Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஸ்ரீ கந்த புராணம்
ஸ்ரீ கந்த புராணம்
ஸ்ரீ கந்த புராணம்
Ebook749 pages4 hours

ஸ்ரீ கந்த புராணம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முருகப்பெருமான் தமிழ்த்தெய்வம். குறிஞ்சிக்கிழவோன் என்று சங்க நூல்களில் குறிப்பிடப்படுபவன். பண்டைக் காலத்தில் தமிழ் நிலம் ஐவகையாகப் பகுக்கப்பட்டிருந்தன. மலையும், மலை சார்ந்த பகுதிகளும் குறிஞ்சி எனப்பட்டது. இந்நிலத்தின் இறைவன் கந்தவேள். நக்கீரனால் இயற்றிய திருமுருகாற்றுப்படையே கந்தப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்கும் முதல் தமிழ் நூல் எனலாம். முருகன் என்றால் அழகன் என்று பொருள். தமிழ் என்றாலும் அழகுதான். அமுதுதான். இது காரணம் பற்றியே முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகன் என்கிறார் அருணகிரிநாதர். முருகனின் திருஅவதாரம் தொடங்கி அவனது முழு வரலாற்றையும் வடமொழியில் ஸ்காந்த புராணம் விவரிக்கிறது. அதை அடியொட்டி கச்சியப்ப சிவாச்சாரியார் அழகு தமிழில் கந்தபுராணத்தை இயற்றியிருக்கிறார்.
கந்தபுராணத்தைப் படிக்கும்போது முருகப்பெருமானின் பெருமைகளை மட்டுமல்லாமல் தமிழ் வளர்த்த அகத்திய முனிவர் பற்றிய செய்திகளையும் தட்ச சம்ஹாரம் முதலிய புராண வரலாற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய சிறப்புக்களுடன் செய்யுள் வடிவில் இருந்த கந்தபுராணத்தை கதைவடிவில் ஆக்கியிருக்கிறார் கார்த்திகேயன் என்கிற ஸ்ரீ எஸ். ராமநாதன். யாவரும் படித்து எளிதில் தெரிந்து கொள்ளக் கூடிய சிக்கல் இல்லாத இனிய தமிழ் நடை. சூரபத்மன் தேவர்களுக்கு இழைத்த கொடுமைகள், அவர்களை விடுவிக்க வேண்டி அவதரித்த திருமுருகன் வரலாறு முழுக்க விரிவாகத் தரப்பட்டிருக்கிறது இந்நூலில். இதனை எல்லோரும் பக்தியுடன் மனமுருகி படித்து முருகனின் அருளை பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி ப்ரார்த்திக்கின்றோம்.
பல வாசக நேயர்களின் விருப்பத்திற்கிணங்க ஸ்ரீ கந்த புராணம் எனும் இவ்வரிய நூல் தற்சமயம் மின்புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது. முருகப்பெருமானின் அடியார்கள் இதனை பெருமளவில் வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டுகிறோம்.

Languageதமிழ்
Release dateJan 30, 2021
ISBN9788179500590
ஸ்ரீ கந்த புராணம்

Read more from Karthikeyan S

Related to ஸ்ரீ கந்த புராணம்

Related ebooks

Related categories

Reviews for ஸ்ரீ கந்த புராணம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஸ்ரீ கந்த புராணம் - Karthikeyan S

    பதிப்புரை

    முருகப்பெருமான் தமிழ்த்தெய்வம். குறிஞ்சிக்கிழவோன் என்று சங்க நூல்களில் குறிப்பிடப்படுபவன். பண்டைக் காலத்தில் தமிழ் நிலம் ஐவகையாகப் பகுக்கப்பட்டிருந்தன. மலையும், மலை சார்ந்த பகுதிகளும் குறிஞ்சி எனப்பட்டது. இந்நிலத்தின் இறைவன் கந்தவேள். நக்கீரனால் இயற்றிய திருமுருகாற்றுப்படையே கந்தப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்கும் முதல் தமிழ் நூல் எனலாம். முருகன் என்றால் அழகன் என்று பொருள். தமிழ் என்றாலும் அழகுதான். அமுதுதான். இது காரணம் பற்றியே முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகன் என்கிறார் அருணகிரிநாதர். முருகனின் திருஅவதாரம் தொடங்கி அவனது முழு வரலாற்றையும் வடமொழியில் ஸ்காந்த புராணம் விவரிக்கிறது. அதை அடியொட்டி கச்சியப்ப சிவாச்சாரியார் அழகு தமிழில் கந்தபுராணத்தை இயற்றியிருக்கிறார்.

    கந்தபுராணத்தைப் படிக்கும்போது முருகப்பெருமானின் பெருமைகளை மட்டுமல்லாமல் தமிழ் வளர்த்த அகத்திய முனிவர் பற்றிய செய்திகளையும் தட்ச சம்ஹாரம் முதலிய புராண வரலாற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய சிறப்புக்களுடன் செய்யுள் வடிவில் இருந்த கந்தபுராணத்தை கதைவடிவில் ஆக்கியிருக்கிறார் கார்த்திகேயன் என்கிற ஸ்ரீ எஸ். ராமநாதன். யாவரும் படித்து எளிதில் தெரிந்து கொள்ளக் கூடிய சிக்கல் இல்லாத இனிய தமிழ் நடை. சூரபத்மன் தேவர்களுக்கு இழைத்த கொடுமைகள், அவர்களை விடுவிக்க வேண்டி அவதரித்த திருமுருகன் வரலாறு முழுக்க விரிவாகத் தரப்பட்டிருக்கிறது இந்நூலில். இதனை எல்லோரும் பக்தியுடன் மனமுருகி படித்து முருகனின் அருளை பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி ப்ரார்த்திக்கின்றோம்.

    பல வாசக நேயர்களின் விருப்பத்திற்கிணங்க ஸ்ரீ கந்த புராணம் எனும் இவ்வரிய நூல் தற்சமயம் மறுபதிப்பாக வெளியிடப் பட்டுள்ளது. முருகப்பெருமானின் அடியார்கள் இதனை பெருமளவில் வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டுகிறோம்.

