Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aathara Sruthi
Aathara Sruthi
Aathara Sruthi
Ebook455 pages2 hours

Aathara Sruthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம்முடைய பண்பாடும் - நாகரிகமும் கலப்படம் அடையாமல் தூய்மையாக இருந்த காலம் அது. நாகரிகத்தினால் மாசுபடாதிருந்த மனங்கள். கணவன் - மனைவி - குழந்தைகள்- பெற்றோர் - குடும்ப வாழ்க்கை ஆகியவை பூச்சி அரிக்கப்படாமல் பொலிவோடு துலங்கிய காலத்தைத் தம் நாவலில் கையாண்டிருக்கிறார் ஆசிரியர் ரஸவாதி.
அந்தக் காலத்து திருச்சியிலும், அடுத்துள்ள துறையூரிலும் தொலைவிலிருந்த சென்னையிலும் தன் கதாபாத்திரங்களை உலவவிட்டிருக்கிறார். - உதவும் கரமாக விளங்கும் ஒரு வக்கீலும், ஊர் நன்மைக்காகப் பாடுபடும் ஒரு டாக்டரும், சலன புத்தியுடைய சென்னை சபா காரியதரிசியும், உற்ற தோழிகளாக பாகீரதியும் சுலோசனாவும் - ‘தன் பெண் இப்படி இருக்கிறாளே’ - என்று கவலைப்பட்டே மாய்ந்து போகும் அந்தக் காலத்து மனுஷியாக கதாநாயகியின் தாயும், மகளிடம் அசைக்க முடியாத நம்பிக்கையும் பாசமும் கொண்ட தந்தை சபேசையரும், உடன் பிறந்த தம்பி பாலுவும், தங்கை தங்கமும் ஒளிவீசும் கற்களாக இந்த நாவலில் உலவவிடப்பட்டிருக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டமான வார்த்தை ஜாலங்களோ, அதீதமான கற்பனைகளோ, வரம்பு மீறிய வர்ணனைகளோ இல்லாது. எதார்த்தமான சம்பவங்களைக் கொண்ட எளிமையான ஒரு நாவலை - குடும்பப்பாங்கான நாவலை, சம்பவங்கள் - எண்ணங்கள் - மனப் போராட்டங்கள் - சூழ்நிலைகளைக் கொண்டு தொய்வில்லாமல் பின்னி இருக்கிறார் நாவலாசிரியர்.
ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் ஒரு மத்தியதரக் குடும்பத்தின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆதார ஸ்ருதி அதற்கு வழிவகுக்கும். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின் பாகீரதி, தன் கணவனின் நடத்தைக்கு ஒத்துப்போக முடியாமல், முரண்பட்டு வெளியேறி, துணிவோடு தனித்து நின்று, வாழ்க்கை வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டுக் கரையேறும் பாங்கு, உங்களை மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ரஸவாதியின் ரசமான இந்த நாவலை, ஸ்ருதி சுத்தமான இந்த ஆதார ஸ்ருதியை உங்களுக்கு அளிப்பதில் பெருமைப்படுகிறோம்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580129306368
Aathara Sruthi

Read more from Rasavadhi

Related to Aathara Sruthi

Related ebooks

Reviews for Aathara Sruthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aathara Sruthi - Rasavadhi

    https://www.pustaka.co.in

    ஆதார ஸ்ருதி

    Aathara Sruthi

    Author:

    ரஸவாதி

    Rasavadhi

    For more books

    https://pustaka.co.in/home/author/rasavadhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    முன்னுரை

    நம்முடைய பண்பாடும் - நாகரிகமும் கலப்படம் அடையாமல் தூய்மையாக இருந்த காலம் அது. நாகரிகத்தினால் மாசுபடாதிருந்த மனங்கள். கணவன் - மனைவி - குழந்தைகள்- பெற்றோர் - குடும்ப வாழ்க்கை ஆகியவை பூச்சி அரிக்கப்படாமல் பொலிவோடு துலங்கிய காலத்தைத் தம் நாவலில் கையாண்டிருக்கிறார் ஆசிரியர் ரஸவாதி.

    அந்தக் காலத்து திருச்சியிலும், அடுத்துள்ள துறையூரிலும் தொலைவிலிருந்த சென்னையிலும் தன் கதாபாத்திரங்களை உலவவிட்டிருக்கிறார். - உதவும் கரமாக விளங்கும் ஒரு வக்கீலும், ஊர் நன்மைக்காகப் பாடுபடும் ஒரு டாக்டரும், சலன புத்தியுடைய சென்னை சபா காரியதரிசியும், உற்ற தோழிகளாக பாகீரதியும் சுலோசனாவும் - ‘தன் பெண் இப்படி இருக்கிறாளே’ - என்று கவலைப்பட்டே மாய்ந்து போகும் அந்தக் காலத்து மனுஷியாக கதாநாயகியின் தாயும், மகளிடம் அசைக்க முடியாத நம்பிக்கையும் பாசமும் கொண்ட தந்தை சபேசையரும், உடன் பிறந்த தம்பி பாலுவும், தங்கை தங்கமும் ஒளிவீசும் கற்களாக இந்த நாவலில் உலவவிடப்பட்டிருக்கிறார்கள்.

