Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanantha Pooth Thooral
Aanantha Pooth Thooral
Aanantha Pooth Thooral
Ebook195 pages1 hour

Aanantha Pooth Thooral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466763
Aanantha Pooth Thooral

Related to Aanantha Pooth Thooral

Related ebooks

Reviews for Aanantha Pooth Thooral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanantha Pooth Thooral - Mekala Chitravel

    1

    மாலைவானம் செம்பழுப்பும் இளமஞ்சளும் கலந்து அழகானப் பட்டுப்பாயாய் விரிந்து கிடந்தது. நட்சத்திரங்கள் பொட்டுப் பொட்டாய் ஜரிகையில் பூவேலை செய்தது போல மினுங்கிக் கொண்டிருந்தன. கடல் கண் தொடும் தூரத்தில் சிரிப்பது போல சின்ன சத்தம் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.

    சோற்றை வடித்து கவிழ்த்தி விட்டு நெத்திலி மீன் குழம்பு கொதித்துக் கொண்டிருந்த அடுப்பை தணித்து விட்டு வெளியே வந்தாள் பங்காரு. எட்டின மட்டுக்கும் ஆளரவமில்லை. திண்ணையில் உட்கார்ந்து காலை நீட்டினாள். முட்டி வலி தாங்க முடியவில்லை. ‘எட்டு ஊருக்கு சமைத்தவ நானு... இப்ப இந்த ஒரு பிடி சோறு செய்ய உன்னைப்பிடி என்னைப் பிடிங்குது... வயசாவுதில்லே? எப்படியும் அறுபது வயசுக்கு குறையாது... நாளுதான் ஓடுதே..."

    என்னா அத்தை... நெத்திலி மீன் குழம்பா? அதான் வாசம் ஊரைத் தூக்குது... என்னதான் சொல்லு உன் கைப்பக்குவமே தனிதான். நானும் அதே மாதிரிதான் குழம்பு கூட்டறேன். இப்படி ஒரு வாசமும் ருசியும் வரவே மாட்டேங்குது... இன்னும் ஜக்கு பய வரலியா? என்று கேட்டபடி பக்கத்து வீட்டு மயிலா வந்து உட்கார்ந்தாள்.

    அவன் என்னிக்கு சீக்கிரம் வந்தான் இன்னிக்கு வர? சீக்கிரமா ரெண்டு பிடி தின்னுட்டு தலையை சாய்க்கலாம்னா முடியுதா என்று பங்காரு அலுத்துக் கொண்டாள்.

    அவன் இந்த மாதிரி இருக்கறதுக்கு நீதான் காரணம். ஆரம்பத்திலேயே ரெண்டு தட்டு தட்டி வைச்சிருந்தா அவனும் சரியா இருந்திருப்பான்... நீதான் அவனுக்கு ஏகப்பட்ட செல்லத்தைக் குடுத்து கெடுத்து வைச்சிட்டே... சேர்மானம் சரியில்லாம தத்தாரியா சுத்தறான்... மயிலா திட்டினாள்.

    என்னாடி பண்றது? பொறந்து மண்ணுல விழறதுக்கு முன்னால ஆத்தாகாரி போய் சேர்ந்திட்டா. மூணாவது வயசில அப்பன்காரனும் காரில அடிபட்டு செத்தான்... அவனை எடுத்து வைச்சி பாராட்ட சீராட்ட மக்க மனுஷாளா இருந்தாங்க? அதுதான் செல்லமா வளர்த்திட்டேன். அவன் மூஞ்சைப் பார்த்தா திட்டவும் முடியலை... அடிக்கக் கை ஓங்கவும் மனசு வரலைடி... அது அந்த பயலுக்கு ரொம்ப ஏத்தமா போயிட்டுது... பங்காரு கண் கலங்கினாள்.

    பேசாம அவனுக்கு ஒரு கால் கட்டு போட்டு விட்டுடு அத்தை. அப்பறம் வாலை சுருட்டிக்கிட்டு கிடப்பான். நாலு காசு சம்பாதிக்கவும் நெனைப்பான்... மயிலா சொன்னதைக் கேட்டு பங்காரு ‘உச்’ கொட்டினாள்.