    பதிப்பகத்தார்

    பொருளடக்கம்

    1. சபையிலே எழுந்த மறுப்பு

    2. சொல்லை விளக்க வந்த செந்தமிழ்க் குமரன்

    3. பிரம்மன் உருட்டி விட்ட சக்கரம்

    4. தாமரை மலரிலே தெய்வக் குழவி

    5. தவச்சாலையில் திருக்குமரி

    6. கல்லால மரத்தின் கீழ் கருைண வடிவம்

    7. காமனுக்கு விடுத்த கட்டளை

    8. காமனை எரித்த கண்பொறி

    9. கானகத்திலே கபட வேஷதாரி

    10. மணம் பேச வந்த முனிவர்கள்

    11. மணக்கோலத்தில் மஹாதேவன்

    12. வடக்கு உயர்ந்தது

    13. பார்வதி திருமணம்

    14. முருகன் திருஅவதாரம்

    15. நவ வீரர்கள் தோன்றினர்

    16. சரவணத்தில் சோமாஸ்கந்த காட்சி

    17. தேவ சேனாபதி

    18. வாகனமாகிய ஆட்டுக்கடா

    19. சிறைப்பட்ட பிரம்மன்

    20. மகிழ்ச்சியில் தோன்றிய மங்கையர் இருவர்

    21. போருக்கெழுந்த படை

    22. மாயையுடன் போரிட்ட அசுரன்

    23. மகேந்திரபுரியிலே அசுரேந்திரன்

    24. செந்தில் வந்த சேய் வடிவேலன்

    25. அசுரர்கள் தோற்றம்

    26. சிரஞ்சீவி மார்க்கண்டேயன்

    27. மாயை செய்த உபதேசம்

    28. அசுரன் நடத்திய வீர வேள்வி

    29. அண்டகோசம்

    30. திக்விஜயம் புறப்பட்ட அசுரன்

    31. படைக்க வந்த ருத்திரர்கள்

    32. சூரனுடைய மகுடாபிஷேகம்

    33. சிறைப்பட்டான் சூரியன்

    34. வில்வலன் பெற்ற விசித்திரமான வரம்

    35. மூங்கிலாக நின்ற அமரர்கோன்

    36. கர்வம் கொண்ட விந்தியன்

    37. வாதாபி ஜீரணமானான்

    38. கமண்டலத்து நீரைக் கவிழ்த்த காகம்

    39. திருக்குற்றாலத்தில் குறுகிய பெருமான்

    40. அன்பினால் உதித்த ஹரிஹரன்

    41. அரக்கியின் துண்டித்த கை

    42. பானுகோபன் புறப்பட்டான்

    43. சிறைபட்ட இந்திரகுமாரன்

    44. இலங்கையின் அழிவு

    45. மஹோந்திரபுரியில் வீரபாகுத்தேவர்

    46. கனவிலே தோன்றிய கந்தவேலன்

    47. அசுரன் சபையிலே ஐயனுடைய அருள் தூதன்

    48. சூரபத்மனும், வீரபாகுவும்

    49. சூரனின் சோகம்

    50. முருகப் பெருமானின் ஹோமகூடம்

    51. முருகப்பெருமானும் நாரதரும்

    52. அசுர புத்திரர்களுடைய அற்புதப் போர்

    53. சூரனுடைய சீற்றம்

    54. இளவலின் இரண்டாம் நாள் யுத்தம்

    55. புதல்வன் கூறிய புத்திமதி

    56. அக்கினி முகன் அழிந்தான்

    57. மூவாயிரவர் மறைந்தனர்

    58. திக்கஜம் மீண்டது

    59. புறப்பட்டான் பானுகோபன்

    60. மாயா பாசம் கட்டியது

    61. தலைகள் முளைத்தன

    62. யுத்தகளத்தில் ஓர் அற்புதம்

    63. பதுமகோமளை நாயகன் பறவையானான்

    64. மாய வடிவங்களில் மாயா புதல்வன்

    65. பாலகன் கொண்ட பேருருவம்

    66. சேவலும் மயிலுமானான்

    67. மஹோந்திரபுரி அழிந்தது

    68. திருப்பரங்குன்றத்தில் திருமுருகன்

    69. தேவமகளின் திருமண ஏற்பாடுகள்

    70. குரங்கு செய்த சிவபூஜை

    71. தெய்வயானைத் திருமணம்

    72. இந்திரன் முடிசூட்டு விழா

    73. இந்திரனுடைய மனமாற்றம்

    74. சிவனே பரப்பிரம்மம்

    75. நாரதர் பெற்ற சாபம்

    76. சந்திரனிடம் கொண்ட கோபம்

    77. புலகர் அறிவுரை

    78. இறைவியை பீடித்த தோஷங்கள்

    79. காளிந்தி நதியிலே கண்டெடுத்த குழந்தை

    80. திருமணத்தில் ஒரு குழப்பம்

    81. தக்ஷனுக்கு ஏற்பட்ட அவமானம்

    82. தடைப்பட்ட பிரம்மயாகம்

    83. ஈசனை விலக்கி தக்ஷன் செய்த வேள்வி

    84. தக்ஷன் எழுப்பிய கேள்வி

    85. ததீசி முனிவர் தந்த விளக்கம்

    86. கஜ சம்ஹார மூர்த்தி

    87. ஆணவத்தால் சிரத்தை இழந்த பிரம்மன்

    88. ஈசனுடன் போரிட்ட இந்திரன்

    89. கோபத்திலிருந்து உண்டான அசுரன்

    90. ரிஷபமாக வடிவெடுத்த தருமதேவதை

    91. நஞ்சுண்ட கண்டன்

    92. கங்கையைத் தாங்கிய கங்காதரன்

    93. இறைவிக்கு இடப்பாகம் அளித்த இறைவன்

    94. விநாயகர் தோற்றம்

    95. ததீசி முனிவருடைய சாபம்

    96. அழிந்தது யாகம்

    97. அடிமுடி காணா இறைவன்

    97(A). அடிமுடி காணா இறைவன்

    98. முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள்

    99. வீரபாகுத்தேவர் பெற்ற சாபம்

    100. முசுகுந்தன் கொணர்ந்த தியாகேசர்

    101. வள்ளியை மணந்த வேலவன்

    102. கனகாபிஷேகம்

    1. சபையிலே எழுந்த மறுப்பு

    மாபெரும் சபை கூடியிருந்தது. மண்டபம் முழுவதிலும் மக்கள் நிறைந்திருந்தனர். புலவர்களும், பண்டிதர்களும், சாஸ்திர விற்பன்னர்களும், ஸகலகலா வல்லுனர்களும் அங்கே குழுமியிருந்தனர். அன்றைய தினம் அந்தச் சபையிலே அரங்கேற இருக்கும் அற்புத நூலைக் கேட்க அவர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

    குறிப்பிட்டிருந்த நேரம் நெருங்கியது. குமரக் கோட்டத்தில் கோலம் கொண்டுள்ள கந்தப் பெருமானுடைய பூஜையை முடித்துக் கொண்டு எழுந்தார் கச்சியப்ப சிவாச்சாரியார். பகவானுடைய திருப்பாதங்களுக்கு அருகே வெண்ணிறப் பட்டினால் சுற்றி வைக்கப் பட்டிருந்த ஓலைச் சுவடிகளை எடுத்துக் கண்களிலே ஒற்றிக் கொண்டார். அவருடைய பார்வை மந்தகாசத்தோடு நிற்கும் இறைவன் திருவடியிலே பதிந்தது.

    முருகா, என்னப்பனே, எல்லாம் இனிது நிறைவேற உன் அருள் துைண நிற்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டார். பின்னர் அந்த சுவடிகளைப் பக்தியோடு கைகளில் ஏந்தியவராய்ப் புறப்பட்டார்.

    மண்டபத்தினுள் நுழைந்ததும் பெருத்த மகிழ்ச்சி ஆரவாரம் கச்சியப்பரை வரவேற்றது. அவருடைய உள்ளம் ஆனந்தத்தால் நிறைந்து வழிந்தது. பல நாட்களாக ஆவலோடு அவர் எதிர்நோக்கிக் காத்திருந்த பொன்னாள் அல்லவா! மண்டபத்தின் மத்தியிலே சற்று உயரமாக அமைக்கப்பட்டிருந்த மேடையை நோக்கி இரு கைகளையும் கூப்பி வணங்கியபோது, அவருடைய கண்களிலிருந்து நீர் பெருக் கெடுத்தது. நாத்தழுதழுத்தது.

    பேரன்புடைய பெருமக்களே, அடியேன் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை எழுதி முடித்துள்ள இந்நூலை, தங்கள் சமூகத்தில் அரங்கேற்றம் செய்ய வந்துள்ளேன். அனுமதி வழங்க வேண்டும் என்று வேண்டினார்.

    தொடங்கட்டும்... ஆரம்பிக்கலாம் என்ற குரல்கள் எழுந்தன. கச்சியப்பர் மெல்ல மேடைமீதேறி அமர்ந்து சுவடிகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். அவர் உள்ளம் குமரப் பெருமானைத் தியானித்தது, கண்மூடித் தியானத்தில் அமர்ந்திருந்த அவர் சிறிது நேரம் பொறுத்துக் கண்விழித்தார். அருகிலே வைக்கப்பட்டிருந்த தட்டில் இருந்த மலர்களில் இருந்து சில மலர்களை எடுத்து பகவானைத் தியானித்தவாறு ஓலைச் சுவடிகளின் மேல் சமர்ப்பித்தார். பிறகு அவற்றை எடுத்து மடிமீது வைத்துக் கொண்டு நூலைப் பிரித்து முதல் சுவடியைக் கையிலே எடுத்தார். அடுத்த கணம் அமைதி நிறைந்த அந்தச் சபையிலே அவருடைய குரல் கணீரென்று எழுந்தது.

    திகட சக்கரச் செம்முக மைந்துளான்

    சகட சக்கரத் தாமரை நாய

    னகட சக்கர வின்மணி யாவுறை

    விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.

    விநாயகர் காப்பாகத் தாம் பாடியிருந்த முதல் பாடலை எடுத்துச் சொன்ன கச்சியப்பர் அந்தப் பாடலுக்கான விளக்கத்தைப் பதம் பிரித்துத் தரலானார்.

    திகழ் தசக்கரச் செம்முகம் ஐந்து உளான். அதாவது விளங்கா நின்ற பத்துத் திருக்கைகளும், செவ்விய ஐந்து திருமுகங்களும் உள்ள சிவபெருமானுடைய என்று பொருள் கூறினார்.