    ஆர்ப்பாட்டமான வார்த்தை ஜாலங்களோ, அதீதமான கற்பனைகளோ, வரம்பு மீறிய வர்ணனைகளோ இல்லாது. எதார்த்தமான சம்பவங்களைக் கொண்ட எளிமையான ஒரு நாவலை - குடும்பப்பாங்கான நாவலை, சம்பவங்கள் - எண்ணங்கள் - மனப் போராட்டங்கள் - சூழ்நிலைகளைக் கொண்டு தொய்வில்லாமல் பின்னி இருக்கிறார் நாவலாசிரியர்.

    ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் ஒரு மத்தியதரக் குடும்பத்தின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆதார ஸ்ருதி அதற்கு வழிவகுக்கும். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின் பாகீரதி, தன் கணவனின் நடத்தைக்கு ஒத்துப்போக முடியாமல், முரண்பட்டு வெளியேறி, துணிவோடு தனித்து நின்று, வாழ்க்கை வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டுக் கரையேறும் பாங்கு, உங்களை மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    ரஸவாதியின் ரசமான இந்த நாவலை, ஸ்ருதி சுத்தமான இந்த ஆதார ஸ்ருதியை உங்களுக்கு அளிப்பதில் பெருமைப்படுகிறோம்.

    1

    ரெயில் கிளம்பியது ஒரு வழியாக. ஸ்டேஷனுக்கு ஒரு வேளை அவர் வரலாம் என்ற நப்பாசை வீண்தான். பிளாட்பாரத்தில் இருந்த ஜனக்கும்பல் எதிர்த்திசையில் நகர்ந்தது. வண்டி தான் நகர்கிறது. தண்ணீர்க்குழாய், புத்தக ஸ்டால், சிற்றுண்டிச் சாலை எல்லாம் ஒவ்வொன்றாக விடை பெற்றுக்கொண்டு பின் தங்கின. ரெயில் வேகத்துடன் செல்ல ஆரம்பித்து விட்டது. பாகீரதியின் மனம் சற்றுக் கலங்கியது.

    வெளியே இருள். தூரத்தில் அங்கும் இங்கும் இருந்த மின்சார விளக்குகள் மின்னி மறைந்து கொண்டிருந்தன. ஆயிற்று; இதோ வைகைப் பாலம் வரப்போகிறது.

    பாகீரதி தலையை உள்ளுக்கு இழுத்துக் கொண்டாள். கிட்டுவும் சந்துருவும் ஜன்னலருகே நின்றபடி அந்த இருட்டிலும் எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கைகுழந்தை சச்சு அருகே நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

    வண்டியினுள் அவள் பார்வை சென்றது. விதவிதமான பிரயாணிகள், விதம் விதமான நிலையில் இருந்தனர். எல்லோருக்கும் ஏதோ நோக்கம் இருக்கத்தான் இருந்தது. அந்தப் பிரயாணத்தில். ஆனால் அவளுக்கு நேர்ந்திருப்பதைப் போன்ற அவசியம் இவர்களுக்கும் ஏற்பட்டிருக்குமா?

    குழந்தையைக் கவனி, அம்மா! புரளுகிறது; விழுந்து விடப் போகிறது. சரியாகப் படுக்க வை.

    பாகீரதி திரும்பினாள். பக்கத்தில் இருந்த கிழவிதான் பேசியிருக்கிறாள். அவளும் எவ்வளவோ நேரமாக இவளையே பார்த்தபடி இருந்தாள். பேச்சுக் கொடுக்க வேண்டும் என்ற துடிப்பு அவள் முகத்தில் இருந்ததை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு தான் பாகீரதி அவள் பக்கம் இதுவரையில் பார்க்கவே இல்லை. கிழவர் அருகே தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார்.

    குழந்தையைச் சரியாகப் படுக்க வைத்துவிட்டுத் துணியை இழுத்துப் போர்த்தினாள். காற்றுச் சிலுசிலுவென்று அடித்தது.

    எவ்வளவு தூரம் போகிறாய், அம்மா?

    அதிருப்தியுடன் முகத்தைச் சுளித்துக்கொண்டாள் பாகீரதி. ‘பேசித்தான் ஆகவேண்டும் போல் இருக்கிறது. இல்லாவிட்டால் ராங்கிக்காரி என்கிற நினைப்பு இந்தக் கிழவிக்கு ஏற்பட்டுவிடும்.’

    திருச்சி வரைக்குந்தான்.

    பிறந்தகத்துக்குப் போகிறாயாக்கும்?

    ஆமாம்

    ஒருத்தரும் ஏற்றி விடக்கூட வரவில்லைபோல் இருக்கிறதே! அவருக்கு ஜோலி ரொம்ப ஜாஸ்தியோ?

    தோன்றிய எரிச்சலைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு வெறுப்பும் அசுவாரசியமும் கலந்த குரலில் ‘சூள்’ கொட்டினாள் பாகீரதி.

    ஒன்றியாகப் போகிறாயே என்று கேட்டேன். துணைக்காவது யாரையேனும் அனுப்பக் கூடாதோ புருஷர்கள்?

