Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vellai Thuraimugam
Vellai Thuraimugam
Vellai Thuraimugam
Ebook836 pages6 hours

Vellai Thuraimugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டாம் உலகப்போரின் காலகட்டங்களின் சரித்திரத்தை எடுத்துக்கொண்டு அதைச்சுற்றி ஒரு மாபெரும் உணர்ச்சிக் குழம்பைப் பின்னி, இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்கிற புறச்செருகல் இல்லாமல், ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து, நூற்றுக்கணக்கான டாகுமெண்டரிகளைப் பார்த்து சரித்திரம் அறிந்த படிப்பாளிகளுடன் விவாதித்து இழைத்து இழைத்து ஆயிரம் பக்கங்களில் இந்நாவலை எழுதியுள்ளார் பாலகுமாரன். இதன் அடிப்படையில் உலகத்தைப் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்று துடித்துக் கிளம்பும் இளைஞன் சந்திப்பது என்ன? என்பதை வாசித்து அறிந்துகொள்வோம் இரண்டாம் உலகப்போரை கண் முன்னே விரிய வைக்கும் பாலகுமாரனின் வெள்ளைத் துறைமுகத்தில்...

Languageதமிழ்
Release dateMar 18, 2023
ISBN6580156808777
Vellai Thuraimugam

Read more from Balakumaran

Related to Vellai Thuraimugam

Related ebooks

Reviews for Vellai Thuraimugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vellai Thuraimugam - Balakumaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வெள்ளைத் துறைமுகம்

    Vellai Thuraimugam

    Author:

    பாலகுமாரன்

    Balakumaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/balakumaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அய்யாவுடன் எனது அனுபவம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    முன்னுரை

    என்னடா, ஹிட்லர் போலந்துக்குள்ள மூக்க நுழச்சுட்டானாமே! இன்னமே தெருவுக்குத் தெரு பொணம் விழுண்டா. அதுசரி, நமக்கென்ன, அம்பி அய்யர் இன்னைக்கி கோதும அல்வா போடறேன்னாண்டா. கூடவே வாழக்கா பஜ்ஜியும் போடச்சொல்லு. சாமா மாமா அஞ்சரைக்கு வரேன்னாளாம்னு ஒருநட போய் சொல்லிட்டு போடா.

    Second World War was a global military conflict from 1939 to 1945, which was fought between the Allied powers of the United States, United Kingdom, and Soviet Union against the Axis powers of Germany, Italy, and Japan, with their respective allies.

    Over 60 million people, the majority of them civilians, were killed, making it the deadliest conflict in human history.

    ஆறுகோடிப் பேர் அநியாயமாக உயிரிழந்த அந்தப் போரின் சாயல் தென் தமிழ்நாட்டில் இந்த ரீதியில் பாதித்திருப்பது சரித்திரத்தின் அதிர்ஷ்டமா, இல்லை அபத்தமா என்று விற்பன்னர்கள் ஆராயலாம்.

    ஆனால் சுழித்துக்கொண்டோடும் காவிரியும், எண்ணை மிதக்கும் கத்தரிக்காய்ப் பொரியலும், நெய் ஒழுகும் காசி அல்வாவும், ஒலிக்கும் வேதகோஷங்களும், அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடுவேனோ என்னும் அபத்த சினிமாப் பாட்டும் தாண்டி உலகத்தைப் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்று துடித்துக் கிளம்பும் இளைஞன் சந்திப்பது என்ன?

    உலகம் பார்க்க வேண்டும். போர் என்பது என்ன மாதிரியான தாக்கம், உயிர் பயம் எப்படி இருக்கும், நகத்துக்குள் ஊசிபோலக் குத்தும் குளிராமே, ஒன்றரை அடி பனி மூடியிருப்பதென்றால் என்ன, பெட்ரோல் வாசனையுடன் விமானத்தில் பறக்கலாமாமே, மனிதனின் வேறுபாடுகள்தான் என்ன, கிருஷ்ணா நீ வேகமாக வாயேன் என்று முகத்தில் போலி அபிநயம் காட்டும் பெண்ணை இங்கே காவிரிக் கரையில் ரசிக்கும் மனுஷன் எங்கோ தாய்லாந்தாமே, அங்கே அவளை உரித்த வெங்காயமாக நிர்வாணப்படுத்தும் இச்சைகொள்ள வைப்பது எது என்று வாழ்க்கையின் இருவேறு முனைகளைக் கொண்ட இந்த பூமியில் என்னதான் நடக்கிறது.

    இந்த அபார கேள்விகளை எதிர்கொண்டு கும்பகோணத்தை விட்டுப் புறப்படும் ஸ்ரீனிவாசன் சந்திக்கும் மனிதர்கள்தான் எத்தனை விதம். அவன் பார்க்கும் சம்பவங்கள் எத்தனை உன்னதம், கொடூரம். மனிதனின் பயமும், வேட்கையும், தந்திரமும், பேராசையும், தார்மிகமும், காமமும், அன்பும், சாமர்த்தியமும்...

    இரண்டாம் உலகப் போரின் காலகட்டங்களின் சரித்திரத்தை எடுத்துக்கொண்டு அதைச்சுற்றி ஒரு மாபெரும் உணர்ச்சிக் குழம்பைப் பின்னி, இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்கிற extrapolation இல்லாமல், ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து, நூற்றுக்கணக்கான டாகுமெண்டரிகளைப் பார்த்து சரித்திரம் அறிந்த படிப்பாளிகளுடன் விவாதித்து இழைத்து இழைத்து ஆயிரம் பக்கங்களில் நாவல் வந்திருக்கிறது!

    ஆம் அய்யா தமிழில்தான் இதோ உங்கள் கையில்.

    அங்கபாரும். சுவர் தெரியறதா. போய் நன்னாணங்க்குனு முட்டிக்கும். ரத்தம் வரணும். காயத்துல கிருஷ்ணாயில் தடவும். அப்பத்தான் ஆறாது, என்று சொல்லும் வக்கீலும்,

    திருடினாயா. அப்போது இதுதான் தண்டனை. சட்டென்று ரிவால்வரால் சுட்டுப் பிணமாக்கும் லெஃப்டின்ண்ட்டும்.

    அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாவோதான் என் தலைவர் அவருக்காக எப்ப வேணா என் உயிரைக் கொடுப்பேன் என்று சொன்ன மூன்றாம் நிமிடம் அந்தப் பாலத்தில் குண்டடிபட்டு ஓடும் மஞ்சளாற்றில் பிணமாக விழும் தொண்டனும்,

    இதுவும் உலகம் தான்.

    கண் முன்னே விரிய வைக்கும் பாலகுமாரனின் எழுத்துக்கான சக்தி அரூபமான அடங்காத சக்தி.

    உடையாரைப் போல, கங்கைகொண்ட சோழனைப் போல எழுத முடியுமா என்று அசர அடித்த நம்மை இந்த நாவல் அடித்துப் போடுகிறது.

    எழுபத்தி ரெண்டு வயதில் அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடல் தளர்ந்து அசதி அடித்துப்போட்டும் முகம் சுணங்காது அங்கும் இங்கும் பயணப்பட்டு படித்து, பேசி, அப்புறம் இழை இழையாக யோசித்து, தூக்கமின்றி பல இரவுகளில் வீட்டுக்குள் நடந்து நடந்து வார்த்தைகளாக்கி ஒரு ஐநூறு பக்கத்தை என்னிடம் கொடுத்து,

    இந்தா வெள்ளைத் துறைமுகம்! படிச்சு அபிப்பிராயம் சொல்லு ரகுநாதா.

    மலைத்து நிற்க, இன்னும் ஐநூறுவரும்

    நேற்றுப் போல் இருக்கிறது எனக்கு

    இதோ இந்த வரிகளை, ளையன்னா எழுதும்போது எதிரே உட்கார்ந்துகொண்டு, வெந்தாடியை நீவி விட்டுக்கொண்டு, கண்களை மூடி யோசித்தவாறே இருப்பினும் தன் வெண்கலக் குரலில் ஒழுங்கா எழுது என்று அதட்டும் பாலகுமாரனைப் பார்க்கிறேன்.

    இந்த மனிதரை, இப்போது தெய்வமாகிவிட்ட இவரை என்னவென்று சொல்ல!

    வெள்ளை துறைமுகம் வெகு சமீபத்திய சரித்திரம் இது ஒரு இழை பிசகினாலும் பாய்ந்து கிழித்து எறிவார்கள்.

    கண்களை மூடிக்கொண்டு, தலையைச் சற்றே மேலே உயர்த்தி சிந்தனையை நடு மத்திக்குக்கு கொண்டு வந்தாற்போல நெற்றியைச் சுருக்கி தாடியைத் தடவிக்கொண்டே பேச ஆரம்பித்தால், வெள்ளைத் துறைமுகம் தவழுகிறது, குதிக்கிறது, துள்ளுகிறது. செழிப்புடன் அலைபாய்கிறது, கடுமையாக தாக்குகிறது, உறைய வைக்கிறது.

    இந்த நாவல் கணிணியில் வருவதற்கு முன்பே அவர் மனதில் வார்த்தை பிசகாமல் எழுதப்பட்டு விட்டது. எப்படி சாத்தியமாயிற்று என்று வாழ்நாள் முழுவதும் யோசித்துக்கொண்டே இருக்கப் போகிறேன்.

    இது மனித யத்தனத்துக்கு அப்பாற்பட்ட எழுத்து என்று சொல்லிவிட்டுக் கடப்பது இந்த மனிதருக்கு நாம் செய்யும் அநீதி.