    அப்போது கூட்டத்திலே அமர்ந்திருந்த புலவர்களுள் ஒருவர் எழுந்து நிற்கவே, மேற்கொண்டு பொருள் கூறுவது தடைப்பட்டது.

    ஐயா, தங்களுக்கு என்ன வேண்டும்? பாடலைத் திரும்பவும் படிக்கட்டுமா? என்று கேட்டார் கச்சியப்பர்.

    சுவாமி, ஒரு சந்தேகம் நிமித்தம் எழுந்து நிற்கிறேன். அதைத் தெளிவுபடுத்திய பின்னர் மேலே தொடரலாம் என்று தெரிவித்தார் அவர்.

    உங்களுடைய சந்தேகம் என்னவென்பதைக் கூறுங்கள் என்றார் கச்சியப்பர்.

    சுவாமி, திகழ் தசம் என்ற வார்த்தைகள் திகடசம் எனப் புணர்வதற்கு விதி தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களில் கிடையாதே, பின் எவ்வாறு அப்பதங்களைச் சேர்த்தீர்கள்? என்று கேட்டார் அவர்.

    ஆம், அவர் கேட்பது சரியே, இலக்கண விதிப்படி திகடசம் சரியான சேர்க்கை அல்லவே என்று கூட்டத்திலிருந்த வேறு சிலரும் தெரிவித்தார்கள்.

    ஆம், நீங்கள் கூறுவது சரியே, அதனை நானும் அறிவேன். ஆனால் இந்த முதல் அடியான ‘திகட சக்கரச் செம்முக மைந்துளான்’ என்பது நான் பாடியது அல்ல. அந்த முதல் அடி என்னப்பன் கந்தப் பெருமான் எடுத்துத் தந்தது அன்றோ, அதனை அப்படியே வைத்துப் பாடலை நான் பூர்த்தி செய்துள்ளேன் என்றார் கச்சியப்பர்.

    அதைக் கேட்டு அந்தப் புலவரும் வேறு சிலரும் சிறு நகை செய்தனர்.

    சுவாமி, ஈசன் திருக்குமரன் தங்களுக்கு எடுத்துத் தந்திருப்பது உண்மையாயின் அவ்விதமே இருக்கட்டும். அது தங்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமும் ஆகும். அதனை நாங்கள் எவ்வாறு ஏற்பது? தங்களுக்குத் தோன்றி குமரப் பெருமான் அடி எடுத்துத் தந்தது போல், இங்கே எங்களிடையே அவர் தோன்றி, ‘இந்த அடி நாம் எடுத்துக் கொடுத்ததே’ எனக்கூறட்டும். மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம். அல்லது யாதேனுமோர் இலக்கண நூலில் விதி காட்டுங்கள். இல்லையேல் இந்த நூல் அரங்கேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.

    அந்தப் புலவர் கூறியது சரியே என வேறு சிலரும் ஆமோதித் தனர். கச்சியப்பர் என்ன செய்வார்? எவ்வளவு ஆனந்தத்தோடு அவர் சுவடியை எடுத்து முதற் பாடலைப் படித்தார்! முதல் வார்த்தைக்கே ஆட்சேபமா? இவ்வாறு தடைப்படும் என்று அவர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவர் உள்ளம் தவித்தது. இறைவன் எடுத்துத் தந்த அடிக்கு அவர் எவ்வாறு ஆதாரம் காட்டுவார்? இது என்ன சோதனையோ? அவருடைய கண்களில் நீர் திரையிட்டது. எதிர்பாராது எழுந்துள்ள இந்த இக்கட்டான நிலையை எவ்வாறு சமாளிப்பது என்பது தெரியாமல் தடுமாறினார். உடல் பதற நெஞ்சம் துடிக்க ஓலைச் சுவடிகளை மேடையிலே வைத்துவிட்டு எழுந்து நின்று கைகூப்பி மக்களை வணங்கினார்.

    பெரியோர்களே, சபை இத்துடன் இன்று கலைந்து நாளை மீண்டும் கூட்டப்படும். அவ்வமயம் தங்களுடைய சந்தேகத்தைப் போக்க இரண்டினுள் ஒன்று செய்யப்படும் தட்டுத் தடுமாறிக் கூறி முடித்தார்.

    கச்சியப்பருடைய வார்த்தைகளை ஏற்றுச் சபை கலைந்தது. எல்லோரும் எழுந்து சென்றனர். அவர்கள் போவதையே வெறிக்கப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்த கச்சியப்பர் கன்னங்களின் வழியே நீர்த்துளிகள் உருண்டு சென்ற வண்ணம் இருந்தன. மண்டபத்தில் இருந்த கடைசி மனிதன் வெளியேறிய பின்னரே அவர் தம் உணர்வை அடைந்தார். ஓலைச் சுவடிகளை எடுத்துப் பட்டிலே வைத்துச் சுற்றிக் கைகளில் எடுத்துக்கொண்டு குமரக்கோட்டத்தை நோக்கிப் புறப்பட்டார். வரும்போது இருந்த உற்சாகம் இப்போது அவருடைய நடையில் காணப்படவில்லை. நடை மிகவும் தளர்ந்து போயிருந்தது.

    ï

    2. சொல்லை விளக்க வந்த செந்தமிழ்க் குமரன்

    காளத்தியப்ப சிவாச்சாரியார் ஆதிசைவ வேதியர் குலத்திலே வந்தவர். சாஸ்திரங்களில் சிறந்த பாண்டித்யம் உடையவர். முக்தி தரும் நகரங்கள் ஏழினுள் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரத்தில் குமரக் கோட்டத்தில் திருக்கோலம் கொண்டுள்ள அப்பெருமானை நாள் தோறும் பக்தியோடும் நியமத்தோடும் பூஜித்து வந்தார்.

    வாழ்க்கையில் எல்லாவித ஸௌகரியங்களையும் பெற்றிருந்த காளத்தியப்பருக்கு ஒரு குறை மட்டும் இருந்து வந்தது. திருமணமாகி வெகுகாலம் ஆகியும் வம்சம் விளங்கக் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் அவரை வாட்டியது. தாம் பக்தியுடன் ஆராதித்து வரும் குமரன் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. குமரா, குழந்தை பாக்கியம் அருள மாட்டாயா? என்று தினமும் இறைஞ்சி வந்தார்.

    காளத்தியப்பருடைய நம்பிக்கையும் பிரார்த்தனையும் வீண்போக வில்லை. அவர் மனைவி கருவுற்று ஆண் குழந்தைக்குத் தாயானாள். காளத்தியப்பர் அளவற்ற ஆனந்தம் கொண்டு குமரனைக் கொண்டாடினார். அவனுடைய அனுக்கிரகத்தாலேயே தமக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தது என்று மகிழ்ச்சிக் கடலிலே நீந்தினார்.

    குமாரன் கச்சியப்பன் பாலகனாக இருக்கையிலே சூட்டிகையுடன் காணப்பட்டான். எதிர்காலத்திலே சிறந்து விளங்கப் போகிறான் என்பதை அறிவிப்பதே போல் அவன் அறிவு, அன்பு, அடக்கம் முதலிய நற்குணங்களுடன் வளர்ந்து வந்தான். தமிழ், ஸமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கினான். வடமொழி யிலும் தமிழிலும் உள்ள பல நூல்களையும் கருத்துடன் படித்தான்.

    கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கும் மகனைக் கண்டு காளத்தியப்பர் உள்ளம் பூரித்துப் போனார். எம்பெருமான் தமக்களித்த திருமகனை அவருடைய சேவையிலேயே ஈடுபடுத்தினார். கச்சியப்பர் தம்முடைய மற்றப் பணிகளோடு நாள்தோறும் குமரக் கோட்டத்துக் குமரனைப் பூஜிக்கும் பணியை ஏற்றுக்கொண்டார்.

    சமயதீக்ஷை பெற்ற கச்சியப்பர் தேவார திருவாசகங்களை ஓதினார். விசேஷ தீக்ஷை பெற்று சைவாகமங்களில் கிரியா காண்டங்களைக் கற்றறிந்து கொண்டார். அதன் பிறகு நிர்வாண தீக்ஷையும், ஆசாரிய அபிஷேகமும் பெற்று சிவாகமத்தின் ஞான காண்டங்களைக் கற்று, அவற்றின் பொருளையும் தேவார திருவாசகத்தின் பொருளையும் உணர்ந்தார். வேதத்தின் ஞான காண்டங்களாகிய உபநிஷதங்களின் பொருளோடு அப்பொருள் மாறுபடாதிருக்கக் கண்டார்.

