Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appuvukku Appa Sonna Kathaigal
Appuvukku Appa Sonna Kathaigal
Appuvukku Appa Sonna Kathaigal
Ebook265 pages1 hour

Appuvukku Appa Sonna Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அப்பு தன் தந்தையை பிரிந்து தாயுடன் வாழ்ந்து வருகிறான். தன் தந்தையை காண பட்டணம் போகிறான். அங்கு அவன் தன் தந்தையை கண்டுபிடிப்பானா? அப்புவுக்கு அப்பா சொன்ன கதை என்ன? அப்பாவின் கதை அப்புவின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்பதைப்பற்றி கதாசிரியரின் பாணியில் காண்போம்.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580103906920
Appuvukku Appa Sonna Kathaigal

Read more from Jayakanthan

Related to Appuvukku Appa Sonna Kathaigal

Related ebooks

Reviews for Appuvukku Appa Sonna Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appuvukku Appa Sonna Kathaigal - Jayakanthan

    https://www.pustaka.co.in

    அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்

    Appuvukku Appa Sonna Kathaigal

    Author:

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    முன்னுரை

    ‘இந்த நேரத்தில் இவள்’ ‘பாட்டிமார்களும் பேத்திமார்களும்’ ‘அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்’ ஆகிய மூன்றும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பல காலத்து மனிதர்களைப் பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் ஓர் அனுபவமே ஆகும்.

    ஒரு கதையில் இளமையோடும், குழந்தையாகவும் அறிமுகமான ஒரு பாத்திரம் இன்னொன்றில் வயோதிகம் கொண்டுவிடுவதால் அதன் கதாநாயகப் பண்பு குறைந்து விடுவதில்லை. மாறிப்போய் விடுவதில்லை. அந்தப் பண்புகளோடு அவை இன்னொரு கதையில் வந்து இடையில் விடுபட்ட வரலாறுகளின் பிரதிநிதியாக முடியும் என்கிற அனுபவங்களை இந்த மூன்று கதைகளையும் எழுதியபோது என்னால் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

    ஒழுக்கமும், உழைப்பில் நம்பிக்கையும் கொண்ட சிறுவர்களை என் பால்யப் பருவத்தில் நான் நிறையவே கண்டு அவர்களுடன் தோழமை கொண்டிருக்கிறேன். பார்ப்பதற்கு ஏழைச் சிறுவர்களாய், கிழிந்த உடையும், மெலிந்த தோற்றமும் கொண்டு அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் போல் காட்சியளிப்பினும் அவர்கள் மகத்தான ஆக்க சக்தியுடைய ஆன்மீக சொரூபங்களாகத் திகழ்கிறார்கள் என்பதே நான் கண்டுணர்ந்து தேர்ந்த சத்தியமாகும்.

    ஒரு காலத்தில், தொழிற்புரட்சியின் தொடக்கமும் விளைவுமாக ஐரோப்பாவில் ‘குழந்தை உழைப்பு ஓர் மாபெரும் சமுதாயக் கொடுமையாக நிலவியது உண்மை. அந்த அவலங்களை டிக்கன்ஸும், ஹ்யூகோவும், செக்காவும், கார்க்கியும் உலகத்து மனிதர்கள் அனைவருடைய நெஞ்சங்களை எஞ்ஞான்றும் உருக்கும் விதமாகச் சித்திரித்திருப்பதையும், அதன் விளைவாக அங்கு இக்காலத்தில் ‘குழந்தை உழைப்பு’ எனும் கொடுமை ஒழிக்கப்பட்டிருப்பதையும் நாம் அறிவோம்.

    இந்த இலக்கிய இதயங்களின் குமுறல்களையும், அதற்குச் செவிமடுத்து உலகின் பல பகுதிகளில் வாழ்க்கையே மாற்றமுற்றதையும் - இன்று குழந்தைகளே சமூகத்தின் மூலதனங்களில் தலையாய பொக்கிஷம் என்று போற்றுகிற சமுதாயப் புனர் நிர்மாணம் பெறுவதையும் - அக்காலத்திலேயே அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அனுக்கிரகிக்கப்பட்டிருந்தது.