    நானாடி மாட்டேங்கறேன்? அவன் கல்யாணம்னாலே ஓடறான். வீட்டுக்கு ஒருத்தி வந்துட்டா அவன் ஜம்பம் செல்லுபடியாகாதில்லே? வர்றவ சாமர்த்தியக்காரியா இருந்திட்டா போடு தோப்புக்கரணம்னு இல்லே சொல்லுவா? அதுதான் நழுவிக்கிட்டே இருக்கான்...

    அவர்களை மேலே பேசவிடாமல் பைக்குகளின் சத்தம் காதைக் கிழித்தது. வந்துட்டுதுடி கவுரவ சேனை... பொழுதெல்லாம் எங்கதான் போவானுங்களோ... நீ எதுக்கு எழுந்திருச்சிட்டே? உட்காரு...

    இல்லை அத்தை... என்னைக் கண்டா ஜக்கு எதையாவது பேசி என் வாயைக் கிளறுவான். வீட்டுல வெறும் சோறு மட்டும்தான் வடிச்சிட்டு வந்திருக்கேன். கொஞ்சம் குழம்பு குடேன்... என்று மயிலா நைசாகக் கேட்டாள்.

    பங்காரு எழுந்து உள்ளே போனாள். வெளியில் ஜக்கு பேசுவது கேட்டது. என்னா மயிலாக்கா? வழக்கம் போல ஓசிக் குழம்புக்கு வந்திட்டியா? இப்படி ஓசியிலேயே வாழற சாமர்த்தியம் உன்னைத் தவிர யாருக்கும் வராது...

    மயிலாவுக்கு பதில் பேச முடியவில்லை. அசட்டுத்தனமாக சிரித்துக் கொண்டே உள்ளே போய் குழம்பு கிண்ணத்தை வாங்கிக்கொண்டு போய் விட்டாள். சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டே பங்காரு ஜக்கு... நைனா... கொஞ்சம் சீக்கிரமா வரக்கூடாதாடா? வரவர எனக்கு முடியலைடா... என்று முணுகினாள்.

    உனக்கு முடியலைங்கறதுக்காக நான் சீக்கிரமா வர முடியாது. நீ பேச்சை மாத்தாதே... எப்ப பார்த்தாலும் அந்த மயிலாவுக்கு ஓசி குழம்பும் சோறும் குடுக்கறதுதான் உனக்கு பொழைப்பா போச்சு. உன்னை நல்லா ஏமாத்தி அது குடும்பத்தோட வயிறு வளர்க்குது. இதெல்லாம் தராதேன்னு எத்தினி தரம் சொல்லியிருக்கேன்?

    தட்டில் குவித்த சோற்றின் மீது மீனும் குழம்புமாக அள்ளி வைத்த பங்காரு தீர்மானமாகச் சொன்னாள். உன்னை நம்பி பக்கத்தில இருக்கவங்களை நான் பகைச்சிக்க முடியாது. நீ கெடுவான விடியல்காலையில போனா ராவு ஊரடங்கத்தானே வரே. பல நாள் வர்றதும் கிடையாது. எங்க இருக்கேன்னு இடம் தெரியாம வளைக்குள்ள பதுங்குற நண்டு மாதிரி ஓடிக்கிட்டே இருக்கே... நான் திடீர்னு விழுந்து கிழுந்து கிடந்தா தூக்கி ஒரு வாய் தண்ணிக் குடுக்க நீ வரப் போறதில்லை. அப்ப இந்த ஜனங்கதான் ஓடியாந்து உதவணும். அதனால அவங்களுக்கு அப்பப்ப இப்படித்தான் ஏதாவது உதவி செய்து கூடமாட வைச்சிருக்குவேன். அதைப்பத்தி நீ பேசாதே...

