள் பழம், திராட்சை எல்லாமே வரிசைக் கிரமமாக வைக்கப்பட்டன.

    சாப்பிடுங்கடா.

    அப்போது அந்த நிகழ்வின் மகத்துவம் புரியவில்லை டாக்டர். இப்போது புரிகிறது. ஆயிரம் ஆயிரம் அண்ட சராசரங்களை ஆக்கிக் காத்து அழிக்கும் பணியில் இருக்கும் ஆண்டவன் ஒரு தலைக்கனம் பிடித்த சிறுவன் பசியாற உணவை அனுப்பிவைத்தானே! அது என்ன அன்பு டாக்டர்? உங்கள் வீட்டில் தோட்டம் இருக்கிறதா?

    இருக்கிறது.

    அந்தத் தோட்டத்தில் எத்தனை மண்புழுக்கள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? அவற்றுள் எத்தனை மண்புழுக்கள் இப்போது பசியால் துடித்துக்கொண்டிருக்கின்றன என்று நீங்கள் அறிவீர்களா?

    எனக்கு மனநோய் இருப்பது உறுதியாகிவிட்டது என்ற தெளிவோடு என்னைப் பார்த்தாள் அந்த அழகு நிபுணி.

    உங்க தோட்டத்து மண்புழுவைவிட நீங்க லட்சம் மடங்கு உயர்ந்தவங்கன்னா என்னை மாதிரி ஒரு கேடுகெட்ட புழுவைவிட என் கண்ணன் பல லட்சம் கோடி மடங்கு உயர்ந்தவன். உங்க தோட்டத்து மண்புழு இருக்குதா செத்துருச்சான்னுகூட உங்களுக்குத் தெரியாது. சில சமயம் நீங்களே தெரியாம உங்க காலால மிதிச்சிக் கொன்னுருப்பீங்க.

    ஆனா என் எஜமானன் நான் ஒரு வேளை பசி பொறுக்கமாட்டேன்னு நெனச்சி என் தாய்மாமனை பழம் பட்சணத்தோட அனுப்பி வைச்சான் பாருங்க.. அந்தக் கருணைய நெனச்சி நான் இன்னமும் கதறிக்கிட்டு இருக்கேன் டாக்டர்.

    எனக்குத் தெரியாமல் செய்வதாய் நினைத்துக்கொண்டு கண்களில் படிந்திருந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டாள் அந்த அழகி.

    சரி வேற ஏதாவது?

    அதாவது சின்னப் புள்ளையா இருந்தபோது நடந்ததுன்னு விட்றலாம். இது என்னோட 24வது வயசுல நடந்தது.

    சொல்லுங்க. கையில் இருந்த பேனாவை மூடிவைத்தாள். மேஜையில் இருந்த ஒரு கையடக்கமான ஒலிப்பதிவுக் கருவி என் வார்த்தைகளைக் கபளீகரம் செய்து கொண்டிருந்தது.

    ***

    1982-ம் ஆண்டு. ஏப்ரல் மாதம். சென்னையில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பயிற்சி. ஏப்ரல் 29ம் நாள் அந்த வருடம் வெள்ளிக்கிழமை வந்தது. அன்று என் 24வது பிறந்த நாள். நான் வீட்டில் இல்லாமல் வெளியில் இருக்கும் முதல் பிறந்த நாள்.

    என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அம்மா தவறாமல் பாயசம் செய்வாள். பெரும்பாலும் அது சேமியாப் பாயசமாகவே இருக்கும்.

    அப்போது நான் என் உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன். குடும்பத் தலைவரிடம் அன்று என் பிறந்த நாள் என்று தயங்கித் தயங்கிச் சொன்னேன். கையைக் குலுக்கி வாழ்த்திவிட்டுத் தன் மனைவியிடம் இன்னிக்கு இவன் பிறந்த நாளாம். மறக்காமப் பாயசம் செஞ்சிடு என்று சொல்லிவிட்டுக் குளிக்கப் போய்விட்டார்.

