Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நாலடியார்: திருக்குறள் நன்னெறிக் கதைகள் - 100
நாலடியார்: திருக்குறள் நன்னெறிக் கதைகள் - 100
நாலடியார்: திருக்குறள் நன்னெறிக் கதைகள் - 100
Ebook525 pages2 hours

நாலடியார்: திருக்குறள் நன்னெறிக் கதைகள் - 100

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்பது பழமொழி. ஆலங்குச்சியையும் வேலங்குச்சியையும் வைத்துப் பல்தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்; அதேபோல நான்கடி வெண்பாக்களாலான நாலடியாரையும், இரண்டடி வெண்பாக்களாலான திருக்குறளையும் படித்து அறிந்து சொல்லும் சொற்கள் ‘வலிமை மிக்கவை’ என்பது இதன்பொருள்.
ஒரு நாலடியார் பாடலையும், ஒரு குறட்பாவையும் எடுத்து, ஒப்பிட்டு அவற்றில் பொதிந்துள்ள நீதிகளை கதை வடிவில் தொகுத்து “நாலடியார்-திருக்குறள் நன்னெறிக் கதைகள்-100” என்ற தலைப்பில் ஆன்மீக எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள் அவர்கள் எழுதியுள்ளார்.

Languageதமிழ்
Release dateJun 8, 2021
ISBN9788179504932
நாலடியார்: திருக்குறள் நன்னெறிக் கதைகள் - 100

Read more from R Ponnammal

Related to நாலடியார்

Related ebooks

Related categories

Reviews for நாலடியார்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நாலடியார் - R Ponnammal

    1. முயற்சி முன்னேற்றத்திற்கு ஊன்றுகோல்

    "ஆலும் வேலும் பல்லுக்குறுதி
     நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"

    என்பது தமிழ்ப் பழமொழி.

    ஆலங்குச்சி, வேலங்குச்சி இரண்டிலிருந்தும் கசிகிற மூலிகைச் சத்து பற்களில் தங்கும் பூச்சிகளுக்கு எமனாகி பற்களை ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்கிறது.

    அதே போல நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் (இரண்டடி) குறிப்பிடுகிறது. ஆலும் வேலும் உடல் ஆரோக்கியத்திற்கும், நாலும் இரண்டும் மன ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக பார்க்கப்படுகின்றன.

    பதினெண்கீழ் கணக்கு என்ற பதினெட்டு தமிழ் இலக்கிய நூல்களில் திருக்குறளும், நாலடியாரும் நன்முத்துக்கள்.

    நாலடியார் : 192-ஆவது செய்யுள்

    ஆடு கோடாகியதரிடை நின்ற தூஉம்
    காழ் கொண்டகண்ணே களிறணைக்கும் கந்தாகும்
    வாழ்தலும் அன்ன தகைத்தேயொருவன்றான்
    தாழ்வின்றித் தன்னைச் செயின்

    விளக்கம் : வஜ்ரம் பாயப் பெற்ற சின்ன மரமும் யானையைக் கட்டப் பயன்படுகிறது. அதுபோல உறுதிகொண்ட மனத்துடன் முயற்சி செய்பவர்களுடைய வாழ்க்கை பெருமையுள்ளதாய் உயரும்.

    திருக்குறள் : 611-ஆவது செய்யுள்

    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்

    விளக்கம் : எந்தச் செயலையும் செய்யும் போது இது நம்மால் முடியாதது. நம் சக்திக்கு மேம்பட்டது என்று நினைத்து மனம் தளர்ந்துவிடக் கூடாது. உன் சக்திக்கு மீறிய அந்தச் செயலை நீ விடாமுயற்சியுடன் முடிக்கும் போது பெருமை உன்னை வந்து சேரும்.

    எதிர்காலம் இன்றைய குழந்தைகளின் கரங்களில்! அந்த வளரும் பயிர்களுக்கு உரமான முயற்சி, உழைப்பு இரண்டையும் இணைத்த ஒரு கதையை தந்திருக்கிறேன் படியுங்கள்.

    ஹென்றி என்ற இளைஞனின் கதை இது.

    எளிமையான தோற்றமுள்ள இளைஞன் ஒருவன் ஒரு நிறுவனம் வெளியிட்டிருந்த விளம்பரத்தைப் பார்த்தான். அது அவனை ஈர்த்தது. ஒரு பெரிய இயந்திரத் தொழிற்சாலையில் வேலை செய்ய ஆட்கள் தேவை Date : 18.9.2009 என்பதோடு அவ்வேலைக்காக 20 தகுதிகளையும் குறிப்பிட்டிருந்தனர்". அவன் வாழ்க்கையின் அடிமட்டத்திலுள்ள ஏழை இளைஞன். நிறையப் படிக்க வசதியில்லை; அழகான தோற்றமும் இல்லை. தினசரித் தேவைகளே பெரும் பாடாயிருக்கும் போது கவர்ச்சிகரமாக ஆடை அணியவும் வாய்ப்பில்லை! 20 தகுதிகளில் ஒன்றைக்கூட அவன் பெற்றிருக்கவில்லை.

