Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஸ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் - விளக்கவுரை)
ஸ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் - விளக்கவுரை)
ஸ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் - விளக்கவுரை)
Ebook970 pages10 hours

ஸ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் - விளக்கவுரை)

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மகான்களின் சேர்க்கையில், மறைகள், புராணங்கள், பரமனின் பல லீலைகள், அவதார சிறப்புகள், மந்திரங்களின் உட்கருத்துகள் போன்றவை அறியப்படும். இவைகள், வேதங்கள், இதிஹாஸ புராணங்கள், தந்த்ரங்கள், ஆகமங்கள் போன்ற பல ஆன்மீக பொக்கிஷங்களில் சிதறிக் கிடக்கிறது. அம்முத்துகளைச் சேர்த்து அழகான மாலையாகத் தொடுத்து இறைவனின் வடிவத்தில் சாற்றி அந்த அழகை மனக்கண்ணால் கண்டு களித்து சுவைத்து ரசித்து மனதின் மலங்களை அகற்றி பசுபதியின் ஸ்வரூபத்தை அடையலாகும்.
இங்ஙனம் காணப்படும் பல சிறந்த ரத்னஹாரங்களில் ரஹஸ்ய நாம ஸாஹஸ்ரம் என்று கூறப்படும் லலிதா ஸஹஸ்ரநாமம் மிகச் சிறந்ததாகும். இது பிரம்மாண்ட புராணத்தில் உத்தர காண்டத்தில் ஹயக்ரீவருக்கும், அகத்திய மாமுனிவருக்கும் நடைபெற்ற ஸம்வாதரூபமாக அமைந்துள்ளது. இதில் மந்த்ர காண்டம், ந்யாஸ காண்டம், பூஜா காண்டம், புரஸ்சரண காண்டம், ரஹஸ்ய காண்டம் போன்ற பல காண்டங்கள் அமைந்துள்ளது. பற்பல விஷயங்கள் இதில் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆன்மீகமான விஷயங்கள் மட்டுமன்றி மனித நேயம் நீதி சாஸ்திரம், இறையாண்மை, வாழ்க்கை நெறி, சுற்றுப்புற சூழல் பராமரிப்பு, ராஜநீதி போன்ற பல விஷயங்களும் தெளிவாகிறது. மனிதனின் முழு வளர்ச்சிக்கு மன நிம்மதி, தெளிவு, ஒருமுனைப்பாடு மிகவும் அவசியம். இவைகளை சிறப்பான முறையில் அளிக்கவல்லதாக அமைந்துள்ளது இந்த ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்.

Languageதமிழ்
Release dateDec 17, 2020
ISBN9788179505281
ஸ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் - விளக்கவுரை)

Related to ஸ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் - விளக்கவுரை)

Related ebooks

Related categories

Reviews for ஸ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் - விளக்கவுரை)

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    அதி அற்புத மேலான விளக்கங்கள்!பலருக்கும் பயனுள்ள சிறந்த சேவை!! பக்தி வெள்ளத்தில் அனைவரும் திளைத்திடலாம்!!

Book preview

ஸ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் - விளக்கவுரை) - Dr. Sudha Seshayyan

உள்ளடக்கம்

அணிந்துரை

முன்னுரை

பதிப்புரை

மந்திரப் பொருளுடைய நாமங்கள்

அம்பிகை ஆட்கொண்ட பாஸ்கரராயர்

அறுபத்து நான்கு கோடியின் பட்டியல்

சிந்தூர வண்ணத்தினாள்

கருணை ஸ்வரூபம்

காக்கும் மகாராணி

பரமேசுவரியின் புன்னகை மனத்தின் பாய்ச்சல்

தத்தரிகிட தித்தோம்

ஆயிரம் சூரியன்களின் பிரகாசம்

காமேசுவரி பயம் போனபின்....

புதுமலர் ஐந்தும் கரும்பும்

ஆட்கொள்ளும் சரணங்கள்

காளிதாஸர் முதல் மகாகவி வரை...

வரம் தரும் அம்பிகை

பிறை நிலவும் முழு நிலவும்

நஞ்சை அமுதாக்கிய கன்னிகை

சிவமும் சக்தியும்

மேருவின் உச்சியில்...

அமுதக் கடலில் அன்னை

சக்தியின் சேனை

பாலாவின் வீரம்

தசாவதாரி

சலனம் நீக்கும் சக்தி

அம்பாளின் கவலை

அம்சமும் ஆற்றலும் அளிப்பவள்

உயிர் தரும் மருந்து

அரவணைக்கும் அன்னை

பிராணனைக் கொடுப்பவள்

கல்யாண குணங்களில் உறைபவள்

சௌபாக்கியம் தருபவள்!

அரணாகக் காப்பவள்!

மனத்துக்குள் ஒளிரும் மணி!

தாண்டவ தத்துவம்!

அம்பாளின் திருநடனம்!

பூரண சந்திரனாக ஒளிர்பவள்!

கருணை விழிகள்!

ஆத்மாவின் உயிராக இருப்பவள்

தொழில்களை நடத்துபவள்

ஆயிரம் கண்ணுடையாள்!

சகல சிருஷ்டிக்கும் காரணி!

தர்மம் தழைக்கச் செய்பவள்!

திருத்தங்கச்சி!

கண் இமைக்காமல் காப்பவள்!

தமயந்திக்கு அருளிய காத்யாயனி!

வேதஸார நல்முத்து!

பக்தர்களுக்கு அருள்பவள்

தோழமையுடன் விளையாடும் ரமணி!

அதர்மத்துக்கு அக்னியானவள்!

உயர்ந்த ஆசைகளை அருள்பவள்!

கண்களின் அசைவால் காப்பாள்

புண்ணிய பூமியில் கலந்தவள்!

கலி தீர்க்கும் கற்பகக் கொடி!

தஞ்சம் அளிப்பவள்

சிருஷ்டி ஸ்வரூபமாய்த் திகழ்பவள்!

அகத்திருள் நீக்கும் அம்பிகை!

அம்பாளின் ஆத்மானந்தம்!

தாயாகும் தயாபரி!

நம்முள் உறையும் ரகசிய சக்தி!

எட்டியும் எட்டாதிருப்பவள்!

அளப்பறிய ஆனந்தம் அளிப்பவள்!

குமுதம் மலர்த்தும் குளிர் நிலவு!

இடையறாது பொழியும் ஒளி!

திருப்தியின் உறைவிடம்!

ஆதாரச் சக்கர ஆராதனை

அச்சம் தந்து அருள்பவள்!

ஸ்ரீ சக்கர சிம்ஹாசனேசுவரி!

அனைத்து வர்ணங்களின் அணிகலன்!

வேத வடிவினள்!

விமர்ச ரூபிணி!

காலனை அழிப்பவள்!

தேவியின் தாம்பூலச் சிறப்பு!

துணைவரும் தயாபரி!

உமா ஹைமாவதி!

ஐச்வர்யம் தருபவள்!

மகளான மகேசுவரி!

உதிக்கின்ற செங்கதிர்!

பிரபஞ்சத்தை ரக்ஷிக்கும் பார்வை!

குஹ ஜனனி

பரமானந்தம் தருபவள்!

பார்வையால் பாவனம் தருபவள்!

ஆன்ம அனுபவம் அருள்பவள்!

ஹிமவான் குலத்துக் கொடிமரம்

ஒப்புவமை இல்லா எழில் பாவை

உள்ளும் புறமும் உறைபவள்

துணிவென்னும் செல்வம் தருபவள்

முன்னைப் பழம்பொருளுக்கும் பழம்பொருள்!

பரமானந்தம் தருபவள்

சிருஷ்டி ஸ்வரூபமாய் திகழ்பவள்

உயர்பொருள் நாயகி

வேதாந்த நாயகி

நல்மரபுகளின் நாயகி

தேன் பிலிற்று மலர்ச் செண்டு!

ஞான வடிவினள்!

அம்பிகை என்னும் அமுத மழை

இருள் நீக்கும் குளிர் நிலவு

அம்பிகையின் அனுக்ரஹ மழை

செம்பருத்தி நிறத்தினள்!

குணம் கடந்த குன்று!

சிறியதில் சிறியவள்!

சங்கீத ரசிகை

பூத்தவண்ணம் காத்தவள்!

எங்கெங்கு காணினும் சக்தி!

அமுதநிலை அருள்பவள்!

பிரம்மத்தின் பெருமிதம்

தாடங்க மகிமை!

ஆத்மானந்தத்தில் லயிப்பவள்!

ஹிமவான் தந்த ஸ்ரீதனம்!

ஸ்ரீ சக்கர வாஸினி

அன்புக்கு வசப்படும் அம்பிகை

மனம் ஆளும் மகராசி!

தர்மத்தின் தலைவி

ஞானக் கடல்

அருட்கனிவின் திருவுரு

அம்பாள் வழிபாட்டு முறைகள்

அணிந்துரை

மனிதப் பிறவி மிகவும் அரிதானது. இம்மானிடப் பிறவியில்தான் தன் வாழ்க்கையில் முன்னேற்றத்தையடைவதும் பரலோக சுகங்களை நாடுவதும் இறைவன் அருளை முழுமையாகப் பெறவல்லதும் எல்லா பிராணிகளுக்கும் உதவுவதும் தான் மற்றொரு பிறவியை தவிர்த்து ஆனந்தக் கடலில் சுகம் அனுபவிக்கவல்லதும் முடியும். மானிடப் பிறவி கிடைத்தும் நமக்கு அதன் உயர்வை அறிந்து கொள்வதற்கு தருணம் இல்லாமலேயே காலம் செல்கிறது. ஸம்ஸார வாழ்க்கையில் முழுகி வாழ்நாள் முழுவதும் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டே சேர வேண்டிய இடம் அறிந்து கொள்ளாமலேயே வாழ்க்கைப் பயணம் கடந்து கொண்டிருப்பது கண்கூடு. இறைவனின் அருளாலேயே சிலருக்கு மகான்களின் சேர்க்கை உண்டாகிறது. அவர்கள் இறைவனின் கருணையையும் அருள்பாலிப்பையும் கூறும்போது கேட்டு மனிதர்களின் வாழ்க்கை பயணம் நற்திசையில் திரும்புகிறது.

