Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

India Gate
India Gate
India Gate
Ebook278 pages1 hour

India Gate

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'காவேரி' என்ற புனைப் பெயரில் தமிழில் எழுதிக் கொண்டுவரும் லக்ஷ்மி கண்ணன், ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எழுதி வருகிற எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட இவரது இலக்கிய வானம் மிக விரிந்து செல்கின்றது. இவரது உரைநடையின் இயல்பான வீச்சில்கூட ஒரு கவிதை லயம் தொனிப்பதை ஸ்பரிசிக்க முடிகிறது.

தாய்மொழி தமிழும், கன்னடத்து மண்வாசமும், தில்லியில் பல்வேறு தேச கலாச்சார பாதிப்புகளும், இவற்றிற்கு ஈடுகொடுத்து நின்று, சக மானுட ஜீவிகளுக்காகவும், தனக்காகவும் ஒரு ஆத்ம தேடலை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவரது நாவல் 'ஆத்துக்குப் போகணும்', ஆத்ம பரிசோதனையின் உன்னத உயரத்திற்கு அழைத்துச் செல்லும் படைப்பு.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580162609565
India Gate

Related to India Gate

Related ebooks

Reviews for India Gate

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    India Gate - Kaaveri

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இந்தியா கேட்

    (சிறுகதைகள்)

    India Gate

    (Sirukathaigal)

    Author:

    காவேரி

    Kaaveri

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kaaveri

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    முன்னுரை

    கிறிஸ்டீன் கோமேஸ்: லட்சுமி கண்ணனுடன் ஒரு பேட்டி

    1. ஓசைகள்

    2. சாவி

    3. முனியக்கா

    4. நிஜத்தின் நிழல்கள்

    5. தொட்டதும் விட்டதும்

    6. அலை நடுவில் அன்னபூரணி

    7. தேவி வந்தாள்

    8. மரியா

    9. வெண்மை போர்த்தியது

    10. வடிவம்

    11. இந்தியா கேட்

    ஏதோ பெயரில்லாத ஒன்று, ஒளிமயமான ஒன்று, தூரத்திலிருந்தபடி நம்மை நோக்கி, மினுமினுத்தபடி சைகை காட்டுகிறது. ‘என்னைப் பார், என்னைப் பார்’ என்றழைக்கும் அந்த புலப்படாத ஒன்று. இன்னும் உருவமற்ற நிலையில் பிரகாசமாக மிளிர்கிறது. ஆனால் உருவமற்ற அது, எந்த நிமிடமும் தன்னைச் சுற்றி வேகமாகக் குழம்பி விரையும் வாழ்க்கையுடன் மறுபடியும் கலந்து, உருகி, மறைந்துவிடுமென அச்சுறுத்துகிறது. நுணுக்கமான கணம். இதை பிரக்ஞையின் ஓட்டத்தில் அடையாளம் கண்டுகொள்ளும் தருணத்தில் கதை உதிக்கிறது. அதற்குப் பிறகு எழுதும் முயற்சி ஒரு ஏகாந்தமான தேடல், பிறகு அந்த ஒளிமயமான, புலப்படாத ஒன்று மெல்ல, மெல்ல உருவம் தரித்து வடிவமெடுக்கிறது.

    அத்துடன் ஒரு எழுத்தாளரை முன்னும், பின்னுமாக இழுத்தடிக்கும் முரண்பாடும் ஆரம்பமாகிறது. தோற்றமளித்த அந்த ஒன்றை அப்படியே அதனுடைய இயல்பான வண்ண ஒளிகளுடன் கதையில் சிறைப்படுத்தலாமே என்ற ஆர்வம் ஒரு பக்கம். அதே சமயத்தில், அந்த மென்மையான ‘ஒன்றை’ தொடாமல், குலைக்காமல், அதில் மோனமாய் நம்மைப் புதைத்துக்கொண்டு, அந்த அநுபவத்தில் நம்மை கரைத்துக் கொள்வோமே என்ற நாட்டம் இன்னொரு பக்கம். எதை எழுத்தில் சொல்லலாம், எதை சொல்லாமல் அந்தரங்கமாய் நமக்குள் விழங்கலாம் என்ற இன்னொரு முரண்பாடு. அதற்கிடையிலும் புல்லாய் முளைக்கிறது கதைக் கீற்று.