    ஆனிஃப்ராங்க் எழுதிய Diary of a Young Girl, தாமஸ் கென்னெலியின் Schindler’s Ark, ஏன் சமீபத்தில் வந்த புலிட்சர் பரிசுபெற்ற ஆண்டனிடோயரின் All the Light We Cannot see என்று இரண்டாம் உலகப்போர் பற்றின நாவல்களின் வரிசையில் வைக்க வேண்டிய ஒன்றாக வெள்ளைத் துறைமுகம் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

    ஆரு பாலகுமாரனா, இந்த சினிமாவுக்கெல்லாம் வசனம், அப்புறம் கோவில் சாமியார் பத்தியெல்லாம் எழுதினாரே என்னும் விடலைப் பார்வையில் அடக்காமல் வெள்ளைத் துறைமுகத்தை, அதன் கான்வாஸை, அதன் நேர்மையை, அது சொல்லும் சரித்திரத்தின் அடிநாதமானுடத்தை பாருங்கள் என்பதுதான் என் வேண்டுகோள்.

    சாஹித்ய அகாடெமிக்கு இந்த வருடத்தேர்வு எளிதாகியிருக்கிறது என்று அடித்துச் சொல்வேன்.

    பாலகுமாரன் இல்லா வெறுமையை மறக்க முயன்று தோற்றுப்போகும் இன்னொரு மாலை வேளை.

    ரகுநாதன் ஜெயராமன்

    18 நவம்பர் 2018

    அய்யாவுடன் எனது அனுபவம்

    வெள்ளை துறைமுகம், இத்துறைமுகத்தில்தான் குருவின் பார்வை ஒரு கலங்கரை விளக்கம்போல் என்மேல் படர்ந்தது. வாழ்வு பெரியதோர் மாற்றத்தை முன்னெடுக்கிறது என்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலே அந்த அத்தியாயம் தொடங்கியது.

    2017 கோகுலாஷ்டமி முடிந்த சில நாட்களுக்கு பின் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் ஐயா அவர்களுடைய வேண்டுகோள் ஒன்று முகநூலில் வந்திருந்தது. இரண்டாம் உலகப்போரை ஒரு தமிழனின் பார்வையில் புதினமாக, வெள்ளை துறைமுகம் என்ற பெயரில் எழுதவிருப்பதாகவும், அதற்காக 1935லிருந்து 1945 வரையிலான தமிழ் பத்திரிகைகள் தனக்கு தேவைப்படுவதாகவும் இதில் யாரேனும் உதவ முடியுமா என்று கேட்டும் அந்த பதிவு வந்திருந்தது. எனக்கு நிலைகொள்ளவில்லை, அவர் கேட்ட தகவல்களை கொண்ட வலைப்பெட்டகங்கள் (web archive) சிலவற்றில் எனக்கு அறிமுகம் உண்டு. ஒரு மணிநேர தேடலில் அவர் கேட்டிருந்த தகவல் திரட்ட முடியும் என்று தோன்றியது. ஆனால் அவரை எப்படி தொடர்புகொள்வது என தெரியவில்லை. அச்சமயத்தில் ஐயனை ஏற்கனவே சந்தித்திருந்த நண்பர் சுப்ரமணியன் ராஜாமணி ஐயனின் தொலைபேசி எண்ணை கொடுத்து உதவினார். வாங்கிய கணமே அவருடன் கைபேசியில் உரையாடினேன்.

    பாலகுமாரன் சிம்மக்குரலொன்று பதிலளித்தது, கேட்ட கணம் நிகழ்காலம் சில வினாடி உறைந்துபோனது.

    ஹலோ என்று மீண்டும் அதே குரல் மீட்டது.

    ஐயா, நான் கோவையிலிருந்து ராஜு பேசுகிறேன். உங்களுடைய இரண்டாம் உலகப்போர் குறித்த பதிவு பார்த்தேன். உதவ முடியும் என்று தோன்றுகிறது.

    ரொம்ப நல்லது. என்ன மாதிரியான தகவல்?

    அந்தக் காலகட்ட தினசரிகள் கிடைக்கலைங்க. ஆனால் ஊழியன், குமரன் என்று இரண்டு வாரப்பத்திரிக்கைகள் உண்டு. உங்களுக்கு பயன்படுமா?

    நிச்சயம் பயன்படும், ஆனா நான் பாக்கணுமே, எனக்கு ஏதாவது சாம்பிள் அனுப்பமுடியுமா?

    உங்களுக்கு whatsapp இருந்தால் அதில் அனுப்பறேன்.

    இந்த நம்பரில் whatsapp உண்டு, உனக்கு சிரமமில்லைன்னா உடனே அனுப்பமுடியுமா?

    அழைப்பை துண்டித்தபோது ஆரம்பம் முதல் இறுதிவரை அவருடைய வேண்டுகோள்கள் ஒரு பணிவான விண்ணப்பமாகவே இருந்ததை எண்ணி வியந்திருந்தேன், அந்த உயரத்திற்கு இந்த பணிவு எனக்கு ஒரு பாடமாகப் பட்டது.

    1936, 1937 வருடங்களிலிருந்து குமரன், ஊழியன் பத்திரிகை மாதிரிகள் ஒரு 20 பக்கம் மட்டும் தொகுத்து அனுப்பினேன்.

    அனுப்பிய ஐந்தாவது நிமிடம் அவரிடமிருந்து திரும்ப அழைப்பு.

    ராஜு, இதுதான், இதேதான் எனக்கு முழுசா வேணுமே.

    ஐயா, மொத்தமா தொகுக்கறது சிரமம். இப்ப உடனடியா உங்களுக்கு எந்த பகுதி வேணும்னு சொல்லுங்க, அதை சீக்கிரமா அனுப்ப முயற்சிக்கிறேன்.

    அப்படியா, சரி அப்ப 1935-ஆவது வருஷத்துக்கானதை அனுப்பேன்.

    சரிங்க ஐயா.

    சரி என்று சொல்லிவிட்டேனே தவிர, அந்த வலைப் பட்டகத்தில் 1935-ம் வருடத்திய ஊழியன் தொகுப்பை பார்த்தவுடன் தலை சுற்றியது, அது ஒரு வாரப்பத்திரிக்கை, ஒரு வாரத்திற்கு சுமார் 80 பக்கங்கள், வருடத்திற்கு 52 வாரங்கள் 52 × 80 சுமார் 4 ஆயிரத்து சொச்சம் பக்கங்கள். மொத்தமாக பதிவிறக்கம் செய்யும் வசதி அந்த வலைப் பெட்டகத்தில் தரப்படவில்லை.

    ஒவ்வொன்றாக நாலாயிரம் பக்கங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்வது ஆகிற காரியமல்ல என்று சுடச்சுட ஒரு தானியங்கி பதிவிறக்க நிரல் ஒன்றை எழுதி (web crawler script) அதன்மூலம் ஒரு இரவுக்குள் 1935-ம் வருட பத்திரிக்கையை பதிவிறக்கம் செய்து அவற்றை ஒரு பி.டி.எஃப் கோப்பாக ஒருங்கிணைத்து ஐயனின் உதவியாளர் திருமதி பாக்கியலஷ்மி அவர்கள் அளித்த மின்னஞ்சலுக்கு அனுப்பினேன். இதே முறையில் அடுத்த இரண்டு வருடங்களுக்கான பத்திரிகையை வலைப்பெட்டகத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய ஆரம்பித்தேன்.

    இரண்டு நாட்கள் கழித்து திரும்ப அவரிடமிருந்து கைபேசி அழைப்பு.

    ராஜு, நீ அனுப்பினது செல்போன்ல பாக்க முடியுது. ஆனா பிரிண்ட் பண்ணா படிக்கமுடியலையே. எனக்கு பிரிண்ட் பண்ணினாதான் படிக்க, குறிப்பு எடுக்க வசதியா இருக்கும். நீயே இத பிரிண்ட் பண்ணி குடுக்க முடியுமா?

    முயற்சி செஞ்சு பாக்குறேங்க ஐயா.

    சிரமமில்லைன்னா உடனே செய்ய முடியுமா? இது ரொம்ப அவசியம்.

    அவர் சொன்ன பிரச்சினை என்னவென்று புரிந்தது, பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்கள் அனைத்துமே வலைத்தள பார்வைக்காக தயார் செய்யப்பட்டவை (72 dpi) பிரிண்ட் செய்வதற்கு குறைந்தபட்சம் 150 dpi தேவை.

    மீண்டும் புகைப்படங்களை சீர்திருத்த ஒரு தானியங்கி நிரல் (shellscript) எழுதி ஓடவிட்டேன். ஆயினும் 4 ஆயிரம் பக்கங்களும்150 dpi-க்கு சீர்திருத்தி முடிய 2 நாட்களானது. சீர்திருத்திய பக்கங்களை பிரிண்ட் எடுத்தபோது திருப்திகரமாக இருந்தது. இதே முறையில் 1936, 1937 ஆகிய வருடங்களுக்கும் பதிவிறக்கம் செய்து சீர்திருத்தி பிரிண்ட் செய்து மாதவாரியாக அடுக்கி, ஆண்டு வாரியாக பைண்ட் செய்து கிட்டத்தட்ட மொத்தமாக 12 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை அவருடைய முகவரிக்கு அனுப்பிவைத்தேன். அனுப்பிய புத்தகங்களை பார்த்தபின் கைபேசியில் அழைத்தார். பைண்ட் செய்யப்பட்ட விதம் கையாளுவதற்கு மிக எளிமையாக இருப்பதாகவும், இப்போதைக்கு இது போதும், மீண்டும் தேவை எனில் அழைப்பதாகவும் கூறினார். சில பக்கங்களில் எழுத்துரு மிகச்சிறியதாக இருப்பதாகவும், அவைகளை உருப்பெருக்கியின் (magnifier) உதவியுடன் படிப்பதாகவும் கூறினார். அந்த 12 ஆயிரம் பக்கங்களிலிருந்து சிலவற்றை நானும் படிக்க முயற்சி செய்தேன். ஆனால் அவை அனைத்தும் அந்த காலகட்ட சொல்லாடல்களுடனும் இலக்கிய நயமாகவும் இருந்ததால் 2 பக்கங்கள்கூட என்னால் படிக்க இயலவில்லை. நம் போன்றோர் அதைப் படிக்க கண்டிப்பாக ஒரு தமிழ் நிகண்டு மற்றும் அகராதி தேவை. இவை அனைத்தையும் படிக்க ஒரு அசாத்திய பொறுமை தேவை என்று பட்டது.