மகான்களின் சேர்க்கையில், மறைகள், புராணங்கள், பரமனின் பல லீலைகள், அவதார சிறப்புகள், மந்திரங்களின் உட்கருத்துகள் போன்றவை அறியப்படும். இவைகள், வேதங்கள், இதிஹாஸ புராணங்கள், தந்த்ரங்கள், ஆகமங்கள் போன்ற பல ஆன்மீக பொக்கிஷங்களில் சிதறிக் கிடக்கிறது. அம்முத்துகளைச் சேர்த்து அழகான மாலையாகத் தொடுத்து இறைவனின் வடிவத்தில் சாற்றி அந்த அழகை மனக்கண்ணால் கண்டு களித்து சுவைத்து ரசித்து மனதின் மலங்களை அகற்றி பசுபதியின் ஸ்வரூபத்தை அடையலாகும்.

இங்ஙனம் காணப்படும் பல சிறந்த ரத்னஹாரங்களில் ரஹஸ்ய நாம ஸாஹஸ்ரம் என்று கூறப்படும் லலிதா ஸஹஸ்ரநாமம் மிகச் சிறந்ததாகும். இது பிரம்மாண்ட புராணத்தில் உத்தர காண்டத்தில் ஹயக்ரீவருக்கும், அகத்திய மாமுனிவருக்கும் நடைபெற்ற ஸம்வாதரூபமாக அமைந்துள்ளது. இதில் மந்த்ர காண்டம், ந்யாஸ காண்டம், பூஜா காண்டம், புரஸ்சரண காண்டம், ரஹஸ்ய காண்டம் போன்ற பல காண்டங்கள் அமைந்துள்ளது. பற்பல விஷயங்கள் இதில் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆன்மீகமான விஷயங்கள் மட்டுமன்றி மனித நேயம் நீதி சாஸ்திரம், இறையாண்மை, வாழ்க்கை நெறி, சுற்றுப்புற சூழல் பராமரிப்பு, ராஜநீதி போன்ற பல விஷயங்களும் தெளிவாகிறது. மனிதனின் முழு வளர்ச்சிக்கு மன நிம்மதி, தெளிவு, ஒருமுனைப்பாடு மிகவும் அவசியம். இவைகளை சிறப்பான முறையில் அளிக்கவல்லதாக அமைந்துள்ளது இந்த ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்.

சக்தி தத்துவம்

இறைவனின் வடிவங்கள் பலவற்றை உலகத்தில் நாடுவதை நாம் பார்க்கிறோம். பல பெயர்களுடன் பல உருவங்களுடன் வழிபடப்பட்ட போதிலும் உண்மையில் இவைகள் எல்லாம் ஒன்றே ஆகும். காற்றைப் போல், நீரைப்போல், இறைவனுக்கு தனிப்பட்ட உருவம் இல்லை. ஆயினும் எந்தெந்த வார்ப்புகளில் சேருகிறதோ அந்தந்த உருவங்கள் காணப்படுவது. நீர் ஒரு குவளையிலோ, தட்டிலோ, வயலிலோ விட்டபோது அது அந்தந்த உருவங்களைக் கொள்கிறதல்லவா! காற்றும் பற்பல வடிவங்களான பொம்மைகளிலும், பலூன்களிலும் விட்டபோது அந்தந்த உருவங்களை கொள்வதைக் காண்கிறோம். அதேபோல இறைவனும் போற்றுபவர்களின் மனதிற்கு பிடித்த உருவங்களாக மாறி காணப்பட்டு அவர்களை அருளிச்செய்து சந்தோஷப்படுத்துகிறார்.

ஆகையாலே, அவருக்கு பல உருவங்கள் காணப்படுகின்றன. வங்கி ஒன்றாக இருந்தபோதும், அதற்கு பல கிளைகள், பல இடங்களில் ஜனங்களின் வசதியை முன்னிட்டு அமைக்கப் பெற்றுள்ளதை நாம் அனுபவிக்கிறோமல்லவா! அதே போல் ஓர் தத்துவம் அடியார்களின் வசதிக்காக பல உருவங்களுடன் பெயர்களுடன் லீலைகளுடன் நம் முன்னோர்களால் கருதப்பட்டுள்ளது. இதுவே நம் மதத்தில் பல இறை உருவங்களுக்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

இப்படி காணப்படும் உருவங்களில் ஜகன்மாதாவான சக்தி தத்வம் மிகவும் சிறந்தது. பிறந்த மனிதர்கள் எல்லோர்க்கும் முதல் முதலில் அன்பையும், அரவணைப்பையும், பாதுகாப்பையும், அபயத்தையும் அளிப்பது தாயல்லவா! அதேபோல் வளர்ந்த தருணத்தில் வாழ்க்கைத் துணைவியாகவும் பெண்ணாகவும், மாட்டுப்பெண்ணாகவும் உதவுவதும் அந்த தாய்மையே ஆகும்.

சகல ஜீவராசிகளும் தன் கஷ்டங்களில் முதலில் நினைப்பது தன் தன் தாயையே. அந்த மாத்ரு ஸ்வரூபம் - தெய்வமாக வழிபடப்படுகிறது.

உலகத்தை படைப்பது, காப்பது, தன்னிடம், ஒடுக்குவது, அருள்புரிவது, தன் ஸ்வரூபத்தை மறைப்பது என இல்லற வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை அனுபவிக்கச் செய்து வைராக்கியத்தை ஏற்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளித்து மனிதனை முழு மனிதனாக ஆக்கி அருள்பாலிக்க அமைந்தவளே சக்தியாகும். இந்த சக்தியை உபநிடதங்கள் ஸத் என்றும் சித் என்றும் ஆனந்தம் என்றும் உரைக்கும். புராணங்கள் - லலிதா, புவனேஸ்வரீ, தாரா, தூமாவதி, நீலாஸரஸ்வதி, மாதங்கீ, வாராஹீ, ஜ்வாலாமாலினீ, பகளாமுகி, மஹாலக்ஷ்மீ, காமாக்ஷீ, சாரதா, ரேணுகா, வாக்வாதினீ என்றெல்லாம் கூறுகிறது. இவ்வடிவங்களின் வழிபாடுகள் நம் நாட்டில் மூலைக்கு மூலைப் பரவியுள்ளது. கிராமங்களும் காத்தாயி (காத்யாயனீ), பேச்சாயி (வாக்வாதினீ), படவேட்டம்மன் (பராபட்டாரிகா) என்றெல்லாம் வழிபடுவதை நாம் காண்கிறோம். இவ்வாறு பக்தர்களின் மனதை சூழ்ந்து அவர்களின் பல்வேறு ஆசைகளை நிறைவேற்றி வாழ்க்கையில் அவர்களை முன்னேற்றி அருள்கின்ற சக்திகளில் மூலமான உருவம் ஸ்ரீ லலிதா மஹாதிரிபுரசுந்தரியே ஆகும். மூவுலகத்தையும் கவருகின்றதான ஸ்வரூபம் அவளே. அவள் ஒருவளே அழகின் முழு வடிவம். கருணைக்கடல். அந்த தெய்வத்தை பல கோணங்களில் பார்த்த ஹயக்ரீவர் உயர்ந்த அதிகாரம் பெற்ற அகத்திய மாமுனிவருக்கு ஆயிரம் நாமாக்களின் தத்துவத்தை உபதேசித்தார். பல நாமங்கள் இருந்த போதிலும் இந்த ஆயிரம் நாமங்களுக்கு ஓர் சிறப்பு உண்டு. அம்பாளே தன் பெயர்களை ஸஹஸ்ரநாம மாலையாக அமைக்க வசினீ, காமேச்வரீ, அருணா, மோதினீ போன்ற பேச்சு திறமைப்பெற்ற வாக்தேவிகளுக்குக் கட்டளையிட்டாள். அது தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஓர் சிறந்த அனுக்ரஹம் எனக் கருதி, வாக்தேவிகள் இந்த ஸஹஸ்ரநாமத்தை அமைத்தனர். அவர்கள் வெறும் வாக்தேவிகள் மட்டுமல்ல. அம்பாளின் திருவருளால் வாக்விலாஸத்தைப் பெற்றவர்கள். எப்போதும் தாயின் திருநாமங்களை வாக்கில் வைத்துள்ளவர்கள். அம்பாளின் இருப்பிடமான ஸ்ரீ சக்ரத்தின் ரஹஸ்யங்களையும், மந்த்ரங்களையும், சூக்ஷ்மங்களையும் நன்றாக அறிந்தவர்கள்.

ஆகையால் அவர்களுக்கு இச்சிறந்த வாய்ப்பு கிட்டியது. அதை பயன்படுத்தி இந்த ஸஹஸ்ரநாமத்தை செய்து தங்கள் வாழ்க்கையை ஸ :பலமாக ஆக்கிக் கொண்டனர். இந்த ஸஹஸ்ரநாமத்தை அம்பாளின் திருப்பாதங்களிலேயே அர்ப்பணம் செய்தனர். இதை பெரிய சபையில் அரங்கேற்றினர். அச்சபையில் பல கோடி தேவர்களும் அவர்களின் சீடர்களும், துணைவிகளும், யக்ஷர்கள், கந்தர்வர்கள், கிந்நரர்கள், கிம்புருஷர்கள் பல இனத்தைச் சேர்ந்தவர்களும், இந்த அரங்கேற்ற தருணத்தில் இருந்தனர்.

இதைக் கேட்ட அம்பாள் மிக சந்தோஷத்தை அடைந்தாள். பல மந்த்ரங்களின் நுட்பமான விஷயங்களும் தந்த்ர ரஹஸ்யங்களும், திவ்யமான லீலைகளும், வேதாந்தக் கருத்துகளும் பக்தி பாவணைகளும், இதில் நிரம்பியுள்ளதைக் கண்டு மிகவும் ஆனந்த பரவசமாகி இதற்கு தன் முழு அங்கீகாரத்தை காட்டுவது மட்டுமன்றி, இதை வாசிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், உரைப்பவர்களுக்கும், அர்த்தத்தை உணர்ந்தவர்க்கும், ஸமஸ்த க்ஷேமங்கள் அமையும்படி அருள்புரிந்தாள். அதிலிருந்து எல்லா உலகங்களிலும் இந்த ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பாராயணம் செய்யப்பட்டும், அர்ச்சிக்கப்பட்டும் வருகிறது. நம் நாட்டில் ஆண், பெண் பேதமின்றி எல்லோரும் இந்த ஸஹஸ்ரநாமத்தை பக்தியுடன் தினந்தோறும் அல்லது பண்டிகைகள், செவ்வாய், வெள்ளி தினங்களில் பக்தி ச்ரத்தையுடன் கையாள்வதும் அனைவரும் அறிந்ததே. ஸாதாரணமாக ஓர் தோத்திரமாக காணப்பட்ட போதிலும், இதில் பல தந்த்ர ரஹஸ்யங்களும், மந்த்ர சூக்ஷ்மங்களும் இறைவனின் பற்பல லீலைகளும், காருண்ய விசேஷங்களும், வேதாந்தங்களும், சாஸ்திர நுட்பங்களும், ஆகம ரஹஸ்யங்களும் காணப்படுகிறது. இந்த ஸஹஸ்ரநாமமே அம்பாளின் பீஜமந்த்ரமான ‘ஸ்ரீ’ என்ற சொல்லால் தொடங்குகிறது. முதல் மூன்று நாமாக்களும் கடைசி மூன்று பெயர்களும்

‘ஸ்ரீ’ என்ற அடைமொழியுடன் அமைந்துள்ளது. இதை படிப்பவர்களுக்கு இம்மையில் செல்வமும், மறுமையில் சுகமும் சிறந்த புருஷார்த்தமான மோக்ஷமும் (வீடு பேறு) கிட்டும்.