    காவேரி.

    என்னுரை

    இதுவரை பிரசுரமான எனது கதைகள், குறுநாவல்கள் அனைத்தையும் சேர்த்து தொகுதியாக வெளிவருவதை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். அதற்கும் அப்பால், சமீபகாலத்தில் நான் சந்திக்க நேர்ந்த என் வாசகர்களுக்காகவும் சந்தோஷப்பட்டேன். ஏனென்றால், எனது சில out of print கதைத்தொகுதிகளைக் குறித்து அவர்கள் ஏமாற்றமடைந்ததைப்பற்றித் தெரிவித்துக்கொண்டனர். இதே காரணத்தினால் ஆய்வாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர் என்று தெரிய வந்தது. அதற்காகவும், இந்தத் தொகுதிகளைப் பிரசுரிக்க முன்வந்தேன்.

    தொகுதிகளின் இறுதியில் வரும் சில கதைகள் மற்றும் குறுநாவல்களை நான் சிம்லாவின் Indian Institute of Advanced Study-இல் Fellow-வாக இருந்த 1993-1999 வருடங்களில் எழுதினேன். சுற்றிலும் பனிபோர்த்திய மலைச்சரிவும், நெஞ்சை நெருடும் அழகிய சூழலின் குளுமையான அமைதி மற்றும் ஏகாந்தமும் என்னை எழுதத் தூண்டின. இந்த வாய்ப்பை அளித்த Institute-இன் நிறுவனர் பேராசிரியர் ம்ரிணால் மீரிக்கு நான் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.

    ஆய்வாளர்கள், திறனாய்வாளர்கள் ஒரு பக்கம் இருக்க ‘கதை’ என்பதை ஒரு இலக்கியப் படைப்பாக எடுத்துக் கொள்வோம். அது சில சமயத்தில் எழுத்தாளருக்கும், வாசகருக்கும் ஒரு தத்துவக் குறியீடுபோல அமைந்துவிடுகிறது. கதை எழுதும் பழக்கம் ஏற்பட்டபின், அந்தப் பழக்கம் நம்மைச் சுற்றிச் சுழன்று வரும் வாழ்க்கையின் ஓட்டத்தில் தோன்றி மறையும் நிகழ்ச்சிகளை ஒரு கதை வடிவில் பார்வையிடும் கண்ணாடியை நம் மூக்கின்மீது பொருத்திவிடுகிறது. நாம் எதேச்சையாக நிகழ்ந்தன என்று நினைக்கும் சில சம்பவங்கள், அவை போகிற போக்கில் எப்படி ஒரு உண்மையை ஒளிமயமாக்கியபின் மறைகின்றனவோ, அதேமாதிரி பார்த்தமட்டிலேயே நழுவிக்கொண்டு போகும் இந்த வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்துகொள்ள தொடர்ந்து கதைகளை எழுதுகிறோம். நாம் அடையாளம் கண்டுகொள்ளும் உண்மையைப் பற்றி ‘கதைபோல’ சொல்லக் கற்றுக்கொள்கிறோம்.

    இலக்கியத் துறையில் நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளரும் யூதருமான ஐஸ்ஸாக் பாஷெவிஸ் சிங்கர் (Issac Bashevis Singer) படைப்பாற்றலைப் பற்றிச் சொன்னதை இங்கே நினைவுகூர்கிறேன். இஸ்ரேல் (Israel) தேசத்தைச் சார்ந்த சிங்கர், மூலப் படைப்புகளை யித்திஷ் (Yiddish) மொழியில்தான் எழுதுவார். பிறகு அவை பரபரப்புடன் ஆங்கிலம், பிரஞ்ச், ஜெர்மன் மற்றும் பல சர்வதேச மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். ஒரு எழுத்தாளருக்கு சிங்கர் சொல்வது: வழக்கமாக பொய் சொல்லும் பழக்கத்தை கடைப்பிடிக்கும் ஒரு பொய்யன் - அந்தப் பொய் சொல்வதில் எப்படி ஒரு சிறந்த கலைத்திறனுடன் இயங்குகிறானோ அவனைப் போலவே நீ உண்மையை எடுத்துச்சொல்ல கற்றுக்கொள்.