    என்னிக்கோ நீ விழுந்தா தண்ணி தர்றதுக்காக இன்னிக்கு இப்படி வாரி விடறியே... உன்னை கண்டிக்க எனக்கு முடியலியே... ஜக்கு எரிச்சல்பட்டான்.

    நீ மட்டும் நான் சொல்றதை கேக்கறியா? ஒரு கல்யாணத்தை பண்ணிக்க... உன் பெண்டாட்டி வந்து குடும்ப பொறுப்பை எடுத்துக்கட்டும். அவ என்னை கேக்கட்டும். நான் பதில் சொல்லிக்கறேன். என்னா சொல்றே?

    எதையோ கொண்டு எதுக்கோ முடிச்சி போடற வேலையை நீ விடவே மாட்டியா? எதுக்கு இப்படி பண்றேன்னா உடனே கல்யாணம் பண்ணிக்க சொல்றே... எனக்கு கல்யாணம் வேணாம் ஆயா... ஜக்கு பதுங்கினான்.

    இதெல்லாம் ஒரு பதிலுன்னு நீ சொன்னா நான் ஏத்துக்கமாட்டேன். பொண்ணு பார்க்கத்தான் போறேன். மரியாதயா நீயும் கூட வந்துதான் ஆகணும்... பங்காருவின் குரலில் தீவிரம்.

    என்ன ஆயா சொன்னா உனக்குப் புரியவேமாட்டேங்குது. என்னோட படிப்பும் வேலையும் பத்தி கேட்டாங்கன்னா நீ என்னா சொல்ல முடியும்? உன்னோட பேரன் என்னா கலெக்டர் உத்தியோகஸ்தனா? இதோ பாரு ஆயா... உனக்கு நானும் எனக்கு நீயும் சொந்தமா இப்படியே இருந்திடலாம்... வீணா ஒரு பொண்ணையும் இதுல இழுக்காதே... என்னோட குணத்துக்கெல்லாம் குடும்பமெல்லாம் சரியா வராது ஆயா... விடு... விடு... ஜக்கு சாப்பிட்டு முடித்து எழுந்தான். பங்காரு மேலும் பேசாமல் விட்டுப் பிடிக்கலாம் என்று அமைதியானாள்.

    ஜக்கு ஒரு பீடியை பற்ற வைத்துக்கொண்டு காலார நடக்கலானான். பங்காருவின் கருணையினால்தான் இன்றைக்கு வளர்ந்து வாலிபனாக நடக்கிறான். அப்பாவின் அம்மாவின் முகமுழியெல்லாம் அவன் அறியாதது. பங்காருதான் ஒரே சொந்தம். அவளும் அவனை பள்ளிக்கூடத்தில் சேர்க்கத்தான் செய்தாள். அவன் படித்தால்தானே? சின்ன வயதிலேயே தப்பான சினேகிதமெல்லாம் சேர ஒரு வழியாக அவன் தடம் மாறிப் போய்விட்டான். புகை பிடிக்கும் பழக்கமும் குடிக்கும் பழக்கமும் தானாகவே வந்து சேர்ந்துவிட்டது. செலவுக்காக கஞ்சா பொட்டலம் விற்பான்... கள்ளச் சாராயமும் விற்பது உண்டு. பல நேரங்களில் அடிதடி வேலைக்கும் முன்னால் நிற்பான். வீட்டில் எப்படி சாப்பாடு வருகிறது என்பதெல்லாம் அவனுக்கு தெரியாது. பங்காருவின் சாமர்த்தியத்தில் எப்படியோ பிழைப்பு ஓடுகிறது. ஒரு பெண்ணைக் கட்டிக்கொண்டு வந்து அவளுக்கு சவரட்சணை செய்து காலமெல்லாம் காப்பாற்ற அவனுக்கு முடியாது. அதற்குரிய பொறுமையும் பொறுப்பும் அவனால் கை கொள்ள வணங்காது.