    ஆனாலும் அவன் தன்னம்பிக்கையோடு நேர்முகத்தேர்வுக்குச் சென்றான். அவனைத் தேர்வில் சந்தித்த நிர்வாகிகள் முகம் சுளித்தனர். வேண்டா வெறுப்பாக கேள்விகள் கேட்டனர் நிர்வாகிகள். எல்லாவற்றிற்கும் மதிப்பெண்கள் பூஜ்யம் தான்!

    எந்தத் தகுதியும் இல்லாத நீ, எந்த நம்பிக்கையில் தேர்வுக்கு வந்தாய்? கேலியாகக் கேட்டார் ஒரு நிர்வாகி. அந்த இளைஞன் அமைதியாக, ஆனால் தைரியமாக, நீங்கள் வகுத்து வைத்திருக்கும் 20 தகுதிகளில் உலகம் அடங்கி விட்டதாக நான் கருதவில்லை! உங்கள் பட்டியலில் இல்லாத சில தகுதிகள் என்னிடம் இருக்கின்றன. அதனால் வந்தேன் என்றான்.

    நிர்வாகியின் பார்வையில் மதிப்பு கூடியது.

    அப்படியென்ன சிறப்புத் தகுதிகள் உன்னிடம் இருக்கின்றன? ஒன்று சொல் என்றார்.

    1.tif

    கடின உழைப்பு! இருபது தகுதிகளும் பெற்ற ஒருவர் சோம்பேறியாயிருந்தால் கம்பெனிக்கு எத்தனை நஷ்டம் வரும்? கவனக்குறைவாயிருந்தால் என்னென்ன தவறுகள் நடக்கக் கூடும்? ஒரு வேளை என் சொல்லுக்குச் செவிசாய்த்து, என்மீது நம்பிக்கை கொண்டு என்னை பணியில் அமர்த்தினால் முழுமூச்சாய் உழைப்பேன்.

    அந்த இளைஞனின் பதிலைக் கேட்ட நிர்வாகி சிந்தித்தார். நியாயம் தானே! இப்படி உற்சாகத் தேனியை, ஆர்வமிகு இளைஞனை நிராகரிக்க அவரது மனம் ஒப்பவில்லை! ஆனாலும் முன் அனுபவமும், குறைந்தபட்ச தொழில் அறிவும் கூட இல்லாத உன்னை எங்கள் கம்பெனியில் எப்படி சேர்த்துக் கொள்ள முடியும்? என்றார்.

    இனிமையாக அதே சமயம் பணிவுடன் பதில் தந்தான் அவன். கோபித்துக் கொள்ளமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் பதில் சொல்கிறேன். பிறக்கும் குழந்தை தவழ்கிறது, நிற்கிறது, நடக்கிறது, ஓடுகிறது... அதற்கு யார் கற்றுக் கொடுக்கிறார்கள்? நீங்கள் உங்கள் தாயின் வயிற்றிலிருந்து வெளிவரும்போதே இந்தக் கம்பெனி நிர்வாகியாகப் பயிற்சி பெற்றுத்தான் வந்தீர்களா? விடா முயற்சி, சுறுசுறுப்பு, கூர்ந்து கவனித்துத் தக்கவைத்துக் கொள்ளும் நினைவாற்றல், கடின உழைப்புக்கேற்ற உடல் வலிமை, பொறுமை, பணிவு இவையெல்லாம் என்னிடம் இருக்கின்றன. முன்னேற முடியும்; கம்பெனிக்கு நன்றியுள்ளவனாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது இளைஞனின் பதிலைக் கேட்ட நிர்வாகி கோபப்படவில்லை... மாறாக சிரித்தார்.

    அந்த இளைஞனுக்கு தமது தொழிற்சாலையில் அடித்தள வேலை என்று கருதப்பட்ட சாமானிய வேலையை நிர்வாகி கொடுத்தார்.

    அவ்வாறு ஒரு சாதாரணத் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்த அந்த துடிதுடிப்பான இளைஞர், தன் கடின உழைப்பால் சில ஆண்டுகளில் அந்த தொழிற்சாலையின் பிரதம தொழில் நுணுக்கத் தலைவரானார். அடுத்த சில ஆண்டுகளில் அந்த தொழிற்சாலையையே விலைக்கு வாங்கிவிட்டார்.

    அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் அவருடன் தொடர்பு கொண்ட பல பெரிய தொழிற்சாலைகள் இருக்கின்றன. அந்த ஊக்கமுள்ள கோடீஸ்வரர் யார் தெரியுமா? உழைக்கும் சக்தியையே பெரிதாக நினைத்து, துணிச்சலோடு தேர்வுக்கு வந்த ஹென்றி போர்டு அவர்கள் தான்.

    << << <<

    2. சிறு நெருப்பும் சுடும்

    நாலடியார் : 162-வது செய்யுள்

    பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
    கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
    பயனில் பொழுதாக் கழிப்பரே நல்ல
    நயமில் அறிவி னவர்.

    விளக்கம் : தங்கத்தையே காணிக்கையாகக் கொடுத்தாலும் நல்லோருடைய சினேகம் கிடைப்பது மிகக் கடினம். அவர்களே வலிய பலன் கருதாது உறவுகொள்ள தம்மிடம் வரும்போது பயன்படுத்தத் தெரியாதவர்கள் அறிவிலிகள். காலம் கழிந்த பின்பே அவர்கள் அதை உணர்வார்கள்.