    ஆயினும், ஐரோப்பியக் கல்விமுறைக் கொடுமைக்கு ஆளாகி வாழ்க்கை முழுதும் ஊனமாக்கி விடுகிற ‘குழந்தைக் கல்வி’யை விடவும், அக்கால இந்திய முறையிலான ‘குழந்தை உழைப்பு எனக்கு உகந்ததாகவே இருந்தது.

    குழந்தைகள் போல் களைப்பே வராமல், சலிப்பே ஏற்படாமல், போதிய உணவுகூட உட்கொள்ளாமல், நாளெல்லாம் விளையாடித் திரிய எந்த ஒலிம்பிக் வீரராலும் - வயது வந்தவர்களானால் - முடியாது. அவ்வளவு அபரிமித ஆக்க சக்தி அவர்களுக்கு உண்டு. அதனால் தான் கம்சனையும், அரக்கர்களையும் வெற்றிகொண்ட கிருஷ்ணனும் முருகனும் குழந்தை வடிவம் கொண்டனர் போலும்!

    அந்தப் பருவத்தில் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அன்பும் அரவணைப்பும்தான். அவர்களிடம் இயற்கையாக ஊறுகின்ற அந்தச் சக்தி வரண்டு போய்விடாமல், தவறான வாய்க்கால்களில் ஓடி விழலுக்குப் பாய்ந்து விஷவித்துக்கள் முளைக்க விரயமாகி விடுவதுதான் ஒரு சமுதாயத்துக்கே ஏற்படும் பெரும் விபத்தாகி விடுகிறது.

    அவ்வித விபத்துக்களைச் சமாளித்து என் காலத்தில் என்னையொத்த எண்ணற்ற குழந்தைகள் நமது சமூகத்தில் மிக உன்னதமாய், பேர் தெரியாத எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களனைவரும் என்னைப் போல் எழுத்தாளனாகா விட்டால் என்ன? அவர்களின் சார்பாக அந்த வாழ்க்கையின் மேன்மைகளை அவர்களின் சந்ததிகளுக்கு எழுதி வைக்குமாறு அவர்களே என்னை எழுத்தாளனாய் உருவாக்கியிருக்கிறார்கள் என்றே நம்புகிறேன்.

    நமது குழந்தைகள் படிக்கும் வசதியுமில்லாமல், கவனிப்பாரின்றித் தெருவில் திரிந்து சமூகத்தில் பிள்ளை பிடிக்கிற அரசியல் கலகக்காரர்களின் கைகளில் சிக்கிச் சீரழிவதைவிடவும், அவர்கள் குழந்தைத் தொழிலாளராக உழைத்து உயர்வு பெறுவதையே நாம் ஊக்குவிக்க வேண்டும்.

    குழந்தை உழைப்பை ஒரு கொடுமையாக்குவது எது?

    எல்லாருடைய உழைப்பும் சுரண்டப்படுகிற ஒரு சமூக அமைப்பில் உழைப்பின் மீதே மதிப்புக் குறையத் தான் செய்யும். உழைப்பு மேன்மையுற வேண்டுமென்றால் அதன் மீது நிலவும் சுரண்டல் முறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

    மற்றப்படி ஜனப் பெருக்கமும் எளிய வாழ்க்கை முறையும் இயற்கையாய் அமையப் பெற்ற நமது நாட்டில் குழந்தை உழைப்பை ஐரோப்பியக் கண் கொண்டு பார்ப்பது நமது குழந்தைகளின் மீது நமது சமூகப் பெரியோர்கள் கொண்டுள்ள அக்கறைக்கு அடையாளம் அல்ல என்றெல்லாம் வெகுகாலமாய் என்னுள்ளிருந்த அனுபவங்களும் - கருத்துக்களும் இந்தக் கதையை எழுதக் காரணமாயின.

    சுதந்திரதினம், 1980

    சென்னை -78.

    அன்பு,

    த. ஜெயகாந்தன்

    1

    அப்பு ஒன்றும் தெரியாத குழந்தை அல்ல; குழந்தைகள் ஒன்றும் தெரியாதவர்களும் அல்ல; அரும்பு மீசை மேலுதட்டின் கோணங்களில் கை தவறி பட்ட மைபோல் கருமை தட்ட ஆரம்பித்துவிட்ட பருவம்.