    இவ்வாறு நாள்தோறும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கி வரும் கச்சியப்பர் குமரப் பெருமானை உள்ளன்போடு பூஜை செய்து வந்தார். ஒருநாள் கச்சியப்பருடைய சொப்பனத்தில் முருகப் பெருமான் தோன்றி, அன்பனே, ஸ்காந்த புராணத்தின் ஆறு சம்ஹிதைகளுள் சங்கர சம்ஹிதையின் முதற் காண்டமாகிய சிவரகசிய காண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள நம்முடைய சரித்திரத்தைக் கந்தப் புராணமாகத் தமிழிலே பெருங்காப்பியமாகப்பாடு என்று கட்டளையிட்டார். அத்துடன், திகடசக்கரச் செம்முக மைந்துளான் என்று அடியெடுத்துக் கொடுத்து மறைந்தார்.

    கண்விழித்த கச்சியப்பருக்கு மேனி சிலிர்த்தது. நெஞ்சம் நெக்குருகியது. தம்மிடம் கந்தனுக்கு உள்ள கருைணயை நினைத்து உள்ளம் விதிர்விதிர்த்தார். அவருடைய கண்கள் ஆனந்த பாஷ்பத்தைப் பெருக்கின.

    முருகா, அடியேனிடம் உனக்குள்ள கருைணதான் என்னே! நாயினும் கடையனாகிய என்னைக் கொண்டு உன் புகழ் பாடப் பணித்த உன் கருைணயை எவ்வாறு இயம்புவது? என்று மனம் உருகிப் ப்ரார்த்தித்தார். பகவானுடைய கட்டளையை அப்போதே சிரமேற் கொண்டார்.

    ஐயனே, அடியேனை மாபெரும் பணியில் ஈடுபடுத்திய நீதான் அப்பணியையும் இனிது பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்றார் நெஞ்சம் தழுதழுக்க.

    அன்றைய தினம் வழக்கமான பூஜைகள் முடிந்ததும், கச்சியப்பர் கந்தன் திருவடிகளிலே தலை தாழ்த்தி வணங்கி, அங்கேயே அமர்ந்து புராணம் பாடத் தொடங்கினார். எம்பெருமான் எடுத்துக் கொடுத்த அடியையே முதல் அடியாகக் கொண்டு விநாயகர் காப்பைப் பாடினார். அடுத்த செந்தமிழ் மணம் கமழும் பாடல்கள் உருவாயின.

    நடுநடுவே கச்சியப்பருக்குத் தாம் இயற்றியுள்ள பாடல்கள் பிழை ஏதுமின்றி இருக்கின்றனவா என்ற சந்தேகம் வந்துவிடும். ஓலைச் சுவடிகளிலே எழுதிய பாடல்களைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்ப்பார். அதைவிட இன்னும் மேலானதாக இயற்ற முடியாது எனத் திருப்தி ஏற்பட்டதும் மேலே தொடருவார்.

    அவருடைய உள்ளத்துக்குத் திருப்தி ஏற்பட்டு விட்டால் போதுமா? மற்றவர்களும் அதனை ஏற்க வேண்டாமா? யாரிடம் காட்டுவது? தமக்குக் கட்டளையிட்ட அந்த முருகனைத் தவிர வேறு யாரும் அவருக்குத் தோன்றவில்லை. நூறு பாடல்கள் எழுதியதும் அவற்றை ஒழுங்கு செய்து நூலினால் கட்டி, குமரனுடைய பாதங்களில் சமர்ப்பித்து விடுவார். இரவு பூஜைகள் முடிந்து திருக்கதவைத் தாழிட்டுச் செல்லும்போது எம்பெருமானே இன்று பாடிய பாடல்களை உன் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டேன். நாளை மேற்கொண்டு பாட அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு வீடு திரும்புவார். மறுநாள் காலையில் கதவு திறந்ததும் சுவடியை எடுத்துப் பார்த்தால் அங்கங்கே ஓரிரு இடங்களில் வார்த்தைகள் திருத்தப் பட்டிருக்கும்.

    ‘ஆஹா.... குமரப் பெருமான் அவருடைய பாடல்களை அங்கீகரித்து விட்டான்!’ கச்சியப்பருக்குத் தேகம் நிலை கொள்ளாது தவித்தது. ஓலைச் சுவடிகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். தலைமீது வைத்துக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். எவருக்கும் கிட்டாத பாக்கியம் இவருக்குக் கிட்டியிருக்கிறதன்றோ! கந்தன் அவரைக் கொண்டு தன் புராணத்தைப் பாடச் செய்து, அவற்றைச் சரி பார்த்தும் அங்கீகாரம் செய்கின்றான். அவரிடம் பெருமானுக்குள்ள அன்புதான் எத்தகையது!

    நாட்கள் செல்லச் செல்ல புராணம் உருவாகி வந்தது. நாள்தோறும் கச்சியப்பர் வைத்துச் செல்லும் சுவடிகளை கந்தப் பெருமான் சரி பார்த்து வந்தார். இவ்வாறாக 10,345 செய்யுள்களுடன் புராணம் முடிந்தது. கச்சியப்பர் பெருமகிழ்ச்சி அடைந்தார். தாம் பாடி, இறைவன் அங்கீகரித்த நூலை அறிஞர்களும் ஏற்க வேண்டும் என விரும்பினார் அவர். ஆகவே அறிஞர்களும், பண்டிதர்களும் நிறைந்த மாபெரும் சபையிலே அதை அரங்கேற்ற எண்ணம் கொண்டார். சுபதினமும், சுபமுகூர்த்தமும் நிச்சயிக்கப்பட்டு, குமரக் கோட்டத்தில் அந்த நேரத்தில் வந்து கூடுமாறு எல்லோருக்கும் அழைப்புகள் விடுத்தார். கச்சியப்பருடைய புலமையை நன்கு அறிந்த அவர்கள் அந்த அழைப்பை மிக்க சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டனர்.

    குமரக் கோட்டம் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டது. பந்தல்கள் போடப்பட்டு, தோரணங்களும், வண்ணக்கொடிகளும் அலங்காரமாகக் கட்டப்பட்டன. மக்கள் இறைவன் திருக்கதையைக் கேட்டு ஆனந்திக்கத் திரளாக வந்து கூடினர். தாம் பூஜிக்கும் பெருமான் தமக்கிட்டப் பெரும்பணி பூர்த்தியாகும் கட்டம் வந்துவிட்டது என்று எண்ணி, எண்ணி கச்சியப்பர் உள்ளம் பூரித்து வந்தார்.

    ஆனால் யாருமே எதிர்பாராத ஒரு தடங்கல் நேர்ந்து விட்டது. புராணம் அரங்கேற்றப்பட வேண்டுமானால், அவர் இலக்கண விதியை எந்த நூலிலிருந்தாவது எடுத்துக் காட்ட வேண்டும். அவ்விதம் இல்லாவிடில் அவருக்கு அடியெடுத்துக் கொடுத்த குமரனே சபையோர் முன்பு வந்து, ‘நான் தான் அவ்விதம் அடியெடுத்துக் கொடுத்தேன்’ என்று தெரிவிக்க வேண்டும். என்ன செய்வார் கச்சியப்பர்? மாபெரும் சபையின் முன்பு நிலைமையைச் சமாளிக்க ஒருவிதமாக இரண்டில் ஒன்று நாளை நிகழும் எனக் கூறிவிட்டார். அந்த அதிசயம் நிகழக் கூடியதா என்ன?

    கச்சியப்பருக்கு நிலை கொள்ளவில்லை. தடுமாறினார். எதிலும் மனம் செல்லாது தவித்தார். உணவருந்தக்கூட மனம் விரும்பவில்லை. அன்று முழுவதிலும் அவர் ஏதும் உட்கொள்ளவில்லை. இரவு பூஜைகள் முடிந்ததும் வீட்டுக்குச் செல்லக்கூட அவருக்கு மனமில்லை. கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு கந்தன் திருவடிகளிலேயே படுத்து விட்டார்.