    இந்த உதவியை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருந்தார், அதன் பிறகான என்னுடைய வெளியுலக சந்திப்புகளில் பெரும்பாலும் நான் சந்தித்த கேள்வி எழுத்துச்சித்தர் உனக்கு எப்படி அறிமுகம்? என்றானது. வெளியுலகில் பலரும் தானே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு நட்பானார்கள். ஆனால் இந்த மரியாதை எனக்கானதல்ல. பாலகுமாரன் என்ற ஒரு பெயருக்கானது என்பதை அறிந்தே இருந்தேன். இங்கு என்னால் செய்யப்பட்ட உதவி கூகுளை சரியாக கையாளத்தெரிந்த எவரும் செய்யக்கூடியதே.

    அவர் 12 ஆயிரம் பக்கங்கள் படித்து முடிக்க எப்படியும் சில மாதங்களாவது ஆகும் என்று எண்ணி கொஞ்சம் அசமந்தமாக இருந்துவிட்டேன்.

    முதல் தொகுப்பு அவருக்கு அனுப்பிய மூன்றாவது நாள் என் வீட்டுவாசலில் கொரியர் நிறுவனத்தின் வாகனம் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து பழைய இரும்பு டிரன்க்பெட்டி அளவிலான பார்சல் ஒன்று எனக்கு வந்திருப்பதாக கூறி இறக்கினார்கள். நான் எதுவும் ஆர்டர் செய்யவில்லையே என்ற யோசனையுடன் அதிலிருந்த from அட்ரசை பார்த்தபோது, அதில் ஐயனின் முகவரி இருந்தது. மொத்தமாக 10 புத்தகங்கள் (உடையார் 6 பாகம் உட்பட) அனுப்பிவைத்திருந்தார். அனைத்து புத்தகங்களிலும் அன்பினிய ராஜுவிற்கு என்று கையொப்பமிட்டது மட்டுமில்லாமல், அவர் கைப்பட from, to அட்ரஸ் எழுதி அனுப்பியிருந்தார்.

    அவர் வெள்ளைத் துறைமுகம் எழுத ஆரம்பித்தவுடன், அவருடனான தொடர்பு அடுத்த நிலைக்கு நகர்ந்தது. whatsapp குறுஞ்செய்திகளாகவோ, கைபேசி அழைப்பாகவோ அல்லது அவரது உதவியாளர் திருமதி பாக்கியலக்ஷ்மி அவர்கள் வழியாகவோ, கேள்விகள் அனுதினமும் வந்தவண்ணம் இருந்தன. வலைத்தளங்களிலிருந்து இயன்றவரை விடை தேடி அனுப்பினேன்.

    ராஜா, இந்த 1938 - 39 வருஷம், சிங்கப்பூர்ல ஆட்சியாளர் யாரு? மக்கள் எப்படியிருந்தாங்க?

    மலேயா பொருளாதாரம் 1937 – 39-ல எப்படி? என்ன உற்பத்தி, என்ன இறக்குமதி?

    1937 - 40 Ford என்ன மாடல் கார்? cadillac எந்த வருஷம்? படம் கிடைக்குமா?

    பிரிட்டிஷோட fleet என்ன? என்ன போர்க்கருவிகள், எத்தனை கப்பல்? என்ன வகையானது? என்ன விமானம்?

    பர்மால யாரு? என்னமாதிரி பொருளாதாரம்?

    இந்த தேதில, அந்த இடத்துல யார் இருந்தாங்க?

    இந்த சம்பவம் நடந்த தேதி கிடைக்குமா?

    இந்த period-ல கொரியால யாரு ஆட்சியாளர்? உற்பத்தி? இறக்குமதி? பொருளாதாரம்?

    வின்ஸ்டன் சர்ச்சிலோட குணாதிசயம், இளைமைக்காலம் பத்தி எதாவது விஷயம் கிடைக்குமான்னு பாரேன்?

    இந்த தாக்குதல் தேதிவாரியாக வரிசைப்படுத்தி கிடைக்குமா?

    சீனப்புரட்சி, செஞ்சேனை லாங் மார்ச், எங்க தொடங்கி எதுவரை? காலகட்டம்?

    இப்படியான கேள்விகள் தினமும் வந்தவண்ணம் இருந்தது. எந்த ஒரு தகவலும் இருவேறு மூலங்களில் ஒத்துப்போகும்வரை அவர் திருப்தி அடைந்ததில்லை. ஒவ்வொருமுறை தகவல் திரட்டி தரும்போதும் அவர் சொன்ன God bless u-க்களே நான் சேர்த்து வைத்திருக்கும் மாபெரும் சொத்து. உடனுக்குடனே பதில் அனுப்பினால் அளவில்லா மகிழ்ச்சி அடைவார். அவருடைய பெரும்பாலான whatsapp கேள்விகள் இரவு 3 மணியிலிருந்து காலை 6 மணிக்குள் அனுப்பப்பட்டவை. 70 வயதிலும் அவரது இயக்கம் 20 வயது இளைஞனுக்கு சவால்விடும் விதமாகவே இருந்தது.

    அவர் கேட்ட கேள்விகளும், தகவல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாக இருந்ததால் இதைக்கொண்டு எப்படி புதினமோ, கதையோ சாத்தியம் என்ற வியப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.

    2017 செப்டம்பர் மாதம் கோவையில் ஒரு திருமண நிகழ்வுக்காக அவர் வந்திருக்கும் செய்தி கேட்டு, அவரை சந்திக்க விண்ணப்பித்தேன்.

    ஹோட்டல் ஜென்னீஸ் ரெசிடென்சில ரூம் நம்பர் 104, குடும்பத்தோட வா என்று பதில் அனுப்பியிருந்தார். இது எங்களது முதல் சந்திப்பு. அவரை சந்திக்க குடும்பத்துடன் சென்றிருந்தேன். தொலைபேசியில் பேசியிருந்தாலும் நேரில் எனக்கு அவரிடம் பேச படபடப்பாக இருந்தது. சிந்தனை பனிமூட்டமாக இருந்தமையால் அவரிடம் பேச நினைத்திருந்த எதுவும் அச்சமயம் நினைவில் வரவில்லை. பரஸ்பர அறிமுகங்களுக்கு பின்.

    1941 பெர்ல்ஹார்பர் அட்டாக் வரைக்கும் ஊழியன் புத்தகம் வேணுமே. அனுப்பறியா?

    ஏற்கனவே அனுப்பியிருந்த 12 ஆயிரம் பக்கங்களையும் 3 வாரத்திற்குள் படித்து முடித்திருந்தார் (பெரும்பாலும் உருப்பெருக்கியின் உதவியுடன்).

    பின்னொரு சமயத்தில் அவரை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றபோது அந்த 12 ஆயிரம் பக்கங்களிலிருந்து அவர் எடுத்த குறிப்புகளை அவர் அறை முழுக்க சிறு சிறு காகித துண்டுகளில் குறிப்புகளாக கண்ணில் படும்படி ஒட்டிவைத்திருந்தார். அந்த துணுக்குகளின் வழியே அந்த கதைமாந்தர்கள் அவரிடம் பேசியவண்ணம் இருந்திருக்க கூடும்.

    1935 - 37 முடிச்சாச்சு.

    1938-லிருந்து 1941 பெர்ல்ஹார்பர் அட்டாக் வரைக்கும் ஊழியன் புத்தகம் வேணுமே. அனுப்பறியா?

    சரிங்க ஐயா, ஒரு வாரத்துக்குள்ள தொகுத்து அனுப்பிடறேன்.

    சரி, எல்லாத்துக்கும் எவ்வளவு செலவு? சொல்லு இப்பவே குடுத்தடறேன்.

    நான் எவ்வளவு மறுத்தும் அவர் விடவில்லை, குறைந்தது பிரிண்டிங் மற்றும் கொரியர் செலவையாவது வாங்கிக்கொண்டே ஆகவேண்டும் என்று கூறி அதற்கான தொகையை அளித்தார். நானும் அவர் கையால் வாங்கும் அதிர்ஷ்டத்தை மனதில்கொண்டு அவர் கொடுத்த தொகையை வாங்கிக்கொண்டேன். அவர் பரிசாக அனுப்பிய புத்தகங்களின் மதிப்பே அனைத்து செலவுகளுக்கும் ஈடானது. ஆனாலும் செலவுத்தொகையை வாங்கிக்கொண்டே ஆகவேண்டும் என்று கொடுத்தார். இன்றும் அந்த ரூபாய் தாள்கள் என் வீட்டு பூஜை அறையில் பத்திரமாக உண்டு.

    ராஜுக்கு, என்ன தொழில்?

    சிறிய அளவில் சுயதொழில்ங்க அய்யா, இயந்திரங்கள், ஆட்டோமேஷன், ஜெர்மனில் ஒரு லேன்ட் சர்வே செய்யும் ஒரு நிறுவனத்திற்கு மென்பொருள் ஏற்றுமதி.

    சாஃப்ட்வேர் செய்வதானே, பாகி எனக்கு ஒரு வெப்சைட் செய்ய ரொம்ப சிரமப்படுறாங்க. நீ ஏதும் இதுல உதவ முடியுமா?

    ஐயா, என் தொழில் வேறுவகையானது. ஆனால் உங்களுக்காக முயற்சி செய்கிறேன்.