    அது ஒரு மத்தியதரக் குடும்பம். நானும் அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். மாதச் சம்பளத்தை நம்பிப் பிழைப்பு நடக்கும் வீட்டில் மாதக் கடைசியானால் மனித உணர்வுகளுக்கு மதிப்பு இருக்காது. இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

    கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத ஆளு வானம் ஏறி வைகுண்டம் போனாராம். சோத்துக்கும் காய்க்குமே திண்டாட்டமா இருக்கும்போது பாயசம் கேக்குதோ பாயசம்? என்ற சொற்களோடு பாயசக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    இந்த வார்த்தைகள் என்னை அதிகமாகவே காயப்படுத்தின. கண்ணீரை அடக்கிகொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பினேன்.

    அன்று காலை ஆறே முக்கால் மணியளவில் பாடியில் இருக்கும் டி.வி.எஸ் நிறுவனம் செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் அருகே 71C பேருந்தில் அமர்ந்திருந்தபோது என் கண்கள் கலங்கியிருந்தன. வேலையாம், பயிற்சியாம் மண்ணாங்கட்டி!

    எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு மதுரைக்கு ஓடிப் போய் என் தாய் செய்து கொடுக்கும் சேமியாப் பாயசத்தை ருசி பார்த்தால் என்னவென்று தோன்றியது. கையில் எவ்வளவு காசு இருக்கிறது என்று பார்த்தேன். இதை வைத்துக்கொண்டு தாம்பரத்தைக் கூடத் தாண்டமுடியாது.

    இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்த அந்த இறைவன் மேல் பழியாய்க் கோபம் வந்தது.

    ஒரு வேளை என் கண்ணீர்தான் நீ விரும்பிக் குடிக்கும் பாயசமோ? அப்படியானால் கவலையை விடு. என் பிறந்தநாளான இன்று எனக்குப் பாயசம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நீ நாள் முழுவதும் பாயசம் குடிக்கலாம். அந்த அளவுக்கு எனக்குள் கண்ணீர் இருக்கிறது. இதுதான் நான் உனக்குச் செய்யும் நைவேத்யம். ஏற்றுக்கொள். என்ன, கொஞ்சம் உப்புக் கரிக்கும். பொறுத்துக்கொள்

    என்னுடைய இயலாமையில் இறைவனைச் சாடினேன்.அன்று அலுவலகத்தில் வேலையும் இல்லை. இருந்தாலும் அதில் மனம் சென்றிருக்காது. சென்னையில் அதுதான் என் முதல் வெள்ளிக்கிழமை.

    சரியாக 12 மணிக்கு மதிய உணவிற்குக் கேண்டீனுக்குச் சென்றேன். ஐம்பது பைசா டோக்கனைக் கொடுத்தால் வயிறு நிறைய உணவு போடுவார்கள்.

    ஆனால் அன்று மனம் இருந்த நிலையில் சரியாகச் சாப்பிட முடியவில்லை. சாம்பார் சாதம் ரசம் சாதம் என்று கொறித்துவிட்டுத் தயிருக்காகத் தலையைக் குனிந்தபடி காத்திருந்தேன்.

    சார்வாளுக்கு தட்டுலயா கப்புலயா?

    உற்சாகமான குரல் கேட்டு நிமிர்ந்தேன். அந்த நிறுவனத்தின் தலைமைச் சமையல்காரர்.

    கப்புல என்ன?

    சூடா சேமியாப் பாயசம். நானே கைப்படத் தயாரிச்சது. பேஷா இருக்கும். கொஞ்சம் இருங்கோ. டேய் அம்பி ஒரு கப்பு கொண்டாடா.

    கோப்பை நிறையப் பாயசம். அதுபோகத் தட்டில் வேறு. கண்களில் நீர் மல்க அவரைப் பார்த்தேன்.

    இன்னும் வேணும்னாலும் கேளுங்கோ.

    …..

    சார்வாள் புதுசு போலருக்கு. அதான் திகைச்சிப் போயிருக்கேள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாப்பாட்டுல ஸ்வீட் போட்டேயாகணும்னு எம்.டி உத்தரவு. போன வாரம் மைசூர்ப்பாகு போட்டோம். அடுத்த வாரம் ஜாங்கிரி. இந்த வாரம் சேமியாப் பாயசம்.

    எவ்வளவோ கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. கண்கள் பொங்கிவிட்டன.

    சேமியாப் பாயசத்தப் பாத்துத் தாரை தாரையாக் கண்ணீர் விடற மனுஷர இப்பத்தான் பாக்கறேன்.

    அன்று முழுவதும் அழுது கொண்டிருந்தேன்.