    ‘அப்புவுக்கு பன்னிரண்டு வயசு முடிகிறதாம் வருகிற சித்திரையோடு! பொறுப்பில்லையாம்; கவலையில்லையாம்; நிலைமை தெரியவில்லையாம்; பெரிய ராசாவூட்டுப் பிள்ளைன்னு நினைப்பாம்!’ இவை எல்லாம் மகனைப் பற்றி அம்மாக்கண்ணு நாள் முழுவதும் நடத்தும் நேர்முக வர்ணனைகளிலிருந்து சேகரித்த வாசகங்கள்.

    அம்மாக்கண்ணுவுக்கு நாற்பது வயதுதான் என்றாலும் அவ்வையாருக்கு வந்ததுபோல் இளமையிலே முதுமைக் கோலம் வந்துவிட்டது. நெற்றியில் எப்போதும் குங்குமத் திலகம் துலங்கும். அடுப்படியிலும் ஆட்டுரலிலும் கிடந்து நெருப்பிலும் உழைப்பிலும் சரீரமே உருகுவது போல வியர்வை வழிகிறபோது விரல் நுனியில் முந்தானையைச் சுற்றிக் கொண்டு கண்ணாடி பார்க்காமலே சரியாக ஒரு வட்டம் நெற்றித் திலகத்தைத் துடைத்துத் துடைத்துக் காப்பாற்றிக் கொள்ளுவாள். அதில் ஒரு சிக்கனம் - காலையில் குளித்துத் திலகமிட்டுக் கொண்டால், அடுத்த திலகம் அடுத்தநாள் அதே நேரம்தான் சுடரும். நடுவில் முகம் கழுவிக் கொள்ளுவாள்; முகம் துடைத்துக் கொள்ளுவாள் - நெற்றித்திலகம் மட்டும் பழுதுறாது; அப்படியொரு கோலத்தில் யாரும் அவள் முகத்தைப் பார்த்ததில்லை.

    அம்மாக்கண்ணு ரொம்பவும் தான் புலம்புகிறாள்; எது புலம்பல்... எது பேச்சு... எது பிரார்த்தனையென்ற வித்தியாசமில்லாமல் அவள் சதா புலம்புகிறாள்; அந்தப் புலம்பலில் சீதையின் சோகமும் சந்திரமதியின் துயரமும் புதுசாக வடிவம் பெற்று வாழ்வது போல் அப்புவுக்குத் தெரிகிறது.

    அவள் சுமக்கிற வேலைக்கும் பளுவுக்கும் அந்தப் ‘புலம்பல்’ பாட்டு இல்லாமல் முடியாதுதான்! அவள் நியாயம் அவளோடு! அப்புவுக்கென்ன தலையெழுத்து? இவளோடு சேர்ந்து அழவேண்டுமா? அதற்கு இவள் ஒரு ‘அம்மு’வைப் பெற்றிருக்க வேண்டும். அவன் அப்பு அல்லவோ?...

    அப்பு வருகிறான் என்றால் தெரு அதிரும்... சின்னக் காளைக் கன்று மாதிரி... இடுப்பில் வரிந்து கட்டிய அரைத் துண்டும் மேலே எப்போதும் துண்டு மாதிரி தோளில் இருபுறமாகவும் வழியவிட்ட மேல் சட்டையுமாய் அவன் துள்ளிச்சாடி ஓடித்தான் வருவான். அவனைக் கண்டு மிரண்டது போலவும், உத்வேகமூட்டப்பட்டது போலவும் ‘அப்பூ! டேய் அப்பூ... என்று அவனைத் துரத்திக் கொண்டும் முந்தியும் ஓடமுயலும் அவனை யொத்த கன்றுகள் தெருவில் புழுதி கிளப்பிப் பெரியவர்களின்மீது வாரியிறைத்து, வசை மொழிகளை வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் தெருவில் அவன் வருவதே இல்லை.