இந்த ஸஹஸ்ரநாமத்திற்கு பல உரைகள் அனாதிகாலமாக தொன்று தொட்டு வருகிறது. விமர்ஸானந்தீயம், வித்யாரண்ய பாஷ்யம், பட்டநாராயண பாஷ்யம் போன்றவை வெகு நாட்கள் முன்பு இருந்ததாக அறிகிறோம். பாசுராநந்த நாதர் எனும் பாஸ்கரராயர் இதற்கு வடமொழியில் மிகச் சிறந்ததான ‘சௌபாக்ய பாஸ்கரம்’ எனும் உரையை அளித்துள்ளார். அது பல மொழிகளில் மொழிபெயர்ப்பை அடைந்துள்ளது. பல சாஸ்திரங்களில் தேர்ச்சிப் பெற்றவர்களாலேயே அதன் உட்கருத்துக்களை அறிந்து ஆனந்தப் பெருக்கை அடைய முடியும்.

யாந்திரிக ஜீவனமுறையை மேற்கொண்ட தற்காலிக மனிதர்களுக்கு மேற்கூறிய உரைகளை வாசிக்கவோ, புரிந்து கொள்ளவோ, சுவைத்து ரசிக்கவோ, தருணமின்மையாயினும், அவர்கள் மனதில் பக்தியும், ச்ரத்தையும், முன்னேறும் அவாவும் நிறைந்துள்ளன. இதை தக்க சமயத்தில் அவர்களுக்கு கூறவல்ல ஆசான்களும் அரிதாக உள்ளனர். இப்படிப்பட்ட சமயத்தில்

டாக்டர். சுதா சேஷய்யன் அவர்கள் எளிய நடையில் எல்லோராலும் கையாளத்தக்க அழகிய தமிழ் உரையில் கங்காப்ரவாஹம் போன்ற நடையில் மனதில் பக்தி பாவத்தை வளர்க்கும் வண்ணம் அருளிய இந்த பக்திப் பெட்டகம் ‘ஸ்ரீ லலிதா’ ஆகும். வாசிக்கும்பொழுது புத்தகத்தை மூடி வைக்க மனம் இடம் கொடுக்கா வண்ணம், சுவையாக ஜனங்களின் மனதை புரிந்து அமைக்கப்பட்ட கட்டுரைக் கோவையே இப்புத்தகம். இதிலுள்ள விஷயங்கள் வாசகர்களின் மனதைக் கவர்ந்து ஊக்கத்தையளித்து பக்தியை வளர்த்து ஆனந்த பரவசத்தை அளிக்கவல்லது. இதை சிற்சில பகுதிகளாக அவ்வப்போது படித்துக் களித்து இன்புறச் செய்வதாகவும் ஆங்காங்கு தகுந்த தலைப்புகளுடனும் அழகிய சித்திரங்களுடன் படிப்பதற்கு வசதியாக கிரி டிரேடிங் நிறுவனத்தினர் அவர்கள் பதிப்பித்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஜகன் மாதாவின் பாதங்களுக்கு சிறந்த தொண்டை அளித்துள்ளனர். இவர்களுக்கும், இப்புத்தகத்தை வாசித்து அம்பாளின் திருவருளைப் பெற்று பேரானந்தத்தை அடையத்தக்க வாசகர்களுக்கும் இறைவனின் பேரருளும், அழியாச் செல்வமும், வளமான ஆரோக்கியமும், சிறந்த வாழ்க்கையும், மன நிம்மதியும் பெற திவ்ய ஆசிகளுடன்,

Sahitya - Mimamsa - Nyaya - Vedanta Siromani,

Advaita Siddhi Ratnakara, Vidya Varidhi,

Vidya Vachaspathi, Brahma Vidya Bhushanam

DR. GODA VENKATESWARA SASTRI,

M.Sc., Ph.D., C.A.I.I.B.,

Reserve Bank of India, Chennai (Retd.)

Ã

முன்னுரை

‘அம்மா’ ஒவ்வொரு குழந்தையின் அதரத்திலிருந்து உதிரும் முதற்சொல்; அன்பு, பாசம், நேசம், பரிவு, தியாகம், அனுதாபம் என்ற தன்மைகளைத் தன்னுள் அடக்கிய அழகான சொல். பத்து மாதம் சுமந்து, குழந்தையை ஈன்றெடுத்து, பக்குவமாய்ப் பராமரித்து, அன்போடும் அரவணைப்போடும் வளர்த்து, அக்குழந்தையை வாழ்வின் உயர்வுக்கு இட்டுச் செல்வது தாயன்பே. வாழ்வில் எத்தனை உயர்வடைந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தாயை வாஞ்சையுடன் ‘அம்மா’ என்றழைப்பதில் பெருமை கொள்கிறான். தாய்மையின் தியாகம் சொற்களுக்கு அப்பாற்பட்டது.

உலகத்தில் உதிக்கும் தாய்க்கே இத்தனை உன்னதம் என்றால் உலகை சிருஷ்டித்து, காத்து, அருள்பாலிக்கும் ஜகன்மாதாவான அம்பிகையின் கனிவையும் காருண்யத்தையும் என்னென்று சொல்வது! அம்பாளுடைய மகோன்னதத்தை வார்த்தைகளால் சித்தரிக்கத் துடிக்கும் மனம் ஒரு புறமிருக்க, நாவோ சொல்லிழந்து செயலிழந்து தவிக்கிறது. அந்தத் தவிப்பைத் தீர்த்து உவகையளிக்கத் திருவுள்ளம் கொண்ட ஜகன்மாதாவின் கருணைக் கடாக்ஷத்திலிருந்து பிறந்த நூல்தான் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம். வேதங்கள் ‘அபௌருஷேயம்’ (மனிதனால் படைக்கப்பெறாத ஒன்று) என்றழைக்கப் பெறுகின்றன. இப்பெயர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கும் சாலப் பொருந்தும். அம்பாளின் கட்டளைக்கிணங்க வாக் தேவதைகளால் உரைக்கப்பெற்றதே ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம். ஒவ்வொரு தாயும் குழந்தை தன்னை அம்மா என்றழைக்க வேண்டும் என்று விரும்புவதைப் போல் லோக ஜனனியான அம்பாளும் ஆசைகொள்கிறாள் என்றுணர்ந்த வாக் தேவதைகள், அம்மா என்ற சொல்லைக் கொண்டே சஹஸ்ரநாமத்தைத் தொடங்கியிருப்பது உள்ளத்தைக் கவர்கிறது. ‘ஸ்ரீமாதா’ (அம்மா) என்று ஆசையுடன் தொடங்கும் சஹஸ்ரநாமம், அம்பாளுடைய ஸ்வரூப வருணனையில் இறங்கி, வீர தீர பராக்கிரமங்களை நுகர்ந்து, படிப்படியாக முன்னேறி இறுதியில் ‘லலிதாம்பிகை’ (ஸ்ரீலலிதாவாக அவதரித்தவள்) என்ற நாமத்தின் மூலம் அவளுடைய அழிவில்லாத மஹத்துவத்தை உணர்த்திவிட்டு நிறைவடைகிறது. ஆனால் திருப்தி அடையாத மனம் மறுபடியும் அம்மா என்ற நாமத்தில் தொடங்கி அம்பாளுடைய அழகிலும் அன்பிலும் லயித்து விடுவதுதான் லலிதா சஹஸ்ரநாமத்தின் தனிச்சிறப்பு. ஆயிரம் நாமங்களைக் கொண்ட நூலானாலும் ஒரு காவியத்துக்கு நிகரான பெருமையையும் சிறப்பையும் பெற்றுள்ளது.

ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலும் அர்த்தம் கூற முடியாத சஹஸ்ரநாமத்திற்கு உரை சொல்லும் / எழுதும் பாக்கியம் அடியேனுக்குக் கிட்டியதை முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலனாகவே கருதுகிறேன். அம்பிகையின் அருளின்றி அவளுடைய நாமத்திற்கு விளக்கம் கூற முடியாது என்பதை இப்பணியின்போது பிரத்யக்ஷமாகக் கண்டுணர்ந்தேன். சொற்பொழிவாகத் தொடங்கியது பல வருடங்களுக்குப் பிறகு அச்சில் பொறித்த சொற்களாகியிருப்பதே இதற்கான சான்று. ஒன்பது நாட்களில் ஆயிரம் நாமங்களுக்கு விளக்கம் கூறுவதென்பது இயலாத செயலென்பதால் சொற்பொழிவின்போது விட்டுப்போன சிலபல நாமாக்களை இந்நூலில் சேர்த்துள்ளேன்.

இப்பணியில் எனக்குத் துணையிருந்தோரை நினைவுகூர்வதை என்னுடைய தலையாயக் கடமையாகக் கருதுகிறேன். அம்பாளைப் பற்றிய சொற்பொழிவாக இருக்க வேண்டும் என்று சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீ வீனஸ் காலனி ஆஸ்திக சமாஜ அங்கத்தினர்கள் ஆசைப்பட்ட போது ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமமாக இருக்கலாமே என்று இந்நூலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் சென்னை கிருஷ்ண கான சபாவின் செயலராகத் திகழ்ந்த திரு.யக்ஞராமன் அவர்கள். சொற்பொழிவில் கூறப்பெற்ற அனைத்தையும் மிகுந்த ஆவலோடு பதிவு செய்து, ஒலிக்கு எழுத்து வடிவம் அளித்து கல்கி இதழில் தொடராக வெளிவரச் செய்த அன்புச் சகோதரி சீதா ரவிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று உங்களுடைய கையில் இருக்கும் புத்தகம் அவருடைய ஆர்வத்தின் பிரதிபலிப்பாகும். கல்கியில் ஸ்ரீலலிதா தொடராக வந்த காலகட்டத்தில், பார்த்த இடங்களிலெல்லாம் என்னை நிறுத்தி, முகம் மலர ஆசி நல்கிய பெரியோருக்கும், மனங்குளிர வாழ்த்தளித்து என்னை ஊக்குவித்த சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய உளங்கனிந்த வணக்கங்கள்.