    இந்தத் தொகுதிகளில் இருக்கும் ஒவ்வொரு கதையும் அதற்கென்ற தனிப்பட்ட விதியைச் சுமந்தபடி வாசகர்களைத் தேடிக்கொண்டது. இதில் சில வாசகர்கள், திறனாய்வாளர்கள், ஆய்வாளர்களை நான் நேரில் சந்திக்க நேர்ந்தது என் பாக்கியம். எழுத்து என்பது எழுத்தாளருக்கு ஒரு நீண்ட பயணம் என்றால், ஒரு கதையின் பயணமும் அதன் ஊழ் இட்டுச் செல்லும் திசையில் போகிறது. அதிலும் மொழிக்கு மொழி, வித்தியாசம். எப்படி நான் ‘காவேரி’ என்ற புனைப்பெயரைப் பூண்டு, எனது தமிழ் பேனாவை எடுத்தமட்டில் எனக்கு இன்னொரு பரிமாணம் கிடைத்தாற்போல உணர்கிறேனோ, அதேபோல கதைகளும் தமிழ் வாசகர்களிடம் வேறு பிரத்தியேகமான உருவங்கள் பெறுகின்றன. அதே கதைகள் மற்ற மொழிகளில் (மொழிபெயர்ப்பில்) - ஆங்கிலம், ஹிந்தி, பிரஞ்சு, ஜெர்மன், மராத்தி, ஸ்பானிஷ் போன்ற சில மொழிகளில் - சற்றே நிறம் மாறி, உருவம் தரித்து, வேறுபட்ட பார்வைகளை சம்பாதித்துக் கொள்கின்றன.

    கதையும் வாழ்க்கையும், நகமும் சதையும்போல ஒரு பிரிக்க முடியாத உறவில் பிணைந்திருக்கின்றன. இந்தத் தொகுதிகளில் நான் ‘80’-களில், ‘90’-இல் எழுதிய கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 21-ஆம் நூற்றாண்டில் இந்தக் கதைகளைப் படிக்கும்போது, ஒரு சமூக - கலாச்சார – சரித்திர கோணத்திலும் பார்வையிட முடியும் என்று நினைக்கிறேன்.

    தமிழில் எழுதும்படி என்னை ஊக்குவித்த, தமிழ்நாட்டைச் சார்ந்த என் கணவர் அருண் கண்ணனை இங்கே நினைவு கூர்கிறேன். 2002-இல் காலம் சென்ற அவருக்காகவே இந்த என் தமிழ்ப் பற்று.

    ஒரு சிறந்த ஓவியரும், எப்போதும் இளமை ததும்பும் நகைச்சுவை மிகுந்த நண்பராகவும் இருந்த என் தாயார் திருமதி. சாரதாம்பாள் 2005-இல் காலம் சென்றார். அவர்களுக்கு இந்த நூல்களைச் சமர்ப்பிக்கிறேன்.

    காவேரி.

    புதுதில்லி.

    முன்னுரை

    ‘காவேரி’ என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் லட்சுமி கண்ணன் பல பரிமாணங்களையுடைய, நளினமும் நாஸூக்கும் மிகுந்த ஒரு நல்ல எழுத்தாளர். இயல்பிலேயே ஒரு கவிஞர் என்பதால், சமூகப் பிரச்சனைகளைக் கவித்துவம் மிகுந்த பார்வையினால் நோக்கிக் கலைநயத்துடன் இவரால் சொல்ல முடிகிறது.