    அதற்கெல்லாம் கூட சாதாரணமாய்ச் சிறுபிள்ளைகள் செய்கிற காரியங்கள் என்று ஊர்ப் பெரியவர்கள் மன்னிக்கத்தான் செய்தார்கள். ஆனாலும் அவன் வாய் இருக்கிறதே... ஒரு ‘மெஷின் கன்’னுக்கு உவமை சொன்னால் குன்றக் கூறல் எனும் குற்றம் தோன்றும்.

    அப்பன் விட்டுட்டு ஓடிப்போயிட்டான்; பாவம், அந்தப் பொண்ணு சந்திரமதி மாதிரி - சந்திரமதி ஒரு லோகிதாசனைத் தானே பறிகொடுத்துப் புலம்பினாள்? இந்த அம்மாக்கண்ணு முப்பது வயசுக்குள்ளே முத்து முத்தாய், வைரம் வைரமாய் - ஆறு செல்வங்களை அள்ளிக் கொடுத்துவிட்டு, இந்தத் தறுதலையை மட்டும் வச்சுக்கிட்டு என்னா பாடு படறா என்று ஊரெல்லாம் அம்மாக் கண்ணுவுக்காக அழும்... ‘உருப்படாதவன் என்று ஒரு வாய் தவறாமல் ஏன்தான் இந்தப் பையன் பேரெடுக்கிறானோ?’ என்று அம்மாக்கண்ணுவின் மனம் மகனுக்காக அழும்... புலம்பும்!

    ***

    அப்புவுக்குப் பள்ளிக்கூடம் ஒத்து வரவில்லையோ, பள்ளிக் கூடத்துக்குத்தான் அவனோடு ஒத்து வரவில்லையோ? - சம்பந்தமற்றுப் போயிற்று. வாழ்க்கையும் வகுப்பறையும் முரண்படுகிறபோது பள்ளிக்கூடம் அவனுக்கு ஒரு சிறையாகவும், வாத்தியார்கள் பாவம் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் என்றும், சிலசமயம் கிங்கரர்கள் என்றும் உருவகமாயிற்று.

    சாரமற்ற கல்வி சின்ன வயசிலேயே அவனை ஒரு ‘சாமியார்’ போல் விரக்தி கொள்ள வைத்தது. அவன் வயசுக்கு மீறியே யோசித்தான். அதனால் தான் அவன் ஒரு வாயாடி என்று பேரெடுத்தான். அவனுடைய அறிவுக்கும் யோசனைக்கும் கொஞ்சம் அடங்கிப் பணிந்து நடந்து கொண்டானானால் ‘இளவரசுப் பட்டம் சூட்டக் கூட ரொம்பப் பேர் இருந்தார்களாம்! இப்படி அம்மாக்கண்ணு சொன்னால் அவன் விழுந்து விழுந்து சிரிப்பான்.

    அப்புறம் நீயும் பட்டத்து ராணியாயிடுவே!... முக்காடு போட்டுக்கிட்டு ஓடிட்டாரே உன் புருஷன் - அவரு வந்து மகாராசா ஆயிடுவாரு! அப்புறம் ‘என்ன குறைச்சலடி உனக்கு அம்மாக்கண்ணு’ என்று தாளம் போட்டும் மோகன ராகத்தில் பாட்டுப் பாடி நடனம் ஆடுவான்.

    சில சமயம் அம்மாக்கண்ணு, அவன் பாடும் குரலையும் ஆடும் அழகையும் ரசித்து மெய்மறந்து கன்னத்தில் ஊன்றிய கையை எடுத்து அப்புவின் கன்னத்தில் இடித்துச் சொல்லுவாள்:

    இப்படியாவது எங்கேயாவது ஒரு டிராமாக் கம்பெனி சினிமாக் கம்பெனிக்குப் போயி சேந்து உருப்படேன். என்னாமா உன்னை ‘கண்டேன், கண்டேன்னு’ எடுத்துக்குவாங்க தெரியுமா? எல்லாத்துக்கும் உனக்குச் சுழி சரியாயிருக்கணுமே! பணிவா மரியாதையா நடந்துக்கணும்... நீயா? என்று அவனைப் புகழ ஆரம்பித்து, புத்தி சொல்ல முயன்று, அதை அவன் அழகுகாட்டி உதாசீனப் படுத்துவதால் - திட்ட ஆரம்பித்து நாளெல்லாம் புலம்பிக் கொண்டிருப்பாள்.