இந்நூலை அழகாக வடிவமைத்து, அச்சிட்டு, வாசகர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பொறுப்பேற்றுள்ள கிரி நிறுவனத்தாருக்கும், சிறந்ததொரு அணிந்துரையினால் இந்நூலுக்கு மெருகூட்டியிருக்கும் Dr. கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரி அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்கி இதழில் வெளியான நிலையிலிருந்து, தனித்தனி பகுதிகளாக இருந்தவற்றை வகையாகத் தொகுக்கும் பணியிலும், விடுபட்ட நாமாக்களைச் சேர்க்கும் செயலிலும், மொத்த நூலையும் மெய்ப்புத் திருத்தும் ஒருங்கிணைப்பிலும், வெவ்வேறு காலகட்டங்களில் எடுத்தும் கோத்தும் சேர்த்தும் ஒட்டியும் வெட்டியும் செய்ததால் ஏற்பட்ட சங்கடங்கள் அனைத்தையும் சிக்கெடுத்து நூல் பிரித்து ஊடும் பாவும் ஒழுங்காய்ச் சேர்த்து அம்மையின் செம்பட்டாய்த் துலங்கிட உற்றுழி உதவி உடன் நின்ற ஜி. ஸ்ரீகாந்த் அவர்களுக்கான நன்றிகளைச் சொல்லினால் சொலக் கற்றிலேன் யான்!

தோன்றாத் துணையாகி வழி நடத்தும் கருணைக் கடலான அம்பிகை பரமேசுவரிக்கும், ஐயங்கள் வரும்போதெல்லாம் உள்ளத்துள் பிரத்யக்ஷமாகி ஞான ஒளியைப் பிராகாசிக்கச் செய்த என்னுடைய ஆசார்ய பெருமக்கள்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும் என்னுடைய அனந்தகோடி நமஸ்காரங்களைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

‘அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்’ என்றார் மஹாகவி பாரதியியார். தீஞ்சுவை ததும்பும் நாமங்களில் அமிழ்ந்து, அம்பிகையின் அன்பில் கரைந்து போகலாம் வாருங்கள்.

அன்புடன்

டாக்டர் சுதா சேஷய்யன்

Ã

பதிப்புரை

லலிதா என்றால், ‘அனைவரிடமும் அன்பு செலுத்துபவள், லீலைகள் புரிவதில் விருப்பமுள்ளவள், அனைவர் மனதையும் வசப்படுத்துபவள்’ என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது. பக்தர்களின் மனதை ஈர்த்து, அவர்களுக்கு நிறைவையே அளிக்கும் அன்னையை ஆயிரம் நாமங்களால் துதிக்கும்போது, நமக்கு குறை என்பதே இருக்காது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

லலிதா சஹஸ்ரநாமத்திலுள்ள ஒவ்வொரு நாமமும் மந்திரபூர்வ மானது என்று சொல்லப்பட்டாலும் அதை எப்போது வேண்டுமானாலும் கூறலாம் என்றும் சொல்லப்படுகிறது. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் அன்னையை அழைக்க கால நேரம் பார்ப்பானேன்! இதில் முதல் இரண்டு நாமாவளியே ‘ஸ்ரீமாதா, ஸ்ரீ மஹாராக்ஞி’ என்பதாக அமைந்துள்ளது. அதாவது இவ்வுலகிற்கு மாதாவாக இருப்பதோடு ‘மஹாராக்ஞியாய் காக்கவும் செய்கிறாள் என்று அன்னையின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு நாமாவளிகளைப் போலவே ஒவ்வொரு நாமாவளியும் அன்னையின் குணங்களை பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளது இந்த சஹஸ்ரநாமாவளியின் சிறப்பான அம்சமாகும்.

‘ஸ்ரீலலிதா’ என்ற இப்புத்தகத்தில் அம்பிகையைப் போற்றி 1000 நாமாவளிகள் சுந்தரத் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான பொருளும் அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகப் பேச்சாளர், சிறந்த சிந்தனாவாதி, மருத்துவ பேராசிரியர் என்று பன்முகத்துடன் திகழும் திருமதி. சுதா சேஷய்யன் அவர்கள், பாமரருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக இப்புத்தகத்தை படைத்ததற்காகவும், அதேபோல் தனது இடையறாத அலுவல்களுக் கிடையிலும் இப்புத்தகத்தை முழுதும் படித்து அதற்கு சிறப்பாக அணிந்துரை அளித்துள்ள, ‘ஸாஹித்ய, மீமாம்ஸ, ந்யாய, வேதாந்த சிரோமணி, அத்வைத ஸித்தி ரத்னாகர, வித்யாவாரிதி, வித்யாவாசஸ்பதி, ப்ரஹ்ம வித்யா பூஷணம்’ டாக்டர். திரு. கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரி அவர்களுக்கும், ‘கிரி’ நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

பக்தி புத்தகங்களை வெளியிட்டு ஆன்மீக உலகில் சாதனை புரிந்து வரும் எமது ‘கிரி’ நிறுவனம், ‘ஸ்ரீலலிதா’ என்ற இப்புத்தகத்தை வெளியிடுவதில் மிகவும் பெருமை கொள்கிறது. அனைவரும் பக்தி பெட்டகமான இப்புத்தகத்தைப் படித்து அனைத்து நலன்களையும் பெற எல்லாம் வல்ல அன்னையை வேண்டிப் பிரார்த்திக்கிறோம்.

- பதிப்பகத்தார்

Ã

மந்திரப் பொருளுடைய நாமங்கள்

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மந்திர ரூபமான நாமாவளி என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அதன் பெருமைகளைப் பற்றிப் பற்பல மஹான்கள் நமக்குச் சொல்லியிருக் கிறார்கள்.

ஒருவர் சொன்னார். இது எவ்வளவு பெருமைக்குரிய ஸ்லோகம் தெரியுமா? மேற்கு திசையிலே சிந்துநதி பாயும் காந்தாரம், கிழக்கு திசையிலே பிரம்மனுடைய புத்திரன் என்று பெயர் பெற்ற பிரம்மபுத்ரா நதி, அந்த பிரம்மபுத்ரா பாயும் காமரூபம் (அஸ்ஸாம் மாநிலம்), தெற்கிலே ராமர் கட்டிய சேது, வடக்கிலே பனிப்பிரதேசமாக இருக்கும் கேதாரம், இப்படி இந்த பாரத தேசத்தின் அகல நீளங்களை எல்லையாக்கித் தேடினால்கூட இதைப்போன்று மந்திர ரூபமான ஒரு ஸ்லோகத்தைப் பார்க்க முடியாது.

இப்படிச் சொன்னவர், எங்கெல்லாம் நல்லவர்கள் கூடியிருக்கிறார்களோ, எங்கெல்லாம் சத் மனிதர்கள் கூடியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் இதன் பெருமை பேசப்படட்டும் (இதன் அகல-நீள பரிமாணங்கள் எல்லாம் பேசப்படட்டும்) என்றும் சொன்னார்!

லலிதா சஹஸ்ரநாமப் பரிபாஷை ஸ்லோகங்களில்தாம் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பரிபாஷை (மந்திர விளக்கம்) ஸ்லோகங்களை யார் செய்து கொடுத்தார்கள்? இன்றைக்கு லலிதா சஹஸ்ரநாமத்துக்கு மிகப் பெரிய பாஷ்யமாக (உரைநூலாக) பாஸ்கரராயருடைய பாஷ்யம் விளங்குகிறது அல்லவா! அந்த பாஸ்கரராயருடைய மந்திர குருவான நரசிம்மானந்தர் என்பவர் சொன்ன விஷயம் இது.

மந்திர ரூபமான நாமங்களைப் பற்றிப் பொதுவில் பேசலாமா? விவாதிக்கலாமா? என்ற சந்தேகம் இதன் மூலம் நிவர்த்தியாகியிருக்கிறது. ஆனால் லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களை ஆயிரம் ஜன்மங்கள் எடுத்தாலும் நாம் முழுவதுமாக உணர்ந்துவிட முடியாது! இருந்தாலும் ஒரு சில நாமங்களையாவது அர்த்தபூர்வமாக நாம் தெரிந்துகொண்டால், அதைப் பாராயணம் செய்யும்போது நமக்கு இன்னும் பயனளிக்கக்கூடும்.

வாக்தேவிகள் வழங்கியது

பிரம்மாண்ட புராணத்தில் காணப்படுவது லலிதா சஹஸ்ரநாமம்.

இதை யார் செய்தார்கள்?

ராமாயணம் என்றால், அதை முதலில் ஆதிகவியாகிய வால்மீகி செய்து கொடுத்தார். பிற்காலத்தில் அவரவர் தேசத்தில் புலவர்களும், கவிஞர்களும் தாசர்களும் அவரவர்களுடைய ராமாயணத்தை இயற்றிக் கொடுத்தார்கள்.

மஹாபாரதம் என்றாலும்கூட வியாஸர் அதை யாத்துக் கொடுத்தார் என்று சொல்ல முடியும். எந்தக் கிரந்தமாக இருந்தாலும் அதை இன்னார் இயற்றினார் என்று சொல்ல முடியும்.

ஆனால் லலிதா சஹஸ்ரநாமத்தை மட்டும் யார் இயற்றினார்கள் என்று தெளிவாக நம்மால் சொல்ல முடியாது. காரணம், அம்பிகை பரமேசுவரியின் ஆக்ஞையினால், அம்பிகையின் விபூதிகளாக இருக்கும் வாக்தேவதைகள் செய்துகொடுத்ததுதான் லலிதா சஹஸ்ரநாமம் என்பது ஐதிகம். அம்பிகை ஆணையிட, அந்த ஆணையின்படி வசினி போன்ற வாக்தேவிகள் இதை யாத்துக் கொடுத்தார்கள் என்று சொல்வதுண்டு.

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் எங்கே காணப்படுகிறது?