    தம்முடைய தார்மீகக் கோபங்களைக் கலையாக மாற்றும் ஆற்றல் இவருக்குக் கை வந்திருக்கிறது.

    எழுத்தாளர்களுக்குக் கொள்கைப் போர்வை போர்த்தி, அவர்களைப் பெண்ணியவாதி என்றோ, முற்போக்கு அணியைச் சார்ந்தவர்கள் என்றோ பட்டயம் கட்டி, அவர்கள் எழுத்து வீச்சின் எல்லைக்கு வரம்பு கட்டுவது எனக்குப் பிடிக்காத காரியம். ஒவ்வொரு எழுத்தாளரையும், ஒரு குறிப்பிட்ட சமூக நிகழ்வு, அவரை, அவர் கல்விக்கேற்ப, அவர் வளர்ந்த சூழ்நிலைக்கேற்ப, அவர் அநுபவத்திற்க்கேற்ப எப்படிப் பாதிக்கின்றதோ, அவ்வளவில் தம்முள் உருவாகும் சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்கள், ‘இது என் கோட்பாடு; இதை வலியுறுத்துவதற்காக இதை எழுதுகிறேன்’ என்று ஒருவர் கூறினால், எஞ்சுவது கோஷமேயன்றி, கலையன்று. சமூகத்தில் புரையோடியிருக்கும் பலவிதமான பிரச்சனைகளை அணுகும் காவேரியின் எழுத்தில் எந்த இடத்திலும் கோஷம் ஒலிக்கவில்லை. பிரசாரம், இலக்கியத்தை ஆக்ரமித்துவிடவில்லை. அதனால்தான் குறுகிய கோட்பாட்டுச் சிமிழில் இவர் எழுத்தை அடைத்துவிட முடியாது என்று நான் நினைக்கின்றேன். இவர் பட்டயங்களைக் கடந்த பன்முனைப்பட்ட, விரிந்த தளங்களில் இயங்கும் எழுத்தாளர்.

    ‘ஊர்வசி 2000’, ஒரு நல்ல கதை. ‘ஊர்வசி’ என்பது குறியீடு. அவள் தேவையாகயிருக்கலாம். தேவதையாக இருக்கலாம், பெண் இயக்கத்து தீவிரவாதியாக இருக்கலாம், மண்டுவாக இருக்கலாம், சூனியக்காரியாக இருக்கலாம்... இவையெல்லாம் ஓர் ஆணின் பார்வையில். ஆனால், அவள் இயல்பில் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு சுதந்திரப் பறவை. விடுதலை அவள் மூச்சுக்காற்று. அவள் தன்னை இவ்வாறு அறிவித்துக்கொண்டு செயல்பட்டால் போதும். ஆண், பேச்சளவில், அத்தகைய பெண்ணைத்தான் விரும்புவதாகச் சொன்னாலும், செயல் என்று வரும்போது அவளை விட்டுவிலகி ஓடி விடுவான். சுதந்திர உணர்வுடைய பெண்ணைக் கண்டால் ஆணுக்கு அச்சம். தாழ்வு மனப்பான்மையில் விளையும் அச்சம்.

    நம் பௌராணிகப் பெண்களில் பலர் மர்மங்கள் நிறைந்தவர்கள். அவர்களுடைய சுதந்திரம் இந்த மர்மத்தில்தான் இருக்கிறது. ஊர்வசி, கங்கை, பாஞ்சாலி, காந்தாரி... அடுக்கிக்கொண்டே போகலாம். காவேரி கதையொன்றில் காந்தாரி கண் கட்டை அவிழ்த்து, இயற்கையையும், மனிதர்களையும் பார்க்க விழைகிறாள். அவளுக்குத் துணை இலக்குவனின் மனைவி ஊர்மிளை! கணவனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு, மாமியார்களுக்குச் சேவை செய்யும் கற்பு நிலை வழுவாத உத்தமமான பெண்! அவளுக்கும் சுதந்திர வேட்கை எழுகின்றது. இராமாயண, மஹாபாரதப் பாத்திரங்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் அற்புதமாக இணைத்திருக்கிறார் காவேரி.