    திருக்குறள் - 667வது செய்யுள்

    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தோர்க்கு
    அச்சாணி அன்னார் உடைத்து.

    விளக்கம் : பிரமாண்டமான தேர் உருண்டு செல்ல சக்கரங்களுக்கு உறுதுணையாயிருப்பது சிறு அச்சாணியே! அச்சாணி இல்லாவிட்டால் சக்கரங்கள் உருளாது. தேர் ஓட முடியாது. அதனால் அச்சாணி சிறியதுதானே என அலட்சியப்படுத்த முடியாது. வாழ்க்கையிலும் அச்சாணி போல் பல பெரியவர்கள், அறிவாளிகள் உள்ளனர். ஆனால் அவர்கள் உருவத்தில் சிறியவர்களாக இருந்தால் அந்த உருவத்தைக் கண்டு எடை போடுவது தவறு.

    வேதங்களையெல்லாம் நன்கு கற்றவர் உத்தாலகர். அவருடைய பெண்ணின் பெயர் சுஜாதா. உத்தாலகருக்கு ஒரு சீடர். நற்குண, நற்செய்கைகள் நிரம்பியவர். பகவானிடத்திலும், குருவினிடத்திலும் பக்தியும், பணிவும் கொண்டவர். அவர் பெயர் கஹோளர். திருத்தமான வார்த்தை உச்சரிப்பு இல்லாததால் அவர் சொல்லும் வேதமந்திரங்கள் தப்பும், தவறுமாக இருந்தன. இதனால் மற்ற மாணவர்கள் சதா இவரைக் கேலி செய்தனர். இவரது நல்ல குணத்தை சிலாகித்து சுஜாதாவை கஹோளருக்குத் திருமணம் செய்வித்தார் உத்தாலகர்.

    சுஜாதா கணவரிடம் அன்பு கொண்டு வாழ்ந்தாள். தப்பும் தவறுமாய் மந்திரம் சொன்னபோதும் அவள் சிரிக்க மாட்டாள். ஆனால் அவள் வயிற்றிலிருந்த குழந்தை...! வேதாந்த சிகாமணியான உத்தாலகரின் ஞானம் அக்குழந்தைக்கிருந்ததால், கஹோளர் ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும் குழந்தை கை, கால், வாய், மூக்கு, செவி, விரல், முகம், உடம்பு எனக் கோணிக் கொண்டது. எட்டுக் கோணல்களோடு பிறந்த அந்தக் குழந்தைக்கு அஷ்டாவக்கிரன் என்ற பெயர் காரணப் பெயராயிற்று.

    பாட்டனையும் மிஞ்சிய வித்வானாக வளர்ந்தான் அஷ்டாவக்கிரன். பன்னிரண்டு வயதிற்குள்ளாகவே வேத வேதாந்தங்களில் தேர்ச்சி பெற்றுவிட்டான்.

    மிதிலையை ஆண்ட ஜனகரின் சபையில் வந்தி என்ற பெரிய வித்வான் இருந்தார். வேதாந்தப் பயிற்சி பெற்றவர்களையெல்லாம் வாதுக்கழைத்து தோற்கடிப்பார். தோற்றவர்களுக்குத் தண்டனை, கடலில் மூழ்கடித்துக் கொன்றுவிடுவது. அப்படிக் கொன்றவர்களில் கஹோளரும் ஒருவர். கஹோளர் ஏன் வாதுக்குப் போனார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? உத்தாலகர் இறந்ததும் குடும்பம் நடக்க வேண்டுமே! சன்மானத்துக்கு ஆசைப்பட்டும், சக சீடர்களின் பொய்யான தூண்டுதலின் படியும் அவரை வென்று விடலாம் என்ற எண்ணத்தில் கிளம்பிச் சென்றார். தாயின் மூலம் இதைத் தெரிந்து கொண்ட அஷ்டாவக்கிரன் கொதித்துப் போனார். ‘தந்தை பழி துடைப்பேன்’ என சபதம் செய்தார். தன் தமக்கை மகனான சுவேதகேதுவுடன் மிதிலையை நோக்கிப் புறப்பட்டார்.

    அப்போது ஜனகர் பெரிய யாகம் ஒன்று நடத்திக் கொண்டிருந்தார். யாகசாலைக்கு ஜனகர் குதிரையில் போய்க் கொண்டிருந்தார். அஷ்டாவக்கிரனால் வேகமாக நடக்க முடியாது! விலகு! விலகு! ராஜா வருகிறார்! பராக்! பராக்! என்று காவலர் குரல் கொடுத்தனர்.

    அஷ்டாவக்கிரன் முழுவதுமாக விலகுவதற்குள் அரசரின் குதிரை அருகே வந்துவிட்டது.

    அஷ்டாவக்கிரன் சேவகர்களே! குருடனுக்கும், அங்கஹீனர் களுக்கும், பெண்களுக்கும், சுமை தூக்கிக் கொண்டு செல்பவர்களுக்கும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கும் அரசனே விலகி வழிவிடவேண்டும். அவர்களை விரட்டக்கூடாது. இது தெரியுமா? என்றான்.

    இதைக் கேட்ட ஜனகர் பிரமித்தார்.