பதினெட்டுப் புராணங்களில் கடைசிப் புராணமான பிரம்மாண்ட புராணத்தில் உத்தரகாண்டம் என்ற பகுதியில், லலிதோபாக்கியானம் என்றொரு கிரந்தம் உண்டு. இந்த லலிதோபாக்கியானமானது, ஸ்ரீலலிதாம்பிகையின் பெருமையைப் பற்றி அகத்தியரும் அவருக்கு குருவாக விளங்கும் ஹயக்ரீவரும் உரையாடிக் கொண்டிருக்கும் காட்சியை விவரிக்கிறது. ஹயக்ரீவர், லலிதாம்பிகையின் பெருமைகளையெல்லாம் அகத்தியருக்குச் சொல்கிறார். அகத்தியர் அந்தப் பெருமைகளையெல்லாம் கேட்டு மகிழும்போது, இவ்வளவு பெரிய அற்புதமான சரித்திரத்தை எனக்குச் சொன்ன குருவே! என்று ஹயக்ரீவருக்கு நமஸ்காரமும் செய்கிறார். நமஸ்கரித்துவிட்டு, ஹயக்ரீவரை அசுவானனே! என்று அழைத்து ஒரு கேள்வி கேட்கிறார். அசுவானன் என்றால், குதிரை முகத்தைக் குறிக்கும். ஹயக்ரீவர் குதிரை முகம் உடையவர். மஹாஞானி. காரணம், அவர் விஷ்ணுவின் அம்சம். இந்த உலகத்தையெல்லாம் ரக்ஷிக்கப் பலவிதமான அவதாரங்கள் எடுத்துப் பலவிதமான செயல்களைப் புரிந்த மஹாவிஷ்ணு ஒருமுறை மிகவும் களைத்துப் போனாராம்.

இதைப்போன்ற கதைகளைச் சொல்லும்போது நாம் நமக்கிருக்கும் சின்ன அறிவை வைத்துக் கொண்டு, ‘பகவானுக்குக் களைப்பெல்லாம் வருமா?’ என்று கேட்கக்கூடாது! சில விஷயங்கள் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. நமது பாரம்பரியம் நமக்கு மரபு ரீதியாகக் கொடுத்திருக்கும் பெரிய பண்பாடு இவ்வாறு அடையாளமாக அல்லது குறிப்பாக உணர்த்தும் முறை.

களைப்பாகிப் போயிருந்த மஹாவிஷ்ணு, அப்படியே தன்னுடைய வில்லின் மீது தலை சாய்த்து மயங்கிவிட்டார். அந்தச் சமயம் பார்த்து காச்யபப் பிரஜாபதியின் மகனான குதிரைமுக அரக்கனிடமிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டி தேவர்கள் மஹாவிஷ்ணுவிடம் போனார்கள். களைப்பில் மயங்கியிருந்த மஹாவிஷ்ணுவை எழுப்ப முடியவில்லை. வில்லுடைய நாணை அறுத்துவிட்டால், அதன் மீது தலை வைத்திருந்த மஹாவிஷ்ணு எழுந்துவிடுவார் என்று கருதினார்கள். கரையான்களிடம் வேண்டினார்கள். கரையான்கள் நாணை அரித்து அறுத்தன.

ஆனால்.... என்ன பரிதாபம். நாண் தெறித்த வேகத்தில் மஹாவிஷ்ணுவின் தலையையே அறுத்துவிட்டது. தலை இல்லாத மஹாவிஷ்ணு.... தேவர்கள் பயந்துபோய் துர்காதேவியிடம் ஓடினார்கள். துர்காதேவியின் அருளால் பிரம்மா ஒரு வெள்ளைக் குதிரையின் தலையை ஒட்ட வைத்தார். ஹயக்ரீவர் (குதிரைத் தலைக்காரர்) (உண்மையில் குதிரைக் கழுத்தர்; ஹய - குதிரை; க்ரீவம் - கழுத்து) உருவானார்.

இப்படியொரு கதை!

எப்படியானாலும், விஷ்ணுவின் அம்சமான ஹயக்ரீவர், கல்வியைத் தருவார்; அறிவைத் தருவார்; வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பார்; வெள்ளை வஸ்திரம் தரித்திருப்பார். வேதங்களை அரக்கர்களான மதுகைடபர்களிடம் இருந்து காப்பாற்றி, மீண்டும் பிரம்மாவிற்கே கற்பித்தார்.

இந்த ஹயக்ரீவர்தான் அகத்தியரின் ஆசிரியர்.

ஹயக்ரீவரைப் பார்த்து அகத்தியர், அசுவானனே! என்று அழைத்தார் அல்லவா? அழைத்துவிட்டுக் கேட்கிறார்:

ஸர்வ சாத்திர விசாரதரராக (வித்தகர்) இருப்பவரே! ரொம்ப அழகான இந்த லலிதாதேவியின் சரிதத்தைச் (லலிதோபாக்கியானம்) சொன்னீர்கள். எல்லாம் சரிதான். லலிதாம்பிகைக்கு இருக்கக்கூடிய சஹஸ்ரநாமங்களை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்?

scan0002a.jpg

அதுவரைக்கும் ஹயக்ரீவர் ஆயிரம் திருநாமங்களைப் பற்றிச் சொல்லியிருக்க வில்லை. லலிதாதேவியின் வரலாற்றைச் சொல்கிறார். திருவவதாரம் எப்படி நடந்தது என்று சொல்கிறார். லலிதாம்பிகையின் பெருமைகளையெல்லாம் சொல்கிறார். ஆனால் ஆயிரம் திருநாமங்களைப் பற்றிச் சொல்லவில்லை.

அகத்தியரின் சந்தேகம்

இவ்வளவு தூரம் சொன்னவர், அந்த ஆயிரம் திருநாமங்களைச் சொல்லவில்லை; நாமாவளியைச் சொல்லவில்லை!

இது எப்படி அகத்தியருக்குத் தெரிந்தது? ஹயக்ரீவர் சொல்லாமல் விட்ட ஒன்று பாக்கியிருக்கிறது என்பது எவ்வாறு தெரிந்தது என்று ஒரு கேள்வி கேட்கலாம்.

லலிதாம்பிகையின் திருவவதாரம் பற்றி விவரித்துக் கொண்டே வரும்போது வாக்தேவிகள் இதைப்போன்று ஆயிரம் திருநாமங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதையும் ஹயக்ரீவரே குறிப்பிட்டுச் சொல்கிறார்.

அதனால்தான் உடனே, ஆயிரம் திருநாமங்கள் இருக்கின்றன என்றால், அதை ஏன் எனக்குச் சொல்லாமல் விட்டீர்கள்? என்று அகத்தியரும் கேட்கிறார்.

இவ்வாறு அவர் கேட்கும்போது மனத்திலே மற்றொரு நெருடலும் ஏற்படுகிறது. ஆசார்யர் ஒருவர் தம் சிஷ்யனிடம் ஏதேனும் ஒன்றைச் சொல்லாமல் விட்டாரானால் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். காரணமின்றிச் சொல்லாமல் விடமாட்டார்கள். காரணமில்லையானால், மறந்திருக்கலாம்.

ஆசார்யர் என்ற நிலைமையைக்கூட விட்டுவிடுவோம். இன்றைக்கு நாம் யாரையாவது பார்க்கப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். மனத்துக்குள்ளே ஒரு திட்டம் போடுவோம். இன்றைக்கு அவரைப் பார்க்கும் போது கண்டிப்பாக இந்த விஷயத்தைச் சொல்லவேண்டும்; மறக்காமல் சொல்ல வேண்டும் என்று நினைப்போம். நமக்கு நாமே இப்படி ஒரு தீர்மானம் செய்து கொண்டு, யாரைப் போய் சந்திக்க வேண்டுமோ அவரைச் சந்தித்துத் திரும்பி விடுவோம். ‘கண்டிப்பாக, மறந்துடாம சொல்லணும்’னு நினைத்த விஷயத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று பிறகுதான் நினைவுக்கு வரும்!

:போன் பேசும்போதும் இப்படித்தானே ஆகிறது! எந்த ஒரு விஷயத்தைச் சொல்வதற்காக :போன் செய்தோமோ அதை மறந்து, ரிசீவரை வைத்து விடுவோம்; பிறகு மீண்டும் :போன் செய்வோம். இதைப்போன்ற மறதியினால் முக்கியமான விஷயம் விட்டுப்போக வாய்ப்பு உண்டு.

ஹயக்ரீவர் இதைப்போன்ற மறதியினால் தாம் சொல்ல வந்ததைச் சொல்லாமல் விட்டுவிட்டாரோ? அல்லது வேறெதாவது காரணமோ?

வேறென்ன காரணம் இருக்கமுடியும்? சிஷ்யன் சரியாகக் கேட்டுக் கொள்ளக் கூடியவனாக இருக்கவேண்டும். அப்படி ஒரு சத்பாத்திரமாக அவன் இல்லாவிட்டால் உயர் விஷயங்களை அவனுக்குப் புகட்ட முடியாது.

குருவிடம் ஒரு விஷயம் தெரிந்துகொள்ள, சிஷ்யன் அதைக் கேட்டுக் கொள்ள வேண்டிய முறையில் கௌரவமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. அந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்குச் சுயமாக இருக்க வேண்டும்.

ஆன்மிக விஷயங்கள், மிகவும் உயர்ந்த விஷயங்களுக்கு மட்டும் இந்த சம்பிரதாயம் அல்ல. சராசரி விஷயங்களுக்கும் இது பொருந்தும். ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு என்ன புரியுமோ அதை மட்டும்தான் வகுப்பில் பாடமாக நடத்துவார்கள். அதற்குமேல், ‘எக்ஸ்ட்ரா’வாக ஏதேனும் மாணவ மணிகள் அறிய விரும்பினால், அதற்கான ஆர்வம் காண்பிக்கும் மாணவனுக்குத்தான் அது சொல்லித்தரப்படும். ஆசிரியர்களாகவே முன்வந்து சொல்லமாட்டார்கள். சாதாரண லௌகிக வகுப்பறைப் பாடங்களுக்கே இப்படி என்றால், மந்திரபூர்வமான உபதேசங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்!

ஆகவே அகத்தியருக்கு ‘நாமாகக் கேட்காததால் சொல்லாமல் விட்டுவிட்டாரோ?’ என்றுமொரு சந்தேகம். இவ்வாறாகப் பற்பல சந்தேகங்களின் அடிப்படையிலும் அவர் ஹயக்ரீவரை ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமங்களைக் குறித்துக் கேட்கிறார்.