    அப்பு அந்தத் தெருவில் உள்ள எல்லா வீட்டுத் திண்ணைகளிலும் சொந்தமாய் விளையாடிக் கொண்டிருப்பான். ஒரு சம்பந்தமுமில்லாமல் கோடிவீட்டு வெங்கட்ராமய்யர் வீட்டுக்கு முன்னால் பந்தல் காலடியில் கட்டிப் போட்டிருக்கும் வில்வண்டிக் காளைகளை அவிழ்த்துக் கொண்டு போய்ச் சோழியன் குளத்தில் தேய்த்து நீராட்டிக் கொண்டு வருவான். அது ஒரு குணம்!

    அதே வெங்கட்ராமய்யர் வீட்டுக்கு அவரது மகள் கோமளத்தைப் பெண் பார்க்க வந்தவர்களை ரயிலடிக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு வரச் சொன்னதற்கு கோபித்துக் கொண்டு, கடையாணியைக் கழற்றி விட்டு, அந்த வண்டியை அவனே ஓட்டிக் கொண்டு போய் எல்லாரையும் குடை சாய்த்துவிட்டு வந்த ‘பெருமை’யையும் அவனே கைதட்டிக் கொண்டு சொல்லுவான். அது ஒரு குணம்.

    பள்ளிக்கூடத்தில் இப்படித்தான் ஒரு கோரம் நடந்தது... பழி இவன் மீதுதான். அந்த நந்தகோபால் இவனுடைய பேனாவைக் கேட்காமல் எடுத்திருக்கக் கூடாதுதான். என்னவோ, இவனை வெறி மூட்டுவதற்காக, இவன் கையிலிருந்ததைப் பறித்துக்கொண்டு ஆட்டம் காட்டினான் நந்தகோபால். அவனும் குழந்தை - அப்புவை விட கொஞ்சம் பெரியவன். அப்புவுக்கு உடனே நாகம் போல் சீற்றம் வரும் என்று அவன் எதிர்பார்க்க வில்லையோ அல்லது எதிர்பார்த்துத்தானோ... என்னமோ நடந்தது... இரண்டு பேரும் புரண்டார்கள்... வகுப்பறை, மேஜை, நாற்காலி, ஆறாம் ஜார்ஜ் மன்னர் எல்லாம் தலைகீழாய்ப் புரண்டன.

    அப்பு தன் பேனாவை மீட்டுக் கொண்டான். ஆனால்!... ஐயோ! இதென்ன?... நந்தகோபாலின் இடது கண்ணிலிருந்து ‘ரெட் இங்க்!’

    அப்புதான் அவன் கண்ணில் பேனாக் கட்டையால் குத்தினானாம். அவனைக் கீழே தள்ளி அவன் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு கத்தியால் குத்துவது மாதிரி குத்தினானாம்! எல்லாரும் இப்படிக் கற்பனையாகச் சொல்லுவார்கள்... இவனும் ‘நான் தான் அந்த மாபெரும் வீரன்’ என்கிற மாதிரி, செய்யாத குற்றத்துக்கு உடன்பட்டு மார்பை நிமிர்த்திக்கொண்டு நிற்பான்.

    அப்புறம் எல்லோரும் உண்மையைத் தேடி ஆராய்ந்து கொண்டிருப்பார்களாக்கும்! உண்மைகளில் ஏதாவது சுவை இருக்கிறதா? பேனாக்கட்டையை அவன் கையிலிருந்து பிடுங்கும்போது நந்தகோபால் அப்புவின் கையைக் கடித்ததும் - அப்போதுதான் பேனாமுனை அவன் கண்ணில் கீறிவிட்ட உண்மையையும் எப்படிக் கதை மாதிரி சொல்ல முடியும்? சுவையான பொய்களைத் தானே எல்லாரும் ரசிக்கிறார்கள்?