    பாகீரதிக்கு இப்போது கோபமே வந்துவிட்டது. ‘யார் எப்படிப் போனால் இவளுக்கு என்ன? வயசானாலே இப்படித்தான் நச்சரிக்கத் தோன்றும் போல் இருக்கிறது!’ மனம் இருந்த நிலையில் கிழவியின் கேள்விகள் அவளுக்கு ஆத்திரத்தையே உண்டாக்கின, ‘சம்பாஷணையைத் தொடரத்தான் அவள் அஸ்திவாரம் போடுகிறாள். போகட்டும், துக்கத்திலேயே அலைந்து கொண்டிருக்காமல் சிறிது நேரம் கிழவியிடந்தான் பேசித் தொலைப்போம். கொஞ்ச நேரத்துக்காவது எல்லாவற்றையும் மறந்து மனம் சற்று நிம்மதியாக இருக்கட்டும்.’

    என்ன கேட்டீர்கள், பாட்டி?

    குஞ்சு குழந்தைகளோடு இப்படிப் புருஷத்துணையே இல்லாமல் வருகிறாயே என்று தான் கேட்டேன். ஏதாவது அவசரக் காரியமோ?

    ‘ஆமாம்.’ வார்த்தை அவளையும் அறியாமல் பாகீரதியிடமிருந்து வந்துவிட்டது.

    அதுதானே கேட்டேன்? இல்லாவிட்டால் இந்த மாதிரி தனியாக அனுப்ப நம் மனிதர்களுக்குத் தோன்றாதே!

    ‘கிழவியுடன் பேச்சைத் தொடர வேண்டுமானால் இனிமேல் கோவையாகப் புளுகித்தான் ஆகவேண்டும். அதில் என்ன குறைந்துவிடப் போகிறது? மனத்தில் இருக்கும் வேதனை முகத்திலும் பேச்சிலும் பிரதிபலிக்காமல், கூடியவரையில் சாமர்த்தியமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வளவு தான்.’

    கிழவி எவ்வளவு கேள்விகள் கேட்டாலும் பதில் சொல்லத் தன்னைத் தயார் செய்து கொள்பவள் போல அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். காற்றினால் நெற்றியில் புரண்டு அலைந்த மயிர்க் கற்றைகளை அலட்சியமாக இடக் கை விரல்களால் ஒதுக்கி விட்டுக் கொண்டாள்.

    என்ன விசேஷமோ?

    எங்கள் அண்ணாவுக்குக் கல்யாணம். நாளைக்குச் சுமங்கலிப் பிரார்த்தனை. திடீரென்று எல்லாம் நிச்சயமாச்சு.

    ஓஹோ! அப்போ சரி. கல்யாணத்துக்காவது அவர் வருவாரோ இல்லையோ?

    யார் கண்டார்கள்? அநேகமாக வர மாட்டார். லீவு கிடைக்கிறது ரொம்ப சிரமமாம்.

    அப்படி ஓர் உத்தியோகமா? எதிலே வேலை அவருக்கு?

    கம்பெனியிலேதான். இந்தச் சமயத்தில் வருஷம் பூரா வேலை ரொம்ப அதிகம் இருக்கும்.

    புருஷனைப்பற்றிப் பேச்சு இறங்கியதும் பாகீரதி சற்றுத் தயங்கத்தான் வேண்டியிருந்தது. ‘நாம் மறக்க விரும்பும் நினைவுகளை இந்தக் கிழவி ஏன் கிளறுகிறாள்?’ தன்னை மீறி வந்த பெருமூச்சை அவள் பலவந்தமாக அடக்கிக் கொண்டாள்.

    இது எத்தனை மணிக்குப் போகிறது திருச்சிக்கு?

    பாகீரதிக்குத் துணுக்கென்றது. தன் மனத்தின் வேதனையை எப்படியோ உணர்ந்து கொண்டு சாமர்த்தியமாகப் பாட்டி பேச்சைத் திருப்புவதாகத் தோன்றியது அவளுக்கு. ‘அவ்வளவு தூரத்துக்கு நம்மை நாமே காட்டிக் கொடுத்துக்கொண்டு விட்டோமோ? இந்தப் பாட்டி கூட மூங்கையாகப் புரிந்து கொள்ளும்படி. ஆரம்பமுதற்கொண்டு ஒரு மாதிரியாகப் பேசி, நடந்து கொண்டது தப்புத்தான். ஆனால் தவிக்கும் இந்த மனத்தை அடக்கிச் சாதாரணமாக இருப்பது போல வேஷம் போடுவது சிரமமாக இருக்கிறது.’

    விடிகாலையில் நாலு மணிக்குப் போக வேண்டும். ஞாபகப்படுத்திக்கொண்டு பதில் சொல்வதுபோல் இருந்தது பாகீரதி பேசிய தோரணை.

    யாராவது மனிதர்கள் வருவார்களா?

    ஓ! கண்டிப்பாக வருவார்கள் இன்னொரு புளுகு! ‘நாம் கிளம்பி வருவது நம் பிறந்தகத்தில் யாருக்குத் தெரியும்?’

    பாட்டியின் முகத்தை நேரே ஒருமுறை பார்த்தாள் பாகீரதி. நிச்சலனமாக இருந்தது அது. நெற்றியில் சுருக்கங்களுக்கு இடையே அழுத்தமான பட்டுக் குங்குமம். முக்கால்வாசி நரைத்த தலையில் வகிட்டின் ஆரம்பம் வருஷக் கணக்காகக் குங்குமம்பட்டுச் சிவந்தே இருந்தது. அந்த முகத்திலிருந்து பாட்டி ஏதாவது சந்தேகப்படுகிறாளா இல்லையா என்று புரிந்து கொள்வது பாகீரதிக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

    கைக்குழந்தைக்கு என்ன மாசமோ?