    2.tif

    சிறிய வயதில் எத்தனை பெரிய விளக்கம்! நெருப்பில் சிறியது பெரியது என்று உண்டா? பொறிகள் போதாதா? என்று நினைத்தவர் அஷ்டாவக்கிரன் செல்லும்வரை நின்று, குதிரையை வேறு பாதையில் ஓட்டிச் சென்றார்.

    அஷ்டாவக்கிரனை யாகசாலையில் நுழைய விடாமல் காவலர் தடுத்தனர்.

    சிறுவர்களுக்கு அனுமதியில்லை. வேதம் ஓதிய முதியவர்களே உள்ளே போகமுடியும் என்றான் காவலன்.

    நாங்களும் வேதம் படித்தவர்கள் தான்! வயதையும் வெளித் தோற்றத்தையும் பார்த்து மனிதனை எடை போடக்கூடாது. தலைநரையும், செல்வமும், நல்ல குடும்பத்தில் பிறப்பதும், உறவினர், நண்பர்கள் கூட்டமும் மட்டும் ஒருவனைப் பெரியவனாக்கு வதில்லை! சூட்சம புத்தியும், கல்வி அறிவும், தெளிவான சிந்தனையும் தான் ஒருவனைப் பெருமைப்படுத்தி சபையில் முதன்மை ஸ்தானத்தைப் பெற்றுத்தரும். அப்படிப்பட்டவர்கள் வலிய உறவு கொள்ளவரும் போது பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் காலத்தை விரயம் செய்பவர்கள். எங்களுடைய சங்கமத்துக்காக உங்கள் அரசர் பெருமைப்படுவார் என்று பல உதாரணங்களால் விளக்கினான் அஷ்டாவக்கிரன்.

    இந்த சமயம் ஜனகர் அங்கு வந்தார்.

    தர்க்கத்தை அவரும் கேட்டுக் கொண்டிருந்தார். வழியில் பார்த்த ‘சிறுநெருப்பு’ என்பதைப் புரிந்து கொண்ட அஷ்டாவக்கிரனிடம் சர்ச்சை செய்ய ஆசை கொண்டார்.

    நிறையப் படித்திருப்பதாய் தற்பெருமை அடித்துக் கொள்ளும் சிறுவனே! அகம்பாவம் அழிவின் விதை என்பதை அறியாயா? என்று கேள்வியை ஆரம்பித்தார்.

    விளக்கத்துக்கும், கர்வத்துக்கும் வித்தியாசம் உண்டு மன்னா! நான் புதிதாய் வந்திருப்பவன். என்னைப் பற்றி விளக்கம் தருவதை தற்பெருமை என்று எப்படிச் சொல்லலாம்? சரியான விளக்கம் தராவிடில் யாகத்தைக் காணவும், உள்ளே நுழையவும், வித்வான் வந்தியோடு வாதம் செய்யவும் அனுமதி கிடைக்காது. கருமேகங்கள் சூழ்ந்திருப்பது மழை பெய்வதை அறிவிக்க! வெறும் இடி இடித்துவிட்டு மழை பெய்யாமல் போவது பகட்டுத்தனம்! இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தாங்கள் அறியாததா?

    வித்வான் வந்தி பல அறிஞர்களை வாதத்தில் தோற்கடித்து கடலில் வீழ்த்தி இருக்கிறார். நீ சிறுவன். இந்த உலகில் நீண்ட காலம் வாழ வேண்டியவன். வாதம் செய்யும் எண்ணத்தை விட்டுவிடு என்றார், அரசர்.

    அரசே, ஒதியமரங்கள் பருமனாயிருந்தாலும் உத்திரத்துக்காவ தில்லை! இலவங்காய்கள் பருத்திருந்தாலும் உள்ளே இருப்பது காற்றில் பறந்துவிடும் பஞ்சு. உருவில் சிறிய வைரக்கற்கள் விலையுயர்ந்தவை! கடலிலே நிறைய மீன்கள்தான் அகப்படு கின்றன. ஆனாலும் சிறிய முத்துக்களே பெருமையுடையவை. உயரமாய் இருப்பவன் உயர்ந்தவனல்ல! உங்கள் வந்தி இதுவரை தோற்கடித்தது தன்னை விட அறிவில் சிறியவர்களை! குட்டையான அகஸ்தியர் பெரிய சமுத்திரத்தைக் குடித்துவிட்டார். சிறிய வாமனன்தான், திரிவிக்ரமனாகி மூன்றாவது கால் வைக்க இடம் கேட்டார். வித்வான் வந்தியிடம் தோற்ற கஹோளரின் மைந்தன் நான். வந்தியைத் தோற்கடிப்பது என் லட்சியம். தங்கள் அனுமதி வேண்டி நிற்கிறேன்.

    அஷ்டாவக்கிரனின் விளக்கங்கள் ஜனகரைப் பூரிக்கச் செய்தது. சகல மரியாதைகளோட அஷ்டாவக்கிரன் உள்ளே அனுமதிக்கப்பட்டு ஆசனத்தில் அமர்த்தப்பட்டான்.