ஒருவேளை தமக்குத் தகுதியில்லாததால் சொல்லவில்லையோ என்று எண்ணிக் கொண்ட அகத்தியர், தாமே தமக்கு விளக்கிக் கொண்டாராம்: ‘ஸ்ரீமாதாவாக இருக்கும் அம்பிகை, பரமேசுவரி, குழந்தை தவறு செய்தாலும்கூட அதை மன்னிக்கும் தாய். என்ன இருந்தாலும் அந்தத் தாயினுடைய திருநாமங்களை அறிந்து கொள்ளத் தகுதியில்லை என்று ஆசார்யர் நினைத்திருக்கவே மாட்டார்’ என்று எண்ணிக் கொண்டாராம்.

ஏன் சொல்லாமல் விட்டீர்கள்? என்று ஹயக்ரீவரைக் கேட்டாராம்.

ஹயக்ரீவரின் பதில்

இந்த நாமங்கள் மந்திரபூர்வமான ரகசியம் என்பதால்தான் சொல்ல வில்லை. இப்போது நீ கேட்டுவிட்டாய் அல்லவா, சொல்கிறேன் என்றாராம் ஹயக்ரீவர்.

மந்திரபூர்வமான ரகசியம் என்னும்போது இதைச் சிலபேர்தான் சொல்லலாம் என்று நாம் எண்ணுகிறோம். இன்றைக்கு இருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டுச் சிந்தனைகளை வைத்துக் கொண்டு அவ்வாறு முடிவுக்கு வருகிறோம். ஆனால் நமது முடிவு சரியன்று, ரகசியக் காப்புக்கான காரணம் வேறு!

Ã

அம்பிகை ஆட்கொண்ட பாஸ்கரராயர்

மந்திரபூர்வமான ரகசியங்கள் என்று நம் பெரியோர்கள் பலவற்றைச் சொன்னதற்கு ஒரேயொரு காரணம் உண்டு. மிகவும் பெரிய விஷயத்தை, உயர்ந்த விஷயத்தை ஆழ்ந்த ஆர்வமும் அக்கறையும் இல்லாதவர்களிடம் சொன்னால் அது நீர்த்துப் போய்தான் அவர்களுக்குப் புலப்படும் அல்லது புரியும். எட்டாம் வகுப்பு :பிசிக்ஸ் பாடத்தைத்தான் எட்டாம் வகுப்புக்குச் சொல்ல வேண்டுமே யொழிய, மிகப் பெரிய வகுப்புக்குரிய பாடத்தை அங்கே போய் விளக்கக்கூடாது. அது அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக மிகவும் எளிமைப்படுத்தினால் பாடத்தின் சாரம் நீர்த்துப் போய்விடும்.

ஐன்ஸ்டின் தியரியை ஏழாம் வகுப்புக்குக் கற்றுத்தர முயற்சி செய்தால், அது மிகவும் நீர்த்துப் போன வடிவமாகத்தான் அமையும். ஐன்ஸ்டின் மேடையில் ஏறித் தமது தியரியை சராசரி மக்களுக்கு விளக்கிச் சொல்ல முயன்றபோது அவரால் முடியவில்லை! அவர், என்ன என்பது தெரியுமே தவிர அதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டார்! ஆனால் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அதற்கு மிக எளிமையாக, தெளிவாக, அடிப்படை நிலையில் ஒரு வியாக்கியானம் கொடுத்தார். ரஸ்ஸலின் இந்த விளக்கத்தை, மிகவும் விஷயம் தெரிந்தவர்களிடம் சொல்லப் போனால் என்ன நடக்கும்? ஐன்ஸ்டின் சொன்னது இது இல்லையே" என்று அவர்கள் ஒதுக்கி விடுவார்கள்!

இதே காரணத்துக்காகத்தான் மந்திரபூர்வமான விஷயங்களையும் எல்லாச் சமயங்களிலும் எல்லாரும் விவாதிக்கக்கூடாது என்று நம்முடைய மஹனீயர்கள் சொல்லி வைத்தார்கள்.

ஹயக்ரீவரும் அகத்தியரிடம் அதே காரணத்தைத்தான் சொல்கிறார். இது ரகசியம். ஆர்வத்துடன் நீர் கேட்டதால் சொல்கிறேன். இல்லாவிட்டால் சொல்லியிருக்கமாட்டேன் என்றார்.

மந்திரபூர்வமானது என்றாலும்கூட, ஒவ்வொரு நாமாவளியும் அததற்குரிய மந்திரத்தை நமக்குக் காட்டக்கூடியது என்றாலும்கூட, இந்த நாமாவளிகளை அவற்றின் மந்திர அர்த்தம் தெரியாமல் வெறுமே சொன்னாலும் அவற்றுக்கான பயனை நிச்சயமாகத் தரக்கூடியவை.

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமாவளிகளுள் நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க முடிந்தவற்றையெல்லாம் சேர்த்து நாம் இந்த நூலில் சிந்திப்போம்.

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஸ்கரராயர்தான் மிகப்பெரிய வியாக்கியானம் (விளக்கஉரை) கொடுத்தார். பதினேழு - பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வாழ்ந்தவர் பாஸ்கரராயர். அதனால்தான் பாஸ்கரராஜபுரம் - பாஸ்கரராயபுரம் என்று இப்போதுகூட தஞ்சாவூர் பிரதேசத்தில் அவர் வாழ்ந்த இடம் விளங்குகிறது.

பாஸ்கரராயருக்கு ஒரு குரு. வாஜபேய யக்ஞம் செய்ததால் அவருக்கு வாஜபேயர் என்ற பெயர். வாஜபேயர் காவிரிக்கரையில் வந்து தங்கினார் என்பதால் பாஸ்கரராயர், தாமும் காவிரிக்கரையில் வந்து தங்கினார். அவர் மிகச்சிறந்த ஸ்ரீவித்யா உபாஸகர். தாம் ஸ்ரீவித்யா உபதேசம் பெற்ற பிறகு, தம்முடைய மனைவி ஆனந்திக்கும் ஸ்ரீவித்யா உபதேசம் செய்து, அந்தப் பெண்ணையும் உபாஸகராக மாற்றினார். அந்த அளவுக்கு உயர்ந்த ஸ்ரீவித்யா உபாஸகர்.

(ஸ்ரீவித்யா உபாஸனை என்பது, அம்பாளை ஸ்ரீசக்கர வடிவில் சூக்ஷ்மமாக அல்லது ஸ்தூலமாக இருத்தி, மந்திர உச்சரிப்பின் மூலமும் விசேஷ தியானத்தின் மூலமும் பல நிலைகளில் வழிபடுவது)

மஹாராஷ்டிரத்தில் பிறந்த பாஸ்கரராயர் பல மொழிகளை அறிந்தவர். அவரைப் பற்றிக் கர்ண பரம்பரையாகப் பல செய்திகள் உண்டு.

ஒருசமயம் காசியில் பாஸ்கரராயர் தங்கியிருந்தார். மஹான்களாக இருப்பவர்களைக் குறித்துப் பொறாமைப்படக் கூடியவர்கள் எப்போதுமே சமூகத்தில் உண்டு. அவர்கள் மஹான்களைப் பற்றி அவதூறு எழுப்புவார்கள். பாஸ்கரராயரைக் கண்டு பொறாமை கொண்டவர்களும் ஒரு கூட்டமாகச் சேர்ந்து கொண்டு, அவரைப் பற்றித் தவறாகப் பேச ஆரம்பித்தார்கள். அவரிடத்தில் அனாவசிய வாக்குவாதத்துக்கு வரலானார்கள். வேண்டாத சந்தேகங்களைக் கிளப்ப ஆரம்பித்தார்கள்.

வேண்டாதவர்கள் கிளப்பிய சந்தேகங்களையெல்லாம் கேட்டுப் பொறுமையோடு அவர்களுக்கு பதில் சொன்னார் பாஸ்கரராயர். என்னதான் அவதூறு சொன்னாலும் சொல்லட்டும் பரவாயில்லை என்று இருந்தார். அடுத்தவர்கள் தம்மைப் பற்றி என்ன சொன்னாலும் என்ன அவதூறு பேசினாலும் வாயைத் திறவாமல் உறுதியோடு இருப்பவர்கள்தாம் சான்றாண்மை மிக்கவர்கள்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு

என்பது குறள். பிறர் சொன்ன தீங்கை வாயால்கூடச் சொல்லமாட்டார்கள் பெரியோர்கள். அப்படிப்பட்ட சான்றாண்மை மிக்கவர் பாஸ்கரராயர்.

குங்குமானந்தர்

வாக்குவாதம் நடந்து கொண்டேயிருக்கிறது. பாஸ்கரராயரும் பொறுமையாக பதில் சொல்கிறார்.

அந்தப் பகுதியில் குங்குமானந்த சுவாமி என்ற பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? அவர் ஒரு சிறந்த ஸ்ரீவித்யா உபாஸகர். எப்பேற்பட்ட உபாஸகர் தெரியுமா? திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு அவர் ஸ்ரீவித்யா உபாஸனை செய்யும்போது அந்தத் திருநீறு குங்குமமாக மாறுமாம்! ஆகவேதான் அவருடைய பெயரே குங்குமானந்த சுவாமி என்று ஆகிவிட்டது!

அந்தக் குங்குமானந்த சுவாமி, பாஸ்கரராயர் எவ்வளவு உயர்ந்தவர், பெரியவர் என்பது உங்களுக்குத் தெரியாது. அது தெரியாமல் நீங்கள் அவரிடத்தில் உரசிப் பார்க்கிறீர்கள் என்று எச்சரிக்கிறார்.

அங்கிருந்த பண்டிதர்கள் அதிகம் படித்தவர்கள். அதிகம் படித்ததாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள்! இரண்டுக்கும் அதிக வித்தியாசம் உண்டு! படித்தவர்கள் எல்லோருமே அறிவு நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை!

அறிவும் ஞானமும்

எழுத்து எழுதுவதற்குத் தெரிந்தால் அதற்குப் பெயர் கல்வி என்று நினைக்கிறோம். கல்வி என்பது எழுதத்தெரிவது மட்டுமல்ல. அப்படியானால், எழுத மட்டும் தெரிந்தால் அதற்குப் பெயர் வேறென்ன என்பதை நாம் யோசிக்க வேண்டும்!