    இதெல்லாம் தெரிந்தும் வளர்த்த பாசத்தால் பங்காரு அவனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள். அவனை சுமக்கும் தன் பொறுப்பை தோள் மாற்றி விட்டு நிம்மதியடைய அவள் விரும்புகிறாள். சம்சார பந்தமென்பது சிக்கினால் விடாதே. ஜக்கு கவலையுடன் நண்பர்களைத் தேடிப்போனான். அவன் சொன்னதைக் கேட்ட அவர்களோ சிரித்தார்கள்.

    என்னையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி யாரும் வற்புறுத்தலியேன்னு நான் கவலைப்படறேன்... நீ என்னடான்னா பண்ணிக்க சொல்றாங்கன்னு மூஞ்சியைத் தூக்கிக்கறே... ஐக்கு கல்யாணம் வேணும்டா... என்று நாற்பது வயதைத் தொட்டுக்கொண்டிருக்கும் கருவாயன் புலம்பினான்.

    ஜக்கு... நம்மப் பொழைப்பெல்லாம் ஒரு பொழைப்பில் சேர்த்தியா சொல்லு? இந்த இளவெட்டு வயசு வரைக்கும் தான் பத்து பேர் பார்த்து பயப்படறது... சலாமடிக்கறதெல்லாம். அதைப் போல நம்மைத் தொழிலுக்குக் கூப்பிடறதும் கூட இந்த வயசு காலத்திலதான். எல்லாம் இன்னும் ஒரு ஐஞ்சாறு வருஷம் வரைக்கும்தான்... அப்புறம் எவனும் சீண்டமாட்டான். அதுக்கப்புறம் ‘பூவா’வுக்கு என்ன பண்றது? வீட்டுல பெண்டாட்டின்னு ஒருத்தி இருந்தா எப்பாடுபட்டாவது சோறு போட்டிடுவா. வயசான காலத்தில கவனிச்சிக்குவா... இப்ப உன் வீட்டிலேயே எடுத்துக்க... ஆயாதான எல்லாம் பண்ணுது? அதை உன் பெண்டாட்டியா வர்றவ செய்திட்டுப் போறா... சின்னான் சொன்னதைக் கேட்டு போசு கை தட்டினான்.

    எப்பவுமே நமக்கெல்லாம் பொண்ணுங்கதாண்டா பாதுகாப்பு. அதுவும் பெண்டாட்டியா வர்றா பாரு... அவ நமக்காக உயிரையும் கூடத் தருவா. பிகு பண்ணிக்காம கல்யாணம் பண்ணிக்கடா... போசு சொன்னான்.

    சின்ன வயசில கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தான் நம்ம பசங்களை வளர்த்து ஒழுங்கா செட்டில் செய்ய முடியும்... வயசாகிப் பிள்ளைங்க பெத்தா உதவாதுடா... கருவாயன் மீண்டும் புலம்பினான்.

    அடப்பாவிகளா... அவனவன் கல்யாணத்துக்காக இவ்வளவு அலைஞ்சிக்கிட்டு இருக்கீங்களாடா? அப்ப உங்க உதாரெல்லாம் வெளிவேஷம்தானாடா?

    ஜக்குவின் குரலில் வியப்பு.

    2

    "அத்தை... என்னா பண்ணிக்கிட்டிருக்க? ஜக்கு கிளம்பிப் போறதைப் பார்த்தேன். அதான் இவரைக் கூட்டிட்டு வந்தேன். இவரு எங்க சொந்தக்காரரு. கல்யாணத்துக்கு பொண்ணு மாப்பிள்ளை பார்த்து குடுக்கறதை செய்யறவரு... ஜக்குவுக்கு ஏத்த பொண்ணு இருக்கான்னு பார்க்கலாம்..." மயிலா சொன்னதைக் கேட்ட பங்காரு வந்தவரை உட்காரச் சொன்னாள்.