    இந்த சந்திப்பு ஒரு நீண்டகால தொடர்புக்கு அடித்தளம் அமைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அடுத்த வாரத்தில் அவர் கேட்டுக்கொண்டபடியே 1941 வரையிலான பத்திரிகை தொகுப்பை அனுப்பி வைத்தேன். இந்த வெள்ளை துறைமுகம் புதினத்திற்காக மட்டும் தொகுத்து அனுப்பிய ஊழியன், குமரன் மற்றும் இதர குறும்பத்திரிக்கைகள் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பக்கங்களுக்கு மேல். அத்தனையையும் படித்தார். 72 அகவையில் மூச்சு சிரமங்களினிடையே உருப்பெருக்கியின் உதவியுடன் நடுநிசியில் விழித்திருந்து 30 ஆயிரம் பக்கங்கள் படிப்பது, படித்ததை செரித்து புதினம் படைப்பதை ஒரு Super Human Effort ஆக மட்டுமே என்னால் அண்ணாந்து பார்த்து வியக்க முடிந்தது. இது தவிர திரைப்படங்களாக, ஆவணப்படங்களாக அவர் பார்த்தவை, படித்தவை கணக்கிலடங்கா.

    இந்த இடைவெளியில் 2 முறை மூச்சுத்திணறல் பிரச்சினைக்காக ஐசியூ வரை சென்று மீண்டுவந்தார். ஆனால் அவை எதுவும் அவரை சுணங்க செய்யவில்லை. மருத்துவமனை தன்னை ஒரு ஆடி மாத புது மாப்பிள்ளை போல் எழுத்திடமிருந்து பிரித்து வைத்திருப்பதாக ஒருமுறை நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.

    முதல் பாகத்திற்கான தகவல்கள் அனைத்தும் சேர்ந்தவுடன் அன்றைய தினம் whatsapp குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். இரண்டாம் உலகப்போர் பற்றி எழுதவேண்டும் என்ற ஆவல் ஈடேரியதாகவும், இதற்கு எனக்கு நீ உதவியதைப்போலவே உனது லட்சியத்தை அடைய சரியான மனிதர்கள் சரியான சமயத்தில் வந்துசேர பிரார்த்திக்கிறேன் என்று அனுப்பியிருந்தார். சத்தியமான மனிதரின் ஆசிகள் சந்தோசமளித்தபோதும் என்னை வியப்பில் ஆழ்த்தியது 72 வயதிலும் அவர் சாதனை படைக்க ஓடிக்கொண்டிருந்தது. 30 வயதிலேயே 50 வயதிற்கு பின்னரான பணி ஓய்வைப்பற்றி திட்டமிடும் என் போன்றோருக்கு அவர் ஒரு வாழ்வியல் பாடம்.

    முதல் 500 பக்கங்கள் எழுதி முடித்தவுடன், படித்து பார்த்து கருத்து கூறுமாறு 22 அத்தியாயங்கள் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நான் சாமானிய வாசகன், அந்த படைப்பை படித்து உள்வாங்க ஒரு வாரமாயிற்று. மலைப்பாயிருந்தது. தொகுத்து கொடுத்த 30 ஆயிரம் பக்கங்களிலிருந்து அவர் புதினத்தில் பயன்படுத்தியது சில 100 வரிகள்கூட இருக்காது. புதினமாக இருந்தாலும் இடம், காலம், பெயர்கள் மற்றும் சம்பவங்களில் நம்பகத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக இத்தனை உழைப்பு. 70 வயதிலும் COPD சிரமத்திற்கு மத்தியிலும் அவரின் இந்த அசாத்திய உழைப்பின் முன் என் 38 வயது சோம்பேறித்தனம் பல்லிளிக்கிறது.

    இந்த வெள்ளைத் துறைமுகம் புதினம் ஒரு கால இயந்திரம், உங்களை ஸ்ரீனிவாசனின் பார்வை வழியே இரண்டாம் உலகப்போருக்கு இட்டுசெல்லும் வல்லமை படைத்தது. ஜெனரல்வில்லியம்ஸ் ஸ்ரீனிவாசன் வழியேயான கதை ஓட்டம் இன்றைய தலைமுறைக்கான வாழ்வியல் கல்வி. கொரியா மற்றும் பர்மா வழியே பயணப்படும்போது கண்களில் நீர்கோர்ப்பதை தவிர்க்க முடியவில்லை. பர்மாவில் தமிழர்கள் கோலேச்சியதும், பின்னர் அனைத்தும் பிடுங்கப்பட்டு அகதிகள்போல் விரட்டப்பட்டதும் கதைவழியாக சொல்லப்பட்டிருக்கிறது. அதிகாரத்தின் பொருட்டு மனிதர்கள் ஆடிய கோரத்தாண்டவம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆணவமும், பேராசையும் எப்படி விசுவரூபமெடுத்தன, அது சாமானியர்களை படுத்தியபாடு என்ன என்று காட்டப்பட்டிருக்கிறது.

    அவருடைய வலைத்தளத்திற்கான வேலையும், அது ஏற்படுத்திக்கொடுத்த அவரது சந்திப்புகளும், அதன் பிறகான விளைவுகளும் அழகானவை, ஆழமானவை. சரியான காரணத்துடன் சந்திப்பு, சரியான கேள்விகளை அவர் எப்போதும் புறந்தள்ளியதில்லை. அப்படியான ஒரு சந்திப்பில் நீண்ட நாட்களாக மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயம் பற்றி அவரிடம் கேள்வியாக முன்வைத்தேன், நான் செய்து வந்த தொழிலில் லாப நிர்ணயம் செய்யும் ஒரு குறிப்பிட்ட யுக்தி சரியா, தவறா என்ற கேள்வியை முன்வைத்த போது,

    அதுதான் வியாபாரம், அதில் தவறில்லை. உன் உழைப்பிற்கான லாபத்தை அறம் சார்ந்து நிர்ணயம் செய்துகொள், யுக்தி என்ன என்பதுபற்றி கவலைப்படாதே. பேராசைக்கு மட்டும் இதில் இடம் கொடுத்துவிடாதே என்று சொன்னது மட்டுமில்லாமல், பேராசை சார்ந்து லாபம் கொள்ளும் வியாபாரிகள் எப்படி அதை இழக்கிறார்கள் என்று கொத்தவால் சாவடி பதுக்கல் வியாபாரிகள் பற்றிதான் பல வருடங்களுக்கு முன் செய்த ஆய்வு குறித்து விரிவாக சொன்னார். சரியான சமயத்தில் சரியான கேள்வி கேட்க தெரிந்திருப்பின் அவருடைய அருகாமை சாதாரண கல்லையும், பட்டை தீட்டிய வைரமாக மாற்றக்கூடிய வல்லமையுடையது. அவர் எழுத்து வேறு, அவர் வேறு அல்ல. எனவே அவர் புத்தகங்களை தஞ்சமடைந்தேன். அவருடைய அருகாமை கிடைக்க பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

    இந்த 38 வருடங்களில் இரண்டு இடங்களுக்கு சென்று வரும்போது மட்டும் நான் வெறுங்கையோடு என்றும் திரும்பியதில்லை, ஒன்று என்னை வளர்த்த பெரியம்மா வீடு. ஊறுகாய் எடுத்துட்டு போறியா, இட்லிபொடி கொண்டு போ என்று பை நிறைய நிரப்பி அனுப்புவதில்தான் பெரியம்மாவிற்கு எத்தனை சந்தோசம். இரண்டாவது என் குருநாதர் அய்யா பாலகுமாரன் வீடு, ஒவ்வொரு முறையும் கைநிறைய புத்தகங்கள் கையொப்பமோடு. வெளிப்பார்வைக்கு இவை ஊறுகாயாகவோ, புத்தகமாகவோ தெரியலாம். ஆனால் இவ்விரண்டும் உள்ளம் நிறை பேரன்பு. அவருடைய வீட்டில் நுழையும் முன்வரை லோகாதய பிரச்சினைகளால் சுருக்கப்பட்டிருக்கும் மனம் அவரை சந்தித்த கணம் உற்சாகத்தில் நிரம்ப ஆரம்பிக்கும். அவருடனான சந்திப்புகளில் நான் ஒரு காந்தபுலத்தில் வைக்கப்பட்ட இரும்புத்துண்டாகவே உணர்ந்திருக்கிறேன். இதை எப்படி வார்த்தைகளில் வடிப்பது என்று எனக்கு தெரியவில்லை. சர்வநிச்சயம் அவர் உடல் மனம் தாண்டிய ஒன்றில் திளைத்திருந்தார், அந்த இருப்பு, அதன் அருகாமை இது போதும்.

    வலைத்தளம் (www.writerbalakumaran.com) வெளியான தினத்தன்று அதை செய்து கொடுத்ததற்காக எனக்கு ஒரு காமதேனு சிலை பரிசாக அளித்தார். அதே நாளன்று நடந்த பகவான் ஜெயந்தி விழாவில் சிறப்புரையாற்றிய திரு. சுகி சிவம் ஐயா அவர்களுக்கும் அதே போன்றதொரு காமதேனு சிலை அவரால் அளிக்கப்பட்டது. அவர்வரையில் எந்த அளவிலும் உயர்வு தாழ்வு இல்லை என்பதற்கு இதுவே சான்று.

    குடும்பத்தினருடன் ஒருமுறை அவரை சந்தித்தபோது திடுமென அவர் இந்த கேள்வியை முன் வைத்தார்.

    ராஜுக்கு என்ன வேணும்?

    அய்யா, எனக்கு குணவதியான மனைவி, நன்மக்கள், மிகப்பிடித்த தொழில், பிறரிடம் கையேந்த அவசியமில்லாதபடி பொருளாதாரம் என அனைத்தும் திருப்திகரமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதன் பொருட்டோ உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேன். காரியம் எதுவோ அது சிறப்பாக நடக்கட்டும்.

    நட்பாகவோ, குருவாகவோ இருக்க முடியும், இதில் எது என்பது உன் விருப்பம்.

    பல ஆயிரம் பேர் தவமிருக்கும் அத்தொடர்பு ஒரு கண நேரத்தில் அருளப்பட்டது. பிரபஞ்சத்திற்கு மனமார்ந்த நன்றி.