எழுதக்கூடியவர்களும் படிக்கக் கூடியவர்களும் தாங்கள் எழுதி, படிப்பதை அறிவோடு உணர்பவர்களா என்பது முக்கியம். இதற்குப் பிறகு வருவது தான் ஞானம் என்னும் நிலை. அறிவும் ஞானமும்கூட ஒன்று கிடையாது. அறிவைப் பெற்றுள்ள அறிவாளிக்கும் அதைத் தக்க நேரத்தில் முறையாகப் பயன்படுத்தும் ஞானிக்கும் வேறுபாடு உண்டு.

ஆகவே படித்தவர்கள் பலர் பாஸ்கரராயரை வம்புக்கு இழுத்தார்கள். அவர்களுள் ஓரளவு பண்டிதரான ஒருவர் குங்குமானந்தர் சொல்வதில் ஏதோ உண்மை இருக்கிறது என்று உணர்ந்தார்.

‘நாம் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும் பாஸ்கரராயர், இந்தக் குங்குமானந்த சுவாமி சொல்வதுபோல் பெரிய மஹான்தான் போலும்’ என்று எண்ணினார்.

‘நாம் இவரிடம் அனாவசியமாக மோதிப் பார்க்கிறோமோ என்னவோ தெரியவில்லை. எதற்கும் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்’ என்ற ஆசையில், என்ன சொல்கிறீர்கள்? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் என்றார் குங்குமானந்தரிடம்.

குங்குமானந்த சுவாமி, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பாஸ்கரராயர் ஏதோ சாமானியராக பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அவர் தோள்களில் சாக்ஷாத் அம்பிகையே அமர்ந்துகொண்டு பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறாள் என்பது உங்களுக்குப் புரியவில்லை! என்று சொன்னார்.

அம்பிகையே அமர்ந்துகொண்டு பதில் சொல்கிறாளா? இதைத் தெரிந்து கொண்டவுடன் பண்டிதருக்கு வந்த ஆசை என்ன தெரியுமா?

அம்பிகையே தோளில் அமர்ந்து பதில் சொல்கிறாள் என்றால், அந்த அம்பிகையை நானும் தரிசனம் பண்ணவேண்டுமே... என் கண்ணால்... என்று கேட்கிறார்!

குங்குமானந்த சுவாமி பாஸ்கரராயரிடம் வந்து சொன்னார்: என்ன இருந்தாலும் அம்பிகையை தரிசனம் பண்ண வேண்டும் என்று அவர் கேட்பது நியாயம்தானே. இவ்வளவு நேரம் வாக்குவாதம் செய்தவர் என்றது வாஸ்தவம்தான். ஆனாலும் இப்போது அம்பிகையை தரிசிக்க வேண்டும் என்று கேட்கிறார் அல்லவா? தன்னை தரிசிக்க வேண்டும் என்று யார் ஆசைப்படுகிறார்களோ, அவர்களுக்கு அம்பிகை பிரத்யக்ஷமாகக் காட்சி கொடுப்பாள் இல்லையா? என்று கேட்டவுடனே.... அம்பிகைக்கு அபிஷேகம் செய்த நீரை அவர் கண்களில் தெளித்தார்கள்.

பண்டிதர்கள் விடுத்த சவால்!

பாஸ்கரராயருடைய தோள்களில் அமர்ந்துகொண்டு அம்பிகை பதில் சொல்லும் காட்சி, அந்தப் பண்டிதருக்குக் கண்களின் முன் தெரிகிறது. பிரத்யக்ஷமாக அம்பிகை அமர்ந்திருப்பதைப் பார்த்த பண்டிதர், பிறரிடம் அதை விவரிக்கிறார்.

scan0005a.jpg

தாங்கள் ஆணவத்துடன் நடந்துகொண்டது தவறு என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இருந்தாலும்கூட, பாஸ்கரராயரின் பெருமை என்ன? எதற்காக அவர் தோளில் மட்டும் அம்பிகை வந்து அமர்ந்துகொள்கிறாள்? என்பதை இன்னும் பரிபூரணமாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, மற்றவர்கள் இன்னும் ஒன்றையும் கேட்கிறார்கள்!

நாங்கள் இவ்வளவு நேரம் கேட்டதெல்லாம் எங்களுக்குத் தெரிந்தவை; எங்களுக்குத் தெரிந்ததாக நினைத்துக் கொண்டிருப்பதை நாங்கள் கேட்டோம். ஆனால் எங்களுக்குத் தெரியாத ஒன்றை இவர் விளக்கமாகச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வாறேயானால், சாக்ஷாத் அம்பிகைதான் இதை இவருக்குத் தெரிவிக்கிறாள் என்பதை நாங்கள் புரிந்துகொள்வோம் என்கிறார்கள்.

அங்கேதான் சிக்கல் வந்தது.

Ã

அறுபத்து நான்கு கோடியின் பட்டியல்

அந்தச் சிக்கல் என்ன தெரியுமா?

இவர்களுக்குத் தெரியாத விஷயம். ஆனால் புரியும்படி அதைச் சொல்ல வேண்டும்!

புதியதாகப் படைப்பதை-கிரியேட் சம்திங்-கிரியேட்டிவிட்டி என்றெல்லாம் நாம் சொல்கிறோம். அது இல்லாத ஒன்றைப் படைப்பது அல்ல.

புதியதாக ஒன்றைப் படைப்பதுதான் கிரியேட்டிவிட்டி, முழுவதுமாக இல்லாத ஒன்றை இயற்றுவதுதான் கிரியேட்டிவிட்டி என்றால், ரவிவர்மா போன்றவர்களைப் படைப்பாளிகள் என்றே சொல்ல முடியாது! இல்லாத ஒன்றை அவர்கள் வரைந்து காட்டவில்லையே. இருக்கும் ஒன்றுதான்; நமக்குத் தெரிந்த ஒன்றுதான்; அதையே வித்தியாசமாகக் காண்பிக்கிறார்கள். அப்படியானால் தெரிந்த ஒரு விஷயத்தைத் தெரியாத மாதிரி காட்டினாலும் சரி, ஏற்கெனவே தெரிந்த விஷயத்தைச் சுலபமாகப் புரிய வைத்தாலும் சரி, அதுதான் கிரியேட்டிவிட்டி.

சற்று எண்ணிப் பார்ப்போம். ரவிவர்மா எவ்வளவு சிறந்த கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்? இன்று பல வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் இருக்கும் தெய்வங்களின் ஓவியங்கள் ரவிவர்மா நமக்குக் கொடுத்தவைதாம். நமக்கு லக்ஷ்மியைத் தெரியும். சரஸ்வதியைத் தெரியும். எத்தனை வருடங்களாகத் தெரியும் என்று கேட்டால், பிறந்ததிலிருந்து தெரியும்; எங்கள் அம்மா, பாட்டி கதை சொல்லியிருக்கிறார்கள்; அதனால் தெரியும் என்போம். ஆனால் நமக்கு ஏற்கெனவே நன்கு தெரிந்த ஒன்றை ரவிவர்மா புதுவிதமாகப் போட்டுக் கொடுத்தாரே, அதற்குப் பெயர்தான் கிரியேட்டிவிட்டி. அப்படியானால் கிரியேட்டிவிட்டி என்பது எங்கிருந்தோ வரவில்லை. இல்லாத ஒன்றை யாருமே புதியதாகப் படைத்துவிடுவதில்லை. எல்லாமே பகவானுடைய படைப்பிலே ஏற்கெனவே இருக்கின்றன. அந்தப் படைப்புக்குள்ளிருந்து எடுத்துக் கொடுப்பதுதான் கிரியேட்டிவிட்டி. புரிந்த ஒன்றைப் புரியாத பெருமிதம் போன்றும் புரியாத ஒன்றைப் புரிந்த சாதாரணம் போன்றும் கொடுப்பது கிரியேட்டிவிட்டி.

பாஸ்கரராயருக்கு வந்த சிக்கலும் அதுதான்! இவர்களுக்குத் தெரியாத ஒன்றைப் புரியும்படி சொல்ல வேண்டும்! புரியாததைப் புரிய வைப்பது மிகவும் கஷ்டம். ஏற்கெனவே தெரிந்த ஒன்றைச் சொல்லித்தான் புரிய வைக்க முடியும்.

பாஸ்கரராயரிடத்தில் இவர்கள் என்ன கேள்வியைக் கேட்டால், இவர்களுக்குத் தெரியாத ஒன்றை அவரால் புரிய வைக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தார் குங்குமானந்தர். வழியும் சொன்னார்.

கேள்வி கேட்டவர்கள் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து, இதுவரை எந்தக் கிரந்தத்திலும் சொல்லப்படாத விஷயத்தை யாரும் விளக்கம் கொடுக்காத ஒரு விஷயத்தை பாஸ்கரராயரிடம் கேள்வியாகக் கேட்டனர். அந்தக் கேள்வி என்ன தெரியுமா?

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம் வருகிறது, 64 கோடி யோகினிகள் நின்று அம்பாளை சேவிக்கிறார்கள் என்று சொல்லும் நாமம். ஒருவர் இல்லை; இருவர் இல்லை.... 64 கோடி பேர்! அந்த 64 கோடி யோகினிகள் யார் யார்? என்று கேட்டார்கள்.

ஒரு கோடி என்பதை எண்ணில் எழுதவேண்டும் என்றாலே நாம் யோசிக்க வேண்டும். ஒன்று போட்டுவிட்டு எத்தனை பூஜ்ஜியம் போடுவது என்று யோசிக்க வேண்டுமில்லையா? ‘இரு இரு’ என்று விரல்விட்டு எண்ணியோ, பூஜ்ஜியங்களைப் பின்நோக்கிக் கணக்குப் போட்டுப் பார்த்தோதான் கோடி எழுத முடிகிறது நம்மால்!

அறுபத்துநான்கு கோடி யோகினிகள் சேவை செய்து கொண்டிருந்தார்கள் என்றால் எத்தனை பெரிய எண்ணிக்கை!

‘மஹா சதுஷ் ஷஷ்டி கோடி யோகினீ கணஸேவிதா’ - என்பது அந்தத் திருநாமம்; அதைத்தான் பாஸ்கரராயரிடம் அந்தப் பண்டிதர்கள் கேட்டனர்.

எங்கேயிருக்கிறது இதற்கான பட்டியல்? பாஸ்கரராயர் காலம்வரை வியாக்கியானம் எழுதிய யாரேனும் பட்டியல் கொடுத்திருக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. அப்படியிருக்க, இவர்கள் ‘64 கோடி யோகினிகள் யார்யார்?’ என்று கேட்கிறார்கள்.