    இந்த ஆடிக்கு ஆறு முடிந்து ஏழாவது மாசம்.

    பெண்ணோ?

    ஆமாம்.

    அது தான் கேட்டேன். பெண் குழந்தைகளுக்குத் தான் சிறிசிலேயே முகத்தில் நல்ல களை இருக்கும். பார்த்தாலே தெரிகிறது.

    பாகீரதிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. உதடுகள் நெகிழ்ந்து முத்துப்போன்ற பல்வரிசை சற்றே தெரிந்தன. ஜன்னலருகே நின்று கொண்டிருந்த தன் பையன்களின் பக்கம் ஒரு கணம் அவள் பார்வை போயிற்று.

    அப்படியா சொல்கிறீர்கள்?

    ஆமாம். பெண் குழந்தைக்குத்தான் சாதாரணமாக இவ்வளவு லட்சணம் இருக்கும். அடக்கமான சுபாவத்துக்கு உண்டான களையும் இருக்கும். நாலைந்து மாசத்திலேயே தெரிந்துவிடுமே! புருஷக் குழந்தையானால்... சமர்த்தாக இருந்தால் விஷமக்களை கூத்தாடும் முகத்திலே, இல்லாவிட்டால் மந்து மாதிரி, பிசைந்து வைத்த மாவு மாதிரி, அப்படியே அமுங்கி உட்கார்ந்திருக்கும்.

    ஏன் பாட்டி, பெண் குழந்தைகளிலேயும் நீங்கள் சொல்கிற மாதிரி மந்து இருக்காதா?

    இருக்கும். இருந்தாலும் முகத்தைப் பார்த்தே ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விடலாம். நாற்பது வருஷத்திலே நான் தெரிந்து கொண்டதடியம்மா இது!

    பேச்சுச் சுவாரசியத்தில் பாட்டி சுவாதீனத்துடன் ‘டீ’ போட்டுவிட்டாள். பாகீரதி அதைப் பொருட்படுத்தவில்லை. ‘போகட்டும், வயசானவள் தானே?’

    என்ன பேர் வைத்திருக்கிறாய் குழந்தைக்கு?

    சரஸ்வதி என்று.

    திவ்யமாக இருக்கிறது. பேருக்குத் தகுந்தாற்போலப் படிப்பிலேயும் மற்றதிலேயும் சூடிகையாக இருந்து ஆயுசோடே நன்றாக இருக்க வேணும்!

    பெருமை பூரிக்கத் தன் குழந்தையை ஒருமுறை பாகீரதி பார்த்தாள். அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அந்தக் குழந்தை எதற்கோ சிரித்தது. குனிந்து ஆசையுடன் அதற்கு ஒரு முத்தம் கொடுத்தாள்... வண்டியில் இருப்பவர்களை ஒரு கணம் மறந்தவளாக. அலாதியான பெருமிதம் அவள் முகத்தில் தவழ்ந்தது.

    கிழவி இதையெல்லாம் பார்த்து ரசித்துத் திருப்திப்பட்டுக் கொண்டாள். அவளும் சம்சாரிதான் போல் இருக்கிறது. நிறையப் பெற்று வளர்த்து அனுபவம் இருந்திருக்க வேண்டும்.

    நீ படித்திருக்கிறாயோ?

    ம். பத்தாவது பாஸ் பண்ணியிருக்கிறேன்.

    மெட்ரிகுலேஷனா

    ஆமாம்.

    ஆச்சரியமாக இருக்கிறதே! இருந்தாலும் சிலபேர் மாதிரி இல்லாமல் அடக்கமாக இருக்கிறாயே! தேவலை.

    இதற்குப் பதில் சொல்ல வேண்டியது அவசியந்தானா என்று பாகீரதிக்குத் தோன்றிற்று.

    அம்மா, அம்மா! இதோ பார், ஒரு ஸ்டேஷன் வந்து விட்டது!

    போதுமடா. வாருங்கள் இங்கே. தூக்கம் வரவில்லையா உங்களுக்கு?

    இன்னும் சற்று நேரம், அம்மா! என்று கெஞ்சினான் கிட்டு.

    இந்த இருட்டிலே என்ன தான் வேடிக்கை வைத்திருக்கிறதோ உங்களுக்கு?

    குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும்.

    இருந்தாலும் இவை இரண்டும் ரொம்பப் பிடிவாதம்; சொன்னதையே கேட்காதுகள்.

    வயசு வந்தால் தானே எல்லாம் சரியாகப் போய்விடும், பாரேன். ஏண்டா அம்பி. உன் பேர் என்ன?

    சந்துரு என்று சொல்லிவிட்டுச் சின்னவன் மறுபடியும் ஜன்னல் பக்கம் திரும்பிவிட்டான்.

    உன் பேர்?

    கிட்டு, ‘இவளுக்கு நாம் பதில் சொல்வதாவது!’ என்பதுபோல ஒரு முறை பார்த்துவிட்டுப் பெயரை முனகினான்.

    கெட்டிக்காரனாக இருப்பாய் போல இருக்கிறதே! எந்த வகுப்புப் படிக்கிறாய்?