    வந்தியும், அஷ்டாவக்கிரனும் சொற்போர் நடத்தினர். வந்தியின் கேள்விகளுக்கெல்லாம் அஷ்டாவக்கிரன் தெளிவாக பளீர் பளீரென பதில் சொல்ல, அஷ்டாவக்கிரனின் கேள்விகள் வந்தியைத் திணறடித்தன. வந்தி தோற்றுப் போனதாக சபையோர் தீர்ப்பளித்தனர்.

    ஜனகர் ஏராளமாகப் பரிசளித்து அஷ்டாவக்கிரனைக் கௌரவித்தார். அஷ்டாவக்கிரனின் உடல் கோணலாயிருந்ததே தவிர அவர் கூறிய உபநிடதக் கருத்துக்களில் கோணலில்லை!

    மனமும், அறிவும், விசாலமாயும், தெளிவாயும் இருந்தால் பாராட்டுப் பெறலாம் என்பதை அஷ்டாவக்கிரன் நிரூபித்து தந்தை பழி துடைத்து குலத்துக்குப் பெருமை சேர்த்தான்.

    << << <<

    3. அந்தகக்கவி வீரராகவர்

    நாலடியார் : 132-வது செய்யுள்

    இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்ால்
    தம்மை விளக்குமால் தாம் உளராக் கேடின்றால்
    எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்
    மம்மர் அறுக்கும் மருந்து.

    விளக்கம் : இப்பிறவியில் கற்பவனுக்கு அறிவை ஊட்டுகிறது கல்வி. பிறருக்குக் கொடுத்தாலும் குறையாமல் வளரக்கூடியது. புகழை அளித்து விளம்பரப்படுத்துகிறது. உயிருள்ளவரை விட்டுப் பிரிவதில்லை. அறியாமைப் பிணியை அகற்ற கல்வியைப்போல் சிறந்த மருந்து உலகில் கிடையாது.

    திருக்குறள் : 396-வது செய்யுள்

    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.

    விளக்கம் : மணலுள்ள கிணற்றில் இறைக்கும் அளவு தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கும். அதுபோல் படிக்கப் படிக்க அறிவு வளர்ந்து கொண்டே போகும்.

    புதூர் என்ற ஊரில் வடுகநாதர் என்ற வேளாளர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நெடுங்காலம் குழந்தையில்லாமலிருந்து பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்தோ... அக்குழந்தை பிறவிக் குருடு. வடுகநாதரும், அவர் மனைவியும் குழந்தையைப் பார்த்துப் பெரிதும் வருந்தினர். குழந்தைக்கு ஐந்து வயதாகியது. அந்தக் காலத்தில் இக்காலம் போல் குருடர் பள்ளியெல்லாம் கிடையாது. குழந்தைக்கு வாய் மொழியான பாடங்கள், பக்திப் பாடல்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்த வடுகநாதர், எழுதுவதை எப்படிச் சொல்லித் தருவது என கவலைப்பட்டார்.

    இதை அறிந்த வீரராகவன் எனப் பெயர் கொண்ட அச்சிறுவன் அப்பா, ஆசிரியர் என் முதுகில் தன் விரலால் எழுதிக் காட்டினால் கூர்ந்து உணர்ந்து கற்றுக் கொள்வேன் என்று கூற, தந்தை மகிழ்ந்து மகனை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.

    பிறகு மகனை அழைத்துக் கொண்டு அவ்வூர் ஆசிரியரிடம் சென்றார். வடுகநாதரின் கல்வி கற்கும் ஆர்வத்தை விளக்கிக் கூறினார். ஆசிரியரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். ஒரு நல்ல நாளில் பாடம் ஆரம்பமாயிற்று. வீரராகவன் தன் முதுகில் ஆசிரியர் எழுதுவதை கூர்ந்து நெஞ்சில் பதித்துக் கொண்டு எதிரிலிருக்கும் மணலில் எழுதிக் காட்டுவான். கை எடுத்தால் தவறி விடும் என்று விரலை எடுக்காமல் எழுதுவான். இப்படியே எல்லா எழுத்துக்களையும் நன்கு எழுதக் கற்றுக் கொண்டான்.

    3.tif

    ஒருமுறை ஆசிரியர் படித்தாலே வீரராகவனுக்குப் புரிந்துவிடும். ஆசிரியர் மற்ற மாணவர்களைத் திருத்துவதை மனதில் பதிய வைத்துக் கொண்டான். அகநானூறு, புறநானூறு, நாலடியார், ஐம்பெரும் காப்பியங்கள் என எல்லாத் தமிழ் நூல்களையும் கற்றுத் தேர்ந்தான். வீரராகவனின் நுண்ணறிவை அனைவரும் பாராட்டினர்.

    மேலும் பதினெண் புராணங்களையும், இலக்கண நூல்களையும் கற்க ஆசை கொண்டு தந்தையின் இசைவுடன் காஞ்சிபுரம் சென்றான். ஒரு பெரும் புலவரிடம் தன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். அவரும் அவனது அறிவை சோதித்து அறிந்த பின் இசைந்தார். தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களையும், சங்க இலக்கியங்களையும், புராண இதிகாசங்களையும், திருக்குறள், நீதிநெறி விளக்கம், அறநெறிச்சாரம் போன்ற நன்னூல்களையும் ஐயம் திரிபறக்கற்று, தானே கவி புனைந்து பாடும் கவிஞன் ஆனான்.