அறுபத்து நான்கு பேர் இருந்தால் அத்தனை பேருடைய பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்வதே கஷ்டமான விஷயம். தினந்தோறும் சஹஸ்ரநாமம் பாராயணம் செய்பவரையோ அல்லது அபிராமி அந்தாதி பாராயணம் செய்பவரையோ ஒரு நிமிஷம் நிறுத்தி, ‘அந்த இடத்தில் என்ன?’ என்று கேட்டால், அநேகமாகத் தடுமாறுவார்கள்! ஆரம்பத்திலிருந்து மீண்டும் சொன்னால்தான் சொல்ல வரும். ராகத்தில் பாடிப் பழக்கப்பட்டிருப்பவர்களுக்குத் திடீரென்று ராகத்தை மாற்றினால் அதே நாமங்களைப் பாட வராது! அறுபத்து நான்கு கோடிப் பேரையும், அவர்கள் யார்? ஸ்வரூபம் என்ன? குணம் என்ன? நட்சத்திரம் என்ன? எனத் தடங்கல் இல்லாமல் சொன்னாராம் பாஸ்கரராயர்!

இது என்றைக்கோ வேத காலத்தில் நடந்த நிகழ்ச்சி அல்ல. ‘வேத காலத்தில் நடந்தது என்று யாரோ சொன்னார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் யாரோ சொன்னார்கள்’ என்றால், ‘அதற்கு ஆதாரம் என்ன?’ என்று கேட்கலாம். பதினெட்டாம் நூற்றாண்டிலே அறுபத்து நான்கு கோடிப் பேருடைய பெயர்களையும் ஸ்வரூபங்களையும் குணங்களையும் அதுவரைக்கும் வேறு எங்குமே இல்லாத வியாக்கியானமாக பாஸ்கரராயர் சொன்னார். அதிலும் எல்லார் முன்னிலையிலும் வேகவேகமாகச் சொன்னார். தங்குதடையின்றிச் சொன்னார் என்றால், சாக்ஷாத் அம்பாள் அவரது திருநாக்கிலிருந்து சொல்ல வைத்தாள் என்பதைத் தவிர வேறென்ன அதற்கு அத்தாட்சி!

அம்பாள் உபாஸகர்கள்

பாஸ்கரராயருடைய பெருமை ஒருபக்கமிருக்க, அம்பாள் தன்னை உபாஸிப்பவர்களை எப்படிக் கூடவே இருந்து வழி நடத்துகிறாள் என்பதையும் இது தெரிவிக்கிறது. அம்பாள் உபாஸகர்கள், எல்லோராலும் வழிபடப் படுகிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் சிறந்த அம்பாள் உபாஸகர். விவேகானந்தர் துறவியாக இருந்தாலும்கூட தம்முடைய குருவின் வழியில் அம்பாள் உபாஸகராக இருந்தவர்தாம்.

scan0006.jpg

‘அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்’ என்று மஹாகவி பாரதி பாடுகிறார். எல்லா சுவாமிகளும் வரஹஸ்தத்துடன்தான் (அருள்புரியும் கை) காட்சியளிக்கிறார்கள். எல்லா தெய்வங்களிடமும் போய் வரம் கேட்கலாம். ஆனால் அம்பாளிடம் கேட்டால் சிறிது கூடுதலாகக் கிடைக்கும். அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!

அன்பு கனிந்த கனிவு

தம்மை சக்திதாசன் என்று அழைத்துக் கொண்டு தம்முடைய பெயரே பராசக்தியின் பெயராக இருக்கவேண்டும் என்பதற்காக, பராசக்தியிடம் தமக்கு வேண்டியதையெல்லாம் கேட்டவர் பாரதி. ஏதாவது ஒன்றைக் கேட்க வேண்டுமானால் பராசக்தியிடம்தான் கேட்பார். எனக்கு வீடு வேண்டும், காணி நிலம் வேண்டும் என்று எது வேண்டுமென்றாலும் சாக்ஷாத் பராசக்தியிடம்தான் கேட்பார். ‘அன்பு கனிந்த கனிவே சக்தி’ என்று பராசக்திக்கு ஒரு definition கொடுக்கிறார் பாரதியார். அன்பை ஒட்டுமொத்தமாக ஓர் உருவமாக வைத்து, அந்த உருவம் யார் என்றால் சக்தி-பரமேசுவரி வடிவம்.

அம்பாள் உபாஸகர்கள் எல்லாவிதமான நன்மைகளையும் பெறுவார்கள் என்பதை நிதர்சனமாகக் காட்டக்கூடிய கிரந்தம்தான் லலிதா சஹஸ்ரநாமம்.

இந்த சஹஸ்ரநாமத்துக்கு பாஸ்கரராயர் கொடுத்த வியாக்கியானம் மிகச்சிறந்த வியாக்கியானமாகக் கருதப்படுகிறது.

ஆயிரம் நாமங்களைக் கொண்டு அம்பாளைப் பூஜிக்கும் முறைதான் லலிதா சஹஸ்ரநாமம்.

சஹஸ்ரநாமத்தில் திருநாமங்கள் எப்படியெல்லாம் அமைந்திருக்கின்றன?

கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்று ஒருவர் இருந்தார். இவருடைய சீடரான மனோன்மணியம் சுந்தரனார் நமக்கு நன்கு அறிமுகமானவர். ‘நீராரும் கடலுடுத்த’, என்று நாம் இப்போது தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பயன்படுத்தும் பாடலை, தமது மனோன்மணியம் காப்பியத்தில் வைத்தவர் மனோன்மணியம் சுந்தரனார். நெல்லையில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு அவர் பெயரைத்தான் வைத்தார்கள். அந்த மனோன்மணியம் சுந்தரனாருக்கும் குருவாக இருந்தவர் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள்.

சுந்தர சுவாமிகள், லலிதா அனுபூதி பெற்றவர்; சிறந்த ஸ்ரீவித்யா உபாஸகர். லலிதாம்பிகையின் அனுபூதியை அனுபவித்து அவர் சொல்லும்போது ஒரு விஷயம் சொன்னார். இந்த சஹஸ்ரநாமத்திலுள்ள ஆயிரம் நாமங்களும் எப்படி அமைந்திருக்கின்றன என்று சொன்னார்.

Ã

சிந்தூர வண்ணத்தினாள்

கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள், தம்முடைய ஸ்வானுபூதி ரஸாயனத்தில், ஸ்ரீ லலிதானுபூதிப் பிரகரணத்தில் விளக்கினார்: முதல் மூன்று நாமங்கள், முதல் மூன்று தொழில்களைக் குறிக்கின்றன. நான்கு முதல் 999 வரை நான்காவது தொழிலையும், 1000 ஆவது நாமம் ஐந்தாவது தொழிலையும் குறிக்கின்றன. ஐந்து தொழில்கள் என்றால்....?

அம்பாளுக்கு பஞ்சகிருத்ய பராயணா என்று ஒரு பெயர் உண்டு. அதாவது ஐந்து விதத் தொழில்களைச் செய்பவள் என்று பொருள். சாதாரணமாக முத்தொழில்கள் என்று நாம் சொல்வதுண்டு. சிறிது எளிமைப்படுத்தி, படைத்தல், காத்தல், அழித்தல் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்) என்று முத்தொழில்களைச் சொல்வது வழக்கம். சரியாகச் சொல்ல வேண்டுமானால் ஐந்து தொழில்கள் என்று விரிவுபடுத்தித்தான் சொல்ல வேண்டும். அதனால்தான் நடராஜருடைய ஆடல் தத்துவத்துக்கே பஞ்சகிருத்ய நடனம் என்று பெயர்.

சிருஷ்டி (ஸ்ருஷ்டி) என்பது படைப்புத் தொழில். சிருஷ்டிக்கப்பட்டது காப்பாற்றப்பட வேண்டும். அதற்காக இருக்கும் தொழில் ஸ்திதி. இப்படிக் காப்பாற்றப்படும் எதுவாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் அது நீக்கப்பட வேண்டும். வடிவம் மாற வேண்டும். அதை அழிவு என்று சொல்வது தவறு. சம்ஹாரம் என்பதை (ஸம்ஹாரம்) நமக்குப் புரிவதற்காக அழிவு என்று சொல்லிவிட்டோம்.

அழிவு என்றால் டிஸ்ட்ரக்ஷன். ஆனால் எதையுமே அழிக்க முடியாது. நவீன பௌதிகம் என்ன சொல்கிறது? ‘மேட்டர் கேன் நெய்தர் பி க்ரியேடட் நார் டெஸ்ட்ராய்ட்’ என்கிறது. இருக்கும் ஒன்றை வேறு வடிவமாக மாற்றலாமே ஒழிய முழுவதுமாக அழிக்க முடியாது. பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம், நீ அழித்தாலும் அழிக்காவிட்டாலும் இந்த உடல்கள் அழிந்து தான் தீரும் என்பார். அந்த வடிவம் மாறி வேறு ஏதோ ஒரு வடிவத்துக்குப் போகும் என்பதைத்தான் அப்படிச் சொல்வார். அதனால்தான் அதற்கு நீக்கல் என்று பெயர்.

கம்பர் தம்முடைய ராமாயணத்துக்குப் பாயிரம் பாடும்போது,

உலகம் யாவையும் தாளமுளவாக்கலும்நி

லைபெறுத்தலும் நீக்கலும் என்றார்.

உளவாக்கல் என்பது சிருஷ்டி. நிலை பெறுத்தல் என்பது ஸ்திதி. நீக்கல் என்பது நாம் இன்று அழித்தல் என்று குறிப்பிடும் சம்ஹாரம். ஓர் உருவிலிருந்து மற்றோர் உருவாக மாற்றுவது. இந்த மூன்றும்தாம் நாம் சொல்லும் முத்தொழில்கள்.

திரோபாவம்

இந்த மூன்றும் நடக்க வேண்டுமானால், நான்காவதாக ஒன்று இருக்கிறது; அது நடைபெறவேண்டும். திரோதானம் அல்லது திரோபாவம். ‘மறைத்தல்’ என்றும் இதைச் சொல்லலாம்.

மாயை என்று சொல்கிறோமே அதுதான் திரோபாவம். இது நடக்கிறது; இது இப்படித்தான் நடக்கிறது என்று ஏதோ ஒன்று நம்மை நம்ப வைக்கிறதே. அவ்வாறு நம்ப

Enjoying the preview?
Page 1 of 1