    இந்தப் புழுவிற்கு சுவாசிக்கக் காற்றும் உயிரும் உடலும் ஒட்டி இருக்க உணவும் கொடுப்பதே அதிகம். நான் என்ன அசோகச் சக்கரவர்த்தியா? இல்லை இந்த உலகை உய்விக்க வந்த மகானா? ஒரு அரை வேக்காட்டு சிறு நகரக் கணக்கன். நான் எக்கேடுகெட்டால் உனக்கு என்ன? எனக்கு அன்று ஏன் சேமியாப் பாயசம் கொடுத்தாய்?

    நான் கேட்டேன். அதற்காக ஏங்கினேன். மறுக்கவில்லை. என்றாலும் நீ கொடுக்க வேண்டும் என்பதில்லையே!

    ஆனால் நீ பலே கில்லாடி. மிக மோசமான வியாபாரி. இருநூறு மில்லி இனிப்புத் திரவத்தைக் கொடுத்து என்னை ஏழேழ் பிறவிக்கும் அடிமைப் படுத்திக்கொண்டுவிட்டாயே? அந்த வியாபாரத் தந்திரத்தை என்னவென்று சொல்ல! ஒன்றே ஒன்றுதான் எனக்குக் புரியவில்லை. இந்த அடிமை விலங்கு சேமியாப் பாயசத்தைவிட ஆயிரம் மடங்கு இனிப்பாய் இருக்கிறதே, ஏன்?

    "டாக்டர் விஞ்ஞானபூர்வமாகப் பார்த்தால் அது ஒரு தற்செயல் நிகழ்வுதான். என்னை மன்னித்துவிடுங்கள். நான் விஞ்ஞானியில்லை. காதல் வயப்பட்டவன். என்னால் இதை விஞ்ஞானபூர்வமாகப் பார்க்கமுடியாது… காதல் வழிந்தோடும் என் கண்கள் மூலமாகத்தான் இதைப் பார்க்கமுடியும்.

    அந்த சேமியா பாயசத்தின் முதல் சொட்டு என் தொண்டைக்குழி வழியாக உள்ளே இறங்கிய அந்தக் கணத்தில், நான் என்னைத் தொலைத்தேன். பெயர்த்தும் அவனுக்கே பிச்சனானேன். அத்தனையும் அன்னையையும் அன்றே நீத்தேன். அகன்றேன் அகவிடத்தார் ஆசாரத்தை. என்னை மறந்தேன் என் நாமம் கெட்டேன்."

    எனக்கு இப்பவே தலையச் சுத்துது.

    எனக்கு மன நோய் இருக்கா டாக்டர்?

    "செலக்டிவ் அம்னிஷியா, அதாவது உங்களுக்கு வேணுங்கற விஷயங்கள மட்டும் ஞாபகம் வச்சிக்கற வியாதி இருக்கு. இது மனநோயோட சேர்த்தியில்ல. இது ஒரு உரையாடல் உத்தி. அவ்வளவுதான்…

    கண்ணன் உங்களக் காப்பாத்தின கதைகளச் சொன்னீங்க. அவன் உங்கள அம்போன்னு கைவிட்ட கதைகளைச் சொல்லவேயில்லையே? நீங்க அந்தக் கண்ணனக் கூப்பிட்டு அவன் வராம இருந்து உங்களத் தவிக்கவிட்ட கதைகள் இருக்குமே. அது ஏன் உங்க ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது? இறைவனுடைய அன்பப் பத்திச் சொல்றேன்னு ஆரம்பிச்சி ஒரு மதப்பிரச்சாரமே பண்ணிட்டீங்க.

    சரி இன்னிக்கு இவ்வளவு போதும் நாளைக்குப் பாக்கலாம். நாளைக்குக் கண்ணன் உங்களக் கைவிட்டக் கதைகளச் சொல்றீங்க. சரியா?"

    ‘ஒரு அழகான உளவியல் நிபுணியின் இதயம் ஏன் இப்படிப் பாறாங்கல்லாக இருக்க வேண்டும்?’

    அந்த அழகியை ஒரு விநாடி கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

    வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு

    தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ

    ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

    என்ற வைரமுத்துவின் வரிகள் மனதில் ஓட அழகியை நோக்கிக் கைகூப்பி விடைபெற்றுக் கொண்டேன்.