    கவிஞர் வீரராகவர் வாய் திறந்தால் சொல்லழகும், பொருளழகும் நிறைந்த பாடல்கள் காளமேகமெனப் பொழிந்தன. சிலேடைப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள் ஏராளமாகப் பாடினார். நாநயம் மிக்க அவர், சிலேடைப் பேச்சிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

    இத்தனை புகழை அவருக்குக் கொடுத்தது எது? கல்வி! கற்ற கல்வி ‘அந்தகக்கவி வீரராகவர்’ என்ற பட்டத்தையும் வாங்கித் தந்தது.

    அதனால் அவர் அறிவு வளர்ந்தது. பலர் அவரது மாணவர்களாகச் சேர்ந்தனர். திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற உலா, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சந்திரவாணன் கோவை முதலிய பல நூல்கள் எழுதியுள்ளார். சீட்டுக்கவி எழுதுவதிலும் வல்லவர். (பிறருக்கு எழுதும் கடிதத்தை கவிதையாக எழுதுவது சீட்டுக்கவி)

    குருடன் என்ற ஊனத்தை மறைத்து, மறக்கவைத்து, புலவன் என்ற பேரும், புகழும் அளித்தது கல்விதான்!

    << << <<

    4. கெடுவான் கேடு நினைப்பான்

    நாலடியார் : 211-வது செய்யுள்

    கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றும்
    குருத்தின் கரும்பு தின்றற்றே - குருத்திற்கு
    எதிர் செலத்தின் றன்ன தகைத் தரோ வென்றும்
    மதுரம் இலாளர் தொடர்பு.

    விளக்கம் : நுனியிலிருந்து கரும்பைத் தின்னும் போது இனிமை கூடிக் கொண்டே வருவது போல, அறிவாளிகளுடன் கொண்ட நட்பு நாளுக்கு நாள் இனிமையைப் பெருக்குகின்றது. அடியிலிருந்து கரும்பை சுவைப்பவருக்கு இனிமை குறைந்து கொண்டே வருவதுபோல் அறிவிலிகள் நட்பின் இனிமையும் குறைந்து கொண்டே போகும்.

    திருக்குறள் : 782-வது செய்யுள்

    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்நீர பேதையார் நட்பு.

    விளக்கம் : அறிவுடையார் நட்பு வளர்பிறை போன்ற தன்மையுடையது. அறிவில்லாதவர்களின் சினேகம் தேய்பிறை போல் குறையும் தன்மையுடையது.

    ஒரு மானும் காகமும் நண்பர்களாய் இருந்தன. காட்டிலே அடர்த்தியான புற்களைத் தின்று கொழு கொழுவென்றிருந்த மானைக் கொன்று தின்ன நினைத்து சமயம் பார்த்துக் காத்திருந்தது நரி.

    மான் அருகே எவராவது வந்தால் ‘கா... கா...’எனக் குரல் கொடுக்கும் காகம். மறுகணம் மான் துள்ளியோடி மறைந்துவிடும். ஒருநாள் நரி, நிறைய பசும் புற்களை வாயில் கவ்விக் கொண்டு வந்து மானின் முன் போட்டது.

    மான் சந்தேகக் கண்களோடு எனக்கு ஏன் புல் பிடுங்கிப் போடுகிறாய்? என்று கேட்டது.

    நேற்று உன் காலில் முள்குத்தியதும், காகம் தன் அலகால் அதைப் பிடுங்கியதும் எனக்குத் தெரியும். உனக்கு இன்று காலில் வலி இருக்குமே... அதற்காகத்தான்! என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டது நரி.

    நீ எங்களுக்கு நண்பனாவதா? இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று சொல்லிற்று மான் .

    அடிபட்ட மானின் ரணங்களை காக்கைகள் கொத்துவ தில்லையா? காக்கை நண்பனாகலாம். நான் ஆகக்கூடாதா? என்று நரி விவாதித்தது. மான் கொஞ்ச நேரம் யோசித்தாலும் பிறகு ஒப்புக் கொண்டது.

    நரி சென்ற பிறகு காகம் கோபமாக, உனக்குக் கொஞ்சம் கூட அறிவில்லை. நரியோடு சினேகம் வைத்துக் கொள்ளலாமா? என்று கடிந்து கொண்டது.

    எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது. காகங்களில் நீ நல்லவனாக இல்லையா... அதுபோல நரியிலும் நல்லவர்கள் இருக்கலாம். இந்த நரி உபகாரமானது. எனக்கு நிறைய புல் பறித்துப் போட்டது என்று நரிக்குப் பரிந்து பேசியது மான்.

    காகம் மௌனமாயிருந்தது.

    ஆனாலும் மானை நிழல் போல் காத்து வந்தது.

    அந்த நரியை ஒரு வேடன் வளர்த்து வந்தான். நரி இப்படியே காட்டு மிருகங்களிடம் நயவஞ்சகமாக நட்பு கொண்டு வேடன் வலை விரித்த இடத்திற்கு அழைத்து வந்துவிடும். வேடன், இறைச்சியில் நான்கிலொரு பங்கை நரிக்குக் கொடுப்பான்.

    ஒரு நாள் மானிடம் பச்சைப்பசும் புல் காண்பிக்கிறேன் என்று ஆசைகாட்டி வலையில் மாட்ட வைத்துவிட்டது நரி.