    ‘ஏனென்றால்’ என்ற கதையில் வரும் ‘முனியக்கா’ ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரம். ‘நல்ல பேய்கள்’, ‘கெட்ட பேய்கள்’ இரண்டிலுமே அவளுக்கு நம்பிக்கையுண்டு. ‘கெட்ட பேய்களை’ அடக்க நம்மிடத்திலேயே ஒரு கெட்ட பேய்’ இருக்க வேண்டுமென்பது அவள் கொள்கை! காவேரி, இங்கு ‘பேய்களை’க் குறியீடுகளாகப் பயன்படுத்துகிறார். நம் சமுதாயத்தில் காணும் மூடநம்பிக்கைகள்தாம் ‘பேய்கள்’. இளம் வயதிலேயே விதவையாகிவிட்ட பட்டம்மாவை, அவள் முடி வைத்திருந்தாள் என்ற காரணத்துக்காக ஒரு மடாதிபதி அவளைச் சந்திக்க மறுத்து விடுகிறார். இந்த மூடநம்பிக்கை ஒரு ‘பேய்’. முனியக்கா சீறுகிறாள்: ‘ஐய்ய, வுடுங்கம்மா, இந்தப் பெரியவரை! அவர் என்ன மனுஷன்னு நான் கேக்கிறேன்! ஒரு பொம்பளை, அளகா, ஸர்ப்பம்போல கறுகறுன்னு நீண்ட முடியுடன் இருப்பதைப் பார்த்து ரஸிக்கத் தெரியாதவன் ஒரு ஆம்பிளையா சொல்லுங்க!’

    தமிழில் பல்கலைக்கழகத் தளங்களில் நிகழும் பேராசிரிய அவலங்களைப் பற்றிய கதைகள் மிகக் குறைவு. இத்தொகுதியில் வரும் ‘பொழுதொரு வண்ணம்’ அக்குறையை ஈடு செய்கின்றது. இதில் வரும் ‘வர்மா’வைப் போன்றவர்கள்தாம் பல்கலைக் கூடாரங்களில் அதிகம் இருக்கிறார்கள். மிக நுணுக்கமான பல தகவல்களை நயம்படக் கூறுகிறார் காவேரி. இக்கதையில், ஆணாதிக்கத்தாலும், தந்திரத்தாலும் பிளவுபடும் பெண் ஆசிரிய, மாணவ இனம், ஒன்றுபட்டு, இறுதியில், வர்மாவை முறியடிக்கின்றது. மிகத் துல்லியமாகச் சொல்லப்படும் இக்கதையின் நேர்த்தி பாராட்டத்தக்கது.

    குரலை உயர்த்தாமல், தணிந்த சொல் லாகவத்துடன், கலைநயம் மிளிர எழுதும் காவேரிக்கு என் வாழ்த்துக்கள்.

    இந்திரா பார்த்தசாரதி.

    கிறிஸ்டீன் கோமேஸ்: லட்சுமி கண்ணனுடன் ஒரு பேட்டி.

    ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: முனைவர் அ. மாரியப்பன்.

    கேள்வி: உங்கள் கதைகளில் மறக்க முடியாத எத்தனையோ பெண் பாத்திரங்களைப் படைத்து உலவவிட்டிருக்கிறீர்கள். அவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் முனியக்காவும் (‘முனியக்கா’, ‘ஏனென்றால்’) முனியம்மாவும் (‘ஆத்துக்குப் போகணும்’) போன்ற கல்வியறிவற்ற, உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள்தான். தென்னிந்தியாவில் கழிந்த உங்கள் இளமைக்கால வாழ்க்கை அனுபவங்களில் இந்நிழல்களுக்கு ஏதாவது நிஜங்கள் உண்டா?