    ராஜு கந்தசாமி, சத்யா ராஜு,

    48, குறிஞ்சி நகர்,

    சின்னவேடம்பட்டி,

    கோயம்பத்தூர் - 49

    9944363343

    1

    ஸ்ரீனிவாசன் இரண்டு கரங்களையும் கூப்பியவாறு காவிரி நதிக்கரையின் எதிரே நின்று அதை கனிவுடன் வணங்கி நின்றான். இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு காவேரி கனத்து ஒரு கன்றுக்குட்டியின் ஓட்டத்துடன் போய்க் கொண்டிருந்தது.

    ஆனி மாசம் முதல் வாரமே வந்துடும்டா. நொக்கும் நுரையுமா ஆரம்பிச்சு, சத்தையும் சள்ளையுமா வந்து ஒரு பழுப்புக் கலர்ல கலங்கி இடுப்பளவு வந்த பிறகு மெல்ல மெல்ல தெரியும். நெஞ்சு ஆழத்துக்கு வந்த பிறகு கரையிலேர்ந்து பார்க்க அத்தனை தெளிவா ஓடும். ஊர்ல வெய்யில் கம்மியாகி அப்பப்போ இரண்டு தூறல் போட்டு குளுமையா பூமி இருக்கிற நேரம் காவேரில ஜலமும் வந்துடும். அடாடா, இந்த பறவைகள் போடற கும்மாளம் இருக்கே அத்தனை சந்தோஷம் பார்க்கறது. ஸ்ரீனிவாசனின் அப்பா சந்தோஷமாகச் சொல்வார்.

    ஸ்ரீனிவாசன் அவருடைய பேச்சில் நிறைவுகொள்ள மாட்டான்.

    உங்க அப்பா, உங்க தாத்தா காவேரி பத்தி என்ன சொல்லுவா? கேட்டுருக்கியா.

    ஏன் எங்க தாத்தாவோட அப்பா சொல்றதையும் கேட்டுருக்கேன். அப்போ எனக்கு பத்து வயசு. அவருக்கு எண்பதோ, எழுபதோ. ஆனி மாசம் மழை பெஞ்சு மண்ணு குழைஞ்சா வெள்ளம் வரும் அப்படின்னு சொல்லுவா.

    புரியலையே ஸ்ரீனிவாசன் சொன்னான்.

    ஆனி மாசம் மழை பெய்யணும். தென்மேற்கு பருவக்காற்று கொஞ்சம் தள்ளி ஓடிப்போய் கும்பகோணத்துக்கு வரணும். கும்பகோணத்திற்கு வந்து இறங்கணும். மண்ணுல ஜலம் தேங்கற மாதிரி மழை பெய்யணும். அப்போ கர்நாடகால கொலைகுத்து மழைன்னு அர்த்தம். கர்நாடகால கொலைகுத்து மழைன்னா காவேரி புடுங்கிட்டு வரப்போகுதுன்னு அர்த்தம். ஒருதடவை நாலு மணி நேரம் அடிச்சு பெய்ஞ்சது. பெய்ஞ்ச மழையே காவேரில வெள்ளமா வந்தது. அதுக்கு இரண்டு நாளைக்கு அப்புறம் காவேரில வெள்ளம் வந்தது பார்த்துக்கோ... அடாடா, ஆத்துல வெள்ளம் வர்றதை பார்க்கறதுக்கு ஒரு கொடுப்பினை வேணும். வெள்ளம் வர்ற நேரத்துல திருவனந்தபுரம் போறேன் அப்படின்னு, கேஸ் கட்டோட வேற எங்கேயும் ஓடிப் போயிடக் கூடாது.

    இந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தொம்பதுல மழை நன்னா பெய்யும். போன வருஷம் வெகுதான்யம் வருஷம். நல்ல விளைச்சல். இந்த வருஷம் பிரம்மாதி. மழை நன்னா இருக்கறது மட்டுமல்ல, ஹோம யக்ஞாதிகள் சிறக்கும். வர வருஷம் விக்ரமம். இராஜாவுக்கு ஆகாது.

    இது நடக்கறதாப்பா?

    அட முட்டாளே பிராம்மணன் தூங்கப்படாதுடா.

    இதுக்கு அர்த்தம் அலார்ட்டா இருக்கறது. போன வருஷம் 1938 வெகுதான்ய வருஷம். விளைச்சல் அதிகம். செல்வ வளம் அரசு மரியாதை, காலணாவுக்கு ஒரு பெரிய அதிரசம். அதி தேவதை வைஷ்ணவி. 1939 இந்த வருஷம் பிரம்மாதி. தெரிஞ்சவன், தெரியாதவன் எல்லாரும் ஹோமம் பண்றான். தேவதைகளை கூப்டாச்சோன்னோ அதுல உஷ்ணமாகும். அதாவது சண்டை, முறைப்பு, மனஸ்தாபம். அதி தேவதை வாராஹி. பல் கடிப்பாள். 1940 விக்ரமம். யுத்தம் கொடுமையான செயல்கள். ஜனங்கள் அதிகம் சாவார்கள். செல்வம் குறிப்பிட்ட திசையில் பாயும். அதிதேவதை இந்திராணி.

    திருவனந்தபுரத்தை வெந்தபுரம் என்று கேலியாக தாத்தாவிற்கு அப்பா சொல்வாராம்.

    சோழர்களுக்கு சேரர்களை பிடிக்காது. அது பரஸ்பர அசூயை. மழை வர்ற நாள்லேயும், வெள்ளம் வர்ற நாள்லேயும் ஒரு மனுஷன் ஊரைவிட்டு போகக்கூடாது. நன்னா காய்ஞ்சு கிடக்கும்போது தோள்ல துண்ட போட்டுண்டு தேசத்தின் நாலாபக்கமும் போலாம். மழை வரப் போறதுன்னு தெரிஞ்சா சொந்த ஊர் ஓடி வந்துடணும். ஆனி மாசத்துல நடுவுல வந்து சேர்ந்துட்டோம்னாக்கா ஆடி மாசம் பித்ருக்களுடைய மாசம் இல்லையா நிறைய ஜபம் பண்ணிட்டு தர்ப்பணம் பண்ணலாம். உச்சி வேளைல தர்ப்பணம் பண்ணிட்டு ஜபம் பண்ணலாம். தர்ப்பணத்தன்னைக்கு பண்ற ஜபமும், மௌனமும் ரொம்ப மதிப்பு.

    ஜபம் புரியறது. அதென்ன மௌனம்?

    என்னைக்கு தர்ப்பணமோ அன்னைக்கு ஆ... ஊ...ன்னு சண்டை போடக்கூடாது. யாரோடும் வாக்குவாதம் இருக்கக்கூடாது. உரத்த குரல்ல சண்டைபோடக் கூடாது. பித்ருக்கள் வந்திருக்காளோன்னோ. சுத்தி நிப்பாளோன்னோ. நீ என்ன பண்றேன்னு வேடிக்கை பார்ப்பாளோன்னோ. அப்போ வேட்டியை வழிச்சுட்டு கத்தினாக்கா மிரண்டு நகர்ந்துபோவா. தள்ளி நின்னு பார்ப்பா. ஐய்யோ இன்னும் இது கத்திண்டு இருக்கே அப்படின்னு வருத்தப்படுவா. அவா வருத்தம் நல்லதா. தப்பு. நல்லவா உன்கிட்டக்க வந்திருக்கா. நல்லது சொல்லி அவா அன்பை சம்பாதிச்சுக்கணும்.

    நல்லது சொல்லி சம்பாதிச்சுக்கணும்னா எப்படி? ஸ்ரீனிவாசன் கேள்வி தொடர்ந்தான்.

    ஆஹா, ஸ்ரீனிவாசன் பசுமாட்டுக்கு கீரை கொடுக்கறான். ஸ்ரீனிவாசன் எறும்புக்கு மாவு போடறான். ஸ்ரீனிவாசன் நாயிக்கு சாதம் போடறான். ஸ்ரீனிவாசன் பறவைகளுக்கு தானியம் இறைக்கிறான். ஸ்ரீனிவாசன் நல்ல வெள்ளை வெளேர்னு சாதம் வைச்சு அதுல பருப்பு போட்டு அது மேல நெய்யை வைச்சு பித்ருக்களுக்குன்னு சொல்லி காக்கைகளுக்கு கொடுக்கறான் அப்படின்னு தூரத்துலேர்ந்து பார்த்தா காக்கை விழுங்கற ஒவ்வொரு கவளமும் அவாளுக்குள்ள போகும்.

    சுகமான கற்பனையா இருக்கு ஸ்ரீனிவாசன் வேண்டுமென்றே மறுதலிப்பான்.

    "இருக்கட்டுமே. அவா சாப்பிடறாங்கற சந்தோஷம்தானே நமக்கு முக்கியம். அப்ப ஒரு அமைதி கிடைக்கறதோன்னோ அந்த அமைதிதானே நமக்கு முக்கியம். வெத்து நம்பிக்கைதானே வாழ்க்கை. நாளைக்கு நன்னாயிருக்கும் அப்படிங்கற எண்ணம்தானே நம்பிக்கை. அது எல்லோருக்கும் இருக்கு இல்ல. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என் தலைவர். அவர் இந்த தேசத்தை நன்னா நடத்துவார் அப்படின்னு ஒருத்தன் நினைச்சா அதுக்குப் பேர்தானே நம்பிக்கை. மத்தபடிக்கு அவனுக்கு அவரைப் பத்தி என்ன தெரியும். ஒண்ணும் தெரியாது. அவர் நல்லவரா, கெட்டவரா... நம்பிக்கைதான். ராஜகோபாலாச்சாரியாரை காங்கிரஸ்ல சேர்க்கப்படாது இப்பவே தள்ளணும். காந்திதான் தெய்வம் அப்படின்னு இன்னொருத்தன் கத்தறான்னு வைச்சுக்கோ, அவன் சரியா தப்பா. அது அவன் நம்பிக்கை கத்தறான். அவ்வளவுதான்.