    2. பால் நினைந்தூட்டும் தாயினும்

    அந்த அழகான மனநல நிபுணியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். நேற்று சூரிதாரில் வந்திருந்தாள். இன்று பட்டுப் புடவையில் பாந்தமாக வந்திருக்கிறாள். இன்று நான்தான் கடைசி ‘கேஸ்’ போல் தோன்றுகிறது. அதன்பின் ஏதோ திருமண வரவேற்பிற்குப் போகிறாள் போலும். அதுதான் கொஞ்சம் அதிகப்படியான அலங்காரம்.

    அவளுக்கு முப்பத்தியைந்து வயது இருந்தால் அதிகம். அநியாயத்திற்கு அழகு + அநியாயத்திற்குக் கம்பீரம்.

    அவள் அழகாக இருப்பதால் கம்பீரமாகத் தெரிகிறாளா இல்லை கம்பீரமாக இருப்பதால் இன்னும் அழகாகத் தெரிகிறாளா என்று என் மனது பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது.

    என்னை ஏன் அப்படி வெறிச்சிப் பாக்கறீங்க?

    உங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சா?

    ஏன், ஆகலேன்னா நூல்விடலாம்னு பாக்கறீங்களா?

    அம்மா தாயே நீங்கள் என் மகளைவிட ஓரிரண்டு வயதுதான் பெரியவர்களாக இருப்பீர்கள். தெரிந்துகொள்ளலாமே என்று கேட்டேன். பதில் சொல்ல விருப்பமில்லை என்றால் விட்டுவிடுங்கள்.

    திருமணமாகிவிட்டது. என் கணவர் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்.

    குழந்தைகள்?

    ஒரு பெண். பத்து வயது. இன்னும் ஏதாவது விவரம் வேணூமா?

    உங்க பொண்ணு பேரு…

    ரித்திகா

    நேத்துலருந்து நான்தான் கதை கதையாச் சொல்லிக்கிட்டு இருக்கேன். இன்னிக்கு நீங்க சொல்லுங்களேன். ப்ளீஸ்…

    நானா… என்ன கதை சொல்லணும்?

    நீங்க உங்க பொண்ணு ரித்திகாவ அம்போன்னு தவிக்கவிட்ட கதைகளைச் சொல்லுங்க. ரித்திகா ஏதோ ஆபத்துல மாட்டிக்கிட்டு அம்மா அம்மான்னு கதறினபோது, ‘நீ செஞ்ச தப்புக்கு இந்தத் தண்டனை ரொம்ப குறைச்சல்டி’ன்னு அவளக் கதறவிட்ட கதைகளச் சொல்லுங்க… ரித்திகா உங்களக் கூப்பிட்டு அது உங்க காதுல விழுந்தும் கண்டுக்காம இருந்து அவள அழவிட்ட கதைகளச் சொல்லுங்க.

    என்ன மிஸ்டர் விளையாடறீங்களா? மனநோய் உங்களுக்குத்தான் எனக்கு இல்ல. நான் ஒரு சைக்கியாட்ரிஸ்ட், எம்.டி பண்ணியிருக்கேன். தங்கப் பதக்கம் வாங்கியிருக்கேன். ஆனா அதுக்கெல்லாம் மேல நான் ஒரு தாய். என் மகள் கண்ணுல கண்ணீர் வந்தா என் கண்ணுல ரத்தம் வரும். எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு அவளத் தவிக்கவிட? அவளுக்கு எதாவது ஒண்ணுன்னா என் உயிரை விட்ருவேன். பெரிசா பேச வந்துட்டாரு.

    அவளுடைய அழகான பெரிய கண்கள் பனித்திருந்தன. அவளை நோக்கிக் கைகளைக் கூப்பினேன். அவள் சமாதானமாகவில்லை.

    ஏன் இப்படி என்னைக் கேள்வி கேட்டுச் சித்திரவதை பண்றீங்க?

    பழி வாங்கறேன்.

    என்ன பேத்தறீங்க?

    பேத்தல டாக்டர். உங்க பொண்ணத் தவிக்கவிட்ட கதையச் சொல்லுங்கன்னு சொன்னவுடனே உங்களுக்குக் கோபமும் பாசமும் எப்படிப் பொத்துக்கிட்டு வருது. நீங்க மட்டும் கண்ணன் என்னை அம்போன்னு தவிக்கவிட்ட கதைகளச் சொல்லுங்கன்னு ரொம்ப சாதாரணமாக் கேட்டீங்களே அப்போ என் கண்ணுல ரத்தம் வந்தது டாக்டர். நீங்க சொன்னதக் கேட்டு என் மனசு எவ்வளவு துடிச்சிருக்கும்னு உங்களுக்கு இப்ப புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்.