    முருகா, நாளை சபையோர் முன்னிலையில் நான் என்ன பதில் சொல்வது? உன்னுடைய திருப்தியைப் பெற்ற இந்த நூல் சபையோரால் அங்கீகரிக்கப்படாது ஒதுக்கப்பட்டு விடுவதை நீ அனுமதிப்பாயா? இரண்டில் ஒன்று நாளை நிகழும் என்று சமாதானம் சொல்லியிருக்கிறேன். என்ன செய்யப்போகிறாய்? நாளைப்பொழுது எனக்கு விடியாது போய்விடட்டுமே. உன் பாதார விந்தங்களில் கிடத்தியுள்ள என் உயிரை நீ எடுத்துக் கொண்டுவிடு என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருந்தார் கச்சியப்பர்.

    எவ்வளவு நேரம் அவ்வாறு பிதற்றிக் கொண்டிருந்தோம் என்பது அவருக்கே தெரியவில்லை. நித்திரை அவர் கண்களை மூடச் செய்தது. ஆழ்ந்த உறக்கத்தில் அவர் இருக்கும்போது அவருடைய கனவிலே முருகன் தோன்றினார். சில நாட்களுக்கு முன்பு தம்முடைய சரிதத்தைக் காப்பியமாகப்பாடுமாறு பணித்த அதே தோற்றம்!

    அன்பனே, கவலைப்படாதே, நாம் எடுத்துக் கொடுத்த அடியில் வரும் ‘திகட சக்கரம்’ என்ற சேர்க்கைக்கு இலக்கணம் இருக்கிறது. சோழ நாட்டிலே வீர சோழியம் என்றொரு இலக்கண நூல் உள்ளது. திகழ், தசம் என்ற இரு பதங்கள் ‘திகடசம்’ என்று புணர்வதற்கு விதி அந்நூலிலேயே சந்திப் படலத்தில் பதினெட்டாம் செய்யுளில் இருக்கிறது. சோழநாட்டுப் புலவன் ஒருவன் நாளை சபையில் அந்நூலை நேரிலே கொணர்ந்து தருவான் என்று அருளி மறைந்தார் முருகப் பெருமான்.

    கண் விழித்து எழுந்த கச்சியப்பர், இறைவன் கருைணயைக் கண்டு அவருடைய திருப்பாதங்களை இரு கைகளாலும் கட்டி அைணத்துக் கொண்டு ஆனந்த பாஷ்பம் பெருக்கினார். முருகா.... முருகா....! என்று நெஞ்சம் உருகப் பிரார்த்தித்தார்.

    பொழுது புலர்ந்தது. கச்சியப்பர் உள்ளம் ஆனந்தத்தால் நிறைந்து வழிய முருகனுக்கான வழிபாடுகளை முடித்தார். சபை கூடுவதற்காகக் குறிப்பிட்டிருந்த நேரத்தில் மண்டபத்தை அடைந்தார். அன்று மண்டபத்தில் மேலும் ஜனத்திரள் நிரம்பி வழிந்தது. முதல் நாள் புலவர் எழுப்பிய சந்தேகத்தை இறைவனே தீர்த்து வைப்பான் என்று அவர் சொல்லியிருந்ததால் அந்த அதிசயக் காட்சியைக் காண மக்கள் திரண்டிருந்தனர்.

    அன்றைக்கு முதல் நாள் போலவே புலவர்களும், பண்டிதர்களும் கச்சியப்பரை மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர். கச்சியப்பர் பீடத்தை அடைந்து திரண்டிருக்கும் ஜன சமூகத்தை வணங்கி விட்டு ஆசனத்தில் அமர்ந்தார்.

    அவ்வமயம் வாயிலிலே சிறிது பரபரப்பு ஏற்பட்டது. என்ன....? என்ன....? என்று கேட்டபடியே எல்லோரும் வாயில்புறம் நோக்கினர். யாரோ ஒரு மனிதர் கச்சியப்பர் எங்கிருக்கிறார்....? அவரை நான் பார்த்தாக வேண்டும் என்று வாயிலில் இருந்தவர்களிடம் வினவிக் கொண்டிருந்தார். கூட்டத்திலிருந்த சிலர் மற்றவர்களை ஒதுங்கச் செய்து வந்த மனிதனை கச்சியப்பரிடம் அழைத்து வந்தார்.

    பூஜ்யரே, அடியேன் சோழ நாட்டுப் புலவர்களில் ஒருவன். தங்களைச் சந்திக்க வேண்டும் என ஓடோடி வந்தேன். இதோ தங்களுக்கு வேண்டிய நூல், பெற்றுக் கொள்ளுங்கள் என்று அவன் கச்சியப்பரை வணங்கி அவரிடம் ஒரு புத்தகத்தை நீட்டினான்.

    முதல் நாள் சந்தேகத்தை எழுப்பிய புலவன் அங்கே தான் நின்று கொண்டிருந்தான். சட்டென்று முன்னால் வந்து அந்தப் புலவனிடம் இருந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு, இது என்ன புத்தகம்? என்று கேட்டான்.

    பண்டிதரே, ‘வீர சோழியம்’ என்ற இலக்கண நூல் இது. சோழ நாட்டிலே வழக்கில் உள்ளது. இதில் சந்திப் படலத்தில் பதினெட்டாம் செய்யுளில் நேற்று தாங்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு உரிய விதி இருக்கிறது என்று பணிவுடன் பதில் கொடுத்தார் கச்சியப்பர்.

    புலவருடைய விரல்கள் ‘பரபர’வென்று புத்தகத்தை பிரித்து, பக்கங்களைத் தள்ளின. சந்திப்படலம்... பதினெட்டாம் செய்யுள்...! அந்தப் பாடலை அனைவரும் கேட்குமாறு உரக்கப் படித்தான். திகழ், தசம் என்ற இரு வார்த்தைகளும் சேர்ந்து ‘திகடசம்’ என்று ஆவதற்கான விதி அந்தச் செய்யுளிலே சொல்லப்பட்டிருந்தது.

    கச்சியப்பருடைய மேனி சிலிர்த்தது. முருகன் அவரைக் கைவிடவில்லை. தக்க சமயத்தில் அவரைக் காப்பாற்றி விட்டான். பரபரப்போடு அமர்ந்திருக்கும் ஜன சமுத்திரத்தை நோக்கி இரு கையும் கூப்பி வணங்கினார்.

    புத்தகத்தை எடுத்து வந்திருந்த புலவன் முதல் நாள் சந்தேகத்தை எழுப்பியவனை நோக்கி, ஐயா, திரும்பவும் அந்தப் பாடலைப் படியுங்கள். சிலருக்கு காதில் விழாதிருக்கலாம் என்றான். அவன் மீண்டும் அந்தப் பாடலை அனைவரும் கேட்கும்படி உரக்கப் படித்தான். பக்கத்திலிருந்த இரண்டொருவர் அந்தப் புத்தகத்தை வாங்கி அதிலுள்ள செய்யுளைப் பார்த்தனர்.

    சபையோர்களே! உங்கள் ஐயம் நீங்கியதல்லவா? என்று கேட்டான் சோழ நாட்டுப் புலவன்.

    எங்கள் ஐயம் நீங்கி விட்டது. கச்சியப்பரே! நூலைத் தொடர்ந்து பாடுங்கள் என்று குரல் எழுப்பினர், சபையிலிருந்தவர்கள்.

    அடுத்த கணம் அவ்விடத்திலே ‘பளிச்’சென்று மின்னல் வெட்டியது.

    ‘என்ன...? என்ன...?’ என்று பரபரப்போடு சபையோர் ஒருவருக்கொருவரை வினவினர். கச்சியப்பருக்கு அருள் புரிய சோழ நாட்டுப் புலவராக வந்த செந்தமிழ்க் குமரன் தாம் வந்த காரியம் முடிந்தது என மறைந்து விட்டார்.

    சபையிலே பரபரப்பு அதிகமாகியது. சோழநாட்டு புலவனைக் காணாது அவர்கள் திடுக்கிட்டனர். இப்போது இங்கேதானே அவர் நின்றிருந்தார். அதற்குள் எங்கு போய் விட்டார்? என்று பரபரப்போடு அவர்கள் கேட்டனர்.