    எந்தவித ஆதாரமும் இல்லாம ஒருத்தன் நம்பறான் பாரு அதுதான் வாழ்க்கை. எல்லார் வாழ்க்கையும் இந்த வெத்து நம்பிக்கைதான். இப்போ சொல்லு ஏன் வெள்ளம் பார்த்து சந்தோஷம் வருது."

    புரியலையே.

    யோசனை பண்ணு.

    இல்லை. இது இரண்டையும் கோக்க முடியலை.

    நான் கோர்த்து தர்றேன் பார். வெள்ளம்ங்கறது என்ன? அதீத ஜலம். அதீத ஜலம்னா என்ன? அந்த ஜலம் நாலாபக்கமும் பரவும். நாலாபக்கமும் பரவும்னா என்ன? இந்த வாய்க்கால் போய் அந்த வாய்க்கால் போய், இந்த வயலுக்கு போய், அந்த வயலுக்குப் போய் ஆக, கண்ணுக்கு எட்டின அத்தனை களமும் வண்டல் மண்ணு அரிச்சு தளதளதளன்னு புல்லும் செடியுமா இருக்கும். தோப்பும் தொரவுமா இருக்கும். எனக்குத் தெரிஞ்சு ஒரு வேளாளன் பெரிய மாந்தோப்பு வைச்சுட்டு இருக்கறவன் காலாங்கார்த்தால காவேரி பக்கம் வந்து அவன் பக்கமா ஓடற கால்வாய்லேர்ந்து ஜலம் எடுத்து தவலை தவலையா கொண்டுபோய் அவன் வச்சிருக்கிற மாமரத்துக்குக் கொட்டுவான். ‘ஏம்பா மரம் உரிஞ்சுக்குமே, நீ ஏன் கொட்டற’ என் புள்ளை தானா கையில எடுத்து சாப்பிடும்ங்க. ஆனா இரண்டு வாய் நான் அதுக்கு ஊட்டினா எனக்கு ஒரு சந்தோஷம் இல்லீங்களா. பெத்த புள்ளய காட்டிலும் அவன் வச்ச மரம் உசத்தி. தவலை தவலையா தண்ணி ஊத்தி உரிமையோட பழம் பறிக்கலாமாம். ஆக, காவிரில் வெள்ளங்கறது காய், கனி, இலை, மனிதர்கள் உயிர் வாழ்தல். ஆக, உயிர் வாழ்தல் என்பது கர்நாடகாவில் மழை பெய்து காவேரில் வெள்ளம் வர்றது. வெறும் வெள்ளம் மட்டும் இல்ல, வெள்ளம் வரப்போறதுன்னு ஒரு தென்மேற்கு பருவ காத்து மேகத்தோட வந்து நம்ம ஊர்ல தடாலடியா பெய்ஞ்சுட்டு மறுநாள் வெள்ளத்தையும் கொண்டு வர்றது. கர்நாடகால, மைசூர்ல, ஒகேனகல்ல, கூர்க்ல தாண்டி தாண்டி தாண்டி திருச்சிராப்பள்ளில ஹா...ன்னு பரவி அங்கேயிருந்து காவேரியா, குடமுருட்டியா, அரசலாறா, கொள்ளிடமா ஊருக்குள்ள பாய்ந்து சோழ தேசத்தை செழிப்பா வைக்கணும். பச்சரிசி படி நாலணா. ஒரு ரூபாய்க்கு ஐந்து படி அரிசியே தர்றான். உளுத்தம்பருப்பு, மிளகாய், தனியா சல்லிசா கிடைக்கறது. இங்க அங்க, இத்த அத்த பண்ணி சம்பாதிச்சுட்டு வந்து பொம்மனாட்டிகிட்ட கொடுத்துட்டு ராத்திரி பால் சாதமா சாப்டுட்டு காத்தால எழுந்து ராத்திரி சாதத்துல ஊறவைச்ச தண்ணியை துளியூண்டு உப்பு போட்டு நீராகாரமா குடிச்சுட்டு சின்ன ஏப்பத்தோட திண்ணையில் உட்கார்ந்து ரிக் வேதசாகை சொல்றது. விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்றது. சிவ கவசம் சொல்றது.

    இதெல்லாம் வரிசை கிரமமா?

    இல்லடா. வேதம் தினமும் சொல்றது அந்தணர்களுடைய கடமை, பழக்கம், பண்ணியாகணும். விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ற இடத்துல காசு பணத்துக்கு குறை இருக்காது. நோய் நொடி வராது. சுபீட்சமா இருக்கும். சிவ கவசம்ங்கறது ஒரு வேண்டுதலா பண்றது.

    என்ன வேண்டுதல்?

    எத்தனையோ பேர் தெரிஞ்சவா இருப்பா. இவாளுக்கு உடம்பு சரியில்லை. அவாளுக்கு உடம்பு சரியில்லை. இங்க ஒரு திருஷ்டி. அங்க ஒரு கண்ணேறு. இங்க ஒரு பையன் சரியா படிக்க மாட்டேங்கறான். அந்தப் பொண்ணுக்கு பேச்சு நன்னா வரலை அப்படின்னு யாராவது ஏதாவது சொல்லுவா. அதை மனசுல வாங்கிண்டு அந்தக் குழந்தை சௌக்கியமா இருக்கணும். அந்த ஆள் நோய் தீரணும். இந்தப் பொண்ணு வலிமையா இருக்கணும் அப்படின்னு சிவ கவசம் சொல்றது. நாம மட்டுமே வாழலை. நம்ம சுத்தி இருக்கறவாளும் நல்லபடியா வாழணும். அதுதான் சந்தோஷம். எதிர் ஆத்துல சாவுன்னா, நம்ம ஆத்துல பாயஸம் பண்ண முடியுமா. எதிர் ஆத்துல விசேஷம்னா நம்ம ஆத்து விறகை வெளியே இழுத்துடலாம்.

    அதாவது அடுப்பை அணைச்சுடலாம்ங்கறியா.

    ஆமாம். அக்ரஹாரத்துல ஒரு ஆத்துல விசேஷம்னா எல்லார் ஆத்துலேயும் விறகை இழுத்துடுவா. உள்ளூர்லேயே ஐம்பது அறுபது இலை விழும். ஐம்பது, அறுபது என்ன நூறு விழும். வெளியூர்லேர்ந்து வந்தவா நூறு. இருநூறு. முக்கியமான வேலை செய்யறவா. கொண்டு வந்து அரிசி பருப்பு இறக்கினவன். மாட்டு வண்டிக்காரன். கூப்ட குரலுக்கு வந்து மராமத்து வேலை செய்யறவன், அப்படின்னு வருவா. அந்த ஜனங்கள் ஐம்பது. இருநூத்தி ஐம்பது இலை. இதெல்லாம் எப்போ கனஜோரா நடக்கும். காவேரில வெள்ளம் வந்தா நடக்கும்.

    சுபீட்சமான தேசம்னு சொல்லுங்கோ.

    ஆமாம். சோழ தேசம் சோறுடைத்து. தென்மேற்கு பருவகாற்று. ஆனி ஆடில உள்ளுக்குள்ள புகுந்து மழையும் காட்டி, வெள்ளமும் கொண்டு வந்துடும். பரபரபரன்னு வேஷ்டியை உதறி செடி மேல போட்டுட்டு கோமணத்தோட இறங்கிடுவான். மேல் துண்டை இறுக்கி தலைல கட்டிப்பான். கொட்டைப் பாக்கை கல்லுல வைச்சு அடித்து நசுக்கி ஆறு வெத்தலையோட ஒரு சின்ன உருண்டை சுண்ணாம்போட வாயில போட்டு அதக்கிடுவான். வாயில ஊறின பிறகு நாலாவது சமாச்சாரத்தை சொருகுவான்.

    அதாவது புகையிலை.

    ஆமாம்.

    மூணாவதுன்னா சுண்ணாம்பு?

    ஆமாம்.

    நீங்கள்லாம் சுண்ணாம்பு இருந்தா கொடுன்னு கேட்க மாட்டேள். மூணாவது இருந்தா கொடுன்னு கேட்பேள்.

    ஆமா. சுண்ணாம்புங்கறது எரிச்சலான விஷயம் இல்லையா. அதனால அந்த வார்த்தையைகூட பயன்படுத்தறது கிடையாது. மூணாவது இருந்தா கொடேன். என்னது நாலாவதா வாயில அப்படின்னு கேட்பா. ஒரு மரியாதை, ஒரு நாகரீகம். எப்போ வெத்தலை பாக்கு புகையிலை போட முடியும். காத்தால டொம்முன்னு சாப்டாதான் முடியும். காத்தால டொம்முன்னு என்ன சாப்பிடுவான். பச்சை மிளகா, வெங்காயம், நார்த்தங்கா துண்டு. அவனுக்கு பிடிச்ச மீன் குழம்பு, இத்யாதி, உப்பு போட்டு கையை விட்டு கரைப்பான். ஒரு மாதிரி பிசைஞ்சு செமி ஸாலிடா வைச்சுக்குவான். குழம்பு விட்டுண்டு ஒரு குடி குடிப்பான். ஊறுகாயை தொட்டுண்டு ஒரு குடி குடிப்பான். பச்சை மிளகாயை கடிச்சுட்டு இரண்டு தடவை சாப்பிடுவான். வெங்காயத்தை நறுக்கிண்டு வாயில வைச்சு அதக்கி உள்ளுக்குள்ள அந்தக் காரம் இறங்கின பிறகு மிச்சத்தை குடிச்சு முடிச்சு கையை அலம்பிண்டு, அலம்பின கையை மூஞ்சில துடைச்சுண்டு வருவான்.

    அதென்ன அலம்பின கையை மூஞ்சில துடைச்சுக்கறது.