    அவன் இனியும் பதில் சொல்லத் தயாராக இல்லை. காது கேட்காதவன் போல வெளியே தன் கவனத்தை ஈடுபடுத்தி இருந்தான். பாகீரதிதான் பதில் சொன்னாள்.

    மூன்றாவது படிக்கிறான்.

    சின்னவன்?

    அவனை இப்போதுதான் பள்ளிக்கூடத்திலேயே போட்டிருக்கிறது. ஏதோ போய் வந்து கொண்டு இருக்கிறான்.

    கிழவி பையன்களை ஏறிட்டு இன்னொரு முறை பார்த்தாள்.

    அப்படியே உன் ஜாடைதான் சின்னவனுக்கு,

    பாகீரதி சந்துருவை நோக்கினாள். அந்தச் சின்னக் காது, எடுப்பான மூக்கு, சிவப்பு நிறம் எல்லாம் அவள் தான். பிறந்ததுமே பார்த்தவர்கள் எல்லாரும் அப்படித் தான் சொன்னார்கள்.

    மூத்தவனுக்கு அவர் ஜாடையாக இருக்குமோ?

    ஆமாம் என்றாள் பாகீரதி அசிரத்தையாக. மறுபடியும் சம்பாஷணை அவரிடம் வந்து முடிவது அவளுக்கு அலுப்பாக இருந்தது. பாட்டி வேண்டுமென்றே அவளை வதைப்பது போல் இருந்தது. அவள் ஊகம் உண்மைதான். கிட்டு அப்படியே அவரைத்தான் உரித்து வைத்தாற்போல் இருக்கிறான். அகன்ற அந்தக் கண்களும், விசாலமான நெற்றியும், கொஞ்சம் சப்பையான மூக்குமாக அவரைத் தான் கொண்டு பிறந்திருக்கிறான்.

    சுந்தரத்தின் நினைவு வந்து சூழ்ந்து கொண்டு விட்டது அவளை. அடங்கிக் கிடந்த மனம் புகைந்து கிளம்பியது. குமுறல் தாங்காமல் தானும் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.

    அம்மா! என்று கண்ணைக் கசக்கிக்கொண்டே சந்துரு கத்தினான் திடீரென்று.

    என்னடா? பாகீரதி திரும்பினாள்.

    கண் எரிகிறதம்மா! அழுகை ஆரம்பித்துவிட்டது.

    கரி விழுந்துவிட்டது போல் இருக்கிறது. புடைவைத் தலைப்பாலே ஒத்து.

    மகனை அருகே இழுத்து மடியில் சார்த்திக்கொண்டாள் பாகீரதி.

    இதற்குத்தான் அப்பொழுதே சொன்னேன், ஜன்னலண்டை நிற்காதே என்று. கேட்டாயா? இப்போது பார்!

    சற்று நேரத்தில் அவன் கண் சரியாகப் போய்விட்டது. கண்களை மலர மலர விழித்துத் தாயைப் பார்த்தான்.

    பேசாமல் இப்படியே மடியில் படுத்துக்கொள்.

    கிட்டு மாத்திரம் அங்கேயே நிற்கிறானே?

    அவன் அசடு, கொஞ்ச நேரமானால் அவன் கண்ணிலேயும் கரி விழும். வந்துவிடுவான். பார்!

    போ அம்மா! கிட்டு அழகு காட்டினான்; நான் ஒன்றும் அசடு இல்லை.

    பின்னே இங்கே வா, இந்தத் துணியிலே படுங்கள் இரண்டு பேரும்,

    கிட்டுவுக்கு இஷ்டமே இல்லை.

    மாட்டேன்!

    அப்படியானால் அடுத்த ஸ்டேஷனில் நாங்கள் எல்லாரும் இறங்கி விடுகிறோம். நீ மாத்திரம் நின்று கொண்டே வண்டியிலே போ! அவனை மடக்க அது ஒன்று தான் வழி.

    என்ன அம்மா இது? இந்தச் சந்துருவாலே எப்போதுமே இப்படித்தான்! முணு முணுத்துக்கொண்டே ஜன்னலை விட்டு அவன் வந்தான்.

    கீழே பெட்ஷீட்டைப் போடுகிறேன். இரண்டு பேருமாகப் படுத்துத் தூங்குங்கள்.

    ஒன்றும் வேண்டாம். கீழேயே படுத்துக்கொள்கிறேன் போ.

    என்ன பிடிவாதமோ? என்று அலுத்துக் கொண்டாள் பாகீரதி.

    வண்டியின் ஆட்டத்தில் படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் குழந்தைகள் தூங்கிவிட்டன, அவளுக்குத் தான் தூக்கமே வரவில்லை. ‘கிழவிக்கும் தூக்கம் வரவில்லை என்று தான் தோன்றுகிறது. இவளுடன் பொழுது போக்காகச் சத்று நேரம் ஏதாவது பேசி நம்மை மறந்திருக்கலாமென்றால் கடைசியில் பேச்சு அவரிடத்தில் தானே வந்து முடிகிறது. சங்கடமான நிலைமைதான்!’

    ஜன்னலுக்கு வெளியே முகத்தை நீட்டினாள். காற்றுக் சிலுசிலுவென்று இதமாக அடித்தது. அப்படியே கண்களை மூடினாள்.

    தூக்கம் வந்தால் நீ வேண்டுமானால் சற்றுப் படுத்துக் கொள்ளேன். நான் நகர்ந்து கொள்கிறேன்.