    கச்சியப்பர் சிலவினாடிகள் தம்மையே மறந்து உட்கார்ந்திருந்தார். குமரனல்லவா சபையில் தோன்றி அவர்களுடைய சந்தேகத்தைப் போக்கி அருளினார். அவருடைய கண்கள் நீரைச் சொரிந்தன. இரு கைகளையும் கூப்பி, மனத்திலே கந்தனைத் தியானித்து வணங்கி னார், அவர் மேனி அவ்வற்புதத்தை எண்ணி எண்ணி நடுங்கியது.

    மஹாஜனங்களே, கந்தப் பெருமானே சோழ நாட்டுப் புலவராக இங்குத் தோன்றி உங்கள் சந்தேகத்தைப் போக்கி அருளினார்! என்று நாத்தழுதழுக்கக் கூறினார்.

    அந்த வார்த்தைகளைக் கேட்டு, சபையோர் மிக்க ஆச்சரியம் அடைந்தனர். இறைவன் அவர்களுக்கிடையே தோன்றி அவர்களுடன் உரையாடியதை அவர்களால் உணர முடியாமல் போனது பற்றி அவர்கள் வருந்தினர். கச்சியப்பருடைய தவ வலிமையையும், அவரிடம் கந்தனுக்குள்ள அன்பையும் அவர்கள் பலவாறாகக் கொண்டாடினர். ஒருவர் பின் ஒருவராக வந்து அவருடைய பாதங்களில் விழுந்து அவருடைய வார்த்தைகளுக்கு மறுப்புக் கூறியதற்காகத் தங்களை மன்னிக்குமாறு வேண்டினர்.

    முதல் நாள் சபையிலே எழுந்து நின்று சந்தேகத்தை எடுத்துக் கூறி நூலை மேலே தொடர்ந்து அரங்கேற்ற அனுமதிக்க முடியாது என உரைத்த புலவர் எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறுக கச்சியப்பருடைய கால்களைப் பற்றிக் கொண்டு கதறினான்.

    ஐயனே, தங்கள் அறிவாற்றலை உணராது, அடியேன் ஏதேதோ பேசி ஓர் புனித காரியத்துக்குத் தடையை உண்டாக்கி விட்டேன். ஆண்டவனிடம் தங்களுக்கு உள்ள ஈடுபாடு இன்று அத்தடையைப் போக்கி விட்டது. அடியேன் செய்த மாபெரும் குற்றத்தை மன்னிக்க வேண்டும். அப்போதுதான் பெரியவரான தங்களுக்கு அபசாரம் செய்து விட்டதை எண்ணி எண்ணித் தவிக்கும் என் நெஞ்சம் அமைதியுறும் என்று கண்ணீர் விட்டுக் கதறினான்.

    கச்சியப்பர் அந்தப் புலவருடைய தோள்களைத் தொட்டு எழுந் திருக்கச் செய்தார். அப்படியே அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

    சுவாமி, தாங்கள் எள்ளளவும் வருந்த வேண்டாம். தாங்கள் மறுத்துரைத்ததாலல்லவோ என் அப்பனுடைய அருள் வெளிப்பட்டது! என்று அவரைக் கொண்டாடினார் கச்சியப்பர்.

    இறைவனே நேரில் தோன்றி ஆதாரம் காட்டிய பிறகு தடை என்ன? சபையிலிருந்த புலவர்களும் பண்டிதர்களும் நூலைத் தொடர்ந்து பாடுமாறு கச்சியப்பரை வேண்டிக் கொண்டனர். கச்சியப்பரும் சுவடிகளை எடுத்துப் பிரித்து மேலே தொடரலானார்.

    நாள்தோறும் புராண அரங்கேற்றம் தொடர்ந்தது. பாடல்களை ஒவ்வொன்றாகப் பாடி அவற்றுக்கு விளக்கம் கூறி வந்தார் கச்சியப்பர்.

    ï

    3. பிரம்மன் உருட்டி விட்ட சக்கரம்

    இப்பூவுலகிலே எத்தனையோ புண்ணிய ஸ்தலங்கள் இருக்க, தெற்கே கம்பா நதி தீரத்திலே உள்ள காஞ்சி எனப்படும் க்ஷோத்திரமே இறைவனுக்கு மிகவும் உகந்ததான தலமாக இருக்கிறது. முன்னர் ஒரு சமயம் அத்தலத்திற்கு பிரம்மன் நாமகளோடு எழுந்தருளி இறைவனை ஆராதித்து மகிழ்ந்து அங்கே தங்கியிருக்கையில், அவரைக் காணச் சில முனிவர்கள் அவ்விடம் வந்தனர். பிரம்மனைத் தரிசித்து அவரை நமஸ்கரித்த முனிவர்கள் கரங்களைக் கூப்பியவாறு, "பிரம்மனே, இக்காலம்வரை நாங்கள் இல்லறத்தில் இருந்து அத்துறையில் வழுவாது இல்லற தருமத்தை அனுஷ்டித்து வந்துள்ளோம். இனி துறவறம் பூண்டு எம்பெருமானைக் குறித்துத் தவம் செய்ய எங்கள் உள்ளம் விழைகின்றது. எங்கள் எண்ணம் ஈடேற, எவ்வித இடையூறும் இல்லாது இறைவனைக் குறித்துத் தவம் செய்ய உகந்த இடம் எது? என்று பிரார்த்தித்தனர்.

    முனிவர்களுடைய கோரிக்கையைக் கேட்ட நான்முகன் பக்கத்திலிருந்த தர்ப்பை ஒன்றை எடுத்து அதைச் சக்கரம் போல வளைத்து முடிந்தார். பின்னர் அதைத் தரையிலே உருட்டி விட்டார். பிரம்மனால் உருட்டி விடப்பட்ட தர்ப்பையாலான சக்கரம் வேகமாகச் சென்றது.

    3_bramma.tif

    முனிவர்களே, இதோ செல்லும் இந்தச் சக்கரத்தைத் தொடர்ந்து செல்லுங்கள். அது எங்கு போய் விழுகிறதோ, அந்த இடமே உங்கள் தவத்துக்கு உகந்த இடமாகும் என்றார்.

    முனிவர்கள் நான்முகனை வணங்கி விடைபெற்று, வேகமாக உருண்டு செல்லும் சக்கரத்தைத் தொடர்ந்து சென்றனர். அது வேகமாகப் பல இடங்களைக் கடந்து சென்று இமாலயச் சாரலை அடைந்தது. அங்கே அடர்ந்த மரங்களுடைய காட்டுப் பிரதேசம் ஒன்றில் போய் அது விழுந்தது. அந்த இடத்தையே தவத்துக்கு உரிய இடமாக முனிவர்கள் கொண்டனர். ஓடைகளும், சிற்றாறுகளும் நிறைந்த அந்தப் பிரதேசம் மனத்துக்கு ஒருவித சாந்தியை அளித்தது. நைமி என்றால் சக்கரம் என்று பொருள். தர்ப்பையிலான சக்கரம் உருண்டு வந்த விழுந்த இடமாதலால் அது நைமிசாரண்யம் என்ற பெயரைப் பெற்றது. அந்த வனத்திலே ஆசிரமங்களை அமைத்துக் கொண்டு முனிவர்கள் இறைவனைக் குறித்துத் தவம் இயற்றி வந்தனர்.

    ஒரு சமயம் அவர்கள் சிறந்த யாகம் ஒன்றை நடத்த விரும்பினர். அந்த யாகத்தைக் காண விருப்பம் கொண்டு நாலா பக்கங்களில் இருந்தும் முனிவர்கள் நைமிசாரண்ய வனத்துக்கு வந்தனர். அவ்வாறு வந்தவர்களில் மிகவும் புகழ் பெற்றவரும், புராணங்களை எடுத்துச் சொல்பவருமான சூத முனிவரும் ஒருவர்.

    சூதரைக் கண்டதும் நைமிசாரண்ய முனிவர்கள் அடைந்த ஆனந்தம் விவரிக்கப் போதாது. அவர்கள் முனிவரை வரவேற்று அவரைப் பலவாறாக உபசரித்துக் கொண்டாடினார்கள். பின்னர் அவரைப் பார்த்து, "ஸ்வாமி, சூரன் ஆவிகுடித்து தேவரைச் சிறை மீட்ட ஷண்முகனுடைய அவதாரத்தை அறிய ஆவலுள்ளவர்களாய் இருக்கிறோம். அதனை எங்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று வேண்டினர்.