    ஆமாம். அன்னம் பிசைஞ்சு சூடான கைல மெலிசா ஒரு மொழுக்கு ஒட்டிண்டு இருக்கும். அதை மூஞ்சில துடைச்சுண்டா அது ஒரு மேக்கப். பளிச்சுன்னு ஆகும் மூஞ்சி. நீ வேணா ஒன்னு பண்ணிப் பாரேன். கொஞ்சம் சாதத்தை குழைய தயிர்ல நசுக்கி அதை அப்படி மேல அப்பிண்டு போ. ஒரு பதினைந்து நிமிஷம் கழிச்சு அலம்பிடு. மூஞ்சி வெள்ளை வெளேர்னு இருக்கும். சாப்ட கையை மூஞ்சில துடைச்சுக்கறதுங்கறது அந்த காலத்து மேக்கப்.

    என்னென்னமோ சொல்றப்பா.

    என்னென்னமோ இருக்குடா. நிறைய விட்டுண்டே போறோம். ஒண்ணுமே வைச்சுக்க மாட்டேங்கறோம். கவலையா இருக்கு. இந்த மாதிரி வெள்ளம் வரணுமே. வருஷா வருஷம் வரணுமே. வெள்ளம் குறைஞ்சுண்டே வருது அப்படிங்கறார் எங்க அப்பா.

    அதாவது என் தாத்தா.

    ஆமா.

    என்ன குறையறது?

    ஆனி ஆடில வந்த வெள்ளம் புரட்டாசில கண்ணு மண்ணு தெரியாத இருக்கணும். வடகிழக்கு பருவ மழை அதாவது வங்காளத்துலேர்ந்து வர்ற மழை அடிச்சு பெய்ஞ்சதுன்னா நாலாபக்கமும் தண்ணி ரொம்பி காவேரில இறங்கி அந்த வெள்ளத்தோட வெள்ளமா நொப்பும் நுரையுமா போகும். நெல் பால் பிடிக்கிற நேரம், கரும்பு தோகை உயர்ந்த நேரம், வெத்தலை கொடியும், தட்டாமணி பயறும், ஊடுபயிறும் கிளறி நிற்கிற நேரம். எங்கேயும் பசும்புல் இருக்கிற நேரம். ஏற்றம் இறைக்க வேண்டாம். வேற எங்க தண்ணி வருதுன்னு கிணறு தோண்ட வேண்டாம். காவேரி வெள்ளம் கடை மடைவரைக்கும் வரும். எல்லா வயலுக்கும் வரும். எல்லா கால்வாயும் ரொம்பும். தோள்ல மண் வெட்டி போட்டுண்டு மடை திருப்பிண்டே இருக்கணும். மடை அடைச்சிண்டே இருக்கணும். முழங்கால் வரைக்கும் ஜலம் இருந்தா போறும். வரப்பை தாண்டி ஜலம் ஓடித்துண்ணா பயிர் அழுகிடுமோன்னோ. அதனால மடை அடைக்கிறதுலேயும் ஒரு கவனம் வேணும்.

    அப்பாடா அத்தனை தண்ணீ ஸ்ரீனிவாசன் வியந்தான்.

    ஆமாம். அத்தனை ஜலம் வேணும். வயல் வரப்பு தாண்டாத ஜலம் வேணும். வயல்ல இறங்கினா சேறு தொடையை தொடணும். கதிர் இடுப்பை தொடணும். காத்து தலையை தொடணும். கிச்கிச்சு மூட்டணும்டா. பயிர் கிச்சுக் கிச்சு மூட்டணும்.

    ஸ்ரீனிவாசன் வாய் பிளந்து நின்றான்.

    "கால்லேர்ந்து தொடைவரை ஜில்லுன்னு ஜலம் இருக்கோன்னோ... சேத்து ஜலம். பிறகு இடுப்பு தொட்டுண்டு நெல்லு கதிர்மணில நடக்கணும். நாம தடவினா அப்படி ஒரு கொஞ்சல் மனசுக்குள்ள வரணும். அடர்த்தியா இருக்கணும். நிறைய தானியம் இருக்கணும். இப்படி தடவிண்டு இருக்கும்போதே அடுத்ததா ஒரு சில்லுன்னு காத்து இப்போதைக்கு பொளக்கற வெய்யில்ல கிடையாது அப்படின்னு ஒரு ஈரக்காத்து வரணும். பயிர்க்கு ரொம்ப பிடிக்கும். மத்தியானம் வெய்யில்ல பச்சையத்தை உறிஞ்சுண்டு, சாயந்திரம் ஈரக்காத்தை அனுபவிச்சுண்டு, ராத்திரி பனியில நனைஞ்சுண்டு பயிர் அப்படி தளதளன்னு வளரணும்.

    மாடு கட்டி போர் அடித்தால் மாளாது செந்நெல்லென்று, ஆனை கட்டி போரடிக்கும் அழகான தென் மதுரை. தென் மதுரையே இந்த போடு போட்டா சோழ தேசம் என்ன பண்ணும். சோழ தேசத்து அறுவடைக்கு ஆனை போறாது, பூதகணங்கள் வேணும். அப்படி வந்தக் கதை உண்டு. அடிச்சு களத்துலேர்ந்து வீட்டுக்கு கொண்டு வந்தது போக மிச்ச நெல்லை யானை திங்கட்டும், மாடு திங்கட்டும்னு விட்டுட்டு போயிடுவாடா. மாளாது. தேக்கி வைக்க குதிர் காணாது. குதிர் குதிரா பண்ணி வைச்சுக்க வேண்டியதுதானே அப்படின்னு ஒரு கேள்வி வருதோன்னோ."

    வருது ஸ்ரீனிவாசன் முணுமுணுப்பாய் சொன்னான்.

    தப்பு. இரண்டு குதிருக்கு மேல இருக்கப்படாது. அது பேராசை. அப்படியே நிறைய குதிர்ல வைச்சுண்டாலும் எத்தனை நாள் நிக்கும். அதுக்கு பதிலா விளைஞ்சதை யானையும், மாடும், கன்னும், பறவைகளும் சாப்டுட்டு போனா ஊர் செழிப்பா இருக்கும். வைக்கோலும், நெல்லும் தின்ன யானை காட்டுக்கு போகுமோ. வெறும் இலையை பறிச்சு திங்குமோ. அதனால சொன்ன பேச்சு கேட்டுண்டு கூடவே இருக்கும். என்னத்தை சொல்லு மாடுக்கு வைக்கோல் மாதிரி ஆசை வேற எதுவும் கிடையாது. புல்லு திங்கும்தான். ஆனால் அதுக்கு வைக்கோலை பிரிச்சு போட்டா அது தின்னுன்டே இருக்கும். இடுப்பு பெருத்து கழுத்து தொங்கி அப்பப்போ சாணம் போட்டுண்டு... ஊரே ஒரு பசும்சாணம் வாசனையில் இருக்கும். இப்போ அது குறைவுங்கறா. கலி முத்திண்டு வருதே. அடிச்சுண்டு சாகறதுக்கே மனுஷாளுக்கு நேரம் போறலையே.

    சாய்ந்து பேசிக்கொண்டிருந்த அப்பா உட்கார்ந்தார்.

    ஸ்ரீனிவாசா, வேர்ல்ட் வார் வந்துடுத்தாமே. கும்பகோணம் வரைக்கும் வருமோ.

    ஜெர்மன்ல ஹிட்லர்ன்னு ஒருத்தன் யுத்தம் ஆரம்பிச்சிருக்கான். எல்லா நாட்டையும் தன்னுடைய தேசத்தோட சேர்க்கணும்னு ஒரு ஆத்திரத்துல இருக்கான்.

    எங்க இருக்கு ஜெர்மனி. ட்ரெய்ன் வசதி உண்டா?

    இல்லை, கப்பல்லதான் போய் ஆகணும். கடும் பனிப் பிரதேசம். கோதுமை தேசம்.

    அதுசரி.

    இங்கதானே அரிசி, தண்டகாரண்யம் தாண்டினாலே கோதுமைதானே... ஸ்ரீனிவாசனின் தோழன் கண்ணாமணி பேசினான்.

    உனக்கு எப்படிடா தெரியும்? அப்பா ஆச்சரியமாகக் கேட்டார்.

    அவனுக்கு கும்பகோணத்துலே நிலைகொள்ளல மாமா. வெளியூருக்கு போகணும். எல்லோரும் போற மாதிரி பாம்பேக்கு போகணுமான்னு கேட்டா இல்லேங்கறான். அவனுக்கு வேற தேசம் போகணுமாம். ஏரோப்ளேன்ல போகணுமாம். பீரங்கி வைச்ச கப்பல்ல போகணுமாம்.

    போயிட்டு வரட்டும். அப்பதான் இந்த பூமியோட ருசி தெரியும். கொட்டற பனி. பச்சை மாமிசம். நெஞ்சு எரியற சாராயம். இரண்டு மாசம் தோய்க்காத உடுப்பு அப்படின்னு உட்கார்ந்திருக்கணும்.

    அப்பா உரத்த குரலில் சொல்லிவிட்டு சிரித்தார்.

    எப்படி இவ்வளவு தெரியும் உங்களுக்கு?

    தபாலாபீஸ்லேர்ந்து மில்ட்ரிக்கு போய் ஜாய்ன் பண்ணி, அங்கேயிருந்து எங்களை சிவில் சர்வீஸ் அள்ளிண்டு போயிட்டானுங்க.

    காஷ்மீரமா?