    நண்பா, என்னை விடுவி என்று மான் கண்ணீரோடு கேட்க, நரி, நான் இன்று விரதம். தோல் கடிக்க மாட்டேன். வலையையும் கடிக்க மாட்டேன். நாளைக்கு நிச்சயம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு செடி மறைவில் பதுங்கிக் கொண்டது.

    மானைத் தேடி காகம் வந்தது.

    ‘நண்பா, இதில் எப்படி சிக்கிக் கொண்டாய்’ என்று வருத்தத்துடன் கேட்டது.

    ஆராயாத நட்பு ஆபத்தை விளைவிக்கும் என்று நீ சொன்ன போது நான் கேட்கவில்லை. கடிந்து நலம் உரைக்கும் உன் நட்பு நிஜமானது. இனிக்க இனிக்கப் பேசும் நரியின் நட்பு விஷம் தோய்ந்தது என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன் என்று கண்ணீர் வடித்தது மான்.

    வீண் பேச்சு வேண்டாம். நீ செத்தது போல் கிட. நான் உன்னை கொத்துகிறேன். வேடன் வலையை உதறி சுருட்டிக் கட்டும் சமயம் நான் குரல் கொடுக்கிறேன். நீ ஓடிவிடு என்றது காகம்.

    மூச்சடக்கி, கண்மூடிச் சாய்ந்தது மான். காகம் அதைக் கொத்துவது போல் பாவனை செய்தது. வேடன் வந்தான். காகம் மரக்கிளைக்குப் பறந்தது. வலையை உதறிச் சுருட்டிக் கட்டும் போது காகம் குரல் கொடுத்தது. மான் மின்னல் வேகத்தில் ஓடியது. ஆத்திரமடைந்த நரி, செடியின் மறைவிலிருந்து மானை விரட்டப் பாய்ந்தது.

    ஏமாந்த வேடனும் கையிலிருந்த கம்பை வீச அதே சமயம், கம்பு எதிரில் வந்த நரியின் தலையைத் தாக்கி, நரி அக்கணமே உயிர் நீத்தது.

    மானும், காகமும் இணைபிரியா நண்பர்களாய் வாழ்ந்தன. கெடுவான் கேடு நினைப்பான் என்பது எத்தனை உண்மையாயிற்று பார்த்தீர்களா?

    << << <<

    5. நரியின் யோசனை

    நாலடியார் : 213-வது செய்யுள்

    யானை யனையவர் நண்பொரீ இ நாயனையார்
    கேண்மை கெரீஇக் கொளல் வேண்டும் - யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
    மெய்யதா வால்குழைக்கும் நாய்.

    விளக்கம் : எத்தனை பழகினாலும் மதம் பிடித்தால் பாகனையே கொன்றுவிடும் யானையை போலல்லாமல், கோபத்தில் அடித்தாலும் வாலைக் குழைத்து வரும் நாயைப் போன்றவருடன் நட்பு கொள்வதே நன்மையைத் தரும்.

    திருக்குறள் : 788-வது செய்யுள்

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.

    விளக்கம் : இடுப்பு ஆடை நழுவும் போல் தோன்றிய உடனேயே கை விரைந்து சென்று சரிபடுத்திவிடும். அதுபோல நண்பனது துன்பத்தை முகக்குறிப்பிலேயே உணர்ந்து அதை நீக்குவதே உண்மையான நட்பாகும்.

    ஒரு பெரிய ஆலமரப் பொந்தில் ஆணும், பெண்ணுமான இரு காக்கைகள் கூடுகட்டி ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தன. ஒரு நரியிடம் அவை நட்பு கொண்டிருந்தன. நரி அவ்வப்போது நல்ல யோசனைகளைச் சொல்லும்.

    அந்த மரத்தடியில் ஒரு பெரிய பொந்து. அங்கே ஒரு கரு நாகம் குடி புகுந்தது. காகங்கள் இரைதேட வெளியே போயிருக்கும் சமயம் கருநாகம் மரத்தின் மீதேறி காகத்தின் முட்டைகளை உடைத்துக் குடித்தது. பிறகு அதையே வழக்கமாகக் கொண்டது.

    அன்று, நரி தன் நண்பனான காகத்தைக் காண வந்தது.

    நண்பா, ஏன் சோகமாக இருக்கிறாய்? ஒருவாரம் பக்கத்து வனத்துக்கு ஒரு நண்பனைப் பார்க்கச் சென்றிருந்தேன். அதுதான்வர முடியவில்லை. அதனால் என்மேல் கோபமா? என அன்புடன் கேட்டது.

    ஆமாம்...! போடும் முட்டைகளை கருநாகம் குடித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க எங்களுக்கு வழி தெரியவில்லை! இதிலே நீ வரவில்லையே என்றுதான் கவலைப் படுகிறோமாக்கும்! என்று சலிப்புடன் சொன்னது ஆண் காகம்.

    வேறு இடத்துக்கு மாறி விட வேண்டியதுதானே?