    வேண்டாம், பாட்டி, உங்களுக்கு ஏதுக்குச் சிரமம்? எனக்குத் தூக்கம் வரவில்லை. உட்கார்ந்து கொண்டே இருந்துவிடுவேன்.

    உன் கண்ணானால் எப்போது மூடுவோம் என்கிறது; நீயானால் இப்படிச் சொல்கிறாயே. நான் அவரை எழுப்புகிறேன். நீ சரியாகச் சாய்ந்துகொள்.

    பாகீரதியின் மறுதளிப்பைக் கவனிக்காதவளாகப் பாட்டி கிழவரை எழுப்பினாள். மதுரையில் வண்டி கிளம்பியதும் தூங்க ஆரம்பித்தவர் அவர். இப்போது எழுப்பியதும் சட்டென்று விழித்துக்கொண்டு, என்ன, என்ன? என்றார், சுற்றுமுற்றும் பார்த்தபடி ஒன்றும் புரியாதவராக.

    கொஞ்சம் எழுந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். தூங்கினது போதும். நான் கொஞ்சம் உடம்பைக் கீழே போடுகிறேன். அந்தப் பெண்ணும் சற்றுத் தூங்கட்டும்.

    கிழவர் அங்கங்களை ஆமைபோலக் குறுக்கிக்கொண்டு உட்கார்ந்தார். பாட்டி சௌகரியமாகப் படுத்துவிட்டாள், கிடைத்த இடத்தில்.

    நீ படுத்துக்கொள்ளவில்லையா?

    கொஞ்சம் போகட்டும், பாட்டி. தூக்கம் வந்ததும் நானே படுத்துக்கொண்டு விடுவேன் என்று சிரித்தாள் பாகீரதி. பாட்டியின் பரிவு அவளுக்கு வேடிக்கையாகத் தான் இருந்தது.

    சரி! உன் இஷ்டம் போலச் செய்!

    பாகீரதி இப்போது சற்றுச் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டாள். சச்சுவைச் சரியாகப் படுக்க வைத்தாள். நிமிர்ந்தபோது தூக்கம் இன்னும் சரியாகத் தெளியாத கண்களுடன் கிழவர் அவளையே மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மனைவியின் கட்டளையைச் சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டிய கடமை இருந்ததால், தூக்கம் வராமல் இருக்க மடியிலிருந்து பட்டையை எடுத்துச் சர்ரென்று பொடியை உறிஞ்சித் தம்மை நிதானப் படுத்திக் கொண்டார். பணத்தைத் திருட்டுப் போகாமல் பாதுகாக்க விரும்பும் லோபியைப்போல இருந்தது அவருடைய நிலை.

    அருகில் இருந்த யாரையோ மணி கேட்டார். ஒன்று!

    ‘நமக்கு ஏன் தூக்கமே வரவில்லை?’ என்று பாகீரதி சலித்துக்கொண்டாள். ‘சாதாரணமாக வீட்டில் இருந்தால் இவ்வளவு நேரம்...’

    ‘இவ்வளவு நேரம் தூங்கியா இருப்போம்? ஆரம்ப வருஷங்களில் என்னவோ இது உண்மைதான். எட்டு மணிக்கெல்லாம் சாப்பாடு ஆகிவிடும். ஒன்பதாவது மணிக்குப் படுக்கை. பேசிக் கொள்ள அப்போதெல்லாம் நிறையப் பொழுது இருந்தது. எவ்வளவோ நாட்கள் நிம்மதியாகப் பாடி இருக்கிறோம். அவர்கூடச் சேர்ந்து பாடுவாரே! அப்போதெல்லாம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது! பலகையின் மேல் இருந்த தன் பிடில் பெட்டியின் மீது அவள் பார்வை ஒரு கணம் சென்றது. ‘திடீரென்று அவர் இப்படி மாறிப் போயிருக்க வேண்டாம். கிட்டத்தட்ட இந்தச் சச்சுவை உண்டானதிலிருந்தே அவர் சரியாக இல்லை.’

    ‘எவ்வளவோ ஆசையாகத்தான் இருந்தார். பிடிவாதமும் முரட்டுக் குணமும் மாத்திரம் அதிகம். இந்தக் கிட்டுவுக்கும் அப்படியே வந்திருக்கிறது அது. குழந்தையாக இருப்பதால் அவன் கட்டுப்படுகிறான். பெரியவனானால் ஒரு வேளை அவனும் அப்பாவைப் போல ஆகி விடுவானோ என்னவோ?’

    ‘கிட்டத்தட்ட நாலைந்து மாசம் போல ஆகிவிட்டது அவர் சரியாகப் பேசிப் பழகியே. என்றைக்கு அந்தச் சனியனுடன் சிநேகம் பிடித்தாரோ - அன்றையிலிருந்து அனர்த்தந்தான். பன்னிரண்டு மணிபோலத்தான் வீட்டுக்கு வருவார். சில நாளைக்கு அதுவும் இல்லை. நமக்கு மட்டும் ரோசம், கோபம் இல்லையா? அதைக் கேட்டதற்குத் தான் இப்படி ஆகிவிட்டது! சீசீ! என்ன பிழைப்பு!’