    ஆமா, அங்க ட்ரையினிங். அந்த ஊர்ல ஒரு மாசம் இருந்துட்டா மத்த எங்கேயும் இருக்கலாம் அப்படின்னு அங்கேயே ஒரு மாசம் ட்ரையினிங். குடிக்கலைன்னா கை கால் விறைச்சுக்கும். கம்பளி போட்டு மேல் தோல் ஜாக்கெட். பொண நாத்தம் நாறும். கட்டின வேட்டியோட குளிச்சுட்டு ஈர வேட்டியோட மேல ஏறுவேன். வீட்டுக்கு போறதுக்குள்ள இடுப்பு வேட்டியும், மேல் துண்டும் காய்ஞ்சு போயிடும். சந்தனம் இட்டுண்டு துளசிக்கு பூஜை பண்ணிட்டு ஒன்பது மணிக்கு சாப்பிட உட்காருவேன். பன்னிரெண்டுலேர்ந்து நாலு மணிவரைக்கும் திண்ணையில் தூங்குவேன். காஷ்மீர்ல மீனைத் தரையில போட்டாப்பல ஆயிடுத்து அப்படின்னு புலம்பலா எழுதி, ஆனா இதுவும் ஒரு அனுபவம்தான். சப்ஜில உப்பு இல்லைன்னு நான் கோச்சுக்கறதே கிடையாது, என்ன கொடுத்தாலும் நான் சாப்டுடறேன்.

    மாமிசம் கலந்த சாப்பாடா?

    இல்லை, அடுத்த இலைக்காரன் சாப்பிடுவான். அட்ஜஸ்ட் பண்ணிண்டேன். சிலரால அதுவும் பண்ண முடியாது.

    ஆனால் அப்படி பண்ணுகிற மனோநிலைக்கு ஸ்ரீனிவாசன் வந்துவிட்டிருந்தான். உலகம் என்கிற அனுபவத்தை உணவு என்கிற விஷயம் தடுக்குமா. உணவுதான் வாழ்க்கையா. பாலைவன மணலில் நடக்கிறவன் மனிதன் இல்லையா. அவனுக்கு உணர்வுகள் இல்லையா. காதலும், காமமும், மரணம் பற்றிய அவஸ்தைகள் இல்லையா. ஐயோ கடவுளே... மாமிசம் திங்கறா என்று விலகி சுவரோடு ஒட்டிக்கொள்ள முடியுமா. இவர்கள் இந்த கும்பகோணத்தில் பண்ணுகிற அலம்பல் மிக அதிகம். மாமிசத்தை கேவலம் என்று ஒதுக்கிவிட்டு அதைவிட மோசமான புகையிலையை வாயில் ஒதுக்கிக்கொண்டு தெரு முழுவதும் எச்சில் துப்புகிறார்கள். குனிந்து நிமிருவதே இல்லை. வயிறு சுத்தமே இல்லை. முடைநாற்றம். கடுக்காய் தின்னா கலகலன்னு போகுமாமே. எப்படி திங்கறது? பச்சையாவா, வதக்கியா என்று கேட்கிறார்கள். கடுக்காயில ஊறுகாய் இருக்கா. அப்படி ஒன்னு பண்றாளாமே என்று அலைகிறார்கள். உப்பும், உறைப்பும்தான் இவர்களுக்கு முக்கியமான வாழ்க்கையாக இருக்கிறது.

    கும்பகோணத்தில் அவர்கள் உட்கார்ந்து சாப்பிட்ட இடம் சம்பத் ஐயங்காரின் வராண்டா ஓட்டல். சமையல் அறையில் சமையல் செய்து, தோசை வார்த்து ஹால் தாண்டி வராண்டாவிற்கு எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார்கள். இடது பக்கம் உள்ள வராண்டாவில் பெஞ்சும், மேஜையும் போடப்பட்டிருக்கின்றன. வலது பக்கம் தரையில் பட்டுப் பாய் விரித்திருக்கிறது. கீழே உட்கார்ந்து தின்னா நிறைய திங்கலாம் என்பது அந்த காலத்து நம்பிக்கை. முழங்காலை மடிக்க முடியாதுன்னுவான் வெள்ளைக்காரன். அவன் பெஞ்ச்ல சாப்பிடுவான். நமக்கென்ன எத்தனை தொப்பை இருந்தாலும் குத்திண்டு உட்கார தெரிஞ்சுக்கணும்.

    அவர்கள் கூச்சலாகப் பேசுவார்கள். சம்பத் ஐயங்கார் ஓட்டலில் கோதுமை அல்வா புழங்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு முன்னால் அதிரசம்தான் இனிப்பு. வெல்லமும், அரிசி மாவும் கலந்து, பிசைந்து, நெய்யைத் தடவி காய்ச்சின நெய்யில் முக்கி எடுத்து ஓரம் முழுக்க மொரமொரவென்று இனிப்பு இருக்க, லேசாய் வெல்லக் கசப்பு அடித் தொண்டையை சுகம் செய்ய, மூன்று உள்ளங்கை அகல அப்பம் உடைத்து உடைத்து திங்கலாம். ஒரு அப்பம் ஒரு அணா. மூன்று அப்பமும், இரண்டு அணாவுக்கு மசால் தோசையும், மறுபடியும் இரண்டு அணாவிற்கு காபியும் குடித்தால் எட்டணா. தின்று தின்று கும்பகோணத்துக்காரர்களுக்கு வாய் வலிக்கும்படியாக இருக்கும். ஆனாலும் தின்பார்கள்.

    அன்றைக்கு ஸ்ரீனிவாசன்தான் அப்பாவிற்கும், இரண்டு நண்பர்களுக்கும் அப்பமும், தோசையும் வாங்கிக் கொடுத்தான். ஒருநாள் விட்டு ஒருநாள்தான் கோதுமை அல்வா, உருளைக்கிழங்கு. கோதுமை அல்வா எல்லாம் வெள்ளைக்காரன் உபயம்.

    வடக்கேயிருந்து வருகின்ற ரயில் வண்டிகளில் மூட்டை மூட்டையாக வெங்காயமும், உருளைக்கிழங்கும் வரும். மூட்டைகளாக இல்லாமல் தளரக்கொட்டிய தானியமாக கோதுமையும் வரும். மாயவரம் ஜங்ஷனில்தான் இறக்குவார்கள். தனியே பிரித்துக்கொண்டு போய் கீழே கொட்டி பரப்புவார்கள். மறுபடியும் ரயில்வே ஸ்டேஷனிலேயே வேறு கோணியில் போட்டு தைப்பார்கள். நாலா ஊருக்கும் அனுப்புவார்கள். கன்னியாகுமரி வரை உருளைக்கிழங்கு போயிற்று. பீஹார், மத்தியப்பிரதேசம், குஜராத் என்றெல்லாம் சொன்னார்கள். குஜராத் வேர்க்கடலை பருப்பு ஈயகுண்டு போல இருந்தது.

    நம்மிடம் வானம் பார்த்த பூமி. அவன் குஜராத். தென்மேற்கு பருவ மழை அடிச்சு பெய்யும். சட்லெஜுன்னு என்னென்னமோ ஆறு. அத்தனையும் புலியா பாயும். கடலைச்செடி பறிக்க மாட்டானாம். ஆட்டுக்கு களையை மட்டும் சாப்பிட கத்துக்கொடுத்துடுவானாம். ஆடு வேர்கடலை செடியை தொடாதாம். சில நேரத்துல தண்ணி பாய்ச்சறது, தண்ணி அடைக்கறது மட்டும்தானாம். போட்ட கடலையை அலசி உரிச்சு எடுக்கறதுக்கு பெண்கள். உரிச்ச கடலையை வறுத்து வெளியூருக்கு அனுப்பறதுக்கு ஆட்கள் அப்படின்னு பெரிய கும்பல் வேலை செய்யுமாம். கூட்டாஞ்சோறாம். சப்பாத்தி இட்டுண்டே இருப்பாளாம். சப்பாத்தியும், சப்ஜியும், பயத்தம்பருப்பு கூட்டும், உருளைகிழங்கு காரக்கறியும் எப்பவும் இருக்குமாம். அதைவிட குஜராத்ல பெரிய விஷயம் பால். நாமல்லாம் விரல் போற டம்ளர்தானே வைச்சிருக்கோம். அவன் முழங்கை டம்ளர் வைச்சிருப்பான். பத்து வயசு, பன்னிரெண்டு வயசு பொண்ணையெல்லாம் வைச்ச கண்ணை எடுக்க முடியாது. அப்படி ஒரு தளதளப்பு. பதினாறு, பதினேழு வயசுல ஆம்பளைகள் ஆறடி, ஆறேகால் அடி, அகலமும் உயரமுமா பீமசேனன் மாதிரி இருப்பான். நல்லநிறம். சுள்ளுன்னு அடிச்சா சிவக்கும். அப்படி ஒரு தேகம். எல்லாம் பிரமாதமா இருக்கும். நாலு வார்த்தை பேசினா அவனுக்கு முழி பிதுங்கிடும்.

    இந்தியாவைச் சுற்றி வந்த ஒரு ரயில்வே அந்தணர் விலாவரியாகப் பேச, அத்தனைபேரும் திண்ணையிலிருந்து இறங்காமல் கேட்பார்கள். ஒரு திண்ணையில் முப்பது பேர் உட்கார முடியும். சொம்பு சொம்பாக காய்ச்சி ஆற வைத்த ஜலமும், வெற்றிலை தட்டும் வந்து கொண்டே இருக்கும். ஸ்ரீனிவாசனுடைய அப்பா ஜலத்தில் சீரகம் போடச் சொல்லிவிடுவார். குடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றுத் தோன்றும். சீரகமும் கல்கத்தா பக்கத்திலிருந்து வருகிறது. வெள்ளைக்காரன் வந்து ரயில் போட்டதிலிருந்து ஊர் முழுவதும் சுபீட்சமாகி விட்டது. துணிமணியும், தானியமும், நாக்கில் வைத்தால் கரைகின்ற அஸ்காவும், சீமைச் சாராயமும் தடையின்றி கிடைத்தன. உண்டு கழிக்கின்ற ஜனங்கள் என்பதை வெள்ளைக்காரன் நன்கு புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறான். எங்கு கலவரம் அதிகமோ அங்கு தானியமே போகாமல் பார்த்துக்கொள்வான். தனித்தனியாகவும், மொத்தமாய் அறுத்தும் அவன் இந்தியர்களை காலுக்கு கீழ் வைத்து அடக்கிக் கொண்டிருந்தான். உள்ளங்கை அப்பத்திற்கு எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கிற தன்மையில்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1