    அதெல்லாம் நடக்காத காரியம்! இந்த இடத்தை தேர்ந்தெடுத்து கஷ்டப்பட்டு கூடு கட்டியிருக்கிறோம். அதே போல் மற்ற பறவைகளும் ஒவ்வொரு இடத்தைத் தேர்வு செய்திருக்கும். அங்கு போய் சண்டை போடுவது நியாயமாகாது! எங்களுக்குள் சில வரைமுறைகள் உள்ளன. அவற்றை மீற முடியாது என்றது பெண் காகம்.

    நரி சிறிது நேரம் யோசித்தது.

    பிறகு நான் சொல்கிறபடி செய்தால் உன் துயரம் நீங்கும் என்றது.

    சொல்லு ஆவலாகக் கேட்டது பெட்டை.

    மகாராணியார் தினமும் நீராடும் குளத்திற்குப் போ. அரசி குளிக்கப் போகும்போது நகைகளைக் கழற்றி வைப்பாள். ஏதாவதொரு நகையை காவலர் பார்க்க தூக்கி வந்துவிடு. காவலர் பார்வையிலிருந்து மறையாதே! அம்பு விடும் தூரத்திலும் தங்காதே. கருநாகம் வசிக்கும் பொந்தினுள் காவலர் பார்க்க போட்டுவிடு என்றது.

    என்ன நடக்கும்? என்றது ஆண்காகம். பொறுத்திருந்து பார்; நான் வருகிறேன் என்றது நரி.

    மறுநாள் நரி சொன்னது போல் பதுங்கி இருந்த காகம் அரசியின் நகையைத் தூக்கிக் கொண்டு பறக்க காவலர் கத்தி, ஈட்டி, வேல் கம்புடன் துரத்தினர். காகம், நரி சொன்னபடி பாம்பு வசித்த பொந்துக்குள் ரத்னமாலையைப் போட காவலர் ஈட்டிகளால் பொந்தினுள் தேடினர். பாம்பு சீறிக் கொண்டு படம் எடுக்க அதை வேல்கம்பு, ஈட்டிகளால் கொன்று நகையோடு அரண்மனை திரும்பினர். நகையைக் கண்டு அரசி மகிழ்ந்தாள். நரியின் புத்திசாலித்தனமான யோசனையால் நாகம் மடிந்தது கண்டு காகங்கள் மகிழ்ந்தன. நல்ல நட்பு என்றுமே சேர்த்து வைத்த சொத்துப்போல. அதை என்றும் கைவிடக்கூடாது.

    << << <<

    6. கொள்கை வீரன் கொலம்பஸ்

    நாலடியார் : 194-ஆவது செய்யுள்

    இசையாச தெனினும் இயற்றியோ ராற்றால்
    அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
    கண்டல் திரையலைக்கும் கானலம் தண் சேர்ப்ப
    பெண்டிரும் வாழாரோ மற்று.

    விளக்கம் : எளிதில் செய்ய முடியாத காரியத்தைச் செய்யத் தொடங்கி, விடா முயற்சியோடு காரியம் முடியும் வரை தளர்ச்சியின்றி நிலைத்து நிற்பது ஆண்மைக்கு அடையாளம்.

    திருக்குறள் : 472-ஆவது செய்யுள்

    ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
    செல்வார்க்குச் செல்லாதது இல்.

    விளக்கம் : தனக்குப் பொருத்தமான செயல் எது என்று அறிந்து, அச்செயலில் முழு மூச்சுடன் ஈடுபடுபவருக்கு வெற்றி நிச்சயம்.

    பதினான்காம் நூற்றாண்டு. ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு கப்பல் புறப்பட்டது. புதியன படைக்கவும், புதுமைகள் காணவும் துடிப்பான இருபது இளைஞர்கள் அக்கப்பலில் இருந்தனர். தலைவன் பெயர் கொலம்பஸ். வேண்டிய உணவும் தண்ணீரும் கப்பலில் சேகரித்துக் கொண்டனர். அவற்றை வழங்கும் பொறுப்பு, மாலுமிகளில் ஒருவரான ரோனால்ட்டுக்கு வழங்கப்பட்டது.

    எதையாவது சாதித்து சரித்திரத்தில் பெயர் பொறிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட மாலுமிகள் அனைவரும் பல நாட்கள் கூடிப்பேசி முடிவெடுத்துப் புறப்பட்டனர்.

    இருபத்து நான்கு நாட்கள் சென்றன. முதலில் உற்சாகமாய் பேசிச் சிரித்து கும்மாளமிட்ட அவர்கள், ஒவ்வொருவராய் சோர்ந்து போக ஆரம்பித்தார்கள்.

    எங்கே பார்த்தாலும் கடல்... நிலப்பகுதியையே காண முடியவில்லை... சமுத்திரத்தில் திமிங்கலங்களுக்கு இரையாகப் போகிறோம் என்றான் ஒருவன்.

    ‘என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை’ என்றான் இன்னொருவன்.

    என் தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் பேசியிருக்கிறேன். நான் உங்களோடு வந்தது எத்தனை மடத்தனம் என்பது இப்போது தான் புரிகிறது என்றான் வேறொருவன்.

    எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. பிறந்த உடனேயே தகப்பனை முழுங்கி விட்டவன் என்ற அவச்சொல்லை அடையப்போகிறது என்றான் இன்னொருவன்.

    "திடீரென்று புயல்

    Enjoying the preview?
    Page 1 of 1