    பாகீரதி அலுத்துக்கொண்டாள். ‘எதை மறந்து விடவேண்டும் என்று முயற்சி செய்கிறோமோ அதுவே தான் திரும்பத் திரும்ப வந்து மனத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஏன்? நம்மால் வேறு எதைப்பற்றியுமே இந்த மனநிலையில் சிந்திக்க முடியாதா?’

    கண்களில் துளித்திருந்த நீரை அவள் கைவிரல்கள் ஒருவரும் அறியாதவாறு வெகு நாசுக்காகச் சுண்டி எறிந்தன.

    ‘இப்போது கணவனுடைய வீட்டில் இல்லை நாம். பிறந்த வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறோம். ரெயிலில் இருக்கிறோம். மனத்தை இம்மாதிரியெல்லாம் சிதறவிடக் கூடாது’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு தீர்மானத்துக்கு வந்தாள்.

    வண்டிக்குள் நித்திராதேவியின் ஆட்சி பரிபூரணமாக இருந்தது. அவளைத் தவிர மற்றவர்கள் அநேகமாகத் தூக்கத்தில் ஆடி விழுந்து கொண்டிருந்தார்கள். கிழவி குறட்டை விட்டுக்கொண்டிருந்தாள். மூன்றாவது பெஞ்சியில், புதிதாகக் கல்யாணமானவர்கள் போல் இருக்கிறது; அவன் தோளில் சாய்ந்தபடி அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். கிழவர் பொடியின் பலன் உடலில் இருக்கும் வரை விழித்திருப்பார். பிறகு சாமியாடுவது போல ஆடுவார். மறுபடியும் இன்னொரு சிமிட்டாப் பொடி. நிலைமையைச் சமாளிக்க. தமாஷாகத்தான் இருந்தது பார்ப்பதற்கு. ஒரு மூலையில் ஒருவர் மேல் ஒருவர் காலைப் போட்டபடி தாறுமாறாக இரண்டு மூன்று குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதவோரமாக, அதைத் திறக்க முடியாத வகையில், கண்டான் முண்டான் சாமான்களைக் கீழே பரப்பி வைத்துக் கால் வைக்கக்கூட இடம் இல்லாமல் அதன் மீது உடலைப் பல கோணல்களாக வளைத்துப் பள்ளி கொண்டிருந்தான் மீசைக்காரன் ஒருவன்.

    ‘நமக்கு மட்டும் ஏன் தூக்கம் வரமாட்டேன் என்கிறது? மனத்தின் குமுறல் ஓய்ந்தால் தான் தூங்க முடியும்போல் இருக்கிறது. தூங்கினால் தானே மனம் நிம்மதியடையும் என்று தோன்றுகிறது? எது முன்னால்?’

    கண் எரிந்தது. வெளியே அடித்த காற்றின் சிலு சிலுப்பு, கண்ணில் பனிக்கட்டியை வைத்தது போலக் குளுகுளுவென்று இருந்தது. ‘கண்களை மூடியபடி இப்படியே இருந்துவிடலாமா? உடலோடு உடல் உராய்ந்து கொண்டு தூங்கும் தம்பதிகள்! இப்படி இருக்கும் புருஷர்கள் தாம் பின்னால்...!’

    ‘சை! என்ன பைத்தியக்கார யோசனை? சற்று நேரங்கூட அமைதியில்லாமல் கூண்டுக்கரடி மாதிரி மனம் இப்படி அலைய வேண்டாம்.’

    கண்களை இறுக மூடி வெளிக்காற்று இன்னும் நன்றாக முகத்தில் படும்படி ஜன்னலருகே நெருங்கி உட்கார்ந்தாள் பாகீரதி. அயர்ச்சி சிறிது நேரத்தில் அவளை ஆட்கொண்டது. அப்படியே தன்னையும் அறியாமல் தூங்கிப் போனாள்.

    2

    யாரோ தட்டி எழுப்பியதைப் போலத் திடுக்கிட்டு விழித்தாள் பாகீரதி, மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.

    ‘இது எந்த ஊர்? எவ்வளவு நேரம் தூங்கினோம்? தூங்கவே முடியாதோ என்று கூட நினைத்தோம். ஆனால் வெகுநேரம் தூங்கியிருப்போம்போல் அல்லவா தோன்றுகிறது!’

    ‘தூக்கமாவது தூக்கம்! சொப்பனம் வேறல்லவா கண்டோம்?’ அதை நினைத்தபோது அவள் உடல் நடுங்கிற்று.