    பதில்: உங்களுடைய நுட்பமான ஊகம் சரியானது. ஒரு எழுத்தாளருக்கு உரிய நுண்ணுணர்வு உங்களிடம் இருக்கிறது. அதனால்தான் உங்களால் இதை ஊகிக்க முடிந்ததென நினைக்கிறேன். ஒரு எழுத்தாளரை மற்றொரு எழுத்தாளர் பேட்டி காண்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சிக்கு உரியது. உண்மைதான். இப்பாத்திரங்களுக்குச் சில நிஜங்கள் உண்டு. எனக்கும் இவர்களை மிகவும் பிடிக்கும். இவர்களுடைய உலக ஞானம், இயல்பான நிலை மற்றும் சுயத்தன்மை என்னை ரொம்பவும் கவர்ந்தவை. இவர்களுடைய பண்பாட்டோடு கலந்த மண் வாசனை ததும்பும் கேலியும் சிரிப்பும் என்னால் மறக்க முடியாதவை. அவர்கள் தங்கள் வேர்களை இழந்தவர்கள் அல்லர்; மாறாக அந்த வேர்களிலிருந்தே தங்களுக்கான ஊட்டத்தைத் தொடர்ந்து பெற்று வருகிறவர்கள். இந்த வேர்கள்தான் அவர்களைத் தாங்கி நிற்கிறது; தனித்த கலாச்சார அடையாளத்தைத் தருகிறது. வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சுயமாக வரித்துக்கொண்ட தத்துவங்களால் வாழ்க்கையை - அதன் மேடு பள்ளங்களை - அவர்களால் எளிதில் சமாளிக்க முடிகிறது. அது அவர்களுக்கு சாத்தியமுமாகிறது.

    கேள்வி: உங்களுடைய ‘விழிப்பு’, ‘தேவி வந்தாள்’, ‘இந்தியா கேட்’ ஆகிய கதைகளில் வரும் சில குடும்பத்தலைவியின்மீது நீங்கள் ரொம்பக் கடுமையாக நடந்து கொள்வதுபோலத் தெரிகிறதே? எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு, அசமந்தமாக இருக்கிறார்களே! இதிலிருந்து விடுபட மாட்டார்களா? என்ற வேதனையிலிருந்தும் வேட்கையிலிருந்தும் பிறந்தது உங்கள் கோபம். இதன் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    பதில்: நீங்கள் குறிப்பிட்டுள்ள இப்பாத்திரங்கள் அறுபதுகளையும், எழுபதுகளையும், சிலர் எண்பதுகளையும் சார்ந்தவர்கள். நிச்சயமாக அவர்கள் தொண்ணூறுகளிலான பெண்கள் அல்லர். வம்பளப்பது, புறணி பேசுவது, வாழ்க்கையில் அர்த்தமற்ற, உபயோகமற்ற, மேலோட்டமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது; இதைவிட மோசமான பழக்கம் என்னவென்றால், யாராவது படித்த சுதந்திரமான பெண் ஏதாவது உருப்படியாகச் செய்ய முயற்சித்தால் அவரைக் குறை சொல்வது ஆகிய இவர்களுடைய இயல்புகளைத்தான் கடுமையாக விமர்சிக்கிறேன். அப்படியில்லாமல் வீட்டின் குடும்பத்தின் மேன்மைக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பெண்களை நான் பெரிதும் மதிக்கிறேன்.

    கேள்வி: உங்களுடைய பெண் பாத்திரங்களில் பலர் நல்ல திறமைசாலிகள். தம்மை நன்கு உணர்ந்த அறிவாளிகள். ‘புதிய இந்தியப் பெண்ணின்’ படிமமாக இவர்களைக் கருதுகிறீர்களா? இவர்கள்தான் நீங்கள் காணும் பாரதியின் புதுமைப் பெண்களா?