    சூதரும் மகிழ்ச்சி அடைந்து, தேவரைச் சிறை மீட்ட கந்தனுடைய விருத்தாந்தத்தைச் சுருக்கமாக எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட முனிவர்கள், மஹரிஷே, ஷண்முகப் பெருமானுடைய அவதார மகிமையையும், அவர் தம் திருவிளையாடல்களையும் விரிவாகக் கேட்க ஆசைப்படுகின்றோம். சுருக்கக் கூறி விட்டீர்களே என்று தெரிவித்தார்கள். அதன் மீது சூதரும் அவர்கள் கேட்டபடியே விரிவாக எடுத்துக் கூறலானார்.

    ï

    4. தாமரை மலரிலே தெய்வக் குழவி

    இந்திரன் முதலான தேவர்களாலும், முனிவர்களாலும், சித்தர்களாலும் மற்றுமுள்ளோர்களாலும் கைகூப்பி வணங்கப்படுவதும் நந்திதேவருடைய காவலுக்கு உட்பட்டதுமான திருக்கைலாய மலையிலே ஓர் அழகிய ஆலயம் உண்டு. ‘தகதக’வென்று நாற்புறமும் வீசும் பொன்னிறத்தோடு கூடிய அந்த ஆலயத்தினுள் நவரத்தினங்கள் கொண்டு அமைக்கப்பட்ட மணி மண்டபம் ஒன்று இருக்கிறது. அதன் நடுவே அற்புதமான சிங்காதனம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் தேவியுடன் அமர்ந்து ஈசன் அடியார்களுக்குத் திவ்விய தரிசனம் தருவார். முனிவர்கள் நாற்புறமும் சூழ்ந்து கொண்டு தேவியுடன் கூடிய இறைவன் திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து அவரைப் பலவாறு போற்றித் துதிப்பார்கள்.

    இவ்வாறு இருந்துவரும் நாளையில், ஒரு சமயம் தேவி, ஈசன் திருவடிகளைப் பணிந்து எழுந்து, கண்களில் நீர் திரையிட உள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கும் எண்ணத்தை வெளியிட்டாள்.

    "ஸ்வாமி, சிறிது காலமாக என் உள்ளம் அமைதியின்றித் தவிக்கிறது. இந்திராதி தேவர்களாலும் வணங்கப் பெறும் தங்களை ஆராதித்து அருள் பெறாது, அவமதிக்கத் துணிந்த தக்ஷப்பிரஜாபதியின் மகள் என்று என்னைக் கூறிக் கொள்வதை என் உள்ளம் விரும்பவில்லை. அதை நினைக்க நினைக்க எனக்கு மிகவும் அருவருப்பாகவும் வேதனையாகவும் உள்ளது. அதனால் இந்தத் தேகத்தையும், அதனால் உண்டான தாக்ஷாயணி என்ற பெயரையும் ஒழிக்கவே என் மனது துடிக்கிறது. அடியாளுக்கு ஆறுதல் ஏற்படக் கூடிய மார்க்கத்தைத் தாங்கள் தான் காட்ட வேண்டும்.

    தேவியின் வேண்டுகோளைக் கேட்ட ஈசன் திருமுகத்திலே குறுநகை நெளிந்தது.

    பிரியே, இவ்வுலகிலே உள்ள உன் குழந்தைகளாகிய உயிர்களின் நன்மைக்காகவே நீ இத்தகைய முடிவுக்கு வந்திருக்கிறாய். உன் விருப்பத்தை நான் நிறைவேறச் செய்வேன். மலையரசனாகிய ஹிமவான் பதுமத்தடாகக் கரையிலே என்னைக் குறித்துத் தவம் இருந்து வருகின்றான். உன்னைத் தன் மகளாக அடைந்து எனக்குத் திருமணம் செய்து கொடுத்து ஆனந்திக்க வேண்டுமென்பது அவன் விருப்பம். அவன் எண்ணத்தை நிறைவேற்ற நானும் விருப்பம் கொண்டிருக்கிறேன். ஆகவே, மலையரசன் மகளாகத் தோன்றி அவனிடம் வளர்ந்து வா, ஐந்து வயது நிரம்பியதும் என்னைக் குறித்து தவம் மேற்கொள். பூதகணங்கள் புடைசூழ நான் வந்து உன்னைத் திருமணம் செய்து கொண்டு ஹிமவான் உள்ளக் கிடைக்கையை நிறைவேற்றுவேன் என்றார்.

    தேவி அளவற்ற ஆனந்தம் கொண்டவளாய் ஈசனைப் பணிந்து அவரிடம் விடைபெற்று கைலாயத்தை விட்டுப் புறப்பட்டாள்.

    அன்றை தினம் வழக்கம் போலத் தடாகத்திலே இறங்கி, நீராடி உள்ளத்தையும் உடலையும் புனிதமாக்கிக் கொண்டு கரையேறினான் ஹிமவான். தற்செயலாகத் தடாகத்தின் நடுவே மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது அவனுடைய பார்வை நிலைத்தது. பார்த்துக் கொண் டிருக்கும் போதே ஆச்சரியத்தால் அவனுடைய கண்கள் அகன்றன. அதோ... அந்தத் தாமரை மலரிலே... ஏதோ அசைகின்றதே...!

    ஹிமவான் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். தான் பார்ப்பது கனவு அல்லவென்பதை அவன் உணர்ந்த போது அவனுடைய மேனி சிலிர்த்தது. பரபரப்போடு தடாகத்திலே இறங்கி அதன் மத்தியிலே மலர்ந்திருக்கும் தாமரை மலர்களை நோக்கிச் சென்றான்.

    நான்கு பக்கங்களிலும் தாமரை மலர்கள் மலர்ந்து அைணத்துக் கொண்டிருக்க, நடுவே உயர்ந்த மலர் ஒன்றிலே கன்னம் குழியச் சிரித்தபடி பெண் குழந்தை ஒன்றுபடுத்திருந்தது. அதனுடைய பார்வை ஹிமவான் மீது நிலைத்து அவனை ‘வா’வென்று அழைப்பது போல இருந்தது.

    Pic_1.tif

    மலரை நெருங்கிய ஹிமவான் அதன் நடுவே படுத்திருந்த குழந்தையை இரு கைகளாலும் வாரி எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவன் உள்ளம் ஆனந்தத்தால் நிறைந்து வழிந்தது.

    இரு கைகளிலும் குழந்தையை ஏந்தியவாறு அதைப் பார்த்தான். குழந்தை அவனைப் பார்த்துச் சிரித்தது. அப்படியே மார்புடன் சேர்த்து அைணத்து கொண்டு அதன் கன்னங்களில் முத்தமழை பொழிந்தான்.

    இத்தனை காலமாக அவன் ஈசனை ஆராதித்தது வீண்போக வில்லை. குலம் விளங்க ஓர் குழந்தையை அளித்துவிட்டார். அவன் விருப்பப்படியே தேவியே திருமகளாக வந்து அவதரித்துவிட்டாள் போலும்! குழந்தையை மார்பிலே அைணத்தபடி அரண்மனைக்கு விரைந்தான்.

    நாயகன் வருகையை அறிந்து மேனை ஓடோடி வந்து அவனை வரவேற்றாள்.

    பிரியே, நாம் வணங்கும் ஈசன் நம்மீது கருைண பொழிந்து விட்டார். உன் நெடுநாள் குறை இன்றோடு நீங்கி விட்டது. குலம் தழைக்க ஓர் குழந்தையை நமக்கு அளித்து விட்டார். குழந்தையைப் பெற்றுக்கொள் என்று கூறி குழந்தையை அவள் கரத்திலே தந்தான். மகிழ்ச்சி ஆறாகப் பெருக மேனை குழந்தையை இரு கைகளாலும் வாங்கி, கண்ேண வந்தாயா...? என்று கேட்டபடி முத்தமிட்டாள். அவள் ஸ்தனங்களில் பால் சுரந்தது. குலம் தழைக்க கோதை வந்து விட்டாள் என்று சந்தோஷத்துடன் கூறியபடி குழந்தையுடன் அந்தப் புரத்துக்கு ஓடினாள்.