    அடேய், நான் எப்படிப்பட்டவன்னு போயி அந்த ஒத்தைக் கண்ணன் நந்தகோபாலைக் கேளு. பேனாக் கட்டையினாலே ‘சதக்’னு ஒரே குத்து! முழி பேந்து போச்சு என்று அப்பு தனது வீரசாகசமாக அந்தப் பொய்யைப் புனைந்து புனைந்து சித்திரித்துத் தானே ஒரு குரூர வேஷத்தைத் தரித்துக் கொண்டான். ஆனால் அப்புவின் மனமறியும் உண்மையும் பொய்யும்!

    இவ்வளவுக்குப் பிறகு அந்த நந்தகோபாலும் அப்புவும் தோள் மீது கை போட்டுத் திரிந்து கொண்டிருந்தார்கள். அதுவும் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டு விட்டு...

    ஊருக்கு மேற்கே சிறு தொலைவில் மேவுமொரு மாந்தோப்பு...

    ‘பூலோகத்தில் எவ்வளவோ சொர்க்கங்கள்’ உண்டு. அதில் இந்த மாந்தோப்பு ஒரு ‘மினியேச்சர் சொர்க்கம்’. குயில் பாடுவதை, கோழி கூவுவதை, மாடு பொலிவிடுவதையெல்லாம் வருணிக்கவும் வேண்டுமோ! வருணித்தாலும் விட்டாலும் அது ஒரு சொர்க்கமே.

    அதில் நடுநாயகம் ஒரு பெரிய ஏற்றக் கிணறு. ஏற்றக்காரக் கிழவன் செங்கேணி ஏற்றம் இறைத்துக் கொண்டு பாடுகிற பாட்டுக்கள் கம்பனையும் தலையசைக்கத்தான் செய்திருக்கும். செங்கேணிக் கிழவனுக்குக் குடும்பமெல்லாம் பக்கத்தில் ஒரு ஊரில் இருக்கிறது. எப்போதாவது போவான், வருவான். எப்போதும் மாந்தோப்பில் தான் இருப்பான்! அந்தக் கிழவனைச் சேரிப் பெண்கள் ரொம்பவும் பச்சையாகப் பேசிக் கேலி செய்வார்கள். அவன் அவர்களிடம் நிஜமாகவே சரசமாடி விடுகிற விஷயத்தைக்கூட அப்புதான் அவனது கூட்டாளிகளின் சகிதம் கண்டுபிடித்தான்.

    செங்கேணிக் கிழவன் ரொம்பத்தான் வெட்கங்கெட்ட கிழவன். அவன் அப்புவையும் அவனது கூட்டாளிகளையும் வைத்துக்கொண்டு கெட்ட வார்த்தைகள் நிறைந்த கதைகளைச் சொல்லுவான். அப்புவுக்குக் கிழவனைப் பிடிக்காது. அவனது கதைகள் ரொம்பப் பிடிக்கும். கெட்ட வார்த்தைகளை மனத்தில் வடிகட்டிப் புரிந்து கொள்வான். அப்புறம் ஒரு சுவைக்கு, கார மிளகாயை ஒரு கடி கடித்துக்கொண்டு கேழ்வரகுக் கூழ் குடிப்பானே செங்கேணிக் கிழவன் - அது மாதிரி அப்பு கூட அதை ரசித்துக்கொள்ளுவான்... மனத்துள் சொல்லிப் பார்த்து மகிழ்வான்...

    மாந்தோப்பு சொர்க்கத்தில் மரியாதை விதிமுறைகள் எல்லாம் கிடையாது. எல்லாப் பையன்களும் இடுப்பில் கோவணம்கூட இல்லாமல் பத்துப் பன்னிரண்டு பேராய் ஏற்றக் கிணற்றின் கட்டை மீது வரிசையாக, கந்தர்வர்கள் மாதிரி நிர்வாணமாய் நின்று தாவிப் பறந்து கிணற்றில் ஒருவர் பின் ஒருவராய்க் குதித்துத் தண்ணீரில் ‘குந்தம்’ கட்டுவார்கள்...

    குந்தம் கட்டுவதென்றால்?... ஆ! அது என்ன அற்புதமான நீர் விளையாட்டு... இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1