    பதில்: இதுபற்றிய என் கருத்தை உங்களுடன் விரிவாகப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பெ.கோ. சுந்தரராஜனைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ‘சிட்டி’ என்ற புனைப்பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருகிற ஒரு நல்ல இருமொழி எழுத்தாளர். அண்மையில் அவரும் பெ.சு. மணியும் இணைந்து ‘அதிசய மனிதர் வ. ரா’ என்றொரு நாவலை எழுதியுள்ளனர். வ. ரா. என்ற வ. ராமசாமி ‘மணிக்கொடி’ கால எழுத்தாளர். இந்தப் புத்தகத்தில் ஒன்றை எனக்கு அன்பளிப்பாக அளித்த சிட்டி அதில்,

    பாரதியும் வ. ராவும்

    கனவு கண்ட புதுமைப்பெண்

    லட்சுமி கண்ணனுக்கு

    அன்புடன்

    என்று எழுதியிருந்தார். இது என்னைப் பற்றிய மிகையான புகழுரைதான். அந்த அளவுக்கு நான் தகுதியானவள் அல்ல. என்றாலும், புதிய இந்தியப் பெண் குறித்த ஆடவர் கண்ணோட்டத்தை என்னால் இதிலிருந்து உணர்ந்துகொள்ள முடிந்தது. ஆண்கள் சொல்லும் சிந்தனை பெண்ணியக்கத்தைச் சார்ந்த பெண்ணியவாதிகள் (Professional feminists) படிமத்திலிருந்து பெரிதும் வேறுபட்டது.

    கேள்வி: ஆண் - பெண் இருவர் மீதும் சம அளவில் அக்கறை கொண்ட இருபால் இணைநோக்கை (androgynous vision) முன் வைக்கின்ற ஒரு நடுநிலைப் பெண்ணியவாதி என்று உங்களை வர்ணிக்கலாம் என்பது என் கருத்து. பெண்ணியம் குறித்த உங்கள் கருத்து என்ன?

    பதில்: மிகவும் நன்றி. எதையும் நடுநிலையோடும் முழுமையோடும் புரிந்துகொள்ளவே நான் முயலுகிறேன். ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக கட்சி சார்ந்தோ, குறுகிய நோக்குடனோ செயல்படுவது என்பது பக்குவமற்றது. காரணம், வாழ்க்கை என்பது விரிந்து பரந்தது; எளிதில் கைவசப்படாதது. வகைகளாகப் பிரிக்கும் விமர்சகர்களுக்கு இங்குதான் பிரச்சனை வருகிறது. எழுத்தாளர்களை இவர் இவ்வகை எழுத்தாளர் என்று வகைப்படுத்திப் பழகிப்போன அவர்கள் என்னை எந்த வகையில் அடக்குவது எனத்தெரியாமல் தடுமாறுகிறார்கள். நான் ஒரு பெண்; பெண்ணெழுத்தாளர். சமகாலத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவள் என்பதால், ஒரு பெண்ணிய எழுத்தாளருக்குரிய கோட்பாடு பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்கள் புரிந்துகொண்டிருக்கிற ‘பெண்ணியம்’ பற்றிய அளவுகோலுக்குள், வரையறைக்குள் நான் பொருந்திப் போக வேண்டும். வரையறைகளின் காலத்தில்தானே நாம் வாழ்கிறோம்!

    பெண்ணியம் பற்றிய என்னுடைய கருத்து என்ன? இதற்கு ஒருசில வரிகளில் பதிலளித்துவிட முடியாது. அதே நேரத்தில், ‘பெண்ணியத்துக்குப் பிறகு என்ன?’ என்று சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நான் வலுவாகவே உணர்கிறேன். சுயசிந்தனையும் சுரணையும் அறிவும் உணர்வும் கொண்ட ஒவ்வொரு பெண்ணுக்கும், பெண்ணியம் பற்றிய வழக்கமான அளவுகோல்களையும் கோட்பாடுகளையும் மீறிச் செல்கிற அகவலிமையும் ஆற்றலும் உண்டு என நான் நம்புகிறேன்.

    கேள்வி: ஆண் தலைமைச் சமூகத்தில் பெண்களைப்பற்றிய ஆண்களின் கணிப்பு முழுக்க முழுக்க ஆண்களுடைய அறியாமையின் வழிப்பட்டதேயின்றி,

    Enjoying the preview?
    Page 1 of 1