    ஜக்குவைப் பத்தி எல்லாம் சொன்னவளிடம் தரகர், என்ன பங்காரம்மா நீங்க உலகம் தெரியாதவங்களா இருக்கீங்க? படிக்காதவனா இருந்தாக்கூட பிள்ளை வீட்டுக்காரங்க நீங்க... நல்ல கெத்தா இருங்க... வயசு காலத்தில பசங்க கொஞ்சம் அப்படி இப்படி இருக்கறதுதான். கல்யாணத்தைப் பண்ணி வைச்சிட்டா பொட்டிப் பாம்பா அடங்கிடுவானுங்கம்மா. எத்தினிபேரை நான் பார்க்கலை? உங்களுக்கு பொண்ணு எப்படி இருக்கணும்னு மட்டும் சொல்லுங்க. இன்னும் பத்தே நாளில் பொண்ணைப் பத்தின துப்போடு வரேன்... என்றார்.

    நான் என்னா பட்டப்படிப்பு படிச்ச பொண்ணா கேக்கப் போறேன் தரகரே? வீட்டுக்கு ஏத்த மாதிரி பொண்ணா இருக்கணும். நம்மை உட்கார வைச்சி அவ வேலை செய்யணும். அதை விட்டிட்டு நாம அவளுக்கு வேலை செய்யறா மாதிரி இருந்திடக்கூடாது. அவ்வளவுதான். எப்படி இருந்தாலும் ஜக்கு பய பார்க்க நல்லா அம்சமா ராஜா மாதிரி இருப்பான். அதுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் லட்சணமா இருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும் பங்காரு தன் எண்ணத்தை சொன்னதும் தரகர் தலையசைத்தார்.

    படிப்பு இல்லைன்னாலும்... சொத்து ஏதும்... என்று இழுத்தார். இந்த வீடு சொந்த வீடு. ஊரில கொஞ்சம் நிலமும் இருக்கு. என்காலத்துக்குப் பின்னாடி அவனுக்குத்தான் எல்லாம்... பங்காரு சொன்னதைக் கேட்ட தரகரின் முகம் மலர்ந்தது.

    இந்த சென்னையில் சொந்த வீடு பெரிய விஷயமாச்சே... இது போதும்... நல்ல பொண்ணா பார்த்து போட்டோவோட வரேன்... என்று எழுந்தார். மயிலா ஜாடை காட்டி பங்காருவைக் கூப்பிட்டாள். அத்தை, முதல் முதல்ல பேச வந்திருக்காரில்லே? கையில சந்தோஷமா ஏதாவது குடுத்து அனுப்பு. அவரும் வேலையை சுறுசுறுப்பா பார்ப்பாரு...

    ஆமாண்டி... இதோ வரேன்... என்ற பங்காரு உள்ளே போனாள். திரும்பி வரும்போது காபியும் நூறு ரூபாய் பணமும் கொண்டு வந்தாள். காபி குடித்துவிட்டு தரகர் முகமெல்லாம் சிரிப்பாக விடை பெற்றார்.

    அத்தை... நம்ம தரகரு கில்லாடி. நீ வேணும்னா பாரு. சீக்கிரமே ஜக்குவுக்கு பொண்ணு அமைஞ்சிடும். அத்தை... வீட்டுல துவரம் பருப்பு தீர்ந்து போச்சி... ஒரு டம்ளர் பருப்பு குடுத்தீன்னா வாங்கின உடனே திருப்பிடறேன் என்று குழைந்த மயிலாவைப் பார்த்த பங்காருவுக்கு வேடிக்கையாக இருந்தது. ‘ஒரு வகையில ஜக்கு பய சொல்றது கூட சரியாத்தான் இருக்கு. ஆனா இதுக்காக என்னா பண்றது? இப்படி தெரிஞ்சேத்தான் ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திக்கிட்டு வாழ வேண்டியிருக்கு... வேற வழியில்லையே...’ என்று மனதில் நினைத்தபடி பங்காரு திரும்பவும் உள்ளே போனாள்.

    அவளைத் தொடர்ந்து வந்த மயிலா நாலு பெரிய வெங்காயம், இரண்டு தக்காளி, ரெண்டு முருங்கைக் காய் என்று சாம்பாருக்கு வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொண்டு தான் கிளம்பினாள்.

    "அட... ஜக்கு...

    Enjoying the preview?
    Page 1 of 1