    ரேக்ளாவைப்போன்ற பெரிய கூண்டு இல்லாத வண்டி வாசலில் நிற்கிறது. கண்ணீரும் கம்பலையுமாக அதில் அவள் ஏறுகிறாள். குழந்தைகளையும் ஒவ்வொன்றாக வண்டியில் தள்ளிவிட்டு எல்லாரையும் கயிற்றால் கட்டுகிறான் கணவன் சுந்தரம். ரேஸ் குதிரைபோலக் கம்பீரமாக உயரமாக ஒரு குதிரை அதில் பூட்டியிருக்கிறது. கடிவாளம், முகத்துப் பட்டை ஒன்றுமே இல்லை அதற்கு. வண்டியை ஓட்டக்கூட ஆள் இல்லை. எப்போது கிளம்புவோம் என்று துடிதுடித்துக் கொண்டு நிற்கிறது அது. அந்தப் பெரிய குதிரையைப் பார்க்கும்போதே அவளுக்குக் குலை நடுங்குகிறது. திடீரென்று சவுக்கை எடுத்து ஒரு சொடுக்குச் சொடுக்குகிறான் சுந்தரம், வலி தாங்காத குதிரை, ரோசத்தில் பிய்த்துக் கொண்டு கிளம்புகிறது. பறக்கிறது வாயு வேகத்தில். கண்மண் தெரியாமல் காடு மேடெல்லாம் பாய்ந்து போகிறது. குழந்தைகளை இறுக அணைத்தபடி திகிலுடன் அவள் உட்கார்ந்திருக்கிறாள். எங்கே போகிறது. வண்டி? எதற்காக இந்த வேகம்? முடிவில்லாத ஒரு பிரயாணம் போல ஒரு பிரமை அவளுக்கு உண்டாகிறது. எதை நோக்கி இப்படி ராட்சச வேகத்துடன் பறக்கிறது இந்தக் குதிரை? அதன் லட்சியந்தான் என்ன? எங்காவது படுகுழியில் கொண்டு தள்ளிவிடப் போகிறதோ எல்லாரையும்?’

    ‘அப்பப்பா! என்ன பயங்கரமான கனவு! நம் வாழ்க்கையின் வருங்காலத்தைச் சூசகமாகக் குறிக்கிறதோ இது?’

    வாத்தியத்தில் கலைந்து போன சுருதியை மீண்டும் சேர்ப்பது போல மனத்தை ஒருமிக்கச் செய்து குழப்பத்திலிருந்து விடுபட விரும்பினாள் பாகீரதி.

    ஏண்டியம்மா, நன்றாகத் தூங்கினாய்போல் இருக்கிறதே? வரப்போகிற ஸ்டேஷன் திருச்சிராப்பள்ளிதானாம்...

    என்னது?

    ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது ஒரு பெரிய ஜங்ஷனில் பிரகாசித்த ஒளி தூரத்தில் தெரிந்தது. ‘ஆமாம், ஊர்தான் வந்துவிட்டது. கிழவி நன்றாக எழுந்து உட்கார்ந்திருக்கிறாள். எப்போது விழித்துக் கொண்டாளோ?’

    பரபரவென்று குழந்தைகளை எழுப்பினாள். அரைத் தூக்கத்தில் ஆடி விழுந்த கிட்டுவையும் சந்துருவையும் லேசில் நிற்க வைக்க முடியவில்லை. துணிமணிகளை அவசரமாக மடித்துப் படுக்கையைச் சுற்றினாள். கலைந்து போயிருந்த கேசத்தை விரல்களால் கோதிச் சரி செய்து கொண்டாள்.

    கிட்டு... முழித்துக் கொள்ளடா. தூங்கக்கூடாது. ஊர் வந்துவிட்டது. பார், சந்துரு, நேரே நின்று கொள். இறங்க வேணுமே! போய்த் தாத்தா பாட்டி எல்லாரையும் பார்க்க வேண்டாமா?"

    வண்டி ஜங்ஷனுக்குள் நுழைந்தது. ‘பாட்டி அப்போதே கேட்டாள், மனிதர்கள் யாராவது வருவார்களா’ என்று. ஆமாம் என்று வேறு சொல்லித் தொலைத்து விட்டோம். ஆனால் யார் வந்திருக்கப் போகிறார்கள் நம்மை எதிர்பார்த்து?

    ‘இப்போது ஊர் வந்ததும் சொல்லி வைத்தாற்போலக் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள் கிழவி. என்ன பதில் சொல்வது இவளுக்கு?’

    அழைத்துப்போக வந்திருக்கும் ஆசாமியைத் தேடுவது போல எழுந்து நின்று ஜன்னல் வழியே தலையை நீட்டிப் பார்த்தாள் பாகீரதி.

    வண்டி நின்றது பிளாட்பாரத்தில். அந்த விடியற்காலை வேளையிலும் செங்கோட்டைப் பாசஞ்சருக்கு அன்று அங்கே நல்ல கூட்டம் காத்திருந்தது.

    என்ன, யாராவது வந்திருக்கிறார்களா? என்றாள் பாட்டி மறக்காமல்

    பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டாள் பாகீரதி. கிழவிக்குத் தெரியாமல்.

    அதுதான் பார்க்கிறேன், வெளியிலே ஏகக் கூட்டமாக இருக்கிறது. ஒன்றுமே தெரியவில்லை!

    சரிதான். புதுக்கோட்டை வண்டிக் கும்பலாக இருக்கும். விராலிமலையிலே ஏதோ திருவிழாவாம்.

    எதற்கும் நான் இறங்கிக் கொள்கிறேன், பாட்டி, பெட்டியையும் படுக்கையையும் சற்று எடுத்துக் கொடுக்கிறீர்களா?

    பேஷாக!

    எதிர்த்து முண்டி ஏறும் கும்பலை ஒரு வழியாகச் சமாளித்துக் குழந்தைகளுடன் இறங்குவதற்குள் பாகீரதிக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. சாமான்களும் கீழே வந்து சேர்ந்தன.

    மனிதர்கள் தென்பட்டார்களோ?

    "இன்னும் இல்லை, பாட்டி. நான் கொஞ்சம் ஓரமாகவே நின்று கொள்கிறேன். கும்பல் இப்படி தெரிகிறதே;

    Enjoying the preview?
    Page 1 of 1