    "நீங்கள் ஒரு மானுடத்தாய். நீங்கள் பெற்ற மகளின் மேல் உங்களுக்குப் பாசம் இருக்கிறது. நம்மைப் படைத்த அந்த இறைவனுக்கும் நம்மேல் அதே தாய்ப்பாசம் இருக்கிறது…

    உங்களுக்கு எவ்வளவுதான் பாசம் இருந்தாலும் உங்களால் 24 மணிநேரமும் உங்கள் மகளுடன் இருக்க முடியாது. அவள் பள்ளியில் இருக்கும்போது யாராவது அவளைத் துன்புறுத்தினால் அப்போதும் அவள் அம்மா என்றுதான் கதறுவாள். அது உங்களுக்குக் கேட்காது.

    ஆனால் நாம் எப்போது அழைத்தாலும் இறைவனுக்கு அது கேட்கும். இறைவனை என்ன பேர் வேண்டுமானாலும் சொல்லிக் கூப்பிடலாம்.

    அவனை நாம் அழைத்து அந்த ஒலி அலைகள் இறைவனின் செவிகளைச் சென்றடைய வேண்டும் என்பதில்லை. நாம் அழைக்கும் முன்னரே நாம் அழைக்கப் போகிறோம் என்று அவன் அறிவான்.

    "நான் பசியால் துடித்தபோது அவன் என் தாய்மாமனை உணவுப் பண்டங்களுடன் அனுப்பி வைத்தான் என்று சொன்னேனே… என் குரல் கேட்டு அதன்பின் அவன் அந்த ஏற்பாட்டைச் செய்யவில்லை. அப்படிச் செய்திருக்கவும் முடியாது.

    இந்த நாள் இந்த நேரத்திற்கு நான் பசியால் கதறுவேன் என்று முன்பே அவனுக்குத் தெரியும்."

    கண்ணா பசிக்குது என்று நான் கதறிய மூன்றாவது நிமிடம் என் தாய்மாமன் எங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்து ஒரு மாதத்திற்கு முன் என் தாய்மாமன் அந்தப் பயணத்தைத் திட்டமிட்டபோது என் பசி நேரத்தில் அவர் எங்கள் வீட்டில் தின்பண்டங்களுடன் இருக்குமாறு பார்த்துக் கொண்டது அவன்தான்.

    எனக்குப் பசிக்கும் என்று முன்கூட்டியே தெரிந்து உணவு கொடுத்தவன் தாயினும் சிறந்தவன் இல்லையா?

    டாக்டர் உங்கள் ரித்திகா கைக்குழந்தையாக இருந்தபோது தாய்ப்பால் கொடுத்திருப்பீர்கள். மருந்து மாத்திரை கொடுப்பதுபோல் கொடுத்திருக்க மாட்டீர்கள் இல்லையா? காலை 100 மில்லி மதியம் 150 மில்லி மாலை 200 மில்லி என்று கணக்குப் போட்டா தாய்ப்பால் கொடுத்தீர்கள்?

    உங்கள் பெண்ணரசிக்கு எப்போது பசிக்கும் என்று உள்ளுணர்வால் தெரிந்துகொண்டு அவள் பசியாறும் வரை பால் கொடுத்தீர்கள்.

    அப்படித் தாய்ப்பால் கொடுப்பதற்காக, அந்தத் தாய்ப்பால் உங்கள் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நீங்கள் பத்திய உணவை மட்டுமே உண்டீர்கள். அதிகம் காரம், அதிகம் மசாலா சேர்க்கவில்லை. உங்களுக்குப் பிடித்த அசைவ உணவைக்கூட வேண்டாம் என்று ஒதுக்கிவைத்தீர்கள். அதுதான் தாய்மை உணர்வு.

    உங்களுக்கே இந்த அளவிற்கு அன்பும் பாசமும் இருக்கும்போது உங்களைப் பெண்ணாகப் படைத்து, உலகிலேயே மிகவும் உன்னதமான தாய்மை உணர்வை

    Enjoying the preview?
    Page 1 of 1