    எங்கும் மகிழ்ச்சி நிறைந்தது. ஹிமவானுடைய பாக்கியத்தை அறிந்து அனைவரும் அவனைக் கொண்டாடினார்கள். ஒவ்வொரு வராக அரண்மனைக்கு வந்து குழந்தையைக் கண்டு சந்தோஷமடைந்தனர். முனிவர்கள் வந்து ஆசி கூறிச் சென்றனர். தேவர்கள் வந்து தேவியின் திருக்கோலத்தைத் தரிசித்துச் சென்றனர்.

    ï

    5. தவச்சாலையில் திருக்குமரி

    பர்வதராஜனுடைய புத்திரியான அக்குழந்தைக்குப் பார்வதி எனப் பெயரிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் குழந்தை அரண்மனையில் வளர்ந்து வந்தாள். அவளுடைய ஒவ்வொரு செய்கையையும் கண்டு ஹிமவானும் மேனையும் எல்லையற்ற சந்தோஷத்தை அடைந்தனர்.

    குழந்தை பார்வதிக்கு ஐந்து வயதாயிற்று. ஒருநாள் அவள் தந்தை தனித்திருக்கையில் அவரைத் தேடி வந்தாள். புத்திரியைக் கண்டதும் அளவற்ற ஆனந்தத்தோடு அவளை இருகைகளாலும் தூக்கி அைணத்து உச்சி முகர்ந்து மடிமீது வைத்துக் கொண்டான் ஹிமவான்.

    அப்பா!... என்று அன்பொழுக அழைத்தாள் குழந்தை.

    என்ன வேண்டும்; செல்லமே? சொல்லு!... என்றான் ஹிமவான்.

    அப்பா, ஸகல ஜீவராசிகளுக்கும் ஆதாரமாக விளங்கும் அந்தப் பரம்பொருளை அடைய என் உள்ளம் விழைகிறது. நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் அந்த ஈசனை மணக்க, அவரைக் குறித்து நான் தவமியற்ற விரும்புகிறேன். அனுமதி தரவேண்டும் என்றாள் பார்வதி.

    ஹிமவான் திடுக்கிட்டான். ஐந்தே வயது நிரம்பிய குழந்தை பேசும் பேச்சா அது? அந்த வயதில் பரம் பொருளைப் பற்றியும், ஈசனைப் பற்றியும் குழந்தை என்ன தெரிந்து கொள்ள முடியும். அந்த எண்ணம் அவன் உள்ளத்தில் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் அவன் பார்வதியை நன்கு அறிவான். மற்ற மானிடக் குழந்தைகளை விட அவள் அறிவிலும் ஆற்றலிலும் மேம்பட்டு விளங்கினாள். இறைவன் திருவருளால் பெற்றக் குழந்தை அல்லவா அவள், மூன்று வயது முதலே அவள் தாயிடமும் தந்தையிடமும் எத்தனை எத்தனை விஷயங்களை கேட்டுத் தெரிந்து வந்திருக்கிறாள்.

    என்னப்பா, நான் கேட்டது உங்கள் காதில் விழுந்ததா?... என்று மறுபடியும் கேட்டாள் பார்வதி.

    குழந்தையின் முகத்தைத் தன் கன்னத்தோடு சேர்த்து வைத்து அைணத்துக் கொண்டார் ஹிமவான்.

    பார்வதி, நீ கூறிய விஷயங்கள் எல்லாம் உன் வயதுக்கு ஏற்ற செயல்கள் அல்ல. ஐந்தே வயது நிரம்பிய உனக்கு இந்தக் கஷ்டங்கள் வேண்டாமம்மா. அதற்கெல்லாம் உரியவேளை வந்ததும் நானே உன் விருப்பத்தை நிறைவேறச் செய்வேன் என்றான்.

    பார்வதி மெல்லச் சிரித்தாள். அதைக் கண்ட ஹிமவான் ஏனம்மா சிரித்தாய்? நான் சொன்னது உனக்குப் பிடிக்கவில்லையா? என்று கேட்டான்.

    அப்பா, நான் தவம் இயற்றுவதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே...! என்றாள் பார்வதி.

    குழந்தாய், உன் எண்ணத்தைத் தவறு என்று நான் சொல்ல வில்லை. அந்தப் பரமனுக்கே உன்னை மணம் செய்து தரவேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்....

    அப்படியிருக்க ஏன் தயங்குகிறீர்கள்....?

    பார்வதி, எத்தனையோ ஆனந்தமாக இருக்கவேண்டிய வயதில், சிரமங்கள் நிறைந்த தவ வாழ்க்கையை மேற்கொள்வதா? அதற்கான காலம் இன்னமும் வரவில்லையம்மா. அதைப் பற்றிய நினைப்பை யெல்லாம் என்னிடம் விட்டுவிடு. தகுந்த நேரத்தில் நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன். போய் விளையாடம்மா! என்று குழந்தையின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினான் ஹிமவான்.

    தந்தையின் மடியை விட்டுக் கீழே இறங்கிய பார்வதி அவர் எதிர்பார்த்தது போலத் துள்ளிக் குதித்தபடி விளையாடச் செல்ல வில்லை. அவருடைய முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். சற்று முன்பு குதிபோட்டுக் கொண்டிருந்த சந்தோஷம் இப்போது அவள் திருமுகத்திலே காணப்படவில்லை. மாறாக ஏதோ ஒருவித சோகம் குடி கொண்டிருந்தது. அதை ஹிமவான் கவனிக்கத் தவறவில்லை. அவள் கைகளைப் பிடித்து அருகில் இழுத்து மடியிலே அைணத்துக் கொண்டான்.

    பார்வதி என் மீது கோபமா?... சொல்லம்மா....! என்று குனிந்து அவள் முகத்தைப் பார்த்தான். அவளுடைய சின்னஞ்சிறு கண்களில் நீர் மெல்ல திரையிட்டிருப்பதைக் கண்டான்.

    பார்வதி, நான் சொல்வதைக் கவனமாகக் கேளம்மா! உன் உள்ளத்தில் தோன்றியுள்ள உத்தமமான எண்ணத்தைக் கேட்கும் போது என் மனம் பெரிதும் சந்தோஷம் அடைகிறது. குழந்தாய், தவம் செய்கிறதென்றால் காட்டிலே போய் வாசம் செய்ய வேண்டும். எவ்விதமான ஸௌகரியமும் இருக்காது. தவிர, காட்டிலே எத்தனையோ துஷ்ட மிருகங்கள் நாலா பக்கங்களிலும் சஞ்சரிக்கும். அவற்றால் எந்த வேளையிலும் ஆபத்துக்கள் நேரிடலாம். அதனால்தானம்மா இப்போது அந்த விஷயத்தை ஒத்திப் போடுமாறு சொன்னேன். இன்னும் கொஞ்ச காலம் போகட்டும். அதற்குள் நீயும் வளர்ந்து விடுவாய். என்றான் ஹிமவான் அன்போடு.

    அப்பா, அந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரியாதா? நீங்கள் பலமுறை முனிவர்கள் தவம் இயற்றுவதைப் பற்றி எனக்குச் சொல்லியிருக்கிறீர்களே. அப்பா, நான் மறுபடியும் உங்களைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எல்லா விஷயங்களையும் நான் சிந்தித்துப் பார்த்தே ஒரு முடிவுக்கு வந்து உங்களைக் கேட்டேன். எனக்கு என்ன கஷ்டம் வந்து விடப்போகிறது? நான் வணங்கும் அந்தப் பரமனுக்கல்லவா என்னைக் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது. அவரன்றோ கவலைப்பட வேண்டியவர். நாம் ஏன் அவற்றைக் குறித்துக் கவலைப்பட வேண்டும்! கொஞ்சுதலாகக் கேட்டாள் பார்வதி.

    என்ன செய்வான் ஹிமவான்? குழந்தையின் உள்ளத்தில் உறுதியாகப் பற்றி நிற்கும் எண்ணத்தை மாற்றுவது இயலாதென்பதை உணர்ந்தான். அவளைப் பற்றி நினைக்க நினைக்க ஒரு பக்கம் பெருமையாகவும், மற்றொரு பக்கம் வேதனையாகவும் இருந்தது. ஐந்தே வயது நிரம்பிய குழந்தை கானகத்திலே

    Enjoying the preview?
    Page 1 of 1